Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 09 MAY, 2024 | 02:37 AM உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் புதன்கிழமை (8) கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம் மகஜர்களை கையளித்தார். அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பிற்கும் பாசத்திற்கும் இனிய எமது தமிழக மீனவ தொப்புக்கொடி உறவுகளே, மற்றும் வடமாகாண யாழ்ப்பாண மீனவ உறவுகளே. உங்கள் அன்பின் மாதகல் N.V.சுப்பிரமணியம் ஆகிய நான் வேண்டி நிற்பது, இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இரண்டும் எமக்குள் செயற்கை முறையில் விரோதம், குரோதம் மற்றும் பிரிவை ஏற்படுத்தி எம்மை வைத்துப் பந்தாடுகின்றனர். இதை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் வேண்டும். எமது வயிற்றுப் பசியே பந்தாக மாறி இருக்கின்றது. 1) அழிவு என்று தெரிந்துகொண்டே நாம் கடல் வளத்தை முற்றாக அழிக்கின்றோம். 2) எமக்குத் தேவையான மீன்களை எடுத்துக்கொண்டு மிஞ்சுகின்ற மீன் குஞ்சுகளை சாகடித்து மீன் பெருக்கத்தையும் குறைக்கின்றோம். 3) சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை சூறையாடி சிறு மீனவர்களின் வயிற்றில் அடிக்கின்றோம். 4) சிறு மீனவனுடைய கடல் உபகரணங்களை ஈவு இரக்கமில்லாமல் அறுத்து நாசம் செய்து அவர்களை பட்டினிச்சாவிற்கு அழைத்துச் செல்கின்றோம். இவை அனைத்தும் தெரிந்துகொண்டே சிறு மீனவனுக்கு செய்கின்ற கொடுமைகளாகும். இப்படிப்பட்ட கொடுமைகளை செய்வதுமல்லாமல் அனைத்தையும் அழித்தால் எதிர்காலத்தில் 1) எமது வயிற்றுப் பசியைப் போக்க இந்த கடலை மட்டுமே நம்பி வாழ்கின்ற நாம் எங்கு போவது. 2) நீங்கள் தான் எங்கு போவது? 3)வளங்களை அழித்துவிட்டு எமது வருங்கால சந்ததிக்கு எதைவிட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்? எனவே விரோதங்களை விட்டு, குரோதங்களை விட்டு கொஞ்சம் உங்கள் மனதை கீழே இறக்கி சாந்தப்படுத்திக்கொண்டு சற்று எமது சந்ததிக்காக சிந்தியுங்கள். "விசைப்படகு கொண்டு வீரியமாய் தொழில் செய்தால் விளைவு அழிவைத்தவிர வேறொன்றுமில்லை." எனவே இந்த பேரழிவைத் தருகின்ற இழுவை மடித்தொழிலைவிட்டு விலகி மாற்று முறைத் தொழிலுக்கு வாருங்கள். மாற்றுமுறைத் (சட்டத்திற்குட்பட்ட) தொழிலை மேற்கொண்டால் இருநாட்டு தமிழ் மீனவனுடைய வாழ்வு சிறக்கும். வயிற்றுப் பசிபோகும். நாம் நினைத்தபடி எமது பின் சந்ததியையும் காப்பாற்ற முடியும். அத்தோடு தமிழக மற்றும் யாழ்ப்பாண மீனவர்களை மோதவைத்து வேடிக்கை பார்க்கின்ற நரித் தந்திரோபாய அரசுகளின் திட்டம் முறியடிக்கப்படும். எமது தொப்புள்கொடி உறவுகள் பலப்படும். உடன் பிறவா சகோதரர்களினுடைய அன்பு, பாசம் பெருக்கும். எம் அன்பிற்கினிய சகோதரர்களாக வாழ முடியும். 1) கடல் வளங்களை அழிக்கின்ற 2)வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற மீன் பெருக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கின்ற 3) தொழில் உபகரணங்களுக்கு நாசம் ஏற்படுத்தி அதனூடாக எமது அன்பிற்கும், பாசத்திற்கும் பேரிடியாக நிற்கின்ற இந்த இழுவைமடித் தொழிலை விட்டு விலகி மாற்று முறைத் தொழிலுக்கு வரும்படி எனது அன்பிற்கினிய தமிழக மற்றும் வடமாகாண தமிழ் மீனவ உறவுகளை அன்பாக வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/183019
  2. வெளிநாட்டு அரச முறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் - அலி சப்ரி 08 MAY, 2024 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டு அரச முறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும். இதன் பின்னர் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்டது என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (08) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது உலகில் உள்ள சகல நாடுகளுடனும் பிளவுபடாத வெளிவிவகார கொள்கையுடன் இணக்கமாக செயற்படுவதே இலங்கையின் பிரதான எதிர்பார்ப்பாகும். தேசிய வளங்களை பாதுகாத்துக் கொண்டு அதன் உச்ச பயனை பெற்றுக் கொள்வற்கு பிளவடையாத வகையில் வெளிவிவகார கொள்கையை செயற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் ஜனாதிபதி அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இவரது வருகையின் பின்னர் இலங்கையின் வெளிவிவகார கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டத்தை ஈரான் ஜனாதிபதி திறந்துவைத்தார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தேசிய மின்கட்டமைப்புக்கு 120 மெகாவாட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது. நீர் மின்னுற்பத்தி விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜூலை மாதமளவில் மின்கட்டணத்தை குறைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்த இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க ஈரான் அவதானம் செலுத்தியுள்ளது. இதனூடாக இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முன்னேற்றமடையும். அண்மையில் சவூதி அரேபியாவில் இடம்பெற்ற 'உலக பொருளாதார பேரவை' மாநாட்டில் கலந்துகொண்டேன். இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து அந்நாட்டின் வெளிவிவகாரம், முதலீடு மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். இதன் பிரதிபலனாக சவூதி அரேபியாவுடன் 'முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம்' கைச்சாத்திட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயத்தின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜப்பான் தலைமைத்துவம் வகிப்பது இலங்கைக்கு சாதகமாக உள்ளது. கடன் மறுசீரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு நிறைவுபெற்றதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்ட பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு அரச முறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும். இதன் பின்னர் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டு விட்டது என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்றார். https://www.virakesari.lk/article/183008
  3. மறுசீரமைப்பின் மூலமே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் - நிமல் சிறிபால டி சில்வா 08 MAY, 2024 | 08:29 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை மட்டுமன்றி உலகில் செல்வந்த நாடுகளிலும் விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குகின்றன. மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அத்துடன் விமான சேவை ஊழியர்கள் 470 பேர் ஒரே தடவையில் தமது பதவியை இராஜினாமா செய்ததாலே 791 பேரை புதிதாக இணைத்துக் கொள்ள நேர்ந்தது எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி. ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பிரதமரின் சார்பில் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்: ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு கடந்த வருடத்திலேயே அதிகமான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக ஹேஷா விதானகே எம்பி தமது கேள்வியின் போது சுட்டிக்காட்டினார். இவ்வாறு 791 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். எனினும் கடந்த வருடம் 470 ஊழியர்கள் தமது பதவியை ராஜினாமா செய்து சென்றுள்ள காரணத்தாலேயே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இவ்வாறு பெரும் தொகையானோர் தமது பதவியை இராஜினாமா செய்யும்போது அந்த வெற்றிடத்திற்காக ஆட்சேர்ப்பு செய்வது தவறா என நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன். உலகில் எம்மை விட செல்வந்த நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலும் விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குகின்றன.இந்திய எயார்லைன்சுக்கு என்ன நடந்தது? அதுவும் நட்டத்திலேயே இயங்குகிறது. சுவிஸ் எயார் தற்போது சேவையில் உள்ளதா? அதுவும் கிடையாது. எமிரேட்ஸ் போன்ற விமான சேவைக்கு அந்த நாடுகள் 2 அல்லது 3பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன. இலங்கை போன்ற நாடுகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அதனால் எமது நாடு போன்ற சிறு அளவிலான விமான சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியே ஆக வேண்டும். எமக்கு விமானம் கொள்வனவு செய்வதற்கும் நிதி கிடையாது. அதற்காக முதலீடு செய்யும் நிலையிலும் இல்லை. குத்தகை அடிப்படையிலேயே நாம் விமானங்களை பெற்றுக் கொள்கின்றோம். ஒரு விமானம் கூட எமக்கு சொந்தமான விமானம் கிடையாது. அனைத்து விமானங்களும் லீசிங் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள விமானங்களாகும். அவற்றுக்கு லீசிங் வழங்கிய பின்னர் எத்தகைய நிதியும் எமக்கு மிஞ்சாது. அத்துடன் அண்மைக் காலங்களில் நாம் விமான சேவை தொடர்பில் பல தொழிற்சங்க நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேர்ந்தது. அதுவும் நட்டத்திற்கு காரணமாகிறது. அதனால் தான் எமக்கு மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது. இந்த விமான சேவை தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய குழு வொன்றுடன் இணைந்தே உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். அப்போதுதான் இந்த விமான சேவை துறையிலுள்ள சுமார் 6000 ஊழியர்களின் தொழில் உரிமையை பாதுகாக்க முடியும். அதற்கான பொறுப்பு அமைச்சுக்கு உள்ளது. அந்த வகையில் எந்த ஒரு விமான சேவையும் இலாபமீட்டுவதாக தற்போது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/183009
  4. டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து, கிராம சேவையாளர் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் 2,100 பேருக்கு நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய கிராம சேவையாளர் நியமனங்கள் இடம்பெற்றன. பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து புதிய கிராம அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி தமது பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த திட்டங்களில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். https://thinakkural.lk/article/301174
  5. 08 MAY, 2024 | 04:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் தற்போதைய பலவீன நிலைமை,சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும். அப்போது யாருக்குப் பொருளாதாரம் தொடர்பில் புலமை உள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்,அவரும் தெரிந்து கொள்வார் எனப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் மின்சாரத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.மின்சார சபையை மறுசீரமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரச நிறுவனங்களுக்குச் சுயாதீனம் வழங்குவதை ஏற்க முடியாது.ஏனெனில் அரசியல்வாதிகளைக் காட்டிலும் அரச அதிகாரிகள் மோசடியாவார்களாக உள்ளார்கள்.மத்திய வங்கிக்குச் சுயாதீனம் வழங்குவதற்கும் இதுபோன்ற சட்டமே முன்வைக்கப்பட்டது. மத்திய வங்கி சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதன் பிரிவுகளை ஆராய்ந்து சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் மத்திய வங்கி நாட்டு மக்களுக்குப் பொறுப்பு கூறுவதை விடுத்து சர்வதேச நிறுவனங்களுக்குப் பொறுப்புக் கூறும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதை உணர்ந்து சட்ட மூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குப்படுத்தினோம்.72 திருத்தங்களை உயர்நீதிமன்றம் முன்வைத்தது.இதன் பின்னரே மத்திய வங்கி சட்டமூலம் சட்டமாக்கப்பட்டது. மத்திய வங்கி 2022 ஆம் ஆண்டு 374 பில்லியன் ரூபா,2023 ஆம் ஆண்டு 114 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நட்டமடைந்துள்ளது.தொடர்ச்சியாக நட்டமடைந்துள்ள நிலையில் சம்பளத்தை அதிகரித்துள்ளது நியாயமானதா? என்று கடந்த திங்கட்கிழமை ஊடக சந்திப்பின் போது கேள்வி எழுப்பியிருந்தேன். நான் குறிப்பிட்ட விடயத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் நேற்று முன்தினம் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இலாபம் மற்றும் நட்டத்தில் மத்திய வங்கியின் முன்னேற்றத்தை மதிப்பிட முடியாது.ஆகவே சம்பள அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து பயனற்றது என்று குறிப்பிட்டுள்ளார். நான் குறிப்பிட்ட கருத்துக்குப் பதிலளிக்காமல்,மிக மோசமான முறையில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் தற்போதைய பலவீன நிலைமை,சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும்.அப்போது யாருக்குப் பொருளாதாரம் தொடர்பில் புலமை உள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள். அவரும் தெரிந்து கொள்வார் என்றார். https://www.virakesari.lk/article/182984
  6. மும்பையை வெளியேற்றிய ஹைதராபாத்தின் வரலாற்று வெற்றி - சிஎஸ்கே அணிக்கு சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 11 ஆட்டங்கள் வரை நடந்தும் எந்த அணியும் அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாத சூழல் இருந்து வந்தது. ஆனால், நேற்றைய சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்களில் வென்றாலும்கூட 4 புள்ளிகள் பெற்று அதிகபட்சமாக 12 புள்ளிகள்தான் பெற முடியும். இது ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்துக்குக்கூட போதாது என்பதால், ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டது. இன்று நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் தோற்கும் அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். அதேபோல லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே வரும் 14ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் தோற்கும் அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். இரு அணிகளும் தற்போது 12 புள்ளிகள் பெற்றுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் படைத்த சாதனை என்ன? ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் 167 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதுநாள்வரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை 62 பந்துகள் மீதமிருக்கையில் சேஸிங் செய்த முதல் அணியாக சன்ரைசர்ஸ் அணி இடம் பெற்றது. இதற்குமுன், பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 157 ரன்களை 60பந்துகள் மீதமிருக்கையில் பிரிஸ்பேன் ஹீட் அணிசேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. அதேபோல டி20 கிரிக்கெட்டில் 10 ஓவர்களுக்குள் லக்னோ அணிக்கு எதிராக 167 ரன்களை சன்ரைசர்ஸ் அணி எடுத்தது, இதுவரை எந்த அணிக்கும் எதிராக எடுக்காத ஸ்கோராகும். இதற்கு முன் 2018-இல் நார்த்தாம்டன்ஷையர் அணிக்கு எதிராக வொர்ஸ்டர்ஷையர் 162 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியின் நிலை என்ன? இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டில் மைனசில் இருந்த சன்ரைசர்ஸ் மாபெரும் வெற்றியால், 0.406க்கு என்று உயர்வான நிலையை அடைந்தது. சிஎஸ்கேஅணி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், 3-ஆவது இடத்தைப் பிடிக்க முடியும். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணியைவிட நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி உயர்வாக இருப்பதால், அடுத்த ஆட்டத்தில் வென்றால், 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறும். 3-ஆவது, 4-ஆவது இடத்தைப் பிடிப்பதில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்துவரும் சிஎஸ்கேவுக்கான 3 ஆட்டங்களில் ஒன்றில்தோற்று 2-இல் வென்று, சன்ரைசர்ஸ் தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்றால், சன்ரைசர்ஸ் 3-ஆவது இடத்தையும், சிஎஸ்கே 4வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் தோற்று ஒன்றில் வென்று, சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்றால் 3-ஆவது இடத்தைப் பிடிக்கும். அல்லது சிஎஸ்கே அணி ஒன்றில் தோற்று 2 ஆட்டங்களில் வென்று, சன்ரைசர்ஸ் அணியும் ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றால் இரு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெறும், 4-ஆவது இடத்துக்கு கூடுதலாக டெல்லி கேபிடல்ஸ் அல்லது லக்னோ அணிகளும் போட்டியிடும் சூழல் வரலாம். அப்போது எந்த அணியின்நிகர ரன்ரேட் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 3-ஆவது இடத்தையும், அடுத்த உயர்வாக இருக்கும் அணி 4வது இடத்தையும் பிடிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னோ ப்ளே ஆஃப் செல்லுமா? அதேசமயம், லக்னோ அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்வியால் லக்னோ நிகர ரன்ரேட் மிகமோசமாக சரிந்து மைனஸ் 0.769 எனக் குறைந்துவிட்டது. அடுத்துவரும் இரு ஆட்டங்களிலும் லக்னோ அணி வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்று உறுதி எனக் கூற முடியாது. நிகர ரன்ரேட் உயர்வாக இருக்க வேண்டும், டெல்லி அணி, சன்ரைசர்ஸ்அணி ஆகியவை தலா ஒரு போட்டியில் தோற்க வேண்டும், சிஎஸ்கே அணி 2 ஆட்டங்களில் தோற்க வேண்டும் இவையெல்லாம் நடந்தால் லக்னோ அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் பிரமாண்ட வெற்றி எப்படி சாத்தியமானது? சன்ரைசர்ஸ் அணி நேற்று வரலாற்று சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாச்தில் வெற்றி பெற்றதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட்(89), அபிஷேக் சர்மா(75) ஆகிய இருவர்தான் காரணம். இதில் 16 பந்துகளில் அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட், 30 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர், 8பவுண்டரிகள் அடங்கும். அபாரமான ஆட்டத்தைவெளிப்படுத்திய டிராவிஸ்ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த ஐபிஎல் ஆட்டத்தில் மட்டும் ஹெட் 20 பந்துகளுக்குள் 3 முறை அரைசதம் அடித்துள்ளார். ஹெட்டுக்கு துணையாக பேட் செய்த அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்து, 28 பந்துகளில் 75 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். டிராவிஸ் ஹெட், அபிஷேக் இருவரும் சேர்ந்து 58 பந்துகளைச் சந்தித்து அதில் 16 பவுண்டரி, 14 சிக்ஸர்களை விளாசினர். இந்த சீசனில் மட்டும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் 146 சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இந்த சாதனையைச் செய்ததில்லை. சன்ரைசர்ஸ் அணி 3.1 ஓவர்களில் 50 ரன்களையும், 5.4 ஓவர்ளில் 100 ரன்களையும் சன்ரைசர்ஸ் எட்டியது. பவர்ப்ளே ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 107 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 2-ஆவது அதிகபட்சமாக அமைந்தது. இருவரின் அதிரடி ஆட்டத்தால் பந்து சிக்ஸர், பவுண்டரி என பறந்தது, ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 8.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களை எட்டியது. 9.4 ஓவர்களில் இலக்கை அடைந்து சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சிலும் மிரட்டிய சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் புவனேஷ்வர், கம்மின்ஸ் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டனர். புதிய பந்தில் புவனேஷ்வரின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டீகாக்(2), ஸ்டாய்னிஸ்(2) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளேயில் புவனேஷ்வர் பந்துவீசி முடிக்கும்போது 2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஷாபாஸ் அகமது 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து லக்னோ ரன்ரைட்டை இழுத்துப் பிடித்தனர். கேப்டன் ராகுல் (29)அணியை மீட்க போராடிய நிலையில் கம்மின்ஸின் தந்திரமான பந்தில் டீப் பேக்வேர்ட் பாயின்டில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவரிசையில் நிகோஸல் பூரன்(48), பதோனி(55) ரன்கள் சேர்த்த்து லக்னோ அணியை கரை சேர்த்தனர். லக்னோ அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்தது. இரு அணிகளுக்கு இடையிலான பவர்ப்ளே ஸ்கோர் வித்தியாசம் 80ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES “பேச வார்த்தைகள் இல்லை” போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இவர்களின் பேட்டிங்கை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம், இப்போதுதான் நேரடியாகப் பார்த்தோம், நம்பமுடியாமல் இருக்கிறது. ஹெட், அபிஷேக் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறித்தது. சிக்ஸர் அடிப்பதற்காகவே பிரத்யேக பயிற்சி எடுத்து கடினமாக உழைத்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கூட இருவரும் வழங்கவில்லை. விக்கெட் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுசெய்யக்கூட வாய்ப்பு வழங்கவில்லை. முதல் பந்தைச் சந்தித்தது முதலே இருவரும் மிகச்சுதந்திரமாக, கட்டுப்பாடின்றி பேட் செய்தனர். விக்கெட் வீழ்த்தினால்தான் பவர்ப்ளேயில் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால், எங்களால் அதை கடைசிவரை செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cv2xqdgx2p8o
  7. உலகெங்கும் 300 கோடி டோஸ் செலுத்தப்பட்ட பிறகு 'கோவிஷீல்டு' தடுப்பூசி வாபஸ் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கலாகர் பதவி, ஆரோக்கியம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் 300 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டப் பிறகு, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்பப் பெறப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா இந்தத் தடுப்பூசியைப் பற்றி 'மிகவும் பெருமையாக உணர்வதாகக்' கூறியது. ஆனால் அந்த நிறுவனம் இந்த வணிக முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் அதிகரித்து வருவதால் புதிய, மேம்பட்ட தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றின்போது அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசி பல லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் அரிதான சில சந்தர்ப்பங்களில் அது ஆபத்தான இரத்தம் உறைதலையும் ஏற்படுத்தியது. இதனால் சில மரணங்களும் நிகழ்ந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது மிகத் துரிதமாக உருவாக்கப்பட்ட தடுப்பூசி கோவிட் தொற்றுநோய் பொதுமுடக்கத்திலிருந்து உலகை மீட்டெடுக்கும் பணியில், கோவிட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மிகத் துரிதமாக உருவாக்கினர். பொதுவாக 10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது. இது மற்ற கோவிட் தடுப்பூசிகளை விட மிகவும் மலிவானது மற்றும் சேமிக்க எளிதானது என்பதால் இது 'உலகத்திற்கான தடுப்பூசி' என்று கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அறிவிக்கப்பட்டது. மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா அதை வெகுஜனப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க ஒப்புக்கொண்டது. இங்கிலாந்து பொது முடக்கத்தில் இருந்து வெளிவரும் திட்டத்திற்கு இந்தத் தடுப்பூசியே அடித்தளமாக இருந்தது. "உண்மையில் இது ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. ஃபைசரின் மற்றொரு தடுப்பூசியுடன் சேர்ந்து அந்தப் பேரழிவிலிருந்து நம்மை மீட்டெடுத்தது," என்கிறார் இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் ஃபின். பட மூலாதாரம்,PRESS ASSOCIATION படக்குறிப்பு,'சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன' ரத்தம் உறைதலும் மரணங்களும் இருப்பினும், தடுப்பூசியின் அரிதான பக்க விளைவாக அசாதாரண இரத்தக் கட்டிகள் தோன்றியதால் அதன் நற்பெயர் சிதைந்தது. இதனால், இங்கிலாந்து மாற்று வழிகளுக்கு திரும்பியது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது ஒரு அறிக்கையில், "சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன," என்று கூறியது. மேலும் அந்த அறிக்கையில் "எங்கள் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய அங்கமாக பரவலாகக் கருதப்படுகிறது," என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,'கொரோனா வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி மிகத்தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது புதிய வைரஸ் பிறழ்வுகள், புதிய தடுப்பூசிகள் இப்போது பரவலாக இருக்கும் கொரோனா நுண்கிருமியின் பிறழ்ந்த வடிவங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதாக அவ்வறிக்கை தெரிவித்தது. இதனால், 'நமக்கு அதிகளவிலான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் கிடைத்தன' என அந்த அறிக்கை கூறுகிறது. இது அதன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கான (கோவிஷீல்டு தடுப்பூசி) 'தேவை குறைவதற்கு' வழிவகுத்தது. இது 'இந்த தடுப்பூசி இனி உற்பத்தியோ அல்லது சப்ளையோ செய்யப்பட மாட்டாது' என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. இதுகுறித்து பேசிய பேராசிரியர் ஃபின், "இந்தத் தடுப்பூசி திரும்பப் பெறப்படுவது, அது இனி பயனற்றது என்பதையே சொல்வதாக நான் நினைக்கிறேன்," என்றார். "கோவிட் வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி வெகு தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது. எனவே அந்தத் தடுப்பூசிகள் ஒரு வகையில் பொருத்தமற்றதாகிவிட்டன. புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் மட்டுமே இப்போது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது," என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c0deywlpknxo
  8. 08 MAY, 2024 | 11:27 AM மானிடனின் புலமைசார் அபிவிருத்தியின் பெறுபேறாக விஞ்ஞானரீதியான தொழில்நுட்ப முடிவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் அபிவிருத்தியென இனங்காணப்படுகின்ற மாற்றத்திற்கு ஒட்டுமொத்த மானிட சமூகமும் நிகழ்காலத்தில் இந்த மாற்றத்தின் சாதகமான மற்றும் பாதகமான பெறுபேறுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதோடு பாதகமான தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்காக துரிதமானதும் பயனுறுதிமிக்கதுமான தீர்வுகளைக் காண்பது உலகளாவிய சவாலாக மாறியுள்ளமையையும் இனங்காண முடியும். தொழில்நுட்பத்தின் பலம் காரணமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதும் போட்டித்தன்மையும் சிக்கலும் நிறைந்த சமூகத்தில் மனிதன் மிகவும் நெகிழ்ச்சியானதும் வசதியானதுமான நுகர்வுப் பாங்குகளுடன் மாறிவருகிறான். மேற்சொன்ன நுகர்வுப் பாங்குகள் மற்றும் வாழ்க்கை நடத்தைநெறிகள் மீது மாத்திரமன்றி தனது மானிட வாழ்க்கை வழியுரிமை மீதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகவும் தீர்மானகரமானதும் சவால்நிறைந்ததாகவும் அமைகின்றது. இந்த நுகர்வுப் பாங்கின் பக்கவிளைவாகவே மைக்றோபிளாஸ்ரிக் பிரதான மாசுபாட்டுக்காரணியாக சுற்றாடலில் சேர்கின்றது எனக்கூறுவதும் பெரும்பாலும் பொருத்தமானதாகும். ஏனெனில் பிளாஸ்ரிக் உற்பத்திகளில் நிலவுகின்ற எடைகுறைந்ததன்மை மற்றும் வசதியாக அங்குமிங்கும் கொண்டுசெல்ல இயலுகின்றமை, விலை குறைவானதாக உள்ளமை, பல்வேறு நிறங்களையும் கவர்ச்சிகரமான தன்மையையும் கொண்டுள்ளமை, நீண்டகாலமாக நிலைத்திருத்தல் மற்றும் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதிலான வசதி ஆகிய பலவிதமான பண்புகள் காரணமாக மக்கட் சமூகத்தில் பிரபல்யமான நுகர்வுப் பண்டமாக பிளாஸ்ரிக் மாறியுள்ளது. இவ்விதமாக பாவிக்கின்ற பிளாஸ்ரிக் உற்பத்திகள் பாவனையின்பின்னர் முறைசாராதவகையில் கழிவுப்பொருட்களாக கையுதிர்க்கப்படுவதும் அத்துடன் பிளாஸ்ரிக்கின் உள்ளடக்கம் காரணமாக பாவனையின்போதே உடலில் சேர்வதாலும் அதன் பெறுபேறாக மானிட சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் நீண்டகால மற்றும் குறுங்காலரீதியான பாதகமான தாக்கங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக நவீனகாலத்தில் ஒருசில உற்பத்திகளின்போதும் மைக்றோபிளாஸ்ரிக் மூலப்பொருளாக பாவிக்கப்பட்டு வருவதோடு அது தொடர்பில் கட்டாயமாக கவனம் செலுத்தப்படவேண்டும். ஏனெனில் இதனூடாக மானிட சுகாதாரமும் சுற்றாடலும் அச்சுறுத்தலுக்கு இலக்காவதால் நிலைபெறுதகு எதிர்காலத்திற்கு அது பாரிய சவாலாக அமைந்துள்ளமையாகும். மைக்றோபிளாஸ்ரிக்கை இனங்காண்போம். பருமனில் 5 மில்லிமீற்றரைவிடக் குறைவானதும் பல்லுருத்தோற்றம் கொண்டதுமான பிளாஸ்ரிக் பாகங்கள் மைக்றோபிளாஸ்ரிக்காக இனங்காணப்பட முடியும். அவை உக்கிப்போகின்ற துரிதநிலை குறைந்த மட்டத்தில் நிலவுவதால் மானிட உடலுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி சுற்றாடலில் பாரியஅளவில் எஞ்சிநிற்கின்றது. மைக்றோபிளாஸ்ரிக் அவற்றின் தோற்றுவாய் மற்றும் துணிக்கைகளின் அளவுக்கிணங்க முதனிலை மற்றும் இரண்டாம்நிலை என வகைப்படுத்தப்பட முடியும். சலவைக் காரணிகள் மற்றும் அழகுசாதன தயாரிப்புகள் போன்ற பாவனையாளர் பாதுகாப்பு உற்பத்திகள் அல்லது கைத்தொழில் உற்பத்திகளாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் பாகங்கள் முதனிலை மைக்றோபிளாஸ்ரிக் என அழைக்கப்படுவதோடு மைக்றோ முத்துக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அத்துடன் சுற்றாடலுக்கு திறந்தநிலைக்கு ஆளாகிய பின்னர் அழிவடைகின்ற பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்களும் நாரிழைகள் அல்லது பிளாஸ்ரிக் பண்டங்கள் போன்ற பிளாஸ்ரிக் அடங்கிய தயாரிப்புகள் இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் ஆகும். குறைந்த அல்லது கூடிய அடர்த்திகொண்ட பொலிஎத்திலீன் (PE), பொலிப்றொபிலீன் (PP), பொலியஸ்டரீன் (PS), பொலிப்றொபிலீன் டிறெப்தலேற் (PET), பொலிவயினயில் குளோறைட் (PVC) மற்றும் பொலிவயினயில் அல்கஹோல் ஆகிய பல்லுருத்தோற்றங்களை உள்ளடக்கிய மைக்றோபிளாஸ்ரிக், துண்டுகள், படலங்கள், நார், நுரைகள், முத்துக்கள், கோளங்கள் / கட்டிகளாகவும் நிலவுகின்றன. மைக்றோபிளாஸ்ரிக்கின் நவீன சவால் மைக்றோபிளாஸ்ரிக் எந்தளவில் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் அது எதிர்காலத்தில் பிரமாண்டமான சுற்றாடல் பேரழிவினை உருவாக்க காரணமாக அமையுமென்பதும் பல்வேறு உலகளாவிய ஆராய்ச்சிகள் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்கள் காரணமாக கடல்சார் சூழற்றொகுதி மாசுபாட்டுக்கு இலக்காவது நிகழ்காலத்தில் மிகவும் பாரதூரமான சுற்றாடல் சிக்கலாக மாறியுள்ளது. புவிமேற்பரப்பின் ஒட்டுமொத்த ஒட்சிசன் தேவையின் 80% கடல்சார் சூழல் மூலமாகவே நிவர்த்திசெய்யப்பட்டு வருவதோடு அது உயிருள்ள , உயிரற்ற விலங்கினத்தின் வழியுரிமைமீது பிரமாண்டமான அச்சுறுத்தலை விடுக்கின்றது. இன்றளவில் பல்வேறு ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதன்படி பிளாஸ்ரிக் உக்கிப்போக சராசரியாக ஏறக்குறைய 500 - 1,000 ஆண்டுகள் கழிகின்றதென்பதும் அவை முழுமையாக உக்கிப்போகாமல் மைக்றோபிளாஸ்ரிக்காக மாறுகின்றதென்பதுமாகும். அதற்கிணங்க இன்றளவில் வளிமண்டலத்தில் ஏறக்குறைய 50 - 75 ரில்லியன் தொன் பிளாஸ்ரிக் துணிக்கைகளும் மைக்றோபிளாஸ்ரிக்குகளும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த ஆராய்ச்சிகள் மூலமாக 2025 அளவில் அது 250 மில்லியன் தொன்களை விஞ்சக்கூடுமெனவும் அத்துடன் 2050 ஆம் ஆண்டளவில் கடலில் வசிக்கின்ற மீன்களின் நிறையைவிட பிளாஸ்ரிக்கின் அளவு அதிகரித்துவிடுமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்குள் கடந்த நூற்றாண்டினைவிட பிளாஸ்ரிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதன் மூலமாக பிளாஸ்ரிக் நுகர்வு உயர்வடைந்துள்ளமையும், மறுபுறத்தில் 8 - 10 மில்லியன் மெட்றிக் தொன் வரையான அளவு இவ்விதமாக பாவனைக்குப் பின்னர் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் வெளிப்படுகின்றது. மைக்றோபிளாஸ்ரிக் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகும் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பாவனைகள் ஊடாக நேரடியாகவோ மறைமுகமாகவோ மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகள் உடலில் சேர்ந்து அபாயநேர்வு நிலைமைக்கு மாற்றுகின்றது வாய் மூலமாக, சுவாசம் மூலமாக மற்றும் சருமத்தின் ஊடாக இவ்விதமாக மைக்றோபிளாஸ்ரிக் உடலில் கலப்பதால் சமிபாட்டுத்தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி, அகச்சுரப்பித் தொகுதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நீண்டகால மற்றும் குறுங்கால நோய் நிலைமைகள் உருவாகும். இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் பிளாஸ்ரிக் துணிக்கைக சுவாசம் வழியாக அவை உடலில் சேர்வதை தடுக்கமுடியாதுள்ளது. அதனூடாக சுவாசக்கோளாறுகள், இதயநாளங்கள் சார்ந்த நோய்கள், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள், நுரையீரல்சார்ந்த தொற்றுகள் காரணமான இருமல், தும்மல், குருதியில் ஒட்சிசன் செறிவு மாற்றமடைவதால் சுவாசிப்பதிலான சிரமங்கள், களைப்பு, தலைச்சுற்று போன்ற குறுங்கால நோய் நிலைமைகளும் தோன்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூழற்றொகுதி தரங்குன்றுதல் பறவைகள், மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகளை உணவாக உட்கொள்வதால் உணவுப் பாதையில் காயங்கள் ஏற்படுதல், உணவுப் பாதைக்குள் சிக்குதல் போன்ற உள்ளக மற்றும் வெளிப்புற அபாயநேர்வுமிக்க நிலைமைகள் ஏற்படுகின்றன. மைக்றோபிளாஸ்ரிக் கட்டுப்பாட்டுக்கான உலகளாவிய அணுகுமுறைகள் உலகளாவிய நெருக்கடியொன்றாக மாறியுள்ள பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்காகவும் மட்டுப்படுத்துவதற்காகவும் மறுபுறத்தில் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதன் மூலமாக பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப்பொருள் சிக்கலைத் தீர்ப்பதற்காகவும் அரச மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் / வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளின் உற்பத்திப் பொருளாதார செயற்பாங்கில் மேற்சொன்ன தாக்கம் உயர்மட்டத்தில் நிலவுகையில் இந்நாடுகளால் பல்வேறு கட்டுப்பாடுசார்ந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. சவால்களை எதிர்கொள்ளல் : இலங்கை நடைமுறைகள் பொலித்தீன் மற்றும் தனிப்பாவனை பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் கட்டுப்பாட்டுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்திலும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. அதன்கீழ் பொலித்தீன் உணவுப் பொதியிடல்பொருள் (லன்ச் ஷீட்) உற்பத்தி, பாவனை மற்றும் வர்த்தகம். அதிக பருமன்கொண்ட பொலிஎத்திலின் (HDPE),ஷொபிங் பேக், குரொசரி பேக், பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் எச்சங்களை திறந்தவெளியில் தகனம்செய்தலும் விரிவடைந்த பொலியஸ்டரின் உணவுப் பெட்டிகள் உற்பத்தி, வர்த்தகம், பாவனையைத் தடைசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் PET, PVC தேறிய பரிமாணம் 20 மில்லிமீற்றர் / தேறிய நிறை 20 கிறாமிற்கு இணையான அல்லது அதற்குக் குறைவான செஷே பக்கெற்றுகள் ( உணவு மற்றும் ஔடத பொதியிடலுக்காக பாவித்தல் தவிர்ந்த) காற்று நிரப்பக்கூடிய விளையாட்டுச் சாமான்கள் (பலூன், பந்துகள், நீரில் மிதக்கக்கூடிய / நீச்சல் தடாகங்களில் பாவிக்கின்ற விளையாட்டுச் சாமான்களும் நீர் விளையாட்டுச் சாதனங்கள் தவிர்ந்த) அத்துடன் பிளாஸ்ரிக் காம்புகள் (STEM) கொண்ட கொட்டன் பட்ஸ் ( COTTON BUDS) ( மருத்துவ/ கிளினிக்சார்ந்த சிகிச்சைகளுக்காக பாவிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கொட்டன் பட்ஸ் தவிர்ந்த) மற்றும் தனிப்பாவனை பானக் குழாய்கள் மற்றும் கலத்தல் சாதனங்கள் / விமானப் பயணங்கள் தவிர்ந்ததாக பாவிக்கப்படுகின்ற உணவுப்பொதியிடல் பீங்கான், கோப்பைகள், கரண்டிகள், முள்ளுக் கரண்டிகள் மற்றும் கத்திகள் / மலர் மாலைகள்/ இடியப்பத் தட்டுகள் பாவிக்கப்படுவது தடைசெய்யவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மைக்றோபிளாஸ்ரிக் சம்பந்தமாகவும் அதன் அபாயநேர்வு நிலைமையை இனங்கண்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு நாடு என்றவகையில் நிறுவனமென்றவகையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட மற்றும் கட்டுப்பாட்டு முறையியல்கள் போன்றே பல்வேறு ஊடகப் பாவனைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற கல்வி, தொடர்பாடல் முறையியல்களும் மக்கள் மனங்களை விழித்தெழச் செய்வித்து நிலைபெறுதகு வாழ்க்கைப்பாங்கு மற்றும் நிலைபெறுதகு எதிர்காலத்திற்காக வழிகாட்டுகின்ற பயனுறுதிமிக்க அரும்பணியாகுமென எடுத்துக்காட்ட இயலும். சுஜீவா பெரேரா சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் சுற்றாடல் மேம்பாட்டுக் கூறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை https://www.virakesari.lk/article/182914
  9. சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவிருந்த தனியார் விண்கலம் நிறுத்தப்பட்டது ஏன்? பட மூலாதாரம்,NASA/BOEING கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 7 மே 2024 அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா-வைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஒரு புதிய விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் (ISS- ஐ.எஸ்.எஸ்) செல்லவிருந்தனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேரி வில்மோர் ஆகியோரே அந்த இரு விண்வெளி வீரர்கள். போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார்லைனர்' விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்தது. தனது முதல் சோதனை குழுவைச் சுமந்துகொண்டு விண்ணில் பாய்வதற்கு 90 நிமிடங்களே இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்வெளிப் பயணம் நிறுத்தப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. விண்கலம் கட்டமைக்கப்படுவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த நிலையில், இப்போது மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், ஐ.எஸ்.எஸ்-க்கு வீரர்களை அனுப்பி அங்கிருந்து அவர்களை பூமிக்குக் கொண்டுவரும் இரண்டாவது தனியார் நிறுவனமாக போயிங்க் மாறியிருக்கும். முதல் நிறுவனம், எலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்'. நாசா இதுபோன்ற விண்கலங்களைச் சொந்தமாக வைத்து இயக்க விரும்புவதில்லை, வணிகத் துறையிலிருந்து இந்தச் சேவையை வாங்க விரும்புகிறது. இந்த ஏவுதல் போயிங்க் நிறுவனத்திற்கு சிக்கலான தருணமாக தான் பார்க்கப்பட்டது. காரணம், சமீபத்தில் நிகழ்ந்த தொடர் விபத்துகளால் அதன் விமான வணிகம் பெரும் அழுத்தத்தில் உள்ளது. ஸ்டார்லைனரை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களைத் தொடர்ந்து நிறுவனத்தின் விண்வெளித் துறையும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. "போயிங்கிற்கு இது மிகவும் முக்கியமான நாள்" என்று ஓபன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி முனைவர் சிமியோன் பார்பர் என முன்னர் தெரிவித்திருந்தார். "போயிங் நிறுவனம் இவ்வளவு காலமாக இந்த விண்கலத்தின் கட்டுமானத்தில் வேலை செய்து வருகிறது. சோதனை விமானங்களில் அவர்களுக்கு சில சிக்கல்கள் உள்ளன. இந்த விண்கலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது," என்று அவர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,NASA/BOEING படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் அடுத்தடுத்த சிக்கல்கள் ஸ்டார்லைனர் விண்கலம் 2015-ஆம் ஆண்டில் தனது முதல் ஆளில்லா சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தது. ஆனால் அது 2019 வரை தாமதமானது, ஏனெனில் அதன் மென்பொருள் குறைபாடுகள் உள்ளிருந்த கடிகாரத்தைச் செயலிழக்கச் செய்தது. அதன் விளைவாக விண்ணில் பாய்வதற்கான உந்துதல்கள் அதிகமாகச் செலுத்தப்பட்டது. அதனால் விண்கலம் விண்வெளி நிலையத்தை அடைய முடியாத அளவுக்கு எரிபொருள் செலவானது. இரண்டாவது முயற்சி, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டது. ஆனால் அது மீண்டும் 2022-ஆம் ஆண்டு மே மாதம் வரை தாமதமானது. உந்துவிசை அமைப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டதால் இது நடந்தது என்று சொல்லப்பட்டது. ஸ்டார்லைனர் இறுதியாக பூமியிலிருந்து புறப்பட தயாரான போது, அதன் முழுப் பணியையும் முடிக்க முடிந்தது. ஆனால் சில உந்துதல்களின் செயல்திறன் மற்றும் குளிரூட்டும் அமைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தக் குறைபாடுகள், வயரிங் மற்றும் பாராசூட்களின் பாதுகாப்பில் இருந்த கூடுதல் சிக்கல்கள் ஆகியவை விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் திட்டத்தை இப்போது வரை தாமதமாக்கி வந்தது. இந்த அனைத்துச் சிக்கல்களும் சரிசெய்யப்படாமல் நாசாவும் போயிங்கும் விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் இந்தப் பயணத்திற்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டார்கள் என நம்பப்பட்டது. ஆனால் விண்கலத்தின் ஆக்சிஜன் வால்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தார் பயப்படுகிறார்களா? இதுகுறித்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், இந்தப் பின்னடைவுகள் விண்கலத்தில் செல்லவிருக்கும் வீரர்களின் நண்பர்களையும் குடும்பத்தாரையும் 'அச்சப்பட வைக்கும்' என்று கூறப்பட்டது. அதற்கு இந்த விண்கலத்தில் பயணிக்கவிருக்கும் பாரி வில்மோர், இந்தத் தொழில்நுட்பச் சிக்கல்களை 'பின்னடைவுகள்' என்று விவரிப்பது தவறு என்று கூறியிருந்தார். "நாங்கள் அவற்றை முன்னேற்றப் படிகள் என்று அழைக்கிறோம். நாங்கள் ஒரு சிக்கலைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்வோம். அதை நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம். அதனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள்," என்று அவர் கூறினார். விண்கலத்தை இயக்கவிருந்த சுனிதா வில்லியம்ஸ் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் தயாராக இருப்பதால் இங்கு வந்துள்ளோம். எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றனர். நாங்கள் அதைப் பற்றி பேசினோம். அவர்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கின்றனர்," என்று கூறியிருந்தார். தொழில்நுட்ப கோளாறு இன்று காலை விண்வெளிப் பயணம் ரத்து செய்யப்பட்ட பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பட மூலாதாரம்,BOEING படக்குறிப்பு,இது அப்பல்லோ பயணங்களில் பயன்படுத்தப்படும் விண்கலத்தை விட அகலமானது புதிய நிறுவனங்களின் வளர்ச்சி ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் போயிங் இனி தங்களுக்குச் சேவை வழங்கும் என்று நாசா அறிவித்தபோது, அது இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஒப்பந்தத்தை வழங்கியது. இது அவர்களின் விண்கலங்களைச் சேவைக்குக் கொண்டு வந்து அவற்றின் ஆறு திட்டங்களுக்கு நிதி வழங்கும். ஸ்பேஸ்-எக்ஸ் ஒப்பந்தத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.21,705 கோடியாக (2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆக இருந்தது. போயிங் இந்திய மதிப்பில் ரூ.35,062 கோடியைப் (4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெற்றது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2020-ஆம் ஆண்டு வீரர்களைத் தாங்கிய அதன் சோதனையை நடத்தியது. போயிங் நான்கு ஆண்டுகள் பின்தங்கி உள்ளது, மேலும் விஷயங்களைச் சரியாகச் செய்ய போயிங்க் நிறைய பணம் செலவழித்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் பிற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக முனைவர் பார்பர் கூறினார். "ஒருபக்கம் பாரம்பரிய விண்வெளி நிறுவனம் உள்ளது, போயிங்க் அது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வழியில் விஷயங்களைச் செய்கிறது. மறுபக்கம் ஒரு புதிய விண்வெளி நிறுவனம் உள்ளது, இது வேறு வழியில் விஷயங்களைச் செய்துள்ளது. கட்டமைத்தல், சோதனை செய்தல், செயலிழத்தல், கற்றல் ஆகியவை அடங்கிய அவர்களின் கட்டமைப்புச் சுழற்சி மிக வேகமாக உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். போயிங்கின் வணிகக் குழு திட்ட மேலாளர் மார்க் நாப்பி, ஒரு செய்தியாளர் சந்திப்பில், விண்கலங்களில் தவறுகளைக் கண்டறிதல் புதிய விண்கலத்தை உருவாக்கும் செயல்முறையின் இயல்பான பகுதி என்று கூறினார். இங்கிலாந்தின் விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி ஆய்வுத் தலைவரான லிபி ஜாக்சனின் கூற்றுப்படி, போயிங்கின் விண்கலம் சேவைக்கு வருவது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்க்கு போட்டியாக இருக்கும். இந்தப் போட்டியால் செலவுகள் குறையும். "இது நாசாவிற்கு மட்டுமல்ல, இங்கிலாந்து விண்வெளி ஏஜென்சி போன்ற பிற விண்வெளி நிறுவனங்களுக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் விண்வெளி வீரர்களை ஐ.எஸ்.எஸ்-க்கு கொண்டு செல்வதற்கு வரி செலுத்துவோரின் பணத்தைச் செலவிடுகிறோம்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,NASA/BOEING படக்குறிப்பு,போயிங்கின் நீல நிற உடையை வீரர்கள் அணிவார்கள், இது அமெரிக்க விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த முந்தைய தலைமுறை விண்வெளி உடைகளை விட 40% இலகுவானவை ஸ்டார்லைனரின் சிறப்பு என்ன? ஸ்டார்லைனர் 5மீ உயரமும் 4.6மீ அகலமும் கொண்டது (அதாவது 16.5 அடி, 15 அடி). இது அப்பல்லோ பயணங்களில் பயன்படுத்தப்படும் விண்கலத்தை விட அகலமானது. இதில் ஏழு விண்வெளி வீரர்களுக்கு இடம் உள்ளது. இருப்பினும் இது வழக்கமாக நான்கு பேருடன் தான் பறக்கும். இது மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 10 முறை பறக்கும் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஸ்-க்கான பயணத்தின் போது, விண்கலத்தின் குழுவினர் அதனுள்ளிருக்கும் அமைப்புகளை மதிப்பிடுவார்கள். மேலும் புத்தம் புதிய விண்வெளி உடைகளையும் அவர்கள் சோதனை செய்வார்கள். வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் போயிங்கின் நீல நிற உடையை அணிவார்கள், இது அமெரிக்க விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த முந்தைய தலைமுறை விண்வெளி உடைகளை விட 40% இலகுவானவை, நெகிழ்வானவை. உடையில் தொடுதிரை உணர்திறன் கையுறைகள் உள்ளன. எனவே விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் உள்ள டேப்லெட்களை இயக்கலாம். அடுத்த முறை வெற்றிகரமாக ஏவப்பட்டால், ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு முன் சுமார் 10 நாட்களுக்கு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கு முந்தைய அமெரிக்க விண்கலங்கள் கடலில் விழுந்தன. ஆனால் ஸ்டார்லைனர் தென்மேற்கு அமெரிக்காவில் எங்காவது நிலத்தில் தரையிறங்கும். 1998-இல் ஐ.எஸ்.எஸ்-இன் கட்டுமானப் பணிகள் தொடங்கியதில் இருந்து, வீரர்களைச் சுமந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட விண்கலங்கள் அங்கு சென்றிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆலோசனை நிறுவனமான 'க்வில்டி'-யைச் சேர்ந்த காலேப் ஹென்றியின் கூற்றுப்படி, ஸ்டார்லைனர் ஏவுதல் விண்வெளிப் பயண வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. "நாங்கள் இப்போது மனித ஆய்வுகளின் புதிய சகாப்தத்தில் நுழைகிறோம்," என்று அவர் பிபிசி-யிடம் கூறியிருந்தார். "தனியார் துறையின் வளர்ந்து வரும் பங்கு உற்சாகமானது. இது விண்வெளிப் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது," என்றார். https://www.bbc.com/tamil/articles/c3gv2qnwqy4o
  10. ஐ.பி.எல் இல் களமிறங்குகிறார் யாழ் மைந்தன் வியாஸ் காந்த் 08 MAY, 2024 | 07:39 PM லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் களமிறங்குகிறார் யாழின் மைந்தன் வியாஸ் காந்த். ஐ.பி.எல். வரலாற்றில் முதல் தடவையாக யாழைச் சேர்ந்த வீரர் ஒருவர் விளையாடுகின்றார். நடப்பு ஐ.பி.எல். தொடரின் இன்றைய 57 ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சுப்பர் ஜெயண்டஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் இடம்பெறுகின்றது. இன்றை ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 11 பேர் கொண்ட பெயர் பட்டியலில் வியாஸ் காந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த இன்று தனது முதலாவது ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது பலரின் எதிர்பார்ப்பு. https://www.virakesari.lk/article/183013 BOWLERS O M R W Econ 0s 4s 6s This spell Pat Cummins (rf) 2.4 0 25 1 9.37 5 2 1 0.4 - 0 - 7 - 0 Vijayakanth Viyaskanth (lb) 4 0 27 0 6.75 8 2 1 1 - 0 - 12 - 0
  11. மன்னாரில் அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் 08 MAY, 2024 | 04:53 PM மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் புதன்கிழமை (8) மதியம் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டத்தினால் எமக்கு வர உள்ள அழிவுகள் குறித்து நாங்கள் பல வருடங்களாகக் கூறி வருகிறோம். குறித்த திட்டத்தினால் எமது வாழ்விடம் திட்டமிட்டுப் பறிக்கப்பட உள்ளது. எமது பண்பாடு மற்றும் வரலாற்றுச் சுவடுகள் அழிக்கப்படப் போகின்றது. மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படப் போகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்கால நல வாழ்வும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எமது வளமான மண் அழிக்கப்பட்டு, எதுவும் அற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படும். எனவே எமது மக்களை ஒன்று கூட்டி பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரது முடிவை நாங்கள் எதிர் பார்க்க உள்ளோம். மன்னார் தீவில் உள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி நல்லதொரு தீர்வை வழங்குவாராக இருந்தால் எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்படும். எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விட்டால் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். மன்னார் தீவிலிருந்து ஒரு துண்டு நிலத்தைக் கூட நாங்கள் இத் திட்டங்களுக்கு வழங்க மாட்டோம். மேலும் கனிய மணல் அகழ்வினால் எமது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு போதிய விளக்கம் இன்மையினால் மக்களிடம் இருந்து திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கப் படுகிறது. மேலும் சுமார் 500 ஏக்கர் வரையிலான காணிகள் காணி உரிமையாளர்களிடம் கனிய மணல் அகழ்வுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த திட்டங்களையும் நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182972
  12. டிரம்புடன் இரவு உணவுக்குச் சென்ற போது நடந்தது என்ன? அமெரிக்க நீதிமன்றத்தில் நடிகை சாட்சியம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கைலா எப்ஸ்டீன் மற்றும் மேட்லைன் ஹால்பர்ட் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாலியல் உறவு குற்றச்சாட்டு, அதுகுறித்து பேசாமல் மௌனம் காக்க டிரம்ப் சார்பில் அவரது பிரதிநிதியாக ஒருவர் பணம் கொடுத்தது ஆகியவை தொடர்பான போராட்டம் ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்டு டிரம்ப் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. டிரம்புக்கு எதிரான குற்றவியல் விசாரணையில், முதன் முறையாக நீதிமன்றத்தில் அவரை நேரடியாக எதிர்கொள்ளும் நிலைப்பாட்டை டேனியல்ஸ் எடுத்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான அந்தரங்க விவரங்கள், இந்த வழக்கைச் சுற்றியுள்ள ரகசியங்கள் என பல விஷயங்கள் செவ்வாய் கிழமையன்று நீதிமன்றத்தில் கசிந்தன. 'நான் குற்றமற்றவன்' - டொனால்டு டிரம்ப் பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னாள் திரை நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸ், தளர்வான கறுப்பு ஆடைகளை அணிந்து அமர்ந்திருந்தார். முன்னாள் அதிபரை அடையாளம் காட்டுமாறு கூறியபோது மட்டுமே அவர் டிரம்பை பார்த்தார். மற்ற நேரங்களில் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தார் ஸ்டார்மி டேனியல்ஸ். வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கும், டிரம்பின் சட்ட வல்லுநர் குழுவின் கடுமையான கேள்விகளுக்கும் காரணமாக இருந்த, டிரம்பு உடனான தன் பாலியல் தொடர்பை விவரிப்பதில் தான் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார். டேனியல்ஸ் தரப்பு வாதங்களை முன்வைத்த போது, டிரம்ப் பெரும்பாலான நேரம் கோபமாக திட்டியவாறும், இல்லை எனும் வகையில் தலையை ஆட்டியவாறும் இருந்தார் . அவரது இந்த செய்கைகளைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி. போலியான வணிகப் பதிவுகளை சமர்ப்பித்ததாக 34 குற்ற வழக்குகளை டிரம்ப் எதிர்கொண்டுள்ளார் . டிரம்புடனான தொடர்பு குறித்து பேசாமல் மௌனம் காப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தான் இந்த விசாரணையின் மையமாக உள்ளது. தான் குற்றமற்றவர் என்று கூறியுள்ள டிரம்ப், டேனியலுடன் எந்த வகையிலும் பாலியல் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். இருப்பினும் தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க ஒரு தொகையை டேனியலுக்கு வழங்கியதை டிரம்ப் ஒப்புக்கொண்டார். பணத்தைப் பெற்ற டேனியல்ஸ் ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமையன்று அவர் அளித்த சாட்சியம் விசாரணையின் மிகவும் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. டிரம்ப் முன்னிலையில் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் சாட்சியம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,செவ்வாயன்று ஸ்டோர்மி டேனியல்ஸ் சாட்சியமளிப்பதை சித்தரிக்கும் நீதிமன்ற ஓவியம். டிரம்புடனான தனது தொடர்பு பற்றிய சில பரபரப்பான விவரங்களை வழங்கினார் டேனியல்ஸ். இதனால் முன்னாள் ஜனாதிபதியின் வழக்கறிஞர்கள் இந்த விசாரணையை ‘தவறான விசாரணை’ என்று அறிவிக்குமாறு கூறினார்கள். நீதிபதி ஜுவான் மெர்ச்சன், “சில அந்தரங்கமான விஷயங்களைச் சொல்லாமல் விட்டுவிடுவது நல்லது தான்" என்று ஒப்புக்கொண்டார் மற்றும் அத்தகைய தனிப்பட்ட விவரங்களைக் கேட்க வேண்டாம் என்று வழக்கறிஞர்களை எச்சரித்தார். அவர் முன்பு பகிர்ந்து கொண்ட விவரங்களில், அவர்கள் ஆணுறை பயன்படுத்தவில்லை என்ற அவரது கூற்று, தனது மனைவி குறித்து டிரம்ப் டேனியல்ஸிடம் கூறியதாகக் கூறப்படும் பதில்கள் ஆகியவை அடங்கும். இந்த விசாரணை ஏற்கனவே முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் ஹாலிவுட் வழக்கறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒரு வழக்கறிஞர் டேனியல்ஸுக்கு பணம் செலுத்துவதற்கு தரகராக பணியமர்த்தப்பட்டார். எவ்வாறாயினும், செவ்வாய்க் கிழமையன்று அவர் அளித்த சாட்சியம் நீதிபதி மற்றும் டிரம்ப் தரப்புக்கு ஒரு படி அதிகமாகவே இருந்தது. 2006ஆம் ஆண்டில் இருந்ததாகக் கூறப்படும் டிரம்ப் உடனான பாலியல் தொடர்பு குறித்து டேனியல்ஸிடம் என்ன கேட்கலாம், என்ன கேட்கக்கூடாது என்பதற்கு அரசு தரப்புக்கு சில வரம்புகளை விதிக்க வேண்டும் என்று நீதிபதி மெர்ச்சனிடம் டிரம்ப் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், பணம் செலுத்தப்பட்டதற்கான நோக்கத்தை நிறுவுவதற்கு டேனியல்ஸிடம் சில கேள்விகளை கேட்பது அவசியம் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. வரம்புகள் இருந்தபோதிலும், டேனியல்ஸின் வழக்கத்திற்கு மாறான நீண்ட பதில்களில் அந்தரங்கமான விவரங்கள் மேலும் வெளிப்பட்டன. டிரம்பை சந்தித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டேனியல்ஸ், டிரம்புடனான பாலியல் சந்திப்பு குறித்த விவரங்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து, அவர் தனது அனுபவத்தை தேசிய தொலைக்காட்சியில் அவரது பெயர் கொண்ட ஆவணப்படம் முதல் அமெரிக்காவின் மிக பிரபலமான காட்சி ஊடக பத்திரிகையாளர் மற்றும் அவரது சொந்த புத்தகமான ஃபுல் டிஸ்க்ளோசர் (Full Disclosure) ஆகியவற்றிலும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சில அடி தூரத்தில் டிரம்ப் அமர்ந்திருந்த போது, டேனியல்ஸ் இதைப் பகிர்வது இதுவே முதல் முறை. காலை அமர்வில், டேனியல்ஸ் பதற்றமாகத் தோன்றினார், மிகவும் வேகமாக பேசினார். வழக்கறிஞர் சூசன் ஹாஃபிங்கர் மற்றும் நீதிபதி மெர்ச்சன் இருவரும் அவரை மெதுவாக பேசும்படி கேட்டுக் கொண்டனர். சில சமயங்களில், வழக்கறிஞரான ஹாஃபிங்கர் கேட்ட கேள்விகளிலிருந்து அவரது சாட்சியங்கள் விலகிவிட்டதாகவும் தோன்றியது. 2006ஆம் ஆண்டு நடந்ததை நீதிமன்றத்தில் டேனியல்ஸ் நினைவுகூர்ந்தார். நட்சத்திரங்கள் பங்கேற்ற கோல்ஃப் போட்டியின் போது டிரம்பை முதன்முதலில் சந்தித்ததாகவும், அவர் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும் டேனியல்ஸ் கூறினார். டிரம்புடன் இரவு உணவுக்குச் செல்ல தான் விரும்பவில்லை என்று டேனியல்ஸ் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால், “சாப்பிட்டால் என்ன தவறு” என்று கூறி டிரம்பின் அழைப்பை ஏற்குமாறு அவரது விளம்பரதாரர் ஊக்கப்படுத்தியதாக டேனியல்ஸ் கூறினார். அவரது இந்த கூற்று நீதிமன்றத்தில் இருந்த சிலர் சிரித்தனர். பின்னர் இரவு உணவிற்கு டிரம்பின் அறைக்கு தான் சென்றதை விவரித்தார். பட்டு பைஜாமா அணிந்திருந்த டிரம்ப் வாசலுக்கு வந்து தன்னை வரவேற்றதாகவும், அதன் பிறகு தான் குளியலறைக்குச் சென்று வந்தபோது, டிரம்ப் பாக்ஸர் ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் மட்டுமே அணிந்து படுக்கையில் படுத்திருந்ததைக் கண்டதாகவும் அவர் கூறினார். பின்னர் அவர்கள் உடலுறவு கொண்டதாகவும், அது முழு சம்மதத்தின் பேரில் நடந்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், அந்த சந்திப்பு தன்னை ஒரு குழப்ப நிலைக்குள் தள்ளியதாக நீதிமன்றத்தில் அவர் கூறினார். டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்பின் வழக்கறிஞர்கள் டேனியல்ஸை குறுக்கு விசாரணை செய்வதற்கு முன்பு, அரசு வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பல முறை எதிர்ப்பு தெரிவித்தனர். டேனியல்ஸின் சாட்சியத்தின் மீது நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் பறந்துவிட்டன என்றும், அரசு வழக்கறிஞர்கள் தான் அதற்கு காரணம் என்றும் வழக்கறிஞர் டோட் பிளான்ச் கூறினார். டிரம்பைப் பற்றிய அவரது விவரங்கள் ‘பாரபட்சமானவை’ என்றும், குறுக்கு விசாரணையின் போது அவற்றை சரிபார்க்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை என்றும் அவர் கூறினார், "இது மீண்டும் விசாரிக்க இயலாத ஒரு சாட்சியமாகும்" என்று பிளான்ச் கூறினார். நீதிபதி மெர்ச்சன் இதை ஒரு தவறான விசாரணையாக கருதவில்லை என்றாலும், "சாட்சியைக் கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருந்தது" என்று ஒப்புக்கொண்டார். தனது பதில்களை சுருக்கமாக கூறுவது குறித்து டேனியல்ஸிடம் ஹாஃபிங்கர் பேசுவார் என்றார். "நீங்கள் சொல்லும் விவரங்களின் அளவு தேவையற்றது," என்று அவர் கூறினார். டிரம்பின் வழக்கறிஞர் சூசன் நெச்செலஸ், டேனியல்ஸின் நோக்கங்களையும் கடந்த கால சம்பவங்கள் குறித்த சாட்சியங்களையும் சந்தேகத்திற்கு உட்படுத்தும் நோக்கில் ஒரு கடுமையான குறுக்கு விசாரணையை முன்னெடுத்தார். இரண்டு பெண்களும் சில சமயங்களில் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். டிரம்பைப் பற்றிய டேனியல்ஸின் அறிக்கைகளை நெச்செலஸ் கொண்டு வந்ததால், அவரது வளர்ப்பை இது கேள்விக்குள்ளாக்கியது மற்றும் கடந்த காலத்தில் நடந்ததாக டேனியல்ஸ் கூறிய சில சம்பவங்கள் இட்டுக்கட்டியது என்று கூறியதால் விவாதங்கள் மேலும் மோசமாகின. நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்ற விசாரணை ‘சிறப்பாக நடக்கிறது’ என்று கூறினார். சாட்சியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு, இறுதியில் டேனியல்ஸின் சாட்சியம் தகுதியுடையதா என்று நீதிபதிகள் எடை போடுவார்கள். நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டதும், "திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்" என்று நீதிபதி மெர்ச்சன் தனது வழக்கமான அறிவுறுத்தலை மீண்டும் ஒருமுறை வழங்கினார். https://www.bbc.com/tamil/articles/cll472jq4jmo
  13. 08 MAY, 2024 | 06:39 PM (ஆர்.சேதுராமன்) போயிங் நிறு­வனம் தயா­ரித்த ஸ்டார்­லைனர் எனும் புதிய விண்­க­லத்தின் மூலம் மனி­தர்­களை விண்­வெ­ளிக்கு அனுப்பும் முதல் பயணமானது, ­விண்­கலம் ஏவப்­ப­டு­வ­தற்கு 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் ஒத்­திவைக்­கப்­பட்­டது. அமெ­ரிக்­காவின் பச் வில்மோர் (61) மற்றும் சுனி வில்­லியம்ஸ் எனும் சுனிதா வில்­லியம்ஸ் (58) ஆகியோர் இவ்­விண்­க­லத்தின் மூலம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு பய­ணிக்­க­வி­ருந்­தனர். புளோ­ரிடா மாநி­லத்தின் கேப் கனா­வரால் விண்­வெளி ஏவு­த­ளத்­தி­லி­ருந்து உள்ளூர் நேரப்­படி திங்கள் இரவு 10.34 மணிக்கு (இலங்கை, இந்­திய நேரப்­படி நேற்­று­ செவ்வாய் (07) காலை 8.04 மணிக்கு) யுனைடெட் லோஞ்ச் அலை­யன்ஸின் அட்லஸ் 5 என்.22 ரக ரொக்கெட் மூலம் விண்­வெ­ளிக்கு ஏவப்­ப­ட­வி­ருந்­தது. எனினும், விண்­வெளி வீரர்­க­ளான பச் வில்மோர், சுனி வில்­லியம்ஸ் ஆகியோர் விண்­க­லத்தில் அவர்­களின் ஆச­னங்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், இப்­ப­யணம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. ஸ்டார்­லைனர் விண்­க­லத்தை விண்­வெ­ளி­க்கு ஏவு­வ­தற்­கான அட்லஸ்-5 ரொக்கெட்டின் திரவ ஒட்­சிசன் குழாய் வால்வு ஒன்றில் சத்­த­மொன்று ஏற்­ப­டு­வதை பொறி­யி­ய­லா­ளர்கள் அவ­தா­னித்­த­தை­ய­டுத்து, இப்­ப­ய­ணத்தை ஒத்­தி­வைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அனைத்து குறை­பா­டு­களும் நிவர்த்­தி­ செய்­யப்­பட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் தவிர மேற்படி பயணம் இரத்து செய்­யப்­படும் என ஏற்­கெ­னவே அதி­கா­ரிகள் அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அட்லஸ்-5 ரொக்­கெட்டை தயா­ரித்த யுனைடெட் லோஞ்ச் அலையன்ஸ் (யூ.எல்.ஏ) நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டொரி புரூனோ, உள்ளூர் நேரப்­படி திங்கள் நள்­ளி­ரவு நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் பேசு­கையில், வால்வு பகு­தியில் ஏற்­பட்ட தேய்வு கார­ண­மாக மேற்­படி அசா­தா­ரண அதிர்­வுகள் ஏற்­பட்­டி­ருக்­கலாம் எனக் கூறினார். எனினும், விண்­க­லத்தில் பயணம் செய்­ய­வி­ருந்­த­வர்கள் ஒரு­போதும் ஆபத்தில் இருக்­க­வில்லை எனவும் அவர் கூறினார். மேற்­படி தேய்வு குறித்து பொறி­யி­ய­லா­ளர்கள் ஆராய்ந்து, அதே பாகத்தை மீளப் பயன்­ப­டுத்­து­வதா அல்­லது புதிய வால்வை பொருத்­து­வ­தற்­காக ரொக்­கெட்டை தொழிற்­சா­லைக்கு எடுத்துச் செல்­வதா என்­பதை தீர்­மா­னிப்பர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முழு­மை­யான மதிப்­பீட்­டுக்கு மேல­திக நேரம் தேவைப்­படும் எனவும், இந்த விண்­கலம் மே 10ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் ஏவு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட மாட்­டாது எனவும் யூ.எல்.ஏ. நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. இலோன் மஸ்­குக்கு சொந்­த­மான ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வனம் தயா­ரித்த 'க்ரூ ட்ரகன்' விண்­க­ல­மானது மனி­தர்­களை சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு ஏற்றிச் சென்ற முத­லா­வது தனியார் நிறு­வன விண்­க­ல­மாக உள்­ளது. ஸ்டார்­லைனர் விண்­கல சோதனை வெற்­றி­ய­டைந்தால், சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு மனி­தர்கள் பய­ணிக்­கக்­கூ­டிய இரண்­டா­வது விண்­க­ல­மாக அதற்கு நாசா நிறு­வனம் சான்­ற­ளிக்கும். பச் வில்மோர், சுனி வில்­லியம்ஸ் இரு­வரும் அமெ­ரிக்க கடற்­ப­டை­யினால் பயிற்­று­விக்­கப்­பட்ட விமா­னி­க­ளாவர். நாசா விண்­வெளி வீரர்­க­ளான இவர்கள் இரு­வரும் தலா இரு தட­வைகள் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்று திரும்­பி­யுள்­ளனர். ஒரு தடவை நாசாவின் 'ஷட்டில்' விண்­கலம் மூலமும் மற்­றொரு தடவை ரஷ்­யாவின் சோயுஸ் விண்­கலம் மூலமும் அவர்கள் இப்­ப­ய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். ஸ்டார்­லைனர் விண்­கலம் மூல­மான பய­ணத்தில் அதன் செயற்­பாட்டு ஆற்­றல்­களை இவர்கள் பரி­சோ­திக்­க­வுள்­ளனர். ஏற்­கெ­னவே போயிங் ஸ்டார்­லைனர் விண்­க­லத்தின் மனி­தர்கள் அற்ற முதல் பய­ணமும் பல வரு­ட­கால தாம­தத்தின் பின்­னரே 2019ஆம் ஆண்டு நிறை­வே­றி­யது. பிர­சித்தி பெற்ற விமான தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் ஒன்­றான போயிங், தனது 737 மெக்ஸ் ரக விமா­னங்­களின் கோளா­றுகள் தொடர்­பாக கடந்த சில வரு­டங்­க­ளாக சர்ச்­சை­களை எதிர்­கொண்­டி­ருந்­தது. ஸ்டார் லைனர் விண்­க­லத்தின் மூலம் மனி­தர்­களை சர்­வ­தேச விண்­வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் வெற்றியடைந்தால் அது போயிங் நிறுவனத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மனித விண்வெளிப் பயணங்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்கு 2014ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்துடன் நாசா நிறுவனம் 4.2 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்தது. அதேவேளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா 2.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்திருந்தது. https://www.virakesari.lk/article/183006
  14. 2 ஓவர்களுக்கு 7 ஓட்டம் தான் வியாஸ்காந்த் கொடுத்துள்ளார்.
  15. கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்! 08 MAY, 2024 | 11:14 AM உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கானதடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்டது. இது அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த சூழலில் அண்மையில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. இது அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி அந்நிறுவனம் கோவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும் விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இதனை பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல். கடந்த மார்ச் மாதம் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்தின் வசம் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்துள்ளது. இது நேற்று (மே 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. https://www.virakesari.lk/article/182951
  16. Orangutan ஆச்சர்யம்: ஒரே வாரத்தில் காணாமல் போன காயம்; மூலிகை சிகிச்சை செய்த ஒராங்குட்டான் குரங்கு இந்த ஒராங்குட்டான் குரங்கின் முகத்தில் பெரிய காயம் இருந்தது. ஆனால், ஒரு மாதம் கழித்து அந்தக் காயம் மறைந்துவிட்டது. அந்த ஒராங்குட்டான் குரங்கே தன்னுடைய காயத்தை ஆற்றிக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் குரங்கின் பெயர் ரக்கூஸ். மற்ற ஆண் குரங்குகளுடன் சண்டையிடும்போது பெரும் சத்தத்தை எழுப்பியது. அந்தச் சத்தத்தை வைத்துத்தான் இந்த குரங்குக்குக் காயம் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் ஊகித்தனர். காயத்தை ஆற்றுவதற்காக, இக்குரங்கு மருத்துவ குணம் கொண்ட தாவரத்தின் இலைகளை மென்று, அதை பேஸ்ட் போன்று செய்து பின்னர் காயத்தில் தடவியுள்ளது. இதனால், அந்தக் காயம் ஒரு மாதத்தில் ஆறியுள்ளது. வனவிலங்கு ஒன்று தன் காயத்திற்கு மருத்துவ தாவரங்கள் மூலம் தானே சிகிச்சை எடுத்துக் கொண்டதை ஆவணப்படுத்தியது இதுவே முதன் முறை.
  17. ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் சினைப்பை புற்றுநோய் என்பது பெரியளவில் பெண்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படாத ஒன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சினைப்பை புற்றுநோய் எப்படி உருவாகிறது, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் பல்வேறு தகவல்களையும் பிபிசி தமிழ் நேயர்களிடம் பகிர்ந்து கொண்டார் புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத். சினைப்பை புற்றுநோய் வருவதற்கான காரணம் என்ன? ஹார்மோன் குறைபாடு, மாதவிலக்கு சுழற்சியில் ஏற்படும் குறைபாடுகள், கருத்தரிக்காமல் இருக்கக்கூடிய சில சூழல்கள் மற்றும் பிரச்னைகள், குறிப்பாக மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் உடற்பருமன் போன்றவை சினைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES சில நேரங்களில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் அதிகப்படியாக சுரந்தாலும் பிரச்னைகள் ஏற்பட்டு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் பிரசவித்த பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கவில்லை என்றாலும், பிரசவமே நடக்காத பெண்களுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவில் சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போது பல பெண்கள் அதிக அளவில் மது பழக்கத்தையும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே பெண்களுடைய ஹார்மோனில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி அது மார்பகப் புற்றுநோய்க்கும் சினைப்பை புற்றுநோய்க்கும் வழி வகுக்குகிறது. சினைப்பை புற்றுநோயை எப்படி கண்டறிவது? பட மூலாதாரம்,GETTY IMAGES துரதிர்ஷ்டவசமாக இப்போதைக்கு சினைப்பை புற்றுநோயின் ஆரம்பநிலையை உடனடியாக நாம் கண்டறிய இயலாது. ஏனென்றால் ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில், வயிறு வலி குறைவான ரத்தப்போக்கு என ஒரு சில அறிகுறிகள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருப்பதால் அவற்றை சினைப்பை புற்றுநோய் என்று எடுத்துக்கொள்ள முடியாது. பிரிட்டனில் சினைப்பை புற்றுநோயைக் கண்டறிய இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சினைப்பை புற்றுநோயின் ஆரம்ப நிலையை அவர்களால் ஸ்க்ரீனிங் (Screening) மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சினைப்பை புற்றுநோயின் ஆரம்பக்கட்ட பரிசோதனை என்பது தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் ஆரம்ப நிலையை வரும் முன் காப்போம் என்ற எண்ணத்தின் மூலம் நாம் தடுக்க முடியும். ஒரு குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளுக்கு உட்பட்டு பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளும் மரபணு காரணமாக ஏற்படக்கூடிய நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. படக்குறிப்பு,புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத். ஆகையால் இரண்டு தலைமுறைகளில் குடும்பத்தில் ஒரு பெண்ணின் அக்கா, தங்கை மற்றும் சித்தி பெண், பெரியம்மா பெண் போன்றவர்களுக்கு புற்றுநோய் இருந்ததாக நீங்கள் கண்டறிந்தால் 30 வயதுக்குப் பிறகு நீங்களும் உங்களுக்கான முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் அவசியம். சினைப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கு சிகிச்சை முறை இருக்கிறதா? நிச்சயம் சிகிச்சைகள் இருக்கின்றன. சிகிச்சை என்பதைத் தாண்டி சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்த மரபணு மாற்றம் காரணமாக இந்த சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதையும் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக நாம் கண்டறிய முடியும். நாங்கள் மருத்துவத்துறையில் 'Molecular Studies' என்று சொல்லுவோம். இந்தியாவில் இருக்கக்கூடிய பல நகரங்களில் இந்த வசதிகள் வந்திருக்கின்றன. சினைப்பை புற்றுநோய் 2, 3 மற்றும் 4ஆம் கட்டத்தில் இருந்தாலும் அதை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். நோய் எந்தெந்த இடங்களில் பரவி இருக்கிறது என்பதை ஸ்கேன் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதற்கு இரண்டு சிகிச்சைகள் இருக்கின்றன, ஒன்று அறுவை சிகிச்சை மற்றொன்று கீமோதெரபி. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தின் மூலம் பக்க விளைவுகள் இல்லாத கீமோதெரபி சிகிச்சையையும் நாம் வழங்க முடியும். மேலும் இவைற்றையெல்லாம் தாண்டி டார்கெட் தெரபி (Target Therapy) என்ற ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. புற்றுநோய் கட்டி வளர்வதற்கு ரத்த நாளங்கள் தேவை. அதேபோல் புற்றுநோய் கட்டி இன்னொரு இடத்தில் பரவுவதற்கும் ரத்த நாளங்கள் தேவை. புற்றுநோய் கட்டி இருந்த இடத்தில் ரத்த நாளங்கள் வளராமல் இருப்பதற்கு டார்கெட் தெரபி சிகிச்சை இருக்கிறது. அதற்கான மருத்துவ வசதிகளும் இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்றன. சினைப்பை புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சினைப்பை புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு முதன்மையான தற்காப்பு, பெண்கள் தங்களுடைய உடல் நலனில் சிறந்த அக்கறையைச் செலுத்துவதுதான். நமக்குத்தான் திருமணம் ஆகிவிட்டதே, குழந்தை பிறந்துவிட்டதே, இனி என்ன என்று நினைக்காமல் எல்லா வயதிலும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்து தங்களுடைய உடல் எடையை சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும். அதேபோல தங்களுடைய உடலில் இருக்கக்கூடிய ஹார்மோன் சமநிலை சரியாக இருக்க வேண்டுமெனில் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES இதைவிட மிக முக்கியம் ஸ்கிரீனிங். 30 வயதைத் தாண்டிய பெண்கள் சினைப்பை புற்றுநோய் பரிசோதனையையும், 40 வயதைத் தாண்டிய பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையையும் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். அதேபோல வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் ஏற்கெனவே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிந்தால் 30 வயதிற்குப் பிறகு பெண்கள் தங்களுடைய மகப்பேறு மருத்துவரை அணுகி டிரான்ஸ்வஜினல் ஸ்கேன் (Transvaginal Scan) என்ற பரிசோதனையை சீரான இடைவெளியில் மேற்கொண்டால் கருமுட்டையில் மற்றும் கர்ப்பப்பையில் ஏதாவது சிறிய மாற்றம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். டிரான்ஸ்வஜினல் ஸ்கேன் பரிசோதனை என்பது இரண்டு நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு சிறிய பரிசோதனை. மேலும் தங்களுடைய உடல் உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவுகளை உண்பது, ஹார்மோன் சமநிலையைப் பேணுவது, உயரத்திற்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது போன்றவற்றைச் சரியாகச் செய்தாலே எல்லா நோய்களில் இருந்தும் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c9wz28yl13do
  18. டிரம்புடன் ஹோட்டல் அறையில் நடந்தது என்ன? : ஒன்றையும் மறைக்காமல் சொன்ன ஆபாச பட நடிகை : 'போதும்' என நிறுத்திய நீதிபதி Published By: RAJEEBAN 08 MAY, 2024 | 12:20 PM அமெரிக்காவின் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டெனியல்ஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டமை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையை மறைப்பதற்காக ஸ்டோர்மி டெனியல்ஸிற்கு பணம் வழங்கியமை தொடர்பான வழக்கு விசாரணை தொடர்கின்ற நிலையில் ஆபாசபட நடிகை டொனால்ட் டிரம்புடன் 2006 இல் உறவுகொண்ட தருணங்களை விபரித்துள்ளார். ஒரு பிரபலமான கோல்வ் போட்டியில் எப்படி இருவரும் சந்தித்தார்கள். டிரம்பின் லேக் தஹோ ஹோட்டல் அறைக்கு சென்றவேளை என்ன நடந்தது என்பதையும் அவர் விபரித்துள்ளார். உள்ளாடைகளுடன் காணப்பட்ட டிரம்ப் எப்படி தனக்காக போஸ்கொடுத்தார் என்பதையும் ஆபாச பட நடிகை நீதிமன்றில் விபரித்துள்ளார். ஸ்டோமி டெனியல்ஸ் பல விபரங்களை வெளிப்படயாக விபரித்ததால் நீதிபதி அவற்றை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். டிரம்பின் ஹோட்டல் அறையில் என்ன காணப்பட்டது - டைல்கள் என்ன நிறத்தில் காணப்பட்டன எவ்வாறான மேசை காணப்பட்டது என்பதையும் அவர் விபரித்துள்ளார். இரவு உணவின் போது என்ன விடயங்கள் பேசப்பட்டன, ஆபாசப்பட திரைப்படத்துறை பற்றி டிரம்ப் கேள்வி எழுப்பினார். பாலியல் உறவு பற்றி அவர் அவ்வேளை பேசவில்லை, இது என்னை கவர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் கழிவறைக்கு சென்றேன் வெளியே வந்து பார்த்தவேளை ஹோட்டல் கட்டிலில் பொக்சர் டீசேர்ட்டுன் காணப்பட்டார். நான் அச்சத்தினால் அதிர்ந்துபோனேன், அங்கு வேறு எவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பார்கள் என நான் நினைத்துகூடபார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182959
  19. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது. கோவிஷீல்ட் தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் ஆய்வு மற்றும் மருத்துவ நிபணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்ப வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301141
  20. ரஃபாவின் மருத்துவமனையிலிருந்து தப்பியோடும் நோயாளிகள், மருத்துவர்கள்! - சிறுநீரக பாதிப்புக்குள்ளான 200 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து Published By: RAJEEBAN 08 MAY, 2024 | 11:10 AM ரஃபாவின் பிரதான மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களும் நோயாளிகளும் தப்பியோடுகின்றனர் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்சம் காரணமாக நோயாளிகளும் மருத்துவர்களும் தப்பியோடுகின்றனர் நோயாளிகளை ரஃபா எல்லை ஊடாக எகிப்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் மருத்துவர்கள் நோயாளிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. மோதல் பகுதி என இஸ்ரேல் அறிவித்துள்ள காசாவின் தென்பகுதியில் அபுயூசுவ்அல் நஜார் மருத்துவமனை காணப்படுகின்றது. இந்த மருத்துவமனை முற்றாக இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. இஸ்ரேல் இந்த மருத்துவமனையை மோதல் களத்தின் மையத்திற்குள் சிக்கவைத்துள்ளதால் அந்த மருத்துவமனை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் காரணமாக நோயாளிகளும் மருத்துவர்களும் வெளியேறுகின்றனர் என வைத்தியர் மர்வான் அல் ஹம்ஸ் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். சிறுநீரக நோயாளிகளிற்கான பகுதி மாத்திரமே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை மூடப்பட்டால் சிறுநீரக நோயாளிகள் 200 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்க்கிரட் ஹரிஸ் தெரிவித்துள்ளார். சிறுநீரகம் செயல் இழந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருத்துவமனையே உயிருடன் வைத்திருக்கின்றது இந்த மருத்துவமனை செயல் இழந்தால் அவர்கள் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182947
  21. 08 MAY, 2024 | 04:04 PM (எம்.நியூட்டன்) மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று (08) வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/182979
  22. 08 MAY, 2024 | 11:55 AM முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/182955
  23. அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல், சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் அவுஸ்திரேலிய டொலர்கள் 29,710 இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஒக்டோபரில், இந்தத் தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டது. சர்வதேச மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவது அவுஸ்திரேலியாவின் முன்னணி வருமானமாக அமைந்திருக்கிறது. இதற்கமைய 2022/23 ஆம் ஆண்டில் 36.4 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வருமானமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301138
  24. 08 MAY, 2024 | 12:05 PM இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையம் செயற்கை கை, கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது. செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு கடந்த 3ஆம் திகதி தொடங்கிய இந்த பயிலரங்கம் எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவடையும். 375 இராணுவ வீரர்களுக்கும், கடற்படை விமானப்படை, மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த 75 பேருக்கும் செயற்கை கை, கால்கள் விநியோகிக்கப்படவுள்ளன. மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிலரங்கின்போது 04 இராணுவ உறுப்பினர்களுக்கு செயற்கை கை, கால்கள் அடையாளமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/182954
  25. 08 MAY, 2024 | 11:30 AM இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லுபடியற்றது என அறிவிக்க வேண்டும் எனவும் விஜேரத்னவை பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கி, விசாரணை முடியும் வரை அவருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், கூட்டத்தின் நிமிடங்கள், தேர்வுக்கான காரணங்கள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பேரவை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்னவை நியமித்தமையை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SC FR 110/2024) தாக்கல் செய்துள்ளது. 2020 ஜனவரி முதல் அதன் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய விஜேரத்ன, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதாகவும், நடைமுறை நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் TISLஇன் மனு வாதிடுகிறது. இந்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் அல்லது விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்துக்கு உட்பட்டு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் TISL உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், விஜேரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாவதற்குரிய அனைத்து சட்ட ரீதியான நிபந்தனைகளையும் தகுதிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் இம்மனு வாதிடுகிறது. மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், அரசியலமைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர், தலைவர், ஆணையாளர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பணிப்பாளர் நாயகமாக விஜேரத்ன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு TISL உயர் நீதிமன்றத்திடம் கோருகிறது. இவ்வாறான முறையற்ற நியமனங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை TISL நிறுவனமானது சுட்டிக்காட்டியுள்ளது. நடைமுறைச் சீர்கேடுகள் தடையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலம் சாத்தியமான பொருளாதார மற்றும் நற்பெயர் சார் விளைவுகளை குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும், தவறுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், திருத்துவதற்கும் தவறினால், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மை, பொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயரை எதிர்மறையாக பாதிக்கும் என்று மனு வலியுறுத்துகிறது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது சட்டப்பூர்வ தீர்வுகளை தேடுவதோடு, பணிப்பாளர் நாயகம் பதவிக்குரிய எதிர்கால நியமனங்களுக்கான, தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை நிறுவுமாறு அரசியலமைப்புப் பேரவை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கோருகிறது. https://www.virakesari.lk/article/182948

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.