Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த எரிமலை வெடிப்பே தமிழீழ விடுதலைப்போராட்டமாகும். உலகின் அசைவியக்கத்தில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இயல்பாகவே உருவாகிய தலைவர்! இவர், உருவாக்கப்பட்டவர் அல்ல! தமிழினத்தின் வழிகாட்டியும் தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் இவரே. இந்த ஒப்புவமையற்ற எமது தேசியத்தலைவரை வீரச்சாவு என அறிவித்து, விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டுமென்ற அறிவிப்பின் ஊடாக, தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்துவிட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இதற்குச் செயல்வடிவம் கொடுக்கச் சில குழுக்கள் களமிறக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, எதிரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான நாளாக ஆகஸ்து 2 இனை, தெரிவுசெய்து அறிவிப்புச்செய்துள்ளனர். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்இ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும் எம்மை அழிக்க நினைக்கும் வல்லரசுகளும் பலவிதமானப் புலனாய்வுச்சதிவலைப்பின்னல்களை உருவாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள், எதிரிகளையும் துரோகிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணறவைத்திருந்தன. 2009 மே 18 உடன், விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும் பிராந்திய வல்லரசும் ஏகாதிபத்தியமும் பகற்கனவுகள் கண்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் சிதைக்க முடியவில்லை. தொடர்ந்தும், தமிழர்கள் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்தபோது, மேதகு வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். எனவே, தமிழீழம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து அழிக்கவேண்டுமாயின்இ எங்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு வே.பிரபாகரன் என்னும் மாபெரும் பலம், மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால், தமிழீழம் என்னும் இலக்கு நோக்கிய பயணம் தகர்ந்துவிடும். இதுவே, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழிக்க அவர்கள் தீட்டிய திட்டமாகும். இதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. • ஒன்று தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார். • இரண்டாவது, அவர் 2009 மே 17, 18,19 ஆகிய நாட்களில் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன. இதில் வேதனையான விடயம் என்னவென்றால், யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை மேற்கோள்காட்டி, இன அழிப்புக் குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, எமது தேசியத்தலைவருக்கு "விளக்கேற்றி", வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில், மே 17, 18, 19 என தெளிவில்லாமல் சிறு குழுக்களால் வீரச்சாவு நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆகஸ்து 2ம் நாள்தான் வணக்க நிகழ்வு என அறிவித்துள்ளார்கள். ஆனால், சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் " Road to nanthikkadal " என்னும் நூலினை ஆதாரமாக வைத்து, மே 18 என முடிவு எடுத்துள்ளனர். இதற்கு, தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வைச் செய்தேயாக வேண்டுமெனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துவதானது அர்த்தமற்றதாகும். அன்பிற்குரிய தமிழீழ மக்களே! இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான். தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைதான், 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகின்றது, என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே, தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தைத் துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தேசியத்தலைவர் இருக்கிறார், அவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. "விழிப்பே விடுதலையின் முதற்படி" என்னும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில், தமிழினம் இவ்விரு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணைகொண்டு மீண்டுவரும். எமது தேசியத்தலைவரின் சிந்தனையானது எமைத்தொடர்ந்தும் வழிநடத்தும். எனவே, தமிழின விடுதலைச் சிந்தனையினைக் குழிதோண்டிப் புதைக்கநினைக்கும் நாசகாரச் சக்திகளினால், ஆகஸ்து 2ஆம் நாளில் சுவிற்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ள "விளக்கேற்றல்" நிகழ்வினை உறுதியோடு புறக்கணிப்போம். பேரன்புமிக்க எமது மக்களே! காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்துஇ முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கதையாடல்களைப் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம். தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம். அது, எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக! "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.thaarakam.com/news/f0f42314-88cc-4b93-946b-a623da5dec8a
  2. காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் - இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் - இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை 30 JUL, 2025 | 06:50 AM காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்" செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்துள்ளார். யுத்தநிறுத்தம்,இரண்டுதேசத்தினை உறுதி செய்யும் நீண்டகாலதீர்விற்கு அர்ப்பணித்தல்,ஐக்கியநாடுகள் காசாவில் மீண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதித்தல் போன்ற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இல்லாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் அமர்வில் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். காசாவில் காணப்படும் சகிக்கமுடியாத நிலைமை காரணமாகவும்,இரண்டுதேசத்திற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என்ற கரிசனை காரணமாகவும் இந்த நடவடிக்கைகளை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221330
  3. புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர் - அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தல் 30 JUL, 2025 | 02:10 AM (நா.தனுஜா) புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதியதொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபைத் தயாரிப்பதற்கு அவசியமான பரிந்துரைகளை முன்வைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அண்மையில் வேண்டுகோள்விடுத்திருந்தது. அதற்கமைய அம்பிகா சற்குணநாதனால் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: பயங்கரவாதம் எனும் பதத்துக்கான வரைவிலக்கணம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 9 ஆவது பிரிவானது குறித்தவொரு நபரைக் கைதுசெய்வதற்கோ அல்லது தடுத்துவைப்பதற்கோ சட்டத்தின் ஊடாக வரையறுக்கப்பட்ட நியாயமான காரணம் இருக்கவேண்டும் எனவும், அவ்வரையறையானது மிகத்தெளிவாக போதிய விளக்கத்தைத் தரக்கூடியவகையில் அமையவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது. குறித்தவொரு குற்றத்துக்கு பரந்துபட்ட அல்லது தன்னிச்சையான வரைவிலக்கணம் வழங்கப்படுவதையும், அதன் தன்னிச்சையான பிரயோகத்தைத் தடுப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும். எனவே உயிரிழப்பையோ அல்லது படுகாயத்தையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அரச பயங்கரவாதத்தைத் தூண்டுதல், குறித்தவொரு சமூகப்பிரிவினரை ஒடுக்குதல் அல்லது அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பொன்றையோ கட்டாயப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சர்வதேச பிரகடனங்களில் பயங்கரவாதம் எனும் பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் ஆகிய மூன்று விடயங்களும் 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தில் நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அத்தோடு அவ்வரைவிலக்கணமானது குறிப்பானதாகவும், உரிய சட்டக்கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் அமையவேண்டும். அதேவேளை இவ்வரைவிலக்கணம் 'தேசிய, இன மற்றும் மத வெறுப்புணர்வு' அல்லது 'ஒடுக்குமுறை வன்முறை' அல்லது 'அத்தியாவசிய சேவை வழங்கலுக்கான இடையூறு' போன்ற பரந்துபட்ட விளக்கத்தை உள்ளடக்கியிருக்கக்கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபுகளில் இவ்வாறான பதங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. இவை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்கும், தொழிற்சங்க நடவடிக்கை போன்ற சட்ட ரீதியான சிவில் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படக்கூடும். சட்ட அமுலாக்கத்தில் இராணுவமயமாக்கல் பயங்கரவாதக்குற்றங்களுக்காக நபர்களைக் கைதுசெய்வதற்கோ அல்லது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ இராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான சரத்துக்கள் புதிய வரைபில் உள்வாங்கப்படக்கூடாது. பொலிஸ் காவல் கைதுசெய்யப்பட்டு பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருக்கும் நபர், கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். சட்ட உதவி மற்றும் குடும்பத்தாருடனான தொடர்பாடல் பயங்கரவாதக்குற்றத்துக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபரின் சட்ட உதவியை நாடுவதற்கான உரிமை கட்டாயம் உறுதிசெய்யப்படவேண்டும். ஏனெனில் கைதுசெய்யப்பட்ட நபரின் அறியாமையைப் பயன்படுத்தி, அவரிடம் சட்டத்துக்கு முரணான வகையில் பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கும், குடும்பத்தினர் தமது உறவினர் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றி அறிந்துகொள்வதற்கும் இடமளிக்கப்படவேண்டும். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவரை பார்வையிடல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபரை குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறையேனும் முன்கூட்டிய அறிவிப்பின்றி நீதிவான் சென்று பார்வையிடல் மற்றும் கண்காணித்தல் எனும் சரத்தின் செயற்திறனை வலுப்படுத்தக்கூடிய விடயங்கள் புதிதாக உருவாக்கப்படக்கூடிய சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும். ஜனாதிபதிக்கான மட்டுமீறிய அதிகாரங்கள் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் நீதிமன்ற அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது https://www.virakesari.lk/article/221322
  4. ஜப்பானை தாக்கியது சுனாமி 2025 ஜூலை 30 , மு.ப. 08:37 ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017
  5. யாழில் சகோதரியுடன் வசித்த சகோதரன் உயிரிழப்பு - வெளியான தகவல்! யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளை தம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளார். பின்னர் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் குறித்த நபரின் சகோதரியான பெண் தான் கூறியது பொய் என்றும், நகையை மறைத்து வைத்ததாக தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். https://newuthayan.com/article/யாழில்_சகோதரியுடன்_வசித்த_சகோதரன்_உயிரிழப்பு_-_வெளியான_தகவல்!
  6. சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும் மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அழைப்பிற்கும் அமோக வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் அதிமேதகு ஜனாதிபதி முகமத் முய்சு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீண்ட கால உறவு உள்ளது. இந்து சமுத்திரத்தில் உள்ள நமது இரு நாடுகளும் பழங்கால கடல்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் பொதுவான வரலாறு ஆகியவற்றுடன் நமது தொடர்புகளால் வளம் பெற்றுள்ளன. சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும் எங்கள் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். எப்போதும் இலங்கைக்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது மக்களின் பொது நலனுக்காக நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி முய்சுவும் நானும் இனங்கண்டோம். மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். கல்வித் துறையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் உள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இத்துறையில் மேலும் ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி முய்சுவும் நானும் கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தினோம். மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்று நான் தெரிவிக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கை தற்போது உருவாக்கி வருகின்ற அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அடைவதற்கான பொறிமுறை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி முயிசுவிடம் தெரிவித்தேன். இலங்கையின் நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றியும் அவருக்கு விளக்கினேன். அவை முதலீட்டாளர் நேய மற்றும் உற்பத்தி - விசேட தொழில்துறை வலயங்களாக உள்ளதோடு, மாலைதீவு முதலீட்டாளர்கள் அந்த வலயங்களில் முதலீடு செய்யலாம். மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்/செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். நமது இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை ஒரு முக்கிய பொருளாதார காரணியாகும். இந்த சூழலில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். விசேடமாக விமானத் தொடர்புகளை மேம்படுத்துவதுடன், விமான சேவைகள் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடியோம். விவசாயத்துறை, இளைஞர்களை வலுவூட்டுதல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடுகளாக, மீன்பிடி மற்றும் கடல்சார் துறையின் பெரும் ஆற்றலை நாங்கள் இனங்கண்டோம். நவீன மற்றும் நிலைபேறான மீன்பிடி நடைமுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடினோம். இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவு கடல் எல்லை வழியாக அரபிக் கடலுக்குள் தடையின்றிச் செல்வதற்கு போக்குவரத்து வழிகளை நிறுவுவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கையும் மாலைதீவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளன. இலங்கை மற்றும் முழு இலங்கை சமூகத்தையும் நிலைபேறான நிலைக்கு உயர்த்துவதற்காக சமூக அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் தார்மீக அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய கூறுகளின் ஊடாக செயற்படும் 'Clean Sri Lanka' வேலைத்திட்டத்தை எனது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுபற்றி நான் ஜனாதிபதி முய்சுவுக்கு விளக்கினேன். திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான ‘Maldives Clean Environment’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஜனாதிபதி முயிசுவைப் பாராட்டினேன். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் அதிகரித்தல் ஆகிய சவாலை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய பொதுவான முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் இனங்கண்டோம். இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது அதன் மின்சாரத்தில் 70% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கில், நமது இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த நான் பரிந்துரைத்தேன். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வலுவான கலாசார உறவுகள் உள்ளன. எங்கள் மொழிகள் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதுடன், சிங்களம் மற்றும் திவெஹி மொழி ஆகிய இரண்டும் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும். மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புத் துறையில் இலங்கைக்கு மாலைதீவு வழங்கும் ஆதரவை நான் பாராட்டியதுடன், மாலைதீவுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று நான் உறுதி அளித்தேன். நமது இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பை தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதிமேதகு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு இரு தரப்பினருக்கும் வசதியான நாளில் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன். எனது விஜயத்தின் போது நான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றுவதுடன் மாலைதீவில் வாழும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளேன். அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே, எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்பது உறுதி. https://adaderanatamil.lk/news/cmdnyjpfh01s2qp4kk43d9ad6
  7. மறையாத ஜூலைக் கலவர வடு லக்ஸ்மன் இலங்கையில் இனப் படுகொலைக்கான ஏதுக்கள் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் காணப்பட்டிருந்ததாகக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களாக சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற 1956 கலவரம், 1983 கறுப்பு ஜூலைக் கலவரம், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்த கால வன்முறைகள், படுகொலைகள் மற்றும் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் போன்ற ஆதாரங்கள் பட்டியலிடப்படுகின்றன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சிகள் காணப்பட்டாலும் அவற்றினை எந்தவித பொறுப்புக்கூறலுமின்றி, கடந்து செல்கின்ற நிலைப்பாட்டினையே இலங்கை நாட்டின் அரசாங்கங்கள் கொண்டிருக்கின்றன. இதில் மாற்றத்தினை ஏற்படுத்திவிடலாம் என்று தமிழர் தரப்பு மேற்கொள்ளாத முயற்சியில்லை எனும் அளவிற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், ஆயுத யுத்தம் ஓய்ந்து 16 வருடங்களாகியும் அதற்கான வாய்ப்புக்கள் எதுவும் கனிந்ததாக இல்லை. இதற்கு புதிதாக அமைந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கானதல்ல என்பதே காலம் உணர்த்தும் உண்மை. 1983 ஜூலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்தினர் மீதான தாக்குதலையடுத்து கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆரம்பித்து நாடு பூராகவும் பரவி பெரும் கொடுமையை நடத்திமுடித்த கலவரமானது வெறுமனே கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. அத்துடன், இந்தக் கலவரமானது தன்னிச்சையாக ஏற்பட்ட ஒரு கலவரம் அல்ல, மாறாக சிங்களப் பேரினவாத, அரசின் ஊக்குவிப்புடனேயே இனவெறியால் தூண்டப்பட்ட ஒரு இனப்படுகொலையாகவே பார்க்கவேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தாலும் இதுவரையில் ஜூலைப் படுகொலைக்கான சரியானதொரு நீதி கிடைக்காமை என்பது கவலையானது எனலாம். 1983 ஜூலை 24 அன்று, அரசு படைகளின் ஆதரவுடன் சிங்களக் கும்பல்கள் தமிழ் மக்களுக்கு எதிராகத் தீவிரமான தீ வைத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் கொலை சொத்துக்களைச் சேதப்படுத்தல், கொள்ளையிடுதல் ஆகியவற்றைத் தொடங்கின. அது ஒரு வார காலமும் தொடர்ந்தது. இக் கலவரத்தில், 3,000க்கும் அதிகமான தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் அத்கமானவர்கள் வீடுகளை இழந்தனர். 53 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மேலும் பல மனித உரிமை அமைப்புகள் இக் கலவரம் தொடர்பான ஆவணப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளன. அத்துடன், வெளிநாட்டு ஊடகங்களின் நிருபர்களின் புகைப்படங்கள் மற்றும் நேரடி ஒளிப்பதிவுகள் பல இதற்கான ஆதாரங்களாக உள்ளன. யூலைக் கலவரக் காலத்தில், அரசுப் படைகள் கலவரத்தினை நடத்திய கும்பல்களை வழிநடத்தின. டெய்லி நியூஸ் போன்ற சிங்கள செய்தித்தாள்கள் தமிழர்களுக்கு எதிரான தூண்டுதலான பிரச்சாரத்தை மேற்கொண்டன. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகள் கலவரங்களில் தீவிர பங்கு வகித்தன என்பவையெல்லாம் குற்றச்சாட்டுக்களாக இருக்கின்றன. இருந்தாலும் அதற்கான தண்டனையளிப்புகள், விசாரணைகள் போன்ற பலனைத் தரவில்லை என்பதே உண்மையாகும். இந்தக் கலவரமானது முழு தமிழ் மக்களையும் பயமுறுத்தவும் அழிக்கவும் என மேற்கொள்ளப்பட்ட 42 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இருந்தாலும், அதன் பிறகும், கறுப்பு ஜூலையின் வலி தமிழ் மக்களுடைய மனங்களிலிருந்து நீங்காதிருப்பதானது அக் கலவரத்தின் கொடூரத்தையே காட்டிநிற்கிறது. இக் கலவரம் குறித்து கருத்துப் பகர்கின்ற ஆய்வாளர்கள் இது வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயம் மட்டுமல்ல - இது முறையான அநீதிக்கு ஒரு உயிரோட்டமான சான்று மற்றும் நீடித்த பொறுப்புக்கூறலைக் கோரும் ஒரு அழைப்பு என்று குறிப்பிடுகின்றனர். கலவரங்களும், படுகொலைகளும் இனப்படுகொலையினை அடிப்படையாகக் கொண்டவை என்ற அடிப்படையில், 1948இல் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல், இலங்கை அரசு சட்டரீதியான மற்றும் கட்டமைப்பு ஒடுக்குமுறை மூலம் தமிழர்களை இலக்காக்கத் தொடங்கியது என்று பலரும் கருத்துப் பகர்வதுண்டு. இதற்கான அரசியல் நடவடிக்கை 1948ல் உருவாக்கப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம் மூலமாக இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறித்ததில் இருந்து தொடங்கியது. அதேநேரம், 1956, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு சிங்களத்தை ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இலங்கை அரசு அறிவித்தது. அத்துடன், 1972 குடியரசு யாப்பில் பௌத்தம் இலங்கை அரசாங்கத்தின் பிரதான மதமாக அறிவிக்கப்பட்டது. இவற்றினை அரசியலமைப்பு ரீதியான செயற்பாடுகளாகச் சொல்லலாம். அதே நேரத்தில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை, கலவரங்கள் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை 1977 தொடக்கம் 1983 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக சிந்திக்கத் தூண்டியது என்றே கூறலாம். அத்துடன் தமிழர்களை அடக்குவதற்கென்றே கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் குற்ப்பிடப்பட வேண்டும். சுதந்திர இலங்கையின் தொடக்க காலம் அகிம்சைப் போராட்டமாக இருந்த போதிலும், இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழர்கள் அமைதியான ஜனநாயகப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். அவை அரசினதும் பேரினவாதிகளாலும் வன்முறைகளால் நசுக்கப்பட்டன. அதுவே ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது எனலாம். பேரினவாதத் தரப்பின் வன்முறைகள் காரணமாகவும், ஒடுக்குமுறைகள் காரணமாகவும், நெருக்குதல்கள் காரணமாகவும் படிப்படியாகத் தமிழ் மக்களின் உளவியலில் ஏற்பட்ட மாற்றம் அவர்களையும் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டியதன் வெளிப்பாடு கொடுமைகளையே கொண்டுவந்தது. ஆனால் தீர்வின்றியே அப்பயணம் தொடர்கிறது என்பது மாத்திரம் கவலைக்குரியது. இவ்வளவையும் கடந்த பின்னரும் அமைதியான சர்வதேசத்தின் பதில் இவற்றின் மீதான செயலற்ற தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசாங்கத்தின் சமாளிப்புகளையும் இராஜதந்திரத்தையும் நம்புகின்ற நிலைமை மோசமானதாகும். மிக மோசமான இனக் கலவரம், இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்து முடிந்து தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்ற போது ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகம் போன்றவை இந்த இனப்படுகொலைகளைக் குற்றங்களாக அங்கீகரிக்கத் தவறி வருவது ஒரு உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும். இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் காலங்கடத்தல்களையும், தட்டிக்கழித்தல்களையும் நம்பி ஏமாறுவது சர்வதேச நீதி சார் அமைப்புக்களுக்கு ஏற்றதா என்பது இந்த இடத்தில் கேள்விதான். இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் திம்பு பேச்சுமூலம் உள்ளே நுழைந்த இந்தியா, மாகாண சபை முறைமையை ஏற்படுத்தியதைத் தவிர, தமிழர்களைப் பாதுகாக்க எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது குற்றச்சாட்டாக வரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இப்போது தமிழ் அரசியல் தரப்பினர் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதில் எந்தப் பயனுமில்லை என்பதே வெளிப்படை. அந்தவகையில்தான், தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை அழிக்க இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் தமிழர்களை ஒரு ஒருமிப்புக்கு கொண்டுவந்திருந்தது. வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் முன்னெப்போதையும் விட அதிக எண்ணிக்கையில் ஒன்றுபட்டிருந்தனர். ஆனால், இப்போதும் அது தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.இப்போதும் தமிழர் தங்களுடைய உரிமைகளை அடைந்து கொள்வதற்காக அரசுக்கெதிரான போராட்டங்கள், கவனஈர்ப்புகள், சர்வதேச எதிர்ப்புப் போராட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என நடத்திக் கொண்டே காலங்கடத்துவதைத் தவிர வேறில்லை என்றாகிப் போயிருக்கிறது. தமிழ்த் தேசிய உணர்வு வலிமையானது, உறுதியானது மற்றும் உலகளவில் இணைக்கப்பட்டது என்றெல்லாம் பிரச்சாரப்படுத்திக் கொண்டு அநீதிக்கெதிரான போராட்டத்தைத் தொடர்கிறோம் என்று கொக்கரிப்பதில் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற கவலையே பலருக்குத் தொற்றியிருக்கிறது. கறுப்பு ஜூலை ஒரு நினைவை மட்டும் மீட்டுக் கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவுபடுத்திக் கொண்டு, படுகொலை நாட்களை நினைவுகூர்ந்து கொண்டு நகர்வதால் எத்தனை தலைமுறைகளைத் தமிழர்கள் அழித்துவிடப் போகிறார்களா என்பதுதான் இன்னமும் கேள்வியாக இருக்கிறது. இருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கான அங்கீகாரம் மற்றும் நீதிக்கான கோரிக்கைக்கான தீர்ப்பு நான்கு தசாப்தங்களுக்குப் பிறகும், வெறும் கோரிக்கைகளாகத்தான் இருந்து வருகின்றன என்றால் இது யாருடைய தவறு என்று ஆராய வேண்டும். இந்த ஆராய்தலைத் தமிழர்கள் செய்தல் வேண்டும். ஆனால், கறுப்பு ஜூலை இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட, கண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழர்கள் ஜூலை கலவரத்தின் வடுவையேனும் மறப்பார்களா என்பதுதான் நிலைமை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மறையாத-ஜூலைக்-கலவர-வடு/91-361918
  8. கறுப்பு ஜூலையை முன்னிட்டு நெல்லியடியில் தீப்பந்தப் போராட்டம்! கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் குறித்த தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தீப்பந்தப் பேராட்டத்தில், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். தமிழர்களின் இனப்படுகொலையை முன்னிறுத்துவதான கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடைபெற்று முடிந்து 42 வருடங்கள் ஆகின்றன. எனினும் 42 வருட காலமாக தமிழர்களின் நினைவில் அழியாமல் உள்ள இனப்படுகொலையையே கறுப்பு ஜூலை முன்னிறுத்துகின்றது. https://newuthayan.com/article/கறுப்பு_ஜூலையை_முன்னிட்டு_நெல்லியடியில்_தீப்பந்தப்_போராட்டம்!
  9. மீண்டும் யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல்! இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகள் வந்திருந்தது. அத்துடன் 2024ஆம் ஆண்டு 6 தடவைகள் இலங்கைக்கு வந்தது. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு மேற்குறித்த இரண்டு திகதிகளில் குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. காலை காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் இந்தியாவை சென்றடையவுள்ளனர். இந்த கப்பலானது மிகவும் பாரிய ஒரு சுற்றுலா பயணிகள் கப்பலாக காணப்படுகின்றது. https://newuthayan.com/article/மீண்டும்_யாழ்_வரவுள்ள_அதிசொகுசு_கப்பல்!
  10. அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு! adminJuly 29, 2025 வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது. இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போகின்றது. அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218492/
  11. காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது adminJuly 28, 2025 யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி காவல்துறையினா் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார். குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும் , காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவும் , தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து , அதனை காதலனிடம் கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் , யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , காதலனை கைது செய்த காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன் , யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி , நகைகளை விற்க உதவியவர்கள் , நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2025/218476/
  12. மாரீசன் : விமர்சனம்! 26 Jul 2025, 4:58 PM திரைக்கதை ‘ட்ரீட்மெண்டை’ மாற்றியமைத்திருக்கலாம்..! ‘சூப்பரா நடிக்குறாங்க’ என்று சொல்லக்கூடிய இரண்டு நடிப்புக்கலைஞர்கள் ஒரே பிரேமில் தோன்றினால் எப்படியிருக்கும்? அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு எப்படிப்பட்டதாக அமையும்? அது போன்ற எதிர்பார்ப்பினை உருவாக்கியது ‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல். டீசர், ட்ரெய்லர் போன்றவற்றைத் தந்து அந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய அப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை அமைக்க, சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சரி, எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிற வகையில் ‘மாரீசன்’ உள்ளதா? எதிர்பாராத சந்திப்பு! எதிரும்புதிருமான இரண்டு மனிதர்கள். இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாகச் சில மணி நேரங்கள், நாட்கள் பயணிக்க நேர்கிறது. அந்தப் பயணத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா? அவர்களது எதிர்பாராத சந்திப்பு நடக்கக் காரணமானது எது? இதற்கான பதில்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதே ‘மாரீசன்’ படத்தின் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, சிலரது மனங்களில் விரிந்திருக்கும். கிட்டத்தட்ட அப்படியொரு புள்ளியில் தொடங்கி மேற்சொன்னவாறே திரையில் கதை விரிகிறது. ஆனால், அது உண்மையல்ல என்று சொல்கிறது இடைவேளைப் பகுதி. ‘மாயமான்’ போன்று தோற்றமளிக்கிற மேற்சொன்ன கதைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? ஒன்றாகப் பயணிக்கிற அந்த இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்? யார் உண்மையை மறைக்கிறார்? இருவரில் யார் நல்லவர் என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இரண்டாம் பாதி. இந்தக் கதையில் அல்சைமர்ஸ் எனும் மறதி நோயில் அவதிப்படுகிற வேலாயுதம் பிள்ளை எனும் நபராக நமக்கு அறிமுகமாகிறார் வடிவேலு. அவரைத் தற்செயலாகச் சந்திக்கிற ஒரு திருடனாக, தயாளன் எனும் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் பகத் பாசில். இப்போது, ‘மாரீசன்’ படம் குறித்த ஒரு சித்திரம் மனதுக்குள் தானாக மேலெழும். ஏதோ ஒரு விஷயம் இதில் மறைந்திருப்பதாக அல்லது சொல்லாமல் தவிர்க்கப்பட்டதாக உணர வைக்கும். அது, இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆகச் சொல்லப்பட்டிருக்கிறது. முழுமையாகப் படத்தைக் கண்டபிறகு, முதல் பாதியுடன் இரண்டாம் பாதியைப் பொருத்திப் பார்க்க முடிந்தவர்களுக்கு இப்படைப்பு பிடித்துப் போகும். ‘மாரீசன்’னின் பலமாகவும் பலவீனமாகவும் அதுவே இருக்கிறது. ’கொஞ்சம்’ வித்தியாசமான அனுபவம்! ‘மாரீசன்’ படம் குறித்துச் சிலாகித்தாலும், இகழ்ந்தாலும் அதில் இருக்கிற சில அம்சங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கும். அவற்றில் சில ‘ஸ்பாய்லர்’களாகவும் இருக்கக்கூடும். அது வேண்டாமே என்பவர்கள் இந்த இடத்தில் நின்றுகொள்ளலாம். அல்சைமர்ஸ் நோயால் அவதிப்படுகிற ஒரு பாத்திரம், அதனை ஏமாற்ற முனைகிற இன்னொரு பாத்திரம். இவற்றைக் கொண்டு நகைச்சுவையையும் செண்டிமெண்ட்டையும் வாரி இறைத்திருக்க முடியும். ஆனால், எழுத்தாக்கம் செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி இரண்டையுமே மிகக் குறைந்த அளவில் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். வெள்ளைத்தாளில் ஆங்காங்கே எழுதுகோலை நகர்த்திச் சில புள்ளிகளை இட்டு, அந்த புள்ளிகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு வரைபடம் தென்படுவதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார். அப்படியொரு உத்தியைச் செயல்படுத்தும்போது, திரைக்கதையில் அப்புள்ளிகளை அழுத்தமாகத் தெரியுமாறு பதிக்க வேண்டும். இரண்டாம் பாதியை முதல் பாதியோடு சரியாகப் பொருந்துகிற வகையில் திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்திருக்க வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்யத் தவறியிருக்கிறது கிருஷ்ணமூர்த்தி மற்றும் இயக்குனர் சுதீஷ் சங்கர் கூட்டணி. அதேநேரத்தில், வழக்கமானதொரு கதை சொல்லலைத் தவிர்த்திருக்கின்றனர். கொஞ்சம் முயன்றிருந்தால், இதனைப் பரபரப்புமிக்க ‘காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர்’ ஆகவும் மாற்றியிருக்க முடியும். அவ்வாறு ஆக்கியிருந்தால், இப்படம் டாம்க்ரூஸ், ஜேமி பாக்ஸ் நடித்த ஆங்கிலப் படமான ‘கொலேட்டரல்’ போன்றதொரு அனுபவத்தைத் தந்திருக்கும். ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்க் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைத்து தான் விரும்பியவாறு திரையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர். ’ஃபா ஃபா’ மற்றும் ‘மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. அதைவிடப் பல மடங்கு உழைப்பைப் பின்னணி இசையில் கொட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் பகத் பாசில் ’மிக இயல்பாக’த் தோன்றியிருக்கிறார். அதுவே வடிவேலுவின் பாத்திரம் ‘புதிரானது’ என்ற எண்ணத்தை மனதின் அடியாழத்தில் ஏற்படுத்தும். அதற்கேற்ப, அவரும் ‘மிகச்சரியாக’ நடித்திருக்கிறார். இவர்களது நடிப்பு ‘அபாரமாக’ இருப்பதாலேயே முதல் பாதி மெதுவாக நகர்வது நமக்கு அயர்ச்சியைத் தருவதில்லை. இரண்டாம் பாதியில் அவர்களது நடிப்பு ‘வழக்கமான தமிழ் சினிமா நாயர்களையே’ முன்னிறுத்துகிறது. அது மட்டுமே நமக்கு ஏமாற்றம் தருகிறது. இதர பாத்திரங்களில் நடித்திருக்கிற சித்தாரா, கோவை சரளா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா ஆகியோருக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனைக் கொஞ்சம் உற்றுநோக்கியிருக்கலாம். இந்தக் கதையில் பகத் பாசிலும் வடிவேலுவும் சேர்ந்து பயணிக்காவிட்டால்தான் என்ன என்ற கேள்விக்கான பதிலாக விவேக் பிரசன்னா பாத்திரம் நுழைக்கப்பட்டிருக்கிறது. அவர் அதனைக் கவனமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி – சுதீஷ் சங்கர் கூட்டணியானது ‘மாரீசன்’னில் பகத் பாசிலையும் வடிவேலுவையும் ஒரே பிரேமில் காட்டி, அவர்களது செம்மையான நடிப்புத் திறமையைக் காட்ட முனைந்திருக்கிறது. அதில் வெற்றி கண்டிருக்கிறது. அதேநேரத்தில், தமிழ் திரை வரலாற்றில் இடம்பெறுகிற ஒரு ‘காம்போ’வாக, அதற்கேற்ற நேர்த்தியான கதை சொல்லல் கொண்டதாக ஆக்கியிருந்தால் ‘மாரீசன்’ படத்தின் உயரம் பல மடங்கு மேலேறியிருக்கும். அதனைச் செய்யாமல் விட்டதனால், ‘கொஞ்சம் வித்தியாசமான திரையனுபவம்’ என்ற எல்லையோடு நின்றிருக்கிறது ‘மாரீசன்’. வடிவேலு, பகத் பாசில் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்..! https://minnambalam.com/vadivelu-fafa-maareesan-review-july-25/
  13. இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:38 AM காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை தீவிரசிகிச்சை குழந்தைநோயியல் மருத்துவம் இருதயவியல் போன்றவற்றில் நீண்டகால அனுபவம்மிக்க மருத்துவ ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என தெரிவித்துள்ளது. இவர்களில் 21 பேர் 400நாட்களிற்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு ஜூலைமாதத்தின் பின்னர் மூன்று மருத்துவசுகாதார பணியாளர்களை இஸ்ரேல் கைதுசெய்துள்ளது என தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக இஸ்ரேல் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது. பலசுகாதார மருத்துவ பணியாளர்கள் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பகுதிகளில் வைத்து இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவத் அல்செர் இவர்களை வெளியுலக தொடர்பின்றி பல மாதங்களாக தடுத்துவைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அவர்களிற்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகளை இஸ்ரேல் மறுக்கின்றது,அவர்கள் மிகமோசமான விதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கபட்டுள்ள மருத்துவர்கள் மருத்துவசுகாதார பணியாளர்களை விடுதலை செய்யவேண்டு;ம் என இஸ்ரேல் வலியுறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்குவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள அதேவேளை காசாவில் மருத்துவ ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பசிபட்டினி ஊட்டச்சத்து குறைபாடு காயமடைந்தவர்களிற்கு மருத்துவகிசிச்சைவழங்க முடியாத அளவிற்கு அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது என மருத்துவர்கள் கார்டியனிடமும்,புலனாய்வு இதழியலிற்கான அராபிய செய்தியாளர்கள் அமைப்பிடமும் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களை கார்டியன் வெளியிட்டிருந்தது.அவர்கள் தாங்கள்தாக்கப்பட்டதாக சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இஸ்ரேலிய படையினரால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் காசாவின் வடபகுதியில் உள்ள கமால் அத்வான் மருத்துவனையின் இயக்குநர் மருத்துவர் ஹ_சாம் அபு சபியாவும் ஒருவர்.அவர் கடந்த டிசம்பரில் கைதுசெய்யப்பட்டார். அவர் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார், அவரது உடல்நிலை மோசமடைகின்றது என இந்த வாரம் அவரது சட்டத்தரணிகள் ஸ்கைநியுசிற்கு தெரிவித்திருந்தனர். https://www.virakesari.lk/article/221129
  14. குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:57 AM இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவர்களிற்கு இலவச வீசாவை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள சுதந்திர பாலஸ்தீன இயக்கம் இதற்கு எதிராக இன்று வெளிவிவகார அமைச்சின் முன்னால் மாலை நான்கு மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது. இது குறித்து சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது காசாவில் அப்பாவி சிறுவர்கள் மீது குண்டுவீசி ,சுட்டுக்கொலை செய்த இஸ்ரேலிய இராணுவீரர்களிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு இலவசவீசாவை வழங்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக இதனை செய்வதாக தெரிவித்தாலும் அது ஒரு பொய் குழந்தைகளை கொலைசெய்யும் சாகசபிரியர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு எந்தசுற்றுலாப்பயணியும் விரும்பவில்லை. இந்த இஸ்ரேலிய படைவீராகள் மிகவும் ஆபத்தான மனோநிலையில் உள்ளனர்.அவர்களின் மதிப்பு மிக்க குணங்களான சுற்றுலாவிற்கு செல்லும் நாடுகளில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்நாட்டவர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் குணங்கள் குறித்து உலகின் பல பகுதிகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாத்திரமல்லாமல் வேறு பல நாடுகளில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதாகவும் உள்நாட்டு கலாச்சாரங்களை மதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான மனிதாபிமானமற்ற சிந்தனையாளர்கள் எங்களின் பெறுமதியான சுற்றுலாத்துறையை அழிப்பதை தடுத்து நிறுத்துவோம். https://www.virakesari.lk/article/221131
  15. மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன! நல்லூர் பெரும் திருவிழாவுக்கு என இம்முறை எடுத்து வரும் மணலை பேணிப் பாதுகாத்து தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லூர் பெரும் திருவிழாவுக்கு மணலினை எடுத்து வருவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நல்லூர் பெரும் திருவிழாவுக்கான மணல் கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் எமக்கு முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை மருதங்கேணி பிரதேச செயலரிடம் முன்வைத்த போது, பிரதேச செயலர் அங்குள்ள சமூகமட்ட அமைப்பினருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு கோரிக்கையை முன்வைத்த போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இருந்த போதும் நாகர்கோவில் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழகம் அதற்குரிய அனுமதியை வழங்கியபோது, வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்குரிய அனுமதி எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்தும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடலை தொடர்ச்சியாக மேற்கொண்ட போதும் எவரும் அதற்குரிய சம்மதத்தை தெரிவிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் அரச காணியிலிருந்து மண்ணை பெற்று விநியோகிப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார். அந்த கோரிக்கையானது எம்மால் யாழ்ப்பாணத்தில் உள்ள கனியவளத் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது கொழும்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் சுற்றாடற்துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்குரிய வசதியை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். இது தொடர்பாக சுற்றாடத்துறை அமைச்சருக்கு நான் தெளிவான விளக்கத்தை வழங்கினேன். அதனைத் தொடர்ந்து கனியவளத் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற பணிப்பாளர் நாயகத்துடனும் தொலைபேசியில் உரையாடி இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டலை வழங்கியதன் அடிப்படையில் இதற்கான அனுமதியானது கொழும்பு தலைமையகத்தில் இருந்து யாழ்ப்பாணம் கனியவளத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் நல்லூர் பெருந்திருவிழாவிற்கான மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அங்கு இருக்கின்ற சமூகமட்ட அமைப்புகள் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள். இருந்த போதிலும் நாங்கள் இம்முறை யாழ்ப்பாணம் மாநகர சபையிடம், இம்முறைக்கு மணல் கிடைக்கப் பெற்றால் அந்த மணலை தொடர்ந்தும் அடுத்த திருவிழாவுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம் என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmdmlu0d601q4qp4kyrzg80nq
  16. கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் காட்சிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன விடுதலைக்கு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், மிக நீண்ட போராட்டத்திற்கு பிற்பாடு புதிய ஒரு அரசாங்கத்தின் நிழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்தப் புதிய அரசாங்கம் ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்து வந்திருந்தாலும் கூட இன்று அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏதாவது நடைபெறுகின்றதா? தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டி இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கமானது தமிழ் மக்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யுமென்றோ, வாக்குறுதிகள் அளித்தபடி எமது பிரச்சினைகளை தீர்ப்பார்களென்றோ நாங்கள் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைகின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் தொடர்பாக அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பயங்கரவாத தடைச் சட்டமாக இருக்கலாம், மாகாண சபை தேர்தலாக இருக்கலாம், காணிகள் விடுவிப்பாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வாக இருக்கலாம் எந்த பிரச்சினைகளுக்கும் அவர்கள் தீர்வினை வழங்கவில்லை. அடுத்த வருடம் தேர்தல் வரும் என நாங்கள் இப்போதும் ஒரு கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோம். மாகாண சபை அமைச்சர் சொல்வார் delimitation commission (எல்லை நிர்ணய) ஒன்றை நியமித்து அதற்குப் பின்னர் தான் நாங்கள் இந்த மாகாண சபை தேர்தலை நடத்தப் போகின்றோம் என்று. பிமல் ரத்நாயக்க என்ற அமைச்சர் கூறுவார் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடக்கும் என்று. ஜனாதிபதி அமைச்சர்களை பேசவிட்டு அவர் மௌனமாக இருப்பார். முன்னைய அரசாங்கங்கள் செய்த அனைத்தும் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முல்லைத்தீவு, வவுனியாவில் சிங்கள குடியேற்றங்களாக இருக்கலாம், அல்லது புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்குவதாக இருக்கலாம், அது அல்லது தொடர்பான இராணுவத்தின் நடவடிக்கைகளாக இருக்கலாம் எதுவும் நிறுத்தப்படவில்லை. ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அனைத்து விடயங்களையும் இந்த அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. உலகத்திலேயே மிகவும் பெருமளவிலான பலம்பொருந்திய கடற்படை, விமானப்படை, காலாட்படை என பல படையணிகளை கொண்டு தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை நடாத்தி இப்போது நாங்கள் பாராளுமன்றத்தில் எங்களுக்கு இருக்கின்ற ஆசனங்கள் ஊடாக அரசாங்கத்துடன் பேச முடியுமா என்ற நிலைமைக்குள் வந்திருக்கின்றோம். அந்தப் பெரிய படையணிகள் இருக்கும் போதே அரசாங்கம் எந்த அளவு பின்நின்றது என்று யோசிக்கும் பொழுது, இப்போது நாங்கள் அரசாங்கத்துடன் பேச வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களோ தமிழ் கட்சிகளோ சிதறுண்டு நின்று எதனையும் சாதிக்க முடியாது. எது பெரிய கட்சி எது சிறிய காட்சி என்பது அல்ல இங்கு விடயம். நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு நின்று தமிழ் மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுக்கப் போகின்றோமா? அல்லது நாங்கள் பெரிய கட்சி சிறிய என்று பேசப்போகின்றோமா என்பதுதான் விடயம். இவ்வளவு பெரிய போராட்டங்கள், இழப்பிற்கு பிற்பாடு குறைந்த பட்சம் தமிழ் மக்களுக்கு ஏதாவது பெற்றுக் கொடுக்கப் போகின்றோமா இல்லையா என்பது தான் இங்கு இருக்கின்ற கேள்வி. ஆகவே அந்தக் கேள்விக்கு பதில் தேடுவது தான் முக்கிய விடயமாக இருக்க வேண்டுமே தவிர நாங்கள் பலங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது முக்கியமான விடயமாக இருக்க முடியாது என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmdmmtjga01q8qp4k9aju2e63
  17. 500 கோடி ரூபா மோசடி; முன்னாள் அமைச்சருக்கு வலை 500 கோடி ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட் டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, தொழில் வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கியமை மற்றும் அந்த அமைச்சில் பணி புரிந்த பல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு குறித்த முன்னாள் அமைச்சரை விரைவில் கைது செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னைய ஆட்சியில் பாதுகாப்புப் பிரிவில் கடமைபுரிந்த அதிகாரிகள் பலரும் கைது செய்யப்படவுள்ளனர் என்று ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. இவர்களுள் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளும் இந்நாள் உயர் அதிகாரிகளும் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. https://newuthayan.com/article/500_கோடி_ரூபா_மோசடி;_முன்னாள்_அமைச்சருக்கு_வலை#google_vignette
  18. கடலட்டை உற்பத்தி அதிகரித்தால் சூழல் சமநிலை சீர்குலையும்; ஆளுநர் சுட்டிக்காட்டு வடக்கு மாகாணத்திலிருந்து கடலட்டையின் ஏற்றுமதிகள் இரட்டிப்பாகியுள்ளன. எனினும் கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோதமான நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலை சீர்குலையும் என்று வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார். சினமன்குளோபல் நிறுவனம், யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- எங்களுடைய கடற்கரைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. சட்டவிரோதமான வர்த்தகத்துக்கானமையப் புள்ளியாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது. எமது கடலோரப்பகுதியின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட கடல் சரணாலயங்களாகக் குறிக்கப்படவேண்டும். அங்கு. மீன்பிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு விடயங்களும் அனுமதிக்கப்படக்கூடாது. இந்தப் பகுதிகள் கடல் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்க உதவும். சுற்றுச்சூழல் தரவுகளைப் பயன்படுத்தி, நிலையான கடலட்டைப் பண்ணை எங்கு நடக்கலாம், எங்கு தவிர்க்கப்படவேண்டும் என்பதை நாம் அடையாளங்காண வேண்டும். பண்ணைகளை நவீனமயமாக்குவதற்கும், கண்டறியும் தன்மையை மேம்படுத்துவதற்கும் டிஜிற்றல் கருவிகளைப் பயன்படுத்துதல், நிலையான மீன்வளர்ப்புக் குறித்த தொழிற்பயிற்சி மையங்களைத் தொடங்குதல், விவசாயிகளுக்குத் தொடர்ச்சியான கற்றலை வழங்குதல் என்பனவற்றை முன்னெடுக்கலாம்- என்றார். https://newuthayan.com/article/கடலட்டை_உற்பத்தி_அதிகரித்தால்_சூழல்_சமநிலை_சீர்குலையும்;_ஆளுநர்_சுட்டிக்காட்டு
  19. மாவை சேனாதிராசாவின் 06ஆம் மாத நினைவஞ்சலி! adminJuly 28, 2025 மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) நடைபெற்றது. தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மாவையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. பின்னர் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறைந்த மாவை சோ.சேனாதிராஜாவின் புதல்வன் மா.கலையமுதன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், திரு.கஜதீபன், யாழ். மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/218411/
  20. முன்னாள் பெண் போராளி உயிர்மாய்ப்பு! adminJuly 28, 2025 யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) தனது உயிரை மாய்த்துள்ளார். புனர்வாழ்வு பெற்று, தடுப்பில் இருந்து வெளியே வந்து ,தனது சகோதரியுடன் கொக்குவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்தவர் நேற்றைய தினம் தனது உயிரை மாய்த்துள்ளார். என உறவினர்கள் மரண விசாரணையில் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218417/
  21. இனிய பாரதியின் நெருங்கிய சகா “தொப்பி மனாப்” கைது! adminJuly 28, 2025 இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரசே சபை முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27.7.25) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் இயங்கி வந்த முகாம்கள் மற்றும் மயானங்களில் இரண்டு தினங்களாக குற்றப் புலனாய்வாளர்கள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போணோர், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்கள் நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய ரி.எம்.வி.பி. கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை கடந்த 6 ஆம் திகதி திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் வைத்து குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்திருந்தனர். இந்த கைதையடுத்து இனியபாரதி யின் முன்னாள் சாரதியான செந்தூரன் கடந்த 9ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்தைச் செலுத்திச் சென்ற போது அவரை கல்முனை நகரில் வைத்து குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சனிக்கிழமை (26.07.25) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வாளர்கள் தம்பிலுவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் பாடசாலை வீதியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வந்த இனியபாரதி யின் காரியாலயத்தை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர். இவ்வாறு தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த ரி.எம்.வி.பி. முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவற்றுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். கல்முனை தலைமையக காவல் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள வீட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை வெள்ளை நிற ஆடை அணிந்து இரண்டு வெவ்வேறு ஜீப்களில் அழைத்து சென்று சோதனை செய்தனர். இதன் பின்னர் சம்மாந்துறையில் செயற்பட்ட முகாம் உட்பட அந்த கால பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ரி.எம்.வி.பி. முகாம்களாக செயற்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு, அங்கு சந்தேகத்துக்கு இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலத்தைத் தோண்டி சோதனையிடுவ தற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவ தற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனிய பாரதியின் மற்றும் ஒரு சகாவான திருக்கோவில் விநாயக புரத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (27.07.25) மாலை குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்து கொழும்புக்கு விசாரணைக்காக கொண்டு அழைத்துச் சென்றுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை குற்றப் புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கு அமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு. 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய கருணா அம்மான் பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராக பணியாற்றியவர். இவர் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கருணா அம்மான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி யின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பதுடன் 2012 முதல் 2015 வரை அந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியபோது பல படுகொலை மற்றும் ஆட்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/2025/218419/
  22. மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? - நிலாந்தன் கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப் பொறிமுறை தொடர்பாகக் கதைக்கப் போகின்றோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அதோடு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகவும் கதைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். எண்பதுக்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த்தேசியப் பேரவையைச்சேர்ந்த கட்சித்தலைவர்கள்,பிரமுகர்கள், குடிமக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காப் போராடும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், அணையா விளக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தவர்கள்,மத குருக்கள்…என்றிவ்வாறாக பலதரப்பட்டவர்களும் அங்கே வந்திருந்தார்கள். முதலில் கஜேந்திரக்குமார் பேசினார். தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்கள் பேசினார்கள். ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டத்தின் நோக்கம் ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவது என்று சொன்னார். வரும் செப்டம்பர் மாதம் வர இருக்கும் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும். அந்தக் கடிதம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாகவும், அந்தக்கடிதத்தில் ஏற்கனவே கூறப்பட்டவற்றை வலியுறுத்தியும் எழுதப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் கூறினார்.அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி குருபரனும் அதே கருத்தைக்கூறி அந்த நோக்கத்துக்காகத்தான் அந்த சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது என்று கூறினார்.ஆனால் அழைக்கப்பட்ட ஒரு பகுதியினருக்கு அது பொதுவாக சர்வதேசப் பொறிமுறையைக் குறித்து ஆராய்வதற்கு என்றுதான் கூறப்பட்டது. ஜெனிவாவுக்கு கடிதம் எழுதுவதற்காக என்று தெளிவாகக் கூறப்படவில்லை. அதனால் அந்தச் சந்திப்பில் சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான பரந்துபட்ட வேலைத்திட்டம் தொடர்பாக ஆழமாக உரையாடப்படவில்லை. இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிறீகாந்தா, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர்.. போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும் அப்பால் சந்திப்பு பெருமளவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்போகும் கடிதத்தை நோக்கியே குவி மையப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் அதற்கு முன் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதத்தைப்பற்றிச் சுருக்கமாகக் கூறவேண்டும். அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் வேலையை முதலில் தொடங்கியது மன்னாரைச் சேர்ந்த சிவகரன்.அதன்பின் அவர் இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட வேறு சிலரையும் அதற்குள் ஈர்த்துக் கொண்டார். முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது.இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்.இந்த மூன்றாவது சந்திப்பின் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக்கூட்டுக் கடிதத்தில் பிரதான அம்சங்கள் இரண்டு.ஒன்று,பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது.அதாவது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான அந்தப் பொறிமுறையை ஐநா மனித உரிமைகள் பேரவை என்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆணையைக் கொண்ட ஒரு கட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டிருக்காமல் ஐநா பொதுச் செயலர் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவையிடமிருந்து தன்னிடம் எடுத்துக்கொண்டு,அதனை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை. இரண்டாவது கோரிக்கை,போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்குமிடத்து அதற்கு கால வரையறை இருக்க வேண்டும் என்பது. அதன்படி கஜேந்திரக்குமார் 6 மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.ஆனால் ஏனைய கட்சிகள் குறைந்தது ஒரு வருடமாவது வழங்கவேண்டும் என்று கேட்டன. முடிவில் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து கூட்டுக்கடிதம் எழுதப்பட்டது. 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அவ்வாறு உலக நிறுவனம் ஒன்றுக்கு ஒற்றுமையாக ஒரு கூட்டுக்கடிதம் எழுதியமை என்பது அதுதான் முதல் தடவை. ஆனால் அந்த கடிதத்திற்கு ஐநா பெருமளவுக்கு சாதகமாக பதில் வினையாற்றவில்லை.பொறுப்புக்கூறலை அவர்கள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியதோடு, சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பும் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு உட்பட்டதாக, அணையாளருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக உருவாக்கப்பட்டது. அதற்குரிய கால எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை. இன்றுவரை அது செயல்படுகிறது. அதாவது அந்த கடிதத்தில் முன் வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் ஐநாவானது தமிழ் மக்கள் திருப்திப்படத்தக்க விதத்தில் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாதம் வரவிருக்கும் ஐநா கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதே டில்கோ சந்திப்பின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் கொழும்பில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு உடன்படாதவைகளாகக் காணப்படும் ஒரு பின்னணியில், கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டத் தவறியிருக்கும் ஒரு பின்னணியில்,இலங்கை அரசாங்கமானது சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக கஜேந்திரகுமார் அந்தச் சந்திப்பில் தெரிவித்தார். அந்தக் கட்டமைப்பானது நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத்தன்மையைப் பலப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.இது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உள்நோக்கத்தை கொண்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமானது அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருப்பதனால் அதன் சுயாதீனப் பண்பு குறித்து கேள்விகள் உண்டு.எனவே உத்தேச சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சுயாதீனமானது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,அதுபோன்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டும் என்றும் கஜேந்திரக்குமார் கேட்டுக்கொண்டார். சந்திப்புக்குத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருந்த போதிலும் அது வந்திருக்கவில்லை. அண்மையில் அக்கட்சியின் பதில் தலைவர் சிவஞானம், ஐநாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.எனினும் சில நாட்களின் பின் சிவஞானம் நடத்திய ஊடகச் சந்திப்பில்,தமது கட்சி அனுப்பிய கடிதம் உள்நாட்டுப் பொறிமுறையைக் கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ஐநாவுக்கு கடிதம் எழுதவேண்டும்.அதில் சந்தேகம் இல்லை.தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் அதுதான்.அது பலவீனமானது.காஸாவில் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலைத் தடுக்க முடியாத ஐநா தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத்தரும் என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம். எனினும், தமிழ் மக்கள் ஐநாவுடன்தான் ”என்கேஜ்” பண்ணவேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், ஐநா பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஒரு கடிதத்தைக் கூட்டாக எழுதுவதால் மட்டும் அது நடக்கப் போவதில்லை என்பதைத்தான் கடந்த நான்கு ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. டில்கோ சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மா ஒருவர் தெரிவித்ததுபோல தமிழ் மக்கள் ஐநாவில் முடிவுகளை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும். ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள வேண்டும்.அவ்வாறு அனைத்துல சமூகத்தைத் தம்மை நோக்கித் திரட்டிக் கொள்வது என்றால், அதற்கு முதல் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். இது டில்கோ சந்திப்பில் இக்கட்டுரை ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.ஆனால் அத்தகைய பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் அச்சந்திப்பில் பெரிய அளவுக்கு விவாதிக்கப்படவில்லை.அவை ஒரு சந்திப்பில் மட்டும் கூடி முடிவெடுக்கக்கூடிய விடையங்கள் அல்ல. முன்னைய கடிதத்தின் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தாயகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு உழைத்திராத ஒரு பின்னணிக்குள்,ஐநா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டா விதத்தில் விடயங்களை நகர்த்திக் கொண்டுவரும் ஒரு பின்னணியில், மீண்டும் ஒரு கடிதம் எழுதுவதை எப்படிப் பார்ப்பது? அதிலும் குறிப்பாக அக்கடிதத்தில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை என்றுசொன்னால் அந்த கடிதத்துக்கு ஒப்பீட்டளவில் பெரிய அங்கீகாரம் இருக்காது.தமிழரசுக் கட்சி அவ்வாறு ஒரு கூட்டுக்கடிதத்தில் கையெழுத்து போடக்கூடிய நிலைமைகள் இல்லை என்பதைத்தான் டில்கோ சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு சிவஞானம் கூறிய பதிலுக்கூடாக உணரக்கூடியதாக உள்ளது.ஆயின், தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்கிறது என்று பொருள். இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்பது என்பது தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள விரும்புகின்ற வெளிச் சக்திகளுக்கு வாய்ப்பானது. ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து அனுப்பிய கடிதத்திற்கே ஐநாவின் பதில்வினை சாதகமாக இல்லாத ஒரு பின்னணிக்குள், மீண்டும் ஒரு கடிதத்துக்கு, அதிலும் உள்ளதில் பெரிய கட்சி கையெழுத்திடாத ஒரு கடிதத்துக்கு ஐநாவின் பதில்வினை எப்படியிருக்கும்?. அதிலும் குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு நிகராக அரசாங்கத்துக்கும் ஏழு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்குத் தனக்கும் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறக்கூடிய நிலைமைகள் அதிகமுடைய அரசியல் மற்றும் ராஜீயச் சூழலில், தமிழ்த் தரப்பில் பிரதான,பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? முதலாவது கடிதத்தின் பின் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டவற்றை நோக்கி அனைத்துலக சமூகத்தை உந்தித்தள்ளும் விதத்தில் தாயகத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய நிர்ணயகரமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.அதன் விளைவாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொழும்பில் வைத்து அரசாங்கத்துக்கு நோகாமல் கருத்துக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்.இந்நிலையில்,மீண்டும் ஒரு கடிதத்தை தமிழ்த் தரப்பு எழுதப் போகிறது. கடிதம் எழுத வேண்டும்.ஆனால் அதோடு மட்டும் நிற்கமுடியாது.அனைத்துலக சமூகத்தில் ஆதரவு சக்திகளைத் திரட்ட வேண்டும்.இதுதான் முன்னைய கடிதத்திற்குப் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட பாடம். https://www.nillanthan.com/7576/
  23. பிள்ளையானின் அலுவலகத்தில் கடும்சோதனை Editorial / 2025 ஜூலை 27 , மு.ப. 10:10 பாறுக் ஷிஹான் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும்அதன் முக்கியஸ்தராக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரைசந்திரகாந்தன் தலைமையில் பலர் செயற்பட்டிருந்தனர். இதில் அம்பாறை மாவட்டத்தில் அக்கால கட்டத்தில் பொறுப்பாளராக செயற்பட்டஇனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்ப குமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் இன்றுபயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியினர்சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏலவே கைது செய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்துஅவ்விடத்திற்கு இரண்டு வெவ்வேறு ஜீப் வண்களில் அழைத்துவரப்பட்டிருந்தனர். அந்த நபர்கள் இனங்காட்டியமைக்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகளின் அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்டகல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான்சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீடு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்டநேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற புலனாய்வு பிரிவினர் சோதனைமேற்கொண்ட பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றதாக நேரில்கண்டவர்கள் குறிப்பிட்டனர். தற்போது குறித்த வீட்டின் முன்பகுதி உணவகம் ஒன்றிற்கு வாடகைஅடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு கல்முனைவேப்பையடி மத்தியமுகாம் சொறிக்கல்முனை சம்மாந்துறை சேனைக்குடியிருப்புஅக்கரைப்பற்று திருக்கோவில் விநாயக பரம் காரைதீவு 40 ஆம் கட்டை தம்பட்டைபொத்துவில் கோமாரி காஞ்சிரங்குடா ஊரணி கஞ்சிகுடிச்சாறு என பலமுகாம்களும் அலுவலகங்களும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையானின்-அலுவலகத்தில்-கடும்சோதனை/175-361798
  24. தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு! வடமராட்சி அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது. வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனையடுத்து தமது பிரதேசத்தில் கூடியளவில் மணல் அகழப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்தும் கிராமத்தை அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மணல் மண் வழங்க மறுத்திருந்தனர். அதேவளை தொடர்ச்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழ கூடாது என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம் இடம்பெற்றது. இன்று காலை 9 மணி முதல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம்பெற்றது. அம்பனிலுள்ள தனிநபர் ஒருவருக்கு கனியமணல் அகழ்வுக்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்து நல்லூர் முருகன் ஆலயத்திற்கு பிரதேச செயலரால் மணல் மண் விநியோகம் இடம் பெறுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். https://newuthayan.com/article/%C2%A0தீர்மானத்தை_மீறி_நல்லூர்_ஆலயத்திற்கு_மணல்_விநியோகம்_-_பொதுமக்கள்_குற்றச்சாட்டு!
  25. மாணவர்கள் இடைவிலகலை தூண்டுவது வாழ்வாதாரமே! - சபா குகதாஸ் தெரிவிப்பு! மாணவர்களின் வாழ்வாதார வறுமையை ஒழிக்காமல் ஒருபோதும் கல்வியில் உயர்ச்சியை எட்ட முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் கல்வி முறையில் பல குறைபாடுகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடையாக இருப்பது மாணவர்களின் வாழ்வாதார வறுமையே பிரதான இடம் பெறுகின்றது. அண்மைய காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வி இடை விலகலுக்கு காரணம் கொடிய குடும்ப வறுமை இதனால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்விச் செயற்பாட்டில் இருந்து இடை விலகி கூலி வேலைகளுக்கு செல்வதை காணமுடிகின்றது வேறு பல மாணவர்கள் தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் சமூக விரோத செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். மாணவர்களின் பாடசாலை கல்வியி்ல் இடைவிலகலை தூண்டுவது தற்போதைய கல்வி முறையல்ல மாறாக குடும்ப வறுமையும் வாழ்வாதாரச் சுமையுமே ஆகும். ஆகவே ஜனாதிபதி புதிய கல்விச் சீர் திருத்தத்தை கொண்டு வந்தாலும் மாணவர்கள் தொடர்ச்சியாக 13 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பதற்கான குடும்பச் சூழலை முதலில் சீரமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரச மானியங்களை வழங்கி வருமானத்திற்கு ஏற்ப பொருட்களை வாங்கக் கூடிய ஏற்பாடுகளை ஐனாதிபதி விரைந்து உருவாக்க வேண்டும் இதன் மூலம் குடும்பங்களின் வாழ்வாதார வருமானச் சுமைகளை குறைத்து மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் ஆர்வத்துடன் பயனிப்பதற்கு வழி திறக்க முடியும் என தெரிவித்தார் https://newuthayan.com/article/மாணவர்கள்_இடைவிலகலை__தூண்டுவது_வாழ்வாதாரமே!_-_சபா_குகதாஸ்_தெரிவிப்பு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.