Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டை சேர்ந்த ஓய்வூதியதாரர் ஜோவாவ் (João - அவரது உண்மையான பெயர் அல்ல) , 2018 -ஆம் ஆண்டில், தனது ஆணுறுப்பில் மரு போன்று ஏதோ இருப்பதை கவனித்தார். என்னவென்று புரியாமல் மருத்துவ உதவியை நாடினார். "எனது ஆணுறுப்பில் மரு போன்று உருவாகி இருப்பது என்ன என்பதைக் கண்டறிய நான் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றேன். ஆனால் அனைத்து மருத்துவர்களும், அங்கு எனக்கு தடிமனான தோல் இருப்பதால் அப்படி இருக்கும், அல்லது சில மருந்துகளின் பக்க விளைவாக ஏற்பட்டிருக்கும் என சொன்னார்கள்," என்று 63 வயதான ஜோவாவ் நடந்ததை நினைவு கூர்ந்தார். மருந்துகள் உட்கொண்ட போதிலும் அந்த மருவின் வளர்ந்துகொண்டே இருந்தது. இது அவரது திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியது. ஜோவாவின் பாலியல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜோவாவ் மறும் அவரது மனைவிக்கு இடையில் தாம்பத்யம் முற்றிலும் இல்லாமல் போனது. "நாங்கள் கணவன் மனைவியாக இல்லாமல், உடன்பிறப்புகளைப் போல வாழத் தொடங்கினோம்," என்று ஜோவாவ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஐந்து ஆண்டுகளாக ஜோவாவ் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவ நிபுணர்களிடம் முன்னும் பின்னுமாகச் சென்று புதிய பயாப்ஸிகளை செய்து கொண்டார். ஆனால் தன் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்று அவர் விவரித்தார். பின்னர், 2023-இல் ஒரு நோயறிதல் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அவருக்கு 'ஆணுறுப்பு புற்றுநோய்' இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. "என் மனம் கனத்துப்போனது. எனது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். என் ஆண்குறியின் ஒரு பகுதியை துண்டிக்க வேண்டியிருக்கும் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் தலை துண்டிக்கப்பட்டது போல் நான் உணர்ந்தேன். இந்த வகையான புற்றுநோயைப் பற்றி நீங்கள் யாரிடமும் பேச முடியாது. ஏனெனில் இது ஒரு 'ஜோக்' ஆக மாறக்கூடும்," என்கிறார் ஜோவாவ். ஆண்குறி புற்றுநோய் அரிதானது. ஆனால் உலகம் முழுவதும் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஜோவாவின் சொந்த நாடான பிரேசிலில் தான் ஆண்குறி புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு, 1 லட்சம் ஆண்களில், 2.1% பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சமீபத்திய ஆண்குறி புற்றுநோய் ஆராய்ச்சியின்படி, உலகம் முழுவதும் இதன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது 'அறுவை சிகிச்சைக்கு பயந்தேன்' சமீபத்திய ஆய்வுகளின்படி, ஜோவாவின் சொந்த நாடான பிரேசிலில் தான் ஆண்குறி புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு, 1 லட்சம் ஆண்களில், 2.1 பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது. 2012 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் நாட்டில் 21,000 ஆண்குறி புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதன் விளைவாக 4,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. கடந்த பத்தாண்டுகளில், 6,500-க்கும் மேற்பட்ட ஆண்குறி புற்றுநோயாளிகளுக்கு உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது – இது சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை", என்று அந்த அறிக்கை கூறுகிறது. பிரேசிலின் மிகவும் ஏழ்மையான மாநிலமான மரன்ஹாவாவ் (Maranhão), உலகளவில் அதிக ஆண்குறி புற்றுநோயாளிகளைக் கொண்டுள்ளது. அங்கு 1 லட்சம் ஆண்களில், 6.1 என்ற விகிதத்தில் நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்குறி புற்றுநோய், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், ஆண்குறியின் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டியிருக்கும். மேலும் ஆணுறுப்புக்கு அருகில் உள்ள விதைப்பைகள் போன்ற பிற பிறப்புறுப்பு உறுப்புகளையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம், என்கின்றனர் மருத்துவர்கள். ஜோவாவுக்கு சென்ற ஜனவரி மாதம் ஆணுறுப்பின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. "உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டது என் வாழ்வின் மிகவும் கடினமான நேரம். இது நமக்கு நடக்கும் என்று நான் நினைத்துப் பார்க்காத ஒன்று, ஆனால் நடந்துவிட்டது. சாதாரணமாக நண்பர்களிடம் இந்தச் சோகத்தை பகிர்ந்துவிட்டுக் கடந்து செல்ல முடியவில்லை,” என்று அவர் விவரிக்கிறார். "ஆரம்பத்தில் நான் அறுவை சிகிச்சைக்கு பயந்தேன். ஆனால் வேறு வழியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் வாரத்தில் மிகவும் சோகமாக இருந்தேன். ஆண்குறியின் ஒரு பகுதி துண்டிக்கப்படுவது பயங்கரமானது," என்று கூறினார் அவர். பட மூலாதாரம்,SBU படக்குறிப்பு,பிரேசிலியன் 'சொசைட்டி ஆஃப் யூரோலஜியைச்' சேர்ந்த மொரிசியோ டெனர் கார்டிரோ, “சுகாதாரம் இல்லாததும் இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆணுறுப்பை முழுவதும் நீக்க வேண்டுமா? ஆண்குறி புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாக கூறப்படுவன: 1) ஆணுறுப்பில் ஆறாத புண்கள் ஏற்படுவது 2) ஆணுறுப்பிலிருந்து கடுமையான நாற்றம் கொண்ட திரவம் வெளியேறுவது சில நோயாளிகளுக்கு ஆண் உறுப்பு முற்றிலும் நீக்கப்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும். பிரேசிலின் முக்கியமான வணிக நகரமான சாவ் பாலோவில் உள்ள ஏ.சி. காமர்கோ புற்றுநோய் மையத்தின் சிறுநீரகவியல் துறை மருத்துவர் தியாகோ கேமலோ மௌராவோ இதுகுறித்துப் பேசுகையில், ஆண்குறியின் ஒரு பகுதி மட்டும் நீக்கப்பட்டால், அதன் வழியாக சிறுநீர் தொடர்ந்து வெளியேறும், என்றார். "ஆனால், முழு பாகமும் நீக்கப்படும் நிலையில், சிறுநீர்க்குழாய் துளை, விதைப்பை மற்றும் ஆசனவாய் இடையே உள்ள பகுதியான பெரினியத்திற்கு (perineum) மாற்றியமைக்கப்படும். இதனால் நோயாளி கழிவறையில் அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும்," என்று விளக்கினார். நிபுணர்களின் கருத்துப்படி, "ஆண்குறி புற்றுநோய் உருவாக பல ஆபத்து காரணிகள் உள்ளன. பிமோசிஸ் (phimosis) என்று சொல்லப்படும் இறுக்கமான நுனித்தோல் இருப்பது, புகைபிடித்தல் ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படலாம்." பிரேசிலியன் 'சொசைட்டி ஆஃப் யூரோலஜியைச்' சேர்ந்த மொரிசியோ டெனர் கார்டிரோ, “சுகாதாரம் இல்லாததும் இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம். ஒரு ஆண் தன் ஆணுறுப்பின் நுனித்தோலை சரியாக சுத்தம் செய்யத் தவறினால், அதில் சுரக்கும் ஒருவித சுரப்பு அதிகரித்துத் தேங்கி, அது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கிறது. இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், அது புற்றுநோய் கட்டியாக மாறும் வாய்ப்புகளை அதிகரிக்கும்,” என்றார். கார்டிரோ மேலும் கூறுகையில், "மனித பாப்பிலோமா வைரஸின் (HPV) தாக்கம் தொடர்ந்து ஏற்பட்டாலும், வாய் மற்றும் ஆண்குறி உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். HPV என்பது ஒரு வகை வைரஸ் குழுவிற்கு வழங்கப்படும் பொதுவான பெயர். HPV உயர் செயல்திறன் கொண்ட வைரஸ் ஆகும். எனவே அது தொடர்பான தொற்றுக்களைத் தடுக்கத் தடுப்பூசி அவசியம். ஆனால் பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதங்கள் தேவையான அளவை விட குறைவாக இருக்கின்றன,” என்றார். கார்டிரோ மேலும் கூறுகையில், "பிரேசிலில், தடுப்பூசிகள் கிடைத்தாலும், HPV தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் பெண்களிடம் 57%, ஆண்களுக்கு 40%-ஐ விட குறைவு,” என்றார். பிரேசிலில் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்கள், அதன் செயல்திறன் பற்றிய சந்தேகங்கள் மற்றும் தடுப்பூசி பிரசாரங்களின் பற்றாக்குறை ஆகியவை இந்தப் பிரச்னைகளை தீவிரப்படுத்துவதாக அவர் கருதுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'மனித பாப்பிலோமா வைரஸின் (HPV) தாக்கம் தொடர்ந்து ஏற்பட்டாலும், வாய் மற்றும் ஆணுறுப்பு உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்' உலகம் முழுதும் அதிகரிக்கும் ஆணுறுப்புப் புற்றுநோய் ஆனால், இந்த நிலை பிரேசிலில் மட்டுமில்லை. சமீபத்திய ஆண்குறி புற்றுநோய் ஆராய்ச்சியின்படி, உலகம் முழுவதும் இதன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-ஆம் ஆண்டில், JMIR பொது சுகாதாரம் மற்றும் கண்காணிப்பு என்ற சஞ்சிகை, 43 நாடுகளின் சமீபத்தியத் தரவுகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. 2008 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் அதிக ஆண்குறி புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உகாண்டாவில் இருந்தது (1 லட்சம் ஆண்களுக்கு 2.2 பேர்), அதைத் தொடர்ந்து பிரேசில் (1 லட்சம் ஆண்களுக்கு 2.1 பேற்) மற்றும் தாய்லாந்து (1 லட்சம் ஆண்களுக்கு 1.4 பேர்). குவைத்தில் மிகக் குறைவாக இருந்தது (1 லட்சம் ஆண்களுக்கு 0.1 பேர்). "வளரும் நாடுகளில் ஆண்குறி புற்றுநோயின் பாதிப்பால் அதிக இறப்புகள் ஏற்படுகின்றன. என்றாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது," என்பதை சீனாவின் சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லீவென் ஃபூ மற்றும் தியான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. 1979 மற்றும் 2009 ஆண்டுகளுக்கு இடையில் பிரிட்டனில் ஆண்குறி புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் (1 லட்சம் ஆண்களுக் 1.1-இலிருந்து 1.3 ஆக உயர்வு) , ஜெர்மனியில் 1961 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் 50% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன (1 லசட்சம் ஆண்களுக்கு 1.2-இலிருந்து 1.8 ஆக உயர்வு). `குளோபல் கேன்சர் ரெஜிஸ்ட்ரி`யின் கணிப்பு எதிர்வரும் 2050-ஆம் ஆண்டில், ஆண்குறி புற்றுநோயாளிகளின் உலகளாவிய எண்ணிக்கை 77%-க்கும் அதிகமாக உயரும் என்று மதிப்பிடுகிறது. மேலும் இந்நோய் வயதான ஆண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மருத்துவர் கார்டிரோ மேலும் கூறுகையில், ஆணுறுப்பு புற்றுநோய் என்பது ஒரு அரிதான நோயாகும், என்றார். "ஆனால் இது ஏற்படாமல் தடுப்பது சுலபம். ஆண்கள் (எல்லா வயதினரும்) தங்கள் ஆண் உறுப்பை சோப்பு மற்றும் தண்ணீரில் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். உடலுறவுக்குப் பிறகு கழுவுவது மிகவும் முக்கியம்," என்றார். "உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஆணுறுப்பின் முன்தோல் தடிமனாக இருப்பின் அறுவை சிகிச்சை செய்து நீக்குதல் ஆகியவை ஆண்குறி புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்,” என்றும் அவர் அறிவுறுத்தினார். ஜோவாவ் தற்போது தனது சமீபத்திய சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவுகள் வெளியாகும். "இந்தச் சோதனை, நான் குணமடைந்து விட்டேன் என்று கூறும் என்று நம்புகிறேன். என் ஆணுறுப்பில் பாதி நீக்கப்பட்டது வாழ்நாள் முழுவதும் வருத்தம் தரக்கூடியது எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி இன்றி நிம்மதியாக இருக்கிறேன்," என்கிறார் அவர். பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 90%-க்கும் அதிகமானோருக்கு, அவர்களது உறுப்புக்கு அருகில் உள்ள நிணநீர் மண்டலங்களுக்குத் தொற்று பரவவில்லை எனில், அவர்கள் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்ட்ட காலம் பிரச்சனை இன்றி வாழ்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/ckr58d9k2m3o
  2. 10 MAY, 2024 | 11:11 AM பிரான்ஸ் தலைநகரில் பொலிஸ் நிலையமொன்றிற்குள் நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். பெண் ஒருவரை தாக்கியமைக்காக கைதுசெய்ய்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார், இரண்டு பொலிஸார் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதும் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளிற்காக பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/183127
  3. விராட் கோலியின் 'மின்னல் வேக' ரன் அவுட், அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்; பிளேஆப் கனவை தக்கவைத்த ஆர்சிபி பட மூலாதாரம்,SPORTZPICS 3 மணி நேரங்களுக்கு முன்னர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் கூடிய 92 ரன்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பைத் தகர்த்த ரன் அவுட் என பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் பிளே ஆப் வாய்ப்பை இன்னொரு போட்டி வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அதே நேரத்தில் ஐபிஎல் டி20 2024 சீசனில் இருந்து 2-ஆவது அணியாக பஞ்சாப் கிங்ஸ் வெளியேறியது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் இருந்தாலும் அதில் இரண்டிலும் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளுக்கு மேல் பெற இயலாது. தரம்சாலாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. 242 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்று நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆமதாபாத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோற்றால் போட்டித் தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை சிஎஸ்கே அணி தோற்றால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை அடுத்தபோட்டி வரைக்கும் தக்கவைத்துக்கொள்ளும். சிஎஸ்கே அணியின் நிலை சிக்கலாகி கடைசி 2 போட்டிகளிலும் கட்டாயமாக வெல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி பிளேஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்? இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 7-ஆவது இடத்தில் நீடிக்கிறது. 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணியைவிட சிறப்பாக 0.217 என்ற ரீதயில் இருப்பதால், அடுத்த ஒரு ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால், 5-ஆவது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. டெல்லி அணி நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.316 ஆகவும், லக்னெள அணி மைனஸ் 0.769 ஆகவும் பின்னடைவுடன் இருக்கிறது. இரு அணிகளும் தங்களுக்கு இருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால்தான் 16 புள்ளிகளைப் பெற முடியும், 4-ஆவது இடத்துக்கும் போட்டியிட முடியும். இரு அணிகளும் தங்களுக்குரிய 2 ஆட்டங்களில் ஒன்றில் தோற்று, மற்றொன்றில் வென்றால், ஒருவேளே ஆர்சிபி அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால், ஆர்சிபி 5ஆவது இடத்தைப் பிடித்துவிடும். ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெல்ல வேண்டும், மற்ற இரண்டில் தோற்கவேண்டும். அல்லது சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். மேலும், லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களுக்கு இருக்கும் கடைசி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வெல்ல வேண்டும், மற்றொன்றில் தோற்க வேண்டும். இவை நடந்தால், ஆர்சிபி ப்ளே ஆஃப் கனவு சாத்தியமாகும். பட மூலாதாரம்,SPORTZPICS போட்டியை ஆக்கிரமித்த விராட் கோலி பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் விராட் கோலிதான். பவர்ப்ளேயில் கூட 14 பந்துகளைச் சந்தித்த கோலி, அதன்பின் ‘பழைய’ கோலியாக பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 47 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து விராட் கோலி ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள் என 195 ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி பேட் செய்தார். இந்த ஐபிஎல் சீசனில் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி ஆடியது இந்தப் போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது. பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட கோலி, போட்டியை தன்வசமாக்கும் திறன் கொண்ட சஷாங் கிங்கை ரன்அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். அருமையான “டைரெக்ட் ஹிட்” த்ரோ செய்து ஆட்டத்தில் இந்தத் திருப்புமுனையை ஏற்படுத்தினார் கோலி. ஆட்டநாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது. ஆர்சிபி அணியன் ஸ்கோர் உயர்வுக்கு நடுவரிசையில் களமிறங்கி விளாசிய ரஜத் பட்டிதாரின் 23 பந்துகளில் 55 ரன்கள், கேமரூன் கிரீனின் 27 பந்துகளில் 46 ஆகிய பங்களிப்பும் முக்கியக் காரணமாக அமைந்தது. விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பட்டிதார் 32 பந்துகளில் 76 ரன்களும், கேமரூன் கிரீன் 46 பந்துளில் 92 ரன்களும் சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர். அதேபோல பந்துவீச்சில் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர்கள் கரன் ஷர்மா, ஸ்வப்னில் சிங் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியளித்து ரன்ரேட்டை உயரவிடாமல் இழுத்துப் பிடித்து, விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கரன் ஷர்மா, ஸ்வப்னில் இருவரும் சேர்ந்து 6 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 9-வது ஓவரிலிருந்து 12 ஓவர்வரை இருவரும் ஆதிக்கம் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை திணறவிட்டனர். பட மூலாதாரம்,SPORTZPICS பிரமாண்ட வெற்றி பற்றி டூப்பிளசிஸ் கூறியது என்ன? வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ எங்களின் தவறுகள் குறித்து தொடர்ந்து ஆலோசித்து, வீரர்களிடம் பேசியதில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதில் பேட்டிங்கில் நல்ல ஆவேசம் காணப்படுகிறது, பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க வேண்டும். ஆனால், அதுநடக்கவில்லை. அது குறித்தும் வீரர்களிடம் பேசியுள்ளோம். எங்கள் அணியிலும் நன்றாகப் பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற வேட்கையுடன் வீரர்கள் இருந்தார்கள், அவர்களைக் கண்டுபிடித்தோம் அவர்களை ஃபார்முக்கு கொண்டுவரப் போராடினோம்.இப்போது சில வீரர்கள் உண்மையில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள், நாங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தின் பாணியை நாங்கள் விளையாட விரும்புகிறோம், அதைச் செய்தால் நாங்கள் ஒரு நல்ல அணி என்பதை நிரூபிப்போம்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,SPORTZPICS திரும்பி வந்துவிட்டாரா ‘பழைய’ விராட் கோலி? நடப்பு ஐபிஎல் டி20 சீசனில் விராட் கோலி அதிகமான ரன் குவித்த பேட்டர்களில் 12 போட்டிகளில் ஒருசதம், 5 அரைசதங்கள் உள்பட 634 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். ஆர்சிபி அணியில் கேப்டன் பதவியை துறந்தபின் கடந்த இரு சீசன்களாக கோலி சிறப்பாக பேட் செய்து வருகிறார். இந்த ஆட்டத்திலும் பவர்ப்ளேயில் 14 பந்துகளைச் சந்தித்த கோலி, அதன்பின்புதான் அதிரடிக்கு மாறினார். வில் ஜேக்ஸ்(12), டூப்பிளசிஸ்(9) ஏமாற்றியபின், பட்டிதாருடன் சேர்ந்த பின் கோலியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. மிட்விக்கெட், கவர்ஸ் திசையிலும் பவுண்டர்கள் பறந்தன, கால்களை அருமையாக நகர்த்தி, பிரமாதமான ஃபுட்வொர்க் செய்தும், கைமணிக்கட்டில் அருமையான ஷாட்களையும் ஆடி கோலி பேட் செய்தார். கோலியின் ஆட்டத்தை நேற்றுப் பார்க்கும்போது ‘வின்டேஜ்’ கோலியின் ஆட்டத்தைப் பார்த்த உணர்வு இருந்ததாக தொலைக்காட்சி விமர்சகர்கள் கூறினார்கள். அதிலும், சாம்கரன் வீசிய 16-வது ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்கும் வகையில் காலை மடக்கிக் கொண்டு கோலி அடித்த சிக்ஸர் பழைய கோலியை நினைவூட்டியதாக ரசிகர்கள் பலரும் அந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல அர்ஷ்தீப் வீசிய 18-வது ஓவரில் அவுட்சைட் ஆப்பில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை அப்பர்கட்டில் அடித்த சிக்ஸரும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 92 ரன்கள் சேர்த்து சதத்தை நோக்கி நகர்ந்தபோது, அர்ஷ்தீப் ஓவரில் ரூஸோவால் கேட்ச்பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். விராட் கோலி களத்துக்கு வந்தபோது ரன் ஏதும் சேர்க்காமல் இருந்த நேரத்தில், அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்காமல் பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர், அதன்பின் கோலி 10 ரன்கள் சேர்த்திருந்தபோது அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிக்கத் தவறினர். பட மூலாதாரம்,SPORTZPICS பீல்டிங்கிலும் கோலி நேற்று படு உற்சாகமாக செயல்பட்டார். பஞ்சாப் அணிக்கு 39 பந்துகளில் 92 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. சஷாங்க் சிங், சாம் கரன் என இரு ஆபத்தான பேட்டர்கள் களத்தில் இருந்தனர். 14வது ஓவரின் 4வது பந்தில் சாம்கரன் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடி 2வது ரன் ஓட சஷாங் சிங்கை அழைத்தார். அப்போது, டீப் மிட்விக்கெட்டில் பீல்டிங் செய்த கோலி, வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து தாவிச் சென்று ஸ்டெம்ப்பைப் பார்த்து எறிந்து சஷாங்க் சிங்கை ரன் அவுட் செய்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கோலி டைவ் செய்து ஸ்டெம்ப்பை நோக்கி துல்லியமாக பந்தை எறிவார் என சஷாங்சிங் சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. களத்தில் நன்றாக செட்டில்ஆகி 19 பந்துகளில் 39 ரன்களுடன் ஆடிய சஷாங்க் சிங் ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றார். இந்த விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையைாக அமைந்தது, அடுத்த 30 ரன்களுக்குள் பஞ்சாப் அணி மீதமிருந்த 5விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணி ஏமாற்றம் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸிங் செய்து மிரட்டிய பஞ்சாப் அணி நேற்று ஆடிய ஆட்டத்தைப் பார்த்தபோது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பஞ்சாப் அணி பவர்ப்ளேயில் அதிரடியாகத் தொடங்கி 75 ரன்கள் சேர்த்தனர். ஆனால், அதன்பின் அவர்களால் பெரிய இலக்கை துரத்தும் வகையில் பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. ரூஸோ 61 ரன்கள் சேர்த்ததுதான் அந்த அணியில் அதிகபட்சமாகும். சஷாங் சிங் (37),பேர்ஸ்டோ(27), சாம்கரன்(22) ஆகியோர் ஓரளவு பங்களிப்பு செய்தனர். 12 ஓவர்களில் 126 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த பஞ்சாப் அணி அடுத்த 6 ஓவர்களில் 55 ரன்களுக்கு மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. 14வது ஓவரிலிருந்து 17-வது ஓவர் வரை ஒவ்வொரு ஓவருக்கும் விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்து தோல்வியை ஒப்புக்கொண்டது. https://www.bbc.com/tamil/articles/cd13wnj1xqko
  4. 128 ஆண்டுகள்…பழமையான கப்பலில்…வந்தது ஒலிம்பிக் தீபம் பிரான்சின் தலைநகராக பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு 79 நாட்களுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தெற்கு துறைமுக நகரமான மார்செய்லியில் ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது. கிரீஸிலிருந்து 12 நாள் கடல்ப் பயணத்திற்குப் பின்னர் இந்த ஒலிப்பிக் சுடல் வந்தடைந்தது. 128 ஆண்டுகள் பழமையான மூன்று மாஸ்ட் பாய்மரக் கப்பலான Belem இல் ஒலிம்பிக் சுடர் கொண்டு வரப்பட்டது. 1000 படகுகள் ஒலிம்பிக் சுடர் கொண்டுவரப்பட்ட கப்பலை வரவேற்றன. ஒலிப்பிக் சுடரை பிரான்சின் 2012 ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவில் 50 மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் சாம்பியனான ஃப்ளோரன்ட் மானாடோ தரையிறக்கினார். மார்சேயில் பிறந்த பிரெஞ்சு ராப்பர் ஜூல், பாரீஸ் 2024 ஒலிம்பிக் கொப்பரையை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை உள்ளடக்கிய 150,000 மக்கள் முன்னிலையில் ஏற்றி வைப்பதற்கு முன்பு, ரியோ 2016 இல் 400 மீட்டர் சாம்பியனான பாராலிம்பிக் தடகள தடகள வீரர் நான்டெனின் கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒலிம்பிக் சுடர் ரிலே வியாழன் அன்று மத்தியதரைக் கடலோர நகரத்திலிருந்து புறப்பட்டு, ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழாவிற்கு பாரிஸ் வருவதற்கு முன்பு பிரான்ஸ் மற்றும் ஆறு வெளிநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவுள்ளது. 6,000 சட்ட அமலாக்க அதிகாரிகள், நாய் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு படை துப்பாக்கி சுடும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/301212
  5. நட்சத்திர வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ண இலங்கை குழாம் : பயணிக்கும் பதில் விரராக வியாஸ்காந்த் Published By: VISHNU 09 MAY, 2024 | 07:53 PM (நெவில் அன்தனி) இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நட்சத்திர வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த கிரிக்கெட் குழாத்தை இலங்கை பெயரிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை குழாத்தில் அனுபவசாலியும் முன்னாள் தலைவருமான ஏஞ்சலோ மெத்யூஸும் இடம்பெறுகிறார். ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 6ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். மூன்று வருடங்களாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த மெத்யூஸ் இந்த வருட முற்பகுதியிலேயே ரி20 அணிக்கு மீள அழைக்கப்பட்டிருந்தார். யாழ். மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த் பயணிக்கும் பதில் வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். இது இவ்வாறிருக்க, இலங்கை அணியில் தலைமைத்துவ அனுபவம் மிக்க வீரர்கள் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது. ஏஞ்சலோ மெத்யூஸுடன் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோரும் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை குழாம் வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெணடிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க. பயணிக்கும் பதில் வீரர்கள்: அசித்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ச, ஜனித் லியனகே. https://www.virakesari.lk/article/183093
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மே 2024, 10:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட காலமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைத்து விமர்சித்து வருகிறார். ஆனால், அதற்கெல்லாம் பதில் பேசாமல் இருந்த மோதி, முதல் முறையாக தேர்தல் பரப்புரையின்போது அதே அம்பானி, அதானியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். புதனன்று தெலங்கானாவின், கரீம்நகர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மோதி, “தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ராகுல் காந்தி அம்பானி மற்றும் அதானி என்ற பெயர்களை உச்சரிப்பதையே நிறுத்தி விட்டார்,” என்று கூறினார். ராகுல் காந்தியை குறிப்பிட்டுப் பேசிய மோதி, “தெலங்கானா நிலத்தில் நின்று நான் கேட்க விரும்புவது, இந்தத் தேர்தலில் எவ்வளவு பணம் அம்பானி மற்றும் அதானியிடம் இருந்து தனக்குக் கிடைத்துள்ளது என்பதை இளவரசர்(ராகுல்) அறிவிக்க வேண்டும். லாரி நிறைய பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்துவிட்டதா? ஒரே இரவில் இவர்களுக்குள் என்ன ஒப்பந்தம் நடந்தது? திடீரென்று அம்பானி-அதானியை விமர்சிப்பதையே நிறுத்திவிட்டார்,” என்று கூறினார். “கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி - அதானியின் பெயரைப் பயன்படுத்தி விமர்சனம் செய்துவிட்டு, திடீரென்று நிறுத்திவிட்டீர்கள் என்றால் நிச்சயம் ஏதோவொரு ஒப்பந்தம் நடந்திருக்க வேண்டும். இதற்கு கண்டிப்பாக நீங்கள் பதிலளிக்க வேண்டும்,” என்று பேசினார் மோதி. பிரதமர் மோதியின் இந்த விமர்சனத்திற்கு ராகுல் காந்தியும் பதில் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது இருவரின் உரைகளும் இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அப்படி அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். ராகுல் கொடுத்த பதில் என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,நீண்ட காலமாகவே பிரதமர் மோதி மற்றும் அம்பானி, அதானி ஆகியோருக்கு இடையிலுள்ள உறவு குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகின்றன. மோதி பேசிய அதே புதன்கிழமையன்று மாலை ராகுல் காந்தியும் தனது பதிலைப் பகிர்ந்துள்ளார். அதில், “வணக்கம் மோதிஜி, கொஞ்சம் பயப்படுகிறீர்களா? வழக்கமாக அம்பானி, அதானியிடம் நீங்கள் தனி அறைகளில் தானே பேசுவீர்கள். முதல் முறையாக பொதுவெளியில் அம்பானி, அதானியின் பெயரை உச்சரித்துள்ளீர்கள். டெம்போவில் பணம் வரும் என்பதையும்கூட நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள். ஒருவேளை உங்களுக்கு சொந்த அனுபவம் உள்ளதோ?" என்று ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், “நீங்கள் ஒன்று செய்யுங்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை அவர்களிடம் அனுப்புங்கள். முடிந்தவரை வேகமாக விசாரணையை நடத்தி முடியுங்கள். பயப்படாதீர்கள் மோதிஜி. நான் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நரேந்திர மோதி எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதைத் தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதே பணத்தை இந்தியாவின் ஏழைகளுக்கு நாங்கள் கொடுக்கப் போகிறோம். கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக மாற்றப் போகிறோம்,” என்றார் அவர். நீண்ட காலமாகவே பிரதமர் மோதி மற்றும் அம்பானி, அதானி ஆகியோருக்கு இடையிலுள்ள உறவு குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அதே பெயர்களைப் பயன்படுத்தி ராகுல் காந்தியை மோதி விமர்சிக்கையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவருக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டன. எதிர்க்கட்சிகளின் எதிர்வினை பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,'மோதி தனது நண்பர்களுக்காக 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை,” என்றார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி மக்களவைத் தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ரேபரேலியில் நடந்த பரப்புரையின்போது மோதியின் கருத்துக்குப் பதில் கருத்து தெரிவித்துள்ளார். பிரியங்கா பேசுகையில், “ராகுல் காந்தி அதானியின் பெயர்களை உச்சரிப்பதில்லை என்று நரேந்திர மோதி இன்று பேசியுள்ளார். உண்மை என்னவெனில் அவர், தினசரி அதானி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அதானி குறித்து அனைத்து உண்மைகளையும் அவர் உங்கள் முன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.” மேலும், “பெரும் தொழிலதிபர்களுக்கும் நரேந்திர மோதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை தினசரி ராகுல் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மோதி தனது நண்பர்களுக்காக 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. அவர் கண்டிப்பாக இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்,” என்றார் அவர். “இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளங்களும் மோதியின் கோடீஸ்வர நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின்சார உற்பத்தி என அனைத்துமே அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது,” என்றும் சுட்டிக்காட்டினார் பிரியங்கா காந்தி. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “நாட்டின் பெரும் வணிக நிறுவனங்கள் குறித்து இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம், மோதி உலக அளவிலான இந்திய தொழில்துறையின் வணிக வாய்ப்புகளை கேள்விக்கு உள்ளாக்குகிறார்,” என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,ANI உத்தவ் தாக்ரே பிரிவைச் சேர்ந்த சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில், மோதியின் உரையைப் பகிர்ந்து, "ஹா ஹா இதுதான் இந்திய தேர்தலின் ஓ மை காட்(OMG) மொமண்ட்” என்று எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “காலம் மாறிக் கொண்டிருக்கிறது. பழைய நண்பர்கள் இனிமேல் நண்பர்கள் கிடையாது. மூன்று கட்ட தேர்தல்களே முடிந்துள்ளது. அதற்குள் மோதி தனது சொந்த நண்பர்களையே தாக்கத் தொடங்கிவிட்டார். மோதிஜியின் பதவி ஊசலாடிக் கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது. இதுதான் தேர்தல் முடிவுகளின் உண்மையான ட்ரெண்ட்,” என்று ட்வீட் செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரசின் குணால் கோஷ் பேசுகையில், "இப்போது பாருங்கள் அவர்கள் அம்பானி மற்றும் அதானியன் குடும்பங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கருப்புப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்று கேட்கிறார்கள். அப்படி உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்குத் தகவல் கொடுங்கள். உணவு, உடை, வீடு குறித்த பிரச்னைகளைப் பேசுவதற்குப் பதிலாக நீங்கள் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று விமர்சித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ், “இதோ வருங்கால எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்,” என்று மோதியை சாடியுள்ளார். பாஜக தலைவர் ராஜ்யவர்தன் சிங்க் ரத்தோர், "2014 தேர்தலுக்குப் பிறகு தேர்தல் பத்திரம் வந்தது. கருப்புப் பணம் முடிவுக்கு வந்தது. இப்போது யாரெல்லாம் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரியும். தற்போது அவர்கள் விமர்சிப்பதை விட்டுவிட்டார்கள். காரணம் அவர்கள் தொழிலதிபர்களிடம் இருந்து பணம் வாங்கியிருக்கலாம்,” என்று பேசியுள்ளார். அம்பானி - அதானி பிரச்னையில் ராகுல் காந்தி செய்தது என்ன? பட மூலாதாரம்,INC படக்குறிப்பு,பிப்ரவரி 2023இல், நாடாளுமன்ற கூட்டத்திலேயே மோதி மற்றும் கெளதம் அதானி விமானம் ஒன்றில் ஒன்றாக இருப்பது போன்ற படம் ஒன்றை எடுத்துக் காட்டியிருந்தார் ராகுல் காந்தி. கடந்த 5 ஆண்டு மோதி அரசில், பல முறை அம்பானி - அதானி குடும்பப் பெயர்களை வைத்து ராகுல் காந்தி நரேந்திர மோதியை விமர்சித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2023இல், நாடாளுமன்ற கூட்டத்திலேயே மோதி மற்றும் கெளதம் அதானி விமானம் ஒன்றில் ஒன்றாக இருப்பது போன்ற படம் ஒன்றையும் ராகுல் காந்தி எடுத்துக் காட்டியிருந்தார். ஆனால், அந்தச் சம்பவத்தை நாடாளுமன்ற நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் கேமராக்கள் சரியாகக் காட்டவில்லை. இதுகுறித்து நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் சன்சத் டிவி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதே பிப்ரவரி 2023இல், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதியிடம் ராகுல் காந்தி சில கேள்விகளை முன்வைத்தார். “எத்தனை முறை அதானியுடன் நீங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு சென்றுள்ளீர்கள்? எத்தனை நாடுகளுக்கு உங்கள் பயணத்திற்குப் பிறகு அதானியும் அங்கு சென்றுள்ளார்? தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு பணம் பாஜகவுக்கு கிடைத்தது?" சில நாட்கள் கழித்து மார்ச் 2023இல், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் இழந்தார். பிறகு மார்ச் 2023இல் இதுகுறித்துப் பேசிய ராகுல் காந்தி, "எனது உரையைக் கண்டு பிரதமர் பயந்ததால்தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். அதானி குறித்து நான் பேசவிருந்த அடுத்த உரை பிரதமருக்கு பயத்தைத் தந்துள்ளது," என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த பாஜக, "ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. விதிகளை மதிக்காமல், எந்த ஆவணமும் இல்லாமல் அநாகரீகமான கருத்துகளைத் தெரிவித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது," என்று கூறியது. இந்நிலையில் தற்போது அம்பானி - அதானியின் பெயர்களைக் குறிப்பிட்டு மோதி காங்கிரசை விமர்சித்திருக்கும் சூழலில், ராகுலின் பழைய படத்தைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ், மோதிக்கும் - அதானிக்கும் என்ன உறவு என்ற கேள்வி இன்னமும் அப்படியேதான் உள்ளது என்று தனது பதிவில் எழுதியுள்ளது. சமீபத்தில் நடந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் முகேஷ் அம்பானியும் கலந்து கொண்டிருந்தார். இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "ராம் மந்திர் நிகழ்ச்சியில் அம்பானி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அதானி ஆகியோர் காணப்பட்டனர். ஆனால் எந்த ஏழையும் காணப்படவில்லை," என்று கூறினார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மற்றும் கௌதம் அதானி கலந்து கொள்ளவில்லை. தனது தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து அம்பானி மற்றும் அதானியின் பெயர்களைப் பயன்படுத்தி வரும் ராகுல் காந்தி, பிரதமர் மோதி இந்தியாவின் ஏழை மக்களுடைய பணத்தை, நாட்டின் இரண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கிவிட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார். ராகுலின் குற்றச்சாட்டுக்கு அம்பானி-அதானியின் பதில் என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,கடந்த 2019ஆம் ஆண்டு அனில் திருபாய் அம்பானி குழு, "ராகுல் காந்தி தொடர்ந்து தவறான தகவல், பிரசாரம் மற்றும் பொய்களை” பரப்பி வருகிறார் என்று கூறியது. ஜனவரி 2023இல், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்தும், மோதியுடனான நட்பு குறித்தும் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் கெளதம் அதானி. அதில், “ராகுல் காந்தியால்தான் மக்களுக்கு அதானி என்ற பெயரே தெரிய வந்துள்ளது” என்று கூறினார் அவர். மோதி குறித்துப் பேசுகையில், “பிரதமர் மோதியிடம் இருந்து உங்களால் எந்தவிதமான தனிப்பட்ட உதவியையும் பெற முடியாது. ஆனால், அவருடனான அனுபவங்கள் சிறந்தது,” என்றார். மேலும் ராகுல் காந்தியை மதிப்பதாகவும், அதேநேரம் அவரது அறிக்கைகளை அரசியல் கருத்துகளாகவே பார்ப்பதாகவும் அதானி குறிப்பிட்டார். இந்தியா டிவி-யிடம் பேசிய கெளதம் அதானி, “2014 தேர்தலுக்குப் பிறகு ராகுல் ஜி எங்கள் மீது தொடுத்து வரும் தொடர் தாக்குதல்கள், அதானி யார் என்பதை அறிய உங்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்துள்ளது. அதனால்தான் இன்று ஒரு நேர்காணல் கொடுக்க உங்களது ஸ்டுடியோவில் நான் இருக்கிறேன்," என்று கூறினார். ராகுல் வேண்டுமானால் கௌதம் அதானியை விமர்சிக்கலாம், ஆனால், அதானியோ “ராகுல் காந்தியை ஒரு மரியாதைக்குரிய தலைவராகப் பார்ப்பதாகவும், அவருடைய நாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் நோக்கத்தைத்தான் பார்ப்பதாகவும்” கூறினார். "அவர் அரசியலின் மீதுள்ள ஆர்வத்தால் தனது கருத்துகளைத் தெரிவிக்கிறார். ஆனால், அவற்றை எனது தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை,” என்றார். ராகுல் காந்தி அதானி மட்டுமின்றி அம்பானி குறித்தும் தனது உரைகளில் பேசி வந்தாலும், அதற்கு அம்பானி இதுவரை எந்தப் பதில் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், 2019ஆம் ஆண்டு அனில் திருபாய் அம்பானி குழு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அக்குழு, "ராகுல் காந்தி தொடர்ந்து தவறான தகவல், பிரசாரம் மற்றும் பொய்களை” பரப்பி வருவதாகக் கூறியது. கடந்த 2019ஆம் ஆண்டில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக அம்பானி குழுமம் மற்றும் மோதி அரசின்மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஏப்ரல் 2019 இல், பிரபல பிரெஞ்சு செய்தித்தாளான ‘La Monde’, 2015 பிப்ரவரி மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில், அனில் அம்பானிக்கு பிரெஞ்சு அரசு சுமார் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான வரிவிலக்கு அளித்ததாக செய்தி வெளியிட்டது. இந்த அறிக்கை குறித்து அந்த செய்தித்தாளின் தெற்காசிய செய்தியாளர் ஜூலியன் போசு, "ஏப்ரல் 2015இல், பிரதமர் மோதி டசால்ட் நிறுவனத்திடம் 36 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை அறிவித்தார். அப்போது, ரிலையன்ஸ் பிரான்சில் குறைந்தது 151 போர் விமானங்களை வைத்திருந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு. ரஃபேல் விமானங்களை வாங்குவதாக மோதி அறிவித்தார். பிரான்ஸ் வரித்துறை 151 மில்லியன் யூரோவுக்கு பதிலாக 7.3 மில்லியன் யூரோக்கள் செட்டில்மென்ட் செய்ய ஒப்புக்கொண்டது,” என்று ட்வீட் செய்திருந்தார். அப்போது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய் என்று ரிலையன்ஸ் கூறியது. யுபிஏ அரசு ஆட்சியில் இருந்தபோது அந்நிறுவனம் பெற்ற ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டு, "உங்கள் அரசு 10 ஆண்டுகளாக நேர்மையற்ற அரசுக்கு உதவி செய்ததா?" என்ற கேள்வியையும் ராகுல் காந்தியிடம் அந்நிறுவனம் முன்வைத்தது. கௌதம் அதானியும் , நரேந்திர மோதியும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அரசாங்கத்தில் தனக்கிருந்த தொடர்புகளைத் தனது தொழிலை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டதாக கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கௌதம் அதானியின் திடீர் அசாதாரண வளர்ச்சிக்கு நரேந்திர மோதியுடனான நெருக்கம்தான் காரணம் என்றும், அவர் மிகக் குறுகிய காலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். அரசாங்கத்தில் தனக்கிருந்த தொடர்புகளைத் தனது தொழிலை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டதாக கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டத்தில் உள்ள பலவீனங்களை சாதகமாகப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை அமைக்க குறைந்த விலையில் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளார் என்று அவர் மீது விமர்சனம் உள்ளது. ஆமதாபாத்தின் மூத்த பத்திரிகையாளர் திலீப் படேல் இதுகுறித்து பிபிசியிடம் பேசுகையில், "அதானி மிகவும் புத்திசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் போதெல்லாம், நரேந்திர மோதி அவருக்கு நிறைய உதவியுள்ளார். சிமன் பாய் (குஜராத் முன்னாள் முதல்வர்) அவருக்கு கட்ச் பகுதியில் நிலம் கொடுத்தார்.” “ஆனால், அதானிக்கு இவ்வளவு நிலங்களை, அதுவும் மலிவு விலையில் கொடுக்காமல் இருந்திருந்தால் அவரால் துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் கையகப்படுத்தியிருக்க முடியாது. அதிக வருமானம் ஈட்டி வந்த ஆமதாபாத் விமான நிலையமும் அவருக்கு வழங்கப்பட்டது,” என்றார். கௌதம் அதானியின் நண்பர் கிரிஷ்பாய் டானி பிபிசியிடம் கூறுகையில், "எல்லோரும் மோதியை பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை மோதிஜி யாருக்கும் பரிவு காட்டுபவர் அல்ல. நான் அரசியலில் இல்லை. ஒருவேளை மோதிஜி அதானிக்கு உதவலாம்,” என்றார். கடந்த சில ஆண்டுகளில் அம்பானி மற்றும் அதானியின் குடும்ப விழாக்களில்கூட வெளிப்படையாக நரேந்திர மோதி பங்கேற்றதில்லை. சொல்லப்போனால் அவர்களது பெயரைக்கூட அவர் உச்சரித்தது இல்லை. ஆனால், மே 8ஆம் தேதி இதற்கு முரணான சம்பவம்தான் நடந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cxe864kp08ko
  7. கொவிட் -19 தொற்றுநோயின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக வெளிநாட்டில் இருந்து உரிய திகதியில் பணிக்கு திரும்பத் தவறிய அரச அதிகாரிகளின் விடுமுறை தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்த சுற்றறிக்கை ஊடாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக உரிய திகதியில் அல்லது அதற்கு முன்னதாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமறை மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமூகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301235
  8. Published By: DIGITAL DESK 7 09 MAY, 2024 | 04:37 PM தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரத்யேக காணொளியில், '' இது சொல்லாட்சி அல்ல. செயல் ஆட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் தான் இன்னும் என்னை உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். 'தலைசிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு என..!'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் பேசுகையில், '' தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாளன்று அரசு பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கைசாத்திட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தார். பாடசாலை மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக 'இல்லம் தேடி கல்வி', 'புதுமைப்பெண்', 'நான் முதல்வன்' என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன் நடைமுறை ப்படுத்தினார். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு ஆதரவாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 'தமிழ் புதல்வன்' எனும் திட்டமும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இதனால் மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களும் பயனடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'காலை உணவு திட்டம்' பாரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயனடைந்து வரும் கோடி கணக்கிலான பெண்மணிகளும் முதல்வரை பாராட்டி வருகிறார்கள். கடும் நிதி சிக்கல் இருந்தும், மக்கள் நல திட்டங்களுக்கு நெருக்கடிகளிருந்தும், அழுத்தங்களிருந்தும் செயல்படுத்தும் அவருடைய சாதூரியம் மக்களால் பாராட்டப்படுகிறது. 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தையும் விளிம்பு நிலை மக்கள் பாராட்டி வருகிறார்கள். இருப்பினும் சிலிண்டர் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற பல திட்டங்கள் இன்னும் நடைபெறப்படுத்தப்படாததால் முக ஸ்டாலின் மீது ஒரு பிரிவினர் அதிருப்தியும் கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது. இந்த சூழலில் முதல்வராக பொறுப்பேற்று மூன்றாண்டை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வரிடமிருந்து மேலும் பல நல்ல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அவை நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது': என்றனர்.‌ தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து இதே வேகத்தில் நடைமுறைப்படுத்துமா? அல்லது இதைவிட கூடுதல் வேகத்தில் செயல்படுத்துமா? என்பது இதில் வரும் ஜூன் மாதம் நான்காம் திகதியன்று வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்து இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். https://www.virakesari.lk/article/183069
  9. 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், இந்த ஆண்டு தரிசனத்திற்காகச் சென்ற 9 பேர் மரணித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன? ‘‘சபரிமலை போல் அல்லாமல் பாதை மிகக் கடினம் என்பதால், அவசர காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரம் கொண்டு வருவது மிகக் கடினம். உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,” என்கிறார், வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று டோலியில் மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ள ரவி. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது என்கிறார் வெள்ளியங்கிரிக்கு வந்த 55 வயதான முனியப்பன். வெள்ளியங்கிரி மலையின் அமைப்பு எத்தகையது? உண்மையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினமானது? மலையின் அமைப்பு எத்தகையது? கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான வெள்ளியங்கிரி மலை, தென்கைலாயம் எனவும் அழைக்கப்படுகிறது. கோவை நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் தமிழக – கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த மலை அமைந்துள்ளது. ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரியின் அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு தரிசித்துவிட்டு கடல் மட்டத்தில் இருந்து 5,800 அடி உயரத்தில், 6.5 கி.மீ. தொலைவில் உள்ள ஏழாவது மலைக்குச் சென்று பக்தர்கள் சிவனை வழிபட்டுத் திரும்புகின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாத வரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள் மற்றும் சித்திரா பெளர்ணமி ஆகிய முக்கிய நாட்களிலும், செவ்வாய், வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்களிலும் அதிகப்படியான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பத்து வயது முதல் 60 வயது வரையிலுள்ள ஆண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கின்றனர். மலையேறி இறந்தவர்கள் யார்? இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி துவங்கி மே 7ஆம் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேறிய 9 பேர் மரணித்துள்ளனர். இறந்தவர்களில் சிலரின் மரணத்திற்கு, மாரடைப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) காரணம் என்று அவர்களின் உடல்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? அடுத்தடுத்து 9 பேர் இறந்துள்ளதால், உண்மையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? அங்குள்ள வசதிகள் குறித்து அறிய பிபிசி தமிழ் குழு வெள்ளியங்கிரி மலையில் கள ஆய்வு மேற்கொண்டது. பிபிசி குழு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் அடிவாரத்தை அடைந்தபோது அங்கு பல இடங்களில், ‘மலை ஏறுவதற்குரிய உடல் தகுதி உள்ளவர்கள் மட்டுமே மலை ஏறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,’ என்ற அறிவிப்புகளுடன், அவசர உதவிக்கான எண்களும் ஒட்டப்பட்டு இருந்தன. நுழைவுப் பகுதியிலேயே மலை ஏறுபவர்களுக்கு மூங்கில் குச்சி வழங்கி அங்கு, ‘வெள்ளியங்கிரி மலை ஏறுவது கடினம் என்பதை நான் அறிவேன், முழு உடல் தகுதியுடன்தான் மலை ஏறுகிறேன். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பாவேன்,’ என பக்தர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் சுய உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்து பெறுகின்றனர். ஆனால், நாம் பார்த்தவரை பலர் இந்தக் கடிதத்தை கொடுக்காமலே மலை ஏறுவதைக் காண முடிந்தது. கோவில் சன்னிதானத்திற்கு முன் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. முகாமை நாம் பார்வையிட்டபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தனர். மலை ஏற்றத்திற்கு முன் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அனுப்பினர். அடிப்படை வசதிகள் மிகக் குறைவு நாமும் பக்தர்களுடன் இணைந்து மலை ஏறினோம். ஏழு மலைகளில், ஒன்று மற்றும் இரண்டாவது மலையில் மட்டுமே கற்களைக் கொண்ட கரடுமுரடான படிக்கட்டுகள் இருந்தன. மற்ற மலைகளில் பாறைகளில் படிக்கட்டுகளும், பல இடங்களில் படிக்கட்டுகள் இல்லாமல் மிகவும் கடினமான பாதையாகவும் இருந்தது. சில இடங்களில் மட்டுமே மொபைல் சிக்னல் கிடைத்ததுடன், நான்காவது மலையில் தனியார் அமைப்பு சார்பில் ஒரு மருத்துவ முகாம் இருந்தது. ஏழு மலைகளிலும் பக்தர்கள் ஓய்வெடுக்க ஒரு வசதியும் இல்லை. வழியில் ‘வாக்கி டாக்கி’ வசதியுடன் வனத்துறை பணியாளர்களைக் காண முடியவில்லை, சில மலைகளில் மட்டுமே வனத்துறையினர் பணியில் இருந்தனர். மலையேறிய பக்தர்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் பல குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். ‘தொலைதொடர்பு வசதி இல்லை’ பிபிசி தமிழிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் (27), ‘‘நான் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றுகிறேன். முதல் முறையாக வெள்ளியங்கிரி வந்துள்ளேன். செங்குத்தாக இருப்பதால் இங்கு மலை ஏறுவது மிகக் கடினமாக உள்ளது. படிக்கட்டுகள் மிகவும் சிதிலமடநை்து மோசமான நிலையில் உள்ளதுடன், ஓய்வெடுக்க ஒரு இடம்கூட இல்லை,’’ என்றார். சில இடங்களில் மட்டுமே மொபைல் போன் சிக்னல் கிடைக்கிறது, பாறையில் இருந்து நீர் வழியும் பகுதியில் குடிநீர் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்களே தவிர, அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்கிறார் பிரேம்குமார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது, என்கிறார் ஐந்தாவது ஆண்டாக தரிசனத்திற்கு வந்துள்ள ஈரோட்டைச் சேர்ந்த முனியப்பன் (55). மலையேறும் வழியில் செல்போன் சிக்னல் கிடைக்காது, வனத்துறையினரும் இல்லாததால் அவசர நேரத்தில் பக்தர்கள், மலையில் கடைகள் அமைத்துள்ள பழங்குடியின மக்களிடம்தான் உதவி கேட்க முடியும் என்கிறார் முனியப்பன். மேலும், ‘‘பழங்குடியினர் தங்கள் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துவர மலை அடிவாரத்திற்குச் செல்லும்போது செல்போன் ‘சிக்னல்’ கிடைக்கும் பகுதியில் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து, ‘டோலி’ ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் மேலே வந்த பிறகுதான் பாதிக்கப்பட்டவரை மீட்டுச் செல்வார்கள். இதற்குப் பல மணிநேரம் ஆகும்,’’ என்கிறார் முனியப்பன். ‘டோலியில் வந்து உயிர் பிழைத்தேன்’ ‘டோலி’யில் கடும் சிரமத்துடன் பயணித்து உயிர் பிழைத்துள்ள ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த ரவி (52) தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நம்மிடம் பேசிய ரவி, ‘‘மூன்றாவது முறையாக 2022ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி சென்று தரிசனம் செய்தேன். மலை ஏறிவிட்டுத் திரும்பியபோது, நான்காவது மலை அருகே என்னால் நடக்க முடியவில்லை, உடல்நிலை மிக மோசமானது. மலைப்பகுதியில் ஓய்வெடுக்கக்கூட இடம் இல்லாத நிலையில், வெட்டவெளியில் அங்கேயே சில மணிநேரம் ஓய்வெடுத்தேன்,’’ என்றார் அவர். பொருட்கள் எடுத்துச்செல்லும் பழங்குடியினரிடம் தகவல் தெரிவித்தபோது, கீழே இருந்து 1.5 மணிநேரம் பயணித்து ‘டோலி’ சுமப்பவர்கள் அவரை அடைந்ததாகவும், அதன்பின் மூன்று மணிநேரத்திற்கு மேல் ‘டோலி’யில் பயணித்துதான் கீழே வந்து உயிர் பிழைத்ததாகவும், தனது அனுபவத்தை விவரிக்கிறார். ‘‘சபரிமலை போல் அல்லாமல் இந்தப் பாதை மிககவும் கடினமாக இருக்கும். அவசரக் காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரத்திற்குக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதால், உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,’ என்கிறார் ரவி. ரவியின் அனுபவத்தைக் கேட்டபோது, அவசரக் காலங்களில் ஒருவர் மலையடிவாரத்தை அடையவே பல மணிநேரம் ஆகும் என்பதையும், இந்தக் காரணத்தால் சமீபத்தில் மரணித்த 9 பேருக்கும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. ‘ஏழு மணிநேரம் பயணிக்க வேண்டும்‘ உடல் பருமன் மற்றும் இதயக் கோளாறு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என்கிறார், பத்து ஆண்டுகளாக மலை ஏறிவரும் ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் (30). ‘‘தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இங்கு வந்துள்ளேன். இந்த ஆண்டு தற்போது மூன்றாவது முறையாக நண்பர்களுடன் மலை ஏறுகிறேன். முதல் முறையாக மலை ஏறும்போது அச்சமாகவும் கடினமாகவும் இருந்தது. பின் மெதுவாக நான் மலை ஏறி முடித்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. பழக்கமாகிவிட்டதால் தற்போது எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் மலை ஏற முடியும்,’’ என்கிறார் அவர். ஆரோக்கியமான ஒருவர் ஓய்வெடுத்து நடந்தாலே 6 மணிநேரம் பயணித்துதான் ஏழாவது மலையை அடைய முடியும் எனவும், மீண்டும் 6 – 7 மணிநேரத்தில் இறங்க முடியும், மற்றவர்களுக்கு இன்னும் நேரம் அதிகமாகும் என்கிறார் சுரேஷ். எனது அனுபவத்தில் சொல்கிறேன், மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், 50 வயதைக் கடந்தவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது எனத் தனது அனுபவத்தில் இருந்து கிடைத்த அறிவுரையை சுரேஷ் பகிர்ந்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய கோவையைச் சேர்ந்த மரகதம் (53), ‘‘இரண்டாவது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளேன். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கடும் வெயில் நிலவுவதால் மலை ஏறுவது மிகக் கடினமாக உள்ளது. நான்காவது மலையில் மட்டுமே மருத்துவ முகாம் உள்ளது, அவசர நேரங்களில் முதலுதவிகூட கிடைப்பது சிரமம். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மலையிலும் ஒரு மருத்துவ முகாமும், ஓய்வெடுக்க ஏற்பாடும் செய்ய வேண்டும்,’’ என்கிறார் அவர். கோவில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன? பக்தர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. பிபிசி தமிழிடம் பேசிய கோவிலின் செயல் அலுவலர் கோபால கிருஷ்ணன், ‘‘மலையடிவாரம் முதல் ஏழாவது மலை வரையிலுள்ள படிக்கட்டுகள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. படிக்கட்டுகளைச் சீரமைப்பது, ஓய்வெடுக்க தற்காலிக ‘ஷெட்’ அமைப்பது போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம், நிதி கிடைத்தால் வசதிகள் மேம்படுத்தப்படும்,” என்றார். “தனியார் நிறுவனத்தை வைத்து டவர் நிறுவி ‘வாக்கி டாக்கி’ சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினோம். ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் ‘வாக்கி டாக்கி’ வசதி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அதிக தொலைவுக்கு சிகனல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளோம். அரசிடமும் ‘வாக்கி டாக்கி’ அமைப்பதற்கு உதவுமாறு கேட்டுள்ளோம்,’’ என்றார் கோபாலகிருஷ்ணன். மேலும் தொடர்ந்த கோபால கிருஷ்ணன், ‘‘ஒவ்வொரு மலையிலும் வனத்துறை பணியாளர்கள் உள்ளார்கள், நான்காவது மலை அருகே வனத்துறையின் முகாமும் உள்ளது, கோவில் பணியாளர்களும் நான்காவது மலையில் உள்ளனர். அவசரக் காலங்களில் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்,’’ என்றார். அமைச்சரின் விளக்கம் என்ன? கடந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலை ஏறி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. நம்மிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘‘ஆண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி செல்கிறார்கள், மற்ற நேரங்களில் மலை முழுவதிலும் யானை போன்ற காட்டுயிர்கள் உள்ளன. அங்கு நிரந்தரமான ஓய்வெடுக்கும் அறை கட்டுவது சிரமம், இருந்தாலும் தற்காலிகமாக ‘ஷெட்’ அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அங்குள்ள பிரச்னைகளைச் சரிசெய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அவசரக்கால உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வது ஆகியவை குறித்து ஆலோசித்து வருகிறோம், விரைவில் சரிசெய்யப்படும்,’’ என்றார். யாரெல்லாம் மலைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்? பெரும்பாலும் பயிற்சியின்றி மலை ஏறும்போதுதான் தசைகள் அழுத்தத்திற்கு உட்பட்டு இளம் வயதினருக்கு ரத்த நாளங்கள் வெடித்து மாரடைப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார் சென்னை மருத்துவக்கல்லூரியின் இதயவியல் துறை பேராசிரியர் மனோகர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சற்று வயதானவர்களாக இருந்தால் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பால் மரணிப்பார்கள். அதேபோல், அதீத வெயில் நிலவுவதால், வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு மூச்சுத் திணறலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணிப்பதும் நடக்கும்,’’ என்கிறார். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளவர்களும், அதிக வேலை செய்யாமல் போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்கள், இதய நோய் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் மனோகர். மலை ஏறும்போது உடல்நிலை சரியில்லாமல் போவது தெரிந்தாலே மலை ஏறுவதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். அப்படிச் செய்தாலே உயிர் பிழைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். இதை விளக்கிய மனோகர், ‘‘சிலர் சமவெளிப் பகுதியில் தங்கிப் பழகியதால் அவர்கள் உயரமாகச் செல்லும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறலை எதிர்கொள்வார்கள். அப்படி ஏற்படும் பட்சத்தில் உடனடியாகக் கீழே இறங்கி வந்தால் உயிர் பிழைக்க முடியும். மலை ஏறும் முன்பு மூன்று மாதங்களாவது கட்டாயம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/clw0878gyd0o
  10. Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 04:03 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தலை கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பி கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிலிருந்து எழுந்து வெளியேறிச் சென்றதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்க முடியுமா என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் கேட்டதற்கு ஜனாதிபதி அதற்கு அனுமதி வழங்கினார். அதன் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரரேமதாச எழுந்து ஜனாதிபதி தெரிவித்த சில விடயங்களை சுட்டிக்காட்டி, அதனை விமர்சித்துக்கொண்டிருந்தார். அதன்போது ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எழுந்து, உரை தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ளவே முடியும். உரையாற்ற தற்போது இடமளிக்க முடியாது. அவர்களுக்கு ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் வேண்டுமென்றால் அதனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி நடத்தலாம் என்றார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தை தொடர்ந்து முன்வைக்க ஆரம்பிக்கையில், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் சபையில் விவாதம் நடத்தினால் நல்லது என்றே நினைக்கின்றேன். அத்துடன் இவை அனைத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக் கூற வேண்டும். ஏப்ரல் 10ஆம் திகதி பிரதமர் பதவியை அவர் பொறுப்பேற்றிருந்தால் இவை எதுவும் நடக்கப் போவதில்லை. நான் எனது பணியை செய்துள்ளேன் என்று கூறி சபையில் இருந்து வெளியேறிச சென்றார். இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ஏன் போகின்றீர்கள்? ஏன் பயமா? பதிலளிக்கை முடியாதா? நான் ஜனாதிபதி உரையாற்றும் போது அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது கேட்கத் தயாராகும் போது அவரால் கேட்க முடியாது போயுள்ளது என்றார். இதனால் சபையில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி இன்றைய தினத்தில் நேரத்தை பெற்று உரையாற்றினார். ஆனால் அதற்கு பின்னர் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு நேரத்தை வீணடித்து சுற்றி வளைத்து கேள்விகளை கேட்காமல் நேரடியாக பேட்டிருந்தால் ஜனாதிபதி பதிலளித்திருப்பார் என்றார். இதன்போது கூறிய சபாநாயகர், நீங்கள் தெளிவுபடுத்தலை மாத்திரம் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. எங்களுக்கு சபையின் தின நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்று கூறி நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்தார். https://www.virakesari.lk/article/183072
  11. இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இலட்சத்தீவு கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமைத்துவத்திற்கு (நாரா) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி.கே.அருளானந்தன் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், கடலில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக அதிகரித்து, இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது. நாட்டிலுள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து நாரா எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் பவளப்பாறைகள் நிறத்தை இழந்து அழிவடையும் என்பதை நிராகரிக்க முடியாது. பவளபாறைகள் உருவாக கடலின் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் வரை ஏற்ற இறக்கமாக இருக்க வேண்டும். தற்போதைய அதிகரித்த வெப்பநிலை இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடித்தால் பவளபாறைகள் அழிவடைவதை எதிர்பார்க்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும். பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301273
  12. செப்டம்பர் 17 – ஒக்டோபர் 16 இடையே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்னாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியாகியுள்ளது. https://thinakkural.lk/article/301271
  13. செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 03:17 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/183061
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. எனவேதான் சின்ன பட்ஜெட் படங்களை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது,” என்று கூறுகிறார் திருப்பூர் சுப்ரமணியம். கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 18 நிமிடங்களுக்கு முன்னர் “ஓடிடியின் வருகை தமிழ் ரசிகர்களுக்கு எளிய வழியில் உலக சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இது அவர்களது ரசனையையும், ஒரு கதையைக் கொண்டாடுவதற்கான அளவுகோலையும், எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளது. எனவே படைப்பாளிகள் தங்களது கதை சொல்லும் திறனை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே மக்களை திரையரங்கை நோக்கி வரவைக்க முடியும்," என்று கூறுகிறார் அயலான் பட இயக்குநர் ரவிக்குமார். தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளை கடந்த சில மாதங்களாகவே புதிய தமிழ்ப் படங்களைக் காட்டிலும் மலையாளப் படங்களும், பழைய தமிழ்ப் படங்களும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற படங்கள் வருவதில் ஒரு முடக்கம் நிகழ்ந்துள்ளதோ என்ற விமர்சனத்தை இது ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருத்துப் படங்களில் தொடங்கி காதல், காமெடி, வாழ்வியல், அறிவியல் எனப் பலதரப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முதல் ஒலியில்லா படமாக 1918இல் வெளிவந்த கீச்சக வதம் கருதப்படுகிறது. அதன் பிறகு 1931இல் வெளியான காளிதாஸ் தமிழின் முதல் பேசும் படமாகக் கருதப்படுகிறது. நூறாண்டுகள் கடந்த தமிழ் சினிமாவால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இலக்கியம், கலை மற்றும் பண்பாடு என திரைத்துறை ஆற்றிய பணி அளப்பரியது. கருத்துப் படங்களில் தொடங்கி காதல், காமெடி, வாழ்வியல், அறிவியல் எனப் பலதரப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன. இதில் பல்வேறு இயக்குநர்களின் மூலம் உலகளாவிய கலைநுட்பங்கள் முதல் தொழில்நுட்பம் வரை தமிழ் சினிமாவில் முயற்சி செய்யப்பட்டு, பல உலகத்தரம் வாய்ந்த படங்களும் வெளியாகியுள்ளன. தமிழ் திரையரங்குகள் இப்போது எப்படி செயல்படுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க இணையதளத்தின்படி, தமிழ்நாட்டில் 1104 திரையரங்குகள் உள்ளன. தமிழ் திரைத்துறையின் முக்கியமான ஆன்மாக்களில் ஒன்று திரையரங்குகள். சினிமாவும், அதன் ரசிகர்களும் உரையாடல் நடத்தும் இடமே திரையரங்கம்தான். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க இணையதளத்தின்படி, தமிழ்நாட்டில் 1104 திரையரங்குகள் உள்ளன. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக இந்தத் திரையரங்குகளில் புதிய தமிழ்ப் படங்கள் அரிதாகவே தென்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்தான் அரண்மனை 4 படம் வெளியாகியுள்ளது. இந்த இடைவெளியில் அடுத்தடுத்து வந்த மலையாளப் படங்களும், தமிழில் வெளியான கில்லி, வேட்டையாடு விளையாடு, தீனா போன்ற படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வசூல் வேட்டை செய்து கொண்டிருந்தன. ஆனால், இதே காலகட்டத்தில் வெளியான சிறிய பட்ஜெட் தமிழ்ப் படங்கள் சில ஓரிரு நாட்கள்கூட திரையரங்குகளில் நீடிக்கவில்லை. தமிழ் சினிமாவில் படங்களுக்கு பஞ்சமா? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ் திரைத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுத்து முடிக்கப்பட்ட பிறகும் வெளியிடப்படாமல் இருப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகிறார். இதற்குக் காரணம், “வெளியீட்டிற்கான செலவுகளைச் செய்ய பல தயாரிப்பாளர்களிடமும் பணம் இல்லை. முன்பெல்லாம் சிறிய படமாக இருந்தாலும் திரையரங்குகள் முன்பணம் கொடுத்து வாங்கியதால், அந்தப் பணத்தில் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடுவார்கள்." “இப்போதெல்லாம் யாரும் சிறிய படங்களை வாங்க முன்வருவதில்லை. பணம் வாங்காமல் வெளியிட்டுவிட்டு அந்தப் படம் ஓடினால் பணம் தருகிறோம் என்ற நிலை உருவாகிவிட்டது,” என்கிறார் அவர். இதனால் ஒரு படத்தின் முழு பணியும் முடிந்துவிட்டாலும்கூட அதை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதன்மூலம் பல நல்ல படங்கள் தேங்கிப் போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நல்ல படங்கள் வருவதில்லையா? “மக்கள் வந்தால்தானே திரையரங்குகள் சிறிய பட்ஜெட் படங்களை வாங்க முடியும். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருவதில்லை. அதனால் மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. எனவேதான் சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது” என்று கூறுகிறார் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். தற்போது வெளியாகியிருக்கும் அரண்மனை 4 படம் இந்த இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், இது தற்காலிக இடைவெளி மட்டுமே என்றும் கூறுகிறார் அவர். நல்ல கதைகளைத் தேர்வு செய்வதில் என்ன பிரச்னை? பட மூலாதாரம்,ANTHANAN படக்குறிப்பு,நல்ல கதைகள் வராததே மக்கள் திரையரங்குக்கு வராததற்குக் காரணம் என்கிறார் சினிமா விமர்சகர் அந்தணன். தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பல நூறு நாட்களுக்கு ஓட வைத்து மக்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், தற்போது வரும் திரைப்படங்கள் பலவும் மூன்று நாட்களைத் தாண்டுவதே குதிரைக் கொம்பாக இருப்பதாகக் கூறுகிறார் சினிமா விமர்சகர் அந்தணன். அதற்கு காரணம், நல்ல கதைகள் வராததே என்பது அவரது கூற்று. “இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தாலும், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அந்தக் கதைகளைப் படமாக்கத் துணிவதற்குப் பதிலாக, வழக்கமான கதையையே எடுக்க விரும்புகிறார்கள். இதனால் பல நல்ல இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். அதேபோல், மலையாள சினிமாவில் இருப்பது போல் இயற்கைத்தன்மை இல்லாமல் இருப்பதும் நல்ல படங்கள் வருவதில் தடையாக இருப்பதாகக் கூறுகிறார் கே.ராஜன். “மலையாள சினிமாவில் கதைக்காக ஹீரோ நடிக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவில் ஹீரோவுக்காக பல கதைகள் எழுதப்படுகின்றன. அதுவே அவற்றின் தோல்விக்குக் காரணம்” என்கிறார் அவர். எது நல்ல படம்? பட மூலாதாரம்,GOPI NAINAR / X படக்குறிப்பு,வெகுமக்கள் விரும்புகின்ற படங்களை எடுக்காததால்தான் மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்கிறார் கோபி நயினார். ஒரு திரைப்படம் என்று வரும்போது, அதைப் பார்க்கும் பலதரப்பட்ட மக்களையும் அது திருப்திபடுத்தாது. அப்படியிருக்க ஒரு நல்ல படம் என்றால் என்ன? இதற்குப் பதிலளித்த இயக்குநர் கோபி நயினார், “ஒருவருக்கு மட்டுமே பிடித்த படம்கூட சிறந்த படமாக இருக்க முடியும். ஆனால், அது வெகுமக்களுக்குப் பிடிக்கிறதா என்பதைப் பொறுத்தே அது அவர்களுக்கான படமா என்பதை அளவிட முடியும்,” என்கிறார். அப்படி வெகுமக்கள் விரும்புகின்ற படங்களை எடுக்காததால்தான் மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதற்கு ஒரு முக்கியக் காரணம், “படத்தின் கதைக்காக நடிகர்கள் நடிப்பதைவிட, நடிகர்களுக்காக படத்தின் கதை எழுதப்படுவது" என்று கூறுகிறார் கோபி நயினார். இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர் கே.ராஜன், ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையை, இயக்குநரை மட்டும் சில தயாரிப்பு நிறுவனங்கள் தேர்வு செய்வதன் விளைவே மக்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் வெளியாவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறுகிறார். மக்களின் மனநிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய படங்களாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளை நோக்கி வருகிறார்கள்," என்கிறார் அந்தணன். முன்பெல்லாம் சிறிய படம் என்றாலும் குறைந்தபட்சம் மக்கள் திரையரங்கம் சென்று என்னதான் இருக்கிறது என்றாவது பார்ப்பார்கள். ஆனால், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் வந்த பிறகு அந்த ரசனைத்தன்மை குறைந்துவிட்டது என்கிறார் அந்தணன். “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய படங்களாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளை நோக்கி வருகிறார்கள்." சிறிய படங்களில் பெரும்பாலும் சாதாரண படங்களே வெளியாவதாலும், அவற்றை ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்றும் அந்தணன் கூறுகிறார். "அதைத் தாண்டி ஏதாவது ஒரு சிறிய பட்ஜெட் படம் நல்ல கதையாக இருந்து கொஞ்சம் பிரபலமடைந்தால் மக்கள் திரையரங்கம் சென்று பார்க்கின்றனர். ஆனால், அது வெளியாகி மக்களைச் சென்று அடைவதற்குள் திரையரங்குகளில் இருந்து அவை வெளியேறி விடுகின்றன." ‘மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன’ பட மூலாதாரம்,RAVIKUMAR / INSTAGRAM படக்குறிப்பு,மற்ற எந்த மொழியை விடவும் தமிழ் திரைத்துறை பல புதிய வகை நுட்பங்களை, கதைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறுகிறார் இயக்குநர் ரவிக்குமார். சமீப காலமாக மக்களின் சினிமா ரசனையும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதற்கு நுட்பமான காரணம் ஒன்றை முன்வைக்கிறார் அயலான் பட இயக்குநர் ரவிக்குமார். “ஓடிடி வந்த பிறகு உலகளாவிய போட்டி உருவாகியுள்ளது. மக்கள் பல மொழிப் படங்களையும் , உலகப் படங்களையும் தங்களது மொழியிலேயே பார்க்கிறார்கள். எனவே, அதற்கு இணையாக இங்கும் படம் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.” “ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, சில நேரங்களில் ஏமாற்றமடைகிறார்கள். எனவே அதற்கு ஏற்றவாறு படங்களை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் படைப்பாளர்களுக்கு உருவாகியுள்ளது,” என்கிறார் ரவிக்குமார். மற்ற எந்த மொழியைவிடவும் தமிழ் திரைத்துறை பல புதிய வகை நுட்பங்களை, கதைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறும் அவர், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் படங்களை இயக்குகையில் சிறிய படம், பெரிய படம் எனப் பேதமின்றி அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்கிறார். ஓடிடியின் போட்டி பட மூலாதாரம்,K RAJAN படக்குறிப்பு,தயாரிப்பாளர்கள் துணிந்து புதிய சிறந்த இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார் கே. ராஜன். தமிழ்ப் படங்கள் வெளியாவதன் சிக்கல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர், விமர்சகர் என அனைவரும் ஒரு சேர ஒப்புக்கொள்வது, 'ஓடிடியின் வருகை சினிமாவில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது' என்பதாகும். அதில் 'சிலருக்கு நல்ல மாற்றங்கள் கிடைத்திருந்தாலும், சிலருக்கு பாதகங்களும் ஏற்பட்டுள்ளன.' அப்படிப்பட்ட ஒன்றாகவே திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவைப் பார்க்கிறார்கள் இவர்கள். கோவிட் பெருந்தொற்று காலத்தில் மிகப் பிரபலமாக உருவெடுத்த ஓடிடி தளங்கள் சினிமா துறையில் ஏற்பட்ட புரட்சியாக பரவலாகப் பார்க்கப்பட்டாலும், திரைத்துறையினர் பலரால் அப்படிப் பார்க்கப்படவில்லை. பட மூலாதாரம்,G DHANANJEYAN / X படக்குறிப்பு,“பெரிய படங்களை திரையரங்குகளில் பார்த்துக் கொள்ளலாம். சிறிய படங்கள் எப்படியும் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். அதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமாக வளர்ந்துவிட்டது," என்கிறார் ஜி.தனஞ்செயன். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிய படங்களுக்கு மக்கள் திரையரங்கம் வருவது கடுமையான அளவில் குறைந்துள்ளதாகக் கூறுகிறார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்(TFAPATN) பொருளாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.தனஞ்செயன். “பெரிய படங்களை திரையரங்குகளில் பார்த்துக் கொள்ளலாம். சிறிய படங்கள் எப்படியும் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். அதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமாக வளர்ந்துவிட்டது. அதை மாற்றவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறுகிறார் அவர். இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் திருப்பூர் சுப்பிரமணியம், ஓடிடி வருகைக்குப் பிறகு சிறிய படங்களுக்கு மக்களிடம் சுத்தமாக ஆதரவு இல்லை என்று கூறுகிறார். ஆனால், அதைத் தாண்டியும் குட் நைட், டாடா, போர்த்தொழில் பழகு, பார்க்கிங், இறுகப்பற்று போன்ற படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெற்றுள்ளன என்கிறார்கள் அந்தணன் மற்றும் கே.ராஜன். மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற கதைகள், வேறு யாரும் கொடுக்க முடியாத படைப்பை வெளிக்கொண்டு வரும்போது அது எந்தப் படமாக இருந்தாலும் ஓடிடி போன்ற சவால்களையும் தாண்டி திரையரங்கில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று கூறுகின்றனர் கோபி நயினார் மற்றும் ரவிக்குமார். https://www.bbc.com/tamil/articles/c19dr0kpxpzo
  15. ரஃபாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கான ஆயுதங்கள் சிலவற்றை வழங்குவதை நிறுத்துவோம் - பைடன் எச்சரிக்கை Published By: RAJEEBAN 09 MAY, 2024 | 11:21 AM இஸ்ரேல் காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் எனஅமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார். அவர்கள்ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை என பைடன் தெரிவித்துள்ளார். அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாகயிருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். நாங்கள் ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். தற்போது ரபாவில் காணப்படும் நிலையை தரைநடவடிக்கை என அமெரிக்கா தெரிவிக்காது இஸ்ரேலிய படையினர் இன்னமும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிற்குள் செல்லவில்லை என தெரிவித்துள்ள பைடன் இஸ்ரேலிய படையினர் எல்லையில்தான் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என இஸ்ரேலிய பிரதமருக்கு தெளிவாக தெரிவித்துள்ளேன் எனவும் பைடன் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183038
  16. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகும் பக்கவிளைவு ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2020, 2021ஆம் ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா, மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் தான். கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகவும், இந்த பக்க விளைவுகள் ஆபத்தை விளைவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சிலர், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தற்கு கொரோனா தொற்று காரணம் இல்லை என்றும் , மாறாக கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசியால்தான் என்றும் கூறுகின்றனர். கொரோனா தடுப்பூசி பலருக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக சிலர் வாதிடுகின்றனர். இந்த விவகாரத்தில் இரண்டு முக்கிய கேள்விகள் எழுகின்றன. முதலாவது, இந்த பக்க விளைவுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பது. இரண்டாவது, தடுப்பூசி செலுத்துக்கொண்ட ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அது தொடர்பாக பயப்பட வேண்டிய அவசியம் உள்ளதா என்பது. முதலில் இந்த முழு விவகாரமும் எப்படி தொடங்கியது என்பதை தெரிந்து கொள்வோம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஏப்ரல் 2021 இல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தனது மூளை சேதமடைந்ததாகவும் ஜேமி ஸ்காட் கூறினார். பிரச்னையின் தொடக்கப்புள்ளி இந்த விவகாரம் முதன் முதலில் பிரிட்டனில் தொடங்கியது. அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி பாதிப்புக்கு எதிரான முதல் வழக்கு , இரண்டு குழந்தைகளின் தந்தையான ஜேமி ஸ்காட் என்பவரால் கடந்த ஆண்டு தொடரப்பட்டது. அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி மூளை பாதிப்பை ஏற்படுத்தியதாக ஜேமி ஸ்காட் வாதிட்டார். ஏப்ரல் 2021 இல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தனது மூளை சேதமடைந்ததாகவும் கூறினார். இதனால் தன்னால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்கிறார். தடுப்பூசி போட்ட பலர் சேர்ந்து இந்த மருந்து நிறுவனத்திற்கு எதிராக தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். சிலர் தங்கள் உறவினர்களில் பலரை இழந்ததாகவும், பலர் தங்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். தடுப்பூசி நிறுவனமே ஒப்புக்கொண்டது ஜேமி ஸ்காட்டின் வழக்கறிஞர் பிபிசியிடம் பேசும்போது, நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்த ஆவணங்களில், சிலருக்கு சில அசாதாரண பக்கவிளைவுகள் இருக்கலாம் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணத்தில், அந்த நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசி 'சில மிக அரிதான சந்தர்ப்பங்களில் TTS ஐ ஏற்படுத்தக்கூடும்' என்று ஒப்புக்கொண்டது என்றார். "சில மிக அரிதான சந்தர்ப்பங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி TTS ஐ ஏற்படுத்தலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இது எப்படி நடக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை" என அஸ்ட்ராஜெனெகா கூறியுள்ளது. இந்நிலையில் தங்களது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசிகளை (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு TTS ஏற்படுவதை V.I.T.T அதாவது Vaccine Induced Immune Thrombosis with Thrombocytopenia என கூறுகிறார்கள். என்ன பக்க விளைவுகள் ஏற்படலாம்? பக்கவிளைவுகள் பற்றி பேசும்போது, TTS/VITT syndrome பற்றி அறிவது முக்கியம். இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் TTS என்பது Thrombosis with Thrombocytopenia Syndrome என கூறுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு TTS ஏற்படுவதை V.I.T.T அதாவது Vaccine Induced Immune Thrombosis with Thrombocytopenia என கூறுகிறார்கள். TTS/VITT என்பது அசாதாரணமான ஒரு சின்ட்ரோம். இது திராம்போசிஸ் (Thrombosis) மற்றும் திராம்போசைட்டோபீனியா (thrombocytopenia) ஒருசேர நிகழ்வதன் காரணமாக ஏற்படுகிறது. இன்னும் விளக்கமாக எளிமையாக சொல்வதெனில், திராம்போசிஸ் என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த உறைதல், திராம்போசைட்டோபீனியா என்பது பிளேட்லட் குறைபாடு. பிளேட்லட் எனும் வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ரத்தம் என்பது நான்கு முக்கிய பொருட்களை உள்ளடக்கியது. சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் பிளேட்லட். எலும்பு மஜ்ஜையில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களோடு பிளேட்லட்டும் உருவாகும். பிளேட்லட் சிறியதாகவும், நிறமற்றதாகவும் இருக்கும். நமது உடலில் ஒரு துளி ரத்தத்தில் லட்சக்கணக்கான பிளேட்லட்கள் இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த உறைவும், பிளேட்லட் குறைபாடு பிரச்னையும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிக மிக அபாயகரமானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். நமது உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால், உடனே அந்தப்பகுதிக்கு பிளேட்டுகள் ஓடிவந்து ஒன்றுசேர்ந்து ரத்தப்போக்கை நிறுத்த உதவும். உடலில் இது இயல்பாகவே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாடோ அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஏதேனும் நோய் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் மருந்தின் பக்கவிளைவு காரணமாகவோ உடலில் பிளேட்லட் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அந்த நிலைமையைத்தான் திராம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, திராம்போசிஸ் (Thrombosis) எனும் ரத்த உறைவும் ஏற்பட்டு திராம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) எனும் பிளேட்லட் குறைபாடு பிரச்னையும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிக மிக அபாயகரமானதாக இருக்கும், சில சமயங்களில் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மாரடைப்பு, மூளையில் ரத்த உறைவு, நுரையீரலுக்குச் செல்லும் ரத்த குழாயில் ரத்த உறைவு (Blood Clot) காரணமாக உடலின் எந்த பாகத்துக்கு வேண்டுமானாலும் ரத்த ஓட்டம் தடைபடலாம். ரத்த உறைவு வெவ்வேறு வடிவங்களில் நிகழலாம். தடுப்பூசி போடாத நபர்களுக்கும் இது நிகழக்கூடும். எனினும், தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகுதான் VITT எனும் அரிய பிரச்னை ரத்தம் உறைவு காரணமாக ஏற்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"நமக்கு காலில் ரத்த உறைவு ஏற்பட்டால் வலி, வீக்கம் ஏற்படும். மார்பில் ரத்த உறைவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி இருக்கக்கூடும்" என்கிறார் எய்ம்ஸ் பேராசிரியர் முகுல் அகர்வால். மருத்துவர்கள் கூறுவது என்ன? டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மருத்துவ இரத்தவியல் துறையின் இணைப் பேராசிரியராக உள்ள மருத்துவர் முகுல் அகர்வால், இது குறித்து பேசும்போது, விரிவாக விளக்கினார். "மருந்தோ தடுப்பூசியோ எடுத்துக்கொண்ட பிறகு, சில சமயங்களில் உடலில் உருவாகும் சில Anti Bodies ரத்த உறைதல் மற்றும் பிளேட்லட் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. எனினும் இது அரிதினும் அரிதான சின்ட்ரோம்" என்றார். மேலும், "'ஹெப்பரின்' என்ற மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்த TTS பிரச்னை தொடர்புபடுத்தப்படுகிறது. தடுப்பூசியோடும் இந்த பக்கவிளைவு தொடர்புபடுத்தப்படுகிறது." "பொதுவாக ஹெப்பரின் மருந்தோ, தடுப்பூசியோ எடுத்துக்கொண்டால், சுமார் ஒன்றரை மாதங்கள் வரை ஏதேனும் தீவிர பக்கவிளைவு ஏற்படுகிறதா என கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்." "இந்நாட்களில் ஹெப்பரின் மருந்து காரணமாக சிலருக்கு இந்த பக்கவிளைவு பிரச்னை வருவதை பார்க்கிறோம். ஆனால் தடுப்பூசியால் அல்ல." "ஹெப்பரின் மருந்து யாருக்காவது கொடுக்கிறோம் எனில், அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிலருக்கு ரத்த உறைதலை தடுக்கும் மருந்தும் தரப்படும்" என்றார். ரத்த உறைவு, பிளேட்லட் குறைபாட்டின் அறிகுறியை பற்றி மருத்துவர் விளக்கினார். "நமக்கு காலில் ரத்த உறைவு ஏற்பட்டால் வலி, வீக்கம் ஏற்படும். மார்பில் ரத்த உறைவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி இருக்கக்கூடும்." "மூளையில் ரத்த உறைவு ஏற்படுகிறது எனில் தலைசுற்றல், தலைவலி, பார்வை பிரச்னை, வலிப்பு, சுய நினைவை இழப்பது போன்றவை ஏற்படலாம். பிளேட்லட் குறைபாடு ஏற்பட்டால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்" என்றார் மருத்துவர் முகுல் அகர்வால். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எனவே சிலருக்கு ஒவ்வாமை, பக்க விளைவுகள் போன்றவை ஏற்படக் கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர். தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் பயப்பட வேண்டுமா? இப்போது அடுத்த முக்கியமான கேள்வி என்னவென்றால் – தடுப்பூசி போட்டு ஓரிரு ஆண்டுகள் ஆன பிறகும் அது தொடர்பாக பயப்பட வேண்டிய தேவை இருக்கிறதா? என்பதுதான். 2023 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம், கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய Thrombotic Thrombocytopenia Syndrome என்ற ஒரு அரிய பக்க விளைவு பற்றி பேசியது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய பொது சுகாதார கொள்கை நிபுணர் டாக்டர் சந்திர காந்த் லஹரியா, ` "தடுப்பூசியின் கூறுகள் நமது ரத்தத்தில் சென்று, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தி, ஆன்டிபாடிகளை உருவாக்கி, நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன மற்றும் நோயை எதிர்த்து போராட தயார்படுத்துகின்றன" என்று கூறுகிறார். "ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எனவே சிலருக்கு ஒவ்வாமை, பக்க விளைவுகள் போன்றவை ஏற்படக் கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்." "உடல் வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம், சில சமயங்களில் அரிதினும் அரிதான நிகழ்வுகள் ஏற்படக்கூடும். ஆனால், யாருக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிந்துகொள்வது கடினம்." "எந்தவொரு அரிதான பக்க விளைவும் கூட பொதுவாக 6 வாரங்களுக்குள்ளாகவே தெரிந்துவிடும். ஆறு வாரங்களுக்குப் பிறகு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது மருந்து அல்லது தடுப்பூசி காரணமாகதான் ஏற்படுகிறது என்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு." எனவே, யாராவது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசியைச் எடுத்துக்கொண்டிருந்தால், கவலைப்பட தேவையில்லை என்றார். தொடர்ந்து பேசிய மருத்துவர் சந்திரகாந்த் லஹரியா, "ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது, நடனமாடும்போது என மக்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்தேன். இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதாக கூற இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோவிட் பொதுமுடக்கத்திற்கு பிறகு பலரும் தங்களை சுறுசுறுப்பாக மாற்றிக்கொண்டுள்ளனர். "கோவிட் பரவல், ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். கோவிட்டுக்கு பிறகு, சிலர் தங்களை சுறுசுறுப்பாக மாற்றிக்கொண்டனர். இது அவர்களின் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது." "ஒருசிலருக்கு அவர்களுக்கு தெரியாமலேயே உடலில் ஏதாவது மருத்துவப் பிரச்னைகள் இருக்கக்கூடும்." "தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் பெரியளவில் உள்ளன. எனவே, அதுபோன்ற வீடியோக்களை தொடர்ச்சியாக காண்கிறோம்." "எந்த ஒரு விஷயத்தையும் முற்றிலும் புறந்தள்ளக் கூடாது என்பது உண்மைதான். ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தால், அது குறித்து அறிவியல்பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் நாங்கள் அது குறித்து கருத்து எதையும் சொல்ல முடியாது" என்றார். உங்கள் உடலில் ஏதேனும் விசித்திரமாக உணர்ந்தால், அதை அலட்சியம் செய்ய வேண்டாம். உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c4n1y5py47qo
  17. Published By: DIGITAL DESK 7 09 MAY, 2024 | 02:33 PM (எம்.நியூட்டன்) வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை மு.ப 8.30 மணியளவில் வேம்படிச் சந்தியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசன்துறை வீதி சத்திரச் சந்தி வரை வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. வீதியில் காணப்படும் இடர்பாடுகளுடைய இடங்களை அடையாளங்காணல், வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகன நடைமுறைகளைப் பின்பற்றல் பரிசோதனை போன்ற செயற்பாடுகள் நடைபெற்றன. குறித்த செயற்பாட்டை தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர், வடக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், மோட்டார் வாகன பரீட்சகர்கள், அதிகாரிகள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், போக்குவரத்து பொலிஸார், வைத்தியர்கள், மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/183048
  18. Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 12:20 PM மட்டக்களப்பு ஏறாவூரில் இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கு வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-தாசம் அல்- கஹ்தானி நேற்று விஜயம் செய்தார். இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி தூதுவரை வரவேற்றனர். https://www.virakesari.lk/article/183044
  19. கே.எல்.ராகுலுக்கும் லக்னெள அணி உரிமையாளருக்கும் இடையே நடந்தது என்ன? சமூக வலைத்தளம் கொந்தளிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கே.எல்.ராகுல் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன்கிழமை (8.5.2024) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தோல்வியை விட அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவுக்கு இடையில் நடந்த விவாதமே தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது. நேற்றைய போட்டி முடிவடைந்த பிறகு கே.எல்.ராகுலும், சஞ்சீவ் கோயங்காவும் நீண்ட நேரம் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த விவாதம் அவ்வளவு நிதானமானதாக காட்சியளிக்கவில்லை. நீண்ட நேரம் கோபத்தில் கே.எல்.ராகுலிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தார் சஞ்சீவ். ராகுலும் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே ராகுல் பேச முற்பட்டபோதும் கூட, சஞ்சீவ் சமரசம் ஆவது போன்று தெரியவில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த வர்ணனையாளரும், இது போன்ற விவாதங்களை கேமராக்கள் முன்னால் செய்யக் கூடாது. தனியாக அறையில் பேசிக்கொள்ளலாம் என்று மைக் வழியாக சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் ராகுலுக்கும், சஞ்சீவுக்கும் என்ன உரையாடல் நடந்தது என்பது கேட்கவில்லை என்றாலும், சஞ்சீவ் கோயங்காவின் கோபமான சைகைகளே சமூக வலைத்தளங்களில் சூடான விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக எக்ஸ் வலைத்தளத்தில் விவாதித்து வரும் பயனர்கள் பலரும், லக்னெள அணியின் தோல்வியின் காரணமாக ராகுலை சஞ்சீவ் திட்டியுள்ளார் என்று பேசி வருகின்றனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஆல்பா என்ற எக்ஸ் பயனர் தனது ட்வீட்டில், "நீங்கள் பணத்திற்காக விளையாடும் போது, இப்படித்தான் நடத்தப்படுவீர்கள்" என்று பகிர்ந்துள்ளார். கொந்தளிக்கும் வலைத்தளவாசிகள் கபர் சிங்க் என்ற எக்ஸ்(ட்விட்டர்) பயனர், "எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இது போன்ற ஒரு நடத்தையை எதிர்கொள்ள கூடாது. உங்கள் அணியின் கேப்டனையே அனைவரது முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறீர்கள். கொஞ்சமாவது கண்ணியத்தோடு நடந்துக் கொள்ளுங்கள். ஒருவரது கடினமான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டும். அது அணியின் உரிமையாளராகவே இருந்தாலும் கூட இது ஏற்கத்தக்கது அல்ல" என்று ட்வீட் செய்துள்ளார். ஆல்பா என்ற எக்ஸ் பயனர் தனது ட்வீட்டில், "நீங்கள் பணத்திற்காக விளையாடும் போது, இப்படித்தான் நடத்தப்படுவீர்கள்" என்று பகிர்ந்துள்ளார். சமீரா என்ற பயனர், "நான் கேஎல் ராகுலின் ரசிகர் அல்ல, ஆனாலும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கோயங்கா அவர்களே எல்எஸ்ஜி அணியின் மீது நீங்கள் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், இந்தியாவின் ஒரு உச்ச கிரிக்கெட் வீரரை இப்படி நடத்துவது முறையல்ல. இந்த விவாதம் தனியிடத்தில் நடந்திருக்க வேண்டும். ராகுல் விரைவில் எல்எஸ்ஜியை விட்டு வெளியேற வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார். மகேஷ் என்ற ட்விட்டர் பயனர், "கே.எல்.ராகுலை வசைபாடும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர் மோசமான ரசனை கொண்டவராக இருக்கிறார். அவமானம். மோசமாக விளையாடினாலும் கூட இது போன்ற அழுத்தம் சிஎஸ்கே வீரர்களுக்கு இல்லை" என்று பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"எங்களது வீரர்கள் பவர் பிளேயில் ஆட்டமிழந்த போதே, எங்களது வேகத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்" என்றார் ராகுல். தோல்விக்கு பிறகு கேஎல் ராகுல் கூறியது என்ன? நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய கேஎல் ராகுல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கினார். கே.எல்.ராகுல் பேசுகையில், "என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற ஆட்டத்தை நாங்கள் டிவியில் தான் பார்த்திருக்கிறோம். இப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறோம்." "ஹெட் மற்றும் அபிஷேக் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறித்தது. சிக்ஸர் அடிப்பதற்காகவே பிரத்யேக பயிற்சி எடுத்து கடினமாக உழைத்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கூட இருவரும் வழங்கவில்லை. விக்கெட் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்யக்கூட வாய்ப்பு வழங்கவில்லை." "முதல் பந்திலிருந்தே இருவரும் கட்டுப்பாடின்றி அபாரமாக பேட் செய்தனர். விக்கெட் வீழ்த்தினால்தான் பவர்ப்ளேயில் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால், எங்களால் அதை கடைசிவரை செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், " நீங்கள் தோல்வியடையும் நிலையில் இருக்கும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் மீதும் கேள்வி எழும். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவிக்க விரும்பினோம். ஆனால், 40-50 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது. எங்களது வீரர்கள் பவர் பிளேயில் ஆட்டமிழந்த போதே, எங்களது வேகத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்" என்றார் ராகுல். "நாங்கள் 250 ரன்கள் அடித்திருந்தாலும் கூட அவர்கள், எங்களை வென்றிருப்பார்கள்" என்று கூறினார் அவர். தனது அணியில் ரன்களை குவிக்க போராடிய ஆயுஷ் படோனி மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோரையும் பாராட்டினார் கே.எல்.ராகுல். https://www.bbc.com/tamil/articles/cd1w7j58g8wo
  20. பட மூலாதாரம்,CHRISTOPHER KERR படக்குறிப்பு,கிறிஸ்டோபர் கெர் கருத்துப்படி (நோயாளிக்கு அருகில் இருப்பவர்), மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளுக்கு சில விசித்திர காட்சிகள் தோன்றும். கட்டுரை தகவல் எழுதியவர், அலெஸ்ஸாண்ட்ரா கோஹியா பதவி, பிபிசி நியூஸ், பிரேசில். 5 மணி நேரங்களுக்கு முன்னர் 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க மருத்துவர் கிறிஸ்டோபர் கெர் தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றும் ஒரு நிகழ்வைக் கண்டார். கிறிஸ்டோபரின் நோயாளிகளில் ஒருவரான மேரி, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தார். அவரைச் சுற்றி அவரது நான்கு பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர். மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மேரி விசித்திரமாக செயல்படத் தொடங்கினார். 70 வயதான மேரி திடீரென படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவர் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய குழந்தையைத் தொட்டிலில் வைப்பது போல் கைகளை அசைக்கத் தொடங்கினார். அவர் அந்த குழந்தையை ‘டேனி’ என்று அழைத்தவாறே அணைத்து, முத்தமிடுவது போன்று செய்கை செய்தார். டேனி என்று யாரையும் மேரியின் பிள்ளைகளுக்கு தெரியாததால், அவர்களால் மேரியின் இந்த செயலை புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்த நாள், மருத்துவமனைக்கு வந்த மேரியின் சகோதரி, நான்கு பிள்ளைகளுக்கு முன்பாக, மேரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்ததாகவும், அக்குழந்தைக்கு ‘டேனி’ என பெயரை மேரி சூட்டியதாகவும் கூறினார். அந்த இழப்பின் வலி மிகவும் அதிகமாக இருந்ததால், மேரி தனது இறந்த குழந்தையைப் பற்றி மீண்டும் ஒருபோதும் யாரிடமும் பேசவில்லை. முதலில் ஒரு பொது மருத்துவராக மட்டுமே பயிற்சி பெற்ற கெர், பின்னர் இருதயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார். அதன் பிறகு நியூரோபயாலஜியில் முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் மேரியின் நிகழ்வை மிகவும் அசாதாரணமான ஒன்றாகக் கருதிய அவர், தனது பணியின் போக்கை மாற்றி, இறக்கும் மக்களின் அனுபவங்களைப் படிப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க முடிவு செய்தார். பட மூலாதாரம்,PLAN SHOOT / IMAZINS / GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிக்கு எது நல்லதோ அதுவே அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் நல்லதாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் கெர். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களின் அனுபவங்கள் அவர் மேரியைச் சந்தித்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன. மரணம் அடையும் மக்கள் இறுதிக் கட்டத்தில் காணும் காட்சிகள் மற்றும் கனவுகளைப் பற்றிய ஆய்வில், உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் கிறிஸ்டோபர் கெர். இந்த அனுபவங்கள் பொதுவாக மரணத்திற்கு சில வாரங்கள் முன்பாகத் தொடங்கி, மரணம் நெருங்கும்போது இதன் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார் கெர். அப்போது மக்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை நினைவுகூர்வதையும், பல வருடங்களுக்கு முன்னர் இறந்த தங்கள் தாய், தந்தை, பிள்ளைகள் மட்டுமல்லாது இறந்த செல்லப்பிராணிகளுடன் கூட பேசுவதைத் தான் கண்டதாக கூறுகிறார் கெர். நோயாளிகளுக்கு இந்த காட்சிகள் உண்மையானதாகவும், தீவிரமானதாகவும், ஒரு வகையான அமைதி உணர்வைத் தருவதாகவும் தெரிகிறது. "காட்சிகளில் வரும் உறவுகள் பெரும்பாலும் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் ஆறுதலான வழிகளில் நோயாளிகளுக்கு தோன்றுகின்றனர். அது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறது. அதையொட்டி, அவர்களின் மரணம் குறித்த பயத்தை குறைக்கிறது", என்று மருத்துவர் கெர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். இந்த நோயாளிகள் குழப்பத்தில் அல்லது மனப்பிறழ்வில் இதைச் செய்யவில்லை. அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைந்தாலும் கூட, உணர்ச்சி ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று கெர் குறிப்பிடுகிறார். இருப்பினும், பல மருத்துவர்கள் இந்த நிகழ்வை மாயத்தோற்றம் (Hallucination) அல்லது மனக் குழப்பத்தின் விளைவாக ஏற்படுகிறது எனக் கூறி இதை நிராகரிக்கிறார்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலும் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதன் விளைவாக, 2010-இல் அமெரிக்காவில் ஒரு முன்னோடி ஆய்வைத் தொடங்கினார் கெர். கருத்துக்கணிப்புகள் மூலம், மரணத்தை நெருங்கும் நோயாளிகளிடம் அவர்களுக்கு என்ன தெரிகிறது என கேட்டு, ஆய்வு செய்யத் தொடங்கினார். பட மூலாதாரம்,CHRISTOPHER KERR படக்குறிப்பு,மரணத்திற்கு அருகில் உள்ளவர்களின் அனுபவங்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார் கிறிஸ்டோபர் கெர். இந்த ஆய்வுகளில் நோயாளிகளை ஈடுபடுத்துவதற்கு முன், மனக் குழப்பத்தில் இல்லை என்பதை உறுதிசெய்ய, அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இந்த ஆய்வுக்கு முன், இந்த அனுபவங்களைப் பற்றிய பெரும்பாலான அறிக்கைகள் மூன்றாம் தரப்பினரிடமிருந்து தான் வந்தன. நோயாளி எதைப் பார்க்கிறார் என்று அவர்கள் நினைத்தார்களோ அதுவே ஆவணப்படுத்தப்பட்டது. ஸ்வீடிஷ் தேசிய மருத்துவ நூலகம் உட்பட பல அறிவியல் ஆய்விதழ்களில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நோயாளிகளின் இந்த அனுபவங்களை விளக்குவதற்கு ஒரு உறுதியான பதிலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், அதே சமயத்தில் இத்தகைய அனுபவங்களின் காரணத்தைப் புரிந்துகொள்வது தனது ஆய்வுகளின் முக்கிய நோக்கம் இல்லை என்றும் கெர் கூறுகிறார். "ஆதாரத்தையும் செயல்முறையையும் என்னால் விளக்க முடியவில்லை என்பதால் அது நோயாளியின் அனுபவத்தை போலியானதாக மாற்றி விடாது," என்று அவர் கூறுகிறார். கெர் இப்போது அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின், பஃபலோ நகரில் மரணவலி தணிப்புச் சிகிச்சையை (Palliative care) வழங்கும் ஒரு அமைப்பின் தலைமை நிர்வாகியாக உள்ளார். அவரது புத்தகமான, ‘Death Is But a Dream: Finding Hope and Meaning at Life's End’, 2020இல் வெளியிடப்பட்டு 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த இறுதி அனுபவங்கள் இறப்பு மீதான பயத்தை குறைக்கின்றன என்கிறார் கெர். இறுதி அனுபவங்களைப் பற்றி கற்றுக்கொண்டது என்ன? பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தனது ஆய்வுகள் மற்றும் வாழ்க்கையின் இறுதி அனுபவங்களின் அர்த்தம் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார் மருத்துவர் கிறிஸ்டோபர் கெர். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இறுதி அனுபவங்களைப் பற்றி கற்றுக்கொண்டது என்ன? "மரணம் என்பதில் நாம் காணும் உடல் ரீதியான வீழ்ச்சியை விட, அதில் இன்னும் அதிகமான விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். மரணம் நெருங்கும் சமயம் என்பது, உங்கள் கருத்துகள் மற்றும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றம், வாழ்க்கையை உறுதிப்படுத்தும் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.” "மரணம் உங்களை வாழ்க்கையின் கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்தத் தருணத்தில் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான விஷயங்கள் குறித்தும், மிகப்பெரிய சாதனைகளாக கருதும் வாழ்வின் உறவுகள் குறித்தும் கவனம் செலுத்த மக்கள் முனைகிறார்கள்.” “அவர்களின் இந்த நினைவுகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு சுவாரஸ்யமான, மிகவும் அர்த்தமுள்ள மற்றும் ஆறுதலான வழிகளில் அவர்கள் முன் தோன்றுகின்றன. அவை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன, இறப்பு மீதான பயத்தை குறைக்கின்றன.” "ஒருவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால் அவர்கள் உளவியல் ரீதியான துன்பத்தை அனுபவிப்பார்கள் என்று. ஆனால் அவ்வாறு இல்லை. அன்பு மற்றும் வாழ்வின் அர்த்தம் பற்றிய உணர்வுகளால் மக்கள் ஆட்கொள்ளப்படுவதை நாங்கள் காண்கிறோம்." உங்கள் ஆராய்ச்சியின்படி, இந்த வாழ்க்கையின் இறுதி அனுபவங்கள் எவ்வளவு பொதுவானவை? "எங்கள் ஆய்வுகளில் பங்கேற்ற சுமார் 88% மக்கள், இந்த அனுபவங்களில் ஒன்றாவது தங்களுக்கு ஏற்பட்டதாக கூறினர். இது வழக்கமான விகிதத்தை விட அதிகமாக இருந்தது, அனேகமாக 20% அதிகம். காரணம் நாங்கள் தினந்தோறும் ஆய்வுகளில் ஈடுபட்டோம், மக்களிடம் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.” "மரணம் என்பது உடனடியாக நிகழ்வது அல்ல, அது ஒரு செயல்முறை. எனவே, ஒரு திங்கட்கிழமை அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும், வெள்ளிக்கிழமை அதைவிட வித்தியாசமான ஒரு பதிலை நீங்கள் பெறலாம். நோயாளிகள் மரணத்தை நெருங்கும்போது இந்த நிகழ்வுகளின் தாக்கம் அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இறுதி அனுபவங்கள் நோயாளிகளுக்கு மிகுந்த ஆறுதலைத் தரும் என்கிறார் கெர். 'காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வது' இந்த அனுபவங்களின் முக்கிய கருப்பொருள்கள் என்ன? "நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வது போன்ற காட்சிகள் தோன்றுவதாகக் கூறுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் நேசித்த மற்றும் இழந்த நபர்களை நினைவுகூர்கிறார்கள்.” "மரணத்தை நெருங்கும்போது இந்தக் காட்சிகள் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆறுதலான அனுபவமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரைப் பற்றி கனவு கண்டார்கள் என்பதும் சுவாரஸ்யமானது. அவர்கள் தங்களை நேசித்தவர்கள், ஆதரித்தவர்கள் மற்றும் மிகவும் முக்கியமானவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அது தாய், தந்தையில் ஒருவராக அல்லது உடன்பிறப்புகளில் ஒருவராக இருக்கலாம், மற்றவர் குறித்து அவர்கள் நினைப்பதில்லை.” "இந்த கருத்துக்கணிப்புகளில், சுமார் 12% பேர் தங்களுக்கு தோன்றிய கனவுகள், அசௌகரியமானதாக இருந்தது என்கின்றனர். அதாவது, உங்களுக்கு வாழ்வில் எந்த காயங்கள் இருந்தாலும், இந்த அனுபவங்கள் மூலம் அவை வெளிப்படும். போரில் ஈடுபட்டு, தப்பிப்பிழைத்த ஒருவருக்கு குற்ற உணர்வு இருக்கலாம், ஆனால் வாழ்வின் இறுதியில் போரில் மரணித்த தோழர்களைப் இந்தக் கனவுகளில் பார்க்கும்போது அவர் ஆறுதல் அடைவார்." இதை மாயத்தோற்றம் என்று நினைப்பது தவறு என நீங்கள் சொல்கிறீர்கள். இந்த அனுபவங்களை வேறுபடுத்துவது எது? "சித்தப்பிரமை அல்லது குழப்பமான மனநிலைகள் மிகவும் பொதுவானவை, குறிப்பாக வாழ்க்கையின் முடிவில் ஏற்படக்கூடும். ஆனால் இந்த அனுபவங்கள் அதிலிருந்து மிகவும் வேறுபட்டவை. மக்கள் சித்தபிரமை நிலையிலிருந்து எளிதாக வெளியே வருவதில்லை. அந்த நிலை அவர்களின் பயத்தைத் தூண்டும் அல்லது நோயாளிகளை அடிக்கடி மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நிலையில், படுக்கையில் கட்டிப்போட வேண்டிய நிலையில் அல்லது மூர்க்கமானவர்களாக மாற்றிவிடும்.” "ஆனால் மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளின் அனுபவங்கள் உண்மையான மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளினால் தூண்டப்பட்டவை. அவர்கள் அதை தெளிவுடன் நினைவுகூர்வார்கள். மேலும் அந்த அனுபவங்கள் மிகுந்த ஆறுதலைத் தரும்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிகளில் சுமார் 12% பேர் தங்களுக்கு தோன்றிய கனவுகள், அசௌகரியமானதாக இருந்தது என்கின்றனர். குழந்தைகளின் இறுதி அனுபவங்கள் சில நேரங்களில் நோயாளிகள் கனவு காண்கிறார்கள், ஆனால் மற்ற நேரங்களில் அவர்கள் விழித்திருக்கிறார்கள். இந்த இரண்டு வகையான அனுபவங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளதா? "ஆய்வின்போது, நோயாளிகளிடம் தூங்கும் நேரம் மற்றும் விழித்திருக்கும் நேரம் குறித்துக் கேட்டோம், அது உண்மையில் 50-50 என்ற ரீதியில் இருந்தது.” "மரணத்தை நெருங்குவது என்பதில் ஒரு தீவிரமான உறக்க செயல்முறையும் அடங்கும். பகல், இரவு என்ற கால சுழற்சி உடைந்து விடும், நேரம் கணக்கில்கொள்ளப்படாது. எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாத போது, யதார்த்த நிலை குறித்து எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை." நீங்கள் உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் ஆய்வு செய்கிறீர்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இறுதி அனுபவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? "குழந்தைகள் இதை இன்னும் சிறப்பாகச் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவர்கள் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் கோடுகளை வரைவதில்லை. அவர்களுக்கு மரணம் குறித்த கருத்துகளும் இல்லை. எனவே, அவர்கள் அந்த தருணத்தில் உண்மையாக வாழ்கிறார்கள்.” "அவர்களுக்கு இந்த அனுபவங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் வண்ணமயமான வழிகளில் ஏற்படுவதைக் காண முடியும். இதன் அர்த்தத்தையும் அவர்கள் உள்ளுணர்வு மூலம் அறிந்துகொள்வார்கள்.” "இறந்து போன யாரையாவது அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றால், நிச்சயமாக இறந்துபோன ஏதேனும் விலங்குகளைப் பற்றி அறிந்திருப்பார்கள். அது குறித்த அனுபவங்கள் ஏற்படும்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிகள் மரணத்தை நெருங்கும்போது இறந்தவர்கள் குறித்த காட்சிகள் அதிகம் தோன்றும் என்று கெர் கூறுகிறார் குடும்பங்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மீதான தாக்கம் இந்த அனுபவங்கள் நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? "750 நோயாளிகளின் நேர்காணல்களுடன் இரண்டு ஆவணங்களை வெளியிட்டோம். இதன் முடிவுகள் என்னவென்றால், நோயாளிக்கு எது நல்லதோ அதுவே அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் நல்லதாகப் பார்க்கப்படுகிறது.” "துக்கத்தின் செயல்முறைகளைப் பற்றி நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஆய்வை மேற்கொண்டோம். இந்த வகையான விஷயங்களைக் கண்டவர்கள் மிகவும் நேர்மறையான வழிகளில் துக்கத்தை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இழந்த நபரின் நினைவையும் அவர்கள் குறித்த உணர்வையும் இது மாற்றி வடிவமைக்கிறது." இந்த விஷயத்தைப் பற்றிய பெரும்பாலான விவாதங்கள் மனிதநேயம் சார்ந்த துறைகளில் இருந்து தான் வந்துள்ளன, மருத்துவத் துறைகளில் இருந்து அல்ல என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த ஆய்வுக்கு மருத்துவம் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை? கடந்த சில ஆண்டுகளில் அது மாறியுள்ளதா? "இல்லை, அது மோசமாகி வருகிறது என்று நினைக்கிறேன். மனிதநேயம் நமது இருப்பையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று நான் நினைக்கிறேன். மனிதநேயத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கிறது." பட மூலாதாரம்,GETTY IMAGES 'மரணம் குறித்த அனுபவங்களில் ஆர்வம் காட்டும் மக்கள்' மற்ற மருத்துவர்கள் ஆதாரங்களைக் கேட்டதால் தான் உங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கியதாகச் சொன்னீர்கள். ஆனால் உங்கள் பணி மருத்துவத் துறையை விட மீடியாக்களிடம் இருந்து அதிக கவனத்தைப் பெற்றது. இந்த மாறுபாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? "நோயாளிகளின் இறுதி அனுபவங்களை, இளம் மருத்துவர்களுக்கு புரிய வைத்து, அவர்கள் பாராட்டைப் பெறுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே ஆதாரங்களை உருவாக்கி, அவற்றை அவர்களுக்கு புரியக்கூடிய வகையில் முன்வைத்தோம்.” "ஆனால் தவறான பிரிவினரை திருப்திபடுத்த முயற்சி செய்கிறேன் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், இந்த ஆய்வு குறித்து முக்கிய ஊடகங்களில் வெளியான போது, அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது." "எனவே, மருத்துவச் சேவையை வழங்குபவர்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை, ஆனால் அந்தச் சேவையைப் பெறுபவர்கள் அல்லது பராமரிப்பில் இருப்பவர்கள் அல்லது மரணம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள், இந்த ஆய்வைப் பாராட்டுகிறார்கள். இந்த முரண்பாடு சுவாரஸ்யமாக உள்ளது" https://www.bbc.com/tamil/articles/c72py6j0eldo
  21. இலங்கையை சேர்ந்த 200க்கும் அதிகமான முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய உக்ரைன் போர்முனையில் உயிரிழந்துள்ளனர் - முன்னாள் படைவீரர் தகவல் Published By: RAJEEBAN 09 MAY, 2024 | 02:17 PM பல குழுக்களால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய எல்லையில் உள்ள கொலைகளங்களில் உயிரிழக்கின்றனர் என அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றின் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே என்னை ரஸ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர். அதற்காக 1.6 மில்லியன் செலுத்தினேன் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை என தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள அவர் ரஸ்யாவில் தமிழில் பேசிய ஒருவர் எங்களை வரவேற்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஸ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ள முன்னாள் படைவீரர் சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் எங்களிற்கு உதவினார் அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். என்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றார்கள் அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர் அதே எண்ணிக்கையானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஸ்ய உக்ரைன் போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் மூன்றுபேர் அல்லது நான்கு பேரே சேர்க்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஒரு கிழமைக்குள் கடவுச்சீட்டு விசாவுடன் கிடைக்கின்றது. அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஸ்யாவிற்கு அனுப்பப்படுகின்றனர் எனவும் அங்கிருந்து தப்பிவந்த முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183043
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபில் மெர்சர் பதவி, பிபிசி செய்திகள், சிட்னி 8 மே 2024 ஆஸ்திரேலியாவில் ஒரு பண்ணையில் வளர்ந்த லியாம் ஹால் ஒரு மெக்கானிக்காக தன் தொழிலை தொடங்கினார். எந்நேரமும் கிரீஸ் படிந்த ஆடைகளை அணிந்து கொண்டு கை, கால்களில் சிராய்ப்புகளுடன் மெக்கானிக் வேலை பார்த்து கொண்டிருந்த லியாமின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் தலைகீழாக மாறியது. ஆம், லியாம் ஹால் இப்போது ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான ’CSIRO’-வில் குவாண்டம் பயோடெக்னாலஜி பிரிவின் தலைவராக உள்ளார். தொழில் நுட்பரீதியாக அவரது செயல்பாடு பலமடங்கு மேம்பட்டது. "என் கடந்த காலம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆரம்பம் முதல், ஒரு டீசல் மெக்கானிக்காக இருக்கவே விரும்பினேன். சிறிது காலம் டீசல் மெக்கானிக்காக பணியாற்றிய போது, அத்துறையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்கும் ஆசை ஏற்பட்டது. அதன் பின்னர் எனக்கு இயற்பியல் அறிமுகமானது, கூடவே குவாண்டம் இயற்பியலும் அறிமுகமானது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், மெக்கானிக்காக இருந்து குவாண்டம் இயற்பியல் பயின்றது வரை 'ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி’ ஆக இருந்தது," என்று லியாம் கூறுகிறார். பட மூலாதாரம்,CSIRO படக்குறிப்பு,லியாம் ஹால் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் வழிமுறை லியாம் ஹாலின் குழு, நோய் கண்டறிதல் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மைக்ரோ சென்சார்களை வைத்து நோயாளிகளின் இரும்புச்சத்து அளவைப் பரிசோதிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். அதாவது, சுமார் 50 நானோமீட்டர் அளவுள்ள நுண்ணிய வைரக் கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மைக்ரோ சென்சார்கள், மனிதர்களின் இரும்புச்சத்து அளவை பரிசோதிக்க பயன்படுகிறது. லியாமின் குழு இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நானோ வைரத் துண்டுகள், மனித தலைமுடியை விட சுமார் 1,000 மடங்கு நுண்ணிய அளவை கொண்டிருக்கும். தற்போதைய பரிசோதனை முறைகள், உடலின் இரும்பு சத்தை சேமித்து வைக்கும் ஃபெரிடின் எனப்படும் புரதத்தைக் கண்காணிக்கின்றன. ஃபெரிடின் மூலமாக இரும்புச்சத்தை அளவிடுவது ஒரு சிறந்த வழியாகும், இரும்புச்சத்தின் அளவை மிகவும் துல்லியமாக கணக்கிட முடியும். இந்தப் பரிசோதைனையை மேற்கொள்வதற்கான ஒரு வழிமுறை, புரதத்தினுள், இரும்பு சத்தினால் உருவாக்கப்பட்ட சிறிய காந்தப்புலங்களை அளவிடுவதாகும். ஆனால் அந்த வழிமுறையில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. "காந்தப்புலத்தின் அளவு மிகவும் சிறியது. எனவே பாரம்பரிய காந்தமானிகள் (magnetometers) அல்லது நுண்ணோக்கிகளால் அதனை அளவிட முடியாது” என்று டாக்டர் லியாம் ஹால் விளக்குகிறார். ஆனால், முனைவர் ஹாலின் நானோ அளவிலான குவாண்டம் சென்சார்களால் அந்த சிறிய புலங்களை அளவிட முடியும். ”இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் எந்தவொரு குறிப்பிட்ட நோயையும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியும். உதாரணமாக புற்றுநோயின் அறிகுறியை குறிக்கும் சில ஹார்மோன்கள் அல்லது புரதங்களை கண்காணிப்பதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும்,” என்கிறார். "குவாண்டம் தொழில்நுட்பத்தின் சிறப்பு என்னவென்றால், மிகக் குறைந்த செலவில், மிக சிறந்த உணர்திறன் கொண்ட சோதனைகள் செய்ய முடியும். இரசாயனங்களை எளிதாக அடையாளம் காண முடியும்," என்று முனைவர் ஹால் கூறுகிறார். பட மூலாதாரம்,UNIVERSITY OF CHICAGO படக்குறிப்பு,உலகிலுள்ள அனைத்து பெரும் பல்கலைக் கழகங்களிலும் விஞ்ஞானிகள் குவாண்டம் இயற்பியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றனர் குவாண்டம் இயற்பியலின் பரவலான பயன்பாடுகள் குவாண்டம் தொழில்நுட்பங்களைத் திறம்பட உருவாக்குவதற்கான உலகளாவிய அமைப்புகளில் முனைவர் ஹால் அங்கமாக இருக்கிறார். பிரிட்டன், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குவாண்டம் இயக்கவியலின் வித்தியாசமான பண்புகளை ஆராயும் முயற்சியில் மும்முரம் காட்டி வருகின்றன. "ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரையில், குவாண்டம் தொழில்நுட்பம் மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி வாய்ப்புகளில் ஒன்றாகும் - புதிய சந்தைகள், புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளன," என்று CSIRO இன் தலைமை விஞ்ஞானி, பேராசிரியர் பிரோன்வின் ஃபாக்ஸ் கூறினார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இயற்கையின் மிகச்சிறிய பொருள்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக `குவாண்டம் இயக்கவியல்’ உருவானது. இது பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்தியது. சிக்கலான பிரச்னைகளை மின்னல் வேகத்தில் தீர்க்கும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சுற்றுச்சூழல் அறிவியல், கார்பன் உமிழ்வுகளை உறிஞ்சி சுத்தப்படுத்துவது, இணைய பாதுகாப்பு, புதிய மருந்துகள் என குவாண்டம் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளின் வரம்பு மிகப்பெரியது. கார்களை இயக்கும் குவாண்டம் பேட்டரிகள், கார்பன் உமிழ்வைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட விமானங்கள் மற்றும் சாலை நெரிசலைக் குறைக்க போக்குவரத்து தளவாடங்கள் என இதன் பயன்பாடுகள் மிக அதிகம். குவாண்டம் ஆராய்ச்சியின் ஒரு முக்கிய நோக்கம் என்னவெனில், துணை அணுத் துகள்களின் (subatomic particles) சக்தியைப் பயன்படுத்தி, தரவுகளைச் சேமிக்கவும், செயலாக்கவும் செய்வதாகும். பட மூலாதாரம்,UNIVERSITY OF CHICAGO படக்குறிப்பு,சிகாகோ பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு பொறியியல் மற்றும் இயற்பியலின் பேராசிரியர் டேவிட் அவ்சலோம் கோவிட் தடுப்பூசி செய்ய குவாண்டம் இயற்பியல் பயன்படுமா? வழக்கமான கணினிச் செயல்பாட்டு முறையில், பிட்களாக தரவுகளை பயன்படுத்துவர் (பூஜ்ஜியங்கள் மற்றும் ஒன்று). ஆனால், குவாண்டம் கணினிகள் க்யூபிட்களைப் (qubits) பயன்படுத்துகின்றன, அவை பூஜ்ஜியங்கள், ஒன்றுகள் அல்லது ஒரே நேரத்தில் இரண்டின் கலவையாகயும் இருக்கலாம். இங்குதான் செயல்பாடுகள் சற்று விசித்திரமாக இருக்கும், ஆம், இங்கு துகள்கள் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்க முடியும் (இது சூப்பர்போசிஷன் என்று அழைக்கப்படுகிறது), மேலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் (entangled). இது 'குவாண்டம் சூப்பர்போசிஷன்' கொள்கை எனப்படுகிறது. "இந்தக் 'குவாண்டம் சூப்பர்போசிஷன்' கொள்கையுடன், மற்றொரு குவாண்டம் நிகழ்வை பயன்படுத்துவதின் பெயர் `entangled’ (குவாண்டம் பின்னல்) நிலை ஆகும். வழக்கமான கணினிகளால் செய்யமுடியாத அசாத்தியமான கணக்கீடுகளை இந்தக் குவாண்டம் பின்னல் நிலையைப் பயன்படுத்திச் செய்யமுடியும். இது உலக நடைமுறைகளை மாற்றக்கூடிய சில அற்புதமான கணக்கீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பை `entangled’ நிலை அதிகரிக்கிறது," என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். ஆண்ட்ரூ டிஸுராக் விளக்குகிறார். "கோவிட் அல்லது அதேபோன்று மற்றொரு பயங்கரமான தொற்றுநோய்ச் சூழலைக் கற்பனை செய்து பாருங்கள். நிலையான சோதனை நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வைரஸ் கிருமியின் மூலக்கூறு கட்டமைப்பை நீங்கள் புரிந்துகொண்டவுடன், குவாண்டம் கணினியை பயன்படுத்தி, அந்த வைரஸைத் தாக்கும் ஒரு மூலக்கூறை எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்களால் கணக்கிட முடியும்,” என்கிறார். மேலும் "உலகின் மிகப் பெரிய உயிரியல் மற்றும் மருந்தியல் வல்லுநர்கள் இணைந்து, கோவிட் தொற்று நோய்க்கான தடுப்பூசிகளைக் கொண்டு வர ஆறு அல்லது ஒன்பது மாதங்களானது. ஆனால், குவாண்டம் கணினியை பயன்படுத்தி ஒரே நாளில் அந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும்," என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துகள்கள் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்க முடியும் (இது சூப்பர்போசிஷன் என்று அழைக்கப்படுகிறது), மேலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் (entangled) குவாண்டம் கணினிகள் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவை? "குவாண்டம் கம்ப்யூட்டிங்கை இயக்கும் சக்தி, `entanglement’ என்னும் நிலையில் இருந்து உருவாகிறது, இது ஒரு இயற்கையான நிகழ்வு,” என்கிறார் CSIROல் டேட்டா 61 இன் குழுத் தலைவரான டாக்டர் முகமது உஸ்மான். இது சிக்கலான செயல்முறை. புரிந்துகொள்வது கடினம். பெரும்பாலும், சிறப்புத் துகள்களாக கருதப்படும் ஃபோட்டான்கள் அல்லது ஒளியின் துகள்கள், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க கூடிய ஆற்றல் மிக்கவை, ஆனால் அவை மேலோட்டமாக இணைக்கப்படாவிட்டாலும் ஆற்றல் வாயிலாக வலுவாக இணைக்கப்பட்டுள்ளன. "உலகில் குவாண்டம் பின்னல் (entanglement ) நிலையின் அடிப்படைகளை யாரும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நான் கூறுவேன்," என்கிறார் முனைவர் உஸ்மான். `குவாண்டம் இணையம்’ சாத்தியமா? கண்டிப்பாக. ஒளியின் துகள்களைப் பயன்படுத்தி ஆப்டிகல் ஃபைபர்கள் மூலம் தரவுகள் அனுப்பப்படலாம். இதை ஒட்டுக் கேட்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வழமையான கணினிகளால் செய்யமுடியாத செயல்களைக் குவாண்டம் கணினிகள் செய்யும் அமெரிக்காவில், சிகாகோ பல்கலைக்கழகம் அந்நாட்டின் மிக நீளமான குவாண்டம் நெட்வொர்க்குகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட 200கி.மீ. (124 மைல்) நீளம் கொண்டது. விஞ்ஞானிகள் அதனை மேலும் மேம்படுத்தி வருகின்றனர். டேவிட் அவ்சலோம், சிகாகோ பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு பொறியியல் மற்றும் இயற்பியலின் பேராசிரியராக உள்ளார். எதிர்வரும் 2035-ஆம் ஆண்டளவில் 30,000 குவாண்டம் தொழில்நுட்பம் சம்பந்தமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்திற்கு சுமார் 5 லட்சம் கோடி இந்திய ரூபாய்கள் (60 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் `Bloch Quantum Tech Hub` பல்கலைக்கழகத்தின் நிறுவன இயக்குநரும் இவர் தான். இது ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் இஸ்ரேலில் உள்ள நிபுணர்களின் கூட்டு முயற்ச்சியில் இயங்குகிறது. "பல மைல்களுக்கு நிலத்தடி ஃபைபர் மூலம் பாதுகாப்பான குவாண்டம் செய்திகளை எவ்வளவு தூரம் அனுப்ப முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்," என்று அவர் விளக்கினார். "ஆனால் இந்த ஆய்வில் கடக்க வேண்டிய சவால்கள் இன்னும் நிறைய உள்ளன. உதாரணமாக, குவாண்டம் கம்ப்யூட்டிங் மூலம், குவாண்டம் ஒத்திசைவைப் பராமரிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். பிழை திருத்தம் - அதாவது டீ-கோஹரென்ஸால் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்தல், அளவிடுதல், அதாவது ஒரு குவாண்டம் அமைப்பில் குவிட்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க முடியும்,” என்றார். "இன்னும் பல ஆண்டுகளுக்குச் செய்ய வேண்டிய கடினமான ஆராய்ச்சிகள் காத்திருக்கின்றன. அதே சமயம், எதிர்காலம் நம்மை நோக்கி வேகமாக வருவதாகத் தோன்றுகிறது," என்றார். "குவாண்டம் செயற்கை நுண்ணறிவு (AI) எங்கள் குழுவின் ஆராய்ச்சியின் முக்கியமான ஒன்றாகும். குவாண்டம் கம்ப்யூட்டிங்கில், கணக்கீடு ஆற்றல் அதிகம் என்பதால், இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவை திறம்பட செய்ய உறுதியளிக்கிறது," என்று முனைவர் உஸ்மான் விளக்குகிறார். "உதாரணமாக, போர்க்களங்களில் தானியங்கி கார்கள் அல்லது ஆளில்லா விமானங்கள் கொடிய ஆயுதங்களுடன் பறக்கும் சமயத்தில், செயற்கை நுண்ணறிவை நம்பலாமா? எனவே, செயற்கை நுண்ணறிவில் குவாண்டம் கம்ப்யூட்டிங்கை ஒருங்கிணைப்பது மிகவும் நம்பகமான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது," என்று அவர் கூறினார். "பெரிய அளவிலான குவாண்டம் கணினிகள் உருவாவது தான் என் கனவு, லட்சியம். மேலும் நாம் இதுவரை கண்டுபிடிக்காத சிக்கல்களுக்கு தீர்வு காண நான் உருவாக்கி வரும் குவாண்டம் அல்காரிதம்களால் முடியும். அது எல்லாவற்றிலும் புரட்சியை ஏற்படுத்தும்," என்கிறார் அவர், நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cpegp88q590o
  23. Published By: RAJEEBAN 09 MAY, 2024 | 08:16 AM இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ்சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் 2015 முதல் 2022 வரை இலங்கை படையினரால் தாக்கப்பட்ட பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய சித்திரவதைகளுக்குள்ளான 123 தமிழர்களின் விபரங்களை அடிப்படையாக வைத்து புதிய அறிக்கையை வெளியிட்;டுள்ளது. தமிழர்கள் காணாமல்போதல் சித்திரவதை செய்யப்படுதல் பாலியல்வன்முறைக்குள்ளாக்கப்படுதல் 2025 முதல் 2022 என்ற இந்த அறிக்கை 2022 இல் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற பின்னர் 11 தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டனர் என குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழர்களின் காணாமல்போதல்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் 2015-2022" என்னும் இவ்வறிக்கையில் இந்த ஏழாண்டு காலப்பகுதியில் 139 தடவைகள் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளால் சட்டவிரோதமாகப் பிடித்துச்செல்லப்பட்டு தடுத்துவைத்திருக்கப்பட்ட 20-39 வயதிற்குட்பட்டவர்களைப் பெரும்பான்மையானவர்களாகக் கொண்ட 109 ஆண்களும் 14 பெண்களுமாக 123 தமிழர்களது வாக்குமூலங்கள் ஆராயப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இத்தமிழர்கள்அனைவரும் இப்போது சிறிலங்காவிற்கு வெளியே வசிக்கின்றார்கள். 2009இல் போர் முடிந்த பின்னர் தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில்ஐவுதுP முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் தொடர்ச்சியாக வெளிவரும் இப்புதிய அறிக்கை சரணடைந்தவிடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்ப் பொதுமக்களுக்கும் எதிரான கடத்தல்காணாமல்போகச்செய்தல் மற்றும் சித்திரவதைகளில் பாதுகாப்புப் படைகளால் போர் முடிவடைந்தஉடனடி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதே முறைமைகளும் நடைமுறைகளுமே இற்றைவரையும்தொடர்வதைக் காட்டுகின்றது. 'மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எவ்விதமான பின்விளைவுகளையும் எதிர்கொள்ளாமல் அதிகாரத்தைப்பயன்படுத்துவது என்றுதான் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்பது வரையறை செய்யப்படுகின்றதுஇது காலப்போக்கில் அரசியல் அமைப்புக்களிலுள்ளும் அரசியல் கலாச்சாரத்தினுள்ளும் ஆழவேரூன்றிப்போயுள்ளது. சிறிலங்காவில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும்பாரதூரமான சர்வதேக் குற்றங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலுமில்லாமல் பல தசாப்தங்களாகஇத்தண்டனை விலக்களிப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் பாதுகாப்புதுறைசீரமைக்கப்படுவதற்கும் தமிழர்களுக்கு எதிராக இவ்வன்முறைக் கலாச்சாரத்திற்க்குப்பொறுப்பானவர்களை நீக்குவதற்கும் சர்வதேச சமூகம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்தால் மட்டுமேஇதனை நிறுத்திக்கொள்ள முடியும். இவ்வறிக்கையில் ஆய்வுசெய்யப்பட்ட வாக்குமூலங்களைவழங்கியவர்கள் பிரித்தானியாவிலோ அல்லது இதர இடங்களிலோ புகலிடம் கோரும் தமிழர்களின் ஒருசிறு பகுதியினர் மட்டுமே" இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின்நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார். இவ்வறிக்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2022இல் இடம்பெற்ற தடுத்துவைப்புக்களில் 24பேரில் 11 பேர் - சம்பவங்கள் யூலை 2022இல் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னரேயே நிகழ்ந்தன. இந்த 139 சம்பவங்களில் 65 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்துஅல்லது உறவினர்களின் வீடுகளிலிருந்து உறவினர்கள் முன்னிலையில் சிறிலங்காவின் சட்டஅமுலாக்கள் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இதர சம்பவங்களில் பெரும்பாலானவற்றில்அவர்கள் வீட்டுக்கு அல்லது வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இவ்வனைத்துச் சம்பவங்களிலும் தடுத்து வைக்கப்பட்டவர்களது கண்கள் கட்டப்பட்டும் கைகள் பின்னால்கட்டப்பட்டும் பெரும்பாலும் வெள்ளைநிற வான்களிலேயே பிடித்துச்செல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒருசில சம்பவங்களைத் தவிர மற்றைய அனைத்திலும் அவர்கள் அடையாளம் தெரியாத இடங்களுக்கேகொண்டு செல்லப்பட்டதுடன்இ குடும்பங்களுக்கும் அவர்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டார்கள் என்றும்தெரிவிக்கப்படவில்லை. இரகசியத் தடுப்பு மையங்களில் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கையில் 139 தடுப்புக்காவல்சம்பவங்களில் 130 இல் விசாரணைகளின்போது குறைந்தபட்சம் கடுமையாகத் தாக்கப்பட்டது உட்படசித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். 85 சம்பவங்களில் பிளாஸ்ரிக் பைகளால் மூச்சுத்திணறல் செய்யப்பட்டது. 47 சம்பவங்களில் சிகரட்அல்லது சூடான பொருட்களால் அவர்களுக்கு சூடுவைக்கப்பட்டது. 46 பேர் நீரில் முகத்தை அழுத்திமூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 32 சம்வங்களில் அவர்கள் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்பட்டனர். 85 சம்பவங்களில் அவர்கள் பலமுறையான வடிவங்களில் சித்திரவதைகளுக்குஆளாக்கப்பட்டனர். 2022 மார்ச்சில் 28 வயது ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து சாதாரண உடைகளில் வந்தநபர்களால் பிடித்துச்செல்லப்பட்டு 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 'அந்த நேரத்தில்தான்பெற்றோலில் நனைக்கப்பட்ட பொலித்தீன் பையால் என்னுடைய தலை மூடப்பட்டது. நான்கு அல்லதுஐந்து தடவைகள் இவ்வாறு அவர்கள் என்மீது போட்டார்கள்.பின்னர் தண்ணீர் நிரப்பப்ட்டிருந்தபிளாஸ்டிக் கொள்கலனுக்கு என்னைக் கொண்டுசென்றார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள்என்னுடைய முகத்தினை நீரினுள் அழுத்திப்பிடிக்கும்போது அது அரைமணித்தியாலங்கள் நீடித்ததுபோன்று எனக்கு இருந்தது. ஒவ்வொரு முறையும் முகம் வெளியில் எடுக்கப்பட்டு மூச்சுஇழுத்துவிடும்போது உண்மையைச் சொல்லும்படியும் பெயர்களைச் சொல்லும்படியும் எனக்குச்சொல்லப்பட்டது. நான் மிகவும் களைப்படைந்து தரையில் சரிந்து விழுந்தேன். அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு மீண்டும் நான் இழுத்துச்செல்லப்பட்டேன்" இவ்வாறு அவர் கூறினார். பாலியல் ரீதியான சித்திரவதையும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட 91 தடுத்துவைப்புநிகழ்வுகளில் அனைவருமே பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 82 பேர்பின்வரும் ஐந்து வகையான பாலியல் சித்திரவதைகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றுக்காவதுஆளாக்கப்பட்டனர்: விதைப்பைகளை கசக்குதல் வாய்மூலமாக வன்புணர்வு ஆண்குறி மூலமானபலாத்காரம் கம்பிகளை மலவாசல்வழியே செலுத்துதல் சுயஇன்பத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தல் என்பன 51 பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். 11 பேர் மீது கம்பிகளைப் பயன்படுத்திமேற்கொள்ளப்பட்டது. 40 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஆண்கள் மீதும் 11 சம்பவங்களில்பெண்கள் மீதும் பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டது.கடத்தல்கள் தடுத்து வைப்புக்கள் சித்திரவதை மற்றும் பாலியல் சித்திரவதைகள் என்பவற்றின்எண்ணிக்கை இவை எவ்வாறு முறைப்படுத்தப்பட்ட பரந்துபட்ட பாரதூரமான குற்றச்செயல்களாகநடைபெறுகின்றன என்பதை விளக்குகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கெர் ரூர்க் 2024 மார்ச் 1 ம் திகதி இடம்பெற்ற மனிதஉரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வில் உரையாற்றியபோது தனது கவலையினை வெளிப்படுத்திபின்வருமாறு கூறினார்: 'கடத்தல்கள் சட்டவிரோத தடுத்துவைப்புக்கள் பாலியல் வன்முறைகள்உள்ளிட்ட சித்திரவதைகள் சிறிலங்கா காவல்துறையாலும் பாதுகாப்புப் படைகளாலும் திரும்பத்திரும்பமேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த நம்பகரமான தகவல்களால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.இக்குற்றச்செயல்களில் சில 2023 இல் இடம்பெற்றதாகவும் குறிப்பாக நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும்இடம்பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது." சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2023 ஆண்டிற்கான மனிதஉரிமைகள் அறிக்கையில் அறிக்கையில் 'வடக்கினைச் சேர்ந்த சில தமிழர்கள் காவல்துறை தம்மைச்சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து சித்திரவதை செய்ததாகவும் விடுதலைப் புலிகளுடன்அவர்களுக்கிருந்த தொடர்பு அல்லது ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தமை தொடர்பாக அவர்களிடம்விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக சில குடியியல் சமூக அமைப்புக்கள்தெரிவித்தன." எனக் கூறப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/183023
  24. Published By: VISHNU 09 MAY, 2024 | 02:50 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில் முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில் தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிற்கின்றனர். https://www.virakesari.lk/article/183021
  25. அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் - முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது Published By: VISHNU 09 MAY, 2024 | 10:10 AM தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. கொக்குதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நிலையில் குறித்த பிரதேசம் பரந்துபட்ட வயல் காணிகளைக் கொண்ட பிரதேசம் 1984 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கம் திட்டம் திட்டமிட்ட முறையில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு மூன்று நாட்களில் உங்களை மீண்டும் குறித்த பகுதியில் அனுமதிக்கிறோம் என்றனர். ஆனால் முப்பது வருடங்கள் குறித்த பகுதிக்குச் செல்வதற்காக நாம் காத்திருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்த நிலையில் எமது காணிகள் எமக்கு ஒப்படைக்கப்படவில்லை. குறித்த பகுதி விவசாய காணிகளைக் கொண்டதாகக் காணப்படும் நிலையில் எமது மக்கள் அங்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அங்கு வாழ்ந்த மக்களுக்கு மீன்பிடி என்றால் என்னவென தெரியாத நிலையிலும் வேறு வழியின்றி சிறு மீன்பிடியை நம்பியே தற்போது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது ஆமையன் குளத்தில் மூன்று ஏக்கர் காணி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் சம்பத் நுகர நன்றாகத் திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான தண்ணி முறிப்பு மதுரமடு மேல் மானாவாரி காணிகளையும் சிங்கள மக்களுக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டனர். சிங்கள அரசாங்கம் மனசாட்சி இல்லாத ஒரு அரசாங்கம் சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களின் காணிகளைப் பிடித்துக் கொடுக்க முடியும் என்றால் ஒரு பகுதியை ஏனும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனோநிலை வர வில்லை. ஆகவே தமிழ அரசியல்வாதிகள் இனியாவது உங்கள் வாய்களைப் பாராளுமன்றத்தில் திறவுங்கள். முல்லை சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183020

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.