சினிமா இன்று தேக்கத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து அத்தகைய படங்களைப் பார்த்து வந்திருப்போர் அறிவர். இதன் அரசியல், பொருளியல், கலாச்சாரப் பரிமாணத்தை அதில் ஈடுபட்டிருப்போர்தான் அனுபவங்களுடன் பேசமுடியும்.
என்றாலும், அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் வந்திருக்கின்றன. மதிசுதாவின் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' அப்படங்கள். 2009 மே மாதத்தின் இறுதிப் போர்காலத்தின் அனுபங்களை மதிசுதாவின் படம் பேச, ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' 2009குப் பின் துவங்கி இன்றுவரையிலுமான ஈழத்து வாழ்வின் இருண்ட நினைவுகளைப் பேசுகிறது.
ஈழத்தின் முதல் நான்லீனியிர் வெகுஜனப் படம் என 'ஊழி'யைக் குறிப்பிடலாம். ரஞ்ஜித்தின் முதல் படமான 'சினம்கொள்' மிகமிக நேரடியான கதைசொல்லல் கொண்ட படம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் மூன்று சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது.
இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை நான்காவது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. துயர இசை படமெங்கும் ஒலிக்கும் ஊழி ஈழத்தின் இருண்ட சமகாலம் குறித்த முகாரி ராகம்.
சினிமாவைப் பிரச்சாரமாக அல்லாமல், கலையாக அணுகும் அக்கறையுள்ள ஒருவர் ரஞ்ஜித் ஜோசப் என்பதை ஊழி மெய்ப்பிக்கிறது. நேர்மறை எதிர்மறை சமநிலை அலசல் விமர்சனத்திற்கு இது தருணம் அல்ல. பலரும் படத்தைப் பார்த்தபின் அதனைச் செய்யலாம் எனக் கருதுகிறேன்.
யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran