-
நான்காவது கொலை - கருணாகரன்
நான்காவது கொலை - கருணாகரன் ‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய பாரம்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதையும் விட, நீங்களும் என்னோடு வந்தால் அதை அறிந்து விடலாம். நாங்கள் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சுங்கப் பகுதிக்குச் செல்கிறோம். பொதிகள் பரிசீலனைப் பிரிவிலுள்ள வாடிக்கையாளர் இருக்கையில் ஐந்தாறுபேர் மட்டுமே இருக்கிறார்கள். நல்லவேளை, இன்று கூட்டம் அதிகமில்லை. சிலவேளை நிறையபேர் காத்திருப்பார்கள். கூட்டம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அரை மணி நேரத்துள் கட்டண உத்தியோகத்தரைச் சந்திக்க முடிகிறது. கடிதத்தைக் கொடுக்கிறோம். அவர், கடிதத்தை வாங்கிப் பார்த்து விட்டு உதவியாளரை அழைத்து, அவரிடம் கொடுக்கிறார். உதவியாளர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பொதி இலக்கத்தைச் சரிபார்த்து, பொதியை எடுத்து வருகிறார். ஏற்கனவே பொதி பிரிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதே. அதிகாரியின் முன்னே உள்ள மேசையில் பொதியிலிருந்து பொருட்களை எடுத்து வைக்கிறார், உதவியாளர். நாங்கள் அதிகாரியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து புத்தகங்கள். கவிதை நூல் ஒன்று. நாவல் ஒன்று. படுகொலைகளைக் குறித்த நூலில் மூன்று பிரதிகள். அவற்றோடு, ஏதோ எழுதி வைக்கப்பட்ட ஒரு தாள். அநேகமாக அந்தப் பொதியைப் பற்றிய குறிப்பாக இருக்கலாம். புத்தகங்களைப் பார்த்த கட்டண உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளரை அழைத்து வருமாறு உதவியாளரிடம் பணிக்கிறார். அதற்கிடையில் அந்தத் தாளை எடுத்து கவனமாகப் படிக்கிறார், புருவங்கள் சுருங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர் வந்து புத்தகங்களை எடுத்து கையில் வைத்து கொண்டு எங்களிடம் சொல்கிறார், “இந்தப் புத்தகங்களில் கொலைகளைப் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருக்கு” அவருடைய குரலில் அதிகாரத்தின் வெம்மை புலப்படுகிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். அப்படியே அதிகாரியையும் மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கிறோம். அவர்களும் எங்களைக் கூர்ந்து பார்க்கிறார்கள். இதொன்றும் வியப்பான சங்கதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏற்கனவே இந்த மாதிரி பல சந்தர்ப்பங்களில் பல புத்தகங்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டன. சிலவற்றை வாதிட்டு மீட்டிருக்கிறோம். சில கடல் கொண்டதைப்போல கைவிடப்பட்டன. பாதுகாப்பு அமைச்சு என்பது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆழக்கடல்தான். ‘தாழ்வதும் மீள்வதும் அதன் அருளாலே’ என்று ராகவன் பகடியாகச் சொல்வார். ‘அதன்’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்புத்துறையின் தங்க மூளை. நான் வலிந்து, மெல்லிதாகச் சிரிக்கிறேன். ‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இப்படித்தான் நடக்கும் என்று அறிவோம். இதைத்தானே எப்போதும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’என்ற மாதிரி அவருக்கு அந்தச் சிரிப்புச் சொல்லியிருக்க வேணும். “ஆகவே, உங்களிடம் இவற்றை நாங்கள் தர முடியாது. இதை நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவோம். அங்கிருந்து பதில் கிடைக்கும்போது உங்களுக்குத் தகவல் தருவோம்” என்கிறார் மொழிபெயர்ப்பாளர். அதற்கும் சிரிக்கிறேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிரிப்பு ஒரு ஆயுதம். சில நேரங்களில் அது பலமான கேள்விகளின் குறியீடாகும். “கொலைகள் நடந்தால், அதைப் பற்றி எழுதாமல் வேறு எதைப்பற்றி எழுதுவது?” கேட்கிறேன். அவர் பதிலளிக்கவில்லை. அதிகாரியின் முகத்தில் இறுக்கம் கூடுகிறது. பொருட்படுத்தாத மாதிரி, அவர் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார். எழுதுவதை நிறுத்தி விட்டுத் தலையை நிமிர்த்தி, எங்களைப் பார்த்துக் கொண்டு சொல்கிறார், “எங்களை நீங்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது. எங்களுடைய கடமையைச் செய்கிறோம். அதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” இந்தப் பொன்னான வார்த்தைகளைக் கேட்க உண்மையிலேயே எனக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்து வந்து விடுகிறது. அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் தன்னை இளக்காரமாக எண்ணித்தான் சிரிக்கிறேனா? என்றொரு எண்ணம் ஓடியதாகப் பட்டிருக்க வேணும். முகத்தில் அசடு வழிகிறது. அவரை மேலும் குழப்பாமல், ”இங்கே கொலைகள் நடந்ததால், அதைப் பற்றி எழுதப்பட்டிருக்கு. அதற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அப்பொழுது உங்களுடைய இதயம் என்ன சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்லுங்கள்…” என்கிறேன். “மன்னிக்க வேணும். இதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேசுவதால் பயனில்லை. எங்களுக்குப் பணிக்கப்பட்டதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” மீண்டும் அதே பதிலைச் சொல்கிறார் அவர். மேலே ஏதோ நிழலாட, நான் அண்ணாந்து பார்க்கிறேன், ஒரு சிறிய குருவி அங்குள்ள கண்காணிப்புக் காமிராவின் மேலே வந்து அமர்கிறது. “இது, இந்தக் கொலைகள் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுது ஒரு புதிய ஆட்சி வந்திருக்கு. நாட்டில் மாற்றங்களும் நீதி வழங்கல்களும் நிகழ்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதிக்காக இந்தக் குரலை இங்கே முன்வைத்திருக்கிறார்கள். இது அவசியமல்லவா! இதில் என்ன தவறிருக்கு?“ எனக் கேட்கிறேன். அவருக்கு ஒரு மாதிரி ஆகி விடுகிறது. “ஆம், நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், எங்களால் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் அரச உத்தியோகத்தர்கள். அரசாங்கத்தின் உத்தரவையும் கட்டளையையும்தான் நிறைவேற்ற முடியும். எங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இப்படியான புத்தகங்களோ, பொருட்களோ வந்தால், அதை நாங்கள் படைத்துறைக்குத்தான் (Military of Defence) பாரப்படுத்த வேண்டும். அவர்கள்தான் இதைப் பற்றிய இறுதி முடிவைச் சொல்ல வேணும். இல்லையென்றால் என்மீதுதான் கேள்விகள் வரும். நான்தான் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதற்குத் தனியே முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்வதைப் போல, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், கட்டளைகள் – உத்தரவுகள் எதுவும் மாறவில்லையே!“ இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல, ஒரு பரிதாபகரமான தோற்றத்தைக் காண்பிக்கிறார். உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. ஆனாலும் அந்தச் சூழலில் சிரமப்பட்டு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறீர்கள். “அரசாங்கம், பல அறிவிப்புகளைச் செய்திருக்கு. படைகளை விலக்குவதாக. ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக. (நாற்பத்தைந்து வயதுடைய பயங்கரவாதச் சட்டத்தைப் பற்றி அப்பொழுது உங்களுக்கு நினைவுக்கு வருகிறது). போராளிகள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டிருக்கும் படையினர் கூட விலக்கப்படுவார்கள்… என்றெல்லாம். ஆனால், நீங்களோ இந்தச் சாதாரண புத்தகங்களையே தர மாட்டோம் என்று தடுத்து வைத்திருக்கிறீர்கள்… இது எவ்வளவு அநியாயம்?” என்று அப்பாவித்தனமாகக் கேட்பதைப் போல கேட்கிறேன். “ஐயா, நீங்கள் பேசுவது அரசியல். நாங்கள் இங்கே செய்வது நிர்வாகம். நான் அரசாங்கத்தின் உத்தரவைத்தான் செய்ய முடியும். என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு சிங்கள அதிகாரி. முன்பு இப்படி இங்கே, யாழ்ப்பாணத்தில் வந்து என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்ய முடியாது. எனக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த அநீதிகள் எல்லாம் கவலையைத்தான் தருகின்றன. இந்த நூலகம் (யாழ்ப்பாண நூலகம் இருந்த திசையைச் சுட்டி) எரிக்கப்பட்டதும் இங்கே உள்ள மக்கள் சிரமப்பட்டதும் எல்லாம் வேதனையே. ஆனால், நாங்கள் சமாதானமாக – சந்தோசமாக இருப்போம்… நீங்கள் இந்தப் படிவத்தில் கையெழுத்து இடுங்கள். நாங்கள் இந்தப் புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு (MOD) அனுப்புகிறோம். அங்கிருந்து பதில் வந்ததும் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம்…” நீங்கள் இப்பொழுது அண்ணாந்து அந்தப் பணிமனையின் கூரையைப் பார்த்து சற்றுச் சத்தமாகவே சிரித்து விடுகிறீர்கள். அதிகாரி சற்றுக் கலவரமடைந்தது போல தெரிகிறது. வியப்புடன் எங்களைப் பார்க்கிறார். “அப்படியென்றால் அரசாங்கத்தரப்பினரால் சொல்லப்படுகின்ற மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லையா?” என்று கேட்டுவிடுகிறீர்கள். “ப்ளீஸ்.. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். அதுதான் நான் சொன்னேன், நான் ஒரு சாதாரண உத்தியோகத்தன் என்று. நான் எதையும் தீர்மானிக்க முடியாது. அரசியல்வாதிகள் அப்படித்தான் சொல்வார்கள். அவர்கள் அதையெல்லாம் எங்களுக்கு எழுத்தில் – உத்தரவாகத் தந்தால் நாங்கள் அதை உங்களுக்குச் சேவையாகச் செய்வோம்.. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது… ஏனென்றால், என் மீதான உத்தியோக பூர்வமான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தலைவர்களும் அதைச் சொல்ல வர மாட்டார்கள்…” என்று எழுந்து விட்டார். அவருடைய முகத்தில் மெல்லிய சினம் நிழலாக ஆடியது. “நீங்கள் ஒற்றுமை பற்றி பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த ஐந்து சாதாரண புத்தகங்களையே தடுத்து வைத்துக் கொண்டு, எப்படி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இந்த மாதிரி செயல்களால், எப்படி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி குழப்பமடைந்து விடுகிறார். “மறுபடியும் சொல்கிறேன், நான்… நான் ஒரு சாதாரண அதிகாரி. நான் விதிகளைப் பின்பற்றுகிறேன்” “விதிகள்? இது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது ஒரு வரலாற்று ஆராய்ச்சி. நடந்த சம்பவங்களைப் பற்றிய ஆதாரபூர்வமான குரல். இது உண்மையைப் பதிவு செய்கிறது. நாம் நமக்கு முன்னே உள்ள இடைவெளிகளை நிரப்பாமல், ஒற்றுமைக்கான பாலத்தை நிர்மாணிக்க முடியுமா? ஆனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஏனென்றால் நீங்கள் இந்த அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். நீங்கள், எங்களுடைய குரல்களைக் கட்டுப்படுத்தும்போது, எப்படி நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” அதிகாரி சில நொடிகள் மௌனமாக இருக்கிறார். அவர் தனது கைகளை விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆழ்ந்த யோசனை. “நான்… என்னால் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சிறிய கடிகாரத்தின் பல். அவ்வளவுதான்” “ஆமாம், நீங்கள் ஒரு கடிகாரத்தின் பல்தான். ஆனால் ஒவ்வொரு பல்லும் முழு கடிகாரத்தின் செயல்பாட்டிற்கு அவசியம். நீங்கள் இல்லாமல், இந்த அடக்குமுறை இயந்திரம் செயல்படாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஆனால் உங்கள் மகிழ்ச்சி, எங்கள் வலியின் மீதல்லவா கட்டப்பட்டுள்ளது” மின்விசிறியின் சத்தம் அறையில் முழுதாக நிரம்பிக்கிடக்கிறது. அதைத் தவிர சில நொடிகள் அங்கே வேறு எந்த ஒலிகளும் இருக்கவில்லை. மெதுவாக, ஆனால் கூர்மையாக அவருக்குச் சொல்கிறேன், “நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள்?” அதிகாரி தலையை உயர்த்துகிறார். “ஆம்…” “இப்படியான செயல்களால் எங்களுக்கு எப்படி மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி திணறுகிறார். “நான்… நாங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம். ஒற்றுமைக்காக…” “ஒற்றுமை என்பது பாலம் கட்டுவது. இந்தப் புத்தகங்கள் அதற்கான இடைவெளிகளை நிரப்புகின்றன. இவை உண்மையைச் சொல்ல முயல்கின்றன. உண்மைகளை ஏற்றுக் கொள்வது கைகளை இறுகப் பற்றிக் கொள்வதாகும். இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது வெறும் வரலாற்று ஆவணம்.” “ஆனால்… பாதுகாப்பு…” “எந்தப் பாதுகாப்பு? யாருடைய பாதுகாப்பு? உண்மையிலிருந்து பாதுகாப்பா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மகிழ்ச்சி எங்கள் மீதான கட்டாய மௌனத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அது எப்படி ஒற்றுமையாகும்?” இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல், இடையில் சொல்கிறீர்கள், “ஒற்றுமை என்பது வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதில் வருகிறது, வேறுபாடுகளை மறைப்பதில் அல்ல“ அதிகாரி, தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு, எங்களை நோக்கி முன்னே சரிந்து சற்றுத் தணிந்த மெல்லிய குரலில் சொல்கிறார், “நீங்கள் சொல்வதிலுள்ள நியாயத்தை நான் அறிவேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ‘மகிழ்ச்சி’ என்பது ஒருவகை உயிர்வாழ்தல். நான் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறேன், ஏனென்றால் நான் பயந்திருக்க வேண்டாம் என்று நினைக்க விரும்புகிறேன். நான் ஒற்றுமை பற்றி பேசுகிறேன், ஏனென்றால் நான் மோதல்களையோ முரண்பாடுகளையோ எதிர்கொள்ள விரும்பவில்லை” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். எனக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுகிறது. குறைந்தது, இந்த அதிகாரியுடனாவது இந்த மாதிரி பேச முடிகிறதே! “இந்தப் புத்தகம் உண்மையின் ஒரு சிறிய பகுதியே. இதை விட நடந்தவற்றின் ரத்த சாட்சியாக உலகமெங்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நினைவுகள், அவர்களின் கதைகள் – அவை எங்கும் உள்ளன” அவர் மேசையில் இருக்கும் புத்தகங்களைத் தொடுகிறார். முகம் மெல்லிதாக வாட்டமுறுகிறது. “இன்றைய அறிவியல் யுகத்தில், இந்தப் புத்தகத்தை மின்நூல்களாக லட்சம் பிரதிகள் உருவாக்க முடியும். இணையம் எங்கும் உள்ளது. அப்படியிருக்கும்போது…” என்று சிரிக்கிறேன். அது கசப்பான சிரிப்பு. “நீங்கள் இதைத் தடுப்பது, சூரியனைக் கைகளால் மறைப்பது போல சிரிப்புக்குரியது. உங்களுக்கு இது வெட்கம் தரும் செயலாக இல்லையா? நீங்கள் இதைத் தடுத்தாலும், இதை ஒளிப்படங்களாகவும், யூடியூப்களாகவும், PDF பிரதிகளாகவும் நாம் வெளியே இருந்து எடுக்கலாமே. உங்களுடைய விதிமுறைகள் அப்பொழுது என்ன செய்யும்? ஏராளமாக விரிந்து பரவிக் கிடக்கும் வலைத்தளங்களைத் தடுக்க முடியுமா? ஒவ்வொரு மின்நூலையும் கண்காணிக்க முடியுமா?” “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்…” அவருடைய அகத்தில் வெட்கம் ஏற்படுவதை உணர்கிறோம். முகம் அதைப் பிரதிபலிக்கிறது. அது அவருடைய வெட்கம் அல்ல. அது நாட்டினுடைய, ஆட்சியினுடைய, அதிகாரத்தினுடைய வெட்கம். “ஆனால் நாங்கள் எங்களிடம் வரும் பொருட்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறோம். மின்நூல்கள்… அவை வேறு துறை. அது தொழில்நுட்பத் துறை. எங்களுக்கு எட்டாதது” “அப்படியானால், இந்தத் தடை வெறும் காட்சி மட்டுந்தானா? பொய்யான பாதுகாப்பா?” சமாளித்துக் கொண்டு அவர் சொல்கிறார், ”மக்கள் இவ்வாறான தடையைப் பார்க்கிறார்கள். அது ஒரு செய்தியை அவர்களுக்குச் சொல்கிறது. ‘இது அனுமதிக்கப்படாதது’ என்று. அதாவது இந்தப் பொதி தடுக்கப்படுவதை அவர்கள் பார்க்க முடியும். அது அவர்களை நிதானமடைய வைக்கும்” நான் அவரிடம் கேட்கிறேன், “இப்படிச் சொல்வதும் சிந்திப்பதும் வெட்கம் தருவதாக இல்லையா?“ அவருடைய கண்கள் கலங்குவதைப்போலிருக்கிறது. ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “வெட்கமா? ஆம். எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? உண்மையில் நாங்கள் ஒரு நாடகம் நடத்துகிறோம். இது அந்த நாடகத்தின் ஒரு காட்சி” அவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார், குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்கிறார். “நீங்கள் PDF செய்தால், அதை அனுப்புங்கள். யூடியூபில் போடுங்கள். ஆனால்… இந்த இந்தப் புத்தகங்களை நாங்கள் தடுக்க வேண்டும். ஏனென்றால்… ஏனென்றால் அது எங்களுடைய ‘செயல்முறை’. இந்தச் செயல்முறை முக்கியம். மக்கள் அதைப் பார்க்க வேண்டும்: அரசு கட்டுப்பாட்டில்தான் எல்லாம் உள்ளது என்று.” “அப்படியானால், இது வெறும் பாசாங்கு?” “இல்லை. இது ஒரு அடையாளம். ஒரு குறியீடு. நாங்கள் நடைமுறை உலகில் இன்னும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும். டிஜிட்டல் உலகில்… அங்கே நாங்கள் தோற்கடிக்கப்படுகிறோம். உண்மைதான். ஆனால் இங்கே இல்லை” ‘எங்களுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. அவரைப் பார்க்கும்போதல்ல, அரசாங்கத்தை எண்ணிப்பார்க்கும்போதுதான் பரிதாபமாக உள்ளது’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. கூடவே கவலையும். ‘எப்படியெல்லாம் இந்த அதிகார மயக்கம் உள்ளது‘ என்று நினைத்துச் சிரிக்கிறீர்கள். கவலைப்படுகிறீர்கள். எத்தனை அறிவுசார் முன்னேற்றங்கள் வந்தாலும் அதிகாரத்தின் அறை எப்போதும் இருளாகத்தான் உள்ளது. நான் அதிகாரியிடம் சொல்கிறேன், “நான் இதை PDF ஆக மாற்றுவேன். அப்பொழுது எழுதுவேன், ‘இன்று சுங்கத்தில் தடுக்கப்பட்ட புத்தகம் இது. இப்போது இது உலகம் முழுவதும் வருகிறது. இனி இது உங்களுடையது‘ என்று. ஆனால் நான் இந்தப் பிரதிகளையும் விடமாட்டேன். ஏனென்றால்… இந்த எதிர்ப்பு முக்கியம். இது ஒரு குறியீடு. மக்கள் இந்தத் தடையைப் பார்க்க வேண்டும். அதற்கான எதிர்ப்பையும் அவர்கள் காண வேண்டும். இது சாட்சியமாக இருக்க வேண்டும். இது நீங்கள் செய்யும் கட்டுப்பாட்டு நாடகத்தின் சாட்சியாக. அதைப்போல, இந்தத் தடையை நாம் உடைப்பதையும் மக்கள் பார்க்க வேண்டும்” அதிகாரி ஆச்சரியத்துடன் பார்க்கிறார். “ஏன்? PDF ஆக்கி இணையத்தில் பரவ விடும்போதே உங்களுக்கு வெற்றி கிடைத்து விடுகிறதே?” “இது வெற்றி பற்றியது அல்ல. இது சாட்சி பற்றியது. இந்தப் புத்தகங்கள் இங்கே தடுக்கப்பட்டதை உலகம் பார்க்க வேண்டும். அது சாட்சியமாக இருக்க வேண்டும்.” அவர் எழுந்து நின்று, ஜன்னலுக்கு அருகில் செல்கிறார். “நீங்கள் கேட்டீர்கள் – எனக்கு வெட்கமாக இல்லையா? என்று. ஆம், வெட்கம்தான். ஆனால் இப்போது அந்த வெட்கம் வேறு வகையானது. இது எங்கள் சக்தியினுடைய வெட்கம். நாங்கள் இன்னும் காகிதத்துடன் போராடுகிறோம், ஆனால் உலகம் இலத்திரனியலில், தொழில்நுட்பத்தில், அறிவில் முன்னேறிவிட்டது” அவர் திரும்பிப் பார்க்கிறார். “நீங்கள் வார்த்தைகளைத் தடுக்கலாம், ஆனால் உண்மையைத் தடுக்க முடியாது. நீங்கள் புத்தகங்களைத் தடுக்கலாம், ஆனால் யுகங்களைத் தடுக்க முடியாது” எங்களுடன் தொடர்ந்து உரையாடவும் முடியாமல், அதைத் தவிர்க்கவும் விரும்பாமல் தடுமாறுகிறார் அதிகாரி. அவரிடம் “ஒரு கேள்வி. ஒன்று மட்டும்” என்கிறேன். அவர் அலுவலகத்தைக் கண்களால் சுற்றிப் பார்க்கிறார். அங்கே மௌனமான, கனத்த சுவர்கள், படிவங்களின் அடுக்குகள், விதிமுறைகளின் கனம் கூடியிருக்கிறது. நான், மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையும் எடை போட்டபடி, “ஆம், கொலைகளைக் கண்டு நீங்கள் அச்சமடைகிறீர்கள். அதனால்தான் இந்தத் தடை” என்கிறேன். அவர் பதறத் தொடங்கி விடுகிறார். முகம் கறுத்துச் சட்டெனச் சிவக்கிறது. கண்களும் சிவந்து கலங்குகின்றன. அவர் ஒரு புத்தகத்தை எடுத்து, அதைத் திறந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறார். அது ஒரு செய்தித் தாளின் நகல். “மண்டைதீவில் கொல்லப்பட்டவர்கள் கிணற்றுக்குள் போடப்பட்டனர்” என்ற தலைப்பு. “நீங்கள் அந்தக் கொலைகளைச் செய்யாமல் தடுத்திருக்கலாம் அல்லவா? அதாவது உங்களுடைய படைகள், உங்களுடைய அரசாங்கம். அதுதானே நியாயமானது? அதுதானே சரியானது?” என்கிறேன். அதிகாரியின் முகம் வெளிறுகிறது. “நான்… நாங்கள்…” தடுமாறுகிறார். கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்கிறார். “சரி. அதை விட்டுவிட்டுவோம். இப்பொழுது கொலைக்கான சாட்சியங்களைத் தடுப்பது, என்ன வகையில் நீதியாகும்?” அவர் புத்தகத்தை மேசைமீது வைக்கிறார். அது ஒரு சத்தமான தட்டச்சுப் போல் ‘தொப்‘ என ஒலித்தது. “இது இன்னொரு கொலை அல்லவா? ஆம். சாட்சியங்களின் கொலை.” அறை முழுவதும் மௌனம் பெருகித் தடித்துக் கனமாயிற்று. அவர் எதுவுமே பேசவில்லை. மொழிபெயர்ப்பாளர் மெதுவாக நழுவிச் செல்கிறார். நான் அவரைப் பார்த்துச் சிரிக்கிறேன். இப்போது அந்தச் சிரிப்பு கசப்பானது அல்ல; அது விடுதலை தரும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு அதிகாரிக்கு வெட்கத்தை அளித்திருக்க வேண்டும். அவர் வேறு ஒரு கோப்பை எடுத்து அந்த வேலையில் மூழ்குவதாக நடிக்கிறார். மெதுவான குரலில் சொல்கிறேன், “முதல் கொலை, உயிரை எடுத்தார்கள். இரண்டாவது கொலை, அந்த உயிரின் கதையை எடுக்கிறார்கள். மூன்றாவது கொலை, அந்தக் கதையின் நினைவை எடுக்கிறார்கள். இது எத்தனை மடங்கு கொலை?” அவர் நாற்காலியில் சாய்ந்து, இரண்டு கைகளையும் உயர்த்தித் தலையின் பின்பக்கமாகச் சரிந்து, கண்களை மூடுகிறார். முகம் மேலே மின்விசிறி நோக்கிக் கொண்டிருக்கிறது. “நீங்கள் விதிமுறைகளைச் சொல்கிறீர்கள். நான் நீதியைச் சொல்கிறேன். விதிமுறைகள் காகிதம். நீதி இரத்தம். எது கனமானது?” என்று கேட்கிறேன். அவருடைய இதயமும் காதுகளும் மிக விரிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது முற்றிலும் அமைதியாக, ஆழ்ந்த துக்கத்துடன் குரலைத் தாழ்த்தி, அழுத்தமாகச் சொன்னேன், “நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை” அவர் எழுந்து நின்று, சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் வரைபடத்தை நோக்கி நடக்கிறார். “நீங்கள் உண்மையைக் கொல்கிறீர்கள். வரலாற்றைக் கொல்கிறீர்கள். இந்தப் புத்தகம் வெறும் காகிதம் அல்ல; இது நடந்தவற்றின் சாட்சியம். நீங்கள் இந்தச் சாட்சியத்தைக் கொல்கிறீர்கள்” திரும்பி எங்களை அவர் பார்க்கிறார். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?‘ என்று கேட்பதைப்போலிருக்கிறது அந்தப் பார்வை. காட்டில் தனித்துத் தவித்து அலையும் மானின் கண்களைப்போல அவர் மிரட்சியடைவதைப் பார்க்கிறோம். “உண்மையும் வரலாறும் கொலை செய்யப்பட்டால் மிஞ்சுவது என்ன? பொய்களின் கோட்டை! உண்மைகள் மறக்கப்பட்ட பாலைவனம்!! ஒரு தேசத்துக்கு உண்மையும் வரலாறும் வேண்டாமா?” அதிகாரி மௌனமாக வந்து அமர்கிறார். அவருடைய விரல்கள் மேசையின் மீது வெறுமையாக எதையோ எழுதுகின்றன. “நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூறுதலும் குற்றங்களை ஒப்புக்கொள்ளுதலும் அவசியமில்லையா? ஒரு தேசம் தன் குறைகளை ஒப்புக்கொள்ளாமல், தன் பிழைகளை மறைக்காமலும் எப்படி முன்னேற முடியும்? இது ஒரு குழந்தைத்தனத்தைப் போலல்லவா? தவறு செய்து, அதை மறைக்க முயல்வது? ஆனால், இங்கே வன்மையான கபடம் உள்ளது” அவர் புத்தகத்தைத் தூக்கி, அதை மெதுவாகத் தடவுகிறார். அது அவருடைய மனதின் உறுத்தல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. “இந்தக் கொலைகள் நடந்தன. இது உண்மை. இப்போது, உண்மையைச் சொல்வதைத் தடுப்பது – இது இரண்டாவது குற்றம். முதலில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், இரண்டாவது தவறும் செய்வது.” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வரலாற்றை மறைத்தால், அது மாறிவிடுமா? இல்லை. அது காயமாகவே இருக்கும். ஆனால் அந்தக் காயம் சீழ்பிடித்துக் கொள்ளும். தேசத்தின் ஆன்மாவில் சீழ்பிடித்த காயம்” ‘ஆம்’ என்பது போல மெல்லத் தலையசைக்கிறார். ‘இருந்தாலும்..’ என்பதுபோல.. கண்கள் எதையோ சொல்ல முற்படுகின்றன. “ஒரு கேள்வி தோன்றுகிறது. நீங்கள் நூலகம் எரிக்கப்பட்டதைப் பற்றி வருத்தமடையவாகச் சொன்னீர்கள். அது ஒரு பெரும் இழப்பு என்றும். ஆனால்… இப்போது நீங்களே இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைக்கிறீர்கள். இந்த இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?” அதிகாரியின் முகம் வெளிறுகிறது. அவர் ஒரு வினாடி மௌனமாயிருக்கிறார். அவரது வாய் சிறிது திறந்திருக்கிறது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்லச் சொல்கிறார், “அது… அது வித்தியாசமான விஷயம்.” “உண்மையாகவா? 1981 இல், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்டன. 2025இல், நூலகத்துக்கு வரவிருக்கும் புத்தகங்கள் தடுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே இலக்கை நோக்கிய திட்டமில்லையா? ஞாபகங்களை, வரலாற்றை இல்லாமலாக்குவது? வரலாற்றை முடக்கி வைப்பது?” “அப்போது அதில் நான் இல்லை. நான் அங்கே இல்லை…” அவசரமாக மறுக்கிறார். “ஆனால் இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இப்போது நீங்கள்தான் அந்தத் தடையாளி. நூலகத்தின் காவலாளிகள் அன்று தீயை வைத்தனர். இன்று நீங்கள் இப்படிக் கதவைச் சாத்துகிறீர்கள். வித்தியாசம் என்ன?” அதிகாரி தனது நாற்காலியில் பின்னால் சாய்கிறார். அவரது கண்கள் கரைகின்றன. “நான் எரிக்கவில்லை. நான் வெறும் காகிதப் பரிமாற்றம் செய்கிறேன். ஒரு படிவம். ஒரு கையெழுத்து. MOD க்கு அனுப்புகிறேன். இது வித்தியாசம்தானே? நான் எரிக்கவில்லை. நான் எனக்குரிய… நிர்வாகப் பணியைச் செய்கிறேன். அவர்களே பொறுப்புச் சொல்ல வேண்டும்“ நான் அவரை மறுத்துச் சொல்கிறேன், “வித்தியாசம் இல்லை. கையாளும் முறை மட்டுமே மாற்றம். தீ மாறி படிவமாகியிருக்கிறது. அத்துமீறல் இங்கே மாற்றமடைந்து அதிகார உத்தரவாகியிருக்கிறது. இலக்கு ஒன்றே. வார்த்தைகளையும் எண்ணங்களையும் மௌனமாக்குவது, வரலாற்றை முடக்கி வைப்பது” அந்தப் புத்தகப் பொதியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன், “மேலும் ஒரு விஷயம். இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைப்பது – இது உண்மையை மறைப்பது மட்டுமல்ல. இது ஒரு சிறை வைத்தலும்தான். அரசியற் கைதிகளைச் சிறை வைப்பதைப் போல, புத்தகங்களையும் சிறை வைக்கிறீர்கள். இவை அறிவுச் சிறை கைதிகள். சிந்தனைச் சிறை கைதிகள். உண்மையின் சிறை கைதிகள்” என்னுடைய குரலில் ஆவேசமும் புத்துணர்வும் ஏற்படுகிறது. அதிகாரியின் கண்களுக்குள் நாங்கள் புகுந்து இதயத்தைத் தாக்கி விட்டதைப்போலிருக்கிறது. அப்படித்தான் அவருக்கும் தோன்றியிருக்கக் கூடும். அவர் மிகச் சங்கடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார். “நம்முடைய நாட்டின் அரசியற் சாசனத்திலோ, நீதித்துறையின் விதிமுறைகளிலோ, இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளதா? ‘புத்தகங்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டத்தில் உள்ளது? ‘கருத்துக்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது?” அதிகாரி பதிலளிக்க முன், தொடர்கிறேன், “நான் சட்டத்தைப் படித்தவன் அல்ல. ஆனால் இதை நன்றாக அறிவேன். சட்டம் மனிதர்களைச் சிறை வைக்கலாம். குற்றம் செய்தவர்களை. ஆனால் எண்ணங்களை? வார்த்தைகளை? உண்மைகளை? அவற்றை சிறை வைக்க முடியுமா? அது எந்தச் சட்டம்?” அவர் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். உதவியாளருக்குச் சங்கடமாகி விட்டது. தனக்கு ஆயிரம் வேலைகள் உண்டு என்பதைப்போல, எதையோவெல்லாம் செய்து கொண்டிருந்தார். காதுகளை இங்கே வைத்திருப்பதும் எடுப்பதும் என்ற மாதிரி இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். “இல்லை. இது சட்டம் அல்ல. இது பயத்தின் ஆட்சி. பயம் சட்டமாகும்போது, சட்டம் சிறைச்சாலையாகிறது. பயம் நீதியாகும்போது, நீதி நியாயமெல்லாம் கொலை செய்யும் கருவியாகிறது.” உதவியாளர் வந்து ஒரு கோப்பை அதிகாரியின் முன்னே வைத்துவிட்டுச் செல்கிறார். “நீங்கள் ஒரு புதிய வகை சிறையை உருவாக்குகிறீர்கள். இது பொது சிறையல்ல. இது ‘அறிவுச் சிறை’. இங்கு கைதிகள் மனிதர்கள் அல்ல; எண்ணங்கள். தண்டனை, தூக்குத் தண்டனை அல்ல; மறத்தல். இந்தச் சிறையில், புத்தகங்கள் செத்துக் கிடக்கின்றன. ஆனால் அவை இறக்கவில்லை; அவை மறைக்கப்படுகின்றன” சட்டென எழுந்து அவர் மறுக்கிறார் “இது… இது கடுமையான விமர்சனம்” குரல் சற்று உயர்ந்து காட்டமாக இருக்கிறது. “உண்மை எப்போதும் கடுமையானதுதான். சட்டம் மென்மையாக இருந்தால், அது சட்டம் அல்ல; விருந்தோம்பலாகி விடும் என்ற கலக்கம்” “போதும் இத்தோடு நாம் நிறுத்திக் கொள்வோம்” என்ற அதிகாரி, உதவியாளரை அழைத்து, அவ்வளவு புத்தகங்களையும் MOD க்கு அனுப்புவதற்கான படிவத்தை நிரப்பி, என்னிடம் கையெழுத்தைப் பெறுமாறு பணிக்கிறார். அலுவலகத்தின் மின்விசிறி சுற்றும் ஒலியைவிட, அவருடைய மனசாட்சி சத்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவருடைய குரலின் பதட்டம் காட்டுகிறது. MOD. பாதுகாப்பு அமைச்சு. ஒரு மூன்றெழுத்து வார்த்தைதான். ஆனால் அது ஒரு கண்ணி. திறக்கக் கடினமான ஒரு கடவுச்சொல். பல சந்தர்ப்பங்களிலும் அது ஒரு கல்லறை என்று உங்களுடைய மனதில் தோன்றுகிறது. MOD க்கான படிவம்: SR / Jaf / Post / 56 / 4054 மூலப்பிரதி தொடர் இல: 196448 மூடைகளைத் தடுத்து வைத்தல் பெயரும் கடவுச் சீட்டு / அடையாள அட்டை இலக்கமும்: ஞானசேகரம் அருட்குமரன் தடுத்து வைத்தலுக்கான காரணம்: பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தகவல் துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது (Pending Approval from MOD and Department of Information) தடுத்து வைக்கப்பட்ட பொருட்களின் விவரம் (எண்ணிக்கை, மாதிரி இல, முதலியவை) 05 புத்தகங்கள் (தமிழ்) 1. 1990 – லைடன்தீவு மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும் – 02 2. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் – 02 3. நெரிந்து – 01 பரிந்துரை: பரிசீலனை செய்யப்பட வேண்டும். காரணம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். பொருட்கள் தடுத்து வைத்த திகதி: 2025.11.20 சொந்தக்காரரின் ஒப்பம் உதவிக் கட்டண உத்தியோகத்தர் நான் ஒரு புன்னகையுடன் அவரைப் பார்க்கிறேன். “அப்படியென்றால், எதுவுமே மாறவில்லை. யுத்த கால நிலவரம்தான் இப்போதும். அப்போதும் MOD தான். இப்போதும் MOD தான்” அவர் எதுவுமே சொல்லவில்லை. சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் நெளிகிறார். அவர் கேட்கிறார்: “பெயர்?” நான் சொல்கிறேன்: எழுத்தாளர்களின் பெயர்களை அவர் எழுதினார்: “தமிழ் எழுத்தாளர்” நான் சொன்னேன்: “வரலாற்றாசிரியர்கள் அல்ல” அவர் எழுதினார்: “அரசியல் உள்ளடக்கம்” நான் சொன்னேன்: “மனித உரிமைப் பதிவு” அவர் எழுதினார்: “MOD-க்கு அனுப்பவும்.” நான்: கொலைகளைப் பற்றிய கதைகள்தான் உங்களை அச்சுறுத்தலாம். சாதியக் கவிதைகள்? அவர்: பாதுகாப்புச் சிந்தனையில் எல்லாம் ஒன்றுதான் நான்: ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இலக்கை நோக்கி வீசப்படும் குண்டு வீச்சில் அதிகமாகக் கொல்லப்படுவது பொதுமக்கள்தான். அதைப்போலவே கொலைகளின் ஆவணமே இல்லாத மற்ற இரண்டு கவிதை நூல்களையும் தடுத்து விட்டீர்கள்… சுங்க அதிகாரியின் கண்ணெதிரே, புத்தகங்கள் பொதிசெய்யப்படுகின்றன. அவர் அதை ‘சரக்கு’ என்று நினைக்கிறார். நான் அதை ‘வரலாறு’ என்று எண்ணுகிறேன். இந்த உரையாடலை எல்லாம் கேட்ட புத்தகங்கள் அமைதியாக இப்போது ‘To MOD’ என்று எழுதப்பட்ட பெட்டியில் இருக்கின்றன. 02 புத்தகங்களின் குரல் இணைகிறது: “எங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் சாட்சியங்கள். எங்களில் சிலர் எழுதப்பட்டோம். பெரும்பாலானோர் எழுதப்படவில்லை. எங்களில் சிலர் இந்தப் புத்தகத்தில் இருக்கிறோம். பலர் இல்லை. ஒவ்வொரு தடுக்கப்பட்ட புத்தகமும், ஒவ்வொரு மௌனமான கதையும், ஒவ்வொரு அழிக்கப்பட்ட சாட்சியமும் – இவை அனைத்தும் ஒரே கொலையின் பகுதிகள். நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தடுக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், நீங்கள் மீண்டும் கொல்வதைத் தொடர்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் கதையைத் தடுக்கிறீர்கள், எங்களை மீண்டும் கொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எங்களைக் கொல்ல முடியாது. ஏனென்றால், சாட்சியங்கள் இரத்தத்தில் எழுதப்படுவது மட்டுமல்ல; அவை காலத்தில் எழுதப்படுகின்றன. அவை காற்றில் எழுதப்படுகின்றன. அவை மனித நெஞ்சில் எழுதப்படுகின்றன. எங்களை எரியுங்கள். இன்னும் நூறு புத்தகங்களை எழுதுவோம். இன்னும் ஆயிரம் கதைகளைச் சொல்வோம். நாங்கள் சாட்சிகள். எங்கள் வேலை, சாட்சியமளித்தல். உங்கள் வேலை, அதைத் தடுத்தல். யார் வெல்லுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்களைப் பொதியில் அடைத்தீர்கள். எங்களை MOD க்கு அனுப்புகிறீர்கள். ஒரு ஆவணமாக எண்ணுகிறீர்கள். தவறு. நாங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. நாங்கள் கண்கள். 1983இல் நூலகத்தின் ஜன்னல்களில் இருந்து பார்த்த கண்கள். 1987இல் வீதிகளில் நடந்த கண்கள். 2009இல் முள்ளிவாய்க்கால் கரையில் நின்ற கண்கள். உண்மையான வரலாறு பகிரங்கமாக வெளியே உள்ளது. எல்லோருக்கும் தெரிந்தது. அது ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் உள்ள ஆழமான வெட்டு. ஒவ்வொரு குடும்ப மரத்திலும் உள்ள ஆறாத புண். அந்தக் காயங்களில் இருந்து வடியும் குருதி – அது எங்கள் மையில் உள்ளது. நீங்கள் எங்களை மறைத்து வைக்கலாம். இந்த ஐந்து புத்தகங்களைத் தடை செய்யலாம். ஆனால் வெளியே உள்ள உண்மையை… அதனுடைய ஆதாரத்தை… காயாத அந்தக் குருதியை எப்படி மறைக்க முடியும்? அது யாழ்ப்பாணத்தின் மண்ணில் இருக்கிறது. கிளிநொச்சியின் வேர்களில் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் வீசும் காற்றில் இருக்கிறது. கொக்கட்டிச்சோலையில், உடும்பன்குளத்தில், ஏறாவூரில், மன்னார் – முருங்கனில், வாகரையின் மணலில் கொதித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரொலிகள். உண்மையின் எதிரொலிகள். கண்காணிப்புக் காமிரா 04: ரிக்கார்டிங். 10:25:15. பொருள்: ஒரு (அடையாளம்: தமிழ்) எழுத்தாளரும் நீங்களும் புத்தகப் படிவங்களோடு நுழைகிறீர்கள். நேரம் 10:45:22. பொருள்: சுங்க அதிகாரி (அடையாளம்: காமினி லொக்குபண்டார) புத்தகங்களைப் பிரிக்கிறார். 10:58:41. ஆண் சிரிக்கிறார். வாய்ப்பதிவு இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓடியோ ரிக்கார்டிங் முடக்கப்பட்டுள்ளது. 12:12:07. புத்தகங்கள் பக்கேஜ் செய்யப்படுகின்றன. 12:20:33. எழுத்தாளர் கையெழுத்திடுகிறார். காமிரா கோணம்: அவரது கைகள் மட்டுமே தெரிகிறது. புத்தகங்கள் மட்டுமே தெரிகிறது. முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ரிக்கார்டிங் முடிந்தது. கோப்பு MOD க்கு மாற்றப்படுகிறது. பறவை பார்த்தது: நீல நிறக் கூண்டு ஒன்று. அதன் உள்ளே, இரண்டு கால்கள் உள்ள மனிதப் பறவைகள், வெள்ளைத் தாள்கள் என்ற இறகுகளை அடுக்கி வைத்திருந்தனர். ஒருவர் மற்றவருக்கு ஒரு கறுப்பு வட்டத்தை (முத்திரை) கொடுத்தார். அது உணவு போல இல்லை; ஆனால் அவர் அதை வாங்கிக் கொண்டார். ஒரு பெரிய பொட்டலம், சிறு சிறு கறுப்பு எழுத்துகளால் நிறைந்தது. அது ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் மற்றொரு பெரிய கூண்டுக்கு அனுப்பப்படும் என்பது போல, ‘MOD’ என்று குறிக்கப்பட்டிருந்தது. (பறவைக்குப் புரியவில்லை) எழுத்துகள் விதைகளா? இல்லை, அவை முளைக்கவில்லை. அவை பறக்கவும் முடியாது. பிறகு ஏன் அவற்றை காப்பாற்றுகிறார்கள்? அல்லது அழிக்கிறார்கள்? பறவை சிறகை அசைத்தது, மேலே பறந்தது. கீழே, நீலக் கூண்டு இன்னும் அங்கேயே இருந்தது. அதன் வாயில், ஒரு சிறிய மனிதப் பறவை நின்று கொண்டிருந்தான், காலத்தை வெளியே எறிந்து கொண்டிருந்தான்” பறவை பறந்து சென்றது. அது கீழே உள்ள நீலக் கூண்டைப் பார்த்தது. அது ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்தது. அதன் மீது மூன்று எழுத்துக்கள்: M O D. சுங்க அதிகாரியின் குறிப்பு: “அந்தப் பொதியைக் கட்டவிழ்க்கச் சொன்னபோது, என் கைகள் ஈரமாயின. ‘நடவடிக்கை எண் 15(ஆ): தேசிய பாதுகாப்புக்கு இடையூறான வெளிநாட்டு பொருட்கள்’ என்ற பிரிவு என் மனத்தில் ஒளிர்ந்தது. ஆனால் மறுகணம், ‘இவை புத்தகங்கள். வார்த்தைகள். காகிதம் மீது மை’ என்ற மெல்லிய குரல் எழுந்தது. பார்த்தேன் – அந்த எழுத்தாளர் அசைவற்று இருந்தார். அவர் கண்களில் எதிர்பார்ப்பும் தீவிரம் குன்றாத அறிவும் களைப்பான உறுதியும் மட்டுமே இருந்தது. அவர் எத்தனை முறை இந்த நாடகத்தில் முடிவில்லாமல் வாழ்ந்து கொள்ள வேண்டியுள்ளது? நான் எத்தனை முறை இந்த வரிகளைப் பேசியிருக்கிறேன்? துக்கமும் அவமானமுமாக உள்ளது. உண்மையும் நியாயமும் புரிகிறது. சரிகளைத் தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமலிருப்பது, அவமானச் சுமையினால் அழுந்துவதன்றி வேறென்ன? ஒரு கணம், நான்தானா இந்தப் பொம்மலாட்டத்தை நடத்துகிறேன் எனத் தோன்றியது. பின், அலுவலகத்தின் பட்டியலில் என் பெயரைக் கண்டேன். காமினி லொக்குபண்டார’ ஆம். நான் இங்குள்ளேன். நான் இதைச் செய்வேன். கையெழுத்து. முத்திரை. MOD க்கு கடமை முடிந்தது. ஆனால் ஏன் இந்த மார்பு இப்படி இடிக்கிறது?” ஏனிந்தக் கண்களில் நீர்? MOD பெட்டியின் கண்ணோட்டம்: “நான் ஒரு பெட்டி. என்னுள் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை, என்னுள் வந்த பல காகிதங்கள் ‘ரகசியம்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில உண்மையில் ரகசியங்களாக இருக்கலாம். பெரும்பாலானவைப் பெரும் உண்மைகள். ஆனால் ‘ரகசியம்’ என்ற முத்திரை, ஒரு சாதாரண உண்மையைக் கூட ஒரு ஆயுதமாக மாற்றிவிடும்” அதிகாரியின் உள்உரையாடல்: “சாட்சியங்களின் கொலை.” இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தின. அவர் சொன்னது சரிதான். நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் கொலைகளைத் தடுக்கவில்லை. அதைச் சொல்ல நான் பயப்படுகிறேன். ஆனால் அது உண்மை. 1983இல் நான் இளம் வயதினன். நாங்கள் செய்திகள் கேட்டோம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொன்னார்கள். ‘அமைதி’ என்று சொன்னார்கள். ஆனால் இப்போது… இப்போது நான் கொலைகளைத் தடுக்கும் படையின் ஒரு பகுதி. ஆனால், நான் சுங்க அதிகாரி. அல்ல, இன்னும் மோசமானது. நான் கொலைகளை மறக்க வைக்கும் படையின் ஒரு பகுதி. முதல் கொலை: அவர்களுடைய உயிர். இரண்டாவது கொலை: அவர்களுடைய குரல். மூன்றாவது கொலை: அவர்களுடைய நினைவு. நான்காவது கொலை: அவர்களுடைய நீதி. ஆம், நான்கு கொலைகள். நான் நான்காவது கொலையில் பங்கு கொள்கிறேன். நான் ‘நீதியை’ கொல்கிறேன். வெறும் கையெழுத்து மூலம். வெறும் படிவம் மூலம். சட்டம் சொல்கிறது: இது தவறு அல்ல. ஆனால் மனசாட்சி சொல்கிறது: இது கொலை. 03 அவருடைய பதட்டத்தைக் கண்ட அந்த உதவிப் பணியாளர், இயந்திரம்போல மிக வேகமாக அதையெல்லாம் செய்து ஒப்பத்துக்காகப் பத்திரத்தை அதிகாரிடம் கொடுக்கிறார். பிரிக்கப்பட்ட பொதியில் புத்தகங்களை உள்ளிட்டு, மீளவும் பொதியாக்கி, To the MOD என்று எழுதுகிறார் உதவிப் பணியாளர். “ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, ஆட்சி மாறவில்லை” என்கிறேன். ‘அதேதான்’ என்பது போல சிரித்தார் அதிகாரி. முகத்தில் ஒரு சிநேகபாவம் தோன்றியது. “உங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்” என்றார். “நல்ல பதில் அல்ல. புத்தகங்கள்தான், நீதிதான் கிடைக்க வேண்டும்” ஒப்பமிட்ட பின் ‘தடைசெய்யப்பட்டன புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பத்திரத்தை, அதிகாரியைப் பார்த்துக் கொண்டு வாங்குகிறேன். அந்த முத்திரையிட்ட உறையை வாங்கும்போது, என் கைகள் நடுங்கவில்லை. வரலாறு மீண்டும் தடுக்கப்பட்டதை உணர்கிறேன். ஆனால் அதிகாரியின் கண்களில், முன்பு இல்லாத ஒரு வெளிச்சம் இருக்கிறது. அவர் கடித உறையை நீட்டும்போது, அவரது விரல்கள் மெதுவாக என் கையினைத் தொடுகின்றன. அது ஒரு தவறுதலாக, தற்செயலானதாக இருக்கலாம். அல்லது ஒரு மௌனமான உரையாடலாக இருக்கலாம். அந்தத் தொடுகையில் நடுக்கத்தை உணர்கிறேன். நாங்கள் வெளியேறும்போது, அவர் மெதுவாகச் சொல்கிறார், “உங்கள் புத்தகம்… அதில் பல பக்கங்கள்… மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது” அந்த வார்த்தைகள், அந்த இரும்புக் கதவைத் தாண்டி வந்து, எங்களுடன் நடந்து கொண்டிருக்கின்றன. 04 “அன்றிரவு, உங்களுடைய கனவில், நூலகமும் சுங்க அலுவலகமும் ஒன்றாக மாறியிருந்தன. புத்தக அலமாரிகள் சுங்க அலுவலக கவுண்டர்களாகி விட்டன. ஒவ்வொரு புத்தகத்தின் மேலும் ‘தடை செய்யப்பட்டது’ என்ற முத்திரை. ஆனால் புத்தகங்கள் பேசிக் கொண்டிருந்தன. அவை சத்தமாகப் படித்துக் கொண்டிருந்தன. ‘நாங்கள் எரிக்கப்பட்டோம். ஆனால் எங்கள் வார்த்தைகள் மட்டும் எரியவில்லை’ என்று ஒரு புத்தகம் சத்தமிட்டது. 05 இப்படியெல்லாம் நடப்பதைப் பற்றி நீங்கள் ஆழமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். இது உங்களுடைய மனதில் கனமான ஒரு நெருப்புத் துண்டைப்போலவே கிடக்கிறது. அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய நினைவுக்கு வந்த பதிவொன்று – அலெக்ஸாண்டிரியாவின் பழமையான நூலகத்தை (Library of Alexandria) பற்றி தெரியுமா உங்களுக்கு? இது எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் கி.மு 03 ஆம் நூற்றாண்டில் தாலமிக் வம்சத்தால் நிறுவப்பட்டது. ‘மௌசியோ’வின் (Mouseion) ஒரு பகுதியான இந்த நூலகம், உலகின் அனைத்து இலக்கியங்களையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதில் 40,000 முதல் 400,000 சுருள்கள் (scrolls) இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், தோட்டங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களும் இதில் இருந்தன. அறிஞர்களுக்கான தங்குமிடம், வரி விலக்குகள், ஊதியத்தை எல்லாம் வழங்கியது. அறிஞர்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரேட்டஸ் போன்றோரின் படைப்புகள் இங்கே இருந்தன. இங்குப் பழங்காலத்தின் மிக பிரபலமான சிந்தனையாளர்கள் பலர் ஆய்வுகள் செய்தனர். பெரும்பாலான புத்தகங்கள் பாபிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தன. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கி.பி. 03 ஆம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப் போரின்போது முக்கிய நூலகம் அழிந்தது. பின்னர், அதன் துணை நூலகமான செராபியம் (Serapeum) கி.பி 391 இல் கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாயின. அதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. இதனுடைய முழுமையான அழிவு கி.மு. 48 இல் ஜூலியஸ் சீசரின் இராணுவத்தால் மற்றும் கி.பி 270 இல் ஆரேலியனின் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம். எகிப்தை முஸ்லீம்கள் வெற்றி கொண்ட காலமான கி.பி. 642 இல் (அல்லது அதற்குப் பிறகு) நூலகம் இறுதியாக அழிந்தது. 06 இந்தக் கதையைக் கொந்தளிப்போடு நீங்கள், உங்களுடைய மகளுக்குச் சொன்னபோது, அவள் கேட்டாள், “வரலாற்றின் மனநோயாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” “அவர்கள் வரலாற்றைக் கண்டு அச்சமடைகிறார்கள் மகளே!” 00 https://vallinam.com.my/version2/?p=10833
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்களாதேஷ் முதல் சுற்றோடு போய்விடும். ஆனால் இலங்கையில் விளையாடினால் மழை குழப்பி நொக்கவுட்டுக்கு போக சான்ஸ் இருக்கு என்றும் கணக்குப் போட்டிருப்பார்கள்🤪
-
கண்ணன் காட்டிய வழி
கண்ணன் காட்டிய வழி ஆர் வி சுப்பிரமணியன் துச்சாதனன் கீழ்ஸ்தாயியில் உறுமினான். “நீ சொல்வது பொய்யாக – வேண்டாம் தவறாக இருந்தால் உன் தலை இருக்காது”. அனுகூலன் நிமிர்ந்து துச்சாதனனை நோக்கினான். அவனது கண்கள் கலங்கி இருந்தன. “தங்களிடம் நாற்பது ஆண்டுகளாக அணுக்க ஒற்றனாக பணி புரிகிறேன். இது வரை நான் தங்கள் வரை கொண்டு வந்த எந்த செய்தியும் தவறாக இருந்ததுண்டா?” என்று தழுதழுத்த குரலில் வினவினான். “ஆம் அதனால்தான் உன்னிடம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். உன் தலை இன்னும் உடலில் இருக்கிறது. நீ அலர் உரைப்பது யாரைப் பற்றி? கர்ணன் என் தமையனுக்கு அடுத்த நிலையில் உள்ளவன், என் தமையனுக்கு மட்டுமல்ல எனக்கும் உயிர் நண்பன்!” என்று மீண்டும் கடுமையான குரலில் சொன்னான். ஆனால் தன் குரல் அனுகூலனைத் தவிர வேறு யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும் அவன் குரலில் இருந்தது. “செய்தியைச் சொல்வதில் எனக்கும் வருத்தமே. எனக்கு அங்கர் தெய்வம். என் மகள் திருமணத்திற்கு நீங்களும் அரசரும் வரக் கூட இல்லை, அவர் முன்னின்று நடத்தினார். அவர் என் மகளுக்கு அளித்த பரிசுப் பொருட்களை இன்னும் அவள் கணவன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது என் கடமை. நான் இதை அறிந்திருந்தும் தங்களிடமிருந்து மறைத்தால் அவரே என்னை மன்னிக்கமாட்டார். இந்தச் செய்தியை தங்களுக்கு உரைத்தது அல்ல, இத்தனை தாமதமாக உய்த்துணர்ந்தேன் என்பதுதான் எனக்கு இழுக்கு” என்று அனுகூலன் கம்மிய குரலில் சொன்னான். துச்சாதனன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் தோள்கள் குலுங்கின. தன் முகத்தை தன் கைகளில் புதைத்துக் கொண்டான். அனுகூலன் “அரசரிடம் நீங்கள்தான்…” என்று ஆரம்பித்தான். துச்சாதனன் கையை ஆட்டி அவனைப் போகும்படி சைகை செய்தான். அனுகூலன் கூடாரத்திலிருந்து தளர்ந்த நடையோடு வெளியேறினான். துச்சாதனன் மீண்டும் புற உலகுக்கு வர இரண்டு நாழிகைகள் ஆயிற்று. வெள்ளி எழுவது ஆடிக் கொண்டிருந்த கூடாரக் கதவின் வழியே தெரிந்தது. பெருமூச்சுடன் எழுந்து மெதுவாக துரியோதனனின் கூடாரத்துக்கு நடந்தான். கூடார வாசலில் இருந்த துரியோதனின் அணுக்க சேவகன் சிவதாணு தலை தாழ்த்தினான். “அரசர் இப்போதுதான் உறங்கச் சென்றார், இத்தனை நேரம் ஆசாரியர், அங்கர், அஸ்வத்தாமர், கிருபர், சல்யர், மாமாவுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்” என்று கிசுகிசுத்தான். “சந்தித்தாக வேண்டும் சிவதாணு, முக்கியச் செய்தி” என்று தளர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே துச்சாதனன் கூடாரத்தின் உள்ளறையில் நுழைந்தான். துரியோதனன் அவனை எதிர்பார்த்து திண்டின் மேல் சாய்ந்து காத்திருந்தான். “உன் காலடியோசை கேட்டது, உன்னை ஆலோசனைக் கூட்டத்தில் காணோமே என்று கர்ணன் மீண்டும் மீண்டும் விசாரித்தான். அயர்ச்சியில் உறங்கி இருப்பான், அழைக்க வேண்டாம் என்று அவனே விளக்கமும் சொல்லிக் கொண்டான்” என்று புன்னகைத்தான். துச்சாதனன் எதுவும் பேசவில்லை. கூடாரத்தில் தூண் ஒன்றில் சாய்ந்து நின்றான். அவன் கால்கள் தள்ளாடின. துரியோதனன் எழுந்து அவனை அணைத்துக் கொண்டான். அவனை திண்டில் சாய வைத்தான். “மதுவாசம் இல்லை, பின் ஏன் இந்தத் தள்ளாட்டம்? உளம் தளர்ந்திருக்கிறாயா? கர்ணனின் வில்லான விஜயம் விஜயனை வெல்லும், நமக்கு ஜெயத்தைப் பெற்றுத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று அவனைத் தேற்றினான். துச்சாதனன் வெடித்து அழுதான். “விஜயத்துக்கும் அதை ஏந்தும் வீரனுக்கும் சக்தி உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவனுக்கு நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் மனம் இல்லை அண்ணா!” என்று துரியோதனின் தோளில் சாய்ந்து விம்மினான். “இவனை நம்பித்தான் போரில் இறங்கினோம், பிதாமகரையும் துரோணரையும் அல்ல. இன்று பீமனிடம் விற்போரில் தோற்றிருக்கிறான். அவனைக் காக்க இருபத்திரண்டு தம்பியர் இறந்தனர். உன்னையே எதிர்த்து குரல் எழுப்பியவன் விகர்ணன், இந்தப் போர் அநீதியானது என்று உறுதியாகக் கருதியவன். ஆனால் முழுமூச்சுடன் போரிட்டு தன் உயிரைத் தந்துவிட்டான். இவன்? உண்மையில் இவன் உன்னை விடவும் பலம் வாய்ந்தவன். கதையெடுத்து சுழற்றினால் பலராமருக்கும் இவனை எதிர்கொள்வது கஷ்டம். இவனால் பீமனை மற்போரில் கூட வெல்ல முடியும், வெறும் தசை மலையான அவனிடம் விற்போரில் தோற்று நிற்கிறான். ஏன் தெரியுமா?” என்று ஆவேசமாகக் கேட்டான். துரியோதனன் எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்தான். துச்சாதனன் அவன் முகவாயைப் பிடித்து நிமிர்த்தினான். “அவனை உயிர் நண்பனாகக் கருதினேன். உனக்கு அடுத்த நிலையில் அவனைத்தான் வைத்திருந்தேன். துருமசேனனும் லட்சுமணனும் விகர்ணனும் தம்பியரும் ஜயத்ரதனும் இறந்தது கூட எனக்கு இத்தனை வலியைத் தரவில்லை. அவன் ஏன் நம் சார்பாக முழு மூச்சுடன் போரிடவில்லை என்று அறிவாயா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான். “ஏனென்றால் அவன் கௌந்தேயன்” என்று துரியோதனன் முனகினான். அதிர்ச்சியில் துச்சாதனனின் கை தன்னிச்சையாக கீழிறங்கியது. துரியோதனன் மெதுவாக துச்சாதனனின் தலை முடியைக் கோதினான். “ஆம், அவன் சிற்றன்னைக்கு வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைத் தவிர வேறு எந்த இளையோனையும் கொல்லமாட்டேன் என்று சொல் அளித்திருக்கிறான். இதைக் கூட நான் அறியவில்லை என்றால் நான் அரசனாக இருக்கவே தகுதி அற்றவன் துச்சா! அப்புறம் எனக்கு மணிமகுடம் எதற்கு, எதற்கு நமக்கு ஒரு ஒற்றர் படை?” என்று புன்னகைத்தான். “அதனால்தான் அவன் வில் இன்று பீமனின் எதிரில் தள்ளாடிவிட்டது. இன்றைய தோல்வி அவனுக்கு ஒரு பாடம். நாளையிலிருந்து அவன் அர்ஜுனனை எதிர்த்து முழுமூச்சுடன் போரிடுவான். இனி கண்ணனைத் தவிர யாரும் அவனை வெல்ல முடியாது. அந்த மாயவனின் சதிகளிலிருந்து நாம் அவனைக் காத்தால் போதும், நம் வெற்றி நிச்சயம். கவலை கொள்ள வேண்டாம்” என்று மிருதுவான குரலில் சொன்னான். துச்சாதனன் ஈரம் ததும்பும் விழிகளால் தமையனை நோக்கினான். “உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்” எண்று அழுதான். “அவனுக்கு நாம் செய்யாத துரோகமா?” என்று துரியோதனன் விரக்தியோடு நகைத்தான். “என்ன துரோகம் செய்துவிட்டோம்? குதிரை மேய்க்க வேண்டியவனை அரசனாக்கினோம், சூதனை ஷத்ரியனாக்கினோம். நம் அனைவருக்கும் மூத்தவன் என்று முழுமனதாக ஏற்றோம். நம் அந்தப்புரங்களிலும் அனுமதி உண்டு. உனக்கு சமமான நிலையில் வைத்தோம், நம் மனைவியர் அவனிடம் மட்டும்தான் கணவனைப் பற்றி அலுத்துக் கொள்கிறார்கள், குடிமூத்தவனான உன்னிடமும் என்னிடமும் அல்ல. நம் பிள்ளைகள் மனதில் அவனுக்குத்தான் முதலிடம், பக்கத்தில் நாம் இருந்தால் அவன் பெரிய தந்தை, அம்மாக்க்கள் இருந்தால் அவன் மாமன். இதுதான் துரோகமா?” “அவன் நம் படைகளுக்கு தளபதியாக இருக்க வேண்டியவன். மூத்தவர் என்ற மரியாதைக்காக மட்டுமே பிதாமகரைத் தளபதி ஆக்கினோம், அதுவும் அவன் பரிந்துரைத்ததினால்தான். அவனைப் போய் சூதன், அதிரதன் மட்டுமே என்று பீஷ்மர் ஒதுக்கினார். நான் அரசன், நீ இளவரசன். என்ன கிழித்துவிட்டோம்? அவரை எதிர்த்து நா ஒரு வார்த்தை பேசவில்லை. அதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் பீஷ்மர் விருஷகேதுவுக்குக் கூட போரில் ஈடுபட அனுமதி தரவில்லை, அவன் குதிரைகளைப் பரிபாலித்தான். நான் ஏன் பீஷ்மருக்கு ஆணையிடவில்லை? அதை எதிர்த்து நீயும் தம்பியரும் ஏன் சங்கை அறுத்துக் கொள்ளவில்லை? காலமெல்லாம் அவனை குதிரைச்சூதன் என்று இழிவுபடுத்தினார்கள், அவன் தளரவில்லை. அவன் மகனையும், அங்கநாட்டு இளவரசனையும், குதிரைச் சூதனாக பணி புரிய வைத்தபோது நாம் என்ன கிழித்துவிட்டோம்? எந்த ஷத்ரியனுக்கு குதிரை பராமரிக்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது? விருஷகேது ஷத்ரியன் என்று நானோ நீயோ மாமாவோ தம்பியரோ மெல்லிய முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லையே?” துரியோதனனுக்கு மூச்சிரைத்தது. அருகில் இருந்த மதுக் குவளையை எடுத்து இரண்டு மிடறு பருகி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். “அவன் ஷத்ரியன் என்ற அங்கீகாரத்துக்காக காலமெல்லாம் ஏங்குகிறான். திரௌபதி சூதனை மணக்க மாட்டேன் என்று சுயம்வரத்தில் இழிவுபடுத்திய பிறகு அவன் சுயம்வரம் பக்கம் தலை வைத்துப் படுக்கவே அஞ்சினான். அவனுக்கு ஒரு ஷத்ரியப் பெண்ணை நாமாவது பேசி மணமுடித்து வைத்தோமா? அண்ணன் அண்ணன் என்று கொண்டாடும் நம் வீட்டுப் பெண்களுக்கே அவரவர் குடும்பத்தில் சூதனுக்கு எப்படி பெண் கேட்பது என்று ஆயிரத்தெட்டு யோசனை. சுப்ரியை பானுவின் தங்கை மாதிரி என்று சொல்லி ஒரு சேடியைத்தான் மணமுடித்து வைத்தோம். அது என்ன தங்கை மாதிரி? பானு, அசலை, மற்ற தம்பிகளின் மனைவியருக்கு சகோதரிகளே இல்லையா, சகோதரிகள் மாதிரி சேடிகள்தான் இருந்தார்களா? வெறும் சோற்றுக் கடனுக்காக குருதி உறவுகளைத் துறந்து தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். துரோணரும் பிதாமகரும் அல்ல, அவன் ஒருவனால் மட்டுமே பார்த்தனைக் கொல்ல முடியும். கண்ணன் ஒருவனால் மட்டுமே இவனிடமிருந்து பார்த்தனைக் காக்க முடியும். அந்தக் கண்ணனின் சதிகளிலிருந்து இவனைக் காப்பாற்றினால் நம் வெற்றி நிச்சயம். நமக்கிருக்கும் ஒரே வழி அதுதான்” என்று இரைந்தான். துச்சாதனன் ஈரக் கண்களோடு துரியோதனனை நிமிர்ந்து நோக்கினான். “நீ என்ன சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. முழுமூச்சாகப் போரிட்டாலே அர்ஜுனனை வெல்வது இவனுக்கும் எளிதல்ல. விராட நாட்டில் பார்த்தன் ஒருவனே இவனையும் பிதாமகரையும் ஆசாரியரையும் வெல்லவில்லையா? அர்ஜுனன் போராடுவான் என்று எதிர்பார்க்கவில்லை என்று சாக்குபோக்கு சொன்னான். இப்போதோ அர்ஜுனன் ஒருவன் அல்ல, தேரோட்டும் மாயவனும் துணை நிற்பதால் அவன் பலம் இன்று இரண்டு மடங்காக இருக்கிறது, இல்லாவிட்டால் ஜயத்ரதனை அவன் கொன்றிருக்க முடியாது. இன்று பாண்டவர்களை வெல்ல ஒரே வழி மிச்ச நால்வரில் ஒருவரைக் கொல்வதுதான், இல்லை தருமனை சிறைப்பிடிப்பதுதான். ஆனால் இவன் தன் தம்பியரைக் காக்க நம் தம்பியரை பலி கொடுக்கிறான். உன்னையும் என்னையும் கூட இவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இன்று அவன் பீமனை கொன்றிருந்தால் உன் தலை மேலும் என் தலை மேலும் ஆடிக் கொண்டிருக்கும் கத்தி உடைந்திருக்கும். பாண்டவர்களில் ஒருவன் இறந்தாலும் அவர்கள் ஐவரும் இறந்த மாதிரிதான், நமது வெற்றி இன்றே உறுதி ஆகி இருக்கும்” என்று அழுதான். துரியோதனன் கடகடவென்று சிரித்தான். “பலே பலே! நீயும் யோசிக்க ஆரம்பித்துவிட்டாய்! மூடா, இதை நீ உணர்ந்திருப்பது உண்மையானால் நீயே இந்தப் போரை முதல் நாளே முடித்து வைத்திருக்கலாமே!” என்று நகைத்துக் கொண்டே கேட்டான். துச்சாதனன் குழம்பிய விழிகளுடன் அண்ணனைப் பார்த்தான். “என்னாலும் – என்னை விடு – உன்னால் யுதிஷ்டிரனையோ இரட்டையரையோ வெல்ல முடியாதா? ஏன் நீ முதல் நாளே நகுலனைத் தேடிச் சென்று கதையைப் பயன்படுத்தி இருக்க வேண்டியதுதானே? உனக்கெதிராக அவனால் இரண்டு நாழிகை நிற்க முடியுமா? நீயே சொன்ன மாதிரி அவர்களில் ஒருவன் இறந்தாலும் அவர்கள் ஐவரும் இறந்த மாதிரிதானே! நாம் அன்றே வெற்றிவாகை சூடி இருக்கலாமே!” என்று துரியோதனன் கேட்டான். துச்சாதனன் மௌனமாக நின்றான். “உண்மையில் நம் தரப்பில் எல்லாருக்கும் அடிமனதில் பாசம் இருக்கத்தான் செய்கிறது துச்சா! எத்தனை வஞ்சம் இருந்தாலும் என்னால் பீமனைத் தவிர்த்து வேறு எந்த பாண்டவனையும் கொல்ல முடியாது. முதல் நாள் போரில்தான் நானும் இதை உணர்ந்தேன். உன்னை அறைகூவினால் ஒழிய நீயும் பீமன் தவிர்த்த பிற பாண்டவர்களைத் தவிர்க்கத்தானே செய்கிறாய்? பீமனை விடு, பாண்டவர்களின் மகன்களைக் கொல்வது கூட நமக்கு சுலபமல்ல. லட்சுமணன் இறந்திருக்காவிட்டால் அபிமன்யுவை துரத்தி இருப்போம், அவ்வளவுதான். நமக்கும் பிதாமகருக்கும் ஆசாரியருக்கும் பெரிய வித்தியாசமில்லை, ஒன்று விட்ட சகோதரர்களுக்கு எதிராகவே நம்மால் முழுமூச்சுடன் போரிட முடியவில்லை. கர்ணனுக்கும் நம் நிலைதான். அவனுக்கு அர்ஜுனன் எதிரி, எனக்கும் உனக்கும் பீமன். மற்றவர்கள் எல்லாரும் சகோதரர்கள்தான். ஆனால் திரௌபதியில் முடியப்படாத கூந்தல் பீமன் மனதில் பாசத்தை முற்றிலும் துடைத்தெறிந்திருக்கிறது, அவனுக்கு நாம் இருவர் மட்டும் எதிரிகள் அல்ல, அவனால் நம் தம்பியரை இரக்கமில்லாமல் கொல்ல முடிகிறது. அர்ஜுனன் மனதில் மிச்சம் மீதி ஏதாவது துளிர்த்தால் அதை கண்ணனின் உபதேசம் அழிக்கிறது.” என்று பெருமூச்செறிந்தான். துச்சாதனன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவன் எங்கோ வெறித்தான். துரியோதனன் துச்சாதனனின் தலைமுடியைக் கோதினான். அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். “இது அத்தனையும் கண்ணனின் திட்டம். இத்தனை நாள் வாயைத் திறக்காத சிற்றன்னை போர் என்று வந்ததும் புதல்வனைத் தேடி வருகிறாள். கர்ணன் தங்கள் பக்கம் வருவான் என்று கண்ணனுக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்காது, ஆனால் இந்த ரகசியம் அவனை பலவீனப்படுத்தும் என்று அறிந்துதான் செய்திருக்கிறான். பலவீனப்பட்டிருந்தாலும் கர்ணனால் பார்த்தனை வெல்ல முடியும், ஆனால் கிருஷ்ணார்ஜுன ஜோடி அவனை விட பலமானது. அவனுக்கு நல்ல தேரோட்டி வேண்டும்…” என்று துரியோதனன் மிருதுவான குரலில் சொன்னான். “கர்ணன் நம்மில் ஒருவன். எனக்கும் உனக்கும் அண்ணன். நமக்கு இருக்கும் அதே தளைகள்தான் அவனுக்கும், இன்னும் சொல்லப் போனால் அவன் நம்மை விட இறுக்கமாகத் தளைப்பட்டிருக்கிறான். அப்படி தளைப்பட்டிருந்தும் இந்தப் போரை நமக்கு சாதகமாக திருப்பக் கூடியவன் அவன் ஒருவனே. இன்று பீமனிடம் தோற்றது அவன் மனதை உறுதிப்படுத்தி இருக்கும், அவனுக்கு இனி எந்தத் தயக்கங்களும் இருக்காது. கண்ணன் காட்டிய வழி நமக்கும் பொருந்தும், தயக்கங்கள் இல்லாமல் நம் அண்ணன் காட்டும் வழியில் நடப்போம், கடமையைச் செய்வோம், பலனை எதிர்பார்க்க வேண்டாம்!” துச்சாதனன் பதில் பேசவில்லை. துரியோதனன் தம்பியை அணைத்துக் கொண்டான். “வா, இன்று இந்தக் கூடாரத்திலேயே படு, இரண்டு நாழிகையாவது தூங்கு. அப்புறம் மறக்காமல் அனுகூலனுக்கு பெரிய பரிசாக வழங்கு” என்று சொல்லிக் கொண்டே அவனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான். https://solvanam.com/2025/10/12/கண்ணன்-காட்டிய-வழி/
-
வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை
வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை 4 Jan 2026, 11:48 AM 1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது. அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்படும் தென்னமெரிக்காவிற்குள் – ஐரோப்பிய நாடுகள் இனி புதிய ஆக்கிரமிப்புகளைச் செய்யக்கூடாது என்றும், அதேவேளை ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் உள்விவகாரங்களிலோ அல்லது அவற்றிடம் எஞ்சியிருந்த இலத்தின் அமெரிக்கக் காலனி நாடுகளிலோ அமெரிக்கா தலையிடாது என்றும் மன்றோ கொள்கை கூறியது. ஆனால், இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, உலகிலுள்ள வேறு எந்த நாட்டிலும் அமெரிக்கா தலையிடாது என்ற வரம்பு மன்றோ கொள்கையில் சேர்க்கப்படவில்லை. எனவே அமெரிக்கா இலத்தின் நாடுகளில் மட்டுமின்றி உலகின் ஆறு கண்டங்களிலும் தலையிட்டுள்ளது. புவிக் கோளத்தில் குறைந்தபட்சம் பாதியளவு தனது உடைமையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோள். இலத்தின் அமெரிக்க நாடுகளைத் தன் புழக்கடையாகக் கருதும் அமெரிக்கா தன் நலனுக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் நாடுகளை ஆக்கிரமித்தோ அல்லது அந்த நாடுகளில், தனது உளவுத் துறை மூலமாகவோ ‘எதிர்க் கட்சிகளை’ உருவாக்கி ஆட்சிக் கலைப்பு செய்தோ தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. உலக நாடுகளில் பிரதிநிதி என்று சொல்லப்படும் ஐ.நா.வின் விதிகளையும் சர்வதேசச் சட்டங்களையும் துச்சமெனக் கருதும் அமெரிக்கா, 2000த்தில் தொடங்கிய புத்தாயிரமாண்டில் மட்டும் லிபியா, சிரியா, இராக், பாலஸ்தீனம் முதலிய நாடுகளில் நேரடியாக இராணுவத் தலையீடு செய்துள்ளது. அண்மையில் வங்கதேசத்திலும் நேப்பாளத்திலும் நடந்த ”இளந்தலைமுறையினரின் புரட்சிகளி”லும் அமெரிக்காவின் கை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் கண்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற மன்றோ கொள்கையைக் காட்டி, 1950களில் குவாதமாலா நாட்டிற்கும் 1960களில் கியூபாவிற்கும் சோவியத் யூனியன் செய்த பொருளாதார உதவிகளையும்கூட அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் செய்யப்பட்ட தலையீடு என்று அமெரிக்கா கூறியது.1960 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, கியூபாவுடன் எந்த நாடும் வணிகம் செய்யக்கூடாது என்ற தடை விதித்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. இலத்தின் அமெரிக்க நாடுகள் ஏதும் சோசலிசத்தை மட்டுமல்ல சுயேச்சையான, இறையாண்மையுள்ள பொருளாதாரத்தை உருவாக்குவதைக்கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த நாட்டின் மீதும் இராணுவத் தலையீடு செய்யும் திமிர் அமெரிக்காவிற்கு இருந்து வருகிறது. அணு உலைகள் தொடர்பான சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு ஈரான் உடன்படவில்லை என்று கூறியும் உலக எஜமானனாகத் தன்னைப் பாவித்தும் சிலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈரானின் அணு உலைகள் இருந்த இடத்தின் மீது குண்டு மாரி பொழிந்துவிட்டுச் சென்றன. அந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகுத்தியது ஈரான். தற்போது ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அந்த நாட்டின் அரசை எதிர்த்து வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துபவர்கள் மீது ஈரானிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா அந்த நாட்டில் தலையிடும் என்று இரண்டு நாள்களுக்கு முன் ட்ரம்ப் விடுத்த அறிக்கைக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம். 1998முதல் 2013 வரை வெனிசூலாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஹ்யூகோ சாவெஸ், அந்த நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்கா தன் உளவுப் படைகள் மூலமும் அங்குள்ள அரசியல் கைக்கூலிகள் மூலமும் சாவெஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பல முயற்சிகளைச் செய்தது. சாவெஸ் இறந்த பிறகு அவரது அரசியல் வாரிசான நிக்கோலா மதுரோ ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீர்குலையும்படி செய்து வந்தது. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசூலா. அந்த வளத்தைக் கொள்ளையடித்து வந்த பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன வெனிசூலாவின் சாவெஸ், மதுரோ அரசாங்கங்கள். ட்ரம்ப் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற முதல், வெனிசூலா அரசாங்கம் போதைப் பொருள்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார். அது உண்மைதான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்கூட, உலகில் மிக சக்தி வாய்ந்த நாடாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா போதைப் பொருள்கள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்திருக்க வேண்டுமல்லவா? மேற்சொன்ன பிரசாரத்துடன், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினரைத் திரட்டிக் கொண்டு வந்துள்ளவருமான மரியா கொரினா மச்சோடோ போன்றவர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாட்டில் கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தி வந்தது ட்ரம்ப் அரசாங்கம். மேலும், அங்கு கூலிப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இலத்தின் அமெரிக்க நாடுகளில் தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களை எண்ணற்ற முறை கவிழ்க்கவும் தேவைப்பட்டால் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொல்லவும் தீர்மானித்து வந்த அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவம், தன் கைக்கூலி நாடுகளுடன் இணைந்து 1983இல் கரீபியன்கடல் பகுதியிலுள்ள சின்னஞ் சிறு தீவு நாடான கிரெனாடாவின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கைது செய்து வீட்டுக் காவலில் வத்து பின்னர் கொலை செய்தது. அமெரிக்க நேரப்படி 3.1.2026 அதிகாலையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவின் தலைநகர காரகாஸ் மீதும் நாட்டின் பல பகுதிகள் மீது பரவலாகவும் குண்டுமாரி பொழிந்துள்ளன. வெனிசூலாவின் இராணுவத் தளங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதே தாக்குதல் தொடுப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறினாலும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் இராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இனிமேல்தான் தெரிய வரும். இது ஒருபுறமிருக்க வெனிசூலாவின் குடியரசுத் தலைவர் நிக்கோலா மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து வேறு நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக ட்ரம்ப் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிட அக்கிரமமான செயல் உலக அரசியலில் இருக்க முடியுமா? மதுரோவும் அவரது மனைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கான சான்றை அமெரிக்கா தர வேண்டும் என்று வெனிசூலாவின் துணைக் குடியரசுத் தலைவர் வற்புறுத்தியுள்ளார். அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, தனது நாடு எவருக்கும் பணிந்துவிடாது என்றும் அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எத்தனை பிணக்குவியல்களை அந்த நாடு காணப் போகிறதோ? அமெரிக்க மக்களில் 35 விழுக்காட்டினர் மட்டுமே ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றாலும் அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களும், இராணுவமும், காவல் துறையும் ட்ரம்பிற்குப் பக்க பலமாக இருக்கின்றன. வியட்நாம் போரின் போது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அந்த நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்தது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்குமா? அல்லது ரஷியா, சீனா, ஈரான் போன்றவை வெனிசூலாவுக்கு ஆதரவாக அறிக்கையுடன் நிற்காது வேறுவகையில் உதவி செய்யுமா? காஸா விவகாரத்தில் நடந்து கொண்டது போல இந்திய அரசாங்கம் இப்போதும் மெளனம் காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற தீய சக்தி ஒழிந்தால்தான் உலக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கட்டுரையாளர் குறிப்பு: எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். https://minnambalam.com/the-monroe-doctrine-and-american-occupations/
-
புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன்
புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன் ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான். இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு. இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக இருந்தால் அதனை அதிசயம் அல்லது அற்புதம் என்று அழைக்கவேண்டும். யூதர்களின் புலப்பெயர்ச்சி வரலாற்றைக் கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற நூலில் ஓரிடத்தில் கூறப்படுவதுபோல “அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது”. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வது என்றால் அதுகூட ஏற்கனவே இருப்பவற்றுள் ஏதாவது ஒன்று எதிர்பாராத புதிய மாற்றங்களை அடைய வேண்டும். தமிழ் அரசியலில் ஏற்கனவே பலமாகக் காணப்படும் அம்சங்களில் அல்லது நபர்களில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும்தான் இயற்கை விதிக்கு மாறாக ஏதாவது அதிசயங்கள் அற்புதங்களை எதிர்பார்க்கலாம். எனவே,இப்பொழுது கடந்த ஆண்டின் முடிவில் எம்மிடம் இருப்பவற்றை முதலில் மதிப்பிடுவோம். கடந்த ஆண்டு என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெருமளவுக்கு ஒரு தோல்வி ஆண்டுதான். ஆண்டின் தொடக்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஓர் அரசாங்கம் ஏற்கனவே ஆட்சிக்கு வந்திருந்தது. ஆண்டின் முடிவில் அந்த அரசாங்கம் வடக்கில் முதலாவது பிரதேச சபையைக் கைப்பற்றி விட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசம் அமைந்திருக்கும் கரைத் துறைப் பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிவிட்டது. ஆண்டின் தொடக்கமும் தோல்வி. முடிவும் தோல்வி. இடையில் செம்மணிப் புதை குழி புதிய வாய்ப்புகளைத் திறந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்தார். எனினும் ஐநா தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது மட்டுமல்ல அது ஒரு தெளிவான செய்தியைக் கூறியது. தமிழ் மக்கள் அனைத்துலக அரங்கிலும் பலமாக இல்லை என்பதே அது. ஆண்டின் முடிவில்,தமிழ்க் கட்சிகளில் ஒரு பகுதி தமிழகத்தை நோக்கிச் சென்றது. இன்னொரு பகுதி கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றது. இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக இந்தியாவை அணுகியபோது, இந்தியா கொழும்பை நோக்கி வந்தது. கொழும்பில்,இந்திய வெளியுறவு அமைச்சரைத் தமிழ்க் காட்சிகள் ஒன்றாகச் சந்தித்தன. ஆனால் இரண்டாகக் கோரிக்கைகளை முன் வைத்தன. தமிழரசுக் கட்சி ஒர் ஆவணத்தை என்வலப்பில் வைத்துக் கொடுத்தது. அதில் என்ன இருந்தது என்று மற்றவர்களுக்குத் தெரியுமா?மக்களுக்குத் தெரியுமா? கடந்த ஆண்டு முழுவதிலும் தமிழ் மக்கள் பெற்ற பின்னடைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகக் கிடைக்கும் விடை என்ன தெரியுமா? ஒற்றுமையின்மையால் கிடைத்த தோல்வி. எனவே புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமைவதாக இருந்தால் ஒற்றுமைப்படுவதைத்தவிர வேறு வழி இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை புத்தாண்டுத் தீர்மானம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு முழுவதிலும் அவ்வாறு ஒற்றுமைப்படுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைத் தொகுத்துப் பார்க்கலாம். புதிய நாடாளுமன்றத்தில் காணப்படும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாகச் செயல்படுவதற்கு கஜன் முயற்சி செய்தார். அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால் அப்புதிய யாப்பை எதிர்ப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகத் திரளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு ஒத்துழைக்கவில்லை. மற்றொரு முயற்சி, அதுவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. அது தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சிகளை இணைத்து ஒரு கூட்டை உருவாக்கும் ஒரு முயற்சி. முதலில் தமிழ்த் தேசியப் பேரவை என்று உருவாக்கப்பட்டது. அது அடுத்த கட்டமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்படிக்கையானது எழுத்துமூல ஆவணம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. எனினும்,அந்தக் கூட்டுக்குள் காணப்பட்ட ஈபிஆர்எல்எஃப் கட்சியானது மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்று கேட்டு, தமிழ்ப் பகுதிகளில் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியதன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்தக் கூட்டு பெருமளவுக்கு செயற்படா நிலையை அடைந்து விட்டது. அந்தக் கூட்டு உருவாகும்போது கஜேந்திரகுமார் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஒரு கருத்து ஊன்றி கவனிக்கத்தக்கது. இந்த “ஐக்கியம் உடையுமாக இருந்தால் தமிழ் மக்கள் அதைத் தாங்க மாட்டார்கள்” என்று அவர் சொன்னார். அதன் பின் ஐநா தீர்மானத்தை முன்னோக்கி, தமிழ்க் கட்சிகளை மீண்டும் இணைப்பதற்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. அங்கேயும் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை. ஐநாவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின் அண்மையில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்து உரையாடியிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கிய பேச்சுவார்த்தை அது என்று ஊகிக்கப்படுகிறது. இவை யாவும் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் நிகழ்ந்த ஐக்கிய முயற்சிகள் ஆகும். இந்த முயற்சிகள் அனைத்திலும் இரண்டு பொதுப் பண்புகளைக் காணலாம். முதலாவது பொதுப்பண்பு,இந்த முயற்சிகளை முன்னெடுத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. பின்னணியில் சில சிவில் சமூகங்கள் நின்றன. இரண்டாவது பொதுப் பண்பு, இந்த முயற்சிகள் பெரும்பாலானவற்றை தோற்கடித்தது தமிழரசுக் கட்சி. தமிழரசுக் கட்சியானது தானே பெரிய கட்சி, தானே முதன்மை கட்சி, தானே தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் கட்சி என்று கருதுகின்றது; கூறிக் கொள்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காகவும், தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இவ்வாறான ஐக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று தமிழரசுக் கட்சி நம்புகிறது. மேலும் இந்த முயற்சிகளின் பின்னணியில் இருக்கும் சிவில் சமூகங்கள் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவை அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவானவை என்றும் தமிழரசுக் கட்சி நம்புகின்றது. முன்னணியின் ஐக்கிய முயற்சிகள் பெரும்பாலானவை தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தும் நோக்கிலானவை என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது இரண்டு அணிகள் உண்டு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது,சிறீதரனை அரவணைத்து அதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியை தனக்குச் சாதகமாகக் கையாளப் பார்க்கின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு சுமந்திரன் அணியினர் மத்தியில் உண்டு. இவ்வாறான சந்தேகங்கள், ஈகோக்கள் என்பவற்றின் விளைவாக கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி பெரும்பாலும் ஒத்துழைக்கவில்லை. எனவே கடந்த ஆண்டு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளில் பெரும்பாலும் குழப்பத்தை விளைவித்தது அல்லது ஒத்துழைக்க மறுத்தது அல்லது ஒரு பெரிய கட்சி, மூத்த கட்சி என்ற அடிப்படையில் பொறுப்போடு முடிவை எடுக்கத்தவறியது தமிழரசுக்கட்சிதான். இங்கே மிக அடிப்படையான பேருண்மை ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனக்குள் ஒற்றுமைப்படாத ஒரு கட்சி,ஏனைய ஐக்கிய முயற்சிகளுக்கு எப்படி ஒத்துழைக்கும்? இதுதான் கடந்த ஆண்டு. தொகுத்துப் பார்த்தால் அது ஒரு தோல்வி ஆண்டு. அந்தத் தோல்விக்குப் பெருமளவு காரணம் மூத்த,பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான். ஒரு மூத்த அண்ணனாக,பொறுப்போடு, பொறுமையோடு, பரந்த மனப்பான்மையோடு ஏனைய கட்சிகளை அரவணைத்து உண்மையான ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி இருந்திருந்தால் ஆண்டின் முடிவிலாவது குறைந்தபட்சம் கரைத்ததுறைப்பற்று பிரதேச சபையைக் காப்பாற்றி இருந்திருக்கலாம். எனவே இப்பொழுது மிகத்தெளிவான ஒரு பார்வை நமக்கு கிடைக்கிறது. கடந்த ஆண்டுகளைப் போலன்றி புதிய ஆண்டின் பலன் நல்லதாக அமைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் உண்டு. அதுதான் ஐக்கியம். ஒற்றுமைப்பட்டால் மட்டும்தான் புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமையும். சிலசமயம் இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும்,வெற்றிக்கு அதுதான் முன் நிபந்தனை. தையிட்டியில் நேற்று கட்சிகள் இணைந்தபடியால்தான் போராட்டம் தீவிரமடைந்தது. தமிழ்த்தேசிய அரசியலில் இப்பொழுது அதிசயம் அல்லது அற்புதம் என்று சொன்னால் அது ஐக்கியம் மட்டும்தான். https://www.nillanthan.com/8039/
-
40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு
40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு ஞாயிறு, 04 ஜனவரி 2026 08:31 AM கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மீண்டும் 1.30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக தீர்மானம் என சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தீர்மானம் என்போது நிரந்தர தீர்மானமாகும்? அண்மைக் காலங்களில் கல்வி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களை ஒன்று சேர்த்தால் புத்தகமொன்றை அச்சிட முடியும். நேர அட்டவணை தொடர்பில் மாத்திரம் 4 சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக சுற்றுநிரூபத்தை மாற்றி பிரிதொன்று வெளியிடப்படும் போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் கல்வி முறைமைக்கு மறுசீரமைப்பு அவசியம் என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரிலிருந்தே வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும். 2023ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருக்க வேண்டிய பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவுமில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலப் பாடத்தொகுதியை தயாரித்தவர்களது பெயர் விபரங்கள் மிகத் தெளிவாகவுள்ளன. கல்விஅமைச்சு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதனை விடுத்து காலத்தைக் கடத்துவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார். https://jaffnazone.com/news/53930
-
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் £67,000 கள் அபராதம்
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம் Nishanthan SubramaniyamJanuary 3, 2026 3:37 pm 0 பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் இனவெறி பாகுபாடு காண்பித்தாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு எதிராக அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் தனது முகாமையாளாரக இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தன்னை “அடிமை” என்று அழைத்ததாகவும், “இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்” எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்தியர் என்பதால் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது முகாமையாளர் இலங்கையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அத்துடன் பணியிடத்தில் “அடிமை” என்றும் இன்னும் சில தரக்குறைவான சொற்களாலும் அழைத்தது இனவெறி பாகுபாட்டின் கீழ் வரும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் , அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது விலகல் கடிதத்தை பாதிக்கப்பட்டவர் வழங்கினார். அதன்பின்னர் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்தார். நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்ஸ்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்ஸ்களை வழங்க உத்தரவிட்டது. மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://oruvan.com/sri-lankan-tamil-fined-several-hundred-thousand-pounds-in-london/#more
-
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்
“மதுரோவை உடனே விடுவி”: அமெரிக்காவுக்குப் புதிய இடைக்கால ஜனாதிபதி எச்சரிக்கை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது. இதனையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அங்கு அவர் தெரிவிக்கையில், “வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே. அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,” எனத் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=354860
-
பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்
பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் January 3, 2026 விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். www.ilakku.orgபிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் | Januar...விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ்
-
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்! Vhg ஜனவரி 04, 2026 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (05.01.2026) ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான் , கடந்த காலங்களில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. சம்பவம் தொடர்பில்.... கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21.11.2025) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை (02.01.2026) ஆந் திகதியன்று பதவி நீக்கம் செய்துள்ளது. https://www.battinatham.com/2026/01/blog-post_330.html
-
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு
கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம் - சுமந்திரன் ,குகதாசன் களத்தில்! Vhg ஜனவரி 04, 2026 திருகோணமலை கன்னியாவில் நீண்டகாலமாக பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த காணியை, தொல்பொருள் திணைக்களம் அண்மையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இப்பகுதியில் அகழ்வுப் பணிகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு தொடர்பில் ஆராய இன்று (04.01.2026)ஆம் திகதி நேரடி விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் அழைப்பின் பேரில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார். முக்கிய அம்சங்கள்... ஆலய காணி கையகப்படுத்தப்பட்ட விதம் குறித்து கேட்டறியப்பட்டது. மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த விவகாரத்தை உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2026/01/blog-post_933.html
-
நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 04 Jan, 2026 | 02:50 PM பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர். மேற்படி விஜயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச்செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர், தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்புசார் தொடர் இனவழிப்பைத் தடுப்பதற்கு தாயகமும் புலம்பெயர் தேசமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்படி இன்றைய தினம் (4) மாலை ஒஸ்லோவில் புலம்பெயர் தமிழர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ள இக்குழுவினர், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர். இச்சந்திப்பின்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் தமிழர்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்ஆராயப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/235184#google_vignette
-
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும் முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது. பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ளனர். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில், அந்தக் கூட்டணி செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட வேண்டியேற்பட்டது. நடைபெற்று முடிந்த மூன்று தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு , கிழக்கிலிருந்த தமிழ் கட்சிகள் பெரும்பாலும் தனித்தனியாகவே செயற்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கியபோது, அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே செயற்பட்டபோது, தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னிலையில் நின்று செயற்பட்டது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி. இவர்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டைப் பயன்படுத்தி பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் அதையே தொடர்ந்தனர். பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்துக் களமிறங்கியபோதும், ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது .உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் பின்னர் ஆட்சியமைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பக்கம் நிற்காது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பக்கம் இது சாய்ந்திருந்தது. இருந்தபோதும், சபைகளின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் கூட்டாக மாத்திரம் அது அமைந்தது. அதற்கும் அப்பால் சென்று அரசியல் கூட்டணியாகத் தொடரவில்லை. இவ்வாறாக கொள்கை, இலக்கு எதுவுமின்றி, “தறி கெட்ட மாடு போல்” சகல கட்சிகளுடனும் 'கூட்டு' என ஒட்டிக்கொண்டு திரிந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைத்தான் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டு ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போல் கதை விட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருடனான சந்திப்பிலும் இக்கூட்டுப் பங்கு பற்றியது. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் நடைபெற்ற மீள் இணைவுக்கான சந்திப்பில் முக்கியமாக இரண்டு பிரதான விடயங்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. முதலாவது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில், அத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இரண்டாவது தமிழ் மக்களுக்கான நீதியான - நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவது என்பதாகவே இருந்தது . இரண்டு விடயங்களுடனேயே தமது சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டாலும் அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தயாரித்த முன்மொழிவின் அடிப்படையில், கலந்துரையாடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதுபற்றிய கலந்துரையாடல்களை மாதாந்தம் நடத்துவதற்கும் பல தரப்பினருடன் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று நான்கு தேர்தல்கள் அவர்களுக்குப் பல பாடங்களைப் புகட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வீசிய அனுர அலை வடக்கு, கிழக்கிலும் தாக்கம் செலுத்தியிருந்தது. எவரும் எதிர்பாராத விதமாகப் பாராளுமன்றத் தேர்தலில் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான ஆசனங்கள் கிடைத்தன. தமக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்கள் காரணமாகப் பிரிந்து நின்ற தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டது. வடக்கு, கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழ்த் தேசிய கட்சிகளினால் கைப்பற்ற முடிந்தாலும் ஒப்பீட்டளவில் தேசிய மக்கள் சக்திய கணிசமான வாக்குகளைத் தனதாக்கிக் கொண்டது. இவ்வாறான பின்னணியில் நடைபெறக்கூடிய மாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் தேசிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் தரப்புக்களுடன் இணைந்து தமிழர் தாயகமான, தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் உயிர் மூச்சான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இவ்வாறான பின்னணியிலேயே பொதுக் காரணிகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகளைத் தமிழ்த் தேசிய கட்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறான நிலையில், இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் வடக்கிலுள்ள மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க விளங்குவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றுக்குச் சவாலாக உள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்திற்குத் தொடர்ந்தும் சவாலாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள வேண்டுமானால் தமக்கிடையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால், இக்கூட்டு எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி. உள்ளளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் தமிழரசுக் கட்சிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றிருந்தபோதும், அது தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் என்றால், அது தாமே என்றதொரு தோற்றப்பாட்டை முன்வைக்கும் அரசியலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் மூலம் இது தெளிவாகியுள்ளது. எனவே, தமிழரசுக் கட்சி-ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு போதும் இணையப் போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஏற்ப, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில், தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் இது முக்கியமானது.. இவ்வாறான நிலையில், 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் 2022ஆம் ஆண்டு பிளவடைந்து வெளியேறிப் பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் தற்போது தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ளமை என்பது தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இது மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான மீள் இணைவாக, அரசியல் ஆதாயத்திற்கான கூட்டாக இருப்பதால் இதன் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-கூட்டு-என்பதால்-ஆயுள்காலம்-குறைவாகவே-இருக்கும்/91-370514
-
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வெனிசுலாவில்-இடைக்கால-ஜனாதிபதி-டெல்சி-ரோட்ரிக்ஸ்/50-370499
-
நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்
நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி), கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தலைமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு வெளி சக்திக்கும் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்றும், எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகள் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதவை அந்த வகையில், வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித