Everything posted by கிருபன்
-
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை… October 27, 2025 யாழில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் இதுவரை 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கருத்துகளை ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவ் வகையில் யாழ் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் எனவும் கூறினார். மேலும் இச் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான சொகுசுக் கார்கள், ஆடம்பர விடுதிகள், இறால் பண்ணைகள், உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் காணப்படும் பல்பொருள் அடங்காடிகள் என்பன தொடர்பிலும், அந்தச் சொத்துக்கள் தொடர்பிலான முழுமையான விபரங்கள் தொடர்பிலும் புலன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. அவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/action-to-freeze-the-assets-of-11-people-in-jaffna-2/
-
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல் October 27, 2025 10:49 am அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமான ஜேவிபி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடினார். குறிப்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஹைக்சிங் (Liu Haixing) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ரத்நாயக்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். சீனாவை மீண்டும் கட்டியெழுப்ப, ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது, மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது, முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை உந்துதல், வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் கட்சி ஒழுக்கத்தை பேணுதல் ஆகியவற்றில் CPC இன் அர்ப்பணிப்பு குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் விரிவாக பேசியுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் கட்சியின் சர்வதேசத் துறையின் தலைவராக இருந்த 61 வயதான லியு ஜியான்சாவோவுக்குப் பதிலாக, லியு புதிய பதவியில் பொறுப்பேற்றார். லியு ஹைக்சிங் முன்னர் தேசிய பாதுகாப்பை மேற்பார்வையிடும் சக்திவாய்ந்த கட்சியின் மூத்த செயற்பாட்டாளராக பணியாற்றினார். அவர் 1980 களில் பாரிஸில் படித்தார். அவர் ஐரோப்பிய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர். ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இலங்கையின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுடனும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறவை பேணுகிறது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வருட ஆரம்பத்தில் பீஜிங்கிற்கு பயணம் செய்தார். பிமல் ரத்நாயக்கவின் பயணத்தில், அப்போது கலந்துரையாடப்பட்ட பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பிமல் ரத்நாயக்காவுக்கு முன்னதாக, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். https://oruvan.com/communist-party-of-china-jvp-memorandum-of-understanding/
-
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்! - துணைவேந்தர் உறுதியளிப்பு
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்! துணைவேந்தர் உறுதியளிப்பு யாழ். பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறப்புக் கவனம்செலுத்தி, தாமே நேரடியாகக் கையாண்டு, ஓரிரு வாரங்களுக்குள் தீர்வுகளை வழங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்கள், துணைவேந்தரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கலந்துரையாடலில் ஊழியர்கள், தரப்பில் முன்வைக்கப்பட்ட நியாயங்களையும் பிரச்சினைகளையும் துணைவேந்தர் ஏற்றுக்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி உட்பட சில விடயங்கள் தனக்கு தெரியாதவை எனவும் உண்மை நிலைமையை அறிய எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். https://newuthayan.com/article/யாழ்.பல்கலை_ஊழியர்_பிரச்சினை_நேரடித்_தலையீட்டில்_தீர்க்கப்படும்!
-
இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! adminOctober 26, 2025 சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என புழல் சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த தனுக ரோஷன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடாரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதற்குப் பழிவாங்கும் விதமாக, தனிமைச் சிறைக்கு மாற்றி அதிகாரிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனா் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.நதியா, சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளின் இன்ஹேலா்களைக்கூட சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளனா். அவா்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவது இல்லை என்று வாதிட்டாா். காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் சட்டத்தரணி ஏ.கோகுலகிருஷ்ணன், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க புழல் சிறைத் துறை நிா்வாகத்துக்கு உத்தரவிட்டனா். மேலும், மனுவுக்கு வரும் நவம்பர் மாதம் 3-ஆம் திகதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா். https://globaltamilnews.net/2025/222002/
-
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? - நிலாந்தன்
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? - நிலாந்தன் செவ்வந்தியோ சூரியகாந்தியோ அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் சென்ற அவரைக் கைது செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நேபாளத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்ததும் கைது செய்ததும் சாகச்செயல்களோ வீரச்செயல்களோ அல்ல. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்தோடு தொடர்புகொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. இதில் என்ன சாகசம் இருக்கிறது? குற்றம் நடந்த பின் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவரைக் கைது செய்வதுதானே போலீசாரின் கடமை? அதைச் செய்த போலீஸ் அதிகாரியை ஏன் ஒரு சாகச வீரனாகப் போற்றி,உயர்த்த வேண்டும்? அவர் தன்னுடைய தொழிலைத்தானே செய்தார்? ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதன் டிஜிட்டல் புரோமோஷன் அணியும் அதனை வீர தீரமான,ஆபத்துக்கள் மிகுந்த ஒரு சாகச நடவடிக்கையாகச் சித்தரிக்கின்றன. அதற்குத் தலைமை தாங்கிய போலீஸ் அதிகாரியை ஒரு கதாநாயகன் அளவுக்கு உயர்த்துகின்றன. இங்கே எந்த வீரமும் கிடையாது சாகசமும் கிடையாது. அரசியல் குற்ற மயப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், அரசியல்வாதிகள் பாதாள உலகங்களோடும் போதைப் பொருள் வலைப் பின்னலோடும் தொடர்புடையவர்களாகக் காணப்படும் ஒரு நாட்டில், பாதாள உலகக் குற்றவாளிகளால் விலைக்கு வாங்கப்பட முடியாத சில போலீஸ் அதிகாரிகள் வீரர்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் இங்குள்ள ஒப்பீடு. நாட்டின் பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்த,ஊழல் மிகுந்தபத்து நிறுவனங்களில் முதலாவதாக போலீஸ் நிறுவனம் காணப்படுகிறது. இந்த தகவலை சொன்னது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லஞ்சம் ஊழல் என்பவற்றை விசாரிப்பதற்கான ஆணைக் குழுவின் தலைவர் நீல் இடாவெல ஆகும். நாட்டின் காவல்துறை இவ்வாறு நாட்டில் மக்கள் மத்தியில் மதிப்பிழந்த பத்து நிறுவனங்களில் முதலாவதாக காணப்படும் ஒரு நாட்டில் அப்படி சில போலீஸ் அதிகாரிகள் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை ஒரு சாகசச் செயலாகக் காட்ட வேண்டிய ஒரு நிலைமை. ஆனால் நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமையப்பட்டது அந்த கேள்விக்கு விடை தேடிப் போனால் அதற்கு ஜேவிபியும் ஒருவிதத்தில் பொறுப்பு. இன முரண்பாடுகள்தான் அதற்குக் காரணம். சிங்கள அரசியல்வாதிகள் எல்லாக் குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்துக்குள் பதுங்கிக் கொள்வார்கள். செவ்வந்தி கைது செய்யப்பட்ட நடவடிக்கையை விமர்சித்த விமல் வீரவன்ச கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்த நடவடிக்கையோடு ஒப்பிட்டுத்தான் அரசாங்கத்தை அண்மையில் விமர்சித்திருந்தார். எனவே இலங்கைத்தீவில் எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தின் பின் பதுங்க முடியும் என்ற நிலைமை கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு தீய அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகிறது. இவ்வாறு அரசியல் குற்றமயப்பட்ட ஒரு நாட்டில் அரசியல்வாதிகள் பாதாள உலகத் தலைவர்களோடு உறவுகளை வைத்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் மீதும், அவ்வாறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இப்பொழுது அரசாங்கம் பாதாள உலகக் குற்றவாளிகளையும் போதைப்பொருள் வலை பின்னலையும் முடக்க முயற்சிக்கின்றது. இதில் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தொடங்கியது. ”யுக்திய” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் சில என்கவுண்டர்கள் நடந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைகளின் கனிகளை இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது என்பதே உண்மை. ஆனால் ஒப்பீட்டளவில் உயிர்ச் சேதம் குறைவு. இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு மக்கள் முன் காட்சி மயப்படுத்துகின்றது. அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணியானது கைது நடவடிக்கைகளை, போதைப்பொருள் கிடங்குகளை முற்றுகையிடும் நடவடிக்கைகளை, விலைக்கு வாங்கப்பட முடியாத போலீஸ் அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைகளை பிரச்சார நோக்கத்தோடு உருப்பெருக்கி காட்டி வருகிறது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அனுர அரசாங்கம் கைது செய்தவர்களில் யார் மீதும் போர் குற்றச் சாட்டுக்களோ அல்லது இன அழிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் இப்பொழுது கட்டுப்படுத்த முயற்சிக்கும் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றம் எது? பேரினவாதம்தான். தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்றுவரை நீதிக்குமுன் நிறுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் சில படை அதிகாரிகள் இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களோடும் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகம் உண்டு. ஆனால் அவர்களுக்கு எதிராக இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை. எனவே இலங்கைத்தீவில் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றமாகக் காணப்படும் குற்றத்தில் கை வைக்காமல் குற்றமில்லாத இலங்கையை உருவாக்கப் போகின்றோம்; பாதாள உலகங்களை ஒடுக்கப் போகிறோம் என்று அரசாங்கக் கூறிவருகின்றது. உண்மையில் அரசாங்கம் செய்வது என்னவென்றால் எதன் மீது கவனத்தை குவிக்க வேண்டுமோ,எது தாய்க் காயமோ அதைச் சுகப்படுத்தாமல் அதன் விளைவுகளுக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்டிருக்கிறது. நாட்டின் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினர் குற்றப்பின்னணியைக் கொண்டவர்கள்,பாதாள உலகக் குழுக்களோடு தொடர்புடையவர்கள் என்பது பரவலான சந்தேகம். இவ்வாறு சந்தேகப்படும் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் பாதாள உலகங்களில் தங்களுக்கென்று அடியாட்களை வைத்திருக்கிறார். இந்த நிழல்களை இப்பொழுது அரசாங்கம் நசுக்கத் தொடங்கிவிட்டது. அதனால் நிஜங்கள் பதட்டமடைகின்றன. நாமல் ராஜபக்ச…… “எந்தவித குற்றங்களோடும் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே எமது பொதுஜன பெரமுனவில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படும்”என்று கூறியிருப்பது அதைத்தான் காட்டுகின்றது. ராஜபக்சக்கள் அவ்வாறு கூறவேண்டிய அளவுக்கு தென்னிலங்கையில் நெருக்கடி வந்திருக்கிறது என்பது நல்ல முன்னேற்றம். ஆனால் அது ஒரு பாதியளவு முன்னேற்றம்தான். இந்த நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்தி தெற்கில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம். அடுத்த தேர்தலிலும் தனது வெற்றியை உறுதிப்படுத்தலாம். ஆனால் இந்த குற்றங்களுக்கு எல்லாம் தாய் குற்றமான இனவாதத்தை வெற்றிகொள்ளாத வரை இப்பொழுது கிடைக்கும் வெற்றிகள் யாவும் தற்காலிகமானவைதான். 2009 ஆம் ஆண்டு இலங்கை தீவில் தோற்கடிக்கப்பட்டது தமிழ் மக்களின் ஆயுத போராட்டம்தான். இனவாதம் அல்ல. ஆயுதப் போராட்டம் ஒரு விளைவு. அது மூலகாரணம் அல்ல. மூல காரணம் இனவாதம்தான். ஆயுதப் போராட்டத்தில் வெற்றி பெற்ற இனவாதம் ராஜபக்சக்களின் தலைமையில் யுத்த வெற்றிவாதமாக தன்னை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துக் கொண்டது. ஆனால் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக யுத்த வெற்றி வாதம் தற்காலிகமாக பதுங்கியிருக்கிறது. அவ்வாறு இனவாதம் அப்படியே இருக்கத்தக்கதாக அந்த இனவாதத்தின் விளைவாக உருவாக்கிய ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததை ஒரு நிலை மாற்றமாக கருதி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலைமாறு கால நீதியை ஐநா இலங்கைக்கு முன்மொழிந்தது. நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முடியாது என்பதை தான் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த யாப்புச் சதி முயற்சி நிரூபித்தது. மைத்திரி யார்?நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவர். ஆனால் அவரே தன் குழந்தையைத் தோற்கடித்தார். இப்பொழுது சுமந்திரன் அவரை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் யாப்புருவாக்க முயற்சியின்போது மைத்திரி சொன்னது. தமிழ் மக்களையும் பயமுறுத்தாத சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மைத்திரி சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு வார்த்தைதான் “ஏக்கிய ராஜ்ய” என்று சுமந்திரன் இப்பொழுது விளக்கம் தருகிறார். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பயப்படும் ஒரு நிலைமை என்பது எதைக் காட்டுகிறது? நாட்டில் இனமுரண்பாட்டு அரசியலில் நிலை மாற்றம் ஏற்படவில்லை என்பதைத்தானே? சமாதானத்துக்கான கூட்டு உளவியல் சூழல் உருவாகவில்லை என்பதைத்தானே? தமிழ் மக்களைத் தோற்கடித்ததால் இனப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நம்புவதே இனவாதம்தான். தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக சமஸ்டி என்று கூறி ஒரு தீர்வைக் கொடுக்க முடியாத ஒரு நிலை நாட்டில் இப்பொழுதும் உண்டு என்றால் அது இனவாதம் தான். வெளிப்படைத் தன்மையற்ற ஒரு சமஸ்டியைத்தான் தீர்வாக வைக்க முடியும் என்றால் அதுவும் இனவாதம்தான். எனவே எக்கிய ராஜ்ய என்ற அந்த வார்த்தையே நாட்டில் நிலைமாற்றம் ஏற்படாததன் விளைவாக உபயோகிக்கப்பட்ட ஒன்றுதான். அதே நிலைமைதான் இப்பொழுதும் உண்டு. கடந்த ஓராண்டுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் கைது நடவடிக்கைகள் எவையும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் கைவைப்பவைகளாக இல்லை என்பதைச் சுமந்திரனும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டதால்தான் அது தோற்கடிக்கப்பட்டது. அதைத் தோற்கடித்தது சிங்களத் தரப்புத்தான். தமிழ்த்தரப்பு அல்ல. இப்பொழுது தோல்வியுற்ற நிலைமாறு கால நீதியின் குழந்தையாகிய எக்கிய ராஜ்யவை மீண்டும் மேசையில் வைக்கிறார்களா?. கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்து ஒழுங்குபடுத்திய சந்திப்பில் கலந்து கொண்ட அரச தரப்பு பிரதிநிதி எக்கிய ராஜ்யவை ஒரு தீர்வாக மேசையில் முன்வைத்ததாக கஜேந்திரக்குமார் குற்றம் சாட்டுகிறார். அதாவது நிலைமாற்றம் ஏற்படாத ஓர் அரசியல்,ராணுவச் சூழலில் தயாரிக்கப்பட்ட புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அரசாங்கம் மேசையில் வைத்திருக்கிறது என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார். அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா? அல்லது மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமா?என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை இப்பொழுது அரசாங்கத்திடம் உண்டு. மேலும் எக்கிய ராஜ்ஜியவுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனென்றால் யாப்புருவாக்க முயற்சியில் 2015 இலிருந்து 2018 வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தோடு சேர்ந்து உழைத்தது. ஜேவிபியும் சேர்ந்து உழைத்தது. எனவே அந்த இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் இப்பொழுது கூறமுடியும். அதுமட்டுமல்ல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கும் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுவதால் அவர்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்க முடியும் என்று கஜேந்திரகுமார் எச்சரிக்கிறார். ஆனால் கடந்த வாரம் வரையிலும் அவருடன் உறவாக இருந்த டிரிஎன்ஏ நம்புகின்றது, முதலில் மாகாண சபைத் தேர்தல்தான் நடக்கும் என்று. மாகாண சபைத் தேர்தல்களை நோக்கி டிரிஎன்ஏ உழைத்துவருகிறது. மாகாண சபைத்தேர்தலை நோக்கிக் கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து வருகிறது. அது காரணமாக டிரிஎன்ஏக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான நெருக்கம் பெருமளவுக்குக் குறைந்து வருகிறது. அதாவது தமிழ்த்தேசியப் பேரவை ஈடாடத் தொடங்கிவிட்டது. டிரிஎன்னே நம்புவதுபோல மாகாண சபைத் தேர்தல் முதலில் நடந்தால் அதில் முன்னணியைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு புதிய சேர்க்கைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. டிரிஎன்ஏ மாகாண சபைத் தேர்தலில் யாரோடு நின்றால் வெல்லலாம் என்று சிந்திக்கும். அந்த அடிப்படையில் அவர்கள் வீட்டை நோக்கி நகரக்கூடும். மணிவண்ணன் அணியும் சுமந்திரனை நோக்கிச் சாயும் ஏதுநிலைகள் தெரிகின்றன. அதாவது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமாக இருந்தால் அது தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு வாக்கெடுப்பாக அமையும். தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மேலும் விகாரமடையக்கூடும். அது வட,கிழக்கு மாகாண சபைகளில் அரசாங்கம் பலமாகக் காலூன்றுவதற்குத் தேவையான வழிகளை இலகுவாக்கிக் கொடுக்கும். மாறாக,அரசாங்கம் புதிய யாப்புருவாக்க முயற்சியை முதலில் தொடங்கினால், அங்கேயும் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. ஏனென்றால் ஏற்கனவே கஜன் யாப்புருவாக்க நோக்கி முன்னெடுத்த ஐக்கிய முயற்சிகளை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தோற்கடித்து விட்டது. சுமந்திரன் எக்கிய ராஜ்யவை தன்னுடைய உழைப்பின் விளைவு என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே யாப்புருவாக்க முயற்சிகளிலும் தமிழ்த்தரப்பு ஒருமுகமாக ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்? புதிய யாப்பின் முழுமைப்படுத்தப்பட்ட வரைவு முதலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அதன்பின் ஒரு வெகுசன வாக்கெடுப்புக்கு அது விடப்பட வேண்டும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல வெளிப்படைத் தன்மைமிக்க ஒரு கூட்டாட்சிக்கு ஆதரவாக சிங்கள மக்கள் வாக்களிப்பார்களா? சிங்கள மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் வெளிப்படைத் தன்மை குறைந்த ஒரு புதிய யாப்பைத்தான் மேசையில் வைக்கும். எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், மாகாண சபைத் தேர்தலோ அல்லது புதிய யாப்புருவாக்க முயற்சியோ எது முதலில் நடந்தாலும் இறுதியிலும் இறுதியாகத் தோற்கப்போவது தமிழ் மக்களா? https://www.nillanthan.com/7865/
-
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள் October 26, 2025 1:00 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்… அ.நிக்ஸன்- புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் பிரதான சபையான தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். கடந்த ஒரு வருட கால ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் இந்த உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன மத மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையின் தேசிய விவகாரமாக எடுத்து கையாள வேண்டும் என்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடங்களை தேசிய சபை உறுப்பனர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில்தான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்பதற்கான தயார்படுத்தல்களை தேசிய சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, கடந்த செப்ரெம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தமிழ்த்தரப்புடன் போசப்பட்ட விடயங்கள் குறிப்பாக பௌத்த மயமாக்கல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு கடும் தொனியில் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க பங்குபற்றியிருக்கின்றனர். இக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய முறைமைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள், சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் வெளியிட்ட கருத்துக்கள் பற்றியெல்லாம், நிஹால் அபேசிங்க, ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கிறார். இது பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கொழும்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை பற்றியும், புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துகளை உட்புகுத்தி இனப்பிரச்சினைக்குரிய தீர்வை காண்பது பற்றியும் தேசிய சபை உறுப்பினர்கள் உரையாடியுள்ளனர். இந்த உரையாடலின் போது, மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியல் யாப்புக்காக வரைபைத் தயாரித்து அதனை நிறைவேற்றுவது மாத்திரமே அநுர அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவிப்பார் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சில தமிழ் நாளிதழ்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக, அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என சில உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேநேரம், தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தமை பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர். கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளையும் இழைத்த அநீதிகளையும் தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது எனவும், குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும், நிஹால் அபேசிங்க சுவிஸ்லாந்து சந்திப்பில் கஜேந்திரகுமாருக்கு எடுத்துச் கூறிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தி, அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜேவிபியின் தேசிய சபை தீர்மானித்துள்ளது. குறிப்பாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரியவைத்து, ‘இலங்கை இறைமை’ ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்று அனைத்து இனங்களும் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கக்கூடிய புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தேசிய சபை வற்புறுத்தியுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்பதையும் தமிழர்தரப்புக்கு இறுதி முடிவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் பற்றியும் தேசிய சபை தீர்மானித்திருப்பதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை, அதற்கு உடன்பட மறுப்பதாகவும், குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ரில்வின் சில்வா பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆகவே, மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. அதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள ஜேவிபி அல்லாத உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு நிலைப்பாடு உள்ளமை தெரிகிறது. ஆனாலும், ஜேவிபியின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் தமிழர் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஏற்று செயற்படுத்துக் கூடிய முறையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச பயங்கரவாத தடுப்பு பற்றிய இலங்கைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன வலியுறுத்தி எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 13 பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்வுகளின் பிரகாரம், சோஷலிசம் – சமத்துவம் என்ற ஜேவிபியின் பிரதான கொள்கைகளின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு ஏற்ப அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வலுவான செய்தி ஒன்றை ஜேவிபி வெளியிடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 ஐ தவிர்த்து, 2015 இல் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’என்ற அரசியல் யாப்பு வரைபில் உள்ள சில பரிந்துரைகளை மாத்திரம் மீள் பரிசீலனைக்கு எடுப்பது என அநுர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன. https://oruvan.com/restrictions-and-conditions-imposed-by-jvp/
-
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும் adminOctober 25, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன், விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பு.ரவிராஜன், உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசியர் கு. மிகுந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிறின்ஸ் ஜெயதேவன் ஆகியோர் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்னர் என அறியமுடிகிறது. பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய டிசெம்பர் மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார். அதேவேளை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பில் , உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு பேரவைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமொன்று வெளிப்படைத் தன்மையுடன் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2025/221961/
-
இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!
- போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்
போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! By SRI பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. அதன்படி பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் பாதாள உலகக்குழுவினர் என அடையாளப்படுத்தப்படும் பலர் பொதுவெளியில் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. அதுமாத்திரமன்றி அரசாங்கம் பொதுவெளியில் நிகழும் இவ்வாறான படுகொலைகளை பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுவதாகக்கூறி நியாயப்படுத்திவரும் போக்கு தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளிப்படுத்திவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த சுமந்திரன், பாதாள உலக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் அதனைக் காரணமாகக்கூறி பொதுவெளியில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேணவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இவ்வருடத்தில் இதுவரை சுமார் 50 க்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இனிவருங்காலங்களில் இத்தகைய சட்டவிரோத படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார். https://www.battinews.com/2025/10/blog-post_358.html- போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள்
போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் 25 Oct, 2025 | 12:15 PM போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த விபத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன. எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் இந்தப் பெரும் தீயை முழுவதுமாக அணைக்க 10 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/228630- அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை !
அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை ! 25 Oct, 2025 | 11:09 AM அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு வினோதமான இயற்கை நிகழ்வாகும். இந்தச் சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவின் காட்டுப் பகுதிகளில் சிறிய குழிகளை அமைத்து வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இனப்பெருக்கப் பருவம் வரும்போது, இலட்சக்கணக்கான ஆண் மற்றும் பெண் நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி, கடற்கரையை நோக்கிப் படையெடுக்கின்றன. கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை அமைக்க, பெண் நண்டுகள் அவற்றில் முட்டைகளை இட்டு சுமார் இரண்டு வாரங்கள் அடைகாக்கின்றன.நவம்பர் மாதத்தின் மத்தியில், முட்டைகளில் இருந்து வெளிவரும் குட்டி நண்டுகள் கடலுக்குள் செல்கின்றன. இவை கடல் அலைகளில் சுமார் ஒரு மாத காலம் தாக்குப்பிடித்த பிறகு, இளம் நண்டுகளாக மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்குத் திரும்புகின்றன. தற்போது இனப்பெருக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ள நண்டுகள், தீவின் வீதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த வழிகளில் மனிதப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவின் பணிப்பாளர் அலெக்ஸா கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த அற்புதமான பயணத்திற்காகத் தங்களால் முடிந்த அளவு வீதிகளில் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்குத் தொந்தரவாக இருந்ததில்லை." என்று தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின்போது நண்டுகள் பாதுகாப்பாகச் செல்வதற்காகத் தீவின் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். https://www.virakesari.lk/article/228623- க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! 25 Oct, 2025 | 10:51 AM 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. பரீட்சாத்திகளின் பெயர்கள், பாடங்கள் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால், அத்தகைய மாற்றங்களை உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் செய்யலாம் என்றும் ஆணையாளர் நாயகம் தெரவித்துள்ளார். அனைத்து திருத்தங்களும் அக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் உள்ள 2,362 தேர்வு நிலையங்களில் நடைபெறும். பொது தகவல் தொழில்நுட்ப ( GIT ) தேர்வு டிசம்பர் 6 ஆம் திகதி 1,665 தேர்வு நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228615- “ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது!
“ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது! 25 Oct, 2025 | 10:36 AM நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்தல்காரர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைசதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரர் படகு மூலம் கஞ்சா மாத்திரம் கடத்தி உள்ளாரா அல்லது பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உதவி உள்ளரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய “ஆனந்தன்” என்பவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், “ஆனந்தன்” வழங்கிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல்காரர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228620- தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் !
தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் ! 25 Oct, 2025 | 12:37 PM தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில் போற்றப்பட்டவரும் கனடா நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் அரசியற்துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சனின் அன்புத் துணைவியாரும் கனேடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை (25 ஒக்டோபர் 2025) 11.00 மணி முதல் 2.00 மணி வரை Chapel Ridge - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 நடைபெறுகிறது. இந்நிலையில், தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுசீலி பட்டப்படிப்பை முடித்தவர். அங்குதான் அவர் தனது கணவராகிய பேராசிரியர் அல்ஃபிரட் ஜெயரத்தினம் வில்சன் (Prof. A. J. Wilson) அவர்களைச் சந்தித்தார். பேராசிரியர் ஏ.ஜே. வில்சன், இலங்கையின் அரசியல் குறித்துப் பல நூல்களை எழுதிய புகழ் பெற்ற கல்விமானாக விளங்கியவர். பிற்காலத்தில் சுசீலி, ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தொழில்முறை நூலகராக (Professional Librarian) தகுதி பெற்று, தனது கணவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். கனடாவில் குடியேறிய பின்னர், அவர் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தில் (University of New Brunswick) நூலகராகப் பணியாற்றினார். சுசீலி வில்சன், கட்சிக்கும், குறிப்பாக தமிழ்மக்களின் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நினைவுகூருகிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள் மல்லிகா, மைதிலி மற்றும் குமணனுக்கு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228629- உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா
உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய அமெரிக்கப் போர்க் கப்பலாகும். சமீப வாரங்களாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் ஆகியவையும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கப்பல் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmh5y6v47017do29n9l64zn42- வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை!
வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை! வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 13 மணி நேரம் தொடர் மின் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காகவே நாளைய தினம் ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மின் துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது. வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை மேலும் அறிவித்துள்ளது. https://newuthayan.com/article/வடமாகாணத்ததில்__நாளை_13_மணி_நேர_மின்_தடை!- இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்
இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல் adminOctober 24, 2025 யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி நுழைவாயிலில் முன்பாக இடம்பெற்றது. நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 1987 ஒக்டோபர் 11 ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளை தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 26 பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2025/221923/- தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | “தி சாட்டனிக் வெர்சஸ்” நாவல் ஒரு கற்பனைக்காக எழுத்தாளரின் உயிரைக் கேட்க வைத்த நாவல் அ. குமரேசன் வேறு எந்தப் புத்தகமும் இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தடைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டதில்லை எனும் அளவுக்குத் தாக்குதல்களுக்கு உள்ளானது ஒரு நாவல். படைப்பாளி இப்போதும் பொது இடங்களுக்கு வர இயலாமல் பதுங்கி வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் அந்த நாவல் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses) (சைத்தான் வசனங்கள்). இந்தியா விடுதலையடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக, 1947 ஜூன் 19இல், அன்றைய பம்பாய் நகரில், பிறந்தவர் அஹமது சல்மான் ருஷ்டி (Salman Rushdie). குடும்பம் பிரிட்டனில் குடியேறியபோது அங்கே கல்வி பயின்றவர். ருஷ்டி தொடக்கத்தில் ஒரு பதிப்பகத்தில் படிதிருத்துநராக வேலை செய்தார். அது அவருக்குள் இருந்த எழுத்தாளரை உசுப்பிவிட்டது போலும். அவரது முதல் நாவல் ‘க்ரிமஸ்’ புராணக் கதைக் கூறுகளுடன் அறிவியல் புனைவாக வந்தது. இந்தியா சுதந்திரமடைந்த நாளின் நள்ளிரவில் பிறந்த இரண்டு குழந்தைகளின் மூலமாக சமூக மாற்றங்கள் பற்றிப் பேசும் ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ (1981ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது பெற்ற இந்த நாவல், 1994, 2008 ஆகிய ஆண்டுகளில் ‘புக்கர் விருதுபெற்ற நாவல்களில் சிறந்த படைப்புக்கான விருதை இரண்டு முறை பெற்றது), பாகிஸ்தானின் அரசியல், சமூக நிலைமைகளை விமர்சிக்கும் ‘ஷேம்’, குழந்தைகளுக்காக எழுதிய ‘ஹாரூன் அன் தி ஸீ ஆஃப் ஸ்டோரீஸ்’, தென்னிந்தியப் பின்னணியில் பண்பாடுகள் பற்றி விவாதிக்கும் ‘தி மூர்ஸ் லாஸ்ட் சை’, கிரேக்கப் புராணக் கதைகளை இணைக்கும் ‘தி கிரவுண்ட் பினீத் ஹெர் ஃபீட்’, இந்தியப் பேராரியருக்கு நியூயார்க் நகரில் ஏற்படும் கலாச்சார அதிர்வுகளை சித்தரிக்கும் ‘ஃபியூரி’, காஷ்மீர் பின்னணியில் பயங்கரவாதத்துக்கு எதிராக அன்பின் வலிமையை முன்வைத்த ‘ஷாலிமர் தி க்ளோன்’, அக்பர்-பிளாரன்ஸ் காலக்கட்டங்களுக்குச் செல்லும் ‘தி என்சான்ட்டர்ஸ் ஆஃப் ஃபிளாரன்ஸ்’, சிறார் நாவலாகிய ‘லூகா அன் தி ஃபயர் ஆஃப் லைஃப்’, புராணக் கற்பனைகளையும் நிகழ்காலச் சிக்கல்களையும் நியூயார்க் பின்னணியில் ஆராயும் ‘டூ இயர்ஸ் அன் ட்வென்டி எய்ட் நைட்ஸ்’, டொனால்ட் டிரம்ப் காலக்கட்ட அமெரிக்கப் பின்னணியில் ஒரு மர்மமான குடும்பத்தை அறிமுகப்படுத்தும் ‘தி கோல்டன் ஹவுஸ்’, நவீன காலத்தில் அடையாளத் தேடல் பயணம் பற்றி விவரிக்கும் ‘குயிக்சோட்’, ஒரு பெண்ணின் ஆற்றல் ஓர் அரசாட்சியையே நிறுவுவதாகக் கூறும் ‘விக்டரி சிட்டி’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைத் தொகுப்பு, தன் வரலாறு, நினைவுக் குறிப்புகள் ஆகிய நூல்களும் வந்துள்ளன. பதற்றங்களும் ஃபத்வாவும் ருஷ்டியின் நாவல்கள் பெரும்பாலும் புராணக் கதைக் கூறுகளும், மதநூல்களின் கருத்துகளும் கலந்து நவீன வாழ்க்கையைப் பேசுகின்றன என்று செயற்கை நுண்ணறிவுத் துணைகள் தெரிவிக்கின்றன. இவரது நான்காவது நாவல்தான் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses). 1988இல் லண்டனில் வெளியாகிப் பலநாடுகளுக்கும் பயணப்பட்ட இந்த நாவலுக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் எழுந்தன. புத்தகப் படிகள் தீக்கிரையாக்கப்பட்டன. புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன பாகிஸ்தான் அரசு புத்தகத்தை இறக்குமதி செய்யவோ விற்கவோ கூடாதென்று தடை விதித்தது. அடுத்த ஆண்டிலேயே இந்தியாவிலும், ராஜீவ் காந்தி அரசு, படைப்புச் சுதந்திரத்திற்குத் துணையாக நிற்பதற்கும் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மாறாக, புத்தகத்திற்குத் தடை விதித்தது. மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல அரசாங்கங்கள் தடை விதித்தன. ஈரான் நாட்டு அரசுத் தலைவரும் இஸ்லாம் தலைமை குருவுமான அயதுல்லா கோமெய்னி, புத்தகத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்தாளரின் உயிர்வாழ்க்கைக்கே தடை விதித்தார். “ஃபத்வா” எனப்படும் அந்த ஆணையின்படி உலகில் எங்கேயும் இருக்கக்கூடிய மத விசுவாசிகள், ருஷ்டியை எங்கே கண்டாலும் கொலை செய்யலாம். கொல்ல வாய்ப்பில்லாதவர்கள் அவர் இருக்குமிடம், நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களைக் கொல்லக்கூடியவர்களுக்கு அளிக்கலாம். ஒரு புனிதக் கடமையாக அறிவிக்கப்பட்ட இந்த ஃபத்வாவைத் தொடர்ந்து வன்முறைகள் தீவிரமடைந்தன. ஜப்பான் நாட்டில் மொழிபெயர்ப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைத்தூதரையும், மார்க்க போதனைகளையும் இழிவுபடுத்திவிட்டார் என்பதே ருஷ்டி மீதான குற்றச்சாட்டுகளின் சாரம். மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளித்தது. பல ஆண்டுகள் கழித்து, பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றிவர விரும்புவதாக அவர் அறிவித்தார். ஆனால் ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் இடுப்பில் கத்திக்குத்து பட்டு காயமடைந்தார். மறுபடி பாதுகாப்பு வளையத்திற்குள் பதுங்க வேண்டியதாயிற்று. அவருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய திறனாய்வாளர்கள், நாவலில் அப்படி இழிவுபடுத்துகிற நோக்கம் எதுவும் இல்லை என்றார்கள். விமர்சிக்கப்படுகிற பகுதி இலக்கியப்பூர்வமான கற்பனைச் சித்தரிப்புதான் என்று கூறினார்கள். மார்க்கம் சார்ந்த பலர் புலம்பெயர்ந்தவர்களாகப் பல நாடுகளில் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கிற நாவல்தான் இது என்றார்கள். எந்த மக்களுக்காக அவர் தன் படைப்பின் மூலம் பேசுகிறாரோ அந்த மக்களைச் சேர்ந்தவர்களே அவரைக் கொலை செய்யத் துடிப்பது துயரமானது என்றும் கவலை தெரிவித்தார்கள். இவ்வாறு ருஷ்டிக்கு ஆதரவாக எழுதியவர்களில் மதம் சார்ந்தவர்களும் இருந்தது கவனத்திற்குரியது. சமூகப் பொறுப்பு படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எப்போதும் தோள்கொடுக்கிறவர்களிலும் சிலர், படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு சமூகப் பொறுப்பும் முக்கியமானது. நம்பிக்கைகள் சார்ந்தவற்றை விமர்சிக்கிறபோது கூட நம்புகிறவர்கள் ஏற்கத்தக்க வகையில் நுட்பமாக அந்த விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்றார்கள். படைப்புச் சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா அல்லது தோழமையானவையா என்ற விவாதம் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இந்த நாவலையும் நாவலாசிரியரையும் எதிர்த்துக் கிளம்பியவர்கள் எல்லோரும் புத்தகத்தை ஒரு தடவையாவது வாசித்திருப்பார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தாங்கள் நேரடியாகப் படித்து ஒரு முடிவுக்கு வராமலே, சமூகத் தலைவர்கள் அல்லது இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கிளப்புவதே வேலையாக இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதாலேயே சுயமான சிந்தனை ஏதுமின்றி வன்முறைக்குத் தயாராகிறவர்கள் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் சாதிகளிலும் இன்னபிற அமைப்பிகளிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்? இருவரின் கதை ருஷ்டியின் மாய மெய்யியல் சித்தரிப்புத் தன்மையுடன் புத்தகம் சொல்கிற கதை என்ன? இந்தியாவில் இந்தித் திரைப்பட உலகம் சார்ந்த இருவர் இதன் நாயகர்கள். கிப்ரயீல் ஃபரிஷ்டா நட்சத்திர நடிப்புக் கலைஞர். சலாவுதீன் சாம்ச்சா இங்கிலாந்தில் வேலை செய்யும் பின்னணிக் குரல் கலைஞர். ஃபரிஷ்டா பக்திப் படங்களில் இந்து தெய்வங்களாக வந்து புகழ்பெற்றிருப்பவர். சாம்ச்சா தன் தந்தையுடனும் இந்தியச் சூழலுடனும் ஒத்துப்போக மறுத்து லண்டனில் குடியேறியவர். இவர்கள் இருவரும் பயணிக்கும் விமானத்தை மற்ற பயணிகளோடு சேர்ந்து கடத்துகிறது பஞ்சாப் தனிநாடு தீவிரவாதக் குழு. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விமானத்தை ஆற்றின் மேல் பறக்க வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். மற்ற அனைவரும் மாண்டுவிட, ஃபரிஷ்டாவும் சாம்ச்சாவும் மாயமான முறையில் உயிர் பிழைக்கிறார்கள். ஃபரிஷ்டா இறைத்தூதர் கிப்ரயீல் போலவும், சாம்ச்சா ஒரு சாத்தான் போலவும் உருமாறுகிறார்கள். ஃபரிஷ்டா தலையின் பின்னால் அவ்வப்போது ஒளிவட்டம் தோன்றுகிறது, சாம்ச்சாவுக்கு ஆட்டுக் கொம்புகளும் கால்களும் முளைக்கின்றன. சம்ச்சாவை ஒரு சட்டவிரோதக் குடியேறி என்று சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் கைது செய்து அவமதிக்கவும் செய்கின்றனர். ஃபரிஷ்டா தனது முன்னாள் காதலியான ஆலியா என்ற மலையேற்ற வீரரைக் கண்டுபிடித்துச் சேர்கிறார். இருப்பினும், தன்னை இறைத்தூதராகக் கருதுவதன் மனச்சிதைவுக்கு உள்ளாக அவர்களது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. லண்டனில் மதப் பரப்புரையில் ஈடுபட முயல்கிறார் ஃபரிஷ்டா. அந்த முயற்சி தோல்வியடைகிறது. தெருவில் இறங்கி நடக்கும் ஃபரிஷ்டா மீது திரைப்படத் தயாரிப்பாளர் சிசோடியா கார் மோதுகிறது. அவர் ஆலியாவுடன் சேர்ந்து ஃபரிஷ்டாவை மனச்சிதைவு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். சாம்ச்சாவின் தோற்றமும் நடத்தையும் தீவிரமடைகின்றன. விமான வெடிப்பில் அவர் இறந்துவிட்டதாக நம்பும் அவரது மனைவி பமீலா, நண்பர் ஜம்பி ஜோஷி இருவரும் உறவைத் தொடங்கியிருப்பது தெரியவர மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஜம்பி ஒரு விடுதியை நடத்தும் குடும்பத்தினருடன் அவரைத் தங்க வைக்கிறார். கைது செய்யப்பட்ட நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாக்காததாலும், விமான விபத்துக்குப் பிறகு கைவிட்டதாலும் ஃபரிஷ்டா மீது அ சாம்சாச்சாவுக்குக் கோபம் ஏற்படுகிறது. அவரது சாத்தான் தோற்றம் தீவிரமடைந்து பின்னர் மனித உருவத்துக்குத் திரும்புகிறார். ஃபரிஷ்டாவின் திரையுலக வெற்றியிலும் காழ்ப்பு கொள்ளும் சாம்ச்சா அவரைப் பழிவாங்க எண்ணுகிறார். ஃபரிஷ்டாவின் மனச்சிதைவை அறியும் சாம்ச்சா, தொலைபேசி மூலம் வெவ்வேறு குரல் பதிவுகளையும், ஆலியா பற்றிய விவரங்களையும் பயன்படுத்தி , தவறான எண்ணம் வரச் செய்து. அவர்களுடைய உறவைச் சிதைக்கிறார். சாம்ச்சா, ஜம்பி, பமீலா மூவரும் கருப்பின மக்கள் நலச் செயல்பாட்டாளர் டாக்டர் உஹுரு சிம்பா ஆதரவுப் பேரணியில் பங்கேற்கிறார்கள். தொடர் கொலைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்படும் சிம்பா,. சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துவிடுகிறார். சமூகக் கண்காணிப்பில் ஈடுபடும் சீக்கிய இளைஞர்கள் உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள் – அவன் ஒரு வெள்ளையன். ஒரு தெற்காசிய இரவு விடுதியில் காவல்துறை சோதனை நடத்துகிறது. அதனால் கலவரம் தூண்டப்படுகிறது. காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் தகவல்களை விநியோகிக்க பமீலாவும் ஜம்பியும் திட்டமிடுகிறார்கள், ஆனால் முகமூடி ஆசாமிகள் கட்டடத்திற்குத் தீவைத்து, ஆதாரங்களை அழித்து இருவரையும் கொல்கிறார்கள். கலவரக்காரர்களால் எழும் தீப்பிழம்புகள் தனது அற்புத மகிமையின் விளைவு என்று நம்புகிறார் ஃபரிஷ்டா. தொலைபேசியில் வந்த தவறான தகவல்களுக்கு சாம்ச்சாவே காரணம் என்பதை அறியும் ஃபரிஷ்டா அவரைக் கொல்லும் எண்ணத்துடன் புறப்படுகிறார். தீப்பற்றி எரியும் கட்டடத்திற்குள் சிக்கியிருக்கும் விடுதிக் காப்பாளரையும் அவரது மனைவியையும் காப்பாற்ற முயல்கிறார் சாம்ச்சா. அதைக் காணும் ஃபரிஷ்டா கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்குகிறார். இருவரும் இந்தியா திரும்புகிறார்கள். ஃபரிஷ்டா திரைப்படங்களில் நடிக்கிறார். அந்தப் படங்கள் தோல்வியடைகின்றன. சிசோடியா-ஆலியா இருவரும் கொல்லப்படுகிறார்கள். சாம்ச்சா, மனத்தாங்கலுடன் பிரிந்திருந்த தனது தந்தையைப் பார்க்கச் செல்கிறார். சிசோடியாவையும் ஆலியாவையும் கொன்றது ஃபரிஷ்டாதான் என்று அவரிடமிருந்து தெரியவருகிறது. சாம்ச்சாவின் தந்தை இருக்கும் பண்ணைக்குச் சென்று, அவரைக் சுடப் போவது போலத் துப்பாக்கியை நீட்டுகிறார். சில நொடிகளில் துப்பாக்கியைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொள்கிறார். தந்தையுடன் சமாதானமாகும் சாம்ச்சா தனது இந்திய அடையாளத்திலும் இணக்கம் கொள்கிறார். கோபத்திற்குக் காரணம் இந்தக் கதையில் நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டதாகக் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? ஃபரிஷ்டாவின் மூன்று கனவுகள் இருக்கின்றன. முதல் கனவில், ஜாஹிலியா நகரில் (மெக்கா நகர அடையாளமாக இப்படியொரு நகரம்) இறைத்தூதர் தனக்கு இறைவனால் அருளப்பட்ட வசனங்களைச் சொல்கிறபோது, பழைய தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அதே போனற வேறு சில வழிகாட்டல்களையும் கூறுகிறார். பின்னர், அவை சாத்தானின் வேலையால் தவறாகச் சொல்லப்பட்டுவிட்டன என்றும், உண்மையில் அவை இறைவனால் சொல்லப்பட்டவையல்ல என்றும் கூறுகிறார். நகரத்தைக் கைப்பற்றும் தூதருக்கு இரண்டு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர், வேற்று மதப் பூசாரி. இன்னாருவர் எதையும் சந்தேகிக்கிற பகடிப் புலவர். நகரம் கைப்பற்றப்படும்போது ஒரு பாலியல் விடுதியில் பதுங்கிக்கொள்கிறார் அங்குள்ள பெண்களுக்கு தூதரின் மனைவிகளுடைய பெயர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. தூதரிடமிருந்து தப்பிக்கும் ஒருவன், தனக்கு அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறான். அவர் உண்மையிலேயே தனக்கு இறைவன் சொன்ன வசனங்களில் சிலவற்றை மாற்றிவிட்டார் என்றும் கூறுகிறான். இவையெல்லாம், இறைத்தூதர் மீதான நம்பிக்கையைச் சிதறடிப்பதாக இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இரண்டாவது கனவில், இந்தியாவைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணான ஆயிஷா, தனக்கு இறைத்தூதரின் அருள் கிடைத்ததாகக் கூறி, மக்களை அழைத்துச் செல்கிறாள். அரபிக் பெருங்கடல் குறுக்கிடுகிறது. இறையருள் இருப்பதால் கடல்நீர் மீது அவர்கள் நடக்க முடியும் என்கிறாள். அதைக் கேட்டு கடல் மீது நடக்கிறபோது, அவர்கள் நீரில் மறைகிறார்கள். அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்றும், இல்லை இறையருளால் புனித நகரத்தை அடைந்துவிட்டார்கள் என்றும் இருவிதமாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது கனவில் மதவெறியரான இமாம் என்பவர் வருகிறார். அவர், இடைறத்தூதராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஃபரிஷ்டாவை, தன்னால் நாடுகடத்தப்பட்ட ஆயிஷா என்ற அரசியுடன் செயற்கையாகப் போரில் ஈடுபட வைக்கிறார். இத்தகைய சித்தரிப்புகள் வரம்புமீறிவிட்டன, தூதரின் சொற்களில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன என்ற விமர்சனங்கள்தான் விபரீதங்களாக உருவெடுத்தன. இறைத்தூதர், புனித நகரம் ஆகிய பெயர்களைக் கற்பனையாகப் புனைந்தவர், இவற்றையும் வேறு வகையில் கொண்டுவந்திருக்க முடியும் என்ற கரிசனக் குரல்களும் கேட்கின்றன. ஆயினும், ஃபத்வா அறிவித்து ஒருவரின் வெளியுலகை இருட்டடிப்பு செய்வது ஏற்க முடியாதது என்ற படைப்புரிமைக் குரல்களும் உரக்க எழுகின்றன. ஒரு படைப்பில் தவறான சித்தரிப்பு இருப்பதாகக் கருதப்படுமானால், அது தவறு என்று சுட்டிக்காட்டவும், சரியானது எது என்று எடுத்துக்காட்டவுமான வாய்ப்பை விமர்சிக்கிறவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேயன்றி இப்படி ஆளை ஒழிக்கும் பாதையில் செல்வது நாகரிகக் காலத்திற்குப் பொருந்ததாதது. மேலும் அது மார்க்கத்தினர் அனைவருமே சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த உணர்வுகளும் மேலோங்க, அந்த “பத்வா” ஆணையை விலக்கிக்கொள்வதற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை. ஏனென்றால், மதவிதிகளின்படி ஃபத்வா ஆணையைப் பிறப்பித்தவர் யாரோ அவரேதான் விலக்கிக்கொள்ளவும் அதிகாரம் உள்ளவர். ஆனால் அயதுல்லா கோமெய்னி காலமாகிவிட்டாரே… எதிர்காலத்தில் எந்த மதம், எந்த அமைப்பானாலும் இப்படிப்பட்ட தண்டனை ஆணைகளைப் பிறப்பிக்கிற அதிகாரங்கள் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை மனித நேய மத நம்பிக்கையாளர்கள் எழுப்புவது சிறந்ததொரு சேவையாக அமையும். அதற்கொரு இணக்கத் துணையாக, தி சாட்டனிக் வெர்சஸ் (The Satanic Verses) இந்த நாவல் 1988ஆம் ஆண்டுக்கான ஒயிட்பிரெட் விருது (இப்போது கோஸ்டா புத்தக விருது என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையையும் பெற்றது. https://bookday.in/books-beyond-obstacles-17-salman-rushdies-the-satanic-verses-novel-based-article-written-by-a-kumaresan/- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
ஏகலைவன் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் துரோணாச்சாரியாரின் கண்காணிப்பின் கீழ் கௌரவர்களும் பாண்டவர்களும் தீவிர பயிற்சி பெற்று வந்தனர். அப்பொழுது அர்ஜுனனுக்கு மட்டும் அவர் தனிக்கவனம் கொடுப்பதாக துரியோதனன் குற்றம் சாட்டினான். அதை பொய் என்று நிரூபிப்பதற்காகவும், அர்ஜுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு ஒரு போட்டி ஒன்றை துரோணர் ஏற்பாடு செய்தார். அங்கே இருந்த மரத்தின் உச்சி கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பழத்தை ஒரே கணையில் வீழ்த்த வேண்டும் என்பதே போட்டி. அங்கிருந்த அனைவரும் முயன்றும் யாராலும் அப்பழத்தை வீழ்த்த இயலவில்லை. அர்ஜுனன் அதை ஒரே அம்பில் வீழ்த்தினான். அப்பொழுது அவர்களிடம் நீங்கள் கணையை தொடுக்க குறி வாய்த்த பொழுது உங்கள் கண்ணில் பட்டது என்ன என துரோணர் கேட்டார். ஒவ்வொருவரும் , கிளை, இலை பின் பழம் என சொல்ல அர்ஜுனனோ தன் கண்களுக்கு அப்பழம் மட்டுமே தெரிந்தது எனக் கூறினான். இந்த ஒரு பதிலிலேயே அங்கிருந்தவர்களில் மிக சிறந்த வில்லாளி யாரென்று அனைவருக்கும் புரிந்தது. பிரதம சீடனை மிஞ்சிய வேடுவ இளவரசன் ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் துளி இரத்தமும் சிந்தவில்லை. அந்த வித்தையை கற்றவர் யார் என்று அனைவரும் யோசிக்க அப்பொழுது அங்கே வந்த நிஷாத நாட்டு இளவரசன், துரோணரை வணங்கி “என் பெயர் ஏகலைவன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை வணங்கினான். அப்பொழுதுதான் முன்பு நடந்த சம்பவம் அவரது நினைவிற்கு வந்தது. சில காலம் முன்பு அவரிடம் வந்த ஏகலைவன் தன்னை சிஷ்யனாக ஏற்கும்படி வேண்டினான். ஆனால் குரு வம்சதிற்கு குருவாக இருந்த காரணத்தினால் நிஷாத நாட்டு இளவரசனை அவரால் சிஷ்யனாக ஏற்க முடியாது என மறுத்துவிட்டார். “குருவே! உங்கள் உருவத்தை மண்ணால் செய்து வைத்து தினமும் உங்களை வணங்கி வில் பயிற்சி செய்துவந்தேன். உங்கள் கருணையால் நான் நன்கு கற்று வருகிறேன்” என அவன் கூறினான். அவன் கூறியதை கண்டு வியந்த துரோணர், இப்படி ஒரு வில்லாளி இருப்பது என்றும் குரு வம்சத்திற்கு ஆகாது என மனதில் நினைத்துக் கொண்டார். பின் அவனிடம் “நீ நன்கு கற்று தேறி வருவது மகிழ்ச்சியே! ஆனால் , குரு தக்ஷிணையாக என்ன தரப்போகிறாய்?” எனக் கேட்டார். ஏகலைவனும் பணிவுடன் அவர் விரும்பும் தக்ஷணையை தருவதாகக் கூறினான். “அப்படியானால் உனது வலது கை கட்டை விரலை எனக்குத் தருவாயாக” என கேட்டார். அவர் கூறியவுடன் எந்தவித கோபமோ வருத்தமோ தயக்கமோ இன்றி தனது வலது கட்டை விரலை வெட்டி அவரது காலடியில் சமர்ப்பித்தான் ஏகலைவன். தோல்வியான வெற்றி சிறு வயதிலேயே தனது சகோதர்கள் அனைவரையும் விட பெரிய உடலையும், அதிக பலத்தையும் பெற்றவனாக பீமன் இருந்தான். தன் பலத்தை தன் சகோதரகளைக் காப்பாற்ற பயன்படுத்திய அதே சமயத்தில் கௌரவர்களை துன்புறுத்தவும் உபயோகித்தான். இதனால் எரிச்சலடைந்த துரியோதனன், பீமனை கொல்ல சதி திட்டம் தீட்டினான். ஒருமுறை கங்கைக் கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் , பீமனின் உணவில் விஷத்தைக் கலந்து விட்டான். அது தெரியாத பீமன் அந்த உணவை உண்டு மயங்கிவிட, மற்ற சகோதரர்களின் உதவியுடன் அவனை கயிற்றில் கட்டி, கங்கையின் ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டான். பீமன் வீழ்ந்த இடத்தில கொடிய நாகங்கள் வாழ்ந்து வந்தன. பீமனை அவை கடிக்க, அவற்றின் விஷம் ஏற்கனவே அவன் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தின் முறியடிக்க, பீமன் புத்துயிர் பெற்று எழுந்தான். தாங்கள் கடித்தும் அவன் இறக்காதது கண்டு அதிர்ச்சியடைந்த பாம்புகள் தங்கள் தலைவனான வாசுகியிடம் சென்று முறையிட்டு பீமனை அங்கே கொண்டு வந்தன. பீமனைக் கண்டவுடன் அவன் குரு வம்ச இளவரசன் என அடையளாம் கண்டுகொண்ட வாசுகி , பீமனின் உடல் நலம் தேற அவர்களின் அபூர்வ மருந்தை அவனுக்கு கொடுத்தது. அதைக் குடித்தவுடன் பீமனுக்கு ஆயிரம் யானை பலம் வந்தது போல் உடல் புத்துணர்வு பெற்றது. அந்த மருந்து மேலும் கிடைக்குமா என அவன் கேட்க, மேலும் ஏழு குவளை மருந்து அவனுக்கு தரப்பட எட்டு குளிகை மருந்தை குடித்து புதிய பலம் பெற்றான் பீமன். அதைக் குடித்தவுடன் அவனுக்கு தூக்கம் சொக்க, ஒரு வார காலம் வாசுகியின் அரண்மனையில் தங்கி ஓய்வெடுத்தான். பின், அவனிடம் விடைபெற்று கரைக்கு திரும்பினான். இறந்துவிட்டான் என கௌரவர்கள் நினைத்த பீமன், புத்துணர்வுடனும் புதிய பலத்துடனும் வருவது கண்டு துரியோதனன் தன்னைத் தானே நொந்து கொண்டான். https://solvanam.com/2025/05/25/ஏகலைவன்/- வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை
வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:14 AM பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் , அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் , யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர் யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற , ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” (Northern Entrepreneur Awards – 2025) நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (National Enterprise Development Authority – NEDA) மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குரியது. வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன. வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 ற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம். அன்பான தொழில் முனைவோரே வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள் கிடைப்பதன் முலம் நீங்கள் பெறும் நன்மைகள் 1. அங்கீகாரமும் நம்பகத்தன்மையும் (Recognition & Credibility) 2. இலவச சந்தைப்படுத்தலும் (Free Publicity & Marketing) 3. வலுவான வலையமைப்பு (Stronger Networking) 4. ஊழியர்களின் மனதளவவிலான தன்னம்பிக்கை உயரும் (Employee Morale & Retention) 5. உங்கள் வியாபார வளர்ச்சியில் இன்னுமொர் அத்தியாயத்தின் வாயில் (Gateway to Business Growth) 6. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகக் குறி மதிப்பு அதிகரிப்பு (Personal & Brand Equity) விருதுகள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் படிக்கட்டுக்கள் . விருதுகளுக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் செயல்முறை தான் உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை நீங்களே ஒருமுறை மதிப்பாய்வு செய்ய கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர். https://jaffnazone.com/news/51566- யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம் வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:45 AM யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை வழங்கி , அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி ,அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு , அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து குறித்த நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://jaffnazone.com/news/51571- கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்
கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள் October 24, 2025 10:36 am குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், ஐந்து பிரபல நடிகைகள் மற்றும் ‘மிஸ் இலங்கை’ கிரீடம் வென்ற ஒரு மாடல் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, அவர்கள் ஆறு பேருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறை இந்த ஆறு பெண்களையும் அழைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவரது கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில், பிரபல நடிகை ஒருவர் தனது காதலனுடன் இருக்கும் ஆபாச காணொளி தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மற்ற ஐந்து நடிகைகளின் புகைப்படங்களும், ‘மிஸ் இலங்கை’ மாடலின் புகைப்படங்களும் அந்த கையடக்க தொலைபேசியில் காணப்பட்டன. பெரும்பாலான புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவுடன் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது. https://oruvan.com/pornographic-videos-on-kehelbaddara-padmes-phone-actresses-summoned-for-questioning/- வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்
வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன் October 24, 2025 10:59 am இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். இதனோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். எனினும், போர் முடிவடைந்து பல வருடங்ககள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. படுகொலை குறித்து கடந்த அரசாங்கமும் விசாரணை செய்யவில்லை, இந்த அரசாங்கமும் விசாரணை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாகவே உள்நாட்டு பொறிமுறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். உள்ளக பொறிமுறைமூலம் குற்றமிழைத்தவர்களை தண்டிக்க முடியாது. எனவேதான் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்.” எனவும் க. கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார். https://oruvan.com/white-flag-issue-international-investigation-needed-billionaire/- போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி
போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி October 24, 2025 அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வியாழக்கிழமை (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் அரசியல் நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்தக் குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும், அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.ilakku.org/the-entire-country-must-unite-to-eradicate-the-drug-scourge/- கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு
கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு லக்ஸ்மன் ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம். இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற தோரணையில் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை அரசுக்கு மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் இப்போது சத்தமின்றி இருக்கிறார். சூத்திரதாரியைக் கைது செய்வோம். தண்டனை வழங்குவோம் என்று கூறிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்குட்படுத்தியது. பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி ரவீந்திரநாத்தின் கொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.இருந்தாலும், அவரது கைதின் பின்னர் அவ்விடயம் எதுவுமற்றதாக அமைதியடைந்து விட்டதாகவே தெரிகிறது. பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உட்பட 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலம் முதலே வெளிவந்திருந்தன. பிரித்தானியாவின் செனல் 4 கூட இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் சம்பந்தம் குறித்து அவருடைய செயலாளராக இருந்த அசாத் மௌலானாவின் தகவல்களை உள்ளடக்கியதாக ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. சூத்திரதாரி, சம்பந்தப்பட்டவர்கள், ஒத்தாசையாக இருந்தவர்கள், குற்றவாளிகள், தகவல் வழங்கியவர்கள் என இக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இதுவரையில் உண்மையானவர்கள் என்று யாரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக, இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய குண்டுதாரிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதுதான் இப்போது வரையில் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ஷக்களின் திட்டமே. இலங்கை என்ன சொல்கிறது? என்ற செனல் 4 இன் கேள்வியுடனேயே இருக்கும் விடயமாக உயிர்த்த ஞாயிறு விவகாரம் முடிவின்றி இருக்கிறது. உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பு சேர்ந்து பலரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த அமைப்பினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. சஹ்ரானின் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்தும், தடுப்பதற்குரிய கால அவகாசம் இருந்தும் ஏன் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை? என்று குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. ஆனால், பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த வாரத்தில், பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்ததாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து முடிந்திருந்தன. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும், இந்தியாவே பிரதான சூத்திரதாரி என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன எவ்விடத்திலும் கூறவில்லை. போலியான விடயங்களை சமூக மயப்படுத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதற்காக இந்தியாவின் பெயர் இதற்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றியோ, இத் தகவல் எவ்வாறு வெளியே வந்தது என்பது பற்றியோ அவர் கருத்து வெளியிடவில்லை. இது ஆராயப்பட வேண்டியதே. ஆனால், இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன அத் தகவலை மறுத்து பொலிஸ் தலைமையகத்தினால் ஊடகங்களுக்குச் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. அத்துடன், அது காணாமல்போனது. அதே நேரத்தில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்தபோதிலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரும் ரீட் மனு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சுராச் நிலங்க ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 14ஆம் திகதி பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றின்மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த ரிட் மனுவை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று இதுவரையில் ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், அதற்குள் மூன்று ஜனாதிபதிகள் பதவிக்கு வந்திருக்கின்றனர். ஒருவர் தாக்குதல் நடத்தப்பட்டமையைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தவர். அடுத்தவர் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஆட்சிக்கு வந்தவர். தற்போதிருப்பவர் தாக்குதலை நடத்துவதற்குக் காரணமானவர்களைப் பாதுகாத்தார் எனப் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கித் தான் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர். எவ்வாறானாலும், வாய் வார்த்தைகளை மாத்திரமே எல்லோராலும் அடுக்கி விட முடியும். செயலில் நடத்திமுடிப்பதென்பது சாதாரணமானதல்ல என்பதுதான் இப்போது நிரூபிக்கப்பட்டுவருகிறது. போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் நேபாளம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்து வந்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க, அறிவிக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது. விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும், கர்தினால் மல்கம்ரஞ்சித் ஆண்டகை ஆணைக்குழுவின் விசாரணையில் திருப்தியில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்றுகோரிவந்தார். அன்றைய அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லாமலேயே அவர் இந்த நிலைப்பாட்டுடன் இருந்து வந்தார். புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதில் பலரும் பங்கு அவருக்கும் இருக்கிறது என்றே கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த பின்னர் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பெருந்தொகையானவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் நீர்கொழும்பு சென்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தார். இருந்தாலும், எதுவுமே நடைபெறாது நீண்டுகொண்டே செல்வதானது ஏன், எதனால் என்பது வெளியாகவில்லை. ஆரம்பத்திலிருந்து பல்வேறு வினாக்களுடனேயே இருக்கும் விடயம் இப்போதும் தொடர்கிறது என்றால், அரசின் இயலாமையா, பாதுகாப்பு, விசாரணைத் தரப்பின் குறைபாடா? என்றும் கேள்வியை எழுப்புகிறது. அந்தவகையில், வினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதும் கேள்விதான். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கேள்விகளுடன்-உயிர்த்த-ஞாயிறு/91-366740 - போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.