Everything posted by கிருபன்
-
கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர்
கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் adminOctober 24, 2025 கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்தை. விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு. எனவே கடற்தொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும். பல்வேறு பகுதிகளில் இழுவை மீன்பிடி படகு தொழில் நடைபெறுகிறது. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தை விட இந்த அரசாங்கம் ஒரே நாளில் அதிக அளவு இந்திய மீனவர்களை கைது செய்தது. கடந்த மாதம் ஐந்து படகுகளில் 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது. இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம். இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் கடல் சார் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்படையினரும் திறமையாக செயல்படுகின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/221887/
-
செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்
செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம் October 23, 2025 11:32 am ”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார். https://oruvan.com/chemmani-massacre-plan-to-seek-foreign-technical-assistance/
-
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் October 23, 2025 12:16 pm 2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரமர், 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்ட அமைப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, முன்பள்ளி கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான ஆசிரியர் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் வலியுறுத்தியதாவது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்பதுடன், பாடசாலைகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவது தற்போது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார். இது கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். இந்த பாராளுமன்ற உபகுழுக் கூட்டத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://oruvan.com/single-curriculum-for-pre-schools-across-the-country-from-2026/
-
மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள்
மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர். அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர். குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள், தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளதாகவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் காணிகள் வழங்கப்பட்டமையை எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=345677
-
“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும்” – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை
“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை” October 23, 2025 இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலானா பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமானப்படைத் தளபதிகாளான ஏர் மார்ஷல், பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார். https://www.ilakku.org/india-sri-lanka-bridge-will-lead-to-illegal-activities/
-
தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை - ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் - பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை.! Vhg அக்டோபர் 23, 2025 கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22.10.2025) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நேரடியாகப் பயங்கரவாதத் குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜரானார். இந்நிலையில் அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டுக்குக் கடந்த- 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாகவிருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகத் தெரிவித்து அது தொடர்பான விசாரணைகளுக்குக் கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கிச் சென்றிருந்தனர்.. இதற்கமைய, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகள் நடந்துள்ளன. வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை-03 மணியளவில் அவர் வெளியேறியுள்ளார். https://www.battinatham.com/2025/10/blog-post_359.html
-
வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு !
வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு ! By SRI 2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் கூறினார். குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறினார். https://www.battinews.com/2025/10/500.html
-
யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்
யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் sachinthaOctober 23, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தற்போது காணப்படுகின்ற இறங்குதுறையானது நீண்டகாலமாக பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.thinakaran.lk/2025/10/23/breaking-news/159976/யாழ்-குறிகட்டுவான்-இறங்/
-
காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு
காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு வழங்கும் 62 மில்லியன் டொலர் மானியத்தை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை. கடனிலிருந்து மானியமாக மாற்ற இந்திய அரசு முன்வைத்த நிபந்தனைகள் குறித்து இன்னும் பேச்சுகள் நடந்து வருவதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இதுதொடர்பில் தெரிவிக் கையில். வடக்கு துறைமுகத்தின் மேம்பாட்டுக் காக இந்தியா 62 மில்லியன் டொல ருக்குமேல் வழங்கியிருந்தாலும், அந்தத்தொகை தற்போது கடனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடனை மானியமாக வழங்க இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இன்னும் கலந் துரையாடப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்க வில்லை. ஒரு துறைமுகம் நிறுவப்படும்போது, அதன் சமூகப்பொருளாதார தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டவுடன், தேவையான பேச்சுகளைத் தொடங்கி அதற்கேற்ப முன்னேறுவோம் - என்றார். https://newuthayan.com/article/காங்கேசன்துறைமுக_அபிவிருத்தியில்_இந்தியாவின்_நிபந்தனைகள்_ஆராய்வு#google_vignette
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
செவ்வந்திக்கு படகு சேவை – அந்தோணிப்பிள்ளை ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு! adminOctober 23, 2025 திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு-கண்டி சாலையில் உள்ள திஹாரியவின் ஓகோடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தோணிப்பிள்ளை ஆனந்தன் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் சந்தேக நபர் விசாரணையின் போது சுட்டிக்காட்டியதன் பேரில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சந்தேக நபர் 19.04.2019 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களுடன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிலோன் பாய் எனப்படும் முகமது ரிஸ்வி என்ற நபரின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வசதிகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது. https://globaltamilnews.net/2025/221869/
-
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
காளமாடன் (பைசன்) இளங்கோ *** கலை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் அடிப்படை நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும் மட்டுமே. அதன் நிமித்தம் கிடைக்கும் இன்ன்பிற விடயங்களான புகழ்,பணம், செல்வாக்கு என்பவை, படைத்தலின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைக்கின்றவை என்று வேண்டுமெனில் சொல்லலாம். எனவே ஓர் உண்மையான படைப்பாளிக்கு படைப்பின் நிமித்தம் கிடைக்கும் நிறைவே முக்கியமே தவிர, அதன் நிமித்தம் கிடைக்கும் இவ்வாறான by products அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை 'ஆழப்புழா ஜிம்கானா' போன்ற சில மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்ப்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் என்பது சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, துவிதநிலையில் நாயக X எதிர்நாயக விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது. எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததைப் பார்த்ததில் இருந்து, எங்கும் இரத்ததைப் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் இந்த விடயத்தில் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை இரத்தசகதியில் கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களை என் பதின்மங்களில் வாசித்த/பார்த்த ஞாபகம் வருகின்றது. மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம். இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓரடி முன்னே நிற்கின்றார். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரைசேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார். துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரைக்கும்போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாகக் கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்ல உதாரணங்கள். என்னைப் போன்று ஊர்களில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ள வேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகப் பிறருக்கு நிரூபிக்கவும் தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது. கலை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, கசடான அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் 'தலையில் சுத்தியலால் அடித்து' உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான். நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்ற மாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும். மாரி இந்த காளமாடனில் -அவரின் முன்னைய திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம். மாரி ஒரு நேர்காணலில், 'வாழை'யில் நடந்த ஒரு கதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடன் பல்வேறு உரையாடல்களை -அது நேரோ எதிரோ- உருவாக்குவதையே விரும்புகின்றேன் என்று கூறியிருப்பார். மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரம் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை உருவாக்க முடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர். இப்போது முன்பு போல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்? ******** https://www.facebook.com/share/p/178yu7Yigi/?mibextid=wwXIfr
-
யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்
யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன் adminOctober 22, 2025 பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில் – “நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து இன்று எனது பூர்வீக இடமான நல்லூரை வந்தடைத்தேன். யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட உன்னத உணர்வு. எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல்ல யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும். மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப் பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும். நான் பாகிஸ்தானுக்கும் சென்று வர முயற்சித்தேன். ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறையை வந்தடைந்து எனது இறுதி நல்லூரை வந்தடைந்துள்ளேன் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடன சவால்களை எதிர்கொண்டாலும் அந்த நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்புகளையும் தந்திருந்தனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார். அதேநேரம் சுமார் 40 வருடங்களுகு முன்னர் பெற்றோர் பிரான்சில் குடியேறிய நிலையில் சூரன் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/221853/
-
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
‘பைசன்’ படம் பேசுவது என்ன? மாரி செல்வராஜ் முன்வைத்த நிஜங்கள் என்ன? – இயக்குநர் வசந்த பாலன் ‘நெகிழ்வு’ பதிவு 21 Oct 2025, 2:17 PM தமிழ்ச் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் வசந்த பாலன் விரிவான விமர்சனத்தை தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பைசன் திரைப்படம் குறித்த இயக்குநர் வசந்த பாலனின் பார்வை: பைசன் / தெக்கத்தி மண்ணின் வாசனை வீசும் கபடி விளையாட்டை அந்த மக்களின் வாழ்வியலுடன், அந்த நிலத்தின் அரசியலுடன் சேர்த்து உணர்ச்சிக் கொந்தளிப்புடன் காளமாடனுக்கு படையல் வைப்பது போல நம்முன் படையல் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். அரசியல் ஒரு சாக்கடை என்று நீங்கள் சொல்லலாம்,,அரசியலுக்குள் நான் இல்லை,,,அரசியல் எனக்கு பிடிக்காது,,,,அரசியல் எனக்கு தெரியாது என்று நீங்கள் எந்த வார்த்தையையும் உச்சரிக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையை அரசியல் தான் தீர்மானிக்கிறது, உங்கள் படிப்பை அரசியல் தான் தீர்மானிக்கிறது, உங்கள் தேர்வுகளை அரசியல் தான் தீர்மானிக்கிறது உங்களது புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அரசியல் தான் தீர்மானிக்கிறது. அப்படி தெக்கத்திய அரசியல் மற்றும் ஜாதிப்பிரச்சினைகளுக்கு (இங்கு அரசியலே ஜாதி மதங்களால் ஆனது தானே) நடுவே மாட்டிக் கொண்ட கிட்டான் என்கிற கதாபாத்திரம் எப்படி அலைக் கழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யம் குறையாத நான் லீனியர் திரைக் கதையமைப்பில் அற்புதமாக மாரி விவரிக்கிறார். அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட திரைக்கதை. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படங்கள் விளையாட்டு குழுவின் அரசியல், அதற்குள் உள்ள சதிகள், விளையாட்டின் விதிமுறைகள், பயிற்சியாளர் சொல்லி தருகிற விதிகள், மாற்றுவிதிகள், குறுக்கு வழிகள்,விளையாட்டு வீரனின் குடும்பம் மற்றும் அவனின் மனக்குழப்பங்கள் தடுமாற்றங்கள் இவைகளைத் தான் நாம் பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம். சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒருவன் வெற்றியை சுவைக்க விடாமல் அரசியல் எப்படி பாதிக்கிறது என்பதை ரஞ்சித் சென்னை நகர பின்னணியில் வரலாற்று நிகழ்வுகளுடன் சொல்லியிருந்தார். அதே போன்று தெக்கத்திய மண்ணின் ஆன்மாவோடு அங்கு நிலவும் சாதிப் பிரச்சினைகள், சண்டைகள், கொந்தளிப்புகள் எப்படி சாக்கடைக்கும் கீழே வாழ விதிக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வை துண்டாடுகிறது என்பதை அத்தனை அழுத்தமாக கொந்தளிப்புடன் கண்ணீருடன் நம் முன் வைக்கிறார் மாரி. ஏன் இந்த ஊர விட்டு ஓடனும்? இனிமே என்னால ஓடமுடியாது ஏன் என்னை இந்த ஊருல இருக்கிற கபடி டீம்ல சேத்துக்கமாட்டேனு சொல்றாங்க? உன் காலத்துல உங்கப்பா காலத்துல உங்க தாத்தா காலத்துக்கு முன்னாடி இருக்கிற பிரச்சினை என்னை ஏன் விளையாட விடாமல் தடுக்கிறது? காதலிக்க விடாமல் தடுக்கிறது என்று துருவ் கேட்கும் போது ஏன்னா அதான்டா நம்ம விதி என்று பசுபதி சொல்லிவிட்டு அழும் போது சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பசுபதிக்கு இந்த திரைப் படத்திலாவது கிடைக்க வேண்டுமென மனம் அடித்து கொள்கிறது. சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் அத்தனை வித்யாகர்வத்தோடு கம்பீரமாக ஒரு வாத்தியாராக நடித்திருந்த பசுபதி இந்த திரைப்படத்தில் கையாலாகாத சம்சாரியாக கூனி குறுகி தன் கோவக்கார பையனை ஒரு கோழிக்குஞ்சு போல கைக்குள்ளே வைத்து பொத்தி பாதுகாக்கிற கதாபாத்திரத்தில் கதறுகிறார் சண்டை போடுகிறார் முதுமை காரணமாக சண்டை போட முடியாமல் விழுந்து கிடக்கிறார் அழுகிறார் கொந்தளிக்கிறார் வெறி கொண்டு சாமியாடுகிறார். ஒரு துளியில் கூட பசுபதி என்ற நடிகன் தெரிந்து விடாமல் தோற்று போன சம்சாரியாக திரையில் தெரிகிறார். இத்தனை ஆண்டுகளாக மழைக்கு காத்திருக்கும் பூமி போல அழகான கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து காத்திருந்து நடிக்கிறார். அது பெரிய ஆன்ம பலம். வாழ்த்துகள் பசுபதி சார். ஒரு கெடாவை பஸ்ஸில் அழைத்துப்போக முடியாத அளவிற்கு சாதி நெருக்கடிகள் தென்தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது என்பதை அந்த கெடாவின் ரத்தத்தோடு அந்த காட்சி விரியும் போது பரியேறும் ருமாளில் வருகிற கருப்பி நினைவுக்கு வந்து விட்டாள். மாரியின் படங்களில் வருகிற விலங்குகள் கதையின் ஆன்மாவாகவே இருக்கின்றன. எனக்கு தெரிந்து வேறு எந்த சினிமாவிலும் விலங்குகளை அழகியல் படிமமாக அரசியல் படிமமாக வைத்து கொண்டு காத்திரமாக கதை சொன்ன வேறு இயக்குநர் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. பரியேறும் பெருமாளில் நாய், கர்ணனில் குதிரை, மாமன்னனில் பன்றி இப்போது காளமாடன். மூன்றே காட்சிகளில் எத்தனை அழகான கவித்துவமான காதல் கதையை நம் முன் வைக்கிறார். மஞ்சனத்தி வாசத்தை காதலில் கலந்து உதிரும் சருகுகளாக பறக்கவிடுகிறார். துருவ் படம் நெடுக பேசும் வசனம் ஒரு பக்கம் அளவு கூட இருக்காது ஆனாலும் கபடி களத்தில் அவர் கபடி விளையாடுகிற காளமாடன் உடல் மொழியும் படம் நெடுக காணும் கிராமத்து மண் சாலைகளிலும் சென்னை வீதிகளிலும் ஜப்பான் விளையாட்டு அரங்கிலும் அவர் ஓடிக்கொண்டேயிருக்கும் போது வெளிப்படுத்தும் உடல் மொழி ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையற்றவனின் உடல் மொழி. அவனை பாடச்சொன்னால் இந்த ஜனம் கேட்டு தீராத பாடலை ஆண்டுக்கணக்காக பாடித் தீர்ப்பான்.. அப்படியிருக்கிறது துருவின் உடல் மொழி. அந்த மொழி நம்முடன் பேசியவண்ணம் இருக்கிறது. வழக்கமாக தமிழ் கதாநாயகர்கள் நக்கல் நையாண்டிகளில் கலகலவென்று பேசி ரசிகர்களை கவர்வார்கள் இதில் தன் உடல் மொழியால் திரை முழுக்க நிறைந்திருக்கிறார் துருவ். நம் வீடுகளில் வளர்ந்து நிற்கிற நிஜ ஊமை மாடனாக ஒரு பையன் இருப்பான். அவனை துருவ் நினைவு படுத்துகிறார். நான் என் இளமைப்பருவத்தில் இப்படித்தான் இருந்தேன்.. என் மகனும் இப்போது அப்படி தான் இருக்கிறான்.. தன் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தத்தெரியாத ஒரு ஊமைக்கொட்டான் என்று செல்வார்கள்.. அப்படி ஒரு பையன் தன் கனவை நோக்கி செல்லும் போது நம் வீட்டு பையன் ஜெயிக்கவேண்டுமென்ற ஆசையில் துருவ் கபடியில் வெல்லும் போது திரையில் விசில் பறக்கிறது. விளையாட்டின் இறுதி தருணங்களில் பசுபதி கண்களை பொத்திக் கொள்வதைப்போல விளையாட்டின் இறுதி தருணத்தை காணமுடியாமல் ஐய்யோ நம்ம புள்ளை ஜெயிக்கனுமே என்று நாமளும் கண்களை பொத்திக்கொள்கிறோம். துருவ் வெல்லும் போது பசுபதி போல நாமும் நம் கண்களை நனைக்கிறோம்.வெல்வது யாருக்கும் எளிதல்ல ஐநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள குக்கிராமத்தில் இருந்து வெளியேறி வந்து வெல்வது சாதாரண வெற்றியல்ல.. அதனாலே நகரத்தின் மாபெரும் திரையரங்கில் படம் பார்த்த அத்தனை வெற்றியாளர்களின் கண்களிலும் கண்ணீர் பூக்கிறது. பரிமேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்,வாழை,பைசன் என மாரி செல்வராஜின் வலிகள் சொல்லி அடங்காமல், சொல்லில் உறையாமல்,சொல்லி ஆறாமல், அழுது ஆற்றாமல், எத்தனை ஒப்பாரிகளுக்கு பின்பும் இன்னும் இன்னும் ஆங்காரமாக, துளி கங்கு அணையாமல், சாம்பல் இந்த பெருநிலமெங்கும் கதைகளாக பாடல்களாக திரை வண்ணங்களாக பறந்து பரவிய வண்ணம் இருக்கிறது. ஒரு எழுத்தாளன் ஒரு கவிஞன் திரைக்குள் இயக்குநராக நுழைந்தால் என்ன நடக்குமோ, என்ன அதிசயங்கள் நடக்குமோ, அது இந்த ஐந்து திரைப்படங்களில் நடந்திருக்கிறது. நகரத்தின்,வெற்றியின் எந்த சொகுசும் மாரியின் ரத்தத்தில் கலக்கவில்லை என்பதற்கு இந்த படங்களே சாட்சி. எத்தனை புறக்கணிப்புகளை சந்தித்த ஆத்மாவாக இருந்தால் இடையறாது தன் ஒப்பாரிகளை சொல்லியவண்ணம் இருக்கும். இது மாரி செல்வராஜ் என்கிற தனி மனிதனின் வலியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயரால் புறக்கணிப்புகளை,வலிகளை அனுபவித்த தலைமுறையின் பாடல். அந்த தலைமுறைகளின் ஆற்றாத கண்ணீர் தான் மாரியின் திரைப்படங்கள். தொடர்ந்து ஐந்து படங்களாக கமர்சியல் சினிமா என்கிற பசியோடு அலைகிற சிங்கத்திடம் சிக்காமல் திரை அழகியலுடன் திரைப்படம் எடுத்து வெற்றி பெறுவது என்பது உண்மையில் சாதாரண சாகசம் அல்ல. பெரிய சாகசம்.! எதிர்மறை எண்ணங்களும் கருத்துகளும் குவியும் சமூக வலைதளங்கள் அதில் கொட்டப்படும் லட்சக்கணக்கான விமர்சனங்கள் இன்ஸ்டாவில் வாழும் gen z இளைஞர்களின் காலத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது என்பது அரிதிலும் அரிதான விசயம். தன் நெஞ்சை கோடாரியால் ரெண்டாகப் பிளந்து நிற்கிற உண்மையான கலைஞனாகவே மாரியை நான் பார்க்கிறேன். அவர் படங்களில் ஒப்பனைகள் இல்லை. அலங்காரங்கள் இல்லை. நிலப்பரப்பில் இருந்து பெண்கள் வரை யாரும் கவர்ச்சியாக இல்லை. அதிரடி சண்டைக்காட்சிகள் இல்லை. எதை நீங்கள் அருவறுக்கிறீர்களோ அதை அழகாக்கி உங்கள் முன் காட்சி பிம்பங்களாக படைக்கிறார். சாதிகளால் கட்டப்பட்ட அந்த ஏழாம் உலகம் நமக்கு நம் சமூகத்தின் நிஜங்களைப் புரிய வைக்கிறது. நம்மை புதுப்பிக்க மாற்றிக்கொள்ள அவரின் திரைப்படங்கள் உதவுகின்றன. வெறும் மெலோடிராமா வகை இயக்குநர் என்று என்னை சுருக்க முடியாது ஆக்சன் படங்கள் எடுக்கக்கூடிய இயக்குநரும் தான் என்பதை மாரி இந்த படத்தில் வரும் இரண்டு கொலை முயற்சிகளைப் பார்க்கும் போது நமக்கு குலை நடுங்குகிறது. வாழ்த்துகள் மாரி தெக்கத்திய மண்ணின் ஆத்மா உங்கள் ஆத்மாவோடு இரண்டற கலந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருஞ்செல்வம் நீங்கள்! https://minnambalam.com/what-does-the-film-bison-convey-the-realities-mari-selvaraj-highlights-emotional-note-by-director-vasanthabalan/
-
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் October 22, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் உரையாற்றியவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்த்திய உரைக்கு தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி தமிழர்கள் இதுகாலவரையில் முன்னெடுத்த முயற்சிகளின் இன்றைய நிலை குறித்து அவர் விளக்கிக் கூறியதே பிரதான காரணமாக இருந்தது எனலாம். பொன்னம்பலம் தனது உரையில் தமிழர்களின் நீதி தேடலின் இன்றைய இக்கட்டான நிலையை தெளிவுபடுத்தியதுடன் நீதியைப் பெறுவதற்கு தமிழர்கள் பயணிக்க வேண்டிய பாதை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டையும் விளக்கிக்கூறினார். பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அரசுமே இலங்கையை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பாகவும் நிறுத்துவதற்கு தயாராயில்லை என்றும் கூறிய பொன்னம்பலம், மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்கள் சகலதுமே சர்வதேச வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட கருவிகளாக இருந்தனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யக்கூடியவையாக இருக்கவில்லை என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறினாார். ஜெனீவா செயன்முறைகள் தமிழர்களுக்கு நடந்ததை வெறுமனே போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக குறுக்குவதாக அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய பொன்னம்பலம் இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பு (Genocide) என்று உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இன அழிப்புக்கு இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. அவரின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத் தொடரின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அக்டோபர் 6 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்புலத்தில் நோக்க வேண்டியிருக்கிறது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையை மேலும் இரு வருடங்களுக்கு புதிய தீர்மானம் நீடித்திருக்கிறது. அதன் மூலமாக மனித உரிமைகள் அலுவலகத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் (Sri Lanka Accountability Project) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் வேறு சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையும் இலங்கை தமிழரசு கட்சியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பியிருந்தன. அந்தக்கடிதங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டியவை என்று அவர்கள் கருதும் விடயங்களை இரு தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஆணை நீடிக்கப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய பேரவை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதன் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court ) பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர், பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச்சபையை வலியுறுத்தும் முன்மொழிவு புதிய தீர்மானத்தில் இடம் பெறவேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது. அதேவேளை, தமிழரசு கட்சி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் செயன்முறை ஊடாக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வது பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியற்றது என்ற போதிலும், அந்த நீதிமன்றத்தை தாபித்த றோம் சாசனத்தை (Rome Statute ) ஏற்றுக்கொள்வதற்கு இலங்கையை இணங்க வைப்பதற்கான முன்மொழிவை தீர்மானம் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. றோம் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் யோசனை கூறியிருந்ததையும் தமிழரசு கட்சி கடிதத்தில் சுட்டிக்காட்டியது. அந்த வேண்டுகோள்களை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரிட்டன், கனடா உட்பட மையநாடுகள் கவனத்தில் எடுத்ததற்கான தடயம் எதையும் தீர்மானத்தில் காணவில்லை. முன்னைய தீர்மானங்களை விடவும் புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழ்த் தரப்புகளுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய் விட்டது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டதை தமிழரசு கட்சி வரவேற்றது. “இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், 16 வருடங்களாக முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து அதிருப்தியடைந்திருந்தாலும், இலங்கை மீதான சர்வதேச கண்காணிப்பு இன்னொரு இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம்” என்று தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செய்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். புதிய தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்த போதிலும், வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதை சவாலுக்கு உட்படுத்தவில்லை. சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதே அடிப்படைப் பிரச்சினை என்று அரசாங்கம் கூறியது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , ” போர் முடிவுக்கு வந்த உடனடியாகவே நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தேசியப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், 16 வருடங்களாக ஜெனீவாவில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினை நீடித்திருக்காது. பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களும் தொலை நோக்கின்மையுமே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார். இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தின் முன்னேற்றம் குறித்து முதலில் ஒரு எழுத்துமுல அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் 63 வது கூட்டத் தொடரிலும் விரிவான அறிக்கையை 66 வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கேட்டிருக்கும் நிலையில், இரு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள் தொடங்குவதற்கு முன்னதாக மாத்திரமே அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புக்களைச் செய்வதே வழமையாக இருந்து வந்தது. அந்த போக்கில் இருந்து மாறுபட்டு செயற்படுவதற்கு தேவையான அரசியல் துணிவாற்றலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிக்காட்டும் என்று நம்பக்கூடியதாக இனப்பிரச்சினையில் அதன் அணுகுமுறைகள் அமையவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால் காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா? இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சிந்தனையில் இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கங்கள் குறித்து யாழ்நகர் உரையில் தெரிவித்த கருத்துக்களை நோக்குவோம். பொறுப்புக்கூறல் விவகாரத்தை கையாளுவதற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை ஆதரிக்கும் அவர் அத்தகைய கட்டமைப்பு தொடர்பில் தீர்மானத்தை எடுக்கின்றபோது சில உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். தற்போதைய சர்வதேச கட்டமைப்புக்களில் இலங்கை தமிழர்கள் பொறுப்புக்கூறலுக்காக அணுகக்கூடியதாக இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே என்று கூறும் பொன்னம்பலம் அந்த நீதிமன்றத்தினால் ஒரு அரசை அல்ல, தனிநபர்களையே விசாரணை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்கின்ற அதேவேளை, ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய கட்டமைப்பாக விளக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice ) ஒரு அரசினால் மாத்திரமே வழக்குத் தொடரமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். றோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதற்கு மியன்மார் விவகாரத்தை உதாரணமாக அவர் காட்டுகிறார். சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒரு அரசினால் இயலாமல் இருக்குமானால் அல்லது அந்த அரசுக்கு விருப்பமில்லாமல் இருக்குமானால் மாத்திரமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தலையீடுசெய்ய முடியும். மியன்மார் அரசு றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குத்தொடுநர் அலுவலகமே முறைப்பாட்டைச் செய்து விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. மியன்மாரும் றோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால், மியன்மார் அரசின் கொடுமைகளில் இருந்து தப்பியோடி இலட்சக்கணக்கான றொஹிங்கியா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பங்களாதேஷ் அந்த சாசனத்தில் கைச்சாத்திட்ட காரணத்தினால் அந்த மக்களுக்கு எதிரான வன்முறைகள் பங்களாதேஷிலும் இடம்பெற்றது என்ற அடிப்படையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் நியாயதிக்கத்தைப் பயன்படுத்துகிறது. றொஹிங்கியா மக்களுக்கு எதிராக மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக மியன்மார் இராணுவத் தலைவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் நீதிமன்றத்தை கேட்டிருக்கிறார். இது அந்த விசாரணையின் தற்போதைய நிலைவரம். இது இவ்வாறிருக்க, றொஹங்கியா மக்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்கவில்லை என்றும் இன அழிப்புக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவில்லை என்றும் மியன்மார் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி சிறியதொரு ஆபிரிக்க நாடான காம்பியா 2019 ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கை சர்வதேச நீதிமன்றமும் தற்போது விசாரணை செய்து வருகிறது. இன அழிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க மியன்மாரை நிர்ப்பந்திக்கும் உத்தரவை அந்த நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் பிறப்பித்தது. தனது தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான முறைப்படியான பொறிமுறை எதுவும் சர்வதேச நீதிமன்றத்திடம் கிடையாது. இறுதியில் அவற்றின் நடைமுறைப்படுத்தலும் கூட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் விவகாரமாகவே மாறிவிடுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை றோம் சாசனத்தில் கைச்சாத்திட்ட அரசுகளே நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரையில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எத்தனை அரசுகளினால் உருப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது இன்னொரு கேள்வி. இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு கடந்த 16 வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு தமிழர் தரப்பு முன்னெடுத்த முயற்சிகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்க முடியும். பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு பெரிய அக்கறை இல்லை என்பதையே அக்டோபர் 6 ஜெனீவா தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கினது. இத்தகைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலும் போரின் இறுதிக் கட்டங்களின் குற்றங்களுக்கு பொறப்புக்கூறலை கோருவது தொடர்பிலும் இதுவரையில் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தமிழர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. https://arangamnews.com/?p=12393
-
NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் — கருணாகரன் —
NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் October 18, 2025 — கருணாகரன் — ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பது என்ற அடிப்படையில் செயற்படுவது இன்னொரு வகையான வியூகம். இரண்டையும் மிகக் கச்சிதமாகச் செய்கிறது NPP. “இதில் என்ன புதுமை உண்டு?எந்த அரசியற் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான இயல்புதானே இது? முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டினார்கள். ‘நிலையான அபிவிருத்தி‘, ‘அரசியற் தீர்வுக்கான முயற்சி‘, ‘புதிய அரசமைப்பு உருவாக்கம்‘ என்றெல்லாம் எத்தனையோ படங்கள் காட்டப்பட்டது. இப்பொழுது NPP தன்னுடைய வேலையைச் செய்கிறது. அது அப்படிச் செய்யும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். சனங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் தீர்மானித்துக் கொள்வர்“ என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை உண்டு. ஆனால், அதற்காக ஏனைய தரப்புகளோடு NPP யை சமப்படுத்திப் பார்க்க முடியாது. NPP வேறான ஒன்று. அதனுடைய அடித்தளமும் செயற்பாட்டு முறையும் அதற்கான நுட்பங்களும் வேறு. ஏனைய கட்சிகளிலிருந்தும் முந்திய ஆட்சித் தரப்புகளிடமிருந்தும் அவற்றின் உபாயங்களிலிருந்தும் NPP வேறுபட்டது. மட்டுமல்ல, NPP யைப் பற்றிய பொது மக்களின் அபிப்பிராயம் ஏனைய ஆட்சித் தரப்பினரைப் பற்றியதைப்போல அல்ல. அது வேறானது. ‘ஏனையவற்றை விடப் பரவாயில்லாத தரப்பு‘. ‘நம்பிக்கைக்குரிய சக்தி‘. ‘முற்போக்கானது‘. ‘ மாற்றங்களைச் செய்யக் கூடியவர்கள்‘. ‘நேர்மையானவர்கள்‘, ‘குற்றங்களோடும் ஆட்சித் தவறுகளோடும் சம்மந்தப்படாதவர்கள்‘, ‘முந்திய ஜே.வி.பியும் இன்றைய NPP யும் ஒன்றல்ல‘ என்ற அபிப்பிராயம் அல்லது அவ்வாறானதொரு பார்வை பொதுமக்களிடத்தில் NPP யைப் பற்றி உண்டு. இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல், அரசியலமைப்பு உருவாக்கம், பன்மைத்துவம் குறித்த அணுகுமுறை, பல்லினத் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் போன்றவற்றில் ஏனைய சக்திகளோடு பெரிய வேறுபாடுகளில்லை என்றாலும் அந்த வேறுபாட்டை உணர முடியாதவாறு NPP நடந்து கொள்கிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அவர்கள் NPP யைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். என்பதால்தான் தமிழ்பேசும் மக்களிடம் NPP க்கும் அநுரகுமார திசநாயக்கவுக்குமான ஆதரவுத் தளம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் NPP க்குச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று யாரும் சமாதானம் சொல்லி ஆறுதலடையக் கூடும். ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியில்லை. அந்த இறக்கத்தை ஏறுமுகமாக்குவதற்கு NPP தீவிரமாகச் செயற்படுகிறது. அதற்கே ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதும் தொடர்பாடல்களை விரிவாக்குவதுமாகும். அதாவது NPP மிகச் சுறுசுறுப்பாகவும் மிகத் தீவிரமாகவும் வேலை செய்கிறது. இதனை எதிர்த்தரப்புகள் புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாகத் தமிழ்பேசும் சமூகத்தினர் இந்த விடயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால், NPP யின் அடிச்சட்டம் JVP யே. JVP அடிமட்டத்தில், மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதிலும் மக்களைப் பங்கேற்பாளர்களாக்குவதிலும் திறன்வாய்ந்தது. எத்தகைய தோல்விகளுக்குள்ளும் திறன் குன்றாமல் வேலை செய்யக் கூடியது. ஆயுதப் போராட்ட காலத்தில் JVP யின் முதுகெலும்பு ஒன்றுக்கு இரண்டு தடவை முறிக்கப்பட்டது. அரசியற் கட்சியாகச் செயற்பட்ட காலத்தில், அரசியல் ரீதியாக பல துண்டுகளாக உடைந்தது அல்லது ஆட்சியாளர்களால் அவ்வாறு உடைக்கப்பட்டது. ஆனாலும் அதனுடைய அடித்தளம் சிதையவில்லை. இரண்டாவது, இடதுசாரி முகத்தைக் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மாறாக தீவிர இனவாதத்தை வரலாறாகப் பெற்றது. மலையக மக்களை வேற்றாளர்களாகப் பார்ப்பது தொடக்கம், தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் உளத்தைக் கொண்டது. தற்போது கூட அதில் பெரிய அளவில் மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை. இதையெல்லாம் மறைப்பதற்கே ‘அனைவரும் இலங்கையர்கள். அனைவரும் இலங்கையர்களாகவே கொள்ளப்படுவார்கள்‘ என்ற பெருங்கதையாடல்கள் NPP யினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினரையும் சமனிலையில் NPP நோக்கினால் அது மகிழ்ச்சியே. ஆனால், அது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதாவது நடைமுறையாக இருக்க வேண்டும். அப்படியென்றால், அதற்கான நடவடிக்கைகளை NPP படிப்படியாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கை எதுவும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையாளர் உட்பட பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் அவ்வாறான எதிர்பார்ப்போடும் தேடல்களோடும்தான் உள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி ஜெயசூரிய போன்ற சற்றுப் பன்முகத் தன்மையோடு விடயங்களை நோக்கக் கூடியவர்களின் மீதான நம்பிக்கையோடு உள்ளனர். அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அப்படியே அடுத்த கட்டமாக உருவாக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் அரசியலமைப்பை பல்லின சமூகங்களின் தேசம் என்ற வகையில் உருவாக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தப்படுவது அவசியம். அரசியமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் சிங்களத்துக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்தால், அது சிங்களத்துக்கு முன்னுரிமை அளித்தலாகவே அமையும். “பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டால், சிங்களத்தரப்பின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கே முயற்சிகள் நடக்கும்“ என்ற கதைவிடல்கள் இங்கே அவசியமற்றவை. அப்படியென்றால், அது இதற்குமுன் ஆட்சியிலிருந்த தரப்புகள் சொன்னதையே தேசிய மக்கள் சக்தியும் வெட்கமில்லாமல் சொல்கிறது என்று அர்த்தமாகும். குறிப்பாக1970 களில் இனவன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன சொன்னதைப்போல, ‘சிங்கள மக்கள் விரும்புவதையே தன்னால் செய்ய முடியும். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் செய்வது அவர்களுடைய நம்பிக்கைக்கு இழைக்கப்படும் செயலாகும் என்பதைப்போலாகும். ஆக, கட்சிக்குள்ளே அடிப்படையான மாற்றங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல், வெளியே பெருங்கதையாடல்களைச் செய்யும் ஒரு ஆட்சித்தரப்பாகவே தேசிய மக்கள் சக்தியும் செயற்பட விளைகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளைத் திருத்தம் செய்வதாகச் சொல்லப்பட்டாலும் அதில் இனப்பிரச்சினையைக் கையாண்ட தவறான அணுகுமுறை போன்ற பெரிய விடயங்கள் திட்டமிட்டு விலக்கப்படுகின்றன. அதாவது,தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டு அவசியமானவை புறக்கணிக்கப்படுகின்றன (Only selected agendas are implemented. Selected and necessary ones are ignored). ஆட்சியிலிருக்கும் தரப்பு, தொடர்ந்தும் அதிகாரத்தைப் பெறுவதற்கே விரும்பும்; முயற்சிக்கும் என்பதால் இந்த மாதிரியான விளையாட்டுகளை, தந்திரோபாயங்களாகச் செய்யும் என்று இதற்கும் யாரும் நியாயப்படுத்தல்களைச் செய்யக் கூடும். அப்படியெல்லாம் நியாயப்படுத்தி, NPP யைப் பிணையெடுக்க முற்பட்டால், அவர்கள் இந்த நாட்டையே புதைகுழிக்குள் தள்ளி விடுகிறார்கள் என்றே அர்த்தமாகும். இங்கே NPP யை வழமையான தமிழ் நோக்குநிலையில் வைத்து இந்தச் சொற்களைக் கூறவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரவுக் கண்ணோட்டத்தில் அணுகுவதனால், அதனுடைய முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பொறுப்பையும் உணர்த்துவதற்கே இவை அழுத்தமாகக் கூறப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மாற்றங்களுக்கான ஒரு சக்தி(தரப்பு) என்ற அடிப்படையில் நம்பிக்கையோடு நோக்கப்படுவதால் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“ என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல். இனவாத அடிப்படையில் விடயங்களை அரசாங்கம் நோக்க முற்பட்டால் நாடு பிளவுண்டதாகவே இருக்கும். ஒருபோதும் ஒற்றுமைப்படாது. பிளவுண்ட நிலையில் இருக்கும் நாட்டில் முன்னேற்றத்தை எட்டவே முடியாது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் முதலீடுகளுக்கான வாய்ப்பும் சீரான அபிவிருத்தியும் நடக்காது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அபிவிருத்தியில் பங்களிக்கவும் பங்குபெறவும் முடியாமல் போய் விடும். இதெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவாறு தேர்வு செய்யப்படும் அடிப்படையில் ஏற்பும் புறக்கணிப்புமான ஒரு அரசியல் வேலைத்திட்டமாகவே மாறும். அப்படி மாறினால் அது சமூகக் கொந்தளிப்புகளையே உருவாக்கும். அதன்பிறகு எப்படி அனைவரும் இலங்கையர்களாக முடியும்? முந்திய ஆட்சியாளர்கள் மீளவும் அதிகாரத்தைப் பெற முடியாதவாறு தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் NPP யினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படியேதான் ஊழல்வாதிகளின் மீதான நடவடிக்கைகள் தொடக்கம் அனைத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் அமைகின்றன. இதையே தம்மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால், அப்படி அவை சொல்வதற்குரிய தகுதி அவற்றுக்கு இல்லை. அப்படிச் சொல்லித் தங்களுடைய தவறுகளை மறைத்து விடவும் முடியாது. இத்தகைய பின்னணியில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் சமூகங்கள் எப்படித் தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை எதிர்கொள்ளப்போகின்றன? அந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன. அரச எதிர்ப்பு, NPP யும் இனவாதக் கட்சிதான் என்று வழமையான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அத்தகைய அணுகுமுறை நிச்சயமாக அவற்றுக்குக் கைகொடுக்கப்போவதில்லை. மக்களுக்கும்தான். ஆகவே NPP யும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஏனைய தரப்புகளும் புதியனவாகச் செயற்பட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகளைக் காண்பதிலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாகும். https://arangamnews.com/?p=12391
-
யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!
யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு! சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர். https://akkinikkunchu.com/?p=345520
-
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை… October 22, 2025 முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண முதலமைச்சரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். https://www.ilakku.org/வட-மாகாண-முதலமைச்சர்-வேட-2/
-
போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்
போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 22 Oct, 2025 | 11:21 AM இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும், நேற்று (21) காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் குண்டு வீசி தாக்கியதாகவும் அங்கு தரைவழி தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. காசாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாமும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாம் எந்த வகையிலும் தாக்குதல் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகை சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உலக நீதிமன்றம் ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐ.நா. சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இருப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இஸ்ரேலின் கடமைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று (22) ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது என்பது தெரியவந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதனால் காசாவை விட்டு வெளியேறியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததையிட்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228355#google_vignette
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
செவ்வந்தி விவகாரம்: ஐவர் கைது திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள வீட்டின் உரிமையாளர், சந்தேக நபரை தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தவர் என்றும், படகை வழங்கியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேரை பொலிஸார்இதுவரை கைது செய்துள்ளனர். பிப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த பின்னர், தொடங்கொட மற்றும் மித்தெனிய பகுதிகளில் இருந்த சந்தேக நபரான செவ்வந்தி, மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கிய நபருக்கு அதற்காக 2.5 மில்லியன் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவுவதற்காக, படகை வழங்கிய நபர் மூன்று இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/செவ்வந்தி-விவகாரம்-ஐவர்-கைது/175-366642
-
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன் adminOctober 21, 2025 யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று , வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டனர். அதன் பின்னர் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ. சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை கட்டட வேலைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார். https://globaltamilnews.net/2025/221808/
-
நிமலராஜன் நினைவேந்தல்!
நிமலராஜன் நினைவேந்தல்! adminOctober 19, 2025 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர் , தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221734/
-
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன்
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம். எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை. எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து, வளர்ந்து, திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று. அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள். இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா? அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு. ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார். நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார். இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை. பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது. போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது. புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர் பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள். எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான். தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான். இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது. அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக் கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள். அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர். அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார். போர்க்களத்தில் உயர்நீத்தார். தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார். தனித்து விடப்பட்ட தந்தையை புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார். அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார். இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர். பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார். அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர். மூன்றாவது உதாரணம், ஓர் அரசியல் செயற்பாட்டாளர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார். 2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை. எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார். அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார். நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது. புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது. இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு. அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம். மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம். இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது. தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும். நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது. இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது. பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது. ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை. இரண்டாம் நாளும் காணவில்லை. பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது அயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது. இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன். தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள். இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும். Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு. அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு. இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு. 2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது. வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு. அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு. ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில் மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு. இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு. இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான். அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு. அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள். எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள். அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது. அது ஒரு கொடுப்பினை. ஆனால் எல்லாருக்கும் இல்லை. எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும். தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம். இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும். முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது, முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது. மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை. முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள், விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான். இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம். எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம். https://www.nillanthan.com/7852/
-
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன் “சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது. “இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில் இருந்து ( 30/1 (2015), 46/1 (2021) 51/1 (2022), 57/1 (2024) ) ஒருபடி கீழே இறங்கிவிட்டது. இந்த தீர்மானத்தில் முதல் முறையாக “பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு உதவியுடனான பொறுப்புக்கூறல் பொறிமுறை என்ற பேரவையின் முந்தைய உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் குறிப்பதாகும். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது. ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் புலனாய்வு என்று பேசுகிறது” கடந்த 16 ஆண்டு கால ஜெனிவா மைய அல்லது மேற்கு நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்களின் கருத்து அது. தமிழகத்திலிருந்து வரும் கருத்துக்களுக்கு ஒரே சமயத்தில் இனப்பரிமாணமும் பிராந்தியப் பரிமாணமும் ராஜதந்திரப் பரிமாணமும் உண்டு. ஏனென்றால் இந்தியப் பேரரசின் அரசியல் தீர்மானங்களின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய ஒரே சாத்திய வெளி தமிழகம்தான். ஈழத்தமிழர்கள் நொதிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தைத்தான். தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது. ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் 19பேர் தீக்குளித்திருக்கிறார்கள். ஈழத்தில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு எதிராக முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழகந்தான். உலகில் உள்ள ஆகப்பெரிய தமிழ் சட்ட மன்றம் அது. எட்டுக் கோடி மக்களைப் பிரதிநித்துவப்படுத்துவது. அங்கே நிறைவேற்றப்படட இனஅழிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் உண்டு. அதுபோல முதலாவதாக இனஅழிப்பு நினைவுத் திடலை தஞ்சாவூரில் கட்டியெழுப்பியதும் தமிழகந்தான். ஆனால் கடந்த 16ஆண்டுகளாக தமிழகத்தின் பரந்தளவிலான கவனக் குவிப்புக்குள் ஈழத்தமிழர்கள் இல்லை. ஈழத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் நொதிப்பை,கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லை. செம்மணிப் புதைகுழி திறக்கப்பட்டிருந்த பின்னணிக்குள், கடந்த யூலை மாதம் 26 ஆம்திகதி நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. கடந்த ஒகஸ்ற் 19ஆம் திகதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை,சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில்,”ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரியும்” கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இப்பேரணிகள் பற்றியும் அவற்றில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் ஈழத் தமிழர்களுடைய பிரதான ஊடகங்களில் பெரிய அளவுக்குக்குப் பேசப்படவில்லை. திபெத்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் இதுவரையிலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் திபெத்துக்காக தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே திபெத்தவர்கள்தான். பிற இனத்தவர்களோ பிற நாட்டவர்களோ கிடையாது. ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்காக இதுவரை தமிழகத்தில் 19 தியாகிகள் தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழகத்தவர்கள். இவர்களில் யாருமே இந்தியப் பேரரசின் ராஜதந்திர இலக்குகளை முன்வைத்துத் தீக்குளிக்கவில்லை. திருகோணமலையில் உள்ள எண்ணைக் குதங்களைக் கேட்டோ,அல்லது பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று கேட்டோ, அல்லது காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டோ,அல்லது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்;நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுத்தான் தீக்குளித்தார்கள். உலகிலேயே கடலால் பிரிக்கப்படும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் கடலின் மறுபுறத்தில் இருக்கும் மக்களுக்காகத் தீக்குளித்தமை என்பது நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத ஓர் அரசியல் தோற்றப்பாடு. அந்த 19 தியாகிகளுக்காக ஈழத் தமிழர்கள் என்றென்றும் தமிழகத்துக்குத் தலை வணங்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சி அரசியலைத்தான் செய்வார்கள். ஆனால் அந்த 19பேரும் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சிமைய அரசியலுக்காகத் தீக்குளிக்கவில்லை. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் பிரச்சாரக் கூட்டங்களை படிப்படியாக ஒழுங்குப்படுத்தி வந்த ஒரு பின்னணிக்குள், ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேச வேண்டி வந்தது. ஈழத் தமிழ் அரசியலை அங்கே பேச வேண்டிய ஒர் அரசியல் தேவை இருப்பதைத்தான் அது காட்டுகின்றது. தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது. நீதிக்கான போராட்டத்தில் இம்முறை ஜெனிவா தீர்மானமானது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் பின்னடைவுதான். ஆனால் அந்தப் பின்னடைவு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தொடங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். அரசாங்கத்திற்கு ஏழு ஆசனங்கள். தமிழ்த் தேசிய கட்சிகளில் பெரியது ஆகிய தமிழரசுக் கட்சிக்கும் ஏழு ஆசனங்கள். இதனால் அரசாங்கம் தமிழ் மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருப்பதாக உலகம் முழுவதும் கூறித் திரிகின்றது. எனவே ஐநாவில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுவிட்டது. வாழ்வுரிமை இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல ஐநாவின் முன்னய தீர்மானங்களில் இருந்தும் புதிய தீர்மானம் வழுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான அலுவலகம் ஒன்று மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்பட்டது. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானமானது அந்த அலுவலகத்தின் பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்றது. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. அது ஒரு பன்னாட்டு அலுவலகம். அதாவது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஏற்பாடு ஏற்கனவே சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா இல்லை. அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் விசா இல்லை. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்து போன பின்னரும் விசா இல்லை. இவ்வாறு ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயம் சர்வதேச மயப்பட்ட பின்னரும்,புதிய தீர்மானமானது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைத்துலக உதவிகளோடு பலப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவதென்றால் பிறகு எதற்கு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பன்னாட்டுக் கட்டமைப்பு? சில சமயம் ஐநா கூறக்கூடும் அது ஒர் அழுத்தப் பிரயோக உத்தி என்று.அப்படிச் சொன்னாலும் ஒரு கேள்வி உண்டு.அது எதற்கான அழுத்தம்? இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான அழுத்தமா? அல்லது இலங்கை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதில் அதற்குள்ள வரையறைகளை உணர்த்துவதற்கான ஓர் அழுத்தமா? எனவே ஐநா தீர்மானத்தில் இருந்து தமிழ்மக்கள் படிக்க வேண்டியது என்னவென்றால்,மேற்கத்திய நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது அதாவது குறிப்பாகச் சொன்னால் ஐநாவை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது புதிய மாற்றங்களையும் புதிய வியூகங்களையும் வேண்டி நிற்கிறது என்பதுதான். முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ருசி கண்ட அரசாங்கம் இனி வரக்கூடிய தேர்தல்களிலும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற முயற்சிக்கும். எனவே முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவேண்டும். அதன்பின் உலகத்தில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும். தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான் ஓர் அரசைப்போல சிந்திக்கலாம்;செயற்படலாம். இந்தக் கட்டுரை எந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தொடங்கியதோ அதே அறிக்கையின் இறுதிப் பகுதியை இங்கு கூறி முடிக்கலாம்… “தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தத்தமது அரசுகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருப்புவதில் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் வலுப்பெற்றால்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை. https://www.nillanthan.com/7847/
-
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு - விசேட தபால் தலை வெளியீடு adminOctober 18, 2025 அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது. பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது. 1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221685/
-
போர்நிறுத்த ஒப்பந்தம் 2025
போர்நிறுத்த ஒப்பந்தம் 2025 sudumanal image: Aljazeera காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போது தேடுதல் என்பதற்கு ஏதும் அர்த்தம் இருக்குமா என்ன. அதேபோல் இஸ்ரேலிய சிறையில் கொல்லப்பட்ட பலஸ்தீன கைதிகளின் உடலங்களும் வந்திருக்கின்றன. அவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்பட்ட தடயங்கள் உடலில் இருப்பதாக ஐநா செயலாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய சிறையிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தாம் பறிகொடுத்த காலங்களின் மீதேறி மீண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என நம்பி இருந்த சில குடும்பங்களின் முன் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் சில கைதிகள் மீண்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 வருடங்களாக, 20 வருடங்களாக கைதிகளாக இருந்தவர்களும் வந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் கமாஸின் பிடியிலிருந்த பணயக் கைதிகள் இஸ்ரேல் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இருதரப்பிலும் இவர்களோடு தொடர்புடைய குடும்பங்கள் நட்புகள் என நெருக்கமானவர்கள் தமது கட்டியணைப்புக்குள்ளும் கண்ணீருக்குள்ளும் மகிழ்ச்சியை தெரிவித்து தீர்த்துவிட முடியாதபடி திணறிப் போய் நிற்கும் காட்சிகளை (இருதரப்பிலும்) பார்க்கிறபோது போரின் கொடுமையை சபிக்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். எல்லோரையுமே விடுதலை செய்வது என்பது -ட்றம்ப் இன் ஆலோசகர்கள் வடிவமைத்து, நெத்தன்யாகுவுடன் மூடிய அறைக்குள் இருந்து வெட்டித் திருத்தப்பட்டு வெளிவந்த- போர்நிறுத்த உடன்படிக்கையின் விதிகளில் ஒன்று. அந்தக் கைதிகளும் முழுமையாக வந்து சேர்வார்கள் என நேரம்சமாகவே நம்புவோம். இஸ்ரேல் இதுவரை விடுவித்தவர்களில் பலரும் மேற்குக் கரை பலஸ்தீன கைதிகள். 250 அரசியல் கைதிகளும் இதற்குள் அடங்குவர். அவர்களில் 157 பேர் யசீர் அரபாத் வழிநடத்திய பி.எல்.ஓ (பலஸ்தீன விடுதலை அமைப்பு) இன் இராணுப் பிரிவான Fatah உறுப்பினர்கள் ஆவர். 65 பேர் கமாஸ் உறுப்பினர்கள். 1718 பேர் எந்த குற்றமுமில்லாமல் ஆயிரக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர். இதில் இரண்டு பெண்களும் 18 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்களும் அடங்குவர். இது இவ்வாறிருக்க இஸ்ரேலிய ஊடகங்கள் “கமாஸ் விடுவித்த 20 பேர்களிலும் ஒரேயொரு பெண் மட்டும்தான் உள்ளடங்குகிறார். இறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருக்கின்றனர்” என்ற அவதூறை முன்வைத்திருக்கின்றன. அப்பட்டான பிரச்சார உத்தி இது. ஒக்ரோபர் 7 இல் 251 பேர் கமாஸ் இனால் பணயக் கைதிகாக பிடிக்கப்பட்டு காஸாவுக்குக் கொண்டவரப்பட்டனர். அதில் 41 பேர் பெண்கள். நவம்பர் 2024 இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் 31 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த அமளிக்குள் அதை வசதியாக சியோனிச ஊடகங்கள் மறைத்துவிடுகின்றன. அதேநேரம் இந்த ஒப்பந்தம் ட்றம் எழுதிய போர்நிறுத்த தீர்ப்பேயொழிய, பலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வல்ல. பணயக்கைதிகளைத் தேடி நெத்தன்யாகு ஆடிய வேட்டை 76’000 பலஸ்தீனர்களின் உயிரைக் காவுகொண்டும், காஸாவின் பௌதீகக் கட்டமைப்புகள் எல்லாவற்றையும் நாசமாக்கியும் தோல்வியில் முடிந்தது. கடைசியில், எஞ்சிய பணயக் கைதிகளை மீட்க ட்றம்ப் இனூடாக நெத்தன்யாகு கண்டுபிடித்திருக்கிற (அல்லது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கண்டுபிடித்திருக்கிற) வழிதான் இந்த ஒப்பந்தம். கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்ட ஒரு தேசத்தினை பாதுகாப்பு அரணாக கமாஸ் நின்று எதைச் சாதிக்க முடியும் என்ற இயலாமை, இரண்டு வருடங்களாக போர் துரத்தித் திரிந்த மண், உயிர்களை சப்பித்துப்பிய போர் அரக்கன், ஒவ்வொருநாளும் அங்குமிங்குமாக ஓடிய மக்களின் அவலம், கைதுசெய்யப்பட்ட அல்லது காணாமலாக்கப் பட்ட மனிதர்கள் குறித்த துயர், பட்டினி மரணம், குழந்தைகளின் தளிர் உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்சி, அதன் வலி, மருத்துவமனை தகர்ந்த நிலம். மருந்துகள் இல்லா உயிரறுநிலை, இந்த நிலைமைக்குள் நின்று கமாஸ் சிந்திக்க வேண்டிய தருணம் என எல்லாமுமாக ஒரு தற்காலிகமாகவேனும் அமைதிதேவைப்பட்டது. image: Aljazeera சம்பந்தப்பட்ட இருதரப்பும் ஓர் உருப்படியான மூன்றாவது தரப்பின் துணையுடன் அமர்ந்திருந்து உரையாடி பேரம் பேசி புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்றெல்லாம் எட்டப்பட்ட ஒப்பந்தம் அல்ல இது. அது சியோனிச இஸ்ரேலின் தோற்றமும், அது ஏற்படுத்திய அழிவும் தொடர் சண்டித்தனமும், அகண்ட இஸ்ரேலுக்கான அயல்நாட்டு எல்லை ஆக்கிரமிப்பும், அத்தோடு அந்த நாடுகளின் இறைமையை தூசாக மதித்தல், குண்டுவீசுதல் என்ற தொடர் பயங்கரவாதச் செயற்பாட்டு வரலாறு கொண்ட நிலையில் இந்த சமாதான உருவாக்க வழிமுறையெல்லாம் சாத்தியமுமில்லை. பணயக் கைதிகளை விடுவித்தலும், கமாஸை ஆயுதநீக்கம் செய்தலுமே இந்த ஒப்பந்தத்தின் கள்ள இலக்கு. இரண்டும் இஸ்ரேலின் காட்டுக் கத்தலாலும் காட்டுமிராண்டித்தனத்தாலும் இயலவில்லை. சர்வதேச அமைதிப்படை என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் அதன் அடிவருடி அரபு நாடுகளின் படைகளும் கஸாவுக்குள் புகுந்து காலவோட்டத்தில் கமாஸ் ஒழிப்பில் இறங்கும் சாத்தியம்தான் மிக அதிகமாக உள்ளது. “கமாஸ் ஆயுதங்களை களைய வேண்டும். இல்லையேல் அந்த வேலையை நாம் செய்வோம்” என ட்றம்ப் மிரட்டுகிறார். இன்னொரு இடத்தில் தனது விமானத்தினுள் நின்று பத்திரிகையாளருக்கு சொல்கிறபோது, “அவர்கள் தாம் ஆயுதங்களைக் களைய கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்” என்கிறார். ஒப்பந்தத்தில் என்னதான் எழுதப்பட்டிருக்கிறது. உடனடி ஆயுதக் களைவா அல்லது கால அவகாசத்தடனான களைவா என தெரியவில்லை. இரு-அரசுத் (two-state) தீர்வின் மூலம் பலஸ்தீன அரசை அங்கீகரித்து, பகைநிலைமையை கணக்கில் எடுத்து எல்லைகளை கறாராக வகுத்து, அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் எந்த அம்சமும் இந்த ஒப்பந்தத்தில் கிடையாது. அப்படியான நோக்கத்தில் ட்றம்ப் பேசியதும் கிடையாது. மாறாக சர்ச்சைக்குரிய ஜெரூசலமை ஏற்கனவே இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த ட்றம்ப் வரைந்த ஒரு சமாதான ஒப்பந்தம் என்னவிதமான அரசியல் சாணக்கியத்தைக் கொண்டதாக இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. தொடர்ச்சியாக இரு-அரசு தீர்வை எதிர்க்கும் நிகழ்ச்சிநிரலைக் கொண்ட சியோனிஸ்டுகளின் அண்மைக் கால சாட்சியாக நெத்தன்யாகு ஐநாவில் -வெறும் இருக்கைகளைப் பார்த்தபடி- பேசிய கடைசி உரை அமைந்திருந்தது. “பலஸ்தீன அரசை உருவாக்குவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றார் நெத்தன்யாகு. இதுதான் வரலாறு. கமாஸ் உம் ஆரம்பத்தில் இரு-அரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதாவது கமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை, இஸ்ரேல் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. என்றபோதும் இரு-அரசுத் தீர்வை முன்வைத்து எல்லைகளை வரையறுத்த (யசீர் அரபாத் பங்குகொண்ட) ஒஸ்லோ ஒப்பந்தத்தை (1993) சிதைப்பதற்கு கமாஸின் ஓர்-அரசுத் (one-state) திடசங்கற்பம் தமக்கு உதவி செய்யும் என சியோனிஸ்டுகள் கணித்திருந்தனர்.அதனால்தான் கமாஸ் இன் தோற்றத்தை இஸ்ரேல் ஆதரித்து ஊக்குவித்தது. உதவிசெய்தது. Fatah க்கு எதிரான கமாஸின் சகோதர இயக்கப் படுகொலைக்கு எண்ணெய் ஊற்றியது. இப்போ கமாஸ் ஓர்-அரசுத் (one state) தீர்வு பற்றி பேசுவதில்லை. image: npr .org பலஸ்தீன மக்களின் இறைமையை மதிக்க வேண்டும். அவர்கள் தம்மைத் தாமே ஆள உரிமை கொண்டவர்கள். ஆள்பவர்கள் யார் என்பதை அவர்களேதான் தீர்மானிக்க வேண்டும். கமாஸ் தாம் அதில் தலையிடப் போவதில்லை என்று திட்டவட்டமாச் சொல்லியிருக்கிறது. ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த, உறுதிப்படுத்த ஐநாவால் முடியாதா என்ன. எப்போதும் நாகரிகத்தையும் ஜனநாயகத்தையும் கற்றுத்தர வகுப்பெடுக்கும் மேற்கின் காலனிய மனோபாவம் பலஸ்தீன அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வருகிறது. ஈராக்கைச் சிதைத்த போர்வெறியன் ரொனி பிளேயர் மேயராக (ட்றம் உடன்) இருப்பாராம். பிரிட்டிஸ் சாம்ராச்சியம் 1948 இல் உருவாக்கிய இந்தப் பிரச்சினை வளர்ந்து இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு குற்றவுணர்வுகூடக் கிடையாதா இந்த முன்னாள் காலனியவாதிகளுக்கு. பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத இந்த ஒப்பந்தம் நவகாலனிய கட்டமைப்புடன் முன்வைத்திருக்கிற செற் அப் இது. இந்த சூதாட்டம் பலஸ்தீனப் பிரச்சினையை இன்னும் சேறாட வைக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. சமாதான காலம் என வர்ணிக்கப்படும் இந்தக் காலத்தின் ஆயுள் எவளவு குறுகியதாய் அமையும் என தெரியாது. அது பலஸ்தீன மக்கள் மூச்சுவிடவும், தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், நிம்மதியாய் இருந்து பசியாற உண்ணும் கனவை ஓரளவேனும் நிறைவேற்றும் காலமாகவும், குடும்பங்கள் ஒன்றுசேரும் காலமாகவும், இஸரேலினால் பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளின் வரவும் மகிழ்ச்சியும் கண்ணீரும் புத்துணர்வும் வாழ்தலின் மீதான உந்துதலும் என ஒரு மனிதஜீவியாய் அவர்களை தூக்கி நிறுத்தும் காலம். இது நீண்டு வளர வேண்டும். ஒரு தெளிவான அரசியல் தீர்வின் எல்லைவரை இது நீள வேண்டும் என அவாவுதல் ஒரு மனித வேட்கை. ஒரு கனவு. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். பலஸ்தீனம் என்ற அரசை உறுதிசெய்வதுவரை போகாத எந்த ஒப்பந்தமும் நிரந்தரமான அரசியல் தீர்வை தரப்போவதில்லை, மீண்டும் நிம்மதியாக சனம் இருக்க வழிசமைக்கப் போவதுமில்லை என்பதை மட்டும் வேதனையோடு சொல்ல வேண்டியுள்ளது! ravindran.pa https://sudumanal.com/2025/10/17/போர்நிறுத்த-ஒப்பந்தம்-2025/