Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகள் சிலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னால் என்னிடம் தொலைபேசியில் உரையாடினர்! தமிழ் ஈழத்திற்காகவும், அந்த மண்ணின் விடுதலைக்காகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் களத்தில் நின்று, பெரும்படை திரட்டிப் போராடி, உலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச் சாவிற்கு வரும் ஆகஸ்ட் 2 அன்று, சுவிட்விசர்லாந்தில் மிகப்பெரும் அளவில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றும் கூறினார்கள்! மாவீரர்களுக்கும் மரணம் உண்டு! ஆனால் அது மற்றவர்களின் மரணத்தைப் போன்றதன்று! தன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தன்னலம் துறந்து வாழ்நாள் முழுவதும் போராடி, களத்தில் வீரச் சாவு அடைவது என்பது உலகம் மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு! அத்தகைய மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை மண்ணில் - விதைக்கப்படுகிறார்கள்! அவர்களின் வீர மரணத்தைத் தோல்வி என்று கருதி, தலைவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருப்பது அவருக்கு நாம் செலுத்த வேண்டிய மிகப்பெரும் வீர வணக்கத்திற்குத் தடையாக ஆகிவிடும்! இதனை உணர்ந்தே, போராளிகள் இயக்கத்தில் தலைவருடன் இருந்த மூத்தவர்கள் சிலர், இந்த முடிவை இப்போது எடுத்து இருக்கிறார்கள்! நவம்பர் 27- மாவீரர்கள் நாள், மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பவைகளைத் தாண்டி, இப்போது ஏன் ஆகஸ்ட் 2 என்று ஒரு வினா எழலாம் ! ஏதோ ஒரு காரணம் கருதியே அவர்கள் இந்த நாளைக் குறித்திருக்கக் கூடும்! எனவே நாள் பற்றிய விவாதங்களுக்கு இடம் தராமல், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அந்த மாபெரும் தலைவனுக்கு அன்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்பதே நம் விருப்பம்! - சுப. வீரபாண்டியன் https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul25/48395-akast-2-viravanakka-nal
  2. புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர் Published By: Vishnu 26 Jul, 2025 | 02:24 AM (எம்.ஆர்.எம்.வசீ்ம்) புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள் குழுக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில் மேற்கொள்வது சாத்தியப்படாத ஒன்றாகும். விசேடமாக தற்போது இருக்கும் சில கட்டளைகள்,சட்டங்கள், ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அதனால் எமது அரசாங்கம் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி, அனைத்து தரப்பினருக்கும் செவிசாய்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக மக்கள் மயமான அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதனால் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சமூக கருத்தாடல் ஒன்றுக்கு திறந்துவிடப்பட வேண்டும், அதேபோன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கப்படும். அதன் பிரகாரம் அரசாங்கம் வரைபு செய்யப்படும் புதிய அரசியலமைப்பு சமூகத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைபு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும் உருவாகாத மக்கள் மயமான அரசியலமைப்பாக அமையும். அத்துடன் நாட்டின் பிரதான சட்டமான அரசியலமைப்பு அடிக்கடி திருத்தப்படக்கூடாது என்பதால், விசேட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு, ஆழமாக ஆராய்ந்து தயாரிப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் இதற்காக சில காலம் தேவைப்படும். எமது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒருவருடம் செல்லவும் இல்லை. இன்னும் எங்களுக்கு 4 வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்பட தேவையில்லை. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/220973
  3. 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது செய்திகள் யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கினார். பின்னர், சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று (25) பிற்பகல் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmdjnbjn101nmqp4kln447ceb
  4. வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றுள்ளது. நீண்டகாலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வடக்கு_கிழக்கில்_ஆரம்பமாகும்_பாரிய_போராடடம்!
  5. ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து? – பகுதி 2 24 Jul 2025, 9:38 AM பாஸ்கர் செல்வராஜ் ஆட்சிமாற்றத்துக்கான போரில் அசையாமல் நி(வெ)ன்ற ஈரான் இதுவரையிலும் மின்சாரம், எண்ணெய், எரிவாயு கொண்டு உற்பத்தி செய்து இணையம் மூலம் இணைத்து இயக்கும் பொருள்கள் என்பதாக உலக உற்பத்தியும் அதற்குத் தேவையான டாலர் உலகப்பணமாகவும் அதனை மையப்படுத்திய உலக ஒழுங்கும் இருந்து வந்தது. அடுத்த மாற்று எரிபொருளில் உற்பத்தியாகி இயங்கும் மின்னணு மின்கல பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்ப மூலதன பொருள்களின் உற்பத்தியை சீனா அடைந்து ரசியா, ஈரான் போன்ற நாடுகள் டாலர் அல்லாத நாணயங்களில் மரபான எரிபொருளை விற்க முனைந்த நிலையில் டாலர்மைய உலக ஒழுங்கு உடைப்பைக் கண்டு வந்தது. டாலரின் பங்கு வணிகத்தில் குறைந்து வந்தது. இதனால் சந்தையில் டாலர் மூலதனம் மிகுந்திருந்த போது கொரோனா வந்தது. அந்தக் காலத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தவிர்க்க வெளியிடப்பட்ட டாலரும் சந்தைக்குள் நுழைந்ததால் சந்தை டாலர் மிகைமூலதனத்தால் நிரம்பி வழிந்தது. அது உலகம் முழுக்க பாய்ந்து சொத்துகளின் மதிப்பை உயர்த்தி உலக நாணயங்களின் மதிப்பை நீர்த்து மக்களின் வருமானத்தைக் குறைத்து பொருள்களின் விலைவாசியை உயர்த்தி அதனை வாங்கி நுகர்ந்த மக்களின் வாங்கும்திறனைக் குறைத்ததால் பொருள் விற்பனை சரிந்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மாற்று உற்பத்தியில் ஈடுபடும் மதிப்புமிக்க சீனர்களின் சொத்தை டாலர் மூலதனம் அடைய முயல்கிறது. இப்படி டாலர்மைய உற்பத்தி உடைப்பைத் தடுத்து மாற்று உற்பத்தியின் சொத்துகளை அடைவதற்கான பொருளாதாரத் தேவைக்கான அமெரிக்கர்களின் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது. ஈரானின் மீதான தாக்குதலின் நோக்கம் சீனர்களுடனான வணிகப்போர், மின்னணு தொழில்நுட்ப போர்கள் தோல்வியடைந்த நிலையில் முந்தைய சனநாயகக் கட்சியின் பைடன் நிர்வாகம் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முனைந்து ரசியாவைத் தூண்டி எழுந்த போரின் வழியாக ரசியாவைத் துண்டாடி நிலைகுலைய வைத்து அவர்களின் வளத்தையும் சந்தையையும் கைப்பற்றி டாலர்மைய எரிபொருள் ஒழுங்கைக் காக்க முனைந்தது. ரசிய வீழ்ச்சியில் தனிமைப்படும் சீனாவை வீழ்த்தி அடுத்து அதன் சொத்தைக் கைப்பற்றுவது அந்நோக்கத்தின் நீட்சி. அந்த ஆட்சிமாற்ற சீர்குலைவு முயற்சியில் தோல்வியடைந்து ரசியாவின் ஐரோப்பிய சந்தையை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அடுத்து வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு ரசியர்களுடன் சேர்ந்து கொண்டு ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொண்டு ஈரானை விலக்கி சீனாவைத் தனிமைப்படுத்த முயன்றது. அதனை ஐரோப்பியர்கள் தடுத்துக் கொண்டு ரசியர்களும் ஒத்துழைக்க மறுத்த நிலையில் டாலர் அல்லாத நாணயத்தில் எரிபொருள் விற்கும் ஈரானின் பக்கம் திரும்பினார்கள். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருளை ஐரோப்பிய, இந்திய சந்தைகளுக்கு டாலரில் ஏற்றுமதி செய்து ஐரோப்பிய, மேற்காசிய, இந்தியப் பொருளாதார மண்டலத்தை (IMEC) ஏற்படுத்தி சீன, ரசிய நாடுகளைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அதன் மீது தாக்குதலைத் தொடுத்து இருக்கிறார்கள். தாக்குதல் தந்திரங்கள், உத்திகள் நோக்கத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் வளத்தைக் காத்து நிற்கும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் தலைமைகளையும் அணு ஆய்வு விஞ்ஞானிகளையும் கொன்று ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை அழித்தும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வழியின்றி ஏவுகணைகளை ஏவும் ஏவூர்திகளை அழித்தும் அதிர்ச்சியூட்டி நிலைகுலைய வைத்தார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஈரானியர்கள் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்புரட்சியில் ஈடுபடவில்லை. மாறாக உடனடியாக இழப்புகளை ஏற்று மாற்று ஏற்படுகளைச் செய்து இசுரேலின் மீதான தாக்குதலைத் தொடங்கியது ஈரான். முதல் ஆட்சிமாற்ற நோக்கம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த எதிர்த்து தாக்கும் ஏவுகணை வலிமையை இல்லாமல் செய்யும் வகையில் ஏவூர்திகள், ஏவுகணை உற்பத்தி நிலைகள், ஆயுத சேமிப்பு கிடங்குகள், இராணுவ கட்டுப்பாட்டு மையங்களின் மீது இசுரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. எரிபொருள் ஏற்றுமதி மையங்களைத் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தைத் தகர்க்கலாம் என்றாலும் பதிலுக்கு எவரும் எரிபொருளை ஏற்றுமதி செய்யாதவாறு அவர்கள் ஹெர்முஸ் நீரிணையை மூடினால் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரம் தகர்க்கப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ஈரானின் மீது தாக்குதல் நடத்தும் விமானங்களை வீழ்த்த முடியாத நிலையில் அவர்களின் ஆயுத உற்பத்தி மற்றும் விமான தளத்தோடு அந்தச் சிறிய நாட்டைத் தாங்கி நிற்கும் மதிப்புமிக்க மின்னணு, உயிரியல், இராணுவ உற்பத்தி மற்றும் ஆய்வுக்கூடங்கள், வைர பங்குச்சந்தை மையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹைபா துறைமுகம் போன்ற பொருளாதார நிலைகளைத் தாக்கியது ஈரான். ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் செயலற்று போனதால் எந்த எதிர்ப்பும் இன்றி இசுரேலிய போர் விமானங்கள் புகுந்து அந்நாட்டைத் தாக்கின. அதேபோல இசுரேலின் மூன்று அடுக்கு இரும்புக் கவிகை (iron dome), டேவிட் கவண் (David sling), தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட முக்கிய நிலைகளைத் தாக்கி இசுரேலிய வான்வெளி பாதுகாப்பை உடைக்கும் வல்லமையைக் காட்டியது ஈரான். இசுரேல் தாக்குதல் அளவைக் கூட்டுவதற்கு ஏற்ப மீவிரைவு ஏவுகணைகள் (hypersonic), அதிக சேதம் விளைவிக்கும் அரை டன் முதல் ஒன்றரை டன் வரை வெடிபொருள் நிரப்பிய ஏவுகணைகள் என ஒவ்வொன்றாக அனுப்பி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் எண்பது விழுக்காடு ஏவுகணைகளைத் தடுத்த இசுரேல் பின்னர் ஐம்பது 50-60 விழுக்காடு மட்டுமே தடுக்க முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்த தாக்குதலில் இசுரேலின் இரண்டாவது இலக்கான ஈரானின் ஏவுகணை வலிமையை உடைக்கும் முயற்சியும் தோல்வி அடைந்து ஏவுகணை எதிர்ப்பும் பலமிழந்து பெருமளவு சேதத்தை எதிர்கொண்ட நிலையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் தாக்குதல் பலத்தைக் கூட்ட அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்க வேண்டும் என்ற நிலை. இறுதியில் வெற்றி யாருக்கு? போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு முன்பாக பாதுகாப்பற்று நிற்கும் ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி அதன் அணு ஆயுத கட்டமைப்புகளை அழித்து மூன்றாவது நோக்கத்தையேனும் அடையும் சாத்தியம் இருந்தது. மற்ற நேரங்களில் அதிக எடைகொண்ட வெடிக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் பி-2 போர்விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் வாய்ப்புண்டு. வலிமையான கிரானைட் பாறைகளாலான மலையின்கீழ் தொண்ணூறு மீட்டருக்கும் கீழ் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் நிலையத்தைத் தகர்க்க அணு குண்டுகளால் மட்டுமே முடியும். அவ்வாறான அளவில் சிறிய போர்த்தந்திர குண்டை (strategic bomb) அமெரிக்கா பயன்படுத்தினால் உலகக் கண்டனங்களை எதிர்கொள்வதோடு மற்றவர்கள் பயன்படுத்தவும் வழிசெய்ததாகிவிடும். பதுங்குகுழிகளைத் தகர்க்கும் ஜிபியூ குண்டுகளைப் பயன்படுத்தினால் சுரங்கத்தைத் தகர்த்து செறிவூட்டும் நிலையத்தைச் செயலற்றதாக்க முடியும் என்று சொல்ல முடியாத குழப்ப நிலை. இறுதியில் நுழைவு வாயில்கள் சுரங்கத்துக்கான காற்றோட்ட திறப்புகள் உள்ள இடத்தில் குறிபார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசினால் குகை தாகர்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்து பன்னிரண்டு குண்டுகள் வீசப்பட்டது. எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டதற்கான அறிகுறியான அணுக்கசிவு, பாறைகள் நொறுங்கி விழுந்த பள்ளம் என எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அமெரிக்கா தாக்குதல் வெற்றி என அறிவித்து ஈரானுடன் பேசி போர் நிறுத்தம் அறிவித்தது. இசுரேல் நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்; அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது அடையாளப்பூர்வமான தாக்குதல் நடத்துவோம் என்று பேசி வைத்துக்கொண்டு அவ்வாறே ஈரான் தாக்குதலும் நடத்தி போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தெரிந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தி சேதம் இல்லை என்று ட்ரம்ப் அறிவித்தார். ஆனாலும் அங்கிருந்த பெரிய அலைக்கொடியைச் (antenna) சேதப்படுத்தி அமெரிக்கர்களின் எறிகணை எதிர்ப்பின் போதாமையை அம்பலப்படுத்தி தனது எறிகணை வலிமையையை ஈரான் காட்டி இருக்கிறது. இறுதியில் ஆட்சி மாற்றம், ஏவுகணை வலிமையைத் தகர்த்தல், அணுவாயுத திட்டத்தை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களிலும் வெற்றியடையாமல் பின்வாங்கிய அமெரிக்க-இசுரேலிய நாடுகளின் ஈரானுடனான குறுகியகால போர் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. பெருமிழப்புகளைச் சந்தித்தாலும் எதிரிகள் தமது இலக்குகளை அடைய விடாமல் தடுத்து நிலைத்து நின்றதன் மூலம் ஈரான் இந்தப் போரில் வெற்றிபெற்று இருக்கிறது. தோல்வியை அடுத்த மாற்றங்கள் ஈரான்-இசுரேலிய மோதலின் மையம் இந்தப் பகுதியின் எரிபொருளை ஏற்றுமதி செய்தும், ஆசிய-ஐரோப்பிய வணிகத்தின் மையமாக விளங்கியும் அதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதுதான். இரண்டு நாடுகளின் அமைவிடம் அதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட, இசுரேல் ஈரானை நிலைகுலைக்க வைக்க முயல்வதைப்போல, ஈரான் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு தனது எதிர்த்தாக்குதலின் மூலம் எதிரியின் அரசியல் பொருளாதார நிலைத்தன்மையை உடைத்து நிலைகுலைய வைப்பதாகவே இருக்கமுடியும். இசுரேலின் பொருளாதார இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நெதன்யாகுவின் அரசு நிலைக்கவும் அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் போர்களின் வழியாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஈரானின் நேரடியான ஏவுகணைத் தாக்குதல்கள் அதனை வேகப்படுத்தி இருக்கின்றன. உயிருக்குப் பயந்து இரயில், மகிழுந்து நிறுத்தங்களில் படுக்கையை விரித்து படுக்கவைத்த ஈரானின் தாக்குதல் யூத மக்களின் மனதில் பாதுகாப்பின்மையை விதைத்து இருக்கிறது. அதனால் போர் நின்றால் அங்கே அரசியல் போராட்டம் வெடித்து அந்த அரசு நிலைக்கும் வாய்ப்பில்லை எனும் நிலையில் ஈரானின் போர்க்கள உத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க முடியும். தாக்குதலை மேலும் அதிகப்படுத்தி அமெரிக்கர்களை உள்ளே கொண்டுவந்து அவர்களை மேற்காசியாவில் இருந்து வெளியேற்றி இருநாடுகளையும் ஒருசேர வெல்லும் வல்லமை ஈரானிடம் இல்லை. அப்படியான முடிவு போரை நீட்டித்து இசுரேலைக் காத்து ஈரானின் இழப்பை மேலும் கூட்டுவதாகவே இருக்கும். அவ்வாறான தவறைச் செய்யாமல் போர் நிறுத்த முடிவெடுத்து தற்காத்தல், தாக்குதல் ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்று இருக்கிறது ஈரான். ஆயுத வலிமை கொண்டு நடத்தப்படும் போரரசியல் உழைத்து உருவாக்கிய உற்பத்தி பொருள் செல்வத்தைக் காப்பது (defensive) உழைக்காமல் மற்றவர்களின் உற்பத்தி செல்வத்தைக் கைப்பற்றுவது (offensive) ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டது. சீன, ரசிய, ஈரானிய போர்களில் அமெரிக்காவின் தோல்வி அவர்களின் தகவல்தொடர்பு, நிதிய, போர்க் கருவிகளினாலான ஆயுதங்கள் கொள்ளையில் ஈடுபட்டு வெற்றிபெறும் வலிமையை இழந்து விட்டத்தையும் மற்ற நாடுகள் உற்பத்தியைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெருக்கிக் கொண்டதையும் காட்டுகிறது. நேரடி, மறைமுகப் போர்களில் ஈடுபட்டு டிரில்லியன் கணக்கில் செலவுசெய்து தோற்றுவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் இனி சீன, ரசிய, ஈரானிய நாடுகளுடன் நேரடி போர்களில் ஈடுபட்டு மடிவது அல்லது தனது இடத்தை விட்டுக்கொடுத்து மற்றவர்களுடன் உலகைப் பகிர்ந்து கொண்டு இணையாக பல்துருவ உலகில் வாழ்வது ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும். போரில் வென்று உடைந்துவிட்ட டாலர்மைய ஒற்றைத்துருவ உலகை மீட்பது இனி சாத்தியமே இல்லை. ஓரிரு ஆண்டுகளில் புதிய உற்பத்தியைப் பெருக்கி அதற்கான உலக சந்தையைக் கைப்பற்றுவதும் சாத்தியமில்லை. இனி பேச்சுவார்த்தையின் மூலம் வரிவிதிப்பு போரைப் பயன்படுத்தி உருட்டி மிரட்டி இழப்பைக் குறைத்து பலனைக் கூட்ட மட்டுமே முடியும். எனவே புதிய பல்துருவ உலகமே எதார்த்தமானது. அதன் தொடக்கம் அனைத்து உற்பத்தி வலிமை மிக்க நாடுகளும் சமமாக பொதுவாக அவரவர் நாணயங்களில் வணிகம் செய்வது என்பதாக மாறிவிட்டது. இதன் முழுமை போர்கள் மற்றும் போராட்டத்தின் ஊடாக எல்லோர்க்கும் பொதுவான மதிப்பு விதியை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும். அப்படியான விதியின் அடிப்படையிலான உலக ஒழுங்கு முழுமையாக நடைமுறைக்கு வரும் நாள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஏகாதிபத்திய காலகட்டத்தின் இறுதியை அறிவிக்கும் நாளாகவும் அதனுள் கருவாகி உருவாகி வளர்ந்து நிற்கும் சோசலிச சமூகம் உறுதியாக சோசலிச மாற்றத்தை நோக்கி நகர்ந்து விட்டதை உறுதி செய்யும் நாளாகவும் இருக்கும் https://minnambalam.com/iran-wins-war-for-regime-change/
  6. ஈரான்-இசுரேலிய போருக்கான தேவை என்ன? 23 Jul 2025, 6:30 AM பாஸ்கர் செல்வராஜ் எந்த முகாந்திரமும் இன்றி தான்தோன்றித்தனமாக உலக சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறி திடீரென ஈரானின் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது இசுரேல். உளவு அமைப்புகள் மூலம் அந்நாட்டுக்குள் ஊடுருவி புரட்சிப் பாதுகாப்புப் படை மற்றும் அணு விஞ்ஞானிகள் அறுபது பேரைப் படுகொலை செய்தது. சிரியாவை அடுத்து ஈரானில் ஆட்சி மாற்றமா? என்று குழம்பிய நிலையில் ஈரானின் பதிலடி தொடங்கியது. தொடர்ந்த போரின் போது ஈரானின் ஏவுகணைகளைச் செலுத்தும் ஏவூர்திகள் (launchers) பெரும்பாலானவற்றை அழித்து விட்டதாகவும் எஞ்சிய மலைக்குகைக்கு அடியில் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் மையங்களை மட்டுமே அழிக்கவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லி அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மையங்களின் மீது உலகின் மிகப்பெரிய குண்டுகளை வீசினார்கள். இறையாண்மையும் முதுகெலும்பும் இருந்த நாடுகள் இதனைக் கண்டித்தன. ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நவகாலனிகள் உழப்பும் வார்த்தைகள் பேசி ஆதரித்தன. அடுத்த அமெரிக்காவின் மேற்காசியப்போர் வெடிக்கப்போகிறதோ என்று உலகமே பதற்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரசியாவின் முன்னாள் அதிபர் மற்ற நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்கலாம் என்று ஒரு மறைமுக செய்தியைப் பகிந்தார். இசுரேல் உலகுக்கு அறிவிக்காமல் அணு ஆயுதம் வைத்திருப்பது அனைவரும் அறிந்த இரகசியம். ஈரான் அப்படி அறிவிக்காமல் வைத்திருக்கிறதா என்று எவரும் அறியாத நிலையில் ரசிய பாதுகாப்பு உயர்மட்ட குழு உறுப்பினரான இவரின் அறிவிப்பு ஈரானின் அடுத்த நகர்வுக்கு முறைமுக ஆதரவும் வழிகாட்டி உதவுவதாகவும் இருந்தது. பின்பு ஈரானின் வெளியுறவு அமைச்சர் ரசியா சென்று புதினின் உதவிக்கான உறுதிமொழியைப் பெற்றுவந்த பிறகு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இதுவரையில் நடைமுறையில் இருக்கிறது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் சீனா சென்று பேசி இருக்கிறார். இது குறித்த அரசியல் அக்கப்போர்கள், இராணுவக் கருவிகளின் நுட்பங்கள், அமெரிக்க அரசியல் கோமாளியின் உளறல்கள் குறித்த செய்திகள், காணொளிகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து இந்தப் போரின் அரசியல் பொருளாதாரம் குறித்து மட்டும் பார்ப்போம். உலகப் போர்களைப் பொருத்திப் பார்க்கும் சட்டகம் (Frame) இரத்தம் சிந்தி செய்யும் போர் அரசியலை அதனைச் சரியான சட்டகத்தில் வைத்துப் பார்த்துப் புரிந்துகொள்வது உலகுடன் ஒத்திசைந்து செல்ல வேண்டிய நமது பாதையைச் செவ்வனே செதுக்கிக் கொள்ள உதவும். மேற்காசியா என்றால் எரிபொருளும் ஆசிய-ஐரோப்பிய வணிகப் பாதையும். அதில் அமெரிக்காவின் தலையீடு என்றால் பெட்ரோ டாலரும் ஆசிய ஐரோப்பிய வணிகக் கட்டுப்பாடும்தான். பெட்ரோடாலர் உலகப்பொருள் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப மூலதனப் பொருள்களின் மதிப்பைத் தெரிவிக்கிறது. இந்த எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உற்பத்திக்கு டாலரைக் கொண்டே இவற்றை வாங்க வேண்டும் என்பதால்தான் அதற்கான தேவை சந்தையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தக் கட்டமைப்பை நிலைப்படுத்தும் விதிகள் கொண்ட உலக ஒழுங்கு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த ஒழுங்கு ரசியா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எரிபொருள் இறக்குமதியாளரான சீனாவுக்கு டாலர் தவிர்த்த சொந்த நாணயங்களில் எரிபொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய நாள் முதல் உடைப்பைச் சந்திக்க தொடங்கியது. இதோடு முந்தைய மரபான எரிபொருள் தொழிநுட்ப உற்பத்தி மரபுசாரா மின்னணு தொழில்நுட்ப உற்பத்திக்கு மாறி வருகிறது. மாறிக் கொண்டிருக்கும் நவீன மின்னணு மாற்று எரிபொருள் உற்பத்திக்கான நுட்பங்களைச் சீனா அடைந்தது. இது மேலும் டாலர்மைய உலக ஒழுங்கை உடைத்து டாலர் இல்லாமலும் பொருள் உற்பத்தி, வணிகம் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தியது. அந்த உடைப்பை அமெரிக்கர்கள் சரிசெய்ய போராடிக் கொண்டிருந்தபோது வந்த கொரோனாவினால் உலக உற்பத்தி மேலும் நிலைகுலைந்து நின்றது. அந்த உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களும் அந்த சொத்துக்களின் மீது கட்டப்பட்ட பங்குச்சந்தை மாய மாளிகையும் மதிப்பு குறைந்து உடைந்து இருக்க வேண்டும். அப்படி அனுமதிக்காமல் அந்த சொத்துக்களின் மதிப்பைச் செயற்கையாக டாலர் பணத்தை உற்பத்திசெய்து நிலைநிறுத்தியதால் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான டாலர் சுழற்சியின்றியும் இப்படி டாலரை அச்சடித்ததாலும் சந்தையில் டாலர் மிகைமூலதனம் திரண்டது. அதாவது சொத்தின் விலையை உயர்த்திக் காட்டி டாலரின் மதிப்பு நீர்க்க வைக்கப்பட்டது. இப்போது நீர்த்து பெருகிப்போன டாலருக்கு ஏற்ப அதற்கு எதிராக மதிப்பிடப்பட்ட மற்ற உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு மாறவேண்டும். பொருள்களைவிட அதிகமாக உற்பத்தி செய்த டாலர் அதன் மதிப்பை அடைய உலகம் முழுக்க பாய்ந்து சொத்துக்களின் தேவையைக் கூட்டி விலையை உயர்த்தியது. பொருள் உற்பத்தியின்றி ஏற்பட்ட அந்த விலை உயர்வுக்கு ஏற்ப மற்ற நாடுகளில் ஏற்பட்ட பணத்தின் பெருக்கம் இயல்பாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பைக் குறைத்தது. அது பணத்தில் இயங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுகுறு உற்பத்தியாளர்களின் வருவாய் மற்றும் செல்வத்தை மறைமுகமாக நீர்க்கச் செய்து குறைத்தது. இப்படி பணக்காரர்களின் சொத்தின் மதிப்பு கூடும் அதேவேளை மற்றவர்களின் வருமானம் சொத்து ஆகியவை மறைமுகமாக குறைக்கப்பட்டது. அப்போது செய்த முதலீடுகள் கொரோனாவிற்குப் பிறகான பொருளாதார உற்பத்தி பெருக்கத்தை எதிர் நோக்கி இடப்பட்டவை. அந்த மதிப்பு வருங்கால உற்பத்தி மீதான உத்தேச மதிப்பு; உண்மை மதிப்பு அல்ல. உண்மை மதிப்பு பின்னர் பொருளை உற்பத்தி செய்து விற்று முதலையும் இலாபத்தையும் அடைவதில் இருக்கிறது. உத்தேச மதிப்பை உண்மையாக்க அதிக விலையில் பொருளை விற்றதால் இலாபம் பெருகி ஜிடிபியும் உயர்ந்தது. ஆனால் ஏற்கனவே பணத்தின் மதிப்பைத் திரித்ததால் வருவாயை இழந்த மக்கள் மேலும் அதிக விலை கொடுத்து பொருளை வாங்கியதால் அவர்களின் வாங்கும் திறன் குறைந்து விற்பனை சரிந்து வருகிறது. அதற்கு ஏற்ப பொருள்களின் விலை வீழ்ந்து சொத்துக்களின் மதிப்பு இப்போது சரியவேண்டும். அதாவது தொடங்கிய இடத்திற்கே முதலாளித்துவம் வந்து நிற்கிறது. அதுதான் அதனுடைய இயல்பு. இல்லையேல் மதிப்புமிக்க புதிய சொத்தையும் அதற்கான சந்தையையும் டாலர் நிதிமூலதனம் அடையவேண்டும். ஆனால் அப்படியான மாற்று உற்பத்தி இவர்களிடம் இல்லை. எனவே அந்த உற்பத்தியை வைத்திருக்கும் சீனர்களின் சொத்தை வழக்கம்போல ஆட்டையைப் போடுவதுதான் ஒரேவழி. கொரோனாவின் போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைப்போல டாலருக்கு சந்தையைத் திறந்து விடாமல் மூடிக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி சந்தையை சீனர்கள் விரிவாக்கி இருக்கிறார்கள். அந்த சொத்தை டாலர் மூலதனம் அடைவது அல்லது அதனை உடைத்து பழைய எரிபொருள் தொழில்நுட்ப உற்பத்தியை மையப்படுத்திய டாலர்மைய ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது ஒன்றே அமெரிக்கர்களின் நெருக்கடியைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி. இந்த பொருளாதாரத் தேவைக்கான 1. பழைய உற்பத்தி ஒழுங்கை உடையாமல் காப்பது, 2. புதிய உற்பத்தியில் உருவாகும் சொத்தைத் டாலர் நிதிமூலதனம் அடைவது ஆகிய இரண்டு நோக்கத்தின் பொருட்டும் நடக்கும் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது. போருக்கு முந்தைய ஈரான்-இசுரேலிய சூழல் 5ஜி தொலைத்தொடர்பு மற்றும் மின் மகிழுந்துகள் உள்ளிட்ட மாற்று உற்பத்தி நுட்பங்களைக் கொண்டிருக்கும் சீனர்களின் புதிய உற்பத்தி தொழில்நுட்ப சொத்துக்களை டாலர் நிதிமூலதனம் அடைய செய்த வணிகப்போர், தொழில்நுட்ப போர், மிரட்டல்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. டாலரின் வழியான பழைய எரிபொருள் உற்பத்தி வணிக உடைப்பைத் தடுக்கும் பொருட்டு உக்ரைன் பிரச்சனையைத் தூண்டி ரசியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருள் கனிமவளங்களைக் கைப்பற்றும் முயற்சியும் தோல்வி. ஆனால் அதனிடம் இருந்த ஐரோப்பிய எரிபொருள் சந்தை வெற்றிகரமாக உடைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான எண்ணெய் எரிவாயு அளிப்பை விலை அதிகமான அமெரிக்க உற்பத்தி கொண்டு மட்டும் செய்துவிட முடியாது. ரசியாவை அடுத்து அதிகமான எரிவாயு வளத்தை ஈரான்-கத்தார் எரிவாயுவைக் கொண்டு செல்வதிலும் சிக்கல். ஈரானும் ரசியாவும் இணைந்து எரிவாயு தளத்தை கூட்டணி (strategic partnership) அமைத்து ஆசிய-ஐரோப்பிய எரிபொருள் சந்தையைத் தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்ளும் திசையில் சென்றன. அமெரிக்காவை விலக்கி ஆசிய ஐரோப்பிய எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சரக்கு போக்குவரத்துக்கான புதிய உலக வடக்கு தெற்கு போக்குவரத்து மண்டலத்தை (INSTC) ஏற்படுத்தின. இந்தக் கூட்டணியில் சீனாவோடு இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் இணையும்போது அமெரிக்கர்களை வெளியேற்றி இந்த மண்டலத்தைத் இவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதனைத் தடுக்க இக்கூட்டணியில் இருந்து இந்திய, ஐரோப்பிய நாடுகளைப் பிரிக்கும் வகையில் இதற்கு மாற்றாக பாலஸ்தீன பகுதியில் இருக்கும் எரிவாயுவையும் எதிர்காலத்தில் கத்தாரின் எரிவாயு ஏற்றுமதியையும் இணைக்கும் இசுரேலை மையப்படுத்திய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தை (IMEC) அறிவித்தது அமெரிக்கா. அந்த நகர்வுக்கு ஹமாசின் இசுரேல் மீதான தாக்குதல் பாலஸ்தீன பிரச்சனையை உலகின்முன் கொண்டுவந்து தடையை ஏற்படுத்தியது. இந்தத் தடையைப் பாலஸ்தீன இனத்தை அழித்து வெளியேற்றி உடைக்க முற்பட்டது இசுரேல். ஈரான் தனது பொருளாதார நலனைக் காக்கும் நோக்கில் தனது ஆதரவு ஹிஸ்புல்லா, கவுத்தி இயக்கங்களின் வழியாக அமெரிக்க, இசுரேலிய நாடுகளின் நோக்கத்தை அடையாவிடாமல் அரசியல் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. இந்தப் போருக்கான நோக்கத்தில் அமெரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் இசுரேலின் இருப்பும் தேவையும் கேள்விக்குள்ளாகும். போருக்கு செலவிட்ட சுமையும், உடைபட்ட பொருளாதார நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் அங்கே அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். எனவே இது இசுரேலிய ஆளும்வர்க்கத்துக்கு வாழ்வா சாவா போராட்டம். எனவே தனது அனைத்து வலிமையையும் நீண்டகால தயாரிப்புகளையும் பயன்படுத்தி ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தலைமைகளைக் கொன்றும் லெபனான் மீது போர்தொடுத்தும் கவுத்தி இயக்கத்தைத் தாக்கியும் ஈரானின் அரசியல் வலிமையை உடைத்தும் வந்தார்கள். உச்சமாக அலாவைத் சிறுபான்மை ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டு துருக்கி ஆதரவு கூலிப்படையின் மூலம் சிரியாவில் ஆட்சிக் கவிழப்பை நிகழ்த்தி தன் மீதான ஈரானின் இசுரேலிய சுற்றிவளைப்பை வெற்றிகரமாகத் தகர்த்தார்கள். ஈரானின் மீது சிரிய, ஈராக் வான்வெளி வழியாக தாக்குதல் நடத்த இருந்த தடை இதன்மூலம் நீங்கியது. கணக்கை மாற்றிப் போட்ட அமெரிக்கா இதனிடையில் ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் முந்தைய சனநாயகக் கட்சியின் ரசிய, சீன சொத்துக்களை மொத்தமாகக் கைப்பற்றி சந்தையை ஆதிக்கம் செய்யும் முயற்சியில் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டு ஏற்றத்தாழ்வுடன் இவர்களுடன் பலனைப் பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு வந்தது. முந்தைய பைடன் நிருவாகத்தின் சில்லுகளுக்கான தொழில்நுட்ப போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு இப்போது சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் தனக்கு இசைவான ஒரு பொருளாதார ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் வகையில் உலக நாடுகளின் மீது வரிவிதிப்பு போரை அறிவித்தது. ரசியாவுடன் சமரசம் செய்துகொண்டு ஐரோப்பிய நலனைப் பலிகொடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொள்ள பேரம் பேசியது. எதிர்பாராத விதமாக சீனர்களின் எதிர் வரிவிதிப்பு தாக்குதலினால் அமெரிக்கா வரிவிதிப்பு போர் ஆரம்பத்திலேயே அமெரிக்கர்களைத் திருப்பித் தாக்கியது. வேறுவழியின்றி பின்வாங்கியது ட்ரம்ப் நிருவாகம். தனது நலனை விட்டுக் கொடுக்காத ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் வழியாக அந்த சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதால் ரசிய கூட்டு முயற்சியிலும் தோல்வியைத் தழுவியது. ரசியர்களும் இறங்கிவர அடம்பிடித்த நிலையில் ரசிய-சீன-ஈரானிய கூட்டணி பலத்தை உடைக்கும் வகையில் எந்த ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முன்பு விலகினாரோ அதே ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மிரட்டினார் டிரம்ப். அதன்மூலம் ஈரானிய எரிபொருளைப் பெற்று ரசியர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றது அவரது நிர்வாகம். ஈரானில் இருக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் புரட்சிக்குப் பிறகு உருவான தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாடு, ரசியாவுடனான எரிவாயு கூட்டணியை உடைத்து அனுகூலம் அடையத் துடிக்கும் அமெரிக்கர்களின் நோக்கம் ஆகியவை காரணமாக அனைவரின் ஒத்துழைப்புடன் கவனமாகக் காய்களை நகர்த்தியது ஈரான். இந்த இக்கட்டை இன்னும் இறங்கி விட்டுக் கொடுத்து தீர்க்கலாம் இல்லையேல் ரசிய, சீன நாடுகளுடன் ஒப்பிட பலகீனமான ஈரானைத் தாக்கி அந்நாட்டு வளத்தை ஓட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தை அரசியலின் திசையையே மாற்றலாம். இரண்டாவதைத் தெரிவு செய்தார் அமைதி விரும்பியாக வேடமிட்ட டிரம்ப். எனினும் அமெரிக்க தளங்களை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்க இசுரேலை ஏவிவிட்டு சிரியாவைப் போன்று ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டமாக இருந்திருக்கிறது. ஈரானுடனான ஒப்பந்தம் அந்தப் பகுதியில் இசுரேலின் ஏகபோகத்தை உடைத்து ஈரானின் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இசுரேல்முனைப்புடன் ஈரானை முடிக்க களமிறங்கியது. மன்னர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிழலில் உருவான தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்க உருவான ஈரானிய இராணுவம், இசுலாமிய புரட்சிக்குப் பிறகு உருவான புதிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்கும் புரட்சிப் பாதுகாப்புப்படை என இரண்டாக பிரிந்திருக்கும் அந்நாட்டின் ஆளும் வர்க்க அரசியலைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். தேசிய வர்க்கத்தின் புரட்சிப் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமைகளை கொன்றொழித்து அதன் தொடர்புகளைத் துண்டித்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஏவுகணைகளை ஏவும் வலிமையை குண்டுவீசி அழித்தும் அவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் போது தரகு முதலாளித்துவ வர்க்கம் இவர்களிடம் மண்டியிட்டு சேவை செய்யத் தயாராகிவிடும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். நேர்த்தியான இந்தத் திட்டத்தைச் சிறப்பாக முதல் இரண்டு நாட்களில் செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால் சிறிய இடைவேளையில் மீண்டு எழுந்த தேசிய வர்க்க புரட்சிப் பாதுகாப்புப்படை இழந்த தொடர்புகளை மீட்டு வெற்றிகரமாக பதிலடியைத் தொடங்கி இவர்களின் திட்டத்தை உடைத்ததன் மூலம் ஈரானின் ஆட்சி மாற்றத்தைத் தவிர்த்து இருக்கிறது. இதன்பிறகு நடந்தது என்ன?! https://minnambalam.com/iran-that-avoided-the-regime-change-what-next-1/
  7. கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை,ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்ததுடன்,அங்கு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதிர் தர்பண நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதிர் தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வானது நிறைவு பெறும் தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்றும் அன்னதானப் பொருட்களை ஏற்றுவதற்காக முச்சக்கரவண்டி வந்தபோது, அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவர், இங்கே வாகனங்கள் உள்நுழைய முடியாது எனவும் நேரம் முடிந்து விட்டதால் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அங்கு சத்தம்போட்டு அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பக்ததர்கள் உட்பட பூசகர்கள் தங்களுக்குரிய பூசைப் பொருட்களையும் அன்தான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமைதியான முறையில் அங்கிருந்து வெளியேறினார்கள். ஆடி அமாவாசை தீர்த்தத்திற்காக தொல்லியல் திணைக்களத்திடம் முற்பகல் 11 மணிவரை அனுமதி பெற்றிருந்த நிலையில், சம்பந்தம் இல்லாத பௌத்த பிக்கு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறந்த ஆத்மாக்களுக்கான கடனை தீர்க்கும் புனிதமான நிகழ்வில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=334170
  8. புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை! July 25, 2025 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையென்பதால், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என அவர்களின் வாதத்தை ஏற்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத நிலையில் வழக்கை தொடர முடியாதென்று தெரிவித்துள்ளார். எனவே, குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த 16 இளைஞர்களையும் முற்றிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/புலிகள்-இயக்கத்தை-மீளுரு/
  9. வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும் Published By: VISHNU 25 JUL, 2025 | 04:21 AM வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து. இது தொடர்பான கள விஜயத்தின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2025.07.17 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் (24) பிரதேச சபை தவிசாளர் சே.கருணாநிதி, பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி. துசிதீபா, தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபில்யூ.யு.எஸ்.பெரேரா, பிரதேச சபை செயலாளர் சாந்தகுமார், குடியேற்ற உத்தியோகத்தர் ந.கஜகோகுலன், உதவி வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பி.ஜெகதீஸ்வரன், அடைவு வன நிலதாரி எம்.பி.எம்.அசாருதின், தொல்பொருள் திணைக்கள வலய உத்தியோகத்தர் ஜி.கிரிஷாந்த், கிராம அலுவலர் சாள்ஸ் அன்ரனி, கிராம அலுவலர் திருமதி ஜீவராணி ஆகியோர் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர். பிரதேச செயலாளரினால் குறித்த களவிஜயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொல்பொருளியல் இடமான வட்டவன் பகுதியில் பிரதான வீதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டரில் பாலக்காட்டு பகுதியில் உள்ளோக்கி செல்லும்போது மலைத்துடர் காணப்படுகின்றது இம்மலை தொடரில் அண்ணளவாக 12 இடங்களில் தொல்பொருள் அடையாளங்களான புராதன எழுத்துக்களும், குகைகளும் காணப்படுபட்டதை அவதானிக்க முடிந்தது எனவும், தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட மலைத் தொடரை சுற்றியுள்ள எல்லைப் பிரதேசங்களில் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளரினால் குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025.08.14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக விசேட தொழிற்ப குழுவினர் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டதுடன் உத்தேசமாக மலை உச்சியில் இருந்து அண்ணளவாக 50 மீட்டர் பகுதி சுற்றளவு உடைய இடங்களையே தொல்லியல்துறை ஒதுக்கமாக எல்லைப் படுத்துவதாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மக்கள் வழமை போன்று நெற்செய்கையில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று கல்லடி பகுதியில் பாசன பப்பத விகாரையை சூழ தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லை கற்கள் இடப்பட்டு காணப்படுகின்றது. இப்பகுதியில் பயிர்ச்செய்கை பண்ணப்படும் காணிகளும் சிறிய பற்றை காடுகளும் காணப்படுகின்றது இதில் வேளாண்மை மற்றும் மேட்டுநில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் காணியானது சுமார் 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையும் காணப்படுகின்றது. தொல்பொருள் திணைக்கள எல்லைக்குள் ஒருவருக்கு காணி அளிப்பு பத்திரமும் ஒரு நபருக்கு காணி அனுமதி பத்திரமும் காணப்படுவதாக குறித்த கிராம அலுவலரினால் தெரியப்படுத்தப்பட்டது. இப்பிரதேசத்தில் பற்றை காடுகளாக காணப்படுகின்ற தொல்பொருளியல் திணைக்களம் எல்லை கற்கள் காணப்படும் பகுதிகள் தொல்பொருளியல் தடயங்கள் காணப்படுவதால் அப்பகுதியை விடுவிக்க முடியாது என்றும் அப்பகுதிக்கு அப்பால் வெற்று காணிகளாக காணப்படுகின்றதும் எல்லை கற்கள் இடப்பட்டுள்ள காணிகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தீர்மானத்தினை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்று தற்போது இடப்பட்டுள்ள எல்லை கற்களை பிடுங்கி குறித்த பகுதியை விடுவிக்க ஆவண செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220886
  10. WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார் WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், கிளியர்வாட்டரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்க் ஹோகன் 1980களில் WWF (இப்போது WWE) இல் தனது "ஹல்கமேனியா" (Hulkamania) பாத்திரத்தின் மூலம் மல்யுத்த உலகை புரட்சிகரமாக மாற்றினார். ஆறு முறை WWE உலக சாம்பியனாகவும், ஆறு முறை WCW உலக ஹெவிவெயிட் சாம்பியனாகவும், மற்றும் ஒரு முறை IWGP ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்தவர். 1996 இல் "Hollywood Hulk Hogan" என்ற வில்லன் பாத்திரத்தில் New World Order (nWo) குழுவை வழிநடத்தி மல்யுத்த உலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கினார். அவர் 2005 மற்றும் 2020 (nWo உறுப்பினராக) ஆகிய ஆண்டுகளில் WWE Hall of Fame இல் இடம்பெற்றார். மல்யுத்தத்திற்கு வெளியே, ஹோகன் ‘ராக்கி III’ (1982), ‘நோ ஹோல்ட்ஸ் பார்ட்’ (1989) போன்ற திரைப்படங்களில் நடித்தார் மற்றும் ‘Hogan Knows Best’ என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார். அவரது கவர்ச்சியான ஆளுமை மற்றும் மல்யுத்த நிகழ்ச்சிகள் மூலம் மல்யுத்தத்தை குடும்ப பொழுதுபோக்காக மாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில், ஹோகன் 25-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை (முதுகு, முழங்கால், இடுப்பு, தோள்பட்டை) மேற்கொண்டிருந்தார். மே 2025 இல் அவர் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டு வருவதாக அவரது மனைவி ஸ்கை டெய்லி (Sky Daily) தெரிவித்திருந்தார். ஜூன் 2025 இல், அவர் கோமாவில் இருப்பதாகவும், மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் பரவிய வதந்திகளை அவரது மனைவி மறுத்திருந்தார். 2015 இல், இனவெறி பேச்சு சர்ச்சையில் சிக்கியதால், WWE அவரை தற்காலிகமாக நீக்கியது, ஆனால் 2018 இல் மீண்டும் Hall of Fame இல் இணைத்தது. 2024 இல், அவரது Real American Beer விளம்பர நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். https://adaderanatamil.lk/news/cmdhm1zxe01lyqp4kbj6mjsup
  11. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை முருகானந்தன் தவம் இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள். இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் கொளுந்து விட்டெறிந்த தமிழர் சொத்துக்களும், இதயங்களை உறைய வைத்த கொடூர தாக்குதல்களும் உயிருடன் கொளுத்தப்பட்டவர்களின் கதறலும், காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை தலைநகர் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்? வருடத்தின் 12 மாதங்களில் ‘கறுப்பு ஜூலை’யாக தமிழர் குருதி குடித்த மாதமாகத் தமிழர் மனங்களில் ஆழமாகவும் ஆறாத ரணமாகவும் பதிந்துவிட்ட அந்த தமிழினப் படுகொலை நடந்து ஜூலை 23ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் ஆகிவிட்டன. வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் சிங்களக் கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்ட, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும். தமிழ் மக்­க­ளுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டு­களில் பேரி­ன­வா­தி­க­ளி­னதும், பேரின ஆட்­சி­யா­ளர்­க­ளினதும் ஆசிர் வா­தத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட இனக் கலவர வன்­முறைச் சம்­ப­வங்­களின் போக்கில், அடுத்த கட்­ட­மா­கவே, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவர படுகொலைகள் அரங்­கேற்­றப்­பட்­டன. 1983 ஜூலை 23, 24, 25, 26 ஆகிய தினங்களில் திட்டமிட்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக, தீராத வலியாகக் கனன்று கொண்டிருக்கின்றது. இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 42 வருடங்கள் கடந்து விட்டாலும் அது தமிழரின் மனத்தோடு ஆழமாகப் பதிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83இன் தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த கறுப்பு ஜூலை நினைவிற்கு வந்து கலங்க வைப்பதைத் தவிர்க்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படையில், இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலையே 30 வருட யுத்தத்துக்கு வழிகோலி இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்ததுடன், உடைமைகளை அழித்து இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கி, சிங்களவர், தமிழர்களை இன்றுவரை பரம எதிரிகளாகவும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதவர்களாகவும் வைத்திருக்கின்றது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன . வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். தீயிட்டு எரிக்கப்பட்டனர். தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ, பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரக்கால சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி, கொலை செய்யப்பட்டவர்களை மரண அல்லது நீதி விசாரணை இல்லாமல் தகனம் செய்ய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. தமிழினப் படுகொலைகளைத் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார் செய்யப்பட்டது. இதற்காகவே யாழ்., திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அது சிங்களக் காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக அணிதிரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது. ஜூலை 23ஆம் திகதியில் இருந்து காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளில் ஈடுபட்ட பொலிஸாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாகத் தமிழர்களைத் தேடித் தேடிக் கொல்லவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், தமிழர் சொத்துக்களை அடியோடு அழிக்கவும் இடமளித்ததன் பின்னர், ஜூலை 25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே ஜனாதிபதி கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது . முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், சிங்களக் காடையர்கள் மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது படுகொலைகளை முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகவே இருந்தது. ஜூலை 26ஆம் திகதி கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை அரங்கேற்றினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது. சிங்களவர்களின் அரக்கத்தனம் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பின்னர். ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக அரங்கேற்றப்பட்டன. அது மட்டுமன்றி, கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் பொலிஸார், சிறைக் காவலர்களின் ஒத்துழைப்புடன் சிங்களக் கைதிகள் , காடையர்களினால் கண்கள் தோண்டப்பட்டும் கொடூர சித்திரவதைகள் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தமிழினப்படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள் தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கப்பலேற்றி ‘’உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்’’ என கூறி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினர். ஜூலை 23இல் ஆரம்பித்த தமிழினப்படுகொலை மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரம் என்ற பெயரில் நடந்த தமிழினப் படுகொலையில் 3,000 பேர் வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் தரவுகள் கூறுகின்றன. தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும் பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது. இரா­ணு­வத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கும், இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம­ப­வங்­க­ளுக்கு அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதனால் ஊட­கங்­களின் ஊடாக உண்மை நிலை­மையை உட­னுக்­குடன் அறிய முடியா சூழல் ஏற்­பட்­டி­ருந்­தத்து. அப்­போது கொழும்பில் இருந்த வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்கள் கடு­மை­யாகக் கண்­கா­ணிக்­கப்­பட்­டார்கள். அவர்கள் தங்­க­ளு­டைய ஹோட்டல் அறை­களில் இருந்து வெளியில் வரு­வ­தற்கும் சில நாட்கள் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. கட்­டுப்­பா­டு­களை மீறிச் செயற்­பட்ட வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் நாட்டில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டனர் . இந்த 1983 ஜூலை கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்தனர். இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது. கறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. 42 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காதது போலவே இலங்கையின் தேசியப் பிரச்சினையாக மாறிய தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புக்களும் இல்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-மக்களின்-பிரச்சினைக்கு-தீர்வு-கிடைக்கும்-வாய்ப்புக்கள்-இல்லை/91-361693
  12. 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைத்தார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன. அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன. குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர். சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/98-பாடசாலைகளில்-ஒரு-மாணவனும்-இல்லை-புட்டு-புட்டு-வைத்தார்-ஜனாதிபதி/150-361675
  13. யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அகற்றுமாறும், அதனை மீறி வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்களின் அத்தனை வியாபார நிலையப் பொருட்களும் ஜூலை 30 ஆம் திகதி சபையினால் கையகப்படுத்தப்படும். அத்துடன் நடைபாதையில் வாகனங்கள் நிறுவத்துவதும் முற்றாக தடை செய்யப்படுகின்றது. குறித்த அறிவித்தலினை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்துப் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது. https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழக_முன்புற_நடைபாதை_வியாபார_நிலையங்களை_அகற்ற_நடவடிக்கை!
  14. யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை - ஓகஸ்ட் முதல் நடைமுறை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கைப் போக்குவரத்துசபை செயற்படும் மத்தியபேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன். நெடுந் தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியாரும், இலங்கைப் போக்குவரத்து சபையினரும் இணைந்த நேர அட்டவணையில் செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தால் மாகாண மேல் நீதிமன்றத்தில், வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும். இலங்கைப் போக்குவரத்துச்சபைக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், பேருந்து சேவைகள் மக்களின் நன்மைக்காகத்தான் செயற்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். நெடுந்தூரப் பேருந்து நிலையத்துக்குச் செல்வதால் மக்களுக்குத்தான் பல்வேறுவகைகளிலும் நன்மை. அதேநேரம், இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் சில குறைபாடுகளைச் சொல்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்போது ஏற்படுகின்ற குறைகளைத் தொடர்ச்சியாக நிவர்த்தி செய்து இதனை நகர்த்துவோம் -என்றார். https://newuthayan.com/article/யாழ்.புதிய_பேருந்து_நிலையத்திலிருந்தே%C2%A0%C2%A0இ.போ.ச.,_தனியார்;_நெடுந்தூர_சேவை_-_ஓகஸ்ட்_முதல்_நடைமுறை
  15. கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு adminJuly 24, 2025 முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள கிணற்றிலிருந்தே சடலமாக இன்று வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர் தாய் உசாகரன் மாலினி( வயது 38) மகள்களான உசாகரன் மிக்சா ( வயது 11) உசாகரன் சதுசா (வயது 04) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கிணற்றின் அருகில் இன்று அதிகாலை கைப்பை ஒன்றும் ஏனைய பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊா் மக்கள் அந்த விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அங்கு சென்ற கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினர் கிணற்றில் சடலங்கள் இருப்பதை பாா்வையிட்டதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார் இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது கொல்லப்பட்டனரா என்பது தொடர்பில் மாங்குளம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் https://globaltamilnews.net/2025/218314/
  16. கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு! July 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு சரியாக 42 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை. 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய ஜெயவர்தன அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த வன்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு ‘வசதியாக’ அமைந்தது. இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார். அந்த ஜூலைக்கு பிறகு இலங்கையில் சகலதுமே கறுப்பாகத்தான் இருக்கிறது என்று எழுதிய சிங்களப் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள். அரசாங்கத்தின் மனநிலை: கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக (11 ஜூலை 1983) லண்டன் ரெலிகிராவ் பத்திரிகையின் செய்தியாளர் கிரஹாம் வார்ட்டுக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. “இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று ஜெயவர்தன கூறினார். அந்த நேர்காணலுக்கு பெருமுக்கியத்துவம் கொடுத்து (17 ஜூலை 1983) அரசுக்கு சொந்தமான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகை மறுபிரசுரம் செய்தது.. ஜெயவர்தனவின் அந்த கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள் நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது. தமிழர்களை கொடுமைப்படுத்தினால் சிங்களவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால், சிங்களவர்களைப் பற்றி அவ்வாறு ஒரு கணிப்பீட்டை ஜெயவர்தன கொண்டிருந்தார் என்பதே உண்மை. உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்க முடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது. அதனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் கறுப்பு ஜூலைக்கு என்றென்றும் மறையாத — பித்தியேகமான எதிர்மறைக் குறியீடு ஒன்று இருக்கிறது. கறுப்பு ஜூலை வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை. வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி: வன்செயல்கள் மூண்டு நான்கு நாட்களுக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை அரச தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை. வன்செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிசாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். பல சம்பவங்களில் அவர்களே முன்னின்று வன்செயலிலும் ஈடுபட்டனர். அரசாங்க அரசியல்வாதிகள், பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டி விட்டார்கள். வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப் படுத்தியதையும் கண்டோம்” என்று பதிலளித்தார். வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக கடுமையான உத்தரவுகளை ஏன் பிறப்பிக்கவில்லை என்று ஜெயவர்தனவிடம் கேட்டபோது அவர், “மிகவும் கடுமையான வேகத்துடன் காற்று வீசும்போது அதை தடுத்துநிறுத்த முடியாது. வளைந்துகொடுக்க மாத்திரமே எம்மால் முடியும். கடும் வேகக்காற்று எப்போதும் வீசப்போவதில்லை. அது தணிந்தவுடன் வளைந்து கொடுத்த மரங்கள் வழமை நிலைக்கு வரும்” என்று எந்த விதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் அமைதியாக பதிலளித்ததாக பல பிரதர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் செயலாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய அண்மையில் காலமான மிகவும் மூத்த நிருவாகசேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் “Rendering unto Caeser” என்ற தலைப்பிலான தனது சுயசரிதையில் கூறியிருந்தார். ஜெயவர்தனவின் அந்தப் பதில் தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், நீண்டகால அனுபவம்கொண்ட விவேகமிக்க அரசியல் தலைவரிடமிருந்து வந்த பதில் என்று நினைத்துக் கொண்டதாக வீரக்கோன் குறிப்பிட்டிருந்தார். வெலிக்கடை தமிழ்க் கைதிகள் படுகொலை கொழும்பில் வன்செயல்கள் முழு அளவில் பரவத் தொடங்கிய முதல் நாளான 25 ஜூலை 1983 (திங்கட்கிழமை) வெலிக்டைச் சிறைச்சாலையில் முதலில் இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினாலும் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களினாலும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாவது தடவையாக ஜூலை 27 அதே சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து மொத்தமாக 53 தமிழ்க் கைதிகள் பலியாகினர். வன்செயல்கள் தணிந்து முதற்தடவையாக 4 ஆகஸட் 1983 பாராளுமன்றம் கூடியபோது சிறைச்சாலைப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அரசாங்கம் தவறியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன. அதற்கு பதிலளித்த பிரதமர் பிரேமதாச “சிங்களக் கைதி ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று பதிலளித்தார். கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை. மன்னிப்புக் கோரிய சந்திரிகா பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். கறுப்பு ஜூலையின் 21 வது வருட நினைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும் இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். இந்தியத்தலையீடு இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார். நரசிம்மராவ் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலை புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. 1984 அக்டோபர் 31 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா பூராவும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அந்த வன்முறைகளுடன் கறுப்பு ஜூலையை ஜனாதிபதி ஜெயவர்தன ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்தார். தாயாரின் கொலையை அடுத்து பிரதமராக அன்றைய தினமே பதவியேற்ற மகன் ராஜீவ் காந்தி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டனம் செய்து “இந்த பைத்தியக் காரத்தனத்தை உடனடியாக நிறுத்துங்கள்”( Stop this madness ) என்று வன்முறைச் சக்திகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், கறுப்பு ஜூலை வன்முறைச் சக்திகளை ஒருபோதுமே கண்டிக்காத, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்காத ஜெயவர்தன திருமதி காந்தியின் கொலைக்கு பின்னரான தன்னியல்பான வன்செயல்களையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் ஒப்பிடுவதில் எந்த அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை. கறுப்பு ஜூலைக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் (மலையக தமிழர்களைப் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டது) கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத் தீர்விலேயே அக்கறை காட்டின. ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில் ஒரு தடவை கருத்து வெளியிட்டபோது “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர் நடவடிக்கைகளே” (Peace process are war by other means) என்று மிகவும் பொருத்தமான முறையில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம். போர்ப்பிரமை சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது உகந்ததாக இருக்கும். 1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் காலஞ்சென்ற அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர். அந்த வன்செயல் நாட்களில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர்” என்று கூறினார். அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்க சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள். அந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப் போட்டுக்கொண்டு பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க் காயங்களே” (Honourable Wounds of War) என்று பண்டாரநாயக்க பேசினார். தமிழர்கள் ஆயுதத்தை கையிலெடுப்பதற்கு வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்கு பின்னரானவை அண்மைக்கால வரலாறு. இராணுவத்தீர்வு இலங்கையின் சகல ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர, இராணுவத்தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பதிலாக இராணுவத்தீர்வை நோக்கிய செயன் முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சில் போர் தீவிரப்படுத்தப்படுவத உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது. சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்ச போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார். பேரினவாத அரசியலின் தோல்வி. இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்சாக்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப் பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியை பறைசாற்றியது. ஆனால், நாட்டுக்கு அழிவைத் தந்த அதே பாதையிலேயே — பேரினவாதத்தின் மூலமாக மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்று இன்னமும் நம்பவதை அவர்களின் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசு என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணி திரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு காணாத படுமோசமான பெ்ருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்திய முக்கிய படிப்பினையாகும். கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக, சிங்கள தேசியவாத சக்திகள் இனவாதத்தைப் பயன்படுத்தி மீண்டும் தலையெடுப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றன. மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள் தற்போது யாழ்ப்பாணம் செம்மணியில் புதைகுழிகளில் கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கள் இலங்கையின் போர்க்கால மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் மீது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பெருமளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் தென்னிலங்கை சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் அந்த புதைகுழிகள் தொடர்பில் இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதுடன் மீண்டும் இனக் கலவரங்கள் மூளக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இத்தகைய பிரசாரங்களின் முன்னரங்கத்தில் நிற்கிறார்கள். இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஓயாது சூளுரைக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் இனக்கலவரங்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் எச்சரிக்கை செய்யும் இந்த இனவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை. 13 வது திருத்தத்துக்கு எதிர்ப்பு இதே இனவாதிகள் முன்னரும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்றும் சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசினார்கள். இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்கு பின்னரான நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும் எந்த படிப்பினையையும் பெறவில்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினாறாவது வருடமாகும். இந்த கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது? நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம் பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறி்ப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், அவற்றில் சில அமைப்புக்கள் இலங்கையில் சில தமிழ் அரசியல் கட்சிகள் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு ஊக்கம் கொடுக்கின்ற ஒரு நிலைவரத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த புலம்பெயர்ந்த சக்திகள் தமிழ்த் தேசியவாத அரசியல் களம் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல் மயப்படத்தக்கதாக நிதியுதவிகளையும் அள்ளி வீசுகின்றன. நிலைவரத்துக்கு பொருத்தமான முறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளில் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஊக்கம் கொடுக்கும் செயற்பாடுகளுக்கும் வெளியில் இருந்து பணம் வருகிறது. வடக்கு,கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்கு பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது. கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் 38 வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதி செய்துகொண்டன . இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால — ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடு்க்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்கள் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றை வலியுறுத்தினார். ஆனால், எந்த ஆட்சியாளரும் அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க 2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு சில முயற்சிகளை எடுத்து சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் ஒருசில தடவைகள் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்ப டுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ்நகரில் ஒரு தைப்பொங்கல் விழாவில் வைத்து அவர் அறிவித்தார். பொலிஸ் இல்லாத பதின்மூன்று ஆனால், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர் பதின்மூன்றைப் பற்றி பேசுவதை தவிர்த்துக் கொண்டார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பம் ஒன்றில் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விக்கிரமசிங்க யோசனை முன்வைத்தார். அதை தமிழ்க்கட்சிகள் அடியோடு நிராகரித்ததை தொடர்ந்து இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பது ஒரு சிக்கலாகவே இருக்கிறது. கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த வருடம் மக்களின் அமோக ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தேசிய இனப்பிரச்சினையை பொறுத்தவரை, மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்ட முறையில் சிந்தித்துச் செயற்படத் தயாராக இல்லை. தங்களது பழைய கொள்கைகளில் பலவற்றை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவாக மாற்றிவிட்டதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு என்று முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக “இந்திய விஸ்தரிப்புவாதம்” என்பது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்ளைகளில் ஒன்றாக விளங்கியது. ஆனால், இன்று அதிகாரத்துக்கு வந்த பிறகு அதன் தலைவர் திசாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஆனால், இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் இந்திய அரசாங்கம் முன்வைக்கின்ற கோரிக்கைக்கு இணங்குவதற்கு தயாராயில்லை. 13 வது திருத்தம் தொடர்பாக சர்ச்சை மூண்ட ஒரு சந்தர்ப்பத்தில் எதிரணியில் இருந்த திசாநாயக்க, “மாகாணசபைகள் கூட தமிழ் மக்கள் போராட்டத்தின் மூலமாகப் பெற்றவையே. தங்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர் 13 வது திருத்தத்தைப் பற்றி பேசுவதே இல்லை. தென்னிலங்கை தேசாயவாத சக்திகளிடமிருந்து தனிமைப்பட ஜனாதிபதி விரும்பவில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் வரை, மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிய வில்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியும் அதற்கு ஒரு காரணம். 2024 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்திக்கு முன்னென்றும் இல்லாத வகையில் பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை விளங்கிக்கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மறையான அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க முன்வருவதாக இல்லை. சகல இனங்களையும் சமூகங்களையும் சமத்துவமான முறையில் நடத்துவது என்பது மேலோட்டமாக நோக்குகையில் உன்னதமான கோட்பாடாக தெரியும். ஆனால், வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருக்கக்கூடிய பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டால் மாத்திரமே ‘சகலருக்கும் சமத்துவம்’ என்ற கோட்பாட்டை தமிழ் மக்களால் திரும்பிப் பார்க்க முடியும் என்பதை ஜனாதிபதி திசநாயக்க உட்பட அரசாங்க தலைவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம். முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி இலங்கையின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் முன்னைய தவறான போக்குகளில் இருந்து விடுபட்டு, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை மதிக்கும் ஆரோக்கியமான கொள்கையை கடைப்பிடிக்க முன்வராத பட்சத்தில் முறைமை மாற்றம், புதிய அரசியல் கலாசாரம் என்பதெல்லாம் வெற்றுச் சுலோகங்களாகவே இறுதியில் முடியும். கறுப்பு ஜூலைக்கு பிறகு 42 வருடங்கள் கடந்தபோன பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு நழுவிக் கொண்டு போவது இலங்கை அரசியல் சமுதாயம் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைவரமாகும். உண்மையில், கறுப்பு ஜூலையை விடவும் அது பெரிய வெட்கக்கேடு! https://arangamnews.com/?p=12182
  17. காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி sachinthaJuly 24, 2025 காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் அந்தப் பகுதிகளுக்கான உதவிகளை இஸ்ரேல் முற்றாக முடக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புபட்டு காசா மருத்துவமனைகளில் பத்து பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில் இடம்பெற்ற பட்டினிச் சாவு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறைந்தது 80 சிறுவர்கள் உள்ளனர். காசாவில் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாகவும் பட்டினி மற்றும் தாகம் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காசாவில் உள்ள ஐ.நாவின் பலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் அத்னன் அபூ ஹஸ்னா குறிப்பிட்டுள்ளார். காசாவில் ஒரு மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ‘நானும் எனது குழந்தைகளும் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடனேயே படுக்கைக்குச் செல்கிறோம்’ என்று காசாவின் சந்தை விற்பனையாளர் ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘காசாவில் உள்ள அனைவரும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்’ என்றும் அபூ அலா என்ற அந்த விற்பனையாளர் குறிப்பிட்டார். தெற்கு காசா நகரின் நாசர் வைத்தியசாலையைச் சேர்ந்த கனடா நாட்டு மருத்துவரான டைட்ரே நுனான், உணவுப் பற்றாக்குறை மருத்துவ பணியாளர்களையும் பாதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். ‘தமது பணி நேரத்தில் எமது தாதியர்கள் நிற்பதற்குக் கூட பலமில்லாமல் உள்ளனர். மனித உயிர்வாழ்வுக்குத் தேவையான மிக அடிப்படையான தரநிலையைக் கூட இங்கு பூர்த்தி செய்ய முடியவில்லை’ என்று அவர் பி.பி.சி. இற்கு குறிப்பிட்டார். இதனிடையே காசாவில் பட்டினி நிலையை எச்சரித்தும் அதற்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தும் 100இற்கு அதிகமான சர்வதேச தொண்டு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு, சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு மற்றும் ஒக்ஸ்பேம் போன்ற நிறுவனங்களும் கையெழுத்திட்ட அமைப்புகளில் அடங்குகின்றன. காசாவில் உடன் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்து ஐ.நா தலைமையிலான உதவிகள் செல்வதற்கு அனைத்து எல்லைகளும் திறக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காசாவில் ஐ.நா. தலைமையிலான உதவி விநியோகங்களுக்கு மாற்றாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவில் சர்ச்சைக்குரிய முறையில் உதவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் அங்கு நடத்தப்படும் தாக்குதல்களில் உதவிக்குக் காத்திருந்த பலஸ்தீனர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். தெற்கு காசாவில் இருவேறு உதவி விநியோக நிலைகளில் இடம்பெற்ற இஸ்ரேலிய படைகளின்; தாக்குதல்களில் குறைந்தது 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என மருத்துவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பீ, செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் உதவி விநியோக நிலையம் ஒன்றுக்கு அருகே இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 534 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இடிந்த கட்டடங்களில் மீட்கப்பட்ட 13 சடலங்களும் இருப்பதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீட்புப் பணியில் ஈடுபடுவதை இஸ்ரேலியப் படை தடுப்பதன் காரணமாக பலரும் இடிபாடுகளில் சிக்கி உதவிகள் கிடைக்காமல் உயிரிழப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.thinakaran.lk/2025/07/24/world/142011/காசாவில்-மேலும்-10-பேர்-பட்/
  18. மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து ஆறு பெண்களுக்கு படுகாயம்! Vhg ஜூலை 23, 2025 மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கடும் விஷனம் தெரிவிக்கின்றனர். வந்தாறுமூலை பேக் வீதியில் வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததை அடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் அவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை குரங்கு கடிக்கு 6 பேர் உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் பெண்கள் இருந்தபோதும் கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாக்கி வருவதுடன் மாமரம், பலா மரம் போன்ற பயன் தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகிறது. அவ்வாறே அந்த பகுதியில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்து வருவதுடன் வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதை அடுத்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கிய துடன் அச்சத்தில் உள்ளதாக கடும் விசனம் தெரிவித்துள்ளனர். https://www.battinatham.com/2025/07/blog-post_114.html
  19. மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Published By: Rajeeban 24 Jul, 2025 | 10:54 AM மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மிகப்பெருமளவு மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்,காசாவின் போர்க்களத்தில் சிக்குண்டுள்ள 2.1 மில்லியன் மக்கள் குண்டுகள் துப்பாக்கிரவைகளிற்கு அப்பால் மற்றுமொரு கொலைகாரனை எதிர்கொள்கின்றனர் அது பட்டினி என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தற்போது போசாக்கின்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். மருத்துபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் 20 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மிக மோசமாக என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220785
  20. தாய்லாந்து - கம்போடியா எல்லையில் இராணுவ மோதல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றின் மீது மற்றொன்று பழி சுமத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும், இரு தாய்லாந்து படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய டா மோன் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது. கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியதாகவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது. கம்போடியத் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், தாய்லாந்துப் படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறல் இருந்ததாகவும் கம்போடியப் படைகள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார். கம்போடியாவுக்கான தனது தூதரை ஜூலை 23ஆம் திகதி தாய்லாந்து திரும்ப அழைத்த பின்னரும், ஒரு வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய பகுதியில் இரண்டாவது தாய்லாந்து இராணுவ வீரர் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்ததைத் தொடர்ந்து, பேங்காக்கில் உள்ள கம்போடியத் தூதரை வெளியேற்றுவதாக அது கூறிய பின்னரும் இந்த மோதல் ஏற்பட்டது. https://adaderanatamil.lk/news/cmdgx074l01knqp4k5oziu37l
  21. செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா? ஏம்.எஸ்.எம்.ஐயூப் பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன. 1984 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்ததை அடுத்து யாழ். நகரில் நூற்றுக் கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்நாட்களில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுலில் இருந்ததால் இவ்விபரங்கள் வெளியே வரவில்லை. அக்காலத்தில் பத்திரிகைகளும் அரச வானொலியும் மட்டுமே ஊடகங்களாக இருந்தன. தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும், அது தென் பகுதியை மையமாகக்கொண்டு இயங்கியது. இணையத்தளங்கள் இருக்கவில்லை. ஆயினும், சில தமிழ் பத்திரிகைகள் மறைமுகமாக அக்கொலைகளை அம்பலப்படுத்தின. ஒரு தமிழ் பத்திரிகை கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ விபரம் என ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில், கொல்லப்பட்டவர்களின் வயது விபரமும் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் சிறுவர்களும் கொல்லப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. பயங்கரவாதிகள் யார் என்பதும் அம்பலமாகியது. இப்போது செம்மணி மயானத்தில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளிலும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இதுவும் சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு மறுக்க முடியாத சான்றாகும். செம்மணியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் யாருடையவை என்பதைப் பற்றி தெற்கில் சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு இருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் கடற்படை அதிகாரியும் அமைச்சருமான சரத் வீரசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் விசித்திரமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். செம்மணியில் கண்டெடுக்கப்படும் எலும்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று அவர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதேவேளை, அவை இராணுவத்தினருடையதாக இருக்கலாம் என்றும் மற்றொரு கருத்தும் வெளியிடப்படுகிறது.கடந்த மாத இறுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, செம்மணிக்கும் சென்று அங்கு அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். அவரை அங்கு செல்ல அனுமதித்ததையிட்டு விமல் வீரவன்ச அரசாங்கத்தைக் குறை கூறியிருந்தார். இது அவர்களது வாதத்துக்கே முரணானதாகும். இந்த எலும்புகள் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை என்றால், ஐ.நா. உயர்ஸ்தானிகர் அங்கு செல்வதை அவர்கள் ஏன் குறை கூற வேண்டும்? செம்மணி 1990களில் இருந்தே அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது, பொது மக்கள் அதனை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதைப் பற்றி கதை சொல்லும் இடமாக இருக்கிறது. அக் காலத்தில் அங்கு இராணுவத்தின் சோதனைச் சாவடியொன்று இருந்தது. அந்த இடத்தில் தான் கிருசாந்தி குமாரசுவாமி என்ற பாடசாலை மாணவி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஒருவர் கடத்திக் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, தான் இந்த இடத்தில் சுமார் 600 பொது மக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்று சோமரத்ன ராஜபக்‌ஷ என்ற இராணுவ அதிகாரி கூறியிருந்தார். ஆயினும், அதன் பின்னர் அதைப் பற்றி பெரிதாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.1995இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, யாழ். குடாநாடு ஏறத்தாழ முழுவதுமாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலையில், குடாநாட்டை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக அவ்வாண்டு இராணுவத்தினர் ‘ரிவிரெச’ என்ற படை நடவடிக்கையை மேற்கொண்டனர். அக்காலத்தில் குடாநாட்டைச் சேர்ந்த 500க்கும் 600க்கும் இடைப்பட்டோர் காணாமற் போனதாக சிறிது காலத்துக்குப் பின்னர் கூறப்பட்டது. அத்தகவலும் சோமரத்ன ராஜபக்‌ஷவின் சாட்சியமும் பொருத்தமாக இருக்கிறது. இலங்கையில் செம்மணியில் மட்டும் கூட்டுக் கொலைகள் இடம்பெறவில்லை. அதேவேளை, அரச படைகள் மட்டும் தான் கூட்டுக் கொலைகளைச் செய்தார்கள் என்று கூறவும் முடியாது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப் படை, இந்தியப் படைகள், புலிகள் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படை ஆகிய அனைவரும் கூட்டுக் கொலைகளுக்காகக் கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அச்சம்பவங்களில் பலவற்றில் தடயங்கள் எதுவும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போதே கூட்டுக் கொலைகள் முதன் முதலில் இடம்பெற்றன. தெனியாய, கேகாலை போன்ற பல பிரதேசங்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றன. அக்காலத்தில் மனித உரிமை அமைப்புக்களில் செயற்பாடுகள் மிகக் குறைந்ததாகவே இருந்தமையினால் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியன அறிக்கையிடப்படவில்லை. ஆங்காங்கே ‘டயர்’ போட்டு சடலங்களை எரித்த கதைகள் மற்றும் ஆறுகளில் சடலங்கள் மிதந்த கதைகள் மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தன. பிரிவினைவாத போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது கூட்டுக் கொலை 1984 செப்டெம்பர் 10ஆம் திகதி வவுனியா பிரதேசத்தில் பூவரசங்குளத்திலேயே இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்று ரம்பேவ என்னுமிடத்தில் வழிமறிக்கப்பட்டு பூவரசங்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த 47 பயணிகளில் 15 பேர் அவ்விடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இராணுவத்தினரையே அப்பத்திரிகைகள் மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தன. இதனையடுத்து, தமிழ் ஆயுத குழுக்களும் அதே ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முதல் சாதாரண மக்களைத் தாக்கின. 1984ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘டொலர் பார்ம்’ மற்றும் ‘கென்ட் பார்ம்’ என்ற இரண்டு பெரும்பான்மையின குடியேற்றங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 62 சாதாரண மக்கள் உள்ளிட்ட மொத்தம் 82 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அடுத்த நாள் அதாவது டிசெம்பர் 1ஆம் திகதி அதே மாவட்டத்தில் கொக்குளாய் மற்றும் நாயாறு ஆகிய இரண்டு மீனவ கிராமங்கள் தாக்கப்பட்டு 11 பெரும்பான்மை இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். புலிகளே இந்தத் தாக்குதலையும் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, அதே மாதம் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் பல கிராமங்களைத் தாக்கி சுமார் 100 தமிழர்கள் வரை கொன்றதாகக் கூறப்பட்டது. இவ்வாறு அடுத்து வந்த வருடங்களில் இரு சாராரும் வடக்கு கிழக்கில் ஏட்டிக்குப்போட்டியாக கிராமங்களைத் தாக்கியுள்ளனர். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு வந்த இந்தியப் படையினர், ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், பின்னர் அவர்களும் பல இடங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டனர். 1990ஆம் ஆண்டு சாதாரண மக்கள் கூடுதலாகக் கொல்லப்பட்ட வருடமாகும். கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாசலில் மற்றும் ஒண்டாச்சிமடத்தில் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். புலிகளே அத்தாக்குதல்களை நடத்தினர். 1980களில் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, 60,000க்கும் அதிகமானோர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் சூரியகந்த, கொழும்பு மாவட்டத்தில் ஹோகந்தர, கம்பஹ மாவட்டத்தில் வனவாசல போன்ற இடங்களில் புதைகுழிகளில் கூட்டாகப் பலர் புதைக்கப்பட்டுள்ளதாகப் பின்னர் தெரிய வந்தது. இவ்வாறு பல்வேறு தரப்பினர் பல்வேறு காலங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்ட போதிலும், சகல கொலைகளைப் பற்றியும் கூட்டுப் புதைகுழிகள் போன்ற தடையங்கள் காணக்கூடியதாக இல்லை. அதேபோல, பதவிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அவற்றைப் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை.சர்வதேச நெருக்குதல் காரணமாகப் பல அரசாங்கங்கள் காணாமற்போனோர்களைப் பற்றி ஆணைக்குழுக்களை நியமித்தன. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலங்களில் தெற்கில் 60,000க்கு அதிகமானோர் காணாமற்போனதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கென பிரேமதாச ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இதனையடுத்து, வந்த ஜனாதிபதி சந்திரிகாவும் அதே விடயத்துக்காக மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றொன்றை நியமித்தார். குறித்த சகல ஆணைக்குழுக்களும் ஊரையும் உலகையும் ஏமாற்றம் உத்திகள் என்பது இப்போது நிரூபனமாகி விட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மனித உரிமை விடயத்தில் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்தார். அரசாங்கத்தின் போர் வீரர் தின வைபவங்களில் கலந்துகொள்ள அவர் ஆரம்பத்தில் விரும்பவில்லை. பின்னர் அதில் கலந்துகொண்டாலும், முன்னைய ஜனாதிபதிகளைப் போலல்லாது, அவர் நல்லிணக்கத்தை வலியுறுத்தியே அங்கு உரையாற்றினார். ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகர் செம்மணிக்குச் செல்ல அவரது அரசாங்கம் எவ்வித தடையும் விதிக்கவில்லை. ஆயினும், மனித உரிமை விடயத்தில் நிர்ணயகரமான முறையில் அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதைக் காலம் தான் கூறும். ஏனெனில், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பெரும்பான்மை சமூகம் அடுத்த தேர்தலில் அவரை தூக்கி எறிந்துவிடும். அவர் அந்த அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராவாரா என்பது காலம் போகப் போகத் தான் தெரிய வரும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செம்மணி-விடயத்தில்-அனுர-உறுதியாக-இருப்பாரா/91-361619
  22. கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து! கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது - இது உண்மைஇ நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும். இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது. இந்தப் நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம் அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம். https://newuthayan.com/article/கறுப்பு_ஜூலை_இலங்கையின்_வரலாற்றில்_ஒரு_சோகமான_பகுதி__-_கனடா_பிரதமர்_கருத்து!
  23. யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா! adminJuly 24, 2025 இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின விழா யாழ் கோட்டையில் தொல்லியல் திணைக்கள யாழ் கோட்டை பொறுப்பு அதிகாரி கபிலன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக யாழ் கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான மார்க்கண்டு அருட்சந்திரன் ,விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளரும் அஜந்தா சுப்பிரமணியம் , மரபுரிமை தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் ஆகியோருக்கு யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பு வாய்ந்த அதிகாரி கவிதா ,யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் சர்வேஸ்வரா ஐயர் பத்மநாதன் ,யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் சாந்தினி அருளானந்தன் , தொல்லியல் திணைக்கள உதவி பணிப்பாளர் பந்துலஜீவ, மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் தர்மகீர்த்தி , வடமாகாண சுற்றுலா பணியக பணிப்பாளர் யசோதரா ,யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2025/218295/ தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றது! adminJuly 24, 2025 தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது. என யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ் கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (23.07.25) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது வரலாற்று தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும். யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை . மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது. ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளது. காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டுவருகிறது. ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில்கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள். மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது. மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் கிடைத்து வருகிறது. எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218299/
  24. ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கையர் தினம் – 2026ல் மாகாணசபைத் தேர்தல்! adminJuly 24, 2025 இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும் கூறியுள்ளார். இதேவேளை தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புவதாகவும், தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு தமது அரசுக்கு உள்ள நிலையில் அதனை நோக்கி பயணிப்பதாகவும் வலியுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நல்லிணக்கம் நோக்கிய விரிவான பயணம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/218299/
  25. புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேசச் சூழ்ச்சி இடம்பெறுகின்றது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் துல்லியமான தகவல்களைப் புலனாய்வாளர்கள் வழங்கியிருந்தனர். அப்படியான சேவைகளை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டால். இதன்பின்னர் ஆயிரம் குண்டுகள் வெடித்தாலும் தகவல்களை வெளியிட புலனாய்வாளர்கள் முன்வரமாட்டார்கள். பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலந்த ஜயவர்த்தனவுக்காக அல்ல. உண்மை மற்றும் நீதிக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன். எமது இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதி மற்றும் உண்மைக்காக முன்னிலையாகும் பொறுப்பு என்பன எம்முன் உள்ளன. அதற்காக நாம் முன்னிலையாவோம். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அப்போது என்னை 'இரத்தப் பிசாசு' என்று முத்திரை குத்தினார்கள். அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தான் நாடு சரியான திசைக்கு வரும்வரை போராடினோம். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினர் உள்ளனர் என்பது போன்று காண்பிக்க முனைகின்றனர். இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என புலிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன- என்றார். https://newuthayan.com/article/புலிகளின்_விருப்பங்களை_நிறைவேற்றுவதற்குச்_சதி;_கதறுகின்றார்_கம்மன்பில

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.