என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.
‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது,
சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.
இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது.
அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும் நிலையை ஏற்படுத்தியது.
சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால் ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳