Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. Published By: RAJEEBAN 19 APR, 2024 | 05:53 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல் பொருளாதார சமூக கலாச்சார பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர் தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும் குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம் நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள் அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர் நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள். காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார். பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  3. Published By: DIGITAL DESK 3 19 APR, 2024 | 03:55 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல், மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  4. செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  5. அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  6. அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர். உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  7. கசூரினா பீச், சாட்டி பீச் போன்றவற்றிலும் உயிர்காப்பு நீச்சல் பிரிவு இருக்கிறதா?
  8. ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
  9. Published By: DIGITAL DESK 3 19 APR, 2024 | 02:36 PM (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடயம் தொடர்பில் பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர் கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  10. இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  11. கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
  12. மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர். தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும். பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  13. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
  14. Published By: NANTHINI 19 APR, 2024 | 01:12 PM 1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
  15. Published By: VISHNU 19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல் ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  17. Published By: VISHNU 19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும். இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  18. Published By: VISHNU 18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  19. ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU 19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப் போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  20. 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய சாதனையை முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும். எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  21. இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன. பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம். சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும். பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம். பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது. எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார். 'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
  24. ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  25. 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன. ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது. கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார். வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது. பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார். மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.