Everything posted by ஏராளன்
-
உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்
உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில் Dec 9, 2025 - 04:35 PM கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyh4l2e02k9o29ngoalfbok
-
இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 09 Dec, 2025 | 03:59 PM இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 600 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தினால் அனர்த்த நிவாரண சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232883
-
அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு
அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு Dec 9, 2025 - 09:37 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்" என சுமணரத்ன தேரர் தெரிவித்திருந்தார். இவரது இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக, 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறித்த தேரரை கைது செய்யுமாறு கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை வழக்கு தொடுநர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், அவரை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கட்டளையிட்டார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmiy26w9e02jmo29n0ad10ot6
-
வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்
சர்வதேச மனிதாபிமான உதவிகளைக் கண்காணிக்க பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் உயர்மட்ட தேசியக் குழு Published By: Vishnu 09 Dec, 2025 | 04:26 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த வாரம் தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் கிடைக்கின்றன. அந்த மனிதாபிமான உதவிகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஓர் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த இயற்கை அனர்த்தங்களால் இதுவரையில் 22 மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக உதவிகள் கிடைத்து வருகின்றன. அனர்த்தத்துக்கு பின்னரான நடவடிக்கைகள் அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் நிவாரணங்கள் முறையாக மக்களை சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே இவற்றை முகாமைத்துவம் செய்து கண்காணிப்பதற்காக என்னுடைய தலைமையில் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முப்படை மற்றும் பொலிஸ் உட்பட துறைசார் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவர். உணவு, சுகாதாரம், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வெளிநாடுகளிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை எவ்வாறு முகாமைத்துவம் செய்து மக்களுக்கு விநியோகிப்பது என்பதற்கான ஆலோசனை இக்குழுவால் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும். மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என இந்த வலையமைப்பின் கீழ் அனர்த்த நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படும். இவை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதை எமது குழு உறுதி செய்யும். அதற்கு கொள்கை ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும். வாரத்தில் 3 நாட்கள் இக்குழு கூடி, நிவாரணப்பணகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/232832
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை Dec 9, 2025 - 08:28 AM வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (09) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (10) காலை 7.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதுடன், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பலத்த மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmixzqwa702jlo29n6qp7k6z3
-
ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம்
ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பத்தாண்டுக்குள், இந்திய மன்னர்களின் ராணுவத் திறன் விரைவாக அதிகரித்து வருவதையும், பிளாசி போன்ற வெற்றியை மீண்டும் பெறுவது கடினம் என்பதையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் உணர்ந்தனர். ஐரோப்பியர்களின் ராணுவத் தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக இந்திய சுதேச சமஸ்தானங்கள் வர வெறும் பத்தாண்டுககள் மட்டுமே ஆனது. 1760-களின் நடுப்பகுதிக்குள், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ராணுவ பலத்தின் இடைவெளி கிட்டத்தட்ட குறைந்துவிட்டதாகத் தெரிந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் சந்தித்த முதல் சவால் ஹைதர் அலியிடமிருந்துதான் வந்தது. லெவின் பி. போரிங் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்' (Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "18-ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தின் மையமாக மைசூர் இருந்தது. உலகின் கிழக்கு வரலாற்றுப் பகுதியில் மைசூர் மிகத் துணிச்சலான மற்றும் பரபரப்பான நடவடிக்கைகளின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் மிகவும் ஆபத்தான எதிரியை எதிர்கொண்டனர். இந்தப் பகுதியின் தலைவரின் பெயர் ஹைதர் அலி." என எழுதினார். ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சி வெறும் 38 ஆண்டுகளே நீடித்தாலும், இந்த குறுகிய காலத்தில் நடந்த சம்பவங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. பட மூலாதாரம்,Pharos Book இயல்பிலேயே ஒரு போர் வீரர் ஹைதர் அலி மைசூர் படையில் உயர் பதவியில் இருந்தார். 1776-ஆம் ஆண்டில் மைசூர் உடையார் மன்னரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் மைசூர் ராணுவத்தை விரிவுபடுத்தி, சிறிய அண்டை சமஸ்தானங்களைக் கைப்பற்றத் தொடங்கினார். இர்ஃபான் ஹபீப் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் எதிர்ப்பு மற்றும் நவீனமயமாக்கல்' (Resistance and Modernization Under Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "ஹைதர் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரெஞ்சு தளபதிகளை அழைத்து வந்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரெஞ்சு பொறியாளர்களின் உதவியை நாடினார். ஹைதர் தனக்கென கடற்படையை உருவாக்கவும் முயற்சி செய்தார். 1766-ஆம் ஆண்டில் அவரிடம் 2 பெரிய போர்க் கப்பல்கள், 7 சிறிய போர்க் கப்பல்கள் மற்றும் 40 சிறிய படகுகள் இருந்தன. இந்த அனைத்திற்கும் ஸ்டெனெட் (Stennett) என்ற ஐரோப்பியரே தளபதியாக இருந்தார்," என எழுதுகிறார். ஹைதர் அலி இயல்பிலேயே ஒரு போர் வீரராக இருந்தார் என்று கூறப்படுகிறது. அவர் குதிரை சவாரி செய்வதில் மட்டுமல்ல, வாளை கையாள்வதிலும் மற்றும் துப்பாக்கி சுடுவதிலும் திறமையானவராக இருந்தார். லெவின் போரிங் எழுதுகிறார்: "ஹைதருக்கு சோர்வை சகித்துக் கொள்ளும் அபார சக்தி இருந்தது. படைகளுக்குத் தலைமை தாங்கும்போது தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை, அதனால்தான் அவரது வீரர்கள் அவருக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்தனர். ஹைதரின் சிறப்பு அம்சம், போரின் போது அமைதியாக இருந்து வேகமாக, திடீர் தாக்குதல்களைத் தொடுப்பது ஆகும், இதில் அவர் பெரும்பாலும் வெற்றி கண்டார்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹைதர் அலி குதிரையேற்றத்திலும், துப்பாக்கிச் சுடுதலிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஹைதரின் அன்றாட வாழ்க்கை மேஸ்தர் லா டூர் தனது 'ஹைதர் மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானின் வரலாறு' (The History of Hyder and His Son Tipu Sultan) என்ற புத்தகத்தில், ஹைதர் சுமார் 5 அடி ஆறு அங்குல உயரம் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மாநிறம் கொண்டவராகவும், கரடுமுரடான முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார். அவர் மைல்கள் கணக்கில் நடந்தோ அல்லது குதிரை மீது பயணம் செய்தோ கடக்கும் திறன் கொண்டவர். அவர் வெள்ளை மஸ்லின் ஆடைகள் மற்றும் தலைப்பாகை அணிய விரும்பினார். "அவருக்கு ஆபரணங்கள் மீது ஆர்வம் இல்லை. பார்க்க கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவரது தோற்றம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது. அவர் தினமும் நள்ளிரவில் தூங்கச் சென்று, காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார்." "மைசூர் மன்னரான பிறகு, அவர் தனது முகத்தில் இருந்த அனைத்து முடிகளையும் சவரம் செய்து கொண்டார். அவருக்கு தாடி, மீசை, இமைமுடிகள் அல்லது புருவங்கள் இல்லை. காலை 8 மணி முதல் 9 மணிவரை அவர் அரண்மனையில் இருந்து அரசவைக்கு வருவார், அதன்பிறகு பால்கனியில் ஏறி யானைகள் மற்றும் குதிரைகளின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். ஹைதர் படிப்பறிவில்லாதவர். தன் பெயரின் முதல் எழுத்தை (ஹை) எழுதுவதைக் கூட அவர் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார்." ஹைதர் அலியால் கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் மொழிகளை சரளமாகப் பேச முடிந்தது. அவருக்கு பாரசீகம் மற்றும் அரபு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது. படிப்பறிவில்லை என்றாலும், அவருக்கு அபார நினைவாற்றல் இருந்தது. பல பத்தாண்டுகளுக்கு முன் சந்தித்த ஒருவரை அடையாளம் காணும் அபார திறன் அவரிடம் இருந்தது. பட மூலாதாரம்,Getty Images ஹைதரின் சகிப்புத்தன்மை ஹைதரின் ஆட்சிக் காலத்தில் மத விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 1610-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த மைசூரின் புகழ்பெற்ற தசரா திருவிழாவைத் தொடர அவர் அனுமதித்தார். அவர் தசரா திருவிழாவில் நேரடியாகப் பங்கேற்றார். விஜயதசமி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் யானை மீது ஏறிச் செல்வதில் அவர் முன்னணியில் இருப்பார். மார்க் வில்க்ஸ் தனது 'மைசூர் வரலாற்றைக் கண்டறியும் முயற்சியில் தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' (Historical Sketches of the South of India in an Attempt to Trace the History of Mysore) என்ற புத்தகத்தில் "முஸ்லிம் மன்னர்கள் அனைவரிலும் ஹைதர் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர். அவருக்கு தனது மதப்படி பிரார்த்தனை செய்யவோ, நோன்பு இருக்கவோ தெரியாது, அவருக்கு கற்றுக்கொடுக்கப்படவும் இல்லை. அனைத்து மதங்களும் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்றும், கடவுளின் பார்வையில் அனைத்து மதங்களும் சமம் என்றும் அவர் பொதுவில் அறிவித்தார்." எழுதியுள்ளார். ஏ.கே. சாஸ்திரி தனது 'சிருங்கேரி தர்மஸ்தானின் பதிவுகள்' (The Records of the Sringeri Dharmasthan) என்ற புத்தகத்தில் "ஹைதர் 1769, ஏப்ரல் 27 அன்று சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஹைதர் ஜகத்குருவுக்கு ஒரு யானை, ஐந்து குதிரைகள், ஒரு பல்லக்கு, ஐந்து ஒட்டகங்கள் மற்றும் தேவி சாரதா அம்பாளுக்கு ஒரு புடவை, இரண்டு சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொண்ட பணப்பையை பரிசாக அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜகத்குருவை ஒரு சிறந்த மற்றும் புனிதமான ஆத்மா என்று குறிப்பிட்டுள்ளார்." என்று தெரிவித்துள்ளார். ராக்கெட் பயன்பாட்டின் முன்னோடி பட மூலாதாரம்,Gyan Publishing House 1767ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹைதர் அலி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரை அறிவித்தார். அப்போது ஹைதரின் படையில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இந்த அளவுக்கு ஹைதரிடம் நவீனப் படை உள்ளது என்பது கம்பெனிக்கு அப்போது தெரியாது. ஹைதரின் வீரர்களின் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் அதிநவீன பிரெஞ்சு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அவரது பீரங்கிகளின் திறன் மற்றும் வீச்சு கம்பெனியின் படைகளை விட அதிகமாக இருந்தது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் மேரி லாஃபோன் தனது 'இண்டிகா: இந்தோ-பிரெஞ்சு உறவுகளில் கட்டுரைகள் 1630-1976 ' (Indica: Essays in Indo-French Relations 1630-1976) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "பல விஷயங்களில், ஹைதரின் வீரர்கள் ஆங்கிலேய வீரர்களை விட அதிக புத்திசாலித்தனமாகவும், தந்திரோபாய ரீதியாக சிறந்தும் விளங்கினர். எதிரிப் படைகளைக் கலைக்க ஒட்டகங்களில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதில் அவர்கள் திறமை பெற்றிருந்தனர். தனது படைகளை நகர்த்துவதற்கும் தளவாடங்களை வழங்குவதற்கும் ஹைதர் காளைகளைப் பயன்படுத்தினார், அது அக்காலத்தில் ஒரு புதிய விஷயமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்களும் அதைப் பின்பற்றினர்." இறுதியில், ஆங்கிலேயர்கள் ஹைதருடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், ஆங்கிலேயர்களைப் போரில் தோற்கடிக்கவும் ஆச்சரியப்படுத்தவும் முடியும் என்பதை இந்தியாவின் பல மன்னர்கள் உணர்ந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராக்கெட்டுகளை முதன்முதலில் பயன்படுத்தியது ஹைதர் அலிதான் ஆங்கிலேயர் மீது தாக்குதல் 1780 பிப்ரவரி 7 அன்று, வட்காவ் ஒப்பந்தத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு, மராட்டியத் தலைவர் நானா பட்நாவிஸ் தனது பழைய எதிரியான ஹைதர் அலிக்குக் கடிதம் எழுதினார். அதில், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு மாதத்திற்குள் ஹைதராபாத் நிஜாமும் ஹைதருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். கோடைக்காலம் வந்தபோது, இந்த மூன்று சக்திகளும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான திட்டத்தில் பணியாற்றத் தொடங்கின. ஒரு மாதம் கழித்து ஹைதருக்கு பிரான்சிலிருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள் வந்து சேர்ந்துவிட்டதாக ஆங்கிலேயர்களின் தளமான மதராஸிற்கு (சென்னை) ஒரு செய்தி கிடைத்தது. இறுதியாக, 1780 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று, ஹைதர் அலி மீண்டும் ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த முறை அவரிடம் முன்னர் இருந்ததை விட இரண்டு மடங்கு பெரிய படை இருந்தது. அவரது படையில் 60 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள், 35 ஆயிரம் காலாட்படை வீரர்கள் மற்றும் 100 பீரங்கிகள் இருந்தன. ஆவணங்களின்படி, மதராஸைப் பாதுகாக்க கம்பெனியின் 30 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட வேண்டும், ஆனால் உண்மையில் அந்த மாதம் எட்டு ஆயிரம் வீரர்களை மட்டுமே திரட்ட முடிந்தது. மார்க் வில்க்ஸ் தனது 'தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' புத்தகத்தில், "ஹைதர் முன்னேறிய வேகம் ஆங்கிலேய வீரர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது. இவர்களில் பல வீரர்களின் குடும்பங்கள் ஆற்காட்டில் வசித்து வந்தனர். தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, இந்த வீரர்கள் ஆங்கிலேயர்களை விட்டு விலகினர். அவர்கள் ஹைதரிடம் சரணடைந்தனர் அல்லது லஞ்சம் பெற்றுக்கொண்டு தங்கள் நிலைகளின் கதவுகளைத் திறந்து விட்டனர். மதராஸ், வேலூர் மற்றும் ஆற்காட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தீ வைத்து, கம்பெனியின் தளவாட விநியோகத்தை ஹைதர் முழுவதுமாக அழித்தார்." என குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Getty Images முன்ரோ மற்றும் பெய்லியின் படைகள் சேரும் முயற்சி தோல்வி 1780ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தென்னிந்தியாவில் ஹைதரின் படைகளை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய படை மதராஸிலிருந்து காஞ்சிபுரத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. இந்தப் படைக்கு தளபதி ஹெக்டர் முன்ரோ தலைமை தாங்கினார். இவர்தான் 15 ஆண்டுகளுக்கு முன் பக்சர் போரில் சுஜா-உத்-தௌலாவைத் தோற்கடித்தவர். இந்த முறை அவரது படையில் ஐந்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர், அவர்களுக்கு மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் ஹைதரின் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட மாபெரும் படையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு 30 மைல் வடக்கே இருந்த கர்னல் வில்லியம் பெய்லிக்கு, தனது படைகளுடன் முன்ரோவின் படையுடன் இணையுமாறு உத்தரவு கிடைத்தது. குலாம் ஹுசைன் கான் தனது 'சைர் முதாக்கரின்' (Sair Mutakhareen) என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். "சமுத்திரத்தின் கோப அலைகளைப் போல முழு நிலத்தையும் மூடியிருக்கும் அளவு ஹைதரிடம் அவ்வளவு வீரர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த பீரங்கிப்படைக்கு முடிவே இல்லாததுபோல் தெரிந்தது. இதற்கிடையில், பலத்த மழை பெய்யத் தொடங்கியது, பெய்லியின் வீரர்கள் கொற்றலையார் ஆற்றைக் கடக்க பதினொரு நாட்கள் ஆனது. இந்த நேரம் ஹைதரின் மகன் திப்பு சுல்தானுக்கு, முன்ரோ மற்றும் பெய்லியின் படைகளுக்கு இடையில் தனது 11 ஆயிரம் வீரர்களை நிறுத்த போதுமானதாக இருந்தது." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் பெய்லியின் படையைச் சூழ்ந்த ஹைதரின் படை இரு படைகளுக்கும் இடையே முதல் மோதல் செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்தது. கேப்டன் முவாத் தனது 'போலிலூர் தோல்வியின் அறிக்கை' (Account of the Defeat of Pollilur) என்ற கட்டுரையில், "தொடர்ந்து பெய்த மழையில், நெல் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீரில் சண்டையிட்ட பெய்லியின் படையின் பலவீனங்கள் முழுமையாக வெளிப்பட்டன, அவர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. இரு படைகளும் நேருக்கு நேர் சண்டையிடவில்லை, மாறாகத் தொலைவில் இருந்தே போரிட்டன." எனக் குறிப்பிடுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்களுக்குச் சற்று முன்னால் எக்காளங்கள் மற்றும் மேளங்களின் சத்தம் கேட்டது. முன்ரோவின் வீரர்கள் தங்களுக்கு உதவ வருகிறார்கள் என்று பெய்லி கருதினார். அந்த வீரர்கள் நெருங்கி வந்தபோது, ஹைதர் தனது 25 ஆயிரம் வீரர்களுடன் தங்கள் முன் வந்துள்ளார் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். பின்னர் பெய்லியின் இளைய சகோதரர் போலிலூர் அறிக்கையில் குறிப்பிடுகையில், "நாங்கள் ஹைதரின் குதிரைப் படையால் சூழப்பட்டோம். அவர்களுக்குப் பின்னால் அவரது பீரங்கிகள் இருந்தன. சுமார் 50 பீரங்கிகள் எங்கள் சுற்றி ஒரு அரை வட்டத்தை உருவாக்கின. ஹைதர் சிறிது நேரம் சண்டையை நிறுத்த உத்தரவிட்டார். பின்னால் வந்த தனது பெரிய பீரங்கிகளை முன்னே கொண்டு வந்தார். அவர்களுக்கு எதிராக எங்களுக்கு அங்கே எந்த வாய்ப்பும் இல்லை." எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images ஆங்கிலேயர் தோல்வி தன்னிடம் இருந்த அனைத்து வெடிமருந்துகளும் தீர்ந்த பிறகு, சரணடைய முயற்சிக்கும் விதமாக பெய்லி தனது வாளால் ஒரு கைக்குட்டையைக் கட்டி மேலே காட்டினார். பெய்லி தனது வீரர்களை ஆயுதங்களைக் கீழே போடுமாறு உத்தரவிட்டார், ஆனால் சில வீரர்கள் அவரது உத்தரவைக் கேட்க முடியாமல் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக, ஹைதர் சரணடைதலை ஏற்க மறுத்துவிட்டார். அவரது குதிரைப்படை, போரில் தோற்ற ஆங்கிலேயப் படையை கொல்லத் தொடங்கியது. ஆலன் ட்ரைடன் தனது 'புலி சண்டை போட்ட போது' (When the Tiger Fought the Thistle) என்ற புத்தகத்தில், 73வது ஹைலேண்ட் ரெஜிமென்ட்டின் லெப்டினன்ட் ஒருவரின் கூற்றை இவ்வாறு பதிவு செய்கிறார்: "மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு எழுந்து நின்றனர். சிலர் மூச்சுத் திணறினார்கள். சிலர் தங்கள் சக வீரர்களின் சடலங்கள் மீது விழுந்ததால் நகர முடியாமல் இருந்தனர். சிலர் யானையின் காலடியில் நசுக்கப்பட்டனர். சிலரின் உடைகள் கிழிந்துபோயின, அவர்கள் கொதிக்கும் வெயிலில் தாகத்துடன் கிடந்தனர், எளிதில் காட்டு விலங்குகளுக்கு இரையாயினர். ஆங்கிலேயப் படையில் இருந்த 86 அதிகாரிகளில், 36 பேர் கொல்லப்பட்டனர், 34 பேர் காயமடைந்தனர், மற்றும் 16 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்." பெய்லி தலையிலும் முதுகிலும் காயமடைந்தார். அவர் தனது ஒரு காலையும் இழந்தார். இறுதியாக, பெய்லி ஒரு பீரங்கி வண்டியில் கட்டப்பட்டு ஹைதரின் முன் கொண்டு வரப்பட்டார், மற்ற கைதிகளுடன் தரையில் அமர வைக்கப்பட்டார். தோல்வியடைவது மற்றும் கைதி ஆவதன் பொருள் என்ன என்பதை கம்பெனி வீரர்கள் முதல்முறையாக உணர்ந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கர்னல் பெய்லி ஹைதர் அலியிடம் சரணடைதல். ஆங்கிலேய கைதிகள் கூறியது என்ன? சுமார் ஏழு ஆயிரம் ஆங்கிலேய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஜேம்ஸ் ஸ்கரி என்ற கைதி தனது 'ஜேம்ஸ் ஸ்கரியின் சிறைப்பிடிப்பு, துன்பம் மற்றும் தப்பித்தல்' (The Captivity, Suffering and Escape of James Scurry) என்ற புத்தகத்தில் "பத்து ஆண்டுகள் ஹைதரின் சிறையில் இருந்த பிறகு, நாற்காலியில் எப்படி உட்காருவது, கத்தி மற்றும் முள் கரண்டியால் எப்படிச் சாப்பிடுவது என்பதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன். ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதையும் நான் மறந்துவிட்டேன். என் தோல் கருப்பாகிவிட்டது, ஐரோப்பிய ஆடைகளை அணிய நான் விரும்பவில்லை." என்று கூறியுள்ளார். மாயா ஜாசனோஃப் தனது 'பேரரசின் யுகம்: கிழக்கில் வெற்றி மற்றும் சேகரிப்பு 1750-1850' (Age of the Empire Conquest and Collecting in the East 1750-1850) என்ற புத்தகத்தில், "பெய்லியின் தோல்விக்குப் பிறகு ஹைதர் சண்டையைத் தொடர்ந்திருந்தால், ஆங்கிலேயர்களின் மன உறுதி இழந்த நிலையில், செயின்ட் ஜார்ஸ் கோட்டையை அவர் கைப்பற்றுவதில் தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஹைதர் தனது வீரர்களைப் பாதுகாக்க விரும்பியதால், கம்பெனிக்கு அது அதிர்ஷ்டமாக அமைந்தது. அவர் கம்பெனியுடன் நேரடியாக மோதும் கொள்கையை விட்டுவிட்டு, தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி விட்டுத் தப்பிக்கும் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினார்." எனத் தெரிவிக்கிறார். அடுத்த சில மாதங்களில், கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ், மராட்டியர்களுடனான ஹைதரின் கூட்டணியை உடைப்பதில் வெற்றி பெற்றார். ஹேஸ்டிங்ஸ் மராட்டிய தளபதி மஹாத்ஜி சிண்டேயுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார், இதன் கீழ் மராட்டியர்கள் ஆங்கிலேயர்களின் நண்பர்களாக மாறினர். இதன் விளைவாக, ஆங்கிலேயர்களுக்கு எதிரான அடுத்த போரில் ஹைதரால் தனது வெற்றியை மீண்டும் பெற முடியவில்லை. வில்லியம் டால்ரிம்பிள் (William Dalrymple) தனது 'தி அனார்க்கி' (The Anarchy) என்ற புத்தகத்தில், "1780-இல் ஹைதர் மற்றும் அவரது கூட்டாளிகள் கம்பெனி மீதான அழுத்தத்தைக் குறைக்காமல் இருந்திருந்தால், ஆங்கிலேயர்கள் அதேநேரத்தில் இந்தியாவிலிருந்து என்றென்றும் வெளியேறியிருப்பார்கள். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தத் தவறியதற்காகப் புனே மற்றும் மைசூர் அரசுகள் பின்னர் எப்போதும் வருந்தின." எனக் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Bloomsbury முதுகு புற்றுநோயால் மரணம் 1782-ஆம் ஆண்டில், ஹைதருக்கு முதுகில் ஒரு கட்டி தோன்றியது. மெதுவாக அந்தக் கட்டியின் அளவு அதிகரித்தது, பின்னர் அது முதுகு புற்றுநோய் என்று தெரியவந்தது. இரண்டாவது ஆங்கிலோ-மைசூர் போரின் போது ஹைதரின் இந்த தீவிர நோய் அவரது பலத்தையும் வேகத்தையும் வெகுவாகக் குறைத்தது. ஒரு சாதாரண நிலையிலிருந்து உச்சிக்கு உயர்ந்த இந்த நபர், 1782 டிசம்பர் 7-ஆம் தேதி 60 வயதில் காலமானார். ஷாமா ராவ் தனது 'ஆரம்பம் முதல் 1868 வரை நவீன மைசூர்' (Modern Mysore from Beginning to 1868) என்ற புத்தகத்தில் "ஹைதரின் மரணம் இந்தியாவின் வரலாற்றில் ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமல்ல என்று கூறுவது மிகையாகாது. அவரது மரணம் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரத்தின் அடித்தளத்தை அமைத்தது, இது அவர் உயிருடன் இருந்திருந்தால் சாத்தியமாகியிருக்காது." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev8ze8wyn1o
-
டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை
டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை Published By: Vishnu 09 Dec, 2025 | 04:14 AM (எம்.மனோசித்ரா) தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வாரம் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை 635 பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 512 123 குடும்பங்களைச் சேர்ந்த 1, 766, 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 81 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது. அந்த வகையில் 22 218 குடும்பங்களைச் சேர்ந்த 69 861 பேர் 690 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ள. காலநிலை நாடளாவிய ரீதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்ககப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கோந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புந்தனம் மற்றும் காங்கோந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. கடல் நிலை சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கோத்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓhளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை, காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டியில் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரள, பன்வில, கங்வத்த கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனை, அக்குரனை, உடுநுவர மற்றும் பஹததும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலையில் கேகாலை, கலிகமுவ, மாவனல்ல, புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, ஹட்டியாந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரகாலப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மாவத்தகம, மல்லவபிட்டி மற்றும் ரிதீகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232830
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
பண்டாரநாயக்க நிதியம் 250 மில்லியன் ரூபா நிதியுதவி Dec 8, 2025 - 11:32 PM இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmixglft002jfo29n5mf85vaa
-
தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது !
தமிழக முதல்வருக்கு தொலைப்பேசியில் நன்றி தெரிவித்த விஜித! Dec 8, 2025 - 10:29 PM இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் தமிழக அரசு வழங்கிய ஆதரவு மற்றும் வெளிப்படுத்திய தோழமை உணர்விற்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது நன்றி தெரிவித்தார். அத்துடன், இரு தரப்பிற்கும் இடையிலான மக்கள் ரீதியான தொடர்புகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்றும், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வளரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmixecn2t02jeo29n5v3zxcwz
-
இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தோனேசிய வெள்ள பேரழிவு; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு 09 Dec, 2025 | 11:23 AM இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில், சிக்கி இதுவரையில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், 234 பேர் காணாமல் போயுள்ளதுடன் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். இதில் , வட சுமத்திரா மற்றும் மேற்கு சுமத்திரா மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 156,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 975,075 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை, அந்நாட்டு கடலோர மாவட்டங்களில் வெள்ளநீர் சற்று தளர்ந்துவரும் நிலையில், மலைப்பகுதிகளிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் மழைக்காலம் பெரும்பாலும் கடுமையான வெள்ளங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232844
-
கலா ஓயா வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் செய்த காரியம்
கலா ஓயா வெள்ள மீட்பு: கடற்படையினரை கௌரவிக்கக் கோரிக்கை Dec 8, 2025 - 09:54 PM டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர். ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர். இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர். மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார். https://adaderanatamil.lk/news/cmixd3mrs02jdo29nxsgtlt9y
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம்!
Published By: Digital Desk 1 09 Dec, 2025 | 10:38 AM வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ, ராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெர, வெஹெரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டத்தைக் குறைக்க தற்போது நீர்; திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்படும் நீரின் அளவு கீழ் பகுதிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,இந்த நிலைமைகளைக் கண்காணிக்க நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகங்கள் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதிர்கால நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், இது தொடர்பாக விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, செயற்படவேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232841
-
அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!
அனர்த்தத்தால் இருதய நோய்கள் 40 சதவீதமாக அதிகரிக்கும் அபாயம் Published By: Vishnu 08 Dec, 2025 | 08:51 PM (செ.சுபதர்ஷனி) அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதமாக அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இருதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்திய நிபுணர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை தித்வா புயலின் தாக்கத்தால் வெள்ளம், மண்சரிவு என பேரிடரை சந்தித்துள்ளது. இவ்வாறன அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பேரிடரின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், வீடுகளை இழத்தல் மற்றும் அன்பானவர்களை இழத்தல் போன்ற உளவியல் தாக்கங்கள் ஒரு சிலருக்கு நாளடைவில் இருதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். இந்த உளவியல் அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது. அத்தோடு குருதியழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நோய் நிலமைகளால் அவதிப்படும் நாட்பட்ட நோயாளர்கள், சில நாட்களுக்கு மருந்துகளை உரியவாறு பெறவில்லை எனின் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். மோசமான தூக்கம் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருத்தல் மற்றும் பதற்றம் காரணமாக தூக்கமின்மை ஏற்படுவது, இருதயச் செயல்பாட்டைச் சீர்குலைக்கிறது. சீரற்ற உணவு மற்றும் பழக்கம், அவசர கால உணவுகள் மற்றும் அழுத்தத்தைச் சமாளிக்கப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்குத் திரும்புவதும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது படபடப்பு போன்ற மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவமனையை நாடுவது அவசியம். குறிப்பாக இருதய நோயாளிகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/232822
-
வெள்ளத்தில் மூழ்கிய Sri Lanka; தமிழர்களின் நிலை என்ன? | Ditwah Cyclone
இந்த செல்ல நாய் பல உயிர்களை காப்பாற்றியது எப்படி? | Sri lanka Landslide இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
நாடு முழுவதும் தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை
தொலைத்தொடர்பு சேவையை மீட்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை 08 Dec, 2025 | 07:35 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் நிலத்தடியிலிருந்து வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விலகியிருப்பதோடு, தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் வெள்ளம், நிலச்சரிவு என முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளது. அனர்த்த நிலமையால், பல பகுதிகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன.அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இத்தகைய சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும், அவற்றுக்கு எதிராக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், பொதுமக்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறு டயலொக் ஆசியாடா நிறுவனம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனர்த்தங்களுக்குப் பின்னர் சேதமடைந்த வீதிகள் புனரமைக்கும் போது, நிலத்தடியிலிருந்த தொலைதொடர்பு கேபிள்களும் சேதமடைந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தகவல் தொடர்பு சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றை அறுத்து எடுத்துச் செல்லுதல், அல்லது உடைமையாக வைத்திருத்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயற்பாடுகள் குறித்து ஏதேனும் தகவல் அறிந்திருப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிப்பது அவசியம். மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை மீண்டும் புனரமைக்கும் போது நிலத்தடியிலிருந்து தொலைதொடர்பு கேபிள்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அதை சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். இது பாதிக்கப்பட்ட தொடர்பு சேவைகளை விரைவாகவும் மீட்டெடுக்க உதவும். https://www.virakesari.lk/article/232808
-
வெள்ளத்தில் மூழ்கிய Sri Lanka; தமிழர்களின் நிலை என்ன? | Ditwah Cyclone
Srilanka Flood-ல் பசியால் வாடியவர்களுக்கு உணவளிக்கும் பெண் - பேரிடருக்கு நடுவே ஒரு நெகிழ்ச்சி கதை இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை Published By: Vishnu 08 Dec, 2025 | 08:27 PM ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பூகம்பம் 7.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடற்கரையில் வசிக்கும் மக்களை உடனடியாக உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232820
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
யாழ் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அமெரிக்க – இலங்கை விமானப்படை கூட்டு மனிதாபிமான நடவடிக்கை Published By: Vishnu 08 Dec, 2025 | 07:41 PM (இணைளத்தள செய்திப் பிரிவு) அமெரிக்க விமானப்படை (US Air Force) மற்றும் இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) ஆகியன இணைந்து இன்றையதினம் முன்னெடுத்து அதிரடி மனிதாபிமான நடவடிக்கை மூலம், அம்பாறை, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்கள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடுகையில், இரண்டு Super Hercules விமானங்கள் மூலம் பெருமளவிலான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலங்கை விமானப்படை தளங்களுக்கு கொண்டுசென்றதாக தெரிவித்துள்ளார். “இன்று இரண்டு சூப்பர் ஹெர்குலீஸ் விமானங்கள், 3 மாவட்டங்களுக்கு ஒரே பணி. விரைவான ஒத்துழைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்ட பெரும் நிவாரணப் பொருட்களை இலங்கை விமானப்படை தரையணி உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டது. உடனடி உதவி தேவைப்படும் மக்களிடம் இப்பொருட்கள் சென்றடைகின்றன” என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, நாட்டின் பல பகுதிகளில் நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பின் வலிமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232817
-
கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்
கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் Published By: Vishnu 08 Dec, 2025 | 07:46 PM டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது. இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர். எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பாலத்தை புனரமைக்கும் பொறுப்பை இலங்கை அரசு வழங்கியிருந்தது. அதற்கமைவாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த பாலத்தை புனரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை (07) முதல் தொடங்கியிருக்கின்றனர். https://www.virakesari.lk/article/232816
-
அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்
பேரிடரால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் தேசிய மனநல வைத்திய பீடத்தினை நாடுங்கள்! 08 Dec, 2025 | 05:32 PM ( செ.சுபதர்ஷனி) நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் எவரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் உடனடியாக தேசிய மனநல வைத்திய பீடத்தை (1926) தொடர்புக் கொள்ளுமாறு களணி பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியரும் சிறுவர், யௌவன பருவ மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் இயற்கை அனர்த்தத்தால் பாரிய அழிவை சந்தித்துள்ளது. பலர் உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். இவ்வாறான பேரிடர்கள் எமது மன நலத்தை கடுமையாக பாதிக்கும். பொதுமக்களிடையே மன உளைச்சல் அதிகரித்துள்ளதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது. மன உளைச்சல் நாளடைவில் தீவிர மன நல நோய்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஆகையால் ஆரம்பத்திலேயே மன உளைச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு தீர்வினை கண்டு மனதை ஆற்றுப்படுத்துவது அவசியம். தற்போது எவரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்திருப்பின் உடனடியாக அருகில் உள்ள தகுதிவாய்ந்த மனநல மருத்துவர் ஒருவரை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது. அத்தோடு மன நல வைத்திய பீடத்தைத் (1926) தொடர்புக்கொண்டு வைத்தியரை சந்திப்பதற்கு தேவையான வசதிகளை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும். சிறுவர்களின் மன நலம் பாதிப்புக்குள்ளாகியிருப்பின் முடிந்தவரை அவர்களை இயல்பு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவது அவசியம். அதற்கேற்ப சிறுவர்களை விளையாடுவதற்கு வாய்ப்பளிப்பதுடன், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திப்பதற்கும் மனம்விட்டு உரையாடுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் கோபம், விரக்தி, தூக்கமின்மை, பசியின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். எமது நாடு பல சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான சம்பவங்களுக்கும் முகங்கொடுத்துள்ள போதும், மக்களின் ஒற்றுமை, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் எவ்வாறான சூழ்நிலையிலும் மீள நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்தது. இம்முறை வெள்ள நிலைமை மற்றும் தித்வா புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இதுபோன்ற பேரிடருக்குப் பின்னர், எமக்கு மிகப் பெரிய துன்பம் நேர்ந்துவிட்டதாக ஆழ்ந்த கவலையடைவோம். இதனால் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பம் இல்லாத நிலை ஏற்படலாம். இந்த அனர்த்த நிலைமை காரணமாக நீங்கள் கஷ்டங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகியிருந்தால், உங்களுக்காக இலங்கையில் உள்ள அனைவரும் உதவ முன்வருகிறார்கள். ஆகையால் உங்கள் முயற்சி எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கைவிட்டு விடாதீர்கள். வீட்டினை இழந்தாலும், குடும்ப உறுப்பினர் இழந்தாலும் உங்கள் மனதில் உள்ள நம்பிக்கைகளை கைவிட வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/232806 1926 National Mental Health Helpline, 1926 Chatline & 075 555 1926 WhatsApp line Providing the much needed psychological support to the Sri Lankan Public. A National Line under the Ministry of Health, Sri Lanka
-
'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்
'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள் பட மூலாதாரம்,x 3 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் கங்கை அமரன் இன்று (டிச. 08) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாவலர் சகோதரர்களில் கடைக்குட்டி கங்கை அமரன். தனது அண்ணன்களுடன் பல மேடைக்கச்சேரிகளில் பங்கேற்று இசையை கற்றவர். அண்ணன்களை குருநாதர்களாக நினைத்து, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அவர் எழுதிய 10 பிரபல பாடல்கள் இங்கே. 1. செந்துாரப்பூவே... '16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற செந்துாரப்பூவே என தொடங்கும் பாடலை முதலில் எழுதினார் கங்கை அமரன். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 1977ல் ரிலீஸ் ஆனது. முதன்முதலில் எழுதிய பாடலே நல்ல ஹிட் ஆனது. எஸ். ஜானகி குரலில், 'செந்தூர பூவே செந்தூர பூவே…ஜில்லென்ற காற்றே…' என தொடங்கும் அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இயக்குனர் பாரதிராஜா என பல விஷயங்களும் அந்த பாடலில் சிறப்பாக அமைந்திருக்கும். செந்துாரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய, ஸ்ரீதேவி பிற்காலத்தில் இந்திய சினிமாவில் புகழ்மிக்க நடிகையானார். 16வயதினிலே படம் பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்றவர்களை அடையாளம் காண்பித்தது. "உண்மையில் செந்துாரப்பூ என ஒன்று உலகில் கிடையாது. கற்பனைக்காக நான் எழுதினேன்" என்று பிற்காலத்தில் பேட்டிகளில் கங்கை அமரன் கூறியிருந்தார். அந்த செந்துாரப்பூ சினிமாவிலும் பின்னர் புகழ் அடைந்தது. இந்த பெயரில் ஒரு படமே வந்தது. அந்த பூ பெயரில் பல பாடல்கள் வந்தன. 'செந்தூரப்பூவே' எனும் பெயரில் தொலைக்காட்சி தொடரும் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,gangaiamaren 2. பூவரசம் பூ பூத்தாச்சு கங்கை அமரனின் அடுத்த பாடலும் ஒரு பூவை பற்றி அமைந்தது ஆச்சர்யம். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக 'பூவரசம் பூ பூத்தாச்சு' பாடல். ரயிலையும், பூவையும் இணைத்து ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை சொல்லும் துள்ளல் பாடலாக எழுதினார் கங்கை அமரன். அந்த பாடலையும் எஸ்.ஜானகி பாடினார். ராதிகாவின் குறும்புத்தனமான நடிப்பு பாடலுக்கு சிறப்பை சேர்த்தது. 1978ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. அக்காலகட்டத்தில், இந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது. 3. புத்தம் புது காலை அடுத்ததாக, இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் , எஸ்.ஜானகி கூட்டணியில் வெற்றி பெற்ற இன்னொரு பாடல் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம் பெற்ற புத்தம் புது காலை. அந்த பாடல் சூப்பர் ஹிட். ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. ஆடியோவில் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த பாடலுக்கு பல ஆண்டுகள் கழித்து விஷூவலாக இடம் பெறுகிற வாய்ப்பு கிடைத்தது. மேகா என்ற படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினார் இளையராஜா. திருமண வீடு பின்னணியில் ஒலிப்பதாக வரும் அந்த பாடலில் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்திருந்தார். பட மூலாதாரம்,gangaiamaren/Instagram படக்குறிப்பு,இளையராஜாவுடன் கங்கை அமரன் 4. ஆசையை காத்துல துாதுவிட்டு கங்கை அமரன் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற பாடல் ஜானி படத்தில் இடம்பெறும் 'ஆசையை காத்துல துாதுவிட்டு' . 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்துக்கும் இளையராஜாதான் இசை. அண்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் பாடலை கொடுத்தார் கங்கை அமரன். எஸ்.பி. ஷைலஜா பாடிய அந்த பாடல் இன்றும் ஒலிக்கிறது. 5. சின்ன மணி குயிலே அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த பாடல்களுக்காகவே படம் ஓடியது. இளையராஜாவின் பாடல் மெட்டுக்களுக்காகவே அந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் எடுத்ததாக சொல்வார்கள். அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அதில் இடம் பெற்ற சின்ன மணி குயிலே, நம்ம கடை வீதி, பூவ எடுத்து, உன் பார்வையில், ஒரு மூணு முடிச்சாலே, காலை நேர பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. பட மூலாதாரம்,Youtube 6. நித்தம் நித்தம் நெல்லு சோறு மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பாடலை அண்ணன் இசையில் எழுதினார் கங்கை அமரன். ரஜினிக்கு பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. இதே படத்தில் இடம்பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. அந்த பாடலையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அந்த பாடலுக்கு ஷோபா - ரஜினியின் பாவனைகள் கூடுதல் பலமாக அமைந்தது. இந்த பாடலை மறைந்த வாணி ஜெயராம் பாடினார். 7. பூங்கதவே தாள் திறவாய் நிழல்கள் படத்தில் வரும் பாடல் 'பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய்' இந்த பாடலை எழுதியதும் கங்கை அமரன்தான். இந்த பாடலை தீபன் சக்ரவர்த்தியும், உமா ரமணனும் பாடியிருப்பார்கள். 8. என் இனிய பொன் நிலாவே மூடு பனி படத்தில் வரும் 'என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கு தமிழ் சினிமாவில் மெலோடிகளில் தனியிடம் உண்டு. 1980ம் ஆண்டில் பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். பின்னாளில் தன்னுடைய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சூர்யா ரயிலில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை பாடுவதாக அமைத்திருப்பார். 9. என் ஜோடி மஞ்சக்குருவி விக்ரம் படத்தில் இடம்பிடித்த என் ஜோடி மஞ்ச குருவி பாடலையும் கங்கை அமரன் தான் எழுதினார். அந்த பாடல் தமிழகத்தின் பல்வேறு சந்தோஷ நிகழ்வுகளில் இன்றும் பாடப்படுகிறது. இப்போது கூட பைட்கிளப் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். அப்போதே அர்த்தம் தெரியாத பல வார்த்தைகளை அழகாக பயன்படுத்தியிருந்தார் கங்கை அமரன். 10. விளையாடு மங்காத்தா மங்காத்தா படத்தில் தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடலை கங்கை அமரன் எழுதினார். அந்த பாடலில் கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜியும் பாடி இருந்தார். அஜித் ரசிகர்களுக்கு அது விருப்பமான ஹிட் பாடலாக இன்றும் இருக்கிறது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25nk4yg50o
-
400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் சீன விமானம் நாட்டை வந்தடைந்தது
Published By: Vishnu 08 Dec, 2025 | 06:57 PM (நா.தனுஜா) பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன் மனிதாபிமான உதவி நிவாரணப்பொருட்களை ஏற்றிய சீன விமானம் திங்கட்கிழமை (8) நாட்டை வந்தடைந்தது. 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர். அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் சீனா அரசாங்கம் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களையும் வழங்கியுள்ளது. அதுமாத்திரமன்றி சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மேலும் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன்களுக்கு மேற்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் ஷங்காய் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 747 கார்கோ விமானம் திங்கட்கிழமை (8) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது. மேற்படி மனிதாபிமான நிவாரணப்பொருட்களில் வெள்ளத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவக்கூடிய உயிர்காக்கும் ஜக்கெட்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தை விரிப்புக்கள் என்பன உள்ளடங்குகின்றன. நாட்டை வந்தடைந்த இவ்விமானத்தை வரவேற்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக, பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232815
-
இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!
'இரவு முழுக்க தென்னை மரத்தில்' - இலங்கையில் உயிர் தப்பியவரின் நேரடி அனுபவம் பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் நவம்பர் 27 அன்று திட்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் பெய்த கடும் மழை காரணமாக கலாவௌ ஆறு பெருக்கெடுத்த நிலையில், அநுராதபுரம் அவுகண பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அவுகண பகுதியை சேர்ந்த சம்ஷூதீன் தனது வீட்டை அண்மித்துள்ள பகுதியொன்றுக்கு சென்றுள்ளார். வெள்ளப்பெருக்கு காரணமாக நான்கு பக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், அருகிலுள்ள தென்னை மரத்தில் ஏறியதாக சம்ஷூதீன் கூறுகிறார். தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள சம்ஷூதீனுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்தவொரு வழியும் இருக்கவில்லை. பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE சம்ஷூதீன் சிக்குண்டிருந்ததை பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் அவதானித்து, அவரை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். எனினும், ஒரு நபருக்கு கூட அந்த தென்னை மரத்தை அண்மித்து செல்வதற்கான இயலுமை கிடைக்கவில்லை. காரணம், வெள்ளம் எல்லை மீறி சென்றதாக பிரதேசத்தைச் சேர்ந்த ரகுமான், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, கடற்படையினர் சம்ஷூதீனை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களினாலும் அவரை காப்பாற்றுவதற்கான இயலுமை கிடைக்கவில்லை. சம்ஷூதீனை காப்பாற்றும் இறுதி முயற்சியாகவே களமிறங்கியது இலங்கை விமானப்படை. இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர், சம்ஷூதீனை காப்பாற்றும் நடவடிக்கைகளுக்கு களமிறங்கியது. விமானப்படையின் மீட்பு குழு உறுப்பினர்கள், தென்னைமரத்தில் செய்வதறியாதிருந்த சம்ஷூதீனை காப்பாற்றினார்கள். தான் எதிர்கொண்ட ஆபத்து நிறைந்த அந்த அனுபவங்களை சம்ஷூதீன் பிபிசி தமிழுடன் பகிர்ந்துக்கொண்டார். பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE 'மாடுகளை காப்பாற்ற முடியவில்லை' '' நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று அன்று காலை தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் ஓடிச் சென்று பார்த்தேன். நீர் மட்டம் வெகுவாக அதிகரித்திருந்தது. இதற்கு முன்னர் அவ்வாறு வந்ததில்லை. நீர் பெருக்கெடுத்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் கட்டப்பட்டிருந்த நான் வளர்த்த மாடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாடுகளை காப்பாற்றுவதற்காக நான் நீந்தி சென்றேன். ஐந்து மாடுகள் இருந்தன. நீர் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொன்றாக அடித்துச் சென்றது. ஒரு மாடு கூட காப்பாற்றப்படவில்லை. அனைத்தும் இறந்து விட்டன." என தெரிவித்தார் சம்ஷூதீன். ''நீர் மட்டம் சடுதியாக அதிகரித்தது. எனக்கு நீந்த தெரியும். ஆனால், நீந்த முடியாதளவு நீர் மட்டம் அதிகரித்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியாமையினால், அந்த இடத்திலிருந்த தென்னை மரத்தில் ஏறினேன்.'' என சம்ஷூதீன் கூறினார் தென்னை மரத்தில் ஏறிய பின்னர் என்ன நடந்தது என்பது குறித்தும் சம்ஷூதீன் விளக்கினார். பட மூலாதாரம்,RAHUMAN படக்குறிப்பு,மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர், பிபிசி தமிழிடம் கூறினார். என்ன சாப்பிட்டார்? ''யாராவது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தென்னை மரத்தில் இருந்தேன். பிரதேச மக்கள் படகொன்றை கொண்டு வந்தார்கள். படகை நான் இருந்த இடத்துக்கு கொண்டு வர முடியவில்லை. கயிறுகளை வழங்க இளைஞர்கள் நீந்தி முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை." என்றார். மேலும் பேசிய அவர், "ஒரு புறத்தில் காடு, வாழைமரங்கள், பாக்கு மரங்கள் இருந்தன. நான் அங்கு அடித்து சென்றிருந்தால் இறந்திருப்பேன். சுனாமி வந்ததை போன்று ஒரே சந்தர்ப்பத்தில் நீர் சடுதியாக அதிகரித்தது." மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர் கூறினார். ''என்ன சாப்பிடுவது? சாப்பிடாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் பசி பொறுக்க முடியாமல் இளநீர் ஒன்றை அருந்தினேன். மீண்டும் இளநீரை குடித்தேன். அடுத்த நாள் வரை உண்பதற்கு ஒன்றும் இல்லை. இரவு முழுக்க அங்கேயே கழித்தேன். காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. ஒரு நொடி கூட மழை விடவில்லை. அந்த மழையில் இளநீரை அருந்திக் கொண்டே இருந்தேன்.'' என அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE 'மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று' ''யாராவது வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். அருகில் வந்திருந்தால் பாய்ந்து படகை பிடித்துக்கொண்டிருப்பேன். படகால் வர முடியவில்லை. வருவார்கள் என்று இரவு வரை பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை. மனதை உறுதியாக வைத்துக்கொண்டு அப்படியே இருந்தேன். மரம் சரிந்தால் பாய்ந்து நீந்திச் செல்லும் எண்ணத்துடன் தயாராகவே இருந்தேன்.'' என அவர் கூறினார். நவம்பர் 28 அன்று விமானப்படையினர் வருகை தந்து தன்னை காப்பாற்றியமை குறித்தும் சம்ஷூதீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''என்னை காப்பாற்றுவதற்காகவே வருகின்றார்கள் என்று நான் அறிந்துகொண்டேன். நான் எழுந்து நின்று அவர்களுக்கு கைகளை காட்டினேன். 'கொஞ்சம் இருங்கள்' என்று கூறி, இரண்டு தடவைகள் சுற்றினார்கள். தென்னை மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று வந்தது. என்னால் இருக்க முடியவில்லை. நான் பிடித்துக்கொண்டிருந்தேன்." என அவர் தெரிவித்தார். 'மீண்டு வருவேன்' மேலும் பேசிய அவர், "கடவுள் புண்ணியத்தில் என்னை காப்பாற்றினார்கள். எனது உயிரை காப்பாற்றியமைக்காக அவர்களுக்கு புண்ணியம் சேரட்டும். என்னுடைய நண்பரே என்னை காப்பாற்றினார். அவரை கண்ட பின்னர் எனக்கு நம்பிக்கை வந்தது." என்றார். தன்னை மீட்ட பின்னர் அநுராதபுரத்திற்கு அழைத்து செல்ல முயன்றதாகவும் அவர் கூறினார். "குளிராக இருந்தது. கை, கால்கள் மரத்துப் போயிருந்தன. இந்த காலத்தில் அங்கும் இங்கும் சென்று வர முடியாது என்று சொன்னேன். அதன் பின்னர் கலாவௌ பகுதியில் இறக்கினார்கள். போலீஸாரினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்'' என அவர் கூறினார். விவசாயத்தில் ஈடுபடும் சம்ஷூதீன், தன் அனைத்து விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன என்று கூறினார். எவ்வாறேனும், ''நான் மீண்டு வருவேன்'' என அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e07jg9q90o
-
அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!
அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு! 08 Dec, 2025 | 03:33 PM நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நிலைமைகள் காரணமாக மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மாரடைப்பு , ஏனைய இதய நோய்கள், மனநல பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232773