Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34939
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார் இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும். https://thinakkural.lk/article/311831
  2. முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை - வேந்தன் முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் இன்றையதினம் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது சிங்கள மக்கள் ஆனால் அவர்கள் எமது பகுதிக்கு வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவது என்பது ஒரு வேடிக்கையான விடயம், இணைந்திருந்த வடக்கு கிழக்கையும் பிரித்தவர்கள் இந்த ஜேவிபியினர்தான். அதேபோன்று சுனாமி கட்டமைப்பையும், இல்லாமல் செய்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கூட இல்லாமல் செய்தவர்களும் இவ் ஜேவிபியினர்தான். ஐ.நாசபையில் கொண்டுவரப்பட்ட யுத்த குற்ற பிரேரணை தொடர்பில் இலங்கையில் யுத்த குற்றம் நடைபெறவில்லை , தாம் எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு போகத் தேவை இல்லை என்று சொன்னவர்களும் இந்த ஜேவீபியினர்தான். ஆகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது எங்கள் தலையில் மண் அள்ளி போடும் செயல் என்றும் தெரிவித்ததுடன் நாங்கள் ஜனநாயக ரீதியாக பல கட்சிகளின் கூட்டாக இணைந்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஆகவே எங்களுக்கு எமது சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். (ப) https://newuthayan.com/article/முன்னாள்_போராளிகளுக்கு_அங்கீகாரம்_தேவை_-_வேந்தன்
  3. சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை adminNovember 6, 2024 ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். என்றும் அதன் ஊடாக தனது பெயருக்கும், தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம். ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார் அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடத்த பிரச்சார கூட்டம் ஒன்றில் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீட்டு தொகை கேட்டு ,தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் சதாசிவம் இராமநாதன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/208057/
  4. பொதுத் தேர்தலில் 113ஐ பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி: தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி பேச்சு நாடாளுமன்றத் தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுகளை நடத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதுடன், 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியை அமைதிக் காலப்பகுதியாக கருதி அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் பல மாவட்டங்களில் சுமூகமான நிலையில் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலில் பிரச்சாரங்கள் தீவிரமாக இல்லையென பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான ரகசிய பேச்சுகளை தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. ரகசியமான முறையில் இந்தப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பின் அழைப்பை தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சாதகமான முறையில் அணுகியுள்ளதாகவும் தெரியவருகிறது. என்றாலும், ஏனைய கட்சிகளின் ஆதரவு தமது தரப்புக்கு தேவைப்படாதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியால் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் விடுதலை முன்னணியை போல் இல்லாது சற்று மெத்தனமாக போக்கில் இருப்பதால் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 இடங்களுக்கு மேல் பெறும் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியும். வரவு – செலவுத் திட்டம், இடைக்கால கணக்குகள் உட்பட சில சட்டங்களை நிறைவேற்றவும் மறுசீரமைக்கவும் சாதாரண பெரும்பான்மை போதுமானது. ஆனால், அரசியலமைப்புத் திருத்தங்களைச் செயல்படுத்துவது போன்ற சிறப்பு நோக்கங்களுக்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட அரசாங்கங்கள் அமைந்தன. 2005 இற்கும் 2015 இற்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இயங்கியது. மகிந்த ராஜபக்சவுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்துக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், அவரது அரசாங்கம் 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் மாத்திரமே இயங்கியது. தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாக உள்ளதால் பொதுத் தேர்தலில் பின்னர் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிப்பதற்கான முயற்சிகள் தேர்தலுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. https://akkinikkunchu.com/?p=298145
  5. கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக, மிகப் பிரமாண்டமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரகலய போராட்டத்தில் புலம்பெயர் புலிகளின் தலையீடு இருந்ததாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்துவருகின்றனர். அரகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ச இருக்கவில்லை. எனினும், கட்சியின் அழைப்பின் பிரகாரமே அவர் போட்டியிட்டார். இம்முறை போட்டியிடமாட்டார் என்ற முடிவிலேயே மஹிந்த ராஜபக்ச ஆரம்பம் முதலே இருந்தார். இம்முறை தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கும் முடிவில் நான் இருந்தேன். கட்சி விடுத்த கோரிக்கையால், நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் தேசியப் பட்டியலில் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு 2009ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபக்சக்களின் அரசியலை வீழ்த்துவதற்கு புலம்பெயர் புலிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அரகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அரகலயவில் உண்மையான போராட்டக் காரர்களும் இருந்தனர். ஆனால் ஓர் அங்கமாக சூழ்ச்சித் திட்டமும் இருந்தது – என்றார். (ச) https://newuthayan.com/article/கோத்தாபயவுக்கு_எதிரான_அரகலய_போராட்டத்தின்போது_புலம்பெயர்_புலிகள்_தலையீடு!
  6. அநுர கொண்டு வரவுள்ள அரசமைப்பு ஆபத்தானது; எச்சரிக்கையாக இருக்குமாறு கஜேந்திரகுமார் தெரிவிப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்போவதாகச் சொல்கின்ற புதிய அரசமைப்பு மிகமிக ஆபத்தானது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலை முன்னிட்டு இணுவிலில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஜனாதிபதியாக அநுரகுமார பொறுப்பேற்ற பின்னர், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதியதொரு அரசமைப்புக் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார். மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தை ஓர் அரசமைப்புச் சபையாக மாற்றி புதியதொரு அரசமைப்பை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், அந்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து அரசமைப்பை உருவாக்குவேன் என்றும் அநுர தெரிவித்துள்ளார். ரணில் - மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசமைப்பு ஒற்றையாட்சியை அழுத்தமாக வலியுறுத்தும் வகையில்தான் அமைந்திருந்தது. ஆதலால், அந்த அரசமைப்புத் திட்டங்களை ஜனாதிபதி அநுர தொடர்ச்சியாக முன்னெடுக்கப் போகின்றார் என்றால், அவர் ஒற்றையாட்சி அரசமைப்பையே கொண்டுவரப் போகின்றார் என்று அர்த்தம். அந்த 'ஏக்கிய ராஜ்ஜிய' அரசமைப்பை தமிழர்களும், தமிழ்த் தலைவர்களும் ஏற்கக்கூடாது. மாறாக அந்த அரசமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டால், வரலாற்றில் முதல் தடவையாக தமிழர்கள் ஏற்ற அரசமைப்பு நடமுறைக்கு வரும் என்பதோடு, பின்னர் எக்காலத்திலும் தமிழர்கள் இனப்பிரச்சினை தொடர்பில் பேச முடியாத சூழல் உருவாகும் - என்றார். (ச) https://newuthayan.com/article/அநுர_கொண்டு_வரவுள்ள_அரசமைப்பு_ஆபத்தானது;_எச்சரிக்கையாக_இருக்குமாறு_கஜேந்திரகுமார்_தெரிவிப்பு
  7. டெலிபோன் அணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: தமிழ் மக்களுக்கு மனோ விடுத்த அறிவிப்பு! டெலிபோன் அணிக்குள் இன்று நிகழும் விருப்பு வாக்கு போட்டியை தமிழ் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விசேட தெளிவூட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளை தேடி அலைகிறார்கள். தமது தொகுதி சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அங்கே தாம் இழந்த சிங்கள வாக்குகளை ஈடு செய்ய, தமிழ் விருப்பு வாக்குகளை பெற்று கரையேற தவியாய் தவிக்கிறார்கள். இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை நான் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள விசேட வாக்காளர் தெளிவூட்டல் அறிக்கையில் மேலும் கூறி உள்ளதாவது; கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எமது வேட்பாளராக இருந்து சஜித் பிரேமதாசவுக்கு கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் வெற்றி வாக்குகளை பெற்று கொடுத்தோம். நுவரெலியா மாவட்டத்தை வென்று கொடுத்தோம். இவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாதனை வெற்றிகள். ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு பெற்று பெற முடியாத பல பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், இன்று டெலிபோன் சின்ன வேட்பாளர்களாக, தமிழ் விருப்பு வாக்குகளை தேடி ஓடி வருகிறார்கள். தமிழ் வாக்களர்கள் முன் தோன்றி, தமிழ் மக்கள் மீது திடீர் பாசம் கொண்டு பேசுகிறார்கள். தமிழ் வாக்காளர்களை கண்டு பேசி கட்டி அணைக்க முயல்கிறார்கள். எப்படியாவது கொஞ்சம் தமிழ் விருப்பு வாக்குகளை வாங்கி கரையேற முயல்கிறார்கள். இது என்ன வகையில் நியாயம்? தமிழ் மக்கள் துன்பப்படும் போது, துயரப்படும் போது, கண்ணீர் விடும் போது, சிக்கல்களில் சிக்கி தவிக்கும் போது, அது எமக்கு வலித்தது. தொடர்ந்தும் வலிக்கும். நாம்தாம் அங்கே இருந்தோம். நான்தான் எப்போதும் அங்கே இருந்தேன். இன்று தமிழ் விருப்பு வாக்குகளை தேடி வரும் எவரும் அங்கே இருக்கவில்லை. நாளை அடுத்த பாராளுமன்றத்தில், அனுர நிர்வாகத்துடன் தமிழ் மக்கள் சார்பாக கலந்து உரையாட போவது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களும், எம்பிக்களும் தான். தமிழ் கட்சிகள்தான். வேறு எவரும் கிடையாது. வேறு எவருக்கும் எம்மீது அக்கறை கிடையாது. இதை தமிழ் மக்கள் மிக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வாக்காளர்கள் மீது திடீர் பாசம் காட்டும் இந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களுக்கு, தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தவறி போயும் கொடுத்து விட்டால், களத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி அடைய முடியாமல் போய் விடும். எமக்கு பெரிய அளவில் சிங்கள வாக்குகள் கிடைக்க போவதில்லை. ஆனால், எமது விருப்பு வாக்குகளையும் வாங்கி, அதனுடன் கொஞ்சம் சிங்கள விருப்பு வாக்குகளையும் வாங்கி சேர்த்து, இவர்கள் விருப்பு வாக்கு பட்டியல் வரிசையில் மேலே போய் விடுவார்கள். தமிழ் வாக்குகளை மாத்திரம் பெறுகின்ற நாம், கடைசியில் தெரிவு செய்யப்படும் எம்பீகளை தீர்மானிக்கும் விருப்பு வாக்கு பட்டியல் வரிசையில் பின்தங்கி விடுவோம். ஆகவே, இது எமது விரல்களால், எமது கண்களையே குத்தி கொள்வதாகும். ஆகவே, இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்குதான் தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும். http://www.samakalam.com/டெலிபோன்-அணிக்குள்-விருப/
  8. ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை November 5, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தங்களது தவறான ஆட்சிமுறையினதும் பொருளாதார முகாமைத்துவத்தினதும் விளைவாக தோன்றிய முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் ராஜபக்சாக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தன்னந்தனியான உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பைக் கையளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது வழமையான அரசியல் போக்கில் இருந்து ஒரு விலகலாகும். அவ்வாறு அடிக்கடி நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி அண்மைய எதிர்காலத்தில் முடிவுக்கு வரப்போவதில்லை என்று நம்பும் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் கூட நாட்டை ஆட்சி செய்ய முடியாமல்போகும் பட்சத்தில் தன்னை மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்குமாறு கேட்கக்கூடும் என்ற ஒரு மாயையில் இருக்கிறார் போன்று தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பதவியில் இருந்து இறங்கிய விக்கிரமசிங்க, புதிய ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, “நாமிருவரும் அன்பாக நேசிக்கின்ற இலங்கை என்ற குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். கடந்த இரு வருடங்களாக ஆபத்தான கயிற்றுப் பாலத்தின் மேலாக நீண்ட தூரம் இந்த குழந்தையை பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு வந்து வந்திருக்கிறேன். என்னையும் விட கூடுதலானளவு பாதுகாப்பாக குழந்தையை பாலத்தின் ஊடாக சுமந்து அடுத்த கரைக்கு கொண்டு போய்ச் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார். ஆனால், ஜனாதிபதி திசாநாயக்கவினால் அந்த குழந்தையை அடுத்த கரைக்கு பாதூகாப்பாக தூக்கிக் கொண்டு செல்ல முடியாமல் போகலாம் என்று ஒரு மாதத்துக்குள்ளாகவே முன்னாள் ஜனாதிபதி முடிவுக்கு வந்துவிட்டார் போன்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் விக்கிரமசிங்க தன்னை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து அமைத்த புதிய ஜனநாயக முன்னணிக்காக தீவிரமாக பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். தேர்தல் தோல்விகளினால் துவண்டுபோகாதவர் என்று பெயர் எடுத்த அவர் தனது நிருவாகத்தில் முக்கியமான பதவிகளை வகித்தவர்கள் பொருளாதார விவகாரங்களை கையாளுவதற்கு அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறிவருகிறார். அது மாத்திரமல்ல, நான்கு வருடங்களுக்கு பிறகு வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது அரச வருவாயை அதிகரிப்பதில் சமாளிக்க முடியாத சவாலை ஜனாதிபதி திசாநாயக்க எதிநோக்கப்போகிறார் என்று அபாய அறிவிப்பு செய்யும் முன்னாள் ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தனது முழு பதவிக்காலத்துக்கும் பதவியில் இருக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார். திசாநாயக்க தனது பதவியில் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கமாட்டார் என்ற எண்ணம் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருப்பதனால்தான் அவ்வாறு கூறுகிறார் என்று தோன்றுகிறது. ஆட்சிமுறை அனுபவம் இல்லாத தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வேண்டுமானால் அரசாங்க நிருவாகம் மற்றும் பொருளாதார விவகாரஙகளில் தன்னிடம் ஆலோசனைகளைப் பெறலாம் என்ற தோரணையில் விக்கிரமசிங்க அடிக்கடி கருத்துக்களை வெளியிடுகிறார். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தனது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போது உகந்த நடைமுறைகள் கடைப் பிடிக்கப்படவில்லை என்று புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த விக்கிரமசிங்க வேண்டுமானால் அவருக்கு அரசியலமைப்பை கற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், 17 தடவைகள் மக்களினால் நிராகரிக்கப்படட அவரிடமிருந்து ஒருபோதும் ஆலோசைகைளைப் பெறப்போவதில்லை என்று பிரதமர் அவமதிப்பாக பதிலளித்திருக்கிறார். அதேவேளை, தன்னால் நாட்டை ஆட்சிசெய்ய முடியாமல்போகும் என்று நினைத்தால் இரு வருடங்களில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிவிடப்போவதாக திசாநாயக்க எங்கோ கூறியதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள், தேவை ஏற்படுமானால் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பது அவசியம் என்று கூறி தங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் பயணிக்கும் பாதையை நோக்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து நாளடைவில் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்று விக்கிரமசிங்கவும் கடந்த வாரம் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கூறினார். தங்களுக்கு அமோகமாக வாக்களித்து அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆணையைத் தருமாறுதான் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் மக்களை கேட்பது உலக வழமை. ஆனால் இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு தங்களை தெரிவு செய்யுமாறு கேட்கும் ஒரு விசித்திரமான போக்கை காண்கிறோம். விக்கிரமசிங்கவை மீண்டும் தீவிர அரசியலுக்கு கொண்டு வருவது குறித்து எந்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியை நடத்தமுடியாமல்போகும் பட்சத்தில் விக்கிரமசிங்கவின் சேவையை மக்கள் விரும்பக்கூடும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினருமான ருவான் விஜேவர்தன கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். பொருளாதார முனையில் பெரும் நெருக்கடியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்குகிறது என்று குறிப்பிட்ட விஜேவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்குமாறு விக்கிரமசிங்கவை மக்கள் கேட்கக்கூடும் என்றும் கூறினார். முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவும் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் மக்கள் விக்கிரமசிங்கவை நோக்கி திரும்பக்கூடும் என்று கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர்கள் மக்நாட்டில் கூறினார். புதிய ஜனநாயக முன்னணி கண்டியில் நடத்திய மக்கள் சந்திப்பு ஒன்றில் “எழுதிவைத்துக் கொள்ளுங்கள் இன்னூம் ஆறு மாதங்களில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவார்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரான அநுராத ஜெயரத்ன கூறினார். பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது எந்த அரசாங்கமும் பதவி விலகி ஆட்சிப் பொறுப்பை உடடினயாகவே ஒப்படைக்கக்கூடிய ஒருவராக இவர்கள் எல்லோரும் விக்கிரமசிங்கவை காட்சிப்படுத்தி தங்களுக்கு வாக்கு கேட்கும் புதுமையான ஒரு நிலைவரத்தை காண்கிறோம். புதிய பாராளுமன்றத்தில் “விளையாட்டைக் காட்டுவதற்கு” தங்களுக்கு நாற்பது ஆசனங்கள் மாத்திரமே தேவை என்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு தேவை ஏற்படுமேயானால் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதே தங்களது நோக்கம் என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் சில அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளில் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ராஜபக்சாக்கள் விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பை கையளித்த ஒரு அரிதான அரசியல் நிகழ்வை வைத்துக்கொண்டு மீண்டும் அவ்வாறு இடம்பெற முடியும் என்ற கற்பனையில் தங்களது அரசியல் வியூகங்களை இந்த அரசியல்வாதிகள் அப்பாவித்தனமாக வகுக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியினால் ஐந்து வருடங்களுக்கு முழுமையாக ஆட்சி செய்ய முடியாது என்ற தங்களது மனதுக்கு பிடித்த விருப்பத்தின் அடிப்படையில் மாத்திரம் இவர்கள் சிந்தனையை பறக்கவிட்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் அரசியலுக்கு புதியவர்கள் என்பதால் நாடு எதிர்நோக்கும் பாரதூரமான பொருளாதாரப் பிரச்சினையை கையாளுவதற்கு அனுபவமுடையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு மக்களை கேட்கும் இந்த எதிரணி அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் தவறான முறையில் ஆட்சி நடத்திய ஜனாதிபதிகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டாம் என்று மக்களை கேட்கின்ற அதேவேளை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் பாராளுமன்றத்தை தங்களது கட்சியின் பிரதிநிதிகளினால் நிரப்புமாறு அறைகூவல் விடுக்கிறார்கள். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியே தேவையில்லை என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு தினமான நவம்பர் 14 ஆம் திகதியை புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை துப்புரவு செய்யும் சிரமதான தினம் என்று ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதி கூறுகிறார். எதிர்க்கட்சியே தேவையில்லை என்ற அவரின் கருத்து உண்மையில் ஜனநாயக விரோதமானது. ஆனால் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் திசாநாயக்கவின் ஒரு மாத கால நிருவாகத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையைக் கொண்டுவரப்போவதாககூட உதய கம்மன்பில் கூறுகிறார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு கொடுப்பது ஆபத்தானது என்று மக்களை அவர்கள் எச்சரிக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமையலாம் என்று மதிப்பிடு செய்யும் எதிரணி அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றுவது சாத்தியமில்லை என்றும் ஒரு ‘ தொங்கு ‘ பாராளுமன்றமே தெரிவாகும் என்றும் கூறுகிறார்கள். அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கும் ஏனைய கட்சிகள் சகலதிற்கும் தலா 15 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றதை தங்களது வாதத்திற்கு சான்றாக அவர்கள் முன்வைக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பலம்பொருந்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஆணை தருமாறு ஜனாதிபதி திசாநாயக்க மக்களை கேட்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பெருமளவில் ஆதரவை வழங்குவதே இதுகாலவரையான அரசியல் போக்காக இருந்து வந்திருக்கிறது. இந்த தடவையும் அதுவும் குறிப்பாக பழைய பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்து திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்கள் அந்த போக்கில் இருந்து மாறுபடுவதற்கு வாய்ப்பில்லை. என்றே தோன்றுகிறது. புதிய ஜனாதிபதி தனது நிலையை வலுப்படுத்தி ஆட்சியை தொடருவதற்கு மக்கள் வாய்ப்பைக் கொடுப்பார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திசாநாயக்கவின் அரசாங்கம் நின்று பிடிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று அபாயச்சங்கு ஊதிக் கொண்டிருக்கிறாகள். அவர் தற்போது அமைத்திருப்பது மூன்று அமைச்சர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அல்லது காபந்து அரசாங்கமேயாகும். அதுவே உலகில் மிகவும் சிறிய அமைச்சரவையாகும். அவரைப் போன்று பதவிக்கு வந்த ஒரு மாதகாலத்திற்குள் பெருமளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கும் அரசியல் நெருக்குதல்களுக்கும் முகங்கொடுத்த அனுபவம் வேறு எந்த முன்னாள் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டதில்லை. பொருட்களை பெறுவதற்கு மக்கள் நீண்டவரிசைகளில் காத்துநிற்கும் யுகம் மீண்டும் விரைவில் தோன்றப் போகிறது என்றும் இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதற்கு தீட்டப்பட்டதாக கூறப்படும் திட்டம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படப்போகிறது என்றும் பூச்சாண்டி காட்டும் வேலைகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியிருக்கின்றன. தனது அரசாங்கம் பலவீனமானதாக இருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தேர்தல் பிரசாரங்களில் பதிலளிக்கும் ஜனாதிபதி திசாநாயக்க ஒரு சில நிறுவனங்களில் மாத்திரமே தாங்கள் இதுவரையில் அதிகாரத்தை உறுதிப் படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். ” ஜனாதிபதி பதவி, அமைச்சரவை, பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் உறுதியான அதிகாரம் உறுதிப்படுத்தப்படும் போதுதான் அரசியல் அதிகாரம் நிலை நிறுத்தப்படும். தற்போது ஜனாதிபதியுடன் மிகவும் சிறிய அமைச்சரவையே இருக்கிறது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது. மாகாணசபைகள் பல வருடங்களாக இயங்கவில்லை. நாம் பதவிக்கு வந்து ஒரு மாதத்துக்கும் சற்று கூடுதலான காலமே கடந்திருக்கிறது. சில ஊடக நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் எம்மிடம் பலம்பொருந்திய அரசியல் அதிகாரம் இல்லாத நிலையில் நாட்டில் உறுதிப்பாடின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் ” என்று அவர் குற்றஞ் சாட்டியிருக்கிறார். ஜனாதிபதியையும் தேசிய மக்கள் சக்தியையும் தாக்குவதற்கு பொருளாதாரப் நெருக்கடி, விலைவாசி உயர்வு, அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்த பிரச்சினைகள் உருவாகுவதற்கு தேசிய மக்கள் சக்தி அல்ல ஜனாதிபதியை குற்றஞ் சாட்டுகிறவர்களே பெருமளவுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். புதிய ஜனாதிபதி தனது நிலையை வலுப்படுத்தி அதிகாரத்தில் ஒழுங்காக அமருவதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக தீவிரப்படுத்தப்படும் பிரசாரங்கள் சாமானியன் ஒருவன் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதை பழைய அரசியல் அதிகார வர்க்கத்தினால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. ஆட்சிமுறை அனுபவக் குறைவு பற்றிய விமர்சனங்கள் எல்லாம் இதன் பிரதிபலிப்பேயாகும். தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அதிகாரப்பரவலாக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அந்த கட்சி உறுதியான ஒரு அரசாங்கத்தை அமைக்க அனுமதித்து திசாநாயக்கவின் தலைமையில் அது நாட்டை நிருவகிப்பதற்கு ஒரு கணிசமான கால அவகாசத்தை வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பிறகு அவர்களது ஆட்சி பற்றிய விமர்சனங்களை செய்வதே முறையானதாகும். பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்துக்கு சேவை செய்த பழைய அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு முறைமை மாற்றத்தை அல்லது ஊழலற்ற நிருவாகத்தை நடத்துவதில் உள்ள அடிப்படைச் சிக்கல்களை குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி திசாநாயக்க நன்றாக விளங்கிக் கொண்டிருப்பார். எது எவ்வாறிருந்தாலும், நடைமுறைச் சாத்தியமற்ற பெருவாரியான வாக்குறுதிகளை வழங்கிய அவர் அதன் விளைவான நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கவேண்டியே இருக்கும் என்பது நிச்சயம். பாராளுமன்றத்தில் ஒரு கணிசமான ஆசனங்களைப் பெற்று அவருக்கு நெருக்குதல்களை கொடுத்து ஆட்சி செய்யவிடாமல் குழப்பியடிப்பதற்கே எதிர்க்கட்சிகள் நோக்கம் கொண்டிருக்கின்றன எனபதை அவற்றின் தற்போதைய அணுகுமுறைகள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. (ஈழநாடு ) https://arangamnews.com/?p=11405
  9. இந்து கோவிலை தாக்கிய கும்பலில் இருந்த கனடா போலீஸ்… காட்டிக் கொடுத்த வீடியோ! Kumaresan MNov 05, 2024 11:34AM கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது, அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கனடா போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கனடாவில் டொரான்டோவில் இருந்து 50 கி.மீ தொலைவில் பிராம்ப்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஹிந்து சபா மந்திர் என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், கனடாவிலும் குறிப்பாக சீக்கியர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்து கோவில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனடா மக்களும் தங்களது மதத்தை பின்பற்ற சுதந்திரம் உண்டு என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கனடா நாட்டு போலீசில் பணி புரியும் ஹரீந்தர் ஷோகி என்பவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது பரவிய வீடியோவில் தெரிய வந்தது. கையில் காலிஸ்தான் கொடி ஏந்தி இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அவர் போலீஸ் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டம் நடந்த நேரத்தில் ஹரீந்தர் ஷோகி விடுமுறையில் இருந்துள்ளார். https://minnambalam.com/india-news/canadian-cop-suspended-for-attending-pro-khalistan-protest/
  10. அரசாங்கம் 100 பில்லியன் ரூபாவை அச்சடித்ததா?: செய்தியின் உண்மைத்தன்மை என்ன ? எனினும் இந்த செய்தியில் உண்மை இல்லை என்பதையும் தவறாக மக்களை வழிநடத்தும் விதத்தில் இவ்வாறான போலிச்செய்திகள் பகிரப்படுவதாகவும் அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன தெரிவித்துள்ளன. ஆகவே, இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker அவதானம் செலுத்தியதுடன், சமூகத்தில் எழுந்துள்ள கேள்விக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பணம் அச்சடிக்கப்பட்டதாக கூறும் செய்தியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடிவு செய்தது. இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக அக்டோபர் 27, 2024 அன்று, economynext தனது இணையதளத்தில் “திறந்த சந்தைச் செயல்பாடுகள் மூலம் ரூ100 பில்லியன் அச்சிடுகிறது” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது. அதில், இலங்கை மத்திய வங்கி ஒரு இரவு ஏலத்தில் 36.16 பில்லியன் ரூபாவையும், ஏழு நாள் ஏலத்தில் 70 பில்லியன் ரூபாவையும் வங்கிக் கட்டமைப்பிற்கு வழங்கியதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தக் கட்டுரைக்கு அமைய, அக்டோபர் 25 வரை, மத்திய வங்கியின் நிலையான வசதிகளில் வைப்பு செய்யப்பட்ட அதிகப்படியான பணப்புழக்கம் 193.4 பில்லியன் ரூபாயாக இருந்ததாகவும் (ஒரு மாதத்திற்கு முன்பு 138 பில்லியன் ரூபாயாக இருந்தது) தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டதுடன் அதுவே ஊடகங்களில் செய்தியாக வெளியாகின. மத்திய வங்கி குறுகிய கால பணத்தை திரட்டும் பொறிமுறையாக கால ஏலம் மற்றும் ஒரே இரவில் ஏலம் மூலம் பணத்தை அச்சிட்டுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி அக்டோபர் 25, 2024 அன்று (வெள்ளிக்கிழமை) ஒரே இரவில் ஏலத்தின் மூலம் 36.16 பில்லியன் தொகை நாட்டின் நாணய அமைப்பிற்குள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தின் கடைசி 7 நாட்கள் கால ஏலத்தின் மூலம் மத்திய வங்கியால் அச்சடிக்கப்பட்ட தொகை 70 கோடி ரூபா என்றும் அவரது அறிக்கையில் கூறப்படுகிறது. இந்த அரசாங்கம் பணம் அச்சடித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஊடகங்கள் முன்னிலையில் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். நாணயம் அச்சிடல் என்றால் என்ன? நாணயம் அச்சிடல் என்பதன் பொதுவான அர்த்தம் பொருளாதாரத்திற்கு புதிய பணத்தை வழங்குவதாகும் என்பதுடன் பொருளியல் சொல்லாடலில் மத்திய வங்கியொன்றின் மூலம் வழங்கப்படுகின்ற புதிய பணம் ‘ஒதுக்குப் பணம்’ அல்லது ‘தளப் பணம்’ என அறியப்படுகின்றது. பணம் அச்சிடல் செயல்முறை 3 வழிமுறைகளில் நடைபெறுகிறது. முதல் வழிமுறை: மத்திய வங்கியே கருவூலப் பத்திரங்களை வாங்குகிறது. செப்டம்பர் 2023 முதல் நடைமுறைக்கு வந்த 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம், அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்காக முதன்மை சந்தையில் அரசாங்கப் பத்திரங்களை கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தை அச்சிடுவதை இலங்கை மத்திய வங்கி தடை செய்துள்ளது. அதாவது மத்திய வங்கி இனி நேரடியாக அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை பணத்தை அச்சிடுவதன் மூலம் நிதியளிக்க முடியாது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியானது திறந்த சந்தை செயற்பாடுகள் மூலம் இன்னமும் பணப்புழக்கத்தை பொருளாதாரத்தில் செலுத்த முடியும். திறந்த சந்தை செயல்பாடுகள் இரண்டாம் நிலை சந்தையில் அரசாங்க பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பதை உள்ளடக்கியது, அவை வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும் குறுகிய கால வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட இலங்கை மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட முடியாது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள அரச பத்திரங்களின் முகமதிப்பு மாறாமல் இருப்பதன் மூலம் தற்போது மத்திய வங்கி இவ்வாறான நாணயத் தாள்களை அச்சிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வழிமுறை: வெளிநாட்டு இருப்புக்களை உருவாக்க வங்கிகள் வைத்திருக்கும் டொலர்களை மத்திய வங்கி பெற்றுக்கொள்ளும் முறைமை. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள வெளிநாட்டு கையிருப்பு தொகை அதிகரித்துள்ளதாக தகவல்கள் எதுவும் இல்லாததால், அதற்கான பணம் அச்சிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும். மூன்றாவது வழிமுறை: தினசரி வங்கிப் பரிவர்த்தனைகளில் குறுகிய கால பணப்புழக்கத்திற்காக கணினியில் பணத்தை குறுகிய கால வெளியீடு இலங்கை மத்திய வங்கி தற்போது திறந்த சந்தை நடவடிக்கைகளின் ஊடாக பணப்புழக்கத்தை வழங்குவதற்கு செயற்படுவதை அவதானிக்க முடிந்தது. FactSeeker இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ‘திறந்த சந்தை தொழிற்பாடுகள்’ என்பதன் கீழ் ‘நாளாந்த தொழிற்பாடுகள்’ மற்றும் மீள் கொள்வனவு / நேர்மாற்று மீள் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள்’ ஆகியவற்றைச் சரிபார்த்தபோது எகானமிநெக்ஸ்ட் மற்றும் ரோஹினி விஜேரத்ன கவிரத்ன வழங்கிய புள்ளிவிவரங்கள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்தியது. ஒக்டோபர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கம் பணம் சம்பாதித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தெரிவித்தார். அதன் பின்னர், இலங்கை மத்திய வங்கி இது குறித்து தமது பக்க தெளிவுபடுத்தலை 2024.10.29 அன்று ஊடக அறிக்கை மூலமாக வெளியிட்டது. அதில், 2024 காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையில் நிலவிய மிகைகளுக்கு மத்தியில் விடாப்பிடியான திரவத்தன்மை சமச்சீரின்மை காரணமாக இலங்கை மத்திய வங்கி அடிக்கடி திரவத்தன்மை உட்செலுத்தல்களை மேற்கொண்டது எனவும், பணச் சந்தை மிகையான திரவத்தன்மையுடன் தொழிற்பட்ட போதிலும், இம் மிகைகள் வர்த்தக வங்கிகளுக்கிடையில் ஒழுங்கற்று பரம்பியிருந்து, பொருளாதார நடவடிக்கையின் மூலமாக விளங்குகின்ற வாடிக்கையாளர்களுககான கடன்வழங்கல் உள்ளடங்கலாக உள்நாட்டு வங்கிகளின் நாளாந்தத் தொழிற்பாடுகளுக்கு அவற்றுக்கு திரவத்தன்மைத் தேவைகளைத் தோற்றுவித்தன. நாட்டுக்கான கொடுகடன் தரப்படுத்தல் தரங்குறைக்கப்பட்டதன் பின்னர் வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு கண்டிப்பான கடனளவு வரையறைகள் காரணமாக சில வர்த்தக வங்கிகள் கடுமையான திரவத்தன்மைப் பற்றாக்குறைகளை எதிர்கொண்டன. இலங்கையில் தொழிற்படுகின்ற வெளிநாட்டு வங்கிகள் மூலமான பணச் சந்தைக் கடன் வழங்கலானது கண்டிப்பான கடனளவு வரையறைகளை காரணமாக அவ்வங்கிகளின் குறிப்பிடத்தக்க திரவத்தன்மை மிகைகளுக்கு மத்தியிலும் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டே காணப்பட்டது. ஆகையினால், இலங்கை மத்திய வங்கியின் திரவத்தன்மை உட்செலுத்தல்கள் இப்பற்றாக்குறைகளைத் தீர்த்து குறுகிய கால வட்டி வீதங்கள், விசேடமாக அழைப்புப் பண வீதங்கள் நிலையுறுதியாகக் காணப்படுகின்றது என்பதை உறுதிசெய்தன. இலங்கை மத்திய வங்கி அதன் கிரமமான திறந்த சந்தை தொழிற்பாடுகளின் பாகமொன்றாக அதன் மூலம் கொண்டு நடாத்தப்படுகின்ற ஏலங்களினதும் நாணயத் தொழிற்பாடுகளினதும் விபரங்களை உள்ளடக்கியுள்ளன. ஆகையினால், அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு பணம் அச்சிடலோ அல்லது முறையற்ற திரவத்தன்மை வழங்கலோ இடம்பெறவில்லை. இந்நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியின் விலை நிலையுறுதிக் குறிக்கோளை அடைவதை நோக்காகக் கொண்ட நாணயத் தொழிற்பாடுகளின் நியமச் செயன்முறையின் பாகமொன்றாகும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கி ஒரே ஏலத்தின் மூலம் 36.16 பில்லியன் ரூபாவையும், 7 நாள் ஏலத்தின் மூலம் 70 பில்லியன் ரூபாவையும் பணப்புழக்கப் பற்றாக்குறையைக் கணக்கிட்டு விடுவித்துள்ளதாக FactSeeker உறுதிப்படுத்துகிறது. நன்றி – FactSeeker https://akkinikkunchu.com/?p=298064
  11. கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமர் ஹரினியிடம் மகஜர் கையளிப்பு! முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கடந்தமாதம் மகஜரினை ஒப்படைத்திருந்தனர். அதனையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் புதுக்குடியிருப்பு தனியார் பேருந்து நிலைய வளாகத்தினுள் இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து கொண்ட நிலையில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு சார்பான குழுவினால் இன்றையதினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்திருந்தனர். https://akkinikkunchu.com/?p=298045
  12. தமிழ் மக்களுக்கு தீர்வைத் தாருங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகள் வரும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊழல் ஒழிப்பிற்கும் இலஞ்ச ஒழிப்பிற்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் ஆதரவளிப்பதை தென்னிலங்கை அரசியல் சமூகம் பார்த்துக்கொள்ளட்டும். நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கக்கூடிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் தனக்கும் விருப்பு இலக்கம் 1இல் வாக்களிக்குமாறும் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த அவர் தொடர்ந்தும் பேசுகையில், இலங்கையில் ஏறத்தாழ 35 வருடம் உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமான இராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன . இதில் இராணுவ தரப்பிலும் போராளிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலுமாக பல இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தது. கடந்த 35 வருட காலத்தில் இந்த நாடு பாரிய அழிவுகளைச் சந்தித்தது மாத்திரமல்லாமல் பாரிய பொருளாதாரப் பின்னடைவுகளையும் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் சிங்கள மக்கள் கிளர்ந்தெழாதவாறு அவர்களின் கைகளையும் வாயையும் கட்டிப்போட்டிருந்தனர். இப்பொழுது இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம்கோடி கடன்கள் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதே அளவு கடன்கள் உள்நாட்டிலும் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் முன்னர் இருந்த ஆட்சியாளர்களும்சரி இப்பொழுது வந்திருப்பவர்களும் சரி இந்தப் பொருளாதார பின்னடைவுகளுக்கான சரியான மூலம் எதுவென்பதை வெளியில் சொல்வதற்கு இன்னமும் தயாராகவில்லை. இப்பொழுது வந்திருக்கக்கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய மக்கள் சக்தி என்றிருக்கக்கூடிய ஜனதா விமுக்தி பெரமுனவின் கூட்டணயில் உள்ளவர்களும் இந்த நாட்டில் ஊழல், இலஞ்சம், நிர்வாக சீர்கேடுகள்,வீண்விரயச் செலவுகள் இவைகள்தான் இந்த வங்குரோத்து நிலைக்குக் காரணம் எனக்கூறி உண்மையைப் பூசிமெழுக முற்படுகின்றனர். ஊழல், இலஞ்சம், நிர்வாக சீர்கேடுகள் போன்றவற்றிற்கு முழுமையான காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் கடந்த காலங்களில் ஆட்சி செய்த சிங்கள அரசாங்கங்களும் அவர்களின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளும்தான். தமிழ் மக்களுக்கு அரசாட்சியும் கிடையாது. நிர்வாகமும் கிடையாது. வடக்கு-கிழக்கிலுள்ள நிர்வாகங்களும் கொழும்பினாலேயே ஆட்டிப்படைக்கப்படுகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் கைகளில் அதிகாரங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் முன்னைய அரசாங்கங்களும் சரி இப்பொழுது வந்திருப்பவர்களும்சரி தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவதில் பின்நிற்கிறார்கள். இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எமக்கான ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுகின்றபொழுது புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பல்லாயிரம்கோடி முதலீடுகள் வருவதுடன் எமது அண்டை நாடான இந்தியா குறிப்பாக தமிழகத்து தொழிலதிபர்களும் கூட இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். அதன் மூலம் ஏற்படுகின்ற வடக்கு கிழக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கைக்கும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். தொழிற்சாலைகள் அதிகரிக்கும். தொழில்நுட்பக் கல்வி உட்பட கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஆகவே இப்பொழுது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியும் வரவிருக்கின்ற புதிய அரசாங்கமும் இவற்றை ஆழமாக ஆலோசித்து தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும். இந்த விடயங்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்துடன் பேசக்கூடிய வல்லமையுள்ள இவைபற்றி தெளிவான சிந்தனையுள்ள சரியான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பவேண்டும். அதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதிகளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=298032
  13. 13 ஐ நடைமுறைப்படுத்த 3 வழிமுறைகள் உண்டு; ஈ.பி.டி.பி.செயலாளர் டக்ளஸ் மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் என்று புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரவுக்கும் இந்திய தூதர் வலியுறுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வழிமுறையை நோக்கி வலுப்பெற்று சென்ற நிலையில் 1987 களில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை என்ற சிறந்த ஒரு தீர்வு கிடைத்தது. இது தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என உணர்ந்துகொண்ட நாம் அதை ஏற்றுக்கொண்டதுடன் தொடர்ந்தும் ஆயுத வழிமுறையை நோக்கி தமிழ் மக்கள் நகர்ந்து சென்றால் அது பேரழிவையே ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தியிருந்தோம். எமது இந்த தீர்க்கதரிசனம் மிக்க கருத்தை அன்றைய காலத்தில் இருந்த இதர போராட்ட அமைப்புகளும்,தமிழ் அரசியல்வாதிகளும் தமது சுயநலன்களுக்காக ஏற்றுக்கொள்ளாதிருந்தனர்.அத்துடன் 13 ஐ தொட்டுக் கூட பார்க்கமாட்டோம் என முழக்கமிட்டும் திரிந்தனர். இதன் விளைவுகள் முள்ளிவாய்க்கால் என்னும் யுத்த முனையில் முடிவுற்று அதன் வலிகளை தமிழ் மக்களே சுமக்க நேரிட்டது. ஆனால் இன்று நாம் கூறிய அந்த வழிமுறையே சாத்தியமானதென நிரூபாணமாகியுள்ளது. அதுமட்டுமல்லாது தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் செய்துவந்தால் இருப்பதையும் இழக்க நேரிடும் என்ற எமது கருத்தையும் ஏனைய தமிழ் தரப்பினர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கும் வந்துவிட்டதை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதை இலக்காக கொண்டதாகவே எமது கட்சியின் நிலைப்பாடு இருக்கின்றது. நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்துதான் நாம் குறிப்பாக 13 ஆம் திருத்தத்தினை மூன்று கட்டங்களாக அமுல் படுத்துவதன் ஊடாக முழுமையாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம். அதில் முதலாவது கட்டமாக, நிறைவேற்று செயற்பாடுகள் ஊடாகவும் நிர்வாக செயற்பாடுகள் ஊடாகவும் மாகாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட விடயங்களை மீளக் கையளிப்பது. இதனை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும். இதை ஜனாதிபதியாக உள்ளவர் சிரித்துக்கொண்டோ அல்லது இறுகிய முகத்துடனோ கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தலாம். இரண்டாவது, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட முன்னர் நடைமுறையில் இருந்த சில சட்ட ஏற்பாடுகளுக்கும் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட சில விடயங்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளில் கணிசமானவற்றை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை ஊடாக திருத்திக் கொள்ள முடியும். மூன்றாவது கட்டமாக, அரசியலமைப்பில் அடிப்படையில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திப்பது என வகைப்படுத்தி இருக்கின்றோம். இதை எமது கட்சி அன்றிலிருந்து இன்றுவரை எடுத்துக் கூறி வருகின்றது.அத்துடன் எமது கட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையினூடான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அதனூடாக எமது பொறிமுறையை நகர்த்தி வெற்றியும் கண்டுள்ளது. இதனால் தமிழ் மக்களும் சுயலாப போலித் தேசிய அரசியலை தூக்கி எறிந்துவிட்டு யதார்த்த பூர்வமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டனர். அதன் வெளிப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பக்கம் மக்கள் தமது வாக்களூடாக அரசியல் பலத்தை வழங்குவார்கள் என நம்புகின்றேன் என்றார். https://akkinikkunchu.com/?p=298028
  14. ஆலயம் தாக்கப்படவில்லை. ஆனால் ஆலயத்திற்கு சென்றோர் தாக்கப்பட்டுள்ளனர்.. மோசமான வன்முறைக் கலாச்சாரத்தை கனடிய மண்ணில் வளரவிடக்கூடாது. கனடாவில் ஹிந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் November 4, 2024 கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் இருக்கும் இந்து சபா கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை ‘சகிக்க முடியாதது’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் அவர் வெளியிட்ட பதிவில், “பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை சகிக்க முடியாதது. அனைத்து கனடா மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்விலும் சமூகத்தின் பாதுகாப்பிலும் விழிப்புடன் செயல்பட்ட பீல் பிராந்திய காவல்துறைக்கு (Peel Regional Police) எனது பாராட்டுக்கள்,” எனத் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/கனடாவில்-ஹிந்து-கோவிலுக்/
  15. அமரன்: ஒற்றைக் கதையாடலின் ஆபத்து இளங்கோ டிசே (முகநூலில் இருந்து) ************************ நான் அமரன் திரைப்படத்தின் கதைக்களத்துக்குள் போக விரும்பவில்லை. அது ஒரு உண்மையான மனிதனின் வாழ்க்கையைப் புனைவாகச் சொல்கின்ற திரைப்படம். எந்த ஒருவரினதும் இழப்பு என்பது துயரமானதே. அதுவும் இளம் வயது சடும் மரணமாயின், அவர்களைச் சுற்றியிருப்பவர்க்கு மனவடுக்களை நீண்டகாலத்துக் கொடுக்கக்கூடியது. அந்தவகையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தின் பாதிப்பை நாம் எந்தவகையில் மறுக்கமுடியாது. ஆனால் 'அமரன்' திரைப்படத்தின் சிக்கல் என்னவென்றால் அது சாகசம் என்கின்ற பெயரில் இந்திய இராணுவத்தையும், இந்திய தேசப்பற்றையும் glorify செய்வதாகும். அப்படி மிகைப்படுத்தி மேன்மைப்படுத்துவதும்போது அது தன்னளவில் நின்று செய்யாமல், மற்றமையைக் கட்டியமைத்து அந்த மற்றமையை மிக மோசமான/கேவலமான எதிரிகளாகக் கட்டியமைப்பதாகும். இன்றைக்கு இந்தியாவில் (இலங்கையில் எப்போதும்) சிறுபான்மையினர் மீது அளவுக்கதிகமான வெறுப்பு எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்துக்கள் X முஸ்லிம்கள் என்கின்ற துவிதநிலைப் பிரிவினைகள் மிக மோசமாகக் கட்டியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் ஒரு இராணுவ வீரனின் தேசப்பற்றை காஷ்மீர் முஸ்லிம்கள் என்கின்ற மற்றமையை மிக மோசமாகச் சித்தரிப்பதன் மூலம் 'அமரன்' கட்டியமைப்பதே இங்கே சிக்கலாகின்றது. இனி முகுந்த் வரதராஜன் என்ற ஒரு இராணுவ மேஜரையும், அவரின் சாகசத்தையும், இழப்பையும் ஒருபுறம் வைத்துவிட்டு சிலவற்றை யோசித்துப் பார்ப்போம். எந்த நாட்டிலும் இராணுவம் என்பது அதிகார மையத்தின் உச்சியில் நின்று இயங்குவது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் பல நாடுகளில் அரசியல் தளம்பல்கள் நிகழும்போது இராணுவமே ஆட்சியைக் கவிழ்த்து அரசாள்வதை -முக்கியமாக நமது தென்னாசியா/தெற்கிழக்காசியா நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது அறிந்துகொள்ளலாம். அந்தவளவுக்கு அவர்களிடம் அதிகாரம் மிகுந்து இருக்கின்றது. எந்தவகை அதிகாரம் என்றாலும் அது மிகப்பெரும் துஷ்பிரயோகத்துக்கு இட்டுச் செல்லும் என்றாலும், ஆயுதங்கள் தாங்கும் ஓர் அமைப்பான இராணுவத்துக்கு அது இன்னும் பிறரை ஒடுக்கின்ற சக்தியை எளிதாகக் கொடுத்து விடுகின்றது. எனவே அந்த அதிகார மையத்தை தேசத்தை ஒன்றிணைக்கும் புள்ளியாக, தியாகிகளாக மட்டும் உருப்பெருக்கும்போதே சிக்கல்கள் வருகின்றன. அவ்வாறு அவர்கள் தேசப்பக்தியாளர்களாகவும், தியாகிகளாகவும் கட்டமைக்கும்போது அவர்களின் துஷ்பிரயோகம் பேசப்படாது போகின்றது. இங்கே அமரன் ஒற்றைக் கதையாடலை மட்டும் (Singular Narratives) முன்வைப்பதால்தான் இதைப் பேசவேண்டியிருக்கின்றது. ஒற்றைக் கதையாடல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சிமாண்டா அடிச்சியின் 'The Danger of a Single Story' உரையை வாசிப்பதன் மூலம் நாமின்னும் அறிந்து கொள்ளலாம். 'அமரன்' இந்திய இராணுவத்தினன் ஒருவனினது சாகசத்தையும் தியாகத்தையும் காட்டுவதற்கு காஷ்மீரின் சுயநிர்யண உரிமைகளுக்காகப் போராடுபவர்களை மட்டுமில்லை, இந்தியா-பாகிஸ்தான் அரசியல் சூதாட்டத்தில் பங்குபெறாத மக்களையும் எதிரிகளாகக் கட்டியமைக்கின்றது. இதைத்தான் சிமாண்டா அடிச்சி ஒற்றைக் கதையை (மட்டும்) சொல்வதால் வரும் ஆபத்து என்கின்றார். எப்படி வெள்ளையின ஐரோப்பா உலகம் ஆபிரிக்காவைச் சார்ந்தவர்களை ஒற்றைக் கதையாடல் மூலம் அவர்களின் தனித்துவங்களை அழித்து தனக்கான வரலாற்றை எழுதிக் கொண்டதோ அவ்வாறே அமரன் இந்திய இராணுவத்தின் சாகசத்தின் மூலம் மற்றமைகளை மூடி மறைத்திருக்கின்றது. உண்மையிலே இந்திய இராணுவம் இவ்வளவு புனிதமானதா? என்பதை நாம் கடந்தகாலத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டால், இப்படி அமரனில் கட்டியமைக்கப்படும் விம்பம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. மேலும் இங்கே இராணுவத்தினன் நாட்டுக்காக துச்சமாக மதிப்பவன் என்று புனிதமாக, தியாகியாக கட்டியமைத்தாலும் அவர்களும் அதைச் சம்பளம் பெறும் ஒரு அரச உத்தியோகத்தனாகவே இருக்கின்றார்கள் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். எந்த ஒருவரும் நாட்டுக்காக, தாம் நம்புக் கொள்கைக்காக volunteer ஆகவோ தேசப்பக்தியின் நிமித்தமோ மட்டும் செல்வதில்லை. அந்தவகையில் பார்த்தால் போராளிகளோ அல்லது 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்படுபவர்களோ இந்த 'சம்பளம்' இல்லாது தன்னார்வளாகப் போகின்றவர்களாக, இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெந்தத் தேர்வும் இல்லை என்ற நிலையில் போகின்றார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் அல்லவா இந்த 'சம்பளம்' பெறும் இராணுவத்தை விட மிகப்பெரும் தியாகிகளாக இருப்பார்கள்? மேலும் இந்திய இராணுவம் தனது நாட்டில் அரசியல் சிக்கல்கள் இருக்கும் காஷ்மீர்/அஸாம்/மணிப்பூர் போன்ற இடங்களில் மட்டுமில்லை, பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினையின்போதும், ஏன் வீரப்பன் வேட்டை என்கின்றபெயரில் அதிரடிப்படையினராக தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் செய்த அட்டூழியங்களும் மிக விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கே இந்திய இராணுவம் இலங்கை, சூடான் (ஐ.நா.அமைதிப்படை) போன்ற பிற நாடுகளில் செய்த 'நல்ல விடயங்களை' பட்டியலிடப்போவதில்லை. இந்த விடயங்களை எல்லாம் அமரன் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பின்னணியோடு ஒருவர் 'அமரனை'ப் பார்த்தால் இதில் கட்டியமைக்கப்படும் தேசப்பற்றும், புனிதமும் அவ்வளவு உண்மையல்ல என்பது புரிந்துவிடும். மேலும் காஷ்மீரிகளில் பெரும்பான்மையினர் இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், ஆங்கிலேயர் வரமுன்னர் எப்படி இருந்தோமோ அப்படி அல்லது அதற்கு நிகரான சுயநிர்ணயமுள்ள மாகாணமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். ஆனால் 'அமரன்' கட்டியமைப்பதோ, அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானின் செல்வாக்குக்கு உட்பட்ட 'பயங்கரவாதி'கள். ஆகவே அவர்கள் மிக மோசமாக அடக்கியொடுக்க வேண்டியவர்கள். இந்திய இராணுவம் செய்யும் ஒவ்வொரு தாக்குதல்களிலும் மக்கள் ஒன்றுகூடுகின்றார்கள். கற்களை எறிகின்றார்கள். ஆனால் இந்திய இராணுவம் ஒன்றுமே அவர்கள் மீது செய்யாத அப்பாவி/அருமையான இராணுவமாகக் கட்டியமைக்கப்படுகின்றார்கள். காஷ்மீரில் இந்திய இராணுவமும், இந்திய அரசும் செய்த அட்டூழியங்களை சும்மா இணையத்தில் தேடிப் பார்த்தாலே விபரங்கள் கொட்டும் என்பது ஒருபுறமிருக்க, சரி காஷ்மீரிகள் எதைச் சொன்னாலும் அது பக்கசார்பாக இருக்கும் என்று சொல்பவர்க்கு அருந்ததி ராயின் 'The Ministry of Utmost Happiness' வாசிக்கப் பரிந்துரைப்பேன். அது இரண்டு தரப்பினரைப் பற்றியும் பேசுகின்றது. அந்நாவல் மீது கூட விமர்சனம் இருந்தாலும், மேலும் அது இந்த இரண்டு தரப்பையும் தாண்டி முக்கியமான மூன்றாந்தரப்பான மக்களை, அவர்கள் படும் துயரங்களையும்/ சித்திரவதைகளையும் பேசுகின்றது. அமரனில் காட்டப்படும் இந்திய இராணுவம் இவ்வாறான இடங்களைக் கைப்பற்றும், தனது வீரர்களைக் காப்பாற்றும் தாக்குதல்கள் பற்றி எனது அனுபவம் ஒன்றைச் சொல்கின்றேன். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றும் முயற்சியை செய்கின்றது. யாழ்ப்பாண நிலவியலையோ, புலிகளின் ஆயுதபலத்தையை அவ்வளவு அறியாது பாரசூட்கள் மூலம் இராணுவத்தை இறக்கி யாழ்நகரைக் கைப்பற்றலாம் என்று இந்திய இராணுவம் திட்டம் அமைக்கின்றது. அவ்வாறு ஓர் இரவில் இறக்கிய இராணுவத்தின் பெரும்பகுதியினரை புலிகள் தாக்கி அழிக்கின்றனர். இது இரண்டு ஆயுதத் தரப்புக்களின் போர் எனச் சொல்லலாம். ஆனால் அடுத்தநாள் இந்திய இராணுவம் என்ன செய்கின்றது? தனது கவச வாகனங்களைத் தெருவில் இறக்கி, வீதியில் நின்ற அப்பாவி மக்களை வகைதொகையின்றி தனது வெஞ்சினம் தீர்க்கச் சுட்டுக் கொன்றது. சுட்டுக் கொன்றது மட்டுமில்லை அப்படித் தப்பியவர்களையும், அரைகுறையாக காயங்களுடன் துடித்துக் கொண்டவர்களையும் தனது டாங்கிக்கு அடியில் போட்டு மேலே மிதித்துக் கொன்றது. இது கிட்டத்தட்ட 80களின் பிற்பகுதியில் நடந்த கோரதாண்டவம். அப்படி இருக்கின்ற இந்திய இராணுவத்தை ஒரு திரைப்படம் தனியே தேசப்பற்றாளர்களாவும், தியாகிகளாகவும், மக்களுக்காகப் போராடுபவர்களாகவும் காட்டுகின்றபோது ஒருவருக்கு நெருடல் வராதா என்ன? அதுவும் தனது இராணுவ காலத்தில் மிக மோசமாக காயப்பட்டு காப்பாற்றக்கூடிய 'பயங்கரவாதியைக் கூட' பக்கத்தில் வைத்து சுட்டு கொன்று தன்னை வீரனாகப் பெருமிதம் கொள்கின்ற (அமரனில் வரும் காட்சி) ஒருவனை, அவனது எதிர்த்தரப்பு கொல்கின்றபோது இதுவும் போரின் ஒரு எதிர்வினை என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும். நாமே தெருவில் போனால் ஒருவன் சீண்டினால் கோபப்படுவோம் என்றால், ஒருவனை மிலேச்சனத்தனமாக அதிகாரத்தின் நிமித்தம் கொன்றுவிட்டு 'வீரனாக'க் காட்டும்போது மறுதரப்பின் எதிர்வினைகளில் இருந்து ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளமுடியும். மேலும் இந்திய இராணுவத்தின் புனிதத்தை குடும்பத்தின் பாசத்தைக் காட்டுவதன் மூலம் கட்டியமைப்பது இன்னும் மோசமானது. ஒரு இராணுவ வீரனுக்குப் பாசம் இருக்கக்கூடாதா என்று கேட்கலாம். இருக்கலாம். அது தவறே இல்லை. அப்படியாயின் 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்பவர்க்குக் குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்குப் பாசம் இல்லையா? அவர்கள் குடும்பம், இந்த இராணுவ சம்பளம், இறந்தால் கூட பெருமை மிகு 'அர்ஜூனா' விருதுக்கள் இல்லாது இப்படி ஏன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று ஒருகணம் யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? இந்தளவு உணர்ச்சிவசப்படும் அவர்கள் ஒரு இராணுவத்தில் சேர்ந்து சம்பளம் பெற்று நிம்மதியாக வாழ முடியுமே? ஏன் இவற்றையெல்லாம் தவிர்த்து இப்படி ஒரு மோசமான உயிர் ஆபத்தான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை நாம் ஒருபோதும் சிந்திக்கவிடாது, இவ்வாறான தேசப்பற்று/தியாக திரைப்படங்கள் நம்மைக் கட்டிப்போடுகின்றன. ஆகவேதான் இந்த ஒற்றைக் கதையாடல்கள் மிக ஆபத்தானவை என்கின்றேன். இந்தத் தேவையில்லாத தியாக/புனித கற்பிதங்களை நம்பி எந்த இராணுவத்தையும் மேன்மைப்படுத்தாதீர்கள் என்று மட்டுமில்லை, இராணுவத்துக்கு உங்கள் பிள்ளைகளைத் தயவு செய்து அனுப்பி வைத்துவிடாதீர்கள் என்றும் சொல்லவேண்டியிருக்கின்றது. இராணுவத்தில் இருந்து உயிர் திருப்பி வருபவர்களில் பெரும்பாலானோர் PTSD போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மனச்சிதை நோய்களால் பாதிக்கப்பட்டு தமது எஞ்சிய நாட்களையும் மிக மோசமாகக் கழிக்கின்றார்கள் என்பதை அமெரிக்க இராணுவ வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும். ஒரு மனித உயிரின் இழப்பு என்றவகையில் முகுந்த வரதராஜனின் மரணம் ஈடுசெய்யமுடியாது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல அது எந்த அரசியல் நோக்கம் என்றாலும் எதிர்த்தரப்பின் இழப்பும் ஈடுசெய்யமுடியாததே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவேதான் எந்த மோசமான குற்றச்செயல் புரிந்திருந்தால் கூட, நாம் எல்லோருமே மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்றோம். ஒரு உயிரைப் பறித்து நாம் எந்த பெரும் நீதியை இந்த உலகில் நிலைநாட்டிவிடப் போகின்றோம். அது எமக்கு மிக மோசமான எதிர்த்தரப்பாக இருந்தால் கூட எவருக்கும் அப்படியொரு தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகின்றோம். அதுவும் காந்தி போன்ற ஒருவர் பிறந்த நாட்டில், ஒரு இராணுவத்தின் சாகசத்தை/பழிவாங்கலை தேசப்பக்தியாகவும்/ தியாகமாகவும் கட்டியமைக்கும்போது நாம் சற்று தலைகுனிந்து வெட்கப்படவும் அல்லவா வேண்டும்? ************ (இதை எழுத,, எனக்குப் பிரியமானவர் முகுந்த் வரதராஜன் காலமானபோது அவருக்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றை தான் எழுதிக் கொடுத்தேன் என்று சொன்னது ஒரு காரணமாக இருந்தது. அந்தவகையில் இந்தத் திரைப்படம் அவருக்கு நெருக்கமானதும் கூட. அவரின் சார்பு/உணர்ச்சி எல்லாவற்றையும் புரிந்துகொண்டே, ஒற்றைக் கதையாடலின் ஆபத்து இத்திரைப்படத்தில் இருக்கின்றது என்கின்ற உரையாடலின் நீட்சியிலே இதை எழுதினேன். அவருக்கும் நன்றி)
  16. மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும் November 4, 2024 — கருணாகரன் — ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா? பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும். சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்றவற்றைக் கொண்ட தரப்பைத் தெரிவு செய்திருந்தால் – தவறான தரப்பை நிராகரித்திருந்தால் நாடும் சமூகமும் (மக்களும்) பல முன்னேற்றங்களை எட்டியிருக்கும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றில் சிக்கியிருக்காது. மக்களும் இனமாக, மொழியாக, மதமாகப் பிளவுண்டிருக்க மாட்டார்கள். வெளிச்சக்திகளின் அதிகரித்த தலையீடுகளுக்கு நாடு உட்பட்டிருக்காது. கடன் பொறிக்குள் சிக்க வேண்டியிருக்காது. யுத்தம், போராட்டம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர் இழக்கப்பட்டிருக்காது. ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் நடந்திருக்காது. இயற்கை வளங்கள் அபகரிக்கப்பட்ருக்காது. இயற்கை வளச் சிதைப்பு நிகழ்ந்திருக்காது. ஆகவே நாட்டிலே ஏற்பட்ட அழிவு, நெருக்கடிகள், பின்னடைவுகள் அனைத்துக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடையவர்களே. அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கத்தான் வேண்டும். பொருத்தமானவர்களை – சிறப்பானவர்களை – நல்லவர்களை – நற்சக்திகளை – தெரிவு செய்யாமல் புறக்கணித்து விட்டு, தவறானோரையும் பிழையான சக்திகளையும் தெரிவு செய்தற்கான தண்டனையையே மக்கள் பெற்றனர். தேர்தலில் மக்களுக்கு வழங்கப்படும் நல் வாய்ப்பைப் பொறுப்புடன் ஏற்றுச் செயற்படாமல் விட்டால், அதனுடைய விளைவுகளை மக்களே ஏற்க வேண்டும். நல்ல – சரியான தெரிவுகளைச் செய்தால் நன்மைகளும் சிறப்பும் விளையும். தவறான – பொருத்தமற்ற தெரிவுகள் என்றால், பின்னடைவுகளும் அழிவுகளும் ஏற்படும். ஜனநாயகத் தெரிவின் அடிப்படையே இதுதான். தவறானோரை அல்லது தவறான சக்திகளைத் தெரிவு செய்து விட்டால், அவர்களை மாற்றுவதற்கும் புறமொதுக்குவதற்குமே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை தேர்தல் வருகிறது. அப்படி வரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, குப்பைகளைப் புறமொதுக்க வேண்டும். அதைச் செய்யத் தவறுவதே பல சந்தர்ப்பங்களிலும் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதற்குரிய விழிப்புணர்வை உரிய தரப்புகள் மக்களுக்குச் செய்வதில்லை என்பது முக்கியமானது. ஊடகங்கள், புத்திஜீவிகள், சமூக இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற தரப்புகள் கூட பெரும்பாலும் மக்களை வழிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களிடம் அறிவூட்டலை – விழிப்புணர்வை – ஏற்படுத்துவதற்கு மாறாக ‘மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்‘ என்று தவறான முறையிலேயே செயற்படுகின்றன. மக்களுடைய பிழையான உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் பின்னால் இழுபடுகின்றன. ஆனால், ஜனநாயக அடிப்படையைக் கொண்ட நாட்டில் – சூழலில் ஊடகங்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக இயக்கங்கள் போன்ற தரப்புகளுக்கு முக்கியமான பங்குண்டு. இந்தத் தரப்புகள்தான் ஜனநாயகச் செழுமையை உண்டாக்க வேண்டியவை. இவைதான் ஜனநாயகத்தின் காப்பரண்கள். இவைதான் ஜனநாயகத்தின் ஊட்டச் சக்திகள். ஆனால், இங்கே என்ன நடக்கிறது? ஜனநாயகச் சீரழிவுக்கு இவை துணைபோகின்றன. இவற்றின் செயலின்மை அல்லது செயற்பாட்டுப் போதாமை, ஜனநாயகச் சீரழிவுக்கு வழிவகுக்குகிறது. ஆகவேதான் இலங்கை போன்ற நாடுகள் இன்னும் ஜனநாயக அரசியற் பண்பாட்டில் முன்னேறவில்லை. என்பதால்தான் இங்கே இன்னும் பிரபுத்துவ மனோநிலை மக்களிடம் – சமூகத்திடம் அதிகமாக உண்டு. சாதியாகவும் மதமாகவும் இனமாகவும் மொழியாகவும் மக்கள் சமனற்ற நிலையில் காணப்படுவதற்கும் பிளவுண்டிருப்பதற்கும் ஜனநாயக அடிப்படையில் ஏற்பட்ட ஓட்டைகளே காரணமாகும். இந்த ஜனநாயக ஓட்டைகள் மக்கள் இயக்கங்களின், ஊடகங்களின், புத்திஜீவிகளின், எழுத்தாளர்களின், மாணவர் அமைப்புகளின் பொறுப்பின்மையினாலும் தவறுகளாலும் ஏற்பட்டவையே. என்பதால்தான் மக்கள் இன்னமும் தேர்தல்களின் தவறான தெரிவுகளை – அணுகுமுறைகளை – க் கையாள்கிறார்கள். தேர்தலின்போது வாக்காளர்கள் சில அடிப்படையில் பிரிந்து செயற்படுவதுண்டு. 1. தாங்கள் விரும்புகின்ற கட்சிக்கு அல்லது சின்னத்துக்கு வாக்களிப்பது. இது பெரும்பாலும் குறித்த கட்சியின் கொள்கையோடு சம்மந்தப்பட்டதாக இருக்கும். சிலவேளை அந்தக் கொள்கையில் சறுக்கல்கள் – சமரசங்கள் – வீழ்ச்சிகள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தாமும் தமது குடும்பத்தினரும் தொடர்ச்சியாக குறித்த கட்சியை அல்லது குறித்த சின்னத்தை ஆதரித்து வந்தவர்கள் என்பதற்காகத் தொடர்ந்தும் வாக்களிப்பது. இங்கே அவர்கள் கட்சிக்கு அப்பால் எப்படிச் சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படித்தான் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரையோ அவருடைய தகுதி மற்றும் பொருத்தப்பாடுகளையோ பார்ப்பதில்லை. அது அவர்களுக்கு அவசியமுமில்லை. தாங்கள் இன்ன கட்சியின் ஆதரவாளர்கள் என்பது மட்டுமே அவர்களுடைய புலனில் (தலைக்குள்) இருக்கும். இது ஒருவகையில் அடிமை மனோநிலைதான். அறிவியலுக்கு முரணான எதுவும் அடிப்படைவாதத்தில் – அடிமை நிலையில்தான் இருக்கும். இதில் அவர்கள் தேர்தல் என்பது ஜனநாயக விழுமியத்தின்பாற்பட்ட ஒன்று எனச் சிந்திப்பதேயில்லை. ஜனநாயகம் வழங்கும் சிறந்த பெறுமானத்தின் அடிப்படையில் பொருத்தமற்ற கொள்கையை, பொருத்தமற்ற நடைமுறைகளை, பொருத்தமற்ற ஆட்களை விலக்குவதற்குக் கிடைக்கும் மக்களுக்கான அரிய வாய்ப்பு என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காதவர்களாகவே உள்ளனர். குறித்த கட்சியோ, வேட்பாளரோ கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்பு என்ன? சமகாலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடும் தகுதியும் எப்படியுள்ளது என்பதையும் பரிசீலிப்பதில்லை. ஆக, தாங்கள் குறித்த கட்சிக்கும் (சின்னத்துக்கு) குறித்த வேட்பாளருக்கும் நிரந்தரமாக அடிமைச்சாசனம் எழுதப்பட்டவர்களாவே கருதிக் கொள்கிறார்கள். தாங்கள் பெற்றுக் கொண்ட அறிவையும் அனுபவத்தையும் வைத்துச் சிந்தித்து – பரிசீலித்து முடிவெடுப்பதற்கோ, பொருத்தமான தரப்பைத் தேர்வு செய்வதற்கோ இவர்களால் முடிவதில்லை. எனவே இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தை மறுப்பவர்களாகவும் அதைத் துஸ்பிரயோகம் செய்வோராகவுமே உள்ளனர். எனவே இவர்கள் சமூக வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக இருக்கின்றனர். மட்டுமல்ல, சரியாகச் சிந்திப்போரின் ஆற்றலையும் தெரிவையும் கூட பாழாக்கி விடுகின்றனர். ஏனெனில், குறித்த கட்சியோ, அதன் பிரதிநிதியாக முன்னிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரோ, காலப்பொருத்தமற்ற – நடைமுறைச் சாத்தியங்களற்ற கொள்கைப்பிரகடனத்தோடு வந்து முன்னே நிற்கும்போது அதைக் குறித்து கேள்விகளை எழுப்பாமல் இருப்பது எவ்வளவு தவறு? எவ்வளவு அறிவீலித்தனம்? அதோடு கடந்த காலத்தில் உருப்படியாகச் செயற்படாமல் வெறுங்கையோடு வந்து நிற்கும்போது, அதை ஆதரிப்பது மன்னராட்சி, பிரபுத்துவக் கால அடிமை முறையன்றி வேறென்ன? ஆகவே இவர்கள் இந்த நவீன யுகத்துக்குரிய ஜனநாயக – அறிவார்ந்த அடிப்படைக்குரியவர்களில்லை. என்பதால்தான் இவர்களை ஜனநாயக விரோதிகள் என மதிப்பிட வேண்டியுள்ளது. 2. தாங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது அல்லது அவருக்கான விருப்பத்தை முதன்மைப்படுத்தி வாக்களிப்பது. இதுவும் ஜனநாயக விழுமியத்துக்கும் அறிவுசார் நடத்தைக்கும் புறம்பான ஒன்றே. இதில் குறித்த வேட்பாளரின் உறவு வட்டம், சாதி, பிரதேசம், நட்பு, அவர் மீதான அபிமானம் போன்றவையே அதிகமாகக் காணப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் குறித்த வேட்பாளர் ஆற்றிய சேவைகளின் மீதான மதிப்பு நோக்கப்படுவதுண்டு. அது அபூர்வமானது. அப்படித் தெரிவு செய்யப்பட்டால் பரவாயில்லை. ஆனால் அவ்வாறான ஆற்றலுடையவர், செயற்பாட்டுத்திறனைக் கொண்டவர், மக்களின் நலனில் அக்கறையுடையவர், பொறுப்புணர்ச்சியுள்ளவர், அரசியல் பண்புடையவர் பெரும்பாலும் நீடித்திருப்பது குறைவு. அவரிடம் என்னதான் நற்கூறுகளிருந்தாலும் போதிய பொருளாதார பலமில்லாமல் போகும்போது பணபலத்தோடு கலந்திருக்கும் தேர்தற் களத்தில் அவர் வெற்றி வாய்ப்பைப் பெறுவது கடினமாகவே உள்ளது. மக்கள் அந்த நேரத்தில் கிடைக்கின்ற சொற்ப சலுகைகளுக்காக தவறானவர்களைத் தெரிவு செய்து, சரியானவர்களைத் தோற்கடித்து விடுகிறார்கள். எனவே இங்கும் பெரும்பாலும் தவறான தெரிவுகளுக்கே வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இங்கும் ஜனநாயக விழுமியமும் அது வழங்கும் நல்வாய்ப்பும் பாழடிக்கப்படுகிறது. 3. தேர்தற்காலத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்த வேட்பாளருக்குச் சார்பான அலை பொதுவெளியில் மிதக்கிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து விடுவோர். இவர்களும் பொருத்தமான அரசியலையும் தெரிவுகளையும் தமது சொந்த அறிவினாலும் அனுபவத்தினாலும் தேர்வுக்குட்டுப்படுத்துவதில்லை. சிலபோது குறித்த அலையானது நற்தேர்வுகளுக்கு வாய்ப்பளிக்கும். பல சந்தர்ப்பங்களிலும் பிழையான தெரிவுகளுக்கே வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உதாரணம், கடந்த 2020 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டமை இவ்வாறான ஒரு அலையினால்தான். ஆகவே இவர்களும் ஜனநாயக அடிப்படைக்கு எதிராக – முரணாகவே செயற்படுகின்றனர். இப்படி ஜனநாயக அடிப்படைக்கு எதிராகச் செயற்படும்போது நாடும் ஏனைய மக்களும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. (இவர்கள் பெரும்பாலும் தாம் இப்படிச் செயற்படுவது தவறானது என்றே தெரியாமல்தான் செய்கிறார்கள்) தவறான தெரிவுகளைச் செய்ய வேண்டியேற்படுகிறது. 4. கொள்கை என்ன? அதனுடைய நடைமுறைகள் எப்படியுள்ளன? அவற்றின் பெறுமானங்கள் எத்தகையன? அவற்றைச் செயற்படுத்த முன்வந்திருப்போரின் தகுதியும் ஆற்றலும் பொறுப்புத் தன்மையும் எவ்வாறானது? எனக் கவனித்து – மதிப்பிட்டு வாக்களிப்போர் அல்லது தெரிவுகளைச் செய்வோர். இந்தத் தரப்பினரின் எண்ணிக்கை பல சந்தர்ப்பங்களிலும் குறைவாகவே உள்ளது. அதிலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இப்படிச் சிந்திப்போரின் செல்வாக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது. அதனால்தான் மோசமான ஆட்சியாளர்களும் தவறான மக்கள் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுகிறார்கள்; அதிகாரத்தில் அமர்த்தப்படுகிறார்கள். ஆக, இங்கே அறிவார்ந்த தெரிவு தோற்கடிக்கப்படுகிறது. புறக்கணிப்புக்குள்ளாகிறது. சரியான – பொருத்தமான தெரிவுகளைச் செய்யக்கூடிய இவர்களுக்கான பொதுவெளி மிகச் சுருங்கியதாகவே காணப்படுகிறது. mainstream media வில் இவர்களுடைய கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்குமான இடம் அளிக்கப்படுவது குறைவு. மாற்றுக் கருத்துகளுக்கான உரையாடல் வெளி விரிவடைந்து mainstream media வில் இது இடம்பெறும்போதுதான் இவர்களுடைய தெரிவுக்கான அடிப்படைகள் விளக்கமடையக் கூடியதாக இருக்கும். அந்தப் பரப்பும் விரிவடையும். அது இப்போது குறைவு. தற்போதுள்ள சூழலில், குறிப்பாகத் தமிழ்ப்பரப்பில் mainstream media வும் சமூக வலைத்தள வெளியும் மக்கள் அமைப்புகளும் புத்திஜீவிகளாகக் கருதப்படுவோரில் பலரும் மாணவர் அமைப்புகளும் சுய சிந்தனைக்கும் சொந்த அனுபவங்களுக்கும் உலக வரலாற்று அறிவுக்கும் மாறாகவே – தவறாகவே இருப்பதைக் காணலாம். எனவே இவர்களுடைய தெரிவுகள் செல்வாக்கைச் செலுத்துவது குறைவு. அதனால் எதிர்த்தரப்பினர் – தவறானோர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உண்டு. இதையே தற்போதைய தேர்தற் கணிப்புப் பற்றிய அடையாளமிடல்கள் நிரூபிக்கின்றன. ஆகவே, நடக்கவுள்ள 17 ஆவது தேர்தலில் நாட்டில் மாற்றம் நிகழ்ந்தாலும் வடக்குக் கிழக்கில் (தமிழ்ப்பரப்பில்) அந்த மாற்றத்தின் அளவு என்னவாக இருக்கும்? எப்படியானதாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் தெற்கும் மேற்கும் (சிங்கள மக்கள்) தங்களைச் சுத்தப்படுத்துவதற்குத் தயாராகி விட்டது. வடக்கும் கிழக்கும்தான் பழைய குப்பைக்குழிக்குள்ளேயே தொடர்ந்தும் கிடக்கப்போகிறதா? என்ற இன்னொரு கேள்வியும் அருகிலே எழுந்து நிற்கிறது. அரசியல் என்பது நடைமுறைப்பயன்விளைக்கும்அர்ப்பணிப்பான உழைப்பினாலும் உபாயங்களின்விளைவினாலும் உருவாகுவது. முதன்மையாக அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். உணர்ச்சிகளுக்கு அதில் இடமில்லை. முற்று முழுவதும் அறிவுபூர்வமானது. ஆகவேதான் அதைக் கணிதம் என்று கூறப்படுவதுண்டு. கூடவே அரசியல் என்பது மக்களுடைய அதிகாரமாகும். கவனிக்க, மக்களுக்கான அதிகாரம் இல்லை. https://arangamnews.com/?p=11400
  17. தமிழரசுக் கட்சிக்கு அரசில் இடமில்லை; அமைச்சுப் பதவிகளும் இல்லை இலங்கைத் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அநுர அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவார்கள் என்ற தகவல்களை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது. அவ்வாறாக தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சி இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையயாடலையும் நடத்தவில்லை என்றும், அவ்வாறான தேவை தமக்கு கிடையாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், இதன்படி புதிய அரசாங்கத்தில் எம்.ஏ.சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமையிலேயே தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அதனை நிரகரித்து கருத்து வெளியிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால், வேறு கட்சிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள தமக்கு அவசியம் கிடையாது என்றும் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்த சுமந்திரன், அரசாங்கம் தமக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=297892
  18. கமலா ஹாரிஸ் முன்னிலை; புதிய கருத்துக் கணிப்புகளில் வெளியான தகவல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், புதிதாக வெளியான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பின்னடைவு கண்டுள்ளார். கடந்த ஜூலை இறுதியில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. ட்ரம்பைவிட அவருக்கு கூடுதலாக 3 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். ஆனால், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அவருக்கான ஆதரவு சற்று குறையத் தொடங்கியது. கடந்த அக்டோபரில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 44 சதவீதம் பேரும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இருவருக்குமான இடைவெளி ஒரு சதவீதமாக இருந்தது. கடந்த நவம்பர் 1-ம் திகதி ‘குக் பொலிடிக்கல் ரிப்போர்ட்’ வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 48.6%, ட்ரம்புக்கு 47.7% ஆதரவு கிடைத்தது. நவம்பர் 2-ம் தேதி ‘தி ஹில்’ நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், கமலாவுக்கு 48.1%, ட்ரம்புக்கு 48.3% வாக்குகள் கிடைத்தன. இந்நிலையில், நேற்று (நவ.2) 538 என்ற அமை்பபு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47.9%, ட்ரம்புக்கு 46.9% வாக்குகள் கிடைத்தன. இவை உட்பட புதிதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கமலா சார்பில் இதுவரை ரூ.6,640 கோடியும் ட்ரம்ப் சார்பில் ரூ.3,000 கோடியும் செலவிடப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. மாகாணங்களில் நிலவரம் என்ன? – அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்சா, புளோரிடோ, ஜார்ஜியா, ஐடஹோ, இன்டியானா, லோவா, லூசியானா, மிசிசிப்பி, மிசூரி, மொன்ட்டானா, நெப்ராஸ்கா, நெவாடா, நியூ ஹாம்சயர், நார்த் டகோடா, ஓகியோ, ஓக்லகோமா, சவுத் கரோலினா, சவுத் டகோடா, டென்னிசி, டெக்சாஸ், யூட்டா, வெர்மான்ட், வெர்ஜினியா, வெஸ்ட் வெர்ஜினியா, வயோமிங் ஆகிய மாகாணங்களில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெடிகட், டெலவெயர், ஹவாய், இலினொய், கன்சாஸ், கென்டக்கி, மேய்ன், மேரிலேண்ட், மாசச்சூசெட்ஸ், மிச்சிகன், மினசோட்டா, நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், நார்த் கரோலினா, ஓரிகன், பென்சில்வேனியா, ரோட் தீவு, வாஷிங்டன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிபர் தேர்தலின்போது இந்த 7 மாகாணங்களின் மக்கள் ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் ஆதரவாக வாக்களிக்கின்றனர். எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் 7 மாகாணங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நவ.6) நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த மாகாணங்களின் தீர்ப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பிரச்சாரம்: ட்ரம்பின் Vs கமலா எப்படி? – தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அரசியல் நாகரிக வரம்புகளை அப்பட்டமாக மீறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாவின் பெயரை மோசமாக விமர்சித்தார். இதெல்லாம் ஒரு பெயரா, இந்த பெயரை உச்சரிக்க முடியுமா என்று கிண்டல் செய்தார். அவர் இந்தியரா, ஆப்பிரிக்கரா என்று கேள்வி எழுப்பினார். கமலாவின் கணவர் டக்ளஸை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார். ஆரம்ப காலத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றியதாக கமலா தனது பிரச்சாரத்தில் கூறினார். இதை கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்ட ஓட்டலில் சர்வராக நடித்த ட்ரம்ப், அங்கு இந்தியர் ஒருவருக்கு உணவு வகைகளை விநியோகம் செய்து தரக்குறைவான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். “கமலாவுக்கு அறிவு கிடையாது, அவர் சோம்பேறி. அமெரிக்க அதிபராக அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அவருக்கு எதிராக வாக்களியுங்கள். அப்போதுதான் அமெரிக்காவை காப்பாற்ற முடியும்” என்று அதிபர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் வெள்ளையினவாதத்தை தூண்டும் வகையில் பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். “முன்னாள் அதிபர் ட்ரம்ப் சர்வாதிகாரி, நாஜி சிந்தனை கொண்டவர், மனித உரிமைகளை மீறுபவர், பெண் உரிமைகளை மதிக்காதவர், பலவீனமானவர்” என்று கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரங்களில் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் பொருளாதார வளர்ச்சி, வரி சீர்திருத்தம், கருக்கலைப்புக்கு ஆதரவு, எல்லை பாதுகாப்புக்கு முன்னுரிமை, உக்ரைனுக்கு ஆதரவு, இஸ்ரேல்- காசா பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகள் கொள்கை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு விரிவாக்கம், குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கமலா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவை அவருக்கான ஆதரவை பெருகச் செய்துள்ளது கவனிக்கத்தக்கது. https://akkinikkunchu.com/?p=297899
  19. கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்! கனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது. இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என்று ட்ரூடோ வலியுறுத்தினார். கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புது டெல்லியின் கோரிக்கையை ஒட்டவா பலமுறை நிராகரித்துள்ளது. இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே உள்ள இராஜதந்திர உறவுகள் இறுக்கமான நிலையில் உள்ள நிலையில் அண்மைய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. https://akkinikkunchu.com/?p=297913
  20. தேர்தல் திகதிக்கு எதிரான மனு தள்ளுபடி Mayu / 2024 நவம்பர் 04 , பி.ப. 12:14 - 0 நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், முன்வைக்கப்பட்ட உண்மைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முறையான விசாரணைக்கு செல்லாமல் மனுவை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தேர்தல்-திகதிக்கு-எதிரான-மனு-தள்ளுபடி/150-346533
  21. அரை நிர்வாண போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவி ஈரான் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில், குர்திஷ் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் விதிகளை மீறி விட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அவர் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்து விட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. ஹிஜாப்பை தூக்கி எறிவது மற்றும் ஹிஜாப் எரிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களால் அதிகாரிகள் திணறி போயினர். இதன்பின்னர், பாதுகாப்பு படையினர் கடுமையாக செயல்பட்டு, அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் திடீரென ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்றார். இதனால், சுற்றியிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அடையாளம் தெரியாத அந்த இளம்பெண்ணை பிடித்து சென்றனர். இதன்பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஆமிர் மஜாப் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காவல் நிலையத்தில்... அந்த இளம்பெண் கடுமையான மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில், அந்த இளம்பெண் மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய வீடியோ மற்றும் ஊடக செய்திகள் வெளியான நிலையில், அந்த பெண் தெளிவான நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார் என ஒரு சிலர் கூறுகின்றனர். லெய் லா என்ற பயனாளர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொதுவெளியில் உள்ளாடையுடன் தோன்றுவது என்பது பெண்களில் பலருக்கு மோசம் வாய்ந்த ஒரு கனவாகவே இருக்கும். ஹிஜாப் கட்டாயம் என்ற அதிகாரிகளின் முட்டாள்தன நிபந்தனைக்கு எதிராகவே இந்த நிகழ்வு நடந்துள்ளது என தெரிவித்து வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். இதுபற்றி ஈரான் நாட்டில் உள்ள ஆம்னெஸ்டி என்ற அமைப்பு வெளியிட்ட செய்தியானது, ஹிஜாப் சரியாக அணியாததற்காக பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த இளம்பெண் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார். இந்த ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிராகவே அவர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என தெரிவிக்கின்றது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் அவருக்கு உதவியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அரை-நிர்வாண-போராட்டம்-நடத்திய-பல்கலைக்கழக-மாணவி/50-346528
  22. மட்டக்களப்பில் கருணா - பிள்ளையான் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ! வேட்பாளர் உட்பட மூவர் வைத்தியசாலையில் Batticaloa மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணாவின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (3) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது; மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணாவின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (3) இரவு ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந் துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் கருணாவின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டபோது கருணாவின் கட்சியின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டம் என தெரிவித்த நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து கருணாவின் வேட்பாளர் மீதும் அவரது ஆதரவாளர் மீதும் பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இதனையடுத்து கருணாவின் கட்சி வேட்பாளர் முனிசாமி நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் இருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்ததையடுத்து பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து படுகாய மடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். https://www.battinews.com/2024/11/blog-post_04.html
  23. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி adminNovember 4, 2024 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில் ,மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2024/208000/
  24. அறுகம்பே விவகாரம்: ஆறு பேர் கைது அறுகம்பே குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் இதுவரையில் மாலைத்தீவு பிரஜை உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அறுகம்பே குடா பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார். “இதுவரை, நாங்கள் ஆறு நபர்களை கைது செய்துள்ளோம். மாலைத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இது என்ன வகையான திட்டம் அல்லது முயற்சி என்று எங்களால் தற்போது சொல்ல முடியாது. ஏனெனில் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து அப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது. எனவே, தேவையற்ற தவறான விளக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். -(3) http://www.samakalam.com/அறுகம்பே-விவகாரம்-ஆறு-பே/
  25. மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு! தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தமிழரசு கட்சியிலிருந்து ஏன் விலகினோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் அதை பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை. நாங்கள் தற்போது சனநாயக தமிழரசு கூட்டமைப்பாக மாம்பழ சின்னத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் களமிறங்கி உள்ள நிலையில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கி வருகிறார்கள். நான் ஒரு வேட்பாளராக மாம்பழ சின்னத்தில் போட்டியிடுகிறேன். தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்கான ஒரு கூட்டமைப்பாக நாங்கள் செயல்படுகிறோம். நான் ஒரு ஊடகத்துறையை நடத்தி வரும் நிலையில் 38 தடவைகள் தாக்குதலை மேற்கொண்டார்கள். இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஜனாதிபதிகளிடம் கூறினேன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளிநாட்டு தூதரகங்களுக்கு கூறினேன் சர்வதேச நிறுவனங்களுக்கு கூறினேன் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் பல்வேறு தடைகளை சந்திப்பது வழமையான செயல்பாடு ஆனால் நானும் என் சாந்த நிறுவனமும் பல்வேறு தடவைகள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்படுவதும் தொடர் செயற்பாடாக இருந்து வருகிறது. தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமாக நடந்து வந்த நிலையில் இதுவரை எந்த ஒரு விசாரணை முடிவுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தருவதாக அமையவில்லை. தமிழ் மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். தமிழ் தேசியத்தை விலைபேசி விற்பதற்கு பல்வேறு தரப்புக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் . தமிழ் மக்கள் அவர்களிடமிருந்து விடக் கூடாது தமிழ் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் அதற்காக போராடுபவர்களையும் மக்கள் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும். நான் சென்ற தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வட்டுக்கோட்டை தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து சுமார் 600 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறேன். அவற்றோடு நின்றுவிடாமல் ஏனைய தொகுதிகளுக்கும் என்னால் இயன்றவரை அபிவிருத்திகளை கொண்டு சென்றிருக்கிறேன். நான் அந்த தொகுதிகளுக்கு செல்லும்போது மக்கள் கூறினார்கள் நீங்கள் எந்த கட்சியில் கேட்டாலும் உங்கள் சிறப்பான சேவைக்கு நமது ஆதரவு இருக்கும் என்று. நாங்கள் தமிழ் தேசியத்தை விலை பேசி விற்றவர்கள் அல்ல விக்கப் போவார்கள் அல்ல அது மக்களுக்கு தெரியும். ஆகவே தமிழ் மக்கள் மாவீரர் நாளில் தமது வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாக தமிழ் தேசியம் சார்ந்தவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) https://newuthayan.com/article/மாம்பழ_சின்னம்_தமிழ்_தேசியத்தை_மீள்_உருவாக்கும்_: -_சரவணபவன்_சூளுரைப்பு!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.