Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கிறார் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 05:33 PM (நா.தனுஜா) முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் வெள்ளிக்கிழமை (17) முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றது. அந்தவகையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு நாளைய தினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், முதன்முறையாக தெற்காசியப் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், வியாழக்கிழமை (16) நாட்டை வந்தடைந்துள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை (17) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், அங்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இன்று மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களினதும் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்பர் என அறியமுடிகிறது. இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், போரில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்குத் தடைவிதிக்கப்படல், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளடங்கலாக வட, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அக்னெஸ் கலமார்ட்டிடம் எடுத்துரைக்கவிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சனிக்கிழமை (18) நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், போரில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் மக்களுடன் இணைந்து தனது உடனிற்பை வெளிப்படுத்தவுள்ளார். https://www.virakesari.lk/article/183709
  2. படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல் எழுதியவர், க.மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 16 மே 2024 சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும். கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காணப்படுவது ஏன்? 'வீர நாராயணப் பேரேரி' இந்த ஏரியின் வரலாற்றையும் அது தற்போது வறண்டு காணப்படுவதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள, கடந்த வாரம் ஒரு காலைப் பொழுதில், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இருந்து வீராணம் ஏரிக்கரையைச் சென்றடைந்தோம். அங்கு கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவரும் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறையின் வருகைதரு பேராசிரியருமான இரா.கோமகன் பிபிசி தமிழுடன் இணைந்து கொண்டார். வீராணம் ஏரியை நோக்கித் தொடங்கிய பயணத்தின் நடுவே அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளை நம்மிடம் அவர் விவரிக்கத் தொடங்கினார். "முதலாம் பராந்தக சோழன் காலத்தில் – அதாவது கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் - இந்த ஏரி அமைக்கப்படதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன." "சிதம்பரம் அருகே திருச்சின்னபுரம் என்ற ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் ரிஷப மண்டபக் கூரையில் உள்ள கல்வெட்டில் இந்த ஏரி பராந்தக ஏரி எனக் குறிப்பிட்டுள்ளது," என்கிறார் கோமகன். வீராணம் ஏரிக்கு, வீரநாராயணப் பேரேரி (பராந்தக சோழனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு) என்று குறிப்பிடும் செய்தி ஆவணம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள சு.ஆடுதுறை என்று அழைக்கப்படும் திருகுரங்காடுதுறை என்னும் ஊரில் உள்ளது. "இதற்கு ராஜேந்திர சோழப் பேராறு என்ற பெயரும் உள்ளதை கீழப்பழூர் ஆலந்துரையார் கோவில் இரண்டாம் பிரகாரம் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மூலம் அறியலாம். இது கி‌.பி.1124ஆம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டாகும். கங்கைகொண்ட சோழபுரத்திலும் இந்த ஏரி தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன," என்று கோமகன் பிபிசி தமிழிடம் விளக்கினார். சோழ இளவரசன் ராஜாதித்தன் அமைத்த ஏரி படக்குறிப்பு,வீராணம் ஏரியில் தண்ணீர் நிறைந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் (10 மாதங்களுக்கு முன்பு) ஏரியின் பெயர் குறித்த வரலாற்றை விவரித்த பிறகு, பேராசிரியர் கோமகன் வீராணம் ஏரி வெட்டப்பட்ட வரலாற்றை விவரித்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவில் வரை நீண்டு காணப்படும் வீராணம் ஏரி, "முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்தன், தக்கோலப் போருக்குச் செல்லும் வழியில் வட காவிரி என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் தந்தை முதலாம் பராந்தக சோழனின் ஆணைக்கிணங்க இந்த ஏரியை அமைப்பதற்கு முடிவு செய்தார்." பேராசிரியர் கோமகனின் கூற்றுப்படி, ராஷ்டிரகூடர்களின் தாக்குதல்களில் இருந்து நாட்டைக் காக்கவே, தந்தை பராந்தக சோழனால் இந்தப் பகுதிக்கு இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தக்கோலப் போரில் மரணம் படக்குறிப்பு,வீரநாராயணன் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் பேராசிரியர் கோமகன். வரலாற்றை மேற்கொண்டு விவரித்த கோமகன், "ராஷ்டிரகூடர்கள் மீது போர் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அப்போது வீரர்களின் உடல் உழைப்பை மக்களின் பயன்பாட்டிற்குச் செலவிடத் திட்டமிட்ட ராஜாதித்தன், ஏரி ஒன்றை அமைக்க வீரர்களுக்கு உத்தரவிட்டார்." "இதற்கிடையே தக்கோலப் போரும் தொடங்கியது. ஏரி அமைக்கப் பாதி வீரர்களை விட்டுவிட்டு மீதிப் படையுடன் போருக்குச் சென்ற ராஜாதித்தன் போரில் கொல்லப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன." யானை மீது அமர்ந்து போரிட்டு மடிந்த ராஜாதித்தன் 'யானை மேல் துஞ்சியத் தேவன்' என் அழைக்கப்படுவதாகவும் பின்னாளில் அவரது விருப்பப்படி தந்தை முதலாம் பராந்தக சோழனின் மற்றொரு பெயரான வீரநாராயணன் என்பது ஏரிக்கு சூட்டப்பட்டதாகவும்," என்று விவரித்தார் கோமகன். இந்தப் பெயர்தான் காலப்போக்கில் வீராணம் ஏரி என மருவியதாகவும் கூறுகிறார் பேராசிரியர் கோமகன். வறண்டு காணப்படும் ஏரி படக்குறிப்பு,"முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் வீராணம் ஏரி வெட்டப்பட்டதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன," என்கிறார் பேராசிரியர் இரா.கோமகன். வரலாற்றை விவரித்தபடியே சென்ற பயணத்தின் இறுதியில், வீராணம் ஏரி இருக்கும் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு கண்ட காட்சிகள், வீராணம் ஏரியின் இன்றைய நிலையை விளக்கின. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் ஏரியின் இருகரைகளும் வறண்டு காணப்பட்டன. ஏரியின் மண் பாளம் பாளமாக வெடித்திருந்தது. ஏரியில் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட படகுகள் ஏரியின் தரையில் கிடந்தன. தண்ணீரின்றி இறந்த சில மீன்களின் மிச்சங்களையும் அங்கு பார்க்க முடிந்தது. `ராதா வாய்க்கால்` ரங்கநாயகி என்று அழைக்கப்படும் சமூக ஆர்வலரும், ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான ரங்கநாயகி பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்துப் பேசினார். “வீராணம் ஏரி மழைக்காலத்திற்கு முன்பாக முறையாகத் தூர்வாரப்படவில்லை. அதனால்தான் தற்போது வறண்டுள்ளது. இந்த நேரத்தில் ஏரியை முழுமையாகத் தூர்வார வேண்டும். பாசன வாய்க்கால்களின் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். ஏரியை முழுமையாகத் தூர்வாருவதால் அதிகமாக தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்,” என்றார். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக வீராணம் ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரியிலிருந்து குழாய் மூலமாக சென்னை மாநகராட்சிக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் வீராணம் ஏரியும் ஒன்றாகத் திகழ்கிறது. மாவட்ட நிர்வாகத் தரவுகளின் அடிப்படையில், குடிநீர் தேவை மட்டுமின்றி, இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுமட்டுமின்றி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள 40,669 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்தச் சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் அதிகபட்ச அகலம் 5.6 கி.மீ. இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்கள். இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடி. ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் (1.465 டி.எம்.சி) கன அடி. ஏரியின் கிழக்குக் கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்குக் கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாயப் பாசனத்துக்கு நீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். நீர்வளத்துறையின் தரவுகள்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீராணம் ஏரியில் 712 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வீராணம் ஏரி முற்றிலுமாக வற்றியுள்ளது. 'தூர்வார நடவடிக்கை வேண்டும்' படக்குறிப்பு,ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார் வீரத்தமிழன் ஏரி முழுமையாகத் தூர் வாரப்படாமல் இருப்பதால், அதை நம்பியிருக்கும் பலதரப்பு மக்களும் பாதிப்படுவதாகச் சொல்கின்றனர் பிபிசியிடம் பேசிய விவசாயச் சங்க நிர்வாகிகளான சுரேஷ் மற்றும் மாறன். “நீர்வளத்துறை மூலமாக வீராணம் ஏரியைத் தூர்வாரும் பணி இந்த ஆண்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நடந்தால் தண்ணீரின்றி விவசாயப் பணிகள் பாதிக்கப்படாது,” என்றார் மாறன். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான வீரத்தமிழன், ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார். “விவசாயத்தை விட்டு வேறு தொழில் தேடி விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில், ஏரியைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் அவர். விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் மேலும் தற்போது ஏரி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகக் கூறுகிறார் விவசாயியான வீரத்தமிழன். அதேபோல், மூன்று போகம் செயப்பட்டு வந்த விவசாயம் இரண்டு போகமாகக் குறைந்து, இப்போது ஒரு போகத்திற்கும் வழியில்லாமல் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்ததாகக் கூறும் வீரத்தமிழன், அதனால் தங்களுக்கு அதிக பலன் இல்லையென்றும் கூறினார். அதோடு, தற்போதைய அரசிடமும் மனு அளித்துவிட்டுப் பலன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். ரூ.270 கோடியில் தூர்வாரும் திட்டம் படக்குறிப்பு,'ஏரியைத் தூர் வாருவதற்காக ரூபாய் 270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது' என்றார் காந்தரூபன். கொள்ளிடம் வடிநில கோட்டச் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) முனைவர் காந்தரூபன் பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்து விவரித்தார். "நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வீராணம் ஏரியைத் தூர்வார கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேத்தியாத்தோப்பு கரையிலிருந்து லால்பேட்டை கரை வரை ஒரு பகுதி மட்டும் தூர்வாரப்பட்ட நிலையில், வேறு சில பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன," என்றார். "ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் முடிக்கப்படாததால் ரூ.4 கோடி நிதி மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தூர்வாரும் சூழல் உருவாகவில்லை. தண்ணீர் இருந்ததால் அப்பணியைச் செய்ய இயலவில்லை. தற்போது தூர்வாருவதற்காக ரூ.270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்று கூறினார் காந்தரூபன். "ஒவ்வோர் ஆண்டும் 3% அளவு வண்டல் மண் ஏரியில் படிகிறது. எனவே குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூர்வாரினால் ஏரி நன்றாக இருக்கும். எனவே வண்டல் மண் எடுக்கும் பணிக்காகவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை பட மூலாதாரம்,ARUNTHAMBURAJ படக்குறிப்பு,"அரசு விதி 50இன் கீழ் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என அருண் தம்புராஜ் கூறினார். இந்த ஆண்டு வீராணம் ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது தூர்வாருவதற்கு உகந்த நேரம் என்கிறார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசியுள்ளதாகவும் அவர்களும் முன்மொழிவு தயாரித்து வழங்கியுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "விவசாயிகளின் கோரிக்கையை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." "அரசு விதி 50இன் கீழ் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயனடையும் வகையில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cyrl4rmnpxro
  3. மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்துக்கு அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக மக்களுக்கு பல பொருளாதார சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதனால் சட்டமூத்துக்கு அனைவரும் ஆதரவளித்து மக்களுக்கு பொருளாதார சலுகைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதும் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் பல விடயங்கள் இதன் மூலம் இரத்தாகின்றன. அதேநேரம் மாணவர்களின் நலன் கருதி 2017ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சுரக்ஷா காப்புறுதி 2022 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. என்றாலும் குறித்த சட்டமூலம் ஊடாக மீண்டும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமையை கட்டியெழுப்புவதற்காக இது பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது. இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக 3இலட்சம் ரூபாவரையும் வெளிக்கள சிகிச்சைக்காக 20ஆயிரம் ரூபா வரையும் மோசமான நோய் நிலைமைகளுக்காக 15இலட்சம் ரூபா வரையும் நன்மை கிடைக்கிறது. அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்காக இந்த சுரக்ஷா காப்புறுதி உரித்தாகிறது என்றார். https://thinakkural.lk/article/301844
  4. Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 11:03 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் சென்று சிலிண்டர்களுடன் அட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். காரைக்கால் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/183756
  5. பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாகச் சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே கூறியுள்ளார். இதேவேளை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறான பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/301812
  6. முன்னாள் அரசு ஊழியரும் யூட்யூபருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய நிலையில், அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. சுமார் எட்டு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்ட்டிருக்கும் நிலையில் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  7. குஜராத்தின் சூரத் நகரைச் சேந்த அங்கித் பரன்வால் ஒரு ஃபுட் விலாகர். சூரத் நகரத்தில் இருக்கும் உணவகங்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சென்று தன்னுடைய யூடியூப் சேனல் பார்வையாளர்களுக்காக சிறந்த மற்றும் புதிய உணவு வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுகிறார்.
  8. அமெரிக்காவில் கண்டெய்னர் கப்பல் ஒன்று மோதியதில் ஒரு பாலம் ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்த நிலையில், சுமார் ஏழு வாரங்களுக்கு பிறகு, அந்த கப்பலுடன் சிக்கியிருந்த பாலத்தின் இடிபாடுகள் கடந்த மே 13-ம் தேதி வெடி வைத்து தகர்க்கப்ட்டுள்ளது.
  9. ஐ.பி.எல். ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்ய சன்ரைசர்ஸுக்கு ஒரு புள்ளியே தேவை 16 MAY, 2024 | 06:45 PM (நெவில் அன்தனி) பாரத தேசத்தில் நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதி செய்வதற்கு ஒரே ஒரு புள்ளி தேவைப்படும் பெட் கமின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று இரவு தனது 13ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்தாடவுள்ளது. இன்றைய போட்டி ஒருவேளை மழையினால் கழுவப்பட்டால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு புளளியைப் பெற்று 15 புள்ளிகளுடன் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அல்லது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். எவ்வாறாயினும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு இன்னும் ஒரு போட்டி பஞ்சாப் கிங்ஸுடன் மீதம் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது சொந்த மைதானத்தில் இன்றைய போட்டியை எதிர்கொள்வதால் அவ்வணிக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும் என கருதப்படுகிறது. அதேவேளை, கொல்கத்தாவுடனான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் ப்ளே ஓவ் வாய்ப்பை முதலாவது அணியாக இழந்த குஜராத் டைட்டன்ஸ், தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் விடை பெற எதிர்பார்க்கிறது. இந்த இரண்டு அணிகளும் முதல் சுற்றில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி சந்தித்துக்கொண்ட போது குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் மிகவும் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்றே கூறத் தோன்றுகிறது. ஆனால், இன்றைய போட்டியில் எந்த அணி தவறுகள் இழைக்காமல் மிகவும் திறமையாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். எவ்வாறாயினும் இந்தப் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு தீர்மானம் மிக்க போட்டியாக அமைவதால் அவ்வணி வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்பது உறுதி. https://www.virakesari.lk/article/183728 மழையால மச் நடக்காது போல, அப்ப சன்ரைசர்ஸ் பிளேஓவ் உறுதி!
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தேநீர். இந்தத் தேநீருக்குத்தான் இன்ஸ்டாவில் எத்தனை ரீல்ஸ், எத்தனை பாடல்கள், எத்தனை ரசிகர்கள். உடல் நடுங்கும் குளிரில் தொடங்கி கொளுத்தும் வெயில் வரை தேநீருக்காக ஏங்கும் மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு வழிகாட்டுதல் அறிக்கையில் அடங்கியுள்ளன. ஏனெனில், காலை எழுந்தவுடன் தேநீர், காலை உணவுக்குப் பிறகொரு தேநீர், மதிய உணவுக்குப் பிறகொரு தேநீர், மாலை ஒரு தேநீர், இரவொரு தேநீர், தூக்கம் வரவில்லையெனில் நள்ளிரவில் தேநீர். இப்படியாக தேநீர் என்பது பலருக்கும் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்ட பழக்கம். ஆனால், அது எவ்வளவு ஆரோக்கியமானது? இந்தியர்களுக்கான உணவுமுறை குறித்த வழிகாட்டுதல் அறிக்கை அதை விளக்கமாகப் பட்டியலிட்டுள்ளது. ஐசிஎம்ஆரின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹேமலதா, உறுப்பினர் செயலாளர் டாக்டர் உதய்குமார் மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பாராவ் எம் கவரவரப்பு, டாக்டர் கே.வி,ராதாகிருஷ்ணா, டாக்டர் அகமது இப்ராஹிம் உட்பட 13 விஞ்ஞானிகள் அடங்கிய கமிட்டி இந்த வழிகாட்டுதல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த வழிகாட்டுதல் அறிக்கை, தேநீர், காபி ஆகியவற்றைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் அதீதமாகக் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிவுறுத்துவதாகக் கூறுகிறார் இந்த வழிகாட்டுதல் அறிக்கையை உருவாக்கிய கமிட்டியை சேர்ந்த ஒரு விஞ்ஞானி. தேநீர், காபியை எப்படிப் பருகவேண்டும், அவற்றின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னவென்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானியிடம் பிபிசி தமிழ் பேசியது. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர், காபி குடிக்கக்கூடாது – ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES தேநீர், காபி இரண்டிலுமே டன்னின் (Tannin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. "உணவிலிருந்து இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டங்களை உடல் கிரகித்துக்கொள்ளும் செயல்முறையில் இந்த வேதிப்பொருள் குறிக்கிடும்." ஆகையால், உணவு உண்பதற்கு ஒரு மணிநேரம் முன்னரும் பின்னரும் தேநீர், காபி ஆகியவற்றை அருந்தக்கூடாது என்கிறது ஐசிஎம்ஆரின் இந்திய உணவுமுறை குறித்த வழிகாட்டுதல் அறிக்கை. நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் இரும்பு போன்ற நுண்ணூட்டப் பொருட்களை உடல் கிரகித்துக் கொள்ளும் செயல்முறையில் இந்த டன்னின் என்ற வேதிப்பொருள் இடையூறை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைத் தவிர்க்க நாம் இப்படிப் பின்பற்றுவது சரியாக இருக்கும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய இந்த வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி. மேலும், வெறும் வயிற்றில் இதைப் பருகுவது சரியா என்ற கேள்விக்கு, அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது என்றும் உணவுக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்வதில் மட்டும் கவனம் தேவை என்றும் கூறினார். அவரது கூற்றுப்படி, இத்தகைய பழக்கத்தை நீண்டகாலமாக வாடிக்கையாகக் கொண்டிருக்கும் மக்களிடையே இதனால் அச்சுறுத்தக்கூடிய வகையிலான பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பு வரையிலோ அல்லது உணவுக்குப் பிறகு ஒரு மணிநேரம் வரையிலோ தேநீர், காபி அருந்தும்போது, அந்த உணவில் இருந்து நமக்குக் கிடைக்கும் நுண்ணூட்டங்கள் உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், “நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்ட உடனேயே டீ, காபி குடித்தால், அந்த நுண்ணூட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளை எடுத்துக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், அதன்மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை டீ, காபியில் இருக்கும் டன்னின் என்ற வேதிப்பொருள் உடலுக்குக் கிடைக்காமல் தடுத்துவிடும்.” தேநீரில் பால் சேர்த்துக் குடித்தால் என்ன பிரச்னை? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, கருப்புத் தேநீர், பச்சைத் தேநீர் என எதுவாக இருப்பினும், அதில் கேஃபீன் இருப்பது போலவே தியோப்ரொமைன், தியோஃபில்லின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை உடலின் ரத்தக் குழாய்களைத் தளர்த்துவதோடு, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. அதுமட்டுமின்றி, “தேநீரில் இருக்கக்கூடிய ஃபிளவனாய்டுகள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற பாலிபினால்கள் இதய நோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகவும்" ஐசிஎம்ஆர் அறிக்கை வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு தேநீர் குடிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்யக்கூடாது. அதாவது, தேநீரில் பால் சேர்த்துப் பருகக்கூடாது. அதோடு, தேநீரை மிதமான அளவில் மட்டுமே பருகவேண்டும். அப்படிச் செய்தால், ஐசிஎம்ஆர் அறிக்கைப்படி இந்தப் பலன்களை அவற்றிலிருந்து பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஓர் ஊட்டச்சத்து உணவு எனச் சொல்லப்படும்போது அதை ஏன் தேநீர், காபியில் சேர்த்துக் குடிக்கக்கூடாது என்று ஐசிஎம்ஆரின் இந்த வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானியிடம் கேட்டபோது "பால் நிச்சயமாக நமது உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்" எனக் குறிப்பிட்டார். ஆனால், “அதை தேநீருடன் சேர்த்துக் குடிக்கும்போது, தேநீரின் நன்மைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.” அதாவது, பாலை தனியாகப் பருகுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. இருப்பினும், தேநீருடன் சேர்க்கும்போது, “அதில் அதிகளவில் பால் மட்டுமே இருக்கும். தேநீரின் தனித்துவமான அளவு என்பது குறைந்துவிடும். ஆகையால், அதன்மூலம் கிடைக்கும் பலன்களை முழுதாகப் பெற முடியாது,” என்று விளக்குகிறார். கருப்புத் தேநீர், பச்சைத் தேநீர் என எதுவாக இருப்பினும் பாலின்றிக் குடிப்பதே நல்லது என்று கூறும் அவர், அதற்காக பாலே குடிக்கக்கூடாது என்றில்லை எனவும் கூறுகிறார். “ஒரு நாளைக்கு பால் அல்லது பால் சார்ந்த பொருட்கள் என ஏதாவதொரு வகையில் 300 மி.லி. பால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதை டீ, காபியுடன் சேர்த்துப் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்போதுதான் டீ, காபியின் நன்மைகள் கிடைக்கும்.” ஒரு நாளைக்கு எவ்வளவு தேநீர், காபி குடிக்கலாம்? இந்த உணவுமுறை வழிகாட்டுதலின்படி, ஒருவர் நாளொன்றுக்கு சராசரியாக 300 மில்லிகிராம் அளவுக்கு மேல் கேஃபீன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஐசிஎம்ஆர் கணக்குப்படி பார்த்தால், ஒருவர் குடிக்கும் ஒரு கப்(150மி.லி) தேநீரில் 30-65 மி.கி. கேஃபீன் உள்ளது. அதுவே ஒரு கப் காபியில் 80-120மி.கி. கேஃபீனும் இன்ஸ்டன்ட் காபியில் 50-65மி.கி. கேஃபீனும் உள்ளது. அதாவது, ஃபில்டர் காபி என்றால் தோராயமாக ஒரு தனிநபர் இரண்டு கப் குடிக்கலாம், இன்ஸ்டன்ட் காபி என்றால் மூன்று அல்லது மூன்றரை கப் வரை குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு தனிநபர் அதிகபட்சம் 300 மில்லிகிராம் வரை கேஃபீன் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், “கேஃபீனை மக்கள் காபி, டீ மூலமாக மட்டும்தான் எடுத்துக் கொள்கிறார்கள் என்று இல்லை. குளிர்பானங்களில்கூட கேஃபீன் கலக்கப்பட்ட பொருட்கள் உள்ளன." ஆகையால், "காபி, டீ ஆகிய இரண்டை மட்டுமே வைத்து இதைக் கணக்கிடக்கூடாது. பொதுவாக நாம் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் கேஃபீனின் அளவைக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்க வேண்டும்,” என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி வலியுறுத்துகிறார். அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்ன ஆகும்? பட மூலாதாரம்,GETTY IMAGES அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் இதயத் துடிப்பில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என்றும் ஐசிஎம்ஆர் அறிக்கை எச்சரித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, அதிக அளவில் கெட்ட கொழுப்பு சேர்வது, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பது, இதய நோய் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் மத்தியில் அதிக அளவில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கணிசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், கேஃபீன் அடங்கியிருப்பதால் அதிக அளவில் தேநீர் பருகுவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்கிறது உணவுமுறை வழிகாட்டுதல் அறிக்கை. காபியை தொடர்ந்து குடிப்பது அதை முழுவதுமாகச் சார்ந்திருக்க வேண்டும் என்ற மனநிலையை ஒருவருக்கு உருவாக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. அதுகுறித்துப் பேசிய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் குழுவின் விஞ்ஞானி, “காபி குடிப்பது பொதுவாக ஒருவருக்கு அதை அதிகம் சார்ந்திருக்க வேண்டுமென்ற மனநிலையை உருவாக்கும். அதேவேளையில், அதிக அளவில் காபி பருகுவது மற்ற பிரச்னைகளோடும் தொடர்புபடுத்தப்படுகிறது,” என்கிறார். “எடுத்துக்காட்டாக, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பது, இதய நோய் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் மத்தியில் அதிகம் காபி குடித்தவர்கள் இருப்பதைக் காண முடிவதைச் சில ஆய்வுகள் காட்டுகின்றன." "அதற்காக, அதிக அளவில் காபி குடித்தாலே இந்தப் பிரச்னைகள் வந்துவிடும் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இருப்பினும், அந்தப் பிரச்னைகள் இருப்போர் மத்தியில் காபி அதிகம் குடிப்பவர்கள் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது,” என்று வலியுறுத்துகிறார். https://www.bbc.com/tamil/articles/cw949nyq9ppo
  11. பிரேசிலில் வெள்ளம் : ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; 149 பேர் பலி Published By: DIGITAL DESK 3 15 MAY, 2024 | 04:54 PM பிரேசிலில் அடை மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைவதால் மேலும் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் வெள்ளத்தால் 149 பேர் உயிரிழந்துள்ளதோடு, 124 பேர் காணாமல் போயுள்ளார்கள். வெள்ளத்தால் சுமார் 155,000 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். சீரற்ற வானிலையால் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் நெருக்கடியால் 21 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரியோ கிராண்டே டோ சுலின் தலைநகரான போர்டோ அலெக்ரேவில் உள்ள குவாபா ஆற்றின் நீர் மட்டம் 8 அடி வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுத்துவருதாக பிரேசிலின் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் திங்களன்று தெரிவித்ததுள்ளார். பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தேசிய சிவில் பாதுகாப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளை புனரமைத்தல் செவ்வாய்க்கிழமை முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைக்கும் என்று அறிவித்தார். "இன்று முதல், பாடசாலைகள், நாளாந்த பராமரிப்பு நிலையங்கள், சுகாதார பிரிவுகள், வைத்தியசாலைகளை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைகளை மேயர்களும் மாநில அரசாங்கமும் பதிவு செய்யலாம். பதிவு செய்தால் போதும், உடனடியாக மக்களுக்கு சேவைகள் கிடைக்கும்" என ஜனாதிபதி சில்வா நேரடி ஒளிபரப்பின் போது தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடினமான நேரத்தில் அமெரிக்கா பிரேசிலுக்கு ஆதரவு கொடுக்கும் என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிரேசிலின் வரலாறு காணாத மழைப்பொழிவுக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிக்கும் எல் நினோ தான் காரணம் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/183605
  12. அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - ஆஷு மாரசிங்க Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 05:27 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் நிவாரணமாக வழங்கிய அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை குழப்புவதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் பொய் பிரசாரமாகும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணமாக 10கிலாே அரிசி பகிர்ந்தளித்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்ப ஆரம்பத்தில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அரசாங்கம் வழங்கிய அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் இறந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து வருகின்றனர். அரசாங்கம் வழங்கிய அரிசியை உட்கொண்டதால்தான் குறித்த கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்க எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பொது சுகாதார பரிசோதகர்களும் இதனை உறுதிப்படுத்த வில்லை. அவ்வாறான நிலையில் இப்படிப்பட்ட பாரிய குற்றச்சாட்டு தெரிவிப்பது தொடர்பில் விசாணை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்புவதற்காக யாராவது குறித்த அரிசியுடன் வேறு உணவுப்பொருட்களை கோழிகளுக்கு கொடுத்து, அவற்றை இறக்கச் செய்துள்ளதா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் பகிர்ந்தளித்த அரிசியை உட்கொண்ட கோழிகள் இவ்வாறு இறந்துள்ளதாக எந்த முறைப்பாடும கிடைக்கவில்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியில் இருக்கும் சிலரே இவ்வாறான பொய் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் என்ன குற்றச்சாட்டுக்களை தெரிவித்தாலும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரண வேலைத்திட்டங்களை நிறுத்தப்போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/183694
  13. பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்துங்கள் - நக்பா தினத்தில் அவுஸ்திரேலியாவில் பாலஸ்தீன சார்பு அமைப்பு வேண்டுகோள் 15 MAY, 2024 | 12:26 PM அவுஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். யுத்தத்தை குழப்புதல் என்ற அமைப்பு நக்பாவின் 76வது தினமான இன்று பாலஸ்தீனத்திற்காக உங்கள் நகரங்களை முடக்குங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அராபிய மொழியில் நக்பா எனப்படுவது 1948ம் ஆண்டு அராபிய இஸ்ரேல் யுத்தத்தின்போது மிகப்பெருமளவில் பாலஸ்தீன மக்கள்தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதை குறிக்கின்றது . இந்நிலையில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதுடன் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளதை தொடர்ந்து எதிர்ப்பு குறைவதற்கு அனுமதிக்கவேண்டாம் காசாவிற்காக எழுச்சிகொள்வோம் என யுத்தத்தை குழப்புதல் அமைப்பு சமூக ஊடகங்களில் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/183596
  14. Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 04:47 PM (நா.தனுஜா) தமிழரசுக்கட்சி வழக்கு விவகாரம் தொடர்பில் கேட்டறிந்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தமிழ்க்கட்சிகள் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (16) மாலை யாழில் உள்ள தனியார் உணவு விடுதியொன்றில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றிப் பேசப்பட்டுவரும் நிலையில், இச்சந்திப்பின்போது அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அதுபற்றிக் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த சிறிதரன், ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த இறுதித்தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்திலேயே மேற்கொள்ளப்படுமென சுட்டிக்காட்டியதுடன், இருப்பினும் நீண்டகாலமாக தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்கப்படாதிருக்கும் நிலையில் இம்முறை தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது சிறந்த மாற்றுத்திட்டமாக அமையும் என்ற நிலைப்பாடு தம்மத்தியில் காணப்படுவதாக எடுத்துரைத்தார். 'தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய அரசியல் தீர்வானது உள்ளக சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டும். இருப்பினும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சிக்குள் அது சாத்தியமில்லை. அண்மையகாலங்களில் சிங்களவர்கள் வாழாத, தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. புதிதாக பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் போதியளவு வாக்குகள் கிடைக்காவிடினும், தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை அடையாளபூர்வமாகவேனும் களமிறக்கவேண்டியது அவசியம்' எனவும் அவர் மேலும் விளக்கமளித்தார். ஆனால் பொதுவேட்பாளர் யோசனையை ஆதரிப்பதாகத் தெரிவித்த சித்தார்த்தன், இருப்பினும் அவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர் போதியளவு வாக்குகளைப் பெறவேண்டியது அவசியம் எனவும், அன்றேல் எம்மால் முன்வைக்கப்படும் தீர்வுசார் கோரிக்கையை மக்களே நிராகரித்துவிட்டதாக அமெரிக்கா உட்பட சகல தரப்பினரும் கூறுவர் எனவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் சார்ள்ஸ் நிர்மலாதன் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கத்தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தே இங்கு கருத்து வெளியிட்டார். அதேவேளை போரில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்படும் தடைகள் மற்றும் இவை பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பன பற்றியும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவரிடம் எடுத்துரைத்தனர். மேலும் தமிழரசுக்கட்சி வழக்கு விவகாரம் குறித்து சிறிதரனிடம் வினவிய அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கட்சிகள் ஒன்றுக்கொன்று பிளவுபட்டு நிற்பது பலவீனமானது எனவும், இதன்விளைவாக மக்களும் பிளவுபடுவர் எனவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால்தான் தமிழர் பிரச்சினைகளுக்குரிய தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/183700
  15. ‛‛உங்க பெயர், செல்போன் எண் என்ன?’’.. பெண் காவலரிடம் கேட்ட சவுக்கு சங்கர்.. பரபரப்பு புகார் திருச்சி: கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது சவுக்கு சங்கர் திருமணமாகாத பெண் காவலரிடம் அவரது பெயர் மற்றும் செல்போன் எண்ணை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் காவலர், திருச்சி நீதிபதி முன்பு பரபரப்பான புகாரை முன்வைத்துள்ளார். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தான் அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக கடந்த 4ம் தேதி கோவை போலீசார் தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன்பிறகு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சேலம், சென்னை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இதுதவிர கிளாம்பாக்கம் பஸ் நிலையம், பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு உள்ளிட்ட புகார்களிலும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருக்கு ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது. இத்தகைய சூழலில் தான் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் போலீஸ் வாகனத்தில் திருச்சி நீதிமன்றம் அழைத்து வந்து திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்ப்படுத்தினர். இந்த வேளையில் இதனிடையே பெண் காவலர் ஒருவர் சவுக்கு சங்கர் மீது பரபரப்பான புகாரை முன்வைத்தார். அதாவது ‛‛தனக்கு திருமணம் ஆகாத நிலையில் வேனில் வரும்போது எனது பெயரையும், செல்போன் எண்ணையும் சவுக்கு சங்கர் கேட்டார். என் பெயரை கூறியிருந்தால் அவர் அவப்பெயரை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது'' என கூறினார். இது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக சவுக்கு சங்கரும், பெண் காவலர்கள் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது கோவையில் இருந்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது பெண் காவலர்கள் தன்னை தாக்கி அதனை வீடியோவாக எடுத்து கொண்டனர். அந்த வீடியோவை வாட்ச்ஆப்பில் பகிர்ந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஆனால் காவலர்கள் தரப்பில் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கை நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தான் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது நாளை மதியம் 1 மணிக்கு நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு பிறப்பிக்க உள்ளார். அதுவரை நீதிமன்ற காவலில் கோவைக்கு பதில் திருச்சி மத்திய சிறையில் சவுக்கு சங்கரை அடைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-police-allegedly-that-savukku-shankar-asks-her-name-and-cellphone-when-she-escort-from-coimbat-606125.html
  16. தமிழ் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அரசு நீதி வழங்காதென்பதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன - யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் 16 MAY, 2024 | 05:19 PM பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக் கட்டமைப்புகளிடம் இருந்து எந்த‌ நீதியையும் பெற முடியாது என்ற தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் பார்வையினை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன‌ என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கில் இறுதிப் போர் நினைவேந்தல் மீதான‌ அரச அடக்குமுறை தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும், உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட கூட்டு வலி மற்றும் அதிர்ச்சியில் இருந்து தமிழ் மக்கள் இன்னமும் முழுமையாக மீளவில்லை. முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமையுடன் போர் முடிவுக்கு வந்தது. மேலும், ஆயிரக்கணக்கானோர் இந்தப் போரில் காயமடைந்தனர். பலர் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. தமிழ் மக்கள் இந்த யுத்தத்தின்போது சந்தித்த பாரிய‌ பொருள் இழப்பின் தாக்கமானது நீண்ட கால விளைவுகளைக் கொண்டது. உள்நாட்டுப் போரின்போது தாங்கள் சந்தித்த மனித, உடல் மற்றும் பொருள் ரீதியான இழப்புகள் குறித்து உண்மையையும் நீதியையும் தமிழ் மக்கள் இன்று கோரி நிற்கின்ற அதேவேளை, போரின் கடைசிக் கட்டங்களின்போது இலங்கை அரசு செய்த அட்டூழியங்களை ஓர் இன அழிப்புச் செயன்முறை என அவர்கள் கருதுகிறார்கள். கடந்த பதினான்கு ஆண்டுகளில் நடந்ததைப் போலவே, இந்த ஆண்டிலும் மே மாதத்திலே வடக்கு, கிழக்கிலும் அதற்கு அப்பாலும் உள்ள தமிழர்கள் போரின்போது இறந்தவர்களை நினைவுகூருகின்றனர். வடக்கு, கிழக்கு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் வன்முறையை நேரில் அனுபவித்தவர்கள் உள்ளடங்கலாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. போரில் இறந்த‌ தங்கள் உறவுகளையும், இழப்புக்களையும் சந்தித்த பரந்துபட்ட தமிழ் சமூகத்தையும் நினைவுகூருவோரும் அனைவருடனும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு எமது ஆதரவினை வழங்குகிறோம். அவர்களின் துயரத்திலும் வேதனையிலும் நாமும் பங்கேற்கிறோம். நினைவுகூரலானது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குணப்படுத்தலினை ஏற்படுத்துவதிலும், அவர்கள் வாழ்விலே அமைதியைக் கொண்டுவருவதிலும் பங்களிக்கக் கூடியனவாக இருக்கும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு எதிர்ப்பினையும், வன்முறைக்குப் பின்னான அம்மக்களின் மீளெழுச்சியினை வெளிப்படுத்தும் செயன்முறைகளாகவும் அமைகின்றன என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கருதுகிறது. அதேவேளை, இலங்கை அரசு மற்றும் அதன் சட்ட அமுலாக்க இயந்திரங்கள் இந்த வாரம் நடைபெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவது, அடக்குவது மற்றும் தடுப்பது குறித்துத் தனது ஆழ்ந்த கரிசனையினையும், கவலையினையும் ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையூடாக‌ வெளிப்படுத்துகிறது. 2009ஆம் ஆண்டிலே முள்ளிவாய்க்காலிலே போரிலே அகப்பட்டிருந்த மக்களின் அனுபவங்களை நினைவுகூரும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரிலே முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் கைது செய்யப்பட்டமையை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தைப் பொலிஸார் தடுக்க முயன்றுள்ளனர். இறந்தவர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம்களை நிறுத்துவதற்கான முயற்சிகளும் கூட இடம்பெற்றிருக்கின்றன. கல்முனை பகுதியில் நினைவேந்தல் செயன்முறைகளைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவினைப் பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த சம்பவங்களைத் தவிர, சமூகக் கூட்டிணைவுடன் முன்னெடுக்கப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் புத்துயிர் அளிக்கும் முயற்சிகள் எனத் தவறாக சித்திரித்து, இழிவுபடுத்தும் கொடிய செயலிலும் அரசும் அதன் இயந்திரங்களும் ஈடுபட்டுள்ளன. நினைவுகூரலினைத் தடுப்பதற்கான அரசின் இந்த முயற்சிகள் அனைத்தும் போரில் இறந்தவர்களை அர்த்தமுள்ள முறையில் நினைவுகூருவதற்கு இலங்கையிலே தமிழர்களுக்கு இடமில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றன‌. அரசின் இவ்வாறான கடும்போக்கான‌ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் அரசின் இன விரோதத்தையும் வெளிக்காட்டுகின்றன. பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக் கட்டமைப்புகளிடம் இருந்து எந்த‌ நீதியையும் பெற முடியாது என்ற தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் பார்வையினை இந்தச் சம்பவங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவனவாக அமைகின்றன‌. தமிழ் சமூகத்தின் நினைவேந்தல் முயற்சிகளை தவறாக சித்திரிக்கும் வகையிலும், அவற்றினை மட்டுப்படுத்தும் வகையிலும், அவற்றினைக் குற்றமாக மாற்றும் வகையிலும் அரச இயந்திரங்களினால் மேற்கொள்ளப்படும் எல்லா செயன்முறைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இலங்கையில் சட்ட அமுலாக்கத்துக்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோருகிறது. இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன, மத வேறுபாடுகள் கடந்து நாட்டின் வடக்கு, கிழக்கிலே நினைவேந்தல் செயன்முறைகளினை நசுக்கும் வகையில் இடம்பெறும் அரச அடக்குமுறையை கண்டித்து, போரின்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்த வாரம் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொண்டிருப்போருக்கும் தங்கள் ஆதரவினை வழங்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அனுபவித்த வேதனை மற்றும் இழப்புகளுக்கு நீதி கோரி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்துகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/183716
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, பிபிசி சீனா செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார். புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். யுக்ரேன் மீது அவர் படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா ரஷ்யாவுக்கு முக்கிய நட்பு நாடாக இருந்துவருகிறது. சீனா யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரைக் கண்டிக்க மறுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்திற்கு ஆளான ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இன்று (வியாழன், மே 16) நடந்துவரும் இந்தச் சந்திப்பில் ஷி ஜின்பிங்-உடன் யுக்ரேன் போரைப் பற்றி பேசியதாக புதின் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசரமான குறிக்கோள் என்று இரண்டு தலைவர்களும் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், புதின் இதற்கு மேலும் ஆதரவை எதிர்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான விலையைக் கொடுக்க சீனா தயாராக உள்ளதா? பட மூலாதாரம்,POOL படக்குறிப்பு,மே 16, வியாழன் அன்று புதின்-ஜின்பிங் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம் சீனா-ரஷ்யா உறவு எப்படியிருக்கிறது? கடந்த வாரம் ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராகப் பதவியேற்ற பின்னர் புதின் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்குச் சீனாவைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. இந்த இருநாள் அரசுமுறைப் பயணம் அவர்களின் உறவு 'எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை' எட்டியதால் வருகிறது என்று சீன அரசு ஊடகத்திடம் தெரிவித்தார். அவர் சீனத் தற்காப்புக் கலைகள் மற்றும் சீனத் தத்துவத்தின் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார். மேலும் அவரது குடும்பத்தில் சிலர் சீனாவின் மாண்டரின் மொழியைக் கற்று வருவதாகவும் கூறினார். "இன்று நிலவிவரும் கடினமான சர்வதேசச் சூழ்நிலையில், எங்கள் உறவுகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன," என்று அவர் கூறினார். ஆனால் புதின் சீனாவுடனான தனது நட்பைப் பற்றித் தற்பெருமை பேசும் அதேசமயம், ஷி ஜின்பிங் கவலைப்படுவதற்குக் காரணங்களும் இருக்கலாம். ரஷ்யாவுடன் வணிக உறவுகளில் இருக்கும் பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட சீன வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உதவுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றாலும், போருக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா நம்புகிறது. பெய்ஜிங்கிற்கு சமீபத்தில் பயணித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன், பனிப்போருக்குப் பிறகு ஐரோப்பிய பாதுகாப்புக்கு 'பெரும் அச்சுறுத்தலைத் தூண்டுவது சீனா தான்' என்று பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷி ஜின்பிங், புதின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் யுக்ரேன் மீதான அதன் நிலைப்பாடு நடுநிலையானது என்று சீனா கூறி வருகிறது. மேலும் அது ரஷ்யாவிற்கு விற்கும் தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் போர் தவிர்த்த வணிகரீதியான பயன்பாடுகளையும் கொண்டுள்ளதால் அவை விதிகளை மீறவில்லை என்கிறது. இருந்தபோதிலும், கடந்த வாரம் ஷி ஜின்பிங் பிரான்ஸுக்குச் சென்றிருந்த போதும் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சீனாவுக்கு நற்பெயர் வாங்குவதற்காக ஃபிரான்சுக்குச் சென்றிருந்த அவரது நோக்கத்தை இது திசைதிருப்பியது. சீனா மீது சந்தேகம் தெரிவிப்பவர்களும், சீனா மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களும் தங்களது வாதங்களை இன்னும் சத்தமாக முன்வைத்து வருகின்றனர். ஷி ஜின்பிங், புதின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனா மீது அதன் சொந்தத் தடைகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது. அதேசமயம் சீனாவின் பொருளாதாரம் இப்போது மந்தமாக இருக்கிறது. தனது வர்த்தக பங்காளிகள் தன்மீது செலுத்தும் இந்த அழுத்தத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியாது. உள்நாட்டில் தேவை பலவீனமாக இருப்பதால் வெளிநாட்டுச் சந்தைகள் சீனாவுக்கு அவசியமாகும். இவை அனைத்தும் ஷி ஜின்பிங்கை ஒரு சங்கடமான சூழ்நிலையில் தள்ளுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா, ரஷ்யாவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் 'வரம்பற்ற தன்மையை' அவ்வளவு முக்கியமானதல்ல என்பதுபோலக் காட்டிக்கொள்கிறது 'வரம்புகள் இல்லாத நட்பு' என்னவானது? ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, புதினும் ஷின்பிங்கும் இருநாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்த 'வரம்புகள் இல்லாத' கூட்டாண்மையை அறிவித்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரு நாடுகளுக்கும் இது அவசியமானதாக இருந்தது. அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை மறுவடிவமைப்பதில் ரஷ்யா முக்குயப் பங்காற்றும் என்று சீனா கருதுகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் செழித்து வருகிறது. 'பவர் ஆஃப் சைபீரியா' குழாய் வழியாக தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் எரிவாயு ஏற்றுமதி உட்பட மலிவான ரஷ்ய எரிசக்தி சீனாவிற்கு நன்மையாக உள்ளது. ஆயினும்கூட, யுக்ரேன் போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி அவ்வளவு 'வரம்புகள் இல்லாததாகத்' தோன்றவில்லை. ஒன்று, இந்த வார்த்தை இருநாட்டு அரச ஊடகங்களில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்டது, என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. சீனா, ரஷ்யாவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் 'வரம்பற்ற தன்மையை' அவ்வளவு முக்கியமானதல்ல என்பதுபோலக் காட்டிக்கொள்கிறது, என்கிறார் 'கார்னகி எண்டோமென்ட்' சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரான ஜாவோ டோங். "மேற்கத்திய செல்வாக்கைக் குறைக்கும் இலக்கை சீனா ஆதரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் உட்பட ரஷ்யாவின் சில தந்திரோபாயங்களுடன் சீனா உடன்படவில்லை. ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் வரும் களங்கத்தை சீனா நன்கு அறிந்திருக்கிறது. உலக அரங்கில் தனது சட்டபூர்வமான தன்மையை மேம்படுத்துவதற்கான உத்திகளை அது தொடர்ந்து செம்மைப்படுத்தி வருகிறது," என்றார். சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த ஷி ஜின்பிங் "சீனா நெருக்கடியை உருவாக்கவில்லை, அதில் பங்கேற்கவும் இல்லை" என்று கூறினார். இதையே சீனா தனது சொந்த குடிமக்களுக்கும் சொல்லி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது ஷி ஜின்பிங் அமைதித் தூதுவரா? ஆனால் சீனாவின் இந்த நடுநிலை நிலைப்பாடு, யுக்ரேன் மீதான அனுதாபம் என்று அர்த்தப்படாது. சீனாவின் வெகுவாகத் தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்களிலிருந்து இது எளிதில் தெரியும். சீன அரசு ஊடகம் இன்னும் ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்துகிறது. அதனை 'அமெரிக்க-ஆதரவு நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக ரஷ்யாவின் துரிதமான பதிலடி' என்று கூறுகிறது. ஆனால், சீனாவில் மாறுபட்ட குரல்களும் உள்ளன. சீனாவின் பொதுமக்களில் சிலர், ரஷ்யாவுடனான 'வரம்பற்ற உறவை' ஆதரிக்க எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதில் விரிசல் தோன்றக்கூடும் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஃபுடான் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கும் ஃபெங் யுஜுன் சமீபத்தில் 'தி எகனாமிஸ்ட்' இதழில், 'ரஷ்யா யுக்ரேனில் தோல்வியடைவது உறுதி' என்று எழுதியிருந்தார். சீனாவில் இது ஒரு துணிச்சலான கருத்து. ஆனால், ஷி ஜின்பிங், தான் ஒரு அமைதித் தூதுவராக இருப்பதற்கான சமிக்ஞைகளைக் கொடுத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம், மாஸ்கோவிற்கு அரசுமுறைப் பயணமாகச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் யுக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சீனா "எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது" என்று கூறினார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான தனது 12-அம்ச அமைதித் திட்டத்தையும் சீனா வெளியிட்டது. இருந்தும், புதின்-ஜின்பிங் சந்திப்பால், இந்தக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வராது. ஆனால் மேற்கத்திய நாடுகள் சீனா-ரஷ்யா கூட்டணியால் பொறுமையிழந்து வருகின்றன. அமைதி காப்பாளராக இருக்கும் ஷி ஜின்பிங்கின் முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லை. முன்பு 'தோழன்' என்றும் 'அன்பான நண்பன்' என்றும் அவர் அழைத்த, சர்வதேச வெறுப்பைச் சம்பாதித்த ரஷ்யா போன்ற நாட்டோடு 'தோளோடு தோள்' நிற்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை அவர் சிந்திப்பார். https://www.bbc.com/tamil/articles/c0jkj9q95pgo
  18. இதில யார் மறுபடி மாவுக்கட்டு போடவைத்தது?! அல்லது எல்லோருமாகச் சேர்ந்து தவறி அவருக்கு மேல விழுந்திருப்பினமோ?!
  19. அமெரிக்க கப்பல் விபத்து: 50 நாட்களாக கப்பலில் சிக்கியுள்ள 20 இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெடிக்க வைக்கப்பட்ட பால்டிமோர் பாலம் கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டிப்மேன் ஜூனியர் பதவி, பிபிசி நியூஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது `டாலி’ என்ற கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து கிட்டத்தட்ட ஏழு வாரம் ஆகிவிட்டது. திங்களன்று, உடைந்த பாலத்தின் இடிபாடுகளில் இருந்து 'டாலி' என்ற கப்பலை வெளியே இழுக்க, சிறியளவில் வெடிவைத்து இடிபாடுகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பெரிய கப்பலில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட அடுத்தடுத்த வெடிப்புகள், பால்டிமோர் நகரின் புகழ்பெற்ற பிரான்சிஸ் ஸ்டாட் பாலத்தைத் துண்டுகளாகச் சிதறடித்தது. அதன் இடிபாடுகள் மேரிலாந்தின் படாப்ஸ்கோ ஆற்றில் மூழ்கின. ஏழு வாரங்களுக்கு முன், பாலத்தின் மீது கப்பல் மோதியதில், ஆறு பேர் இறந்தனர். வெடி வைத்து தகர்ப்பதால் இடிபாடுகளில் சிக்கிய கப்பலை மீட்கும் ஒரு நீண்ட செயல்முறை முடிவுக்கு வரும் என்று நிர்வாகமும் மீட்புக் குழுவினரும் நம்புகிறார்கள். இந்தக் கப்பலில் உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 21 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்று மீட்புக் குழு முழுமையாக நம்புகிறது. இருப்பினும், அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பால்டிமோர் நகரில் இருந்து புறப்பட்ட 298 மீட்டர் நீளம் கொண்ட டாலி என்ற கப்பல், இலங்கைக்குத் தனது 27வது நாள் பயணத்தைத் தொடங்கியபோது பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் மோதி கரை ஒதுங்கியது. இதனால், இந்தக் கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான டன் இரும்பு, சிமென்ட் ஆகியவை படாப்ஸ்கோ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முதல் கட்ட விசாரணை அறிக்கையில், சம்பவத்துக்கு முன்னர் கப்பலில் இரண்டு மின்தடைகள் ஏற்பட்டதாகவும், இதனால் கப்பலின் பல உபகரணங்கள் வேலை செய்யாமல் போனதும் கண்டறியப்பட்டது. விபத்து நடப்பதற்கு 10 மணிநேரத்திற்குள் கப்பலில் இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த பணியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 20 இந்தியர்கள் உட்பட 21 பேர் உள்ளனர். விசா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தரையிறங்கும் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர்கள் கரைக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். மேலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), எஃப்.பி.ஐ ஆகியவற்றின் விசாரணைகளும் அவர்கள் கப்பலில் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். திங்களன்று, பாலத்தில் சிக்கிய கப்பலை மீட்டெடுக்க, அங்கு வெடி வைத்து தகர்த்தபோதும், அந்தக் குழுவினர் கப்பலுக்குள் இருந்தனர். வெடி வைத்து இடிபாடுகளைத் தகர்க்கும் இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு முன்னர், அமெரிக்க கடலோர காவல் படை அட்மிரல் ஷானன் கில்ரேத், `` கப்பலில் இருக்கும் பணியாளர்கள் தீயணைப்புக் குழுவினருடன் கீழ் தளத்தில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் கப்பலின் ஒரு பகுதி. கப்பலைத் தொடர்ந்து இயக்குவதற்கு அவர்கள் அவசியம்,” என்று கூறினார். கப்பல் இந்த வாரம் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் 3.7 கி.மீ. தொலைவில் இருக்கும் கரைக்கு கப்பல் எப்போது கொண்டு வரப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'சோகமான சூழல்' பட மூலாதாரம்,GETTY IMAGES கப்பலில் உள்ள குழுவினருடன் தொடர்பில் இருப்பவர்களில் ஒருவர் ஜோசுவா மெசிக். மெசிக் பால்டிமோர் சர்வதேச கடற்படை மையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும், இது கடற்படையினரின் உரிமைகளுக்காக இயங்கி வருகிறது. மெசிக்கின் கூற்றுப்படி, எஃப்.பி.ஐ விசாரணைக்காக நிர்வாகக் குழு கப்பலில் உள்ளவர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்தது, அதன் பிறகு அவர்கள் சில வாரங்களுக்கு வெளியுலக தொடர்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டனர்.” ``அவர்களால் ஆன்லைன் வங்கியைப் பயன்படுத்த முடியாது. அவர்களால் கட்டணங்களைச் செலுத்த முடியாது. அவர்களிடம் தரவு அல்லது யாருடைய தொலைபேசி எண் எதுவும் இல்லை, எனவே இவர்கள் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பேச முடியாது. தூங்குவதற்கு முன் அவர்களின் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்கவும் முடியாது. இது உண்மையில் ஒரு சோகமான சூழல்," என்றார். கப்பலில் இருந்த பணியாளர்களின் அவல நிலை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒன்று சிங்கப்பூர் கடல்சார் அதிகாரிகள் சங்கம் மற்றொன்று சிங்கப்பூர் கடல்சார் ஊழியர்களின் அமைப்பு. மே 11 அன்று ஒரு கூட்டறிக்கையில், இந்தத் தொழிற்சங்கங்கள் "மன உளைச்சல் மற்றும் குற்றவியல் வழக்கு பற்றிய பயம் காரணமாக மக்களின் மன உறுதி குறைந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு இல்லாததால் அக்குழுவினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களின் தொலைபேசிகளை விரைவாக திருப்பித் தர வேண்டும்," என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடற்பயணிகள் சர்வதேச சங்கத்தின் தலைவர் டேவ் ஹிண்டெல் கூறுகையில், "எவ்வளவு காலம் விசாரணை நடந்தாலும், அந்தக் கப்பலில் உள்ளவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் மீறப்படக் கூடாது." "கப்பல்களில் பயணம் செய்பவர்கள் தங்கள் சொந்த வேலைகள், கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைத் தங்கள் மொபைல் போனில் இருந்து செய்கிறார்கள் என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக, அவர்கள் தங்கள் குடும்பத்துக்காக தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தொலைபேசி மூலம் பணம் அனுப்புகிறார்கள். அடிப்படை விஷயங்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் மனச் சோர்வடைந்து உள்ளனர்,” என்று குறிப்பிட்டார். பால்டிமோரில் இருந்து வரும் கப்பல்களைக் கண்காணிக்கும் `அப்போஸ்டல்ஷிப் ஆஃப் தி சீ’ என்னும் திட்டத்தை நடத்தும் ஆண்ட்ரூ மிடில்டன், இரண்டு வாரங்களுக்கு முன்பு பணியாளர்களைச் சந்தித்ததாகவும், அவர்களிடம் பதற்றம் இருந்தபோதிலும், ஒரு 'நேர்மறை அணுகுமுறையை' கண்டதாகவும் பிபிசியிடம் கூறினார். அவர் கூறுகையில், "கப்பலில் இருந்த பணியாளர்களிடம் நாங்கள் சகஜமாக பேச முயன்றோம். அவர்கள் மனதில் இருந்த தயக்கத்தை நீக்கினோம். பின்னர் அவர்களின் பெயர்களைக் கேட்டோம், சொன்னார்கள். அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அவர்கள் திருமணமானவர்களா அல்லது குழந்தைகள் இருக்கிறார்களா என்று அவர்களிடம் பேசினோம். அவர்களைக் கொஞ்சம் மன உளைச்சலில் இருந்து மீட்க நகைச்சுவையாகப் பேசினோம். அவர்களும் இறுக்கமான மனநிலையில் இருந்து வெளியேறி அவர்களுக்குள் கேலி செய்து கொண்டனர்,” என்றார். அடுத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ”தற்போது கப்பலில் உள்ளவர்களுக்கு சிம் கார்டுகள் உடன் தற்காலிக மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் இணைய வசதி இருக்காது,” என்று மெசிக் கூறுகிறார். பல்வேறு சமூக குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலர் அவர்களுக்கு உணவுப் பொருட்கள், போர்வைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததில் அரசாங்கத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடும் `யுனிஃபைட் கமாண்ட்’ அமைப்பை பிபிசி தொடர்பு கொண்டு, கப்பலில் உள்ளவர்கள் எப்போது வீட்டிற்குச் செல்ல முடியும் என்பது குறித்துக் கேட்டது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கப்பல் துறை நிறுவனமான `சினெர்ஜி மரைன்’ செய்தித் தொடர்பாளர் டாரெல் வில்சன் பிபிசியிடம், ”மீட்புப் பணிகள் மிகச் சிறப்பாக நடக்கின்றன. பால்டிமோரில் அனுப்பப்பட்ட எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் முதல் நாளிலிருந்து அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எங்களால் இயன்றவரை, அவர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்கிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளும் கப்பல்களில் அனுப்பப்படுகின்றன, இதனால் அங்குள்ள சமையல்காரர்கள் ஓய்வெடுக்க முடியும்," என்றார். "கப்பலில் உள்ளவர்களுக்காக இந்து மத குருமார்கள் உட்படப் பல்வேறு சமயப் பிரதிநிதிகள் உணர்வுபூர்வமான ஆதரவையும் வழங்கி வருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த தைரியத்தை அளிக்கிறது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும், பணியாளர்கள் எப்போது கப்பலைவிட்டு வெளியேறுவார்கள் என்பதை அவரால் கூற முடியவில்லை. விசாரணை நடந்து வருவதாகவும், இவர்கள் அளவுக்கு கப்பலைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது என்பதால் அவர்களை கப்பலில் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். "கப்பலில் இருக்கும் பணியாளர்கள் கப்பலின் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. கப்பல் பாலத்தில் இருந்து வெளியேறியவுடன், அதில் சிக்கி இருப்பவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதற்காக கப்பலில் ஏறிச் செல்வேன்" என மெசிக் கூறுகிறார். அதன் பிறகு, கப்பலில் இருப்பவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (5 பேர்) விரைவில் கடற்கரையில் தரையிறங்கத் தேவையான பாஸ்களை பெறுவார்கள் என்று அவர் நம்புகிறார். இருப்பினும், அவர்களின் செயல்பாடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக, அவர்கள் கடலோரப் பகுதியில் இருக்கும்போது எப்போதும் அவர்களுடன் ஒரு பாதுகாவலர் இருக்க வேண்டும். அவர் மேலும் கூறுகையில் "கப்பலில் உள்ளவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய முயல்கிறேன். கப்பலின் கேப்டன் போன்ற சில பணியாளர்கள் இயல்பாக அமைதியாக உட்காருவதை விரும்புகின்றனர். நாங்கள் அவர்களை சுதந்திரமாக திறந்தவெளி காற்றைச் சுவாசிக்க உதவ விரும்புகிறோம். அவர்கள் எல்லா நேரமும் கப்பலுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/ckdqd8qpg72o
  20. பட மூலாதாரம்,US AIR FORCE கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபி ஹர்டாக் பதவி,‎ 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'வளிமண்டல நதிகள்' அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவை மேலும் வலுவடைந்து வருகின்றன. அடுத்து எவ்விடத்தைத் தாக்கும் என்று கணிக்க விஞ்ஞானிகள் வானத்தில் அவற்றைத் துரத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம், ஆன்னா வில்சன் 'கல்ஃப்ஸ்ட்ரீம் IV ஜெட்' விமானத்தில் அமர்ந்து, வடக்கு பசிபிக் பெருங்கடலின் மேல் இருந்த வெள்ளை மேகங்களின் அமைதியான தோற்றத்தைக் கண்டார். வளிமண்டல விஞ்ஞானி மற்றும் தீவிர வானிலை நிபுணரான வில்சன் தனது ஹெட்ஃபோன்கள் மூலம் அவரது சக ஊழியர் `கவுண்டவுன்` எண்ணுவதைக் கேட்டார். விமானத்தின் பின்பகுதியில், மற்றொரு சக ஊழியர் மெலிதான, உருளை வடிவக் கருவிகளை ஒரு குழாய் மூலம் கீழே இருந்த புயலில் இறக்கி, அது அமெரிக்காவின் மேற்குக் கரையை நெருங்கும்போது அதன் வலிமை எவ்வளவு இருக்கும் என்று அளவிட்டார். அவர்கள் கண்காணிக்கும் புயல் 'வளிமண்டல நதி' என்றழைக்கப்படும் ஒரு வகையைச் சேர்ந்தது. இந்த வானிலை நிகழ்வு சமீபத்திய ஆண்டுகளில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் சிலநேரம் அவை ஏற்படுத்தும் பேரழிவு தாக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறாரகள். காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டல நதிகள் பெரிதாகவும், அடிக்கடி நிகழ்பவையாகவும் தீவிரமானதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அவை ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன. பெரும்பாலும் வானத்தில் பறக்கும் நதிகள் என்று விவரிக்கப்படும், வளிமண்டல நதிகள் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும். ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை. மிசிசிப்பி ஆற்றைவிட 27 மடங்கு தண்ணீரைக் கொண்டு செல்பவை. சூடான கடல்களின் நீர் ஆவியாகி, மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, இவை உருவாகின்றன. கலிபோர்னியா போன்ற ஒரு கடற்கரையை இந்த நீராவி அடையும்போது, அது ஒரு மலையில் பாய்ந்து, குளிர்ந்து, மழையாகவோ அல்லது பனியாகவோ கீழே வருகிறது. இது மலைப்பகுதிகளில் வழிந்து நிலச்சரிவுகள், பெருமழை, வெள்ளம், மற்றும் கொடிய பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவானவை. 'புயல் வேட்டைக்காரர்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'வளிமண்டல நதிகள்' ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன அமெரிக்காவின் மேற்குக்கரையில், இந்த வளிமண்டல நதிகள் அதீத மழை, மிக வெப்பமான புயல்கள், பெருவெள்ளம், தீவிர கடலோர காற்று மற்றும் நிலச்சரிவுகளை உருவாக்கின்றன. அவை குழுக்களாக வரலாம் - அப்போது அவை `குடும்பங்கள்` என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் பல வெகு சில நாட்களின் இடைவெளியில் நிகழ்கின்றன. முன்பு ஆன்னா வில்சனும் அவரது சகாக்களும் ஒரு 'வளிமண்டல நதி' புயலுக்கு மேலே பறந்தவாறு ஆய்வு செய்வதாக முன்பு குறிப்பிட்டோம் அல்லவா! அந்தப் புயல்களின் குடும்பம் உண்மையில் நான்கு வளிமண்டல நதிகளால் உருவாக்கப்பட்டது. அது பின்னர் கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரேகானில் வெள்ளம் ஏற்பட்டது. ஒவ்வொரு வளிமண்டல நதியும் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரே மாதிரியானவை என்கிறார் கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கள ஆராய்ச்சி மேலாளராக இருக்கும் வில்சன். "அது எங்கே நிலச்சரிவை உண்டாக்கப் போகிறது? அது எவ்வளவு வலுவாக இருக்கும்? எவ்வளவு காலம் நீடிக்கும்? இவற்றுக்குப் பதிலளிப்பத்தில் நாங்கள் மேம்பட்டு வருகிறோம்," என்று அவர் கூறுகிறார். அமெரிக்க விமானப்படை, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (நோவா ப- Noaa) மற்றும் பிற அமைப்புகளின் கூட்டுத் திட்டமான வளிமண்டல நதி மறுசீரமைப்பு அல்லது ஏஆர் ரீகானின் (Atmospheric River Reconnaissance - AR Recon) ஒரு பகுதியாகத்தான் கடந்த ஜனவரி மாதம் வில்சன் புயலுக்குள் பயணித்தார். சூறாவளிகளைக் கண்காணிப்பதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் 'சூறாவளி வேட்டைக்காரன்' ('hurricane hunter') எனப்படும் NOAA கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானப்படை விமானங்கள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் குழு வளிமண்டல நதிகளுக்கு மேல் செலுத்துகிறார்கள். அவற்றிலிருந்து `டிராப்சோன்ட்ஸ்` எனப்படும் கருவிகளை புயல்களில் நுழைத்துச் சோதனைகளை நடத்துகிறார்கள். "வளிமண்டல நதிகள் சுவாரஸ்யமானவை. ஆனால் நீங்கள் உண்மையில் அவற்றைப் பார்க்க முடியாது, ஏனெனில் அவை வெறும் நீராவி," என்று வில்சன் கூறுகிறார். "அவை உண்மையில் மேற்பரப்புக்கு நெருக்கமாக உள்ளன. அவை பொதுவாக வளிமண்டலத்தின் மிகத் தாழ்ந்த பகுதிகளில் கூடுகின்றன," என்கிறார். இந்தச் செயல்முறையின் போது அவர்கள் மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைகிறார்கள், என்கிறார் வில்சன். இது செயற்கைக்கோள்கள் போன்ற வழக்கமான வானிலை கண்காணிப்புக் கருவிகளில் இருந்து அவற்றை மறைக்கிறது. "செயற்கைக்கோள்கள் மேற்பரப்பிற்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். எனவே நமது சென்சார்களை கீழே இறக்கி, வெப்பநிலை, காற்றழுத்தம், காற்று, மற்றும் ஈரப்பதம் ஆகிய அடிப்படை வானிலை அளவீடுகளைப் பெறுகிறோம்," என்று அவர் கூறுகிறார். 'ஆபத்தானவை, ஆனால் நன்மையும் உண்டு' பட மூலாதாரம்,ANNA WILSON படக்குறிப்பு,ஆன்னா வில்சன் கடந்த 2023ஆம் ஆண்டு இலையுதிர்காலம் மற்றும் 2024ஆம் ஆண்டு வசந்த காலத்துக்கு இடையில் வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா ஆகிய பகுதிகளைத் தாக்கிய 51 வளிமண்டல நதிகளின் ஒரு பகுதிதான் வில்சன் மற்றும் அவரது குழுவினர் ஜனவரி மாதம் கண்காணித்து வந்த புயல்கள். முந்தைய பருவத்தைவிட 13 புயல்கள் அதிகமாக உருவாகின. அத்தகைய புயல் எப்போது, எங்கே வரும், அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிவது, பூமியில் உள்ள மக்களுக்கு என்ன நேரப் போகிறது என்பதைத் தயாரிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, சரியான நீர்த்தேக்கங்களைச் சரியான நேரத்தில் காலி செய்ய உதவுகிறது. ஆனால் வில்சன் மற்றும் அவரது சகாக்கள் 2016இல் இந்தப் பணியைச் செய்யத் துவங்கினர். இது வளிமண்டல நதிகளை நன்கு புரிந்து கொள்வதற்கான பரந்த அறிவியல் முயற்சியின் ஒரு பகுதி. அவற்றின் ஆச்சரியமான நன்மைகளையும் அறிந்துகொள்ள இது முயல்கிறது. தீவிர வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல, வளிமண்டல நதிகள் அழிவுகரமானவை மாத்திரமே அல்ல. மாறாக, அவை உயிர்களுக்கு ஆதரவாகவும் இருக்கும். "நமக்கு வளிமண்டல நதிகள் அவசியம். அவை இல்லாவிட்டால் அமெரிக்காவின் மேற்கில் வறட்சி ஏற்படும்," என்று வில்சன் கூறுகிறார். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் நிகழும் மூன்றில் இரண்டு பங்கு வறட்சிகள் வளிமண்டல நதிகளால் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவை `வறட்சி நிவாரணிகள்` என்று அழைக்கப்படுகின்றன. "வளிமண்டல நதிகள் நன்மையும் பயக்கின்றன," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல விஞ்ஞானி பின் குவான் ஒப்புக்கொள்கிறார். "நாங்கள் அவற்றின் அபாயகரமான பக்கத்தை முன்னிலைப்படுத்த முனைகிறோம். ஆனால் அவை கலிபோர்னியா போன்ற வறண்ட பகுதிகளில் முக்கியமான நீர் விநியோகத்தை வழங்குகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்," என்கிறார். ஒட்டுமொத்தமாக, கலிபோர்னியாவின் மழை மற்றும் பனியில் 50% வரை அவை உருவாக்குபவைதான். அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையில், வளிமண்டல நதிகள் ஹவாய் அருகே தோன்றியவை என்று நம்பப்படுவதால், அவை `பைனாப்பிள் எக்ஸ்பிரஸ்` என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், வளிமண்டல நதிகள் உலகளாவிய நிகழ்வு என்பதால் வல்லுநர்களிடையே இந்தப் பெயர் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது என்று குவான் கூறுகிறார். மேலும் மேற்குக்கரையைத் தாக்கும் பல வளிமண்டல நதிகள் உண்மையில் ஹவாய்க்கு வெகு தொலைவில் உருவாகின்றன. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வழக்கத்திற்கு மாறாக, ஒரு நீண்ட வளிமண்டல நதி ஜப்பானில் இருந்து வாஷிங்டன் வரை சுமார் 8,000கி.மீ. நீண்டது. கடந்த 2019ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டல நதிகளின் தீவிரத்தை தரவரிசைப்படுத்த ஒன்று (பலவீனமான, மிதமான மழைப்பொழிவு) முதல் ஐந்து (விதிவிலக்கான, அபாயகரமானவை) வரை ஓர் அளவீட்டை உருவாக்கினர். ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் நீரியல் நிபுணரான கியான் காவ் கூறுகையில், "மிதமான வளிமண்டல நதிகள் நீர் விநியோகத்திற்குப் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. இவை மிகவும் தீவிரமானவை மட்டுமே ஆபத்தானவை. எனவே நன்மை தீமை இரண்டையும் கொண்டுள்ளன," என்கிறார். முன்னறிவிப்புகள் ஏன் முக்கியமானவை? பட மூலாதாரம்,RICH HENNING/NOAA படக்குறிப்பு,வளிமண்டல ஆறுகள் கண்ணுக்கு தெரியாதவை. மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைபவை. இது 2023இல் நோவா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் வளிமண்டல நதிகளைக் கணிப்பது அவற்றின் அழிவுகரமான பக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது, ஆனால் அது கடினமாது, என்று காவ் கூறுகிறார். ஆரம்பத்தில், அவை கடலுக்கு மேல் உருவாகின்றன. அங்கு அவற்றைக் கவனிப்பதற்கான வழிகள் குறைவு. பின்னர் அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கின்றன. மேலும் அந்தப் பயணத்தின்போது, அவை நின்று போகலாம், தீவிரமடையலாம், பலவீனமடையலாம், வெப்பமடையலாம் அல்லது குளிர்ச்சியடையலாம், பிற வளிமண்டல நதிகள், அல்லது அவற்றின் எச்சங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த மாற்றங்கள் ஏதேனும் அவற்றின் தாக்கத்தைப் பாதிக்கும் என்று அவர் கூறுகிறார். பெரும் மழை வரும்பட்சத்தில் நீர்த்தேக்கங்களைக் காலி செய்யலாமா என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய, வானிலை மற்றும் நீர் முன்னறிவிப்பு பயன்படுத்தப்படுகின்றன. "இந்த வளிமண்டல நதிகளை நாம் முன்கூட்டியே சிறப்பாகக் கணிக்க முடிந்தால், அவற்றை இன்னும் துல்லியமாக, நீண்ட காலத்துடன் கணிக்க முடிந்தால், செயல்பாட்டு முடிவுகளை எடுக்க நமக்கு அதிக நேரம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, நாம் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவுகளை எடுப்பது," என்கிறார் காவ். மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முந்தைய குறுகிய கால முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமானவை, என்கிறார் காவ். நீண்டகால முன்னறிவிப்புகளின் துல்லியம் குறைகிறது என்று அவர் கூறுகிறார். "இரண்டு வாரங்களுக்கு அப்பால் உள்ள முன்னறிவிப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ஏனெனில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தயார்படுத்துவது மக்களுக்குக் கூடுதல் நேரத்தை வழங்கும். இங்குதான் AR Recon விமானங்களின் பங்கு வருகிறது. மற்ற கருவிகள் அடைய முடியாத வளிமண்டல நதிகளுக்குள் இவை பார்க்கின்றன. மேம்பட்ட தரவுகளின் அவசியம் என்ன? பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு,தொழில்நுட்ப சார்ஜென்ட் லாரி பேங்க்ஸ் 2023இல் வளிமண்டல நதிகள் பணியின்போது ஒரு டிராப்சோன்டை சரிபார்க்கிறார் வில்சனின் குழுவைப் பொறுத்தவரை, புயல்களைப் பின்தொடரும் ஒவ்வொரு விமானப் பயணமும் காலையில் ஒரு முன்னறிவிப்புக் கூட்டத்துடன் துவங்குகிறது. அந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவில் மழை மற்றும் பனிப்பொழிவு பற்றிய முன்னறிவிப்புகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழை அல்லது பனிப்பொழிவைக் உருவாக்கவிருக்கும் வளிமண்டல நதியைப்பற்றிய கூடுதல் தரவுகளைக்கொண்டு மேம்படுத்தப்படக்கூடிய தகவல்கள் அந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றன. அவர்கள் பின்னர் அந்த வளிமண்டல நதிக்குப் பறந்து சென்று, தேவையான தரவுகளைத் தங்கள் கருவிகள் மூலம் சேகரிக்கின்றனர். "இந்த விமானங்களின் நோக்கம், செயற்கைக்கோள்கள் இவற்றைப் பார்ப்பதில் சிரமப்படும்போது, தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதாகும்," என்று வில்சன் கூறுகிறார். ஒவ்வொரு கல்ஃப்ஸ்ட்ரீம் விமானப் பயணமும் சுமார் எட்டு மணிநேரம் நீடிக்கும். மேலும் வில்சன் சொல்வது போல், உங்கள் சொந்த உணவைக் கொண்டு வருவது ஒரு முக்கியமான நடைமுறை தயாரிப்பு. கருவிகள் விமானத்தில் இருக்கும் குழுவிற்கு தரவுகளை அனுப்புகின்றன. விமானத்தில் இருப்பவர்கள் அதைச் சரிபார்த்து உலகளாவிய தொலைத்தொடர்பு அமைப்புக்கு அனுப்புகிறார்கள். இது உலகளாவிய வானிலை தொடர்பான தரவுகளைச் சேகரித்து விநியோகிக்கும் ஒரு வானிலை அமைப்புச் சேவை. செயற்கைக்கோள்கள் உட்படப் பல நூறு மில்லியன் பிற அவதானிப்புகளுடன் தரவுகளைப் பயன்படுத்தும் முன்கணிப்பு மாதிரிகள் இந்தத் தரவுகளை எடுத்துக்கொள்கின்றன. இப்போது மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகள், டிராப்சோன்ட் கருவிகளின் தரவு மூலம் மேம்படுத்தப்பட்டு, நீர்த்தேக்க நிர்வாகிகள் மற்றும் அவசரகால நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. டிராப்சோன்ட் (Dropsonde) கருவிகள் தரும் தரவுகள் உண்மையில் முன்னறிவிப்புகளை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று எதிர்காத்தில் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட் மற்றும் விமானப்படை விமானங்கள் இரண்டையும் உள்ளடக்கிய தினசரி விமானப் பயணங்களைப் பரிந்துரைக்கிறது. முடிந்தவரை அதிகமான தரவுகளைச் சேகரிக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. தகவல் சேகரிப்பதற்கும், வானிலை மாதிரிகள் உருவாக்கும் அமைப்புகளில் வேலை செய்வதற்கும், முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கும், தனிப்பட்ட புயல்கள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதற்கும் இந்தக் குழு மற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது. ஒரே நேரத்தில் பல பேரழிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கலிபோர்னியாவை தாக்கிய ஒரு வளிமண்டல நதியால் ஏற்பட்ட வெள்ளம் வளிமண்டல நதிகளைப் புரிந்துகொள்வதற்கான இந்த முயற்சி மிக அவசரமான தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் வளிமண்டல நதிககளின் தன்மை மாறி வருவதாகவும், அவை அடிக்கடி நிகழ்வதாகவும், அழிவுகரமானதாக மாறி வருவதாகவும் கூறுகின்றனர். மெங்கியான் லூ, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நீர்நிலையியல் மற்றும் நீர் வளங்கள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். அவரும் அவரது குழுவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் உலகளாவிய ஆய்வை வெளியிட்டனர். இது வளிமண்டல நதிகளின் எதிர்காலத் தீவிரம், எண்ணிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய மழை மற்றும் பனிப்பொழிவை உலகம் முழுவதும் நடக்கும் என்கிறது. அவர்களின் கணிப்புகள்படி, வளிமண்டல நதிகளின் உலகளாவிய எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஆனால் நிலத்தில் இதன் அர்த்தம் என்னவென்பது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. "பொதுவாக, அடிக்கடி நிகழும் வலிமையான வளிமண்டல நதிகள், அடிக்கடி மற்றும் வலுவான மழையைக் கொண்டு வருகின்றன. ஆனால் அனைத்து வளிமண்டல நதிகளும் மழையாக மாறும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் காலநிலை அமைப்புகள் நேரானவை அல்ல, மிகக் குழப்பமானவை," என்று லூ கூறுகிறார். காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடைவதால், அது ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கும். "இதன் விளைவாக அடிக்கடி நிகழும் வலுவான வளிமண்டல நதிகளை எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறுகிறார். வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் கொண்டு செல்வதில் அவற்றின் பங்கு காரணமாக, காலநிலை தொடர்ந்து வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் எவ்வாறு மாறும் என்பதை அறிவது புவி வெப்பமடைதலின் பரந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியம் என்று லூ கூறுகிறார். உதாரணமாக, வளிமண்டல ஆறுகள் வெப்பத்தைக் கொண்டு வருவதால் மேற்கு அன்டார்டிகாவில் பனியை உருகத் தூண்டுகின்றன. வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு உலகம் முழுவதும் அவற்றின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. கிழக்கு ஆசியாவில், அவை வெப்பமான பருவங்களில் 90% தீவிர மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. வளிமண்டல நதிகள் ஒரு பகுதிக்கு பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல்களையும், மற்றொரு பகுதிக்கு மழை மற்றும் கடுமையான வெள்ளங்களையும் கொண்டு வரக்கூடும் என்பதால், அவை பல இடங்களில் ஒரே நேரத்தில் பேரழிவு தரும் வானிலையை உருவாக்கக்கூடும். அவை காட்டுத்தீ போன்ற பிற பேரழிவுகளையும் உருவாக்கலாம். தாவரங்கள் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன. அவை வேகமாக தாவர வளர்ச்சியைத் தூண்டும், இது அடுத்த காட்டுத்தீக்கு எரிபொருளாக மாறும். அடுத்த பருவத்தில் எரிந்த பகுதிகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது ஒரு சுழற்சியாக மாறும் என ஆராய்ச்சி கூறுகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் ஒரு வளிமண்டல நதி கலிபோர்னியாவில் உள்ள சாண்டா யெனெஸ் பள்ளத்தாக்கிற்குள் நகர்கிறது அடுத்தடுத்து உருவாகும் வளிமண்டல நதிகள் முடிவில்லாத மழையைக் கொண்டு வருகின்றன. இது அடிக்கடி நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை, ஒன்பது வளிமண்டல நதிகள் கலிபோர்னியாவை வரிசையாகத் தாக்கின. இதன் விளைவாக வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்சாரத் தடை ஏற்பட்டது. ஒரு ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியபடி. இத்தகைய வளிமண்டல நதிகளின் நிகழ்வுகளுக்கு இடையில் நனைந்த மண் வறண்டு போகாது, இதனால் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. "அமெரிக்காவின் மேற்கில் நிகழும் வெள்ளச் சேதங்களில் 90% வளிமண்டல நதிகள் ஏற்படுத்தியவை. இதன் மொத்த மதிப்பு ஓராண்டுக்கு 100 கோடி இந்திய ரூபாய். இந்த எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மடங்காக ஆகலாம்," என்று குவான் கூறுகிறார். அவை எப்போதும் நீராவியை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. 2021ஆம் ஆண்டில், அவை ஆப்பிரிக்காவில் இருந்து சஹாரா பாலைவனத்தின் தூசியை ஐரோப்பாவிற்கு ஓட்டிச் சென்று, ஆல்ப்ஸ் மலையின் பனியை இருட்டாக்கி, அதன் பிரதிபலிப்பைக் குறைத்து, வெப்பத்தைக் கொண்டு வந்து, பனியின் ஆழத்தை 50% குறைத்தன. வளிமண்டல நதிகளை நாம் எவ்வாறு சமாளிக்க முடியும்? காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நாம் அடையாளம் காண வேண்டும் என்றும், புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராட இன்னும் நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவ் கூறுகிறார். முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பொது விழிப்புணர்வு மற்றும் மிகவும் துல்லியமான மற்றும் அதிநவீன வானிலை முன்னறிவிப்புகளும் நம்மைத் தயார்படுத்துவதில் முக்கியமானவை என்று அவர் கூறுகிறார். அத்துடன் வளிமண்டல நதிகளை முதலில் உருவாக்க எந்த வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்கிறார். இதற்கிடையில், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான டிராப்சோன்ட்கள் இந்த மர்மமான புயல்களைக் கண்காணிக்கின்றன. அவற்றை மேலும் கணிக்கக்கூடிய தரவுகளைச் சேகரிக்கின்றன என்பதை அறிவது குறைந்தபட்சம் ஆறுதலாக இருக்கலாம். இந்தப் பணி தனக்கு நம்பிக்கை அளிப்பதாகவும், குறிப்பாக கலிபோர்னியாவில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையம் போன்ற நிலத்தில் பதில் அளிப்பவர்களுடன் பணிபுரிவது நம்பிக்கையை அளிப்பதாகவும் ஆன்னா வில்சன் கூறுகிறார். "உடனடியாக பொருந்தக்கூடிய ஒரு பணியைச் செய்வது ஒரு விஞ்ஞானிக்கு மிகவும் அற்புதமான உணர்வு. இது மக்களுக்கு மிக அவசியமானதாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cyj3jmgj4mxo
  21. விடுதலைப் புலிகள் மீதான தடை அநீதியானது - உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 05:37 PM தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. அதற்குரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறித்துள்ளது. “2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித் திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயல்படுகிறது. அனைத்துத் தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.” ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுவதின் மூலம் அதை மெய்யாக்கிவிடும் முயற்சியில் கடந்தகாலங்களில் பதவியிலிருந்த இந்திய அரசுகளும், இப்போது பதவியில் இருக்கும் இந்திய அரசும் செயல்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதி மட்டுமே அடங்கிய தமிழீழ கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி போன்ற அறவழிப் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகளும், ஆயுதப் போராட்டம் நடத்திய போராளிகள் அமைப்புகளும் முன்வைத்தனவே தவிர, ஒருபோதும் இந்தியாவில் உள்ள எந்த பகுதியின் மீது அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, இறையாண்மைக்கோ எதிராக ஒருபோதும் விடுதலைப்புலிகள் செயல்பட்டதில்லை. மேலும் இந்தியாவின் பகை நாடுகளுடன் எந்த வகையான உறவையும் விடுதலைப்புலிகள் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிங்கள அரசு இந்தியாவின் பகை நாடுகளுடன் நெருங்கி உறவாடி, அந்நாடுகள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான தளங்களை அமைப்பதற்குத் துணையாக நிற்கிறது என்ற உண்மையைக்கூட இந்திய அரசு எண்ணிப்பார்க்க தவறிவிட்டது. இந்த உண்மையை உணர்ந்திருந்த காரணத்தினால்தான் இந்தியத் தலைமையமைச்சராக இந்திராகாந்தி அவர்கள் இருந்தபோது, சிங்கள அரசுக்கும், ஈழத் தமிழர் தலைவர்களுக்குமிடையே பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாண இந்தியாவின் சிறப்புத் தூதுவராக ஜி. பார்த்தசாரதி அவர்களை அனுப்பினார். அந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை செயல்படுத்தாமல் சிங்கள அரசு காலம் கடத்தி ஏமாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, ஈழப் போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து இந்திய இராணுவ முகாம்களிலேயே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, ஆயுதங்களும் வழங்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பித் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்த உண்மையைச் சிறிதும் உணராமல் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி சிங்கள அரசுடன் உடன்பாடு செய்து, அதன்படி போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கு இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பினார் என்பதும், அந்த உடன்பாடு படுதோல்வியடைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே ஆகும். 1991ஆம் ஆண்டில் இராசீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தப்பட்டு அவர்களின் இயக்கத்திற்கு முதல் தடை விதிக்கப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது. இராசீவ்காந்தியின் கொலை மற்றும் அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதித்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசினால் நீதிபதி ஜெயின் ஆணையம் அமைக்கப்பட்டது. இராசீவ் கொலையைப் பற்றி விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் செய்த தவறுகளை ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்ல, சந்திராசாமி உள்பட 21 நபர்கள் குறித்து தனது ஐயப்பாடுகளை பதிவு செய்து அவர்களையும் விசாரிக்கவேண்டும் என்றும் கூறியது. தலைமையமைச்சராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம், தலைமையமைச்சராக வாஜ்பாய் பொறுப்பேற்றப் பிறகு அவரின் அரசிடம் ஜெயின் ஆணையம் தனது இறுதி அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டதற்கிணங்க இராசீவ் கொலைப் பற்றி மீண்டும் முழுமையான புலனாய்வு செய்வதற்காக 1998ஆம் ஆண்டு பல்நோக்குப் புலனாய்வுக் குழு ஒன்றினை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி அமைத்தார். பல்நோக்கு விசாரணைக்குழு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது புலனாய்வை இறுதி செய்து அறிக்கை அளிக்கத் தவறிவிட்டது. ஜெயின் ஆணையம் சுட்டிக்காட்டிய நபர்கள் யாரையும் தனது விசாரணை வளையத்திற்குள் பல்நோக்கு விசாரணைக்குழு கொண்டுவந்து விசாரிக்கவே இல்லை. காலம் கடத்திய இந்த புலனாய்வுக் குழு இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது. இராசீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேர்களும் 31 ஆண்டு கால சட்டபோராட்டத்திற்குப் பின்னால் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் எனக் கூறுவதைவிட, தப்பிக்க விடப்பட்டார்கள் என்று கூறுவதே சரியானதாகும். இராசீவ் கொலையைக் காரணமாகக் காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்குப் புலனாய்வுக் குழு 20 ஆண்டு காலமாக யாரையும் கைது செய்யாமல் காலங் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடையை நீடிப்பது எந்த வகையிலும் நீதியின்பால் பட்டதல்ல. அநீதியான இந்தத் தடை விதிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183719
  22. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பமாகுமென நீதிமன்று அறிவிப்பு Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 05:03 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு விஜயரத்தினம் சரவணன் மே.16 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (16) இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது. இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. அத்தோடு, இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.ஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார். மேலும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனிதச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183706
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–associated membranous nephropathy linked to skin fairness cream use: insights from an Indian case series" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வுக் கட்டுரையை கேரளாவின் கோட்டக்கல்லில் உள்ள Aster MIMS மருத்துவமனையைச் சேர்ந்த ரஞ்சித் நாராயணன், சஜீஷ் சிவதாஸ் மற்றும் அனிலா ஆபிரகாம் குரியன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டிகள், உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்துகின்றன. Membranous Nephropathy, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த சிறிய வடிகட்டிகளைத் தாக்குகிறது. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும்போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, glomeruli எனப்படும் சிறுநீகரங்களில் உள்ள வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிறது. இதனால் அந்த வடிகட்டிகள் வீங்கத் துவங்கும். இதற்குப் பிறகு உடலின் ரத்தத்தை, இந்த வடிகட்டிகள் எந்த அளவுக்கு சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு சுத்தம் செய்யாது. இதனால், சிறுநீரில் புரதம் கசிய ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலையும் ஏற்படும். Membranous nephropathy என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதில், Neural Epidermal Growth factor - like Protein (NELL - 1) என்பது ஒரு காரணி. நாட்டு மருந்துகளை(Traditional Medicine) உட்கொள்வது, ஹெபடிடிஸ் - பி, சி பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த NELL - 1 ஏற்பட்டு சிறுநீரகங்களை பாதிக்கிறது. Membranous nephropathy பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 முதல் 8 சதவீதம் பேருக்கு இந்த NELL - 1 காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆங்கில நாளிதழ் ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இந்த ஆய்வு கோட்டக்கல்லில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஜூலை 2021லிருந்து செப்டம்பர் 2023வரை Membranous nephropathy பிரச்சனையுடன் வரும் நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு காரணம் இருந்தது. இந்த மருத்துவமனைக்கு Membranous nephropathy பாதிப்புடன் வந்தவர்களுக்கு சோதனை செய்தபோது, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு NELL - 1ன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. "அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு 14 வயதுப் பெண் Membranous nephropathy பாதிப்புடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்தம், சிறுநீரைச் சோதித்ததில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. பாதரசம் இடம்பெற்றிருக்கக்கூடிய மருந்துகள் எதையாவது அவர் சாப்பிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அது குறித்து விசாரித்தோம். ஆனால், அவர் அப்படி எந்த மருந்தையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த சிறுநீரகப் பிரச்னை வரக்கூடிய வேறு எந்தக் காரணிகளும் அவரிடம் இல்லை. இந்தப் பிரச்னைக்கான காரணம் தெரியாமல் சிகிச்சையைப் பெரிய அளவில் துவங்க வேண்டாம் எனக் கருதினோம்," என்கிறார் பிபிசியிடம் பேசிய இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அனிலா ஆபிரகாம் குரியன். இந்தத் தருணத்தில்தான், மும்பையில் இருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதையடுத்து அந்த நோயாளியிடம், தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியது குறித்துக் கேட்கப்பட்டது. அவர் அதை ஒப்புக்கொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆய்வில் இடம்பெற்ற முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு கோட்டக்கல் மருத்துவமனையில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளிடம் தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தினீர்களா எனக் கேட்கப்பட்டது. இந்த NELL 1 - MN நோயாளிகளில் 15 பேரில் 13 பேர் ஆண் - பெண் பேதமின்றி தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டனர். மீதமிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு நாட்டு மருந்து (Traditional Medicine) சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதற்குப் பிறகு இவர்களிடம் ரத்தத்தில் உலோகம் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது. 9 பேரின் ரத்தத்திலும் சிறுநீரிலும் பாதரசத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது. அந்த நோயாளிகள் எவ்வளவு நாள், எந்த க்ரீமை பயன்படுத்தியிருந்தார்கள் என்பதை வைத்து பாதரசத்தின் அளவு வேறுபட்டிருந்தது. இதற்குப் பிறகு இவர்கள் பயன்படுத்திய தோலை வெளுப்பாக்கும் க்ரீம்கள் சென்னையில் உள்ள ஓர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவை அனைத்திலுமே பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாக இருந்தது. 1 பிபிஎம் (Parts per million) மட்டுமே இருக்கலாம் என்ற நிலையில், 10,800 பிபிஎம் முதல் 21,900 பிபிஎம்வரை அந்த க்ரீம்களில் பாதரசம் இருந்தது. இந்த முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு, இந்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் துவங்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கிய சிகிச்சையான RAAS (renin-angiotensin-aldosterone system) சிகிச்சை துவங்கப்பட்டது. தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்துவதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவர்கள் இந்த க்ரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களில் இவர்களின் சிறுநீரகத்தின் நிலை முழுமையாக மேம்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. எதற்காக தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது? "பாதரசத்திற்கு தோலிற்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனினை நீக்கும் தன்மை உண்டு. அதனால், பாதரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், சிறுநீரகம் முழுமையாக சேதமடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும்" என்கிறார் டாக்டர் அனிலா. உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. தவிர, “இதுபோன்ற சிறுநீரக பிரச்னையுடன் வருபவர்கள் சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும் என்பதை இப்போதுதான் மருத்துவர்கள் உணர ஆரம்பித்திருப்பதால், பாதரசத்தைக் கொண்ட சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியாவதில்லை” என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. "சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். தவிர, கண்காணிப்பு அமைப்புகளும் இதுபோன்ற க்ரீம்களின் உள்ளடக்கம் குறித்து ஆய்வுசெய்து கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்" என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இயக்குநர் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன். இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இதுபோன்ற க்ரீம்களை பலரும் பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் எல்லோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை ஏன்? "ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தினாலும், நோய் ஏற்படுவதில் மரபணு, சூழல் போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலருக்கு ஏற்படுவதில்லை என்பதால், இதனால் பாதிப்பு இல்லை என விட்டுவிட முடியாது. புகைப் பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை. ஆனால், புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோலை வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். NELL - 1 எப்படி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது? NELL - 1 என்பது ஒரு antigen. அதாவது நோயெதிர்ப்புத் தன்மையைத் தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு. இந்த மூலக்கூறு, anti-bodyஐ ஏற்படுத்தும். அவை, சிறுநீரகத்தின் வடிகட்டிகளில் சேர ஆரம்பிக்கும்போது, அந்த வடிகட்டிகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். பொதுவாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த antigen ஏற்படும். ஆனால், புற்றுநோய் இல்லாமல் இந்த antigen உருவாகி சிறுநீரகத்தைப் பாதிக்கிறதென்றால், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அப்போதுதான் அதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்தியாவில், தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களின் தயாரிப்பு மதிப்பு சுமார் 0.45–0.53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தோல் வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் 1945ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் அடிப்படையில், இது தடை செய்யப்பட்டுள்ளது. 2017இல் இதில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அழகு சாதன பொருட்களின் பயன்படுத்தப்படும் பாதரச வரம்பு 1 ppm ஆக மாற்றப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் உள்ள ஒப்பனை விதிகள், 2020 இன் படி, பரிந்துரைக்கப்பட்ட பாதரச வரம்பு 1 பிபிஎம் ஆக இருக்க வேண்டும் என்றும், இது இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன பொருட்களுக்கும் பொருந்தும். https://www.bbc.com/tamil/articles/c4n1n9z9ypmo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.