Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தகுமோ… இது முறையோ! sudumanal கிரீன்லாந்து விவகாரம் image: axious. co 1721 இல் டென்மார்க் இனால் காலனியாக்கப்பட்டு, பின் இணைக்கப்பட்டதுதான் கிரீன்லாந்து தீவு. வரலாற்றுப் போக்கில் டென்மார்க் இத் தீவுக்கு ஒரு சுய ஆட்சிப் பிரதேசம் (Autonomous Territory) என்ற அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவை இரண்டும் டென்மார்க் இராசதானி (Kingdom of Denmark)என்ற வடிவத்துள் இணைக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்தின் வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, நீதித்துறை என்பன டென்மார்க் இன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. பெருமளவு நிதி உதவியை டென்மார்க் வழங்குகிறது. அதிக இயற்கை கனிம வளங்களைக் கொண்டது இத் தீவு. அத்தோடு மேற்குப் பிராந்தியத்திற்கு மூலோபாய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இதன் காரணமாக ட்றம்ப் கிரீன்லாந்த்து மீது கண் வைத்திருப்பதும் அதை அவர் கையகப்படுத்த உறுதியுடன் இருப்பதும் அழுத்தமாகத் தெரிகிறது. அவரது நிகழ்ச்சி நிரலில் அடுத்தது அதுதானா என்பதும், அத் தீவு போர் மூலம் கைப்பற்றப்படுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியன. அடுத்தது கிரீன்லாந்துதான் என எழுப்பிவிடப் பட்டிருக்கிற செய்தி ஒரு கவனத் திசைதிருப்பலாகவும் இருக்கலாம். எதிர்பாராமல் ஈரான் மீதோ கொலம்பியா மீதோ தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியமில்லை. ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பின் சாதகமான நிலையை ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான போராட்டம் சிஐஏ க்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கொலம்பியா அரச தலைவர் Gustavo Petro அவர்கள் முன்னாள் M-19 விடுதலை இயக்கப் போராளியாவார். இடதுசாரிய சிந்தனை முறை கொண்டவர். அதனால் ட்றம் க்கு அவர் ஒரு sick man ஆக தெரிகிறார். இதுகுறித்து ட்றம்ப் க்கு மிக காட்டமான முறையில் அவர் பதிலளித்திருக்கிறார். தான் சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆயுதம் ஏந்துவதில்லை என முடிவெடுத்து இருந்ததாகவும், அமெரிக்கா போருக்கு வந்தால் அதன் பிறகு தான் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். வெனிசுவேலா தலைவரையும் துணைவியாரையும் கடத்தியது குறித்து ஒரு காட்டமான அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். “விரும்பினால் வந்து கைது செய்” என ட்றம்ப் க்கு சவால் வேறு விடுத்திருக்கிறார். இது ஓர் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை இல்லாதிருக்கலாம். வாய்ச் சவடால் ஆகவும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான போரில் வெற்றி பெறுவதான சவடால் அல்ல அது. தன்னை கைதுசெய்ய முடியாது என்பதான சவடாலுமல்ல. ஒரு போராளியாக இருந்த ஆன்மாவின் குரல் அது, அடங்க மறுக்கும் உணர்வு அது என புரிந்துகொள்ள இடமுண்டு. அதனால் கிரீன்லாந்தையும் விட, ட்றம்ப் கொலம்பியா அல்லது ஈரான் மீது முதலில் கவனத்தைக் குவித்திருக்க சாத்தியம் அதிகம் உள்ளது. ட்றம்பின் இந்த ஒரு வருட ஆட்சியில் அவரது அணுகுமுறை இப்படி தடாலடியாகவேதான் நிகழ்த்தப்படுகிறது. கிரீன்லாந்து மீது ட்றம்புக்கு இருக்கிற கவனத்தை இது குறைத்து மதிப்பிடுவதாகாது. ஆனால் பலரும் எதிர்பார்ப்பதுபோல் கிரீன்லாந்தை ட்றம்ப் விரைந்து கைப்பற்றுவாரா என்பதுதான் கேள்வி. ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருடத்தில் அவர் ஆறு நாடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். அதை போர் என்ற நிலைக்குள் நகர்த்தாமல் அச்சமூட்டுகிற வேலையோடும், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடும் மட்டும் நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஈரான், ஈராக், சிரியா, நைஜீரியா, யேமன், இப்போ வெனிசுவேலா என குண்டுவீசி திரும்பியிருக்கிறார். வெனிசுவேலா மீது எல்லை மீறி நடந்திருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு வல்லாதிக்க நாட்டின் தலைவர் நாடு புகுந்து கடத்திக் கொண்டு வரலாம் என்ற செயலும், அதில் அரசியல் நியாயம் காண்பதும், ஆதரிப்பதும் மிக ஆபத்தானது. இதை மற்றைய வல்லாதிக்க நாடுகளும் கடைப்பிடித்தால் இந்த உலகம் என்னவாகும். இனி, வெனிசுவேலா மீது அவர் எடுக்கப்போகும் அடுத்த நடவடிக்கை எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். வெனிசுவேலா மண்ணில் அவர் இராணுவ ஆக்கிரமிப்பை அல்லது நிலைகொள்ளலை மேற்கொள்வதன் மூலம் அவர் சேற்றுள் கால்வைக்கப் போகிறாரா இல்லையா என்பது தெரிய வரும். “ஆக்ரிக் பகுதியிலுள்ள கிரீன்லாந்துக்கு குறுக்குமறுக்கான ரசியாவும் சீனாவும் ஓடித்திரிகிறது. அது மேற்கு பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. அவர்களை டென்மார்க் இனால் கையாள முடியாது. நேட்டோவின் அங்கமாக இருக்கிற எம்மால்தான் கையாள முடியும்” என்று நியாயம் கற்பிக்கிறார். “We need Greenland” என ஒரே போடாய்ப் போட்டிருக்கிறார். ஐரோப்பாவோ ஒரு நேட்டோ நாட்டை இன்னொரு நேட்டோ நாடு தாக்குவது “தகுமோ… இது முறையோ” என்ற றேஞ்ச் இல் வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். “அமெரிக்காவுக்கும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கும் உறவு இருக்கிறது. அதன் அடிப்படையில் கிரீன்லாந்தில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. கிரீன்லாந்தின் இறைமையை அமெரிக்கா மீறுவது சர்வதே சட்டவிதிகளுக்கு முரணானது” என்கிறார், Mette Frederiksen அவர்கள். அவரின் உயர்ந்தபட்ச மென்மையான எச்சரிக்கை “அது நடந்தால் அதுவே நேட்டோவின் முடிவாக இருக்கும்” என்பதுதான். அதற்கு அப்பால் போகவில்லை. அவர் வெனிசுவேலா மீதான ட்றம்ப் இன் செயலையும் கண்டிக்கவோ, ஆதாரம் காட்டிப் பேசவோ இல்லை. நேட்டோவின் 5வது சரத்துப்படி நேட்டோவிலுள்ள ஒரு நாட்டை தாக்கினால் அது நேட்டோவின் எல்லா நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குலாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். நேட்டேவுக்குள் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இராணுவ தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தால், எப்படி அது கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து இந்த தலைவர்கள் எவரும் பேசிக் கேட்டதில்லை. பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்பெயின், போலந்து, இத்தாலி மற்றும் டென்மார்க் தலைவர்கள் ஒன்றுகூடி விட்டிருக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் இந்த முயற்சியை நேரடியாகக் கறாராகக் கண்டிக்காமல் வார்த்தைகளை கவனமாக வெளியிட்டிருக்கின்றனர். “கிரீன்லாந்து மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும், மற்றவர்கள் அல்ல” என்கிறது அந்த அறிக்கை. அத்தோடு சர்வதேச சட்டவிதிகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் இறைமை பற்றி பேசுவதோடு அந்த அறிக்கை தீர்ந்து போகிறது. இதே சர்வதேச சட்டத்தை மதிக்காமல், ஐநாவின் பாதுகாப்புச் சபை அனுமதி பெறாமல், யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அமெரிக்கா தலைமையில்; நேட்டோ ஜக்கற் அணிந்து போருக்குப் போனபோது இந்த அறம் எங்கே ஒளிந்திருந்தது. இப்போதுகூட பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்களுக்கு வெனிசுவேலா மீதான இதே சர்வதேச சட்டவிதிகள், இறைமை என்ற அளவுகோல்கள் “செல்லாது செல்லாது” என்றே இருக்கிறது. டென்மார்க் உட்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்துப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்க்க ட்றம்பை சந்தித்து பேச இடமுண்டு. அதற்குமுன் அரச செயலர் மார்க்கோ ரூபியோ இவர்களைத் தேடி வரவிருக்கிறார். ட்றம்ப் கொம்பனி மூன்று தேர்வுகளை முன்வைத்திருக்கிறது. முதலாவது தேர்வு கிரீன்லாந்தை வாங்குவது. ஆனால் கிரீன்லாந்து மக்கள்” எமது நிலம் விற்பனைக்கு இல்லை” என திடமாகக் கூறுகிறார்கள். டென்மார்க்கும் அதை பலமுறை கூறிவருகிறது. இரண்டாவது தேர்வு, ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தை (COFA-compact of free association) செய்வது ஆகும். பசிபிக் பிராந்தியத்திலுள்ள Micronesia, Palau, Marshall Islands ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இம்மாதிரியான ஒப்பந்தத்தை செய்து ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. ஆனால் அவை முழு இறைமையுள்ள நாடுகள் என அமெரிக்கா சொல்கிறது. பொருளாதார உதவியையும் பாதுகாப்பையும் அமெரிக்கா இந் நாடுகளுக்கு வழங்குகிறது. இதேபோன்றதொரு தீர்வுக்குள் கிரீன்லாந்தை இட்டுச் செல்ல ட்றம்ப் முயற்சிக்கலாம். இந்த இரு தேர்வுகளும் சரிவராத பட்சத்தில் அமெரிக்கா போரை அடுத்த தேர்வாக நாடலாம். அது போராக இருக்குமா என்பதுதான் கேள்வி. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 1946 இல் அமெரிக்கா கிரீன்லாந்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்தது. இப்போதும் படைத்தளத்தை கிரீன்லாந்தில் அமெரிக்கா வைத்திருக்கிறது. 836000 சதுர மைல்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய இத் தீவின் சனத்தொகை வெறும் 57000 மட்டுமே. அதற்கென தனித்த இராணுவம் கிடையாது. டென்மார்க் இராணுவம்தான் அங்கும் உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பை ஐரோப்பா தனித்து நின்று முழுமையாக உத்தரவாதப்படுத்தவில்லை. நேட்டோ என்ற அமைப்பின் கீழ் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதையும் மிகத் திருத்தமாகச் சொன்னால் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தேசிய ரீதியிலான பாதுகாப்பை மேவி, தமது வளத்தை நேட்டோவுக்குள் தாரைவார்க்கிறது என்பதே பொருத்தமானது. இந் நாடுகள் நேட்டோவின் பாதுகாப்பு நிதியை தமது தேசிய வருமானத்தின் (GDP) ஐந்து வீதமளவில் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆயுத உற்பத்தியைக்கூட தன்னிறைவாக உருவாக்காமால் அமெரிக்காவிடம் பெருமளவு ஆயுதத்தை வாங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப ரீதியிலும், உற்பத்தித் திறனிலும், அணுவாயுத வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த பலவீனங்கள் நேட்டோவின் சாரதியாக அமெரிக்கா குந்தியிருப்பதற்கான ஒரு பகுதிக் காரணங்கள் ஆகும். 2024 இல் நேட்டோவுக்கான 1.4 திரில்லியன் டொலர் பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 66 சதவீதமாக இருக்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட வேவு பார்க்கும் கருவிகள், விமானங்கள், உளவுப்படை தகவல் பரிமாறல்கள், ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் தமது உற்பத்திகளை விடவும் பெருமளவில் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கை கூட ஐரோப்பாவை மையமாக வைத்து சுயாதீனமாக வரையப்பட்டிருக்கவில்லை என்பது குறித்து அரசியல் அறிஞர்கள் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா நேட்டோவுக்குள் செயற்படுகிறது. பாதுகாப்பில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவிடம் பெருமளவு தங்கியிருக்கிறது. எனவே ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து திடீரென நாணயக் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டு சுதந்திரமாக ஓடமுடியாது. அதை செய்வதாக இருந்தாலும் அதற்கொரு கால அவகாசம் தேவை. அதைத்தான் மக்ரோன் (இப்போ ஜேர்மன் சான்சலர் மேர்ற்ஸ் உம்) வலியுறுத்தி வருகிறார். ஐரோப்பாவுக்கான இராணுவமும் சுயமான பாதுகாப்பு கட்டமைப்பும் தேவை என்கின்றனர். ஐரோப்பாவில் நின்று இதை உறுதியாகச் சொல்லும் மக்ரோன் ட்றம்ப் முன்னால் -வளைந்து நெளியும் உடல் மொழியைத் தாண்டி- நிமிர்ந்து நின்று சொல்ல முடியாதவராக இருக்கிறார். ஆக அமெரிக்காவுக்கு ஐரோப்பா தேவைப்படுவதை விட, ஐரோப்பாவுக்கு அமெரிக்கா வேண்டும். அமெரிக்கா -நேட்டோவுக்கு வெளியில்- சுயாதீனமாக 80 நாடுகளில் 750 க்கு மேற்பட்ட படைத்தளங்களை கொண்ட வலிமையான நாடு. எனவே அமெரிக்காவுக்கும் (மிகுதி நேட்டோ நாடுகளான) ஐரோப்பாவுக்கும் போர் வரும் என ஒரு ஜனரஞ்சகக் கனவை காணலாம். அதைத் தாண்டி எதுவும் நடைபெற சாத்தியமில்லை. image:npr. org கிரீன்லாந்தின் மீதான ஆசை ட்றம்ப் இலிருந்து தொடங்கியதல்ல. அது 19ம் நூற்றாண்டில் தொடங்கியது. 1867 இல் அமெரிக்கா ரசியாவிடமிருந்து அலாஸ்காவை பணம் கொடுத்து வாங்கியபோதே, டென்மார்க் இடமிருந்து கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை அமெரிக்க அரச செயலர் William H. Seward என்பவர் முன்வைத்திருந்தார். சரிவரவில்லை. பிறகு, 1910 இல் டென்மார்க்கின் அமெரிக்க தூதர் Maurice Francis Egan இன்னொரு திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்த பிலிப்பைன்ஸ் இன் Mindanao தீவை கொடுத்து டென்மார்க் இன் காலனியான கரீபியன் தீவுகளையும் (Danish Vergin Islands) கிரீன்லாந்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அதுவும் சரிவரவில்லை. இருந்தபோதும் Danish Vergin Islands இனை அமெரிக்கா 1917 இல் டென்மார்க்கிடமிருந்து -25 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தைக் கொடுத்து- வாங்கிக் கொண்டது. 1946 இல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி Harry Truman கிரீன்லாந்துக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகளை பேரமாக வைத்து விலைபேசினார். டென்மார்க் ஏற்கவில்லை. இவ்வாறு காலனியாதிக்க பேரங்களினூடு வளர்ந்த மனக்கட்டமைப்போடு நவீன காலனியவாதி ட்றம்ப் வெளிக்கிளம்பியிருக்கிறார். மேற்குலகம் முன்வைக்கும் எல்லா ஜனநாயகக் கட்டமைப்புகளும் நடைமுறைகளும் “காலனிய மனக்கட்டமைப்பு” என்ற உளவியல் நோயைத் தாண்டி இருப்பதில்லை. அது தமது நாடுகளின் இறைமையைப் பேணும் வலுவான ஐனநாயகக் கட்டமைப்பைக் கொண்டதாகவும், அதேநேரம் மற்றைய (தாம் தவிர்ந்த) நாடுகளின் இறைமையை, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க நாடுகளின் இறைமையை மறுப்பதாகவும், வளச் சுரண்டலை இயல்பாக்கம் செய்ததாகவும் இரட்டைத்தன்மை வாய்ந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இந்த சாகா வரம் பெற்ற காலனிய மனக் கட்டமைப்புத்தான் (colonial mindset). அதனால் மேற்குலக ஜனநாயகம் என்பது ஒரு பண்பாக வளர்ச்சியடையவில்லை. நிர்வாகக் கட்டமைப்பாக குறுக்கப்பட்டுவிட்டது. மற்றைய பண்பாடுகளை, தனித்துவங்களை, அதனூடான நாகரிக வளர்ச்சியை, அரச கட்டமைப்பின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை, அதன் வடிவங்களை, சுயாதீனங்களை, முழு இறைமையை ஏற்கவில்லை. தமது நியமங்களுக்கு (norms) வெளியேயான மனிதர்களை அது சக மனிதராக முழுமையாக ஏற்கவில்லை. தம் அளவுக்கு நாகரிகம் அடையாதவர்கள் என்றே கணிக்கிறது. ஐரோப்பிய மையவாத சிந்தனைக்குள்ளும் (euro-centric mentality), அதன் அளவுகோலுக்குள் மட்டும் நின்று, மற்றைய நாடுகளுக்கு வகுப்பு எடுப்பதாகவும், கருத்தியலை உருவாக்குவதாகவும், கதையாடல்களை கட்டமைப்பதாகவும், அதையே எமக்கு ஊட்டுவதாகவும், உலகப் பொதுமையாக இயல்பாக்கம் செய்வதாகவும் தன் பணி செய்கிறது. அதுவே “காலனிய மனக்கட்டமைப்பு” ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா அத்துமீறியதற்கும், அந்த வளங்களை கொள்ளையடிக்க முனைவதற்கும், அந்த நாட்டை நிர்வகிக்குமளவுக்கு செல்வதற்கும், மிரட்டுவதற்கும் இதே காலனிய மனக்கட்டமைப்புத்தான் அவர்களது மூளைக்குள் ஓடித் திரிகிறது. இந்த இறைமை மீறலையும் அடாத்தையும் கண்டித்து பேச தயக்கம் காட்டுகிற ஐரோப்பிய மனநிலை இப்போதும் இதே கட்டமைப்புச் சேற்றுக்குள்தான் உழல்கிறது. உதாரணமாக ரசியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுந்த குரல்கள் அமெரிக்காவின் வெனிசுவேலா மீதான அத்துமீறலின் பக்கம் போகவே இல்லை. கமாஸின் ஒக்ரோபர் தாக்குதலில் இறந்த 1200 இஸ்ரேலிய மக்களை பேசுமளவுக்கு காஸா இனப்படுகொலை பற்றி அது பேசுவதில்லை. ‘ஆசியாவின் ஐரோப்பியர்கள்’ என்ற புனைவுவாத அரவணைப்போடு, இஸ்ரேலிய சியோனிஸ்டுகளை கண்டிப்பதுமில்லை. மாறாக ஆதரவு கொடுக்கிறது. கிரீன்லாந்து விடயத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இருக்கும் இந்த சமாந்தரமான மனக்கட்டமைப்பானது தமக்குள் போரைவிட சமரசத்தையே முன்வைக்கும் சாத்தியம்தான் அதிகம். அந்த பேரத்தில் டென்மார்க் காலனியவாதிகள் அபகரித்த கிரீன்லாந்து தீவினது மக்கள் பகடைக் காய்களாக மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ravindran.pa 08012026 https://sudumanal.com/2026/01/08/தகுமோ-இது-முறையோ/#more-7568
  2. காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு. சனி, 10 ஜனவரி 2026 06:30 AM காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான 10ஆம் திகதி ஆகிய இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது https://jaffnazone.com/news/54120
  3. கனடாவில் கனரக வாகனம் மோதி - இலங்கை பெண் உயிரிழப்பு! ஜனவரி 09, 2026 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான திருமதி.ராஜகாந் அனுஷா (வயது-35) உயிரிழந்துள்ளார். இன்று(09.01.2026) காலை Etobicoke Dixon வீதியில் வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://www.battinatham.com/2026/01/blog-post_634.html
  4. ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்! 10 Jan, 2026 | 02:05 PM கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://web.facebook.com/profile.php?id=61567246753629 https://www.virakesari.lk/article/235661
  5. விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில் மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறித்த விரிவுரையாளர் முறையாக வகுப்புகளை நடத்துவதில்லை என்றும், மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், சில மாணவர்களின் உடலமைப்பைக் கேலி செய்து அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முறையான காரணமின்றி விரிவுரை நேரங்களில் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கடந்த 2025 மார்ச் 4ஆம் திகதி, நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடியிடம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக முறையிட்டனர். இதற்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகப் பணிப்பாளர் உறுதியளித்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் கடிதம் மூலமாகவும் நேடியாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முயற்சி செய்தும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த பாடத்திற்கான பரீட்சகராக அந்த விரிவுரையாளரை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (07) முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக கடும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய மாணவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியாக உள்ளனர். https://adaderanatamil.lk/news/cmk7p3rpo03qqo29npq6qq4wu
  6. திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது 2026 ஜனவரி 09 , பி.ப. 09:00 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814
  7. யாழ்ப்பாணத்தில் பலத்த மழை வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்தோடு, வடக்கு மாகாணத்தில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-பலத்த-மழை/175-370826
  8. செவ்வாச்சியம்மன் வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் ஐரோப்பியக் காலனிய ஆட்சிமுறைக்கு உட்பட்ட காலத்தில் தென்னிந்தியச் சமூகம் எதிர்கொள்ளாததும் எதிர்பாராததுமான சமய ஒடுக்குமுறைக்கு இலங்கை முழுவதும் உட்பட்டது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இருந்த சைவ, பௌத்த, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் யாவும் இடித்து அழிக்கப்பட்டன. சுதேச சமய வழிபாட்டு முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் வாழ்வோடும் தொழிலோடும் இணைந்த, பண்டையகால வழிபாட்டு முறையான இயற்கைப் பொருள் வழிபாட்டுக்குத் திரும்பியது. மரம், கல் முதலிய இயற்கைப் பொருள்கள் வழிபடப்பட்டன. சூலம், வேல், பிரம்பு, பொல்லு, பானை முதலான பொருட்களும் வழிபடு பொருட்களாக, தெய்வீகம் பொருந்தியவையாகக் கருதி (குறி வழிபாடு) வழிபடப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆறுமுக நாவலரின் வருகையும் செவ்வியல் சைவ மீட்டுருவாக்கமும் சமஸ்கிருதமயமாதல், மேனிலையாக்கம் எனும் கருத்துநிலைகளின் வழி, பெருந்தெய்வ வழிபாட்டை நிகழ்த்தியமை சிறுதெய்வ வழிபாட்டை செல்வாக்கிழக்கச் செய்துவிட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் சமஸ்கிருதமயமாதலுக்கு முழுமையாக உட்பட்டு சிறுதெய்வங்களைப் பெருந்தெய்வமாக்கி பெருமரபாகிய மேனிலையாக்கத்திற்கு உட்பட்டுவிட்டது எனக் கூறப்பட்டு வருகிறது. இக்கூற்று மேம்போக்காகப் பார்க்கும் போது உண்மை போலத் தோன்றினும் அது முழுமையான உண்மையல்ல என்பதை அண்மைக்கால ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. நாட்டாரியல் தளத்திலான ஆய்வுகள் ஈழத்தில் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை இது உணர்த்தி நிற்கின்றது. செவ்வாச்சி அம்மன் ஈழத்தில் தமிழ்ச் சமூகம் வாழுமிடமெங்கும் தாய்த் தெய்வ வழிபாடான அம்மன் வழிபாடு மிகுந்து காணப்படுகின்றது. கண்ணகி, மாரி, முத்துமாரி, காளி, பத்திரகாளி, பேச்சி, பூசைக்கிழவி, கொத்தி, நீலி முதலான கிராமியப் பெண் தெய்வங்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக செவ்வாச்சி அம்மன் வழிபாடு காணப்படுகின்றது. செவ்வாச்சி என்பது சிவலை நிறத்தை உடைய ஆச்சி, செவ்வாய்க்குரிய ஆச்சி, செவ்வாயில் பூசிக்கப்படுகின்றவள் எனப் பல பொருள் கொள்ளப்பட்டாலும் தெளிவான விளக்கம் சொல்லப்படவில்லை. பூச்சி என்பதே காலப்போக்கில் ஆச்சி என்று வந்திருக்கலாம். சிவந்த அல்லது நன்மைபுரிகின்ற ஒன்றாக இது கருதப்பட்டு இருக்கலாம். செவ்வாச்சி எனும் சொல்லுக்கான அர்த்தத்தைச் சரிவர அறிய முடியவில்லை. ஆயினும் அவர் ஒரு முதிர் பெண்ணாக சிறுகுடி வேளாளர் மரபினரால் வழிபடப்பட்டு வருவதை அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் பொலிகண்டி, கொற்றாவத்தை, சமரபாகு, வதிரி போன்ற இடங்களில் இவ்வழிபாடு இன்றும் நிகழ்த்தப்படுகின்றது. இது முன்னோர் வழிபாடாகவும் இருக்கலாம். ஆயிரம் கண்ணுடையாள் கண்ணகியின் பிறிதொரு வழிபாட்டுமுறையாகவும் இருக்கலாம். ஏனெனில் ஆறு ஆலயங்களில் செவ்வாச்சியின் குறியீடாக பல்துவாரங்களை உடையதான பானையே வைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இலங்கையில் இவ்வழிபாடு முக்கியமாக வற்றாப்பளை கண்ணகி அம்மனின் திருத்தலத்தில் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இத்தெய்வம் குலதெய்வமாகவே இருந்து வருகின்றது. இவ்வம்மனின் கோயில்கள் வீட்டு வளவினில் அமைந்துள்ளன. இப்போது சில கோயில்கள் தனித்து அறுக்கைப்படுத்தப்பட்டு நாற்புறமும் மதில்கள் கட்டப்பட்டு புனிதம் கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாவரும் வழிபாடியற்ற வழி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வீட்டுவளவினில் தென்னோலைக் கிடுகுகளால் கூரை வேயப்பட்டு சுற்றி வர பனம் மட்டை வரியப்பட்டு, நிலம் பசும் சாணத்தால் மெழுகப்பட்டதாகக் கோயில்கள் அமைந்திருந்தன. அம்மன் உயர்ந்த கல்லின் மீது (பீடம்) வைக்கப்பட்டிருந்தது. கால ஓட்டத்தில் அவரவர் பொருளாதார, நம்பிக்கை வளர்ச்சிக்கு ஏற்ப சீமெந்துக் கட்டடங்கள் ஆக்கப்பட்டன. பெரும்பாலான கோயில்களில் முன்மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாச்சி அம்மனுக்கு உருவம் எனத் தனியாக ஒன்று இல்லை. செவ்வாச்சி, குறித்த ஒரு பூச்சி உருவில் வைத்தே வழிபடப்படுகிறார். வண்ணத்துப்பூச்சியை ஒத்த வடிவத்தை உடைய பூச்சி அதுவாகும். சாம்பல், கருப்பு, சிவப்பு, மஞ்சள் எனப் பல வர்ணங்களில் காணப்படும் இப்பூச்சியின் இருபக்கச் இறகுகளிலும் கண்கள் போன்ற வடிவம் காணப்படும். தவிர இறகுகளில் சிறுசிறு புள்ளிகளும் காணப்படும். அதனைக் குறிப்பதாக துவாரமுடைய பானை வைத்து வழிபடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் குறித்த நிறத்தை உடைய குறித்த பூச்சிவகையே வரும் என்ற கருத்தை கோயில் உரிமையாளர்கள், பூசாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. கண் தெரியாத குருடுப் பூச்சி, காது இல்லாத பூச்சி, சிறகு சிதைந்த பூச்சி என இவை பலவாறு அமைகின்றன. எல்லாக் கோயில்களிலும் செவ்வாச்சி பூச்சியின் உருவமோ படமோ காணப்படுகிறது. நம்பிக்கைகள் செவ்வாச்சி அம்மன் நேரே வருவது இல்லை என்றும் பூச்சியின் ரூபத்தில் வருவாள் என்றும் அதுவே செவ்வாச்சிப் பூச்சி என்றும் மக்களிடையே நம்பிக்கை காணப்படுகின்றது. செவ்வாச்சிப் பூச்சி சிறிய ரூபத்தில் வந்தால் அவ்வீட்டில் அல்லது குறித்த நபருக்கு நன்மை நிகழும் என்றும் மத்திம அல்லது பெரிய பூச்சியாக வந்தால் துயரம் நிகழும் என்றும் மக்களிடையே இன்றும் நம்பிக்கை காணப்படுகின்றது. இவ்வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் வாழும் இடம் எங்கும் (வவுனியா தொட்டு கனடா வரை) இந்தப் பூச்சி இவ்வண்ணம் அவர்கள் கண் முன்னே தோன்றி நன்மை, தீமையை முன்கூட்டியே அறிவிப்பதாக கோயில் பூசாரிகள் குறிப்பிடுகிறார்கள். இதனால் இத்தெய்வம் ‘கண் கண்ட தெய்வம்’ என யாவராலும் சுட்டப்படுகின்றது. பூசை முறை செவ்வாச்சி அம்மனுக்கு எல்லா நாட்களும் விளக்கு வைக்கப்படுகின்றது. அதனை விரும்பியவர் யாரும் வைக்கலாம். அதுபோலவே பூ வைத்தல், கற்பூரம் காட்டல் முதலியனவும் யாவராலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. வருடாந்த, விசேட தினங்களில் மட்டுமே பூசாரி பூசை செய்யும் வழக்கம் காணப்படுகிறது. பொலிகண்டி மேற்கில் உள்ள பழவத்தை எனும் இடத்தில் காணப்படும் கோயிலில் மாசி மாதத்தில் ஒரு செவ்வாய் வருடாந்தப் விசேட பூசையும், நாச்சிமார் கோயிலடி செவ்வாச்சியம்மன் கோயிலில் பங்குனி இரண்டாங் கிழமையும், ஏனைய கோவில்களில் ஆடிச் செவ்வாய் ஒன்றில் அவரவர் வசதிக்கேற்ப விசேட பூசையும் இடம்பெற்று வருகின்றன. செவ்வாச்சிக்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமையே அமைவதாக நம்பப்படுகிறது. இவை தவிர பொங்கல், சித்திரை வருடம், நவராத்திரி, தீபாவளி, போன்ற சிறப்பு நாள்களும் விசேட தினங்களாகக் கருதப்பட்டு சிறப்புப் பூசைகள் இடம்பெறுகின்றன. நேர்த்திக்கடன் வைத்தவர்கள் தமக்குகந்த நாளில் நேர்த்திக் கடனைத் தீர்ப்பர். பழவத்தை, பொலிகண்டி தெற்கு, சமரபாகு, வதிரி ஆகிய இடங்களில் உள்ள செவ்வாச்சி அம்மன் கோயில்களில் ஆண் பூசாரிகளும்; ஏனைய கோயில்களில் பெண் பூசாரிகளும் பூசை செய்து வருகின்றனர். தலையில் முழுகி, ஈரச்சேலையோடு பெண் பூசாரிகள் வருடாந்தப் பூசையை செய்யும் முறைமை இன்றும் காணப்படுகிறது. சமரபாகு செவ்வாச்சி கோயில் இவை யாவற்றிலும் வேறுபாடு உடையதாக உள்ளது. முன்பு மண்பானை வைத்து வழிபடப்பட்டாலும் தற்போது சில்வர் குடம் வைத்து வழிபடப்படுகிறது. பொதுவில் பானைக்கு பீடம் காணப்பட, இங்கு அடுப்பின் மீது குடம் வைக்கப்பட்டிருப்பதும் கோயிலுக்கு வெளியேயும் தனி அடுப்பு நிரந்தரமாக அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது அடுப்பு நாச்சியம்மன் வழிபாட்டை ஒத்ததாக அமைகின்றது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி, ஆழியவளை, உடுத்துறை போன்ற இடங்களில் மீனவ மக்கள் பானை வைத்து அதனுள் நிறைவாக நெல்லையிட்டு சட்டியினால் மூடி பூசைக்கிழவி என்னும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். படையல் செவ்வாச்சியம்மன் கோயிலில், சமரபாகு கோயில் தவிர்ந்த ஏனையவற்றில் மரக்கறி உணவுப்படையல், மட்ச – மாமிசப் படையல், சாராயம், கள் முதலான படையல் முறைகள் காணப்படுகின்றன. சமரபாகு கோயிலில் சைவவுணவுப் படையல்முறை மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருவதாக அக்கோயில் உரிமையாளர் சிவஞானம் சரஸ்வதி தெரிவித்தார். செவ்வாச்சியம்மனுக்கான பொதுப்படையல், நெல்லுப் பொரியும் தானியங்களில் அவிக்கப்பட்ட பிடிக்கொழுக்கட்டையும் ஆகும். குறித்த பூசைத் தினத்தில் காலையில் அடுப்பை மூட்டி நெல் பொரிக்கப்பட்டு அவை அம்மன் இருக்கும் இடம் எங்கும் சுற்றி வீசப்படும். இது செவ்வாச்சிப்பூச்சியின் செட்டையில் இருக்கின்ற புள்ளிகளைக் குறிப்பெனவாகவே கொள்ளப்படுகின்றது. நெல்லைப் பொரித்து அம்மனைச் சுற்றிப் பரவியபின் அரிசிமாவைக் குழைத்து சாத்துக்கொழுக்கட்டை அவித்துப் படைப்பர். வளுந்து, கோவிலை அண்மித்திருக்கும் கிணற்றடி, மரத்தடி முதலான இடங்களில் வைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. தெய்வத்தின் முன்பு வாழையிலையைப் பரவி அதில் அக்காலப் பகுதியில் கிடைக்கும் மரக்கறிகளைப் படைப்பர். அவை இக்கோயிற் சூழலில் வாழும் மக்களின் விளைபொருட்களாக முன்பு இருந்தன. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, விவசாயத்தைச் சுருங்கச் செய்த அல்லது கைவிடச் செய்த காலம் தொட்டு மரக்கறிகள் சந்தைகளில் வாங்கிவரப்பட்டு தூயநீரில் கழுவிப் படைக்கப்படுகின்றன. கத்தரிக்காய், வாழைக்காய், பூசணிக்காய், மரவள்ளிக்கிழங்கு, ஈரப்பலா, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டிக்காய், வெங்காயம், மிளகாய், கீரை, பசளிக் கீரை, தேசிக்காய் உள்ளிட்ட பல்வேறு மரக்கறிவகைகள் படைக்கப்படுகின்றன. இவற்றின் மீதும் நெல்லுப்பொரி தூவப்படும். இது புனிதமாக்கும் செயலாக இருக்கலாம். இதன்பின் வளுந்து வைக்கப்பட்டு மூன்று சிறங்கை அல்லது மூன்று சுண்டு என ஒற்றை இலக்கத்தில் குத்தரிசி இட்டு சோறு காய்ச்சப்படும். எவ்வளவு நேரம் சென்றாலும் சோறு ஆக்கப்பட்ட பின்புதான் படையல் வைக்கப்பட்ட மரக்கறிகளை எடுத்து, வெட்டிக் கறியாக்கும் வழக்கம் இன்றுவரை காணப்பட்டு வருகிறது. செவ்வாச்சியம்மனுக்கான படையலாக மிளகாய்த்தூள் இடப்பட்ட கறிவகைகள், மிளகாய்த்தூள் இடப்படாத வெள்ளைக் கறிவகைகள் என்பன படைக்கப்படுகின்றன. அப்பளம் உள்ளிட்ட பொரியல்களும் பசுநெய், தயிர் போன்றனவும் படைக்கப்படுகின்றன. அதன்பின் சாமை, தினை, வரகு, குரக்கன், பனமொடியல், நெல்லரிசி, கூப்பன்மா (கோதுமை மா) உள்ளிட்ட தானியங்களின் மாவை தனித்தனியாகக் குழைத்து (சில கோயில்களில் தேங்காய்ப் பூ, சீனி அல்லது சர்க்கரை போன்றவற்றையும் கலந்து) கையால் பிடித்து விரல்கள் பதிந்த பிடிக்கொழுக்கட்டை செய்து அதனை நீராவியில் அவித்துப் படைப்பர். இது முதலாம் மடை எனப்படுகிறது (பழவத்தை, திருமதி. தவராசா சாந்தகுணதேவி, வயது 67). செவ்வாச்சியம்மனுக்கான சிறப்பு உணவுப்பண்டமாக இக்கொழுக்கட்டையே எல்லாக் கோயில்களிலும் படைக்கப்படுகின்றது. இன்பிலன் செவ்வாச்சியம்மன் கோயிலில் பனங்கட்டிப்பாணி கலந்து கொழுக்கட்டை அவித்துப் படைக்கப்படுகின்றது (அப்புத்துரை இரகுநாதன், வயது 58). முதலாம் மடையில் ஆயிரம் மோதகம் அவித்துப் படைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது (திருமதி. கிருபாகரன் ரஜிதா, வயது 45, ஆண்டாவளை, கரணவாய்). பொங்கல் பொங்கப்படும். பலகாரங்கள் யாவும் படைக்கப்படுகின்றன. குறிப்பாகக் கொழுக்கட்டை, மோதகம் என்பனவற்றோடு உழுந்து வடை படைக்கப்படுகிறது. அதிலும் வடை படைப்போர் யாவரும் அதில் ஒரு மாலையினைக் கட்டி மூலத்திலிருக்கும் பானைக்கு மாலையாக இடுவர். செவ்வாச்சிக்கு பழப்படையல்களுள் பிரதானமாக வாழைப்பழமே படைக்கப்படுகிறது. சீப்புச்சீப்பாகக் வெட்டி, மூக்கு நாக்குத்தள்ளி (பழத்தின் முன்பகுதியை வெட்டி விடுதல்) படையலாக்குவர். அதேவேளை வருடாந்தம் பூசைக்காலத்தில் கிடைக்கக்கூடிய மா, பலா, விளாம்பழம், தோடம்பழம் போன்ற பழங்களையும் படைப்பர். பழங்களை வெட்டி தேன், நெய் கலந்து பஞ்சாமிர்தமாகப் படைக்கும் வழக்கமுண்டு, உடல் வெப்பத்தைத் தணிக்கச் சிறந்த பழச்சாறாக இது அமையும். இவ்வாலயங்களில் பலியிடும் வழக்கம் இல்லை. ஆனால் மட்ச – மாமிசப் படையல் படைக்கும் வழக்கம் காணப்படுகிறது. இவ்வழக்கம் இணுவில் பத்திரகாளி உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் காணப்படுகிறது. தெய்வத்துக்கு மரக்கறி (சைவம்) படையலிடும் இடங்களில் மட்ச – மாமிசப் படையல் இடுவது குறைவெனினும் செவ்வாச்சிக்கு இருபடையலும் இடும் வழக்கம் காணப்படுகிறது. செவ்வாச்சி அம்மனுக்கு காலை, மதியப் படையல்கள் நடைபெறுவது போல இரவு ஆறு மணிக்குப் பின்பே மட்ச – மாமிசப் படையல் நடைபெறும். ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சி கறியாக்கப்பட்டுப் படைக்கப்படும். மாடு, முயல், பன்றி போன்றன தமக்குத் தெரியப் படைக்கப்படுவதில்லை எனக் கோயிலின் உரிமையாளர்கள் யாவரும் தெரிவித்தனர். அதேவேளை பலவகை மீன்கள் படைக்கப்படுகின்றன. மீன் தலையை சுட்டோ, பொரித்தோ படைப்பர். ஏனைய பகுதிகள் கறிக் குழம்பாக்கப்படுகின்றன. குறிப்பாக வாளைமீன் படையல் முதன்மை பெறுகிறது. மீன் பொரியல், சுட்ட கருவாடு என்பனவும் படைக்கப்படுகின்றன. சில கோயில்களில் சுறா வறை, திருக்கை வறை, நண்டு, இறால், கணவாய் போன்றனவும் படைக்கப்படுகின்றன. முன்பு தட்டுவத்தில் (பனையோலையால் முடையப்பட்ட தட்டு) தான் மட்சப்படையல் வைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் வாழையிலையிலிலும் பனையோலைப் பாயிலும் சோறு குவிக்கப்பட்டு சுற்றிவர, மட்ச – மாமிசப் பண்டங்களை நிறையுணவாக இடுவர். நடுவில் அவித்த கோழி முட்டைகள் இடப்பட்டிருக்கும். பூசை நிறைவுற்றபின் படைக்கப்பட்ட அத்தனை உணவிலிருந்தும் சிறிதளவு எடுக்கப்பட்டு இளநீர் கோம்பைக்குள் இடப்பட்டு அதனை முச்சந்தியிலோ நாற்சந்தியிலோ வைக்கும் வழக்கமும் உண்டு. சோற்றோடு இவை யாவும் குழைக்கப்பட்டு திரணை திரணையாக யாவர்க்கும் இறை பிரசாதமாக வழங்கப்படும். இம் மட்ச – மாமிசப் படையலோடு கள், கருப்பணி, சாராயம் என்பனவும் படைக்கப்படுகின்றன. செவ்வாச்சியை வழிபடும் மக்கள் குலத்தினர் முன்பு சீவல்தொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட பள்ளர் சமூகத்தினராவர். தம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த பனம் பொருட்களையும் சிறிது தூரத்தில் இருக்கும் கடலின் வழி பெறப்பட்ட கடலுணவையும், கால்நடைகளையும் தம் செம்பாட்டு நிலத்தில் விளையும் பொருட்களையும் செவ்வாச்சிக்குப் படையலாக இட்டு வந்தனர். கண்ணப்பர், காளத்தி நாதருக்குத் தான் தன் இனம் உண்ணும் உணவுகளையே உண்ணக் கொடுத்தமையை ஒத்த பண்பாட்டசைவே இதுவாகும். சமரபாகு செவ்வாச்சிக்கு 60 வருடங்களுக்கு மேல் சைவப்படையல் மட்டுமே படைக்கப்படுகிறது. நேர்த்திக்கடனும் படையலும் செவ்வாச்சியம்மனை வழிபடும் மக்கள், நோய் நொடி ஏற்படாதிருக்கவும், ஏற்பட்ட காலத்திலும், மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும், இத்தெய்வத்தின் கோயிலில் நேர்த்தி வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. துவாரமுள்ள பானையை வாங்கி வழங்குதல், ஆலயத்திற்கு தேவையான எண்ணை, கற்பூரம் முதலியவற்றை வழங்குதல், கட்டடம் கட்டல் முதலானவையும் இடம்பெறுகின்றன. தேங்காய் நேர்ந்து ஆலயத்திலேயே வைத்துவிட்டுச் செல்வர். நேர்ந்த விடயம் நிறைவேறியபின் ஆலயத்திற்கு வந்து அத்தேங்காயை எடுத்து சிதறு தேங்காயாக உடைத்து நேர்த்திக்கடனைத் தீர்ப்பர். (1) குறித்த நபருக்கு அம்மாள் வருத்தம் வருமிடத்து செவ்வாச்சியிடம் நோய் நீக்கத்திற்காக நேருவர். நோய் நீங்கிய பின் மூலத்தில் உள்ள பானையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவர். பின்பு நீர்க்கஞ்சி காய்ச்சி அடியார்க்கு வழங்குவர். நீர்க்கஞ்சி என்பது குத்தரிசியோடு எல்லா வகை மரக்கறிகளையும் இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுவதில்லை) நீருணவாக வழங்கப்படுவதாகும். 2) ஏனைய நேர்த்திகள் – தமது விருப்பங்கள் நிறைவேறிய காலத்தில் முன்சொன்னது போல குத்தரிசியோடு மரக்கறிகளை ஒன்றாக இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுபவரும் உண்டு, இடாதவரும் உண்டு) குழைசாதமாக வழங்குவர். தவிர அன்னதானமாக கறி, சோறு ஆக்கி வழங்கும் வழக்கமும் உண்டு. துடக்குப் படையல் தமது காணிக்குள் இருக்கும் குலதெய்வமான செவ்வாச்சிக்கு தமது வீட்டில் சமைக்கும் சிறப்புணவைப் படையலிட்டு உண்ணும் வழக்கம் காணப்பட்டுள்ளது. வீட்டில் நடைபெறும் திருமணம், குடிபுகுதல் விழா போன்றவற்றோடு, பிள்ளைப்பேறு, சாமத்தியவீடு (பூப்புனித நிகழ்வு) என்பவற்றுக்கான சமையலில் இருந்து யாவற்றையும் எடுத்துத் தெய்வத்துக்குப் படைத்து வழிபட்ட பின்னரே தாம் உண்பர். அதிலும் குறிப்பாக அரைத்த கறியை (மட்ச, மாமிசமுமோ மரக்கறியோ எதுவாயினும்) செவ்வாச்சிக்குப் படைத்த பின்னரே குறித்த பெண்ணுக்கு உண்ணக் கொடுப்பர். நற்சீரகம், மிளகு, உள்ளி, மஞ்சள், வேர்க்கொம்பு அல்லது இஞ்சி, தேங்காய்ச் சொட்டு (சிலர் மல்லியும் சேர்த்துக் கொள்வர்) இடப்பட்டு பட்டுப்போல அம்மியில் அரைத்து அதனை இட்டு வைக்கப்படும் கறியே அரைத்த கறி எனப்படுகிறது. இதனைப் பிறசமூகங்களில் சாமத்தியம் அடைந்த சிறுமியும் பிள்ளை பெற்ற தாயுமே உண்ணுவர். அதாவது யாருக்காக அரைத்த கறி வைக்கப்பட்டதோ அவர் மட்டுமே உண்பர். மிஞ்சிய கறியைச் சில இடங்களில் நிலத்தை வெட்டி அதனுள் இட்டுப் புதைக்கும் வழக்கமும் உண்டு. இம்மக்களிடம் செவ்வாச்சிக்குப் படைத்ததன் பின்பே உண்ணும் வழக்கம் காணப்படுதல் இவ்வழிபாட்டின் தனித்துவம் எனலாம். அதேவேளை இன்பிலன் பிரதேச அம்மன் கோயிலில் மரணவீட்டு உணவை – படையலை இத்தெய்வத்துக்குப் படைத்த பின்பே உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. இது ‘துடக்குச் சாப்பாடு’ (தீட்டு உணவு) என்று கூறப்பட்டாலும், தெய்வத்துக்குப் படைக்கப்படுதல் தம் இன்பத்திலும் துன்பத்திலும் தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகிறது. அதிலும் குறிப்பாக மரணம் நடந்து எட்டாம் நாள் இறந்தவரின் விருப்பத்திற்குரிய அனைத்து வகையான சுவைகளையும் உடைய உணவுப்பண்டங்கள், குடிபான வகைகள், சுருட்டு எனப் படைக்கப்படும் அனைத்தையும் இத்தெய்வத்துக்கு இன்றும் படைத்து வருகின்றனர். மற்றைய செவ்வாச்சி ஆலயங்களில் இவ்வழக்கம் இல்லை. முதல் விளைச்சலைப் படைத்தல் தங்கள் வீட்டு வளவில் – விவசாய நிலத்தில் விளைகின்ற முதல் விளைச்சலை இத்தெய்வத்துக்கே வழங்குவர். தேங்காய், மாங்காயிலிருந்து தோட்டத்தில் விளையும் மிளகாய், வெங்காயம் வரை இது பொருந்தும். அதேபோல சீவல்தொழில் செய்யும் ஒருவர் கள்ளிறக்கும் போது அதனை விற்க முன் சிறிது கள்ளை எடுத்து தெய்வத்தின் வாசலில் சிந்தும் வழக்கம் காணப்படுகிறது. அதேபோல பதநீர், கருப்பணி முதலியனவும் முதற் படையலாக்கப்படுகின்றன. பசு கன்று ஈன்ற பின் பாலைத் தாம் குடிக்கவோ விற்கவோ தொடங்கமுன் கறந்து தெய்வத்துக்கு அர்ப்பணமாக்குவர். அதேபோல கோழியின் முதல் முட்டையும் படையலாக்கப்படும். இத்தெய்வத்துக்கு முதல் விளைச்சலை வழங்காதுவிடின் விளைச்சல் அழிந்துவிடும், கள் வற்றிவிடும், பசுவில் பால் அற்றுப்போய்விடும் முதலான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. நிறைவாக ஈழத்துச் சூழலில் பெரும்பாலும் கல், சூலம், மரம் உள்ளிட்ட பொருட்களே வழிபடப்பட்டு வந்துள்ளன. வடமராட்சி செவ்வாச்சியம்மன், பூச்சி வடிவிலான தெய்வமாக வழிபடப்படுதல் தனித்துவம் வாய்ந்த வழிபாடெனினும், அது தொடர்பான தொன்மக்கதைகள் பேணப்படாமை துரதிர்ஷ்டமேயாகும். மக்கள் தாம் வாழும் சூழமைவை அடிப்படையாகக் கொண்டே வழிபாட்டு முறைமையையும் படையல், பாத்திரங்கள், பண்டங்கள் வரை அனைத்தையும் கட்டமைத்திருந்துள்ளனர். கால்நடை, கடலுணவு, தானியங்கள், மரக்கறிகள், பழங்கள் என பல்வகைச் சத்துணவுகளைப் படையலாக்கியுள்ளனர். வெப்பம் நிறைந்த சூழலில் வரும் அம்மன் வருத்தத்தின் நேர்த்திக்கடனாக நீர்க்கஞ்சியையும் குழைசாதத்தையும் வழங்கி வருகின்றனர். இது ஈழத்து வடபுல தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ற, குறித்த காலத்துக்கான சிறந்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இயந்திர வாழ்வினாலும் விலைவாசிகளாலும் படையல் பொருட்கள் குறைவடைந்து வருகின்றன. சாதிய நீக்கம், தொழில்சார் கௌரவம், கல்வி, பொருளாதார விருத்தி என்பவற்றால் பலர் சீவல்தொழில் செய்வதில்லை. பனம் பொருட் பயன்பாடும் குறைவடைந்து தட்டுவம், ஓலைப்பாய் என்பவற்றுக்குப் பதிலாக வாழையிலையும், பின்னர் இன்று பிளாஸ்ரிக், சில்வர் பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டாரியல் பண்பு மாறாத வழிபாடாக இன்றும் மக்களால் மக்களுக்காகவே ஜனநாயகப் பண்போடு பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றதாக செவ்வாச்சியம்மன் வழிபாடு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/worship-of-goddess-sevvachi-amman/
  9. அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் January 8, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இயற்கை அனர்த்தத்தின் விளைவான அழிபாடுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இடர்மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை மக்கள் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான 2022 பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுவந்த ஒப்பீட்டு அளவிலான முன்னேற்றத்தை ‘டித்வா’ சூறாவளி மறுதலையாக்கியிருக்கிறது. மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் முதல் வருடத்தைக் கடந்து வந்திருக்கும் நிலையில், இயற்கை அனர்த்தத்தின் விளைவாக சமாளிக்க முடியாத கடமைப் பொறுப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், சூறாவளியின் பாதிப்புக்களை முன்கூட்டியே தணிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும் அனர்த்தத்துக்கு பின்னரான நிவாரண உதவிப் பணிகளிலும் புனரமைப்பு நடவடிக்கைகளிலும் காணப்படும் குறைபாடுகளையும் கண்டனம் செய்து கொண்டிருக்கும் எதிரணிக் கட்சிகள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு ஆட்சி முறையில் அனுபவமும் தகுதியும் இல்லை என்று ஏற்கெனவே முன்வைத்து வந்த விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. பரந்தளவிலான கலந்தாலோசனையின் அடிப்படையிலான தீர்வுகளை வேண்டி நிற்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளாக இருந்தாலென்ன, இயற்கையின் சீற்றம் ஏற்படுத்தும் பேரழிவாக இருந்தாலென்ன தேசிய அனர்த்தங்களின்போது சகல தரப்புகளையும் அரவணைக்கும் அணுகுமுறை மூலமாக நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் அரசியல் சக்திகள் செயற்பட முன்வராத சாபக்கேடான கலாசாரம் ஒன்று இலங்கையில் ஆழமாக வேரூன்றிவிட்டது. 2024 ஆகஸ்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்ட வேளையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை குறித்து எதிரணி அரசியல்வாதிகள் அக்கறை காட்டிய போதிலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மை கொண்ட காரணங்களை அவர்களினால் முன்வைக்க முடியவில்லை. அதேபோன்றே சூறாவளியின் விளைவான நெருக்கடியையும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திருப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாக நம்பியதில் அவர்கள் மீண்டும் தவறிழைத்துவிட்டனர். அதேவேளை, சகல தரப்புகளையும் ஈடுபடுத்தி அழிபாடுகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதில் அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி, அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள பாரதூரமான குறைபாட்டை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த செயலணியில் அரசாங்கத் தரப்பைச் சாராத சகல உறுப்பினர்களுமே அனர்த்த முகாமைத்துவத்தில் அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கையாளுவதில் அனுபவத்தை அல்லது நிபுணத்துவத்தை கொண்டவர்கள் என்று அறியப்படவில்லை என்ற விமர்சனம் சிவில் சமூக அமைப்புகளிடம் இருந்து வந்திருக்கிறது. ஒரு இடதுசாரிக் கூட்டணியாக இருக்கின்ற போதிலும் கூட, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டங்களைச் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடனேயே நடந்துகொள்கிறது. பல்வேறு விமர்சனங்களுக்கு பின்னர்தான் ஜனாதிபதி செயலணியில் குறைந்தபட்சம் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியையாவது சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பதாக தெரியவருகிறது. கொள்கைகளை வகுக்கும் செயன்முறைகளில் பரந்தளவிலான தரப்புகளின் பங்கேற்பை குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களை திட்டமிட்ட முறையில் புறக்கணித்த கடந்தகால அணுகுமுறைகளின் விளைவாக நாடு அனுபவித்த அவலங்களில் இருந்து தேசிய மக்கள் சக்தி எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், சர்வதேச சமூகத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளின் விளைவாக தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் தங்களுக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகுந்த விவேகத்துடன் செயற்பட்டுவருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லாதிக்க நாடுகளுடனும் ஆசியாவின் பெரிய நாடுகளுடனுமான உறவுகளில் ஒரு சமநிலையை அவர்கள் பேணுகிறார்கள். இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சூறாவளியின் பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளும் மேற்குலக நாடுகளிடமிருந்து இருந்து கிடைத்த எதிர்பார்த்திராத வகையிலான பேரளவு உதவிகளும் இதற்கு சான்று. குறிப்பாக, இந்தியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் சாதுரியமாகக் கையாளுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) நீண்டகாலமாக இருந்து வரும் நெருக்கமான அரசியல் தொடர்புகளையும் அதன் கடந்தகால இந்திய விரோத நிலைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அதன் தலைமையிலான ஆட்சியில் புதுடில்லிக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பெய்ஜிங்குடனான உறவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சகல எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கி ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய உறவுகளை அன்றைய வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ‘மாற்றியமைக்கமுடியாத அளவுக்கு மகோன்னதமானவை’ என்று வர்ணித்தார். ஆனால், இன்று திசநாயக்கவின் ஆட்சியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு வர்ணிப்பது என்றே தெரியவில்லை. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் வல்லாதிக்க நாடுகள் முண்டியடித்துக்கொண்டு ஓடிவந்ததை இந்து சமுத்திரத்தில் புவிசார் நலன்களின் மறைமுகமான ‘காட்சிப்படுத்தல்’ என்று கூறமுடியும். அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவது ஒரு நல்லெண்ணச் செயற்பாடு மாத்திரமல்ல, இராஜதந்திர நகர்வுமாகும். நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பை வல்லாதிக்க நாடுகள் கொழும்புடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டன. இலங்கையில் அனர்த்தங்கள் நிகழ்கின்ற வேளைகளில் எல்லாம் முதலில் உதவிக்கு விரைகின்ற நாடான இந்தியா இந்த தடவை கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள் சகிதம் அதிவிசேடமான அக்கறையை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு வந்து இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவித்திட்டத்தை அறிவித்தார். அவர் ஊடாக மோடி ஜனாதிபதி திசநாயக்கவுக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் ‘இலங்கையின் பக்கத்தில் இந்தியா எப்போதும் நிற்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஜெய்சங்கரின் விஜயத்தின்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட திசநாயக்க ‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இது ஒரு புதிய யுகம்’ என்று வர்ணித்திருந்தார். ஜெய்சங்கர் புதுடில்லி திரும்பிய உடனடியாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மத்திய குழுவின் உறுப்பினர் வாங் ஜுன்ஷெங் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கேந்திரமுக்கியத்துவ போட்டிக்குரிய ஒரு பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கை மீளஉறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை வல்லாதிக்க நாடுகள் பயன்படுத்திக் கொண்டன. இலங்கையை போன்று காலநிலை மாற்றத்தின் விளைவான இயற்கை அனர்த்தங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் ஆபத்தைக்கொண்ட நாடுகள், சகல நாடுகளுடனும் நல்லுறவைப் பேணவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருக்கும் போக்கு அதிகரிக்கும்போது வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் போட்டாபோட்டியின் மைதானமாக மாறுகின்ற ஆபத்தும் அதிகரிக்கிறது. உதவிகளைப் பெறுகின்ற அதேவேளை, முக்கியமான நாடுகளுடனான உறவுகளில் சமநிலை ஒன்றைப் பேணுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு காரியமாகும். ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகத்தை நம்பியிருக்கும் இலங்கை, இயற்கையின் சீற்றத்தின் அழிபாடுகளில் இருந்து மீட்சிபெறுவதற்கும் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருப்பதால் வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களுக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முடியாமல் போகலாம். இதுகாலவரை அந்த நாடுகளுடனான உறவுகளில் பேணிவந்த சமநிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இயலுமாக இருக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இதனிடையே, நாட்டுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதில் அரசாங்கத்தினால் போதியளவுக்கு கவனம் செலுத்துவதற்கு அவகாசம் கிடைக்குமா? https://arangamnews.com/?p=12578
  10. சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது Mano ShangarJanuary 9, 2026 12:27 pm 0 பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் துறைகளின் கடன் சேவைச் செலவுகளை விடக் கடன் சேவைச் செலவுகள் அதிகமாகிவிட்டதால், கொள்கை முடிவுகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, பங்களாதேஷ் இப்போது இலங்கையை விட மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வலையில் சிக்கித் தவிக்கும் பங்களாதேஷ் பங்களாதேஷ் ஏற்கனவே கடனில் சிக்கியுள்ளது என்றும், உண்மையை தொடர்ந்து புறக்கணித்தால் பொருளாதார மீட்சி சாத்தியமற்றது என்றும் அந்நாட்டு தேசிய வருவாய் சபைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் கான் கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் இணைந்த பின்னர் பங்களாதேஷின் கடன் சுமை வேகமாக அதிகரித்தது. சீனாவிடமிருந்து 40 பில்லியன் டொலர் வரை நிதி உறுதிமொழிகளை பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது. இதில் கூட்டுத் திட்டங்களில் 14 பில்லியன் டொலர்களும் அடங்கும். இதன் விளைவாக, நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலக வங்கியின் சர்வதேச கடன் அறிக்கை 2025 இன் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்களாதேஷின் வெளிநாட்டுக் கடன் 42 சதவீதம் அதிகரித்து தோராயமாக 105 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் இப்போது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் தோராயமாக 192 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதிகளில் தோராயமாக 16 சதவீதம் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது. புலம்பிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் இலங்கை ஏற்கனவே சர்வதேச அளவில் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலும் சீனாவின் சுமார் 30 பில்லியன் டொலர் கடனிலும் தவித்து வருகிறது. பங்களாதேஷ் உடனடியாக அதன் கடன் வாங்கும் கொள்கை, சீன திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் கடன் விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கடுமையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால், அதன் பொருளாதாரக் கதை இலங்கையை விட வேதனையானது மற்றும் பாகிஸ்தானை விட நீடித்த ஒரு சோகமாக மாறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். https://oruvan.com/bangladesh-is-completely-caught-in-chinas-debt-trap/
  11. கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி! Mano ShangarJanuary 9, 2026 10:17 am 0 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். https://oruvan.com/a-woman-from-jaffna-died-in-an-accident-in-canada/
  12. ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி! கனடா – ஸ்கார்பரோ ஐயப்பன் ஆலய குருசாமி , யாழ்ப்பாணம் அனலைதீவில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமானது கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி என ‘Toronto Star பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது. கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் குருசாமி, சொந்த ஊரான யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்படும் தருவாயில் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணையில் வெளியான தகவல்கள் இந்தக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே நான்கு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் முக்கிய சந்தேக நபராக கனடாவில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி தொடர்பான விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்குகள் கடல் கடந்து இலங்கையில் வன்முறையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=355426
  13. மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.! ஜனவரி 09, 2026 இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2026/01/blog-post_09.html
  14. லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது 09 Jan, 2026 | 05:05 AM ( செ.சுபதர்ஷனி) 'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (8) பொரளை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அத்திட்டிய பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த அவரது இழப்பு, இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கடந்தும், இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்நாரது குடும்பத்தினர், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்துத் தெரிவித்தவர்கள், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த போதிலும், விசாரணைகள் மந்தகதியிலேயே உள்ளதாகக் கவலை வெளியிட்டனர். லசந்த விக்ரமதுங்க தொழில்முறை சட்டத்தரணியாவதுடன், ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவராவார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னரே முழுநேர ஊடகவியலாளராகத் தன்னை மாற்றிக்கொண்டு, 1994 இல் லால் விக்ரமதுங்கவுடன் இணைந்து 'சண்டே லீடர்' பத்திரிகையைத் தொடங்கினார். அத்தோடு லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள போதும், அவற்றில் ஒரு வழக்குக் கூட முழுமையாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், யுனெஸ்கோ அவருக்கு 'உலக ஊடக சுதந்திர விருது' வழங்கி கௌரவித்தது. சர்வதேச ஊடக நிறுவனம் (IPI) அவரை உலகின் 50 துணிச்சலான ஊடகவியலாளர்களில் ஒருவராக அறிவித்தது. இதேவேளை, லசந்தவின் துணிச்சலான எழுத்துக்களும், அவர் எழுதிய "And Then They Came For Me" எனும் தலையங்கமும் இன்றும் உலகளவில் ஊடகப் போராட்டத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்றன. கடந்த வாரம் கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களை நினைவுகூரும் அருங்காட்சியகம் ஒன்றில் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டன. அரசியல்வாதிகளால் செய்ய முடியாதவாறு, வடக்கு மற்றும் தெற்கு மக்களை இவ்வாறான ஊடகப் போராளிகளின் தியாகம் ஒன்றிணைத்துள்ளமையை இது சுட்டிக்காட்டுகிறது. பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தும், லசந்தவின் குடும்பத்தினர் இன்றும் சர்வதேச ரீதியில் நீதிக்காகப் போராடி வருகின்றனர். எதிர்வரும் காலத்திலாவது இந்தப் படுகொலைக்கான உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என ஊடக அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235566
  15. முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு 09 Jan, 2026 | 12:33 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்திய நிலையில் இ முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (8) ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம் மீள்குடியமர்த்தப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு முள்ளிக்குளம் மக்களின் நிலமைகள் தொடர்பிலும் முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியதுடன், அதில் 150வரையான குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதேவேளை அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் மீளவும் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு எம்.பி துரைசாரா கொண்டுவந்துள்ளார். இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் இயங்கிவரும் பாடசாலைக்கும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கும் மலைக்காடு,காயாக்குழி கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களும், மாணவர்களும் சென்று வருகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள்,வயற்காணிகள்,குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி, முள்ளிக்குளத்தில் ஒருபகுதிக் காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார். கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு மன்னாருக்கு வருகை தரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/235562
  16. தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்! 09 Jan, 2026 | 08:43 AM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று வியாழக்கிழமை (8) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். 'எதிர்காலத்தில், பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட அந்த மாதிரிப் பாடப்புத்தகங்கள் எந்தவொரு மாணவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்பதுடன், உள்வாரி விசாரணைகள் நிறைவடையும் வரை அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.' என்று கல்வி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் தரப்பின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தரம் 6 ஆங்கில மாதிரிப் பாடப்புத்தகத்தின் முதலாம் அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235570
  17. உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு 09 Jan, 2026 | 09:00 AM (செ.சுபதர்ஷனி) உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகப் புதன்கிழமை (7) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறும் பட்சத்தில் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கான சிகிச்சை முறைகளும் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. எனினும் அது பற்றிய போதியளவான புரிந்துணர்வு இன்மையால் நாட்டில் வருடாந்தம் பல உயிரிழப்புகள் ஏற்படுவது கவலைக்குரிய விடயமாக உள்ளது. நோய் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஜனவரி மாதம் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெண்களிடையே அதிகமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலாவதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய 226 நோயாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு 179 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. இலங்கையில் பாதிக்கும் புற்றுநோய் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ' ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற பால் உறவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும் 35 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மாதவிடாய் சுழற்சி காலப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படும் அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுமாயின், உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்" என்றார். https://www.virakesari.lk/article/235573
  18. இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 09 January 2026 இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் பதிலை இந்தியா எதிர்பார்த்திருப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக கட்டமைப்புத் தொடர்பில் நிதியளிப்பு தொடர்பான ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 3300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், எஞ்சிய 6700 வீடுகளை டிட்வா பாதிக்கப்பட்ட அல்லது, எதிர்காலத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படவுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/439766/land-route-to-india-what-is-the-governments-position
  19. ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம் 09 January 2026 ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended
  20. டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk6dos5z03pko29nn2gexzt5
  21. முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய சுகாதார அமைச்சர், கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி மரணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். அதேநேரம் சிறுமியின் மரணம் தொடர்பில் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார். தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmk6i602n03pqo29nyrs6tzmb
  22. கூகிள் ஷீற்றைப் பாவிப்பவர்கள் கணிப்புக்களை இந்தத் திரியில் பிரதிசெய்யவேண்டும். இல்லாவிட்டால் போட்டியில் இணைத்துக்கொள்ள இயலாது.. இன்று கூகிள் ஷீற்றைப் பாவித்தவர் (யாரென்று என்னால் அறியமுடியாது) பதில்களை இங்கே பதிவிடவும். நன்றி இதுவரை 11 அணிகள் தமது வீரர்களின் பட்டியலைத் தந்துள்ளன. மிகுதி ஒன்பது அணிகளும் பட்டியலை வெளியிட்ட பின்னர், முழுமையான பட்டியலைத் தருகின்றேன். Afghanistan Squad 31-Dec-2025 Australia Squad 01-Jan-2026 Bangladesh Squad 04-Jan-2026 England Squad 30-Dec-2025 India Squad 20-Dec-2025 Namibia Squad 03-Jan-2026 Nepal Squad 06-Jan-2026 New Zealand Squad 07-Jan-2026 Oman Squad 30-Dec-2025 South Africa Squad 02-Jan-2026 Zimbabwe Squad 02-Jan-2026
  23. ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு 08 January 2026 அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா பின்வரும் அமைப்புகளில் இருந்து விலகுகிறது. 1. ஐநா சார்ந்த அமைப்புகள்: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளிட்ட 31 ஐ.நா அமைப்புகள். 2. ஏனைய சர்வதேச அமைப்புகள்: சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance), கொழும்புத் திட்டம் (Colombo Plan) உள்ளிட்ட 35 ஐ.நா அல்லாத அமைப்புகள். அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் "அமெரிக்கா முதலில்" (America First) என்ற கொள்கைக்கும் தேசிய நலனுக்கும் முரணாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, சர்வதேச நிதியுதவிகள் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதை அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவினால் சர்வதேச அளவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பெருமளவிலான நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கொழும்புத் திட்டம் (Colombo Plan) போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் விலகல் ஆசிய பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. The White HouseWithdrawing the United States from International Organiza...MEMORANDUM FOR THE HEADS OF EXECUTIVE DEPARTMENTS AND AGENCIES By the authority vested in me as President by the Constitution and the laws of the Unitedhttps://hirunews.lk/tm/439619/us-withdraws-from-31-united-nations-organizations-trumps-executive-order
  24. A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு செய்திகள் அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைகள் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்கள் செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 32 பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்கள் செயற்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்தது. https://adaderanatamil.lk/news/cmk51j25903oeo29n1u0yaaca
  25. காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்! adminJanuary 7, 2026 வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலியாவின் வழக்கறிஞர் மார்க் டோனெல்லி (Mark Donnelly), கைது நடவடிக்கையின் போது (Abduction) தனது கட்சிக்காரருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அவரது விலா எலும்பு (Rib) முறிந்திருக்கலாம் அல்லது பலத்த சேதமடைந்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே (X-ray) மற்றும் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரோ மற்றும் சிலியா மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தாங்கள் நிரபராதிகள் என இருவரும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். மதுரோ தன்னை ஒரு “போர்க்கைதி” (Prisoner of War) என்று அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 17-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/225910/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.