Everything posted by கிருபன்
-
வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன்
வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன் 04 JUL, 2025 | 02:46 AM வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான ஒரு தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தேசியமக்கள் சக்தி அரசு எடுத்துள்ளது. அந்தவகையில் கடந்த 2012ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் கூகுள் வரைபடத்தின் மூலம் வனவளத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். குறிப்பாக இந்த மாவட்டத்தில் அண்ணளவாக 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 52ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது. அவை அனைத்தையும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் விடுவிக்கவுள்ளது. அந்த காணிகளை அதன் உரிமையாளர்களுக்கும் காணிகள் அற்ற மக்களுக்கும் வழங்குவதற்கான துரித நடவடிக்கையினை நாம் மேற்கொண்டுள்ளோம். அத்துடன் வவுனியாவில் 849 குளங்கள் உள்ளது. அதில் 221 குளங்கள் வனவளதிணைக்களத்தின் எலைக்குள் அமைந்துள்ளது. இவற்றில் தற்போது 44 குளங்களை உடனடியாக விடுவித்து அவற்றை மீளவும் புணர்நிர்மானம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் காடுமண்டி காணப்படுகின்ற ஏனைய 149 குளங்களை மீட்டு அவற்றை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்படும்.இந்த வருடத்திற்குள் அந்த பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த மாவட்டத்தில் ஆறு பெரிய நீர்பாசன குளங்கள் உள்ளன. அவற்றை புணரமைப்பதற்காக 780 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது. அந்த நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணி விடுவிப்பின் முதற்கட்டமாக நெடுங்கேணியில் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களை அடையாளப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நேற்றயதினம் ஆரம்பித்து வைத்தோம். வவுனியா வடக்கு பிரதேச்செயலாளர்,வனவளதிணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கியானது ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளது. இதன் மூலம் வடகிழக்கு மக்களின் பொருளாதாரத்தை வளம்பெறசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவோம். என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219145
-
ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்
ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார் 04 JUL, 2025 | 06:03 AM கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பன வற்றுக்கு மத்தியில் செய்தி செய்தியாளராக பணியாற்றியவர். குறிப்பாக பல்வேறு பட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய நல்ல ஒரு செய்தி தொடர்பாளராகவும் 2010ம் ஆண்டு முதல் தினக்குரல் வலம்புரி தினகரன் தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களின் கிளிநொச்சி செய்தியாளராக பணியாற்றியுள்ளார். நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் காலமானார். https://www.virakesari.lk/article/219143
-
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது 04 JUL, 2025 | 10:55 AM முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04 ) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார். எஸ்.எம் சந்திரசேன இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219154
-
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "விரிவான கடன் வசதி திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் மற்றும் IMF இன் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டன. விரிவான கடன் வசதி திட்டத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுஆய்வுகளின் போது செலுத்தப்படாத செலவுகள் தொடர்பாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட தவறான தகவல்களின் விளைவாக ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் நடைபெற்றது. IMF இற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை வேண்டுமென்றே நடைபெறவில்லை. இதற்கு காரணம், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களால் செலுத்தப்படாத தொகைகள் குறித்து உரிய நேரத்தில் அறிக்கையிடப்படாத பலவீனங்கள் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ‘செலுத்தப்படாத தொகைகள்’ என்பதன் வரையறை தொடர்பாக அதிகாரிகளின் தவறான புரிதல் ஆகும். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள், அதாவது, செலுத்தப்படாத தொகைகளை தற்போதைய நிதி கட்டமைப்பிற்குள் திருப்பிச் செலுத்துதல், மற்றும் எதிர்காலத்தில் செலுத்தப்படாத தொகைகள் குவிவதையோ அல்லது தவறான தகவல்கள் அறிக்கையிடப்படுவதையோ தவிர்க்க, புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டத்திற்கு இணங்க பொது நிதி முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஆகியவை நிர்வாகக் குழுவால் நேர்மறையாக பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல்களுக்கு காரணமான அளவு செயல்திறன் அளவுகோல்களை பின்பற்றாதமைக்கு விலக்கு அளிக்க நிர்வாகக் குழு ஒப்புக்கொண்டது, மேலும் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டது," என ஒகமுராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmcoc2fc000qsqp4k9prqzakm
-
தில்ஷி அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்? - இலங்கை ஆசிரியர் சங்கம்
அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்? பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவி 15 வயது தில்ஷி அம்சிகாவின் துயர தற்கொலை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய CTU பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பல உயர் மட்ட விவாதங்கள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்குப் பிறகும், இந்த வழக்கில் பொலிஸார் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். 2024 ஒக்டோபரில் தனது முன்னாள் கணித ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தில்ஷி அம்ஷிகா ஏப்ரல் 29, 2025 அன்று கொட்டாஞ்சேனையில் உள்ள தனது வீட்டில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக கல்வி அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு கூட்டம் அலரி மாளிகையில் கூட்டப்பட்டதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இருப்பினும், குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறினார். கல்வி அமைச்சினாலும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராலும் நியமிக்கப்பட்ட குழுவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். "ஆண் ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்படாமல் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார், மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தனியார் கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று ஸ்டாலின் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இடமாற்ற உத்தரவுகளைப் பெற்ற எட்டு ஆசிரியர்கள், அதிகாரிகளின் உத்தரவுகளைப் புறக்கணித்து, ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்னும் பணியாற்றி வருவதாகவும் CTU கவலை தெரிவித்துள்ளது. ஜூலை 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதற்கு முன்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/அம்ஷிகா-விவகாரத்தில்-தாமதம்-ஏன்/175-360447
-
வடக்கு மக்களின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு!
வடக்கு மக்களின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு! வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்று நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இந்த விடயத்தில் கடந்தகால அரசுகளை விட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் கூட வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கையையே நாம் முன்னெடுத்து வருகின்றோம் - என்றார். https://newuthayan.com/article/வடக்கு_மக்களின்_நம்பிக்கை_நிச்சயம்_நிறைவேற்றப்படும்;_நீதியமைச்சர்_தெரிவிப்பு!
-
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம்
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம் இதுவரை 40 என்புத்தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு சிதிலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன. மேலும் நான்கு மண்டையோடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணிப் புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 34 மனிதச் சிதிலங்கள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சிறுவர்களின்_2_என்புத்தொகுதிகள்_செம்மணியில்_நேற்று_அடையாளம்
-
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு July 3, 2025 8:30 am வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர். எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://oruvan.com/public-protests-over-newly-established-spa-center-in-vavuniya/
-
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன் Published By: DIGITAL DESK 3 03 JUL, 2025 | 10:15 AM தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். https://www.virakesari.lk/article/219063
-
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர். அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சுன்னாகத்தில்_கோர_விபத்து;_இரண்டு_இளைஞர்கள்_பலி!_முதல்நாள்_வாங்கிய_மோட்டார்_சைக்கிளில்_சென்றபோது_விபரீதம்
-
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! — கருணாகரன் —
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! June 29, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அரசியல் ரீதியான படுகொலைகளுக்குள்ளானவை என்றே கருதப்படுகிறது. அரசியல் ரீதியான படுகொலை என்றால், யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பு மோதல்களினால் ஏற்பட்ட கொலையினாலோ அது போன்ற நிகழ்வுகளினாலோ அல்ல. அப்படியிருந்தாலும் அது தவறு. ஏனென்றால், யுத்தத்தின்போது அதில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளுடைய உடல்களை படையினரும் படையினரின் உடல்களை விடுதலைப்புலிகளும் சர்வதேச அமைப்புகளுடாகப் பரிமாறிக் கொண்டனர். அப்படியென்றால், இது விதிமுறைகளுக்கு அப்பால், படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களே. இந்தப் படுகொலைகள் ஏதோ ஒரு வகையில் பழிவாங்கும் அரசியலின் விளைவாக நடந்தவையே!அப்படியென்றாலும் கூட சிறுவர்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதுதான் கூடிய கவனத்தை இங்கே குவிக்கிறது. இதனால் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டு வரும் இந்த எலும்புக் கூடுகளும் இந்த மனிதப் புதைகுழியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளையும் புதைகுழிகளையும் விட, அரசியல் ரீதியாக முக்கியத்துவமுடையனவாக மாறக் கூடிய சாத்தியங்கள் உண்டு. ஏற்கனவே இதைப்போல வடக்குக் கிழக்கிலும் தெற்கில் சூரியகந்த போன்ற இடங்களிலும் பல எலும்புக் கூடுகளும் புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் அதிர்வையும் அரசியல் ரீதியாகச் சில கவனத் தூண்டல்களையும் ஏற்படுத்தியதுண்டு. ஆனால், பிறகு அவையெல்லாம் மெல்ல நீர்த்து, மறைந்து போனதே வரலாறு. சரியாகச் சொன்னால், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் போராட்டங்களை நடத்தியவர்களே நன்மைகளைப் பெற்றனர். உதாரணமாக சூரியகந்த புதைகுழியைத் தூக்கி, அரசியல் செய்த மகிந்த ராஜபக்ஸ, அடுத்த 20 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். அந்த அதிகாரத்தின் மூலம் ராஜபக்ஸ குடும்பத்தையே கட்டியெழுப்பினார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்கவில்லை. அவர்கள் மறக்கடிக்கப்பட்டனர். மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்துக்கு வந்தபோது, இந்தப் புதைகுழிகளில் எலும்புக்கூடுகளாக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை ராஜபக்ஸவினர் செய்யவில்லை. அதைப்போல கிளிநொச்சி தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான புதைகுழிகள் – எலும்புக் கூடுகளை வைத்துத் தமிழ்த் தரப்புகள் தாராளமாக அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டன. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாணசபையின் பிரதிநிதிகளாகவும் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகவும் தம்மை உயர்த்திக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த நீதியும் கிடைக்கவில்லை. ஆக தமிழ் – சிங்களம் ஆகிய இரண்டு சூழலிலும் ஒரே நிலைமைதான் நீடிக்கிறது. ஆனால், இப்பொழுது கண்டறியப்பட்டு வரும் சிந்துபாத்தி மயான எலும்புக் கூடுகளும் புதைகுழியும் இதையெல்லாம் கடந்த முக்கியத்துவத்தைப் பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. அதற்கொரு முக்கிய காரணம், இப்போதுள்ள ஆட்சியாளர்களாகும். 1. இப்பொழுதுள்ள NPP ஆட்சியாளர்களும் முன்பு இதேபோன்ற எலும்புக் கூடுகள் – மனிதப் புதைகுழிகளின் துயர வரலாற்றினால் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களுக்கு இதனுடைய தாற்பரியம் என்னவென்று – எப்படியானது என்று புரியும். அதனால்தான் இந்தப் புதைகுழி அகழ்வுக்கு அவர்கள் தாராளமாக ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். மட்டுமல்ல, இதையொட்டி நடைபெறுகின்ற போராட்டத்தைக் குழப்பாமல், இடைஞ்சல்களைச் செய்யாமல், தாங்களும் நேரில் பங்கேற்க விளைகிறார்கள். ஆனால், இவ்வாறான சூழலில் முந்திய ஆட்சியாளர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. பல்வேறு இடைஞ்சல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினார்கள். இவ்வாறான விவகாரத்தை முன்னிலைப்படுத்திப் போராடியவர்களையும் நீதி கோரியவர்களையும் அச்சுறுத்தினார்கள். ஆனால் NPP அரசாங்கம் இதனை வேறு விதமாக அணுக முற்படுகிறது. அது தன்னை ஒரு நீதிக்குரிய அமைப்பாக உலக அரங்கிலும் வரலாற்றிலும் ஸ்தாபிக்க விரும்புகிறது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். அதாவது, அரசாங்கமே இந்தப் பிரச்சினையைக் குறித்து கவனம் எடுத்து, குற்றவாளிகளைத் தேடக்கூடிய – தண்டிக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு இல்லாது விட்டாலும் இந்தப் புதைகுழி – எலும்புக் கூட்டு விவகாரம் அரசியல் முக்கியத்துவமுடையதாக மாறுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்கிறது. இது சர்வதேச ரீதியாகவும் கவனத்தை உருவாக்கும். ஆகவே எந்த வகையிலும் இதொரு நல்வாய்ப்பான விளைவையே தரக்கூடியதாக உள்ளது. 2. முந்திய ஆட்சியாளர்களின் காலத்தில் இவ்வாறான புதைகுழி விடயத்தை அவர்கள் கையில் எடுக்கத் துணியவில்லை. அது அவர்களுடைய கையையே சுடக்கூடியது. மட்டுமல்ல, அவர்களே அவற்றோடு சம்மந்தப்பட்டவர்களாகவும் ஏதோ ஒரு வகையில் இருந்தனர். அல்லது அதைக் கண்டிக்க முடியாத நிலையில் இருந்தனர். அவ்வாறானோர் (அத்தகைய தரப்பினர்) ஊழல், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். அவற்றோடு இந்த விடயங்களும் சேரும்போது, அவர்களின் மீது நடவடிக்கையை எடுப்பதற்கு NPP அரசாங்கத்துக்கு உதவியாக இருக்கும். 3. இப்பொழுதுள்ள தேசிய மக்கள் சக்தியினருக்கு இந்தப் புதைகுழிகள் பிரச்சினையில்லை. அவர்கள் இந்த விடயங்களுடன் சம்மந்தமில்லாதவர்கள். மட்டுமல்ல, இதுவரையிலும் அதிகாரத்தில் இருக்காதவர்கள். ஆகவே துணிகரமாக இதனை அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே கையாள முற்படுவர். என்பதால் எந்த விதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் NPP அரசாங்கம் நேர்மையாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. வேண்டுமானால் இதனோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டால், அது படைத்தரப்பினராக இருந்தால் மட்டுமே அரசாங்கத்துக்குச் சற்று நெருக்கடி ஏற்படும். அதுவும் ‘படைத்தரப்பில் கை வைக்கக் கூடாது‘ என்று குற்றவாளிகளைப் பாதுகாக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாகப் பாவிக்க முற்படலாம். அப்படி எதிர்க்கட்சிகள் பிரச்சினையை திசை திருப்ப முற்பட்டால், அதுவும் NPP அரசாங்கத்துக்கு வாய்ப்பாகவே அமையும். சர்வதேச அரங்கில் அத்தகைய தரப்புகளை அம்பலப்படுத்துவதற்கு. இதேவேளை குற்றங்களோடு தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தால் அந்தப் பிரச்சினையைக் கூட வெற்றிகரமாகவே கையாளக் கூடியதாக இருக்கும். அதற்கு இப்பொழுது இந்த மனிதப் புதைகுழி முழுமையாக அகழப்பட்டு, முழுமையான விவரம் கண்டறியப்பட வேண்டும். அடுத்த கட்டமாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டால்தான் இந்தப் படுகொலை எந்தக் காலகட்டத்தில் நடந்தது? அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதையெல்லாம் கண்டறியக் கூடியதாக இருக்கும். எந்தக் காலகட்டத்தில் நடந்தது என்று கண்டறியப்பட்டால் ஏறக்குறையக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து விடலாம். அதைக் கண்டறிவதற்கு கண்டெடுக்கப்படும் எலும்புக் கூடுகள் தொடர்பான பகுப்பாய்வுகள் மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வரும்போது நிச்சயமாக இப்போதையும் விட மேலும் கொந்தளிப்பான அரசியல் சூழல் உருவாகும். ஏனென்றால், அந்த முடிவுகள் ஓரளவுக்குக் கொலையாளிகளை இனங்காண உதவும் – இனங்காட்டும் என்பதால். இப்பொழுதே எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை, அவற்றின் தோற்ற அமைவு போன்றவற்றைச் சரியாகக் கவனித்து, கடந்த கால வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால் யாருடைய எலும்புக் கூடுகளாக இருக்கும் என்ற ஒரு கணிப்புக்கு வர முடியும். ஆனாலும் பகுப்பாய்வுதான் வலுவானது. சட்டரீதியானது. இதேவேளை இந்த எலும்புக் கூடுகளையும் மனிதப் புதைகுழிகளையும் நேரில் பார்ப்பதற்கும் இதையிட்டு இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அணையா விளக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திப்பதற்குமாக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழுநேரில் விஜயம் செய்தது. அதொரு முக்கியமான நிகழ்ச்சியே. ஆனால், இதையெல்லாம் பாதிக்கப்பட்டோருக்குச் சாதகமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, இதன்போது அங்கே நடத்தப்பட்ட முட்டாள்தனமான எதிர்ப்பு நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பாழடித்துள்ளன. நடைபெற்ற போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகச் சென்ற அரசியல் தலைவர்களையும் மக்கள் பிரதிநிதிகள் சிலரையும் அங்கே கூடிய சில விசமிகள் எதிர்த்துத் தடுக்கவும் தாக்கவும் முற்பட்டுள்ளனர். தமது அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் இப்படித் தவறான முறையில் – குறுக்கு வழியில் செயற்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் குழப்பங்கள் உருவாகின. மட்டுமல்ல, இது இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த நல்ல சக்திகளின் நல் நோக்கத்தையும் பரந்த தன்மையையும் சிதறடித்துள்ளது. நிச்சயமாக இந்தச் செயல் தவறானது. இதற்கு அவர்கள் பயன்படுத்த விளைந்தது, தியாகி – துரோகி என்ற பழைய – உளுத்துப்போன அரசியல் முறைமையை. துரோகி – தியாகி என்ற பிரிப்பினால் – அந்த விபரீத விளையாட்டினால் – ஈழத் தமிழ்ச் சமூகம் பேரழிவைச் சந்தித்துப் பின்னடைந்துள்ளது. இந்த அனுபவ உண்மையை இன்னும் புரிந்து கொள்ளாமல், தங்களைப் புனிதர்களாகக் கட்டமைத்துக் கொள்வதற்காக எதிர்த்தரப்பைத் துரோகியாக்கும் முட்டாள் வேலையை இன்னும் செய்ய முயற்சிக்கின்றனர் சிலர். இவர்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் மூடர்களாகும். பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தில் பங்கேற்பதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் அனைத்துத் தரப்புக்கும் உரிமை உண்டு. அதைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நியாயமான போராட்டத்தில் அனைத்துத் தரப்பும் இணைவது வெற்றியையே அளிக்கும். ஆனால், தமிழ்த்தேசியவாத அரசியலில் சில சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தாமே சுத்தமான தரப்பு என்ற போர்வையில் இத்தகைய ஜனநாயக மறுப்பைச் செய்ய முயற்சிக்கின்றன. ஏனைய சக்திகளின் பங்கேற்பையும் ஆதரவையும் விலக்க முற்படுகின்றன. அதனுடைய உச்ச வெளிப்பாடு செம்மணியில் அரங்கேறியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது –கண்டனத்துக்குரியது என்னவென்றால், இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்சி.வீ.கே. சிவஞானமும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் சென்றபோது அதே கட்சியைச் சேர்ந்தவர்களிற் சிலர் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இந்த எதிர்ப்பை அவர்கள் கட்சிமட்டத்தில் காட்டியிருக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொது வெளியில் காட்டியிருக்கக் கூடாது. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தைப் பலவந்தமாகப் பறித்துத் தங்களுடைய கையில் எடுத்துத் தங்களுடைய அரசியல் லாபநட்டக் கணக்கைப் பார்த்திருக்கக் கூடாது என்ற பொது அபிப்பிராயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சி, குறித்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேவேளை இவர்களைப் பொதுச் சமூகம் கண்டிக்க வேண்டும். அதைப்போல இந்தப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கே. சந்திரசேகர் சென்றிருக்கிறார். கூடவே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், இளங்குமரன் ஆகியோரும் சென்றனர். அவர்களையும் இந்தக் குழப்பிகள் இடைஞ்சற்படுத்தியுள்ளனர். இதுவரையில் இவ்வாறு நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் எதிலும் அரசாங்கத்தரப்பினர் எவரும் கலந்து கொள்வதில்லை. அவர்களுடைய கைகள் சுத்தமில்லை என்பதால் அவர்கள் அதைத் தவிர்த்து வந்தனர். அல்லது அது தமக்கு நெருக்கடியைத் தரும் என்பதால் விலகி நின்றனர். வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மக்கள் சக்தியே ஆட்சியாளர்களாகவும் இருந்து கொண்டு, மக்களுடைய நியாயமான போராட்டத்திலும் கலந்து கொண்டது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைக் கொடுப்பதோடு, அவர்களுடைய உணர்வுகளின் அடிப்படையில் நாம் இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் கையாள்வோம் என்ற சேதியையும் சொல்வதாக இருந்தது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதொரு நல்லவாய்ப்பாகவே அமைந்தது. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ளமுடியாத, புரிந்து கொள்ளமறுக்கின்ற தமிழ்த்தேசியவாத முத்திரை குத்திய சிலர் இதையும் எதிர்த்தனர். அப்படியென்றால் இந்தப்பிரச்சினைக்கு எங்கிருந்து, எவ்வாறான நீதியை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டேர்க்கோ இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அவரைக் கடந்து எந்தத் தரப்பு இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொருத்தமான – தகுதியான நீதியை வழங்கும்? வழமையைப்போல அரசாங்கத்தை எதிர்த்து நின்றால், சர்வதேச சமூகம்தான் நீதியை வழங்க வேண்டும் என்றால், வழமையைப்போல இந்தப் பிரச்சினையும் (இந்த எலும்புக்கூடுகள் மற்றும் மனிதப்புதைகுழிகள் விவகாரமும்) நீர்த்து மறைந்து போகும். இதை வைத்து நாடகமாடும் அரசியல்வாதிகள் சிலர் மட்டும் ஆதாயத்தைப் பெறுவர். ஆகவே மக்கள் இதைக்குறித்துத் தெளிவாக இருப்பது அவசியமாகும். போலிகள், நடிகர்கள், நாடகமாடிகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ள வேண்டும். அவர்களையே விரட்டி அடிக்க வேண்டும். ஏனெனில் விடுதலை என்பது அநீதிக்கு எதிரானது. தவறானவர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதைப் பெறவே முடியாது. https://arangamnews.com/?p=12127
-
வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல்
வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல் June 30, 2025 வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியு ள்ள பெரும்பான்மை இனத்தவர் களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடி யாதென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள் ளார். அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணி களை, மீளவும் தமிழ் மக்களி டம் ஒப்படைத்துவிட்டு பெரும்பா ன்மை இனத் தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச் சரித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025 அன்று இடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற் றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார்.குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் கடற்றொழில்மேற்கொள்வதற்கு நாயாறுப் பகு தியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி கோரியிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய்தொடக்கம், பேப்பாரப்பிட்டி வரைக்குமான பகுதியே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதியாகும். இந்த கரையோரப் பகுதிகளிலேயே கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். வெலிஓயா பிரதேசம் என்பது கடற்பகுதி யற்ற ஒரு பிரதேசம். இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு அங்கு அத்துமீறிக் குடியிருக்கின்ற பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் கடற்றொழில் செய் வதற்கு இறங்குதுறை கேட்டால், கடலைப் பிரதானமான வாழ்வாதாரமாக நம்பி வாழும் கடற்றொழிலாளர்கள் எங்குசெல்வது. கடல்பகுதியே இல்லாத வெலிஓயா பகுதியில் அத்துமீறிக்குடியிருக்கின்றவர்களை கடற்றொழிலாளர் சங்கமாகப் பதிவுசெய்ததுயார். அவர்கள் நன்னீர் மீன்பிடிச்சங்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பின் கடலில் இறங்குதுறை கேட்கமுடியாது. கடந்த 1984ஆம் ஆண்டிற்கு பிற்பாடு தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, தமிழர்க ளது பூர்வீக மணலாற்றை வெலிஓயாவாக மாற்றி அங்கு அத்துமீறித் தங்கியிருக்கும் பெரும்பான்மையினத்தவர்கள், தமிழ் மக்களிடம் காணிகளை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறவேண்டும்.வெலிஓயா பகுதியில் அத்துமீறிக் குடியிருக்கும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்களுக்கு நாயாற்றில் இறங்குதுறை வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடி யாது – என்றார். https://www.ilakku.org/வெலிஓயா-பெரும்பான்மை-இன/
-
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர் Published By: VISHNU 30 JUN, 2025 | 01:49 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா குறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான். இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது. இவ்வாறான நிலை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் நட்பு நாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஊடாக தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்திக் கொள்ளவே இந்தியா முயற்சிக்கும். திருகோணமலை துறைமுகம் பற்றி தற்போது எவரும் கவனம் செலுத்துவதில்லை. திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்தியா பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.இந்த செயற்திட்ட வலயத்துக்குள் புராதன கோயில்கள் மற்றும் பௌத்த விகாரைகள் உள்ளன. இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்திய ஆட்சியாளர்களால் பலவந்தமான முறையில் இலங்கைக்கு திணிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தத்தால் பல விளைவுகள் ஏற்பட்டன.நீதிமன்ற உத்தரவினால் தான் இந்த ஒப்பந்தம் இன்றும் இழுபறிநிலையில் உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை செயற்படுத்துமாறு இந்தியா இன்றும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது. இந்தியாவுடன் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்காலத்துக்கும் தாக்கம் செலுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு, வலுசக்தி மற்றும் டிஜிட்டல் துறை தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கத்தை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்வில்லை. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவத்தை இரண்டாம் நிலையாக்கும் வகையில் பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பை இலங்கை இராணுவத்தினர் இல்லாதொழித்தார்கள். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இராணுவத்தினர் இலங்கையின் காவல் தெய்வங்கள் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வலுசக்தி தொடர்பில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையில் சுயாதீனம் மற்றும் இறையான்மையை பாதிக்கும் வகையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பங்களாதேஷ் நாட்டின் வலுசக்தியை இயக்கும் அதிகாரம் இந்தியாவிடம் உள்ளது. ஆகவே வலுசக்தி துறையின் இறையாண்மையை இந்தியாவிடம் விட்டுக்கொடுத்து நாட்டைக் காட்டிக்கொடுக்க முடியாது.இந்தியாவுடன் இந்த அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு நாட்டு மக்கள் அனுமதியளிக்கவில்லை.மக்கள் விடுதலை முன்னணி தான் அனுமதியளித்துள்ளது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 இராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியாகுறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான் இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது.இந்நிலைமை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது. இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும். ஆகவே ஆட்சியாளர்கள் தாம் தற்காலிக உரிமையாளர்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும். https://www.virakesari.lk/article/218798
-
அடாத்தாக காணிகளை பறித்தே கீரிமலை ஜனாதிபதி மாளிகை! ஒப்புக்கொள்கின்றார் அமைச்சர்
அடாத்தாக காணிகளை பறித்தே கீரிமலை ஜனாதிபதி மாளிகை! ஒப்புக்கொள்கின்றார் அமைச்சர் கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அந்த இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்த பின்னரே மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கமுடியும். காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதா? அல்லது வேறு வழிகளில் தீர்ப்பதா? என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம். பிரச்சினையை விரைவாகத் தீர்த்து மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க இந்த மாளிகையை ஒருபோதும் உபயோகிக்கமாட்டார். இந்த மாளிகை மட்டுமல்ல நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளையும் அவர் உபயோகிக்கமாட்டார் - என்றார். https://newuthayan.com/article/அடாத்தாக_காணிகளை_பறித்தே_கீரிமலை_ஜனாதிபதி_மாளிகை!_ஒப்புக்கொள்கின்றார்_அமைச்சர்#google_vignette
-
செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம்
செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆடை, புத்தகப்பை மீட்பு நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளில் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்துபோதும், ஆடைகளோ, வேறு பொருள்களோ இனங்காணப்படவில்லை. நேற்று நடத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த அதேவேளை, என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள் நீலநிற துணி புத்தகப்பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கங்களில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பையை ஒத்ததாக காணப்பட்டாலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. மண் மாதிரி சேகரிப்பு புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தின் மண் மாதிரியைப் பரிசோதிப்பதற்கு சட்ட மருத்துவ அதிகாரிகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கொழும்பில் இருந்து நேற்று வந்த குழு ஆய்வுக்கான மண் மாதிரிகளைச் சேகரித்தது. இந்த அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான சோமதேவவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அகழ்வு நடவடிக்கைகளின் போது சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி வருகின்றனர். https://newuthayan.com/article/செம்மணியில்_இதுவரையில்_33_என்புத்_தொகுதிகள்!_புத்தகப்பை,_ஆடை,_வளையலுடன்_சிறுகுழந்தையின்_என்பு_நேற்று_அடையாளம்
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி "மண்வெட்டி போடும் இடமெங்கும் எலும்புகள் தட்டுப்படும் நிலைமைதான் இப்போதுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளபோதும், பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற இடங்களை நோக்கி இன்னமும் ஆய்வுக்குழு நகரவில்லை. அகழ்வுப்பணியை மேற்கொண்டுவரும் பிரதேசத்திற்கு அருகில் மிக முக்கியமான இடமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அகழ்வுக் குழுவினர் ஓரிரு நாட்களில் அல்லது வாரங்களில் அந்த இடத்தை அடையும்போது பல எலும்புக்கூடுகள் மீட்கப்படும் சாத்தியமுள்ளது" செம்மணியில் தற்போது இடம்பெற்றுவரும் அகழ்வுப் பணிகளை நெருக்கமாகக் கண்காணித்துவரும் கொழும்பு வட்டாரங்களிலிருந்து பிந்திக்கிடைத்த தகவல்கள் இவ்வாறு தெரிவித்தன. செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பித்த நாள் முதல், அது குறித்த செய்திகளைத் தொடர்ச்சியாக அவதானித்துவருகிறேன். நம்பத்தகுந்த வட்டாரங்களுடன் பேசிவருகிறேன். சுருக்கமாகச் சொல்வதானால், தற்போது நடைபெறும் அகழ்வுப்பணிகள், தடையின்றி - வெளி அழுத்தங்களின்றி - தொடரப்படுமானால், உலகை உலுக்கிய கொசோவா, ருவாண்டோ புதைகுழிகள் போன்ற பேரதிர்ச்சிமிக்க உண்மைகள் அந்தப் பெருவெளியிலிருந்து வெளிவரலாம். செம்மணி என்பது எமது பால்ய காலத்தின் பேரச்சம். எனது ஊடகத்துறை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில், செய்திக்காக அந்தப் பெருவெளியில்தான் குகநாதன் சேருடன் கொண்டுபோய் நிறுத்தப்பட்டேன். "உதயன்" அடையாள அட்டை கிடைக்கத் தாமதமான காரணத்தினால், தொடர்ச்சியாகக் களத்திற்கு செல்ல முடியாமல்போக, பிரேம் நேரடிச் செய்தியாளனாக களத்தில் நின்றான். அப்போது, யாழ்ப்பாணத்தின் ஓரே ஊடகமான "உதயன்" பத்திரிகை, செம்மணிச் செய்திகளை உலகின் செவிகளில் உரக்கச் சொன்னது. பிபிஸிக்கான செய்திகளை வித்தியாதரன் அவர்கள் தினமும் வழங்கிக்கொண்டிருந்தார். இந்தப்புதைகுழிகளின் வரலாறும் அதனையொட்டிய அக்காலமும் குரூரமானவை. 95 இடப்பெயர்வுக்குப் பின்னர் குடாநாடு திரும்பிய மக்களை, யாழ்ப்பாணத்தின் மையத்திலிருந்த உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவம் ஆட்சி செய்தது. அந்த உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே காற்றில் நீந்தித்திரிந்த பு#லிக*ளின் பல சிறிய குழுக்கள், இராணுவத்திற்குப் பெரும் தலையிடியைக் கொடுத்தவண்ணமிருந்தன. ரோந்துப் படையினரின் மீது தாக்குதல், ஜாம்-போத்தல் குண்டுத் தாக்குதல், சோதனைச் சாவடிகள் மீது கெரில்லாத் தாக்குதல் என்று வகை தொகையின்றி இடம்பெற்றன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டதாகப் பீற்றிக்கொண்டாலும், ஒரு கணம் நிம்மதியாக தெருவில் நடமாடமுடியாத நிலையே இராணுவத்திற்கு நீடித்தது. மீளக்குடியமர்ந்த பொதுமக்களின் துணையின்றி புலிகளின் இந்தத் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று இராணுவம் உறுதியாக நம்பியது. மாலை ஐந்து மணி முதல் காலை ஐந்து மணிவரை ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தது. சனத்துக்குள் கநைந்திருந்த பு&லி*களைத் தேடிச் சல்லடைபோட்டது. இதன்போதுதான் - கிட்டத்தட்ட 96 ஏப்ரலுக்குப் பிறகு - பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காணாமல்போகத் தொடங்கினார்கள். ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு சந்தேகத்திற்கிடமான வீடுகளுக்குச் சென்று கதவைத் தட்டிய இராணவுத்தினரால் பல அப்பாவிகள் காணாமல்போயினர். முதல்நாள் கண்டவர்கள் அடுத்தநாள் உயிருடன் உள்ளார்களா என்பதை காலை ஐந்து மணிக்குப் பின்னர்தான் உறுதிசெய்யமுடிந்தது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற கிருஷாந்தி படுகொலையினால், யாழ்ப்பாணம் அச்சத்தில் உறைந்தது. அதாவது, காணாமல்போதல் என்ற மர்மம் நிறைந்த அச்சத்தை இராணுவம் யாழ் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டிருந்தது. இந்தக் கொடிய ப்ரொஜெக்டை நிறைவேற்றிக்கொண்டிருந்;தவர் அப்போதைய கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா. அவரது கட்டளையின் கீழ் இயங்கிய 51 ஆவது டிவிஷன் படையணி, மீளக்குடியமர குடாநாட்டுக்கு வந்த யாழ் மக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படையினரின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்த ஐயா அண்ணை, குலதீபன் போன்ற சிறிய கெரில்லாக் குழுக்களைப் பிடிக்க முடியாத, இந்தப் படையணியினால் அப்பாவிகள் காணாமல்போனவண்ணமிருந்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த காணாமல்போதல் சம்பவங்கள், சுண்டுக்குளியிலிருந்த - நிமலராஜன் வீட்டுக்கு அருகிலிருந்த - மனித உரிமைகள் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டன. அங்கு செய்திக்குப் போகின்ற ஒவ்வொரு நாளும், காணாமல்போனவர்களின் தகவல்களை அப்போதைய இணைப்பாளர் சிறிதரன் தந்துகொண்டேயிருந்தார். தொடர்ந்துகொண்டிருந்த இந்த மர்மத்தின் மீது, சர்வதேச அமைப்புக்களின் பார்வை விழத்தொடங்கியபோது, யாழ்ப்பாணத்திலிருந்து ஜானக பெரேரா மாற்றப்பட்டு, அதிகாரி பலகல்லே வந்தார். அவரது வருகையுடன் காணாமல்போதல் சம்பவங்கள் கிட்டத்தட்ட முற்றாக முடிவுக்கு வந்தன. 1998 இல் கிருஷாந்தி கொலைவழக்கில் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ஷ, தனது குற்றங்களையும் தான் புதைத்த சடலங்கள் தொடர்பான தகவல்களையும் சொல்லத் தொடங்கியபோதுதான், அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜானக பெரேரா படைகளினால் நிரம்பிய செம்மணியின் மீது செய்திக்கண்கள் திரும்பின. ஆனால், பல்வேறு காரணங்களினால் செம்மணி அகழ்வுப் பணிகள் பின்னர் முடங்கின. தற்போது, அரியாலை - சித்துப்பாத்தி மக்கள் மின் மயானத்திற்காக தோண்டத்தொடங்கிய இடத்திலிருந்து, பேரழிவின் சாட்சியங்கள் உயிர்பெறத்தொடங்கியுள்ளன. செம்மணியின் சூத்திரதாரி ஜானக பெரேராவின் குருதி தோய்ந்த கைகளைத் தமிழ்மக்களுக்கு முன்னரே அறிந்தவர்கள் ஜே.வி.பியினர் அவர்களது 71 ஆம் ஆண்டு புரட்சியைக் கொடூரமாக - இரத்தச் சகதியில் போட்டு சிதைத்தமைக்காக கப்டன் பதவியைப் பரிசாகப் பெற்றவர். பிறகு, ஜே.வி.பியின் 87 ஆம் ஆண்டுப் புரட்சியின்போது, ரோஹன விஜயவீரவைக் கைது செய்து கொலைசெய்த நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர். ஜே.வி.பியின் புரட்சியை அடக்கி நசித்தமைக்காக பிரிகேடியராய் பதவி உயர்த்தப்பட்டவர். பல கொடிய சம்பவங்களின் பிதாமகனாக தன் காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றியபடி 'நல்வாழ்வு' வாழ்ந்த ஜானக பெரேரா, இந்தோனேசியா - ஆஸ்திரேலியா நாட்டு தூதுவர் பதவிகளையும் வகித்தார். 2008 இல் அனுராதபுரத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் பலியானார். ஜானக பெரேரா கொலையில் தொடர்புடைய ஒருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறிலங்கா சிறையில்தான், கிருஷாந்தியைக் கொலைசெய்த சோமரட்ண ராஜபக்ஷவும் அடைக்கப்பட்டுள்ளார். நீதிக்காக நிலம் பிழந்துள்ள செம்மணி, வரலாற்றின் எல்லா முடிச்சுக்களையும் அவிழ்த்தபடி, உண்மைகளைப் பிரசவிக்கத் தொடங்கியுள்ளது. https://www.facebook.com/share/1Bz7Z2CgBK/?mibextid=wwXIfr
-
செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்
செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன் 2015க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சம்பந்தர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தார். அங்கு அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நிலைமை கொந்தளிப்பாக மாறியது. அப்பொழுது ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டவராக சம்பந்தரை நோக்கி உரத்த குரலில் ஆவேசமாகக் கேள்விகளைக் கேட்டார். அவர் அப்பொழுது கறுப்பும் சிவப்புமான நிறச் சீலையை உடுத்திருந்தார். இது நடந்து சில ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் முத்தவெளியில் வான் படை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. இதில் வான்படை உலங்கு வானூர்திகளில் மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே சம்பந்தரை கேள்வி கேட்ட அதே பெண் தனது வளர்ந்த மகனோடு அந்த உலங்கு வானூர்தியில் அமர்ந்திருந்து, படமெடுத்து அதை முகநூலில் பகிர்ந்திருந்தார். தமிழ் மக்களின் தலையில் குண்டுகளைப் போட்ட அரச படையின் உலங்கு வானூர்தி ஒன்றில் பிள்ளையோடு அமர்ந்திருந்து அந்த படத்தை போடுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சம்பந்தரை பார்த்து ஆவேசமாக கொதித்து எழுந்தார். இதில் எது சரி? சம்பந்தரை நோக்கிக் கொதித்தது சரியா? அல்லது உலங்கு வானூர்தியில் அமர்ந்திருந்து படம் எடுத்தது சரியா? அல்லது இரண்டுமே பிழையா? அப்படித்தான் கடந்த புதன்கிழமை செம்மணிப் போராட்டக் களத்தில் இருந்து சில அரசியல்வாதிகள் அவமதிக்கப்பட்டவை உணர்ச்சிக் கொதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள்தான். தமிழரசுக் கட்சிக்குள் உள்ள சுமந்திரன் அணிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கடுமையான அதிருப்தி உண்டு. இதுபோன்ற உணர்வுபூர்வமான சந்தர்ப்பங்களில் அது வெடித்துக் கிளம்பும். ஆனால் அந்த எதிர்ப்பை,கொதிப்பைக் காட்டியிருக்க வேண்டிய களம் செம்மணி அல்ல. குறிப்பாக தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதை காட்டியிருக்க வேண்டிய களம் மாட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமையகம் ஆகும். இது கடந்த ஆண்டிலேயே சம்பந்தப்பட்டவர்களுளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. சுமந்திரன் தந்திரமான வழிகளில் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார் என்று கொந்தளிப்பவர்கள் மாட்டின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிடலாம். அங்கே தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தன்னார்வமாக ஒரு செயற்பாட்டு இயக்கம் கட்சி கடந்து முன்னெடுத்த ஒரு நடவடிக்கைக் களம் அதற்குரியதல்ல. அதைக் கட்சிகள் ஒழுங்கமைக்கவில்லை. எனவே அதைக் குழப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் சிவஞானத்தை அல்லது சாணக்கியனை அல்லது சந்திரசேகரனை மறித்து வைத்து கேள்விகளை கேட்பது வேறு, அவர்களை அவமதிப்பது என்பது வேறு. இது இப்படியே போனால் இனி எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு செயற்பாட்டு அமைப்பும் கட்சி கடந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடினமாகிவிடும். ஒரு செயற்பாட்டு அமைப்பு அல்லது மக்கள் அமைப்பு எதையாவது செய்யப் புறப்பட்டால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எத்தனை பேர் அதனை ஹைஜாக் பண்ண முயற்சிக்கிறார்கள்? அணையா விளக்கு போராட்டக் களம் என்பது உள்ளூர் விடயம் ஒன்றுக்காக அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு திறக்கப்பட்டது. எனவே அதற்கு ஓர் அனைத்துலக பரிமாணம் உண்டு. கட்சி சாராத அதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய பரப்பில் மிகக் குறைவு. ஆனால் அவற்றுக்குத்தான் புனிதம் அதிகம். அங்கேதான் கட்சி கடந்த தேசத் திரட்சி ஏற்படும். மெய்யான பொருளில் செயல்பூர்வமாக தமிழ் மக்களை ஒரு இனமாக, ஒரு தேசமாகத் திரட்டும் களங்கள் அவை. எனவே அந்த இடத்தில் உட்கட்சிப் பூசல்களுக்கும் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் இடமில்லை. கட்சி அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்தக் களங்களை கட்சி அரசியல் நோக்கத்தோடுதான் அணுகுவார்கள்; கையாளுவார்கள். அதில் சந்தேகமில்லை. இது தேசிய மக்கள் சக்திக்கும் பொருந்தும். ஆனால் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டக் களத்தில் எல்லாத் தரப்புக்களையும் ஒன்று திரட்டுவது அந்தப் போராட்டத்தின் நீதியைப் பலப்படுத்தும். கோழியைத் திருடினவனும் கோழியை வளர்த்தவனும் ஒன்றாகப் போராட முடியாது என்று ஒரு விளக்கம் கூறப்படலாம். இன அழிப்புக்கு மறைமுகமாக உடந்தையாக இருந்தவர்களும் இன அழிப்பை விசாரிப்பதற்கு அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடும் ஒரு களத்தில் வரக்கூடாது என்றில்லை. அவர்கள் அங்கே வருவது போராட்டத்தின் நியாயத்துக்கு வலுச்சேர்க்கும். அங்கே அவர்களை வரவழைத்ததே வெற்றிதான். அங்கே வந்தால்தான் அரசியல் செய்யலாம் என்று ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தைப் போராட்டம் ஏற்படுத்தியதே ஒரு வெற்றிதான். மேலும் இன அழிப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்தவர்கள் அல்லது தங்களுக்குரிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றாதவர்கள் என்று பார்த்தால் ஈழத் தமிழர்கள் இந்த பூமியில் உள்ள பெரும்பாலான அரசுகளையும் பெரு நிறுவனங்களையும் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். தமிழ் மக்களை இன அழிப்பு செய்தவர்கள் என்று பார்த்தால் பிரித்தானிய பேரரசிலிருந்து தொடங்கி உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளின் கைகளிலும் தமிழ் மக்களின் ரத்தம் உண்டு. ஏன் ஐநாவின் கைகளிலும்தான். எந்த ஐநாவிடம் தமிழ்மக்கள் நீதியைக் கேட்கின்றார்களோ,எந்த மேற்கு நாடுகளிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றார்களோ, இந்த மேற்கத்திய ராஜதந்திரக் கட்டமைப்பானது இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்களை கைவிட்டது. ஒருவகையில் அக்கால கட்டத்தில் நடந்த இன அழிப்புக்கு அவர்களும் பொறுப்பு. ஐநாவும் உட்பட. செம்மணியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுதே காசாவில் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. 16 ஆண்டுகளின் பின் மீண்டும் மேற்கு ஆசியாவில் ஒரு முள்ளிவாய்க்கால். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அதுதான் இப்பொழுது காசாவில் நடந்து கொண்டிருக்கிறது. சிறு சிறு வித்தியாசங்கள். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை கையாலாகாத சாட்சியாக ஐநா பார்த்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு காசாவிலும் அதே நிலைமைதான். எனவே தமிழ் மக்கள் நீதிமான்ககளிடம்தான் நீதியைக் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தால் இந்த குரூர உலகிலே யாரிடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அரசியலில் யாருமே சுத்தமான நீதிவான்கள் கிடையாது. அண்மையில், மேற்கு ஆசியாவில் யுத்தம் வெடித்தபோது தமிழ் முகநூல் உலாவிகள் பெரும்பாலும் ஈரானின் பக்கம்தான் நின்றார்கள். அதை ஈரானின் பக்கம் என்று கூறுவதை விடவும் இஸ்ரேலுக்கு எதிராக என்று கூறுவதே தகும். அதாவது காசாவில் இன அழிப்பை செய்யும் இஸ்ரேலுக்கு எதிரான கூட்டுணர்வு அது. அந்த இடத்தில் தமிழ் மக்கள் பெரும்பாலும் இன அழிப்புக்கு எதிராகத் திரண்டு காணப்பட்டார்கள். ஆனால் இறுதிக் கட்டப் போரில் ஈரான் யாருடன் நின்றது? ராஜபக்சக்களோடு தான். இஸ்ரேல் யாரோடு நின்றது? ராஜபக்சக்களோடுதான். ஏன் அதிகம் போவான்? 2009க்கு பின் பலஸ்தீன் அதிகார சபையானது மஹிந்தவை ஒரு விருந்தாளியாக அழைத்து நாட்டின் அதி உயர் விருதை அவருக்கு வழங்கியது. அது மட்டுமல்ல அவருடைய பெயரால் ஒரு வீதியையும் திறந்து வைத்தது. இது நடந்தது 2014இல். தமிழ் மக்கள் யாரை இன அழிப்பு செய்தவர் என்று குற்றம் சாட்டினார்களோ அவரை அழைத்து பலஸ்தீனர்கள் கௌரவித்தார்கள். அங்கே பாலஸ்தீனர்கள் நீதியின் அடிப்படையிலோ அறம் சார்ந்தோ முடிவெடுக்கவில்லை. பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல ஈரானியர்கள்,இஸ்ரேலியர்கள் முதலாக இந்த பூமியில் உள்ள எல்லா அரசுடைய தரப்புக்களும் ராணுவ, பொருளாதார, அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். அறநெறிகளின் அடிப்படையிலோ நீதி நியாயங்களில் அடிப்படையிலோ அல்ல. எனவே தமிழ் மக்கள் உலக சமூகத்திடம் நீதியை எதிர்பார்க்கும் பொழுது, நாம் நீதியாகப் போராடுகிறோம், நீதிக்காகப் போராடுகிறோம்,எனவே உலகம் எங்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்றெல்லாம் அப்பாவித்தனமாக நம்பத் தேவையில்லை. குறிப்பாக ஐநாவை பொருத்தவரை அது முதலாவதாக அரசுகளின் அரங்கம். இரண்டாவதாககத்தான் அரசற்ற தரப்புகளின் அரங்கம். அங்கே அரசுகளின் நீதி தான் உண்டு. அங்கு மட்டுமல்ல இந்த பூமியில் எங்கும் அரசுகளின் நீதிதான் உண்டு. தூய நீதி கிடையாது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப்போகிறார் என்ற தகவல் கிடைத்ததும் ஒரு தொகுதி தமிழ் சிவில் சமூகங்கள் இணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கூட்டாக ஒரு கடிதம் அனுப்பின. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தில் இயங்கி வருகின்ற ஸ்ரீலங்காவைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான ஓர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. இலங்கைக்குள் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கு அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வருவது என்பது அந்த நாடு செய்வதை அங்கீகரிப்பதாகக் கருதப்படும் என்ற பொருள்பட சிவில் சமூகங்கள் கருத்து தெரிவித்தன. அக்கடிதத்தைத் தொடர்ந்து ஐநா அலுவலர்களுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவால் கையாளத்தக்க தூரத்துக்குள் வைத்திருப்பதென்றால் இந்த அரசாங்கத்தோடு “என்கேஜ்” பண்ண வேண்டும் என்று ஒரு விளக்கம் ஐநாவிடம் இருப்பதாக தெரிந்தது. எனவே, தமிழ் சிவில் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருமிடத்து, அவர் செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் கோரிக்கை விடுத்தன. ஐநா அதை ஏற்றுக்கொண்டது. சிவில் சமூகங்களுக்கு ஐநா கூறியது ஒரு புதிய விளக்கம் அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் மேற்கு நாடுகள் தமிழ் சிவில் சமூகங்களுக்கு அடிக்கடி கூறி வந்த ஒரு விளக்கம்தான். குறிப்பாக ராஜபக்சக்களை எதிர்நிலைக்கு தள்ளினால் அவர்கள் சீனாவை நோக்கிப் போய்விடுவார்கள்; எனவே அவர்களோடு “என்கேஜ்” பண்ணுகிறோம் என்று பெரும்பாலான நாடுகள் கூறின. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு அவர்கள் வெளிப்படையாகக் கூறும் காரணங்களை விட ஆழமான ராஜதந்திர இலக்குகள் உண்டு. இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டது. ஜேவிபி சீன சார்பு இடதுசாரி மரபில் வந்தது. தேசிய மக்கள் சக்தியின் முடிவெடுக்கும் அதிகாரமுடைய தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா அண்மையில் சீனாவில் காணப்பட்டார். சீனாவின் செல்வாக்குப் பொறிக்குள் எளிதாக விழக்கூடிய ஒரு அரசாங்கத்தை தங்களால் கையாளப்படத்தக்க ஒரு எல்லைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஐநாவும் சிந்திக்கின்றது; அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் இந்தியாவும் சிந்திக்கின்றன. எனவே இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிப் போவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்த அரசாங்கத்தோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று மேற்கண்ட தரப்புக்கள் சிந்திக்கின்றன. இந்த ராஜதந்திர இலக்கை முன்வைத்துத்தான் மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்குள் வந்தார். இப்படிப்பட்டதோர் ராஜதந்திரச் சூழலில், ஐநா தமிழ் மக்களுக்குத் தூய நீதியைப் பெற்றுத் தராது.ஆனால் அதற்காக தமிழ் மக்கள் போராடாமல் இருக்க முடியாது . அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் ஒரு இனமாக ஒரு தேசமாக திரண்டு போராடினால்தான்-அந்த திரட்சிதான்-அவர்களுடைய பேரத்தை கூட்டும். பேரபலம் அதிகரித்தால்தான் நாடுகளும் உலகப் பொது மன்றங்களும் தமிழ் மக்களை நோக்கி வரும். எனவே ஒரு இனமாக திரள்வதற்காக தமது பேர பலத்தை அதிகப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் போராட வேண்டும். ஐநா நிலைமாறு கால நீதியைத் தருமா? அல்லது பரிகார நீதியைத் தருமா? என்பதல்ல இங்கு கேள்வி. ஓர் உலகப் பொது மன்றம் என்ற அடிப்படையில் ஐநாவோடுதான் தமிழ் மக்கள் என்கேஜ் பண்ணவும் வேண்டும். நவீன ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவதுதான்.எனவே தமிழ்மக்கள் உலக சமூகத்துடன் என்கேஜ் பண்ணுவது என்று சொன்னால் முதலில் தங்களை ஒரு தரப்பாக பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் உலகத்தைத் தம்பக்கம் திரட்ட வேண்டுமென்றால் முதலில் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும்.செம்மணியில் நடந்தது போன்ற போராட்டங்கள் தமிழ் மக்களை அவ்வாறு கட்சி கடந்து ஒரு தேசமாகத் திரட்டக் கூடியவை. போராட்ட நெருப்பை அணைய விடாமல் பாதுகாப்பவை. https://www.nillanthan.com/7483/#google_vignette
-
ரா உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்!
ரா உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்! 28 Jun 2025, 8:54 PM ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹா வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைவரை நியமிப்பதற்கு ஆலோசித்து வந்த மத்திய அரசு பராக் ஜெயினை புதிய தலைவராக அறிவித்துள்ளது. ஜெயின் 1989 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராக உள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களில் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை எளிதாக்கும் உளவு தகவல்களை வழங்கியதன் மூலம், ஆபரேஷன் சிந்தூரில் ARC முக்கிய பங்கு வகித்ததாக அறியப்படுகிறது. அந்தவகையில் பராக் ஜெயின் ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்துக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். பஞ்சாபில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது அவரது பணி குறிப்பிடத்தக்க வகையில் இருந்துள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்எஸ்பி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். “பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார். கனடாவில் தனது பதவிக் காலத்தில், அங்கிருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை அவர் கண்காணித்ததார்” என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. https://minnambalam.com/parag-jain-appointed-as-raw-intelligence-agency/
-
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் Photo, WORLD VISION இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல் நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள். பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர். சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக, தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில் கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது. அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற, தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது. சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும். இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.” முழுமையாக அறிக்கை – https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf https://maatram.org/articles/12147
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம் June 29, 2025 10:33 am வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்று இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது. கல்லுண்டாய்வெளியில் அவ்வப்போது தீ ஏற்படுவது இயல்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், நேற்று இரவு ஏற்பட்ட தீ இதுவரை பதிவான சம்பவங்களில் மிகப்பெரியது என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் சகிதம் தீயைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல மணிநேரம்வரை தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கல்லுண்டாய்வெளியில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்துவரும் பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகள் சகிதம் இரவிரவாக வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், தமது உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர். சுவாசப் பிரச்சினைகள் உடையவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்வகையில் புகையின் தாக்கம் நிலவியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. கல்லுண்டாய்வெளி திண்மக் கழிவகற்றல் நிலையம் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது என்றும், அங்கு அடிக்கடி தீவிபத்து இடம்பெறுவதாலும் வலிகாமம் மேற்கு பிரதேசசபையில் அண்மையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் இந்த விடயம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுக்கவும் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/the-kallunthaiveliya-garbage-dump-is-on-fire-great-tension-throughout-the-night/
-
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை கொண்ட குழுக்களின் தேவையின்படி அறிக்கையை தயாரித்து அதன்மூலம் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கும் நோக்கத்திலேயே ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்தார் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவ்வாறான மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கை வருகின்றார் என்றால் அது இலங்கை தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானங்களை எடுக்க முன்னரானதாகவே இருக்கும். எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் நியாயத்தை காட்டுவதற்காகவே வருகை தருக்கின்றனர். நாங்கள் இலங்கை சென்றோம், அங்குள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினோம் அதன்படி அறிக்கையை வெளியிடுகின்றோம் என்று கூறும் வகையிலேயே வருகின்றனர். இவ்வாறுதான் 2013ஆம் ஆண்டில் நவநீதம்பிள்ளை வருகை தந்தார். அவர் பிரிவினைவாத நிலைப்பாடுகளை கொண்டவர்களை மட்டுமே சந்தித்தார். பின்னர் செயிட் அல் ஹுசேன் இலங்கை வந்தார். அவரும் சகல தரப்பினருடனும் பேசவில்லை. இனவாத பிரிவினைவாத குழுவினரை சந்தித்து இறுதியில் அவர்களுக்கு தேவையானவாறே அறிக்கையை தயாரித்தார். அதேபோன்ற சம்பிரதாயத்தை பின்பற்றியே வோல்கர் டேர்க் வந்துள்ளார். அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்படியென்றால் இவர் எப்படி நடுநிலையானவராக இருந்திருக்க முடியும். வடக்கில் இறந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உடல்கள் இல்லையா? அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் இல்லையா? அவர் செம்மணியில் உள்ள புதைகுழியென்று கூறப்படும் இடத்திற்கு சென்றிருந்தார். அங்கே விடுதலைப் புலிகளின் கொடிகளுடனேயே அங்கிருந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்விடத்திற்கு சென்று ஆணையாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், மத நிகழ்விலும் கலந்துகொண்டார். மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்த போது அவரை சந்திப்பதற்காக பல்வேறு தரப்பினரும் அனுமதி கோரினர். முன்னாள் இராணுவ பிரதானியொருவரும் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தார். வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த இராணுவ பிரதானி அவரை சந்திக்க கோரியிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோன்று சில சட்டத்தரணிகள் குழுவும் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் தேசிய அமைப்புகள் சிலவும் அவரை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தின் நிலைப்பாட்டுடன் இப்போதும் செயற்படும் தரப்பினருடன் மட்டுமே சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்படி ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவையின்படி தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தை நெருக்குவதற்காகவே இலங்கை வருகை தந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. அதேபோன்று ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வாவையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதன்படி விடுதலைப் புலி ஆதரவு குழுக்களுக்கு மேலதிகமாக ஜே.வி.பி செயலாளரை சந்தித்துள்ளார். அங்கே என்ன பேசியுள்ளார் என்று தெரியவில்லை. இதேவேளை செம்மணி புதைக்குழியில் உள்ள மனித எலும்புகூடுகள் யாருடையது என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. சிலவேளை அவை விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாகவோ, இராணுவத்தினருடையதோ, யுத்தத்தில் இறந்த விடுதலைப்புலிகளினதோ அல்லது பொலிஸாரினதோ எலும்புகூடுகளாக இருக்கலாம். அவை யாருடையது என்று உறுதிப்படுத்தப்படாதிருக்கையில் அது தமிழ் மக்களுடையது என்றும், இது மனித உரிமை குற்றம் என்றும் கூறி அது தொடர்பான பரிந்துரைகளுக்கு முயற்சிக்கப்படுகின்றது. அதேபோன்று உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பிலும் கூறப்படுகின்றது. ஆனால் தெற்கு ஆபிரிகா ஆணைக்குழு போன்றது அல்ல. யுத்தத்திற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை சிக்க வைப்பதற்கான ஆணைக்குழுவாகவே இருக்கும். அத்துடன் சுயாதீன குற்றப்பத்திரிகை அலுவலகமும் அவ்வாறே இருக்கப் போகின்றது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகை இதனை அடிப்படையாக கொண்டதாகவே இருந்துள்ளது. அவர் நடுநிலைதாரிகளை சந்திக்காது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களையே சந்தித்துள்ளார். இதன்படி அறிக்கைகள் தயாரிக்கப்படும். இங்கு வந்து அவருக்கு உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான கடமை கிடையாது. அதனை இந்த அரசாங்கத்தால் தடுக்க முடியாது போயுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக இங்கே செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அவரின் விஜயம் தொடர்பிலோ, அவர் கூறிய விடயங்கள் தொடர்பிலோ அரசாங்கம் எதுவும் கூறாமல் இருப்பது ஏன் என்றும் புரியவில்லை என்றார். https://akkinikkunchu.com/?p=330752
-
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து
மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே புதிய வர்த்தமானியை வெளியிட்டிருக்கிறது அரசு - எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை 29 JUN, 2025 | 09:39 AM (நா.தனுஜா) காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட 2430 இலக்க வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால் வெள்ளிக்கிழமை (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்துச்செய்யப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 27.06.2025 ஆம் திகதியிடப்பட்ட 2443 இலக்க வர்த்தமானியில், 'இவ்வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்குப் போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேசரியிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன், காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் கருத்திற்கொண்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதானது, மீண்டும் இவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையே காண்பிக்கிறது என சுமந்திரன் விசனம் வெளியிட்டார். மேலும் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், ஆகவே எதிர்வருங்காலத்தில் அரசாங்கம் மீண்டும் இத்தகைய வர்த்தமானியை வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/218699
-
செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந்
செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 29 JUN, 2025 | 11:25 AM கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில் பலர் இன்னமும் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் இவர்களிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் செம்மணி படுகொலைகள் மற்றும் அதன் அகழ்வு பணிகள். உங்களிற்கு தெரியும் 1996ம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி என்கின்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அவரது குடும்பத்தவர்கள் அயல்வீட்டுக்காரர் என பலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச நேரடியாக சாட்சியம் வழங்கினார். இந்த கொலைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இந்த கொலையுடன் தொடர்புபட்ட அந்த குற்றவாளி,நேரடியாக இராணுவதரப்பை நோக்கி குற்றம் சுமத்துகின்றார். இதேபோல 500 முதல் 600 வரையிலான நபர்களை நாங்கள் இங்கே கொன்று புதை;திருக்கின்றோம் , இதனை செய்யுமாறு எங்களிற்கு அன்று கூறியவர்கள் அன்று அந்த இடத்திலிருந்த உயர் அதிகாரிகள் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இவர்களின் கைதுகளின் பின்னர் அந்த உயரதிகாரிகள் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.அன்று அங்கு கடமையாற்றியவர்கள் இருந்தவர்கள் எல்லாம் இன்றும் இராணுவத்தில் இருக்கின்றார்கள். சிலர் இராணுவத்தின் பெரிய பதவிகளை பெற்றிருக்கின்றார்கள் அவ்வேளை பொறுப்பதிகாரிகள் தரத்தில் இருந்தவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கின்றனர். அன்று இலங்கையின் முப்படை தளபதியாகயிருந்த சந்திரிகா குமாரதுங்க இன்றும் இங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். எனவே இவற்றிற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மேல் உடனடியாக தீவிரமான விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். https://www.virakesari.lk/article/218748
-
பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து
பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து 29 JUN, 2025 | 10:48 AM பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர் இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார். சில கருத்துக்கள் "ஆழ்ந்த புண்படுத்தும் வகையில்" இருப்பதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் மேலும் "மிகவும் வலுவான மற்றும் பாரபட்சமான மொழி" குறித்து திரையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தொகுப்பு பிபிசி ஐபிளேயரில் மீண்டும் பார்க்க கிடைக்காதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய தூதரகம் "ஆழ்ந்த எரிச்சலூட்டும் மற்றும் வெறுப்பூட்டும் சொல்லாட்சிகளால் மிகவும் வருத்தமடைந்ததாக" பதிவிட்டுள்ளது.: "கிளாஸ்டன்பரி விழா அதன் கலைஞர்களிடமிருந்து வெறுப்பூட்டும் பேச்சு அல்லது வன்முறையைத் தூண்டுவதை மன்னிக்காது."என குறிப்பிட்டுள்ளது. பாப் வைலனின் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கலாச்சாரச் செயலாளர் லிசா நந்தி பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் அவசர விளக்கம் கோருவதாகக் கூறினார். பிபிசி ஐபிளேயரில் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யாத முடிவை வரவேற்பதாக அரசாங்கம் மேலும் கூறியது பாப் வைலன் மற்றும் நீகேப்பின் தொகுப்புகளைத் தொடர்ந்து வெஸ்ட் ஹோல்ட்ஸ் மேடையில் செயல்களால் கூறப்பட்ட கருத்துகளின் காட்சிகளை மதிப்பாய்வு செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "குற்றவியல் விசாரணை தேவைப்படும் ஏதேனும் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகளால் காட்சிகள் மதிப்பிடப்படும்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218740
-
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து 29 June 2025 வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, 3 மாத அவகாசத்துடன், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடை முறைப்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியிருந்தது. இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் பிரகாரம் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறான பின்னணியிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யப்பட்டதை தாம் வரவேற்கின்றபோது, இந்த வர்த்தமானி அறிவித்தல் போதுமான கால அவகாசம் வழங்குவதாகக் கூறி ரத்து செய்யப்படுவதையிட்டு அதிருப்தி அடைவதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/408704/gazette-notification-regarding-land-acquisition-cancelled