Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குமாரசாமி ஐயா 🎉🎂🎊
  2. இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி! Vhg ஆகஸ்ட் 13, 2025 இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து எதிர்காலத்தில் பயிர்செய்கை காலம் நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தைத் தொடங்க, ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகச் செய்ய வேண்டும். மேலும் இலங்கை மத்திய வங்கியில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை வைப்பு செய்வது கட்டாயமாகும். இந்தத் தகவலை ஆயுர்வேதத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் டொக்டர் தம்மிக்க அபேகுணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பயிர்ச் செய்கைக்காக மீரிகம பகுதியில் 64 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்தப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தைச் சுற்றி வலுவான பாதுகாப்பு வேலி அமைப்பதோடு மட்டுமல்லாமல், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை காவல்துறையிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதும் கட்டாயமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் வளர்க்கப்படும் கஞ்சா இலங்கையில் பயன்படுத்தப்படாமல் முழுவதுமாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அதோடு கஞ்சா செடியின் எந்தப் பகுதியையும் (விதைகள், இலைகள், வேர்கள்) வெளிப்புறச் சூழலுக்கு வெளியிடாமல் அழிக்க சட்டங்களும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் ஆயுர்வேதத் துறை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை மேற்பார்வையிட இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2025/08/blog-post_324.html
  3. தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.! Vhg ஆகஸ்ட் 14, 2025 மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியிருந்தார். எனினும், அந்த காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென்றும், விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முழுமையாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கோரியுள்ளார். இதன்படி, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/08/blog-post_458.html
  4. விமர்சனம் : கூலி! 14 Aug 2025, 5:18 PM எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘கூலி’? ’ஆயிரம் கோடி வசூலை நிச்சயம் தமிழ் திரையுலகில் இருந்து நிகழ்த்தும்’ என்ற எதிர்பார்ப்பைப் பெருக்கியது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவான ‘கூலி’. அனிருத்தின் இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு மற்றும் சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், நாகார்ஜுனா, அமீர்கான், ஷ்ருதிஹாசனின் இருப்பு எனப் பல அம்சங்கள் அதற்குத் துணை நின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘கூலி’, இன்று (ஆகஸ்ட் 14) தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ‘கூலி’ எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவானது? பழிக்குப் பழி! விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடத்தல் வேலைகளைச் செய்து வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அவரிடத்தில் வேலை செய்யும் கூலியாட்களில் காவல் துறையைச் சேர்ந்த உளவாளிகள் இருப்பதாகத் தகவல் தெரியும்போதெல்லாம், அவர்களைக் கண்டறிந்து கொடூரமாகக் கொல்கிறார் அடியாள் தயாள் (சௌஃபின் ஷாஹிர்). ஒருநாள் தங்கள் தொழிலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாதவரான ராஜசேகர் (சத்யராஜ்) என்பவரை நாடுகிறது சைமன் கும்பல். அதனைச் செய்யாவிட்டால், அவரது மூன்று மகள்களையும் கொலை செய்வதாக மிரட்டுகிறது. அதனால், வேறு வழியில்லாமல் அவர்கள் செய்கிற குற்றங்களுக்குத் துணையாக இருக்கிறார் ராஜசேகர். இந்த நிலையில், திடீரென்று ராஜசேகர் மரணமடைகிறார். இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் அவரது உயிர் நண்பரான தேவாவுக்குத் தெரிய வருகிறது. ராஜசேகரின் இறுதிச்சடங்குகளில் தேவா கலந்துகொள்வதை, அவரது மூத்த மகள் ப்ரீத்தி ஏற்கவில்லை. ‘நீங்க ஏன் இங்க வந்தீங்க’ என்று அவரை விரட்டுகிறார். ஆனால், அதே தேவா ப்ரீத்திக்கு உதவிக்கரம் நீட்டுகிற சூழல் உருவாகிறது. ராஜசேகர் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மையைக் கண்டறிகிறார் தேவா. அவர் சைமனிடத்தில் வேலை செய்தார் என்பதை அறிந்து, ப்ரீத்தி உடன் துறைமுகத்திற்குச் செல்கிறார். அங்கு தயாளின் இன்னொரு முகம் அவருக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன ஆனது? நண்பனைக் கொன்றவரைத் தேவா கண்டறிந்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கூலி’யின் மீதி. ’நண்பனைக் கொன்றவரைப் பழி வாங்காமல் விட மாட்டேன்’ என்று எதிரியின் கோட்டைக்குள் நுழைகிற ஒரு ஐம்பது ப்ளஸ்களில் இருக்கிற ஒரு ‘முன்னாள்’ கூலியின் ‘ஆக்‌ஷன் எபிசோடு’ தான் இப்படத்தின் ஆதார மையம். பெரிதாக பஞ்ச் டயலாக்குகள், ஹீரோவுக்கான காதல் காட்சிகள், காமெடி ட்ரூப் கலாட்டாக்கள் இல்லாமல், சீரியசாக கதை சொல்கிற பாணியில் இப்படத்தின் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆக்‌ஷன் படம் எனில் சஸ்பென்ஸ் அல்லது சர்ப்ரைஸ் ஆகச் சில விஷயங்கள் சொல்லப்படும். இதிலும் அப்படியொரு விஷயம் இருக்கிறது. அது ‘ஊமை விழிகள்’, ‘எல்லாமே என் காதலி’, ‘காக்கிசட்டை’ எனப் பல படங்களில் நாம் பார்த்ததுதான்.. படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவும் அதுவே காரணமாக உள்ளது. ரஜினியின் ‘கெட்டப்’! வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் காட்சியாக்கம் ‘புதிதாக ஏதோ ஒன்றை’க் கண்ட உணர்வை ஏற்படுத்தும். விஎஃப்எக்ஸும் டிஐயும் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். இதிலும் அப்படியே. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சதிஸ்குமார், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அதனைச் சாதித்திருக்கிறது. அனிருத்தின் இசையில் ‘சிக்குடு’, ‘மோனிகா’ பாடல்கள் எளிதாக ஈர்க்கின்றன. பின்னணி இசை சில காட்சிகளில் பிரமாண்டத்தை உணர வைக்கிறது; ஆனாலும் பல இடங்களில் இரைச்சல் அதிகம். இப்படத்தின் எழுத்தாக்கத்தைச் சந்துரு அன்பழகனோடு இணைந்து கையாண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்திலும் கிளாசிக் திரையிசைப் பாடல்களைப் புகுத்துகிற வேலையைச் செய்திருக்கிறார் இயக்குனர். ‘வா வா பக்கம் வா’ என ‘தங்கமகன்’ படத்தின் பாடல் ஒலிக்கிற அந்த இடைவேளைக்கு முன்பான காட்சி மண்டைக்குள் ‘ஜிவ்வ்..’வென்ற உணர்வை ஏற்படுத்துகிறது. போலவே, இடைவேளை ‘ப்ளாக்’கில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு அசத்தல். அதேநேரத்தில், ‘இதேமாதிரி படம் முழுக்க விஷயங்களைக் கொட்டினா இன்னாவாம்’ என்று ரசிகர்கள் புலம்புகிற வகையில் இதர காட்சிகள் இருக்கின்றன. அந்த காட்சிகளைக் காண்கிறபோது வேறு கதாசிரியர்கள், திரைக்கதையாசிரியர்களின் பங்களிப்பைப் பெறலாமே என்ற எண்ணம் மனதில் விஸ்வரூபம் எடுக்கிறது. நட்சத்திர அந்தஸ்து உள்ள நாயகர்களைத் திரையில் காட்டுகிறபோது, முந்தைய படங்களில் அவர்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்த விஷயங்களையும் தொட்டுச் சென்றாக வேண்டும். அதோடு தனது கதை சொல்லலையும் இணைத்து சமநிலையை உருவாக்குவதில் தடுமாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருக்கிற ஒரு நாயகனாக ரஜினியின் ஸ்டைல், ஆக்‌ஷன் பில்டப் எல்லாம் வழக்கமானதாக அமைந்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி, மிகச்சில இடங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைக்கிறது. ஒரு ‘பவர்ஹவுஸ்’ ஆக படத்தைத் தாங்கி நிற்கிறது. இந்த படத்தில் வில்லன்கள் என்று சிலர் வந்து போகின்றனர். அவர்களில் இயக்குனர் முதன்மையாக முன்னிறுத்துவது ‘கிங்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நாகார்ஜுனா. ஆனால், அவர் சண்டையிடும்போது ‘வில்லனாக’ நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. அது இப்படத்தின் தலையாய ‘மைனஸ்’களில் ஒன்று. தனது இருப்பால் அந்தக் குறையைச் சமன் செய்திருக்கிறார் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர். ‘தயாள்’ ஆக வந்து மிரட்டியிருக்கிறார். ரக்‌ஷிதா ராம், கண்ணா ரவி வருகிற காட்சிகள் புதிதாக இல்லை; அதேநேரத்தில், அவை சில ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. சத்யராஜுக்கு இதில் பெரிதாகக் காட்சிகள் இல்லை. அதேநேரத்தில், கதையின் அச்சாணிப் பாத்திரமாக வந்து போயிருக்கிறார். ஷ்ருதிஹாசன் இப்படத்தில் ஆங்காங்கே வருகிறார். அவரது சோகமே உருவான பாவனைகள் நம்மை அயர்ச்சியுறச் செய்கின்றன. உபேந்திரா, அமீர்கான் இருவரும் ‘கேமியோ’வாக வந்து ‘கைத்தட்டல்’களை அள்ள முயற்சித்திருக்கின்றனர். இரண்டாமவர் அதனை எளிதாகச் சாதித்திருக்கிறார். இதுபோக மகேஷ் மஞ்ச்ரேகர், சார்லி, பாபுராஜ், காளி வெங்கட், தமிழ், ரிஷிகாந்த், திலீபன், ரொபா மோனிகா, மோனிஷா ப்ளெஸ்ஸி, மாறன் எனச் சிலர் இப்படத்தில் உண்டு. அவர்களது காட்சிகளில் பெரிதாக அதிருப்தி இல்லை. அதேநேரத்தில், அவர்களில் பலருக்குத் தனித்துவமான பாத்திர வார்ப்பு அமையாதது ‘மைனஸ்’ தான். ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் அதிகமாக இடம்பெறாதது, ரஜினி – சத்யராஜ் நட்பு பிணைப்பைத் திறம்படக் காட்டாதது, இதற்கு முன்பான ‘லோ.க.’ படங்களில் உள்ள சில விஷயங்கள் இதிலும் ‘ரிப்பீட்’ ஆகியிருப்பது என ‘கூலி’யில் சில குறைகளைப் பட்டியலிட முடியும். அவற்றைக் கடந்து ‘ஓகே’ எனும்படியான திரையனுபவத்தைத் தருகிறது இப்படம். ’ஆஹா..’, ‘ஓஹோ..’ எனப் புகழும்படியாக ‘கூலி’யை உருவாக்கியிருந்தால், ரஜினியின் ஐம்பதாண்டு காலத் திரைப் பங்களிப்பை இன்னும் ‘அபாரமாக’ கொண்டாடலாம்.. அந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே சொன்னது போல, ‘ஆயிரம் கோடி வசூல்’ இலக்கை எட்டுகிற ரேஸில் ‘கூலி’ அடைகிற இடம் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஒருவேளை அந்த இலக்கு இல்லாமல் களமிறங்கியிருந்தால் கூட வெற்றி எளிதாக வாய்த்திருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம் தருகிற திரையனுபவம்..! https://minnambalam.com/rajinikanth-coolie-movie-review/
  5. ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது. இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத் தொடர்ந்து பேணி வருகிறது. கடந்த 16 ஆண்டு காலத்தில் தமிழ் அரசியலில் ஏற்பட்ட தேக்கங்களுக்கும் தோல்விகளுக்கும் அதுதான் பிரதான காரணம். கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு அவர்கள் வேறு காரணங்களைக் கூறக்கூடும். உதாரணமாக முன்னணி தான் ஒரு கடிதத்தைத் தயாரித்து விட்டு அதில் கையெழுத்து போடுமாறு தங்களைக் கேட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச் சாட்டு, கடிதத்தின் வரைவை முன்னணி கட்சித் தலைமைக்கு அனுப்பியதோடு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அனுப்பியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்கு மாறாக முடிவு எடுக்கத் தூண்டும் உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்ற சந்தேகம். மூன்றாவது குற்றச் சாட்டு, கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்திடுமா இல்லையா என்ற விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் முன்னணியிடம் இருந்தது என்ற சந்தேகம். அந்த சந்தேகத்தை பலப்படுத்தும் விதத்தில் முன்னணியின் மேடைப் பேச்சுகளும் சமூகவலைத்தள உரையாடல்களும் காணப்பட்டமை. அதாவது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்களுடைய கோரிக்கைகளுக்கு எதிராகத் துரோகம் செய்யும் ஒரு கட்சியாகச் சித்தரிக்கும் விதத்தில் விமர்சனங்களை முன்வைத்தமை என்ற குற்றச்சாட்டு. இக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு உண்மை உண்டு. ஆனாலும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு பிரதான காரணம் கடந்த 16 ஆண்டுகளாக இருந்துவரும் அதே காரணம்தான். அதாவது தானே பெரிய கட்சி, தானே முதன்மைக் கட்சி என்ற நினைப்பு. அவ்வாறு நினைக்கத்தக்க பெரும்பான்மை அவர்களிடம் உண்டு என்பது உண்மை. ஆனால் தமிழ்த் தேசிய அரசியலானது கட்சி போட்டிகளுக்கூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய வழமையான,தொழில்சார் மிதவாத அரசியல் அல்ல. மாறாக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அரசியல். இதில் வெளி உலகத்தை அணுகும் பொழுது தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம். இந்த விடயத்தில் முதன்மைக் கட்சியாகவும் பிரதான கட்சியாகவும் காணப்படும் தமிழரசுக் கட்சிக்குத்தான் அந்தப் பொறுப்பு உண்டு. அவர்கள் தான் அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மூத்த அண்ணனை போல ஏனைய கட்சிகளுக்கு வழிகாட்ட வேண்டும். ஐநாவைக் கையாளும் விடயத்தில் தாங்களே முன்கை எடுத்து விவகாரங்களைக் கையாள வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சிவில் சமூகங்களும் அந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. அதைவிட முக்கியமாக 2015 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலும் தமிழரசுக் கட்சி அந்த விடயத்தைப் பிழையாகக் கையாண்டது என்ற அனுபவம் உண்டு. ஐநாவின் 30/1 தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டு தமிழரசுக் கட்சி, நிலைமாறு கால நீதியின் பங்காளியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டது. ஆனால் அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் 2021இல் சுமந்திரன் கூறினார். எனவே தமிழரசுக் கட்சி ஐநாவைக் கையாள்வதில் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழரசுக் கட்சி தவறு விடுகிறது என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உருப்படியாக எதையும் செய்திருக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதும்போது அந்தக் கடிதத்தின் பிரதான கோரிக்கைகளை முன்மொழிந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது முதலாவது பிரதான கோரிக்கை.இரண்டாவது, உருவாக்கப்படும் விசாரணை பொறிமுறையானது காலவரையறைக்குட்பட்டு இயங்க வேண்டும் என்பது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளிலும் இந்தக் கோரிக்கைகளை நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த அளவுக்கு உழைத்திருக்கிறது? மனித உரிமைகள் பேரவைக்குள் இருந்து இலங்கை இனப்பிரச்சினையை ஐநா பொதுச் செயலர் மீண்டும் பொதுச் சபைக்கு பாரப்படுத்தி, அங்கிருந்து அதை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகும். ஒரு கடிதம் எழுதினால் மட்டும் அதை ஐ நா செய்து விடாது. மாறாக ஐநாவில் தீர்மானங்களை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும்.அதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? இதுதான் பிரச்சினை. தமிழரசுக் கட்சி போகிற வழி பிழையானது என்றால் சரியான வழியைக் காட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அந்த வழியில் தன்னையும் கட்டியெழுப்பி தமிழ் மக்களையும் கட்டியெழுப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை எனவே ஐநாவைக் கையாளும் விடயத்தில் இரண்டு பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெவ்வேறு விகிதத்தில் பிழை விட்டிருக்கின்றன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பீட்டளவில் சரியான விளக்கங்களோடும் சரியான கொள்கை முடிவுகளோடும் காணப்படுகின்றது.ஆனால் அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களிடம் உழைப்பு இல்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பும் விடயம் விவகாரமாக மாறியது.இந்த விடயத்தில் சிவில் சமூகங்களின் பங்களிப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். சிவில் சமூகங்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியிடம் ஒருவித ஒவ்வாமை உண்டு. இது சம்பந்தரின் காலத்தில் இருந்தே தொடங்குகின்றது. அதற்கு ஆழமான ஒரு காரணம் உண்டு. 2010இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் பெருமளவுக்கு முன்னணிக்கு ஆதரவாகக் காணப்பட்டன.எனவே அதன் தர்க்கபூர்வ விளைவாக அவை சம்பந்தருக்கு எதிராகவும் காணப்பட்டன. இந்தப் போக்கை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்தும் நோக்கிலானவை என்றுதான் கூறலாம். மறைந்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை இணைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் சிவில் சமூக அமையம்,2015ல் இருந்து செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம். இதனால் சிவில் சமூகங்கள் தொடர்பில் சம்பந்தரிடம் ஒருவித ஒவ்வாமை உணர்வு இருந்தது.2013ஆம் ஆண்டு முதன்முதலாக கூட்டமைப்பையும் முன்னணியையும் ஒரே அரங்கினுள் கொண்டு வந்த, மன்னாரில் இடம் பெற்ற சந்திப்பின்போது அதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் மன்னார் ஆயரை நோக்கி சம்பந்தர் என்ன சொன்னார்? “பிஷப் நீங்கள் சொல்லுங்கோ. ஆனால் முடிவெடுக்கப் போறது நாங்கள்தான்” என்று சொன்னார். இந்த நிலைப்பாடுதான் இன்றுவரை தமிழரசுக் கட்சியிடம் உள்ளது. குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் பொது வேட்பாளரின் விடையத்திலும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியானது பொது வேட்பாளரை ஒரு பொது எதிரிபோல பார்த்தது.பொது வேட்பாளரை முன்னிறுத்திய சிவில் சமூகங்களை ஒவ்வாமை உணர்வோடு மட்டுமல்ல பகை உணர்வோடு அணுகியது.சுமந்திரன் பகிரங்கமாக மேடைகளில் சிவில் சமூகத்தைத் தாக்கிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மேடை ஏறி ஆதரித்த சஜித் பிரேமதாச ஐநா மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு எதிரான நிலைப்பாட்டோடு காணப்பட்டார். சிவில் சமூகங்கள் தங்களுடைய பெரிய அண்ணன் மனோநிலையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பலவீனமடையும் பொழுது சிவில் சமூகங்கள் முன்னணியைப் பலப்படுத்துகின்றன என்றும் தமிழரசுக் கட்சி கருதுகின்றது. 2019இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது.ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கனவு அப்பொழுதுதான் செய்முறைக்கு வந்தது.ஆனால் அந்தச் சுயாதீனக் குழுவை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை மட்டுமல்ல, யாழ்ப்பாணம் சின்மயா மிஷினில் நடந்த ஒரு சந்திப்பின்போது சிவிகே சிவஞானம்,சிவில் சமூகப் பிரதிநிதிகளைப் பகை உணர்வோடு அணுகினார். எனவே தமிழரசுக் கட்சி கடந்த 16 ஆண்டுகளிலும் சிவில் சமூகங்களை சந்தேகத்தோடு பார்க்கின்றது.அவை தன்னுடைய முதன்மையைக் கேள்விக்குள்ளாக்கி, முன்னணியைத் தமக்கு எதிராகப் பலப்படுத்துகின்றன என்ற பயம் அவர்களுக்கு உண்டு.அதே பயந்தான் கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடித விடயத்திலும் அவர்கள் எடுத்த முடிவின் மீது அதிகம் செல்வாக்கு செலுத்தியதா? ஒரு பெரிய கட்சி,மூத்த கட்சி சிவில் சமூகங்கள் தொடர்பாக அவ்வாறான ஒவ்வாமை உணர்வோடும் விரோத உணர்வோடும் காணப்படுவது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிந்த போக்கைக் காட்டுகின்றது.பொதுவாக சிவில் சமூகங்கள் ஏன் அரசியலில் நேரடியாகத் தலையிடும் நிலைமை ஏற்படுகின்றது? அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளத் தவறும் போதுதான், சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்ய வேண்டி வருகிறது. ஆனால் அந்தத் தார்மீகத் தலையீட்டை தமிழரசுக் கட்சி ஒரு தொந்தரவாக,ஒரு வில்லங்கமாக ஏரிச்சலோடு பார்க்கின்றதா? https://www.nillanthan.com/7636/
  6. வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு August 14, 2025 11:35 am வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வரும் செப்ரெம்பர் முற்பகுதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திருத்தப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக அமைச்சர் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். ‘ கடந்த 8வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமலுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப் பணிகளைச் செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்த வியாபாரச் சந்தையில் உள்ள 35வியாபாரிகளுக்கு மத்தியநிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://oruvan.com/vavuniya-economic-center-to-open-in-early-september/
  7. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள மயிலிட்டி வரசித்தி விநாயகருக்கு 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்தழிக்கப்பட்டு தற்போதுவரை விடுவிக்கப்படாதுள்ள மயிலிட்டி அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு, இராணுவ முடகம்பி வேலிக்கு முன்பாக 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் பொங்கி படையலிடப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மீது 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டி கிராமம் உள்ளிட்ட பல கிராம மக்கள் இரவோடு இரவாக தமது பூர்வீக இடத்தை விட்டு அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டனர். இதன்போது வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் என கோடான கோடி ரூபா பெறுமதியாக சொத்துகளை விட்டது விட்டவாறே மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். அவ்வாறே பருத்தித்துறை-பொன்னாலை பிரதான வீதியோரமாக ஐந்து தளங்களைக் கொண்ட இராசகோபுரத்துடன் அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலிட்டி அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயமும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படாதுள்ளது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காலத்தில் குறித்த ஆலயம் முற்றிலுமாக இடித்தழிக்கப்பட்டு அந்த பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய தீர்த்தக் கிணறு மட்டும் சிதைவுகளுடன் எஞ்சியுள்ள நிலையில் இராணுவத்தின் முள்வேலிக்கு முன்பாக அண்மையில் ஆலயத்தின் பழைய தோற்றத்துடன் கூடிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக பிள்ளையார் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த ஆலயத்தின் பூசகராகச் செயற்பட்டு வந்தவரை தேடிப்பிடித்து அழைத்துவந்து கடந்த செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. தங்கள் இஷ்ட தெய்வமான வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடம் மிகவிரைவில் விடுவிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://newuthayan.com/article/இராணுவ_ஆக்கிரமிப்பிலுள்ள_மயிலிட்டி_வரசித்தி_விநாயகருக்கு_35_ஆண்டுகளின்_பின்னர்_பொங்கல்#google_vignette
  8. மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களால் வடக்கு மீனவர்கள் அந்தரிப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சரமாரிக் குற்றச்சாட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அதீத ஆக்கிரமிப்புக் காரணமாகவும், நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய றோலர்களாலும் தாம் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக வடமாகாண மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தெல்லிப்பழை பிரதேசசெயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, மயிலிட்டித் துறைமுகம் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தம்மால் பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- மயிலிட்டித் துறைமுகத்தை சீரமைத்துத்தரும் போது, அதன்மூலம் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். வடக்கு மீனவர்களின் பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அந்தத் துறைமுகத்தின் முழுப் பயனையும் தென்னிலங்கை மீனவர்கள்தான் அனுபவிக்கின்றனர். வடக்கு மீனவர்களின் படகுகள் கட்டுவதற்குப் போதிய இடமில்லை. மிகச்சிறிய இடமொன்றே வழங்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களின்போது அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட றோலர் படகுகளும் அங்கே கட்டப்பட்டுள்ளன. அவையும் எமது சிறிய படகுகளுடன் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன - என்றனர். இதையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முடிந்ததும், மயிலிட்டித்துறை முகத்துக்குக் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள களநிலைமைகளைப் பார்வையிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். இதற்கு அமைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு வின்தலைவருமான ஸ்ரீபவானந்தராஜா, வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன். தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் திருமதி சி.சுதீஸ்னர், வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் செயலாளர் சி.சிவானந்தன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தெல்லிப்பழைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடியாகக் களவிஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர். https://newuthayan.com/article/மயிலிட்டித்_துறைமுகத்தில்_தென்னிலங்கை_மீனவர்களால்_வடக்கு_மீனவர்கள்_அந்தரிப்பு
  9. பிள்ளையானின் துப்பாக்கி நண்பர் காத்தான்குடியில் கைது! adminAugust 14, 2025 பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று புதன்கிழமை (13.08.25) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் ஏழாம் திகதி கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து nசன்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்டவர் கடந்த 2024 ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து மூன்று நாள் காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219270/
  10. எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன். பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப் பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள். தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள். பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர். 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம். 1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது. 2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. 3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு. மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார். இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம் தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார். இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது. தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார் . வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் . பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு. https://www.battinatham.com/2025/08/blog-post_76.html
  11. காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு August 13, 2025 9:59 am தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணை தகவல்களின் அடிப்படையில், குறித்த பெண் இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்ததும் தெரியவந்தது. அப்போது அவர், ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்தமையும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி இந்தியா வர விதுர்ஷியாவுக்கு விசா கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், தான் காதலித்த வாலிபரை கரம்பிடிக்க தமிழகம் வருவது என அந்தப் பெண் முடிவெடுத்து உள்ளார். இதற்காக அப்பெண் தனது நகையை விற்று இரண்டு லட்சம் ரூபாய் (இலங்கை பணம்) திரட்டி படகோட்டியிடம் கொடுத்து அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு தப்பி வந்ததாக தெரிவித்து உள்ளார். அந்த பெண்ணை இறக்கிவிட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றுவிட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார். https://oruvan.com/woman-who-left-sri-lanka-for-love-detained-in-refugee-camp/
  12. வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.! கிருஷ்ணகுமார் ஆகஸ்ட் 13, 2025 வீரமுனை என்பது கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் பாரம்பரியமானதுமான பிரதேசமாகும். சோழ இளவரசிகளில் ஒருவரான சீர்பாத தேவியினால் 08ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திசெய்யப்பட்ட மிகவும் பாரம்பரியத்தினைக்கொண்ட கிராமமாகும். நூறு வீதிம் இந்துக்களைக்கொண்ட இக்கிராமத்தின் ஆலயமானது வரலாற்றுசிறப்பு மிக்கது மட்டுமல்ல கண்டியை தளமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் மன்னனின் மகன் இராஜசிங்கனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொன் விளையும் விவசாய காணி பட்டயம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக சம்மாந்துறையினை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிங்கள பேரினவாதிகளுக்கும் இந்த ஆலயத்தின் மீது தொடர்ச்சியான பார்வையிருந்தேவந்தது. நானும் வீரமுனையை பிறப்பிடமாக கொண்டவன். 1990ஆம் ஆண்டுவரையில் வீரமுனையிலேயே இருந்துவந்தோம். வீரமுனை-சம்மாந்துறை எல்லைப்பகுதியிலேயே எங்கள் வசிப்பிடமிருந்தது. அதன்காரணமாக நான் அறிந்த காலம் தொடக்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தோம். குறிப்பாக 1988ஆம் ஆண்டு ஒரு தடவை வீரமுனை தீக்கிரையாக்கப்பட்டபோது எங்களது வீட்டில் இருந்த பொருட்களை எங்களது வீட்டுக்கு அருகிலிருந்து சகோதர இனத்தவர்கள் அள்ளிச்சென்றதை கண்டதாக எனது தந்தையார் தெரிவித்தார். இதேபோன்று எனது தந்தையின் மோட்டார் சைக்கிளும் அவ்வாறே ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது. நாங்கள் வீரமுனையில் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவந்த பிரச்சினையே 1990ஆம் ஆண்டு பூதாகரமான அழித்தொழிப்பாக அமைந்தது. 1989ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடையில் வீரமுனை மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தார்கள். இரவோடு இரவாக பல தடவைகள் இடம்பெயர்ந்த அனுபவங்கள் எனக்கும் உள்ளது.வீரமுனையிலிருந்து காரைதீவுக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். இதேபோன்று வீரச்சோலைக்கும் இடம்பெயர்ந்து சென்ற அனுபவம் இருக்கின்றது. அதிலும் 1990ஆம் ஆண்டு ஜுன்,ஜுலை,ஆகஸ்ட் மாதம் என்பது வீரமுனை மக்களினால் என்றும் மறக்கமுடியாத நாளாகும். அம்பாறையிலிருந்து இராணுவம் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது பல்வேறு அட்டூழியங்களை செய்ததுடன் அதற்கு துணையாக முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மாறியிருந்தனர். வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் எங்கள் குடும்பம் இருந்தது. இதனைப்போன்று வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வீரமுனை,வீரச்சோலை,மல்வத்தை,வளத்தாப்பிட்டி,மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காக அனைவரும் தஞ்சமடைந்திருந்தனர். முகாமிலிருந்த காலப்பகுதியில் தினமும் அழுகுரல்களே கேட்கும்.முகாமிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றவர்களை காணவில்லை,முகாமிலிருந்து வெளியில் சென்றவர்களை கொண்டுபோரார்கள் என்று தினமும் அழுகுரல்களே ஒலிக்கும். இரவு வேளைகளில் அழுகுரல்களே கேட்கும். அச்சம் நிறைந்த சூழலே காணப்படும். எங்களது முகாம்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் வந்துசெல்லும் செஞ்சிலுவை சங்கம் வந்துசென்றால் அதன் பின்னர் இராணுவ வாகனங்கள் ஊர்காவல் படையினர் சூழ வருகைதந்து முகாம் முற்றாக சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து இளைஞர்கள்,குடும்பதினர் என பஸ்களில் ஏற்றிச்செல்வார்கள். ஆனால் அவர்களில் யாரும் திரும்ப வரமாட்டார்கள்.எங்களது தந்தையை இரண்டு தடவை கொண்டுசெல்வதற்கு இராணுவம் முயற்சிசெய்தபோது அங்கிருந்த பெண்கள் தமது பாவடைகளுக்குள் மறைத்து எங்களை பாதுகாத்ததை இன்று நினைக்கும்போதும் அச்சம் ஏற்படும். இவ்வாறு பல தடவைகள் எங்களது முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் பலர் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டபோதிலும் அதில் யாரும் திரும்பி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஒரு தடவை எமது ஆலய வளாகத்திற்குள் மனித தலையொன்று எரிந்த நிலையில் கிடந்ததை இன்றும் மறக்கமுடியாத நினைவு இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் இராணுவத்தினர் சுற்றிவளைப்புக்கு வரும்போது அவர்களுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் அதும் தமக்கு தெரிந்த நபர்கள் வந்திருப்பதாக அக்காலத்தில் பலர் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். வீரமுனை படுகொலை நடைபெற்றபோது விசேட அதிரடிப்படையினரின் உதவியுடனேயே முஸ்லிம் ஊர்காவல் படையினர் வந்ததாக அந்த முகாமிலிருந்த மக்கள் சாட்சி பகிர்ந்தனர். அதுவும் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு வீரமுனை ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்தாக இதனை நேரில் கண்டவர்கள் இன்றும் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென்பதே அனைவரது கவலையாகவும் இருக்கின்றது. குறிப்பாக இந்த படுகொலைகள் நடைபெற்ற நிலையில் வீரமுனை உட்பட முகாமிலிருந்த மிகுதியான மக்கள் திருக்கோவில்,தம்பிலுவில் போன்ற இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அகதிமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வீரமுனை உட்பட அனைத்து கிராமங்களும் முற்றாக சூறையாடப்பட்டது. வீரமுனை மக்கள் வீரமுனைக்கு வரும்போது எதுவும் இல்லாத நிலையிலேயே வந்து குடியேறினார்கள். இவ்வளவு அநியாயங்கள் வீரமுனை மக்களுக்கு அருகில் புட்டும் தேங்காய் பூவுமாக இருந்தவர்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டபோதிலும் அவர்கள் நடந்த அநியாயங்களுக்கு இதுவரையில் தமிழ் மக்களிடம் வருத்தம்கூட தெரிவிக்காத நிலையே இன்றுவரையில் இருந்துவருகின்றது. அதனையும் தாண்டி தமது கிராமத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருந்த வரவேற்பு கோபுரத்தினையும் அமைக்கவிடாமல் தடுக்கும் சக்திகளே அன்று வீரமுனையின் அழிவுக்கு துணையாக நின்றவர்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணமாகும். வீரமுனை கிராமம் என்பது வெறுமனே வந்தேறுகுடிகள் அல்ல அந்த மண்ணின் பூர்வீக குடிகள். இரு இனங்களும் தங்களுக்குள் ஒன்றுபட்டு வாழ்வதன் ஊடாக எதிர்காலத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தமுடியும். வெறுமனே ஒரு இனத்தின் கலாசாரத்தினையும் பண்பாடுகளை புதைத்துவிட்டு தாங்கள் வாழ நினைத்தால் அது எவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை உண்மையான மனித நேயத்தினை மதிக்கும் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். வீரமுனை மக்கள் தங்களுக்கு நடந்த அநீயாயங்களை மறந்து தமது சக மதத்தவருடன் கடந்தகால கசப்புகளை மறந்துவாழும் நிலையில் தாங்கள் வரவேற்பு கோபுரம்போன்றவற்றிற்கு காட்டும் எதிர்ப்பானது எதிர்கால சமூகத்தின் மனங்கள் வடுக்களை ஏற்படுத்தும் என்பதை இனியாவது உணர்ந்துசெயற்படவேண்டும். தொடரும்…………………. https://www.battinatham.com/2025/08/blog-post_167.html
  13. கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர்- அமெரிக்க இராஜாங்க திணைக்களம் Published By: Rajeeban 13 Aug, 2025 | 10:25 AM கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு சர்வதேச அளவில் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை நிலவரம் குறித்த அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த வருடம் முழுவதும் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பொலிஸாரின் பிடியிலிருந்தவேளை பலர் கொல்லப்பட்டனர். விசாரணைகளிற்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் கொண்டுசென்றவேளையிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றன. விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் தங்களை தாக்கினார்கள் அல்லது தப்பியோட முயன்றனர் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் ஏழுபேர் பொலிஸாரினால் கைதுசெய்ய்ப்பட்டிருந்தவேளை உயிரிழந்தனர் என தெரிவித்தது. கடந்த வருடம் முழுவதும் 103 இலக்குவைக்கப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.2023 இல் இது 120 ஆக காணப்பட்டது , 2024 இல் குறைவடைந்துள்ளது. மல்வத்துகிரிப்பிட்டிய என்ற இடத்தில் பௌத்தமதகுருவொருவரை கொலை செய்தமைக்காக முன்னாள் இராணுவ கொமாண்டோ கலகர டில்சான் என்பவர் கடந்த வருடம் மார்ச் பத்தாம் திகதி கைதுசெய்யப்பட்டார்.மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக தாங்கள் அந்த நபரை அழைத்து சென்றவேளை அவர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்;கியால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார். , பொலிஸார் திருப்பி தாக்கியவேளை காயமடைந்த அந்த நபர் வத்துபிட்டிவல மருத்துவமனையில் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். சிவில் சமூகத்தினர் இவ்வாறான மரணங்கள் பொலிஸாரின் சட்டவிரோத படுகொலைகள் என்பதற்குள் பொருந்துகின்றன என தெரிவிக்கின்றனர். இவ்வாறான பல சம்பவங்கள் காரணமாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு 2023 டிசம்பர் மாதம் பொலிஸாரிற்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. https://www.virakesari.lk/article/222458
  14. மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் 13 Aug, 2025 | 10:49 AM மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பங்குபற்றுதலுடன் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னாயத்த நடவடிக்கைகள் வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை. இதற்கமைய, வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நீர் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது. அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 06ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திரு பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் அருட்தந்தை, இராணுவம், பொலிஸார், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222459
  15. கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி 13 August 2025 https://cdn.hirunews.lk/Data/News_Images/202508/1755055895_189253_hirunews.jpg கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 513 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் பட்டினியால் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 குழந்தைகள் உட்பட 227 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/414332/89-people-killed-in-israeli-strikes-on-gaza-in-past-24-hours-while-waiting-for-food
  16. மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் 13 August 2025 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது. https://hirunews.lk/tm/414322/mannar-wind-farm-issue-special-discussion-with-the-president-today
  17. ஹர்த்தால் ஒத்திவைப்பு: 18ஆம் திகதியே நடக்கும்! ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால், ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுமந்திரன் அறிவித்துள்ளார். தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் நிலைகொண்டுள்ள அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும், முத்துஐயன் கட்டுப் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக் கூறப்படும் இளைஞரின் இறப்புக்கு நீதிகோரியும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஹர்த்தாலை நடத்துவதற்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று மன்னார் மடுத்திருத்தலப் பெருவிழா நடைபெறவுள்ளது. இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் திருவிழா நாளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு பல தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக, ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மன்னார் மறைமாவட்டம் வெளிப்படையாக அறிவித்தது. அத்துடன், நல்லூர் உற்சவத்தைக் காரணமாகக் குறிப்பிட்டும், ஹர்த்தாலை பிறிதொரு தினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, ஹர்த்தால் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/ஹர்த்தால்_ஒத்திவைப்பு:_18ஆம்_திகதியே_நடக்கும்!#google_vignette
  18. புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய adminAugust 12, 2025 புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா். காவல்துறை மா அதிபா் பிரியந்த வீரசூரியவை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில் பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219167/
  19. மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் இயங்கும் - அமைச்சர் நம்பிக்கை adminAugust 12, 2025 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எச் .உபாலி சமரசிங்க , நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உபுல் டி சில்வா, பிரதம ஆலோசகர் சாந்தா ஜெய ரட்ண ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள். இக்கலந்தரையாடலில் முன்னதாக வரவேற்பு உரையாற்றிய மாவட்ட செயலர், மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் உள்ளது. யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சியில் இந் நிலையம் ஓர் மைல்கல்லாக அமைய வேண்டும். இதனை மீள ஆரம்பிப்பதன் ஊடாக விவசாயம் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அமைச்சர் முன் வந்து நடவடிக்கை எடுப்பது வரவேற்க்கத்தக்கது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிப்பது மற்றும் அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இலங்கையை பொறுத்தவரை 18 பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுகிறது. அதில் 14 இயங்கி வருகிறது. வடக்கில் அண்ணளவாக ரூபா. 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவில்லை. இந் நிலையம் மக்களுக்கு பொருத்தமான பாதையாக காணப்படவில்லை. பிரதேச செயலகத்தின் கீழ் செயற்பாடுகள் நடைபெறுகிறது. அமைச்சின் கீழ் எந்தவொரு செயற்பாடும் காணப்படவில்லை. இந் நிலையத்ததை மீள அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலுக்கு முன்னராக அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219192/
  20. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்! 12 Aug 2025, 10:19 AM இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சியுடன் இணைந்தது. நீதிக் கட்சியே பின்னர் திராவிடர் கழகமாக மாறியது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உருவானது. பெரியார் அன்று உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், திராவிடர் இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான Fellowship வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் பெயரால் வழங்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர். இந்த இரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லண்டன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பின்னர் ஜெர்மன் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டமப்ர் 15-ந் தேதிக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்புவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். https://minnambalam.com/cm-mk-stalin-to-take-part-in-dravidian-movement-events-at-oxford-and-cambridge-universities-in-uk/
  21. கற்பனையில் தமிழ்ச்சமூகம்! August 11, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. (இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 1. “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது. 2. “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலைப்புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழ் மக்களின் நலனுக்காகச் செய்யப்படவே இல்லை. இந்திய நலனை முதன்மைப்படுத்திச் செய்யப்பட்ட ஒன்று. இதை அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 29.07.1987 இலிருந்து சரியாக ஐந்தாவது நாளான 04/08/1987 அன்று, யாழ்ப்பாணம் – சுதுமலையில் வைத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். தம்முடன் கலந்தாலோசிக்கப்படாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று. அதனால்தான் அந்த ஒப்பந்தத்தையும் மாகாணசபையையும் புலிகள் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையோ, அன்று மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களோ இன்று இல்லை. அவற்றில் ஒரு பகுதியை 1990 இல் பிரேமதாச பிடுங்கி விட்டார். புலிகள் இல்லாமலாக்கப்பட்ட 2009 க்குப் பிறகு, மிஞ்சிய அதிகாரத்தைக் கொண்டு, கடந்த 16 ஆண்டுகளில் ஏன் மாகாணசபை முறைமை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? 2009 க்குப் பிறகு தமிழர்களின் பிரநிதிகளாகச் செயற்பட்ட – மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறைமையையோ இந்தியாவின் அனுசரணையையோ மறுக்கவில்லையே. அதை நடைமுறைப்படுத்துமாறுதானே கேட்டது. மட்டுமல்ல, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்தைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்ததே! இப்போது கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். அதிகாரங்களைப் பகிருங்கள் என்று கேட்கப்படுகிறது. ஆனால், அதற்கு அரசாங்கம் தயாரில்லையே. இந்த நிலையில் எப்படி மாகாணசபை முறைமையை நாம் ஏற்றுக் கொள்வது? இந்தப் பலவீனமான – வஞ்சகத்தனமான மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கான பெறுமதியை இழந்ததாக ஆகிவிடும். அது மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் எமது மக்களின் அரசியல் உரிமையைப் பற்றியோ எமக்கான தீர்வைப் பற்றியோ கவனிக்காது. ஆகவே நாம் மாகாணசபை முறையை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ் மக்களுடைய அபிலாஷையை நிறைவு செய்யக் கூடிய தீர்வைப் பற்றியே பேச முடியும். அதற்காகவே போராட வேண்டும்” என விவாதிப்பது. இந்த இரண்டு வாதங்களையும் கேட்கும்போது சரிபோலவே தோன்றும். அல்லது ஒவ்வொன்றும் சரிபோலிருக்கும். என்றபடியால்தான் இரண்டு நிலைப்பாட்டுக்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த இரண்டு வாதங்களையும் அல்லது இந்த இரண்டு விடயங்களையும் குறித்து விளக்கமளியுங்கள் என்றால், பலரும் தெளிவற்றுக் குழப்பமடைகிறார்கள். அல்லது திருதிருவென விழிக்கிறார்கள். இந்தத் தெளிவற்ற நிலையும் விளக்க முடியாத தடுமாற்றமும் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நிலைப்பாடுகளுக்குத் தலைமையேற்றிருக்கும் அரசியல் தலைவர்களுக்குமில்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளோருக்கும் இல்லை. அப்படி இருந்திருக்குமானால் அவர்கள் இதுவரையில் அதைத் தெளிவாக முன்வைத்திருப்பர். அப்படி எங்கும் காணவில்லை. மாகாணசபை முறைமையை ஓரளவுக்கு வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்தோராகும். சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சுகு ஸ்ரீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கலாநிதி விக்னேஸ்வரன் – கோபாலகிருஸ்ணன் தரப்பின் கிழக்குத் தமிழர் ஒன்றியம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்றவை வெளிப்படையாகவே மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றன. ஏற்கின்றன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுக்குமிடையிலும் வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், இவை மாகாணசபை முறைமையை ஏற்கின்றன. அதிலிருந்து முழுமையான தீர்வுக்குப் பயணிக்க வேண்டும். அதுவே சாத்தியம் என வலியுறுத்துகின்றவை. இவற்றோடு செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், உதயராசாவின் தலைமையிலான சிறி ரெலோ போன்றவையும் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் தரப்புகளே. தமிழரசுக் கட்சியும் ஏறக்குறைய மாகாணசபை முறைமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக – உறுதியாகச் சொல்வதற்கு அதனால் முடியவில்லை. அப்படிச் சொன்னால், அது வலியுறுத்தி வரும் சமஸ்டி கோரிக்கைக்கு என்ன நடந்தது என்று எதிரணிகள் (குறிப்பாக ஏனைய தமிழ்க்கட்சிகள்) தலையில் குட்டத் தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த விடயத்தில் பட்டும்படாமல் உள்ளது. மாகாணசபை முறைமையை முன்தொடக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அதுவே சாத்தியமான தொடக்கம் என்று வலியுறுத்தும் தரப்புகள் புலம்பெயர் சூழலிலும் உண்டு. ஆனால், அவை அங்கே வலுவானவையாக இல்லை. அல்லது அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தக் கூடிய அளவுக்கு அவை வேலைகள் எதையும் செய்வதில்லை. அந்த நிலைப்பாட்டுடன் தாயகத்தில் உள்ள தரப்புகளைப் பலப்படுத்துவமில்லை. தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும் ஒன்றிரண்டு ஊடங்களில் மட்டும்தான் மாகாணசபை முறைமை அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்படுகிறது; பேசப்படுகிறது. இதேவேளை மாகாணசபை முறைமையை வெளிப்படையாக ஆதரிக்கும் தரப்புகளை இந்தியாவின் ஆட்கள் (உளவாளிகள், சார்பு நிலைப்பட்டவர்கள், இந்தியாவின் ஏஜென்டுகள்..) என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்; பழித்துரைக்கப்படுகிறார்கள்; சந்தேகிக்கப்படுகிறார்கள். ஆனால் யதார்த்தமான அரசியல் என்பது மாகாணசபையிலிருந்தே தொடங்க முடியும் என்பதுதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்தியா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்வோர், மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்வதற்கு அதனுடைய சக பங்காளித்தரப்பான முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை; பேசுவதுமில்லை. முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளாத அல்லது அவர்களும் இணைந்து கோராத மாகாணசபை முறைமை வெற்றியளிக்கப்போவதில்லை. மாகாணசபை முறைமையை வெற்றிகரமாக்குவதற்கு இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள சக்திகளுடைய ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக மலையக அரசியற் சக்திகளையும் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் – அதை வேண்டும் என்று கருதும் சிங்களத் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இது இலகுவானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடக்கம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வரையில் பலர் மாகாணசபையின் வழியாகவே அரசியலில் நுழைந்தவர்கள். இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட மாகாணசபையின் வழியாகப் பயன்களைப் பெற்றவர்களே. ஆகவே, இதையெல்லாம் புரிந்து கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்ப்பது – மறுதலிப்பது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தரப்பு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் இயங்கும் இந்தத் தரப்பு, ஒரு நாடு இரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஏறக்குறைய இது அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் தொடர்ச்சியாக தம்மை அடையாளப்படுத்துவது. இதை ஒத்ததாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் தேசமாகத் திரள்வோம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சில அணிகளும் உள்ளன. புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரபாகரனை நேசிப்பவர்களாகவும் இருப்பதால் இந்த நிலைப்பாட்டை வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கின்றார்கள், பாடுபடுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். அதாவது தாம் எதை நம்புகிறோமோ அதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், அதைச்செய்கிறார்கள். கோட்பாட்டளவில், இந்த நிலைப்பாடு பலருக்கும் ருசிகரமாகவே இருக்கும். அதற்குக் காரணமும் உண்டு. சிங்கள ஆதிக்கத்தரப்பின் நடைமுறை மற்றும் சிந்தனைகள் தரும் வரலாற்றுப்படிப்பினை அவர்களை இப்படித்தான் சிந்திக்க வைக்கும். இந்தியாவும் மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்யவில்லை. இலங்கை அரசும் அதைத் தட்டிக் கழிக்கும் மனோநிலையில் உள்ளது என்பதால், அவர்கள் அதற்கு மாறான பிரிந்து செல்லும் – தனியாக நிற்கக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்திக்கின்றனர். ஆனால், அதை அடைவதற்கான சாத்தியங்களைக் குறித்து இவர்களிடம் தெளிவில்லை. இருக்கின்ற நம்பிக்கை எப்படியானதென்றால், இலங்கை அரசாங்கம் செய்த இன ஒடுக்குமுறைக் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்காத போக்கும் என்றோ ஒருநாள் சர்வதேச சமூகத்தை ஈழத்தமிழ்ச்சமூகத்தின்பால் திருப்பும் என்பது மட்டுமேயாகும். அதற்காக தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிங்களத் தரப்பைத் தொடர்ச்சியாக எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கின்றன; நம்புகின்றன. சர்வதேச சமூகம் என்பதை இவை மேற்குலக நாடுகள் என்றே வரையறையும் செய்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களின் நிலை குறித்து கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கிடைக்கின்ற வரையறுக்கப்பட்ட அளவிலான ஆதரவை தமக்கான முழுமையான நம்பிக்கையாகக் கொள்கின்றன. இந்த ஆதரவு காலப்போக்கில் ஏனைய மேற்கு நாடுகளின் ஆதரவாக மாறும் என்று நம்புவோர் இதில் அதிகமுண்டு. என்பதால் முடிந்த முடிவாக பிரிவினை என்ற மனநிலையில்தான் இவர்கள் உள்ளனர். யதார்த்தத்தைப் பற்றி இவர்கள் சிந்திப்பதாகவே இல்லை. யதார்த்த நிலையே பிராந்திய ஆதிக்கத்தைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலை இன்னும் உருவாகவில்லை. பிராந்தியம் என்பது இந்தியாவும் சீனாவும் இணைந்த நிலையே. இரண்டு நாடுகளையும் தமிழர்கள் தமது அரசியற் தொடர்பு வலயத்திலோ வலையமைப்பிலோ கொண்டு, அதற்கான பொறிமுறைகளை வகுத்துச் செயற்படவில்லை. ஏன் மேற்குலகைக் கையாளக் கூடிய பொறிமுறைகள் (இராஜதந்திர நடவடிக்கைகள்) எதையும் இவை மட்டுமல்ல எந்தத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பலவீனமான நிலையில்தான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் உள்ளது. ஜனநாயக அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளும் போக்குகளும் இருக்கும். அதற்கு இடமும் உண்டு. ஆனால், தமக்கென ஒரு நிலைப்பாட்டை அல்லது கோட்பாட்டை முன்னெடுக்கும் தரப்புகள் அவற்றின் நடைமுறைச் சாத்தியம் என்ன? அதற்கான கால வரையறை (உத்தேசமாக) என்ன? அதற்கான உத்தரவாதம் என்ன? அதை முன்னெடுக்கும் வழிமுறை – சாத்தியப்படுத்தும் பொறிமுறை – என்ன? என்றெல்லாம் மக்களுக்குக் கூற வேண்டும். அது முக்கியமான கடப்பாடு. இங்கே தமிழ் அரசியல் தரப்பில் அந்தக் கடப்பாடு என்று எதுவுமே கிடையாது. ஏனெனில் இங்கே நடந்து கொண்டிருப்பது, தேர்தலை மையப்படுத்திய அரசியலாகும். தேர்தல் வெற்றிக்காக எதை முன்னே வைக்க வேண்டும். எதை முதலீடாக்க வேண்டுமோ அதையே அவர்கள் செய்கிறார்கள். இதற்கு அப்பால், தாம் முன்னிறுத்தும் அல்லது தாம் நம்பும் கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை மெய்யாகவே வெற்றியடைய வைக்க வேண்டும் என்றால், அதற்காக அவை பாடுபட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேணடும். அதாவது அதைச் செயற்படுத்த வேண்டும். இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை. பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!. ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள். https://arangamnews.com/?p=12248
  22. ‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு August 12, 2025 12:57 pm ‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம். வர 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம முழு பேச்சில் தயாராகிட்டு வர்றோம். இந்த சூழலில் நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான். முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போரில் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு. அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகும் மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார். https://oruvan.com/we-are-not-an-alternative-force-we-are-the-primary-force-vijays-invitation-to-the-madurai-conference/
  23. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம் August 12, 2025 10:28 am காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கின்றனர். காசா நகரில் உள்ள அவர்களது கூடாரத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்லைனில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிப் ஆவார். எல்லைகளற்ற ஊடக ஆர்வலர் குழுவான Reporters Without Borders, ஷெரிப்பின் கொலையை கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறியது. மேலும் பல ஊடகக் குழுக்கள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. https://oruvan.com/un-strongly-condemns-journalists-killed-in-israeli-attack/
  24. ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி! ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன். நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம். இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்‌ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார். அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார். https://akkinikkunchu.com/?p=336592
  25. மன்னாரில் கடும் பதற்ற நிலை - குவிக்கபட்டுள்ள பொலிஸார்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் பாதுகாப்பு தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சற்று வரை இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிசார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/08/blog-post_80.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.