Everything posted by ஏராளன்
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது ஐக்கிய அமெரிக்கா Published By: Vishnu 13 Feb, 2026 | 11:06 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் 93 ஓட்டங்களால் ஐக்கிய அமெரிக்கா இலகுவாக வெற்றி பெற்றது. சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹான் ரஞ்சேன் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் ஹார்மீத் சிங், ஷட்லி வன் ஷோக்வைக் ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் அமெரிக்காவை இலகுவாக வெற்றி பெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. கனடாவுக்கு எதிராக 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெற்ற 197 ஓட்டங்கள் என்ற தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்த போட்டியில் ஒரு ஓட்டத்தால் அமெரிக்கா தவறியது. அணித் தலைவர் மோனாங்க் பட்டேல், சய்ட்டேஜா மூக்கமல்லா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 55 ஓட்டங்களும் சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 54 ஓட்டங்களும் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. சய்ட்டேஜா மூக்கமல்லா 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும் ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் மொனாங்க் பட்டேல் 36 ஓட்டங்களையும் ஷயன் ஜஹாங்கிர் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாஸ் டி லீட் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பாஸ் டி லீட் (23), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (20), மெக்ஸ் ஓ'தௌட் (13), ரோலோவ் வன் டேர் மேர்வ் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஹார்மீத் சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷட்லி வன் ஷோக்வைக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் மொஹ்சின் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன்: ஹார்மீத் சிங் https://www.virakesari.lk/article/238612
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதி அநுரவுக்கு கஸ்ஸப தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை பயங்கர யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் இன்று (12.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்போது, தொடர்ந்துரையாற்றிய அவர், “ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த இராச்சியத்தை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க வேண்டும் என. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளனர். அநுர இந்திய ஒப்பந்தங்கள் சிங்கள பௌத்த விரோத துரோகிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். ரில்வின் சில்வாவுக்கு இந்த கதை தெரியும்.தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து இதை இப்படி தீர்த்து கொள்வோம் என்றார்.ஆனால் நாங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். இந்தியாவின் துறைமுக நகரமொன்றை அமைக்கவே ஜனாதிபதி அநுர முயற்சிக்கிறார். அமைச்சர் சுனில் வட்டகல, கடிதத் தலைப்பொன்றை எடுத்து கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு குறிப்பிட்டார்.ஏனென்றால் இந்த காணியை இந்தியாவுக்கு வழங்கி அதில் ஹோட்டல் ஒன்றை அமைக்கவே திட்டமிட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/no-one-can-threaten-kassapa-thero-threatens-1770902994
-
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் 13 Feb, 2026 | 07:12 PM (நா.தனுஜா) ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் வியாழக்கிழமை (12) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பை அடுத்து, அதில் கலந்துரையாடப்பட்ட மற்றும் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நட்பு ரீதியாகவும், திறந்த மனப்பாங்கின் அடிப்படையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் ஆட்சியியல் நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி, மீன்பிடி, கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இக்கூட்டமானது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு இரு தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் மறுசீரமைப்புக்கள், நடைமுறை முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான முயற்சிகளின் தற்போதைய நிலைவரம் குறித்துப் பரிமாறுவதற்கும் வாய்ப்பளித்தது. அதேபோன்று கடந்த ஆண்டு மேமாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சியியல், மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மெய்நிகர் முறைமையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த கூட்டம் மற்றும் கடந்த 11 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் என்பன பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல், சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன் நீட்சியாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய சுயாதீன கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பன பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கையின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதிலும், அதனை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதிலும், மீன்பிடித்துறை சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளிப்பதிலும் தொடர் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். அதுமாத்திரமன்றி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைசார் ஒத்துழைப்பு, புலம்பெயர்வு மற்றும் மீள் அனுமதி சார்ந்த கொள்கைகள் என்பன பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினர். இவ்வேளையில் நாட்டின் நிலையான வளர்ச்சியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முக்கிய வகிபாகம் குறித்துப் பிரஸ்தாபித்து, அதனைப் பாராட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கல் சுழற்சி முடிவடைந்ததும், மீண்டும் அதனைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தமது நோக்கத்தை வெளிப்படுத்தினர். அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், தற்போதைய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவ்வதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருத்தமான அமை;புக்களுடன் இணைந்து செயலாற்றுமாறு ஊக்குவித்தது. அதற்குப் பதிலளித்த இலங்கையின் பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின்கீழ் 27 முக்கிய சமவாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் தயார்நிலையை மீளுறுதிப்படுத்தினர். மேலும் பாதுகாப்புத்துறையில், குறிப்பாக இந்து - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு இருதரப்பினரும் ஆராய்ந்தனர். நிறைவாக ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ப்ரூஸேல்ஸில் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. https://www.virakesari.lk/article/238601
-
போட்டியிடும் கடல் நீரில் கோபால்ட்டைப் பெறுவதற்கான இந்தியப் போட்டியைத் தூண்டிவிடும் என்று சீனா அஞ்சுகிறது.
கனிம வள ஆய்வு குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்த முன்மொழிவு ; அதன் உள்ளடக்கங்கள் ஆபத்தானவை என்கிறார் தயாசிறி 13 Feb, 2026 | 07:11 PM (எம்.மனோசித்ரா) இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு நிலத்தடி, கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பது குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருணாகலில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் இந்தியாவுடன் இரகசியமான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கனிம வள ஆய்வு ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக கனிம வள ஆய்வு தொடர்பான ஒப்பந்தத்தில், இரு நாடுகளின் அனுமதியின்றி தகவல்களை வெளியிட முடியாது என்ற நிபந்தனை வெளிப்படைத்தன்மையற்றது. ஜே.வி.பி ஒரு அரசியல் கட்சியாக தீவிரமான இந்திய எதிர்ப்பு கொள்கையை முன்னெடுத்தது. அதன் விளைவாக 1988-89 காலப்பகுதியில் நாட்டில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. இதனால் இந்திய அமைதி காக்கும் படையினர் பலர் உயிரிழந்தனர். அப்போது இந்திய எதிர்ப்பு அரசியலால் நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தியாவை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டுக்குத் தெரியாமல் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவை குறித்த விவரங்கள் பாராளுமன்றத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இது இலங்கையின் நிலத்தடி மற்றும் கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான ஒப்பந்தமாகும். குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான அம்சம் என்னவென்றால், இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பதாகும். இது நாட்டின் இறையாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது. இலங்கையின் கடற்பரப்பில் உள்ள கோபால்ட் (Cobalt) படிவுகள், இரும்புத் தாது, பாஸ்பேட் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள கனிம வளங்கள் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைந்து அகழ்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. ஜே.வி.பி யின் முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்குச் சென்று வந்ததன் பின்னரே இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்கள், இன்று இந்திய அரசாங்கம் எதைச் சொன்னாலும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/238600
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
வங்கதேசம் திரும்பிய 50 நாட்களில் ஆட்சி - தாரிக் ரஹ்மான் 17 ஆண்டு லண்டனில் தஞ்சமடைந்தது ஏன்? பட மூலாதாரம்,@BNPBdMediaCell படக்குறிப்பு,இந்த முறை, தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை பி.என்.பி. எதிர்கொள்ளவில்லை, இதனால் அக்கட்சி நேரடியாகப் பயனடைந்தது. கட்டுரை தகவல் ரக்கீப் ஹசனத் பிபிசி வங்க மொழி சேவை 13 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் வங்கதேச பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) பெரும்பான்மை பெற்றுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 297 இடங்களில் பிஎன்பி கூட்டணி 209 இடங்களை கைப்பற்றியுள்ளது. வங்கதேச தேசியவாதக் கட்சியை (பி.என்.பி), தாரிக் ரஹ்மான் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிநடத்திச் சென்றார். அவர் முதல்முறையாகத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். தாரிக்கின் தலைமையின் கீழ், பி.என்.பி ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகக் கூடும். ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாத நிலையில், பி.என்.பி வெற்றியை நோக்கி நகர்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது தாயார் காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, தாரிக் கட்சியின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கட்சியின் திட்டங்களையும், ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரத்தையும் அவரே மேற்பார்வையிட்டார். தாரிக்கின் ஆதரவாளர்கள் அவரை வங்கதேசத்தின் சாத்தியமான பிரதமராக முன்னிறுத்துகின்றனர். பி.என்.பி தாரிக்கை கட்சியின் ஒரே தலைவராகச் சித்தரிக்கிறது. இருப்பினும், அரசியல் எதிரிகள் ரஹ்மானின் கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ரஹ்மானும் அவரது கட்சியான பி.என்.பி-யும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளனர். மேலும் இதை முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் பிரசாரம் என்று அழைத்துள்ளனர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியா? இந்திய நிபுணர்கள் அலசல் ஆஸ்திரேலியா மீது ஆதிக்கம் செலுத்தி வென்ற ஜிம்பாப்வே - உயரமான பந்து வீச்சாளர் சாதித்தது என்ன? எகிப்து கல்லறைகளில் தமிழை எழுதி வைத்த 'சிகை கொற்றன்' யார்? "இந்தியாவால் புரிந்து கொள்ள முடியாது" - உஸ்மான் தாரிக்கின் பந்து வீச்சு பாகிஸ்தானின் பலமாக மாறுமா? End of அதிகம் படிக்கப்பட்டது ரஹ்மான் சுமார் 17 ஆண்டுகளாக லண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். பி.என்.பி முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானால் உருவாக்கப்பட்டது மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது. பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அவர் கட்சியை ஆட்சிக்கு வழிநடத்தினார். இப்போது, முழுப் பொறுப்பும் தாரிக் ரஹ்மானின் தோள்களில் உள்ளது. அவாமி லீக் ஆட்சியின் போது கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார். அவாமி லீக் மீதான தடைக்குப் பிறகு, பி.என்.பி-யின் நண்பராக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமி அதன் மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது. ரஹ்மானின் தலைமை பட மூலாதாரம்,Parvez Ahmad/Drik/Getty Images படக்குறிப்பு,தாரிக் ரஹ்மான் கட்சிக்காக பல பேரணிகளை நடத்தினார். ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், 2007-ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் சிறையில் இருந்த அவர், 2008 செப்டம்பரில் விடுவிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றார். அங்கு சுமார் 17 ஆண்டுகள் தங்கியிருந்த தாரிக், கடந்த ஆண்டு டாக்கா திரும்பினார். காலிதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 26 அன்று தாரிக் ரஹ்மான் டாக்கா திரும்பினார். அந்த வருகை, 18 மாதங்கள் சிறைவாசத்திற்கு பிறகும், 17 ஆண்டுகள் லண்டனில் கழித்த பிறகும், வங்கதேச அரசியலுக்கு அவர் திரும்புவதைக் குறித்தது. சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 30 அன்று காலிதா ஜியா காலமானார். பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, பி.என்.பி-யின் தேசிய நிலைக்குழு தாரிக்கை முறைப்படி கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இருப்பினும், 2018-இல் ஊழல் வழக்கில் காலிதா ஜியா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து, லண்டனில் வசித்து வந்த தாரிக் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக, 2002-இல் காலிதா ஜியா அவரை கட்சியின் மூத்த இணைச் செயலாளராக நியமித்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009-இல் பி.என்.பி-யின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் அவர் மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பட மூலாதாரம்,NurPhoto via Getty Images படக்குறிப்பு,காலிதா ஜியாவின் மரணத்திற்குப் பிறகு, தாரிக் ரஹ்மான் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தாரிக் ரஹ்மானின் ஆளுமை வங்கதேசத்தின் முதல் ராணுவ ஆட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஆகியோரின் மூத்த மகனாக, நவம்பர் 20, 1965 அன்று தாரிக் பிறந்தார். பி.என்.பி இணையதளத்தில் அவரது பிறந்த தேதி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதே தேதியைக் குறிப்பிட்டாலும், அவரது தேர்தல் வாக்குமூலத்தில் அவர் பிறந்த ஆண்டு 1968 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டக்காவில் உள்ள பி.ஏ.எஃப் ஷாஹீன் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, தாரிக் டாக்கா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் சேர்ந்ததாக பி.என்.பி இணையதளம் தெரிவிக்கிறது. எனினும், அவர் அங்கு படிப்பை முடித்தாரா என்பது தெரியவில்லை. மறுபுறம், தேர்தல் ஆணையத்திடம் அளித்த வாக்குமூலத்தில், தாரிக் தனது கல்வித் தகுதியை மேல்நிலைக் கல்வி (12-ஆம் வகுப்பு) என்று குறிப்பிட்டுள்ளார். பி.என்.பி வழங்கிய தகவல்களின்படி, விடுதலைப் போரின் போது ஜியாவுர் ரஹ்மானின் குடும்பம் மற்றும் பல ராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் சிறையில் அடைக்கப்பட்டன. அவரது இரு மகன்களான தாரிக் ரஹ்மான் மற்றும் அராபத் ரஹ்மான் (மறைந்த) ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,Parvez Ahmad/Drik/Getty Images படக்குறிப்பு,தினாஜ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாரிக் ரஹ்மான் கட்சி வலைத்தளத்தில் உள்ள தகவல்களின்படி, ராணுவ ஆட்சியாளர் உசேன் முகமது எர்ஷாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாரிக் பங்கேற்றார். மேலும், 1988-ஆம் ஆண்டு பகுடா மாவட்ட பி.என்.பி-யின் காவதாலி துணை மாவட்டப் பிரிவில் உறுப்பினராக முறைப்படி கட்சியில் சேர்ந்தார். இருப்பினும், பல கட்சித் தலைவர்களும் அதிபரின் ஆலோசனைக் குழுவின் சில உறுப்பினர்களும், தாரிக்கின் அரசியல் பயணம் 1991 நாடாளுமன்றத் தேர்தலில்தான் தொடங்கியது என்று தெரிவித்துள்ளனர். அப்போது காலிதா ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டார். அவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பு தாரிக்கிடம் இருந்தது. ஆனால், 2001 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் கட்சி அரசியலில் அவரது பிடி வலுவடையத் தொடங்கியது. அந்தத் தேர்தலில் பி.என்.பி தலைமையிலான நான்கு கட்சிக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதே பி.என்.பி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், ஹவா பவன் விவகாரத்தில் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது பின்னர் நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்பூப் உல்லா இதுகுறித்து பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "2001 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஹவா பவன் ஒரு தேர்தல் அலுவலகமாகவும், தேர்தல் உத்திகளை வகுப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதில் தாரிக் ரஹ்மான் முக்கியப் பங்கு வகித்தார்" என்றார். பி.என்.பி தலைமையிலான அரசு அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போதிலும், பி.என்.பி தொடர்ந்து ஹவா பவனின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது சர்ச்சைக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார். 2001 தேர்தலுக்குப் பிறகு கட்சியில் தாரிக் ரஹ்மானின் ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 22, 2002 அன்று, அவர் மூத்த இணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அரசியல் ஆய்வாளரும் ஆராய்ச்சியாளருமான மொஹியுதின் அகமது பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "இது கட்சி அரசியலில் அவரது பெரிய பாய்ச்சலாகும். ஜியா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. பின்னர், அவரைச் சுற்றி ஒரு இணைத் தலைமை உருவானது" என்றார். ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று டாக்கா திரும்பினார். இந்த முறை, பி.என்.பி தனது முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமியைத் தேர்தலில் எதிர்கொண்டது. ரஹ்மானை "விடுதலைப் போர் மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின்" ஒரே ஆதரவாளராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் விரும்பினர். முன்னதாக, பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் (2001-06) பதவிக்காலத்தில், பனானியில் உள்ள கட்சித் தலைவரின் அலுவலகமான 'ஹவா பவன்' சர்ச்சைகளில் சிக்கியது. 2001-இல் பி.என்.பி ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் காலிதா ஜியா அதிகாரத்தில் இருந்தபோதிலும், ரஹ்மானின் தலைமையிலான ஹவா பவன் ஒரு இணை அதிகார மையமாக மாறியதாக விவாதிக்கப்பட்டது. ரஹ்மான் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின, இருப்பினும் அவரும் அவரது கட்சியும் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து அரசியல் எதிரிகளின் பிரசாரம் என்று கூறி வந்தனர். பி.என்.பி அரசாங்கத்தின் அதே பதவிக்காலத்தில், 2004-ஆம் ஆண்டு டாக்காவில் எதிர்க்கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவின் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாரிக் ரஹ்மான் மற்றும் ஹவா பவன் தான் காரணம் என்று அவாமி லீக் குற்றம் சாட்டியது. பின்னர், அவாமி லீக் ஆட்சியின் போது, தாரிக் ரஹ்மான் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சி, தாரிக் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து நிம்மதியை அளித்துள்ளது. பி.என்.பி ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தாரிக் ரஹ்மானின் தேர்தல் வாக்குமூலத்தில் மொத்தம் 77 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அவர் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார் அல்லது குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் நிலவிய பரவலான அரசியல் வன்முறை மற்றும் மோதல்களுக்குப் பிறகு, ஜனவரி 2007-இல் ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2007 இல் கைது செய்யப்பட்ட பிறகு தாரிக் ரஹ்மான் அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் 18 மாதங்கள் சிறையில் கழித்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, குண்டு துளைக்காத ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்த நிலையில் டாக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, பிரதமரின் மகனாக, கட்சி மற்றும் நிர்வாகத்தில் அவருக்கு அளவற்ற மரியாதையும் செல்வாக்கும் இருந்தது. தான் கைது செய்யப்பட்ட பிறகு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ரஹ்மான் குற்றம் சாட்டுகிறார். "எனது ஆராய்ச்சியின் போது, பல்வேறு தரப்பினருடனான உரையாடல்களின் மூலம் தாரிக் ரஹ்மான் உண்மையில் சித்திரவதை செய்யப்பட்டதை அறிந்தேன். அவரது தாயார் காலிதா ஜியாவை நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது"என்று ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகிறார். தாரிக் ரஹ்மான் செப்டம்பர் 11, 2008 அன்று நாட்டை விட்டு வெளியேறி, தனது குடும்பத்துடன் லண்டன் சென்றார். காலிதா ஜியா அந்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும், ராணுவத் தலைமையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஹ்மான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ரஹ்மான் ஒரு உறுதிமொழிப் பத்திரம் வழங்கியதாக ஊடகச் செய்திகள் அப்போது வெளிவந்தன. மொஹியுதீன் அகமது கூறுகையில், "தாரிக் இனி அரசியல் செய்ய மாட்டார். அவர் லண்டனில் படிப்பார் என்று காலிதா ஜியாவே அப்போது கூறியிருந்தார்," என்றார். மறைந்த பி.என்.பி தலைவர் மௌதுத் அகமது தனது 'கரகரே கெமோன் சிலாம் (சிறையில் நான் எப்படி இருந்தேன்) 2007-2008' என்ற புத்தகத்தில், "தாரிக் இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்று காலிதா ஜியா ராணுவ ஜெனரல்களுடன் ஒப்பந்தம் செய்திருக்க வாய்ப்புள்ளது... ஒருவேளை ரஹ்மானும் அத்தகைய உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கலாம்," என்று எழுதியுள்ளார். தாரிக் ரஹ்மான் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் இருப்பதாக பி.என்.பி நீண்ட காலமாக கூறி வந்தது. இருப்பினும், ஏப்ரல் 24, 2018 அன்று, கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், ரஹ்மான் 2012-இல் பிரிட்டனில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததையும், ஓராண்டுக்குள் அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதையும் முதன்முதலில் ஒப்புக்கொண்டார். மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பினார் பட மூலாதாரம்,Munir Uz Zaman / AFP via Getty Images படக்குறிப்பு,தாரிக் தனது தேர்தல் பிரசாரத்தை சில்ஹெட்டில் இருந்து தொடங்கினார். அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இராணுவ ஆதரவுடன் ஒரு தற்காலிக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பி.என்.பி தலைவர் கலீதா ஜியாவும் கைது செய்யப்பட்டார். காலிதாவுடன் அவரது மகன் அராபத் ரஹ்மானும் (தற்போது இறந்துவிட்டார்) கைது செய்யப்பட்டார். இருப்பினும், அராபத் பின்னர் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் சிகிச்சைக்காக தாய்லாந்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் மலேசியாவிற்குச் சென்றார், அங்கு 2015 ஜனவரியில் மாரடைப்பால் காலமானார். அரசியல் ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகையில், "பாதகமான சூழ்நிலையிலும் தாரிக் ரஹ்மான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க முடிந்தது. இவை அனைத்தையும் மீறி, கட்சித் தலைவராக அவர் நாட்டிற்குத் திரும்புவது எனது பார்வையில் 'சிதைவுகளில் இருந்து எழுவதற்கு' ஒப்பானது," என்றார். அவர் பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், "தாரிக் அரசியலின் இருண்ட பக்கங்களை மட்டும் பார்க்கவில்லை, நாட்டில் நிலவும் மோதல் மற்றும் பழிவாங்கும் அரசியலிலும் அவர் அனுபவத்தைப் பெற்றுள்ளார்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c627z82yx03o
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய சட்டத்தை முன்மொழிந்திருப்பது கவலையளிக்கிறது - அந்தனி ஜேசுதாஸன் Published By: Vishnu 13 Feb, 2026 | 09:59 PM (நா.தனுஜா) 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்ட நிலையில், அதன்விளைவாக தற்போது ஆட்சிபீடத்தில் இருப்பவர்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது அவர்களே அச்சட்டத்துக்குப் பதிலீடாக அதனை விடவும் மோசமான 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்துக்கான வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும் என பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன் விசனம் வெளியிட்டுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்திவருகின்றனர். அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சில சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன. அப்போராட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு உள்ளிட்ட மலையக சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பி.ப 2.00 - 4.00 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த செயற்பாட்டாளர்கள் 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கு', 'பயங்கரவாத, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்', 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டாம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிப்போம்', 'மக்கள் முன்னுள்ள அரச பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு', 'மக்கள் ஆட்சியா? பயங்கரவாத ஆட்சியா?', 'மக்கள் குரலுக்கு செவி கொடு', 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு 'அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்', 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தைக் கிழித்தெறிவோம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவுக்குத் தடைவிதிப்போம்', 'நீதிக்காகத் துணையிருப்போம்', 'உரிமைகளை வென்றெடுப்போம்', 'விடிவுக்காக செயற்படுவோம்', 'நமக்காகக் குரல்கொடுப்போம்' என்றவாறு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். அதன்படி இத்தொடர் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், இதுபற்றி பொதுமக்கள் அவதானம் செலுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், '1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதித்த பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. அவ்வேளையில் இச்சட்டம் தம்மைப் பாதிக்காது என பெரும்பான்மையின மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் காலப்போக்கில், குறிப்பாக 'அரகலய' போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் இச்சட்டம் அவர்களுக்கு எதிராகவே பிரயோகிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது. அதன்விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்கள், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும்' எனச் சுட்டிக்காட்டினார். மேலும் ஏற்கனவே பல தசாப்தகாலமாக கல்வி, சுகாதாரம், இருப்பிடம் என அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்து போராடிவரும் மலையக சமூகம், இவ்வாறான சட்டங்களினால் இன்னமும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238609
-
பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்
'கழிப்பறை காகிதம் போல விட்டுச் சென்றார்கள்' - அமெரிக்கா பற்றி பாகிஸ்தான் அமைச்சர் பேசியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1990களில் இருந்து பாகிஸ்தான் அரசியலில் இருப்பதாக கவாஜா ஆசிஃப் தனது உரையில் குறிப்பிட்டார். 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்காவுடனான பாகிஸ்தான் உறவு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்த கருத்துக்கள் மீதான விவாதம் தீவிரமடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தானின் பங்கு குறித்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கவாஜா ஆசிப் பேசினார். அப்போது, அமெரிக்கா தனது உத்தி சார்ந்த நலன்களுக்காக பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் 'டாய்லெட் பேப்பர்' (கழிப்பறை காகிதம்) போல அதைக் கைவிட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தான் மண்ணில் நடந்த இரண்டு போர்களிலும் பாகிஸ்தான் இஸ்லாம் மீதோ அல்லது மதம் மீதோ கொண்ட பற்றினால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார். இது ஜிகாத் அல்ல என்றும், இது வல்லரசுகளுக்கு இடையிலான போர் என்றும் கவாஜா ஆசிப் தெரிவித்தார். கவாஜா ஆசிஃப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த கவாஜா ஆசிஃப், அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சனுடன் (கோப்புப் படம்) ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது மதம் அல்லது இஸ்லாமிய காரணங்களால் தூண்டப்பட்டது என்ற பொதுவான கருத்தை கவாஜா ஆசிப் மறுத்தார். மேலும், நாட்டின் இரண்டு ராணுவ ஆட்சியாளர்கள் (ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப்) அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுவதற்காகவே ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கேற்றதாக அவர் குற்றம் சாட்டினார். 1979-இல் தொடங்கிய சோவியத்-ஆப்கான் போர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், "சோவியத் ஒன்றியம் காபூல் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஆப்கானிஸ்தானுக்கு வந்தது. அது ஒரு ஊடுருவல் அல்ல. அது ஒரு அமெரிக்கக் கோட்பாடு," என்றார். "அது ஜிகாத் அல்ல. அது வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு போர். அதற்காக நாம் நமது பாடத்திட்டத்தையே மாற்றினோம், 1960 அல்லது 70-களில் நாம் கற்பித்த முறைக்கு இன்னும் நம்மால் அதைத் திரும்பக் கொண்டு வர முடியவில்லை," என்று அவர் தெரிவித்தார். மேலும், "அமெரிக்கத் தயாரிப்பு ஜிகாத்தை நாம் முன்னெடுக்க வேண்டியிருந்ததால், நமது அரசியல் மற்றும் மத விழுமியங்கள், ஏன் மரபுகள் கூட மாற்றப்பட்டன. ஆனால் அந்த ஜிகாத்திலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு, அவர்கள் நம்மை நிர்க்கதியாக விட்டுச் சென்றனர்." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது, பாகிஸ்தான் அதன் மிகப்பெரிய கூட்டாளியாக உருவெடுத்தது (கோப்பு புகைப்படம்) அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து ஆசிஃப் பேசியது என்ன ? 1999-க்குப் பிறகு, குறிப்பாக செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்ததால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பேரழிவு எவ்வளவு மோசமானது என்பதைப் பற்றி ஆசிப் குறிப்பிட்டுப் பேசினார். 2001-க்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தான் மீண்டும் அமெரிக்காவை ஆதரித்ததாகவும், அந்தச் செயல்பாட்டில் தாலிபன்களுக்கு எதிராகத் திரும்பியதாகவும் ஆசிப் விளக்கினார். அமெரிக்கா இப்பகுதியிலிருந்து வெளியேறியது, பாகிஸ்தானை நீண்ட காலமாக வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார அழுத்தங்களால் பாதிக்கப்பட்டது என்பதும் அவரது கருத்தாக அமைந்தது. "1999 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வந்த அரசாங்கமும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற மிகவும் ஆர்வமாக இருந்தது" என்று அவர் கூறினார். "அமெரிக்கா பாகிஸ்தானை எவ்வாறு பயன்படுத்தியது என்பது பற்றி ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை அனைத்தையும் விவரிக்கிறது. அது ஒரு முக்கிய உரை. அவர் எங்களை எப்படி ஒரு டிஷ்யூ பேப்பரைப் போல... டிஷ்யூ பேப்பர் கூட பரவாயில்லை, ஒரு டாய்லெட் பேப்பரைப் போல இங்கே விட்டுச் சென்றார்... ஆனாலும் நாம் அதிலிருந்து பாடம் கற்கவில்லை. பில் கிளிண்டன் இரண்டு மணி நேரம் இங்கு வந்தபோது, அன்றைய அரசியல்வாதிகள் பில் கிளிண்டன் வந்துவிட்டார் என்று கூறி அவருக்கு மாலை அணிவிக்கத் தொடங்கினர்." 2000-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் சில மணிநேரப் பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றார். "மொத்தமாகக் கணக்கிட்டால், அவர்கள் (அமெரிக்கா) 20-25 ஆண்டுகளில் சுமார் 10 கோடி முஸ்லிம்களைக் கொன்றுள்ளனர். அவர்கள் கடாபியின் மகனைக் கூட விட்டுவைக்கவில்லை"என்று கவாஜா ஆசிஃப் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இன்றுவரை 9/11 தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை, அது நிச்சயமாக ஆப்கானிஸ்தானால் செய்யப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்களில் பஷ்டூன் இனத்தவர் யாரும் இல்லை. ஆனால் அதிலும் கூட, இரண்டரை தசாப்தங்களாக நாம் (அமெரிக்காவிற்கு) வாடகைக்குக் கிடைப்பவர்களாக மாறினோம். ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பிற்கு அமெரிக்க ஊன்றுகோல் தேவைப்பட்டது என்பதே அதன் நோக்கமாக இருந்தது"என்றார். கடந்த 22-23 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு, இன்று பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிக்க வழிவகுத்துள்ளது என்று கவாஜா ஆசிப் கூறினார். "இது அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவு " என்று அவர் குறிப்பிட்டார். ஆசிபின் கூற்றுக்கு எத்தகைய எதிர்வினை உருவானது? அமெரிக்காவிற்கு எதிரான கவாஜா ஆசிப்பின் பேச்சு பாகிஸ்தானிய ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை. உண்மையில், டான் நியூஸ் மற்றும் தி நேஷன் ஆகியவற்றின் செய்திகள், அவரது உரையை எதிர்க்கட்சித் தலைவர் மஹ்மூத் கானின் கருத்துக்கு அளிக்கப்பட்ட பதிலடியாக விவரித்தன. மஹ்மூத் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கை பொறுப்பற்றது என்று விமர்சித்திருந்தார். "பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இரண்டு ஆப்கான் போர்களில் பாகிஸ்தானின் பங்கை ஒரு தவறு என்று குறிப்பிட்டார். இன்று நாட்டில் நிலவும் பயங்கரவாதம் கடந்த கால சர்வாதிகாரத் தலைவர்களின் தவறுகளின் விளைவாகும் என்று அவர் கூறினார்," என டான் நியூஸ் எழுதியுள்ளது. தங்கள் அரசியல் நலன்களுக்காக தலைவர்கள் இப்போது ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்வதில்லை என்று கவாஜா ஆசிப் கூறிய கருத்திற்கும் டான் நியூஸ் இடமளித்துள்ளது. டான் நியூஸ் தகவலின்படி, பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா மீது கவாஜா ஆசிப் குற்றம் சாட்டினார். "இந்தியா எங்களுக்கு எதிராக ஆப்கான் பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறது. இந்தியா பாகிஸ்தானில் ஒரு நிழல் யுத்தத்தை நடத்துகிறது," என்று அவர் கூறினார். பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. இருப்பினும், ஆசிப்பின் அறிக்கை விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் சல்மே கலீல்சாத் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில், "9/11-க்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தனது நாட்டை அமெரிக்காவிற்கு வாடகைக்கு விட்டதாக கவாஜா ஆசிப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உதவியதற்குப் பதிலாக பாகிஸ்தான் ராணுவ மற்றும் நிதி உதவியைப் பெற்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல," என்று கூறியுள்ளார். மேலும், "அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாத்து வந்ததும் அனைவரும் அறிந்ததே. அப்படியானால், அமெரிக்காவைப் பலவீனப்படுத்த மற்றொரு சக்தியிடமிருந்து வாடகை பெறுவதற்காக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறதா? அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிட்டவர்களைப் பாதுகாத்ததற்குப் பதிலாக அரசாங்கம் எதைப் பெற்றது, யாரிடமிருந்து பெற்றது என்பதை அமைச்சர் ஆசிப்பால் விளக்க முடியுமா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக அரசாங்கம் இதைச் செய்ததா? இதற்கான பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்," என்றும் அப்பதிவு கூறுகிறது. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு செப்டம்பரில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க பீல்ட் மார்ஷல் அசிம் முனீருடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். கடந்த நாற்பதாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து ராணுவத் தலையீட்டிலும் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 1980-களின் சோவியத் எதிர்ப்புப் போராட்டம் முதல், 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய அமெரிக்க ராணுவ நடவடிக்கை மற்றும் 2021-இல் படைகள் வாபஸ் பெறப்பட்டது வரை, பாகிஸ்தான் அமெரிக்காவிற்குத் துணையாக நின்று வருகிறது. 2001 தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளியாக பாகிஸ்தான் மாறியது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவிடமிருந்து ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அது தொடர்ந்து பெற்று வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. உதவிக்கு ஈடாக தனது கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் சரியான பதிலளிக்கவில்லை என்று அமெரிக்கா கருதியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்கா நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தானின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பல பில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கூட அவர் நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஜோ பைடன் காலத்திலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படவில்லை. ஏப்ரல் 2022-இல் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, இம்ரான் கான் அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினார். தான் பிரதமர் பதவியை இழந்ததற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் சீராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக டிரம்ப் கூறினார். அடுத்த மாதம், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீரை வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அவர் அழைத்தார். பாகிஸ்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்தது. மேலும், காஸாவில் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க அமைதி வாரியத்தில் இப்போது பாகிஸ்தான் உறுப்பினராகவும் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpv8nzmll0wo
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணை, அதெல்லாம் ஏற்கனவே பதிஞ்சிட்டனே! இனி மாற்ற சட்டத்தில் இடமில்லை!🤪
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய அரபு இராச்சியம் Published By: Vishnu 13 Feb, 2026 | 09:04 PM (நெவில் அன்தனி) டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கனடாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கடுமையாக போராடிய ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டு பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. ஜுனைத் சித்திக் பதிவுசெய்த 5 விக்கெட் குவியலும் ஆரியன்ஸ் ஷர்மா, சொஹெய்ப் கான் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிபெற உதவின. கனடாவினால் நிர்ணயிக்கப்பட்ட 151 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்த ஐக்கிய அரபு இராச்சியம் 13ஆவது ஓவரில் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆட்டம் இழந்த முதல் நால்வரில் ஒருவரேனும் 5 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை. இருவர் தலா 4 ஓட்டங்களையும் மற்றைய இருவர் தலா 5 ஓட்டங்களையும் பெற்றனர். மொத்த எண்ணிக்கையான 66 ஓட்டங்களில் 44 ஓட்டங்களை ஆரியன்ஸ் ஷர்மா பெற்றிருந்தார். வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 81 ஓட்டங்களில் 84 ஓட்டங்களை ஆரியன்ஷ் ஷர்மா, சொஹெய்ப் கான் ஆகிய இருவரும் பகிர்ந்த நிலையில் சொஹெய்ப் கான் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களம் புகுந்த மொஹம்மத் அர்பான் வெற்றிக்கு தெவையான ஒரு ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்தார். ஆரியன்ஷ் ஷர்மா 53 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் சாத் பின் ஸபார் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. கனடா 6ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நவ்னீத் தாலிவல், ஹார்ஷ் தக்கர் ஆகிய இருவரும் 58 ஓட்டங்களைப் பகிரந்து அணியை ஓரளவு சிறந்த நிலையில் இட்டனர். ஹார்ஷ் தக்கர் 50 ஓட்டங்களையும் நவ்னீத் தாலிவல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் ஷ்ரேயஸ் மொவ்வா 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜுனைத் சித்திக் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் ஸ்கொட்லாந்துக்கு எதிராக ரி20 உலகக் கிண்ண ஆரம்பத் தினத்தன்று ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த 5 விக்கெட் குவியலைத் தொடர்ந்து 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த இரண்டாவது வீரர் ஜூனைத் சித்திக் ஆவார். https://www.virakesari.lk/article/238608
-
தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு
தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு 13 Feb, 2026 | 04:41 PM (செ.சுபதர்ஷனி) தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை (12) தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தபால் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் நேக்குடன் 590 மில்லியன் ரூபா பெறுமதியான 10 லொறி வண்டிகள் மற்றும் 20 'குரு கெப்' (Crew Cab) ரக வாகனங்கள் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, தபால்காரர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பொதி காவிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதுடன், தபால் நிலையங்களின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் டெஸ்க்டொப் மற்றும் லெப்டொப் கணினிகள் மற்றும் 'டேப்' கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டன. மேலும், தபால் சேவையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு பதில் பிரிவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்த ஆண்டு தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சில நெறுக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பினும், இதனை பார்க்கிலும் தபால் துறையால் அதிக வருமானத் பெறலாம். இவருடம் எதிர்பார்க்கப்பட்டுள் வருமான இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தபால் கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தபால் சேவையின் முன்னேற்றத்தை விரும்புவோர் இச்சேவையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். தபால் சேவையை நிரந்தரமாக மூடிவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. சகல நவீன வசதிகளையும் வழங்கி அதனை உலகத்தரம் வாய்ந்த சேவையாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என்றார். https://www.virakesari.lk/article/238586
-
'கிம் ஜாங் உன்னின் மகள் அரசியல் வாரிசாக அறிவிப்பு' - தென் கொரிய உளவு நிறுவனம் கூறியது என்ன?
'கிம் ஜாங் உன்னின் மகள் அரசியல் வாரிசாக அறிவிப்பு' - தென் கொரிய உளவு நிறுவனம் கூறியது என்ன? பட மூலாதாரம்,KCNA படக்குறிப்பு,கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கட்டுரை தகவல் ப்ளோரா ட்ருரி பிபிசி 6 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 13 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த கட்டுரை சமீபத்திய தகவல்களுடன் மறுபகிர்வு செய்யப்படுகிறது) வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது மகளை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தென் கொரிய உளவு நிறுவனம் வியாழக்கிழமை(பிப்ரவரி 12), அந்நாட்டின் எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளது. 13 வயதுடைய கிம் ஜு ஏ கடந்த செப்டம்பரில் சீனாவுக்கு வருகை தந்தது போன்ற உயர்மட்ட நிகழ்வுகளில் தனது தந்தையின் அருகில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார், இது அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். இந்த மதிப்பீட்டை மேற்கொள்வதில், அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் அவரது அதிகரித்த பங்களிப்பு உட்பட பல்வேறு "சூழ்நிலைகளை" கணக்கில் எடுத்துக்கொண்டதாக தேசிய புலனாய்வு சேவை (NIS) தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெறும் வட கொரியக் கட்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, என்பது குறித்து நெருக்கமான கண்காணிப்பை வைத்திருப்பதாகவும் NIS தெரிவித்துள்ளது - இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதன் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு ஆகும். முன்னதாக கிம் ஜாங் உன்னின் சீன பயணத்தின் போது கிம் ஜு ஏ உடன் சென்றது பலரின் கவனத்தைப் பெற்றது. கிம் ஜாங் உன் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு சிறுமி தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ. ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம்,KCNA படக்குறிப்பு,கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன் கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை. முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது 'அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை' தான் கையில் ஏந்தியதாகக் கூறினார். பட மூலாதாரம்,EPA அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார். அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் 'மதிப்பிற்குரிய' (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார். 'மதிப்பிற்குரியவர்' என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், 'எதிர்காலத் தலைவர்' என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் 'மதிப்பிற்குரிய காம்ரேட்' என்று குறிப்பிடப்பட்டார். பட மூலாதாரம்,KCNA படக்குறிப்பு,வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார். 'புனிதமான ரத்தம்' - கிம் குடும்பம் கூறுவது என்ன? இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய எம்.பி.க்களுக்கு அப்போது வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்திருந்தது. கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது. ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார். ஆனால் கடந்த செப்டம்பரில் அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டின. 1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewnlqd8qqxo
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம் 13 Feb, 2026 | 04:47 PM இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு", "அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்" போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினால் உரிமைக்காகப் போராடியவர்கள் சிறையில் இருப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், மீண்டும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, இத்தகைய விசேட சட்டங்கள் தேவையற்றவை எனத் தெரிவித்த அவர், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பாதிக்கும் என எச்சரித்தார். குறிப்பாக, இது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலையக மக்களின் வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மலையக மக்களின் பாரம்பரியத் தொடர்பாடல் முறையான 'பறை' அடித்து, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது கலாசார ரீதியிலான எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர். https://www.virakesari.lk/article/238588
-
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமாக சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட இடமளிக்கப்படவேண்டும் - ரவிகரன் வலியுறுத்து 13 Feb, 2026 | 04:39 PM வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது ரவிகரன் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப் பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். எனவே, இம்முறை சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது. மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு இதன்போது ரவிகரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238583
-
கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி!
கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி! 13 Feb, 2026 | 12:17 PM கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன. குறித்த உணவகத்தில் வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் எமது உணவகத்திற்கு வந்து சோதனையிட்டனர். காணொளியை வெளியிட்ட நபர் அனைவரதும் கவனத்தை பெறுவதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் இது குறித்து தெரிவிக்கையில், பம்பலப்பிட்டி உணவக சர்ச்சை குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உணவு மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய உள்ளோம். அந்த உணவகத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/238551
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஆஸ்திரேலியாவை சாய்த்த ஜிம்பாப்வே - 4 விக்கெட் எடுத்து 'ஷாக்' கொடுத்த இவர் யார்? பட மூலாதாரம்,Ishara S. KODIKARA / AFP via Getty Images படக்குறிப்பு,பிளெசிங் முசரபானி 13 பிப்ரவரி 2026, 11:04 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வேயின் இந்த வெற்றியின் நாயகன் பிளெசிங் முசரபானி ஆவார். 29 வயதான பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வேவுக்கு போட்டியை வென்றெடுக்கும் ஒரு பந்துவீச்சை நிகழ்த்தினார். நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். பிளெசிங் முசரபானி சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார், 2018 இல் டி20 போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை விளையாடிய 84 டி20 சர்வதேச போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிளெசிங் முசரபானி அதிக ரன்களை கொடுக்காத பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர், இதுவரை இந்த 84 போட்டிகளில் 7.14 என்ற எகானமி விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். பட மூலாதாரம்,Robert Cianflone/Getty Images உயரம் 6 அடி 8 அங்குலம் முசரபானி 21 வயதில் அறிமுகமானபோது, அவரது உயரம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. அவரது உயரம் 6 அடி 8 அங்குலம். முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை விட உயரமானவர். டி20 கிரிக்கெட்டைத் தவிர, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முசரபானி அற்புதமாக செயல்பட்டார். 2025 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளராக முசரபானி இருந்தார். கடந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தக் காலகட்டத்தில், ஒரு இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த செயல் திறனாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு இன்னும் ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28pqxgj37o
-
தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்!
தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்! 13 Feb, 2026 | 02:26 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்காசியாவிற்கான நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு கொள்கையானது, நாம் 'அமெரிக்காவிற்கே முதலிடம்' வழங்க வேண்டும் என்பது ஆகும். இது தெற்காசியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளதுடன் எமது பங்காளிகளுக்கும் உதவியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் எனது பணியகத்தின் பணிகளில் இதன் பலன்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பிராந்தியம் மிகவும் முக்கியமானது. அமெரிக்காவிற்கே முதலிடம்' என்பது 'அமெரிக்கா மட்டும்' என்று பொருள்படாது. எமது இலக்குகளை அடைய, சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். கடந்த வாரம், ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகக் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டினர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் நிர்வாகம் பங்களாதேஷுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 175 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேஷின் சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது. வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு, ட்ரம்ப் நிர்வாகம் மூலோபாய திறன் மேம்பாட்டிற்காக மூன்று பரந்த அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றது.அவை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலக்கு வைக்கப்பட்ட முதலீடு மற்றும் இராஜதந்திரம் ஆகும். அமெரிக்காவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி நான் இதுவரை விவாதித்தேன். ஆனால் மற்றொரு முக்கியமான ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது இந்தப் பிரச்சினைகளில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு. தெற்காசியாவின் முக்கியத்துவத்தை நாம் இருவருமே அங்கீகரிக்கிறோம். பிராந்தியத்தில் மூலோபாயத் திறனை வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பங்காளிகள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள உதவுவதன் மூலம் அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், வளமாகவும் மாற்றுவோம் என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார். https://docs.house.gov/meetings/FA/FA19/20260211/118958/HHRG-119-FA19-Wstate-KapurS-20260211.pdf https://www.virakesari.lk/article/238562
-
'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?
'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா? பட மூலாதாரம்,MKSTALIN/X கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 13 பிப்ரவரி 2026, 10:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மறுபுறம், பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.10,000 கொடுத்தது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துருப்புச் சீட்டாக அமைந்தது போல, தமிழக தேர்தலில் இந்த 5,000 ரூபாய் திமுகவுக்கு அமையுமா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக அரசியல் தலைவர்களின் கருத்துகள் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன? உரிமைத் தொகை ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோடிக்கும் மேலான மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 இன்று காலையில் வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத் தொகை, முன்பணமாக வழங்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை ஆகியவை சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 என ஒட்டுமொத்தமாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, "தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது," என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் இந்தத் திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இவ்வாறு முன்கூட்டியே வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் அவர்களே 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய், "புதிதாகக் கோடைக்கால சிறப்புத் தொகை என திடீரென அறிவித்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் இதை அறிவிக்கிறார்கள் என்பதை தமிழக மக்களும் மகளிரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஒரே நேரத்தில் ரூ.5000 மகளிருக்கு கிடைத்திருக்கிறது. இது அவர்களின் மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு," என்று கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி கையைவிட்டுப் போவது உறுதியானதை உணர்ந்துகொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் அனைத்தும் கலைந்துவிட்ட நிலையில், தமது நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில்தான் முதலமைச்சர் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது," என்று விமர்சித்துள்ளார். ரூ.5000 கொடுத்தது தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா? பிகார் சட்டமன்றத் தேர்தலில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான பங்கை ஆற்றியது. தமிழ்நாட்டிலும் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் ரூ.5,000 என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் சூழ்ச்சிகளைச் செய்ய வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிகார் அரசியல் களத்தையும் தேர்தல் முடிவுகளையும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகச் செயல்பட்டதையும் பார்க்கும்போது, இங்கு அவர் கூறுவது போன்ற சூழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது," என்று தெரிவித்தார். இந்த நிலையில், "அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் உத்தியாக மகளிர் உரிமைத்தொகையை முன்பணமாக வழங்கியிருப்பது தேர்தலில் திமுகவுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, இதுபோன்ற ஒரு தேர்தல் உத்தியைக் கையில் எடுக்கும் சூழலுக்கு திமுக தள்ளப்பட்டது. ஆனால், "இது வாக்குக்காக நடக்கும் அரசியல்தான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம் திமுக வாக்குகளைப் பெறுவதற்கான இந்த அரசியல் உத்தியைப் பயன்படுத்தியது." அதோடு, "இந்தத் தொகையைப் பெற்ற அனைவருமே திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறிவிட முடியாது என்றாலும், அவர்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இதன் மூலம் உண்மையாகவே பலனடையும் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தப் பயனாளிகளில் 60% பேர் வாக்களித்தாலே அது திமுகவுக்கு வெற்றிதான்" என்றும் அவர் கூறினார். இருப்பினும், "இதுபோன்ற திட்டங்களையும் தாண்டி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதே ஓர் அரசாக திமுக எப்படிச் செயல்பட்டது என்பதைத் தீர்மானிக்கிறது. அதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தும்," என்று என்கிறார் குபேந்திரன். "திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5000 என்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில், பெண்களின் வாக்குகளைக் கவர வேண்டுமென்பதில் அனைவருமே தனிக் கவனம் செலுத்துவர். அந்த வகையில், இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் கணிசமாக உதவக்கூடும்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். அதிமுக, பாஜக கூறுவது என்ன? மகளிருக்குப் பணம் கொடுத்ததில் தவறில்லை எனக் கூறும் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் பிரச்னையாக இருக்கிறது," என்கிறார். "யாரோ தடுக்கப் பார்ப்பதாக, ஒடுக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார். யார் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமல்லவா! முதலில் இதை யாரால் தடுக்க முடியும்? இது முதலமைச்சர் அரண்டு போயிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. மோசமான, தோல்வியுற்ற ஆட்சி என்பதால்தான் இதுபோன்ற அறிவிப்பை திடீரென்று வெளியிட்டுள்ளார். இது அவரது அச்சத்தையே காட்டுகிறது," என்கிறார் நாராயணன் திருப்பதி. மேலும், "5000 ரூபாய் இல்லை ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதற்காகவே அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் ஆட்சியில், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள், டாஸ்மாக் காரணமாக ஏற்படும் சீர்கேடுகள், போதைப்பொருளின் நடமாட்டம் ஆகியவற்றையெல்லாம் மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார். பிகார் தேர்தலில், ஆளும் கட்சி பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததை ஆதரித்தது குறித்து கேட்டபோது, "இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுவொரு கடன் திட்டம். ஆனால், இது இலவச திட்டம். மக்களை கவர்வதற்காக இது செயல்படுத்தப்படுகிறது. இதை அதோடு ஒப்பிட முடியாது," என்றார். பிகாரில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட10 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், "மு.க.ஸ்டாலின் தனது மற்றும் தம் மகனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்து, அந்த அச்சத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்றார். மேலும் பேசிய அவர், "இந்த அறிவிப்பு, ஸ்டாலினின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இந்தத் திட்டத்தை வழக்கு போட்டு முடக்கிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய பொய். ஏற்கெனவே இரண்டேகால் கோடி பேருக்கு கொடுப்பதாகக் கூறி ஒரு கோடி பேருக்கே கொடுத்தார்கள். ஆட்சி முடியப்போகும் நேரத்தில் மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கத் தொடங்கினார்கள். இவையனைத்துமே மகனை அரியணை ஏற்றுவதற்கான வேலைகள்.இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பாதிக்காது. கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என கூறும்போது 'கொடுக்க முடியாது' எனக் கூறினார்கள். இப்போது அதே 2000 ரூபாயை கொடுப்பதாக இவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதற்கான ஒப்புதல்தானே! அவர்களின் மீதிருந்த நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிட்டார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும்," என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூறுவது என்ன? "பிகாரில் தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு 10,000 ரூபாய் திட்டத்தை அறிவித்தார்கள், அதைக் கடுமையாக விமர்சித்தோம். இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால், இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். "பிகாரில் நடந்தது அரசியல் சூழ்ச்சி. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளும் கட்சி கபட நாடகமாடி வாக்குகளைப் பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கும், பல கோடி மகளிர் பயனடையும் திட்டம் இது," என்றார். மேலும், "திமுகவுக்கு கிடைத்த தகவலின்படி, தேர்தல் காலகட்டத்தில் நிதி சார்ந்த எவ்வித உதவித் திட்டங்களையும் தடை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று கூறிய ரவீந்திரன், "அந்த முயற்சிகளின் விளைவாக மகளிர் உரிமைத் தொகை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டால், அதன் மூலம் பயனடையும் பல கோடிப் பெண்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதாலேயே, முதலமைச்சர் இவ்வாறு அறிவித்தார்," எனவும் விளக்கினார். மேலும் பேசிய அவர், "ஒருவேளை மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் பிற கட்சிகள், அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட்டதாகப் பரப்புரை செய்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கக்கூடும். அதையும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான தொகை வழங்கப்பட்டது," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74755nz3elo
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
RESULT 21st Match, Group A (N), Chennai, February 13, 2026, ICC Men's T20 World Cup United States of America 196/6 Netherlands (15.5/20 ov, T:197) 103 U.S.A. won by 93 runs
-
2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி
2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி Feb 13, 2026 - 05:26 PM 2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார். மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்வி மனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlktzgl70003356nky16oudz
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முன்னுக்கு பதிலை பதிந்ததால் முன்னணியில் இருந்தேன்! அண்ணை, போறபோக்கில் உங்களுக்கு தோள் கொடுப்பேன் என நினைக்கிறேன்.
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி
பங்களாதேஷ் தேர்தலை இரத்து செய்ய வேண்டும் - ஷேக் ஹசீனா Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 10:21 AM முகமது யூனுஸ் நடத்திய மோசடியான பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் தேர்தல் வியாழக்கிழமை (12) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர்கள் இல்லாத, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான தேர்தலை இரத்து செய்ய வேண்டும். முகமது யூனுஸ் பதவி விலகுவதுடன், பொய்யான வழக்குகளை திரும்ப பெற்று, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவாமி லீக் கட்சியின் செயல்பாட்டுக்கான தடையை நீக்குவதுடன், நடுநிலையான அரசின் மேற்பார்வையின் கீழ், நேர்மையான, சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொதுத்தேர்தல் மூலம் மக்களின் ஓட்டுரிமையை உறுதி செய்ய வேண்டும். முகமது யூனுஸ் நடத்திய மோசடி நடவடிக்கையை புறக்கணித்த தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோதமாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட முகமது யூனுஸ் நடத்திய தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. மக்களின் வாக்குரிமை, ஜனநாயக மாண்புகள் மற்றும் அரசியலமைப்பின் ஆன்மாவை தேர்தல் ஆணைக்குழு மதிக்கவில்லை. அவாமி லீக் மற்றும் வாக்காளர்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/238538
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடைக்கு வைச்ச 3 முட்டை இன்று பொரிக்கவில்லை, அது கூழ்முட்டையாப் போச்சே!😂
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது ஸிம்பாப்வே 13 Feb, 2026 | 04:47 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்த ஸிம்பாப்வே 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது. இதன் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸிம்பாப்வே வெற்றியீட்டியுள்ளது. 2007இல் நடைபெற்ற முதலாவது அத்தியாத்தில் அவுஸ்திரேலியாவை ஸிம்பாப்வே 5 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது. இப்போது 19 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவை மீண்டும் சந்தித்த ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது. இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் ஸிம்பாப்வே பிரகாசித்து அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இக் குழுவில் இலங்கை 4 புள்ளிகளுடன் 3.050 என்ற மிகச் சிறந்த நிகர ஓட்டவேகத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே, 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. ஸிம்பாப்வே சார்பாக துடுப்பெடுத்தாடிய நான்கு வீரர்களும் தமது இன்னிங்ஸ்களை நன்கு திட்டமிட்டு விளையாடிமை ஏனைய அணிகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. ஸிம்பாப்வேயின் மொத்த எண்ணிக்கையில் 86 ஓட்டங்களே பவுண்டறிகளில் வந்தன. மற்றைய 83 ஓட்டங்கள் ஒற்றைகள், இரட்டைகளாக கிடைத்தன. ப்றயன் பெனெட், தடிவன்ஷே மாருமணி ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தடிவன்ஷே மாருமணி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து ப்றயன் பெனெட், ரெயான் பியூரி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது மாக்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய பந்தை ரெயான் பியூரி ஓங்கி அடித்தபோது அந்தப் பந்து ஸ்டொய்னிஸில் கையைப் பதம்பார்த்து காயப்படுத்தியது. ஸ்டொய்னிஸ் உடனடியாக சிகிச்சைக்காக களத்தை விட்டு வெளியேறியதும் அவரது ஓவரைப் பூர்த்தி செய்ய அழைக்கப்பட்ட கெமரன் க்றீன் முதல் பந்திலேயே ரெயான் ப்யூரியை ஆட்டம் இழக்கச் செய்தார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ப்றயன் பெனெட் 56 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத மூன்றாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். கெமரன் க்றீன் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலிய அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், டிம் டேவிட் ஆகியோர் இடம்பெற்றபோதிலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போனது. அவுஸ்திரேலிய இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொட்டனர். அவர்களில் தனித்து போராடிய மெட் ரென்ஷோ 44 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். க்லென் மெக்ஸ்வெல் சிரமத்திற்கு மத்தியில் 32 ஓட்டங்களையும் பதில் அணித் தலைவர் ட்ரவிஸ் ஹெட் 17 ஓட்டங்களையும் பெற்றனர். காயத்துக்குள்ளான மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றார். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238587
-
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு Feb 13, 2026 - 12:41 PM 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தவணையின் முன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன. பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlkjtjlt0002356nmgy024rp