Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம் October 31, 2025 8:38 am இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. மேலும், 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது, ஆண்டுதோறும் சராசரியாக 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் 12 வருட காலப்பகுதியை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது. ஆண்டுக்கு 0.5% என்ற இந்த மிதமான அதிகரிப்பு வீதம், நாட்டின் பிறப்பு வீதம், இறப்பு வீதம் மற்றும் நிகர குடியேற்ற வீதம் ஆகிய காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவை சுட்டிக்காட்டுகிறது. 2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, நாடுபூராகவும் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை காணமுடிகிறது. 2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர். இதற்கமைய, சுமார் 239,144 க்கும் மேற்பட்ட சனத்தொகை வித்தியாசம் காணப்படுகிறது. மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீதம் குறைந்து 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதோடு, தமிழ் பேசும் முஸ்லிம் மககளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 2,269,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,681,627ஆக காணப்படுகின்றனர். மேலும் 2012 ஆம் ஆண்டு 1,892,638 ஆக காணப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,283,246 ஆக காணப்படுகின்றனர். https://oruvan.com/sri-lankas-population-reaches-21-million-males-make-up-48-3/
  2. சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா October 31, 2025 11:09 am தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றதோடு, ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க சீ ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.”ஃபெண்டானில் நிலைமையை கவனித்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்திருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என நான் நம்புகிறேன். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைத்துள்ளேன். இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47 சதவீதமாக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கான ஒப்பந்தம். எனினும், இந்த ஒப்பந்தம் தொடரும் என நம்புகிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் மீண்டும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம்.நான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு சீன அதிபர் சீ ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய புவி கனிய மணல்கள் குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. அது உலகத்துக்கானது. தாய்வான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம். இதில், ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது குறித்து நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம். சீ ஜின்பிங் எங்களுக்கு உதவப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/us-reduces-import-tariffs-on-china-by-10-percent/
  3. பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! October 31, 2025 8:49 am சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/sri-lankan-found-dead-on-belarus-latvia-border/
  4. அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு October 31, 2025 அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். “பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்து ஆண்டுகளில் நாம் சமமாக இருப்போம்” என்று டிரம்ப் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் அபாரமான அழிக்கும் சக்தியை கொண்டுள்ளன என்று அங்கீகரிக்கும் டிரம்ப், ஆயுதங்களை மேம்படுத்துவதை தவிர தனக்கு “வேறு வழியில்லை” என்றும் கூறியுள்ளார். https://www.ilakku.org/trump-orders-immediate-testing-of-us-nuclear-weapons/
  5. கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்… October 31, 2025 ”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார். மாகாண சபைத் தேர்தல் விரைந்து நடக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இதில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம். எனினும், எங்களுடைய கட்சியில் அங்கத்தவராக இருப்பவர்தான் கட்சி என்றும் எடுக்க மாட்டோம். யாழ்ப்பாணத்திலோ – வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச் செயற்பட்டுக் கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.” – எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் மேலும் குறிப்பிட்டார். https://www.ilakku.org/chief-ministerial-candidate-from-within-the-party-tamil-nadu-partys-manifesto/
  6. சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு… October 31, 2025 சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார். https://www.ilakku.org/சூடானில்-மருத்துவமனை-மீத/
  7. மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை! 31 Oct, 2025 | 11:38 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெவில் வன்னியாராச்சியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஒக்டோபர் 02 ஆம் திகதி முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229119
  8. இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை 31 Oct, 2025 | 11:01 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார். இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். 2025 ஜூன் 16 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, இருதரப்பினரும் இந்தியா-இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பிற்கான தொழில்நுட்ப அளவுருக்களை (Technical Parameters) உறுதிப்படுத்தியிருந்தனர். இந்த மின் பரிமாற்ற இணைப்பு இலங்கைக்குப் பல முக்கியமான நன்மைகளை வழங்கும், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும். உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (Renewable Energy) ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஏற்றுமதிகள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை (Grid Stability) மேம்படுத்தவும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைக்கவும் புதிய வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும். இந்த முக்கியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229112#google_vignette
  9. தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா? 31 October 2025 தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும். அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2024' சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது. மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/428276/sri-lanka-named-south-asias-most-expensive-country-do-you-know-how-many-places
  10. யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது! adminOctober 31, 2025 யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது கடந்த மூன்று தினங்களிலும் , ஐஸ் போதைப்பொருள் , ஹெரோயின் , கஞ்சா கலந்த மாவா , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 08 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/222106/
  11. எனக்கும் மூன்று புள்ளிகள் கிட்டுமாக்கும்🥳😆
  12. யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு..! Vhg அக்டோபர் 30, 2025 யாழ்ப்பாண முஸ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண் காட்சிகள் என்றுமில்லாதவகையில் 2025, அக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இடம்பெறுவதை காணலாம். நல்ல விடயம் கட்டாயம் அந்த நினைவுகளும் மீட்டுப்பார்க்க வேண்டியது. ஆனால் இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.? அதற்கான காரணம் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது? இந்த உண்மைகளையும் ஏற்பாட்டாளர்கள் காட்சிப்படுத்த வேண்டும் அந்த வரலாறுகளையும் இவ்வாறான நினைவுரைகளை ஆற்றும் அறிஞர்கள் கூறவேண்டும். அந்த காரணத்தை மறைத்து வெளியேற்றியது தவறு. இனசுத்திகரிப்பு, என வரைவிலக்கணம் வழங்குவது பக்கசார்பான உரைகளாகவே அமையும் ஈழவிடுதலை போராட்டம் 1977, க்கு பின்னர் இளைஞர் அமைப்புகள் 36, தோற்றம் பெற்றபோது தனியே தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை தமிழ்+ முஸ்லிம் இளைஞர்கள் சமய, இன, சாதி வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் இணைந்தனர். இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகளில் 46, முஸ்லிம் மாவீரர்கள் போராடி உயிர் நீத்த வரலாறு உண்டு. தமிழ் போராளிகளுக்கு முஸ்லிம்பெயர்களும், முஸ்லிம் போராளிகளுக்கு தமிழ் பெயர்களும் இயக்க பெயர்களாக பரஸ்பரம் மாறி மாறி சூட்டிய வரலாறுகளும் உண்டு. இந்த ஒற்றுமையான விடுதலைப்பயணம் தொடர்ந்தபோதுதான் 1990, ல் அப்போதைய ஜனாதிபதி ஆர் .பிரமதாசா பதவி ஏற்ற பின்னர் தமிழ் முஸ்லிம்மக்களை பிரித்தாழும் தந்திரோபாயம் காரணமாக தனியாக முஸ்லில் ஊர்காவல்படையை நிறுவி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயல்பட வைத்தார். இதனால் விடுதலைப்புலிகளில் முஸ்லிம் இளைஞர்களை பிரித்தும், தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலையும் ஏற்படுத்த சதிசெய்தமையால் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி வரையும் 1990, செப்டம்பர் மாதம் பல தமிழ் கிராமங்கள் சுற்றிவளைத்து தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்கேணி, வீரமுனை, மல்லிகைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழகம், சித்தாண்டி, என படுகொலை பட்டியல் நீண்டது அத்தனை படுகொலைகளுக்கும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் துணைபோனார்கள். இதனால் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் பிழவு காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மக்கள் படுகொலைக்கு காரணமானது. அவ்வாறான படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்கவும், முஸ்லிம்மக்களை பாதுகாக்கவும் யாழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் கூறி அவர்களை அனுப்பினர். இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக 2004 ஏப்ரல் கிளிநொச்சியில் விடுதலை புலிகளை சந்தித்த முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்கமாக இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதை வலியுறுத்தினர். எனவே யாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தனியே வடமாகாணத்துடன் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை அது கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதை அனைவரும் புரிவது நல்லது. -பா.அரியநேத்திரன்- https://www.battinatham.com/2025/10/35.html
  13. பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் ! By SRI October 30, 2025 பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர், இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார். தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். https://www.battinews.com/2025/10/blog-post_800.html
  14. சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். "ஒரு குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள். தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். நாம் 800 - 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். நாம் வந்த அனைத்தையும் கைப்பற்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் கைப்பற்றினால், அது இங்கே வராது. இதனால், அவர்கள் அறிந்திருக்கிறார்கள், கைப்பற்றப்பட்ட அளவு வந்த அளவில் ஒரு சிறு பகுதிதான் என்று. ஆனால், கைது செய்யப்பட்ட அளவைப் பார்த்தால், விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது. அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது. அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான். அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைது செய்யப்பட்டுள்ளது. 38 அவர்கள் கைகளில் உள்ளன. அவை அரசுக்கு சொந்தமான ஆயுதங்கள். அதேபோல், அதற்கான குண்டுகளையும் நாங்கள் கைப்பற்றினோம். இராணுவத்தின் முக்கிய கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன் ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது?" பொலிஸ், இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் பெரும் பங்காற்றினாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்குப் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் அழிந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப் போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, கறுப்புப் பொறிமுறையை அழிக்க வேண்டும் என்றும் கூறினார். "இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக பலத்தால் நிறுவப்பட்ட அரசாங்கம் மட்டுமே இருக்க முடியும். கறுப்பு அரசாங்கம் அழிக்கப்படும். இது இத்துடன் நிற்காது. இது எங்கு வளர்ந்து வருகிறது? இப்போது அரசியல் கட்சிகளுக்குள் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். தலைவர்கள் வருகிறார்கள். தனிப் பட்டியல்களைத் தயாரித்துத் தேர்தல்களில் போட்டியிட்டு அது ஒரு அரசியல் பொறிமுறையாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் இது அரசியலின் பாதுகாப்பாக இருந்தது. இப்போது அது அரசியல் ஆதிக்கம். ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவிற்கு விதைகள் பரவியுள்ளன. இது நீண்ட காலமாக அரசியல் ஆசீர்வாதத்தின் கீழ் நடந்து வருகிறது." இந்தச் செயல்களில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தலையீடு செய்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தாம் உறுதியாகத் தீர்மானித்துள்ளதாகவும், அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற கருத்து சமூகத்தில் உருவாகியுள்ளது என்றும் கூறினார். பொலிஸின் சில அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்தாலும், தற்போதைய பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் கடும் முயற்சி எடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி, பொலிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம் இதுவே என்றும் தெரிவித்தார். அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, யாரும் மறைந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற, விளையாட்டு, இசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் தேவை என்றும், அதற்கான திட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது நமது பொறுப்பு என்றும் கூறினார். ஏற்கனவே தன்னார்வ மறுவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழந்தைகளை அந்த இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ இடம் இருக்காது என்றும் கூறினார். "இது அவர்களுக்குச் சொந்தமான நாடு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்..." என்று கூறிய ஜனாதிபதி, மதத் தலைவர்களை ஒன்றிணைத்து பல திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகவும், அதற்கு மதத் தலைவர்களின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்த அபாயம் குறித்துச் சமூகத்திற்குச் செய்தி தெரிவிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது என்றும், பொறுப்பான ஊடகவியலில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கும் இந்தப் பணிக்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஆதரவு தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆரோபிக்கப்பட்ட அதிகாரம் கிடைத்துள்ளது என்றும், இதன் காரணமாக விசாரணைகள் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "நமது நாட்டில் தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் பாதுகாப்பு உள்ளது. அது பொலிஸின் திறமையின்மை அல்ல. நான் ஒன்றைச் சொல்கிறேன். அவர்களின் முதல் அதிகாரம், அரசியல் அதிகாரம், இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பொலிஸ் செய்யும் பணியைப் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன். சிலர் பயப்படுகிறார்கள். இன்றும் சில குற்றங்கள் சிறைச்சாலைகளில் இருந்தே இயக்கப்படுகின்றன மேலும் அவர்கள் அதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த வெலிகம சம்பவம். சிலர் பயத்தில் இருக்கிறார்கள். சிலர் பணத்திற்காக சிக்கியுள்ளனர். இன்று இலங்கை பொலிஸ் அந்த ஆபத்தை ஏற்று, இந்த நடவடிக்கையைத் தொடங்க கடமைப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றவாளியின் எதிரியாக மாறுகிறது. மேலும், எதிர்காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகப் போகும் சில பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்." போதைப்பொருள் ஒழிப்புக்குக் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பரவிய மக்கள் குரல் தேவை என்றும், அதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதாகவும் கூறிய ஜனாதிபதி, இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த குரல் மற்றும் பாதுகாவலன் அதுவே என்றும் கூறினார். "நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம். இறுதியாக, போதைக்கு அடிமையானவர்களுக்கும், விற்பவர்களுக்கும், உடனடியாக விலகுங்கள். அதற்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த மாயாஜால சூறாவளியை அழிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் விடுவிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." https://adaderanatamil.lk/news/cmhd2egbk01auqplp01fasoid
  15. இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி! அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.1 வீதம்வரை வளர்ச்சியடைய முடியும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வளர்ச்சி 5 வீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 வீதமாக இருந்தது. தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்புதல் மாத்திரமே நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/இலங்கையின்_பொருளாதாரத்தில்_அடுத்தாண்டு_3.1_வீத_வளர்ச்சி!
  16. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ். தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மாலை சந்தித்து கலந்துரையாடினார், நாடாளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்தும் விபரங்களை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிகவும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடல்களாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளையும் எமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இது அமையும், என சிறீதரன் எம்.பி தெரிவித்தார். https://newuthayan.com/article/உள்ளூராட்சி_மன்றங்களின்%C2%A0_தலைவர்களுடன்_சிறீதரன்_எம்.பி_கலந்துரையாடல்!%C2%A0
  17. வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது adminOctober 29, 2025 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் , வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் , கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில் , கடந்த 15 நாட்களுக்கு முன்னர் , இந்தியாவில் தங்கி நிற்பதற்கான ஆவணங்கள் , விசா என்பவை இல்லாத நிலையில் ,இந்திய காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தினர். அந்நிலையில் குறித்த மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை மூவரையும் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/222073/
  18. அடடா. தென்னாபிரிக்கா இப்படி விளாசும் என்று எதிர்பார்க்கவில்லை! இங்கிலாந்து மகளிருக்கு பெரிய மூக்குடைபாடுதான்👃 நமக்கு புள்ளி ஏற வாய்ப்பில்லை☹️
  19. மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன் ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது. உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள், சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை. அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அறிஞர்கள். அதிலிருந்து பலர் பாளி மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். முதன் முதலில் 1837 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோதும் அதன் பின்னர் அதில் உள்ள குறைகளின் காரணமாக இன்னும் சிலரால் வெவ்வேறு காலங்களில் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இறுதியில் 1908 ஆம் ஆண்டு வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஜேர்மன் மொழிபெயர்ப்பு பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பே இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியாக உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியும் கூட. 1877 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் சிங்களத்தில் வெளிவந்தது. 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார். ஆனால் டேர்னரின் பிரதி எவ்வாறு பொதுவில் எற்றுக்கொள்ளப்படவில்லையோ அதுபோலவே அதை ஆதாரமாகக் கொண்ட இவர்களின் பிரதியும் பொதுவில் சிங்கள வரலாற்று அறிஞர்களால் மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் மிகச் சமீபத்தில் எனது தேடல்களில் போது புதுத் தகவல் ஒன்றை சமீபத்தில் கொண்டுபிடிக்க முடிந்தது. அதாவது முதன்முதலில் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டது இலங்கையிலோ இலங்கை மொழியிலோ இல்லை. தாய்லாந்தில் சியாமிஸ் மொழியிலேயே மொழிபெயர்க்கபட்டிருக்கிறது என்கிற தகவல் தான் அது. அதை தனியான கட்டுரையாக பின்னர் தருகிறேன். இந்த வரிசையில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன என்பது தான் இக்கட்டுரையின் அடிபட்டை நோக்கம். மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைத் தவிர வேறெந்தத் தொகுதியும் தமிழில் மிகச் சமீபகாலம் வரை வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த முதலாவது தொகுதியை மாத்திரம் ஐந்து வெவ்வேறு நபர்களால் கொணரப்பட்டிருக்கிற போதும் அவை எதுவும் முழுமையானவை அல்ல. அவையும் கூட உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. சுருக்கிய பொழிப்புரையாகவோ, அல்லது சொந்த விளக்கவுரையாகவோ, புதினக் கதைகளாகவோ அமைந்துள்ளவை. தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். அவ்வாறு இதுவரை தமிழில் வெளிவந்த நூல்களை இனி பார்க்கலாம். மகாவம்சம் – சங்கரன் – 1962 இன்று நம்மிடையே தமிழில் காணக்கிடைக்கிற முதல் பிரதி 1962 ஆம் ஆண்டு “மகாவம்சம்” இலங்கைத் தீவின் புராதன வரலாறு என்கிற தலைப்பில் சங்கரன் வெளிக்கொணர்ந்த நூல் பிரதியே. சென்னையில், மல்லிகை வெளியீடாக 410 பக்கங்களில் இது வெளிவந்திருக்கிறது. இப்பிரதியில் மகாவம்சத்தின் மொத்த விபரங்களும் வெளியாகவில்லை. ஆனால் சுருக்கிய விபரங்கள் இதில் அந்தந்த தன இலக்கங்களின் பிரகாரம் வெளியாகியுள்ளதைக் காணலாம். தனக்கு பாளி மொழி தெரியாது என்றும், இலங்கை சர்க்காரால் அதிகாரபூர்வ நூலாக வெளியிடப்பட்ட வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஆங்கிலப் பிரதியிலிருந்தே தமிழ்படுத்தியுள்ளேன் என்று சங்கரன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஈழத்தின் கதை – கே.வி.எஸ்.வாஸ் – 1959 1956 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பௌத்தம் மீழெழுச்சி கொண்ட காலத்தில் மீண்டும் மகாவம்சக் கதையாடல் களத்துக்கு வந்த காலம். அதே காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆனந்தவிகடனில் கே.எஸ்.வாஸ். ஈழத்தின் கதை என்கிற தலைப்பில் தொடராக ஒரு புதினத்தை எழுதிவந்தார். மகாவம்சம், ராஜாவலிய போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு அது எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்ட போதும் அது மகாவம்ச சாரத்தை அடியொற்றி ஜனரஞ்சகப்படுத்தி எழுதப்பட்ட புதினக்கதை என்று கூறிவிடலாம். 1959இல் இது 260 பக்கங்களில் நவலட்சுமி புத்தகசாலையின் வெளியீடாக வெளிவந்தது. முதலாவது அத்தியாயத்தின் தலைப்பே “சிங்கன் பிறந்தான்” என்று தொடங்கும். அதேவேளை கல்கி கிர்ஷ்ணமூர்த்தி எழுதிய அணிந்துரையின் அடியில் அது 1950 இல் எழுதப்பட்டதாக காணபடுகிறது. இந்நூல் அதன் பின்னர் பல்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் – கலாநிதி க.குணராசா – 2003 செங்கை ஆழியான் என்கிற பெயரில் ஏராளமான நூல்களை எழுதிய எழுத்தாளர் க.குணராசா அவரது சொந்த பதிப்பகமான கமலா பதிப்பகத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்த 150 பக்கங்களைக் கொண்ட நூல் இது. அந்த நூல் மகாவம்சத்தின் உள்ளடக்கங்களை சுருக்கமாக தன்நுணர்தலின் அடிப்படையில் சுவாரசியமாக தர முயற்சிக்கப்பட்ட நூல் எனலாம். புனைகதைத் துறையிலும் அவருக்கிருந்த அனுபவத்தாலும் ஆளுமையாலும் மகாவம்சத்தையும் சுருங்க சுவாரசியமாக தர முற்பட்டிருக்கிறார். அந்நூலின் ஆரம்பத்திலேயே அவர் தந்திருக்கிற உசாத்துணை நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது அது மகாவம்சத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட நூல் இல்லை என்பது இன்னும் ஊர்ஜிதமாகும். பதிப்புரையிலேயே ஒப்புக்கொண்டதுபோல போல அது “இலங்கை சரித்திரம் குறித்து சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறும் நூல்”. இதைவிட அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூளவம்சத்தையும் தமிழில் தந்திருக்கிறார். அவரின் “சூளவம்சம்” 2008 ஆம் ஆண்டு வெளியானது கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. ஆங்கில சிறிய எழுத்துக்களில் மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. கி.பி 362 இலிருந்து 1815 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. குணராசா இதையும் தன்முனைப்பில் மிகச் சுருக்கிய அறிமுகத்தையே செய்திருக்கிறார். ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்கவுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. சூளவம்சம் என்கிற பேரை அதை முதன் முதலில் தொகுத்த கைகர் வைத்த பெயரேயோழிய அப்படியொன்று இருந்ததில்லை. மகாவம்சத்தை அவர் தொகுத்து முடித்த பின்னர், எஞ்சிய காலத்தை பின் வந்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த பிக்குமார்களால் எழுதிமுடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஒன்றாக்கிய பொது அவர் வைத்த பெயரே சூளவம்சம். இந்தப் பிரதியை தவிர மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியானது வேறெவரும் வெளிக்கொணர்ந்ததில்லை. மகாவம்சம் – உதயணன் – 200? உதயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஜனரஞ்சக வரலாற்று புனைகதை எழுத்தாளர் எனலாம். அவ்வாறு ஏராளமான ஏராளமான அவர் எழுதியிருக்கிறார். மகாவம்சத்தில் உள்ள கதைகளையும் அவர் தன்னார்வத்தில் சுவைபட புதினக் கதையாக எழுதிருக்கிறார். அதுவும் இரண்டு தொகுதிகளாக கிடைக்கின்றன. முதலாவது தொகுதி 438 பக்கங்களிளும் இரண்டாவது தொகுதி 402 பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் 90 அத்தியாயங்களாக வெளியிட்டிருக்கிற போதும் மூல மகாவம்சத்தின் அத்தியாயங்களுக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவர் மூல மகாவம்சத்தின் உள்ளடக்கத்தையும் முழுமையாக புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு அந்நூலின் முன்னுரையில் “வட பாரதத்தினனான விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தை துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மண்ணுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர்” என்கிறார். ஆனால் மகாவம்சத்தின்படி விஜயன் மணமுடித்த பாண்டிய இளவரசிக்கு எந்த வாரிசுகளும் பிறக்கவில்லை என்கிறது. இப்படியான அடிப்படையான தகவல்களில் அவர் தவறிழைத்திருக்கிறார் என்பதை அவரின் முன்னுரை விளக்கத்தில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதைத்தவிர அவர் மகாவம்சத்தின் கதைகளில் இருந்து துட்டகைமுனுவின் தாயாரை கதாநாயகியாகக் கொண்டு “விகாரமகாதேவி” என்கிற 1028 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலையும் 2015ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் “சிங்களத்துப் புயல்” எனும் 200 பக்க நாவலொன்றையும் 2012 இல் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் ஒரு தடவை இலங்கை அரசனின் படையெடுப்பில் பாண்டிய நாடு கைப்பற்றப்பட்டதாக பதிவுண்டு. 1166 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்வோடு ஒட்டிய தகவல்களைக் கொண்டு அவர் ஒரு புனைகதையை ஆக்கியிருக்கிறார். இக்காலப்பகுதியானது மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூலவம்சமே பதிவு செய்திருக்கிறது. அதேவேளை தனது முன்னுரையில் பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரிகள், சதாசிவ பண்டாரத்தார் ஆகியோரின் நூல்களில் இருந்த தகவல்கள் இந்நூலுக்குப் பயன்பட்டதாக குறிப்பிடுகிறார் அவர். மகாவம்சம் – ஆர்.பி.சாரதி – 2007 ஆர்.பி.சாரதி பல நூல்களை மொழிபெயர்த்தவர். கொடோவே பலரின் வாழ்க்கை சரிதங்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்ட ஒரு எழுத்தாளர். அவர் 2007 ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நூலே இந்த “மகாவம்சம்”. ஆனால் இந்த நூலும் மகாவம்சத்தை சுருக்கமாக 238 பக்கங்களில் விளக்கமுயன்ற ஒரு சாராம்ச நூலே. மூல நூலின் அதே 37 அத்தியாயங்களைக் கொண்டிருந்தாலும் இந்த சாராம்ச சுருக்க நூலில் செய்யுள் இலக்கங்கள் எதுவுமின்றி நிறைவடைந்துவிடுகின்றன. மகாவம்சம் : ஸ்ரீலங்கா வரலாறு – சாந்திபிரியா – 2008 இந்த நூலை எழுதியவரின் உண்மைப் பெயர் ஜெயராமன். ஒரு ஓய்வு பெற்ற அரச ஊழியர். பவந்த பெரேரா என்கிற ஒரு சிங்கள நண்பரின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த நூலை எழுதி முடித்ததாக அந்நூலில் குறிப்பிடுகிறார். மூல மகாவ்மசத்தின் அதே 37 தொகுதிகளைக் கொண்ட 344 பக்க நூலாக இது காணப்படுகிறது. நூல் வடிவில் அமைந்திருந்தாலும் ஒரு மின்னூல் (ebk) வடிவித்திலேயே இது கிடைத்திருக்கிறது. அச்சில் பதிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணவில்லை. எவ்வாறாயினும் இதுவும் ஏனையவற்றைப் போல மிக சாரம்சப்படுத்தப்பட்ட ஒரு பிரதியாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி அதன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது இயந்திர மொழிபெயர்ப்பின் வாடை தெரிகிறது. பல சிங்கள கலைச்சொற்களை கூகிள் மொழிபெயர்ப்புகளின் போது தருகிற பிழைகளை அப்படியே காணமுடிகிறது. விகாராக்கள், தடுசேனா (Dhatusena), தூபவம்சா (Thupavamsa), ததுவம்சா, (Dhatuvamsa), வில்ஹம் கீஜர் (Wilheml Geiger), யக்கா இனத்தினர் போன்ற சொற்களை உதாரணத்துக்குக் குர்பஈடலாம். மகாவம்சம்- சிங்களர் கதை – எஸ்.பொ, 2009 ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. சிங்கள ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் எவருக்கும் புரியும். அந்த ஐந்து தமிழ் பிரதிகளில் ஓரளவு தேறிய பிரதி என்றால் அது எஸ்.பொ. அவர்களின் “சிங்களர் கதை” என்கிற பிரதி எனலாம். அதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால் குறைந்தபட்சம் மகாவம்ச மூலப்பிரதியிலுள்ள செய்யுள்களின் அதே இலக்கத்தொடர்களுடன் அது ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதே. அதேவேளை அவரின் சொந்த அரசியல் நம்பிக்கைகளை அதில் புகுத்தியிருப்பது அதன் பாதகங்களில் ஒன்று. அதன்படி மகாவம்சத்தின் மீது வினையாற்றுபவர்கள் ஈற்றில் எஸ்.பொவுக்குத் தான் வினையாற்ற நேரிடும். மூல மகாவம்சத்தின் மீது வினையாற்றுவதற்கான வாய்ப்பு அற்றுப் போய் விடுகிறது. மேலும் மூல மகாவம்ச பிரதியுடன் பார்த்தால் இதுவும் சாரம்சப்படுத்தப்பட்ட பிரதியே. இதுவரை எந்தப் பிரதியும் பாளி, சிங்களம், ஆங்கிலம் என எந்த மொழியிலிருந்தும் தமிழ் மொழிக்கு முழுமையான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்ததில்லை. மேற்படி பிரதிகளும் கூட கைகரின் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டவை. ஈற்றில் தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. இதைவிட தமிழில் வெளிவந்த மகாவம்சத்தோடு தொடர்புடைய சில நூல்களையும் இங்கே குறிப்பிட முடியும். “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத் தன்மை”, வில்ஹெம் கைகரின் மகாவம்சத்தின் முன்னுரை விரிவான ஒன்று. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அதனை மொழிபெயர்த்து 2002இல் வெளியிட்டார். “எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்” என்கிற நூலை கலாநிதி ஜேம்ஸ் டீ இரத்தினம் ஆற்றிய உரையொன்றை எ.ஜே.கனகரட்னா தமிழில் மொழிபெயர்த்து 1981 இல் ஒரு நூலை வெளிக்கொணர்ந்தார். மகாவம்சத்தில் கூறப்படுகிற எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவின் சமாதியாக மாற்றுகிற மோசடியை எதிர்த்து ஆதாரங்களுடன் தர்க்கிக்கிற முக்கிய நூல். “கமுனுவின் காதலி” என்கிற ஒரு நாவலை மு கனகராசன் எழுதி 1970 இல் வெளியிட்டார். மகாவம்சத்தில் துட்டகைமுனு பிரதான கதாநாயகன். பிரதான வில்லனாக எல்லாளனை சித்திரித்திருப்பார்கள். வயதான எல்லாளனுடன் போர்புரிந்து துட்டகைமுனு வென்றாதாக அது கூறுகிறது. அந்த எல்லாளனின் மகளை துட்டகைமுனு காதலித்ததாக ஒரு வாய்மொழி வரலாறு உண்டு. அதையே கனகராசன் ஒரு நாடகமாக எழுதி அதை நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளைத் தவிர அடுத்த மூன்று பாகங்கள் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை. என்.சரவணனின் - 6வது தொகுதி முதற்தடவை உள்ளதை உள்ளபடி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது என்.சரவணனால் மொழிபெயர்க்கப்பட்ட 6வது “மகாவம்சம்” தொகுதியாகும். 1978-2010 காலப்பகுதியைக் கொண்டிருக்கிற இந்த மொழிபெயர்ப்பானது மகாவம்ச வரலாற்றில் உள்ளது உள்ளபடி எந்தவித மேலதிக உட்புகுத்துகையின்றி அப்படியே கொண்டுவரப்பட்ட முதல் மகாவம்சப் பிரதி எனலாம். அதுபோல வரலாற்றில் மூலமொழியில் எழுதப்பட்ட பிரதியிலிருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட முதல் தொகுதியும் இதுவேயாகும். கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகாவம்சக் குழுவினால் 2012 ஆம் ஆண்டு இறுதி பாகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழன் பத்திரிகையில் தொடராக கடந்த ஆண்டு வெளியானது. பின்னர் குமரன் பதிப்பகம் சென்ற ஆண்டு மொத்தம் 700 பக்கங்களில் பெரிய நூலாக வெளியிட்டது. இதற்கு முன்னர் தமிழில் கொணரப்பட்ட மேற்படி மகாவம்சத்தின் முதலாவது தொகுதியின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியிலான வில்ஹெம் கைகரின் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சிங்களத்தையும் தமிழையும் அரச மொழியாக அரசியலமைப்பு ரீதியில் அதிகாரபூர்வமாகக் கொண்ட அரசு; இலங்கையின் வரலாற்று நூலை தமிழில் இதுவரை வெளியிட்டதில்லை என்பதை கவனிக்குக. தற்போது கலாசார திணைக்களம் தொடங்கியிருக்கும் மொழிபெயர்ப்பு முயற்சியும் முதலாவது தொகுதியைத் தான் செய்யத் தொடங்கியிருக்கிறது. அது முடியவே இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். அதன் பின்னர் அடுத்து ஐந்து தொகுதிகளும் எமது வாழ்நாளுக்குள் வெளிவருமோ என்னவோ. மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் ஒவ்வொன்றும் விரிவாக ஒப்பிட்டு ஆராயப்படவேண்டியவை. இங்கே அதற்கான அறிமுகத்தை மட்டுமே செய்திருக்கிறேன். நன்றி - தினகரன் - சாளரம் - 12.10.2025 https://www.namathumalayagam.com/2025/10/TamilMahawamsa.html
  20. மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்… இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து காற்றாலை திட்டங்களும் மின்வலு உற்பத்தியை இலக்காகக் கொண்ட ஆய்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன. மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்கால இருப்பு அல்லது உயிரியல் சமூகத்தின் இருப்பு, போன்று மன்னார் தீவிலுள்ள நிலப்பரப்பின் இயற்கையான தன்மை அல்லது அதன் தற்போதைய தேசிய திட்டங்களின் தன்மை குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை. கடன் உதவி வழங்குவதை முன்னுரிமையாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மன்னார் தீவை பசுமை எரிசக்தியின் மையமாக மாற்றுவதற்குத் தேவையான ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தது. மேலும், மன்னார் தீவின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை திறந்து விடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கே நிலையான எரிசக்தியைப் பொறுத்தவரை ஆசிய அபிவிருத்தி வங்கி நீதியான நிலைமாற்றம் என்ற கொள்கையில் (Just transition) எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்பது ஒரு பெரிய குறையாகும். எனவே, மன்னார் தீவானது காற்றாலை மின்சக்தி மூலம் நிலைபெறுதகு வலு மையமாக மாற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மீனவ சமூகங்களுக்கு, மீன்பிடி வளங்களுக்கு,விவசாய சமூகத்திற்கு, விவசாய நிலங்களுக்கு மற்றும் அதன் இயற்கை தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி, மன்னார் தீவின் உயிரியல் சமூகம் குறித்த சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தாமல், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி பல திட்டங்களை தயாரித்துள்ளது. நிலைபெறுதகு வலுவுடன் தொடர்புடைய நீதியான நிலைமாற்றுக்கொள்கையை மீறுதல் நிலைபெறுதகு வலு மற்றும் அதோடு இணைந்த நியாயமான மாற்றம் என்பது நிலைபெறுதகு வலுவிற்காக மாற்றம் பெறும்போது, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும், இடம்பெயர்விற்கு உட்படும் மற்றும் உரிமைகள் மீறப்படும் சமூகங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்வதும், வழமைக்கு மாறான மற்றும் பாதகமான தாக்கங்களைத் தவிர்ப்பதுமாகும். மேலும், முடிவெடுக்கும் பொறிமுறையின் மையத்தில் பாதிக்கப்படும் அனைத்து தரப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும். இது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு எண்ணக்கருவாகும். 2015 டிசம்பர் 12ஆம் திகதி பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் 21ஆவது மாநாட்டில் 196 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை 2016 செப்டம்பர் 21ஆம் திகதி அங்கீகரித்த ஒரு நாடு என்ற வகையில், அதில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நீதியான நிலைமாற்றத்திற்கான கருத்தியல் கொள்கைக்கு இலங்கை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைக்கப்பட்ட மாநாட்டின் 26ஆவது மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இணங்க, நீதியான நிலைமாற்றத்திற்கான பொதுவான கொள்கைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல தரப்பு அபிவிருத்தி வங்கிகள், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் நீதியான நிலைமாற்றத்திற்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளன. ஆனால், இலங்கை நிலைபெறுதகு வலுவை நோக்கி நகரும் போது, நிலைபெறுதகு வலு அதிகார சபையோ அல்லது மின்சார சபையோ இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மேலும், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்றுவதற்கு கடன் உதவி வழங்கும் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதில் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாக, மன்னார் தீவு மக்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மன்னார் தீவின் வாழ்வியல் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் நிலைபெறுதகு வலு அதிகார சபையின் திட்டம் நிலைபெறுதகு வலு அதிகார சபை மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவித்தன் பின்னர், இந்த மக்களைப் பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் முதலீட்டாளர்களின் கவனம் ஈரக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்கத்துடைய இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை சட்டத்தின் துணைப் பிரிவு 12(1) இன் படி வெளியிடப்பட்ட 2014 ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதியிட்ட இலக்கம் 1858/2 வர்த்தமானி அறிவிப்பின் மூலம், மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மன்னார் தீவின் 76.11 சதுர கிலோமீட்டர்கள் சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தீவின் மொத்த நிலப்பரப்பு சுமார் 143.21 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அதன்படி, தீவின் மொத்த நிலப்பரப்பில் 53 சதவீதம் சக்தி மேம்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிப்பதில், நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்தத் தீவைப் பற்றிய பல உண்மைகளைத் தவிர்த்துவிட்டது. மன்னார் தீவின் மக்கள் தொகை சுமார் 66,087 ஆகும். இங்கு 1,7835 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன், சுமார் 12,840 வீடுகள் உள்ளன. பெரும்பாலான தீவுவாசிகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் இரண்டிலும் ஈடுபட்டுள்ளனர். மன்னார் தீவு வட மாகாணத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடிப் பிரதேசமாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சராசரி மீன் அறுவடை சுமார் 17,500 மெட்ரிக் டொன் ஆகும். மன்னார் தீவின் மக்களைத் தவிர சதுப்புநில காடுகள், உப்பு சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த காடுகள், கடலோர தாவர சமூகங்கள் மற்றும் மணல் திட்டுக்கள் போன்ற பல இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த இயற்கை சுற்றுச்சூழல் தொகுதிகள் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மன்னார் தீவுடன் தொடர்புடைய ஆழமற்ற கடல் பகுதியில் உள்ள கடல் புற் தரைகள், சேற்றுப் படுகைகள், பவளப்பாறைகள், மணல் கரைகள் மற்றும் பாறை சுற்றுச்சூழல் தொகுதிகள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மன்னார் தீவின் தென்கிழக்கு விளிம்பில் உள்ள உப்புச் சதுப்பு நிலம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் தொகுதிகள் வங்காலை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 4839 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த சரணாலயம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(2) இன் படி, 2008 செப்டம்பர் 8ஆம், திகதியிட்ட 1566/2008 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரநில சரணாலயத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொகுதிகளின் பெறுமதி காரணமாக,1971 பிப்ரவரி 2ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட, 1990 ஜூன் 15ஆம் திகதி அன்று பங்குதாரரான இலங்கை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ரம்சார் மாநாட்டின்படி, 2010 ஜூலை 10ஆம் திகதி அன்று 4839 ஹெக்டேயர் கொண்ட வங்காலை சரணாலயம் நாட்டின் 4ஆவது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. மஞ்சல் நிறத்தில் – புலம்பெயர்ந்த பறவைகள் மன்னாருக்குள் உள்நுழைந்து பறக்கும் பாதை (பறவைகளின் வலசை). இந்த சரணாலயத்துடன் தொடர்புடைய மன்னார் தீவின் களப்பு மற்றும் பாரிய ஆழமற்ற கடல் பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(1) துணைப்பிரிவிற்கமைய 2016 மார்ச் 1ஆம், திகதியிடப்பட்ட 1956/13 என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 29180 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட விடத்தல்தீவு இயற்கை வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் தீவின் வடமேற்கு முனையில் கண்டல் தாவரம், சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த புதர்க்காடுகள், மணல் திட்டுகள் மற்றும் ஆழமற்ற கடல் கடற்கரை ஆகியவற்றின் ஒரு பெரிய பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2(2) துணைப்பிரிவுக்கு அமைய 2015 ஜூன் 22ஆம், திகதியிட்ட1920/03 என்ற வர்த்தமானி அறிவிப்பின்படி 18,990 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட ஆதாமின் பாலம், கடல்சார் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த கடல்சார் தேசிய பூங்கா மற்றும் இயற்கை வனமானது 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்களின் நிதி உதவியுடன் கீழ் வட மாகாணத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் (Integrated Strategic Environmental Assessment the Northern Province of Sri Lanka) அறிவிக்கப்பட்டுள்ளது. நில பயன்பாட்டுக் கொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் 2019 அறிக்கையின்படி, மன்னார் தீவில் 914 ஹெக்டேயர் உப்பு சதுப்பு நிலங்களும், 25 ஹெக்டேயர் சதுப்பு நிலக் காடுகளும் உள்ளன. மேலதிகமாக, சுமார் 1050 ஹெக்டேயர் முற் காடுகள் உள்ளன. இவற்றுடன், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் ஆழமற்ற கடலில் வாழும் மீன், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகும். மீன்பிடி சமூகம் மற்றும் மீன்பிடித் தொழிலின் வாழ்வாதாரம் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்துள்ளது. மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையில் சுமார் 20 கரவலை மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்தத் துறைமுகங்கள் அனைத்தும் மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின் கீழ் எரிசக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கும்போது இது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. மீன்பிடி தொழிலுடன் மேலதிகமாக, விவசாயமும் இந்தத் தீவில் நடைமுறையில் உள்ளது. காய்கறிகள், வேர்க்கடலை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட குறுகிய கால பயிர் சாகுபடி இந்தத் தீவில் பரவலாக உள்ளது. அதனைத் தவிர தீவுவாசிகள் பனை தொழில் தொடர்பான பல வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில், மக்களின் வாழ்வியல் கட்டியெழுப்பியுள்ள மன்னார் தீவு மக்களுக்கு, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை வழங்குவதற்காக பல நீண்டகால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, 1978ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட நகர்ப்புற அபிவிருத்திச் சட்டத்தின் இலக்கம் 41 இன் படி, 1993 மார்ச் 22ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 759/1 இல், முழு மன்னார் தீவையே நகர்ப்புற மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 8(அ)இன் படி, மன்னார் மேம்பாட்டுத் திட்டம் 2021 – 2030 தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ஜூலை 13ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2236/24 ஊடாக இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவு வலயப்படுத்தப்பட்டு, தெற்கு கடற்கரை நிலைபேறுதகு வலு திட்டங்களுக்காகவும், வடக்கு கடற்கரை மீன்பிடித் தொழிலின் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான பயன்பாடுகளைக் கொண்ட மக்களின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுடன் கூடிய ஒரு தீவில், பெரிய நிலப்பரப்பை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம், அதன் இயற்கை தொகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைவதுடன், மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் சரிவதால் வறுமை அதிகரிக்கும் என்பதையும் நிலைபெறுதகு வலு அதிகாரசபை உணரவில்லை என்பது வருந்தத்தக்கது. காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் சரியான முறை என்பதை முழு சமூகமும் அறிந்த உண்மையாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்தும் போது ஒட்டுமொத்த தொகுதியும் சேதமடைந்து பாதிக்கப்பட்டால், அந்த நிலைபெறுதகு எரிசக்தியை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நிலைபெறுதகு வலு அதிகார சபை உணரவில்லை. எனவே, அதிகார சபை இந்தத் தீங்கு விளைவிக்கும் நிலையான எரிசக்தி உற்பத்தித் திட்டங்கள் காரணமாக, மன்னார் தீவு மக்களும் அதன் உயிரியல் சமூகமும் பாதகமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. சர்வதேச உடன்படிக்கைகளை மீறி மன்னார் தீவின் மக்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும் அழித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பசுமை எரிசக்தி மேம்பாடு மற்றும் எரிசக்தி திறன் முதலீட்டு திட்டத்தின் (Green Power Development and Energy Efficiency Improvement Investment Program)கீழ் 2012ஆம் ஆண்டு தயாரித்து முன்மொழியப்பட்ட மன்னார் தீவு காற்றாலைப் பூங்கா (Proposed Wind Park in Mannar Area) அறிக்கை ஊடாக மன்னார் தீவு முழுவதும் காற்றாலைப் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு 375 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 100 மெகாவாட்டை கொண்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 157 மில்லியன் டொலர் பணத்தை கடனாக வழங்குவதற்காக 2017ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, மன்னார் தீவில் 375 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வலியுறுத்தியது. இந்த அறிக்கைகளைத் தயாரிப்பதில், ஆசிய அபிவிருத்தி வங்கி பல சர்வதேச உடன்படிக்கைகளை மீறியுள்ளது. 1971 பெப்ரவரி 2ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ராம்சார் உடன்படிக்கை, 1979 ஜூன் 23ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ‘பொன்’ மாநாடு மற்றும் 2015 டிசம்பர் 12ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச சட்டக் கொள்கையான முன்னெச்சரிக்கை கொள்கையை (Precautionary Principle) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் முதற்கட்ட ஆய்வுகள், சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் கடன் உதவி ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலைப் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கம்பி அமைப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒப்பந்தங்களின்படி வங்காலை சர்வதேச ரம்சார் ஈரநிலம் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது. 1983 முதல் இதுவரை இலங்கை பறவைகள் சங்கம் நடத்திய ஆய்வுகளின்படி, மன்னார் தீவின் தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள வங்காலை சரணாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் மன்னார் தீவின் முழு ஈரநில அமைப்பிலும் சுமார் 2 மில்லியன் கடலோர புலம்பெயர்வு ஈரநில பறவைகள் (Shorebirds) உள்ளன. சர்வதேச ஈரநில அமைப்பு (Wetland iInternational) ஊடாக 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட “Status of Waterbirds in Asia, Results of the Asian Waterbirds Census, 1987-2007” அறிக்கையின்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஈரநிலப் பறவைகளைக் கொண்ட முக்கிய பிரதேசங்களில் ஒன்றாக மன்னார் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், வடக்கு சைபீரியாவிலிருந்து மில்லியன் கணக்கான குளிர்கால புலம்பெயர்வு பறவைகள் மத்திய ஆசிய கண்டத்தை நோக்கி பறக்கும் பாதையான (Central Asian Flyway) வழியாக இலங்கைக்கு வருகின்றன, மேலும் அவற்றில் ஏராளமானவை மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்றன, இது இந்த புலம்பெயர்ந்த பறவைகள் தொடர்ச்சியாக பறக்கும் போது முதல் நிறுத்தமாகும். இத்தகைய தனித்துவமான தீவில் ஒரு காற்றாலை மின் நிலைய அமைப்பின் கட்டுமானம் இந்த புலம்பெயர்ந்த பறவைகளின் பாதைகளை முற்றிலுமாகத் தடுத்து, அவற்றின் உணவுத் தளங்களைச் சீரழித்துள்ளது. குளிர்காலத்தைத் தவிர்க்க மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஆர்க்டிக்கிலிருந்து அண்டார்டிக்கிற்கு இடம்பெயர்ந்த இந்தப் பறவைகள், காற்றாலைகள் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் தங்கள் தாயகத்தை இழந்துவிட்டன. இவ்வளவு பாரிய அழிவுகரமான திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ரம்சார் உடன்படிக்கைகளை மீறுவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பொறுப்பிலிருந்து விடுபட முடியாது. வடக்கு சைபீரியாவிலிருந்து மத்திய ஆசிய பறவைகள், புலம்பெயர் பாதை வழியாக குளிர்கால புலம்பெயர்வுப் பறவைகள் இலங்கைக்கு வரும் விதம் இலங்கைக்கு மேற்கு பாதை வழியாக பறந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகள் மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்ற விதம். அதனைத்தவிர உலகின் எட்டு வகையான கடல் ஆமைகளில் மூன்று வகைகள், மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலோர பிரதேசத்தில் முட்டையிடும். அதாவது, தோணி ஆமை அல்லது பச்சைக் கடல் ஆமை (Chelonia Mydas), அழுங்கு ஆமை (Eretmochelys Imbricata) மற்றும் ஒலிவநிறச் சிற்றாமை (Lepidochelys Olivacea) ஆகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்தத் தீவின் தெற்கு கடற்கரையில் 12.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ‘தம்பபவனி’ மின் உற்பத்தி நிலையத் திட்டம், இந்த கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமைகளின் எண்ணிக்கையில் விரைவான சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் பங்களித்துள்ளதாக எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு முழுவதும் காற்றாலைகளின் தொடர்ச்சியான இரைச்சல் மற்றும் இந்தப் பிரதேசத்தின் வெளிச்சம் போன்றவையுடன், காற்றாலைகளை அணுக கடற்கரையோரத்தில் உள்ள 14 கி.மீ நீளமான வீதிகளின் காரணத்தால் ஆமைகள் முட்டையிடும் பிரதேசங்களைக் தடுத்து துண்டு துண்டாகப் பிரிக்கின்றன. இந்த நிலைமைகள் காரணமாக, ஆமைகள் முட்டையிட இந்தக் கடற்கரையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளிர்காலத்தைத் தவிர்க்க புலம்பெயர்ந்து செல்லும் பறவைகள் மற்றும் முட்டையிட வரும் ஆமைகளின் வாழ்விடத்தை இழக்க காரணமாக அமையும் காற்றாலைப் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான கடன் உதவியைத் தயாரித்து வழங்குவதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ‘பொன்’ உடன்படிக்கையை மீறியுள்ளது. ‘தம்பபவனி’ காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில், காற்றாலை டர்பைன்கள் மற்றும் அவற்றை இணைக்கும் பாதை அமைப்பை உருவாக்க உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் கழிமுகங்களைக் கொண்ட தடாகங்கள், அத்துடன் அவற்றை கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் ஆகியவை நிரப்பப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வட கிழக்கு பருவமழைக் காற்று டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மன்னார் தீவு அதிக மழையைப் பெறும் போது கால்வாய்கள் மற்றும் களப்புகள் வழியாக மழைநீரின் இயற்கையான ஓட்டம் தடைப்படுவதால், சுற்றியுள்ள கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கும். கடந்த சில ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவுவாசிகள் குடிநீர் உள்ளிட்ட அன்றாட நீர் தேவைகளுக்கு கிணறுகளையே நம்பியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பிறகு இந்தக் கிணறுகளை மீட்டெடுப்பதற்கான செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தங்களுக்கு மேலதிகமாக, காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து மீனவ சமூகத்தினரை தடுக்கின்றன என்பதையும் எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதற்கமைய, ‘தம்பபவனி’ காற்றாலை திட்டம் மன்னார் தீவு மக்கள் தங்கள் விருப்பமான இடத்தில் வாழ்வதற்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கும் உள்ள சுதந்திரத்தை பறித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, நிலைமாற்றுக் கொள்கையை மீறுவதாகும். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இந்தப் பொறுப்பிலிருந்தும் விலக முடியாது. புலம்பெயர்ந்த பறவைகளின் புலம்பெயர்வுப் பாதைகளில் காற்றாலைகள் ஏற்படுத்தும் சாத்தியமான தாக்கங்கள், கடலோர ஈரநிலப் பறவைகளின் உணவுப் பரப்பில் ஏற்படும் தாக்கம் மற்றும் தீவு மக்களின் வாழ்வியலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரித்த சாத்தியக்கூறு ஆய்வுகளில் இருந்து ‘தம்பபவனி’ திட்டம் விடுபட்டுள்ளது. சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான இருப்பைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி செயல்முறையின் பாதகமான தாக்கங்களையும் கணிப்பதிலும், அவற்றுக்கான மாற்று அல்லது தணிப்பு முறைகள் அல்லது இழப்பீட்டு முறைகளைத் தயாரிப்பதிலும் முன்னெச்சரிக்கை கொள்கை முக்கியமானது. இந்தக் கொள்கையை 1992ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ரியோ மாநாட்டில் ரியோ பிரகடனத்தின் கொள்கை 15 என ஐக்கிய நாடுகள் சபை விளக்கியுள்ளது. கடுமையான அல்லது மீளமுடியாத தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதைத் தாமதித்தல், மூலதனப் பற்றாக்குறை, முழு அறிவியல் தீர்ப்பு இல்லாமை அல்லது தகவல் இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தத் தணிப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்கக்கூடாது என்று அது கூறுகிறது, ஏனெனில், அவை 1998ஆம் ஆண்டு முன்னெச்சரிக்கை கொள்கை குறித்த விங்ஸ்ப்ரெட் மாநாட்டில் இந்தக் கொள்கைக்கு ஒரு பரந்த விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தின்படி, ஒரு செயல்பாடு மனித ஆரோக்கியத்திற்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது, காரண-விளைவு உறவு அறிவியல் ரீதியாக முழுமையாக நிறுவப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சூழலில், ஒரு செயல்பாட்டின் ஆதரவாளர் பொதுமக்களை விட ஆதாரத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். முன்னெச்சரிக்கை கொள்கையை செயல்படுத்தும் செயல்முறையில் திறந்த தகவல் அமைப்புடன் ஜனநாயகமாக இருக்க வேண்டும், மேலும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் பங்கேற்பையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முழு அளவிலான மாற்று வழிகளையும் ஆராய்வதும் இதில் அடங்கும். இதைத் தவிர்ப்பதன் மூலம், ஆசிய அபிவிருத்தி வங்கி இயற்கை அமைப்புகளின் உயிர்வாழ்வையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டிற்கு கடன்களை வழங்கி வரும் ஆசிய அபிவிருத்தி வங்கி, அதன் தொடக்கத்திலிருந்து 2024ஆம் ஆண்டு இறுதி வரை 522 திட்டங்களுக்கு சுமார் 12.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது, மேலும், எரிசக்தி துறையில் 57 திட்டங்களுக்கு கடன்களை வழங்கிய ஒரு அபிவிருத்தி வங்கியாக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் எதிர்கால இருப்புக்கு சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாட்டின், மக்களின் எதிர்கால இருப்பையும் இயற்கை வளங்களையும் அழிக்க இதுபோன்ற தவறுகளைச் செய்ய அவர்களால் முடியாது. காரணம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான இருப்பு இந்த நாட்டு மக்களின் உழைப்பு, வரிகள் மற்றும் இயற்கை வளங்களின் இருப்பைப் பொறுத்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின்படி மன்னார் தீவு மக்களின் வாழ்வியலை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு பணயம்வைத்தல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், மன்னார் தீவில் முதல் காற்றாலை மின் நிலைய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2017ஆம் ஆண்டில் பொதுமக்களின் கருத்துகளுக்காக திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 56 காற்று டர்பைன் நிறுவப்பட உள்ளன. இருப்பினும், இலங்கை பறவைகள் சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அழுத்த செயன்முறைகளும், தொழில்நுட்ப கருத்துகளின் அடிப்படையில், தோட்டவெளி முதல் பாலாவி வரையிலான 12.5 கி.மீ நீள கடற்கரையில், கடற்கரையிலிருந்து 150 முதல் 160 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தலா 3.45 மெகாவாட் திறன் கொண்ட 30 காற்றாலை டர்பைன்கள் மூலம் 103.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மன்னார் தீவில் தோட்டவெளி, துள்ளுக்குடியிருப்பு மற்றும் கட்டுகாரன்குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 2017 நவம்பர் 22ஆம் திகதியன்று கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு டொலர் மில்லியன் 256.7 ஆகும். இது ஆரம்ப திட்டத்தை விட அதிகம். எனவே, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனும், மீதமுள்ள 56.7 டொலர் மில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்தும் வழங்கப்பட்டு இந்தத் திட்டத்தின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ‘தம்பபவனி’ என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்கள் டென்மார்க் காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸால் வழங்கப்பட்டது. மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் கட்டப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தின் டர்பைன்கள் ஆரம்பத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ சுமார் 1.5 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நேரத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தக் காற்றாலை டர்பைன்கள் அணுக 14 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான வீதியை அமைப்பதற்காக தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், கட்டுமானத்தின் போது களப்பை (சிறு கடல்) கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் தடுக்கப்பட்டுள்ளன. இது மழைநீர் வடிகால் பொறிமுறையை முழுமையாக அடைத்து வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், ஆழமற்ற கடலில் இருந்து முட்டையிடுவதற்காக களப்புக்கு வரும் மீன் இனங்கள், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்க செயல்முறையையும் மோசமாகப் பாதித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் ஆழமற்ற நீரில் மீன் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக தீவில் உள்ள சிறு மீன்பிடி சமூகத்தினர் குறிப்பிட்டனர். காற்றாலை டர்பைன்களை உருவாக்குதல், பாதை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய கட்டமைப்புடன் மின்சாரத்தை இணைக்கும் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக மன்னார் தீவின் மக்கள் தெற்கு கடற்கரையின் பெறுமளவு நிலத்தை இழந்துள்ளனர். இதன் காரணமாக, மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின் அடிப்படையில் வேறு பல திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. “மன்னார் காற்றாலை மின் திட்டம் – கட்டம் 1 – தொடர்ச்சி”க்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, பொதுமக்களின் கருத்துகளுக்காக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, 21 காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு காற்றாலை டர்பைனுக்கும் 6.63 ஏக்கர் என்ற வகையில் 139 ஏக்கர் நிலமும், காற்றாலை டர்பைன்களை இணைக்க 11.5 கிலோ மீற்றரும், வீதிகளை நிர்மாணிப்பதற்காக 43 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 182 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தீர்மானானது. இந்தத் திட்டத்திற்காக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையின் தென்கிழக்கு கடற்கரையையும், கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் உள்நாட்டுப் பகுதியையும் பயன்படுத்த உள்ளது. அதைனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் காற்றாலை எரிசக்தி திட்டம் மன்னார் – கட்டம் 111” என்ற பெயரில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்களின் கருத்துகளுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அதானி பசுமை எரிசக்தி இலங்கை லிமிடெட் எனும் நிறுவனத்தால் 420 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டமாக செயல்படுத்த திட்டமிட்டது. தலா 5.2 மெகாவாட் திறன் கொண்ட 52 காற்றாலை டர்பைன்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், இந்தத் திட்டத்தின் காற்றாலை டர்பைன்கள் மன்னார் தீவின் மையத்திலும் வடக்கு கடற்கரையிலும் நிறுவப்பட திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு டர்பைனை நிறுவ தோராயமாக 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்த முழு திட்டத்திற்கும் 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதலீட்டு நிறுவனம் கடந்த காலங்களில் கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது. ஆனாலும், அந்த வேலைத்திட்டத்தை இன்னும் பட்டியலில் இருக்கிறது. இதற்கிடையில், மன்னார் தீவில் 4 காற்றாலை டர்பைன்கள் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மன்னார் தீவில் இந்தக் காற்றாலைகள் ஏற்படுத்தும் பாரிய தாக்கம் காரணமாக, சமீபத்திய நாட்களில் இதற்கெதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இந்தத் திட்டம், ராஜகிரிய, நாவல, கல்பொத்த பாதை, எண் 66 இல் அமைந்துள்ள லீஜ் கேபிடல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (Liege Capital Holding Pvt Ltd) முதலீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இது Ceylex Renewables Pvt Ltd என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் தொடர்புகளுடன் Windscape Mannar எனும் துணை நிறுவனத்தால் செயல்படுத்துகிறது. இதற்காக, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கியிடமிருந்தும் 6.5 பில்லியன் ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும், அரச நிறுவனங்களால் இது குறித்த தகவல்களையும் பெற முடியவில்லை. எனினும் தொடர்புடைய வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துரிதப்படுத்தப்படும் ஹேலிஸ் நிறுவனத்தின் சட்டவிரோத காற்றாலை திட்டம் இதற்கிடையில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் (Hayleys Fentons Limited) மன்னார் தீவில் 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இது 50 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் என்றும், மின்சார சபைக்கு ஒரு யூனிட் மின்சாரம் 4.65 சதம் டொலருக்கு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று எரிசக்தி அமைச்சகத்தில் கையெழுத்தானது என்றும், 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக, ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனமான ஹேவிண்ட் வன் கம்பெனி லிமிடெட் (HayWind One Limited) திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இது ஹேலிஸ் (Hayleys PLC) நிறுவனத்திற்கு முழு உரித்துமுள்ள துணை நிறுவனமாகும். இந்தத் திட்டம் 10 காற்றாலை டர்பைன்களைக் கொண்டுள்ளதுடன், கட்டுமானம் தொடங்கிய 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக மன்னார் தீவில் சுமார் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியேற்படும். மேலும், நுழைவாயில் வீதிகளை தயார் செய்வதற்காக 30 ஏக்கருக்கும் அதிகமான நிலமும் கையகப்படுத்தப்பட நேரிடும். காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட மின்சாரத்தை வாங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையோ அல்லது சுற்றுச்சூழல் ஒப்புதலோ வெளியிடப்படவில்லை. அமைச்சரவை முடிவுகள் தொடர்பான அறிக்கைகளை ஆராயும்போது அத்தகைய ஒப்புதல் வழங்கப்பட்டதற்கான எவ்வகையான ஆதாரமும் இல்லை. இவ்வாறு இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த அடிப்படையில் மின்சார சபையுடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம், மன்னார் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் காற்றாலை மின் உற்பத்தி நிலையப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை ஒரு மாத காலம் தாமதப்படுத்தியதுடன், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்யப்பட்டது. இந்நடவடிக்கையானது இந்தத் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாது, அவர்கள் சரியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அல்லது ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவை ஒப்புதலை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது. இந்த உண்மைகள் அனைத்திலும் இந்தத் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது. மன்னார் தீவை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைப் மின் நிலையங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்கள் (தீவின் தெற்கு கடற்கரையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.) மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்பான சட்ட கட்டமைப்பு மன்னார் தீவைச் சுற்றி பெரிய கடலோரப் பிரதேசத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தால், காற்றாலைப் மின் நிலைய கட்டுமானத்தை மேற்கொள்ளும்போது 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்கச் சட்டத்தின் இறுதி திருத்தமான, 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டமும் ஒரு முக்கிய காரணியாகும். இந்தச் சட்டத்தின்படி, கடலோர பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் துறையின் ஒப்புதல் அவசியம். இந்தச் சட்டத்தின்படி, கடலோரப் பிரதேசம் என்பது நிலத்தை நோக்கிய சராசரி உயர் அலைக் கோட்டிலிருந்து 300 மீட்டர் வரம்பிற்கும், கடல் நோக்கிய சராசரி குறைந்த அலைக் கோட்டிலிருந்து 2 கிலோமீட்டர் வரம்பிற்கும் உள்ள பிரதேசத்தைக் குறிக்கிறது. ஒரு நதி, வாய்க்கால், களப்பு அல்லது கடலுடன் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலையின் விடயத்திலும் நிலத்தை நோக்கிய வரம்பு அவற்றின் இயற்கையான நுழைவுப் புள்ளிக்கும் அத்தகைய நதி வாய்க்கால் மற்றும் குளம் அல்லது கடலுடன் இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலைக்கும் இடையில் வரையப்பட்ட நேரான அடித்தளத்திற்கு செங்குத்தாக அளவிடப்படும் 2 கிலோமீட்டர் வரம்பிற்கும், மேலும் எல்லை பூஜ்ஜிய சராசரி கடல் மட்டத்திலிருந்து எல்லையில் நிலத்தை நோக்கி நூறு மீட்டர் நீடித்து மேலதிகமான வரம்பு உள்வாங்கப்படும். இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 14(1)க்கு அமைவாக, இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டதை தவிர, கடலோர பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படக்கூடாது. துணைப்பிரிவு 16(1)க்கு அமைவாக துணைப்பிரிவு 14(1)க்கு கீழ் அனுமதிகளை வழங்குவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையைப் பார்ப்பதற்கு வலியுறுத்தும் அதிகாரம் உள்ளது. 26 அ உறுப்புரைக்கு அமைய, கடலோரப் பிரதேசம் அல்லது அதன் வளங்களுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் நிறுத்த அதிகாரம் உள்ளது. மேலும், அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், ஒரு நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் பேரில் தொடர்புடைய செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரமும் அதற்கு உள்ளது. அந்த உத்தரவை பின்பற்றத் தவறினால், ஒரு நாளைக்கு ரூ. 10,000 அபராதம் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும், மன்னார் தீவின் கடலோர பிரதேசத்திற்கு வெளியே உள்ள நிலப்பரப்பில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிக்கும்போது, 2000ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட 1993 ஜூன் 24 திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 772/22 இன் படி, ஒரு ஹெக்டேயருக்கு மேல் பரப்பளவிலான வன நிலத்தை வனம் அல்லாத நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது 50 மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். மேலும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வங்காலை சரணாலயம், மன்னார் தீவின் தென்கிழக்கு எல்லையில் அமைந்திருப்பதால், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின்படி வெளியிடப்பட்ட 1995ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 859/14 இற்கு அமைவாக, ஒரு சரணாலயத்தின் எல்லைக்குள் அல்லது அதற்குள் உள்ள எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் முதலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதலைப் பெற வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் துணைப்பிரிவு 23அஅ இன் கீழ் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு, ஒரு நபர், சட்டத்தின் பிரிவு உறுப்புரை 31 இன் கீழ் ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ரூ. 15000 க்கு குறையாத அபராதம் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இரண்டு தேசிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்கா ஆகியவை மன்னார் தீவின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளதால், காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதில் இந்தச் சட்டத்தின் சட்ட விதிகளும் கவனத்தில் கொள்வது முக்கியமானவை. 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்ட, 1937ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவுகள் 9அ (1) மற்றும் (2) இன் படி, தேசிய வனத்தின் எல்லையிலிருந்து ஒரு மைலுக்குள் எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன் வனவிலங்கு பணிப்பாளரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்படல் வேண்டும். அவ் ஒப்புதலானது தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறை மூலம் பெறப்படல் வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கரையோரப் பறவைகளைக் கொண்ட பிரதேசங்கள் இந்தக் கட்டளைகளுக்கு மேலதிகமாக, திருத்தப்பட்ட 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 43அ மற்றும் 47 இன் உறுப்புரைகளுக்கு அமைய, 2000ஆம் ஆண்டு அக்டோபர் 04ஆம் திகதியிட்ட 1152/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2000ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திட்ட நடைமுறைகளின் ஆணைக்கு இணங்கவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் உள்ள பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் தொல்பொருள் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் தொல்பொருள் ஒப்புதலும் பெறப்படல் வேண்டும். இந்தச் சட்டத்திட்டங்களையும் கட்டளைகளையும் மீறி காற்றாலைகள் அமைப்பது பல சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், சட்டத்தின் ஆட்சியையும் மன்னார் தீவு மக்களின் அடிப்படை உரிமைகள் பலவற்றையும் மீறியுள்ளது. காற்றாலைகள் மன்னார் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றன இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் உள்ள கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளை நிர்வகிக்கும் அரசின் கொள்கையின் துணைப் பிரிவின் உறுப்புரை 27(14) இன் படி, “அரசாங்கம் மக்களின் நலனுக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், அதனை மேம்படுத்த வேண்டும்.” அதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தவும், சுற்றுச்சூழலின் உயிர்வாழ்வைப் பாதிக்காத முடிவுகளை எடுக்கவும் கடமைப்பட்டுள்ளன. மேலும், இந்த அத்தியாயத்தின் கீழ் துணைப்பிரிவு 28(ஈ) இன் படி, இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கையரினதும் கடமையாகும். அதன்படி, ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தலையிடவும், அந்த நோக்கத்திற்காக சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த அரசு நிறுவனங்களை வழிநடத்தவும், பாதுகாப்பிற்கான சட்டங்களை அமுல்படுத்தவும், சேதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது. இருப்பினும், மன்னார் தீவில் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்தும்போது நிலையான எரிசக்தி அதிகார சபையோ அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையோ அல்லது கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களமோ அரசியலமைப்பில் உள்ள இந்த விடயங்களில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அப்படி இருந்திருந்தால், இந்தக் காற்றாலை மின் நிலையங்களால் ஈரநில அமைப்புகளும் மன்னார் தீவின் மக்களும் இவ்வளவு துயரமான விதியை சந்தித்திருக்க மாட்டார்கள். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 12ஆவது பிரிவுக்கு அமைய, அத்தியாயம் மூன்றின் கீழ் அடிப்படை உரிமைகளைக் கையாள்கிறது, சட்டத்தின் பிரகடனம் மற்றும் செயல்படுத்தல் மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். 14ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம், சட்டபூர்வமான வேலை வாய்ப்பில் ஈடுபடும் சுதந்திரம், தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடும் சுதந்திரம் மற்றும் ஒருவர் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகள் காற்றாலைத் திட்டங்களால் மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரிடமிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றாலைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதில், பொதுமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன, உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன, இந்தத் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, கடற்கரை நுழைவாயில்கள் தடைபட்டதால் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, காற்றாலைகள் சுழற்சியால் உருவாக்கப்பட்ட சத்தம், அதிர்வு மற்றும் தொடர்ச்சியான நிழல்கள் காரணமாக அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்தில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளால் தீவு வெள்ள அபாயத்தை எதிர்கொள்கிறது, இது அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரத்தையும் இழக்க வழிவகுத்துள்ளது. 1955ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை உள்ள ஒரு நாடாக, நமது நாடு 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பொறுப்புடமை கொண்டுள்ளது. அந்தப் பிரகடனத்தின் 3ஆவது உறுப்புரைக்கு அமைய அனைவருக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 7ஆவது உறுப்புரைக்கு அமைய சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்றும் கூறுகிறது. 13ஆவது உறுப்புரைக்கு அமைய ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வசிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 17ஆவது உறுப்புரைக்கு அமைய, ஒவ்வொருவருக்கும் தனியாகவும் மற்றவர்களுடன் கூட்டாகவும் சொத்துக்களை வைத்திருக்கவும் உரிமை உண்டு. மேலும், யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாகப் பறிக்க முடியாது. 19ஆவது உறுப்புரைக்கு அமைய, அனைவருக்கும் குறுக்கீடு இல்லாமல் கருத்துக்களை வைத்திருக்கவும் வெளிப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் வழங்கவும் உரிமை உண்டு. இருப்பினும், காற்றாலை மின் நிலையத் திட்டங்களால் தீவுவாசிகளின் வாழ்வாதாரம், மீன்பிடித் தொழில் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வெள்ள அச்சுறுத்தல் மற்றும் காற்றாலை மின் நிலையத் தாக்கங்கள் காரணமாக, தீவுவாசிகள் தங்கள் வாழ்வதற்கான உரிமையையும், வசிக்கும் உரிமையையும் இழந்துள்ளனர். இதன் விளைவாக, தீவுவாசிகள் தங்கள் சொத்துரிமைகளையும் இழந்துள்ளர். ஒப்புதல், செயல்படுத்தல், நில பரிமாற்றம், இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள், அமைச்சரவை ஒப்புதல்களைப் பெறுதல் போன்ற எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் அணுகுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்து எந்தவொரு அரசு நிறுவனமும் துல்லியமான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கவில்லை.மேலும் இந்த நிபந்தனைகளை எதிர்த்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவையெல்லாம் காற்றாலைகள் காரணமாக மக்கள் சந்திக்க வேண்டிய அவலங்கள். இதனால், காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவு மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இரண்டையும் இழந்துள்ளனர். உலகத்தின் நிலையான எரிசக்தி, உலக வங்கி மற்றும் இலங்கையின் எதிர்கால விதி எரிசக்தி அமைச்சின் 2024ஆம் ஆண்டின் தேர்ச்சி அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5841 மெகாவாட்டாகும். இதனூடாக நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி, மர எரிபொருள், உயிரியல் எரிபொருள்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் போன்ற நிலையான எரிசக்தி மூலங்களால் உருவாக்கப்படும் மின்சார திறன் 3658 மெகாவாட் ஆகும். இது மொத்த மின்சார உற்பத்தியில் 63 சதவீதத்தை எட்டுகிறது. இலங்கை மின்சார சபையின் 2018-2037 வரையான நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கமைய (Long Term Generation Expansion Plan 2018-2037) காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவை 2037ஆம் ஆண்டு வரை நிலையான எரிசக்தித் துறையில் முக்கிய அபிவிருத்தி இயக்கிகளாக கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, எரிசக்தித் துறையில் கார்பனீரொக்சைட் வெளியேற்றத்தை 20 சதவீதம் குறைக்கும் இலக்கை எளிதாக அடைய முடியும். 1990ஆம் ஆண்டில் 29 சதவீதமாக இருந்த தேசிய மின்சார விநியோகம், 2018ஆம் ஆண்டளவில் 99.58 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மின் உற்பத்திக்காக ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பனீரொக்சைட்டின் அளவு சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். நாட்டில் எரிபொருள் பாவனையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் 16.7 மில்லியன் மெட்ரிக் டொன் கார்பனீரொக்சைட்டில், 44 சதவீதம் மின்சார உற்பத்தி காரணமாகவே வெளியிடப்படுகிறது. இது உலகின் அனைத்து நாடுகளாலும் வெளியிடும் கார்பனீரொக்சைட்டின் அளவோடு ஒப்பிடும்போது 0.05 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவாகும். சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒருவருடத்திற்கு கார்பனீரொக்சைடு வெளியேற்றம் முறையே சுமார் 9135, 5176 மற்றும் 1187 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். உலகில் இன்று நிலையான எரிசக்தியானது சூரிய சக்தி, உயிரியல் எரிபொருள்கள், புவிவெப்ப ஆற்றல், கடல் அலைகள், காற்றாலை மின்சாரம் மற்றும் நீர் மின்சாரம் போன்ற ஆறு மூலங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் 2025 புள்ளிவிவரங்களின்படி, உலகின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 4.45 மில்லியன் மெகாவோட்டாகும். இதில், 1.13 மில்லியன் மெகாவோட் காற்றாலை மின் நிலையங்கள் மூலமும், 1.87 மில்லியன் மெகாவோட் சூரிய மின் நிலையங்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது 2030ஆம் ஆண்டாகும்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 2.2 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும், சூரிய மின் நிலையங்கள் மூலம் 7 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த எரிசக்தி மூலங்கள் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாகத் தெரிகிறது. இதனூடாக புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பிலிருந்து வளிமண்டலத்தில் பசுமையற்ற வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதுடன், இதன் ஊடாக காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும். இது உண்மையாக இருப்பினும், இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களானது காடுகள், ஈரநிலங்கள் மற்றும் ஆழமற்ற கடல்களில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் இழப்பில் இருந்தே நிறுவப்படுகிறது. இதனூடாக எதிர்பார்த்த பலன்களை அடைய முடியுமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது காலநிலை மாற்றத்திற்கான களத்தை அமைப்பது மட்டுமல்லாமல், இயற்கை அமைப்புகளின் அழிவு காரணமாக விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல உணவு உற்பத்தித் துறைகளைப் பாதிப்பதன் மூலம் நாட்டின் உணவு இறையாண்மை வீழ்ச்சி நிலைக்கு உட்படுத்துகிறது. அதற்கு ஒரு தீர்வாக, உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், பயிர் நிலத்தை அதிகரிப்பதற்காகவும், உணவு இறக்குமதியை அதிகரிப்பது அல்லது காடுகள் மற்றும் ஈரநிலங்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது ஒரு சுழற்சியாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, நாடு கடுமையான பேரழிவைச் சந்திக்க வழிவகுக்கிறது. உலக வங்கியின் கடல் கடந்த காற்றாலை மின் அபிவிருத்தி திட்டத்தின் (Offshore Wind Development Program – World Bank Group) கீழ் இலங்கைக்கான கடல் கடந்த காற்றாலை மின் நிலையத்தின் பாதை வரைபடம் என்ற (Offshore Wind Roadmap for Sri Lanka) தலைப்பிலான அறிக்கை 2023 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இலங்கையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் ஆழமற்ற கடல்களில் சுமார் 14,195 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காற்றாலை மின் நிலையங்களை நிறுவி 56 கிகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்த ஆழமற்ற கடற்பரப்பு கடல் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு பிரதேசமாகும். பவளப்பாறைகள், மணல் திட்டுக்கள், கடல்புற் படுகைகள் மற்றும் சேற்றுப் படுகைகள் போன்ற ஏராளமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட பிரதேசங்களாகும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல் மீன் இனங்கள், ஆமைகள் மற்றும் இறால் மற்றும் நண்டுகள் போன்ற கடல் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் போன்ற கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் உணவளிக்கும் இடங்களாகச் செயல்படுகின்றன. மீன்பிடித் தொழில் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் அத்துடன், நாட்டின் உணவு இறையாண்மை ஆகியவை இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர்ச்சியான இருப்பைப் பொறுத்தது. இவையனைத்தும் இந்தத் திட்டங்களால் சரிந்துவிடும் அபாயத்தில் உள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி மட்டுமல்ல, உலக வங்கியும் கூட நமது நாட்டை காற்றாலை மின்சார சந்தையின் பிடிக்குள் வேகமாகக் கொண்டு வருகின்றது. நீர் மின்சார உற்பத்திக்கான தற்போதைய நிலையான எரிசக்தி மூலத்தைப் பாதுகாக்க, தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் வண்டல் படிவதைத் தடுப்பதும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவது போன்ற செலவு குறைந்த முறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். இதன் மூலம் மின்சாரம் மட்டுமல்ல, விவசாயத்திற்கும் மக்களுக்கும் நீர் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், அதனூடாக காலநிலை மாற்றத்தைத் தணித்தல், மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால், ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் நம்மை எரிசக்தி சந்தையில் அடைத்து வைப்பதன் மூலம் இதையெல்லாம் நம்மிடமிருந்து பறிப்பதற்கான வேலையை செய்கின்றன. அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த அனைத்து தரப்பினரும் தற்போதைய அரசாங்கத்தையும் தன் பிடியில் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அதை உணரவில்லை. காரணம் நிலையான எரிசக்தி சந்தையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் நிலையான எரிசக்தி நிறுவனங்கள் மிகக் கவனமாக நிர்வகிக்கின்றன. இதனூடாக நாட்டின் எரிசக்தி இறையாண்மையைப் பறித்து, அனைத்து முடிவுகளையும் சந்தை நிறுவனங்களிடம் விட்டுவிடும் ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சியாகும். ஒரு நாடாக நாம் இதை உடனடியாகக் கடக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக, பழைய மற்றும் காலாவதியான தொழில்நுட்பங்களில் இயங்கும் நாட்டின் தற்போதைய நீர் மின் நிலைய அமைப்பை மிகவும் திறமையாக புதுப்பிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, காற்றாலை மின் நிலையங்கள் குறைந்த தாக்கத்துடன் பொருத்தமான இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும், மேலும், மண் மற்றும் பாறை குவாரி பகுதிகளிலும், வீடுகள் மற்றும் கட்டடங்களிலும் சூரிய மின் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும். காடுகளில் உள்ள ஈரநிலங்கள், குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், பொருத்தமான இடங்களில் இத்தகைய திட்டங்களை நிறுவுவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளை, வளர்ந்த அமைப்புகளில் நிலையான எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், அந்தத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்குவதன் மூலமும் இழக்கக்கூடாது. சஜீவ சாமிக்கர காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம் https://maatram.org/articles/12376

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.