Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இல்லையண்ணை. செய்தியின்படி சந்தையில் வியாபாரம் செய்யும்போது வெற்றிலை போடக்கூடாது எனப்புரிந்து கொண்டேன். வெற்றிலை போட்டபின் சுற்றாடலில் தானே புளிச்சென துப்புவார்கள். அது அங்கு வருபவர்களால் உழக்கப்படலாம் தானே?!
  2. ரஃபாமீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டால் இது ஹமாசின் நிலையை வலுப்படுத்தும் - அமெரிக்கா 10 MAY, 2024 | 02:41 PM காசாவின் ரஃபா மீது இஸ்ரேல் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் அது ஹமாஸ் அமைப்பிற்கான மூலோபாய வெற்றியாக மாறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கேர்பி இதனை தெரிவித்துள்ளார். ரஃபா மீதான எந்த பாரிய நடவடிக்கையும் பேச்சுவார்த்தை மேசையில் ஹமாசின் நிலையை வலுப்படுத்தும் இஸ்ரேலின் நிலையை வலுப்படுத்தாது என்பதே எங்களின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் ரஃபா அதிகளவு பொதுமக்கள் உயிரிழந்தால் இஸ்ரேல் பற்றிய ஹமாசின் திரிபுபடுத்தப்பட்ட கதைகளிற்கு மேலும் பல விடயங்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அவர்கள் ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை என பைடன் தெரிவித்துள்ளார். அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாகயிருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். நாங்கள் ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183160
  3. யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் மன்னார் (Mannar) ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களை கடலரிப்பானது மிகமோசமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மற்றும் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) ஆகியோர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இன்றைய (10.05.2024) அமர்வின் போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடலரிப்பின் காரணமாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலை அண்மித்த கரையோர பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே இதற்கான ஓர் உடனடி தீர்வினை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்” என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/kadalarippu-today-parliament-speech-sritharan-1715350910
  4. கடந்த அரை நூற்றாண்டிற்குள் தடுப்பூசிகளின் மூலம்154 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு தகவல் வெளியிட்டுள்ளது. த லென்செட் (The Lancet) எனப்படும் அறிக்கையில் இது தொடர்பில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 1974ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தின் (EIP) விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறப்பு விகிதம் இதற்கமைய, தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் சுமார் 154 மில்லியன் அளவிலான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, தடுப்பூசிகளால் குழந்தைகளே அதிக நன்மையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் 104 மில்லியன் குழந்தைகளே உள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த தடுப்பூசி திட்டமானது குழந்தைகள் இறப்பு விகிதத்தில் 40 வீத வீழ்ச்சியினையும் ஏனையவர்களின் இறப்பு விகிதத்தில் 60 வீத வீழ்ச்சியையும் காட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/154-million-people-served-by-vaccine-in-50-years-1715324039
  5. Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 03:45 PM (நா.தனுஜா) இலங்கையில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80 ஆம் பிரிவின்படி 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை மற்றும் 99 ஆம் பிரிவின்படி கடந்த ஆண்டுக்கான மத்திய வங்கியின் நிதியியல் கூற்றுக்கள் என்பன அண்மையில் வெளியிடப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது இருதரப்புத் தொடர்புகள், கடன்மறுசீரமைப்பு மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அதில் இலங்கையில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் நிலையில், சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அவசியம் குறித்து தான் மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183169
  6. LIVE 59th Match (N), Ahmedabad, May 10, 2024, Indian Premier League Gujarat Titans 231/3 Chennai Super Kings (2.5/20 ov, T:232) 10/3 CSK need 222 runs in 103 balls. Current RR: 3.52 • Required RR: 12.93 Win Probability:CSK 1.35% • GT 98.65% அண்ணை படுத்தே விட்டார்கள்.
  7. யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்றவரே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர். காணி உறுதி குறித்த நபர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமையை கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://tamilwin.com/article/land-scammer-in-jaffna-police-arrests-1715302405
  8. பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லவுள்ள புலம்பெயர் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா 10 MAY, 2024 | 01:11 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என்கிறார் பாரிஸில் வாழ்ந்துவரும் பேக்கரி உரிமையாளரும் புலம்பெயர் இலங்கைத் தமிழருமான தர்ஷன் செல்வராஜா. பிரான்ஸ் தேசத்தின் பல்வேறு பாகங்களுக்கு தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படவுள்ள ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 11,000 பிரான்ஸ் பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார். ஆயிரக்கணக்கானவர்களில் தானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்ட்டதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார். 'என்னைப் பொறுத்தமட்டில் இது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பாரிஸில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் முதலாவது இலங்கையராக நான் இருக்கக்கூடும் என எண்ணுகிறேன். ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இதனை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். என்னைத் தேர்ந்தெடுத்த பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் (அமேலி ஒளடியா கெஸ்டீரா) உட்பட தெரிவுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார் தர்ஷன் செல்வராஜா. 'பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை எப்போது ஏந்திச் செல்வேன் என இன்னும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது பிரான்ஸில் வலம்வரும் ஒலிம்பிக் சுடர் ஜூலை மாதம் பாரிஸுக்கு வருகை தந்த பின்னர் எனக்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் கிடைக்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/183147
  9. அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க இலங்கை அரசு அனுமதி - சர்ச்சை ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் 20 வருடங்களுக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தியின் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட விலைமனுக் கோரலுக்கு கடந்த 7-ஆம் தேதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார். அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 2030-ஆம் ஆண்டளவில், இலங்கையின் மொத்த மின் உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதே இலங்கையின் இலக்காகும். டெண்டரில் உள்ள விவரங்கள் என்ன? 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட விலை மனுக்கோரலுக்கு (டெண்டர்) அமைய, எதிர்வரும் 20 வருடங்களுக்கு அந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தில், ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு (கிலோவாட் ஹவர்) 8.26 அமெரிக்க டாலர் (அந்நிய செலாவணிக்கு அமையவாக இலங்கை ரூபாவில் செலுத்தும் நிபந்தனையின் பிரகாரம்) என்ற இறுதிக் கட்டணத்தில் ஏற்றுக்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 484 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானி திட்டம் இலங்கையில் சர்ச்சை ஆவது ஏன்? அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு இலங்கையில் சூழலியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் பின்னணியிலேயே, இந்த அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு வருகைதரும் வலசைப் பறவைகளுக்கு இதனூடாக பாதிப்பு ஏற்படும் என சூழலியலாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதுடன், ஆண்டொன்றிற்கு 1.5 கோடி பறவைகள் வருவதாக சூழலியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். இலங்கைக்குள் வலசைப் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலாக மன்னார் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், வடமாகாணத்திற்கு உரித்தான மன்னார் தீவானது, புவிசார் அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்கப் பகுதியாகும். இது மீனவ சமூகம் வாழும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு காரணமாக இலங்கையின் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது, பறவைகளுக்கு மாத்திரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டம் கிடையாது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை, வலசைப் பறவைகள் இலங்கைக்குள் வருகைதராத காலப் பகுதியில் சுற்றுசூழல் அறிக்கை தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க இலங்கை அரச நிறுவனங்கள் செயற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ரமணி எல்லேபொல தலைமையிலான விசேட குழுவினாலேயே இந்த திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பான கணிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான அறிக்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரகோன், மூலிகைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கையை கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்க, நீர் நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கையை டி.ஏ.ஜே.ரன்வல ஆகிய புத்திஜீவிகள் தயாரித்திருந்தனர். இந்த அறிக்கைகளை தயாரிப்பதற்காக 14 வல்லுநர்கள் அடங்கிய குழாம் செயற்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. மக்களிடமிருந்து பெற்று கருத்துக்களுக்கு என்ன ஆனது? அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையில் தீர்மானம் எட்டியிருந்தது. இது தொடர்பான எழுத்துமூல கருத்துக்களை முன்வைக்க மார்ச் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த விஷயம் தொடர்பில் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பிபிசி, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் சுற்றுச்சூழல் முகாமைத்துவ மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் துணசி இயக்குநர் நாயகம் என்.எஸ்.கமகேவிடம் வினவியது. ''இந்தத் திட்டத்தின் ஆதரவாளராகச் செயற்படும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (Sri Lanka Sustainable Energy Authority), தொடர்புடைய சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை தயாரித்து எங்களிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையைப் படித்து, அதன் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை மீண்டும் மேம்படுத்திய பிறகு, பொதுமக்களின் கருத்துக்களைப் பெற நாங்கள் தீர்மானித்தோம்," என்றார். "அதன் பிரகாரம், எமக்குக் கிடைத்த பொதுமக்கள் கருத்துக்களையும், அவை தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களையும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இதுவரை அந்த விளக்கங்கள் எமக்கு கிடைக்கவில்லை. அந்த விளக்கங்களைப் பெற்ற பிறகு, தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள விதிகளின்படி இந்த அறிக்கையை கையாள்வோம் என்று நம்புகிறோம்," என என்.எஸ்.கமகே தெரிவித்தார். எதிர்காலத்தில் என்ன நடக்கும்? மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் நிறுவப்படவுள்ள காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அதானி கிரீன் எனர்ஜி சமர்ப்பித்த விலை மனுக்கோரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்காக பிபிசி சிங்கள சேவை இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோனிடம் வினவியது. இதற்கு பதிலளித்த மின்சார சபைத் தலைவர், இது தொடர்பான உரிய ஆவணங்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷா ஜயவர்தனவை தொடர்பு கொள்ள பிபிசி சிங்கள சேவை முயற்சித்த போதிலும் செயலாளரிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் பேசுபொருளான அதானி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தின் கூட்டு அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் அதானி குழுமத்துடன் 2021-ஆம் ஆண்டு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பின்னர் இலங்கை மக்கள் மத்தியில் கௌதம் அதானியின் பெயர் அதிகமாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மன்னாரில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை மக்கள் எதிர்ப்புக்களை ஆரம்பித்திருந்தனர். அதானி நிறுவனத்தின் உரிமையாளரான கௌதம் அதானி 1961-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை சாந்திலால் அதானி, தொழிலதிபராவார். புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்வது மட்டுமே தனக்கு பலன் அளிக்காது என்பதை உணர்ந்த கௌதம் அதானி, வணிகவியல் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். தமது குடும்ப வர்த்தகமான ஆடை வர்த்தகத்தை தனது தொழிலாக ஏற்றுக்கொள்ளாது, வைரம் தொடர்பான வர்த்தகத்தை தேர்வு செய்ததை அவர் தனது இரண்டாவது செயற்பாடாக முன்னெடுத்தார். இதையடுத்து, தனது 20-வது வயதில், கௌதம் அதானி, வீட்டை விட்டு வெளியேறி மும்பை நோக்கிப் புறப்பட்டார். அங்கு வைர வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற சவேரி மார்க்கெட்டில் பணிப் புரிந்தார். இரண்டு - மூன்று ஆண்டுகளில், அவர் வைரங்களை வரிசைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அதன்பின்னர் தனது சொந்த வைரத் தரகுத் தொழிலை ஆரம்பித்தார். அதன் பின்னர் சுமார் மூன்றாண்டுகளுக்குள் கௌதம் அதானி வைர வர்த்தகத்தில் கோடீஸ்வரர்கள் வரிசையில் இணைந்துக்கொண்டார். 30 வயதிற்குள் கௌதம் அதானி கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்வாங்கப்பட்டார். 1991-ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்குள் கௌத்தம் அதானியின் முழு சொத்து மதிப்பு 78.4 பில்லியன் அமெரிக்க டாலர் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான கௌதம் அதானியின் நெருங்கிய உறவு, தேசிய அளவிலான பல முக்கியமான திட்டங்களில் அவர் பங்கேற்பதற்கு வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. மேலும், அவரது எரிசக்தி மற்றும் சுரங்க நிறுவனங்கள் வணிகத்திற்காக அரசாங்க உறவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சுற்றுச்சூழல் விரோதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. https://www.bbc.com/tamil/articles/cd1v0l41gdpo
  10. எங்கள் விரல் நகங்களை பயன்படுத்தியும் போரிடுவோம், தனியாகவும் போரிடுவோம் - இஸ்ரேல் பிரதமர் 10 MAY, 2024 | 01:45 PM இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்துள்ள பெஞ்சமின் நெட்டயன்யாகு இதனை தெரிவித்துள்ளார். தனித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டால் நாங்கள் தனித்து நிற்போம் தேவைப்பட்டால் எங்கள் விரல் நகங்களையும் பயன்படுத்தி போரிடுவோம் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது 76 வது சுதந்திரதினத்தை நெருங்குகின்றது என தெரிவித்துள்ள அவர் 1948ம் ஆண்டு யுத்தத்தின்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு எதிராக ஆயுததடை விதிக்கப்பட்டிருந்தது, எங்களிடையே உள்ள வலிமை வீரம் ஒற்றுமையுடன் நாங்கள் வெற்றிபெற்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் அனேகவிடயங்களில் நாங்கள் பொதுவான கருத்தை கொண்டிருந்தோம், சில விடயங்கள் குறித்து கருத்து முரண்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் கருத்து வேறுபாடுகளிற்கு தீர்வை காணமுடிந்தது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183126
  11. பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. வெள்ளப் பெருக்கில் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 754 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் தற்போது கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301346
  12. தமிழகத்தில் சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு 10 MAY, 2024 | 01:40 PM சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 14 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன்(55) செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை நடத்திவருகிறார். இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில்இ 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். இந்த ஆலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து நேரிட்டது. இதில் 7 அறைகள் தரைமட்டமாகின. மேலும் 7 அறைகள் சேதமடைந்தன. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயைஅணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு உடல் மீட்பு: இதற்கிடையில் நேற்று இரவு மத்திய சேனையைச் சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி(35) என்பவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கூறும்போது விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மூலம் பட்டாசு ஆலை செயல்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/183114
  13. Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 04:46 PM வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக சிறப்பாக இடம்பெற்ற நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை விசேட அம்சமாகும். நுங்கு திருவிழாவானது பனை மரத்தின் தேவை குறித்தும் பனை மரத்தினால் பெறப்பட கூடிய பயன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நுங்கு திருவிழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/183172
  14. Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 04:38 PM தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராக தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் வரவுள்ள தேர்தல் தொடர்பான முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது. இதன்போது, தேர்தலில் எமது கட்சியின் வாக்குப்பலத்தை அதிகரிப்பு செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகிறார்கள். இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்படுத்தியிருந்தன. எனினும், நடைமுறை சாத்தியமான சிந்தனையோ, சரியான வேலைத்திட்டத்தினை முன்வைத்து அதற்காக உழைக்கும் குணாம்சமோ இல்லாதவர்கள், எமது மக்களை உணர்ச்சியூட்டும் தோற்றுப்போன வழிமுறையையே மீண்டும் கையில் எடுத்து தம்மை அரசியலில் நிலைநிறுத்த முனைகிறார்கள். ஆனால், ஈ.பி.டி.பி. ஆகிய நாங்கள், எமது மக்களுக்கு சரியான வழியை காட்டுகின்ற தனித்துவமான தரப்பு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதுடன் தேர்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினைகள் முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான மூன்று 'அ' க்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க கூடிய ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி மட்டும் தான் இருக்கின்றது. இதில் அனைவரும் தெளிவாக இருப்பதும் அவசியம். கடந்த 34 வருடங்களாக பல்வேறு விடயங்களில் அவை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு நாம் கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது. எனவே, அடுத்த வரவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களை வெற்றியின் கதானாயகர்களாக அடையாளப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகளும் மக்களுக்கான தெளிவுபடுத்தல்களும் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கான வழியை பிரகாசமாக்க முடியும்" என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183167
  15. யாழில் சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சகோதரி 10 MAY, 2024 | 04:58 PM யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில், சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தாய், தந்தையை இழந்த பின்னர் சகோதரியுடன் வடமராட்சி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் சகோதரி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து சகோதரன் காப்பகத்தில் இருந்த தனது சகோதரியை வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் அழைத்து வந்துள்ளார். ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையில் சகோதரிக்கு போதை ஊசியினை செலுத்தியும் மதுபானம் உள்ளிட்டவற்றை கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். ஏப்ரல் மாதம் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து மீண்டும் காப்பகத்தில் அவரை சேர்த்துள்ளார். பின்னர் இந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டடு வந்தமையையும் , சித்திரவதைகளுக்கு உள்ளானமையும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தில் , தன்னை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்றே வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார். பொலிஸாரின் தொடர் விசாரணைகளின் போது , சம்பவத்துடன் பெண்ணின் சகோதரனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தன்னை சகோதரனே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாகவும், வேறு நபர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும், சகோதரன் மீதான பயத்திலேயே முன்னர் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/183178
  16. ரஷ்யா - உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு 10 MAY, 2024 | 01:10 PM (எம்.மனோசித்ரா) ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களைச் சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்ய - உக்ரேன் போருக்கு சம்பந்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள் தொடர்பில், அவர்கள் சென்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொலைபேசி எண் 0112 441 146 ஊடாக பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் நபர்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு நபர்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அவ்விவரங்களைத் தெரிவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படுவதனால், இது தொடர்பில் அனைவரும் விசேட கவனம் செலுத்தி, தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/183148
  17. Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 01:20 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால், பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதேவேளை, வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183142
  18. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 192 பெண்களும் அடங்குவர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். அதில் 26 சதவீதத்தினர் இந்த காலகட்டத்தில் மதுசாரப் பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 சதவீதத்தினர் மதுசாரப் பாவனை அதிகரித்திருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர். புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்களுக்கு மதுசாரத்தின் விலை அதிகரிப்பே காரணம் என ஆய்வில் பங்கேற்ற 71.5 சதவீதமானோர் தகவல் வழங்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இது சமூகத்தில் சிறந்த போக்கை எடுத்துக்காட்டுவதாகவும், சுகாதாரத்துறையின் அதிக செலவினத்தை தவிர்க்க முடியும் எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. https://thinakkural.lk/article/301303
  19. இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/301288
  20. ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டது ஏன்?; அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பது என்ன? Published By: RAJEEBAN 10 MAY, 2024 | 12:59 PM பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்த அரசியல் கலந்துரையாடலை முறியடிக்கும் ஒரு நடவடிக்கையாகவே தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது என அரசியல் வட்டாரங்கள் கருதுவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த கட்ட நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி ஆராய்வார் என தகவல்கள் வெளியாகின்றன என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. எனினும் நேற்யை அறிவிப்பில் தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சட்டவிதிகளை அறிவித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள டெய்லிமிரர் பொதுத்தேர்தல்கள் குறித்த இரகசிய திட்டங்களை முறியடிக்கவே தேர்தல்கள் இடம்பெற வேண்டிய காலப்பகுதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் இடம்பெற்றால் வளங்கள் அற்ற நிலைக்கு தள்ளப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு கருதுகின்ற அதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பு எதனையும் நிராகரிக்க முடியாது சட்டத்தில் அதற்கு இடமில்லை என கருதுகின்றது எனவும் டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/183144
  21. Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 12:24 PM மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு நீதிமன்றத்தினால் ஆறு மாதகால சிறைத்தண்டனை விதித்ததோடு, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்க வாகனம் ஒன்றில் சென்ற மூவர், வீட்டில் தனித்திருந்த மூதாட்டியின் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், மூவரையும் மன்று குற்றவாளியாக கண்டு, மூவருக்கும் தலா 06 மாத கால சிறைத்தண்டனை விதித்து, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு குற்றவாளிகளான மூவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183140
  22. பட மூலாதாரம்,SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், மெர்லின் தாமஸ் மற்றும் லார எல் கிபாலி பதவி, பிபிசி வெரிஃபை மற்றும் பிபிசி ஐ புலனாய்வுகள் 50 நிமிடங்களுக்கு முன்னர் பல மேற்கத்திய நிறுவனங்களால் கட்டப்படும் ஒரு பாலைவன நகரத்திற்காக நிலத்தை கையகப்படுத்த மக்களை கொல்லவும் செய்யலாம் என சௌதி அரேபியாவின் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர், என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். நியோம் சுற்றுச்சூழல் திட்டத்தின் (Neom eco-project) ஒரு பகுதியான 'தி லைன்' (The Line) எனும் திட்டத்துக்கு வழிவகை செய்வதற்காக சவூதியில் உள்ள ஒரு பழங்குடியின மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்னல் ரபீஹ் அலெனேசி கூறுகிறார். அவர்களில் ஒருவர் வெளியேற்றத்திற்கு எதிராக போராடியதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார். சௌதி அரசும் நியோம் நிர்வாகமும் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. நியோம், சௌதி அரேபியா சுமார் 42 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பில் (500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் பிராந்தியம். இது சௌதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது அந்த ராஜ்யத்தின் பொருளாதாரத்தை எண்ணெயிலிருந்து விலக்கி பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் முதன்மைத் திட்டமான 'தி லைன்', வெறும் 200மீ (656 அடி) அகலமும் 170கி.மீ. நீளமும் கொண்ட கார்கள் செல்லாத நகரமாகத் திகழ்கிறது. இருப்பினும் இந்தத் திட்டத்தின் 2.4கி.மீ. மட்டுமே 2030-க்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழிக்கப்படும் கிராமங்கள் நியோமின் கட்டுமானத்தில் பல உலகளாவிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் பல பிரிட்டிஷ் நிறுவனங்களும் அடங்கும். நியோம் கட்டப்பட்டு வரும் பகுதியை, சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 'ஒரு வெற்று நிலம்' என்று விவரிக்கிறார். ஆனால் அவரது அரசாங்கத்தின் படி 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தை இயங்கு தளமாகக்கொண்ட மனித உரிமைகள் குழுவான ALQST இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இடிக்கப்பட்ட கிராமங்களில் அல்-குரைபா, சர்மா மற்றும் கயால் ஆகிய மூன்று கிராமங்களின் செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்துள்ளது. வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு சவூதியிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடிபுகுந்த கர்னல் அல்-எனேசி, 'தி லைனுக்கு' தெற்கே 4.5கி.மீ. தொலைவில் உள்ள அல்-குரைபா எனும் இடத்தில் நிலத்தைக் கையகப்படுத்த தனக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறுகிறார். இந்த கிராமங்களில் பெரும்பாலும் ஹுவைதாட் பழங்குடியினர் வசிக்கின்றனர், அவர்கள் நாட்டின் வடமேற்கில் உள்ள தபூக் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட்ட உத்தரவில் ஹுவைதாட் இனம் 'பல கிளர்ச்சியாளர்களால்' உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 'வெளியேற்றப்படுவதை எதிர்க்கும் எவரும் கொல்லப்பட வேண்டும், எனவே அது அவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கு எதிராக கொடிய வன்முறையைப் பயன்படுத்த உரிமம் வழங்கியது,' என்றும் அவர் கூறினார். தனது உடல்நிலை சரியில்லை என்று பொய்சொல்லி அவர் இந்தப் பணியிலிருந்து விலகினார், என்று அவர் பிபிசியிடம் கூறினார், ஆனால் அந்தப் பணி செய்து முடிக்கப்பட்டது. படக்குறிப்பு,கர்னல் அல்-எனேசி எதிர்த்ததற்காகக் கொல்லப்பட்டவர் அப்துல் ரஹீம் அல்-ஹுவைதி எனும் நபர் தனது சொத்துக்களை மதிப்பிடுவதற்கு நிலப்பதிவுக் குழுவை அனுமதிக்க மறுத்துவிட்டார். அதற்கு அடுத்த நாள், அனுமதிப் பணியின் போது சௌதி அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு, வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அந்த நேரத்தில் சௌதி அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், அல்-ஹுவைதி பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்கள் பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா-வும் அவர் வெளியேற்றத்தை எதிர்த்ததற்காக கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர். கொடிய வன்முறை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது பற்றிய கர்னல் அலெனேசியின் கருத்துகளை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை. ஆனால் சௌதி உளவுத்துறை இயக்குநரகத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவர், கர்னலின் சாட்சியம் பொதுவாக இதுபோன்ற பணிகள் பற்றி அவர்கள் அறிந்தவற்றுடன் ஒத்துப்போகிறது என்றார். பணியை வழிநடத்த கர்னலின் பணிமூப்பு நிலை பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஐ.நா மற்றும் ALQST-இன் படி, குறைந்தபட்சம் 47 கிராமவாசிகள் வெளியேற்றத்தை எதிர்த்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் பலர்மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. அவர்களில் 40 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். அவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ALQST கூறுகிறது. அல்-ஹுவைதியின் மரணத்திற்கு சமூக ஊடகங்களில் பகிரங்கமாக இரங்கல் தெரிவித்ததற்காக பலர் கைது செய்யப்பட்டதாக ALQST குழு தெரிவித்துள்ளது. 'தி லைன்' திட்டத்திற்காக சொந்த இடத்தைவிட்டுச் செல்ல வேண்டியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ALQST-இன் படி, கொடுக்கப்பட்ட இழப்பீடு வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை விட மிகக் குறைவாக உள்ளது. கர்னல் அல்-எனேசியின் கூற்றுப்படி, "[நியோம்] முகமது பின் சல்மானின் மிக முக்கியமான யோசனையாகும். அதனால்தான் அவர் ஹுவைதாட் விவகாரத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார்." 'ஒடுக்கப்படும் மக்கள்' நியோமின் பனிச்சறுக்கு திட்டத்தின் முன்னாள் மூத்த நிர்வாகியான ஆண்டி விர்த், அப்பணியில் சேர்வதற்கு 2020-இல் தனது சொந்த நாடான அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அப்துல் ரஹீம் அல்-ஹுவைதி கொல்லப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். வெளியேற்றங்கள் குறித்து தனது முதலாளிகளிடம் பலமுறை கேட்டதாக ஆண்டி விர்த் கூறுகிறார், ஆனால் கிடைத்த பதில்களில் அவர் திருப்தி அடையவில்லை. "இந்த மக்கள் மீது பயங்கரமான ஏதோவொன்று சுமத்தப்பட்டுள்ளது என்று தோன்ரறியது. நீங்கள் முன்னேறுவதற்காக அவர்களின் தொண்டையை உங்கள் பூட் கால்களால் மிதிக்காதீர்கள்," என்று அவர் கூறினார். அவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள், அதன் நிர்வாகத்தின் மீது வெறுப்படைந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டில் 'தி லைனுக்கான' ரூ.834 கோடி செலவில் (100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கட்டமைக்கப்படும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து விலகிய ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மால்கம் ஆவ்-உம் மிகவும் முக்கியமானவர். "அந்தப் பகுதியில் வசிக்கும் சில மேல்தட்டு பணக்கார நபர்களுக்கு இது நன்றாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு?" என்று கேட்கிறார் சோலார் வாட்டர் பிஎல்சி-யின் தலைமை நிர்வாக அதிகாரி மால்கம் ஆவ். உள்ளூர் மக்கள் அந்தப் பகுதியை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள், அதனால் அவர்கள் மதிப்புமிக்கச் சொத்துக்களாகப் பார்க்கப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார். "அவர்களை அகற்றாமல், மேம்படுத்த, உருவாக்க, மீட்டுருவாக்கம் செய்ய, நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டும்," என்றார். 'இது இரு போர்' இடமாற்றம் செய்யப்பட்ட கிராம மக்கள், வெளிநாட்டு ஊடகங்களுடன் பேசினால் அது தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று அஞ்சி கருத்து தெரிவிக்க மிகவும் தயங்கினார்கள். ஆனால் 'சௌதி விஷன் 2030'-இன் வேறொரு திட்டத்திற்காக வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களிடம் பேசினோம். மேற்கு சௌதி அரேபிய நகரமான ஜெத்தா மத்திய திட்டத்திற்காக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது ஒரு நாடக அரங்கம், விளையாட்டு மாவட்டம் மற்றும் உயர்தர வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பிரிவுகளை உள்ளடக்கியது. நாதிர் ஹிஜாஸி [அவரது உண்மையான பெயர் அல்ல] ஆஸிஸியா-வில் வளர்ந்தவர். இந்தத் திட்டத்திற்காக இடிக்கப்பட்ட சுமார் 63 சுற்றுப்புறங்களில் இதுவும் ஒன்று. அவரது தந்தையின் வீடு 2021-இல் இடிக்கப்பட்டது. அந்த முடிவு அவருக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் முன்பே தெரிவிக்கப்பட்டது. ஹிஜாஸி கூறுகையில், தனது முன்னாள் வசிப்பிடத்தின் புகைப்படங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்றார். அவை போர் மண்டலத்தை நினைவூட்டியதாகக் கூறினார். "அவர்கள் மக்கள் மீது ஒரு போரை நடத்துகிறார்கள், எங்கள் அடையாளங்களின் மீது ஒரு போரை நடத்துகிறார்கள்," என்றார். அச்சத்தில் இருக்கும் மக்கள் கடந்த ஆண்டு ஜெத்தா இடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களைப் பற்றி சௌதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஒருவர் வெளியேற்றத்தை எதிர்த்ததற்காகவும், மற்றவர் தனது சமூக ஊடகங்களில் எதிர்ப்பு ஓவியங்களை வெளியிட்டதற்காகவும் கைது செயப்பட்டனர். மேலும் ஜெத்தாவின் தஹ்பான் மத்திய சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் ஒருவர், மேலும் 15 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் கதைகளைக் கேட்டதாகக் கூறினார். அது, இடிப்பதாக முடிவுசெய்யப்பட்ட ஒரு சுற்றுப்புறத்தில் பிரியாவிடை கூட்டத்தை நடத்தியதற்காக எனக் கூறப்பட்டது. சௌதி சிறைகளுக்குள் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது மிகச் சிரமம். அதனால், இதை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை. ALQST அமைப்பு, ஜெத்தா சுற்றுப்புறங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 35 பேரிடம் பேசியது. அவர்களில் யாரும், உள்ளூர் சட்டத்தின்படி இழப்பீடு அல்லது போதுமான எச்சரிக்கையைப் பெற்றதாக கூறவில்லை. மேலும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கைது அச்சுறுத்தலின் கீழ் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறினர். கர்னல் அல்-எனேசி இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார். ஆனால் அவரது பாதுகாப்பிற்காக இன்னும் பயப்படுகிறார். சௌதியின் உள்துறை அமைச்சருடன் லண்டனின் சௌதி தூதரகத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டால், தனக்கு சுமார் ரூ.42 கோடி (5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும் என்று ஒரு உளவுத்துறை அதிகாரி தன்னிடம் கூறியதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்-எனேசி மறுத்துவிட்டார். பிபிசி இதுபற்றி சௌதி அரசாங்கத்திடம் கேட்டது ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதற்கு முன்னரும் வெளிநாட்டில் வாழும் சௌதி அரசாங்கத்தின் விமர்சகர்கள் மீதான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருக்கும் சௌதி தூதரகத்திற்குள் வைத்து, சௌதி முகவர்களால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை வழக்கு இதில் முக்கியமானது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட அவரது கொலைக்கு முஹம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால் பட்டத்து இளவரசர் இதனை மறுத்துள்ளார். ஆனால் சௌதியின் எதிர்கால நியோம் நகரம் தொடர்பான உத்தரவுகளை மீறும் தனது முடிவைப் பற்றி கர்னல் அல்-எனேசிக்கு வருத்தம் இல்லை. "முகமது பின் சல்மான் நியோம் நகரம் கட்டபடுவதை யாரும் எதுவும் தடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எனது சொந்த மக்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் அவர்கள் எனக்கு உத்தரவிடுவார்களோ என்று நான் அதிகம் கவலைப்பட்டேன்," என்கிறார் அவர். கூடுதல் செய்தி சேகரிப்பு - எர்வான் ரிவால்ட். https://www.bbc.com/tamil/articles/c2x3yj5lx53o
  23. ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்குக் கடத்தும் நடவடிக்கை தொடர்பில் மேஜர் ஜெனரல் ஒருவர் கைது! 10 MAY, 2024 | 12:22 PM ரஷ்ய இராணுவத்தில் வேலை பெற்ற தருவதாகக் கூறி இலங்கை இராணுவ வீரர்களைக் கடத்தியதாகக் கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் என்பதுடன் இவர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது, இராணுவ தலைமையகத்திலிருந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் தகவல் அடங்கிய பட்டியலை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்ததுள்ளது . இந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் தகவல் அடங்கிய பட்டியலைப் பயன்படுத்தி இலங்கை இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்குக் கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183137
  24. Published By: PRIYATHARSHAN 10 MAY, 2024 | 11:05 AM தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ, இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை இன்று வெள்ளிக்கிழமை (10) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேற்கொள்கிறார். டொனால்ட் லூவின் 3 நாடுகளுக்கான விஜயமானது ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதுடன் சுதந்திரமான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் அமையவுள்ளது. இந்தியாவுக்கு விஜயம் செய்யும் டொனால்ட் லூ, தென்னிந்தியாவில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் சென்னையிலுள்ள துணைத் தூதரக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கையுடனான அமெரிக்காவின் பங்களிப்பை ஆழப்படுத்தும் நோக்கில் கொழும்புக்கு வருகைதரும், டொனால்ட் லூ, முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்காவின் ஆதரவையும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை வலுவான சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார். இலங்கை வியஜத்தின் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யும் துணை செயலர் டொனால்ட் லூ, அங்கு அந்நாட்டின் அரச அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வது மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவது உட்பட, அமெரிக்க - பங்களாதேஷ் நாடுகளுக்கான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடவுள்ளார். https://www.virakesari.lk/article/183123
  25. பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் 10 மே 2024, 07:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணத்திலேயே வளர்ந்த ஒருவர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் தடவையாகும். இருபதுக்கு இருபது உலகக் கோப்பை இலங்கை அணி ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக சரித் அசலங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், குசல் மென்டீஸ், பெத்தும் நிஷாங்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், கமிது மென்டீஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மகீஸ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளனர். இலங்ங்கை அணியின் மேலதிக வீரர்களாக அசித்த பெர்ணான்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஷ மற்றும் ஜனித்த லியனகே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் விஜயகாந்த் வியாஸ்காந்த் யார்? யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி பிறந்தார் விஜயகாந்த் வியாஸ்காந்த். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ளார். சுழல் பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த், தனது பந்து வீச்சின் ஊடாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனூடாக இலங்கையில் நடாத்தப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 2020ம் ஆண்டு விளையாடினார். இதுவே அவரது முதலாவது இருபதுக்கு இருபது போட்டியாக அமைந்திருந்தது. அதன்பின்னர் 2023ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் சட்டோகிரம் சாலஞ்சர்சு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார். விஜயகாந்த் வியாஸ்காந்த், 2024 சர்வதேச லீக் இருபதுக்கு இருபது சுற்றில் எம்ஐ எமிரேட்சு அணிக்காக விளையாடி, தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்திருந்தார். அதனையடுத்து, இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கான சந்தர்ப்பம் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு கிடைத்திருந்தது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐத்ராபாத் அணிக்காக விஜயகாந்த் வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டு, விளையாடி வருகின்றார். சன்ரைசஸ் ஐத்ராபாத் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வனிந்து ஹசரங்க உபாதைக்குள்ளாகி விலகியதால் அந்த இடத்தை விஜயகாந்த் வியாஸ்காந்த் நிரப்பியுள்ளார். இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர்கள் பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் மகாதேவன் சதாசிவம் உள்ளிட்டோர் விளையாடியிருந்த போதிலும், இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப் பெற்றதன் பின்னர் சில வீரர்களே விளையாடியுள்ளனர். இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச ரீதியில் பல சாதனைகளை படைத்த தமிழ் வீரராக முத்தையா முரளிதரன் காணப்படுகின்றார். அத்துடன், 1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வினோதன் ஜோன் விளையாடியுள்ளார். மேலும், ரசல் அர்னால்ட் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றுமொரு தமிழ் வீரராக காணப்படுகின்றார். முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வினோதன் ஜோன் மற்றும் ரசல் அர்னால்ட் ஆகியோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என கூறப்படுகின்றது. எனினும், யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தில் வளர்ந்து, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cq5n7098gzyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.