Everything posted by ஏராளன்
-
அதிகரித்து வரும் இன்ஃப்ளூயன்ஸா : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். “வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன,” என்று அவர் கூறினார். “இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோயாளர் தொகை இரட்டிப்பாகியுள்ளன. நோய் அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://thinakkural.lk/article/301578
-
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன. இதேவேளை இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301557
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
அடுத்தடுத்து 7 வழக்குகள்: சவுக்கு சங்கர் கைதுக்குப் பிறகு நடந்தது என்ன? அவரது பின்னணி என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 13 மே 2024 ஏழு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் யூ டியூபரான சவுக்கு சங்கர், தற்போது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பேட்டியெடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? தேனியில் சவுக்கு சங்கர் கைது பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது பேட்டிகளை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலின் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். 'சவுக்கு' என்ற இணையதளத்தை நடத்தி வந்ததன் மூலம் அறியப்பட்ட ஏ. சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். இந்த அவதூறு கருத்துகள் தொடர்பாக மே மாதம் 3ஆம் தேதியன்று காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது 294 (B), 353, 509, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை மே 4ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோவை நகர சைபர் க்ரைம் காவல்துறை கைது செய்தது. போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு தேனியில் சங்கரை கைது செய்ய பழனிச்செட்டிப்பட்டி காவல் துறையினர் வந்த போது, சங்கர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் மேலும் சிலர் அளித்த தகவல்களின் அடிப்படையில் சங்கர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்ட போது அங்கிருந்து கஞ்சா, பணம் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்குப் பிறகு சங்கர், சங்கருடன் தங்கியிருந்த ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீதும் 294(b), 353, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகள் தவிர போதைப்பொருள் தடுப்பு தொடர்பான சில சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு சங்கரும் மற்ற இருவரும் காவல்துறை வாகனத்தில் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த வாகனம் திருப்பூர் தாராபுரம் அருகே விபத்திற்குள்ளானதில் வாகனத்தில் இருந்த காவலர்கள் உட்பட அனைவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, நீதிமன்றக் காவலில் சங்கர் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கரை மே 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, சென்னை தியாகராய நகரில் இருந்த அலுவலகம் ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது. சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது இந்த நிலையில், மே ஆறாம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் எஸ். கோபாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் சிறையில் சங்கர் தாக்கப்பட்டதாகவும் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்குப் பிறகு அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ததோடு, சங்கர் காயப்படுத்தப்பட்டிருப்பது குறித்து நீதித் துறை விசாரணை நடத்த வேண்டுமென கோரினார். சவுக்கு சங்கரும் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதற்குப் பிறகு, கோயம்புத்தூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் கோவைச் சிறைக்குச் சென்று இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப் பணிகள் ஆணையத்தின் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை சிறையில் சட்டப் பணிகள் ஆணையம் அளித்த அறிக்கையில், தனது வலது கையில் வலி இருப்பதாக சங்கர் கூறியதாகவும் அவருக்கு சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதற்குப் பிறகு சங்கர் மேலும் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக மே ஆறாம் தேதியன்று சேலத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் அளித்த புகார், மே எட்டாம் தேதியன்று முசிறியைச் சேர்ந்த காவல்துறை டிஎஸ்பி அளித்த புகார் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தமிழக முன்னேற்றப் படை என்ற கட்சியை நடத்தி வரும் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரில் மே எட்டாம் தேதி சங்கர் மீதும் சங்கரைப் பேட்டியெடுத்த யூ டியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி அவதூறாக எழுதிவருவதாக அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை அதே நாளில் பதிவுசெய்யப்பட்டது. மே பத்தாம் தேதியன்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரில் போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தவறான கருத்துகளை சங்கர் பரப்பிவருவதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சவுக்கு சங்கர் மீது ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அவரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு மே 12ஆம் தேதி அளிக்கப்பட்டது. டெல்லியில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சங்கர் தொடர்பான வழக்கில் தான் கைதுசெய்யப்படக்கூடும் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், யூ டியூப்களில் பேட்டி எடுப்பவர்கள், பேட்டி அளிப்பவர்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். ஆகவே அவர்களைத்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று கூறி, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது. இதையடுத்து, ஃபெலிக்ஸ் ஜெரால்டைக் கைது செய்யும் முயற்சிகளில் காவல்துறை இறங்கியது. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை அங்கு வைத்து திருச்சி மாவட்ட தனிப்படைக் காவல்துறையினர் மே10ம் தேதி இரவில் கைதுசெய்தனர். சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கூறுவது என்ன? இதற்கிடையில் கைக்கு சிகிச்சை பெறுவதற்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கிருந்த ஊடகங்களைப் பார்த்து, "கோயம்புத்தூர் சிறையின் கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் தனது கையை உடைத்ததாகவும் தான் சிறையிலேயே கொல்லப்படலாம்" என்றும் சத்தமிட்டார். சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் மிக ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அவரது பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்படுவதாகச் சொல்கிறார் அவரது வழக்கறிஞரான கோபாலகிருஷ்ணன். "எல்லா வழக்குகளும் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன. அதனால் அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. கையில் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, மூன்று இடங்களில் எலும்பு முறிவு இருந்தது தெரியவந்தது. அதற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாவுக்கட்டு போடப்பட்டது. இன்று மாவுக்கட்டு மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது போலீஸ் காவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அவருடைய பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறோம். வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இருக்கிறோம்" என்கிறார் கோபாலகிருஷ்ணன். சவுக்கு சங்கரின் பின்னணி என்ன? சவுக்கு சங்கர், தமிழ்நாடு அரசின் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் எஸ். கே. உபாத்தியாய்க்கும் தலைமைச் செயலாளர் எல். கே. திரிபாதிக்கும் இடையே நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடலின் குரல் பதிவை கசியவிட்டதாக இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு சவுக்கு என்ற பெயரில் வலைபதிவு பக்கம் ஒன்றைத் துவங்கி, அதில் எழுத ஆரம்பித்தார். 2010ஆம் ஆண்டில் அவர் எழுதிய பதிவு ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு சவுக்கு என்ற பெயரில் இணைய தளம் ஒன்றைத் துவங்கி, அதில் தனது கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். இந்நிலையில், அந்த இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு நடத்திவந்த இணையதளத்தை முடக்க உத்தரவிட்டது. இதற்குப் பிறகு தனது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து எழுதி வந்த சவுக்கு சங்கர், யூ டியூப் சேனல்களிலும் பேட்டிகளை அளித்துவந்தார். இதற்குப் பிறகு, 2022 செப்டம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், பிணையில் விடுவிக்கப்பட்டார். இதற்குச் சில மாதங்களுக்குப் பின், சவுக்கு மீடியா (ஓபிசி) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் சார்பில் இணையதளம் ஒன்றும் யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில்தான், வேறு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். தவறான முன்னுதாரணம் என்று அதிமுக கருத்து சவுக்கு சங்கர் நீண்ட காலமாகவே தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துவந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. "சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகி விடும்" என இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி. "சவுக்கு சங்கர் தனிப்பட்ட முறையில் காவல்துறையினர் குறித்து பேசியது தவறு. எந்த ஒரு அதிகாரியையோ, பொத்தாம்பொதுவாக காவல்துறையையோ தனிப்பட்ட முறையில் மோசமாகப் பேசுவது ஏற்க முடியாதது. ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு அவர் சிறையில் தாக்கப்பட்டது, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் இப்போது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வது, குண்டர் சட்டத்தில் கைது செய்வதெல்லாம் உள்நோக்கம் உடையது. அவர் தொடர்ந்து ஆளுங்கட்சியை விமர்சித்து வந்தார். இப்போது அவரைக் கைது செய்யும் வாய்ப்புக் கிடைத்தவுடன், அவரை முழுமையாக முடக்குவதற்காக இதைச் செய்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்வரை அவரை முடக்கி வைக்க நினைக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதைப் போல காட்டிக்கொள்கிறார்கள்" என்கிறார் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார். திமுக கூறுவது என்ன? ஆனால், இந்தக் கைது நடவடிக்கைக்கும் தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "சவுக்கு இப்போதுதானா தி.மு.கவை விமர்சித்துப் பேசுகிறார். தி.மு.க. என்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததோ, அப்போதிலிருந்து படுமோசமாக, தரமற்றவகையில் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், தி.மு.க. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய பேச்சுகள் வெறுப்புப் பேச்சுக்கு ஒப்பானவை. கைதுசெய்யக்கூடிய வகையிலேயே அவர் பேசியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார். ஆகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கைதை நீதிமன்றமும் ஒப்புக்கொண்டிருக்கிறது ஆனால், இது தி.மு.கவுக்கு சம்பந்தமில்லாத வழக்கு. சவுக்கு சங்கர் போன்றவர்களை தி.மு.க. ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன். "கருத்து சுதந்திரத்தின் எல்லையை காவல்துறை நிர்ணயிப்பதா?" கருத்து சுதந்திரத்தின் எல்லையை காவல்துறை நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "இங்கே கருத்து சுதந்திரத்தின் எல்லையை தமிழ்நாடு காவல்துறைதான் நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு மோசடிக்கும் ஒரு சட்டம் இருக்கிறது. அவதூறாகப் பேசினால் சிவில் அவதூறு வழக்குகளோ, கிரிமினல் அவதூறு வழக்குகளோ தொடரலாம். இதற்காகவெல்லாம் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி கருத்து ஆனால், இது மிகச் சரியான நடவடிக்கை என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான ஜி. திலகவதி. "ஒருவர் காவல் துறையில் இருக்கும் அனைத்து பெண்களின் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் பேசும்போது வேறு எப்படிச் செயல்படுவது? காவல் துறையில் வேலைக்கு வரும் பெண்கள் பல தடைகளைத் தாண்டி வேலைக்கு வருகிறார்கள். இது ஒரு வழக்கமான பணியில்லை. கணவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, மாமியாருக்கு பதில் சொல்லிவிட்டு பணிக்கு வர வேண்டும். காவல் துறை பணியும் மிகக் கடுமையானது. அப்படியிருக்கும்போது இவர் எல்லோரையும் பொத்தாம்பொதுவாக பாலியல் ரீதியாக குற்றம்சாட்டுகிறார். டிஎஸ்பி பணிக்கு வருபவர்கள், 'க்ரூப் 1' தேர்ச்சி பெற்று பணிக்கு வருகிறார்கள். அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். இதுபோல பேசும் நபர்களை வேறு என்ன செய்வது? யு டியூபில் வேறு சிலரும் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்" என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான திலகவதி. "சவுக்கு சங்கரை எந்த காலத்திலும் ஆதரிக்க முடியாது" சவுக்கு சங்கரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்றாலும், அரசு வழக்குகள் மூலமே அதனை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன். "சவுக்கு சங்கரைப் பொருத்தவரை அவர் யாருடைய குரலாகவும் ஒலிக்கத் தயங்காதவர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அவர் ஆதரிக்கும் வகையில் பேசினார். கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி செல்லும் பெண் இறந்துபோனதை கொச்சைப்படுத்திப் பேசினார். அவர் மற்றவர்களைப் பற்றிப் தொனியே மிக மோசமாகவும் மிகுந்த அகங்காரத்துடனும் ஒலிக்கும். ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசும் போது அதில் முறைப்படி வழக்குப் பதிவுசெய்து, தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அரசு என்பது மிக வலிமையானது. தனி மனிதர்கள் சிறியவர்கள். அவர்களை எதிர்கொள்ளும்போது அரசு அதற்கேற்ற வகையில் செயல்படவேண்டும். ஆனால், அவரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை" என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரி பரந்தாமன். சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் தற்போது சவுக்கு சங்கரை போலீஸ் தனது காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் செவ்வாய் கிழமை மாலை 5 மணிவரை அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/ckdqqxqxgw7o
-
மது அருந்தாமலேயே போதை ஏற்றும் விநோத நோய் - உடலுக்குள் ஆல்கஹால் உற்பத்தியாவது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே பதவி, பிபிசி உலக சேவை 13 மே 2024 சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் ஒருவர், சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டி மூன்று மடங்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அன்று அவர் மது அருந்தவில்லை. மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் இதை அவர் நிரூபித்தார். 40 வயதான ரே லீவிஸ், குடல் நொதித்தல் (Auto-brewery syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தானாக ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது. ரே லீவிஸ் பெல்ஜியத்தை பூர்வீகமாக கொண்டவர். 2014 டிசம்பரில் அமெரிக்காவில் மீன் மற்றும் வனவிலங்கு துறையில் உயிரியல் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி கொண்டிருந்த போது தான் இந்த அசம்பாவிதம் நடந்தது. மீன் மற்றும் வன விலங்கு துறைக்கு சொந்தமான 11,000 உயிருள்ள சால்மன் மீன்கள் ஏற்றப்பட்ட டிரக்கை லீவிஸ் ஓட்டி சென்றார். அப்போது நேரிட்ட விபத்தில் டிரக் கவிழ்ந்தது. அதன் பின்னர், அமெரிக்காவில் ஒரேகானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரே லீவிஸ் அனுமதிக்கப்பட்டார். போதை தெளிந்து எழுந்த போது அவருக்கு இரண்டு விஷயங்கள் உறுதியாக நினைவில் இருந்தது. முதலாவதாக, அவர் பணியாற்றிய மீன் மற்றும் வனவிலங்கு துறைக்கு சொந்தமான 11,000 உயிருள்ள சால்மன் மீன்களை ஏற்றிச் சென்ற டிரக் விபத்தில் சிக்கியதால் பெரிய சிக்கலில் இருக்கிறார். பட மூலாதாரம்,COURTESY OF RAY LEWIS படக்குறிப்பு,ரே லீவிஸ் தனது ஏபிஎஸ் நோயை சமாளிக்க உதவிய லாப்ரடூடுல் நாய் இரண்டாவதாக, அவருக்கு ரத்தத்தில் அதிக அளவு ஆல்கஹால் இருந்ததாக காவல்துறை சோதனை கருவி மூலம் பதிவு செய்த போதிலும், விபத்து நடந்த அன்று இரவு அவர் மது அருந்தவில்லை. "நான் நிச்சயமாக ஒரு துளி மதுவை கூடத் தொடவில்லை, எனக்கு நன்றாக தெரியும், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, பனி இரவில், ஒரு பெரிய டிரக்குடன் சாலையில் பயணிக்க போகிறேன் என்பது. அப்படியிருக்க நான் எப்படி மது குடிப்பேன்?" என்று 54 வயதான அவர் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார். விபத்து நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகுதான் உண்மை வெளியானது, ரே லீவிஸுக்கு குடல் நொதித்தல் (Auto-brewery syndrome) எனப்படும் அரிதான நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் உடல் தானாகவே ஆல்கஹால் உற்பத்தி செய்து அவருக்கு போதை ஏற்படுத்தியிருக்கிறது. (2014 இல் ரேயின் விபத்து ஏற்படுத்திய விளைவை பதிவு செய்த, அமெரிக்க தொலைக்காட்சி சேனலான ஃபாக்ஸ் 13 சியாட்டலின் சமூக பகிர்வு ) Twitter பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு குடல் நொதித்தல் நோய் என்றால் என்ன? ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் (ஏபிஎஸ்) அல்லது குடல் நொதித்தல் நோய் (Gut fermentation syndrome -GFS) என்பது ஒரு மர்மமான நோய் ஆகும். இது இரத்தத்தில் ஆல்கஹால் அளவை உயர்த்துகிறது. நோயாளி குறைவாக மது அருந்தி இருந்தாலும் அல்லது மது அருந்தாமல் இருந்தாலும் கூட, அதீத போதை அறிகுறிகளை அவரின் உடலில் ஏற்படுத்துகிறது. குடல், சிறுநீர் அமைப்பு அல்லது வாய் பகுதிகளில் உள்ள பாக்டீரியாக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை ஆல்கஹாலாக மாற்றும்போது இந்த நிலை ஏற்படும். இது `உட்புற ஆல்கஹால் உற்பத்தி’ (endogenous alcohol production) என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் நிலையில், நோயாளிகளுக்கு மந்தமான பேச்சு, நிலையற்ற நடை துர்நாற்றம், போதை ஆகியவை ஏற்படும். 1940களில் ஒரு சிறுவன் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன. உகாண்டா மருத்துவமனையில் மருத்துவர்கள் 5 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகளை பார்த்து அதிர்ந்து போயினர். வயிறு வெடித்து இறந்து போன அந்த சிறுவனின் வயிற்று பகுதியை அறுவை சிகிச்சை செய்து பார்த்த போது, அதிலிருந்து ஆல்கஹால் வாசனை வீசியது. இந்த பிரேத பரிசோதனையின் முடிவு பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாக்கரோமைசஸ் செரிவிசியா என்ற பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் மிகக் குறைந்த அளவில் ஆல்கஹால் உற்பத்தி செய்யும், ஆனால் மிக அரிதாக சிலரின் உடலில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஏபிஎஸ் நோய் யாருக்கெல்லாம் வரும்? குடல் நொதித்தல் நோய்நிலை மிகவும் அரிதானது. அமெரிக்க இரைப்பை குடலியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வின்படி, இதுவரை அமெரிக்காவில் 100 க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் ஏபிஎஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நிபுணர்கள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் இந்த குடல் நொதித்தல் நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. செரிமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக மனித உடல், குடலில் சிறிய அளவிலான ஆல்கஹால் உற்பத்தி செய்வது இயற்கையான நிலை. ஆனால் இது முதல்-பாஸ் வளர்சிதை மாற்றம் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் இரத்த ஓட்டத்தில் நுழைவதற்கு முன்பே அகற்றப்படுகிறது. "மனித உடலில் இயற்கையாகவே சிறிது அளவு மது உற்பத்தி ஆகும், ஆனால் குடல் நொதித்தல் நோய் உடைய ஒருவருக்கு அதிக அளவில் மது உற்பத்தி ஆகி இரத்த ஓட்டத்தில் கலக்கும்" என்று போர்ச்சுகலைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ ஆலோசகரும் தடயவியல் நிபுணருமான டாக்டர் ரிக்கார்டோ ஜார்ஜ் டினிஸ்-ஒலிவேரா விளக்குகிறார். இவர் ஏபிஎஸ் நிலை குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டவர். "துரதிர்ஷ்டவசமாக, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறிய, ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு போன்ற கடுமையான அத்தியாயத்தை கடக்க வேண்டியிருக்கும்." என்கிறார். ரிக்கார்டோ, ஏபிஎஸ்ஸை "வளர்சிதை மாற்ற புயல்" என்று அழைக்கிறார். அதாவது உடலில் ஒரே நேரத்தில் நடக்கும் பல விஷயங்களால் இந்த நிலை தூண்டப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலாவதாக, நீரிழிவு, உடல் பருமன் அல்லது கிரோன் நோய் போன்ற பாதிப்புகள் இருக்கும் நபருக்கு குடல் நொதித்தல் நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இரண்டாவதாக, நோயாளிகள் அடிக்கடி உட்கொள்ளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் போன்ற மருந்துகளின் பின்விளைவாக இந்த நிலை ஏற்படலாம். அதாவது, குடலில் வாழும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளை பாதிக்கக் கூடிய மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டால் குடல் நொதித்தல் நிலை ஏற்படலாம். ஏபிஎஸ் உடன் வாழ்ந்த செவிலியர் அமெரிக்க செவிலியர் ஜோ கோர்டெல், ஒரு குடும்ப விருந்தை முடித்து விட்டு திரும்பும் போது, அவரது வார்த்தைகள் தடுமாறியது. பேச முடியாமல் திக்கினார். தான் அதிகமாக வான்கோழி இறைச்சி சாப்பிட்டதால் இப்படி ஏற்படுகிறது என்று நினைத்தார். அதன் பின்னர், அவர் பணிபுரிந்த டெக்சாஸ் மருத்துவமனையில் சக ஊழியர் ஒருவர் ஜோ கோர்டெல் பணியின் போது குடிபோதையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் பணிநீக்கம் செய்யப்பட்டார். 75 வயதான கோர்டெல் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார், "நான் சுவாசிக்கும் போது ஆல்கஹால் வாசனை இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நான் `குடிகாரர்’ என்று என்னை சுற்றி இருந்தவர்கள் நினைத்தார்கள். நான் தலைகுனிந்து நின்றேன். வெட்கமாக இருந்தது. என் வேலையை நான் மிகவும் நேசித்தேன். பணியின் போது ஒரு நாளும் தவறு செய்ததில்லை" என்றார். பட மூலாதாரம்,COURTESY OF BARBARA CORDELL படக்குறிப்பு,ஜோ கோர்டெல் மற்றும் பார்பரா கோர்டெல் ஆரம்பத்தில், அவரது மனைவி பார்பரா கூட அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சந்தேகித்தார். சக செவிலியரான அவர், தனது கணவரை நம்பலாமா வேண்டாமா என்று தவித்தார். வீட்டில் மது பாட்டில்களை மறைத்து வைத்திருப்பார் என்று சந்தேகித்து வீடு முழுக்க தேடினார். ஏற்கனவே இருக்கும் மதுபாட்டில்கள் அளவையும் கண்காணித்தார். கோர்டெலை தொடர்ந்து நோட்டமிட தொடங்கினார். "நான் முதலில் என் கணவரை சந்தேகித்தேன். எங்களிடம் இருந்த மது பாட்டிலில் மதுவின் அளவை நான் குறித்து வைத்தேன். ஆனால் அவை குறையவே இல்லை" ஜோ கோர்டெல் தன் மீது எழும் குற்றச்சாட்டுகளால் பதற்றமானார். அவரது வாழ்வில் இந்த மது போதை அத்தியாயம் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்கிறார். "அனைத்தும் மிகவும் குழப்பமாக இருந்தது. இந்த சம்பவங்கள் என்னை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதித்தது" என்று அவர் கூறுகிறார். ஜோ கோர்டெலுக்கு ஏபிஎஸ் எனப்படும் குடல் நொதித்தல் நோய் இருப்பது 2010 இல் கண்டறியப்பட்டது. அறிகுறிகள் தோன்றி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏபிஎஸ் இருப்பது தெரிந்தது. அதன் பின்னர் அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் தினமும் இரத்த ஆல்கஹால் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. பல்வேறு தேடலுக்கு பிறகு, 850 உறுப்பினர்களைக் கொண்ட ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் ஆதரவுக் குழுவை பார்பரா கண்டுபிடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைப்பது ஏபிஎஸ்ஸைக் கட்டுப்படுத்த உதவும் "மது போதை தானாக ஏற்படுகிறது என்று சொல்லும் நோயாளிகள் பெரும்பாலான மருத்துவர்களால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகளை நம்பாமல் பலர் மோசமாக தூற்றுகின்றனர். மதுபோதையில் உளறுவதாக அவமானப்படுத்துகின்றனர். பொய்யர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இல்லையெனில் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள்." என்கிறார் பார்பரா. சிகிச்சையைத் தொடங்கியவுடன், தன்னுடன் சிகிச்சை பெற்ற பலர் நோயின் அறிகுறிகளை குறைக்க உதவுமாறு கோரிக்கை வைத்ததாக ஜோ கோர்டெல் கூறுகிறார். "ஆனால், காலப்போக்கில் நோயை குணமாக்கும் உணர்வுகளைத் தவிர்ப்பதற்காக குடிப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்." என்கிறார் ஜோ. "சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் பசியின் அளவு அதிகமாக இருந்தது. இப்போது நான் 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இன்றி நலமாக இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். ஏபிஎஸ் எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது? மருத்துவர்கள் முதலில் மதுபோதை அறிகுறிகளின் பிற சாத்தியமான காரணங்களை கண்டறிகின்றனர். பின்னர் அவர்கள் ஆய்வக சோதனைகளை நடத்தி நோயாளியின் செரிமான அமைப்பில் பாக்டீரியாக்களின் இருப்பை பகுப்பாய்வு செய்கின்றனர். ஆல்கஹால் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளின் அசாதாரண இருப்பை பகுப்பாய்வு செய்வார். அடிக்கடி குளுக்கோஸ் சவால் சோதனையை (glucose challenge test) நடத்துவார்கள். அதன்படி நோயாளி கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் அல்லது வெறும் வயிற்றில் குளுக்கோஸை உட்கொள்ள வேண்டும். சில மணி நேரத்திற்கு பிறகு, ஏபிஎஸ் பாதிப்பு இல்லாதவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவைக் கண்டறிய முடியாது. அதே நேரத்தில் ஏபிஎஸ் உள்ளவர்கள் உயர்ந்த அளவைக் கொண்டிருப்பார்கள். டாக்டர் டினிஸ்-ஒலிவேரா கூறுகையில், "பொதுவாக மருந்துகளின் கலவை, குறைந்த கார்போஹைட்ரேட் உணவு, குடல் நுண்ணுயிர்களை ஒழுங்குபடுத்தும் உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் ஏபிஎஸ் நிலையை கட்டுப்படுத்தலாம்." என்றார். பட மூலாதாரம்,COURTESY OF RAY LEWIS படக்குறிப்பு,ரே மற்றும் அவரின் நாய் இதை பின்பற்றிய ஜோவுக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக ஏபிஎஸ் பாதிப்பு மீண்டும் ஏற்படவில்லை. அதே சமயம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவை உட்கொண்டு, மது பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்ட ரே லீவிஸ் இன்னும் சில பக்க விளைவுகளுடன் போராடுகிறார். இருப்பினும் அவருக்கு 2020 முதல் ஏபிஎஸ் பாதிப்பு அதிக அளவில் இல்லை. ரே லீவிஸ் தனது நிலையை சமாளிப்பதற்கு மற்றொரு வழியைக் கண்டுபிடித்தார் - `மியா’ என்ற நாய் அவருக்கு உதவியது. லாப்ரடூடுல் ரகமான மியா, ரேயின் உடலில் மதுவின் அளவு அதிகரிக்க தொடங்கும் ஆரம்ப நிலைகள் உட்பட ரசாயன மாற்றங்களை உணர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ரேயின் உடலில் மாற்றத்தை கண்டறிந்தால், ரேயின் முன்னால் நின்று மியா உன்னிப்பாகப் பார்க்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES "மியா என்னை சோதிப்பதற்கு முன், நான் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன், ஏனென்றால் எனக்கு அல்லது பிறருக்கு என் மது போதையால் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருக்கும்." என்று ரே கூறுகிறார். "எனக்கு விபத்து ஏற்பட்டபோது அதிர்ஷ்டவசமாக நான் யார் மீதும் மோதவில்லை, ஆனால் என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன்." ஏபிஎஸ் பாதிப்பால் விபத்து ஏற்படுத்திய ரே மீது தவறில்லை என்பதை நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ரே வேலையை இழந்தார். வாகனம் ஓட்டும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. "நீதிமன்றங்கள் என்ன முடிவு செய்தாலும், எனக்கு எஞ்சியிருப்பது சரியானவற்றுக்காக போராடுவது மட்டும் தான்." என்கிறார் ரே. அவரும் அவரது மனைவி சியராவும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்கள். எப்படி இருந்தாலும் ஏபிஎஸ் இருப்பதால் ரே -வுக்கு மீண்டும் வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவர் நம்பிக்கையை, நகைச்சுவை உணர்வை இழக்கவில்லை. "ஏபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக மதுபோதையை அனுபவிப்பார்கள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள், ஆனால் நான் அதன் `ஹேங்க் ஓவர்’ பகுதியை மட்டுமே அனுபவித்தேன்” என்றார். https://www.bbc.com/tamil/articles/cv27y7yzw85o
-
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு: சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க முடியாது - அரச அதிபர்
Published By: VISHNU 14 MAY, 2024 | 02:42 AM மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அவசர கூட்டம் திங்கட்கிழமை (13) மதியம் 2 மணி முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சாலிய உள்ளடங்களாக குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக் கொள்ளும் வகையில்,குறித்த நிறுவனத்தினர் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழு,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகள்,சமூக மட்ட அமைப்புகள் திணைக்கள தலைவர்கள், கலந்து கொண்டிருந்தார்கள். இதன் போது அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிட்டெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக திட்டம் தொடர்பாக மக்களுக்கு முன் வைக்கப்பட்டது.இதன் போது மன்னாரிற்கு குறித்த திட்டத்தினால் பாரிய பாதிப்புகள் உள்ளமை குறித்து மக்களாலும்,பொது அமைப்புகளின் பிரதி நிதிகளினாலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறித்த திட்டம் மன்னாரில் அமுல் படுத்தும் பட்சத்தில் மன்னாரில் பாரியைப் பாதிப்புகள் ஏற்படும் என்ற விடையத்தைச் சுட்டிக்காட்டினார். அவரது கருத்தை வருகை தந்த பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரஜைகள் குழுவினர் வரவேற்றனர். இதேவேளை மன்னார் தீவில் குறித்த திட்டத்தை அமுல் படுத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் மன்னார் தீவைத் தவிர்த்து வேறு நிலப்பரப்பில் குறித்த திட்டம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்குவது என்றும் மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவு வழங்காத நிலையில் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க முடியாது எனப் பொதுமக்கள் உறுதிய உள்ள காரணத்தினால் குறித்த கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. மன்னார் தீவில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாததன் காரணத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிக்கை மூலம் தெரியப்படுத்த உள்ளதாக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட சமூக மட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/183462
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கடும் மழையினால் ஐபிஎல்லில் குஜராத்தின் ப்ளே ஓவ் வாய்ப்பு பறினோனது; கொல்கத்தாவுடன் அடுத்த 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி Published By: VISHNU 14 MAY, 2024 | 02:05 AM (நெவில் அன்தனி) அஹமதாபாத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையிலான இண்டியன் பிறீமியர் லீக்கின் 63ஆவது போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் குஜராத்தின் ப்ளே ஓவ் வாய்ப்பு அற்றுப்போனது. இப் போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதற்கு அமைய குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில் 11 புள்ளிகளைப் பெற்று முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இப்போதைக்கு 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அவ்வணி மாத்திரமே ப்ளே ஒவ்வில் விளையாடுவதை இப்போதைக்கு உறுதிசெய்துகொண்டுள்ளது. அணிகள் நிலையில் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ள ராஜஸ்தான் றோயல்ஸுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது. அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் ராஜஸ்தான் றோயல்ஸ் ப்ளே வாய்ப்பை உறுதிசெய்துகொள்ளும். 14 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு ஒரே ஒரு போட்டியே மீதம் இருக்கிறது. 12 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெற்றாலும் அந்த அணிக்கு ப்ளே ஓவ் வாப்ப்பு கிடைக்கும் என்று கூறமுடியாது. ஏனேனில் 14 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு 2 போட்டிகள் மீதம் இருப்பதுடன் 12 புள்ளிகளுன் 7ஆம் இடத்திலுள்ள லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸுக்கும் 2 போட்டிகள் மீதமிருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றிபெற்று 16 புள்ளிகளைப் பெற்றால் சென்னை சுப்பர் கி;ங்ஸுக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் திண்டாட்டம்தான். இங்கு குறிப்பிடப்பட்ட 5 அணிகளில் ஏதாவது 3 அணிகள் 14 புள்ளிகளுக்கு அப்பால் பெறாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தனது கடைசிப் போட்டியில் அதிசிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றிகொண்டால் டெல்ஹி நான்காவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும். ஆக, இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மாத்திரம் ப்ளே ஒவ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டுள்ள நிலையில் ப்ளே ஓவுக்கான அடுத்த 3 இடங்களுக்கு ஆறு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. https://www.virakesari.lk/article/183457
-
ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி நியூஸ் 13 மே 2024, 04:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும்?’ என்று அமெரிக்க அதிபர் பைடனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பைடன், “அப்படியென்றால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை," என்றார். ஆயுத ஏற்றுமதி தான் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணியின் அடித்தளமாக இருக்கிறது. பைடனின் இந்த பதிலால், கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா- இஸ்ரேல் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது. காஸாவில் அதிகளவில் பொதுமக்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்தவும், அங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி நிலையை சரிசெய்யவும், அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பைடனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்துவது என்ற முடிவை இறுதியாக எட்டியுள்ளார் பைடன். 1980களில், அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் ஆட்சியில் தான் இதே போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த முடிவால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பதிலடி என்ன? பைடனின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் ஆதரவு உள்ளதா? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,18 அக்டோபர் 2023 அன்று டெல் அவீவ் நகரின் பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். 'அரசியல் மோதலில் சிக்கியுள்ள பைடன்' இஸ்ரேல்- காஸா போரின் தொடக்கத்தில் இருந்தே, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும், தனது சொந்த கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான ஒரு அரசியல் மோதலில் பைடன் சிக்கியுள்ளார் என்று முன்னாள் வெளியுறவு ஆய்வாளரும், மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த நிபுணருமான ஆரோன் டேவிட் மில்லர் கூறுகிறார். “இப்போது வரை, அமெரிக்க- இஸ்ரேல் உறவை சீர்குலைக்கும் வகையில் எந்த நடவடிக்கையையும் எடுக்க பைடன் தயக்கம் காட்டி வந்தார்” என்கிறார் மில்லர். ரஃபா மீது படையெடுக்கும் முடிவை இஸ்ரேல் விரைவில் எடுக்கப்போகிறது என்ற தகவல் வெளியான பிறகு, பைடனின் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. திங்களன்று தனது தரைப்படைகள் ரஃபா நகரின் கிழக்குப் பகுதியில் ‘ஒரு இலக்கு நடவடிக்கையை’ ஆரம்பித்துள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே இஸ்ரேலிய டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது. அதே சமயத்தில் அரிதாகவே இயங்கும் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், ஷெல் குண்டுகளின் சத்தம் தொடர்ந்து கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். 1,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர் என்றும், தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகள் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சபையின் அறிக்கை கூறுகிறது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலத்தீனிய அகதிகள் வசிக்கும் ரஃபா நகரம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,24 ஏப்ரல் 2024 அன்று ரஃபாவில் இடிபாடுகள் வழியாக நடந்து செல்லும் ஒரு பெண். போர் நிறுத்தம் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தாலும் கூட, ரஃபாவில் பதுங்கியுள்ள ஹமாஸின் நான்கு படைப்பிரிவுகளையும் அழிக்க ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கை அவசியம் எனவும் அதனால் முழு அளவிலான தரைவழித் தாக்குதல் அங்கு நடத்தப்படும் எனவும் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார். ரஃபாவில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமென நெதன்யாகுவை அமெரிக்க அரசு தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியுள்ளது. ரஃபா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு, போரை நிறுத்துவதற்கான வாய்ப்பையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வாய்ப்பையும் பாதிக்கும் என்று அதிபர் பைடன் அஞ்சுவதாக மில்லர் கூறுகிறார். (மில்லர், பைடனின் நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக ஆலோசனை வழங்கிய முன்னாள் அரசு ஆலோசகரும் கூட) “எகிப்து நாட்டுடன் ஒரு புதிய சிக்கல் உருவாவதையும் தவிர்க்க விரும்புகிறார் பைடன். அது மட்டுமல்லாது இஸ்ரேலின் ரஃபா படையெடுப்பு பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் பதற்றங்களையும், பிளவுகளையும் அதிகரிக்கும்” என்று எச்சரிக்கிறார் மில்லர். "இதனால் தான் இஸ்ரேலுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பினார் பைடன்", என்கிறார் மில்லர். பட மூலாதாரம்,AFP இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு புதன்கிழமை ஒளிபரப்பான பைடனின் தொலைக்காட்சி நேர்காணலுக்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு செல்ல வேண்டிய ஒரு ஆயுதக் கப்பலை நிறுத்தி வைத்தது அமெரிக்கா. அதில் இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டிய 2,000-பவுண்டு மற்றும் 500-பவுண்டு வெடிகுண்டுகள் இருந்தன. ஒரு மூத்த நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களை மக்கள் நெருக்கமாக வாழும் நகர அமைப்புகளின் மீது பயன்படுத்தும்போது, காஸாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டது போல மோசமான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்ற கவலையும் உள்ளது என்கிறார். 2,000 பவுண்ட் குண்டுகள் இஸ்ரேலின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் அழிவுகரமான ஆயுதங்களில் ஒன்றாகும். ஹமாஸை ஒழிக்க இத்தகைய ஆயுதங்கள் அவசியம் என்று இஸ்ரேலிய இராணுவம் வாதிடுகிறது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க வெளியுறவுத்துறை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பைடனால் உத்தரவிடப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், காஸா போரின் போது சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கான மதிப்பீட்டில் ‘முழுமையான தகவல்கள்’ இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியது, எனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கான இராணுவ உதவியைத் தொடரலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய கிழக்கு பகுதிக்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்த, முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர் கர்னல் ஜோ புசினோ, “இஸ்ரேலிய ராணுவம் ஏற்கனவே தன்னிடம் உள்ள வெடிமருந்துகளைக் கொண்டே ரஃபாவை தரைமட்டமாக்க முடியும்” என்று கூறுகிறார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை வழங்குகிறது. சமீபத்தில் மேலும் 17 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் வரலாற்றில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடமிருந்து அதிக ராணுவ உதவியைப் பெற்ற நாடாக உள்ளது இஸ்ரேல். இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டிய ஒரு ஆயுதக் கப்பலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று கர்னல் புசினோ கூறுகிறார். "இஸ்ரேல் மீது அதிருப்தியில் உள்ள அமெரிக்க மக்களுக்காக நடத்தப்படும் ஒரு சிறிய அரசியல் நாடகம் இது" என்று அவர் கூறுகிறார். இது உண்மையோ பொய்யோ ஆனால், அதிபர் பைடனின் இந்த செயலுக்கான தாக்கம் அமெரிக்க அரசியலில் குறைவில்லாமல் இருக்கிறது. அமெரிக்க செனட் சபைகளில் குடியரசுக் கட்சியினரின் கோபம் வெளிப்பட்டது. "அந்த ஆயுத இடைநிறுத்தம் முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று நான் நினைக்கிறேன். இதைச் செய்ய வேண்டிய அவசியம் அதிபருக்கு இல்லை" என்று அமெரிக்க செனட்டர் பீட் ரிக்கெட்ஸ் கூறுகிறார். ரஃபா மீது ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று அவரிடம் சொன்னபோது, "ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் நமது நட்பு நாடான இஸ்ரேலை ஆதரிப்பது பற்றிய பிரச்னை இது. எனவே அந்த கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டும்" என்று அவர் கூறினார். குடியரசுக் கட்சியின் மற்றொரு செனட்டரான ஜான் பர்ராசோ, "தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எது அவசியம் என அவர்கள் நினைக்கிறார்களோ, அதைச் செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. பைடனின் இந்தச் செயல் ஒரு விஷயத்தை நிரூபித்திருக்கிறது. அதாவது இந்த அதிபருக்கு ஒரு பலவீனம் இருக்கிறது என்பதை" என்று கூறினார். ஆனால் பைடனின் சொந்தக் கட்சிக்குள், அவரது நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,பைடன் மற்றும் நெதன்யாகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (இடது), இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் (வலமிருந்து இரண்டாவது), மற்றும் இஸ்ரேலின் போர் அமைச்சரவையின் உறுப்பினரான பென்னி காண்ட்ஸ். 'நெதன்யாகுவைத் தடுக்க பைடன் முயற்சித்தார்' இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் கூன்ஸ், பாலத்தீனிய குடிமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் மற்றும் அவர்களது பாதுகாப்பு குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ரஃபா மீது ஒரு முழு அளவிலான தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தால், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய கூன்ஸ், "இஸ்ரேலின் வலுவான ஆதரவாளர்களாக நாம் இருக்கும் அதே வேளையில், காஸாவின் மக்கள் படும் துன்பங்கள் மற்றும் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடி நிலைகள் குறித்து நமக்கு மிகுந்த அக்கறை இருப்பதாக கூறிக்கொள்ளும்போது, மிகவும் வேதனையான ஒரு மறுபரிசீலனை தேவைப்படுகிறது." என்றார். “நெதன்யாகுவைத் தடுக்க அதிபர் பைடன் ‘மீண்டும் மீண்டும்’ முயற்சித்தார், ஆனால் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை எதிர்க்கும் மற்றும் மேற்குக் கரையில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற்ற விரும்பும் அதீத தேசபக்தர்களின் அரசியல் ஆதரவை இஸ்ரேலிய தலைவர் நெதன்யாகு நம்பியிருப்பதால் போர் பதட்டங்கள் அதிகரித்துள்ளன” என்று கூன்ஸ் கூறுகிறார். மேலும், "இருநாட்டு உறவில் முதல் உண்மையான விரிசலாக இது இருக்கலாம்" என்கிறார் கூன்ஸ். நெதன்யாகு உடனான இந்த விரிசல், கைதிகளை விடுவிக்கும் நோக்கில் ஹமாஸுடன் ஒரு போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தைகள் வெளிப்படையான ஒரு தீர்வு இல்லாமல் தோல்வியில் முடிந்தன. சில இஸ்ரேலிய விமர்சகர்கள், பைடனின் நடவடிக்கை பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகளை பலவீனமடையச் செய்யும் என்று பரிந்துரைத்துள்ளனர். ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் அச்சுறுத்தலை மழுங்கடிக்கும் எந்தவொரு முயற்சியும் ஹமாஸுக்கு தான் பயனளிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படையில் நடக்கின்றன என்பது தெளிவாக இல்லாததால், விமர்சகர்களின் கூற்றை உறுதியாக மதிப்பிடுவது கடினமாக உள்ளது. போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கை தான் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. இஸ்ரேல் அதனை நிராகரித்து விட்டது. பைடனுக்கும் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலுக்கு அதிபர் பைடன் அளித்த தொடர் ஆதரவிற்காக அமெரிக்காவை அடிக்கடி பாராட்டியுள்ளார் நெதன்யாகு, ஆனால் பாலத்தீனியர்கள் தொடர்பான முக்கிய கொள்கை பிரச்னைகளில் அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. அக்டோபர் 7 தாக்குதல்கள் நடந்து சில நாட்களுக்குள், இஸ்ரேலுக்கு சென்ற அதிபர் பைடன் டெல் அவீவ் நகரில் நெதன்யாகுவை சந்தித்து ஆறுதல் கூறினார். இஸ்ரேலிய பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையுடனான சந்திப்பில் முடிந்த பிறகு, இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்திய அதிபர் பைடன், ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார், “9/11 தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் செய்த தவறுகளை நீங்கள் செய்யாதீர்கள். அதே சமயம் பாலத்தீனிய மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், உலகின் மற்ற நாடுகளைப் போலவே அப்பாவி பாலத்தீனியர்களின் இறப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம்." என்று கூறினார். பின்னோக்கிப் பார்க்கும்போது அதிபர் பைடனின் இந்த இஸ்ரேல் பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாரம் அமெரிக்க-இஸ்ரேல் உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட விரிசலைத் தடுக்கும் முயற்சியின் தொடக்கம் தான் அந்தப் பயணம். வியாழன் அன்று இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பல் நிறுத்தப்பட்டதாக அறிவித்த மறுநாள், நெதன்யாகு ஒரு பதிலடி கொடுத்தார். “நாம் தனித்து நிற்க வேண்டும் என்றால் தனித்து நிற்போம். தேவைப்பட்டால் வெறும் கைகளால் கூட சண்டையிடுவோம் என்று நான் கூறியுள்ளேன்,'' என்றார். நெதன்யாகுவின் அறிக்கை குறித்து ஜனநாயகக் கட்சியின் செனட்டரான கிறிஸ் கூன்ஸிடம் கேட்டபோது, "அவர்கள் வெறும் கைகளால் சண்டையிட தேவையில்லை. அமெரிக்காவோடு இணைந்து அவர்கள் உருவாக்கியுள்ள நவீன ஆயுத அமைப்புகளின் உதவியோடு போராடுவார்கள். அந்த ஆயுதங்கள் எங்களால் தானே வழங்கப்படுகின்றன. ஆனால் ஒன்று, பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் அந்தப் போராட்டம் நடக்க வேண்டும்" என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn3dmemm14yo
-
இலங்கையுடனான டெஸ்ட் தொடருடன் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் ஓய்வு!
13 MAY, 2024 | 05:22 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பிரண்டன் மெக்கல்லம் ஜேம்ஸ் அண்டர்சனுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததாக இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு புதிய வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜேம்ஸ் அண்டர்சனிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சுற்றுப் பயணத்தின் முடிவில் அவர் தனது 700ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி 700 விக்கெட் மைல்கல்லை எட்டிய உலகின் மூன்றாவது வீரரானார். இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட போட்டித் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கவுள்ளது. அத்துடன், ஆகஸ்ட் மாதம் இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி அண்டர்சனின் சொந்த ஊர் மைதானமான ஓல்ட் டிரபோர்ட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி அவரின் பிரியாவிடை போட்டியாக அமையும் என 'தி கார்டியன்' குறிப்பிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் கால்பதித்த ஜேம்ஸ் அண்டர்சன், 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். https://www.virakesari.lk/article/183426
-
ஓபியாய்டு: உலகையே போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளின் மையமாக சீனா மாறியது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 2024 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் தொடர்பான ஆணையத்தில் உரையாற்றினார். இதன் போது, அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு மிகப்பெரிய காரணம் சிந்தெடிக் மருந்துகள் (synthetic drugs - தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படும் மனோவியல் மருந்துகள்) அல்லது செயற்கை ஓபியாய்டுகள் என்று அவர் கூறியிருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் செயற்கை மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டதால் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவும் சக்தி வாய்ந்த செயற்கை ஓபியாய்டுகள் குறித்த பிரச்னையால் போராடி வருகிறது. ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை ஓபியாய்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது கடினம். மேலும், செயற்கை ஓபியாய்டுகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இப்போது உலகின் பல நாடுகளில் உள்ளது. உலகில் எந்த ஒரு நாடும் இந்த பிரச்னையை தனியாக சமாளிக்க முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார். உலகளவில் செயற்கை ஓபியாய்டுகள் ஒரு பிரச்னையாக உள்ளதா என்பது குறித்து இக்கட்டுரையில் புரிந்துகொள்வோம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஓபியாய்டுகள் என்றால் என்ன? ரிக் ட்ரெபிள் ஒரு தடயவியல் வேதியியலாளர். அவர் மருந்துகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பிரிட்டன் அரசாங்கத்தின் குழுவின் ஆலோசகராக உள்ளார். அவர் பிபிசியுடன் பேசுகையில், செயற்கை ஓபியாய்டு என்பது ஓபியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருளின் அதே விளைவைக் கொண்ட ஒரு பொருள் என்று கூறினார். "ஓபியம் பாப்பி தாவரம் (ஓபியாய்டு மருந்துகளின் ஆதாரம்) அல்லது ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஓபியாய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, மார்ஃபின் மற்றும் ஹெராயின். இவை ஓபியம் பாப்பி போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம், செயற்கை ஓபியாய்டுகள் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை ஓபியாய்டுகள் மார்ஃபினை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தவை" என்றார் அவர். தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஓபியாய்டுகள் நமது மூளையின் எந்த பகுதியை பாதிக்கிறதோ, அதே பகுதியை இந்த சிந்தெடிக் மருந்துகள் அல்லது செயற்கை ஓபியாய்டுகள் பாதிக்கின்றன. ஓபியாய்டுகள் வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ரிக் ட்ரெபிள் கூறுகையில், “செயற்கை ஓபியாய்டுகளில் ஒரு ஏற்பி உள்ளது, இது வலியைக் குறைக்க அல்லது நோயாளியை மயக்கமடையச் செய்யப் பயன்படுகிறது. ஆனால், இந்த ஏற்பியின் மோசமான விளைவு என்னவென்றால், அது ஒரு நபரின் சுவாச மண்டலத்தை அடக்குகிறது. இந்த ஓபியாய்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டால், அந்த நபர் மூச்சுத் திணறலால் இறக்கக்கூடும்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES தவறாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஓபியாய்டுகள் 1950களில், மருந்து நிறுவனங்கள் ஓபியாய்டுகளின் நன்மை பயக்கும் பண்புகளைப் பிரதிபலிக்கும் அடிப்படையில், செயற்கை ஓபியாய்டுகளை உருவாக்கத் தொடங்கின. இப்போது சந்தையில் நூற்றுக்கணக்கான செயற்கை ஓபியாய்டுகள் உள்ளன. ஃபெண்டானில் (Fentany)l என்பது அத்தகைய நன்கு அறியப்பட்ட செயற்கை ஓபியாய்டு ஆகும். ரிக் ட்ரெபிள் கூறுகையில், “அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியை மயக்கமடையச் செய்ய பலமுறை செயற்கை ஓபியாய்டுகள் கொடுக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், நோயாளியின் சுவாசத்தைப் பராமரிக்க ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. மார்ஃபின் பயன்படுத்தினால், நோயாளி நீண்ட நேரம் மயக்கநிலையில் இருக்கிறார். ஆனால் செயற்கை ஓபியாய்டுகளைப் பயன்படுத்தினால் இது நடக்காது. பிரசவத்தின் போது வலியைக் குறைக்க செயற்கை ஓபியாய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன“ என்றார். புற்றுநோயாளிகளின் வலியைக் குறைக்க செயற்கை ஓபியாய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில், செயற்கை ஓபியாய்டுகள் வலி நிவாரணிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 1990களில், அதன் தவறான பயன்பாடு பற்றிய நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின. அமெரிக்காவில் சில மருத்துவர்கள் செயற்கை ஓபியாய்டுகளை அதிகமாகப் பரிந்துரைத்ததால், ஒரு சமூகத்தில் உள்ள ஏராளமான மக்கள் அதற்கு அடிமையாகியுள்ளனர் என்று ரிக் ட்ரெபிள் கூறுகிறார். அதன் அதிகப்படியான பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது, போதைக்கு அடிமையானவர்கள் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கினர். இந்த ஓபியாய்டு அமெரிக்க போதை மருந்து சந்தையில் ஹெராயினின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. மக்கள் ஹெராயினுக்குப் பதிலாக ஃபெண்டானில் பயன்படுத்தத் தொடங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பல நாடுகளின் அரசாங்கங்கள் சட்டவிரோத ஓபியாய்டுகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை தடை செய்துள்ளன. ஆனால், சட்டவிரோதமாக இதனை உற்பத்தி செய்பவர்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்களின் கலவையை மாற்றுவதன் மூலம் புதிய ஓபியாய்டுகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். நெட்டாசின் ஓபியாய்டுகள் இப்போது பல இடங்களில் விற்கப்படுவதாக ரிக் ட்ரெபிள் கூறுகிறார். ஃபெண்டானிலை விட நெட்டாசின் வலிமையான மருந்து. பிரிட்டனில் அளவுக்கதிகமாக நெட்டாசின் மருந்தை உட்கொண்டதால் இறந்த சம்பவங்களும் உள்ளன. பிரிட்டன் அரசாங்கம் ஃபெண்டானில் மற்றும் நெட்டாசின்-ஐ தடை செய்துள்ளது. ஆனால், பலர் இந்த மருந்துகளை இணையம் மூலம் பெற்று தங்கள் சுற்றுப்புற பகுதிகளில் விற்கின்றனர். உண்மையில், இப்போது செயற்கை ஓபியாய்டுகளின் தவறான பயன்பாடு உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. சிந்தெடிக் மருந்து பிரச்சனை போதைப்பொருள் மற்றும் குற்றவியல் ஆய்வுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆராய்ச்சித் துறையின் தலைவர் டாக்டர் ஏஞ்சலா மே, உலகில் போதைப்பொருள் மற்றும் ஓபியாய்டை தவறாக பயன்படுத்துதல் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன என்று கூறுகிறார். "உலகளவில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளில் 70 சதவிகிதம் ஓபியாய்டு தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என்று மதிப்பிடலாம். மற்ற மருந்துகளுடன் ஒப்பிடும்போது ஓபியாய்டு பிரச்னை எவ்வளவு தீவிரமானது என்பதை இது காட்டுகிறது" என்கிறார் அவர். அமெரிக்காவில் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் ஃபெண்டானிலின் பயன்பாடு ஆகும். ஆனால், உலகின் பிற நாடுகளில் இந்த பிரச்னை மற்ற செயற்கை ஓபியாய்டுகளால் பரவுகிறது. டாக்டர் ஏஞ்சலா மே கருத்துப்படி, செயற்கை ஓபியாய்டுகள் போதைக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் டிராமடோல் போதைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அவர் கூறுகையில், "நைஜீரியாவில் மட்டுமே இதைப் பயன்படுத்துவோர் குறித்த உறுதியான எண்ணிக்கை எங்களிடம் உள்ளன. அங்கு குறைந்தது 50 லட்சம் பேர் போதைக்காக டிராமாடோலை எடுத்துக்கொள்கிறார்கள். கானா, செனகல் மற்றும் பெனினிலும் இந்த பிரச்னை உள்ளது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அபின் சாகுபடி தடை செய்யப்பட்டபோது என்ன நடந்தது? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அபின் சாகுபடியை தாலிபன்கள் தடை செய்தனர். அதன் பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. 2000 ஆம் ஆண்டில் அபின் சாகுபடிக்கு தாலிபன்கள் தடை விதித்த பிறகு ஹெராயின் தட்டுப்பாடு ஏற்பட்டதாக மருத்துவர் ஏஞ்சலா மே கூறுகிறார். வடக்கு ஐரோப்பாவின் சில நாடுகளில் - எடுத்துக்காட்டாக, எஸ்டோனியாவில் - போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், 2001 ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானைத் தாக்கி தாலிபன்களின் ஆட்சியை அகற்றியது. அபின் சாகுபடி மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால், 2022 இல், தாலிபன் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, அபின் சாகுபடி தடை செய்யப்பட்டது. டாக்டர் ஏஞ்சலா மே கூறுகையில், “பல நாடுகளின் சந்தைகளில் ஹெராயினுக்கு பதிலாக சக்திவாய்ந்த செயற்கை ஓபியாய்டுகள் வருவது கவலை அளிக்கிறது. உலகளவில் பார்த்தால், ஹெராயின் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் பெண்கள். அதாவது, ஆண்கள் ஹெராயினை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது" என்றார். "இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், பல இடங்களில் மருந்து கடைகளில் வாங்கலாம் என்பது. இரண்டாவது காரணம், சட்டவிரோதமான இடங்களில் இருந்து ஹெராயின் வாங்குவதற்கு பெண்கள் வெட்கப்படுகிறார்கள்" என்றார். ஆனால், செயற்கை ஓபியாய்டுகளின் பரவல் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதற்கு ஏஞ்சலா மே பதில் கூறுகையில், “ஒரு காரணம், தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஹெராயின் போன்ற மருந்துகள் ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் மெக்சிகோ போன்ற சில நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன, ஏனெனில் அது அங்குள்ள வானிலை மற்றும் நிலத்தைப் பொறுத்தது. அதேசமயம், செயற்கை ஓபியாய்டுகள் எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கப்படலாம். நாட்டில் உள்ள ஆய்வகங்களில் குறைந்த விலையில் தயாரிக்கப்படுவதோடு, அதைக் கடத்துவதும் எளிது” என்கிறார். ஃபெண்டானில் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது? செயற்கை ஓபியாய்டுகளின் உற்பத்தி மற்றும் கடத்தல் பற்றிய விரிவான தகவலுக்கு, புலனாய்வுப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பென் வெஸ்ட்ஹாஃப் என்பவரிடம் பிபிசி பேசியது. இதுகுறித்து அவருடைய ‘ஃபெண்டானில் இங்க்' (Fentanyl Inc.) எனும் புத்தகத்தில் நிறைய விவாதிக்கப்பட்டது. அவரைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஃபெண்டானில் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. அவர் சீனாவில் ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும் ஃபெண்டானில் தொழிற்சாலைகளுக்கு ரகசியமாக சென்றார். இந்த ஆய்வகங்களில் அவர் ஒரு கடத்தல்காரர் போல் காட்டிக்கொண்டு, அதிக அளவு ஃபெண்டானிலை வாங்க விரும்புவதாகக் கூறினார். அவர் கூறுகையில், “நான் ஷாங்காய் நகருக்கு அருகிலுள்ள ஒரு ஆய்வகத்திற்குச் சென்றேன், அது மிகவும் சிறியதாக இருந்தது, அங்கு 5-6 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால், அங்கு அதிக அளவு ஃபெண்டானில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நான் அவரிடம் பொருட்களை வாங்குவது பற்றி பேசினேன், ஆனால் எங்களுக்கு இடையே பண பரிவர்த்தனை எதுவும் இல்லை” என்றார். மேலும், "பின்னர் நான் வூஹானில் ஒரு ஆய்வகத்தைப் பார்த்தேன். அது ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக இருக்கலாம். அந்த நிறுவனத்தில் சுமார் 700 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் பலர் ஒரு ஹோட்டலில் இருந்து வேலை செய்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு இருந்தனர்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப்படம்) சீனா எப்படி மையமாக மாறியது? இந்த செயற்கை ஓபியாய்டின் உற்பத்தி மையமாக சீனா மாறியதன் காரணம் என்ன? பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், "இதற்குக் காரணம், அதை அங்கு உற்பத்தி செய்வது மலிவானது. பயிற்சி பெற்ற வேதியியலாளர்களும் விஞ்ஞானிகளும் அதிக எண்ணிக்கையில் சீனாவில் காணப்படுகின்றனர். சீனாவில் முறையான மருந்துகளை உற்பத்தி செய்யும் பல மருந்து நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அவர்களுடன் சேர்ந்து ரசாயனங்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. அவை சீனாவில் சட்டபூர்வமானவை. ஆனால் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் சட்டவிரோதமானது" என்றார். இந்த ரசாயனங்கள் நேரடியாக அமெரிக்காவை சென்றடைவதில்லை. அவை முதலில் மெக்சிகோவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் மிக வேகமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால் ஒரு கிலோ ரசாயனத்தில் இருந்து மில்லியன் கணக்கான மாத்திரைகளை தயாரிக்க முடியும் என்று பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகிறார். எனவே, பத்து முதல் இருபது கிலோ வரையிலான ரசாயனங்களை கொள்கலன்களில் மறைத்து அனுப்புவது மிகவும் எளிதானது. மெக்சிகோவில், போதைப்பொருள் விற்பனையாளர்கள் அல்லது கடத்தல் கும்பல்கள் தங்கள் தொழிற்சாலைகளில் ஃபெண்டானில் மாத்திரைகள் தயாரிக்க இந்த ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், “மெக்சிகோவில் இவற்றை தயாரிக்கும் கும்பல்கள், காடுகளில் சிறிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் சட்டவிரோத செயற்கை மருந்துகளை தயாரிக்கின்றன. அதைத் தயாரிக்கும் நபர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இந்த ஆய்வகங்களை நகரங்களிலும் அமைக்கின்றனர் என்று நான் கேள்விப்பட்டேன்" என்றார். அதன் பிறகு, அங்கு தயாரிக்கப்பட்ட சட்டவிரோத செயற்கை மருந்துகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த கடத்தலை தடுக்க அமெரிக்காவின் எல்லை பாதுகாப்புப் படை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் அதை தடுப்பது மிகவும் கடினம் என்றும் பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகிறார். ஏனெனில், ஹெராயினை விட ஃபெண்டானில் ஐம்பது மடங்கு அதிக திறன் கொண்டது அல்லது சக்தி வாய்ந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு கிலோ ஃபெண்டானிலைப் பிடிப்பது கடினம், ஏனெனில் அதை எளிதில் மறைக்க முடியும். பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், "இதை தயாரிப்பது மிகவும் மலிவானது, எனவே கடத்தல்காரர்களைப் பிடிப்பதால் இதன் வணிகச் சங்கிலியை உடைக்க முடியாது. மாறாக, அதைப் பயன்படுத்துபவர்களுக்கு இது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்த்த வேண்டும். ஒரு கேளிக்கை விருந்தில் உட்கொள்ளும் சட்டவிரோத ஃபெண்டானில் மாத்திரை மரணத்தையும் ஏற்படுத்த முடியும்" என்றார். பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK “போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை” ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷனின் மூலோபாயம் மற்றும் பாதுகாப்பில் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன், சட்டவிரோத ஃபெண்டானில் மற்றும் பிற செயற்கை ஓபியாய்டுகள் குறித்த பிரச்னைக்காக பல நாடுகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன என்று கூறுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில், சிந்தெடிக் மருந்துகளின் சிக்கலைச் சமாளிக்க அமெரிக்கா 179 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது, ஆனால் அதை மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அவர் கூறுகையில், “நாட்டில் சட்டவிரோத செயற்கை ஓபியாய்டுகளின் சிக்கலைத் தீர்க்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் அவசியம்.அவற்றை திறம்பட செயல்படுத்துவதும் முக்கியம். ஆனால், சீனாவும் மெக்சிகோவும் இந்த திசையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, இது கவலைக்குரிய விஷயம்” என தெரிவித்தார். அரசியல் காரணங்களால் அமெரிக்காவுடனான இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த திசையில் நிச்சயமாக சில முன்னேற்றம் ஏற்பட்டது. டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன் மேலும் கூறுகையில், “2017 முதல் 2019 வரை, சீனா இந்த திசையில் ஒத்துழைப்பை அதிகரித்தது. அப்போது, அங்கிருந்து ஃபெண்டானில் அனுப்புபவர்களுக்கு எதிராக சீனா சட்ட நடவடிக்கை எடுத்தது. 2019 ஆம் ஆண்டில், ஃபெண்டானில் வகை மருந்துகளுக்கு சீனா கட்டுப்பாட்டை விதித்தது. பதிலுக்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசாங்கம், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் சீனாவின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட வரி விகிதத்தைக் குறைக்கவும் சீனா விரும்பியது" என்றார். சீனா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது? ஆனால் சீனாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிறைவேற்றவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் பைடன் ஆட்சிக்கு வந்த பிறகும், அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை, சீனா ஒத்துழைப்பை நிறுத்தியது. அமெரிக்கா மட்டுமல்ல, சீனாவும் நல்லுறவு இல்லாத அனைத்து நாடுகளிடமும் இந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்கிறார் வாண்டா ஃபெல்பாப் பிரவுன். அதே சமயம், ஃபெண்டானில் போதை பழக்கத்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும், அதற்கு தங்கள் நாடு பொறுப்பல்ல என்றும் சீனா கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் கலிஃபோர்னியாவில் அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு, பரஸ்பர ஒத்துழைப்புக்கு உடன்பாடு ஏற்பட்டது. ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் பொருட்களை தயாரிக்கும் மெக்சிகன் கும்பல்களுக்கு விற்பனை செய்த நிறுவனங்களை சீனா மூடியது. டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுனின் கூற்றுப்படி, சீனா உண்மையில் ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியிருந்தாலும், இந்த நடவடிக்கையின் விளைவுகள் களத்தில் பிரதிபலிக்க இன்னும் நீண்ட காலம் எடுக்கும். மெக்சிகோ என்ன செய்கிறது? ஆனால், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், இதற்கு எதிரான நடவடிக்கையின் பின்னணியில், மெக்சிகோ எந்த வெளிநாட்டு அரசாங்கத்திற்கும் காவல்துறையாக செயல்படாது என்று கூறினார். கடந்த ஆண்டு, மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சகம் அங்கு ஃபெண்டானில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை நிராகரித்தது. டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன் மெக்சிகோ, இத்தகைய சில பெரிய கும்பல்களின் தலைவர்களை கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளதாக நம்புகிறார், ஆனால் அங்கிருந்து ஃபெண்டானில் கடத்தப்படுவதற்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கடத்தல் மட்டுமின்றி செயற்கை ஓபியாய்டு போதை பழக்கத்தையும் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறுகிறார். செயற்கை ஓபியாய்டுகள் உலகளவில் ஒரு பிரச்னையா? அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் செயற்கை ஓபியாய்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அவற்றை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரச்னைகள் தீவிரமாகி வருகின்றன. ஒரு நாட்டில் அவற்றின் கடத்தல் மற்றும் உற்பத்தி தடைசெய்யப்பட்டவுடன், கடத்தல்காரர்கள் உடனடியாக அவற்றை உற்பத்தி செய்து மற்ற வழிகளில் கடத்தத் தொடங்கி புதிய சந்தைகளைத் தேடத் தொடங்குகிறார்கள். இன்று இது பெரிய பிரச்னையாக இல்லாத நாடுகளில் கூட எதிர்காலத்தில் இந்தப் பிரச்னை பரவலாம் என்கிறார் நமது நிபுணர் டாக்டர் வெண்டா ஃபெல்பாப் பிரவுன். https://www.bbc.com/tamil/articles/cd19rv9mgevo
-
கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விசேட செயலமர்வு
13 MAY, 2024 | 08:08 PM மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்மொழிவுகள் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று (13) கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இதன்போது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன. இந்த கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே, தேசிய ஐனநாயக நிறுவனத்தின் ஆலோசகர் சியாமா சல்காது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் (காணி) இ. நளாயினி, உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ், வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், பிரதேச செயலாளர்கள், துறை சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், மாற்றுவலுவுள்ளோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/183439
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
துக்கதினத்தை அனுஸ்டிக்கும் உரிமை கூட இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை - திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதற்காக பெண்கள் தாக்கப்பட்டமை குறித்து மக்கள் பேரவைக்கான இயக்கம் கடும் கண்டனம் Published By: RAJEEBAN 13 MAY, 2024 | 04:46 PM திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்த பெண்களை நள்ளிரவில் வீடு புகுந்து பொலிஸார் கைதுசெய்ததை மிக மோசமாக செயற்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் துக்கதினத்தை கூட அனுஸ்டிக்கும் உரிமை இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை என தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் மூன்று தசாப்தபோர் மிகவும் மோசமான முறையில் இலங்கை அரசாங்கத்தினால் முடித்துவைக்கப்பட்டது. தமிழ்மக்கள் தங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற கரிசனையில்லாமல் குண்டு வீசி கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர். சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டனர்.. இவர்களை நினைகூரும்வகையில் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது. உணவு இல்லாததால் உணவு கிடைக்காததால் தண்ணீர் கலந்த அரிசியை கஞ்சியை குடித்து உயிர்வாழ்ந்தனர். அதனை நினைகூரும் வகையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகின்றது. அந்த மக்கள் 15 வருடங்கள் கடந்த பின்னரும் எந்த நீதியையும் பெறாமல் வாழ்கின்றனர். அரசாங்கம் அவர்களிற்கு எந்த ஒரு நீதியையும் வழங்கவில்லை எந்தவொரு முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மிகமோசமான சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. திருகோணமலை சம்பூரில் பெண்கள் தாங்களாக முன்வந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது வடகிழக்கில் வழமையாக இடம்பெறும் விடயம்தான் அரசாங்கத்திற்கும் இது தெரியும். ஆனால் பொலிஸார் மிகமோசமாக நடந்துகொண்டுள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் நினைவுகூரலின் போது உணவு வழங்குவது பானங்களை வழங்குவது அடிப்படை உரிமையாகும். வெசாக் தன்சலிற்கு இவ்வாறான தடை உத்தரவை பிறப்பிப்பார்களா? அப்பாவி பொதுமக்களை பொலிஸார் மிக மோசமான முறையில் நடத்தியுள்ளனர். இரவுவேளை வீட்டிற்குள் நுழைந்து அடித்து உதைத்து காடையர்கள் போல செயற்பட்டுள்ளனர், இவர்கள் பொலிஸாரா? ஒரு துக்கதினத்தை கூட அனுஸ்டிக்க முடியாத நிலையில் இந்த நாட்டில் தமிழன் நிலை காணப்படுகின்றது. இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். முள்ளிவாய்க்கால் வாரத்தில் நினைவுரல் நிகழ்வுகள் நாடு முழுவதிலும் சுமூகமான முறையில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183421
-
பரிசளிப்பு விழா Spelling NIST Award Ceremony 14/04/2024
பரிசளிப்பு விழா VK Nathan International School Of Technology Spelling NIST Award Ceremony 14/04/2024 பகுதி 2
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் கிராமங்கள் நீரில் மூழ்கின : 315 பேர் பலி
Published By: DIGITAL DESK 3 13 MAY, 2024 | 10:55 AM வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன. வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப் கூறுகையில், "எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம் அனைத்தையும் அழித்துவிட்டது," உயிர் பிழைத்தவர்கள் வாழ போராடுகிறார்கள். 42 வீடுகளில், இரண்டு அல்லது மூன்று வீடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன, வெள்ளம் முழு பள்ளத்தாக்கையும் அழித்துவிட்டது என்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான அமைப்புகள் மற்றும் தனியார் வணிகங்களை தலிபானின் பொருளாதார அமைச்சர் டின் முகமது ஹனிஃப் வலியுறுத்தியுள்ளார். "உயிர்களும் வாழ்வாதாரங்களும் கழுவப்பட்டுவிட்டன," "திடீரென வெள்ளம் கிராமங்களை அழித்து, வீடுகளையும் அழித்து கால்நடைகளை கொன்றது." மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 310,000 சிறுவர்கள் வசிக்கின்றனர் என சேவ் தி சில்ரன் ஆப்கானிஸ்தான் பணிப்பாளர் அர்ஷத் மாலிக் தெரிவித்துள்ளார். பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் 153 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் எண்ணிக்கை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையால் கருதப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் உதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/183376
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
ரபா மீது பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் மேலும் பல ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த்வேண்டியிருக்கும் - இஸ்ரேலிற்கு அமெரிக்கா எச்சரிக்கை 13 MAY, 2024 | 10:44 AM இஸ்ரேல் ரபாவின் மீது இராணுவநடவடிக்கையை முன்னெடுத்தால் அந்த நாட்டிற்கான மேலும் பல ஆயுத விநியோகத்தினை நிறுத்தவேண்டிய நிலையேற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவநடவடிக்கை காரணமாக பாரிய உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற கரிசனைகளை தொடர்ந்து குண்டுகள் அடங்கிய கப்பலொன்றை இஸ்ரேலிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் அப்பாவி மக்களின் கொடுரமான உயிரிழப்புகளை அன்டனி பிளிங்கென் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மேலும் இடங்களை கைப்பற்றினால் ஒரு வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடம் குழப்பம் அராஜகம் மற்றும் இறுதியில் ஹமாசினால் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ரபாவிலிருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது என்ற இஸ்ரேலின் பிடிவாதத்தினால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதற்கு உதவுவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் உறுதியாகவுள்ளார் என என்பிசி சிபிசிக்கு தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென் குண்டுகளை விநியோகிப்பதை மாத்திரம் அமெரிக்கா தற்போது நிறுத்திவைத்துள்ளது எனினும் இஸ்ரேல் ரபா மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டால் இந்த நிலை மாறாலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183380
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? - அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி Published By: DIGITAL DESK 7 13 MAY, 2024 | 01:10 PM தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் காரணம் காட்டி உள்ளனர். இது கொரோனா காலத்தில் பயன்படுத்திய சொற் தொடராகும். அதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பதும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதும் இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். சம்பூர் பொலிஸார் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? எனவும் கேட்கின்றது. பேரினவாத ஸ்ரீலங்கா அரசு சர்வதேச சக்திகள் பேராதரவோடு 2009 இல் இனப்படுகொலையை அரங்கேற்றி கொண்டிருக்கையில் ஆண்கள், பெண்கள் என பெரியோர் முதல் சிறுவர் வரை சதை பிண்டங்களாக இரத்த வெள்ளத்திலும் கொல்லப்பட்டும் காயங்களோடும் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் இன்னும் ஒரு பக்கம் மக்கள் பட்டினியோடு வெறும் உப்பு கஞ்சிக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்த பேரவலத்தை தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது. இவ் வரலாற்று பேரவலத்தினை நினைவு கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கவும் கடந்த 15 வருட காலமாக தமிழர் தாயகம் எங்கும் முடிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் கஞ்சி பகிர்வதோடு மே 18ஆம் திகதி நினைவேந்தல் நடத்தப்படுகின்றது. உப்பு கஞ்சி மக்களின் நீதிக்கான குரலின் அடையாளமும், ஆயுதமும் ஆகும். இதற்கு எதிராக செயற்படுவதற்கு பொலிஸார் நீதியை மடக்கி தம் பக்கம் சாய்ப்பதும் தமிழர்களின் நீதியின் ஆயுதமான கஞ்சியை தட்டிப்பறித்து நீதி குரலை அடக்க நினைப்பது அராஜகமாகும். சம்பூர் பொலிஸார் பெற்றிருக்கும் நீதிமன்ற தடையுத்தரவை மீளப்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம். அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் அவர்களையும் பாடசாலை மாணவி உட்பட பெண் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறுகின்றோம். இத்தகைய கைதுகள் நீதியை தடுத்து விட முடியாது என்பதையும் உறுதியாக கூறுகின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு உரையாடிய போது சாதகமான பதிலளித்தமை மகிழ்ச்சியே. இவ்வாறு பொலிஸ் நிலையத்தினரும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றோம். உப்பு கஞ்சியை சுதந்திரமாக குடிக்கவிடு எனும் மக்களின் நீதி குரலை, அரசியல் குரலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 வது ஆண்டிலாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. https://www.virakesari.lk/article/183395
-
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் அமெரிக்க அதிகாரி டொனால்ட் லூ
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ! Published By: PRIYATHARSHAN 13 MAY, 2024 | 11:57 AM தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இம்மாதம் 10 - 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இன்றையதினம் காலை இலங்கைக்கு வருகைதந்துள்ளார். இவ்விஜயமானது இந்நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய - பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அதன்படி வெள்ளிக்கிழமை (10) இந்தியாவை சென்றடைந்திருந்த இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, தென்னிந்தியாவுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சென்னையில் கொன்சியூலர் அதிகாரியுடன் சந்திப்பை முன்னெடுத்திருந்தார். இதனையடுத்து இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ள டொனால்ட் லூ, கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைமைகள் பலருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார். இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்க வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் மீள் உத்தரவாதத்தை வழங்கவுள்ள அவர், சுதந்திரமான ஜனநாயக சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக சிவில் சமூகத்தை வலுவூட்டவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தவுள்ளார். https://www.virakesari.lk/article/183389
-
தமிழ் இன அழிப்பையும் தமிழர் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் குற்றச்சாட்டு
தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர். எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://thinakkural.lk/article/301493
-
பூமி அதிவேகமாகச் சுழன்றாலும் நாம் ஏன் தூக்கி வீசப்படுவதில்லை?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் ஒரு விண்வெளி காரில் சவாரி செய்வது போல் நாம் ஏன் உணர்வதில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு விமானம் நிலையான வேகத்தை அடையும் போது அது அப்படியே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். நிலைத்தன்மை மற்றும் செயலற்றதன்மை இந்த நிகழ்வைப் புரிந்து கொள்ள, சிலியின் வானியல் இயற்பியலாளர் ஜவீரா ரே நமக்கு ஒரு உதாரணம் கூறுகிறார். இவர் லத்தீன் அமெரிக்காவில் விஞ்ஞான அறிவைப் பரப்பும் அமைப்பான ஸ்டார் டிரேஸின் (Star Tres) இணை நிறுவனர். "நீங்கள் ஒரு விமானத்தில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். விமானம் பறக்கத் தொடங்கும்போது உங்கள் இருக்கையில் மூழ்குவது போல் உணர்கிறீர்கள். மேலும் தரையிறங்கும்போது முன்னோக்கி நகர்வதைப் போல உணர்கிறீர்கள். ஏனென்றால் நிலைமம் (Inertia) நம்மை ஓய்வு நிலையில் வைக்கத் தூண்டுகிறது. விமானம் அதன் முழு வேகத்தை அடையும் போது அது நகர்வதை நாம் உணர்வதில்லை. நாம் எழுந்து நின்று, நடக்க முடிகிறது." என்கிறார் ரே. இவ்வாறாக விமானம் சீரான வேகத்தில் செல்லும் போது, அது அப்படியே நிற்பது போல் தோன்றுகிறது. பூமியிலும் இதேதான் நடக்கிறது. ஏனென்றால் அது நிலையான வேகத்தில் பயணிக்கும்போது, அது உண்மையில் பிரபஞ்சத்தின் ஊடாக பயணிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. மனிதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைத்துமே அதே நிலையான வேகத்தில் பயணிக்கின்றன. நாம் பூமியுடன் சுழல்கிறோம். எனவே வேகத்தை நாம் உணர்வதில்லை. ஆனால் மற்ற முக்கிய கூறுகளும் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமியின் இயக்கங்களை நாம் உணராமல் இருப்பதற்கு புவியீர்ப்பும் ஒரு காரணம். பிற சக்திகள் பூமி சுழல்வதை நாம் ஏன் உணர்வதில்லை என்பதை விளக்கவும் புவிஈர்ப்பு விசை உதவுகிறது. "நீங்கள் ஃபார்முலா 1 காரில் இருக்கிறீர்கள் என்றும் நிலையான வேகத்தில் நேர்கோட்டில் பயணிக்கிறீர்கள் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,” என்று வெனிசுலாவின் மத்திய பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த இயற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான சோல்மர் வரேலா கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "அந்த நேரத்தில் வாகனம் நகர்வதை நீங்கள் உணர மாட்டீர்கள். ஆனால் நீங்கள் ஒரு திருப்பத்தை நெருங்கும் போது, ஒரு சக்தி உங்களை வளைவின் எதிர் திசையை நோக்கித் தள்ளுவதை உணர்வீர்கள். அது உங்களை காரிலிருந்து வெளியே தள்ள முயற்சிப்பது போல இருக்கும்,” என்று விளக்குகிறார். "நீங்கள் காரில் இருந்து தூக்கி எறியப்படாததற்குக் காரணம், நீங்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பதே" என்று அவர் கூறுகிறார். நமது கிரகத்திலும் இதே தான் நடக்கிறது. அது சுழலும் போது ஒரு மையவிலக்கு விசை உருவாகிறது. கோட்பாட்டின்படி அது நம்மை விண்வெளிக்கு தூக்கி அடிக்கும். இருப்பினும் என்ன நடக்கிறது என்றால், பூமியின் புவிஈர்ப்பு அந்த மையவிலக்கு விசையை விட மிகவும் வலுவானது. அதனால் தான் நாம் கிரகத்துடன் ஒட்டியிருக்கிறோம். "புவியீர்ப்பு விசை ஒரு காரின் சீட் பெல்ட் போல வேலை செய்கிறது," என்று வரேலா கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமியின் இயக்கத்தை நம்மால் உணர முடியாமல் இருப்பதே, நட்சத்திரங்கள் நமது கிரகத்தைச் சுற்றி வருகின்றன என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டதற்கு ஒரு காரணம். இயக்கம் என்பது ஒப்புமை சார்ந்தது பூமியின் நகரவை நம்மால் உணர முடியாததே, நமது கிரகம் பிரபஞ்சத்தின் மையம் என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டதற்கு ஒரு காரணம். "நீண்ட காலமாக பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பப்பட்டது. ஏனென்றால் மக்கள் வானத்தைப் பார்த்தபோது நட்சத்திரங்கள் நகர்வதைக் கண்டார்கள்," என்று வெனிசுலா வானியலாளர் மற்றும் ஜெர்மனியில் உள்ள சூரிய மண்டல ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சியாளரான மிரியம் ரேஞ்சல் விளக்குகிறார். "ஆனால் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் மற்றும் ஜோஹன்னஸ் கெப்லர் ஆகியோர் சூரிய மைய மாதிரியை உருவாக்கினர். கலிலியோ வியாழனின் நான்கு நிலவுகளைக் கண்டுபிடித்தார். இந்த கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவதை அவர்கள் கண்டுபிடித்தபோது இந்த எண்ணம் மாறியது" என்கிறார் ரேஞ்சல். கிரகம் நகர்ந்தால் அதை நம்மால் உணர முடியும் என்றும் உயரமான இடத்தில் இருந்து ஒரு பொருளை வீசினால் அது அடிவாரத்தில் விழாமல் பின்னால் தான் விழும் என்றும் பூமியே மையத்தில் உள்ளது என்ற கூற்றை ஆதரிப்பவர்கள் கூறினர். ஆனால் கலிலியோ அதை நிராகரிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அமைதியான கடலில் சீரான வேகத்தில் செல்லும் கப்பலில், தண்ணீர் துளிகளை கொள்கலனில் ஊற்றி அவர் சில சோதனைகளை நடத்தினார். கப்பல் முன்னோக்கி நகர்வதை அவர் கண்டார். ஆனால் துளிகள் எப்போதும் கொள்கலனில் விழுந்து கொண்டே இருந்தன. "இதன் மூலம் எல்லாமே நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தது என்பதை அவர் காட்டினார்," என்கிறார் ரேஞ்சல். இவ்வாறு சார்பியல் கோட்பாட்டை முன்வைத்த முதல் நபர் கலிலியோ ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கலிலியோவின் ஆய்வுகள் பூமி நகர்வதையும், அது சூரியனைச் சுற்றி வருவதையும் காட்டுகின்றன. பழகிக்கொள்ளுதல் மற்றும் தயார் நிலை பூமியின் இயக்கத்தை உணர முடியாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், நாம் அதற்குப் பழகிவிட்டோம். "நாம் பிறப்பிலிருந்தே இந்த இயக்கத்திற்குப் பழகிவிட்டோம்" என்று மாட்ரிட்டின் கம்ப்ளூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் பேராசிரியரான மார்டா அபாலோஸ் விளக்குகிறார். உயிரினங்களின் செவிவழி அமைப்பு கிரகத்தின் இயக்கம் நம்மை மயக்கமடையச் செய்வதைத் தடுப்பதற்கு ஏற்றபடி அமைந்துள்ளது என்று ரே சுட்டிக்காட்டுகிறார். அதேபோல், வளிமண்டலம் கிட்டத்தட்ட பூமியின் அதே வேகத்தில் நகர்கிறது என்பதும் இதில் ஒரு பங்கை வகிக்கிறது. "பூமியைச் சுற்றியுள்ள காற்றின் அடுக்கு கிட்டத்தட்ட அதே வேகத்தில் சுழல்வதால், பூமியின் சுழற்சியால் ஏற்படும் எந்த 'காற்றையும்' நாம் உணர்வதில்லை" என்று அபாலோஸ் விளக்குகிறார். ”கிரகத்தின் இயக்கம் காற்றை உருவாக்காது. ஏனெனில் விண்வெளி கிட்டத்தட்ட காலியாக உள்ளது," என்று ரே சுட்டிக்காட்டுகிறார். https://www.bbc.com/tamil/articles/c6pym0ry5j2o
-
மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்
இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறை நாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சு. நகரத்தில் அவன் ஒரு நடமாடும் காந்தம். உயர்ந்த கட்டிடத்தில் உயர்ந்த உத்தியோகம். சட்டை காணாத தன் வாழ்க்கை போல இல்லை இது. நேரமின்றித் தவிக்கிற அவனது கணங்கள். பொற்கணங்கள். கார் வைத்திருக்கிறான். தொலைபேசி எப்போதும் கூடவே. குரைக்கிற நாயைக் கூடக் கூட்டிப் போகிறாப்போல. கிராப் எடுப்பும் உடைகளும், எல்லாமே மாறிவிட்டன. அழுத மூக்கை அவர்தான் சிந்திவிட வேண்டும் என்றிருந்த பிள்ளை. டென்னிஸ் விளையாடுகிறதைப் போல, முன்மடிந்த வாக்கில் ஓடியோடி பந்தடிப்பது போலக் காசு வேட்டையாடுகிறான். சொந்த ஜாகை, வீட்டில் வேலையாட்கள் என அவன் உலகம் விரிந்து விட்டது. சிறகு எனப் பொன்னாடை போர்த்தி அலைகிற மனிதன். குளத்து ஐயருக்கு பிள்ளையையிட்டு எப்பவுமே மயக்கம் சார்ந்த பெருமை உண்டு. பார்த்து எத்தனை நாளாச்சி. அவனும் வரக் கூடாது என்றில்லை. வருகிறதைப் பற்றி நினைக்கவே நேரமில்லை அவனுக்கு. அவளாவது! அவன் மனைவியாவது அவனை ஊக்கி வெளியிடம் நாலு இடம் போக வர என்றிருக்கலாம். அவள் டாக்டர். நகரத்தில் அவளை நம்பி ஆயிரம் ஜனங்கள். தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் மாற்றினாற் போல, பாதிப் பேச்சிலேயே அவளுக்கு அழைப்பு வந்து விடும். அந்தப் பொழுதின் முகமே மாறிப்போகும். வேலை அப்படி. அது வேறுலகம் அல்லவா? தனிமைச் சிறு கணங்கள் என்னுடையவை. உலகின் ஒரு பகுதி என தன்னைப் பாராட்டாமல் வாழ்கிற கணங்கள். அவன் வேறு மாதிரி. தன் முனைப்பானவன் – புறப்பட்ட அம்பு. அனுபவங்கள் சிக்காது. தேடிப் போக வேண்டும். கணவனும் மனைவியும் பேசும்போதே திடீரென்று தங்களை அறியாமல் பேச்சு ஆங்கில பாஷையில் மாறிப் போகிறது. அவருக்குப் புரியும் என்றாலும் பேச இந்த வேகம் கிடையாது அவரிடம். அவர்கள் அவருடன் ஆங்கிலத்தில் பேச அவர் தமிழில் பதில் சொல்கிற கணங்கள் அநேகம்! மடப்பள்ளியில் சிறு வெண்கலப்பானைச் சாதம். பிரசாதம் என சந்நிதியில் பிரசாதம் காட்டி எடுத்துக் கொண்டு வருவார். சாம்பார் அல்லது ரசம் அல்லது கொத்துமல்லிச் சட்னி, தேங்காய்த் துவையல் ஏதோ ஒன்று சேர்த்துக் கொள்ள அவர் வயிற்றுப்பாடு தீர்ந்தது. கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் வதக்கல் அல்லது அப்பளம் பொறித்தால் கூடத் தொட்டுக் கொண்டு சாப்பிடத் தாராளம் அல்லவா. மனைவி இல்லாத கணங்களைப் பிரச்சனையாக உணராமல், மனம் அடுத்த சுற்றுக்குப் பழகிக் கொண்டது. கோவில் கைங்கர்யம் பரம்பரை பாத்யதை என்றாச்சி. வம்சாவளியாய் ஊரும் ஊர்மண்ணும் இரத்தத்தில் இருக்கிறது. மண்தாண்டி எல்லை கடக்க மனம் வரமாட்டேனென்கிறது. ”இதெல்லாம் நம்ம பிரமைப்பா” என்கிறான் நீலு. ”உலகமே பிரம்மாண்டமான பிரமைதாண்டா” என்று குளத்து பதில் சொல்லிச் சிரிக்கிறார். ”நாம வாழறதா நினைச்சிக்கறதே ஒரு பாவனைதான்றேன்! நம்மால என்ன முடியுஞ் சொல்லு. அவன் ஆட்டுவிக்கிறான். நாம வெறும் பொம்மை”. ”இன்னும் எத்தனை தலைமுறைக்குச் சபரிமலை இருமுடி போல இப்படித் தூக்கி வெச்சிண்டு திரியப் போறீங்களோ தெரியல” என்று சிரித்தான் நீலு. அவருக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது அவன் ஃபோர்த் ஃபார்ம், ஒன்பதாங் கிளாஸ். தனது மூளையைப் பொக்கிஷ அறையாய் அவன் சட்டெனப் பிடித்துக் கொண்டதும், அதில் விளைச்சல் எடுத்த, அறுவடைகண்டு தானியங்களை அவருக்குப் படையல் செய்ததுமான கணங்கள். ”கடவுள் இல்லை” – என்பது அவன் நம்பிக்கை. அவன் வாதம். அந்த-வயதின் வாதம் அது அல்லவா? அந்தந்த வயதுக்கேற்ற எடுப்புகள் வேண்டிதான் இருக்கிறது. சிறு பாலகனாய் அவர் கைப்பிடித்துக் கூட வந்தவன். “அப்பா தூக்கிக்கோ” என்று அழுதவன்தான். இப்போது ரொம்ப தூரம் அவன்கூட அவர் நடந்து வருகையில் அவரைக் கேட்டான் அவன் ”கால் வலிக்கிறதாப்பா?”… அவர் புன்னகைத்துக் கொள்கிறார். “அவன் இருக்க முடியாது. ஆதியில் உலகில் என்ன இருந்தது. எதுவுமேயில்லை” ”ஆமாம், எதுவுமே இல்லை என்று நமக்குப் படுவதில் ஏதோ எப்படியோ மறைந்திருக்கிறது. ஒளிந்திருக்கிறது. என்னவோ மிகப் பெரும் பலத்துடன், என்னமோ மிகப் பெரும் ஆளுமை சக்தி, மிகத் தீர்மானமான சக்தி, அது நம்மை இயக்குகிறது. அதற்கு இறைநம்பிக்கை எனப் பெயர் சூட்டுகிறோம். அவனை நம்மால் நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள இயலாது என நாம் கட்டாயம் புரிந்து உணர வேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறோம் மதத்தின் மூலமாக” என்று புன்னகைத்தார் குருக்கள். “இந்தியா ஆன்மிக நாடப்பா” என்றார் மகனைப் பார்த்து. ”இவர்கள் மத நம்பிக்கை மிகப் பெரிய அளவில் கொண்டவர்கள். அதன் சிந்தனையில் திளைத்தவர்கள். ஆகவேதான் அவர்கள் பூஜ்யத்தைக் கண்டு பிடித்தார்கள். வேறு யாராலும் பூஜ்யம் என்ற எண்ணைக் கண்டு பிடித்திருக்கவே முடியாதுதான். விளங்குகிறதா நீலு? பூஜ்யம் எத்தனை புதிர்களைக் கிடுகிடுவென்று முடிச்சு-அவிழ்த்து எறிந்தது இல்லையா? இன்றைய கம்ப்யூட்டர் வரை பூஜ்யம் அற்புதமாய்க் கூட உதவிக்கொண்டே வரவில்லையா நீலு?” அவருக்கே ஆச்சரியம் தான் இவ்வளவு பேசியது – எல்லாம் கடவுள் சித்தம் போலும். ”அப்படியானால் நமது இப்பிறப்பின அர்த்தம் ஊடுபொருள் – சரி… தாத்பர்யம் என்ன?” ”தெரியாது! சந்ததிகளைக் கடந்து மானுடம் மேலும் மேலும் முன்னேறிச் செல்கிறது. இயற்கையை சுவீகரித்துக் கொண்டு தன் அறிவுப்பரப்பை விஸ்தரித்துக் கொண்டு செல்கிறது அல்லவா?” ”ம் – ஓர் எல்லையில் மார்க்சியமும் மதமும் சந்திக்கவே செய்யும். அது முரண் அல்ல” என்றான் நீலு சர்வ அலட்சியமாய். அவர் திகைத்தார். அப்படியா? முரண்களால் அதனிடை ஒற்றுமை. சாத்தியமா இது? கடவுளை அலட்சிக்கிற ஒவ்வொருவனிடமும் கடவுள் இருக்கிறார். அவன் சுயபலனை எதிர்பாராதவன் அல்லவா? அம்மட்டில் பிறரை எதிர்பாராத நேயக்காரன் அல்லவா? ”உலகின் பெரும் புதிரை நோக்கி நாம் நகர்கிறோம் என்று உனக்குப் படாதது வியப்புதான்” ”சரி, அதை வெறும் கடவுளை வணங்குகிற எளிய நிலையில் நாம் வீணடிக்கலாமா? நமக்கு அதற்கு உரிமை உண்டா அப்பா?” ”வளர்ந்த பின் பெற்ற தந்தையைப் பற்றி மறந்து விடுவது போல நீ பேசுகிறாய்” என்று சிரித்தார் குளத்து. ஆனால் குழந்தையின் மழலைத் தத்துவங்கள் அவரை பிரமிப்பில் ஆழ்த்தின. என்னை மறந்து தன் போக்கில் சிறகு விரிக்க அவனுக்குச் சுதந்திரம் தந்தவனே நான்தான். கடவுளும் அத்தகைய ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும். எதோ ஒரு எதிர்பார்ப்பு அவருக்கு இல்லாமல் எதற்கு நம்மை இந்தப் பூமியில் பிறப்பித்திருக்கக் கூடும். அடேடே இந்தச் சிந்தனையிலேயே முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் எத்தனை முரண், சிக்கல்? ”மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார். அவனது பயம் சார்ந்த பிரதிபிம்பம். பிரமை. பீதியின் நிழல். அவனது மரணத்தின் நிழல்-பிரம்மாண்டம்! அதன் பெயர் கடவுள்” ”மரணம், காலம், கணக்குகள் வாழ்க்கையில் எத்தனை நூல்சிக்கல்கள்!” என்று அவர் பேசுவதை அவன் கைமறித்துத் தடுத்தான். ”மொழியலங்காரச் சிந்தனைகள் வேண்டாம் அப்பா, தயவுசெய்து” என்றான் உடனடியாக. நுணுக்கமான சூட்டிகையான பிள்ளைதான்! அவர் கைப்பிடிக்குள் அவன் இல்லை என விரைவில் அவன் நிரூபித்தான். மண் எல்லை கடந்தான் அவன், அவருக்கு அது வருத்தமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. கடமைசெய்! பலனை எதிர்பாராதே! கீதை! தனிப்பெரும் தத்துவம் அல்ல அது. இயற்கையின் வாழ்வம்சமே. மிருகங்கள் அப்படியே வாழ்கின்றன அல்லவா? பெத்ததோடு அவை குஞ்சுகளின் இறக்கை முளைக்கும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்து விடுகின்றன. இது என் குஞ்சு என வளர்த்த – பெற்ற தாய் பிறிது கண்டு கொள்ளுதல் இயலுமோ? கடவுள் ஊனிலும் உயிரிலும் இருக்கிறான். ஆனால் ஊனில் இல்லை. உயிரில் இல்லை, இரண்டின் கலவையாக இரண்டின் பேரிணைப்பாக நடுவே படைப்பிலக்கிய இரகசியமாய் அவன், உள்க்குறிக்கோள், அம்பின் திசையாய் வேகமாய் அவன், அருவ உருவம் அவன். கடவுளுக்கு உருவம் உண்டா? ”ஏன் இல்லை?” என்றான் நீலகண்டன். ”புராணங்கள் இதிகாசங்கள் மாற்றி மாற்றிச் சொல்கின்றனவே! படைப்பின் உச்சகட்டமான மனிதன்… அவன்தான் கடவுள். அதுவே அவன் உருவம். இறுதி அவதாரம் என விளங்கவில்லையா அப்பா” அவர் அவனைப் பார்த்தார், ”நீங்கள் தினந்தோறும் கற்பூரம் காட்டும் மூல விக்கிரகர், அதில் மனித முக வடிவம் எதற்கு அப்பா?” என்கிறான் அவன் தொடர்ந்து. முரண்களின் சங்கமத்தில் கடவுள் ஒளிந்திருக்கிறார். பிடி கொடுக்காமல். ஆனால் உணர வைக்கிறார். எளிய பரபரப்பில்லாத மனிதன் நான். எனது உயிரை சர்வவியாபியான கடவுளின் துகளாக நான் காண்கிறேன். நீலகண்டன் நியதிகளில் சவாரி செய்தபடி தன்னை பிரபஞ்சத்தின் சாரதி என உணர்கிறான். இரு நிலைகளிலும் கடவுள் இருக்கிறார். முரண்களின் சங்கமமாக! நீலகண்டன் வந்த தினங்களில் மீண்டும் விவாதங்கள் இவ்விதமே வளைய வந்தன. அவற்றின் உச்சபட்ச உக்கிரத்துடன். நாம் சந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் சட்டென்று தத்துவங்கள் சந்தித்து விடுகின்றன – ஆச்சர்யம். ”கோவில் எப்படி இருக்குப்பா” என்கிறான் நீலகண்டன். ”அப்டீன்னா?” ”நீங்க இன்னமும் மாறவே இல்லையே” ”நீயும்” என்று சிரித்தார் குளத்து. ”சாயந்தரம் கோவிலுக்கு வாடா! எல்லாருமா வாங்கோ” என்றார் மருமகளைப் பார்த்து. அவன் வந்ததுகூட இல்லை. கூட அவள் அவரைப்பார்க்க வந்தது ஆச்சரியம். ஒரே நாளில் அவள் திரும்பிப் போய்விடுவாள். அவள்வேலை அப்படி,. இம்முறை அவளும் கூட ரெண்டுநாள் தங்கிப் போவதாகச் சொன்னாள். நியதிகளில் அலுத்துப் போய் அவர்கள் வந்திருந்தார்கள் என யூகித்தார். அதைத்தான் அவன் கேட்கிறான் போலும் – அப்பா உங்களுக்கு உங்கள் காலாந்தர நியதிகள் இன்னும் அலுக்கவில்லையா? சுயம் சார்ந்த பிரமைகள் நியதிகளை அலுப்பாய் உணர வைக்கின்றன. சகலத்திலும் தன்னை உணர்ந்ததற்குப் பின் நியதிகளைப் பற்றிய கணிப்புகள் பின்னடைவு கொண்டு நித்தமும் பிரபஞ்ச வாசனை நுகர்ச்சி ஒரு மானுடனுக்கு அலுக்குமோ? அவர் புன்னகை செய்து கொள்கிறார் – அன்று மாலை நீலகண்டன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தான். கர்ப்பக்கிரகத்துள் நின்று கற்பூரங் காட்டுகிறார் குருக்கள். நீலகண்டன் கைகட்டி நிற்கிறான் உற்றுக் கடவுளை அவதானித்தபடி! என்ன ஒரு சவால் அந்த நிற்றலில். கடவுள் சந்நிதியில் அவர்முன், இது சாத்தியமா? என்ன அழகான சக்தியாளுமை கொண்ட விக்கிரகம் இது என்கிறார்கள். இவனுக்கான அனுபவம் என எதுவும் இராதா? கற்பூரத்தட்டை நீலகண்டன் முன் நீட்டிக் காட்டினார் குருக்கள். குனிந்து நெற்றியில் கற்பூரத்தட்டின் திருநீற்றை எடுத்து அவன் பூசிக் கொண்ட கணம் அவர் முதுகுசிலிர்ப்புடன் – யாரோ பார்க்கிற பிரமையில், திரும்பிப் பார்த்தார், சந்நிதியில் உள்ளே மனிதன். ம் மனிதன். கடவுள் விக்கிரகமல்ல. அவன்! மனிதன். நீலகண்டனைப் பார்த்து அந்த கற்பூர ஆராதனைக்குக் கும்பிட்டாற்போல இருந்தது. – ஜூலை 2007 https://engalblog.blogspot.com/2024/05/positive.html
-
மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
13 MAY, 2024 | 10:05 AM நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாகவும் அவர்களும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் பேசிய காணொலி ஒன்று சமீபத்தில் வைரலானது. அவரது பேச்சை பாஜக-வினர் விமர்சித்து வரும் நிலையில் மணிசங்கர் ஐயரின் கருத்தில் உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (மே.13) வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில்இ தெலங்கானாவில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஇ நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என்று தெரிவித்துள்ளார். “அணுகுண்டு மீதான பயம் காரணமாகஇ அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம். பாகிஸ்தானின் தோட்டாக்களுக்கு பீரங்கிகளால் பதில் அளிக்கப்படும்.” இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். https://www.virakesari.lk/article/183375
-
குழந்தைகள் மீது 33 ஆண்டுகள் நடந்த கொடிய பரிசோதனை - மஞ்சள் மாளிகை மர்மம் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அவுட்லுக் தொடர் பதவி, பிபிசி உலக சேவை 12 மே 2024 "ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த போது எதேச்சையாக அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தின் பெயரை திரையில் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்திராத நினைவுகள் எனக்குள் இருந்தன, அந்த பெயரை பார்த்ததும், திடீரென எனக்குள் தேக்கி வைத்திருந்த அந்த உணர்வுகள் வெடித்தன, நான் வீட்டை விட்டு வெளியேறினேன்... நான் மலை உச்சியில் இருந்து அந்த பெயரை கத்த விரும்பினேன்!" என்று ஈவி மேகஸ் விவரித்தார். ஒரு இணையத் தேடலில், ஈவி மேகஸ் வாழ்க்கையின் கடந்த காலத்திலிருந்த ஒரு தீய சக்தி மீண்டும் அவரின் கண் முன் தோன்றியது. `இன்’ நதியின் பள்ளத்தாக்கின் சரிவுகளில், பனி மூடிய ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத் தொடரின் நிழலில் அமைந்திருக்கும் வெளிறிய மஞ்சள் நிற வீட்டின் புகைப்படம் அது. இப்போது அந்த மஞ்சள் வீடு ஒரு அடுக்குமாடி கட்டிடமாக உருமாறி இருந்தது. ஆனால் அதன் சுவர்கள், இன்னமும் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தில் வாழ்ந்த ஈவி போன்ற குழந்தைகளிடம் மறைக்கப்பட்ட ஒரு பயங்கரமான ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தது. ஆஸ்திரியாவை பூர்விகமாக கொண்ட ஈவி, விருது பெற்ற புகைப்பட பத்திரிகையாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால் அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை, தன் குழந்தைப் பருவத்தின் இருண்ட அத்தியாயத்தை தனது மனதில் பூட்டி வைத்திருந்தார். தனது உயிரைக் காப்பாற்றிய சிகிச்சையாளரிடம் கூட இந்த உண்மைகளை ஈவி சொல்லவில்லை. பட மூலாதாரம்,EVY MAGES ஈவியின் வாழ்க்கையில் இரண்டு கருப்பு அத்தியாயங்கள் இருந்தன. ஒன்று அவரின் வீடு, மற்றொன்று அந்த மஞ்சள் நிற குழந்தைகள் கண்காணிப்பு மையம். முதல் அத்தியாயத்தில் சரியான குடும்ப அமைப்பு இன்றி தனிமையில் எப்போதும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்துள்ளார். ஆஸ்திரியாவில் இருந்தவரை அவருக்கு சில இனிமையான நினைவுகள் இருந்தாலும், பெரும்பகுதி கசப்பான நினைவுகளை கொண்டிருந்தது. எனவே அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், ஆஸ்திரியா பற்றிய கடினமான நினைவுகள் மீண்டும் தோன்றுவதை தடுக்கும் முயற்சியில், அவர் அங்கு திரும்பி செல்லக்கூடாது என்றும் ஜெர்மன் மொழியைப் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் உண்மை வேறு. அவர் அந்த நினைவுகளில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாலும், அவை ஆழ்மனதில் நிரந்தரமான வலியை ஏற்படுத்தி கொண்டிருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தை பற்றிய இணையத் தேடலுடன், தனக்குள் புதைந்திருக்கும் கொடிய நினைவுகளை மீண்டும் எதிர்கொள்ளத் தொடங்கினார். ஒருவழியாக அந்த சம்பவங்களை வெளியே சொல்லும் தைரியம் அவருக்கு வந்தது. குழந்தை பருவத்தில் நடந்தவற்றை, 59 வயதான ஈவி பகிர்ந்து கொண்டார். ஈவியின் தற்போதைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. ஆனாலும் துன்பகரமான குழந்தை பருவத்தை பற்றி சொல்லும் போது, சிரமத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகிறார். பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,8 வயதில் ஈவி ஈவியின் மகள் லில்லி மற்றும் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முற்பட்டார். "நான் என் கடந்த காலத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பகிர்ந்தேன். ஆனால் குழந்தைகள் கண்காணிப்பு மையம் என்ற பெயரில் இயங்கிய அந்த மனநல மருத்துவமனையில் நான் வைக்கப்பட்ட அத்தியாயத்தை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டேன். ஏனென்றால் அது இருட்டு, வலி.. என்னோடு போகட்டும்” ஒரு நாள், ஈவி தனிமையில் இருந்தபோது, அவருக்கு சட்டென நினைவுக்கு வந்த ஆஸ்திரிய நகரான இன்ஸ்ப்ரூக்கில் ஒரு முகவரியை இணையத்தில் தேடினார், அப்போது தான் அந்த ’வார்த்தை’ அவர் கண்களில் தென்பட்டது. " `Kinderbeobachtungsstation” .. ஆம் இது தான் அந்த குழந்தைகள் காப்பகத்தின் பெயர். அதன் பொருள் 'குழந்தைகள் கண்காணிப்பு நிலையம்’. டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்...,' என்று தொடர்ந்து படித்த போது, ஆமாம், அவர்தான் அந்த மருத்துவர் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த இடம் என்று நினைத்தேன்." Kinderbeobachtungsstation என்பது ஈவிக்கு ஒரு புதிய பெயர்; ஆனால் அந்த காப்பகத்தை வழி நடத்திய அந்த நபரை ஈவிக்கு நன்றாக தெரியும். அந்த நினைவுகள் அவர் மனதில் மெல்லமெல்ல எழ ஆரம்பித்தது. மேலும் அந்த இடத்தை பற்றி இணையத்தில் இருந்த பலவற்றைக் கண்டுபிடித்தார். அங்கு வளர்ந்த மற்றவர்களும் தங்களின் கொடிய அனுபவத்தை பகிர்ந்திருந்தனர். பல விரிவான தகவல்கள் கிடைத்தன. ஈவி அவற்றை அவநம்பிக்கையுடன் படித்தார். குழந்தை பருவத்தில் ஈவியை அங்கு அனுப்பி வைத்தவர்கள், குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் என்றே சொல்லி சேர்த்து விட்டனர். ஆனால் அதன் நோக்கம் மிகவும் மோசமானது என்பதை அவர் பின்னர் தான் உணர்ந்தார். அவர்கள் ஈவி போன்ற குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அங்கு அழைத்துச் செல்லவில்லை, மாறாக அங்கு ஒரு பெரிய பரிசோதனைக்கு குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். ஓர் இருண்ட இரவு பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு,ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்.. இன்ஸ்ப்ரூக்கில் உள்ள அந்த மஞ்சள் வீட்டில் தன்னை வைத்து என்ன பரிசோதனை செய்தார்கள் என்பதை இப்போது அவர் அறிய விரும்பினார். "என்னை என்ன செய்தார்கள்?’’ குழந்தை பருவத்தில் தனக்கு இருண்ட அறையில் நடந்ததை பற்றி ஈவி தற்போது கண்டுபிடிக்க முடிவு செய்தார். " எட்டு வயது சிறுமியாக இருந்த போது எனக்கு அது நடந்தது. அந்த கண்காணிப்பு மையத்தின் இருட்டு அறையில் எனக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. அதன் தாக்கம் 60 வயதை கடந்தும் எனக்குள் இருக்கிறது. இப்போதும் நான் இருட்டைக் கண்டு பயப்படுகிறேன், எனவே நான் எல்லா நேரங்களிலும் விளக்கை எரிய விடுகிறேன். எனக்கு மஞ்சள் மீது வெறுப்பு உள்ளது. இந்த நிறம் என் அனுபவத்தை தொடர்ந்து நினைவூட்டுகிறது. மஞ்சள் நிறத்துடன் சமாதானம் செய்வது எனக்கு ஒரு சவாலாக உள்ளது. மஞ்சள் அந்த வீட்டின் நிறம் மட்டும் அல்ல. சூரியன், பூக்கள் மற்றும் ஒளியின் நிறம் என்பதை நினைவூட்ட முயற்சிக்கிறேன்." கடந்த காலத்தை பற்றி மீண்டும் ஆராய வேண்டுமெனில் இந்த பயத்திலிருந்து விடுபட வேண்டும். எனவே ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார். ஈவி 60களின் நடுப்பகுதியில் ஆஸ்திரியாவில் பிறந்த போது, அவரது தாயாருக்கு திருமணமாகவில்லை, எனவே அந்த சமயத்தில் ஈவி மீதும் அவரது தாயின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சமூகத்தின் பார்வையில் இருவரும் தவறாக தெரிந்தனர். சரியான குடும்ப சூழல் அமையாததால், ஈவி அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையங்களின் பராமரிப்பில் வளர்ந்தார். பின்னர், ஈவி தனது வளர்ப்பு தாய் 'ஆனி' நடத்தி வந்த விடுதியில் ஒரு தத்தெடுக்கப்பட்ட குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தார். "என் வளர்ப்பு தாயான ஆனிக்கு என்னைப் பிடிக்கவில்லை, என்னை தொல்லைமிகு உயிரினமாக பார்த்தார். சதா என்னை திட்டி கொண்டே இருப்பார். விடுதியில் இருந்த பாதிரியாரும் என்னை மிகவும் கண்டிப்பாக நடத்துவார். நான் முட்டாள்தனமாக இருந்ததற்காகவும், என் அம்மாவுக்கு கஷ்டம் கொடுப்பதற்காகவும் என்னைத் திட்டி கொண்டிருப்பார்." "எனக்கு 4 வயது இருக்கும். எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் ஆனி என்னை திட்டியது மட்டும் தான். வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக என்னைக் குற்றம் சாட்டினார். பாத்திரங்களை உடைக்கிறேன். சுவற்றில் கிறுக்குகிறேன் என்று காரணங்களை சொல்லி திட்டுவார். ஆனால் நான் எதையும் செய்யவில்லை. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை என்னை அடிப்பார், பின்னர் மணிக்கணக்கில் அறைக்குள் அடைத்து தண்டனை கொடுப்பார்.” "அச்சுறுத்தல்கள், அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டு, டிசம்பர் 1973 இன் இறுதியில் ஓர் இரவில் அங்கிருந்து நான் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போது எனக்கு 8 வயது. இன்ஸ்ப்ரூக்கில் உள்ள மஞ்சள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்."என்றார். பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,6 அல்லது 7 வயதாக இருந்தபோது ஈவி.. அன்று நடு ராத்திரியில் என் வீட்டில், யாரோ வந்து என்னை கட்டிலில் இருந்து தூக்கி சென்று, காரில் ஏற்றினார்கள். அப்போது இருட்டாக இருந்தது, குளிர்ந்தது, நான் மிகவும் பயந்தேன். யாரும் எதுவுமே பேசவில்லை, நாங்கள் நீண்ட நேரம் பயணித்தோம். காரில் யார் இருந்தார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் இன்ஸ்ப்ரூக் வந்தடைந்த போது என்னுடன் ஆனி இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் எனக்கு சீருடை, உள்ளாடைகள் மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை கொடுத்தனர். எனக்கு நினைவிருக்கிறது, அந்த வீட்டின் உட்புற சுவர்களில் எல்லா இடங்களும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது, ஹால்வேயில் ஒரு பெரிய மீன் தொட்டி இருந்தது. இரண்டாவது மாடியில், ஒரு ஜன்னல் கொண்ட ஒரு பெரிய அறை இருந்தது, வரிசையாக படுக்கைகள் இருந்தன. கட்டிலில் ஒவ்வொரு குழந்தையையும் அடையாளம் காணும் தனி வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. என் கட்டிலில் மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தது. அது ஒரு மனநல மருத்துவமனை என்பதை எப்போது உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை. வெள்ளை கோட் அணிந்த பெரியவர்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். அந்த அறையின் கதவுக்கு மேல் ஸ்பீக்கர் இருந்தது, பகல் முழுவதும் பல ஒலிகள் மற்றும் அலாரங்களை அது உருவாக்கியது." குழப்பமும் பயமுமாக அந்த இடத்தின் விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்தேன். அவர்கள் எங்களை பேச விடவில்லை, சைகையால் பேச வேண்டும், இல்லையெனில் சுருக்கமாக பேச வேண்டும். எதையும் செய்வதற்கு முன் நாங்கள் அனுமதி கேட்க வேண்டும். உதாரணமாக, 'தயவுசெய்து, பல் துலக்க வேண்டும்’ , சாப்பிடும் போது, 'ப்ளீஸ், ஸ்பூன்' என்று சொல்ல வேண்டும். தட்டில் உள்ள அனைத்தையும் நாங்கள் சாப்பிட வேண்டும். மீதம் வைத்தால், அந்த தட்டில் இருக்கும் உணவு கெட்டு போனாலும், அடுத்த வேளைக்கு அதையே கொடுத்து சாப்பிட சொல்வார்கள். கொடூர மருத்துவர் பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அடிக்கடி ஊசி போடப்பட்டது, ஆனால் ஏன் என்று யாருக்கும் தெரியாது. ஈவி மற்றும் இளம் குழந்தைகளின் வாழ்க்கையை நிர்வகித்த, அந்த மையத்தை நடத்திய மனநல மருத்துவரின் பெயர் டாக்டர் மரியா நோவாக்-வோக்ல். "அவர் ஜெர்மனியின் நாஜிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவர் மற்றும் அந்த சித்தாந்தத்தை கொண்டிருந்தார். ஆனால் ஆஸ்திரியாவில் அவர் அனைவராலும் மதிக்கப்பட்டார். அவர் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவத்தில் நிபுணராக கருதப்பட்டார். ஆஸ்திரிய குழந்தைகள் சுகாதார அமைப்புடன் அவர் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார், எனவே அவரது பரிசோதனைக்கு அதிக அளவில் குழந்தைகள் தரப்பட்டனர்." மஞ்சள் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நோவாக்-வோகல் ஒரு நாள் எங்கள் முன்னிலையில் கூறினார். அனைத்து குழந்தைகளும் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் தனது ஊழியர்களுக்கான வழிமுறைகளின் பட்டியலையும் அவர் சொன்னார்.” "இது மிகவும் நீளமானது மற்றும் அபத்தமானது. அவர்கள் குழந்தைகளின் அனைத்து பழக்கவழக்கங்களையும் கண்காணிப்பார்கள். எங்களின் குளியல் அறையை கூட பார்ப்பார்கள். இது மிகவும் ஊடுருவும் சூழல். எங்கள் கனவுகளை கூட அவர்களிடம் சொல்லும்படி வற்புறுத்தினார்கள்." குழந்தைகள் அங்கு பயத்தில் வாழ்ந்தனர். ஈவி வேண்டுமென்றே விதிகளை மீறிய ஒரு குழப்பமான தருணத்தை தெளிவாக நினைவு கூர்ந்தார். "அன்று ஏதோ இனிப்பு தருவதாக வரிசையாக வரச் சொல்லி இருந்தார்கள், அதைக் கொடுத்த போது, அந்த இனிப்பு முழுக்க எறும்புகள் நிறைந்திருப்பதை கண்டு நான் பயந்தேன். நான் ஓ வென கத்தினேன், கவுன் அணிந்த பெரியவர்கள் என்னைத் தூக்கி வெளியே அழைத்துச் சென்று அடிக் கொடுத்தார்கள்.” இது அடிக்கடி நடந்தது, ஆனால் ஈவி மற்றும் மற்ற குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தனர். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இல்லை. கொடிய சிகிச்சை முறை ஈவி இவற்றை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியபோது, அதிர்ச்சியான ஒன்றைக் கண்டுபிடித்தார். "சிகிச்சைகள்" நோவாக்-வோகல் குழந்தைகளுக்கு ரோஹிப்னோல் உட்பட வலுவான மயக்க மருந்துகளை வழங்கி இருக்கிறார், மேலும் எபிஃபிசன் என்ற விசித்திரமான ஹார்மோனையும் உட்செலுத்தி இருக்கிறார். எபிஃபிசன் என்பது கால்நடைகளின் பினியல் சுரப்பிகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதனை கால்நடை மருத்துவர்கள் கால்நடைகள் மற்றும் பசுக்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தினர். இது மனிதர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும், குழந்தைகளின் பாலியல் உணர்வுகளை அடக்கவும், சுயஇன்ப உணர்வை கட்டுப்படுத்தவும், நோவாக்-வோகல் இதை சோதித்திருக்கிறார் என்பது இப்போது எனக்கு தெரிய வந்தது. அவர் உடலுறவு மற்றும் குழந்தைகள் பாலுறவு மீது வெறுப்பாக இருந்தார். நாங்கள் அவருடைய சோதனைப் பொருட்களாக இருந்தோம். அவர் எங்களை விலங்குகளைப் போல நடத்தினார். சக்தி வாய்ந்த மருந்துகளை எங்களுக்கு கொடுத்தார்." நோவாக்-வோகலைப் பற்றி ஈவி எவ்வளவு அதிகமாக கண்டுபிடித்தாரோ, அவ்வளவு அதிகமாக அவள் வருத்தமடைந்தார். குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அந்த மருத்துவரின் அணுகுமுறை, நாஜி கண்ணோட்டத்தின் தாக்கத்தால் தோன்றியிருக்கலாம். பராமரிப்பில் உள்ள பிரச்னையுள்ள குழந்தைகளின் குறைபாடுகள் மரபணு அடிப்படையைக் கொண்டு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த நேரத்தில் ஆஸ்திரிய கத்தோலிக்கத்தின் மிகவும் பழமைவாதம் பின்பற்றப்பட்டு வந்ததால் ஈவி போன்ற குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. "திருமணமாகாத தாயின் மகளாக இருப்பதால், என்னைப் போன்ற குழந்தைகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்ற அவர்களின் நம்பிக்கைகளுக்கு நான் பலியானேன். அவர்களை பொருத்தவரை நாங்கள் தேவையற்றவர்கள், சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்." நோவாக்-வோகலை பொறுத்தவரை, இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், சுய இன்பம் செய்யும் குழந்தைகள் மோசமான பிறப்பை கொண்டவர்கள் என்று நம்பினார். ஆஸ்திரிய சமுதாயத்தைப் பாதுகாக்க, அத்தகைய "குறைபாடுள்ள குழந்தைகளை" கவனித்துக் கொள்வதை விட சரிசெய்ய வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும் அவர்களை, கீழ்ப்படிய வைத்து, அவர்களது பாலியல் உணர்வை மாற்றி, சாதாரண நபர்களாக மாற்றுவதை அவர் தனது பணியாக மாற்றினார். அங்கு இரவுகள் மிகவும் பயங்கரமானவை. நாங்கள் ஒருவரையொருவர் தொடாதபடி எங்கள் அக்குளுக்கு கீழே போர்வை மற்றும் அதன் மேல் கைகளை வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்வோம். மெத்தைகளில் உள்ளமைக்கப்பட்ட அலாரம் இருந்தது, அது யார் படுக்கையை நனைத்தாலும் அவர்களை எச்சரித்தது. அப்படி படுகையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு வெள்ளை கோட் அணிந்தவர்கள் தண்டனையாக குளிர்ந்த நீரில் குளிக்க செய்வார்கள். பின்னர் நீங்கள் ஹால்வேயின் மூலையில் நிற்க வேண்டும். அடுத்த நாள், குழந்தைகள் படுக்கையை நனைத்த குழந்தையின் படுக்கையைச் சுற்றி நின்று அவரைப் பார்த்து அவமானப்படுத்தி சிரிக்க வேண்டும்." வலியின் சுவடுகள் பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,ஈவி தனது கடந்த காலத்தைக் கண்டறிய ஆஸ்திரியாவுக்குச் சென்ற பயணங்களில் ஒன்றில் தனது குழந்தைகளுடன். தற்போது, அந்த இடத்தைப் பற்றி ஈவி கண்டுபிடித்தது உண்மையிலேயே பயங்கரமானது, ஆனால் அது அவளுடைய நினைவுகளை அவற்றின் சரியான சூழலில் வைக்க உதவியது. அப்போது தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள உதவியது. "அந்த மஞ்சள் வீடு 3,650 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்தது என்பதைக் கண்டுபிடித்தது முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது." 2013 ஆம் ஆண்டில், இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள நிபுணர்கள் குழு, இந்த மையத்தின் மீது ஒரு அறிக்கையை வெளியிட்டது, நோவாக்-வோகல் "குறைபாடுள்ள" குழந்தைகளை கையாள்வதற்கான சாக்குப்போக்கின் கீழ் பல்வேறு துஷ்பிரயோகங்களை செய்ததாக அந்த அறிக்கை கூறியது. Kinderbeobachtungsstation ஐ "வளர்ப்பு இல்லம், சிறைச்சாலை மற்றும் சோதனை கிளினிக்" என்று விவரித்தது, அங்கு 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பல மாதங்கள் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சள் மாளிகை 1954 முதல் 1987 வரை 33 ஆண்டுகள் செயல்பட்டது. அவரது மையம் மூடப்பட்ட பிறகும், நோவாக்-வோகல் பல்கலைக் கழகங்களில் விரிவுரை பணியைத் தொடர்ந்தார் மற்றும் 1998 இல் அவர் இறப்பதற்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பதக்கம் பெற்றார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகள் இந்த விதிமுறைகளை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. "என்னை இன்ஸ்ப்ரூக்கில் சேர்த்தது என் தவறு என்று நான் நம்பினேன். என்னை நானே குற்றம் செய்தவள் என்று நம்பினேன். நிறைய குழந்தைகள் அப்படித்தான் நம்பினார்கள்” ஈவி ஏன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார் அல்லது ஒரு கட்டத்தில் அவர் ஏன் எதிர்பாராத விதமாக வளர்ப்புத் தாயான ஆனியுடன் வாழத் திருப்பி அனுப்பப்பட்டார் என்று ஈவி ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. "மீண்டும் ஆனியிடம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்த கொடுமைகளுக்கு இது தேவலாம் போலிருந்தது. அன்று இரவு சாப்பாட்டு மேசையில், ஆனி குனிந்து, நாற்காலியில் ஒரு சிறிய கீறலைக் காட்டி, இது உன் வேலையா என்று திட்டத் தொடங்கினார். என் இதயம் நடுங்கியது. மீண்டும் மற்றொரு கொடுமை தொடங்கியது." பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,ஈவி, Kinderbeobachtungsstation இல் தனது கோப்பில் ஸ்டேபிள் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்திருக்கிறார் . "ஓரளவுக்கு சுயமாக முடிவெடுக்கும் வயது வந்த போது, ஆஸ்திரியாவை விட்டு வெளியேறினேன். அதுவரை ஆனியை சகிக்க வேண்டியிருந்தது. நண்பர்களின் உதவியுடனும், கரீபியனில் ஒரு பயணக் கப்பலில் வேலை கிடைத்தது. அதன் பின் நியூயார்க் வந்தேன். எனக்கு இந்த புதிய வாழ்க்கை பிடித்தது. என்னை யாரும் குறை சொல்லவில்லை. தண்டிக்கவில்லை. நான் நிம்மதியாக உணர்ந்த முதல் இடம் நியூயார்க் தான்" அங்கிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. புதிய எல்லைகளை அடைந்தேன். ஆனால் எனக்கு நடந்த கொடுமைகளால் மனநோயாளி ஆனேன். ஆழமாக பாதிக்கப்பட்டேன். தூங்குவதில் மிகவும் சிரமப்பட்டேன், சாப்பிட முடியவில்லை. Kinderbeobachtungsstation இல் இருந்த பிறகு , மனநல மருத்துவத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக நான் ஒருபோதும் உளவியலாளரின் உதவியை நாட போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால், எனக்கு கிட்டத்தட்ட 30 வயதாக இருந்தபோது தான் மனநல சிகிச்சை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து என்னால் சிகிச்சைக்கு செல்ல முடிந்தது." முதலில் நியூயார்க்கிலும் பின்னர் வாஷிங்டனிலும், ஈவி ஒரு புகைப்படக் கலைஞராக ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கினார், காதலித்தார், திருமணம் செய்து கொண்டார், மூன்று குழந்தைகள் மற்றும் பல பூனைகளுக்கு தாயாக நிம்மதியாக வாழ்ந்தார். 2021 ஆம் ஆண்டில், மஞ்சள் மாளிகை பற்றிய உண்மையை கண்டுபிடித்த போது, ஈவி தன் குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். கடந்த காலத்தின் பயங்கரங்களுக்கு விடை தேடி அவர் ஆஸ்திரியா திரும்பிய போது ஈவியின் குழந்தைகள் அனைவரும் அவருடன் சென்றனர். மஞ்சள் வீட்டில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரப்பூர்வ ஆணையம் இருப்பதை அவர்கள் அறிந்தனர் மற்றும் ஈவி அவர்களிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். "மற்றொரு பயணத்தில் என்னை வளர்த்த ஆனியைப் பார்க்க சென்றேன். அவர் என்னை பார்த்துவிட்டு வெளியே போ என்று சொல்வார் என்று நான் நினைத்தேன். உண்மையில் நம்ப முடியாத ஒன்றை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்து என் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். அன்பான ஒரு வயதான பெண்ணை அன்று நான் சந்தித்தேன்." ஆனி என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். நான் ஆறுதல்படுத்தினேன். நான் அவருக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை. அதே சமயம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை நான் மன்னிப்பதில்லை." இப்போதெல்லாம் ஈவி நிம்மதியாக தூங்குகிறார், கடந்த காலத்தை பற்றி நினைப்பதில்லை. "நான் கண்டறிந்த உண்மைகள் என்னை மாற்றின. இனி குற்றவுணர்ச்சிக்கும் பயத்துக்கும் இடமில்லை. நான் நன்றாக தூங்குகிறேன், நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என்கிறார் ஈவி உற்சாகத்துடன். https://www.virakesari.lk/article/183355
-
வடக்கு ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு
12 MAY, 2024 | 06:12 PM ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இருப்பினும், தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாடத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சில தொல்லியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைவாக 30.03.2024 நடந்த ஆட்சேர்ப்பு பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்து 24.04.2024 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 09.05.2024 அன்று வெளியான நேர்முகத் தேர்வு முடிவுகளில் தொல்லியல் பட்டதாரிகள் நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் திட்டத்தின் போது தொல்லியல் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தற்போது வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் வரலாறு பாட ஆசிரியர்களாக உள்ளனர் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள், இவ்வருடமே தொல்லியல் பட்டதாரிகள் வடக்கில் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் தொல்லியல் துறை பட்டதாரிகள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுடன் தொடர்புகொண்டு வினவியபோது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் வர்த்தமானி அறிவித்தலில் தொல்லியல் துறை பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது என்றும் ஏன் இவ்வருடம் உள்வாங்கப்படவில்லை என வினவியபோது இது தொடர்பில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார். தொடர்ந்து பட்டதாரிகள் குறிப்பிடுகையில், வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.திருவாகரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் வெற்றிடங்கள் இன்மையால் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்றும் வரலாறு பாட ஆசிரியர் பதவிக்கு தொல்லியல் துறை பட்டதாரிகள் உள்வாங்கப்படுவதாக இருப்பின் அவர்கள் தங்களின் பாடத்தில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பட்டதாரிகளாக வெளிவரும் பட்டதாரிகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு உள்வாங்கப்படுவதில்லை. இப்போது ஆசிரியர் சேவைக்குள்ளும் உள்வாங்காது தவிர்க்கப்பட்டிருப்பதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று பட்டதாரிகள் கவலையோடு கூறுகின்றனர். https://www.virakesari.lk/article/183354
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல்: பிளேஆப் வாய்ப்பு அதிகரித்தாலும் ஆர்சிபி அணியில் வெளிப்பட்ட பலவீனம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லாது என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்சிபி 5வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதற்கான வாய்ப்பை மெல்ல இழந்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 62-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.1ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? இந்த வெற்றியால் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு உயிர்ப்பித்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடிய ஆர்சிபி அணி 5 வெற்றிகள் உள்பட 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி அணிகளைவிட சிறப்பாக 0.367 என்று வலுவாக இருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை கொல்கத்தா அணியிடம் ஒரு ரன்வித்தியாசத்தில் தோற்று 6வது தோல்வியை எதிர்கொண்டபோது, ஆர்சிபி அணி 5வது இடத்துக்கு முன்னேறியும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற அணிகளின் முடிவுகள் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதாவது ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கும்போது, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்றால் ஆர்சிபி வெளியேற்றப்படும். லக்னெள அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது ஒன்றில் லக்னெள தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் ஆர்சிபியைவிட மோசமாக இருக்கும். அப்போது இயல்பாக போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறிவிடும். அது மட்டுமல்லாமல் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெல்ல வேண்டும், அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 200 ரன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே ரன் ரேட்டைவிட ஆர்சிபி ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தை அடையும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு சாத்தியமா? டெல்லி கேபிடல்ஸ் அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டில் லக்னெள அணியைவிட சுமாராக இருந்து மைனஸ் 0.482 ஆக இருக்கிறது.அடுத்து வரும் லக்னெள அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி இருக்கிறது. ஒருவேளை லக்னெளவை வென்றால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கும் என்றாலும், நிகர ரன்ரேட் மைனஸ் 0.482 என இருப்பது பெரிய பின்னடைவு. ஒருவேளை லக்னெளவிடம் தோற்றால், டெல்லி அணி 12 புள்ளிகளுடன் வெளியேறும். டெல்லி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு பெற வேண்டுமென்றால், சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த இரு லீக் ஆட்டங்களிலும் படுமோசமாகத் தோற்க வேண்டும், அதாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்யும் அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். லக்னெள அணியை 64ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடிக்க வேண்டும். இவை நடந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட்டைவிட டெல்லி அணியின் ரன்ரேட் உயர்ந்திருக்கும். இவ்வாறு நடந்தால் டெல்லி அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும். ஆதலால் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த கடைசி லீக்கில் லக்னெளவை வென்றாலும் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு நனவாகாது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாம் பாதியில் தடுமாறிய ஆர்சிபி பேட்டர்கள் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பேட்டிங்கில் ரஜத் பட்டிதார்(52), வில் ஜேக்ஸ்(41) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கும், கேமரூன் கிரீனின் (32) கேமியோவும்தான். இவர்களால்தான் ஆர்சிபி அணி ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை எட்டமுடிந்தது, பந்துவீச்சாளர்களும் துணிச்சலாக ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது. அதிலும் பேட்டிங்கில் 32 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது வென்றார். ஆர்சிபியின் நடத்திர பேட்டர்கள் டூப்பிளசிஸ், விராட் கோலியை விரைவாக இழந்தபின் ஆர்சிபி அவ்வளவுதான் எனரசிகர்கள் எண்ணினர். ஆனால், ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் இருவரும் அணியைக் கட்டமைத்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தபின் ஆர்சிபி சரிவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் 220 ரன்கள் வரை அடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. 174 ரன்கள் வரை ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 13 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வேகமான விக்கெட் வீழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகும். ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு பவர்ப்ளே ஓவருக்குள் டெல்லி அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி பாதி தோற்றுவிட்டது. அதிலும் அதிரடி பேட்டர் மெக்ருக்கின் விக்கெட்டை வீழ்த்தியபோது ஆர்சிபியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. ஏனென்றால் களத்தில் மெக்ருக் நின்றிருந்தால் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பக்கூடியவர். 86 ரன்கள் வரை டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 54 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோலியை வென்ற இசாந்த் விராட் கோலி தனது 250-வது ஐபிஎல் போட்டியில் நேற்று விளையாடினார். தொடக்கத்திலிருந்தே கோலி அதிரடியாக பேட் செய்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். இசாந்த் சர்மா வீசிய ஓவரில் கோலி முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரும் விளாசி சிரித்தார். ஆனால் அடுத்த இரு பந்துகளில் இசாந்த்தின் அற்புதமான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பர் அபிஷேக்கிடம் கோலி கேட்ச் கொடுத்து 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்து செல்லும்போது இசாந்த் சர்மா வேண்டுமென்றே கோலியை தடுத்து நகைச்சுவை செய்தார், இதை கோலியும் ரசித்து சிரித்துக்கொண்டே பெவிலியின் திரும்பினார். ரஜத் பட்டிதார் இந்தசீசனில் 11 போட்டிகளில் 8 முறை வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், நேற்று நிதானமாக ஆடிய பட்டிதர் 8 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின் அக்ஸர் படேல், குல்தீப் ஓவர்களில் அதிரடியாக ஆடிய பட்டிதரால் பவர்ப்ளேயில் ஆர்சிபி 2 விக்கெட்இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. குல்தீப், அக்ஸர் ஓவர்களை வெளுத்த பட்டிதார் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 5 இன்னிங்ஸ்களில் பட்டிதார் 4வது அரைசதத்தை நிறைவு செய்தார், பெங்களூருவில் இந்த சீசனில் முதல் அரைச் சதத்தை அடித்தார். பட்டிதாரை ஆட்டமிழக்கச் செய்ய 4 வாய்ப்புகள் வந்தும் அனைத்தையும் டெல்லி வீரர்கள் தவறவிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் தோல்விக்கு காரணம் என்ன? டெல்லி அணியின் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் “ சரியான நேரத்தில் கேட்ச் பிடித்திருந்தால் 20 முதல் 30 ரன்களைக் குறைத்திருப்போம், 150 ரன்களை எளிதாக சேஸிங் செய்திருப்போம். பவர்ப்ளேயில் நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கான காரணம். 160 முதல் 170 ரன்கள் வரை எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால், இரவில் பந்து பேட்டர்களை நோக்கி வேகமாக வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பந்து விக்கெட்டில் பட்டு நின்று வந்ததால் அடித்து ஆட சிரமமாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நடந்தது எங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பதை காண்பிக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல எதுவேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார் அக்ஸர் படேல் போராட்டம் டெல்லி அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் நேற்று பேட்டிங்கில் ஒற்றை வீரராகப் போராடி அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேலுக்கு ஒத்துழைத்து எந்த பேட்டரும் பேட் செய்யவில்லை. பவர்ப்ளே ஓவருக்குள் வார்னர்(1), ப்ரேசர்(21), அபிஷேக்(2), ஹோப்(29) என விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி அணி பாதி தோற்றுவிட்டது. 4 ஆட்டங்களுக்குப்பின் நேற்று பேட் செய்த வார்னர் ஒரு ரன்னில் ஸ்வப்னில் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். யாஷ் தயாலின் பவுன்ஸரில் அபிஷேக் போரெல் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை ஆர்சிபி வீழ்த்தியது 2வது முறையாகும், இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தியது. நடுப்பகுதி ஓவர்களில் சரியான திட்டத்துடன் வந்த ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் துல்லியமாக வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டனர். 8-ஆவது ஓவரிலிருந்து 11வது ஓவர்கள் வரை ஆர்சிபி அணி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அக்ஸர் படேல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மற்றவகையில் குமார்(2),ஸ்டெப்ஸ்(3) இருவருமே ஏமாற்றினர். கடைசி 4 விக்கெட்டுகளை டெல்லி அணி 13 ரன்களுக்குள் இழந்தது. https://www.bbc.com/tamil/articles/c8vz33z04eyo
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
13 MAY, 2024 | 09:50 AM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/183370
-
காசாவில் இடிபாடுகளிற்கு இடையில் மீட்க முடியாத நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள்
Published By: RAJEEBAN 12 MAY, 2024 | 01:57 PM காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச்சாதாரணமான இயந்திரங்களை பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் இதனால் எங்கள் முயற்சியும் நேரமும் வீணாகியுள்ளது என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செல்கின்றனர். அவர்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்கள் - உடல்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இடிபாடுகளிற்குள் சிக்குப்படுபவர்களை மீட்பதற்கு அவசியமான இயந்திரங்களை காசாவிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஐநாவும் மனிதாபிமான அமைப்புகளும் ஆதரவளிக்கவேண்டும் என என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார். அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் விலகி 40நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் மருத்துவமனைக்குள் பாரிய மனித புதைகுழிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த உடல்களை இன்னமும் மீட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183313