Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கசாப்புக் கூடம் ஐந்து (Slaughterhouse-Five) Bookday29/04/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –11 போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம். ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் ஒரு பழைய தொழிற்கூடம். அதுவோர் இறைச்சித் தயாரிப்புக் கூடம். ‘கசாப்புக் கூடம் ஐந்து’ (Slaughterhouse-Five) என்று பெயர். போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட நேசப்படையைச் சேர்ந்த பல நாடுகளின் வீரர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாஜிகளின் தோல்வியை உறுதிப்படுத்துவதாக, அந்த நகரத்தின் மீது நேசப்படை விமானங்கள் குண்டுகளைப் போடுகின்றன. கட்டுமானங்கள் அனைத்தும் நொறுங்கிப் போன நிலையில், கசாப்புக் கூடத்தில் உயிரோடு மிஞ்சியவர்கள் வெளியே வருகிறார்கள். சாலையோரத்தில் ஒரு கழிப்பறை மட்டும் இடிந்து போகாமல் அப்படியே இருக்கிறது. ஒருவன், ஊரே அழிந்தபின் கழிப்பறை மட்டும் எஞ்சியிருப்பதில் உள்ள அபத்தத்தை எண்ணிச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்து ஒன்றுக்கடித்துவிட்டுத் திரும்புகிறான். அன்றைய ஜெர்மனியின் இனவெறிச் சர்வாதிகார ஆட்சியைச் சிறிதும் நியாயப்படுத்தாமல், ஆனால் பொதுவாகப் போர் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு முட்டாள்தனமானது என்று முரண் நகை வடிவில் வேதனைச் சிரிப்பைப் பகிர்ந்துகொள்கிறது ‘ஸ்லாட்டர்ஹவுஸ் – ஃபைவ்’ நாவல் (1969). அவ்வாறு மனிதநேய வேதனையைப் பகிர்ந்துகொண்டது, அரசின் போர்க் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தாக்குவதாக இருக்கிறது என்று கூறி அமெரிக்காவின் பல மாநில அரசுகள் நாவலுக்குத் தடைவிதித்தன. பாலியல் உறவு பற்றிப் பேசுகிறது, ஆபாசமான சித்தரிப்புகள் இருக்கின்றன, மதத்தை விமர்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி தடை நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி நூலகங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட புத்தகப் படிகள் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டன. குப்பையில் கிடக்கிற புத்தகத்தை யாராவது எடுத்துப் படித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்துப் பல இடங்களில் புத்தகப் படிகளுக்குப் பள்ளிகள், கல்லூரிகளின் முதல்வர்களே தீ வைத்தார்கள். அரசியல்வாதிகள் நாவலைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். வேறு பல நாடுகளிலும் நாவல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதிலேயே ஒரு முரண் நகை என்னவென்றால், நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே தேசிய சிறந்த நூல் விருது வழங்கப்பட்டது, 1972ஆம் ஆண்டிலிருந்து தடை நடவடிக்கைகள் பாய்ந்தன. நாவலாசிரியர் இந்த நாவலை எழுதிய குர்ட் வோன்னேகட் (1922–2007) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.. முரண் நகை எள்ளல் நடையோடு கூடிய அறிவியல், அரசியல் புனைவுகளுக்காகவும், மனிதம் குறித்த ஆழ்ந்த பார்வைகளுக்காகவும் இலக்கிய உலகில் கொண்டாடப்படுபவர். கருப்பொருள்களாகப் போர்களின் விளைவு, தொழில்நுட்பத்தின் தாக்கம், தனிமை, மரணம், மனித நேயம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டார்.. அதிகாரத்தையும், தலைவிதி நம்பிக்கை உள்ளிட்ட சமூகத்தின் போலித் தனங்களையும் கேள்விக்கு உட்படுத்தினார். தலைமுறைகள் கடந்தும் நேசிக்கப்படும் வோன்னேகட் எழுதத் தொடங்குவதற்கு முன், அமெரிக்கச் சட்டப்படி ராணுவத்தில் பணி செய்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். அப்போது உண்மையாகவே ஜெர்மன் படையிடம் சிக்கிக்கொண்டார், டிரெஸ்டன் நகரத்தில் குண்டு போடப்பட்டபோது நல்வாய்ப்பாகத் தப்பித்தார். அந்த அனுபவங்களின் தாக்கத்திலும், மனிதநேயச் சிந்தனையிலிருந்தும், ராணுவப் பணி ஓய்வுக்குப் பிறகு எழுத்துத்துறையில் ஈடுபட்டார். ‘பிளேயர் பியானோ’ என்ற நாவல் அவரிடமிருந்து 1953இல் வந்தது. ‘பூனையின் தொட்டில்’ (கேட்ஸ் கிரேடில் –1963), ‘கடவுள் உம்மை ஆசிர்வதிப்பாராக திருவாளர் ரோஸ்வாட்டர்’ (காட் பிளெஸ் யூ, மிஸ்டர் ரோஸ்வாட்டடர்– 1965), ‘காலை உணவு சாம்பியன்கள் (பிரேக்ஃபாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ் –1973), கலபாகோஸ் (1985) உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களையும் வழங்கியிருக்கிறார். ‘ஸ்லாட்டர்ஹவுஸ்–ஃபைவ்’ ஒரு தனித்துவமான படைப்பு. இந்த நாவல் போர், மரணம், காலம், விதி நம்பிக்கை, மனித இருப்பு பற்றிய ஆழமான கேள்விகளை நகைச்சுவை கலந்து அறிவியல் புனைகதையாக ஆராய்கிறது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மையக் கதாபாத்திரம் காலவெளியில் சிக்கிக்கொள்ள, கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமாக மாறி மாறிக் கால ஒழுங்கற்ற முறையில் பயணிக்கிறான். அந்தப் பயணத்தில் வேற்றுக் கோளில் வாழ்கிறவர்களையும் சந்திக்கிறான். முக்காலத்தையும் ஒரே நேரத்தில் காணக்கூடியவர்களாக இருக்கிற அவர்களோடு உரையாடுவதில், மரணம் இயல்பானது, தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொள்கிறான். அந்தப் புரிதல், வாழ்கிற வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வழிசெய்கிறது. போர் எதிர்ப்புச் சிந்தனையும் அதிலிருந்து வலுப்பெறுகிறது. போர்களிலிருந்து உலகத்தைக் காப்பதோடு, அதிகாரக் கரங்களிலிருந்து புத்தகங்களைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணரலாம் என்று நாவல் அறிமுகக் கட்டுரைகள் கூறுகின்றன. கதைத்துளி இணையத்தில் ஏஐ வழியாகத் தேடியதில் கிடைக்கும் கதைச் சுருக்கத்தையும் கருத்தாக்கத்தையும் பார்ப்போம்: கண் பரிசோதனைத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவனான பில்லி பில்கிரீம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு சாதாரண சிப்பாயாக இருக்கிறான்.இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறான். 1944இல் பதுங்கு குழியில் இருந்த நேரத்தில் ஜெர்மன் சிப்பாய்களால் பிடிக்கப்படுகிறான். மற்ற போர்க் கைதிகளுடன் அவன் டிரெஸ்டன் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறான். அங்கே அவர்கள் ‘ஸ்லாட்டர்ஹவுஸ்-ஃபைவ்’ என்ற ஒரு கைவிடப்பட்ட கசாப்புக் கூடத்தில் அடைக்கப்படுகிறார்கள். 1945 பிப்ரவரி மாதம் டிரெஸ்டன் நகரம் நேசப்படை குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிறது. பில்லியும் வேறு சில கைதிகளும் கசாப்புக்க கூடத்தின் சுரங்க அறையில் இருந்ததால் உயிர் பிழைக்கிறார்கள். அப்போதுதான் முதலில் குறிப்பிட்ட அந்தக் கழிப்பறையைப் பார்க்கிறார்கள். அந்த நிகழ்வுகளின் பயங்கரமும் இடிபடாத கழிப்பறைக் காட்சியும் அவன் மனதில் ஆழமான காயத்தையும் குழப்பமான எண்ணங்களையும் ஏற்படுத்துகின்றன. கதை பின்னர் அறிவியல் கற்பனைக்குள் நுழைகிறது. பில்லி பில்கிரிம் காலவெளியில் “சிக்கிக் கொள்கிறான்”. அவனால் தனது வாழ்க்கையின் எந்த நேரத்திற்கும் – பிறப்பு, போர் அனுபவங்கள், திருமண வாழ்க்கை, குழந்தைகள், எதிர்காலத்தில் அவனைக் கடத்திச் செல்லும் டிரால்ஃபாமடோர் என்ற வேற்றுக் கோள்வாசிகள் என்று கட்டுப்பாடின்றி பயணிக்க முடிகிறது. கதையின் இந்த கால ஒழுங்கற்ற தன்மை போரின் அதிர்ச்சியையும், நினைவுகளின் பன்முகக் கூறுகளையும் பிரதிபலிக்கிறது. மனித இனமல்லாத, அறிவுக் கூர்மையுடன் உள்ள டிரால்ஃபாமடோர் கோள்வாசிகள் காலத்தை ஒரு நேர்கோடாகப் பார்க்காமல், ஒரே நேரத்தில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கக் கூடியவர்களாக இருப்பதை அறிகிறான். அவர்கள் மரணத்தை ஒரு முடிவாகக் கருதுவதில்லை, மாறாக ஒரு மோசமான பொழுது, அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள். “இது இப்படித்தான் நடக்கும்” என்று அவர்கள் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். இந்தச் சொற்றொடர் மரணத்தையும், தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் காட்டுகிறது. அந்த மனநிலை பில்லிக்கும் ஏற்பட்டு, வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக்கொள்கிறான். இயல்பான வாழ்க்கைக்கு எதிரியாகப் போர்களைப் பார்க்கிறான். நாவல் பில்லியின் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் முன்னும் பின்னும் நகர்கிறது. நாம் அவனுடைய குழந்தைப் பருவம், விரும்பித் தேர்ந்தேடுக்காமல் வாழ்க்கை வசதிகளுக்காகச் செய்துகொள்ளும் திருமணம், அதன் மூலம் கிடைக்கிற கண் பரிசோதகர் வேலை ஆகியவற்றைப் பார்க்கிறோம். போருக்குப் பிறகு அவனுடன் நாமும் காலச்சுழலில் சிக்கி எதிர்காலத்திற்குச் சென்று மாறுபட்ட வேற்றுக்கோள்வாசிகளுடனான அனுபவங்களைப் பெறுகிறோம். ஒரே நீரோட்டமாக அமையாத கதை உத்தி போரின் அபத்தத்தையும், மனித எண்ணங்களின் குழப்பத்தையும் வாசகர்களுக்கு எடுத்துக்கூறுகிறது. போர் எதிர்ப்பு நாவலாக மட்டுமல்லாமல், நினைவுகள், அதிர்ச்சி, எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடிதான் நிகழ்கின்றன என்று கருதும் வேற்றுக்கோள்வாசிகளை அறிமுகப்படுத்தி, விதித் தத்துவம் பற்றிப் பேச விட்டு, பின்னர் அதை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இறுதியில் புதிய மாற்றங்களை நிகழ்த்தும் மனித முயற்சிகளை உயர்த்திப் பிடிக்கிறது. சுதந்திர வேட்கை போன்ற பெரிய கேள்விகளையும் ஆராய்கிறது. நாவலுக்குப் பாராட்டு, படத்திற்கு விருது இத்தனை சிறப்புகள் இருப்பினும் இந்த நாவல் குறிப்பிடத்தக்க பெரிய விருதுகள் எதையும் பெறவில்லை. ஆனால் திரைப்படமாக வந்து கேன்ஸ் திரைப்பட விழா, ஹ்யூகோ, சாட்டர்ன் ஆகிய குறிப்பான விருதுகளைக் கைப்பற்ற்றியது. படக்கதைப் புத்தகமாகவும் வந்து சிறார்களிடமும் இளையோர்களிடமும் சென்றது. குர்ட் வோன்னேகாட் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக இணைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க கலை மற்றும் இலக்கிய அகாடமி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். போர் சூழ் உலகாக இருக்கிற, போர் மோகப் பேச்சுகள் ஒலிக்கிற நிலையில் இந்த நாவல் பற்றிய தகவல் தற்செயலாகக் கண்ணில் பட்டது.உடனே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. தெரிந்துகொள்ளவும், தெரிந்துகொண்டதை சக மனிதர்களுக்குக் கதையாகச் சொல்லவும் வாழ்க்கை எத்தனை அனுபவங்களைக் குவித்து வைத்திருக்கிறது! https://bookday.in/a-novel-that-was-thrown-into-the-trash-for-describing-the-horrors-and-absurdities-of-war-article-written-by-a-kumaresan/
  2. மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்? - நிலாந்தன் வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11–20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும், 20–50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகளும் இருப்பதாகவும் 50–100 பிள்ளைகள் கற்கும் 174பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலைகள் ஏன் மூடப்படுகின்றன? எப்படிப்பட்ட பாடசாலைகள் மூடப்படுகின்றன? பெரும்பாலும் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள்தான் அதிகமாக மூடப்படுகின்றன. அவை மூடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம், சனத்தொகை வீழ்ச்சி. இரண்டாவது காரணம், போட்டிப் பரீட்சை காரணமாக தேசிய மட்டப் பரீரசைகளில் உயர்ந்த அடைவைக் காட்டும் பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை நகர்த்தும் ஒரு போக்கு. எனினும் யுத்தம்தான் இதற்கு மூல காரணம் என்று ஒரு மூத்த கல்வி அதிகாரி தெரிவித்தார். போர் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வுகள் புலப்பெயர்வுகள் போன்றவற்றால் சனத்தொகை வீழ்ச்சி அடைந்தது. போரினால் பாடசாலைகள் அழிக்கப்பட்டன. அல்லது சேதமடைந்தன. போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த ஒரு தொகுதி பாடசாலைகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை. போட்டிப் பரீட்சை காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் நோக்கிச் செல்லும் மோகம் அதிகரிக்கின்றது. தேசியமட்ட பரீட்சைகளில் உயர்ந்த பெறுபேறுகளை அடைவதற்காக பிள்ளைகளை பந்தயக் குதிரைகள் போல பழக்கி எடுக்கும் ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் நோக்கி அல்லது நகரங்களை நோக்கி பிள்ளைகள் நகர்கிறார்கள். இதனால் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள் கைவிடப்படுகின்றன. வரையறைக்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைந்தளவு பிள்ளைகளைக் கொண்ட ஒரு பாடசாலைக்கு வளங்களை விரயம் செய்ய முடியாது. எனவே சிறிய பாடசாலைகளை மூடுவது தவிர்க்கமுடியாதது என்று கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். யப்பானில் ஒரு தொடருந்துப் பாதையில் ஒரே ஒரு பிள்ளை பாடசாலைக்குப் போக வேண்டும் என்பதற்காக ஒரு ரயில்வே ஸ்டேஷனை மூடாமல் வைத்திருப்பதாக ஒரு செய்தி உண்டு. அது யப்பானில். ஆனால் இலங்கையில் அதிலும் போரால் எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளில் மிகச்சில பிள்ளைகளுக்காக அளவுக்கு அதிகமான வளங்களைக் குவிப்பதற்கு கல்விக் கட்டமைப்பும் தயாரில்லை. இவ்வாறு பாடசாலைகள் அதிகமாக மூடப்படக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட பிரதேசங்களில் அதாவது பிள்ளைகளின் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பிள்ளைகளை ஒரு மையத்தில் இணைத்து, வளங்களையும் ஒரு மையத்தில் இணைத்து,கொத்தணிப் பாடசாலைகளை உருவாக்கிய பின் அப்பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு உரிய வாகன ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஓய்வுபெற்ற கல்வி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வவுனியா வடக்கு வலயத்தில் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றின் உதவியோடு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவுப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பாடசாலையும் அவ்வாறு வாகனத்தை விட்டு ஊர் ஊராக பிள்ளைகளை ஏற்றி இறக்குகிறது. அதில் மதமாற்ற உள்நோக்கங்கள் இருப்பதாக ஒரு பகுதி இந்துக்கள் மத்தியில் சந்தேகங்கள் உண்டு. அதே சமயம் கோவில்களைப் புனரமைப்பதற்குக் கோடி கோடியாகச் செலவழிக்கும் பக்தர்களும் அறக்கட்டளைகளும் தமது ஊர்களில் உள்ள பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு வாகன ஏற்பாடுகளைச் செய்யலாம். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மட்டும் 50 பாடசாலைகள் இதுவரை மூடப்பட்டு விட்டன, அவற்றில் பெரும்பாலானவை ஒரு காலகட்டத்தில் நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய கல்விச்சூழலைக் கட்டமைத்தவை. கடந்த இரு நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட மிஷன் பாடசாலைகளுக்கு போட்டியாகவும் எதிராகவும் இந்து மறுமலர்ச்சியாளர்களும் அறக்கட்டளைகளும் கட்டியெழுப்பிய பாடசாலைகள் யாழ்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் காணப்பட்டன. ஊரின் ஒரு பகுதியில் ஓர் அமெரிக்க மிஷன் பாடசாலை அல்லது ரோமன் கத்தோலிக்க பாடசாலை காணப்படுமாக இருந்தால் அதற்குப் போட்டியாக சற்றுத் தள்ளி ஒரு சுதேச பாடசாலை கட்டப்படும். அதற்கு சரஸ்வதி, சன்மார்க்கா, சைவப்பிரகாசா… என்று ஏதாவது ஒரு இந்து மதம் சார்ந்த பெயர் வைக்கப்படும். ஊருக்குள் குறுகிய தூரத்தில் இவ்வாறு பாடசாலைகள் கட்டப்படுகையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அங்கே போய்ப் படிக்குமாறு உந்தித் தள்ளினார்கள். இவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டும் ஒரு போக்கின் விளைவாகவும்தான் நவீன யாழ்ப்பாணம் மேலெழுந்தது. இனப்பிரச்சினைக்கு அமெரிக்க மிஷனும் ஒருவிதத்தில் காரணம் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருக்கிறார். அரசாங்கம் தரப்படுதலை அறிமுகப்படுத்திய பொழுது அதனைத் தமிழர்கள் இன ஒடுக்குமுறையாக வியாக்கியானப்படுத்தினார்கள் என்ற பொருள்பட அவருடைய விளக்கம் அமைந்திருந்தது. மிஷன் பாடசாலைகளின் உழைப்பினால் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவர்களின் தொகை அளவுப் பிரமாணத்தைவிட அதிகமாக இருந்தது என்று அவர் விளங்கி வைத்திருந்திருக்கக் கூடும். இவ்வாறு போட்டிக்கு கட்டப்பட்ட பாடசாலைகளில் ஒருபகுதி இப்பொழுது மூடப்பட்டு வருகின்றது. கந்தர்மடத்தில் ஒரு பாடசாலை. கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம். ஆறுமுகநாவலரால் கட்டப்பட்ட இந்தப் பாடசாலைக்கு ஈழப்போர் வரலாற்றில் முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த பாடசாலை ஒரு வாக்களிப்பு நிலையமாக இருந்தது. அங்கே காவலுக்கு நின்ற படை வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியது. அதில் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். ஈழப் போரில் முதல்முதலாக ஒரு ரைஃபிள் கைப்பற்றப்பட்ட தாக்குதல் அது. அந்தப் பாடசாலையின் கழிப்பறைச் சுவரில் அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்துத் தப்ப முயன்ற ஒரு சிப்பாயின் ரத்தத்தில் தோய்ந்த கை அடையாளங்கள் பதிந்திருந்தன. அந்தப் பாடசாலை சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் தமது ஜனத்தொகை தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் எப்பொழுதோ வந்து விட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெறுமாறு குடும்பங்களை ஊக்குவிக்க வேண்டிய காலம் எப்பொழுதோ வந்துவிட்டது. அவ்வாறு அதிகம் பிள்ளைகளைப் பெறும் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையைக் கொடுக்கத் தேவையான கட்டமைப்புகளை தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும். அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்றும் சிந்திக்கலாம். கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் தாராளமாக உதவி வருகிறது. தனி நபர்களும் தன்னார்வ நிறுவனங்களும் பரவலாகத் தொண்டு செய்து வருகிறார்கள். தாம் படித்த பாடசாலையை மேம்படுத்த வேண்டும் என்று தாகத்தோடு பழைய மாணவர்கள் பல பாடசாலைகளுக்கு காசை அள்ளி வழங்குகிறார்கள். தமது கிராமத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக தமது முகத்தைக் காட்டாமலேயே அமைதியாக உதவிகளை செய்து கொண்டிருக்கும் பலரை நான் அறிவேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கங்களின் மீது அளவுக்கு மிஞ்சி செல்வாக்கு செலுத்துவதும் அங்கே குழப்பங்களை ஏற்படுத்துவதும் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்டுதான். ஆனால் போர்க்காலத்திலும் 2009க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உதவி மகத்தானது. அதேசமயம் புலப் பெயர்ச்சி தொடர்ந்து நிகழ்திறது. தமது முதல் பட்டப்படிப்பை முடித்த பலருக்கும் புலப்பெயர்ச்சிதான் அடுத்த கவர்ச்சியான தெரிவாகக் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை ஒரு பகுதி இளையோருக்கு கவர்ச்சியான முன் உதாரணமாக மாறிவிட்டது. இதனால் தொடர்ச்சியாக புலப்பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவும் தமிழ்ச் சனத்தொகையைக் குறைக்கின்றது. தமது நாட்டிலேயே வாழ வேண்டும்;தமது தாய் நிலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்; தனது அறிவையும் அனுபவத்தையும் தனது தாய் நிலத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும்; தமது வேரிலே நிலைத்திருந்து தமது சமூகத்துக்குப் பூத்துக் காய்க்க வேண்டும் என்ற இலட்சியப் பற்றை இளைய தலைமுறைக்கு ஊட்டக் கூடிய எத்தனை தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? இதனால் சனத்தொகை மேலும் குறைந்துகொண்டே போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆசனம் குறைந்துவிட்டது. இவ்வாறாக சனத்தொகை வீழ்ச்சியின் பின்னணியில், ஒரு காலம் போட்டிக்கு பாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகம் இப்பொழுது பாடசாலைகளை மூடிக்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேசிய அபாயகரமான ஒளடதங்கள் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வட மாகாண ஆளுநர் ஒரு விடயத்தைப் பரிந்துரைத்திருந்தார்.வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களை உருவாக்குவதற்கு போதிய இடவசதிகள் இல்லையென்றால் அவசரத் தேவைக்கு ஏற்கனவே மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் பொருத்தமானவற்றை பயன்படுத்தலாமா என்ற பொருள்பட அப்பரிந்துரை அமைந்திருந்தது. ஒரு காலம் போட்டிக்குப் பபாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகத்தில் இப்பொழுது போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்கு கைவிடப்பட்ட பாடசாலைகள் பரிந்துரைக்கப்படும் ஒரு நிலை? https://www.nillanthan.com/7625/
  3. தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு ! வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த முதலாம் திகதி கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கவிருந்த (அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது) கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின்போது மேற்படி கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்தோடு அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இருதரப்பினரும் சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 3 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அக்கட்சி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் காத்திருந்த தமது கட்சியினரை சந்திக்கவில்லை எனவும், அதுபற்றித் தமக்கு அறியத்தரவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். அதன் நீட்சியாக கடந்த 7 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்த சந்திப்பு இறுதிநேரம் வரை உறுதிப்படுத்தப்படாததன் காரணமாக, அச்சந்திப்பும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், தமிழரசுக்கட்சி விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் சந்திப்பொன்றை நடாத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர்களுக்கு அறியத்தந்திருப்பதாகவும் கூறினார். https://akkinikkunchu.com/?p=336271
  4. உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது - டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில் 10 AUG, 2025 | 11:04 AM உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார். உக்ரைன் ரஸ்யா செய்த விடயங்களிற்காக அந்த நாட்டிற்கு எந்த வெகுமானங்களையும் வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனியர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிற்கு வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்ரைன் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சில நிலங்களை கையளி;க்கவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்ரைன் மோதலிற்கு தீர்வை காண்பதற்கா 15ம் திகதி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222212
  5. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ்த் தலைமைகள் கோருவது முறையற்றது - விஜயதாச ராஜபக்ஷ 10 AUG, 2025 | 12:45 PM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. பூகோள பயங்கரவாதத்தை கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியதாக இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் தற்போது பல்வேறு வழிகளில் செயற்படுகிறது.இவ்வாறான நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வது பிரச்சினைக்குரியதாக அமையும். தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியே அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் எமது அரசாங்கத்தில் வெளிப்படையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.சிவில் தரப்பினர் உட்பட கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதாந்திரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். சட்டவரைபு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கும் தருவாயில் இருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் காலவரையை ஜனாதிபதியால் குறிப்பிட முடியுமா, இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் என்ற நம்பிக்கை கிடையாது.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணையும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் ஆயுதமாக பயன்படுத்தும். ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இருப்பினும் இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் வெளிப்படையானத் தன்மையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது சந்தேகத்துக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/222219
  6. புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார். மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின் குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். மேலும் கருத்து வௌியிட்ட அவர், "குறிப்பாக இந்த சிறு பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். புலமைப்பரிசில் பரீட்சையை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். பிள்ளைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகிறார்கள். பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு? அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம். அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம். எனவே நம் பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி, பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் திரும்பப் பெற முடியாது. எனவே இந்த குழந்தைப் பருவத்தை பதில்களை எழுதுவதை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள். புலமைப் பரிசில் பரீட்சை என்பது பிள்ளைக்கு ஒரு பரீட்சை மட்டுமே. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். https://adaderanatamil.lk/news/cme5dz9pc02d4qp4kfpcwl3e2
  7. முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துரையாடல்! அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இதன்படி, இதன் சட்டபூர்வமான நிலையை ஆராய அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் சுமார் 50 சட்டத்தரணி கொண்ட குழுவை அணுகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர் சாலையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், அரசாங்கம் நினைப்பது போல் அதை செயல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த 14 நாட்களுக்குள் இந்த புதிய சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/முன்னாள்-ஜனாதிபதிகள்-கலந/
  8. “LTTE பயங்கரவாதியான உங்கள் கணவர்” சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை! adminAugust 10, 2025 மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான இன்பராசா விஜயலட்சுமி என்பவருக்கு எதிராக எழுதப் பட்டதோடு, அவரது கணவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியாக உள்ள நிலையில் அவரை குறித்த கடிதத்தில் இணைத்து ‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி’ என குறிப்பிட்டு குறித்த கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். -குறித்த கடிதத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக அவருடைய பணியாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பலரை பழி வாங்கும் நோக்குடன் அவர்களுக்கு இடமாற்றம் வழங்குதல்,மாதாந்த சம்பளத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவரால் சுமார் 10 ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,அவர் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரித்து தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பரிமாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பாதிக்கப்பட்ட பணியாளர்கள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவர் நாட்டிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219051/
  9. குறிகாட்டுவானுக்கு அமைச்சர்கள் பயணம்! adminAugust 10, 2025 குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் சனிக்கிழமை (09.08.25) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு துறைசார் அதிகாரிகளுடன் நேரடியாக விஜயம் செய்திருந்தார். அமைச்சருடனான விஜயத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் கே. சிவகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்,நெடுந்தீவு பிரதேச செயலாளர், வேலணை உதவிப் பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள். https://globaltamilnews.net/2025/219055/
  10. ரஷ்ய மக்களும் போரை விரும்பவில்லை. ஆனால் அவர்களின் விருப்பங்களை மேட்டிமை தங்கிய புட்டின் கண்டுகொள்வதில்லை. 18 வயதுப் பையன்களை கொலைக்களத்திற்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றார். ரஷ்ய மக்கள் புட்டினையும் அவரின் அடிவருடிகளையும் துரத்த வழியில்லாமல் இருக்கிறார்கள்
  11. ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி 09 August 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியமான போர்நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 2019 க்குப் பின்னர், இந்த இரண்டு தலைவர்களும், அமெரிக்க மண்ணில் தமது முதல் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். யுக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விடுத்திருந்த காலக்கெடு நேற்று முடிவடைந்த நிலையில், இந்த சந்திப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/413712/trump-and-putin-are-set-to-meet
  12. கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலுக்கு 300 மீற்றர் தொலைவில், களப்பு கடற்கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (07) இரவு தொழிலுக்காகச் சென்ற இளைஞன், இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலை 2:30 மணியளவில், தொழிலுக்காக வந்த மற்றொரு நபர், குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளார். அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால், யானை தாக்கியிருக்கலாம் என சந்தேகித்து, இளைஞனின் தந்தையையும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரையும் அழைத்து வந்து பார்த்தபோது, உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையை ஆரம்பித்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, சடலத்தை பார்வையிட்டு, மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரிக்கவும், கைரேகை பரிசோதனை மேற்கொள்ளவும், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். பொலிஸார் மற்றும் தடயவியல் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இளைஞனின் மாமனார் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில், கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெயராஜ் சுபராஜ் என்பவரே உயிரிழந்தவர். இவர் சிறந்த மரதன் ஓட்ட வீரராகவும், வடமாகாணத்தில் பல சாதனைகளைப் புரிந்தவராகவும் அறியப்படுகிறார். https://adaderanatamil.lk/news/cme3jji4y02b6qp4kghr74zb4
  13. மாத்து - ஜெயமோகன் கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலியே வரப்பிடாது. அப்டியே ஆளைச் சாய்ச்சிடுது பாருங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அங்க இங்கன்னு கோட்டு போட்ட டாக்டருங்களுக்கு பணத்தையா அள்ளி விட்டார்” “பிறவு?”என்றேன். “எங்கிட்ட ஒருநாளைக்கு கேட்ட்டார். நம்ம இயற்கைமருத்துவம் லோகநாதன் இருக்காரே?” என் முகத்தைப் பார்த்துவிட்டு நிறைவுடன் “கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. அப்டியே கொடத்தில போட்ட வெளக்கு… ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமா ஒரு சின்ன ஊரிலே இருக்கார்.பேச்சிப்பாறை சானலை தாண்டி அந்தப்பக்கமா போனா ஒரு ஓட்டுவீடு. வாசலிலே ஆடு நிக்கும்” “எப்பவுமேயா?”என்றேன். “மேயாதப்ப நிக்கும்”என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு “அவரிட்ட கூட்டிட்டு போனேன். போனதுமே சொல்லிட்டார், மூட்டுல பிரச்சினைன்னு”. “நடக்கிறதப் பாத்தா?”என்றேன். “இல்ல, இவரை சேரோட தூக்கிட்டு போனோம்” என்று மேலும் யதார்த்தமாகச் சொல்லி, “அப்டியே கூப்பிட்டு ஒக்கார வைச்சார். நாக்க நீட்டுன்னார்” நான் “மூட்டுல இல்ல வலி?”என்றேன். “ஆமா. ஆனா பாடி ஒண்ணுதானே? ஆத்துத்தண்ணியில கரைதோறும் ருசி பாக்கணுமாடாம்பார். பெரிய ஞானி. நாக்க கூர்ந்து பார்த்துட்டே இருப்பார். ஒரு புள்ளியில குண்டூசியாலே குத்துவார். அப்டியே ஒடம்பு துள்ளும்” “வலிக்குமோ?” “பின்ன? நாக்குல நரம்பில்லாம பேசுறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நாக்கில எல்லா நரம்பும் இருக்கு. மூட்டுக்குண்டான நரம்ப கண்டுபிடிச்சுட்டார்னா அப்டியே குத்தி தூர் எடுத்து விட்டுடுவார். செரியாப்போயிரும்” ”ஆச்சரியம்தான்” என்றேன். முதுகெலும்புகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே நரம்பா இல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு நரம்பா என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பர் தொடர்ந்தார். “மாற்றுமருத்துவத்திலே பலது இருக்குது சார். சாமுண்டியப்பான்னு வெள்ளக்கால் பக்கம் ஒருத்தர்” “பாக்க சாதாரணமாத்தான் இருப்பார் இல்லீங்களா?” “எப்டி தெரியும்?”என்றார் வியப்புடன். “சொன்னாங்க”என்றேன். “ஆனா மகாஞானி. அவரோட சிகிச்சை என்னான்னாக்க எல்லாமே உள்ளங்காலிலேதான்! நம்ம பிரண்டோட பொஞ்சாதிக்கு மனசிலே ஒரு பிரச்சினை. உள்ளங்காலிலே சரியா தொட்டு மனசிலே உள்ள அந்த பிரச்சினையப் புடிச்சுட்டாருன்னா பாத்துக்கிடுங்க” “ஓகோ”என்றேன். ஐயத்துடன் “அந்தம்மா அப்ப அவங்க மனசையா ரோட்டில வச்சு நடந்திட்டிருந்துது? ரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமே?” “கழுவிக்கலாங்க. மனசிலே என்ன பிரச்சினை இருந்தாலும் கழுவிடலாம். அதுக்குத்தான் யோகக்குளியல் சிகிச்சை. சாம்பமூர்த்தின்னு ஒருத்தர் பண்றார். யோகாவால மனசை குளிப்பாட்டி விடுவார். சோப்பு, சீயக்காய்,ஷாம்பூன்னு அதிலே மூணு லெவல் இருக்கு. வேற வேற ரேட்டு ” “டிடெர்ஜெண்டு கூட தேவைப்படறவங்க இருப்பாங்க இல்லியா?” என்றேன். “சிலருக்கு ஃபினாயில்கூட வேண்டியிருக்கும்…” “பின்ன? நோய்கள் பலவகை. மோப்ப மருத்துவம் பாத்திருக்கியளா?” “மலர்மருத்துவம்னு ஒருவாட்டி யாரோ சொன்னாங்க” “இத மலமருத்துவம்னு சொல்வாங்க. மலத்தை மோந்து பாக்கிறது” “நோய் தெரிஞ்சுருமாமா? அதுக்கு லேப்லே குடுத்தா–” “இது பேஷண்டே மோந்து பாக்கிறதுங்க” “தன்னோட மலத்தையா?” “அதான் இல்ல”என்றார் மகிழ்ந்து “டாக்டரோட மலத்த…” “ஓ” என்றேன் “நெறைய தேவைப்படுமே” “அவரு மூணுவாட்டி தெனம் போவார். காலையிலே ஆணவம். மத்தியான்னம் கன்மம். ராத்திரி மாயை” “நிர்மலம்னு சொல்லுங்க” “அவரோட சம்சாரம் பேரு அதான்…மாற்று மருத்துவத்திலே பலது இருக்கு. இயற்கை உணவுண்ணு ஒண்ணு இருக்கு. மருந்தே வேண்டாம்னு சொல்வாங்க” “நோய் இல்லேன்னா எதுக்கு சார் மருந்து?” “கரெக்ட். அதான் அவங்க பாலிஸி. உணவே மருந்துன்னு சொல்லி பச்சைபச்சையா சாப்பிடுவாங்க. வாழையெலைக்கும் அதில வச்ச சாப்பாட்டுக்கும் வித்தியாசமே தெரியாம சாப்பிட்டாத்தான் அது ஆரோக்கியமான சாப்பாடுன்னு ரூல். குரங்கெல்லாம் அப்டித்தானே சாப்பிடுது” “அதுக்கு சமைச்சு குடுத்தா சாப்பிடாதா என்ன?” அவர் என்னை கடந்து சென்று “அதைச் சாப்பிட்டா நாப்பதுநாளிலே எல்லா நோயும் போயிரும்.நம்ம சகா ஒருத்தர் தமிழ்வாத்தியார். பதினாறு வருசமா சமைக்காத சாப்பாடுதான்.பெரீய ராமபக்தர். சேரிலே கூட குந்தித்தான் உக்காருவாருன்னா பாத்துக்கிடுங்க. நல்லமனுஷன், நம்மளப் பாத்தா அப்டியே ஒரு ஜம்பு…” எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ”இவங்க இப்டீன்னா மருந்தே உணவுன்னு ஒரு குரூப்பு இருக்கு. அவங்க வேற டைப்பு” என்றார் நண்பர் “ஒரே மூலிகையா சாப்பிடுவாங்க. கொல்லைக்குப்போறதே லேகியம் மாதிரி இருக்கும்னா என்னத்தச் சொல்ல?” “ஓகோ” என்றேன்.“அதை வேற ஏதாவது மாற்றுமருத்துவத்துக்கு யூஸ் பண்றாங்களா?” “இன்னும் இல்லீங்க” என்றார். ஆசுவாசமாக உணர்ந்தேன் “ஏதோ இந்தமட்டுக்கும்…” என்றேன். “ஹீலிங்னு ஒண்ணு இருக்கு. ஹீலர் ஆஸ்கார்னு ஒருத்தர். அவர் என்ன சொல்றார்னா நோயே இல்லேன்னு” “அப்ப அவர் எதை ஹீல் பண்றார்?” “இப்ப இலுமினாட்டின்னு ஒரு குரூப்பு இருக்குங்க இல்லியா?” ”பொம்மனாட்டீன்னு மாமிகள சொல்வாங்களே” “அதேமாதிரிதான். அவங்க சர்வதேச ஆரியச் சதி. அவங்க நம்மள பாதிக்காம இவரு நம்மளைக் குணப்படுத்திட்டே இருப்பார்” “அதுக்கு அவங்களையே குணப்படுத்தலாமே” “இன்னொருத்தரு ஃபீலர் மாதவன்னு பேரு. நாம நோய சொன்னாலே போரும் அப்டியே அளுதிருவார். அவர் ஒருபாட்டம் அளுதிட்டார்னா நம்ம மனசு லேசாயிரும்ங்க” எனக்கு இது கொஞ்சம் நம்பும்படியாக இருந்தது. ஒரு மனிதன் நமக்காக அழுகிறான் என்றால்… “வெங்காயம் மாதவன்னு சொன்னா ஊர்ல தெரியும்” என்றார் நண்பர் “ஓகோ” “ஹோமியோ வேற மாதிரி” என்றார் நண்பர் “எந்த அளவுக்கு கம்மியா கெமிக்கல கலக்கிறோமோ அந்தளவுக்கு வீரியம் ஜாஸ்திங்கிறது அவங்க பாலிசி. குண்டுமணி அளவுக்கு பாஸ்பரஸை எடுத்து அண்டாத்தண்ணியில கலக்குவாங்க. அதில ஒரு ஸ்பூன் எடுத்து மறுபடி ஒரு அண்டாத்தண்ணியில கலக்குறது. அதில ஒரு ஸ்பூன் எடுத்துமறுபடியும் ஒரு அண்டாத்தண்ணியிலே..அதில—” “அப்றம்…?” “அந்தக் கடைசீ தண்ணி இருக்கே அதோட வீரியம் அணுகுண்டு மாதிரியாக்கும். நின்னு கேக்கும். நம்ம ப்ரண்டோட தம்பி ஒருத்தனுக்கு தலைச்சுத்து. ஒக்காந்தா வாந்தி. நேரா போயி நம்ம கேசவபிள்ளைய பாத்தான். நாலு மடக்கு மருந்து குடுத்தார். நின்னிட்டுது” நான் பெருமூச்சுவிட்டேன் “கும்பகோணத்திலே ஒரு ஹோமியோ இருக்கார். இருக்கிறதிலேயே எசன்ஸை கம்மியா கலக்கின தண்ணி அவரு குடுக்கிறதுதான். காவேரியிலே அவரோட கெமிக்கல கலக்கிட்டு காவேரித்தண்ணியையே குடுக்கிறார். நல்லா கேக்குது” “எப்ப கலக்கினார்?” “அவரெங்க கலக்கினார்? அவங்க அப்பாதான் கலக்கினது…”என்றார் நண்பர் “இப்ப உங்க பிரச்சினைக்குத் தொடுவர்மம்கூட நல்லா கேக்கும். உடம்பிலே அங்கங்க தொடுறது…” “வேணாங்க எனக்கு கிச்சுகிச்சு ஜாஸ்தி”என்றேன் “சயண்டிஃபிக் டிரீட்மெண்டுங்க” என்றார்.”மாயநாதன்னு ஒருத்தர்.பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். பொம்புளையாளுங்களுக்கு குச்சி வச்சு தொடுவார். முஸ்லீம் பொம்புளைங்கன்னாக்க நெழலையே தொட்டு குணப்படுத்தீருவார்” “பயங்கரமா இருக்கு” என்றேன் “இருக்குல்ல? சார் மாற்றுமருத்துவம்னா சும்மா இல்ல. இங்கிலீஷ்ல நாலஞ்சு வார்த்தைய வாசிச்சுட்டு வெள்ளைக்கோட்ட மாட்டீட்டு பணத்த கறக்குற பிஸினஸ் இல்ல. தெய்வீகமான மருத்துவம். காலு கையின்னு தனியா பிரிச்சு செய்றதில்ல. ஹோலிஸ்டிக் மெடிசின்…” என்றார் நண்பர் “எனிமா மருத்துவம்னு ஒண்ணு இருக்கு. அதான் பெஸ்ட்” “என்ன பண்ணுவாங்க?” “எனிமா குடுக்கிறதுதான்” “எல்லா நோய்க்குமா?”என்றேன் “ஆமா, பின்ன?” “வயித்துப்போக்குக்கு?”என்றேன். “அதுக்கும்தான்”என இயல்பாகச் சொல்லி “அதில வெளக்கெண்ணை எனிமான்னு ஒண்ணு இருக்கு. அது மூட்டுநோய்க்கு நல்லது. போட்டுக்கிட்டா நடக்கிறது ஸ்மூத்தா இருக்குன்னு நம்ம பொஞ்சாதியோட தம்பி சொன்னான்” நான் பெருமூச்சுவிட்டேன். “உங்க மச்சினர் இப்ப எப்டி இருக்கார்?” “செல்போனிலே கூப்பிட்டேன். பேசமுடியல்லை. நேரா சங்கரன்கோயிலிலே சம்முவம்னு ஒருத்தர் இருக்கார். பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். போயிப்பாருங்கன்னு சொன்னேன்” நான் தெளிந்து “அவரு என்ன பண்றார்?”என்றேன் “அறை மருத்துவம்சார்” “ரூம்லயா?” “இல்ல”என்றார் “போனதுமே பளார்னு ஒண்ணு விடுவார் பாருங்க. அப்டியே நோய்லாம் பறந்திரும். நம்ம தம்பி மச்சானுக்கு அங்கயே சரியாயிடுச்சுன்னா நம்ப மாட்டீங்க” “பல்வலியா?” “எப்டி கண்டுபிடிச்சீங்க?” மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 21, 2015 https://www.jeyamohan.in/72144/
  14. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு August 8, 2025 பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக, தற்போதைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், நிகழ்நிலை காப்புச்சட்டத்தை மாற்றம் செய்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல் ஜி.எஸ்.பி பிளஸ் வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதில் அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். https://www.ilakku.org/anti-terror-law-repeal-eu-agreement/
  15. யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பதில் சந்தேகம் General08 August 2025 யுக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் அதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. வாசிங்டனும் மொஸ்கோவும் ஒரு சாத்தியமான உச்சி மாநாட்டை எவ்வாறு நடத்தப்போகின்றன என்பது குறித்து இதுவரை அறிவிப்புக்கள் வெளியிடவில்லை. இந்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் என்று கிரெம்ளினும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு நடைபெற்றால் 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் புடின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தமைக்கு பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதலாவது சந்திப்பாக அது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சந்திப்பின்போது யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியும் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் செலன்ஸ்கியை சந்திக்கப்போவதில்லை என்று புடின் தெரிவித்துள்ள நிலையில், புடினுடனான சந்திப்பில், செலன்ஸ்கி இணைத்துக்கொள்ளப்படுவதைத் தாமும் விரும்பவில்லை என்று ட்ரம்ப்பும் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/413561/ukraine-ceasefire-trump-and-putin-meeting-in-doubt
  16. காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் 08 August 2025 காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹமாஸைத் தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது. அத்துடன் பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பிரதேசத்திற்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்கவும், தமது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அழுத்தத்தை, இஸ்ரேல் எதிர்கொள்ளும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தநிலையில், காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகள் ஆகியவற்றை விபரிக்கும் ஒரு அறிக்கையை நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது அமைச்சரவை பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது. ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது. அனைத்து பணயக்கைதிகளையும் - உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் திருப்பி அனுப்புதல். காசா பகுதியை இராணுவ மயமாக்குதல். காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு. ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபை அல்லாத ஒரு மாற்று சிவில் அரசாங்கத்தை நிறுவுதல் என்பன இந்த ஐந்து அம்சத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/413568/israeli-defense-cabinet-approves-plan-to-capture-gaza-city
  17. பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை முருகானந்தன் தவம் இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முந்தைய பாராளுமன்றத்தில் பணியாற்றிய பாராளுமன்ற ஊழியர்களில் பெரும்பாலோர் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான சிறீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். சிறீதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களைப் பராமரித்து வருவதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார். இந்த முறைப்பாட்டாளர் ரணில் விக்ரமசிங்கவின் தீவிர ஆதரவாளர். அவர் முன்னாள் சிங்கள அமைச்சர்கள், எம்.பிக்களின் சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு பல முறைப்பாடுகளை செய்துள்ளவர். ஆனால் ‘’எனக்கு முகம் தெரியாத சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிதிக்கேற்ற புலனாய்வு பிரிவில் சொத்துக் குவிப்பு சம்பந்தமாக என் மீது முறைப்பாடு செய்திருக்கிறார். இந்த விடயத்தை நல்லதொரு விடயமாகவே நான் பார்க்கிறேன். என்னுடைய பெயரிலேயோ அல்லது என்னுடைய குடும்பத்தினரின் பெயரிலேயோ இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ சொத்துக்கள் இருந்தால் அது தொடர்பில் நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவினர் கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களது தார்மீக கடமை என தெரிவித்திருக்கும் சிறீதரன், என் மீதான இந்த அவதூறான செயற்பாட்டுக்குப் பின்னால் தமிழரசு கட்சியின் தலைமை பதவி தொடர்பில் எனக்கெதிராக நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்கும் தரப்பினரே இருப்பதாகவும் , தமிழரசு கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது என்னோடு சேர்ந்திருந்து எனது கைகளைத் தூக்கி, என்னோடு இணைந்து செயற்படுவதாகக் கூறியவர்களே ,கட்சியில் இணைந்து 6 மாதங்களே ஆகாதவர்களை வைத்துக்கொண்டு, பின்னணியில் இருந்து கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து இடைக்காலத் தடையைப் பெற்றிருந்தார்கள். அந்த அடிப்படையில், இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் பின்னால் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நிதி குற்றப் புலனாய்வு பிரிவை நம்பி என்மீது சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சஞ்சே மகாவத்த என்ற நபருடைய முறைப்பாட்டை ஏற்று உரிய விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அவசியம் . என்னிடம் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அதனை உறுதிப்படுத்தவேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. வருடாந்தம் என்னுடைய சொத்து விபரங்களைப் பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பதோடு, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற பிரிவுக்கும் கையளித்து வருகிறேன். இணையத்தளங்களில் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் என்னுடைய சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என்னுடைய சொத்து விபரங்கள் என்பது வெளிப்படையானது. இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவனாக என்னுடைய சொத்து விபரங்களை வெளிப்படையாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாக வெளியிட்டு வருகிறேன். அதனை எவரும் பார்க்கமுடியும். ஆகவே, என் மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைப்பாட்டை ஏற்று விரைவாக விசாரணைகளை ஆரம்பித்து உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையை நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார். சிறீதரன் மீதான இந்த சட்ட விரோத சொத்துக்குவிப்பு முறைப்பாட்டின் பின்னணியில், அவரது தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைகள் சம்பந்தப்பட்டிருப்பது உள் வீட்டுத் தகவல்களாகக் கசிந்துள்ளது. இதற்கு சிறீதரன் எம்.பியை தமிழரசுக் கட்சியிலிருந்து மட்டுமல்லாது எம்.பி. பதவியிலிருந்தும் அகற்றுவதே இந்த தலைகளின் திட்டமாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தலைமைக்கு சிறீதரன் கட்டுப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துத் தோற்றவர்கள், சிறீதரன் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை சுமத்தி தோற்றவர்கள் தற்போது சிங்களத்தரப்போடு சேர்ந்து சிறீதரன் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், கட்சி நடவடிக்கையாக சிறீதரன் மீது கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமை குற்றச்சாட்டுடன் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டையும் முன் வைத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதே இவர்களின் திட்டம். தமிழரசுக் கட்சியின் இந்த பெரிய தலைகளுக்கு சிறீதரன் மீது ஏன் இந்த வன்மம் என் று பார்த்தால் அது சிறீதரன் மீதான வன்மம் அல்ல அவரின் எம்.பி. பதவி மீதான மோகமே காரணம் என உள்வீட்டுத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழரசின் தலைவர் பதவியிலும் பாராளுமன்ற எம்.பி. பதவியிலும் சிறீதரனிடம் தோற்றவர்களினால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் ‘’மக்களினால் தெரிவு செய்யப்பட்டால் மட்டுமே பாராளுமன்றம் செல்வோம் .தேசியப்பட்டியல் மூலம் ஒருபோதும் பாராளுமன்றம் செல்ல மாட்டோம் ‘’ என தெரியாத்தனமாக சூளுரைத்துவிட்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் தோற்று இன்று தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமுடியாத நிலை. அதனால்தான் சிறீதரனை ஏதோவொரு வழியில் கட்சியிலிருந்து வெளியேற்றினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும் .அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் சிறீதரனுக்கு அடுத்ததாக வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில், பாராளுமன்றம் செல்லமுடியும் என்ற திட்டத்தில் சிறீதரனின் எம்.பி. பதவி மீது இலக்கு வைத்தே இவ்வாறு தொடர்ந்தும் சிறீதரனை வீழ்த்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்கின்றது அந்த உள்வீட்டுத்தகவல். சிறீதரனின் எம்.பி.பதவிக்கு எவ்வேளையும் ஆபத்து ஏற்படலாம் என்பதனை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அளித்துள்ள விளக்கமொன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.அந்த விளக்கத்தில் சுமந்திரன் பின்வருமாறு கூறுகின்றார். கட்சியின் ஒழுக்கக் கோவையுடன் இணைந்து செயற்பட முடியாதவர்கள் தாராளமாக வெளியே போகலாம்.கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு மாறாக, செயற்படுவதனை எந்த மானமுள்ள அரசியல் கட்சியும் அனுமதிக்காது. கட்சிக்குள் இருந்து கொண்டு பலவிதமான கேள்விகளை எழுப்பலாம் கருத்துரைக்கலாம். கட்சி செய்வது தவறு என்று கூறலாம். இவை செவிமடுக்கப்படும். ஆனால், இறுதியில் ஒரு தீர்மானத்தைக் கட்சி எடுத்தால் அந்த தீர்மானத்திற்கு ஆதரவில்லாமல் பேசியவர்கூட கட்சியின் தீர்மானத்தோடு சேர்ந்து நிற்க வேண்டும். வெளியே போய் நின்று கொண்டு நான் இதனை எதிர்த்தேன். எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என சொல்வது முறையற்ற செயற்பாடு. கட்சி கட்டுப்பாட்டோடு இயங்காது விட்டால், அது ஒரு கட்சி அல்ல. கட்சி ஒரு கொள்கையை அறிவித்தால் இல்லை அதனை நான் ஏற்கமாட்டேன் என்றால், அவர் வேறு கட்சிக்குப்போக வேண்டும். இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இந்த விடயத்தில் எமது மத்தியக் குழுவும் செயற்குழுவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்சியின் தீர்மானம். கொள்கைக்கு மாறாக, செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அவர்கள் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்ட ரீதியாகக்கூட நிவாரணம் எதுவும் கிடைக்காது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. எனவே, கட்சி ஒழுக்கக் கட்டுப்பாடு காரணமாக நடவடிக்கை எடுக்கும்போது, எந்த நீதிமன்றமும் அதில் தலையிடாது. ஆகவே, எதையும் செய்து விட்டு கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கு நான் இணங்க மாட்டேன். இது என்னுடைய சுதந்திரம், நான் இன்னொரு வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொல்லி நடப்பவர் கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால், வழக்கம் போலவே சிறீதரனின் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படாமை, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிறீதரனிடம் தோற்றதுபோலவே இந்த சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டிலும் இந்த பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலையே உள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெரிய-தலைகள்-தோற்றுப்போகும்-நிலை/91-362524
  18. மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னார்-காற்றாலை-திட்டத்தை-இடைநிறுத்த-தீர்மானம்/175-362550
  19. பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். பற்றி எரியும் தீ ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக பரவியது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு தெரியவில்லை,ஆனாலும் இந்த பகுதி இராணுவத்தினுடைய எல்லை இல்லை, பொதுமக்கள் வந்து இங்கே மட்டைகளை வெட்டுவது, பனம் பழம் பொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஒருபோதும் இராணுவத்தினர் தடுத்ததில்லை.ஆனாலும் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு காட்டுப்பகுதியால் சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்துள்ளார்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.[ https://newuthayan.com/article/பனை_மரங்களுக்கு_தீ_வைத்த_விஷமிகள்!
  20. திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது நேற்றையதினம் (07) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றுவரை முன்னெடுக்கப்படவுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரைக்கு_எதிரான_போராட்டம்!
  21. ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு August 7, 2025 6:53 pm ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் மற்றும் பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி அகலங்க உக்வத்தே, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார். குறித்த பதிவு, ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், ஒரு பெண் மற்றும் ஜனாதிபதி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் படங்கள் மற்றும் பிற பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியதாகக் கூறினார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்தப் புகாரைப் பதிவு செய்ததாகவும், இந்தச் செய்தி மற்றும் தொடர்புடைய தகவல்களைப் புகாரளித்த சமூக ஊடகக் கணக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். மேலும், முற்றிலும் ஆதாரமற்ற இந்த பதிவுகள் சமூகத்தை தவறான வழியில் வழிநடத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://oruvan.com/rumor-linking-the-president-with-a-woman-complaint-filed-with-cid/
  22. ஒரு எச்சரிக்கை! August 6, 2025 — கருணாகரன் — ஈழத் தமிழர்களுடைய அரசியல், முன்னெப்போதையும் விட இப்பொழுது பல முனைப்பட்டுள்ளது. பல முனைப்பட்டுள்ளது என்றால், அது ஏதோ முன்னேற்றமான – நல்விளைவுகளை உருவாக்கக் கூடிய மாற்றம் என்று அவசரப்பட்டுக் கருதிவிட வேண்டாம். இது சிதைவை நோக்கிய – எதிர்மறை அம்சங்களை உருவாக்கக் கூடிய பல – முனைகளாகும். உண்மையில் பல கோணங்களில், பல முனைகளில் இயங்குவது என்பது ஜனநாயக அடிப்படையில், பல சிந்தனைகளைக் கொண்டதாக இருப்பதாகும். அப்படி இருக்குமானால், அதனால் நன்மைகள் விளையும். முன்னேற்றம் ஏற்படும். அத்தகைய பன்முனைகள், பன்மைத் தன்மையை உள்ளீடாகக் கொண்டவை. அவை அழகுடையவை. அது ஆரோக்கியமான ஒன்றாகும். இது அப்படியானதல்ல. இந்தப் பன்முனைகள் என்பது, பல துண்டுகளாக, அணிகளாகச் சிதைவது. முன்னையது ஆரோக்கியமானது என்றால், பிந்தியது, பின்னடைவைத் தரக்கூடியது. பாதகமானது. ஏனென்றால், இங்கே நிகழ்ந்திருப்பது, சிந்தனையின் முதிர்வினாலான வெவ்வேறு நிலைப்பாடுகள், போக்குகள், பரிமாணங்கள், பரிணாமங்கள் அல்ல. இவை தனிநபர் மற்றும் அணி முரண்பாடுகளினால் உருவான முனைப்புகள். எனவே இதை நாம் சிதைவின் முனைப்பு என்றே சொல்ல வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகளாக ஈழத் தமிழரின் அரசியல் இப்படியிருக்கவில்லை. அப்பொழுதும் மாற்றுத் தரப்புகள், பிற அரசியற் போக்குகள் இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியக் கட்சிகளுக்கான ஆதரவு எனப் பல முனைகளும் முனைப்புகளும் இருந்தன. இருந்தாலும் தமிழரசுக் கட்சி பின்னாளில் அதனுடைய வழித்தோன்றலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவையே பெருந்திரள் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. தமிழ்த்தரப்பாகவும் அவையே கருதப்பட்டன. இன்னொரு நிலையில் 1980 களில் 30 க்கு மேற்பட்ட ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்ததையும் நினைவு கொள்ளலாம். ஆனால், அப்படியெல்லாம் இருந்தது பல சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக வெளியே தோன்றினாலும், நடைமுறையில் அவை தம்முள் குறுகிச் சிறுத்து, சிதைவை உள்மையமாகவே கொண்டிருந்தன. என்பதால்தான் எந்த இயக்கமும் வரலாற்றில் நிலைகொள்ள முடியாமல் போனது. மட்டுமல்ல அவை அனைத்தும் பெருந்திரள் மக்களிடம் செல்வாக்குச் செலுத்தவுமில்லை. அப்படித்தான் முன்னரும் பிற தரப்புகள் – மாற்று அரசியல் தரப்பினர் போன்ற சக்திகளும் மக்களிடம் பேராதரவைப் பெறவில்லை. நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் அத்தகைய மாற்று அரசியல் செல்வாக்குப் பெறவில்லை. அதாவது, அவற்றின் உள்ளடக்கச் செழுமைக்கு ஏற்றவிதத்தில் மக்களிடம் அவை செல்வாக்கைப் பெறத்தவறின. என்பதால், தமிழ்த்தேசிய நிலைப்பட்டிருந்த அல்லது ‘ஏகப்பிரதிநிதித்துவம்’ என்றுசொல்லப்பட்ட ‘தமிழ்த்தேசியவாத அரசியல்’தான் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. புலிகளின் காலத்திலும் புலிகளுக்குப் பின்னும் கூட இந்த நிலைமையே நீடித்திருந்தது. ஆக, நீண்ட காலமாக ஒருமுகப்படுத்தப்பட்ட (ஏகநிலைப்பட்ட) அரசியலே ஈழத் தமிழர்களுடையதாக இருந்தது. அது முற்போக்கானதோ பிற்போக்கானதோ என்பதற்கு அப்பால் இதுதான் உண்மையான நிலைமையாகும். இந்த நிலையில் தற்போது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சரியாகச் சொன்னால் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த்தேசியவாத அரசியல் இப்பொழுது சிதறுண்டுள்ளது. சிதறுண்டுள்ளது என்பதன் பொருள், தலைமைத்துவக் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அல்லது தலைமைத்துவக் கடப்பாட்டை இழந்து நிற்கிறது. அதனால் பல அணிகள்,குழுக்கள் எனப் பிளவுண்டு சிதைந்திருக்கிறது. கருத்து நிலையில் மட்டுமல்ல, அணுகுமுறைகளில், செயற்பாடுகளில், கட்டமைப்புகளில் எல்லாம் இந்தப் பிரிவையும் பிளவையும் அவதானிக்கலாம். தமிழ் இனத்துவ அடையாள அரசியலை 1970 க்கு முன்னர் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் அடுத்தடுத்துத் தலைமை தாங்கினர். சரி பிழைகளுக்கு அப்பால் இவர்கள் இருவரையும் ஏற்றுச் செல்கிற போக்கு அரசியற் தரப்பினரிடத்திலும் இருந்தது. தமிழ்ச்சமூகத்திடமும் இருந்தது. பிறகு இதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுவீகரித்துக் கொண்டார். 2009 வரையில் தன்னைத் தமிழ்த் தேசியவாதத்தின் தலைமைச் சக்தியாக ஸ்தாபித்து வைத்திருந்தார் பிரபாகரன். 2009 க்குப் பிறகு, புலிகளின் வீழ்ச்சியோடு இந்த நிலை சிதையத் தொடங்கியது. புலிகளின் வீழ்ச்சியோடு நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் புலிகளை ஆதரித்த சக்திகள் பிளவு பட்டன. ஆனாலும் இலங்கைச் சூழலில் நிலவிய அரசியல் நெருக்கடிகள், ஆட்சித்தரப்பினரின் இறுக்கமான போக்குகளால் தமிழ்த்தேசியவாதம் என்ற அடையாளமும் அதற்கான கட்டமைப்பும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) மெல்லிய அளவிலேனும் பேணப்பட்டது. இதற்கு ஒரு எல்லைவரை, தளம்பல்களுடன் சம்மந்தன் தலைமை தாங்கினார். சிதைவுகளைக் கட்டுப்படுத்தி, மீளமைப்பை அல்லது ஒருங்கிணைப்பைச் செய்யக் கூடிய அளவுக்கு அவருடைய தலைமைத்துவம் கடப்பாட்டுச் சிறப்புகளைக் கொண்டிருக்கவில்லை. அதனால், அந்தக் கட்டமைப்பும் (கூட்டமைப்பும்) பின்னாளில் சிதைவடையத் தொடங்கியது. இதனால் தமிழ் அரசியல் பரப்பில் வெவ்வேறு நிலைப்பாடுகளும் அணிகளும் படபடவெனத் தோற்றம் பெற்றன. எல்லா இடங்களிலும் பல அணிகளும் கட்சிகளும் உருவாகின. முன்னெப்போதும் இல்லாத ஒரு வளர்ச்சியாக கிழக்கில், கிழக்கு மைய அரசியற் சிந்தனையும் அரசியற் சக்திகளும் தலையெடுத்தன. வடக்கிலும் பல கட்சிகள் உதயமாகின. இப்பொழுது தமிழ்த்தேசிவாத அடையாளத்தைச் சுமந்தபடி 12 க்கு மேற்பட்ட கட்சிகள் இலங்கையில் உண்டு. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என மூன்று பிரதான அணிகள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் இதை விட அதிகமுண்டு. அங்கே இமாலயப் பிரகடத்தினர் ஒன்றாகவும் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்போர் ஒன்றாகவும் பிரபாகரன் இறந்து விட்டார் என்போர் இன்னொன்றாகவும் நாடு கடந்த தமிழீழத்தினர் வேறொன்றாகவும் எனப் பல அணிகள். இவ்வாறு பல முனைகளில், பல நிலைப்பட்டதாக, பல அணிகளாக, குழுக்களாக சிதைவடைந்த தமிழ்த் தேசியவாத அரசியலில் மிஞ்சியிருப்பது வெறும் பிரகடனங்களும் வரட்சியான அரசியல் போக்குமே. இவற்றில் எந்த ஒரு தரப்பிடமும் செயற்திறனும் புத்தாக்கச் சிந்தனையும் இல்லை. எல்லாம் ஒன்றை ஒன்று நிராகரிப்பதிலும் அதற்கான காரணங்களைத் தேடுவதிலும் குறியாக உள்ளனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களை மீள்நிலைப்படுத்துவதைப்பற்றிச் சிந்திப்பனவாக இல்லை. மட்டுமல்ல, தோற்கடிக்கப்பட்ட அரசியலை எத்தகைய அடிப்படையில் வெற்றியடையச் செய்யலாம் என்று முயற்சிப்பதாகவும் கடந்த காலப் படிப்பினைகளிலிருந்தும் உலக அரசியல் போக்கிலிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. ஏனென்றால், சிதைவில் உருப்படியானவற்றை எதிர்பார்க்க முடியாது. சிந்தனையினால் வேறுபடும் நிலை இருந்தால்தான் வித்தியாசங்களும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் வளர்ச்சிப் போக்கும் காணப்படும். இங்கே நிலவுவது தனிநபர் அல்லது அணி வேறுபாடுகள், போட்டிகள் என்பதால் இவற்றுக்கிடையே காழ்ப்பும் அதனடியான குழிபறிப்புகளும் அதற்கான பழித்துரைப்புகளுமே மிஞ்சியிருக்கும். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். என்பதால்தான் ஒவ்வொரு அணியும் மறு அணியை நிராகரிக்கும் விதமாக நடந்து கொள்கிறது. ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை இழக்காரம் செய்கிறது. அப்படித்தான் புலம்பெயர் சூழலிலும் ஏட்டிக்குப் போட்டியும் ஒன்றை ஒன்று நிராகரிப்பதும் நடக்கிறது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்திய சமூகம், அதற்காகப் பல்லாயிரக் கணக்கானோரைப் பலி கொடுத்த (தியாகம் செய்த) ஒரு இனக்குழாம், தன்னுடைய அரசியல் பின்னடைவைக் குறித்தோ, பாதிப்பைக் குறித்தோ, தோல்வியைக் குறித்தோ சிந்திக்காமல், வெற்றி பெறுவதைப்பற்றி எண்ணாமல், இப்படிச் சிதைந்து கொண்டிருப்பது அதனுடைய நிரந்தர அழிவுக்கே இட்டுச் செல்லும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இந்தப் போக்கின் உச்சமாகவே புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சுவிற்சர்லாந்தில் இந்த ஓகஸ்ட் மாதத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அஞ்சலி செலுத்தக் கூடாது என்ற எதிர்ப்பும் வலுவடைந்துள்ளது. இரண்டு தரப்பும் பகிரங்கமாகவே மோதுகின்றன. இந்த மோதுகை அர்த்தமற்றது மட்டுமல்ல, காலம் கடந்த ஒன்றுமாகும். 16 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் இறந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தெரிந்து கொண்டே இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து இப்பொழுது சண்டையிடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? அப்படித்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உச்ச முரண்பாடு நிலவுகிறது. ஒரு தரப்பு 13 ஆவது திருத்தம் – மாகாணசபையிலிருந்து மேலே போவோம் என்கிறது. இன்னொரு தரப்பு மாகாணசபையைப் பற்றிய பேச்சே எடுக்கக் கூடாது என்கிறது. இதனால் யாருக்கு லாபம்? எதிர்த்தரப்புக்குத்தானே! இப்படியே பிளவுண்ட – எதிரெதிரான – முரண்பட்ட போக்கினால் பலமடைவது நிச்சயமாக எதிர்த்தரப்புகளேயாகும். நிச்சயமாக மக்களல்ல. எதிர்த்தரப்புகள் பலமடையும்போது இந்தத் தரப்புகள் பலவீனப்படுகின்றன. இந்தத் தரப்புகள் பலவீனப்படும்போது இவற்றை ஆதரிக்கும் மக்களும் பலவீனப்படுகிறார்கள். தமிழ் (தேசியவாத) அரசியலின் நிலையும் தமிழ் மக்களின் நிலையும் இன்று இதுதான். ஆனாலும் இதையிட்ட கவலைகளோ, மீள்பார்வையோ, குற்றவுணர்ச்சியோ இந்தத் தரப்புகள் எவற்றிடமும் இல்லை. தமிழ் ஊடகப்பரப்பு, சிந்தனைப் பரப்பு போன்றவற்றிலும் இல்லை. அல்லது போதாது. காரணம், மக்களுக்கான அரசியலை செய்வதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்தித்தால்தானே அதில் உள்ள சிக்கல்கள், தவறுகள், முரண்பாடுகள், போதாமைகள் பற்றியெல்லாம் தெரியும். இவை செய்து கொண்டிருப்பதோ தனிநபர் அல்லது அணி அல்லது குழு அல்லது கட்சி அரசியல் மட்டுமே. என்பதால் அதற்கான, அதற்கு அளவான அளவில்தான் இவை சிந்திக்கின்றன. அந்தளவில்தான் இவர்களால் – இவற்றில் சிந்திக்க முடிகிறது. எனவேதான் தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று சிதைந்து பலவீனப்பட்டுள்ளது என்கிறோம். இதை மாற்றிப் புதிதாகச் சிந்திக்க வேண்டுமானால், உலகளாவிய அரசியல் மாற்றங்கள், தேசியவாத அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமாற்றங்கள், அதனுடைய வளர்ச்சி, பிராந்திய அரசியல் சூழல், உலகளாவிய பொருளாதாரப் போக்குகள், உள்நாட்டு நிலைவரம், மக்களின் நிலைமை, பின்போர்க்காலச் சூழல், ஜனநாயக அடிப்படைகளைப் பேணும் அக்கறை எனப் பலவற்றிலும் விரிவு கொள்ள வேண்டும். அதற்கான உள நிலை முக்கியமானது. தனிநபர் முதன்மைப்பாடு, கட்சி நலன், குழு மனோபாவம் போன்றவற்றைப் பேணிக் கொண்டு இவற்றைப் பற்றிச் சிந்திக்க முடியாது மக்கள் நலன் அரசியலை முன்னெடுக்கவும் ஏலாது. இரண்டும் எதிரெதிர் துருவங்களாலானது. ஆகவே, மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கான ஒழுக்கத்துக்கு – முறைமைக்கு – தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்போதையும் விட மோசமான பின்னடைவையே தமிழ் அரசியலும் தமிழ்ச் சமூகமும் சந்திக்கும். இது எச்சரிக்கைதான். https://arangamnews.com/?p=12244
  23. சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ் 7 Aug 2025, 1:14 PM சூது செய்து தம்மிடம் இருந்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சிப்பதாக அவரது தந்தையும் பாமக நிறுவனர் -தலைவருமான டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடுமையாக உழைத்து தண்ணீருக்குப் பதில் வியர்வையை ஊற்றி பாமகவை வளர்த்தேன். பாமக எனும் ஆலமரத்தின் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர். அன்புமணி என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது பச்சை பொய். சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிப்பதற்கு அன்புமணி முயற்சிக்கிறார். அன்புமணியிடம் கட்சியை தந்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது என்றார் ராமதாஸ். முன்னதாக பாமகவின் சிறப்பு பொதுக்குழுவை ஆகஸ்ட் 17-ந் தேதி கூட்டுவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அன்புமணி பாமகவின் பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளது. https://minnambalam.com/anbumani-trying-to-snatch-pmk-from-me-through-deceitful-means-ramadoss/#google_vignette
  24. 2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன? 2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன. ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது. பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது. அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர். இந்தக் குறிவைப்பில் ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் சிலவற்றின் சார்பில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை. பொதுவெளியில் தமது நிகழ்ச்சிநிரல் பற்றிய தடயங்கள் அதிகம் வெளிப்படாத வகையில் செயற்படவேண்டும் என்ற திட்டத்தோடு இவை இயங்குகின்றன. இந்த மறைபொருளான நிகழ்ச்சிநிரல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களிடம் இது பற்றிக் கேட்டால், அக் கேள்விகளைச் சதிக் கோட்பாடுகளாக கருதி அவற்றைத் தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு பலரிடம் 2015 இல் காணப்பட்டதைப் போலவே தற்போதும் காணப்படுகிறது. இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்படவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ள பின்னணியில் ஈழத்தமிழர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானம், தமிழர்கள் எதிர்ப்பார்ப்பது போன்று அமையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இப் பின்னணியில்தான் 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை ஒத்த கருத்தியல் மீண்டும் எழக்கூடும் என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை. https://akkinikkunchu.com/?p=335891
  25. ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.! ஆகஸ்ட் 07, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (07.08.2025) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. மன்னார் காற்றாலை மின் கோபுரங்கள் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். https://www.battinatham.com/2025/08/blog-post_37.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.