Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by சுப.சோமசுந்தரம்

  1. இப்பாடலைச் சிறிது முன்பே கேட்டதுண்டு. எத்தனை முறை கேட்டாலும், சிந்திக்க வைப்பது. பாட்டையும் பாடுபவரையும் ரசிக்க வைப்பது. யாழில் எனது பழைய பதிவு ஒன்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது :
  2. இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு வாய்த்த சிறந்த ஆங்கிலப் பேராசிரியர் சிலர் ஆங்கில இலக்கியக் காட்சியையோ கவிதையையோ உணர்வுபூர்வமாய் நம் அகக்கண்ணில் நிறுத்தும்போது (அத்தகையோர் வாய்க்கப் பெறுதல் நமக்கான வரம்), நான் ஓரளவு ரசித்தது என்னவோ உண்மைதான். இருப்பினும் என்னை மெய் மறக்கச் செய்யும் தமிழின் இலக்கியச்சுவை அதில் தோன்றுவதில்லையே என்று குறைப்பட்டுக் கொள்வதுண்டு. வலுக்கட்டாயமாக ஏதோ உணர்வைக் கடத்த ஆங்கிலப் பேராசிரியர் தம் உடலை வருத்தி ஏன் இவ்வளவு மெனக்கிடுகிறார் என்றெல்லாம் நினைத்தது உண்டு. அந்த வயதில் தேவையில்லாத, பொருத்தமில்லாத ஒப்பீட்டினால் என் மனதில் அக்குறை தோன்றியது என உணர வயது தேவைப்படுகிறது. வயதாவதின் மேன்மையை வயது ஆகியே உணர்த்துகிறது. பல்லாயிரமாண்டு மூத்த ஒரு மொழியுடன் இன்றைய வடிவத்திற்கு வந்து சுமார் ஐநூறு வருடங்களே ஆன ஒரு மொழியை ஒப்பீடு செய்வது வேடிக்கைதானே ! மடமையும் கூட. ஆயினும் நமது அக இலக்கியங்களில் வாய்க்கும் உள்ளுறை உவமம், இறைச்சி போல அவர்களிடமும் அருமையான மொழியாட்சி ஓரளவு உண்டு என்பதை ஏற்கத்தான் வேண்டும்; ஏற்று ரசிக்கத்தான் வேண்டும். ஆங்கிலத்தின் இன்றைய வடிவமானாலும் இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளில் இருந்து தோன்றியமையின் அச்செம்மொழிகளின் கூறுகள் அமைந்து திகழ்வது இயல்புதானே !அவ்வகையில் என்னைக் கவர்ந்த அமெரிக்கக் கவிஞரான இராபர்ட் ஃப்ராஸ்ட் அவர்களின் கவிநயத்தை இங்கே தொட்டுக்காட்ட எண்ணம். மிகவும் எளிமையான வரிகளில் பாமரனுக்கும் பயனுள்ள செய்தியை உள்ளார்ந்த பொருளாய் இலாவகமாகச் சொல்லிச் செல்லும் நேர்த்தி அவருக்கே உரியது. அவர் சொல்ல வருகிற உயரிய சிந்தனை கவிதையில் ஓரிடத்தில் வந்து ஏனைய வரிகள் அதனை மேலும் வலுப்பெறச் செய்வதாகவோ அல்லது அழகியல் சார்ந்த வர்ணனையாகவோ இடம்பெறக் காணலாம். எனவே நம் ரசனைக்குத் தீனி போடும் கவிஞராக மட்டுமின்றி மானிடர்க்கு உயரிய வாழ்வியல் கருத்துகளை அள்ளித் தெளிக்கும் சமூகச் செயற்பாட்டாளராகவும் மிளிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட். சில இடங்களை எடுத்துக்காட்டலாம் என்று நினைக்கிறேன். முழுக்கவிதையையும் வாசகருக்கு விடுத்து மையச் செய்தியைக் கொண்டுள்ள வரிகளை மட்டும் நாம் கண்டு களிக்கலாமே ! முதலில், 1915 இல் வெளியிடப்பட்ட 'The Road not taken' (தேர்ந்தெடுக்காத பாதை) எனும் கவிதையைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வரிகள் கவிதையின் தொடக்கத்திலேயே வந்து கவிஞரின் சிந்தனைப் பாதையில் நம்மையும் இட்டுச் செல்கின்றன. "Two roads diverged in a yellow wood And sorry I could not travel both" என்று ஆரம்பித்து, "I took the one less traveled by And that has made all the difference" என்று கவிதை நிறைவுறுகிறது. "கானகத்தில் இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன; என்னால் இரண்டிலும் பயணிக்க முடியவில்லை" என்று வெள்ளந்தியாய்ச் சொல்லித் தொடங்குகிறது பாடல். கவிதையின் மையப் பொருளே இந்த இரு வரிகளில் சுருக்கமாகவும் உருவகமாகவும் வெளிப்படுகின்றது. கானகம் உலகமாகவும் பாதைகள் வாழ்க்கைப் பாதைகளாகவும் உருவகிக்கப் பெறுகின்றன. இடைப்பட்ட வரிகளிலிருந்து, அந்த இரு பாதைகளும் இலைகள் சொரிந்து பெரிய அளவில் வேறுபாடின்றி தென்பட்டன என்பது தெளிவு. வனத்தில் வழி சொல்வோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கத்தானே வேண்டும் ! இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாதே ! உட்பொருள் யாதெனில் வாழ்வில் நம்மால் தீர்மானிக்க முடியாத முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்தே ஆக வேண்டும் என்னும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம். நாம் எடுத்த முடிவு தவறாகவும் முடியலாம். அப்போது ஐயோ என்று நிலை குலைந்து போகாமல், "சென்றதினி மீளாது மூடரே! நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ண மதைத் திண்ணமுற இசைத்துத் தின்றுவிளையாடிக் கொண்டு இன்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா" என்ற பாரதியின் சொல் கேட்டு முன்னேறுவது சிறப்பு என்பதையே, "I could not travel both" என்பது சுட்டுகிறது எனலாம். ஏனெனில் அப்போது பாதையின் முடிவு தெளிவாய் இல்லாததால் எந்த முடிவும் தோல்வியை சந்தித்திருக்கலாமே ! மேலும் பாடலில் இறுதியாக வரும் இரண்டு வரிகள், "(இலை தழை அதிகம் கிடந்த) மக்கள் அதிகம் பயணிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே அனைத்து விளைவுகளுக்கும் காரணியாய் அமைந்தது" என்பதே. இதனை மக்கள் தத்தம் இயல்புக்கு ஏற்ப, அனுபவத்திற்கு ஏற்ப பொருள் கொள்ளலாம். வெற்றி பெற்றோர் தனி வழியைத் தேர்வு செய்து வெற்றி பெற்ற தம் தனித்தன்மையை மெச்சிக் கொள்ளலாம். தோல்வியுற்றோர் ஊரோடு ஒட்ட ஒழுகும் ஒப்புரவு இன்மையால் தம் தோல்வியை எண்ணி வருந்தலாம். ஆனாலும் விளைவை எண்ணி வருந்த வேண்டியதில்லை என்பதையே முதல் இரு வரிகள் சுட்டுவதை மறக்க வேண்டியதில்லை. காடு மஞ்சள் நிறத்தது என்பதை 'yellow wood' என்று பாடலின் முதல் வரியில் வாசிக்கிறோம். அது இலையுதிர் காலத்தைக் குறிப்பது. அஃதாவது கவிஞரின் வயது முதிர்ந்த நிலையை உருவகிப்பதாய்க் கொள்வது பாடலை ரசிப்போரின் உரிமை. இது போன்ற அழகியல் பொதுவாக இராபர்ட் ஃப்ராஸ்டின் அனைத்துப் பாடல்களிலும் காணக் கிடைப்பது. அடுத்து நம் நினைவுக்கு வருவது இராபர்ட் ஃப்ராஸ்டின் 'Stopping by Woods on a snowy evening' என்ற கவிதை. குறிப்பாக அதில் இறுதியாக வரும் வரிகள் : "The woods are lovely, dark and deep But I have promises to keep And miles to go before I sleep And miles to go before I sleep" பொருள் : "காடு மனதைக் கொள்ளை கொள்வதாகவும், இருள் கவிந்தும், ஆழ்நிலையொடும் அமையப்பெற்றுள்ளது. ஆனால் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. நான் அடங்கும் முன் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் உண்டு". உள்ளார்ந்த பொருள் : "வாழ்வில் என் மனம் கவர்ந்த பொருட்கள், செயல்கள் உண்டு. ஆனால் அவற்றில் முழுமையாக ஈடுபட்டுத் தன்னிலை மறந்து நான் வாழ முடியாது. ஏனெனில் (மனதிற்குப் பிடிக்கிறதோ இல்லையோ) வேறு கடமைகள் உலகியல் வாழ்வில் எனக்கு உண்டு. அக்கடமைப் பாதையில் நான் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதாவது அவற்றை நிறைவேற்ற எனக்கான கால வெளி குறைவாகவே உள்ளது". மேற்கூறிய கவிதைகளில் வாழ்வியல் தத்துவங்களை வேற்றுப்பொருளாய் வைத்த ஃபிராஸ்ட் தமது Fire and Ice என்ற குறுங்கவிதையை இயல்பு நவிற்சியாய்த் தாமே நேரிடையாய் சொல்லிச் செல்கிறார். "Some say the world will end in fire Some say in ice From what I've tasted of desire I hold with those who favor fire But if it had to perish twice I think I know enough of hate To know that for destruction Ice is also great And would suffice" "சிலர் இந்த பூமி நெருப்பில் அழியும் என்கின்றனர்; சிலர் பனியில் உறையும் என்கின்றனர். பேராசை எனும் தீயை உணர்ந்த நான் 'நெருப்பு' அணியினருடன் நிற்கிறேன். பூமி இருமுறை அழிய வேண்டுமெனில், வெறுப்பின் (அமைதியாய் அழிக்கும் தன்மை) உணர்ந்த நான் பனியின் ஆற்றலும் பெரிது என்பேன்; அழிவிற்கு அதுவே போதும் என்பேன்" என்பதே பாடற் பொருள். அஃதாவது பேராசை நெருப்பைப் போல் அதிதீவிரமாய் உலகை அழிக்கவல்லது என்பதும், வெறுப்பு பனியைப் போல் அமைதியாய் உள்ளிருந்து அழிக்கவல்லது என்பதும் கவிதையின் செய்தியாம். அடுத்து வரும் குறுங்கவிதை 'Dust of snow' (பனித் தூசி). "The way a crow Shook down on me The dust of snow From a hemlock tree Has given my heart A change of mood And saved some part Of a day I had rued" "ஒரு காகம் ஹெம்லாக் (hemlock) மரத்தில் தங்கிய பனித்துகள்களை என் மீது விழச் செய்ததானது, சோக மனநிலையில் நாளின் ஒரு பகுதியைப் பாழாக்கிய நான் எஞ்சிய நாளைக் காப்பாற்ற ஏதுவாகியது" என்று ஒரு சாதாரண நிகழ்வு துயரத்தை மாற்றியதைப் பகிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட். "இதுவும் கடந்து போம்" என்னும் நேர்மறை எண்ணத்தைத் துயருற்ற உள்ளத்தில் விதைத்துச் செல்கிறார் கவிஞர். வெறுமனே அறம் பேசுபவராக இல்லாமல் கவிஞராயும் உள்ளமையால், மேலும் ஒரு உட்பொருளைப் பொதிந்து வைக்கிறார். மேற்கத்திய உலகில் காகம் ஒரு ராசியற்ற பறவையாகவும் (இங்கு மட்டுமென்ன, சனியனின் வாகனமாய் வைத்தானே !), ஹெம்லாக் மரம் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாகவும் கொள்ளப்படுகின்றன. எதிர்மறையான பொருட்கள் கூட நமக்கு நேர்மைறையான பலன்களைத் தரலாம் என்று கவிதையின் வெளிப்பாடாகச் சுட்டுவர் கவியுலகில் சஞ்சரிப்போர். ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு பதமாய் ஃபிராஸ்டின் கவிநயம் பேசினோம். இனி வயிறார உண்டு மகிழ்வது வாசகர்தம் உரிமை. ஃபிராஸ்டின் பொன்மொழி ஒன்றைச் சொல்லி தற்போது கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம். "A diplomat is a man who always remembers a woman's birthday but never remembers her age". "ஒரு ராஜதந்திரி (சாதுரியமானவர், விவேகம் நிறைந்தவர் என்றெல்லாம் அடுக்கலாம்) என்பவர் யாரெனில், ஒரு பெண்ணின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு அவளது வயதை நினைவில் வைக்காதவர்" என்பது பொருள். பெண்ணின் பிறந்தநாள், வயது போன்றவை இங்கு வேற்றுப்பொருளாய் அமைவன. "மானிட உறவில், பிறரது தேவையான விவரங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை அல்லது பிறர்க்கு எக்கச்சக்கமான விவரங்களை மனதில் ஏற்றாத நிலையே விவேகம்" என்பதே கவிஞர் கூற வந்த பொதுப்பொருள். ஒரு கவிஞனின் கவித்துவம் கவிதையில் மட்டும்தான் வெளிப்படும் என்றில்லை. அவன் கவிதையாகவே வாழ்பவன் என்று காட்டியவர் இராபர்ட் ஃப்ராஸ்ட் எனக் கொண்டாடலாமே !
  3. இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம் தோழர் திருமுருகன் காந்தியின் தலைமையிலான மே 17 இயக்கம் இந்தி ஆதிக்க எதிர்ப்பினைத் தீவிரமாகக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றுதானே ! மொழி ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11 ஆம் தேதி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்போது என்று கேட்பவர்களுக்கு 'இதற்கு வேறு நல்ல நாள் எது ?' என்று வினாவெதிர் வினாவைத்தான் பதிலாகக் கூற முடியும். இப்போது ஆரம்பிப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்பது உண்மையாக இருந்தால் கூட, இருந்துவிட்டுப் போகட்டுமே ! அப்படியாவது நல்லது நடக்கட்டுமே ! தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுத் துறைகளில் எல்லாம் வடவரை மட்டுமே வைத்து நிரப்புவது எவ்வகையில் சரி ? தமிழ்நாட்டில் வங்கியின் சேவை முகப்பில் (counter) கூட இந்திக்காரர்களை அமர வைப்பதின் நோக்கமென்ன ? தொடர் வண்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகராகக் கூட (TTE) வடவர்கள் ஏன் ? நம் ஆட்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றால் குறுகிய கால அளவிலேயே அங்கே உள்ள மொழியில் தேவையான அளவு பேசக் கற்றுக் கொள்வதைக் காணலாம். வடக்கிலிருந்து வருபவன் எத்தனைக் காலமானாலும் ஆங்கிலம் கூட பேச மெனக்கிடுவதில்லையே, ஏன் ? தன் மொழியே இந்தியாவின் மொழி என்ற மொழி ஆதிக்கத் திமிரன்றி வேறென்ன ? இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் என்பது ஒவ்வொரு காலத்திலும் தமிழன் அவ்வப்போது கையிலெடுக்க வேண்டிய ஒன்றாகி விட்டது. இக்காலகட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்தித் திணிப்பை எக்காலத்திலும் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் - தற்காலத்தில் திக வும் திமுகவும் மட்டுமே - ஏன் அவருடன் கைகோர்க்கவில்லை ? தமிழ்த் தேசியம் (போலியாகவேனும்) பேசித் திரியும் நாதக வினர் எங்கே போனார்கள் ? திருமுருகன் காந்தி தலைமையில் போராட ஏதேனும் மனத்தடை இருக்குமானால், அவர் எந்தத் தலைமையின் கீழும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்லத் தயாராக இருப்பார். அவர் ஓட்டு அரசியல் செய்யவில்லை. காரியம்தான் முக்கியம்; வீரியம் முக்கியமில்லை என்பதை உணர்ந்தவர் திருமுருகன் காந்தி. அவரை ஓரளவு அறிந்தவர் எவருக்கும் இதனைச் சொல்லும் உரிமையுண்டு. அவருக்குப் புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் வருகிறதாக்கும் என்று தனி நபர் விமர்சனத்தில் இறங்கி போராட்டங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அது உண்மையாகவே இருப்பினும், தவறென்ன ? பொருளில்லாமல் ஒரு புல்லைக் கூட இந்த பூமியில் பிடுங்க முடியாது. விமர்சனம் செய்பவர்கள் சமூகப் போராட்டங்களுக்குத் தங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதுதானே ! மேலே குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் கால வேலைகளைக் காரணம் சொல்லி இப்போராட்டத்தில் இறங்கவில்லையாக்கும் என்றே வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சம் அக்கட்சித் தலைமைகள் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கலாமே !அக்கட்சிகளின் பத்திரிக்கைகள் போராட்டத்தின் செய்தியையாவது மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே ! மொழிப்போராட்டம் என்பது தனி மனித பிம்பங்களைக் கட்டமைக்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகப் போராட்டம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். Note the point Your Honour ! திராவிட இயக்க அரசியல் போல என் மனதிற்கு நெருக்கமான இடதுசாரி அரசியலை இங்கே நான் பேசவேயில்லை ! https://www.facebook.com/share/v/1B4uujnoAW/ https://www.facebook.com/share/r/18Pz9oLJnP/
  4. உங்களால் முடியும் ! சோம.அழகு நானும் வாழ்க்கையில் ‘தன்னம்பிக்கை’ கட்டுரைகள், ‘சுய முன்னேற்ற’ கட்டுரைகள் எல்லாம் வரைவேன் என்று தப்பித்தவறி கூட கனவு கண்டதில்லை. But here we are மக்களே! இக்கட்டுரை விளிம்பு நிலையில் அல்லாத அனைத்து மனித உயிர்களுக்குமானது. ‘வாழ்வில் உருப்பட வேண்டுமா? இக்கட்டுரையை உடனடியாக வாசியுங்கள்’ என்றெல்லாம் கூவி அழைப்பது சற்றே மிகையாக இருக்கும். இக்கட்டுரை சிலரைச் சிந்திக்க வைக்கலாம்; ஆமோதிக்க வைக்கலாம்; இன்னும் சில பெருந்தகைகளைக் கூனிக் குறுகி நாண வைக்கலாம்; வேறு சிலரைத் துணுக்குறச் செய்யலாம்….. அல்லது இதன் சாரத்தைத் தூசியைப் போலத் தட்டி விட்டு மீண்டும் தமது வழக்கத்தைத் தொடரவும் வைக்கலாம். இவற்றில் ஏதோ ஒன்றை நிச்சயமாகச் செய்யும். ஏனெனில்… இவ்வளவுதானே சாத்தியக் கூறுகள்! அதி முக்கியமான பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுப்பதே இவ்வெழுத்தின் நோக்கம் - ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது, அதுவும் காசு கொடுத்து. அக்’குறிப்பிட்ட’ பொருளை உருவாக்கியவரிடமே நேராகச் சென்று ‘எனக்கு ஒன்று வேண்டும்’ (உட்பொருள் : இலவசமாக) எனக் கூச்சமில்லாமல் மானமில்லாமல் கேட்டு வைப்பதற்குப் பதில் இன்னொரு உன்னதமான மரியாதையான வழியின் மூலம் அப்பொருளை அடையலாம். அதற்கான கையேடுதான் இக்கட்டுரை. இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அதற்கே உரித்தான பிரத்யேகக் கடைக்குச் செல்லலாம்; அல்லது இணையத்தில் பணிப்பை(order) கொடுக்கவும் செய்யலாம். அடுத்த கட்ட வழிமுறைகளைப் படிப்படியாகக் கடக்க ஓரளவு என்னால் இயன்ற வரை உதவுகிறேன். ஆரம்பிக்கலாங்களா? வேண்டிய அப்பொருளைத் தேர்வு செய்த பின், (ஆண்கள் எனில்) காற்சட்டையின்/ (பெண்கள் எனில்) கைப்பையின் எந்தப் பகுதியில் பணப்பை(wallet/purse) இருக்கிறது என்று அய்யனாரிலிருந்து அல்லா வரை அனைத்து தெய்வங்களையும் ஒரு முறை கும்பிட்டுவிட்டு இடது வலது மூளைகளைக் கசக்கிப் பிழிந்து யோசிக்கவும். விடையைக் கண்டெடுத்துத் தந்த அதே மூளையிடம் நமது கையை அத்திசையில் கொண்டு செல்ல வேண்டி ஆணையிடவும். பலிக்கவில்லை எனில் இறைஞ்சி மன்றாடவும். அதற்கும் மசியவில்லை எனில், ‘மூளையை மீறிச் செயல்பட முடிகிறதா?’ (overriding brain mechanisms) என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் கையைப் பணப்பையை நோக்கிக் கொண்டு செல்லவும். பின்னர் ஒரு நொடி நம்மை நாமே ஜெல்லி மீனாக நினைத்து எதையும் யோசிக்காமல் பணப்பையைத் தொட்டு விட வேண்டும். இப்போது உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்ததைப் போன்றதொரு உணர்வு வரும். அந்தக் கற்பனையான மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வோமாக…. அந்தப் பொருளை…. ஓ! அது எந்தப் பொருள் என்று சொல்லாமலேயே ஊக்கப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேனா? அதுதான்…. புத்தகம், நூல், ஏடு எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அப்’பொருள்’தான். வழமைக்கு மாறாக அன்றைக்குப் பார்த்து Purseல் இருக்கும் zip கடுமையாகச் சிக்கிக் கொண்டிருக்கும் என்பதால் அதைப் பொறுமையாகத் திறக்க முயல வேண்டும். Walletல் உலகின் சக்தி வாய்ந்த பசை ஒட்டியிருப்பதால் அதுவும் கூட பிரிந்து திறந்து கொள்ள மறுக்கும். இரண்டையும் கிழித்தாவது ‘திறந்திடு சீசே’ செய்ய வேண்டும். பணப்பை கிழிந்தால்தான் என்ன? ‘நூல்’தானே வாங்குகிறோம்? தைத்துக் கொள்ளலாம். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி! முயற்சி தன் மெய்வருத்தக் கூலியைத் தந்தே ஆக வேண்டும் ஆதலால் நமது இடையராத உழைப்பின் விளைவாக பை தன் வாயைப் பிளந்து நம்மைப் பாவமாகப் பார்க்கும். அல்லது அது அப்படிப் பார்ப்பதாக நமக்குத் தோன்றும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நம் மனதை இரும்பாகவோ டங்க்ஸ்டனாகவோ டைட்டானியமாகவோ மாற்ற வேண்டிய பொழுது இது. நம் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி ரூபாய்த் தாள்களை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்ட வேண்டும். மிகச்சரியாக இத்தருணத்தில் வாதம் தாக்கி கை செயலிழந்தது போகலாம்; நரம்புத் தளர்ச்சியால் கை நடுக்கம் ஏற்படலாம். துவண்டு போய்விடக் கூடாது! Come on, உங்களால் முடியும். உங்களால் நிச்சயம் முடியும். உலகின் சர்வ வல்லமை பெற்றவராக உங்களை இப்போது கருதிக் கொள்ள வேண்டும். கைகளைக் கம்பீரமாக வலுக்கட்டாயமாகப் பிடிவாதமாக நீட்டிக் காசைக் கொடுத்து விடவும். மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தியவாறே பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் படிநிலைகளும் இன்னல்களும் பணப்பைக்குப் பதில் செயலியின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய விரும்பும் அலைபேசியினருக்கும் பொருந்தும். ஆயிரக் கணக்கில் செலவழித்து வாங்கிய அலைபேசியில் அப்பொருளுக்கான இருநூறு ரூபாயைச் செலுத்துவதற்கு உண்டாகும் மனத்தடையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லையென்றாலும் அந்த மனப்போராட்டத்தைப் பச்சாதாபத்தோடு அணுகும் கடமை… அடக் கண்றாவியே! அதுவும் முடியவில்லை. என்ன மாதிரியான மனநிலை அது? என்னவோ ஒண்ணு… நமது மங்காத மனவலிமையினால் அவ்வளவு பெரிய ரொக்கத்தை அனைத்துத் தடுமாற்றங்களையும் தயக்கங்களையும் கடந்து செலுத்திய பின் ‘க்ளியாங்க்’ என்னும் சத்தத்துடன் ‘பெறப்பட்ட தொகை…. இருநூறு ரூபாய்’ என்னும் குரல் நாராசமாய் ஒலிப்பதாகக் கூட உணர வாய்ப்புண்டு. முதல் முறை காசு கொடுத்து வாங்கும் போது அப்படித்தான் இருக்கும். கை கால் வெடவெடவென உதறலெடுக்கும். அவ்வளவு பெரிய தொகை ஒரேடியாகக் கையை விட்டுப் போகிறதே என்ற சோகம் கவிந்து கொள்ளும். இப்படி ஒரு மாபெரும் தெண்டச் செலவு வாழ்க்கையில் செய்தே இருக்க மாட்டோம் ஆகையால் அச்சோகம் நம்முள் ஒரு குமுறலாகக் கூட மாறலாம். கவலை வேண்டாம்! இதுவும் கடந்து போகும். இதிலிருந்து மீள்வதற்கான உள வலிமையை நிச்சயம் அந்த உப்பிலியப்பன் உரித்தாக்குவாராக. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - யோவான் 16:20, சங்கீதம் 30:5, 126:5, ஏசாயா 61:3 ஆகியவையும் அதையே அருளுகின்றன. ********************************** ‘ஒரு (துவக்க நிலை) எழுத்தாளரின் புத்தகத்தை நான் வாசிப்பதே அவருக்குச் செய்யும் பெரிய உபகாரம். நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கி(!) வாசித்தலை மேற்கொள்வது எனது பெருந்தன்மையை எடுத்துரைக்கிறது’ – இப்படியெல்லாம் அதி மேதாவித்தனமான சிந்தனைகளுடன் வலம் வருவதால்தான் எழுத்தாளரிடமே சென்று “புத்தகம் இன்னும் எனக்கு வரல” என்று தடித்தனமாகக் கேட்க முடிகிறது. “உங்க புத்தகம் எங்கே கிடைக்கும்?” என்று கூட நாகரிகமாகக் கேட்கலாம். நாவுக்கு ஒரு சேதமும் வராது. எழுத்தாளர் அன்பின் மிகுதியாலும் அளவு கடந்த மரியாதையாலும் தமக்கு நெருக்கமான சிலருக்குப் பிரியப்பட்டுத் தாம் எழுதிய புத்தகத்தைத் தருவார்/அனுப்பி வைப்பார். அவ்வாறாக அன்பளிப்பாகப் பெறும் உரிமையைத் தாமாக எடுத்துக் கொள்ளும் இன்னபிற வினோத வினோபா பாவேக்களின் வதனத்திற்கு நேரே ‘சட்டத்தைக் கையில் எடுக்காதீங்க சார்/மேடம்’ என்று ஒரு நாள் சொல்ல ஆசை. இன்னும் சில அரிய பிறவிகள் இருக்கிறார்கள். நேரடியாக எழுத்தாளரிடம் சென்று இலவசமாகக் கேட்கக் கொஞ்சம் வெட்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் போலும். எழுத்தாளர் யாருக்கெல்லாம் விருப்பப்பட்டுக் கொடுத்தாரோ அவர்களில் ஒருவரைப் பிடித்து அவரிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். பிறகு அந்த மரியாதைக்குரிய நபர் எழுத்தாளரிடம் புது பிரதி ஒன்றை மீண்டும் ‘இனாமாக’ப் பெற்று மரியாதையை அனாமத்தாக இழப்பார். இங்கிதமற்று நடந்து கொள்ளும் ஓசி ஆத்மாக்கள் எல்லாம் நல்ல… நல்ல என்பதை விட பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள். இன்றைய காலத்தில் பதிப்பகம் நடத்துவது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைப் பெரும்பாலானோர் உணர்வதே இல்லை. தமது எழுத்து அதற்கான தளத்தைச் சென்று அடைய வேண்டுமெனில் ஓர் எழுத்தாளர் இப்படியெல்லாம் செலவு செய்தே ஆக வேண்டும் என எதிர்ப்பார்க்கும் சமூகத்தின் மேல் என்ன மரியாதை வரும்? ************************** திடீரென இதை எழுதுபொருளாகக் கையிலெடுக்கக் காரணம் தேவா அண்ணாவும் அவரது மனைவி சத்யா அக்காவும் (ஒரு தம்பதியை இப்படி உறவுமுறை சொல்லி அழைக்கக் கூடாதுதான். ஆனால் இப்போது இந்த ஆராய்ச்சி இக்கட்டுரைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதது ஆகையால் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வீர்களாக!). புத்தகங்களைப் பொறுத்த வரை ‘அன்பின் பொருட்டு’ என்பதைச் சற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இவர்கள். “அட பரவாயில்லை! இருக்கட்டும்” என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாகக் காசு கொடுத்துதான் வாங்குவார்கள். போதாக்குறைக்கு தம்மைச் சார்ந்தவர் யாரேனும் நம்மிடம் புத்தகம் கேட்டு நாம் இலவசமாகக் கொடுக்கிறோம் என்றால் அதற்கும் காசு தந்து அநியாயத்திற்கு நியாயமாக நடந்து கொள்வார்கள். கையில் காசு வாங்க மறுத்தால் gpay செய்து நம்மை நெளிய வைப்பார்கள். இப்படிப்பட்ட நல்லோர் வாழும் இதே தொல்லுலகில்தான்….. ஒரு நியாயமான கற்பனை : காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவோர், எழுத்தாளர்களிடம் இருந்து உளப்பூர்வமாக இனாமாகப் புத்தகங்கள் கிடைக்கப் பெறுவோர் – இவர்களுக்கு மட்டுமே அப்புத்தகங்களில் உலகின் அத்தனை சுகந்தங்களும் பொதிந்திருக்கக் கடவதாக! மற்றபடி கவர்தல் மூலம் புத்தகம் கிட்டும் அனைவருக்கும் அதிலிருந்து வரும் முடை நாற்றம் மூளையைத் துளைக்கட்டும்!
  5. சோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை : அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு [சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க! சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்] *************************************** ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று யாரோ அவர்களை மேதாவிகள் என நம்ப வைத்திருக்கின்றனர். அதன் கொடும் விளைவாக, “யார் ஆண்டால் எனக்கென்ன? நான் சம்பாதிக்குறது எனக்கு!” என்று பினாற்றுபவர்களுக்கு, தமக்கான ஊதியம் மொத்தமாக அல்லது பகுதியாகக் கூட தமது கைக்கு வருவதே ஆட்சியாளர்களின் கைங்கர்யம்தான் என்ற தெருட்சியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே மடமை! ஒரு தனி நபரது அரசியல் சார்பு என்பது கருத்துகளால் மட்டும் ஆனவை அல்ல. கருத்தியல் சார்ந்தது. ஒருவரது விழுமியங்கள்(ஒழுக்கம், நேர்மை…), மதிப்பீடுகள், கண்ணோட்டம், மனிதம் என உள் உறைந்திருக்கும் பலவற்றையும் ஒன்றாகக் கட்டி அவரது ஆளுமையை எடுத்துரைப்பதே அவ்வரசியல் நிலைப்பாடுதான்! அரசியலில் அற நெறிமுறைகள் மற்றும் உய்யச் சிந்தனைகளின்(critical thinking) நுட்பமான பகுப்பாய்வில் உருவாகும் விருப்பு வெறுப்புகள்தாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். யாரை ஆதரிக்கிறோம் என்பதை விட முக்கியமானது யாரை எதிர்க்கிறோம் என்பது. நண்பனை வைத்து நம்மை எடை போடுவதை விட எதிரியை வைத்து நம்மைக் கணிப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவோ? இடப்பக்கம் நிற்பார்க்கு உய்வுண்டாம்; உய்வில்லை வலப்பக்கம் நிற்கும் மாக்களுக்கு. இக்கட்டுரையை நடுவில் நின்று எழுதும் அளவிற்கு நான் பக்குவப்படவில்லை. அவ்வளவு பக்குவப்பட(!) விரும்பவும் இல்லை. வலதுசாரிகளில் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள் பூசிக் கொள்ளும் அரிதாரமே ‘நடுநிலையாளர்’. Annoying agnostics! இந்த நடுநிலை நக்கிகள் ஏதோ பண்பட்டவர்களாகவும் அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் தங்களைத் தாங்களே புரிந்து வைத்திருப்பதுதான் அந்தோ பரிதாபம்! மனிதகுலத்திற்கு எதிரானது எனினும் ‘கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்ட வலது சாரிகள், “நீங்கள் தவறு” என்று நாம் வாதம் வைப்பதற்காகவாவது வழி வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் ‘கொள்கை அநாதை’களான நடுநிலையாளர்களிடம் என்னவென்று (அரசியல்) பேச முடியும்? இவ்வாறானவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “ஏதாவது ஒரு பக்கமா நில்லு பக்கி. நடுவால நின்னு வண்டி ஏறி செத்துராத மூதேவி” என்று வடிவேலுவின் தொனியில் இவ்வரிகள்தாம் மனதினுள் ஓடும். ஆராய்ந்து தெளிந்து ஒரு பக்கத்தைத் தேர்வு செய்ய ரொம்பவெல்லாம் மெனெக்கெட வேண்டியதில்லை. மனிதத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘இட’த்தைதான் ஆறாம் அறிவு மிக இயல்பாகத் தெரிவு செய்யும். எனவே கடைந்தெடுத்த கயமைத்தனத்தை மட்டுமே பின்பற்றும் வலப்பக்கத்தில் தற்காலத்திலும் கரை ஒதுங்கி, இடப்பக்கத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். மூளைச்சலவை என்பதெல்லாம் ரொம்ப பூசி மெழுகப்பட்ட மென்மையான சொல். சிலருள் இயல்பாகவே ஊறிப் போயிருக்கும் வன்மத்திற்கு ஏற்ற தளம் அமைத்துத் தருவதால்தான் வலப்புறத்தை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். எந்த மனிதனிடமும் சென்று ‘நீ அடக்கி ஆளவும் ஏறி அடிக்கவும் உனக்குக் கீழேயும் ஒரு அடுக்கு இருக்கிறது’ என அவனுக்கு அதிகார ருசியைக் காட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள அந்த வன்மத்திற்குப் பல முகங்கள் - சாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் எத்தனையோ. இந்த வெறிகளையெல்லாம் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்து நிற்பதற்கு ஒரு தனித்துவமான மானமின்மை வேண்டும். பெரியார், அண்ணல் அம்பேகர், கார்ல் மார்க்ஸ் – cliché என இவர்களை எப்படி புறந்தள்ள முடியும்? கருப்பு, நீலம், சிவப்பு – ஒரு மனிதனிடமிருந்து இம்மூன்று நிறங்களையும் அழித்துவிட்டால் என்னதான் மிஞ்சும்? வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதைப் போல் காவி வந்து குடியமர்ந்து கொள்ளும். இயற்கையாய் ஒரு மனிதனுள் பூசப்பட்டிருக்க வேண்டிய அம்மூன்று நிறங்களையும் அழித்தொழிக்கும் உயிரிகளிடம் ஒரே ஒரு கேள்வி - “ஏன்?” ************************************ தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகிய மாபெரும் ஆளுமைகளையெல்லாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து மெய்சிலிர்த்த காலம் போய் இப்போது அதல பாதாளத்தில் எவ்வளவு எட்டி எட்டிப் பார்த்தாலும் இன்னும் இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கின்ற அரசியல் அப்பிரசண்டிகளின் பின்னால் ஒரு தலைமுறையே போதமில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்வது தமிழ் நிலத்தின் சாபக்கேடு. ட்ரம்ப், பெஞ்சமின் நெதென்யாகு…. எனத் துவங்கி மோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவிலேயே அரசியல் தரங்கெட்டுப் போயிருக்கிறது எனினும் தமிழ்நாடு அதில் தற்போது கொஞ்சம் தப்பித்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் கொள்ளும் முன்னரே, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று திடீரென சிலர் எம்பிக் குதித்து அநாகரிக அரசியலின் ஆழத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னத்தப் போட்டு சூசகமா கொச கொசன்னு? தற்போதுள்ள அரசியல் சூழலில் பா.ஜ.க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தைரியமாக எல்லா வகைகளிலும் எதிர்க்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் மிகச் சில. அவ்வாறாக, தண்டு வடம் வாய்க்கப் பெற்ற கட்சிகளில் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் தி.மு.கவும் வி.சி.கவும். நிற்க! உடனே ‘காவடி எடுக்கிறேன்’, ‘கூஜா தூக்குகிறேன்’ என்றெல்லாம் பாசத்தோடு பாராட்டு மழை பொழியும் முன் இதையும் வாசித்து விடுங்கள். எல்லாவாற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதர் பட்டத்தை இவர்களுக்குச் சாற்றவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க மீதான கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது அவர்களை நிராகரித்தால் பேராபத்தான சக்திகளின் பிடியில் மாட்டி நமது அடையாளத்தையே இழந்து சின்னா பின்னமாகிவிடுவோம். மேலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. ஓரளவு வாசிப்பும் பேச்சுத் திறமையும் கொண்ட வல்லுநர்களை உடையது அக்கட்சி. தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இல்லாதவர்கள். மேலும், தலைமையிடம் ஒரு தவறு இழைக்கும் போது முதன்முதலில் இடித்துரைப்பது கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களுமாகத்தான் இருப்பர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணித் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையே எடுத்துக்காட்டுகள். தலைமையைக் கேள்வி கேட்பதற்கான வெளியும் கேள்விகளுக்குச் செவி மடுக்கும் தலைமைப் பண்பும் அக்கட்சிக்கு உண்டு. அப்புறம் அநியாயத்திற்கு நாகரிக அரசியலால் ஓர் உயரிய செந்தரத்தை இப்போது நிலைநாட்டி வருகிறார்கள். பிழையை இடித்துரைப்பது போலவே நல்லதைப் பாராட்டவும் செய்யலாம்தானே? அ.தி.மு.க பா.ஜ.க.விடம் என்றோ விலை போய் விட்டாயிற்று. ‘அந்தம்மா இருந்திருந்தா நடக்குறதே வேற’ என தயவு செய்து தூக்கிக் கொண்டு வராதீர்கள். அவரே ஒரு சர்வாதிகாரிதான். தே.மு.தி.க, பா.ம.க – பொட்டியைக் கண்டால் எங்கும் யாருக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதிலும் இரண்டாவது, கடைந்தெடுத்த சாதிக் கட்சி. நா.த.க – கட்டுக்கதைகளிலேயே கட்சியை வளர்த்த பெருமை இவர்களுடையது. தமிழ்த் தேசியம் வழியாக வந்தாலும் சமீபமாக பெரியாரை எதிர்த்ததன் மூலம் தங்களது கூட்டாளிகளை அம்பலப்படுத்தி விட்டார்கள். நிலைமை இப்போது இவ்வாறாக இருக்க பா.ஜ.க.வை விரட்ட இவர்களை எல்லாம் எதிர்க்கத்தான் வேண்டும். கணிசமான வாக்கு வங்கி உடைய கட்சிகளில் இக்கட்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.மு.க மட்டுமே மிஞ்சுகிறது. என்னுடைய இந்த நிலைப்பாடு என்றென்றைக்குமானது அல்ல. மாணவர்களுக்கு, பெண்களுக்கு எனப் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் தி.மு.க., நாளை மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுமாயின் நிச்சயம் என் நிலைப்பாடும் மாறுபடும். வேறு யாரேனும் மக்கள் பக்கம் நின்று நல்லது செய்வார்களாயின் அவர்களை ஆதரிப்பேன். எனவே இப்போது ‘தி.மு.க வேண்டாம்’, ‘திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்’ என்றெல்லாம் கொக்கரிப்பவர்கள் இன்றைய சூழலில் தி.மு.கவுக்கு யார் சரியான மாற்று என்று மட்டும் கூறிவிடுங்கள். சமரசமாகப் போய் விடலாம். ‘கொள்கை எதிரி; அரசியல் எதிரி’ என்றெல்லாம் பண்ணையார்த்தனமாக உருட்டக் கூடாது. தி.மு.க.வைத் தூற்றுபவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் காரணிகள் : வாரிசு அரசியல், ஊழல் – இவை அறவே இல்லாத கட்சிகளைக் கூறினால் அடியேன் அறிந்து புரிந்து தெளிந்து கொள்வேன். அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளை விடுத்து வேற வேற…?. தி.மு.க. ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தால் கூட ‘அது எந்த அளவிற்கு மக்களுக்குச் சென்றடைகிறது? வழியில் எவ்வளவு வழிப்பறி நடக்கிறது?’ என்று ஆராய்ச்சியில் இறங்குவது தவறல்ல. அதே ஆர்வ மிகுதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சோவார போயிற்றா? விமர்சனம் செய்யலாம். ஆனால் தி.மு.க. என்பதால் மட்டுமே தேவையற்ற காழ்ப்புணர்வுடனேயே எல்லா நல்லனவற்றையும் அணுகினால் இறுதியில் “இலவச காலை உணவு; நிரம்பி வழிகிறது கழிவறை”யில்தான் என்று 'தினமலம்' போல் வந்து நிற்பீர்கள். என் மனதிற்கு நெருக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் குறிப்பிடாததற்குக் காரணம் அவர்கள் இன்னும் மாநிலமயமாக்கப்படாததுதான். நான் அரசியலை கவனிக்கத் துவங்கிய காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை முழுவதுமாக ஆதரித்த அவர்களின் உறுதிப்பாடு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அது குறித்து இப்போது கூட தோழர்களின் மீது உரிமையுடனான கோபம் உண்டு எனக்கு. அது நிச்சயமாக அவர்களை விட்டுக் கொடுக்கும் தொனியில் அல்ல. “என்ன இது? நீங்களே இப்படி நிலைப்பாடு எடுக்கலாமா?’ என்று ஓர் ஆசானின் மீதான கதமாகவே வெளிப்படும். “பிற கட்சிகளும்தாம் ஆதரித்தன?” என கேட்பீர்களானால் எனது பதில் “ஒப்பற்றதும் அப்பழுக்கற்றதுமான செவ்விய ஓர் இடத்தைத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கருத்து வேறுபாட்டிற்கே வழியில்லை என்ற அதீத நம்பிக்கை சற்றே பிசகியதில் வெளிப்பட்ட திகைப்புதான் அது”. இவ்விடத்தில் என்னுள் எழும் இரண்டக மனநிலை(dilemma) பற்றியும் கூற விழைகிறேன். எனது ஊர் இலங்கையும் அல்ல, கூடங்குளமும் அல்ல. அவ்வூர்க்காரர்கள் இன்றைக்கும் முறையே தி.மு.க. மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் கோபத்தில் இருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இதுவும் தோன்றும் – “அப்போ உனக்கு அடி விழுந்தாதான் வலிக்குமா?”. இக்கேள்வி என்மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி நக்கலாகச் சிரிக்கும். ஆனால் நான் கூறியது போல், “கோபம்தான். ஆனால் இக்காரணங்களுக்காக மட்டும் இப்போது இவர்களைப் புறக்கணிப்பது விவேகமல்ல; பெருஞ்சேதத்திற்கு வழிவகுக்கும்”. திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் பிற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையாகக் காலூன்ற இயலாமல் போனதில் பெரு மகிழ்ச்சியே! எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமது ஏவல்களாகப் பல விளியறி ஞமலிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க அரசு. பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் யாரும் அரசியல் செய்யவே முடியாது. ஆகையால் இப்பெருந்தகைகளின் பதாகைகளை ஏந்திக் கொண்டே நமது புறவாசல், வடவாசல், மேற்கு வாசல், கிழக்கு வாசல் என எல்லா வழிகளிலும் நுழைய முற்படுகின்றன பா.ஜ.க.வின் ‘ஆ’, ‘இ’, ‘ஈ’, ‘உ’….. பிரிவுகள். ********************************************* அதிலும் சமீபமாக இறங்கியிருக்கும் அல்லது இறக்கி விடப்பட்டிருக்கும் பனையூர் பண்ணையாரெல்லாம்….. எழுதப் பெறும் தகுதி உடையவரல்லதான். இடி அமீன், முசோலினி, ராஜபக்க்ஷ,… போன்றோருக்கும்தான் அத்தகுதி இல்லை. ஆனால் இவர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லவா? ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்’ என்பது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை. அதையே தகுதியாகப் புரிந்து கொண்டால் எப்படி? சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் கரூரில் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு பிறன்பழி கூற இயலாது. ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது; அல்லது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதன் பிறகான அந்த ‘சொகுசு அரசியல்வாதி’யின் அணுகுமுறைதான் இன்னும் ஆத்திரமூட்டக் கூடியதாக இருந்தது. அரசாங்கம் மீது தவறே இல்லை என்று கூறவில்லை. ஆணைய விசாரணையில் தெரிய வரும். வரட்டும். ஆனால் தெள்ளிதின் விளங்கி நிற்கும் தனது பொறுப்பற்றதனத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட சதிக் கோட்பாடுகளை(conspiracy theories) சமூக வலைதளங்களின் உதவியுடன் கிளப்பி விட்ட வில்லத்தனம் எல்லாம் திரைப்படங்களில் கூட பார்த்திராதது. ‘இந்த அரசாங்கம் ஏன் சரியாகப் பணியாற்றவில்லை?’ என்பதிலிருந்து ‘இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு வேகமாகப் பணியாற்றுகிறது?’ என்னும் சாட்டையடி(!) கேள்விக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறது இந்த தவக்கா கட்சி. கொள்கை ரீதியாக ஒருவரை எதிரி எனக் கை காண்பித்து விட்டு அந்த எதிரியின் எதிரியும் எனக்கு எதிரியே என்பதெல்லாம் என்ன மாதிரியான பம்மாத்து அரசியல்? தி.மு.க எதிர்ப்பு/வெறுப்பு அரசியல் என அறிவித்துவிட்டுப் போவதுதானே? ஒரு தனி நபராக அந்நடிகர் என்ன வேண்டுமானாலும் பிதற்றிவிட்டுப் போகட்டும். யார் இழுப்புக்கும் போகட்டும். கருத்துச் சுதந்திரம், உரிமை என்று விட்டுத் தொலைக்கலாம். ஆனால் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒருவர் என்ற வகையில் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் இந்தப் பெரிய அணில். மற்ற எல்லா கட்சிகளும் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்ய, இவர்கள் மட்டும்தான் தனி நபர் வழிபாட்டில் கட்டுண்டு கிடக்கின்றனர். மேலும் அரசியல் மேடையின் தரத்தை வெகுவாகக் குறைத்து, பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்களைச் சொல்ல வைத்ததில் இவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளலாம். தன்பழி, ஊழ்வினையாக மாற்றம் அடையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வளவு நடத்தியது போதாது என்பது போல் ‘அதுக்கும் மேல…’ என்று அடுத்தடுத்து அசிங்கங்கள் அரங்கேறின. இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை தமிழ்நாடு. ‘குழந்தையை இழந்தவர்கள்’ என நாம் பாவப்பட்டு வருத்தப்பட, அவர்கள் அனைவரும் சில நாட்கள் கழித்து அதற்கு முக்கிய காரணமானவர் மீது தவறே இல்லை என்று ஒரே குரலில் ஓங்கிப் பேசினார்கள். ‘அவரைப் பார்க்கும் ஆசை நிறைவேறிவிட்டது. என்ன ஒன்று? அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று’ என்று சிரித்துக் கொண்டே ஒரு தாயால் பேச முடிந்ததை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ மீது உண்டான இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் இதுவரை எங்கும் காணாதது. தாமாகவே இப்படிப் பேசியிருந்தால் ரொம்ப குரூரம். பணம் பெற்றுக் கொண்டு பேசினார்களாயின் அது கேடு கெட்ட கேவலம். எப்படிப் பார்த்தாலும் சமூகம் போகிற போக்கைப் பார்த்தால் பதறுகிறது. பேச வைத்தவர்களுக்கும் பேசியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ‘இன்னும் ரெண்டு பிள்ளையையும் கூட்டிட்டுப் போகாம போய்ட்டேனே’, ‘இதுக்காகவாவது இன்னும் ரெண்டு புள்ளைய பெத்தேன் இல்லையே?” – நல்லவேளை இப்படியெல்லாம் ஆதங்கப்படவில்லை. ‘உங்கள் பரிதாபத்திற்கும் அனுதாபத்திற்கும் எங்களுக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது’ என பாதிக்கப்பட்டோர் நமது முகத்திலறைந்து சொன்ன விதம்; பேருந்து ஏறிச் சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ‘பண்ணையார் சவரம் செய்யவில்லை, ஷவர்மா சாப்பிடவில்லை, ஷாம்பூ போடவில்லை, ரொம்ப வருத்தத்தில் இருக்கார்’ என ஆறுதல் பெறச் சென்றவர்கள் ஆறுதல் அளித்து வந்தது….. தமிழ்நாட்டில் அரங்கேறிய இந்நாணக்கேடான நிகழ்வுகள் அழிக்க முடியாத கரும்புள்ளிகள். இது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. இப்போது அல்ல. சம்பவம் முடிந்த ஒரு மாதத்திலேயே ‘பிண நாயகன்’ திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கேட்டு அனத்த ஆரம்பித்துவிட்டன அணில்கள். மாநாடு என்னும் பெயரில் நடத்தப்படும் ஒவ்வொரு வைபவத்திலும் அவர் பேசுவதை…. மன்னிக்கவும்! வாசிப்பதைக் கேட்கும் போது “ச்சே! இப்படி நல்லா நடிப்பு வர ஆரம்பிக்குற நேரத்துல முழுக்கு போடுறாரே!” என்று மட்டும் கொஞ்சம் கவலை(!) மேலிடுகிறது. நம்மால் யாரோ ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது என்றாலே தூங்க முடியாமல் குற்றவுணர்வில் உழன்று கொண்டிருப்போம். கரூர் அட்டூழியத்திற்குப் பிறகும்… சரி, அந்த உத்தமர்ர்ர் மீது தவறே இல்லை என்றே கொள்வோம். தன்னைப் பார்க்க வந்துதானே மடிந்தார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் மூன்று மாதம் கழித்து மலேசியாவுக்குச் சென்று ஒருவனால் ஆட்டம் போட முடிகிறது எனில் இவ்வகை உயிரினத்தைப் புறந்தள்ளுதலே சாலச் சிறந்தது. போதாக்குறைக்கு அத்திரைப்படத்தின் வரவுக்காக வாலை ஆட்டியபடியே காத்திருப்பவர்களின் நடுவில்தான் நாமும் வாழ்கிறோம் என்று உணரும் கணம் உடல் கொஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது. அவரை வைத்துப் படம் என்ற பெயரில் என்ன கருமத்தைக் கிண்டி வைத்திருந்தாலும் விசில் பறக்கத்தான் போகிறது. வழக்கம் போல ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என வடை சுடத்தான் போகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர் கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. ‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள் என்று ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். மக்கள் சீக்கிரமே மறந்து விட்டுக் கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அரிய உண்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கின்றனர். நாம்தான் செப்டம்பரிலேயே தேங்கி விட்டோம் போல. இதில் “இவர்களைத் ‘தற்குறி’ என்றழைக்கக் கூடாது. இவர்களைச் சரியாக அரசியல் படுத்தத் தவறிவிட்டோம்” என்றெல்லாம் உண்மையான அக்கறையுடனும் குற்றவுணர்வுடனும் திராவிட கழகத்தினர் சிலர் பேசுவதைக் கேட்டால்….. மன்னிக்கவும்! சிரிப்புதான் வருகிறது. அணில்களைப் போன்ற தனி மனித ஒழுக்கமற்ற கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. உலகமே கையில் சுருங்கி விட்ட இந்த யுகத்தில் எல்லா செய்திகளையும் வாசிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். எது சரி எது தவறு என்று பிரித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளாதது அவரவர் குற்றம் மட்டுமே. அறியாப் பருவத்தில் இருக்கும் மழலையரைப் போல் இவர்களைக் கொஞ்ச வேண்டியதில்லை. அடிப்படை அறிவை அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கத் துப்பில்லாத இவர்கள் சமூக வலைத்தளங்களில் நான்கு கால் பாய்ச்சலில் ஒன்றிய அரசின் தவறுகளுக்குக் கூட வீறு கொண்டு மாநில அரசை மட்டுமே துவைத்து வெளுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்… “உங்களை எல்லாம் வச்சுகிட்டு இந்தியா ஏன் இன்னும் வல்லரசா ஆகாம இருக்கு?” உலக வரலாற்றில் முதன் முறையாக இவரைப் பேட்டி எடுக்க வந்தவர்கள் பேட்டி எடுத்ததைப் பேட்டியாகக் கொடுத்த கேலிக்கூத்துப் பெருமையும் இப்பெரிய அணிலையே சாரும். “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு மக்களையும் சந்திக்க மறுக்கிறார். பத்திரிக்கையையும் எதிர்கொள்ள மருள்கிறார். ஆனால் இவருக்கு முதலமைச்சர் நாற்காலியைத் தூக்கித் தந்திட வேண்டுமாம்” என்று இவரைப் பின் தொடரும் ஆச்சரியக் குறிகள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும். அவர்களை மட்டும் சொல்லித்தான் என்ன? படித்து மண்ணள்ளிப் போட்ட பலரும் கூட கரூர் சம்பவத்தைக் காணுற்ற பிறகும் “எப்போ பாரு… தி.மு.க., அ.தி.மு.கன்னே போய்ட்டுருக்கு. ஒரு மாற்றம் வரட்டும். இவருக்குத்தான் ஒரு வாய்ப்பு குடுத்துப் பார்க்கலாமே?” என்று, ‘இன்றைக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உணவகத்தில் சாப்பிட்டுப் பார்ப்போமா?’ என்ற தொனியில் பேசுவதைப் பார்த்தால் “நீங்கள்லாம் எப்படி இன்னும் வெளிய நடமாடிட்டு இருக்கீங்க? யாரு சங்கிலியைக் கழட்டி விட்டது? எப்போ தப்பிச்சீங்க?” எனக் கேட்கத் தோன்றுகிறது. ‘எது சரி?’ என்பதைப் புரிந்து கொள்ளவும் ‘யார் பக்கம் நிற்பது?’ என்று தேர்ந்து தெளியவுமாவது கொஞ்சம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் நலம். எதை வாசிக்கிறோம் என்பதும் இங்கு முக்கியம் அமைச்சரே! ***************************************** கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கண்றாவியையெல்லாம்தான் கேட்பது? அறத்தோடு கூடியவற்றைப் பேசுதல் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என வரையறையை மாற்றுங்கள் ஐயா! தம்மை அரசன் என்று சொல்லிக் கொள்(ல்)பவர்களால் அன்றே நிகழ்த்தப்படும் கொலைகள் யாவும் பிரிவினைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பறைசாற்றுவதற்காகவும் சுய ஆதாயத்திற்காகவும் அரங்கேறுகின்றன. தெய்வமோ தெண்டத்திற்கு நின்று கொண்டே இருக்கிறது. அநீதியையும் தீமையையும் கொல்வதற்கான நோக்கம் சற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்வதெல்லாம் கூட இருக்கட்டும்; உணர்ச்சி மேலீட்டில் கோபத்தில் பொங்குவது கூடக் கிடையாது. (supposed)அரசர்கள் மற்றும் (so called)தெய்வங்களின் (அவ)லட்சணம் இவ்வாறாக இருக்க யாரை அல்லது எதை நம்புவது? எவ்வகையான நம்பிக்கையில் பிடிப்புக் கொள்வது? நியாயத் தராசுகள் எல்லாம் பொருளற்றுப் போன தற்காலத்தில், “வாழ்க்கை அப்படித்தான்; நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அது அநீதி என்றாலும் கூட” என்ற எதார்த்தம் புரியாமல் இல்லை. மனதில் ‘ஊழ்’ என்றொரு பிரிவை உருவாக்கி எல்லா அநியாயங்களையும் அதில் இருத்தி வைக்க வெகு கடினமாக இருக்கிறது. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு வாழ்க்கைச் சக்கரத்திற்கான நம்பிக்கை அச்சாணியை எதில் தேடுவது? போகிற போக்கில் எல்லாவற்றையும் வெறுமனே கவனித்து மட்டும் கடந்து செல்வதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லையே! கடவுளே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். சமூக விடயங்களில் அறம் சார்ந்த கோபத்தை இல்லாத இறைகளின் மீது கொட்டி நேரத்தை வீணடிப்பதை விடுத்து, இருக்கும் தலைவர்கள்/தளபதிகள்/சிப்பாய்கள் ஆகியோரில் சரியானவர்கள் (அதாவது தவறானவர்கள்) மீது முறையாக வெளிப்படுத்துதல் மனதிற்கான ஒரு தற்காலிக வடிகால் மட்டுமே. ஒருமா அளவு மனிதத்தைத் தன்னுள் இடுக்கி வைத்திருக்கும் மனிதனுக்குக் கூட அத்துமீறிய அநீதிகளின் போதும் நீதி தேவதையின் கண்கள் இறுகக் கட்டப்பட்டு இருப்பது மனச்சோர்வைத் தந்து விரக்தியைப் படரச் செய்யும் அல்லவா? இக்கையறு நிலையில்தான் “அறம் கூற்றாகும்!” என்பதை நம்பச் சொல்லி ஆறுதல் அடைய முனைகிறது மனம். அதுவே “அறம் கூற்றாகட்டும்!” என ஆங்காரமாக மனதினுள் ஒலிக்கும்போது உத்வேகத்துடன் கூடிய ஏதோ ஒரு வகையான சமாதானத்தையும் அழைத்து வருகிறது. எனவே…. அறம் கூற்றாகட்டும்! ஆகியே தீர வேண்டும்! அப்படியே ஆகக் கடவதாக! ஆமென்!
  6. செவ்வணக்கம் தோழர் - சுப.சோமசுந்தரம் பொதுவாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்த பொதுவுடைமைத் தோழர்களை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்றே நினைவுக்கு வருவதுண்டு. அவர்களால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று அப்பாடல் சொல்வதாய் உணர்கிறேன். இப்போது நம்மைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி நம்மைப் பிரிந்த தோழர் ஆர்.நல்லகண்ணு பொதுவுடைமையாளராய் வாழ்ந்தவர் என்பதற்கு ஒரு படி மேலாகச் சென்று பொதுவுடைமையாகவே வாழ்ந்தவர் (More than being a communist, he was communism personified) என்பதே பொருத்தம். "உண்டால் அம்ம இவ்வுலகம்" (இவ்வுலகம் உண்டென்றால் - அதாவது இயங்குகிறது என்றால் - யாரால் தெரியுமா ?) என்று தொடங்கும் பாடல் அன்னாரின் பண்பு நலன்களை அடுக்குகிறது. "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலுமிலரே" என்றவிடத்து, இந்திரர் அமிழ்தமே தந்தாலும் அதனை இனிது எனத் தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் எனச் சொல்கிறது பாடல். சொந்தக் கட்சி அவரது தன்னிகரற்ற சேவையைப் பாராட்டி ஒரு கோடி ரூபாயும் காரும் தந்த போது அவற்றைக் கட்சிக்கே திருப்பித் தந்த போதும், தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதளித்துக் கொடுத்த பத்து இலட்சம் ரூபாயைக் கூடுதலாக ஐயாயிரம் ரூபாயோடு தமிழக அரசுக்கே தந்த போதும் பாடலின் அவ்வரிக்குப் பொருளானார் தோழர் நல்லகண்ணு. சுதந்திரம் பெற்ற கையோடு அமைந்த இந்திய அரசு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, தேடித் தேடிக் கைது செய்த வரலாறு அறிந்தோர் வெகு சிலரே. தோழர் நல்லகண்ணு, ஜேக்கப் வாத்தியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஆசிரியர் தோழர் ஜேக்கப் போன்றோரைக் காவல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு மீசையையும் கண்புருவ மயிரையும் பிடுங்கிய (ஒரு பொதுக் கூட்டத்தில் ஜேக்கப் வாத்தியாரே சொல்லக் கேட்டது) கொடுமையிலும் தளராத மனத் திட்பத்தைக் குறிக்கும் வரியை நாம் குறித்த புறநானூற்றுப் பாடலில் தேடியும் கிடைக்கவில்லை. 'அயர்விலர்' என்று பாடலில் வரும் ஒரு சொல்லை ஆறுதலாய்க் கொள்ளலாம். தோழர் நல்லகண்ணுவின் தந்தையார் தம் பிள்ளைகளுக்கு, இருந்த சிறிது சொத்துகளைப் பங்களித்த போது தோழர் பங்கினை மட்டும் இவருக்கு எழுதாமல் மருமகள் பெயருக்கு எழுதி வைத்து விட்டார் - தோழர் தமக்கென வைக்காமல் பொதுக் காரியங்களுக்குக் கொடுத்து விடுவார் என்ற பயம்தான். புறநானூற்றுப் பாடலின் பின்வரும் வரிக்கு இலக்கணமாய்த் தோழர் வாழ்ந்தார் என்பதற்கு அதுவே சான்று : "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே". மேலும், உலகினை இயங்க வைப்போரின் வாழ்நிலை பற்றி மட்டுமே பாடல் பேசுகிறது (அன்னார்க்கு மரணம் இல்லை என்பதாலோ !). அவர்கள் இப்பூலகை விட்டுச் செல்லும் போது அழியும் உடலும் அழியாப் பயன் தரும் என்பதைப் பேசவில்லை. தோழர் மறைவுக்குப் பின் தம் உடலை ஈந்து மருத்துவ மாணாக்கர்க்குப் பாடமானார். எனவே புறநானூறு சொன்ன நல்வினைகளில் வாழ்ந்தார்; அது சொல்லாமல் விட்ட நன்னெறியிலும் வாழ்ந்தார். நாம் குறித்த புறநானூற்றுப் பாடலும் பொருளும் முழுமையாய் அறிய விழைவோர் "உண்டால் அம்ம இவ்வுலகம்" எனும் முதல் வரியை கூகுள் ஆண்டவரிடம் சொல்லிப் பெறலாம். https://www.facebook.com/share/p/1DrAP36SDy/
  7. மூன்று வண்ணங்களில் எதிலும் நிற்காத ஒருவர் என்று நான் எழுதியதை "One who doesn't stop for any of the three colours" என்று எடுத்துக் கொண்டதால் போக்குவரத்து சமிக்ஞையாக (traffic signal) நண்பர் ஈழப்பிரியன் நினைத்திருக்கலாம். "One who doesn't stand by any of the three colours" என்று கொள்ளவும். மேலும் நான் குறித்த வண்ண அரசியலை ஏராளன் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார். அவருக்கு என் நன்றி.
  8. சிறப்பு. உங்கள் இடத்திலிருந்து உங்களுக்காக மட்டும் நீங்கள் சொல்ல முடியும் என்பது மிகச் சரி. நீங்கள் சொல்லிவிட்டதால் இப்போது நான், "நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும்" என்று எழுத முடியும். 👍
  9. வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம் - சுப.சோமசுந்தரம் கருப்பு, சிவப்பு, நீலம் என்ற இந்த மூன்று வண்ணங்களில் எதிலுமே நிற்காத ஒருவரிடம் நான் அரசியல் பேச விரும்புவதில்லை. அந்த மாதிரியான நபரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது என்று தெரியாததே காரணம். இந்த மூன்று வண்ணங்களும் முறையே திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல், தலித் அரசியல் இவற்றைக் குறிப்பன என்பது இன்று தமிழ்நாட்டில் சிறு பிள்ளைகளுக்கும் தெரியும், தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மூன்று வண்ணங்களையும் எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் நான். அதாவது இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியிலும் உறுப்பினர் ஆகாமலே மூன்றையும் கொண்டாடும் உரிமை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் சொல்வது சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன், "I own them, I belong to them". இதில் ஆகச் சிறந்த நன்மை ஒன்று உண்டு. ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் மூன்றில் எந்த ஒரு அணியும் மேற்சென்று இடித்தற் பொருட்டாய்க் கடிந்து கொள்ளும் உரிமையே அது. அந்த உரிமை அவர்களிடம் எடுத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்வது. ஆனால் எந்த நிலையிலும் எதிரிகளிடமும், தன் பெண்டு தன் பிள்ளையென மட்டும் வாழும் சராசரிகளிடமும் இந்த மூவண்ணத்தாரை நான் விட்டுத் தருவதில்லை. நான் வகுத்த வர்ணாசிரமம் இதுவே ! ஏன் இந்தப் பீடிகை ? இப்போது நாம் கையில் எடுத்துள்ள வாச்சாத்திக்கு வருவோம். வெகு சமீபத்தில் செங்கொடியினரால் வெளியிடப்பட்ட 'வாச்சாத்தி' எனும் ஆவணப்படத்தை மானிடர் அனைவரும் பார்க்க வேண்டும். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. வாச்சாத்தி தர்மபுரி மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் கிராமம். 1992 ஜூன் மாதம் 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இம்மூன்று அரசு இயந்திரங்களாலும் சூறையாடப்பட்ட சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட கிராமம். சுமார் 600 கோடி பெறுமானமுள்ள (1992 டிலேயே) சந்தன மரங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுகவினராலும் துணை போன அதிகார வர்க்கத்தாலும் மூன்றில் ஒரு பங்கு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகவும் அரசு இயந்திரங்களின் உதவியோடு மேலும் அத்தனையையும் வெட்டத் திட்டமிருந்ததாகவும் கேள்வி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறாக இருந்த அந்தக் கிராமத்தினரை அப்புறப்படுத்தவே வன்முறை, பாலியல் வல்லுறவு, வீடுகளை அடித்து நொறுக்குதல், கிராமத்துக் கிணற்றில் மோட்டார் கழிவு எண்ணெயைக் கலத்தல் என எழுத்திலடங்கா வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் ஏதோ ரவுடிக் கும்பலால் அல்ல; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அரசுத்துறைகள் எனும் கும்பலால். கிராம மக்கள் மீது சந்தனம் வெட்டிக் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். எந்தக் குற்றத்தை அவர்கள் எதிர்த்தார்களோ அந்தக் குற்றமே அவர்கள் மீது சுமத்தப்பட்டது பேரவலம். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களை இப்போது வெளியாகி உள்ள ஆவணப்படத்தில் அனைவரும் கண்ணீருடன் கண்டு குமுறலாம். அரசுத் துறைகளில் மெத்தப் படித்தோரும் பாதகஞ் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களைச் சரியாக வழிநடத்தி 31 ஆண்டுகள் ஜனநாயக வழியில் நீதிப் போராட்டம், வீதிப் போராட்டம் என்று நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த வீரமும் ஈரமும் கொண்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்; அவர்கள் மட்டுமே ! அரசுத் துறை ரவுடிகளால் வன்புணர்வு எனும் கொடுமைக்கு ஆளான 18 பெண்கள் உட்பட அதிகார வெறியாட்டத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அரசுத் துறைகளைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கித் தந்தனர். 269 பேரில் இந்த 31 ஆண்டுகளில் மரணித்த 54 பேரைத் தவிர ஏனைய 215 பேரும் சிறைத் தண்டனை பெற்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நம் செங்கொடித் தோழர்கள் மட்டுமா போற்றுதலுக்குரியவர்கள் ? பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகள் உறுதியோடு நின்றார்களே ! ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அம்மக்களில் ஒவ்வொருவருக்கும், பிறழ் சாட்சியாக மாற, அவர்கள் நினைத்துப் பார்க்காத பணம் பேரம் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டிருப்பர். ஆனால் ஒருவர் கூட உடன்படவில்லை, அஞ்சவில்லை என்பது வரலாற்றில் வேறு எங்கும் நிகழ முடியாத ஒன்று. CPI(M) மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியதைப் போல அந்த மக்களே தலையாய கதாநாயகர்கள் (protagonists). மக்கள் இயக்கம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை உலகுக்கே உணர்த்தியவர்கள். அரசியல் சூட்சமங்கள் அவ்வளவாகத் தெரியாத பாமரர் மனதில் சில கேள்விகள் எழுவது இயல்பு. வாச்சாத்தி கொடுமை நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். மணக்கும் சந்தன காசை இழக்க மனமின்றி எத்தகைய கொலை பாதகத்திற்கும் அவர்கள் துணிந்தது புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் மும்முரமாக நின்ற தோழர் பி.சண்முகம், தோழர் அண்ணாமலை இவர்களை ஏதாவது ஆக்சிடென்ட் செய்து கதையை முடிக்கச் சொன்ன அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொலைபேசிப் பேச்சின் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது - அதிலும் அப்பதிவு தோழர்களின் கையில் கிடைத்ததால். இடையில் கலைஞர் கருணாநிதியின் திமுக ஆட்சி ஏற்பட்டபோது வழக்கைத் துரிதப்படுத்திக் குற்றவாளிகளை மக்களுக்கு இனங் காட்டியிருக்கலாமே ! மாறாக நீதிமன்ற உத்தரவின் படி சிறைப்படுத்தப்பட்ட 269 காவலர்களை கலைஞர் ஏன் விடுவித்தார் ? இதே கேள்வி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் எழுகிறது. அமைதி வழியில் போராடிய 13 போராளிகள் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளப்பட்டது எடப்பாடியாரின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆட்சி மாறிய பின் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி, குற்றம் (குற்றேவல்) புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அரசு நிர்வாக அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ? இக்கேள்விக்கெல்லாம் அனுபவத்தால் முதிர்ச்சி பெற்ற தோழர் ஒருவர் பதிலிறுத்தார், "ஆட்சி மாறினாலும் காவல்துறையின் உயரதிகாரிகளும் நிர்வாக அமைப்பின் உயரதிகாரிகளும் உரியோரைச் சந்தித்து, தங்கள் ஆட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மொத்த அமைப்பும் நிலை குலைந்து போகும் - அதாவது demoralise ஆகும் - என்று ஓதிவிட்டு வருவார்கள் (சரியாகச் சொன்னால், எச்சரித்து விட்டு வருவார்கள்). என்ன இருந்தாலும் இவர்களை வைத்துதானே ஆட்சி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எந்த ஆளும் கட்சியும் அடக்கி வாசிக்கும்". இது மட்டுமா ? முதுகுளத்தூர் கலவரத்தில் தலித்துகளின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டிய பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் பஞ்சாயத்து பண்ணத்தானே முயற்சி செய்தார்கள் ? அங்கு பெரும்பான்மையாகத் திகழ்ந்த ஆதிக்க உயர்சாதியினரைப் பகைப்பது வாக்கு வங்கி அரசியலுக்குச் சரிவராது என்ற நிதர்சனம் அன்றி வேறென்ன ? அதுபோலவே கவின் கொலை போன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவதில் இப்போது காலதாமதம் ஏன் ? இதுதான் ஜனநாயகத்தின் அவலம். இந்த அரசியலை எதிர்கொள்ள வீதிமன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ஆள்வோரை நிர்பந்திக்க மக்களும் மக்கள் இயக்கங்களும் முன்வர வேண்டும். இப்பணியினை வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டோரும் செங்கொடியினரும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் பங்கு கொள்ளாத கருப்புக் கொடியினரும் தலித் அமைப்பினரான நீலக் கொடியினரும் இதுபோல் இங்கு நிரம்பப் பணியாற்ற வேண்டும். ஏன் செங்கொடித் தோழர்கள் கூட, தம்மால் முன்னெடுக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்திலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும், இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரல் கொடுக்க வேண்டும். தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்தானே ! இதை விட பொதுவுடைமைக்கு வேறு என்ன சிறந்த வரையறை இருக்க முடியும் ? உரைநடையில் கூட மரபுப் பாடல் ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுக்கும் மன நோய் எனக்கு உண்டு. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பாடி இக்கட்டுரைக்கு நிறைவுத் திரை போட விழைகிறேன். பொதுவுடைமைவாதிகளால்தான் இவ்வுலகமே இயங்குகிறது என ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்ச் சொல்கிறது பாடல். வாச்சாத்தியில் அயராது போராடிய மக்களுக்கும் அவர்களைச் செவ்வனே வழி நடத்திய செங்கொடியினருக்கும் பாடும் மங்கல வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம். எனது வலைப் பதிவிலிருந்து படி எடுத்து இங்கு பதிவு செய்கிறேன் : "உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி ரபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !" ----புறநானூறு 182. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார். பாடற்பொருள் : " இவ்வுலகம் உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்) எனத் தொடங்குகிறது பாடல். இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார் புலவர். அவையாவன :- இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்; பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி (அன்ன மாட்சியர் அனையராகி), வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர். இத்தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.
  10. அவர்கள் பெயர் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் என்பதே. சிறிது தவறாகச் சுட்டியமைக்கு வருந்துகிறேன்.
  11. அன்னாரின் சுற்றத்திற்கும் நட்புலகிற்கும் ஆழ்ந்த இரங்கலை யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
  12. ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம் உலகில் பரவலாக அறியப்படும் காதல் இணையரான ரோமியோ - ஜூலியட், ஆன்டனி - கிளியோபாட்ரா, லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்று சங்க காலத்தில் நம் தமிழ் நிலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலானது காவியம் போல் பேசப்பட்டுள்ளது என்பது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, அகநானூறு, மற்றும் சங்க மருவிய காலத்து சிலப்பதிகாரம் மூலமாகத் தெளிவு. ஆனால் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இக்காதலை அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. ஈழத் தமிழறிஞரான திரு.கந்தையா விநாயகலிங்கம் அவர்கள் யாழ் இணையதளத்தில் எழுதிய கட்டுரையானது அடியேனையும் எழுதத் தூண்டியது எனலாம். அன்னார் எழுதியதிலிருந்து பெரிதும் வேறுபட்ட எதனையும் எழுத எண்ணாமையால், பின் ஏன் இந்த எழுத்து எனும் கேள்வி எழல் இயல்பு. திருக்குறளுக்குக் காலந்தோறும் வெவ்வேறு சான்றோர் உரை எழுதுவது ஒவ்வொரு எழுத்தும் பார்வையும் தனித்தன்மை கொண்டமையாலும், உயரிய பொருள் மீண்டும் மீண்டும் உரைக்கப் பெற்று மென்மேலும் வளம் பெறுவதினாலுமேயாம். கண்ணதாசன் எழுதிய கவிதை நாடகமான ஆதிமந்தி ஆட்டனத்தி, அதன் திரை வடிவமான மன்னாதி மன்னன், பாரதிதாசன் படைத்த சேரதாண்டவம் எனும் நாடக நூல் ஆகியவை ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கவை. இவை நாம் முன்னம் குறித்த சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் வழியமைந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி கதையினை ஒட்டி அமைந்த புனைவு இலக்கியங்களாகும். நாம் இக்கட்டுரையில் கையிலெடுப்பது சங்கப்பாடல்கள் வழி நின்ற கதையை மட்டுமே. சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஆடற் கலையில் சிறந்த ஆட்டனத்தி (ஆடல் + அத்தி) என்ற வீர இளைஞனும் ஆதிமந்தி எனும் ஆடல் மகளும் காதல் வயப்பட்டனர். சோழ நாட்டவர் தமக்குச் சோறிடும் காவிரி அன்னைக்குப் (காவிரியாற்றுக்கு) பெருவிழா எடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று சோணாட்டின் கழார் என்னும் துறையில் மன்னன் கரிகாலன் முன் ஆட்டனத்தி காவிரியில் தன் ஆட்டத்தின் திறம் காட்டிச் சாகசம் புரிந்தான்; நீர் விளையாட்டும் ஆட்டத்தில் ஒரு வகையாக இருந்திருக்க வேண்டும். அவன் ஆடற்திறம் கண்டு மன்னனும் மக்களும் குதூகலித்தனர் - ஆதிமந்தியும்தான். அப்போது காவிரியில் திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளம் அவனை வாரிச்சுருட்டிச் சென்று விட்டது. காவிரி கடலில் கலக்குமிடம் கரை ஒதுங்கிக் கிடந்தவனை மருதி எனும் மீனவப்பெண் கண்டெடுத்துப் பேணி வந்தாள். கட்டழகன் அத்தியிடம் கட்டுக்கடங்காத காதல் கொண்டாள். (அவனும் அந்த மீனவப் பெண்ணின் காதல் வலையில் கட்டுண்டு பேரின்ப உலகில் திளைத்திருக்க வேண்டும். ஆடவன் பல காதல் கொள்ளும் முறை சங்க காலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு (polygamist society). எனவே தற்கால ஒழுக்க அளவுகோல் அங்கு அவசியமில்லை). காதலனை இழந்த காரிகையான ஆதிமந்தி அருந்துயருற்றுக் கையறு நிலையில் அவனைத் தேடி காவிரிக் கரையிலுள்ள ஊரெல்லாம் அலைந்து திரிந்தாள். இறுதியாக மருதியிடம் வந்து சேர்ந்தாள். ஆதிமந்தி அத்தியிடம் கொண்ட காதல் திறம் கண்ட மருதி அவனை அவளிடமே ஈந்து தான் கடலுள் மாய்ந்து அக்காலத்தில் அழியா புகழ் பெற்றாள். இந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலும், பிறிதின் நோய் தந்நோயாய்ப் போற்றிய மருதியின் தகைமையும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகுவோமா ? முதலில் நம் கண் முன் காட்சி தருவது குறுந்தொகையில் ஆதிமந்தியார் எனும் பெயர் கொண்ட பெண்பாற்புலவரின் பாடல். புறநானூற்றில், பாட்டுத்திறம் படைத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் நிகழ்வினைத் தானே பாடியது போல் சங்க காலத் தலைவி ஆதிமந்தியே ஆடற்கலையுடன் பாடல் திறனும் கொண்டு, தன் நிலையைக் கூறி இப்பாடலைப் பாடி இருக்கலாம். அல்லது ஔவையைப் போல் ஆதிமந்தியும் அப்போது பொதுவான பெயராய் இருந்து (common name), ஆதிமந்தியார் எனும் புலவர் தம் பெயரையுடைய நாயகியைப் பாடியிருக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக, பாடலின் புலவர் பெயர் தெரியாததால் பாடலில் உள்ள தலைவியின் பெயரே அவருக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் (பாடலில் உள்ள சொல்லால் பெயர் பெற்ற செம்புலப் பெயல்நீரார், அணிலாடு முன்றிலார் போல). பாடியவர் குறித்த வரலாறு தெளிவற்று இருப்பினும், பாடற் பொருள் தெளிவானது; பாடல் சுட்டும் வரலாறும் தெளிவு. பாடலில் தலைவி ஆதிமந்தி தோழியிடம் தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இவ்வெளிப்பாடு காவிரியாற்றுக் கோர நிகழ்வுக்குப் பின் ஆற்றங்கரை ஊர்களில் அவனைப் பல இடங்களில் அவள் தேடித் திரிந்ததைச் சொல்கிறது. "வீரர்கள் கூடும் விழாக்கள், (அவன் ஆடற்தலைவன் என்பதால்) துணங்கை கூத்து நடைபெறும் இடங்கள் எனப் பலவாறு தேடியும் மாட்சிமை பொருந்திய அவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகள மகளே ! சங்கினை அறுத்து அமைக்கப்பெற்ற என் கை வளையல்கள் (நான் உடல் மெலிந்ததால்) நெகிழ்ந்திடக் காரணமான பெருமைமிக்க தலைவனான அவனும் ஓர் ஆடுகள மகனே !"என்கிறாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே" (குறுந்தொகை பாடல் 31; பாடியவர் ஆதிமந்தியார்) அருஞ்சொற்பொருள் : மள்ளர் - வீரர்; குழீய - குழுமிய, கூடிய; விழாவினானும் - விழாக்களிலும்; மகளிர் தழீஇய - மகளிரைத் தழுவிய; துணங்கையானும் - துணங்கைக் கூத்து நிகழிடங்களிலும்; யாண்டுங் காணேன் - எவ்விடத்தும் யான் காணவில்லை; மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்தியவனை; கோடு - சங்கு; ஈர் - அறுத்து; இலங்கு வளை - அமைத்து விளங்கும் வளையல்களை; நெகிழ்த்த - நெகிழ வைத்த; பீடு கெழு - பெருமை பொருந்திய; குரிசில் - தலைவன் (குருசிலுமோர் - குருசிலும் ஓர்). அடுத்து அகநானூறு பாடல் 45 ஐக் காண்போம். பாடுபொருள் வேறாய் இருப்பினும் ஆதிமந்தி பற்றிய குறிப்பு அதன் கண் வரல் சிறப்பு. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியொருத்தி தோழி எத்துணைத் தேற்றினாலும் தேறாது, "காதலனால் ஏற்பட்ட சிறுமையுடன் (ஊரார் புறம் பேசும் சிறுமை), பிரிவுத் துயர் எனும் நோய் மேலிட ஆதிமந்திபோல் மனம் பேதலித்து ஆதரவற்று (அலந்து) உழன்று திரிவேனோ (உழல்வென் கொல்லோ)?" என்று புலம்புகிறாள். "காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துஆதிமந்தி போல பேது உற்றுஅலந்தனென் உழல்வென் கொல்லோ" (அகநானூறு பாடல் 45 ன் பகுதி; பாடியவர் - வெள்ளி வீதியார்) சங்கப் புலவர் பரணரின் பாடல்களில் இருந்து வரலாற்றுக் குறிப்புகளும் கிடைப்பதால் அவர் வரலாற்றுப் பதிவாளராயும் அறியப்பெறுகிறார். எடுத்துக்காட்டாக, பரணர் பாடிய அகநானூறு பாடல் எண் 135 ன் முற்பகுதியில் ஆதிமந்தி பற்றிய குறிப்பும் பிற்பகுதியில் வேளிர் குடி அரசர் பதினான்கு பேர் சேர்ந்து தாக்கிய தலைநகர் காமூரையும் கழுவுள் அரசனையும் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. நாம் தற்போது கையிலெடுத்துள்ள தலைப்பைக் கருத்தில் கொண்டு பாடலின் முற்பகுதியை மட்டும் பேசி, பிற்பகுதியை இக்கட்டுரையை வாசிப்போர்க்கே விட்டு விடுகிறோம். மீண்டும், பிரிவாற்றாமையில் வாடும் தலைவியொருத்தி தோழியிடம் கூறுவது : " திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கபுதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பபசலை பாய்ந்த நுதலேன் ஆகிஎழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்துஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி பேது உற்றிசினே காதலம் தோழி" (அகநானூறு பாடல் 135 ன் முற்பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : எனது தேமல் (திதலை), மாநிறம் ஆகியவற்றின் தளிர் வனப்பு கெட (அழுங்க), புதர்களில் படர்ந்த (புதல் இவர்) பீர்க்கின் புதுமலர் (எதிர் மலர்) போன்ற (கடுப்ப) பசலை படர்ந்த நெற்றிடையுடையவள் ஆனேன் (நுதலேன் ஆகி). ஓவியம் போன்ற எழில் மிக்க, குளிர்ச்சி பொருந்திய கண்கள் அழும்படியாக (எழுது எழில் மழை கண் கலுழ) பிரிவுத் துயருற்று (நோய் கூர்ந்து) ஆதிமந்தி மதி மயங்கியது போல் (ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி) பேதலித்து நிற்கிறேன் (பேது உற்றிசினே), அன்பு கொண்ட அழகிய தோழியே ! (காதல் அம் தோழி ). பிரிவுத் துயரில் வாடி நின்ற ஒரு தலைவியைத் தோழி அழைக்கிறாள் : "முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇதாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதிமந்தி காதலன் காட்டி படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்சென்மோ வாழி தோழி" (அகநானூறு பாடல் 222 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : முழவின் (ஒரு வகை முரசு) முகம் உலறா வண்ணம் (முகம் புலரா) - அதன் இடைவிடாத முழக்கத்தினால் - ஆர்ப்பரிக்கும் (கலி கொள்) கழார் என்னும் (காவிரி) துறையில் மென்மேலும் பெருகும் அழகுடன் (ஈட்டு எழில்) பொலிந்து எடுப்பான தோள்களுடன் திகழும் (ஏந்து குவவு) வலிமையான (மொய்ம்பின்) ஆட்டனத்தியின் நலன்களை விரும்பி (நலன் நயந்து), தனது பரந்து (உரைஇ) தாழ்ந்த இருண்ட கூந்தலால் (தாழ் இரும் கதுப்பின்) காவிரி கவர்ந்து கொண்டதால் (வவ்வலின்), திசையெல்லாம் தேடி (மாதிரம் துழைஇ) மதிமயங்கி (மதி மருண்டு) ஆதரவற்றுத் திரிந்த (அலந்த) ஆதிமந்தியிடம் அவளது காதலனான ஆட்டனத்தியைக் காட்டி - ஈந்து - ஒலிக்கும் கடல் புகுந்த (படுகடல் புக்க), புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினையுடைய மருதியைப் போல் புகழ் பெறச் செல்வோமாக ! வாழிய தோழி ! (அஃதாவது தலைவனைத் தேடியும் காணாவிடத்து உயிர் துறந்து புகழ் பெறலாம் எனச் சொல்கிறாளோ !). (பாடலைப் போன்றே முற்றுப்புள்ளியின்றி பொருளை எழுதியமைக்கு மன்னிக்கவும். அப்படிதான் எழுத வந்தது !). பிரிவாற்றாமையை வகை வகையாய் பதிவு செய்கிறது அகநானூறு. "......................................அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பகொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கைஅறியாமையின் அழிந்த நெஞ்சின்ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டன்அத்தியை காணீரோ எனநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று எனகலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்தஆதிமந்தி போல ஏதம் சொல்லி பேது பெரிது உறலே" (அகநானூறு பாடல் 236 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இரவில் (அல்கல்) மணம் வீசும் சந்தனம் பூசி (அணி கிளர் சாந்தின்) அழகிய பட்டாடையினால் பொலிவு பெற்று (அம் பட்டு இமைப்ப), வளைந்த குழையணிந்த மகளிரிடம் (கொடுங்குழை மகளிரின்) அவன் சேர்ந்த இடம் (ஒதுங்கிய இருக்கை) அறியாது வருந்திய மனதுடன் (அறியாமையில் அழிந்த நெஞ்சின்) உள்ளேன். காளையைப் போன்று தீரத்துடன் நடையும் (ஏற்று இயல் எழில் நடை) பொலிவு பெற்ற வலிமையான தோள்களும் (பொலிந்த மொய்ப்பின் தோட்டு) கரிய சுருள் முடியும் (இரும் சுரியல்) கொண்டவனை (ஆட்டனத்தியைக் குறிப்பது) மணந்து பித்துப் பிடித்தவளாய் (மணந்த பித்தை), "ஆட்டனத்தியைக் கண்டீரோ ?"என்று நாடு நகரெங்கும் கூவித் திரிந்து, "கடல் கொண்டதோ ? ஆற்று வெள்ளம் (புனல்) ஒளித்துக் கொண்டதோ ?" என்று அழுத கண்ணோடு காதலனால் வருந்திய (காதலன் கெடுத்த) ஆதிமந்தி போல துயரினைக் கூறிப் (ஏதம் சொல்லி) பெரிதும் வருந்துகிறேன் (பேது பெரிது உறலே). பரணர் பாடிய அகநானூறு 76 ஆம் பாடலில் பரத்தை ஒருத்தி, "(இடுப்பில்) கச்சினை அணிந்தவனும், (காலில்) கழலை அணிந்தவனும், தேனொழுகும் மாலையினை மார்பில் அணிந்தவனும் (தேம் தார் மார்பினன்), வகையாக அமைக்கப்பெற்று வனப்புடன் பொலிவுறும் மாலையை அணிந்தவனும் (வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்), சுருள் முடியுடன் (சுரியல்) திகழும் அழகிய (அம்) கூத்தனைக் (பொருநனை) கண்டீரோ என ஆதிமந்தி பித்துப் பிடித்து (பேதுற்று) அரற்றித் (இனைய) திரிய, கரையினில் மோதி (சிறை பறைந்து) உராய்ந்து (உரைஇ) செந்நிறம் கொண்ட கிழக்குத் திசையில் (செம் குணக்கு) பாயும் (ஒழுகும்) அழகிய குளிர்ச்சி பொருந்திய காவிரி (அம் தண் காவிரி) போல - காவிரியாறு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றது போல - (என்னிடம் வந்த தலைவனை) நானும் (யானே) கரம் பிடித்துக் கொண்டு செல்ல எண்ணுகிறேன் (கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின்)" என்கிறாள். "கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்சுரியல் அம் பொருநனை காண்டிரோ எனஆதிமந்தி பேது உற்று இனைய சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்அம் தண் காவிரி போலகொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே" (அகநானூறு பாடல் 76 ன் பகுதி; பாடியவர் பரணர்) அகநானூறு பாடல் 376 ல் காதல் பரத்தை தலைவனுடன் பேசுவதாக வருவது : "செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்கல்லா யானை கடி புனல் கற்று எனமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறைகலி கொள் சுற்றமொடு கரிகால் காண தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசைஒண் பொறி புனை கழல் சே அடி புரளகரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்றுஇரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு மன்னோநும் வயின் புலத்தல் செல்லேம்" (அகநானூறு பாடல் 376 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : செல்லாதே, மருதநிலத் தலைவனே ! (செல்லல் மகிழ்ந). உனக்கு நான் செய்யும் கடமை உள்ளது. (பாகனிடம்) கல்லாத யானை செறிந்த நீரோட்டத்தில் (கடி புனல்) விளையாடக் கற்று நீரில் மோத அதனால் பேரலையாய் எழுந்த நீர் (மலி புனல்) மோதும் மருத மரங்கள் உயர்ந்து நிற்கும் நிலங்களையும் (மருது ஓங்கு படப்பை), செழித்து வளர்ந்த கதிர்களைக் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரின் (காவிரி) முன் துறையில் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் சுற்றத்தாரோடு (கலி கொள் சுற்றமொடு) (சோழ மன்னன்) கரிகாலன் கண்டு மகிழ, புனல் விழாக்கோலம் பூண்டு (தண் பதம் கொண்டு) இன்னிசை தரவல்ல ஒளிரும் சதங்கை அணிந்த கழல் (இன்னிசை ஒண் பொறி புனை கழல்) சிவந்த காலடியில் புரள (சேவடி புரள), கருமையான கச்சு அணிந்து காண்பதற்கு அழகிய தன் வயிற்றில் (கருங் கச்சு யாத்த காண்பின் ஆம் வயிற்றில்) பெரும் பொன்னாலான (இரும் பொலம்) பாண்டில் எனும் இசை கருவி மணியுடன் ஒலிக்க (பாண்டில் மணியொடு தெளிர்ப்ப), புனலைப் பெரிதும் விரும்பி (புனல் நயந்து) ஆடிய அத்தியின் (ஆட்டனத்தியின்) அழகினை விரும்பி (ஆடும் அத்தி அணி நயந்து) காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல உன்னைக் கவர்ந்து வைத்துள்ளேன் (காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்றோ). (உன் தலைவி உன்னைக் கவர்ந்து செல்லுமாறு) உன்னுடன் புலந்து நிற்க மாட்டேன் (நும் வயின் புலத்தல் செல்லேம்). அகநானூறு 396 லும் காதல் பரத்தை ஒருத்தி தலைவனிடம் சொல்கிறாள் : "இனி யான் விடுக்குவென் அல்லென் மந்திபனி வார் கண்ணள் பல புலந்து உறையஅடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇநெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்மனையோள் வவ்வலும் அஞ்சுவல்" (அகநானூறு 396 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இனி உன்னை விடமாட்டேன் (இனி யான் விடுக்குவென் அல்லென்). ஆதிமந்தி நீர் வார்த்த கண்ணுடன் பலவற்றைச் சொல்லித் துயருறுமாறு (மந்தி பனிவார் கண்ணள் பல புலந்து உறைய), போர்த் திறம் கொண்ட ஆட்டனத்தி (அடுதிறல் அத்தி) ஆடும் அழகினை விரும்பி (ஆடு அணி நசைஇ) பெருவெள்ளம் கொண்ட காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல் உன்னை ஒளித்து வைத்துள்ளேன் (நெடுநீர் காவிரி கொண்டு ஒளித்தாங்கு). (அவனை மீண்டும் அவன் தலைவி ஆதிமந்தி கவர்ந்து கொண்டதைப் போல்) உன் மனையாள் உன்னைக் கவர்ந்து கொள்வாள் என அஞ்சுகிறேன் (நின் மனையாள் வவ்வலும் அஞ்சுவல்). இறுதியாக சங்கமருவிய காலத்துக் காப்பியமான சிலப்பதிகாரம் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைக் குறிக்கக் காணலாம். "மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் ..............." (சிலப்பதிகாரம்; மதுரைக் காண்டம்; வஞ்சின மாலை; வரிகள் 11-15) பொருள் : வஞ்சி நகரத் தலைவனைப் (ஆட்டனத்தியை) பேராற்று வெள்ளம் கொண்டு செல்ல, மன்னன் கரிகாலன் பெருவளத்தான் மகள் (ஆதிமந்தி) தானும் அப்புனலின் வழி சென்று, "மலையொத்த தோளினை உடையவனே (கன்னவில் தோளாயோ)" என்று கூவிக் கதற, கடலானது அவனை அவள் முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழுவிப் பொற்கொடியைப் போல் திரும்பி வந்தாள். சிலம்பில் ஆதிமந்தி மன்னன் கரிகாலனின் மகளாகவும் ஆட்டனத்தி வஞ்சித் தலைவனாகவும் காட்டப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பேசும் சங்கப்பாடல் எதிலும் அத்தகைய வரலாற்றுக் குறிப்பு இல்லை. குறிப்பாக, வரலாற்றுப் பதிவாளராகக் கொள்ளப்படுகிற பரணர் அவர்களைக் குறித்த ஆறு பாடல்களில் ஒன்றில் கூட அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே சங்க இலக்கியங்களிலிருந்து, அவர்கள் இருவரும் ஆடுகள மக்களாகவே புலப்படுகின்றனர். சங்கமருவிய காலத்திலேயே காப்பியங்கள் தோன்றின. காப்பியங்கள் தன்னேரில்லாத் தலைவனையே முதன்மைப்படுத்தின. சிலம்பு குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றாலும் கோவலனும் கண்ணகியும் சாதாரணக் குடிமக்கள் அல்லர். மன்னர் குலத்தவராக இல்லாவிடினும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் செல்வச் செழிப்புள்ள வணிகர் குலத் தோன்றல்களாகவே காட்டப் பெறுகின்றனர். எனவே சிலம்பில் புகழ்பெற்ற தலைவன் - தலைவியாக சுட்டப்பெறும் ஆட்டனத்தி - ஆதிமந்தியும் ஏற்கனவே அக்கால மக்கள் வழக்கில் திரிபுகளைப் பெற்று மன்னர் குலத்தவராகக் கருதப்பட்டது இயல்பான ஒன்றே. புனைவும் காப்பியத்தின் அங்கம்தானே ! எது எப்படி ஆயினும் உலகக் காதலர்களைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் முதலில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைத் தலையாயதாய்க் கொண்டாடுவதும், அதனை உலகோர் பார்வைக்குக் கொண்டு செல்வதும் தமிழர் பண்பாட்டை உலகிற்குக் கடத்தும் முயற்சியில் ஒன்றாய் அமையும்.
  13. 2018 ல் தான் நான் யாழில் இணைந்தேன். அதற்கு முன் யாழ் இணையத்தை அறியாமல் போனதற்கு வருந்துகிறேன். 2014 ல் நீங்கள் எழுதிய இச்சிறிய (அளவில் சிறிய) கட்டுரைப் பதிவைத் தற்செயலாகக் கண்ணுற்றேன். கணியன் பூங்குன்றனார் பாடலுக்குச் சிறிய, சீரிய விளக்கவுரை வாசித்து அகமகிழ்ந்தேன். பாராட்டும் வாழ்த்தும், திரு.ஏராளன் !
  14. நீங்கள் செலுத்தும் அஞ்சலியில் பங்கு கொள்கிறோம், ஐயா !
  15. பொய்யுரை - சுப.சோமசுந்தரம் இக்கட்டுரை பொய்மையும் வாய்மையிடத்த பொய்யுரை பற்றியது. இரண்டொரு எடுத்துக்காட்டுகளுடன் அத்தகு பொய்யுரையை நிறுவ முற்படுவது. சமீபத்தில் நண்பர் ஒருவர் திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில், "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (குறள் எண் 37) என்றுள்ள குறளுக்கு உரைகள் பலவற்றிலும் பொருள் தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று தம் மனக்குறையை வெளியிட்டார். பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாளர்கள் 'கர்மா'வின் அடிப்படையில் தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல, பல்லக்கைத் (சிவிகை) தூக்குபவனும் (பொறுத்தான்) அதில் அமர்ந்திருப்பவனும் (ஊர்ந்தான்) அவர் தாம் செய்த அறத்தின் பயனை இவ்வாறு அனுபவிக்கின்றனர் எனச் சொல்ல வேண்டியதில்லை (தானாக விளங்கி நிற்பது) என்று சொல்லிச் செல்கின்றனர். வள்ளுவனைச் சிறந்த பகுத்தறிவாளனாய்ப் பார்த்துப் பழகிய நமக்கு குறளின் பொருள் வேறாய்த் தொனிக்கிறது. நமக்கு மட்டுமா ? ஜி.யு.போப், மு.வரதாசனார், சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றோருக்கும் அவ்வாறே தொனிக்கிறது. ஆனால் குறளைப் போலவே பொருளையும் அவர்கள் இரத்தினச் சுருக்கமாய்ச் சொல்லியதால் சிலருக்குப் பொருள் புலப்படாமல் போயிருக்கலாம். எனவே அந்த சிலர் உணர விரித்துரைக்கும் தொழிலை நாம் மேற்கொள்ளலாமே ! "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" (குறள் 319) போன்று நாம் செய்த குற்றங்களுக்குத் தண்டனை உண்டு என்பதெல்லாம் முதிர்ச்சி குறைந்தோரை மிரட்டி அறவழி செலுத்துவதற்காகவே. இது சமூக நன்மை கருதி அறன் வலியுறுத்துவோரின் மேன்மைதகு பொய்யுரை. இதனை இக்கட்டுரையில் சுட்டப்படும் முதல் பொய்யுரை எனக் கொள்ளலாம். மற்றபடி முதிர்ச்சியுடையோர்க்கு இப்பொய்யுரையெல்லாம் தேவையில்லை. அறவழி நடத்தலே சமூகத்தில் இன்னல்களைத் தவிர்ப்பது என்று அன்னார் உணர்ந்து செயல்படுவர். எனவே ஒருவன் இன்று அல்லலுறும்போது அது அவன் முன் செய்த தீவினையால் என்று பழிக்கும் மனநிலை, நமது பொய்யுரையாலோ என்னவோ, வாழ்வில் பக்குவம் பெறாதோர்க்கு ஏற்படுவது இயல்பு (எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டின் எதிரில் ஒரு தொழு நோயாளி இருந்தார். என் ஆச்சி, "அது அவன் முன்னம் செய்த பாவம்" என்று சொல்ல நான், "என்ன ஆச்சி இதெல்லாம்?" என்று அவளைக் கடிந்து கொண்டது உண்டு). அவ்வாறு பழித்தல் சரியன்று என்று அத்தகையோர்க்கு எடுத்துக் கூறும் பொறுப்பும் அறம் பேசுவோர்க்கு உண்டு. அப்பொறுப்பை சிரம் மேற்கொண்டு வள்ளுவன் தந்ததே முதலில் நாம் எடுத்த குறள் எண் 37. இன்று பல்லக்கு தூக்குபவனைப் பார்த்து இது அவன் முன்னம் செய்த தீவினையால் என்றும், பல்லக்கில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து அது அவன் முன்னர் நன்றாற்றியதால் என்றும் கொள்ள வேண்டாம் என்று குறள் உரைப்பதாய் நாம் உணர்கிறோம். இஃது பகுத்தறிவின்பாற்பட்டு பொய்யாமொழியின் தகைமைக்கு உற்றதாய் அமைகிறது. என்னைப் போன்ற இறை மறுப்பாளர் பலர், சமூகத்தில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடன் இருக்கட்டுமே என நினைப்பதற்குக் காரணம் உண்டு. அதுவும் சமூக நன்மை கருதியே ! எந்தவொரு சமூகக் குழுவிலும் பக்குவம் பெறாத மானிடரே அதிகம் இருப்பர் என்ற எங்கள் எண்ணம் சற்று அடாவடித்தனமாக இருக்கலாம். இருக்கட்டுமே ! இறை மறுப்பிற்கு அதீதமான விவேகம் தேவை என்பது எங்களின் இறுமாப்பு என்றும் கொள்ளலாம். பக்குவம் பெறாதோரிடம் இறை நம்பிக்கை இருப்பதாலேயே, இறை மீது ஏற்படும் பயத்தின் காரணமாக ஓரளவு அறவழி நிற்கின்றனர் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே நாங்கள் இறை மறுப்பைப் பொதுச் சமூகத்தில் அடக்கி வாசிப்பதும், சில நேரங்களில் ஒரு படி மேற்சென்று, "அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்" என்று சொல்லிக் கடந்து செல்வதும் எங்களின் பொய்யுரை. எங்களால் வேறு என்ன செய்ய முடியும் என்பதெல்லாம் வேறு. இக்கட்டுரையில் அடியேன் எடுத்துக்காட்டாக வைக்கும் பொய்யுரைகளில் இது இரண்டாவது. மேற்கூறிய இரண்டிலும் பகுத்தறிவாளர்தம் பொய்யுரைகளையே பேசினோம் - same side goal போல ! அதிகம் பொய்யுரைப்போர் எதிரணியினர் அல்லரோ !அதிலும் அன்னார் கூறுவதெல்லாம் சமூக நன்மை சார்ந்த பொய்யுரைகள் அல்லவே !அறியாமையில் உழலும் அவர் மீது ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் அவர் கூறும் பொய்யுரைகளில் நல்லதாக ஒன்றினை மட்டும் எடுத்துக்காட்டி நிறைவு செய்ய எண்ணம். இப்போது நாம் கையில் எடுப்பது உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் பாடல் 9. "நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லவன் சலமிலன் பேர்சங் கரன்" அருஞ்சொற்பொருள் : நண்ணுதல் - விழைதல், விரும்புதல்; நண்ணார் - விழையாதார்; நண்ணினர் - விழைந்தவர்; சலம் - அசைவு, அசைவுள்ள பொருள் (அசலம் என்பது அசையாப் பொருள் என்று மலைக்குக் காரணம் பெயரானது; ஆகவே வேங்கட மலைக்கு வேங்கடாசலம் என்றும், அருண மலைக்கு அருணாசலம் எனவும் வழக்கு). முதல் வரியின் பொருள் : தன்னை விழையாதார்க்கு அவன் நலமில்லாதவன்; விழைந்தார்க்கு நலம் மிக்கவன். இரண்டாம் வரியின் பொருள் : அவன் வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளன் (சலம் இலன்). அவன் பெயர் சங்கரன். பாமரர் ஒருவர்க்கு இந்த இரண்டு வரிகளுக்கு இடையே உள்ள முரண் தெரிவதில்லை. முதல் வரியை எடுத்துக்கொண்டு, இறைவன் தன்னை நம்புபவர்களுக்கு மட்டுமே நன்மை தருவான் என்று கொள்வர்; இரண்டாம் வரியைத் தனியே எடுத்து அவன் வேண்டுதல் வேண்டாமை இலாதான் எனக் கொள்வர். எந்த ஒரு சமயமும் பாமரரிடத்தில் தன் இருப்பை நிலை நிறுத்த தன் இறைவன் ஒருவனே பக்தனுக்கான இளைப்பாறுதலைத் தர முடியும் எனப் பரப்புரை செய்வது வாடிக்கைதானே !ஆனால் பாடலை உய்த்துணரும் சான்றோர் இரு வரிகளுக்கு இடையே முரண் தெரிவதை எவ்வாறு கடப்பர் ? வரிகளை உற்று நோக்குங்கால், "அவன் நலமிலனாகவும் நல்லனாகவும் தெரிவதெல்லாம் அவரவர் மனதை அல்லது பார்வையைப் பொறுத்தது; மற்றபடி அந்த சங்கரன் மாறுபாடு இலாதவன்; தன்னை விழைந்தார் விழையாதார் அனைவருக்கும் நல்லன்" என்பதே பாடலின் உறுபொருளாய் நிற்பது என்பதை உய்த்துணர்வர். இவ்வாறு மாந்தரில் ஒரு சாரார்க்கு ஒரு பொருளும் மற்றொரு சாரார்க்கு வேறு ஒரு பொருளும் தந்து நிற்பது ஏதோ ஒரு வகையில் பொய்யுரைதானே ? இதனால் யாருக்கும் கேடில்லை என்பது வேறு. இங்கு வஞ்சகமோ ஏமாற்று வேலையோ இல்லைதான். பகுத்தறிவாளர் மக்கள் நலன் கருதி பொய்யுரைப்பது போல, தம் இருப்பைத் தக்க வைக்க யாருக்கும் தீங்கிழைக்காத பொய்யுரை மாற்றார்க்கும் உரிமையன்றோ ? எனவே பொய்மையும் வாய்மையிடத்த ...............................
  16. முற்றிலும் உண்மை. நீதிக்கட்சி (Justice party) மூலமாகப் புகைய ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு அண்ணாவின் திமுகவினால் கொழுந்து விட்டு எரிந்தது என்பதே வரலாறு. தமிழக அரசியலில் அதுவே திருப்பு முனையானது. தமிழ்நாட்டில் மக்களின் தன்னெழுச்சியான பெரிய போராட்டம் என்பது சமீபத்தில் நான் அறிந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம். அடுத்து, சில இடதுசாரிகளின் (CPI, CPI(M) அல்ல) வழிகாட்டுதலில் மக்கள் போராடியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு. இவை இப்போது என் நினைவில் வருபவை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிட இயக்கங்களின் முதன்மையை எடுத்துக் காட்ட பராசக்தி படக்குழுவினருக்கு மனமுண்டா என்பது தெரியாது. அப்படிச் செய்திருந்தால் பிரச்சாரப் படம் என்று சொல்லி, படம் தணிக்கைக் குழுவைத் தாண்டாமல் நின்றிருக்க வாய்ப்பு அதிகம். இன்றைக்கு இந்திய ஜனநாயகம் அவ்வளவுதான். ஆனாலும் அண்ணாவை அவர்களால் முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. எது எப்படியாயினும் தெரிந்தோ தெரியாமலோ, பராசக்தி பெரும்பான்மையான இளையோரிடத்தில் மொழியுணர்வைப் பற்ற வைத்துள்ளது வரவேற்கத் தகுந்த ஒன்று.
  17. பராசக்தி - சுப.சோமசுந்தரம் இது பராசக்தி படத்தின் விமர்சனப் பார்வை அல்ல. அப்படம் ஏற்படுத்திய பரபரப்பு பற்றியது. தற்போது வெளியாகியுள்ள புதிய 'பராசக்தி' திரைப்படம் பெரும் வரவேற்பையும், சிலரிடம் ஏதோ அரசியல் காரணங்களுக்காக வெறுப்பையும், சில தரமான திரை விமர்சகர்களிடமிருந்து அரசியல் கலக்காத விமர்சனப் பார்வைகளையும் பெற்று சமூக வலைத்தளங்களைப் பரபரப்பாக்கி விட்டது. பெயர் ராசியோ என்னவோ, பழைய பராசக்தியும் அக்காலத்தில் அரசியல் களத்தில் சூடேற்றியது. 1930 களிலேயே சூடு பிடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1950 களின் இறுதியிலும் 1960 களிலும் தீப்பிடித்துப் பரவியதை ஓரளவு தொட்டுக் காட்டிப் பெரும் வெற்றி கண்டுள்ளது தற்போது வெளிவந்துள்ள பராசக்தி. இந்தி எதிர்ப்பு அல்ல, இந்தித் திணிப்பு எதிர்ப்பாக்கும் எனும் பம்மாத்து எனக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன் - நாங்கள் பார்ப்பனர்க்கு எதிரி அல்ல, பார்ப்பனியத்திற்கே எதிரி என்பது போல. தணிக்கைத் துறையைச் சரிக்கட்டவும், ஏதோ நாகரிகம் கருதியும் 'தமிழ் வாழ்க' முழக்கத்தை மட்டுமே படம் முன்னெடுத்துள்ளதை என்னைப் போன்றோரால் புரிந்து கொள்ள முடிகிறது. பாசிசத்திற்கு மட்டும்தான் பம்மாத்து தேவையா என்ன ? அறிஞர் அண்ணா போன்று சமூகத்திற்கு நன்மையாற்ற நினைக்கும் கொள்கைச் சான்றோர்க்கும் பம்மாத்து தேவைப்படவே செய்தது. இறை மறுப்பாளரான அண்ணா 'ஒருவனே தேவன்' என்று ஏற்றுக் கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலைத் தமிழ் மொழிவாழ்த்து ஆக்கிய கலைஞர் கருணாநிதி அப்பாடலில், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கழிந்து ஒழிந்து சிதைந்தது பற்றிய வரியினை நீக்கியதும் அவ்வாறுதானே ? இவை அரசியல் நாகரிகம் என்று சொல்லிக் கடந்து செல்லும் பக்குவம் பகுத்தறிவாளரிடம் உண்டு. ஆனாலும் 'இந்தி ஒழிக, தமிழ் வாழ்க !' என்று அன்றைய முழக்கம் சேர்ந்தேதான் ஒலித்தது, சரியாக ஒலித்தது என்பதை இங்கு பதிவு செய்யவே விழைகிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஏதுமறியாத இளம் தலைமுறையினர் இதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். நிற்க. சங்கிகளும், யாரோ வேறொரு கதாநாயகனைத் தெய்வமாய் வழிபடும் ரசிகக் கண்மணிகளும் பராசக்தி படத்தைப் பற்றி கன்னா பின்னாவென்று பதிவு செய்வதைப் புறந்தள்ளி விடலாம். அவர்களை ஆட்டத்துக்கே சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. உலக சினிமா இலக்கணமெல்லாம் பேசி அந்த அளவுகோலை இந்தப் படத்திற்கு வைத்துப் பேசும் தரமான சினிமா விமர்சகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது, "உங்களின் நிலைப்பாட்டிற்குப் பெயர் அறிமடம் (அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதல்). இது ஒரு வணிக நோக்கிலான சினிமா. மொழிக் கொள்கை கூட படம் எடுத்தவர்களுக்கு வணிக நோக்கில் அமைந்த ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் மொழிப்போரைப் பற்றி ஏதுமறியாத, வாசிப்பு அதிகம் இல்லாத பெரும்பாலான இளைய தலைமுறையைச் சென்றடைந்து விட்டது இப்படம். பலருக்கு சரியாக மொழி உணர்வைக் கடத்தி இருக்கிறது. அவ்வளவே !". அடுத்து, இதனைத் தங்களுக்கு எதிரான படமாக நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு : ஐயா ! உங்கள் காங்கிரஸ் என்பது அந்தப் பழைய காங்கிரஸிலிருந்து பிரிந்து, அது ஒன்றுமில்லாமல் ஆனபின் 'இனி இதுதான் காங்கிரஸ்' என்று ஆன ஒன்று. எனவே 'படத்தில் காட்டப்பட்டது பழைய சித்தாந்தங்களுடன் திகழ்ந்த காங்கிரஸ். நாங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை நன்கு உணர்ந்த புதிய காங்கிரசாக்கும்' என்று சொல்லி நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் இந்திக்குப் பெரிய ஆதரவாளராயிருந்து மொழிப் போராளிகளை ஆங்காங்கே சுட்டுத் தள்ளியது நிஜம். அடுத்த தேர்தலில் காமராஜரை மக்கள் தோற்கடித்ததற்கும் பெரும் பங்களிப்புச் செய்தவர் பக்தவத்சலம். அவரை உள்ளது உள்ளவாறு படத்தில் காட்டியதற்கு இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்திரா காந்தி அம்மையாரைக் காட்டிய விதத்திலும் பெரும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று வடக்கில் இருந்த தலைவர்கள் எவரும் மொழிப்போரில் நம்முடைய நிலையைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை என்பது நமது முகத்திலறையும் நிதர்சனம். இறுதியாக தற்போது சிறிய சர்ச்சைக்கு உள்ளானது என்னவென்றால் பராசக்தி படக்குழு டெல்லியில் மோடி தலைமையில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் பங்கேற்றது. தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பேர் இருக்க, இப்படக் குழுவை பாஜக அழைத்ததும் இவர்கள் அதில் கலந்து கொண்டதும் ஒரு வேடிக்கை அரசியலாகத் தெரிகிறது; கேவலமான அரசியலாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வாறான நிகழ்வுகளை உதாசீனப்படுத்திக் கடந்து செல்ல வேண்டும். படம் தமிழ்ச் சமூகத்திற்கு நல்ல செய்தியைத் தந்தது என்பதோடு நிறுத்த வேண்டும். படக்குழுவினரை நிஜ வாழ்விற்கு அழைத்து வந்து நாயகர்களாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நாயகன் சிவகார்த்திகேயன் தாங்கள் திராவிட இயக்கத்தினர் என்றோ குறைந்தபட்சம் தமிழ் உணர்வாளர் என்றோ கூறிக் கொள்ளவில்லை. பாஜக நாளைக்கே இவர்களை அழைத்து ஒரு இந்தி ஆதரவுப் படத்தை எடுக்கச் சொன்னால், "நீ காசு குடு மாமே ! மத்ததை நாங்க பாத்துக்குறோம்" என்று இவர்கள் ஆனந்தக் கூத்தாடலாம். இதை விட இவர்களிடம் பெரிதாக ஏன் தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்க வேண்டும் ? இது விஷயத்தில் பாசிச பாஜகவை வேண்டுமானால் கடுமையாக விமர்சிக்கலாம். அவ்வளவுதான். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ரகு தாத்தா' திரைப்படமும் ரசிக்கும் படியாக இருந்தது. இதுவும் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் பின்னணியில் உருவான கதை. ஆனால் இது அப்போது நிகழ்ந்த வரலாற்றைக் கூற வரவில்லை. மாறாக, பெண்ணியம் பேசும் கதையில் கதாபாத்திரங்கள் இந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தன. பராசக்தி திரைப்படம் போன்று ரகு தாத்தா பரபரப்பாகப் பேசப்படாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் - கீர்த்தி சுரேஷ் தவிர நட்சத்திர நடிகர்கள் இல்லாமையும், முழுமையான வணிக நோக்கில் இளையோரைக் கவரும் உத்திகள் இல்லாமையும் அவற்றில் சில. எது எப்படியோ, இது போன்று தமிழரின் தன்னுணர்வை விழிப்புறச் செய்யும் திரைப்படங்கள் அவ்வப்போது திரையில் தோன்றுவது அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டம் நாட்டு விடுதலைக்கானது என்றால் மொழிப்போர் தமிழ் இன விடுதலைக்கானது என்பதை இந்நிலத்து இளையோர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ரகு தாத்தா திரைப்படம் குறித்து முன்னர் நான் முகநூலில் எழுதியவை பின்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/1bL1fCKieF/
  18. 'செவ்வருக்கை' நூல் அறிமுக உரை - சுப.சோமசுந்தரம் எழுத்தாளர் எம்.எம்.தீன் அவர்களின் சமீபத்தியப் படைப்பான 'செவ்வருக்கை' எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பேறு பெற்றேன். தொகுப்பிலுள்ள முதற்கதையின் தலைப்பே நூலுக்கான தலைப்பானது. செவ்வருக்கை என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிப்பதாகும் - வாழையில் செவ்வாழை போல. இதன் பழத்தில் சுளைகள் மிக அடர்த்தியாகவும் செவ்வண்ணத்திலும் அமைவன. கனியின் மணமும் சுவையும் தன்னிகரற்றவை. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் சாதி ஆணவம் பற்றிப் பேசுபவை. தீன் அவர்கள் தக்கோரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்தளித்த படைப்பு இது. நூலில் உள்ள அனைத்துக் கதைகளையும் நாம் இங்கு பேச வரவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு (!) பதமாய் நான்கு கதைகளைச் சொல்லி முழுச்சோற்றையும் நீங்களே உண்டு பாருங்கள் என அழைப்பு விடுவதே இவ்வெழுத்தின் நோக்கம். முதலில் செவ்வருக்கை. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்த ஒரு ஆதிக்க சாதியினரின் காட்டில் (தோட்டத்தில்) ஆத்தி புலையனும் அவன் மனைவி வெயிலாளும் மற்றும் சில குடியானவர்களும் உழைத்து வந்தனர். அதனைப் பொறுப்பாக வழிநடத்தியவன் ஆத்திபுலயன். வெயிலா நிறைமாத சூலியான நேரம் இரண்டு செவ்வருக்கைப் பழங்கள் ஒரு மரத்தில் காய்த்துக் கனிவாகின. அதனை உண்ண ஆசைப்பட்ட வெயிலா தனது அண்ணன் மாடப்புலையன் மூலமாக வெட்டிக் கொணர்ந்து ஆசை தீர உண்டாள். அதனை அந்த நில உரிமையாளர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதையுணர்ந்த ஆத்திபுலயன் குடும்பத்துடன் அங்கிருந்து தப்ப முயல, ஆதிக்க வெறி பிடித்தவர்களால் கொலையுண்டு முடிந்து போயினர். கொலையாவதற்கு முன் வெயிலா ஈன்ற ஆண் மகவினைக் காப்பாற்றிய மாடப்புலயன் அவனுக்கு செங்காடன் எனப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்கினான். செங்காடன் வளர்ந்து ஆளாகித் தன் அப்பன் - ஆத்தாளைக் கொன்றவர்களைக் கொன்று அந்தச் சண்டையில் தானும் உயிர் நீத்தான். இதன் பின்னர் பல இன்னல்களுக்கு ஆளான பண்ணையார் குடும்பத்துக்குப் பரிகாரம் சொன்ன மலையாள மாந்திரீகர்கள் ஆத்திபுலயன், வேலாயி, செங்காடன் ஆகியோருக்குப் பூடம் போட்டு வருடா வருடம் செய்முறைகள் செய்து வழிபடச் செய்தார்கள். இது நடந்து முந்நூறு வருடங்களுக்குப் பிறகு பழைய கதையெல்லாம் திரிந்து இப்போது பண்ணையார் குடும்பத்து வகையறாக்கள் அந்தத் தெய்வங்கள் தங்கள் குலத்தைச் சார்ந்த, தங்கள் குலத்தை ஆசீர்வதிக்கும் குலசாமி என்றே நம்புகின்றனர். தங்களுக்குக் கீழான பகைச்சாதியினர் மீது தாக்குதல் நடத்தப் போகும்போதெல்லாம் அக்குல தெய்வங்களை வணங்கி உத்தரவு பெற்றே செல்கின்றனர். "செங்காடனும் மற்ற குல தெய்வங்களும் பழியை மறந்து சமாதானம் ஆகியோ அல்லது அவர்களது அதிகாரம் கண்டு பயந்தோ சிரித்தபடியே உத்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று எழுத்தாளர் தம் கூற்றாக அங்கதத்துடன் கதையை நிறைவு செய்கிறார். எம்.எம்.தீன் அவர்களின் கதை சொல்லும் நேர்த்தியைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்து அவருக்குப் புதிதல்ல. சமூக அவலங்களை எடுத்தியம்புவதில் நேரிடையாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நேரிடையாகவும், குறிப்பாகச் சொல்ல வேண்டிய இடத்தில் குறிப்பாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் வெகு சிலரே. ஒவ்வொரு கதையிலும் அவர் போடும் நிறைவுத் திரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வது நிறைவாய் அமையும். எடுத்துக்காட்டாக, செவ்வருக்கையை இப்போது கையிலெடுப்போம். தாங்கள் முன்னர் அநீதி இழைத்தவர்களிடமே வந்து ஆதிக்க வர்க்கத்தினர் மீண்டும் அந்த அநீதியைத் தொடர்ந்திட உத்தரவு கேட்பதும், அதற்கு அவர்கள் இசைவதுமான வெளிப்பாடு நகைமுரண் மட்டுமல்ல; இன்றைய சமூக அவலத்தின் அபாரமான குறியீடும் கூட. நமக்குத் தெரிந்து தலித் சமூகத்தினர் சிலரும், ஒரு காலத்தில் மேலாடை அணிய மறுக்கப்பட்ட சமூகத்தில் பலரும் அதே பாசிச சக்திகளிடம் சரணடைந்து நிற்பது என் போன்றோர் நினைவில் நிழலாடுவது தவிர்க்க இயலாத ஒன்று. எழுத்தாளர் இக்குறிப்பைத்தான் பெரும்பாலும் கொண்டிருப்பார்; உறுதியாகத் தெரியாது. எழுத்தாளர் சிந்தித்ததை வாசகரும் சிந்திக்க வைப்பதும், அவர் சிந்திக்காதையும் சிந்திக்க வைப்பதும்தானே சிறந்த எழுத்தாக அமைய முடியும் ! போகிற போக்கில் இக்கதை தொடர்பான வேறு ஒன்றைச் சொல்வது என் கடமை என எண்ணுகிறேன். இது செவ்வருக்கை. அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதை செவ்வாழை. முக்கனிகளில் இரண்டு வந்து விட்டனவே ! இரண்டு கதைகளின் பொதுவான அடிநாதம் மேட்டிமைத்தனம் சாடல். செவ்வருக்கை சாடுவது சாதிய மேட்டிமையை; செவ்வாழை சாடுவது வர்க்க மேட்டிமையை. செங்கோடன் என்னும் ஏழைக் குடியானவன் தன் குழந்தைகளிடம் ஆசையை வளர்த்து, தன் வீட்டுக் கொல்லையில் செவ்வாழை ஒன்றை வளர்த்து வருகிறான். அந்த ஏழையின் கனவு செழித்து வளர்ந்தது. இரண்டொரு நாட்களில் வாழைக்குலையினை வெட்ட எண்ணுகிறான். பிள்ளைகள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர் தம் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சியொன்றுக்கு அந்த செவ்வாழைக் குலையைக் கேட்டு ஆள் அனுப்புகிறார். மறுப்பது எங்ஙனம் ? தனது மற்றும் தன் குழந்தைகளின் கனவெல்லாம் நொறுங்க, அக்குலையை வெட்டிக் கொடுத்து விடுகிறான். குழந்தைகளின் அழுகை நாட்கணக்கில் ஓயவில்லை. ஓரளவு விவரம் தெரிந்த பெரிய பையனின் விரக்தி நிலையைக் கதையின் முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா இவ்வாறு வைக்கிறார் - "பாவம் சிறுவன்தானே ! அவன் என்ன கண்டான் - செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகில் சர்வ சாதாரண சம்பவம் என்பதை !". உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் பொதுவுடமைக் கருத்தை அண்ணா முன்னெடுக்கும் கதை செவ்வாழை. தோழர் தீன் சமூக நீதியைக் கையிலெடுத்ததும், சமூக நீதியை அதிகம் பேசும் அறிஞர் அண்ணா பொதுவுடமை பேசியதும் ஒரு இனிமையான ஒப்பீடு ! வர்க்க விடுதலையும் சமூக நீதியும் பின்னிப் பிணைந்த வை என்னும் பொதுவுடைமைவாதிகளின் கருத்திற்கு உரமிடுவது. சாதியம் என்னும் இழிவு, மத எல்லைகளைக் கடந்தது என்பதை சுட்டிக்காட்ட எம்.எம்.தீன் ஒருபோதும் தவறவில்லை. இந்திய இஸ்லாமியரிடையே சாதியம் விரவிக் கிடப்பதை 'நாசுவம்' எனும் கதையிலும், கிறித்துவத்தில் சாதியப் போக்கினை 'ஊரு ஒப்பாது' எனும் கதையிலும் ஆணித்தரமாய் உரைப்பதில் அவர் பின்வாங்கவில்லை. இஸ்லாமிய சமூகம் பெருமளவில் வாழும் ஊருக்கு முடி திருத்தும் தொழிலுக்காகவே கொண்டுவரப்பட்ட குடும்பத்தின் வாரிசு ஒருவர் பிற்காலத்தில் சென்னை சென்று கட்டுமானத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார். தம் மகனின் திருமணத்தை இந்த ஊரில் அவர் கட்டித் தந்த 'நிலா மஹால்'இல் நடத்த முடிவு செய்து ஊரடைக்க மதிய விருந்துக்கும் மாலை வரவேற்புக்கும் தடபுடலாக ஏற்பாடு செய்து அழைக்கிறார். மதிய விருந்துக்கு அந்த ஊர்க்காரர் ஒருவர் கூட வரவில்லை. அவரும் இஸ்லாமியராயினும் அவரது சாதி கருதி ஊர் மக்களான இஸ்லாமியர்கள் (!) திருமணத்தைப் புறக்கணித்த விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. நியாயமான அறச்சீற்றத்துடன் மாலை வரவேற்பை ரத்து செய்துவிட்டுக் குடும்பத்துடன் சென்னைக்குக் கிளம்பிச் சென்று விடுகிறார். திருமணத்திற்கு போன மாதிரியும் இருக்கட்டும், போகாத மாதிரியும் இருக்கட்டும் என்று மாலை வரவேற்புக்கு வந்த ஊர்க்காரர்கள் சிலரை பூட்டிய கதவு வரவேற்கிறது. வந்தவர்களில் தொப்பியும் பெரிய தாடியும் வைத்திருந்த பெரிய மனுசர் ஒருவர், "என்ன இருந்தாலும் நாசுவப் பயலுக்கு இம்புட்டு பவிசும் வீம்பும் ஆவாது" என்று சொல்ல, கதை முடிகிறது. இந்திய இஸ்லாத்திலும் சாதிய மனநிலை மாறவில்லை; மாறுவதாகவும் இல்லை என்பதை 'நாசுவ'த்தின் அந்த இறுதி நொடி உணர்த்துகிறது. இக்கதை அன்வர் பாலசிங்கம் எழுதிய 'கருப்பாயி என்ற நூர்ஜஹான்' எனும் குறுநாவலை நினைவுறுத்துகிறது. சாதியக் கொடுமையால் மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தலித் சமூகத்தினர் பின்னர் தம் சமூகத்தாராலும், இஸ்லாமியராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு அல்லலுற்ற கதையைத் தத்ரூபமாகப் படம் பிடித்த நாவல் அது. அந்த நாவலை எழுதிய பின் அன்வர் பாலசிங்கம் பட்ட பாட்டை நண்பர்களிடம் கேள்விப்பட்ட நினைவு. நெஞ்சில் உரம் கொண்டு நேர்மைத் திறம் கொண்டு 'நாசுவம்' எழுதிய தோழர் தீன் அவர்களுக்குப் பாராட்டு. தேவாலயத்தில் இரு குடும்பங்கள் சந்தித்து மனமொத்து (தலைவனையும் தலைவியையும் சேர்த்துதான் !) ஒருவருக்கொருவர் விவரங்களைப் பகிர்ந்த பின், "நீங்க வேற நாங்க வேற; ஊரு ஒப்பாது" என்ற நூலிழையில் திருமணப் பேச்சு முறிந்து போகிறது. பின்வாங்கிய குடும்பம் தாங்கள் அவர்களை விட மேலோராக்கும் எனும் கற்பனையில் மிதக்கும் இடைநிலைச் சாதியினர் என்பதும், சிறிய அல்லது பெரிய ஏமாற்றத்துக்குள்ளான பிறிதொரு குடும்பம் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் பட்டியல் இனத்தோர் என்பதும் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன ? அவர்களுக்குள் திருமணப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்த பாஸ்டரும் சாதிய மனநிலையில் இருந்து விலகியவர் அல்லர் என்பது சூசகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அங்கேயும் உள்ள அநாகரிகத்தை 'ஊரு ஒப்பாது' கதையில் குறிப்பாக வெளிப்படுத்தியது எழுத்தாளரின் நாகரிகம். பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கடைசிக் கதையான 'சாதி நாற்காலி', பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த ஒரு படித்த அருந்ததியர் பெண் ஆதிக்க இடைநிலைச் சாதியினரால் எதிர்கொள்ளும் அவமானங்களைத் தோலுரித்துக் காட்டுவது. அவள் கற்ற கல்வி அவளைக் கொள்கைப் பிடிப்புடன் நிற்க வைக்கிறது. அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும் அப்பெண் வீறு கொண்டு நிற்பதைப் பேசும் கதை இது. சமநிலையை ஏற்க மறுக்கும் சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் அறிவாயுதம் கொண்டு நேர்மையாக சமூகப் பணியாற்றும் உறுதியேற்று உயிரையும் பணயம் வைக்கத் தயாரான புதுமைப் பெண்ணின் கதை இது. ஏனைய கதைகள் நிதர்சனத்தை சமூகத்தின் முகத்திலறைந்து சொல்லுகையில் இக்கதை ஒரு படி மேற்சென்று நம்பிக்கை ஒளியூட்டுவதாய் அமைகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் போல அறவழி நின்று எதிர்வினை ஆற்றுகிறது. தோழர் தீன் அவர்கள் தமது எழுத்துப் பணியான சமூகப் பணியினைப் பன்னெடுங்காலம் முன்னெடுத்துச் செல்வார்; செல்ல வேண்டும். https://www.facebook.com/share/p/1E5ofEE61x/
  19. உணர்வுபூர்வமான அருமையான பதிவு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 'எனது மரணச் சடங்கு' என்று தலைப்பிட்டதால் நான் எழுதியதைப் போல அல்லது என் மகள் எழுதியதைப் போல அமைந்திருக்குமோ என்று நினைத்தேன் - மற்றவர்கள் உலகை நமது கண்ணாடி அணிந்து பார்ப்பது வேடிக்கையானது என்று தெரிந்தும் கூட. இருப்பினும் எங்கள் எழுத்துகளையும் கீழே இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/16mRbucbQJ/
  20. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - சுப.சோமசுந்தரம் மனிதர்களில் பெரும்பாலானோர் தம் மரணத்தைப் பற்றிப் பேசுவதை, ஏன் நினைப்பதையே விரும்புவதில்லை. "அது வரும்போது வரட்டுமே !" என்று கடந்து போவதோ அல்லது நழுவி விடுவதோ எளிது. ஒரு நாள் தற்செயலாக ஒரு அருமையான நிகழ்வைக் காணும் பேறு பெற்றேன். தாத்தா ஒருவர் தம் பேரனிடம், "எலேய், தாத்தா செத்துப் போனா எப்படி டான்ஸ் ஆடுவே ?" என்று கேட்டார். அவர்கள் சமூகத்தில் வயதானோர் சாவைக் (வெளிப்படையாக) கொண்டாடும் வழக்கம் இருக்கலாம். உடனே அப்பேரன் ஆடிக் காண்பிக்கவே, அந்தத் தாத்தா கைதட்டி ரசித்தார். தம் சாவைத் தாமே கொண்டாடும் இவரின் முதிர்ச்சி எனக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அன்று என் மரணத்தையும் கற்பனையில் ரசித்தேன். அந்த மரணத்திற்கு என்னைத் தயார் செய்வதற்கே எனது எஞ்சியுள்ள வாழ்க்கை என்று எனக்குத் தோன்றியது. எனது வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைத் தானம் செய்வதாய் எழுதிக் கொடுத்தேன் (என் மரணத்திற்குப் பிறகுதான் !). எனது நண்பரும் குருநாதர்களில் ஒருவருமான பேராசிரியர் ஒருவர் அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடச் சொன்னார். முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் நான் தனியன் இல்லையே ! பலர் இல்லாவிட்டாலும், இச்சமூகத்தில் சிலர் இதுபோல் எழுதிக் கொடுத்தது உண்டே ! என் நண்பர்கள் சிலரே உண்டு. எனவே பொதுவெளியில் நான் பதிவிடுவது சுய விளம்பரம் ஆகாதா ? இக்கேள்விகளுக்கு என் பேராசிரியர் பதிலோடு வந்தார், "எதை எதையோ பதிவிட்டு மக்கள் சுய விளம்பரம் தேடும் காலகட்டத்தில் இது இன்னொரு சுய விளம்பரமாக இருந்து விட்டுப் போகட்டுமே !இதனால் பெரும் பயன் ஒன்று உண்டு. மிகவும் சாதாரண விஷயங்கள் கூட நம்மில் பலருக்குப் பல நேரங்களில் தோன்றுவதில்லை. மற்றவர் செயல்படுத்துவதைப் பார்த்த பின்பே நாமும் செய்யலாமே எனத் தோன்றுகிறது. அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே !". உண்மைதான். சமீபத்தில் அநேகமாக எல்லோருக்கும் தோன்றும் ஒரு சாதாரணச் செயல்பாட்டிற்கு சாட்சிக் கையொப்பமிட எனது இன்னொரு குருநாதரை அழைத்தேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் வந்தது மட்டுமல்லாமல் தாமும் அது போன்று விரைவில் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். என்னை விடப் பத்து வயது மூத்த என் குருவானவர்க்கு நான் வழிகாட்டியாய் இல்லாவிடினும், ஒரு நினைவூட்டலாய் அமைந்ததை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. எனவே உடல் தானத்தின் மூலமாக இறுதிச் சங்கு வேண்டாம் என முடிவெடுத்தபின் சுய விளம்பரம் எனும் சங்கை எடுத்து நானே முழங்கி விடுகிறேனே ! இந்த உடல் தானம் தொடர்பில் மேலும் ஒரு அனுபவப் பகிர்வு உண்டு. நான் எழுதிக் கொடுத்த உடல் தானம் சிறப்பு என்றால் அச்சிறப்பின் பெரும்பகுதி என் மனைவி, மக்களையே சாரும். என் உடல் தானத்திற்கு அவர்கள் எழுதித் தந்த சம்மதம் மலையினும் மாணப் பெரிது. இறை நம்பிக்கையுள்ள என் மனைவி அந்த நம்பிக்கை இல்லாத என்னிடமும் பிள்ளைகளிடமும் தன் கருத்தைத் திணிக்க முற்படுவதில்லை. எங்களை எங்களின் கருத்துகளோடும் முன்னுரிமைகளோடும் ஏற்றுக்கொண்ட என் மனைவி எங்களுக்கான வரம். அவள்தன் சாமியால் (!) எங்களுக்காகவே படைக்கப்பட்டு இருப்பாளோ என்னவோ ! எனவே என் கருத்தையும் உணர்வையும் அறிந்து என் உடல் தானத்திற்கு அவள் எழுதிக் கொடுத்த சம்மதம் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. பகுத்தறிவாளர்களாகவே வளர்ந்த எனது இரு பெண் பிள்ளைகளும் முதலில் தயக்கம் காட்டியது நான் எதிர்பாராத ஒன்று. இறையிலும் மதத்திலும் நம்பிக்கை இல்லாத அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முதலிய சம்பிரதாயங்கள் ஒரு பொருட்டே அல்ல. அவர்களது தயக்கத்திற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது, அவர்கள்தம் தந்தையின் மரணத்தை இப்போதே நினைத்துப் பார்ப்பதினால் ஏற்படும் அதிர்வு; இரண்டாவது, தம் தந்தையின் உடல் கூறு போடப்படுவது அவர்கள் நினைத்தே பார்க்க விரும்பாதது. இவற்றில் முதலானதை நான் எளிதாய் எதிர் கொண்டேன். "இவ்வாறு எழுதித் தரும் மகிழ்ச்சியில் நான் நூறு வருடங்கள் வாழலாம். உதாரணமாக ஒருவர் தம் பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்த பின்பு உடனே மரணிக்க வேண்டும் என்பதில்லை; எச்சரிக்கையாய் இருக்கிறார் என்று பொருள்". இரண்டாவது காரணத்திற்குப் பின்வருமாறு கேட்டேன், "தந்தையின் இறந்த உடல் செந்தழலில் வேகும்போது உங்களுக்குச் சுடாதா ? உடல் வேகும்போது சுருண்டு கொள்ளுமே, அப்போது சுடுகாட்டில் வெட்டியான் எனப்படும் அத்தொழிலாளி கழியால் அடித்துச் சமன் செய்வாரே ! அப்போது உங்களுக்கு வலிக்காதா ? மின் மயானம் எனின் உங்கள் உடலில் அந்த மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படாதா ?". போதாக்குறைக்கு எனது தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களை என் பிள்ளைகளிடம் பேசச் சொன்னேன். அவர் மீது அவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. "மண்ணோ நெருப்போ உண்ணப் போகும் உடலை வைத்து மாணாக்கர் சிலர் படித்துவிட்டுப் போகட்டுமே ! சமூகத்திற்கு அவர்கள் கற்றது பயன்படும். அவர்கள் படித்தபின் மீண்டும் அவ்வுடல் மண்ணில் புதையுண்டு மரத்திற்கு உரமாகும். ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தபின் அழியும் உடலுக்கு இதற்கு மேல் என்ன மரியாதை இருக்க முடியும் ?" - இவை அவர் பேசியவை. இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டு என் பிள்ளைகளும் மன நிறைவோடு தம் சம்மதத்தை எழுதித் தந்தார்கள். நான் கற்றவையும் பெற்றவையும் நன்றாகவே அமைந்த நிறைவு எனக்கு. இந்த அனுபவப் பகிர்வு உங்கள் அனைவருக்கும் உதவும் எனும் நோக்கத்திலேயே ! எல்லாம் சரிதான். ஆனால் இறை நம்பிக்கை, மதச் சடங்குகளில் நம்பிக்கை என நம்பிக்கைகளிலேயே வாழும் மனிதர்களுக்கும் இது தொடர்பில் சமாதானம் உண்டா ? உண்டு. இறந்தபின் நீங்கள் உங்கள் இறைவனை சந்திக்க அல்லது இறைவனிடத்தில் கரைந்திட இந்த உடலை எடுத்துக் கொண்டா செல்வீர்கள் ? உங்கள் கூற்றின்படி உங்கள் ஆன்மாதானே இறை தேடும் ? இந்தப் பாழும் உடலை வைத்துக்கொள்ள முடியாமல்தானே அதனை மண்ணில் புதைக்கிறீர்கள் அல்லது சிதையில் தள்ளுகிறீர்கள் ? எனவே யாராக இருந்தாலும், வாழும்போது ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்தோமோ என்னவோ, செத்த பின்பு உறுதியாய் ஒரு பயனுள்ள புத்தகமாய் அமைவோமே ! உடல் தானம் எழுதிக் கொடுத்தபின் இந்த மன நிறைவுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்வோமே ! https://www.facebook.com/share/p/1Xm7GdHGzi/
  21. அவலத்தை விவிலியம், சிலம்பு, கலித்தொகை என்று கலந்து அளித்த தங்களின் சான்றாண்மையை எடுத்து இயம்புதல் எளிதன்று. தங்களின் சொல்லாட்சியிலும், கருத்துச் செறிவிலும், அவற்றின் வழி கடத்தப்படும் அவலச் சுவையிலும் அசைவற்ற சிலையாகிறோம்.
  22. ஆட்சியில் இருந்தபோது அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லையே ? பெரும்பான்மை இனத்தவரின் வெறுப்பு அரசியலில் நிர்ப்பந்திக்கப்படும் எந்தவொரு இனக்குழுவும் தனிநாடு கேட்டுப் போராடுவது உலக நியதிதானே ! சரி, தனிநாடு இல்லாவிட்டாலும் சுயாட்சி அதிகாரத்தோடு தனிமாநிலத்துக்கான நகர்வினை ஏற்படுத்தித் தமிழினம் தன் அடையாளத்தோடும் உரிமைகளோடும் வாழ வழி செய்திருக்கலாம். அதிகாரத்தை ஒன்றியத்தில் குவித்து மையப்படுத்தும் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எந்த நாடும் விதிவிலக்கில்லை போலும் - இலங்கை, இந்தியா, பழைய சோவியத் யூனியன் .....................
  23. உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம் பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறது. இது தொடர்பாகப் பொதுவான புரிதல் என்னவென்றால் தலைவியை சொல்லிக் கொள்ளும் அளவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தலைவன் பிரியும்போது தலைவிக்குப் பசலை நோய் தோன்றிப் பிறரறிய அவளது வாட்டத்தை அறிவிக்கும் என்பதாம். ஆனால் வள்ளுவனோ ஒரு படி மேற்சென்று, அணைத்தலின் நெகிழ்வில் ஏற்படும் பிரிவைக் கூடத் தாங்கவொண்ணாத தலைவியின் கண்களில் பசலை படர்ந்ததாய்க் கூறி நம்மை நெகிழ வைக்கிறான். அஃது உயர்விலும் உயர்வுநவிற்சி. "முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்" (குறள் 1239; உறுப்பு நலன் அழிதல்) குறளின் பொருள் : அணைத்தலுக்கிடையே (முயக்கிடை) குளிர்ந்த காற்று அவர்களை ஊடறுத்துச் செல்ல (தண்வளி போழ), அப்பேதையின் குளிர்ந்த பெரிய கண்களைச் (பெருமழைக் கண்) சுற்றிப் பசலை படர்ந்ததாம். அடுத்து நாம் கையிலெடுக்க எண்ணுவது 'இடை'யில் வந்த உயர்வுநவிற்சி. மங்கையவள் மெல்லிய இடையினள் எனச் சொல்ல, அவள்தன் எடையைத் தாங்க இயலாத இடை பற்றிப் பேசும் பரவலான உயர்வுநவிற்சி. "தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம்மெல் ஆக நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின" (குறுந்தொகை பாடல் 159 ன் வரிகள்) என்று தோழி கூற்றாக வரும் குறுந்தொகைப் பாடல் வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன. பாடல் வரிகளின் பொருள் : தழை ஆடையையே (தழையணி) தாங்கவொண்ணாத (தாங்கல் செல்லா), அடிவயிற்றின் (அல்குல்) மீது அமைந்த இடைக்குத் (நுசுப்பிற்கு) துன்பம் அளிப்பதாக (எவ்வமாக) அழகிய (அம்) மெல்லிய (மெல்) மார்பில் (ஆகம்) நிறைவாகப் (நிறைய) பெருத்துத் (வீங்கி) திரட்சியுடன் தேமல் போன்ற நுண்ணிய வரிகளுடன் திகழும் முலையானது (வரி முலை) குங்குமச் சிமிழை (செப்புடன்) ஒத்து இருந்தது (எதிரின). அவளது திரண்ட மார்பகத்தின் எடை தாங்காத இடை பேசப்பட்டுள்ளது. அடுத்து, "உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு அபயம் அபயமென அலற நடைபயிலும் அரிவை மீர்" (கலிங்கத்துப் பரணி; பாடல் 58) என்று கலிங்கத்துப் பரணியிலும் ஒடியும் இடை காணலாம். பாடற் பொருள் : முலையிரண்டும் (உபய தனம்) அசைகையில் இடை ஒடியுமாதலால் நடையை விட்டொழியும் என்று கூறும் ஒளி பொருந்திய காற்சிலம்பு (ஒண் சிலம்பு), 'அபயம் அபயம்' என்று அலறும் அளவு நடை பயிலும் அரிவையரே !(பெண்ணின் ஏழு பருவ நிலைகளில் ஒன்று; 20-25 வயதினர்). பக்திப் பாடலும் இடையை விட்ட பாடில்லை. இதோ தாயுமானவர் பாடல் : "மின்போலும் இடை ஒடியும் ஒடியும் என மொழிதல் போல் மென்சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள்" (தாயுமானவர் பாடல்கள் - 12 120/1). பாடற் பொருள் : அழகிய மடந்தையரின் (மடமின்னார்கள்) வீங்கிப் புடைத்து விழும் முலைகளின் (கொங்கை) சுமையினால் மின்னல் போன்ற இடை ஒடியும் ஒடியும் என்று அறிவிப்பது போல் அவர்களின் மென்மையான காற் சிலம்புகள் ஒலிக்கின்றன (ஒலிகள் ஆர்ப்ப). இதுகாறும் நாம் கண்ட உயர்வுநவிற்சி உடல் எடையைத் தாங்காத இடை பற்றியது. வழக்கம்போல் வள்ளுவன் ஒரு படி மேற்சென்று மலர்க் காம்பின் எடை கூடத் தாங்காத இடையைக் குறிப்பது உயர்விலும் உயர்வுநவிற்சி. "அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு நல்ல படாஅ பறை" (குறள் 1115; நலம் புனைந்துரைத்தல்) மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு) – இடை ஒடிந்ததற்கு – நல்ல பறை படவில்லை (ஒலிக்கவில்லை). அஃதாவது சாப்பறை (இழவு கொட்டு) ஒலித்தது. எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை (ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து, கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலேய் ! தனியாவா தூக்குத ? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் மேற்கண்ட குறளில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காண்கிறோம். பாமரன் கோடு போட்டால் பாவலன் ‘ரோடு’ போட வேண்டாமா ? அதுதானே இலக்கிய இன்பம் ! பின் குறிப்பு : 'அனிச்சப் பூ கால் களையாள்' குறள் எனது கட்டுரைகளில் இதற்கு முன் எடுத்தாண்டதுதான். கட்டுரையிலுள்ள குறுந்தொகை, கலிங்கத்துப் பரணி பாடல்கள் முகநூல் அன்பர் கார்த்திக் அவர்களால் கவனம் பெற்றேன். எனவே எனது இக்கட்டுரையை அவருக்கே அன்புடன், நன்றியுடன் காணிக்கை ஆக்குகிறேன்.
  24. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான். அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம். பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன் எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.