Everything posted by ஏராளன்
-
வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்
டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் உருவாகும் வாய்ப்பு அதிகம் - காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கை Published By: Vishnu 12 Dec, 2025 | 09:48 PM வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்ழமுக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளின் வடகிழக்கு மழைக்கால புள்ளிவிபரங்களை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அறிக்கையின் படி; வட மாகாணத்தில் சாதாரணத்தை விட அதிக மழை பெய்யக்கூடும். வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண அளவிற்கு அண்மித்த மழைவீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை சாதாரணத்தை விட குறைவாக இருக்கக்கூடும். ஆனால், டிசம்பர்–ஜனவரில் புதிய தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவானால், இந்த முன்னறிவிப்புகள் மாறக்கூடும் எனவும் அதிகாரி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233224
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு Published By: Vishnu 12 Dec, 2025 | 08:20 PM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது. இதன் படி பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிரகாரம் முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233219
-
நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் ! Published By: Vishnu 12 Dec, 2025 | 08:06 PM அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சீன குடா விமான நிலையத்தில் வந்திறங்கியது. இலங்கையின் பேரிடர் நிவாரண உதவிகளை விரைவாக இலங்கை முழுவதும் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா, மூதூர், வெருகல் பகுதிகளின் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வீடு திரும்பிய 250 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் இன்றைய தினமே வழங்கி வைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய உதவி திட்டம்,இங்கிலாந்து உதவித் திட்டம்,யுனெப்ஸ் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களே இவ்விமானத்தில் எடுத்து வரப்பட்டிருந்தது.இந்நிவாரண உதவிகளை அகம் மனிதாபிமான வள நிறுவனம் விருத்தி வலையமைப்புடன் இணைந்து உரிய இடங்களுக்கு வழங்கின. மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், வெருகல் பிரதேச செயலாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி இச்சேவையை,வொக்கோட் நிறுவனம்,மக்கள் சேவை மன்றம் ஆகிய நிறுவனங்கள் நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு வழங்கின. இதன் அடிப்படையில் கிண்ணியா பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றம் நிறுவனமும், மூதூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு வொக்கோட் நிறுவனமும்,வெருகல் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு அகம் நிறுவனமும் இன்றைய தினமே நிவாரணங்களை வழங்கி இருந்தன. இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அகம் மனிதாபிமான வள நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233218
-
நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு
நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு Published By: Vishnu 12 Dec, 2025 | 07:31 PM (நா.தனுஜா) 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நோர்வே சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் தெரிவித்துள்ளார். 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர். அந்தவகையில் நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட், 'இலங்கையில் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை நோர்வே வழங்கிவருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான இருப்பிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் வசதிகள் என்பன முறையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதும், அதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதும் இன்றியமையாததாகும்' எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகம் என்பவற்றுக்கு நோர்வே அரசாங்கம் சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இவ்வாறான பரந்தளவிலான அனர்த்தங்களின்போது நோர்வே போன்ற நாடுகள் முன்வந்து பாதிக்கப்பட்ட சமூகங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியது அவசியம் எனவும் நோர்வே அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/233216
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited நிதி நன்கொடை 12 Dec, 2025 | 06:17 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited (CWIT)இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் Satyanjal Pandey மற்றும் Colombo West International Terminal (Private) Limited இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Munish Kanwar ஆகியோரினால் வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார். எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, இந்திய தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரிவின் பிரதானி Devika Lal, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கிருஷான் பாலேந்திர,Colombo West International Terminal இன் Zafir Hashim மற்றும் Anandhan Nagaysayanu Raj ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233202
-
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன?
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன? பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு 52 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது. திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை தன்னில் இருந்து சில பொருட்களை, விநாடிக்கு 60,000கி.மீ என்ற அதீத வேகத்தில் விண்வெளியில் வீசியது. கருந்துளையில் ஏற்பட்ட இந்த எக்ஸ்ரே ஒளி வெடிப்பும், அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வேகமான காற்றும், சூரியனில் நிகழ்வதை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலதிகமாக அறிவதற்கு உதவக்கூடும் என்றும் கூறுகின்றனர். இந்த ஆய்வின் முழு விவரமும், அஸ்ட்ரானமி & அஸ்ட்ரோஃபிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. கருந்துளை என்றால் என்ன? கருந்துளை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அவை துளைகள் இல்லை. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, மிகச் சிறிய இடத்திற்குள் மிகப்பெரிய அளவிலான பொருள்களை கருந்துளைகள் கொண்டுள்ளன. அவை மிகவும் அடர்த்தியானவை. அதாவது, அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்பிக்க முடியாத அளவுக்கு அடர்த்தி மிகுந்தவை. பேரண்டத்தில் உள்ள மிகவும் மர்மமான வான்பொருட்களில் ஒன்றாக கருந்துளைகள் இருக்கின்றன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'அந்தரங்க பகுதிகளைத் தொடுவது வன்கொடுமை அல்ல' - என கூறிய உயர் நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம் 'விடுமுறை முடிந்து வரும்போது கர்ப்ப பரிசோதனை' - விடுதி மாணவிகள் புகாரின் பின்னணி என்ன? சாப்பிட்ட உடனேயே மலம் - உணவு உங்கள் உடலில் சேரவில்லை என அர்த்தமா? அகண்டா - 2 விமர்சனம்: பாலகிருஷ்ணாவின் திரைப்படம் எப்படி உள்ளது? End of அதிகம் படிக்கப்பட்டது இவற்றில், மிகப்பெரிய, பிரமாண்ட கருந்துளைகள் சில நேரங்களில் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு அல்லது பல பில்லியன் மடங்கு அதிக நிறையைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய விண்மீன் மண்டலத்தின்(galaxy) மையத்திலும் இவை காணப்படுகின்றன. அவற்றைச் சுற்றி, வாயு, தூசு வடிவங்களில் இருக்கும் வான்பொருட்களால் ஆன சுழலும் வட்டுகள் உள்ளன. அந்தப் பொருட்கள் கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்புவிசை காரணமாக அதற்குள் இழுக்கப்படலாம். அப்படி, கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள வட்டுகளில் இருக்கும் வான்பொருட்களை "விழுங்கும்போது", அந்த வட்டுகள் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமாக வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் உள்பட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட பிரகாசமான ஒளி வெடிப்பை வெளியிடுகின்றன. பட மூலாதாரம், ESA/Hubble/Nasa/MC Bentz/DJV Rosario படக்குறிப்பு, இந்த மிகப்பெரிய கருந்துளை பூமியிலிருந்து 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள என்.ஜி.சி 3783 என்று அழைக்கப்படும் விண்மீன் மண்டலத்திற்குள் அமைந்துள்ளது இரண்டு தொலைநோக்கி மேலும் இதன்போது, கருந்துளைகள் அதிவேகமாக வாயுக்களை வெளியேற்றுகின்றன. விண்வெளியில் ஏற்படும் தீவிர காற்று போல் இருக்கும் அந்தக் காற்றில் மின்னூட்டம் மிக்க சிறு துகள்களும் இருக்கும். இந்தக் காற்று விண்மீன் மண்டலத்தின் வழியாக வீசும்போது, புதிய நட்சத்திரங்களின் தோற்றத்தில்கூட அவை தாக்கம் செலுத்தக்கூடும். "ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாக வெளிப்படும் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி லியி கு கூறுகிறார். ஆய்வு செய்யப்படும் இந்த பிரமாண்ட கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சுழல் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்தத் தனித்துவமான விண்வெளி நிகழ்வைக் கண்டறிய, ஒன்றிணைந்து இயங்கிய இரண்டு தொலைநோக்கிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். அதில் ஒன்று, பிரபஞ்சம் முழுவதும் எக்ஸ்ரே மூலங்களை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கி. மற்றொன்று, ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஆதரவுடன் செயல்பட்ட ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (XRISM) தொலைநோக்கி. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கருந்துளையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான பகுதி ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (AGN) என்று அழைக்கப்படுகிறது. ஒரு ரப்பர் பேண்ட் பல முறை முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படுவதைப் போல, ஏ.ஜி.என் பகுதியிலுள்ள காந்தப்புலம் முறுக்கப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டபோது, "அது பெரியளவிலான ஆற்றலை வெளியிட்டு, பலத்த காற்றை உருவாக்கியது. இது கிட்டத்தட்ட சூரியனில் நிகழ்வதைப் போலவே இருந்தாலும், கருந்துளையில் சூரியனில் நடப்பதைவிடப் பல மடங்கு, அதாவது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் நிகழ்கிறது" என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷனின் திட்ட விஞ்ஞானியும், இந்தக் கண்டுபிடிப்பின் இணை ஆசிரியருமான மத்தேயோ குவைநாஸி விளக்கினார். இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவருமான கமில் டியெஸ், இந்த ஏ.ஜி.என்-கள் அவை இருக்கும் விண்மீன் மண்டலங்கள் காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்கின்றன என்பதில் "பெருமளவு பங்கு வகிப்பதாக" கூறுகிறார். மேலும், "அவை மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால், ஏ.ஜி.என்.களின் காந்தத்தன்மை மற்றும் அவை எவ்வாறு காற்றை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண்மீன் மண்டலங்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Solar Orbiter/EUI Team/ESA/Nasa படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி நிலையம் தலைமையிலான சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பிப்ரவரி 15, 2022 அன்று ஒரு பெரிய சூரிய வெடிப்பைப் படம் பிடித்தது பேரண்டத்தின் ரகசியங்கள் கருந்துளையில் காணப்பட்ட இந்த ஆற்றல் வெடிப்பு, சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகளை ஒத்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகள் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (Coronal Mass Ejection) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெடிப்பின்போது, சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் பெருமளவில் வெளியேறுகிறது. இந்த நிகழ்வு பூமியிலும் தாக்கம் செலுத்தக்கூடும். சூரியனில், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலின் விளைவாக சூரியப் பிழம்புகள்(Solar Flare) என்றழைக்கப்படும் பிரகாசமான ஒளி வெடிப்பு நிகழ்வு நடக்கும். மேலும், அது நடக்கும் அதே நேரத்தில்தான் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்றழைக்கப்படும் வெடிப்பும் நிகழ்கிறது. அதேபோலத்தான் இந்த பிரமாண்ட கருந்துளையிலும், "முறுக்கப்பட்ட காந்தப்புலங்கள் விடுவிக்கப்படும்போது", ஆற்றல் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பெரும் காற்று உருவாக்கப்படுவது நடக்கிறது. ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கியின் திட்ட விஞ்ஞானியாக இருக்கும் எரிக் குல்கர்ஸ், இரண்டு விண்வெளித் தொலைநோக்கிகளும் இணைந்து "நாம் இதுவரை பார்த்திராத, புதிய ஒன்றைக் கண்டுள்ளதாக" கூறுகிறார். "கருந்துளையில் இருந்து வெளிப்படும் மிக வேகமான காற்று, ஆற்றல் வெடிப்பால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் நிகழ்வதை ஒத்திருக்கின்றது." மேலும் பேசிய அவர், "இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சூரியனில் நிகழும் அதேபோன்ற இயற்பியல் செயல்முறைகள், ஆச்சர்யமளிக்கும் வகையில், பேரண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துகளைகளுக்கு அருகிலும் நிகழக்கூடும் என்பதை இது காட்டுகிறது" என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxq342l573o
-
வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள்
வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ கட்டுரை தகவல் வனேசா புஷ்லூட்டர் லத்தீன் அமெரிக்கா ஆசிரியர், பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தீவிரமடைந்ததன் ஒரு பகுதியாக, டிசம்பர் 10 அன்று, தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டி, வெனிசுவேலா கடற்கரையில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீதான தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரோவைப் பிடிப்பதற்கான தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதியையும் டிரம்ப் நிர்வாகம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. யார் இந்த நிக்கோலஸ் மதுரோ ? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார். நிக்கோலஸ் மதுரோ இடதுசாரித் தலைவரான ஹியூகோ சாவேஸ் மற்றும் அவரது வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சியின் (United Socialist Party of Venezuela - PSUV) தலைமையில் முக்கியத்துவம் பெற்றார். முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார். சாவேஸும் மதுரோவும் ஆட்சியில் இருந்த 26 ஆண்டுகளில், அவர்களின் கட்சி தேசிய சட்டமன்றம் , நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளால் சேகரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கைகள், அவர்களின் வேட்பாளரான எட்முண்டோ கோன்சலஸ் அமோக வெற்றி பெற்றதாகக் காட்டின. முதன்மை எதிர்க்கட்சித் தலைவரான மரியா கோரினா மச்சாடோ தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டதால், அவருக்குப் பதிலாக கோன்சலஸ் நிறுத்தப்பட்டார். "சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அவரது போராட்டத்திற்காக" அவருக்கு அக்டோபர் மாதத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதனையடுத்து, மச்சாடோ பயணத் தடையை மீறி, பல மாதங்களாக மறைவில் இருந்த பின்னர், டிசம்பர் மாதம் பரிசைப் பெறுவதற்காக ஓஸ்லோவுக்குப் புறப்பட்டார். டிரம்ப் ஏன் வெனிசுவேலா மீது கவனம் செலுத்துகிறார்? வெனிசுவேலாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக வந்ததற்கு, டிரம்ப் மதுரோவையே குற்றம் சாட்டுகிறார். 2013-ஆம் ஆண்டு முதல் வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஒடுக்குமுறையின் காரணமாக, சுமார் 80 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்படுகிறது. ஆதாரம் எதுவும் வழங்காமல், மதுரோ தனது "சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களை காலி செய்து", அங்கிருந்தவர்களை அமெரிக்காவுக்கு குடியேற "கட்டாயப்படுத்துவதாக" டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் போன்ற போதைப் பொருட்கள் வருவதைத் தடுப்பதிலும் டிரம்ப் கவனம் செலுத்தியுள்ளார். அவர் வெனிசுவேலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா மற்றும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார். பிந்தைய குழுவுக்கு மதுரோவே தலைமை தாங்குவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தான் ஒரு போதைப் பொருள் குழுத் தலைவர் என்ற கூற்றை மதுரோ வலுவாக மறுத்துள்ளார். மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காக, தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா "போதைப் பொருள் மீதான போர்" என்ற கூற்றைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கார்டெல் டி லாஸ் சோல்ஸ் என்பது ஒரு படிநிலை அமைப்பு அல்ல, மாறாக ஊழல் மிகுந்த அதிகாரிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் என்றும், இவர்கள் வெனிசுவேலா வழியாக கோகெய்ன் கடத்தலை அனுமதித்து லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கா ஏன் கரீபியனுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது? பட மூலாதாரம்,US Navy/Reuters படக்குறிப்பு,கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பல்களில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் ஒன்றாகும். வெனிசுவேலா கரையோரத்தில் அமெரிக்கா எண்ணெய் டாங்கரை கைப்பற்றியபோது அது செயல்பாடுகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கா 15,000 வீரர்கள் மற்றும் பல்வேறு வகையான விமானந்தாங்கி கப்பல்கள், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள், மற்றும் நீர் தாக்குதல் கப்பல்கள் ஆகியவற்றை கரீபியன் பகுதிக்கு அனுப்பியுள்ளது. 1989-இல் அமெரிக்கா பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து, இந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய படை இது தான். இதன் நோக்கம், அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் கடத்தலைத் தடுப்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு இந்த கப்பல்களில் ஒன்றாகும். வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்படுவதற்கு முன்னர், இதிலிருந்துதான் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் புறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டேங்கர் கப்பல், "வெனிசுவேலா மற்றும் இரானில் இருந்து தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது" என்று அமெரிக்கா கூறியது. ஆனால், வெனிசுவேலா இந்த நடவடிக்கையை "சர்வதேச கடற்கொள்ளை" என்று கண்டித்துள்ளது. சமீப மாதங்களில், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீது சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். டிரம்ப் நிர்வாகம், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அமெரிக்கா ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளது என்று வாதிடுகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஒழுங்கற்ற போர் நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கா, படகில் இருந்தவர்களை "போதைப்பொருள் பயங்கரவாதிகள்" என்று விவரித்தது. ஆனால், இந்தத் தாக்குதல்கள் "சட்டபூர்வமான ராணுவ இலக்குகளுக்கு" எதிரானவை அல்ல என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, செப்டம்பர் 2 அன்று நடந்த முதல் தாக்குதல், கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் அன்று ஒரு தாக்குதல் அல்ல, மாறாக இரண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முதல் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர், இந்த ராணுவ நடவடிக்கை பொதுவாக அமைதியான காலத்தில் பொதுமக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட, முறையான தாக்குதல் எனும் பிரிவுக்குள் வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் "உயிர்களை அழிக்கும்... விஷத்தை எங்கள் கரைகளுக்குக் கொண்டு வர முயற்சிக்கும்" போதைப்பொருள் குழுக்களிடமிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க, ஆயுத மோதலுக்கான சட்டங்களின்படி தாங்கள் செயல்பட்டதாகத் தெரிவித்தது. வெனிசுவேலா போதைப்பொருட்களை அனுப்புகிறதா? உலகளாவிய போதைப்பொருள் கடத்தலில் வெனிசுவேலா ஒரு சிறு பங்களிப்பாளராகவே உள்ளது. இது, வேறு இடங்களில் தயாரிக்கப்படும் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்லப் பயன்படும் ஒரு வழித்தட நாடாகவே செயல்படுகிறது என போதைப்பொருள் தடுப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். வெனிசுவேலாவின் அண்டை நாடான கொலம்பியா, உலகின் மிகப்பெரிய கோகெய்ன் உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும், இதன் பெரும்பகுதி வெனிசுவேலா வழியாக அல்லாமல், பிற வழிகளில் அமெரிக்காவிற்கு கடத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (US Drug Enforcement Administration - DEA) அறிக்கைப்படி, அமெரிக்காவை அடையும் கோகெய்னில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பசிபிக் வழியாகவே கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் வேகப் படகுகள் மூலம் வரும் கோகெய்னின் அளவு மிகக் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. ஆயினும்கூட, அமெரிக்கா நடத்திய பெரும்பாலான தாக்குதல்கள் கரீபியன் பகுதியில் தான் நடந்துள்ளன, பசிபிக் பகுதியில் சில தாக்குதல்களே நடந்துள்ளன. செப்டம்பர் மாதம், டிரம்ப் அமெரிக்க ராணுவத் தலைவர்களிடம், தாங்கள் குறிவைத்த படகுகளில் "வெள்ளை நிறப் பவுடர் நிரம்பிய பைகள் குவிந்துள்ளன, அதில் பெரும்பாலானவை ஃபென்டனைல் மற்றும் பிற போதைப்பொருட்கள்" என்று கூறினார். ஃபென்டனைல் என்பது ஹெராயினை விட 50 மடங்கு வீரியம் கொண்ட ஒரு செயற்கை போதைப்பொருள். மேலும் அமெரிக்காவில் ஓப்பியாய்டை அதிக அளவு உட்கொள்ளுதலால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணமாகவும் இது உள்ளது. ஆனால், முக்கியமாக மெக்சிகோவில் உற்பத்தி செய்யப்படும் ஃபெண்டானைல், அமெரிக்காவின் தெற்கு எல்லையைக் கடந்து நிலம் வழியாக அமெரிக்காவை அடைகிறது. அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய போதைப்பொருள் அச்சுறுத்தல் மதிப்பீட்டில் , அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் ஃபெண்டனைலின் மூல நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா குறிப்பிடப்படவில்லை. வெனிசுவேலா எவ்வளவு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது ? எண்ணெய், மதுரோ அரசாங்கத்தின் வெளிநாட்டு வருவாய்க்கான முக்கிய ஆதாரம் ஆகும். இந்தத் துறையில் இருந்து கிடைக்கும் லாபம் அரசாங்க பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான நிதியை வழங்குகிறது. தற்போது வெனிசுவேலா ஒரு நாளைக்கு சுமார் 900,000 பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. அவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முதன்மை நாடாக சீனா உள்ளது. அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, வெனிசுவேலா உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டிருந்தாலும், அந்த வளத்தை மிகக்குறைவாகவே பயன்படுத்துகிறது. தொழில்நுட்ப மற்றும் பட்ஜெட் சவால்கள் காரணமாக, 2023-ஆம் ஆண்டில் வெனிசுவேலா உலகளாவிய கச்சா எண்ணெயில் 0.8% மட்டுமே உற்பத்தி செய்ததாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) தெரிவித்துள்ளது. எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதை அறிவித்த பிறகு, டிரம்ப் செய்தியாளர்களிடம், "எண்ணெயை நாங்கள் வைத்துக்கொள்வோம் என கருதுகிறேன்" என்று கூறினார். மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், நாட்டின் பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களை அணுகுவதற்கான முயற்சி என்று வெனிசுவேலா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா இதற்கு முன்னர் மறுத்துள்ளது. வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியுமா? அதிபர் டிரம்ப், நவம்பர் 21 அன்று மதுரோவுடன் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தியுள்ளார். தொலைபேசி உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதை அவர் வெளியிடவில்லை என்றாலும், டிரம்ப், மதுரோவுக்கு அவருடைய நெருங்கிய குடும்பத்துடன் வெனிசுவேலாவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாதுகாப்பான வழியில் வெளியேறும் அந்த வாய்ப்பை மதுரோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் கூறியது. இந்த காலக்கெடு முடிவடைந்த ஒரு நாள் கழித்து, வெனிசுவேலாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை மூடப்பட்டதாக அறிவித்தார் டிரம்ப். வெனிசுவேலாவின் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக "நிலம் வழியாக" நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளார். ஆனால், அத்தகைய ஒரு நடவடிக்கை எவ்வாறு செயல்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. டிரம்பின் பத்திரிகைச் செயலாளர், வெனிசுவேலாவில் அமெரிக்கத் துருப்புக்களை நிலத்தில் நிலைநிறுத்தும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை. "அதிபரின் வசம் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் அந்த வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவில்லை என்றாலும், கரீபியன் பகுதியில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள படைகள், ஒரு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையானதை விட மிகப் பெரியது என்று ராணுவ ஆய்வாளர்கள் பல வாரங்களாக சுட்டிக்காட்டியுள்ளனர். எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் அதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக சிபிஎஸ் நியூஸுக்கு நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் அளித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyxxn6wdrjo
-
மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு, கிழக்கு, மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்
மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல் 12 Dec, 2025 | 05:15 PM மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன். ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு. மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார். இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும். மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல். அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு. மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது. அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும். மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும். தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது. நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும். இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233198
-
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 12 Dec, 2025 | 03:53 PM (எம்.நியூட்டன்) இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புகள் வெள்ளிக்கிழமை (12) காலை போராட்டத்தை முன்னேடுத்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியும், இந்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக இந்த போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஐனாதிபதிக்கான மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். போராட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கே வந்து மகஜரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாழ். இந்திய துணைத்துதுவரிடம் கையளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட ஐந்துபேரை பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி சென்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233179
-
மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு!
மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு! Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 05:16 PM மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன. வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/233199
-
பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை
பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 02:05 PM மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், பேரிடர்களை வென்று முன்னேறலாம் என இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேரிடர்களுக்கு பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு முழுவதும், பல்வேறு பேரிடர்களை எதிர் கொண்டு நாம் ஒரு வலிமையான தேசமாக உருவெடுத்துள்ளோம். கடந்த சில தசாப்தங்களாக நாம் சுனாமி, நீண்ட கால உள்நாட்டு யுத்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி போன்ற பல இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்களை எதிர் கொண்டுள்ளோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மீண்டெழுந்து ஒருவருக் கொருவர் ஆதரவளித்து, நமது தேசத்தை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பினோம். ஒருவருக்கொருவர் உதவுதல், தேவைப்படுபவர்களுக்கு செவி சாய்ப்பதன் மூலமும், இன்றைய நெருக்கடியையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற முனைவோம். பாதுகாப்பான வீடுகள் மற்றும் வீதிகளை மட்டுமல்ல, வலுவான, புரிந்துணர்வுடைய நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவோம். பேரிடர்களுக்கு பின்னர் நீங்கள் மன அழுத்தம், கவலை, கோபம், பயம், பதட் டம், குழப்பம் போன்ற உணர்வுகளை அனுபவிப்பது முற்றிலும் இயல்பானது. உங்கள் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் பேரிடர் தாக்கங்களை வென்று முன்னேறலாம். உதவும் விடயங்கள் 1. உங்கள் பலங்கள் மற்றும் சிறிய, நிர்வகிக்கக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள்: சுத்தம் செய்தல், ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல், உறவினர்களின் சுகம் விசாரித்தல், அண்டை வீட்டாருடன் இணைதல் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்தல் ஆகியவை கட்டுப்பாட்டு உணர்வை அளிக்கும். இப்படியான சிறிய படிகள் மீட்சிக்கு வழிவகுக்கும். 2. மற்றவருடன் தொடர்பில் இருங்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனியுங்கள்: மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் ஆதரிக்கும்போது, முழு தேசமும் வலு வடைகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள், முதியவர்கள் (குறிப்பாக தனியாக வசிப்பவர்கள்), உதவி தேவைப்படக் கூடிய குறைபாடுகள் உள்ளவர்கள், கூடுதல் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமூக உதவி பயனாளிகள், நீண்டகால நோய் அல்லது மனநோய் நிலைமைகள் உள்ள அனைவரையும் கவனியுங்கள் 3. சிறுவர்களை ஆறுதல்படுத்துங்கள் சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பது முக்கியம். இன்றைய சூழ்நிலையை அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் எளிமையான அனைவரின் வார்த்தைகளில் பாதுகாப்பையும் விளக்குங்கள். பெரியவர்கள் உறுதி செய்வதில் கடினமாக உழைக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். 4. ஆன்மீக மற்றும் கலாச்சார நடைமுறைகள் நன்மை பயக்கும் பிரார்த்தனைகள், தியானம், கலாச்சார சடங்குகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் என்பன மனதிற்கு பாதுகாப்பு மற்றும் ஆறுதல் உணர்வை அளிக்கும். 5. வழக்கமான மருந்துகளைத் தொடரவும் நீங்கள் ஒரு நீண்ட காலநோய் ஒன்று க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், அதற்கான தினசரி மருந்துகளை தொடர் ந்து தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் அருகிலுள்ள வைத்தியர் அல்லது வைத்தியசாலையின் உதவியை நாடுங்கள். தவிர்க்க வேண்டியவை 1. துயரமளிக்கும் செய்திகளைப் பார்ப்பது அதிகமாக துயரமளிக்கும் செய்தி களைப் பார்ப்பது அல்லது கேட்பது பயத்தை அதிகரிக்கும். அதிகாரபூர்வமான அரசு மற்றும் சரிபார்க்கப்பட்ட செய்தி ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள் 2. தகவல்களைப் பகிரும்போது பொறுப்பாக இருங்கள்: வதந்திகளைத் தவிர்க்க வும்: சரிபார்க்கப்படாத தகவல்கள், தனிப்பட்ட தரவு, அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் துயரமளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் மற்றவருக்குப் பகிர்வதைத் தவிர்க்கவும் 3. மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்க்கவும் பிரச்சினைகளைச் சமாளிக்க மது மற்றும் போதைப்பொருட்களை நாடுவதைத் தவிர்க்கவும். அவை பின்னர் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தேவைப்பட்டால் விரைவாக அதற்கான தொழில்முறை உதவியை நாடுங்கள். நீங்கள் ஏற்கனவே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தால், அவற்றிலிருந்து விடுபட இதுவே சிறந்த நேரமாக இருக்கலாம். 4. பேரிடர் சூழ்நிலையைப் தனிப்பட்ட நலத்துக்காக தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்: எந்தவொரு பேரனர்த்தத்திலும், மன அழுத்தம், தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை மற்றும் துன்பகரமான உணர்ச்சிகளை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அத்தகைய நேரங்களில் உதவியை நாட தயங்காதீர்கள். ஒருவர் உதவியை நாடுவது என்பது பலவீனத்தின் அல்ல, மாறாக அவரிலுள்ள பலத்தின் அடையாளம். தேசிய மனநல உதவி எண் 1926 க்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்வதன் மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேர இலவச ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறலாம். அத்துடன் நாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலை மூலமாகவும் உங்களுக்கான மனநல சேவைகளைப் பெறலாம். இந்த கடினமான நேரத்தில், பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதில் இலங்கை உளவைத்தியர்கள் சங்கமாக, நாம் உறுதியாக இருக்கிறோம். “நாம் ஒன்றாக மீண்டெழுந்திடுவோம்!" வலிமையாகவும், உறுதியுடனும் https://www.virakesari.lk/article/233174
-
200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி
200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி Dec 12, 2025 - 12:50 PM இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு நீர் வள அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அனுமதித்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மகாவலி ஆற்றின் மேலதிக நீரை இலங்கையின் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வறண்ட பிரதேசங்களுக்குத் திருப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம், விவசாயத்துறையின் தாங்குதிறனை வலுப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 35,600 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பயன்களைப் பெற்றுத்தரும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணை நிதியளிப்பு முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமை தாங்குகின்றது. இதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிக்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திலிருந்து 60 மில்லியன் டொலர்களையும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திலிருந்து (IFAD) 42 மில்லியன் டொலர்களையும் திரட்ட எதிர்பார்க்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmj2jf20a02nyo29nnz93ycm3
-
வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்
வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் 12 Dec, 2025 | 03:46 PM (எம்.மனோசித்ரா) வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசேட குழுக்கள் நாட்டுக்கு வந்து மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவை தவிர மேலும் பல நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியா, துருக்கி, பங்களாதேஷ், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாரிய நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககளை முன்னெடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேபோன்று வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வழமையை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விடக் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்வு கூறல்களுக்கமைய சகல முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா புயலின் போது பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறியளவிலான மழை வீழ்ச்சி கூட பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளதால் சிறிய மழை வீழ்ச்சியின் போது கூட மண்சரிவுகள், கற்பாறைப் பிறழ்வுகள் ஏற்படலாம். எவ்வாறிருப்பினும் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வடகீழ் பருவ பெயர்ச்சியின் போது பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை முன்வைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரியில் காற்றழுத்த தாழ்வு பிரதேசம் காற்றழுத்த மையமாகவோ, சூறாவளியாகவோ வலுப்பெறக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்ட தற்போதுள்ள காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் மக்களை தெளிவுபடுத்தும் என்றார். https://www.virakesari.lk/article/233189
-
அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!
அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்! Dec 12, 2025 - 04:53 PM "இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் எவருக்கும் பயனாக அமையாது. எனவே, நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் பாதிப்பு குறைவு என்பதால், எங்களை விடவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்: "மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்தினால் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், எமது மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் வவுனியா மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 11 வீடுகள் முழுமையாகவும், 1,946 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, நேற்று மாலை வரை 6,238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்து முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கியிருந்தவர்களுக்குக் கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது. கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர். தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக விபரங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட எவரும் விடுபடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதேசமயம், பாதிக்கப்படாதவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அனர்த்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருந்தனர். எனவே, உங்கள் கோரிக்கை நியாயமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmj2s3kdy02oco29nn86h2swi
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா 12 Dec, 2025 | 12:42 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 51 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை தென் ஆபிரிக்கா 1 - 1 என சமப்படுத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் குவின்டன் டி கொக் அதிரடியாக குவித்த அரைச் சதம், ஒட்நீல் பார்ட்மன் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா குவின்டன் டி கொக்கின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. குவின்டன் டி கொக் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 90 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமுடன் 2ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களை குவின்டன் டி கொக் பகிர்ந்தார். இதேவேளை, டொனவன் பெரெய்ரா, டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர். டொனவன் பெரெய்ரா 30 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஏய்டன் மார்க்ராம் 29 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தியாவின் எதிர்கால ரி20 நட்சத்திரங்கள் என வருணிக்கப்படும் ஷுப்மன் கில் (0), அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (5) ஆகிய இருவரும் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். துடுப்பாட்ட வரிசையில் 3ஆம் இலக்கத்துக்கு உயர்த்தப்பட்ட அக்சார் பட்டெல் 21 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். திலக் வர்மா 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையம் ஹார்திக் பாண்டியா 20 ஓட்டங்களையும் ஜிட்டேஷ் ஷர்மா 27 ஓட்டங்களையும் கைப்பற்றினர். பந்துவீச்சில் ஒட்நீல் பார்ட்மன் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லுங்கி நிகிடி, மார்க்கோ ஜென்சன், லூத்தோ சிப்பல்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: குவின்டன் டி கொக். https://www.virakesari.lk/article/233172
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile (Pvt) Ltd நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:58 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Thilakawardena Textile (Pvt) Ltd இன் தலைவர் சுனில் திலகவர்தன, வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Thilakawardena Textile (Pvt) Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ரவிந்து திலகவர்தனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233126
-
மின்னல் எச்சரிக்கை!!
மின்னல் எச்சரிக்கை!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று. இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும். உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும். சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும். தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது). மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும். மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும். இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும். இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா? உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும் தற்காலத்தில் ChatGPT இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும். மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி. முற்றும் https://tinyurl.com/5emrm568
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கின் மக்கள் தொகை அதிகரிக்க இதுவும் ஒரு வழியாகலாம்.
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:51 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing, வியாழக்கிழமை (11) குறித்த காசோலையை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார். கொழும்பில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான கொரிய தூதுவர் Lee Miyon, சுவிட்சர்லாந்து தூதுவர் Dr. Siri Walt,, பலஸ்தீன தூதுவர் Ihab I.M. Khalil, மாலைதீவு உயர் ஸ்தானிகர் Masood Imad,, ஓமான் தூதரகத்தின் பணிக்குழாம் பிரதானி Said Al Harbi, இத்தாலிய தூதரக பிரதித் தலைவர் Alberto Arcidiacono ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233124 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:57 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு People's Leasing & Finance PLC இனால் 7.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும்,People’s Insurance PLC இனால் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது. குறித்த காசோலைகளை People's Leasing & Finance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ பண்டாரநாயக்க மற்றும் People’s Insurance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜீவனீ காரியவசம் ஆகியோரினால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. People's Leasing & Finance PLC இன் தலைவர் பேராசிரியர் அஜந்த குமார சமரகோனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233125
-
லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! 11 Dec, 2025 | 05:20 PM பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு சார்ந்த சத்திரசிகிச்சைகளில் முதுகெலும்பை உறுதியாகப் பேணுவதற்கும், தொடர்புபடுத்தலை விருத்தி செய்வதற்கும், முதுகெலும்பு சார்ந்த இயலாமைகள்/ விகாரமடைந்துள்ள நிலைமைகளுடன் செயலாற்றுவதற்கும், என்பு முறிவு மற்றும் ரியூமர் இற்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் யுvenierr Pharma (Pvt) Ltd. (Manufacturer : Miraclus Orthotech (Pvt) Ltd. India) இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/233105
-
கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
கோவா இரவு விடுதி தீ விபத்து- உரிமையாளர்களை தாய்லாந்தில் இருந்து அழைத்து வருவது எவ்வளவு சவாலானது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக, போலீஸார் கூறுகின்றனர். 10 டிசம்பர் 2025 கோவா இரவு விடுதியில் தீ பற்றிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லியை சேர்ந்த அஜய் குப்தா என்பவரை கோவா காவல்துறை காவலில் எடுத்துள்ளது. இந்த தகவலை கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. "அஜய் குப்தாவின் வீட்டை சோதனையிட்ட போது, அவர் தப்பிச் செல்ல முயன்றார்." என காவல்துறை தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 06) கோவாவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீப்பற்றிக்கொண்ட நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். சிலிண்டர் வெடித்ததில் தீ பற்றியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வடக்கு கோவாவின் அர்போரா எனும் பகுதியில் உள்ள இந்த இரவு விடுதியில் தீப்பற்றியதில் சுற்றுலாப் பயணிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இறந்த பலரும் அந்த விடுதியின் பணியாளர்கள் என நம்பப்படுகிறது. முன்னதாக, இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் மற்றும் இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ராவுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பித்ததாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது. "இந்த நோட்டீஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை கண்டடைவதற்கு உதவும், மேலும் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்து இடம்பெயர்வதை தடுக்கும்," என கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை கோவா காவல்துறையின் டிஐஜி வர்ஷா ஷர்மா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது," என்றார். "இது மிகவும் துயரமான விபத்து, இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரவு விடுதியின் உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையையும் நாங்கள் உடனடியாக தொடங்கினோம். அவர்கள் ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, சிபிஐ மற்றும் இண்டர்போல் உதவியுடன் அவர்களை அடைவதற்கு முயற்சித்து வருகிறோம்." என்றார் வர்ஷா ஷர்மா தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் தீவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் இருந்தால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் என்ன சவால்கள் இருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நாடு கடத்துவது தொடர்பாக தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோவாவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீப்பற்றிக்கொண்ட நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா - தாய்லாந்து இடையேயான ஒப்பந்தம் உள்துறை அமைச்சகத்தின்படி, இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே 2013ம் ஆண்டு, பாங்காக்குக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சட்ட தகவல்கள் மற்றும் மற்ற தேவையான உதவிகளை வழங்கும். அதன்மூலம் அந்நாடுகள் தலைமறைவான நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்க முடியும். அந்த ஒப்பந்தத்தின்படி, பொருளாதார குற்றங்களில் குற்றம் சட்டப்பட்டவர்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்படைக்க முடியும். வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, 48 நாடுளுடன் இத்தகைய ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. அவற்றில் வங்கதேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள், இஸ்ரேல், சௌதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தப்பியோடிய இந்திய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் மட்டும் போதுமா? எளிய வார்த்தைகளில் சொல்வதானால், இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எந்த நாட்டுக்கு தப்பியோடினாரோ அங்கிருந்து அவரை சம்பந்தப்பட்ட நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்க முடியும். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருந்தால் தான் இவ்வாறு செய்ய முடியும். இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, விசாரணையில் உள்ள அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளில் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கோர முடியும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளிலும் இவ்வாறு கோர முடியும். விசாரணை நடைபெற்று வரும் வழக்குகளில் அதை விசாரிக்கும் விசாரணை முகமைகள், வெளிநாட்டு நீதிமன்றங்களில் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்களை வழங்குவதை உறுதி செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராகவும் சர்வதேச சட்டங்களில் நிபுணராகவும் உள்ள முனைவர் அஜேந்திர ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர் சௌரப் யாதவிடம் கூறுகையில், "இந்தியாவிலுள்ள போலீஸார் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கூறினால், அதை வெளிநாட்டு போலீஸார் அப்படியே செய்வார்கள் என்பது அர்த்தமில்லை. இது இரண்டு நாடுகளின் நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய சட்ட நடவடிக்கை. இரு நாடுகளுக்கிடையேயும் இதுதொடர்பாக ஒப்பந்தம் இருக்க வேண்டும், மேலும் ஒருவரை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன." என்றார். குற்றச் சம்பவம் நடந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முகமைகளிடம் ஆதாரங்கள் இருந்தும் ஏன் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க முடிவதில்லை, அல்லது அதற்கு ஏன் அதிக காலம் எடுக்கிறது என்ற கேள்வி எழலாம். அஜேந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்கப்படுவதற்கு கோரப்படும் நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரை ஒப்படைக்கும் நாடுகளுக்கும் சட்டங்கள் உள்ளன, ஒரு நாடு கேட்கும்போது சம்பந்தப்பட்ட நபரை ஒப்படைக்க வேண்டுமா, இல்லையா என்பது அந்த சட்டத்தின்படியே தீர்மானிக்கப்படும்." என்றார். மேலும் அவர் கூறுகையில், "அந்த நாட்டின் நீதிமன்றத்தில் தொடர்புடைய நபர் மீதான வழக்கு குறித்து சமர்ப்பித்து, தங்கள் நாட்டில் அந்நபர் குற்றம் புரிந்தார் என்பதற்கான முகாந்திரம் (prima facie) இருப்பதாக கூற வேண்டும். அந்த குற்றத்தை அந்நபர் தப்பியோடிய நாட்டின் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளின்படி, அந்நபருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படும் என உறுதி கூற வேண்டும். உண்மையிலேயே ஒரு குற்றம் நடந்ததாக அந்நாட்டின் நீதிமன்றம் திருப்தியடைந்தால் மட்டுமே, அவரை தொடர்புடைய நாட்டுக்கு ஒப்படைக்க அனுமதிக்கும்." என்றார். பட மூலாதாரம்,@NIA_India படக்குறிப்பு,2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானா இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். முந்தைய வழக்குகள் 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானா இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். மும்பை மற்றும் டென்மார்க்கில் தனது நண்பர் டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் இணைந்து தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவில் தஹாவூர் ரானா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அகஸ்தாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கப்பட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்ப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் 2018ம் ஆண்டு துபாயிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டார். அகஸ்தாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் காங்கிரஸ் தலைமையிலான முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்டது. இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸின் மூலம் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சோட்டா ராஜனை இந்தோனீசிய காவல்துறை கைது செய்தது. அதன்பின் அவர் அதே ஆண்டு நவம்பர் 6 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 1993 மும்பை வெடிகுண்டு தாக்குதல்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அபு சலீம் 2005ம் ஆண்டு போர்ச்சுகல்லில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபு சலீமை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு பாஜக தலைவரும் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான எல்கே அத்வானி, அபு சலீமை 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம் என்றும் அவருக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம் என்ற உறுதியை போர்ச்சுகல் அரசு மற்றும் நீதிமன்றத்திடம் எழுத்துபூர்வமாக வழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23e14138n4o
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு மில்லியன் வழங்கி வைத்தார் கலாநிதி ஜனகன் Published By: Vishnu 11 Dec, 2025 | 07:41 PM அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ டி எம் எம் சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் அவர்களினால் இரண்டு மில்லியன் ரூபாய் காசோலை கலாநிதி ஜனகன் அவர்களின் தாயார் தனியார் GIT கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி ரூபி விநாயகமூர்த்தி அவர்கள் கௌரவ பிரதமர் அவர்களிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/233122
-
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி 11 Dec, 2025 | 05:27 PM மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2030 ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70மூ மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் குறிக்கோளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா (தலா 50 மெகாவாற்று கொண்ட 02 மின்னுற்பத்தி நிலையங்கள்) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையை பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, ஏழு பேர் (7) தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் Consortium of Vidullanka PLC & David Pieris Motor Company (Lanka) Limited kw;Wk; Wind Force PLC ஆகியவற்றுக்கு மேற்குறித்த இரண்டு (2) 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. https://www.virakesari.lk/article/233107
-
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம் பட மூலாதாரம்,Alex Wong/Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் கட்டுரை தகவல் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் 11 டிசம்பர் 2025, 07:05 GMT பிரிட்டன் உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவில் நுழைவதற்கான நிபந்தனையாக அவர்களின் ஐந்து ஆண்டு சமூக ஊடக வரலாற்றை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய திட்டம் கூறுகிறது. இந்த புதிய நிபந்தனை, விசா இல்லாமல் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குச் செல்லத் தகுதியுள்ள பல நாட்டு மக்களைப் பாதிக்கும். ஆனால் அவர்கள் பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (Electronic System for Travel Authorization - ESTA) படிவத்தை நிரப்பியிருக்க வேண்டும். ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பைக் காரணமாகக் கூறி, அமெரிக்க எல்லைப் பகுதிகளை மேலும் கடுமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தத் திட்டம், அங்கு வரக்கூடிய பயணிகளுக்கு ஒரு தடையாக அமையலாம் அல்லது அவர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா என்று கேட்கப்பட்டபோது, டிரம்ப் அதுகுறித்து கவலைப்படவில்லை என்று கூறினார். புதன்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், "இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம்"என்றார். மேலும், "நாங்கள் மக்கள் இங்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரும்புகிறோம்" என்றும், "தவறான நபர்கள் எங்களது நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்," என்றும் குறிப்பிட்டார். அமெரிக்கா அடுத்த ஆண்டு கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையை நடத்துகிறது, மேலும் 2028-இல் லாஸ் ஏஞ்சலிஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. இதனால் அடுத்த ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் அதன் அங்கமான சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை (CBP) ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் திட்ட ஆவணம், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்ப் எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளார் (கோப்புப் படம்) இந்த முன்மொழிவு, "ஈஎஸ்டிஏ (ESTA) விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் சமூக ஊடக விவரங்களை வழங்க வேண்டும்" என்று கூறுகிறது. இருப்பினும், எந்தெந்த குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை அது வழங்கவில்லை. தற்போதுள்ள ஈஎஸ்டிஏ படிவத்தை நிரப்புவதற்கு, பயணிகள் ஒப்பீட்டளவில் குறைவான தகவல்களையும், ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணமாக 40 டாலர் (30 பவுண்டு) கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட சுமார் 40 நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட அந்த நாடுகளின் குடிமக்கள், ஈஎஸ்டிஏ மூலம் விண்ணப்பித்து, இரண்டு வருடத்தில் பலமுறை அமெரிக்கா செல்லும் அனுமதியைப் பெற முடியும். சமூக ஊடகத் தகவல்களைச் சேகரிப்பதுடன், கடந்த ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் விண்ணப்பதாரர் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் சேகரிக்க இந்தப் புதிய திட்டம் முன்மொழிகிறது. "வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்," என்ற தலைப்பில் ஜனவரி மாதம் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை இந்த திட்டம் மேற்கோள் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளுக்கான ஈஎஸ்டிஏ தரவு சேகரிப்பு தொடர்பான புதிய திட்டம், 60 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கிறது. இது குறித்து சிபிபி-ன் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், "அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு இந்த விஷயத்தில் எதுவும் மாறவில்லை" என்றும், "இது ஒரு இறுதி விதி அல்ல, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க புதிய கொள்கை வாய்ப்புகளைப் பற்றி ஒரு விவாதத்தைத் தொடங்க இது ஒரு முதல் படி மட்டுமே," என்றும் குறிப்பிட்டார். டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான எலெக்ட்ரானிக் ஃபிரான்டியர் பவுண்டேஷனைச் (Electronic Frontier Foundation) சேர்ந்த சோபியா கோப், இந்தத் திட்டத்தை விமர்சித்து, இது "சிவில் உரிமைகளுக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும்" என்று நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார். இதற்கிடையில், குடியேற்றச் சட்ட நிறுவனமான ஃப்ராகோமன் (Fragomen), விண்ணப்பதாரர்கள் ஈஎஸ்டிஏ அனுமதிக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகக்கூடும் என்பதால், நடைமுறையில் சில தாக்கங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தத் திட்டம் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கும் டிரம்ப் நிர்வாகம் இதற்கு முன்னர், மாணவர் விசாக்களுக்கும், திறன்மிகு தொழிலாளர்களுக்கான ஹெச் -1பி விசாக்களுக்கும் விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரை பரிசோதிக்கும்போது அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்யும் என்று அறிவித்தது. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் "ஆன்லைன் இருப்பு" (online presence) குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், இந்தச் சோதனை நடைபெறுவதற்காக அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களின் தனியுரிமை அமைப்புகளும் "பொது" (public) நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை கூறியது. மெக்சிகோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக தளங்களின் பயனர் பெயர்கள் அல்லது 'ஹேண்டில்களையும்' (usernames or handles) பட்டியலிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகத் தகவல் ஏதாவது பட்டியலிடப்படாவிட்டால், அது தற்போதைய மற்றும் எதிர்கால விசாக்கள் மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அது எச்சரிக்கிறது. மாணவர் விசா கொள்கை குறித்து ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி கூறுகையில்: "தங்கள் அரசாங்கம் நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க குடிமக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதைத்தான் டிரம்ப் நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்து வருகிறது," என்றார். "குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான பிற அச்சுறுத்தல்களுக்கு உதவுபவர்கள் அல்லது ஆதரவளிப்பவர்கள், அல்லது சட்டவிரோதமான யூத எதிர்ப்பு துன்புறுத்தல் அல்லது வன்முறையைச் செய்பவர்களை" சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அமெரிக்க நிர்வாகத்தின் எல்லைகளைக் கடுமையாக்கும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள 19 நாடுகளைப் பாதிக்கும் தற்போதைய பயணத் தடை விரைவில் விரிவுபடுத்தப்படலாம் என்று அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை, வாஷிங்டன் டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு ஆப்கான் நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். டிரம்பின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயணக் கொள்கை மாற்றங்கள், அமெரிக்கச் சுற்றுலா துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என நிபுணர்கள் முன்பு கூறியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel & Tourism Council), தான் ஆய்வு செய்த 184 நாடுகளில், 2025-ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா வருவாயில் சரிவைக் காணக்கூடிய ஒரே நாடாக அமெரிக்கா இருக்கும் என்று தெரிவித்தது. டிரம்பின் வரிகள் (tariffs) மீதான எதிர்ப்பின் ஒரு வடிவமாக, கனடாவைச் சேர்ந்த பலரும் அமெரிக்கப் பயணத்தைப் புறக்கணித்தது போன்ற நிர்வாகத்தின் பிற கொள்கைகளும், அமெரிக்காவின் சுற்றுலாவைப் பாதித்ததாகத் தெரிகிறது. அக்டோபர் மாதம், அமெரிக்காவுக்கு வரும் கனடிய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 10-வது மாதமாக சரிவைக் கண்டதாகக் குறிப்பிடப்பட்டது. முன்னதாக, கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்த சர்வதேசப் பயணிகளில் சுமார் நான்கில் ஒரு பங்கை கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளனர் என்று அமெரிக்கப் பயணச் சங்கம் (US Travel Association) தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g6j5nv0vxo
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 07:37 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. குறித்த காசோலையை, அதன் தலைவர் Abdul Razzle Abdul Sattar வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். அந்த சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Mohamed Abdul Hussain, Mohamed Ismail Dawood ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233121