Everything posted by ஏராளன்
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா ஒருமுறை கூட வெல்லாத ஆடுகளம் எப்படி உள்ளது? பும்ரா ஆடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில்லும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பிரிமிங்ஹாமில் இன்று(ஜூலை2ம் தேதி) தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றிக்கு உதவிய அதே வீரர்களோடு, மாற்றமில்லாமல் 2வது டெஸ்டிலும் களமிறங்குகிறது. ஆனால், இந்திய அணி இதுவரை ப்ளேயிங் லெவனை வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை. பிரம்மாஸ்திரம் பும்ராவை விளையாட வைக்கலாமா அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிக்கு இடம் கிடைக்குமா என கணிப்புகள் வந்தாலும் இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் நிர்வாகத்திடம் இருந்து இல்லை. டாஸ் நிகழ்வுக்குப்பின்புதான் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஏமாற்றாத இளம் அணி விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத, நிலையில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் டெஸ்டில் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷப் பந்த் இரு சதங்கள், கேப்டன் கில், ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் ஆகியவை மனநிறைவை அளித்தன. ஆனால், இவர்கள் தவிர இந்திய அணியில் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்பு குறிப்பாக கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பங்களிப்பு ஏமாற்றத்தை அளித்தது. பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்ஸில்தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததேத் தவிர 2வது இன்னிங்ஸில் பெரிதாக பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. வேகப்பந்துவீச்சில் பும்ரா தவிர பிரசித் கிருஷ்ணா, ஷர்துல், சிராஜ் ஆகியோரின் எக்னாமி ரேட், விக்கெட் வீழ்த்தும் திறன் கவலைக்குரியதாக முதல் டெஸ்டில் இருந்தது. ஷர்துல் தாக்கூர் அணியில் கொண்டுவந்ததே கேள்விக்குரியதாக மாறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் சுப்மன் கில் கேப்டன்ஷிப் மீதான கேள்வி இளம் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு ஸ்திரத்தன்மையுடன் இருந்தாலும், பந்துவீச்சில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் கேப்டன் ஷுப்மன் கில், பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாள வேண்டும், எந்த சூழலில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது, புதிய பந்தில் யாரை பந்துவீசச் செய்வது, யாருக்கு அதிக ஓவர்கள் வழங்குவது என்பதில் முடிவெடுப்பதில் இன்னும் தடுமாற்றத்தைச் சந்திக்கிறார். இந்த சூழலில் 2வது டெஸ்ட் போட்டி இன்று பிர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று துணைப் பயிற்சியாளர் ரேயன் டான் டஸ்சே தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகையான மாற்றம் என்பதில்தான் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. புதிய வரலாறு படைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி விளையாடும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 2011ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் 242 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது, 2018ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 18 ரன்களில் இந்திய அணி தோற்றது. 2022ம் ஆண்டில் பும்ரா கேப்டன்ஷிப்பில் நடந்த போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 1986ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி டிரா செய்துள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து எப்போதுமே இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து பதிலடி கொடுத்தாலும் இதுவரை இந்த மைதானத்தில் வெற்றிக்கொடி நாட்டியதில்லை. பிரிம்மிங்ஹாமில் நடைபெறும் 2வது டெஸ்டில் இந்திய அணி வென்றால் அது வரலாற்று வெற்றியாக, இந்த நூற்றாண்டிலேயே முதல் வெற்றியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. 'பாஸ்பால்' உத்தியில் தொடர் வெற்றி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிராண்டம் மெக்கலம் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக பிரெண்டம் மெக்கலம் வந்தபின் பாஸ்பால் உத்தியை கையில் எடுத்து தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக ஸ்டோக்ஸ் வந்தபின், உள்நாட்டில் நடந்த 21 டெஸ்ட் போட்டிகளில் 16 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 4 வெற்றிகளையும், ஒரு போட்டியை டிராவும் செய்துள்ளது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை வென்று, ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. ஆஷஸ் தொடரில் மட்டும் இங்கிலாந்து பேட்டர்கள் 3938 பந்துகளைச் சந்தித்து 2920 ரன்கல் சேர்த்தனர். 85 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 93 விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஆஷஸ் தொடரில் இருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் 41% "குட்லென்த்"தில்(6முதல்8மீட்டருக்குள்) வீசிவருகிறார்கள். பேட்டர்களும் சராசரியாக 39 ரன்களும், ஓவருக்கு 3.69 ரன்களும் சேர்த்து வருகிறார்கள். இது ஆஷஸ் மட்டுமல்ல, அடுத்து நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைத் தொடர்களிலும் இங்கிலாந்து வீரர்களின் நிலைத்தன்மை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சீராக இருந்து வருகிறது. இங்கிலாந்து அணி வோக்ஸ், ஸ்டோக்ஸ், கார்ஸ், டங்க் ஆகிய இளம் பந்துவீச்சாளர்களை வைத்துதான் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களும் இரு இன்னிங்ஸிலும் 47% பந்துகளை "குட்லென்த்தில்" வீசியதாக கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் டெஸ்டில் மைதானம் தட்டையாக இருந்தபோதிலும் அதில் ஸ்விங் செய்த சதவீதமும் இந்திய அணியைவிட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிகமாகவே பந்தை திருப்பினர். ஒட்டுமொத்தத்தில் பாஸ்பால் உத்தியைக் கையாண்டு இங்கிலாந்து தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் அந்த அணி செய்யாமல் 2வது டெஸ்டில் விளையாடுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்தபோதிலும் அவரை 2வது டெஸ்டில் பயன்படுத்தாமல் மாறாத ப்ளேயிங் லெவனில் இங்கிலாந்து களமிறங்குகிறது பேட்டிங்கில் பிளங்கெட், போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ஸ்மித் என பேட்டிங்கிலும் வலுவாக இருக்கிறார்கள். இதில் டெய்லெண்டர்கள் வோக்ஸ், கார்ஸ் வரை சிறப்பாக பேட்செய்வது அந்த அணிக்கு பெரிய பலமாகும். அதனால்தான் முதல் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். டெஸ்ட் போட்டியில் கூட பாஸ்பால் உத்தியில் வேகமாக ரன்களைச் சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்வது இந்திய அணிக்கு பெரிய சவாலாகும். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு இணையாக முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்தனர், 2வது இன்னிங்ஸிலும் 370 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்து வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பேட்டிங் வரிசையை உடைக்க ஆடுகளம், காலநிலை சாதகமாக இல்லாதபட்ச்தில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவாலாகவே 2வது டெஸ்ட் போட்டி இருக்கும். 'ப்ளேயிங் லெவனில் சஸ்பென்ஸ்' இந்திய அணியின் ப்ளேயிங்கில் லெலவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், அவரை பயன்படுத்துவது என்பது கடைசி நேரத்தில்தான் முடிவாகும். ஏனென்றால் 3 டெஸ்டில் மட்டுமே பும்ரா விளையாட இருப்பதால் அவருக்கு சுமையைக் குறைக்கும் வகையில் சரியாக பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்துவரக்கூடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவின் பங்களிப்பு தேவை என்பதையும் உணர்ந்துள்ளது நிர்வாகம். ஆதலால், பும்ரா அணியில் இடம் பெறுவது என்பது கடைசி நேரத்தில் ஆடுகளத்தின் தன்மை, காலநிலையைப் பொருத்துதான் முடிவாகும். அதேநேரம், வேகப்பந்துவரிசையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. கடந்த டெஸ்டில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஷர்துல் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக நிதிஷ் ரெட்டி அழைக்கப்படலாம். நிதிஷ் ரெட்டி ஆஸ்திரேலியாவில் சதம் அடித்து, பந்துவீச்சிலும் ஓரளவு 5வது பந்துவீச்சாளர் பணியை சிறப்பாகச் செய்தார் என்பதால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர் பும்ரா நிதிஷ் ரெட்டியை அணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நடுவரிசை பேட்டிங் இன்னும் ஸ்திரமாகும். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். பும்ரா அல்லது கருண் நாயர் இல்லாத பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வரலாம். சுந்தர் வருகையால் பேட்டிங் வரிசையும் ஸ்திரமாகும், அதேநேரம் கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர் கிடைக்கக்கூடும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா, சிராஜ் ஆகிய இருவரும் தங்களின் எக்கானமி ரேட்டை குறைக்கும் வகையில் 2வது டெஸ்டில் பந்துவீசுவது அவசியமாகும். கடந்த டெஸ்டில் இருவரும் ஓவருக்கு 6 ரன்ரேட்டை சராசரியாக விட்டுக்கொடுத்தனர். ஐபிஎல் தொடரில்கூட இருவரும் இந்த அளவு ரன்களை வழங்கியதில்லை. கடந்த டெஸ்டில் வெற்றி இந்திய அணியிடம் கைநழுவி சென்றதற்கு பந்துவீச்சில் சொதப்பியது முக்கியக் காரணமாகும். அதேசமயம், பீல்டிங்கிலும் கடந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் மோசமாக செயல்பட்டு பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு டெஸ்டில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் வந்தது. ஜெய்ஸ்வால், மட்டும் 3 கேட்சுகளை கோட்டைவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக தீவிரமான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டார். இந்த டெஸ்டில் பீல்டிங்கில், குறிப்பாக கேட்ச் பிடிப்பதில் கூடுதல் கவனத்தை இந்திய வீரர்கள் செலுத்துவது அவசியமாகும். ஆடுகளம் எப்படி உள்ளது? பிர்மிங்ஹாமில் இருக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் வரலாற்று ரீதியாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக் கூடியது. இங்கு நிலவும் காற்று, காலநிலையால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய முடியும். ஆனால், இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக மாறிவிட்டன. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தில் இருக்கும் புற்கள் வெட்டி குறைக்கப்படும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று 2வது டெஸ்ட் போட்டியும் இரு அணிகளின் பேட்டர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கக்கூடும். முதல் இருநாட்களில் காலநிலையை நன்கு பயன்படுத்தினால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய இயலும், நன்கு பவுன்ஸ் செய்யலாம். அதிலும் டியூக் பந்தில் தொடக்கத்தில் 30 ஓவர்கள் வரை டாப்ஆர்டர் பேட்டர்கள் நிதானமாக பந்து சற்று தேயும் வரை ஆடுவது அவசியமாகும். ஆனால், பெரும்பாலும் 3வது நாளில் இருந்து ஆடுகளம் வறண்டு இருக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் கை ஓங்கக்கூடும். குளிர்ந்த காலநிலை, மழை சூழல், காற்றின் வேகம் ஆகியவற்றைப் பொருத்து வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் தன்மை மாறக்கூடும். முதல் நாளிலும், கடைசி நாள் ஆட்டத்திலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் இருக்கும் வெடிப்புகள், பிளவுகளால் பந்து திடீரென பவுஸ்ஆகலாம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதுதான் இந்த மைதானத்தில் சிறந்ததாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ljj2yyz80o
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் : சமூக செயற்பாட்டாளரான சகோதர மொழி இளைஞன் 02 JUL, 2025 | 10:14 AM யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம். யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். இதனால் அமைச்சர்களுக்கும் பெரிய பிரச்சினை இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் இதனால் பிரச்சினை உள்ளது. புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார். https://www.virakesari.lk/article/218985
-
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம்! 02 JUL, 2025 | 10:02 AM இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10 சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது," என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார். ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார். "முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது." தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார். செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது. https://www.virakesari.lk/article/218984
-
இந்தியை மூன்றாவது மொழியாக்கும் முயற்சியில் இருந்து மகாராஷ்டிர அரசு பின்வாங்கியது ஏன்?
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 1 ஜூலை 2025 மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குரிய மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசாங்க ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். மும்மொழிக் கொள்கையை எந்த வகுப்பிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசின் சார்பாக நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறிய ஃபட்னாவிஸ், இந்தக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், "எங்களுக்கு மராத்தி முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, அதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார். நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு "இந்தப் பிரச்னையில் தவறான அரசியல் நடக்கிறது. எனவே, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதித்தோம். எந்த வகுப்பிலிருந்து இந்த கொள்கையை செயல்படுத்த வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும், மும்மொழிக் கொள்கை தொடர்பாக குழந்தைகளுக்கு என்னென்ன வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய நரேந்திர ஜாதவ் தலைமையில் மாநில அரசு சார்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார். "இந்தக் குழுவின் அறிக்கை வந்த பிறகே மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும். அதனால், 2025ம் ஆண்டு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியான இரு அரசு உத்தரவுகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். புதிய குழு, மும்மொழிக் கொள்கையைச் சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்யும்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார். "இந்தக் குழு மும்மொழிக் கொள்கை குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மக்களின் கருத்துகளையும் கேட்கும். அதன் பிறகு, எங்கள் மாணவர்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுக்கும். மாநில அரசு அந்த முடிவை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். மராத்தி (மொழி) மற்றும் மராத்தி மாணவர்கள் மட்டுமே எங்களுக்கு முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, மராத்தி மாணவர்களை மையமாகக் கொண்டது. இதில் நாங்கள் எந்த அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார். ஜூலை 5-ஆம் தேதி பேரணி அல்லது கூட்டம் நடைபெறும் - உத்தவ் தாக்கரே "மராத்தி மக்களின் அதிகாரத்தின் முன் அரசாங்கம் தோற்றுவிட்டது. சம்யுக்த மகாராஷ்டிரா காலத்திலும் இதேபோன்ற இயக்கம் நடந்தது, அந்த நேரத்திலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்தனர். அப்போது, இந்த சதியை நாங்கள் முறியடித்தோம், அதேபோல், இந்த முறையும் இந்த சதியை முறியடித்தோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். மராத்தி மக்களைப் பிரித்து அமராதி வாக்குகளை ஈர்க்க அரசாங்கம் ஒரு மறைக்கப்பட்ட செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், நாங்கள் மொழியை எதிர்க்கவில்லை, அதனை திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் என்ற நியாயமான நிலைப்பாட்டை மராத்தி மொழி பேசும் மக்கள் எடுத்தனர். எனவே, மராத்திக்கும் அமராதிக்கும் இடையில் எந்தப் பிரிவும் இல்லை. இந்தப் பிரிவு தங்களுக்கு நன்மை தரும் என்று அரசாங்கம் நினைத்தது. ஆனால் இன்றைய போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 5ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணி தடுக்கப்படவும், மராத்தி மக்கள் ஒன்று கூடாமல் இருக்கவும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக பொய்கள் மற்றும் வதந்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. பொய்யான வழிகளில் வெற்றி பெறுவது பாஜகவின் தொழிலாகிவிட்டது. மராத்தி மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். நெருக்கடி வந்த பிறகுதான் ஒன்றாகச் சேர வேண்டுமா? என்கிற கேள்வியுடன் நான் மராத்தி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜூலை 5ஆம் தேதி, மொழித் திணிப்புக்கு எதிராக ஒரு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது, அதை வெற்றிப் பேரணியாக மாற்றி, அதன் வடிவத்தை முடிவு செய்யப் போகிறோம். இந்த இயக்கத்தின் போது ஒன்றாகக் கூடிய அனைத்து கட்சிகளும், ஜூலை 5ஆம் தேதி என்ன செய்ய வேண்டும் என்பதை சேர்ந்து முடிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். "அந்தக் குழுவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. யார் குழுவை நியமித்தாலும், அவர்கள் எங்களை கட்டாயப்படுத்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. யார் நியமித்தாலும், அவர்கள் எங்களை வற்புறுத்த அனுமதிக்க முடியாது. ஜூலை 5ஆம் தேதி ஒரு கூட்டம் அல்லது பேரணி இருக்கும். மராத்தி மக்களே, இப்போது உறங்க வேண்டாம். நாம் ஒன்றாக இணைத்துள்ளோம் . ஒன்றாகவே முன்னேறுவோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். "மஷேல்கர் குழு அறிக்கையை இன்னும் வாசிக்கவே இல்லை"-உத்தவ் தாக்கரே பட மூலாதாரம்,FACEBOOK/SHIVSENA படக்குறிப்பு, "மராத்தி மக்களே, இப்போது தூங்க வேண்டாம். நாம் ஒன்றாக இணைத்துள்ளோம் . ஒன்றாகவே முன்னேறுவோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். "மஷேல்கர் குழு அறிக்கையைப் பற்றி பேசும் பாஜகவுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் 'ரூமர் பேக்டரி' என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன் போஸ்டரில் தேவேந்திர ஃபட்னாவிஸின் புகைப்படத்தை வையுங்கள்" என்று மஷேல்கர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார். "முதலமைச்சருக்கு மராத்தி மொழி புரியுமா? இந்தக் குழு முதலில் உயர் கல்விக்காகவே நியமிக்கப்பட்டது. அப்போது உதய் சமந்த் உயர்கல்வி அமைச்சராக இருந்தார். அந்தக் குழுவில் தொடக்கக் கல்வி தொடர்பான யாரும் இல்லை. இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்த வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்ய எனது தலைமையில் ஒரு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டதால், அந்த அறிக்கையின் பக்கத்தைக் கூட என்னால் திருப்ப முடியவில்லை. முதலமைச்சர் மராத்தியை கற்றுக்கொண்டு, அதைப் படித்த பிறகுதான் விமர்சிக்க வேண்டும். ஏனெனில் நான் அந்த அறிக்கையை இன்னும் படிக்கவே இல்லை" என்று உத்தவ் தாக்கரே கூறினார். மேலும், "தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழு ஒரு கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. அந்த அறிக்கையில் என்ன இருந்தாலும், இந்தியை கட்டாயமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்த நேரத்தில் அவர்கள் துரோகம் செய்து எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர்" என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். "ஒரு நெருக்கடிக்குப் பிறகு ஒன்று சேர்வதற்குப் பதிலாக, அது நடப்பதற்கு முன்பு நாம் ஒன்று சேர்ந்தால், எந்த நெருக்கடியும் இருக்காது. தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைவார்கள் என அரசாங்கம் பயந்ததால் தான் இந்த உத்தரவை ரத்து செய்தது" என்று தாக்கரே கூறினார். இந்தி பற்றிப் பேசிய உத்தவ் தாக்கரே, "நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கும், குஜராத்தில் குஜராத்திக்கும், மகாராஷ்டிராவில் மராத்திக்கும் நீதி கிடைக்க வேண்டும். மக்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களை சாணக்கியர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்" என்றார். "அரசாங்கத்துக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது?" - ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் இந்த விவகாரம் தொடர்பான சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். "ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளைக் கற்பித்தல் என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் முடிவு நிரந்தரமாகத் திரும்பப் பெறப்பட்டது. இது தொடர்பாக, அரசாங்கம் இரண்டு அரசாணைகளை ரத்து செய்துள்ளது. இதைத் தாமதமாக பெறப்பட்ட ஞானம் என்று சொல்ல முடியாது, ஏனெனில் மராத்தி மக்களின் எதிர்ப்பினால் மட்டுமே இது திரும்பப் பெறப்பட்டது" என்று ராஜ் தாக்கரே பதிவிட்டுள்ளார். அரசாங்கம் இந்தி மொழியை இவ்வளவு பிடிவாதமாக திணிக்க முயன்றதற்கும், அதற்கான அழுத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்ட போது, பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அதில் பங்கேற்கத் தயாராக இருந்தன. அந்தப் பேரணி நடந்திருந்தால், அது மிகப் பெரிதாக இருந்திருக்கும். அது சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் நாட்களை நமக்கு நினைவூட்டியிருக்கும். ஒருவேளை இந்த ஒற்றுமையால் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பரவாயில்லை. அப்படி ஒரு பயம் இருக்கவேண்டும்" என்று ராஜ் தாக்கரே கூறினார். ராஜ் தாக்கரே தொடர்ந்து பேசுகையில், "இன்னொரு விஷயம், அரசாங்கம் மீண்டும் ஒரு புதிய குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு அறிக்கை வெளிவருகிறதோ, இல்லையோ, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் சகித்துக்கொள்ளப்படாது. அரசாங்கம் இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இந்த முடிவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம், மகாராஷ்டிர மக்களும் அவ்வாறே எண்ணுகின்றனர். " என்றும் அவர் கூறினார். தாக்கரே சகோதரர்களின் ஐக்கிய முன்னணி தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவால் மும்பையில் நேற்று (ஜூன் 30) ஒரு அடையாள ஹோலி போராட்டம் நடத்தப்பட்டது. வரும் வாரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா மற்றும் சிவசேனா (தாக்கரே) ஆகியவை ஒன்றிணையும், இதன் விளைவாக, ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரும் 'இந்தி சக்தி'யை எதிர்க்க ஒன்றிணைவார்கள். ஏற்கெனவே, தாக்கரே சகோதரர்களின் கூட்டு இயக்கம் உட்பட இந்தி மொழி திணிப்பு தொடர்பான பிரச்னை மகாராஷ்டிரா அரசியலைக் கிளறி வருகிறது. 'இந்தி கட்டாயம்' குறித்த சர்ச்சை தேசிய கல்விக் கொள்கையின்படி, மகாராஷ்டிராவில் முதலாம் வகுப்பிலிருந்தே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவும், இந்தி மொழியை மூன்றாம் மொழியாக 'கட்டாயமாக்க'வும் மாநில அரசு ஏப்ரல் மாதம் முடிவு செய்தது. இருப்பினும், மாநிலம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் அதே மாதத்தில், ஜூன் மாதத்தில் 'கட்டாய' என்ற வார்த்தையை திரும்பப் பெற்று, 'பொது' என்ற வார்த்தையைச் சேர்த்து திருத்தப்பட்ட அரசாங்க முடிவை வெளியிட்டது. இருப்பினும், மூன்றாவது மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகள், 'மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்காமல் வேறு இந்திய மொழியைக் கற்க விருப்பம் இருந்தால், ஒப்புதல் வழங்கப்படும். இருப்பினும், இந்த மொழியைக் கற்க விரும்புவோரின் எண்ணிக்கை குறைந்தது 20 ஆக இருக்க வேண்டும், அப்போதுதான் ஒரு ஆசிரியர் கிடைக்கப் பெறுவார், இல்லையெனில் அது ஆன்லைனில் கற்பிக்கப்படும்.' இந்த 'திருத்தப்பட்ட' அரசாங்க முடிவுக்கு கல்வித் துறை வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e007l478zo
-
பழைய மற்றும் புதிய செம்மணி புதைகுழி வழக்குகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை - சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
Published By: VISHNU 02 JUL, 2025 | 01:53 AM பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஐந்தரை நாட்கள் முடிவடைந்தது. இன்றைய நாளில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித உடல் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் உடலுடன் சப்பாத்து குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. அதனுடைய எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அகழ்வு நடந்த பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார். தற்போது அகழ்வு பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரியோடு பேசி கடந்த அகழ்வு பணி தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார். பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது. ஏற்கனவே தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினரால் அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பகுதிகள் நீதிமன்ற அனுமதிக்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய தொல்லியல் துறை மாணவர்களின் உதவியுடன் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் சேர்ந்து தற்போது துப்பரவாக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/218978
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, காவலாளி அஜித் குமாரும் அவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "என் கண் எதிரிலேயே அவனை அடித்தார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். வாயில் மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினார்கள். கோவிலின் பின்புறம் கூட்டிப் போய் நகை எங்கே என்று கேட்டு அடித்தனர். அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான்" எனக் கூறி கண்கலங்கினார், காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார். "எங்கள் புகாரால் ஓர் உயிர் பறிபோகும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" என்கிறார், காவலாளி மீது புகார் கொடுத்த நிகிதா. திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் போட்டுக் காண்பித்தனர். கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மடப்புரம் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் மடப்புரம் அமைந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு விவசாயம் மற்றும் அவை சார்ந்த கூலி தொழில்கள் பிரதானமாக உள்ளன. மடப்புரம் கிராமத்தில் என்ன நிலவரம்? மடப்புரம் கிராமத்துக்கு பிபிசி தமிழ் சென்ற போது, கோவிலைச் சுற்றி கடை வைத்திருந்த வணிகர்கள் பலரும் பேசவே தயங்கினர். ஒரு சில பெண்கள், "நாங்கள் வெளியூரில் இருந்து வந்து வியாபாரம் செய்கிறோம். போலீஸ் அடித்து அந்தப் பையன் இறந்துபோன தகவலைக் கேள்விப்பட்டோம். அவர் யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்ததில்லை" எனக் கூறினர். கோவிலுக்கு அருகில் பூ வியாபாரம் செய்து வரும் ஆறுமுகத்தாய் பிபிசி தமிழிடம் பேசும்போது, "இந்த வழியாக அந்தப் பையன் வேலைக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு போலீஸ் அழைத்துக் கொண்டு போனதாக கூறினார்கள். போலீஸ் அடித்ததை நான் பார்க்கவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு பிபிசி தமிழ் சென்றது. மிகப் பழைமையான அந்த வீடு அமைந்துள்ள தெருவில் சில அரசியல் கட்சி நிர்வாகிகளின் கார்கள் நின்றிருந்தன. படக்குறிப்பு, மாலதி "சடலமாக வருவான் என நினைக்கவில்லை" அஜித்குமாரின் தாய் மாலதியிடம் பிபிசி தமிழ் பேசுகையில், "சாமி கும்பிட வந்த ஒரு பெண், தனது காரை பார்க்கிங் செய்வதற்காக சாவியை என் மகனிடம் கொடுத்துள்ளார். அவன் தனக்குத் தெரிந்தவர்களிடம் சாவியைக் கொடுத்துள்ளான். சாமி கும்பிட்டுவிட்டுக் கிளம்பி போன அவர்கள், திரும்பி வந்து நகையைக் காணவில்லை எனக் கூறி கோவில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்" என்றார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 9.5 சவரன் நகை மற்றும் 2,500 ரூபாய் பணத்தைக் காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரித்துள்ளனர். "மாலை நான்கு மணியளவில் என் மகனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருப்பது தெரிந்தது. அங்கு அவனிடம், 'அரிசி மாவு ஆட்டி உங்களை எல்லாம் காப்பாத்தினேன். நகை எடுத்திருந்தால் கொடுத்துவிடு' எனக் கூறி அழுதேன். நான் எடுக்கவில்லை எனக் கூறினான். அங்கிருந்து போலீஸார் என்னை விரட்டிவிட்டனர்" எனக் கூறினார் மாலதி. "மறுநாள் என் மகனை சடலமாகக் கொடுப்பார்கள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை" என்றவாறு மாலதி கதறி அழுதார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாவு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். நிகிதா கொடுத்த புகாரின்பேரில் ஜூன் 28ஆம் தேதி காலையில் அஜித்குமாரின் வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர். படக்குறிப்பு, நவீன்குமார் "மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினர்" "தனிப்படை காவலர்கள் 3 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். வெளியில் இருந்த வேனில் என் அண்ணன் இருந்தான். சட்டை எல்லாம் மண்ணாக இருந்தது. தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது நன்றாக அடித்துள்ளனர் எனத் தெரிந்தது" என்று அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் கூறினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரவு முழுக்க என் அண்ணனை தூங்கவிடவில்லை. 'உன் தம்பியை அடித்தால் சொல்வாயா?' எனக் கேட்டு என்னையும் அடித்தனர். மதியம் சாப்பிட்ட பிறகு 3 தனிப்படை போலீஸார் அண்ணனை கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாக கூறியுள்ளான்" என்கிறார். கோவிலின் பின்புறம் நகை உள்ளதாகக் கூறியதால் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அங்கு அழைத்து சென்றுள்ளனர். " அங்கு நகை இல்லை எனத் தெரிந்ததும் கோபப்பட்டு காவலர்கள் கடுமையாக அடித்தனர். அவனது அலறல் சத்தம் கேட்டு கோவில் அருகே கடை வைத்திருந்த வியாபாரிகள் ஓடிவந்தனர்" எனக் கூறினார். "போகும் போது என் அண்ணன் நடந்து போனான். வரும்போது தூக்கிக் கொண்டு வந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது மிளகாய்ப் பொடியை கரைத்து வாயில் ஊற்றினர். அருகில் கம்பியெல்லாம் கிடந்தது. கடைசியாக என் சட்டையை கழட்டிக் கொடுத்தேன்." எனக் கூறி கண்கலங்கினார், நவீன்குமார். கோவிலின் பின்புறத்தில் அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாட்டுத்தொழுவத்துக்கு பிபிசி தமிழ் சென்றது. சுற்றிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அந்த இடமே சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகளை தருகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாக வெளியில் பேசப்படும் தகவல் குறித்து நவீன்குமாரிடம் கேட்டபோது, "அரசு தரப்பில் உதவி செய்வதாகக் கூறினர். ஆனால், அப்படி எந்த உதவிகளும் வரவில்லை" எனக் குறிப்பிட்டார். "அஜித்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது. அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் சாவியைக் கொடுத்ததாகக் கூறினான்." என்று அவரது நண்பரும் அவருடன் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிபவருமான வினோத் கூறினார். காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படும் 5 பேரில் வினோத்தும் ஒருவர். அவர் குறிப்பிடும் இரு ஆட்டோ டிரைவர்களும் காவல்துறை அழைத்துச் சென்ற 5 பேரில் அடங்குவர் என்று வினோத் கூறினார். படக்குறிப்பு, வினோத் காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் அங்கிருந்து திருப்புவனம் காவல் நிலையத்துக்கு பிபிசி தமிழ் சென்றபோது, குடும்பம் சகிதமாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அவர்கள், "நன்றாக வேலை பார்த்ததாக உயர் அதிகாரிகள் நற்சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதை வைத்து எங்கள் குழந்தைகளை வளர்க்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினர். "இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பங்களுக்கும் நியாயம் வேண்டும்" என்று குறிப்பிட்ட அவர்கள், " உயர் அதிகாரிகள் கூறும் போது கீழே உள்ளவர்கள் அதைக் கேட்டு செயல்படத்தான் செய்வார்கள். அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை" எனக் கூறினர். ஆனால், உரிய அனுமதியின்றி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர். படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் "மூன்று மாதங்களாக சம்பளம் வரவில்லை" "பத்தாவது படித்த பிறகு தனியார் கம்பெனியில் என் அண்ணன் வேலை பார்த்து வந்தான். கோவிலில் காவலாளி பணி உள்ளதாகக் கூறியதால் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு தற்காலிகமாக வேலை பார்த்து வந்தான். மூன்று மாதங்களாக அந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார். கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்த பெண்ணின் மேலிட செல்வாக்கு காரணமாகவே தன் அண்ணனை காவல்துறை தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தினார். புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஓர் உயிர் போனதில் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினால் அழைத்து விசாரிப்பார்கள் என்று தான் தெரியும். காவலாளி இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது" எனக் கூறுகிறார். தானும் 76 வயதான தாய் மட்டுமே வசித்து வருவதாகக் கூறும் அவர், "எனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறுவது தவறானது. ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக சார்பாய்வாளரிடம் புகார் கொடுத்தேன். மதியம் 2.30 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு தான் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தோம்" என்கிறார். "நகையை பின்சீட்டில் வைத்திருந்ததாகக் கூறுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?" என்று கேட்டபோது, "என் தாயார் வயதானவர் என்பதால் யாரும் பறித்துவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக காரின் பின்சீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். வேண்டும் என்றே செய்யவில்லை" எனக் கூறுகிறார். "என் நகையை இறந்து போன காவலாளி எடுத்திருப்பாரா என உறுதியாக தெரியாது. என்னிடம் சாவி வாங்கிச் சென்றது அவர் தான். அதைத் தான் கூறினேன். எங்களுக்குக் கடவுளைத் தவிர வேறு யாரையும் தெரியாது" என்கிறார் நிகிதா. படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடந்த காட்சி (இடது), காவலாளி அஜித்குமார் (வலது) "எந்த அதிகாரமும் இல்லை" - ஆஷிஷ் ராவத் காவல்துறை மீதான விமர்சனங்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத்திடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் நேரில் சென்றது. "புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டதால், தற்போது தனக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று மட்டும் அவரது தரப்பு பதிலாக பிபிசி தமிழுக்கு சொல்லப்பட்டது. அஜித்குமார் மரண வழக்கு உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது பெரும் திருப்பமாக அமைந்தது. 5 காவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgk3ryvpekzo
-
பேடோங்டார்ன் ஷினாவத்ரா தாய்லாந்து பிரதமராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை
01 JUL, 2025 | 12:34 PM தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது. கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218921
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கு காசாவின் பிரபலமான சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 30க்கும் அதிகமானவர்கள் பலி 01 JUL, 2025 | 11:51 AM மேற்குகாசாவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளுர் மக்கள் அடிக்கடி செல்லும் பிரபல கடற்கரை சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடற்கரையோரத்தில் கூடாரங்களை கொண்ட அல்பக்சா சிற்றூண்டிச்சாலையில் இருந்து மீட்புக்குழுவினர் 20க்கும் அதிகமான உடல்களை மீட்டுள்ளதுடன் காயமடைந்த பலரை மருத்துவமனைகளிற்கு கொண்டு சென்றுள்ளனர் என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். குண்டுதாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாரிய குழிக்குள் மீட்பு குழுவினர் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார். நான் இணையத்தை பயன்படுத்துவதற்காக அங்கு சென்றுகொண்டிருந்தேன் நான் சில மீற்றர் தொலைவில் இருந்தவேளை பாரிய சத்தம் கேட்டது என உள்ளுர் ஊடகநிறுவனத்தின் கமரா பணியாளர் தெரிவித்துள்ளார். நான் உடனடியாக அங்கு ஓடினேன் எனது சகாக்களும் அங்கு இருந்தனர்- நான் நாளாந்தம் சந்திப்பவர்கள் - அங்கு நான் கண்ட காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக காணப்பட்டன- எங்கும் உடல்கள்இ குருதி . அலறல்கள் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் போர்விமானத்திலிருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/218910
-
முகமது நபியை சித்தரிக்கும் கருத்தோவியத்திற்கு துருக்கியில் கடும் எதிர்ப்பு - நான்கு கருத்தோவியர்கள் கைது
01 JUL, 2025 | 12:53 PM முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர். அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது. வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷமெழுப்பினர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் சஞ்சிகையின் நடவடிக்கை குறித்து துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்த கருத்தோவியம் ஒரு தூண்டும் நடவடிக்கை என தெரிவித்துள்ள துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் அலி யெர்லிகயா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்னால் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். கேலிச்சித்திரம் கருத்து சுதந்திரத்தினால் அல்லது பேச்சு சுதந்திரத்தினால் பாதுகாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218918
-
இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற் தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் - ஐங்கரநேசன்
Published By: VISHNU 01 JUL, 2025 | 08:08 PM பாரம்பரிய வாழ்விடத்தையும் தனித்துவமான, மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் கூட்டத்தைத் தேசிய இனங்கள் என்று அரசியல் அறிஞர்கள் வரையறை செய்துள்ளார்கள். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் எதுவுமில்லை. ஆனால், எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் தேசிய இனங்கள் தங்களை உயர்வாகக் கருதிச் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கியொடுக்கி வருகின்றன. இவ்வொடுக்குமுறைக்கு எதிராகச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கிளர்ந்தெழுகின்றன. இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற்தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (29) நடைபெற்ற பசுமை அமைதி விருதுகள் விழாவுக்குத் தலைமை உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், காலத்துக்குக்காலம் மானுடத்தை வழிநடத்துவதற்கென்று சிந்தனையாளர்களால் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டு வந்துள்ளன. சோசலிசக் கோட்பாடு பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் இனங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக உருவானது. ஆனால், சோசலிச நாடுகள் பிற்காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் அடிபணிந்தபோது அங்கு இனங்களுக்கிடையில் மோதல்கள் தலை தூக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்டதும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த உக்ரைன் மீது சோவியத் ரஸ்யா இப்போது படையெடுப்பதும் சோசலிசச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்த குறைபாடுகளால் ஏற்பட்ட விளைவுகள்தான். போர்களில் ஏற்படும் உயிரிழப்புகளைவிட சுற்றுச்சூழல் சீர்குலைவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. வளங்களின் அளவுக்கு மிஞ்சிய நுகர்வால் வளப்பற்றாக்குறைவு ஏற்பட்டு, எஞ்சியுள்ள வளங்களைப் பங்கிடுவதில் முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துள்ளன. பூமியின் வெப்ப உயர்வு காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து தீவு நாடுகளில் கரையோரப்பகுதிகளை மெல்ல மெல்லக் காவுகொண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகத் காலந்தப்பிய அடை மழை, கடும் வரட்சி, காட்டுத் தீ, உயிரினங்களின் அழிவு, இதுவரை காணாத புதுப்புது நோய்கள் என்று பல்வேறு சூழற் பிரச்சினைகள் தினந்தினம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள அரசியற் கொள்கைகள், கோட்பாடுகளினால் சூழற் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க இயலாததாலேயே சூழலியம் என்ற புதிய கோட்பாடு முகிழ்த்து வருகிறது. ஒவ்வொரு தேசிய இனமும் தன்னை முதன்மைப்படுத்தும் மனிதமையச் சிந்தனையைத் தவிர்த்து சூழல்நேயச் சிந்தனைக்கு முதலிடம் கொடுத்தால் மட்டுமே அது வாழுகின்ற சூழலைப் பாதுகாக்க முடியும். இதன் மூலமே ஒட்டுமொத்தப் பூமியும் பாதுகாக்கப்படும். ஆபத்தின் விழிம்பில் நிற்கும் உலகை காப்பாற்றுவதற்குச் சூழலியற்தேசியம் என்ற கோட்பாட்டை உலகை வழிநடத்துகின்ற கோட்பாடாக நாம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே எம்மையும் ஏனைய உயிரினங்களையும் பேரழிவுகளிலிருந்து காப்பாற்ற இயலும் என்றார். https://www.virakesari.lk/article/218970
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
முதலமைச்சர் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலமாக உரையாடல்
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க 01 JUL, 2025 | 04:25 PM (எம்.மனோசித்ரா) வாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (1) கொழும்பிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடங்களுக்குச் சென்று பேருந்து சாரதிகள் ஆசனப்பட்டியை அணிந்திருக்கின்றனரா என்று அமைச்சர் கண்காணிப்பில் ஈடுபட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2011ஆம் ஆண்டு இலகு மற்றும் கனரக வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து மற்றும் லொறி சாரதிகளுக்கு இது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே, கடந்த 3 மாதங்களாக இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, இந்த நடவடிக்கை தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாத்திரமின்றி, பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது. வீதி விபத்துக்களின்போது அதிக மரணங்கள் பதிவாகுவதற்கும் இது ஒரு பிரதான காரணியாக உள்ளது. ஆசனப்பட்டிகளை அணிவதால் பெருமளவான விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இலகுரக வாகனங்களிலும் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிந்தால் விபத்துக்கள் இடம்பெற்றாலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த முடியும். ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அவதானத்துடன் பயணித்து, விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். எனவே, ஆசனப்பட்டி அணிதல் தொடர்பில் இனி தீவிர கண்காணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சில இடங்களில் ஆசனப்பட்டிகள் மறைக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/218941
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் 01 JUL, 2025 | 05:51 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (30) மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் நேற்றிரவு எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று (1) பகல் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏழு மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/218967
-
மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியத்தாருங்கள் : அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மக்களிடம் வேண்டுகோள்
01 JUL, 2025 | 01:03 PM ( அபிலாஷனி லெட்சுமன் ) கடந்த காலங்களில் மொழியினால் மிக மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். அவ்வாறான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம். துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க தெரிவித்தார். அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மேலும் தெரிவிக்கையில், மொழி உரிமை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடிய அதிகாரத்தை அரச ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது ஆணைக்குழு நான்கு முறைகளில் செயற்பட்டுவருகின்றது. அரச கருமமொழிகள் கொள்கைகளை நடைமுறைபடுத்துவற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். மொழி தொடர்பான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம்.துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். குறிப்பாக கடந்த காலங்களில் மொழியினால் எத்தகைய மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இலங்கையை போன்ற பல்லின , பல்மத மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட அழகிய தேசம் வேறு எங்கும் கிடையாது. நாம் தமிழர், சிங்களவர் , இஸ்லாமியர் என்ற கொள்கையினை விடுத்து “நாம் இலங்கையர்” என்ற என்ற ஒருமைப்பாட்டுக் கொள்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் இன்றைய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஒருமைப்பாட்டு நோக்கமே எங்களது வலிமையான குறிக்கோளாகும். பாடசாலைகள் மட்டுமின்றி, சமுக வளர்ச்சிக்கான அடிப்படையாக மும்மொழித் தேர்ச்சி கட்டாயமாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு குழந்தையை சமூகமயமாக்கும் கட்டத்தில், அதற்குத் தேவையான மொழித் திறன்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்றையும் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். மாற்றம் ஆரம்ப நிலையிலிருந்தே நடைமுறைக்கு வந்தால், அரச கரும மொழி கொள்கையின் ஊடாக நல்லிணக்கம் உள்ள நாடாக காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218924
-
இலங்கையின் மின்சார உற்பத்தியில் புதிய மைல்கல்
01 JUL, 2025 | 03:05 PM 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 70 சதவீத மின்சார உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகூடிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் அதிகளவில் மின்சார பயன்பாடு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்த மின்சார உற்பத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இலங்கையில் 100 சதவீதம் நீர்மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து அதிகளவான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டமை இலங்கை மின்சார சபையின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது. https://www.virakesari.lk/article/218931
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ வைரல்! 01 JUL, 2025 | 02:37 PM தமிழ்நாட்டில்போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/218933
-
யு.எஸ்.எயிட். நிறுவனத்தின் இறுதி நாள் நேற்று : டிரம்பின் நடவடிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதிகள் கடும் விமர்சனம்
01 JUL, 2025 | 12:56 PM யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார். யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த அமைப்பின் இறுதிநாளான நேற்று அதன் பணியாளர்கள் உணர்ச்சிகரமான பிரியாவிடை வீடியோவொன்றை வெளியிட்டனர். அதன் பின்னர் வீடியோ கொன்பரன்ஸ் முறை மூலம் இரு முன்னாள் ஜனாதிபதிகளும் யுஎஸ்எயிட் சமூகத்தினருடன் உரையாடினர். உங்கள் பணி மிகவும் முக்கியமானது எதிர்கால தலைமுறைக்கும் அது மிகவும் முக்கியமானதாக விளங்கும் என பராக் ஒபாமா யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு தெரிவித்தார். யுஎஸ்எயிட்டினை செயல் இழக்கச்செய்வது ஒரு கேலிக்கூத்து அது ஒரு சோகம் ஏனென்றால் இது உலகில் இடம்பெறும் மிகவும் முக்கியமான பணிகளில் ஒன்றாகும் என பராக் ஒபாமா தெரிவித்தார். யுஎஸ்எயிட் உயிர்களை பாதுகாப்பதுடன் மாத்திரமல்லாமல் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காரணியாக உள்ளது என அவர் தெரிவித்தார். யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் உதவி பெறும் நாடுகள் சிலவற்றை அமெரிக்காவின் பங்காளிகளாக சந்தையாக மாற்றியுள்ளது என பராக் ஒபாமா தெரிவித்தார். உங்களின் தேவையை விரைவில் இரு தரப்பும் உணரும் என யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு ஒபாமா தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜோர்ஜ் டபில்யூ புஷ் யுஎஸ்எயிட் மூலம் தனது நிர்வாகம் முன்னெடுத்த எயிட்ஸிற்கு எதிரான திட்டங்களை நினைவுபடுத்தியதுடன் 25 மில்லியன் பேர் சர்வதேச அளவில் காப்பாற்றப்பட்டனர் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218908
-
தந்தை-மகன் கொலை: காவல் நிலைய சித்ரவதைக்கு பிறகு சிறையில் 3 நாட்களை கழித்தது எப்படி?
சாத்தான்குளம் மரணத்தில் நீதி கிடைத்துவிட்டதா? - திருப்புவனத்தில் மீண்டும் ஒரு லாக் அப் மரணம் நிகழ்ந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் "ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை வேதனையைத் தரும்." இவை பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸின் வார்த்தைகள். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து ஐந்தாண்டுகளாகி விட்டன. ஆனாலும், ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்த இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை, அவர்களது குடும்பத்தினர் நீதிக்காக காத்துக் கிடக்கின்றனர். இதனிடையே தான், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "காவல்நிலைய மரணங்களில் விரைந்து நீதி கிடைத்தால் தானே, இனி இப்படி செய்யக் கூடாது என்ற பயம் காவல் துறையினருக்கு இருக்கும்." என்கிறார் பெர்சிஸ். ஜெயராஜ் - பென்னிக்ஸுக்கு என்ன நடந்தது? சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர், சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர். 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்ஸுக்கும் இடையே சிறு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, முதலில் ஜெயராஜை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், பின்னாலேயே பென்னிக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ பின்னர் வெளியானது. இதையடுத்து, அன்றைய தினம் பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். பின்னர், காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ் -பென்னிக்ஸை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜூன் 20 அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வெண்ணிலா, இருவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக சான்று அளித்ததைத் தொடர்ந்து, இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து, இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதன்பின், அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு, ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் 23ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, அப்போதைய அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,TNPOLICE படக்குறிப்பு,இடமிருந்து வலமாக ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் "அப்பா (ஜெயராஜ்) மீதும், பென்னிக்ஸ் மீதும் எந்த குற்ற வழக்கும் இதற்கு முன்பு இருந்ததில்லை. கடைக்கு வந்து அப்பாவை ஏன் காவல்துறை அழைத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை, அப்பாவை அடித்துக் கீழே தள்ளியுள்ளனர். இதை பென்னிக்ஸ் கேள்வி கேட்டதற்கு, "போலீஸையே எதிர்த்துப் பேசுகிறாயா?" என கேட்டுதான் போலீஸார் தாக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க போலீஸின் 'ஈகோ'வால் நிகழ்ந்தது" என்கிறார், பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸ். ஜெயராஜ் - பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது. பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆரம்பத்தில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்ததாக, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. இதனிடையே, சம்பவம் நடந்து சில தினங்களிலேயே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. காவலர் ரேவதியின் சாட்சியம் இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின்படி, "காவலர் முத்துராஜா, என் அப்பாவின் தொடை மீது ஏறி நின்றுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார் பெர்சிஸ். மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்ளார். இவர் தவிர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பால்துரை தாமதம் ஏன்? "பொதுமக்கள், இயக்கங்கள் என பலதரப்பினரும் இதற்கு எதிராக போராடியும் இன்னும் வழக்கில் விசாரணையே நிறைவு பெறவில்லை. இத்தனை ஆண்டுகளாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்த வழக்குக்கு நீதிபதியே இல்லாமல் இருந்தது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நீதிபதி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டார். பொறுப்பு நீதிபதி இருக்கும்போது வாரத்தில் ஒருமுறைதான் வழக்கை விசாரிக்க முடியும்." என்கிறார் பெர்சிஸ். சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி மாற்றப்பட்டது குறித்த சர்ச்சைகள் முன்பு எழுந்துள்ளன. இந்த வழக்கை விசாரித்து வந்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 2022, ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது சர்ச்சையானது. அந்த சமயத்தில் பிபிசி தமிழிடம் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை." என தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுபோன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை முடிவடையும் வரை நீதிபதிகளை மாற்றாமல் இருக்க வேண்டிய தேவை உள்ளது குறித்தும் அவ்வப்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு தாமதமானதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. "குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் தனித்தனி வழக்கறிஞர்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு வழக்கறிஞரும் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்கின்றனர், அதனாலும் மிகுந்த காலதாமதம் ஆகிறது." என கூறுகிறார் பெர்சிஸ். மீளா துயரத்தில் குடும்பத்தினர் நேரடி சாட்சியங்கள், காவல் நிலையத்துக்கு வெளியே இருந்தவர்களின் சாட்சியங்கள், மருத்துவமனை காணொளிகள், ஆடைகளில் ரத்தக் கறை உள்ளிட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளதாக குறிப்பிடுகிறார் பெர்சிஸ் . "மருத்துவமனை வாயிலில் இருவருடைய உடைகளிலும் ரத்தம் கசிந்திருந்ததை சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் காட்டுகின்றன." "இருவருடைய மரணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் எந்த நல்ல காரியங்களுக்கும் மகிழ்ச்சியாக செல்ல முடியவில்லை, எங்கள் குடும்பத்தினர் அழாமல் உறங்கிய நாட்களே இல்லை. அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறோம். நீதி வேண்டி ஐந்தாண்டு கால அலைச்சலும் இதனுடன் சேர்ந்திருக்கிறது." என வேதனைப்படுகிறார் பெர்சிஸ். பென்னிக்ஸுக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பென்னிக்ஸின் நண்பரும் வழக்கறிஞருமான ராஜாராம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் இரவில் இருந்தபோது வெளியே தான் இருந்துள்ளார். இருவருடைய அலறல் சத்தமும் தனக்கு கேட்டதாக நினைவுகூர்கிறார் ராஜாராம். "அப்பாவை (ஜெயராஜ்) காவல்துறையினர் அழைத்துச் சென்றதால் தான் பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்றார். இருவருடைய அலறல் சத்தமும் கேட்டது. என் சாட்சியத்தை நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறேன். மருத்துவமனை வாயிலில் பென்னிக்ஸை சந்தித்தபோது, 'என்னை விரைவில் வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்' என தெரிவித்தார்" என கூறுகிறார் ராஜாராம். ஜாமீன் கேட்டு இழுத்தடிப்பு ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பாக இந்த வழக்கில் வாதாடிவரும் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸிடம் பேசினோம். "இந்த வழக்கில் இதுவரை ஐந்து நீதிபதிகள் மாறியுள்ளனர், இது எதேச்சையாக நடக்கிறதா, அரசியல் அழுத்தமா என்பது தெரியவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்றே குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு நினைக்கிறது. குறிப்பாக, ஏ1 ஸ்ரீதர் ஆரம்பத்தில் நானே எனக்காக வாதாடுகிறேன் என்றார். பின்னர், சட்ட உதவி மையத்திலிருந்து அவருக்கு வழக்கறிஞரை அமர்த்தினர். ஆனால், மீண்டும் எனக்கு நானே தான் வாதாடுவேன் என கூறினார் ஸ்ரீதர். அதன்பின், இன்னொரு வழக்கறிஞரை வைத்து நடத்த அனுமதியுங்கள் என மனு போட்டார், திரும்பவும் நானே வாதாடுகிறேன் என கூறுகிறார். வேண்டுமென்றே கேட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டு விசாரணையை இழுத்தடிக்கிறார்." என காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கினார் அவர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக ஜாமீன் கேட்டு மனு போடுவதன் மூலமும் வழக்கை இழுத்தடிப்பதாகக் கூறுகிறார் அவர். தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த வழக்குக்கு என ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் விசாரித்திருந்தால் வழக்கு முடிவுக்கு வந்திருக்கும் என்கிறார் அவர். "ஆனால், சிபிஐ நடத்தும் வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது, விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் என, அரசு அறிக்கை வேண்டுமானால் வெளியிடலாம். அரசு இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். படக்குறிப்பு, ஜெயராஜின் மனைவி செல்வராணி இன்னும் அந்த கொடூர சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை சிபிஐ தங்களால் முடிந்தளவுக்கு சாட்சிகளை விசாரித்திருக்கிறது எனக்கூறிய வழக்கறிஞர் ராஜீவ், மருத்துவமனைக்கு அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட அழைத்துச் சென்ற காட்சிகள், அவர்கள் அமரவைக்கப்பட்ட இருக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். "காவல்நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் அவர்களுடையதுதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார். இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம், "விரைவான விசாரணை நடந்தால்தான் நீதி கிடைக்கும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 50 முறைக்கு மேல் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். இத்தனை பேரின் கடும் உழைப்புக்கு மத்தியிலும் இவ்வழக்கில் இன்னும் நீதி கிடைக்காதது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பெரியளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய சாட்சியான ரேவதி மன அழுத்தத்தில் உள்ளார், அவரால் இன்னும் சுதந்திரமாக வெளியே செல்லக்கூட முடியவில்லை." என்றார். இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்துக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் வழக்கு விசாரணை முடிவடையவில்லை. "உயர் நீதிமன்றம் தலையீடு செய்யும் வழக்கிலேயே இந்த நிலை என்றால், மற்ற வழக்குகளின் நிலை என்ன" என கேள்வி எழுப்புகிறார் ஆசீர்வாதம். "மாநில அரசின் வழக்கறிஞர் விரைவான நீதி வேண்டி தலையீடு செய்யலாம். தங்கள் அரசுக்கு அழுத்தம் இருக்கிறது என்றவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. காவல்துறை தவறு செய்தால் அதை மறைக்க வேண்டும் என்பதே எந்த அரசாக இருந்தாலும் நினைக்கின்றன." என்றார். போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம் 'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? சென்னை: சாவின் விளிம்பில் இருந்த பெண்ணை சாதுர்யமான பேச்சால் காப்பாற்றிய பெண் எஸ்.ஐ. கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது - என்ன நடந்தது? தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக, காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் உள்ளது. "காவல் நிலைய மரணங்களை இந்த அரசு மூடி மறைக்கவில்லை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. அதைத் தடுக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறது. எல்லா சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன். இவை அனைத்துக்கும் மத்தியில், விரைந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgjgg670jv0o
-
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
Published By: VISHNU 01 JUL, 2025 | 08:18 PM செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால், அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/218971
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது 01 JUL, 2025 | 03:57 PM எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் 7 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று (30) இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் ஏழு பேரும் இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரகள் என தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/218938
-
கனடா தின வாழ்த்துச் செய்தி - உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ்
இலங்கையில் கனடாவின் இருப்பு எமது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் அடித்தளமாக காணப்படுகின்றது : கனடா தின வாழ்த்துச் செய்தியில் உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் 01 JUL, 2025 | 10:45 AM இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம் என இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், கனடா தினத்தை முன்னிட்டு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உலகம் முழுவதும் உள்ள கனேடியர்கள் ஒருமித்தாகக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நாளில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் வாழும் அனைத்து கனேடிய பிரஜைகள் மற்றும் இந்த தினத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் கனடா தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார். கனடா தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துக் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கனடா தினம் என்பது நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் முக்கியமான மதிப்புகளை பன்முகத்தன்மை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, மனித உரிமைகளுக்கான மரியாதை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்முடைய நீடித்த அர்ப்பணிப்பு பிரதிபலிக்கக் கூடிய சிறப்பான ஒரு வாய்ப்பாகும். இந்த தினம், நமது நாடு இன்று இருக்கும் நிலையில் அடித்தளமிட்டு, அதன் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய முன்னோடி தலைமுறைகளின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் தருணமாகவும், கூட்டமைப்பிற்கு முந்தையதும் பிந்தையதுமான வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்வதற்கான வலிமையையும், ஞாபகப் பாக்கியத்தையும் கௌரவிக்கும் ஒரு சிறப்புநாளாகவும் அமைகிறது. கனடாவின் துடிப்பான உருவாக்கத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். கல்விக் கூட்டாண்மைகள், அபிவிருத்தி ஒத்துழைப்புகள், பாலியல் சமத்துவம் மற்றும் சமநிலை மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த உலகத்தை நோக்கிய பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் ஊடாக, கனடாவும் இலங்கையும், மாலைத்தீவுகளும் வலுவான உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலிருந்து காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவருவதும், அதே சமயம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை தொடர்ந்து செழித்து வளரும் எங்கள் கூட்டுறவுகள் குறித்து நான் பெருமை அடைகிறேன். இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் இந்தோ - பசிபிக் வர்த்தக பிரதிநிதி இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் விஜயம் செய்தமையில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விஜயம், கனடாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிலும் குறிப்பாக இலங்கையில் வேரூன்றியவர்களின் இந்த நாட்டில் முதலீடு செய்யவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் காணப்படும் ஆழமான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டில் கனடாவின் இந்தோ - பசிபிக் மூலோபாயம் (Indo-Pacific Strategy) ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இந்த பிராந்தியத்தின் மக்களுடனான எங்களது உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பை ஆதரிப்பதில் எங்கள் பங்களிப்பை ஆழப்படுத்தவும், கனடா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடா தினத்தைக் கொண்டாடும் அனைவரும் நீங்கள் எங்கு இருந்தாலும் இது, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எட்டிய சாதனைகள் குறித்து சிந்திக்கவும், எதிர்காலத்தில் எதைச் சாதிக்க வேண்டும் என்பதை நினைவு கூரவும் உதவும் ஒரு அரிய தருணமாக அமைய வேண்டும் என கனேடிய உயர் ஸ்தானிகர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218900
-
வர்த்தகம், முதலீடுகளை விரிவுபடுத்துவது குறித்து இந்திய தொழில்துறை சம்மேளன அதிகாரிகள் குழுவுக்கும் பிரதமர் ஹரிணிக்கும் இடையில் சந்திப்பு
01 JUL, 2025 | 09:51 AM இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தூதுக்குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையேயான விசேட சந்திப்பு ஜூன் 30ஆம் திகதி இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, குறிப்பாக பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கும் அதன் வளர்ச்சிக்காகவும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் தனது பாராட்டினைத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் மூலம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகள் மேலும் பலப்பட்டுள்ளதாக இந்திய தூதுக்குழு இங்கு மேலும் உறுதிப்படுத்தியது. தொழில்நுட்பம், உற்பத்தி, கல்வி, புத்தாக்கம், தொழில்முனைவு, விவசாயம், வலுசக்தி மற்றும் சுற்றுலா துறை போன்ற முக்கிய பிரிவுகள் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் இந்திய உயர்மட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளும், இலங்கை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளியுறவு அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிலூக்க கதுருகமுவ மற்றும் அதே அமைச்சின் தெற்காசிய பிரிவின் துணை பிரதி பணிப்பாளர் பிரசாந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218895
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள்! 01 JUL, 2025 | 09:48 AM செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் ஏற்கனவே 22 எலும்புக் கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்புக் கூடுகளில் நேற்றைய தினம் வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், புதிதாக எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/218897
-
யாழ். அராலியில் குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு
குறி சொல்லும் கோவிலில் பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு; வெளியாகிய காரணம்! Published By: VISHNU 01 JUL, 2025 | 04:35 AM குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. மரண விசாரணைகளின்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் நாய்கடிக்கு இலக்காகியுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தவகையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த நாய் மேலும் சிலருக்கு கடித்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/218891
-
கச்சத்தீவை மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க எவராலும் முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
Published By: VISHNU 01 JUL, 2025 | 04:28 AM "சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது" - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "எமது வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய ரோலர் படகுகள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இதனால் கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சனத்தொகையில் 30 சதவீதமானோர் கடற்றொழிலையே நம்பி உள்ளனர். எனவே, இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். தமிழ் நாட்டில் தேர்தலொன்று நெருங்கும்வேளை கச்சத்தீவு விவகாரம் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும், அதனை மீளப்பெறுவோம் என்றெல்லாம் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வாக்கு வேட்டை நடத்தப்படும். இது எந்நாளும் கூறப்படும் கதையாகும். எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு கருத்தை வெளியிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் ரோலர் படகுகள்மூலம் மீன்வளத்தை மட்டுமல்ல எமது கடல்வளத்தையும் நாசமாக்குகின்றனர். இந்நிலைமை தொடர்ந்தால் இன்னும் 15 - 20 வருடங்களில் எமது கடல்வளம் பாலைவனமாகிவிடும். அதேவேளை, இராஜதந்திர ரீதியில் - சட்டப்பூர்வமாக - சர்வதேச சட்டத்தின் பிரகாரமே இலங்கைக்கு கச்சத்தீவு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அதனை எவராலும் மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது."- என்றார். https://www.virakesari.lk/article/218890