Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்"
"இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்" இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தொழிற்கட்சிக்கு பெரும் வெற்றி ஏற்படும் என கருத்துக் கணிப்பில் எதிர்பார்க்கப் படுகிறது / Britons vote in poll expected to deliver Labour landslide. பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி கூட . அவர்கள் எட்டு பெயரின் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது. It is also a happy news that a total of 8 Tamils are contesting in the British parliamentary elections this time. Their photos are also attached here. 14 கொந்தளிப்பான ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியை தூக்கி எறிந்துவிட்டு, கெய்ர் ஸ்டார்மரின் தொழிற் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரிட்டன், இன்று வியாழக்கிழமை வாக்களிக்கத் தொடங்கி உள்ளது. Britons began voting on Thursday in a parliamentary election that is expected to bring Keir Starmer's Labour Party to power, sweeping away Prime Minister Rishi Sunak's Conservatives after 14 often turbulent years. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்றபின் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். கருத்துக் கணிப்புகள் ஸ்டார்மரின் மைய-இடது கட்சியை [தொழிற் கட்சியை] மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கிறது, எட்டு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களுக்கு வழிவகுத்த கன்சர்வேடிவ் கட்சி, அதன் உட்பூசல் மற்றும் கொந்தளிப்பு காலத்திற்குப் பிறகு பல வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடையும் என பரிந்துரைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. Opinion polls put Starmer's centre-left party on course for a landslide victory but also suggest many voters simply want change after a period of infighting and turmoil under the Conservatives that led to five prime ministers in eight years. 1997ல் முன்னாள் தலைவர் டோனி பிளேயர் 18 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, தொழிற்கட்சி பெற்ற சாதனையான 418 இடங்களை விட அதிகமாக வெற்றி பெறும் என்று பல ஆய்வுகள் கணித்துள்ளன. Several surveys predict Labour will win more than the record 418 seats it secured when ex-leader Tony Blair ended 18 years of Conservative rule in 1997. The main political parties include the Conservative Party led by Prime Minister Rishi Sunak, Labour Party led by Keir Starmer, Liberal Democrats led by Ed Davey, Reform UK led by Nigel Farage, Scottish National Party (SNP) led by John Swinney, and the Green Party co-led by Carla Denyer and Adrian Ramsay.
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 21 7] வரலாறு அழிப்பு [Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், ஜார்ஜ் சண்டயானா (1863 - 1952) என்பவர் [George Santayana], "முன்னைய தவறுத்தல்கள் மீண்டும் வராமல் தவிர்ப்பதற்கு, கட்டாயம் வரலாறு படிக்கவேண்டும்" என்கிறார், என்றாலும் இன்றைய அரசியல் சூழலில், பல்வேறு காரணங்களால், அதில் இருந்து பாடங்களை படிக்காமல், அதை தமக்கு சார்பாக திரித்துக் கூறுவதற்காக, தமக்கு பிடிக்காத அல்லது மற்றவர்களின் வரலாறு சான்று கூறும் உயர்வை பொறுக்க முடியாமல், உண்மையான வரலாறுகளை, அரச துணையுடன் இன்று அழிப்பதைக் காண்கிறோம். அப்படியானவற்றில் ஒன்று தான், 97 ஆயிரம் அரிய நூல்களுடன் காணப்பட்ட யாழ் நூலக எரிப்பு ஆகும். மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய, மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று எரித்து போல, இன்று இலங்கை அரச படை இதை செய்ததை காண்கிறோம். தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், சிங்களவர்கள், ஆரியர்களாக இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கு குடியிருந்தார்கள் என்ற போதிலும், அவையெல்லாம் மறைக்கப்பட்டு, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப் பட்டுள்ளதுடன், தமிழ் மன்னர்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்பட வில்லை எனவும், ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை என்பதையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், வெவேறு காலங்களில் இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி யுள்ளார்கள். இவை எல்லாம், எமக்கு எதிராக ஏற்பட்ட, வரலாறு அழித்தலுக்கான சில உதாரணங்கள் மட்டுமே!! “இலங்கை சிங்களவர்களின் தேசம், இங்கு வாழும் தமிழர்கள் வந்தேறு குடிகளே’ என்ற பாணியில் அண்மைக் காலமாக பல அரசியல் வாதிகள் தொடக்கம், புத்த மதகுருமார் வரை சொல்லுவதை எழுதுவதைக் காண்கிறோம். ஒன்றை மறைத்து இன்னொன்றாகச் செய்வதே இலங்கை இனவாத எழுத்தர்கள் தமிழ் வரலாற்றுக்குச் இதுவரை செய்த தொண்டாகும். மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். ஆனால் கௌதமபுத்தர் இலங்கை வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா, மற்றது புத்தர் வட இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. ஏன் தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் கூட வரவில்லை. மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கும் மற்றும் வரலாறு அழிப்ற்கும் அடிப்படைக் காரணம் ஆகும். மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார். இது ஒன்றே நூலின் நோக்கத்திற்கு எடுத்துக் காட்டு ஆகும். இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், இப்படி சிலரை குறிக்கிறது. உதாரணமாக, நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன். எனவே தமிழர்கள் இலங்கையின் ஆதி குடிகள் என்பது மகாவம்சத்திலேயே கூறப்பட்டுள்ளதை காண்க. ஆனால் இவை சில உதாரணங்களே, இன்னும்பல வரலாற்று ரீதியான ஆதாரங்களும் உதாரணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சிக் குழுவினர் நடாத்திய அகழ்வாய்வு ஒன்றின் போது, கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்த மனிதன் ஒருவனுடைய கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு ஒரு முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக கண்டு எடுக்கப் பட்டது. அங்கு பதியப்பட்டிருந்த இரண்டு வரியிலமைந்த எழுத்துக்கள், தமிழ் பிராமிவகையைச் சார்ந்தாக இருந்தது. கோ வெ ர அல்லது "கோ" "வே" "த" (ko ve ta) என்ற அந்த எழுத்துக்கள் முதல் சங்ககால எழுத்துக்ளைச் சார்ந்தாகும் [யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை முத்திரை]. அதை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா, மற்றும் பொ. இரகுபதி, முனைவர் ஆர். மதிவாணன் போன்றோர்கள், அந்தக் கல்லறை ஒரு தமிழ் மன்னனுடையதாக இருக்கக்கூடும் என்கின்றார்கள். அது மட்டும் அல்ல இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கி, அதன் பின், தொடக்கத்தில் தமிழர் [இயக்கர், நாகர்] பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதும், பண்டைய சிங்கள எழுத்துக்கள், குறிப்பாக மட்பாண்டங்களில் கி பி 6 ஆம் நூற்றாண்டின் பின்னர்தான் காணப்படுவதும் அதிகார பூர்வமான வரலாற்று சான்றாகும். என்றாலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மை இன்னும் தொடர்கிறது. உதாரணமாக, அண்மையில், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர், பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார். அங்கு மிக நீண்டகாலமாக ஒரு பிள்ளையார் ஆலயம் இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அடாத்தாக பௌத்த பிக்குவால் 2019 ஆண்டு தொடக்கத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதே போல் கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரமும் இன்னும் 2019 ஆண்டு நடுப்பகுதியை தாண்டியும் தொடர்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 22 தொடரும்
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
மிக்க மிக்க நன்றி ஈழப்பிரியன் & புலவர் கிருஸ்னி ரசிகரன் தொழிற் கட்சி Chrishni Reshekaron, Labour Party candidate for Sutton and Cheam சேர்க்கப்பட்டுள்ளது எல்லோருக்கும் நன்றிகள்
-
"கம்பன் வழியில் .... "
"கம்பன் வழியில் .... " [கம்பன் விழா 2024 ஜூன் நடுப்பகுதியில் இருந்து பல நாடுகளில் / இடங்களில் ஜூலை நடுப்பகுதிவரை நடக்கின்றன. அதையொட்டி கம்பன் வழியில் எனது ஒரு துளி] "பால் ஒழுகும் இரு குடங்களோ பாலகன் பசி தீர்க்கும் சுனையோ? பாசம் பொழியும் பெண் தெய்வமோ பாவி என்னை அணைக்கா தேவதையோ??" "தென்னையில் இரு அழகு குரும்பையோ தெய்வ மங்கையின் எழில் வடிவமோ? தெவிட்டாத அவள் இன்ப மழையோ தென்றல் காற்றும் கொஞ்சும் உடலோ??" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்" 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக முன்பை விட அதிகமான பிரிட்டிஷ் தமிழர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். "British Tamils running to become UK Member of Parliament" With the 2024 UK General Election set to take place on July 4, more British Tamils than ever before have been named as candidates with a range of Britain’s political parties. உமா குமரன், தொழிற் கட்சி Uma Kumaran, Labour Party Candidate for Stratford and Bow டெவினா பால், தொழிற் கட்சி Devina Paul, Labour Party Candidate for Hamble Valley கிருஸ்னி ரசிகரன் தொழிற் கட்சி Chrishni Reshekaron, Labour Party candidate for Sutton and Cheam மயூரன் செந்தில்நாதன், சீர்திருத்த யுகே Mayuran Senthilnathan, Reform UK Candidate for Epsom & Ewell கமலா குகன், லிபரல் டெமாக்ராட்ஸ் Kamala Kugan, Liberal Democrats Candidate for Stalybridge and Hyde நரனீ ருத்ரா-ராஜன், பசுமைக் கட்சி Naranee Ruthra-Rajan, The Green Party Candidate for Hammersmith and Chiswick
-
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு [2019 சூலை 3 முதல் 7 வரை நடைபெற்ற நினைவு நாள்]"
"பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு [2019 சூலை 3 முதல் 7 வரை நடைபெற்ற நினைவு நாள்]" இம்மாநாட்டிற்கு உலகெங்கணும் இருந்து 6,000 பேர் வரை கலந்து கொண்டதுடன், மொரிசியசு செயல் குடியரசுத்தலைவர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். அத்துடன் Dr Bhavani, pulavar Dr Francis S Muthu , Dr P Marudanayagam, Dr Spencer Wells, Dr George L Hart, Dr Pitchappan Ramasamy, Dr K Rajan , Dr A Shanmugadass, Dr V Murugan , Dr Shri Lakshmi ஆகியோரும் மற்றும் பல அறியஞர்களும் பங்குபற்றி இருந்தனர். அமெரிக்க மண்ணில் முதன்முதலாக தமிழுக்காக நடைபெறும் மாநாடு என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும். இம்மாநாட்டிற்கு முழுமுதல் கருவியாகவும் கிரியா ஊக்கியாகவும் செயல்பட்டவர் தலைசிறந்த கல்வியாளரும், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், அனைத்துலகத் தமிழாய்வு மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களையும், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான, பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து மறைந்து, இன்று அனைவரின் உள்ளத்தில் வாழும் டாக்டர் ஜி.யு.போப் அவர்களையும் நினைவு கூறும் வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இதற்கான மையநோக்கு பாடல், சமீபத்தில் வெளியாகி, உலக இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது, 'எல்லா ஊர்களும் சொந்த ஊரே; எல்லா மனிதர்களும் உறவினர்களே' என்னும் பொருளில் அமைந்த, 'யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்ற, புறநானுாற்று பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, பல நாட்டு இசைக் கலைஞர்களின் பங்களிப்பில், இசை வடிவங்களை கோர்த்து, இசை அமைத்துள்ளார், ராஜன் சோமசுந்தரம். சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள், நவீன இலக்கியம் போன்ற எட்டு தலைப்புகளில் உலகெங்கிலும் இருந்து ஆய்வுக் கட்டுரைகளும் மற்றும் தமிழ் மொழி, தொல்பொருள் ஆராய்ச்சி சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பல ஆராய்ச்சியாளர்களின் இன்றைய முடிவுகளும் மேலும் கீழடி பற்றிய சிறப்பு விவாதமும் கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப் பட்டது உதாரணமாக, முதல் நாள் நிகழ்வில் [4 th July 2019] வரவேற்பு பேச்சு, இசை & நடனங்கள் தவிர, நாம் மிகவும் பாராட்டிய முக்கியமான நிகழ்ச்சிகள் 1) குமரிக் கண்டத்தில் தொடங்கி வன்னியுடன் முடிவடையும் "இலங்கை" பற்றிய நடனம். மேலும் கூத்து, விபுலாந்தர் அடிகள் , தனிநாயகம் அடிகள் , இலங்கைத் தமிழர்களின் போராட்டம் பற்றிய ஆய்வுச் செய்திகள் மற்றும் தமிழைக் காக்க இளைய தலைமுறைக்கு கூறப்பட்ட செய்தி, 2) கீழடி தொல்லியல் ஆய்வு , 3) அமெரிக்கத் தமிழர் அரசியல் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்த விவாதம் (இணை அமர்வு) / debate organised by United States Tamil political Action Committee ( parallel session) , 4) முரசு சிம்பொனி பாடகர் குழு / Murasu Symphony choir & 5) பட்டி மன்றம் போன்றவற்றை குறிக்கலாம் . அதேபோல மூன்றாவது நாள் [6 th July 2019] வரவேற்பு பேச்சு, இசை & நடனங்கள் தவிர, நாம் மிகவும் பாராட்டிய முக்கியமான நிகழ்ச்சிகள் 1) பாரதியார் பற்றி பாரதி பாஸ்கர் 2) பண்டைய தமிழ் நாகரிகம் - தொல்லியல் கண்டுபிடிப்புகள் / Ancient Tamil Civilisation- Archaeological Discoveries 3) பண்டைய தமிழ் நாகரிகம் - மரபியல் மற்றும் புவியியல் ஆய்வுகள் (இணை அமர்வுகள்) / Ancient Tamil Civilisation- Genetic & Genographic Studies ( Parrallel Sessions) இதில் கலந்து கொண்ட அறிஞர்கள் டாக்டர் பவானி , புலவர் டாக்டர் பிரான்சிஸ் எஸ் முத்து, டாக்டர் பி மருதநாயகம், டாக்டர் ஸ்பென்ஸ் வெல்ஸ், ஜார்ஜ் எல். ஹார்ட், டாக்டர் பிச்சப்பன் ராமசாமி, டாக்டர் கே ராஜன், டாக்டர் ஏ சண்முகதாஸ், டாக்டர் வி முருகன், டாக்டர் ஸ்ரீ லட்சுமி போன்றவர்கள் [Dr Bhavani ,pulavar Dr Francis S Muthu , Dr P Marudanayagam, Dr Spencer Wells, Dr George L Hart, Dr Pitchappan Ramasamy, Dr K Rajan , Dr A Shanmugadass, Dr V Murugan , Dr Shri Lakshmi] இவற்றைத்தவிர, மொரிஷியஸ் அதிபர் பரமசிவும் பிள்ளை பார்லே வையாபுரியின் [President of Mauritius,Paramasivum Pillay "Barlen" Vyapoory] உரை, 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் உரை போன்றவற்றையும் குறிக்கலாம் “உலகத் தமிழாராய்ச்சி மாநாடு” உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது. வரலாறு முதல் மாநாடு தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர். இரண்டாம் மாநாடு 1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. மூன்றாவது மாநாடு பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது. இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன. நான்காவது மாநாடு 1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 5 வது முதல் 8 வது மாநாடு வரை முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் நடத்தப் பெற்றன. ஒன்பதாவது மாநாடு எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் கோவையில் நடைபெற்றது. அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்" என்பதாகும். 10 ஆவது மாநாடு பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019 சூலை 3 முதல் 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தினர். இம்மாநாட்டிற்கு உலகெங்கணும் இருந்து 6,000 பேர் வரை கலந்து கொண்டதுடன், மொரிசியசு செயல் குடியரசுத்தலைவர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். அத்துடன் Dr Bhavani, pulavar Dr Francis S Muthu , Dr P Marudanayagam, Dr Spencer Wells, Dr George L Hart, Dr Pitchappan Ramasamy, Dr K Rajan , Dr A Shanmugadass, Dr V Murugan , Dr Shri Lakshmi ஆகியோரும் மற்றும் பல அறியஞர்களும் பங்குபற்றி இருந்தனர். 11-வது மாநாடு 11-வது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இது முதலில் சார்ஜாவில் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அது மலேசியாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது. 12வது மாநாடு 12வது உலகத் தமிழ் மாநாடு 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என சென்னையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி இந்திய கலைத் தலைவர் நிர்மலா ஐஏஎஸ் அறிவித்துள்ளார். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி 3 இலிருந்து சனவரி 9 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது என்றாலும், நான் அன்று பொறியியல் இறுதியாண்டு பரீடசை பேராதனை பல்கலைக்கழகத்தில் எழுதிக்கொண்டு இருந்ததால், அங்கு நேரடியாகப் பார்வையாளராகப் போக முடியவில்லை. என்றாலும், நான் கனடாவுக்கு உறவினரை, நண்பர்களை சந்திக்க சென்ற பொழுது, அமெரிக்காவுக்கு அங்கிருந்து சென்று, 2019 சூலை 3 முதல் 7 வரை நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முழுமையாக நேரடியாக பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்தது உண்மையில் மகிழ்வாகவும், பலவற்றை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாகவும் இருந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] https://youtu.be/NtHYz6FuiAc?feature=shared
-
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
நானும் கண்டேன், நம்பினேன். ஆனால் அது எவ்வளவு காலம் ?. ஆறு ஆண்டுகளின் பின் போர்க்குழுக்கள் என ஒன்று ஒன்றாக முளைத்தன. அவைக்குள் தாக்களுக்கு தாங்களே போராடி அல்லது சாக்கடித்து மடிந்த இளைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் எத்தனை ? என்றாலும் பின் ஒரு குழு ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அரசியல் தலைமை 2009 வரை , உண்மையில் அவர்களின், கட்டுப்பாட்டால் நீடித்தது உண்மையே. அதற்கு வாக்கு போட்டவனில் நானும் ஒருவன். ஆனால் அந்த கூட்டின் உண்மையான முகம், 2009 மே திகளின் பின் ஒன்று ஒன்றாக சிதைந்து , வெளிவரத் தொடங்கியதும் உண்மையே!! அது மட்டும் அல்ல, ஒன்று படா போராளிகளின் பிரிவால், ஒன்றாக அன்பால், விட்டுக்கொடுப்பால் புரிந்துணர்வால் இணைந்து இயங்கா தலைமைகளால், இருந்ததையும் இழந்ததே உண்மை !! காட்டிக்கொடுப்புகளும் வஞ்சகங்களும் அங்கு கூத்தாடியதை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அப்படி என்றால், அந்த ஒற்றுமை எப்படி ஏற்பட்டது, எப்படி அழிந்தது என்பதை புரிந்து, ஒரு உண்மையான ஒற்றுமை ஒரு கொள்கை என்ற குடையின் கீழ், தலைவர் யாராக இருந்தாலும், அந்த கொள்கைக்காக, நோக்கத்துக்காக ஏற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து
-
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" [இரா. சம்பந்தனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் ஆவது, ஒற்றுமையாக, ஒரே குரலில் தமிழுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றாக இணைவோம் , உறுதியாக இருப்போம் என்று சபதம் எடுப்பார்களா ?? அப்படி எடுத்தால் அதுவே உண்மையான அஞ்சலி !!!] தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த இரா சம்பந்தன், தந்தை செல்வா முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த ஒரு தலைவராக திகழ்ந்தவர், இன்று [30 ஜூன் 2024] ஞாயிறு இரவு 11 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமாகியிருக்கின்றார். என்றாலும் அன்று தொடக்கம் இன்று வரை, தமிழர் பிரிந்து பிரிந்து போவதைத் தவிர, ஒன்று படுவதைக் காணவேயில்லை. ஆனால் ஒரு தற்காலிகமாக அவரின் மறைவில் எல்லா தமிழ் தலைவர்களும் ஒரே கருத்தில் அவரின் புகழ் பாடுவதையும் அஞ்சலி செலுத்துவதையும் காண்கிறோம் . அது ஏன் நிரந்தரமாகக் தொடரக் கூடாது? அப்படியான ஒரு ஒற்றுமை, ஒன்றுகூடல், தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நிரந்தரமாக நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் . அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது . அது, அந்த ஒற்றுமை , வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார் . “பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள், முரசு முழங்கு தானை மூவருங்கூடி, அரசவை இருந்த தோற்றம் போலப்” பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல என்கிறது. அதாவது, போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம். மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாகக் பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ? ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." [புறநானூறு 58] நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக என்கிறது! இதை நாம் இன்னும் உணர்ந்தோமா ? தமிழர் கூட்டணி சூரியன் போல் கதிர்களை வீசாமல், ஒவ்வொரு கதிராக , எதோ ஒரு கதிரைக்கு உடைந்து போனது மட்டும் அல்ல, அப்படி உடைந்ததில் ஒன்றான தமிழ் அரசு என்ற வீடு கூட இரண்டாக உடைந்திடுமோ என்ற நிலைக்குப் போகிறது. எனவே, இரா. சம்பந்தனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் ஆவது, ஒற்றுமையாக, ஒரே குரலில் தமிழுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றாக இணைவோம் , உறுதியாக இருப்போம் என்று சபதம் எடுப்பார்களா ?? அப்படி எடுத்தால் அதுவே உண்மையான அஞ்சலி !!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என்னுயிர் தோழியே!"
"என்னுயிர் தோழியே!" பழமை வாய்ந்த, அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும், நான் பிறந்து வளர்ந்த, எனக்கு மிகவும் பிடித்த ஊரான, அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக அன்று இருந்தன. அங்கு தான் எங்கள் வீடு அத்தியடி புது வீதியில் அமைந்து இருந்தது. எங்கள் வீட்டில் பனை, தென்னை, கமுகு, மா, பலா என சில மரங்களும், செவ்வரத்தை, ரோசா, மல்லிகை என பூ மரங்களும் நிறைந்து இருந்தன. நான் சிறுவனாக இருந்த அந்தக் காலத்தில், எம் பக்கத்து வீட்டில் இருந்தவள் தான் அவள். அவள் பெயர் செவ்வரத்தை, அந்த பெயருக்கு ஏற்ற அழகுடன், எந்த நேரமும் புன்னகை சிந்தும் முகத்துடனும் என்னுடன் வந்து, ஓய்வு நேரங்களில் ஒழித்து விளையாடியதை இன்னும் மறக்க முடியாது? அதற்கு ஒரு காரணம் கூட உண்டு. என் இடது நெற்றியில், கண்ணுக்கு மேல் இன்னும் உள்ள காயத்தின் வடுவே அந்த நினைவை மறக்க விடாமல் தந்துகொண்டு இருக்கிறது. ஆமாம், என்னுயிர் தோழி, செவ்வரத்தை அன்று ஒரு பனை மரத்தின் பின் ஒழிந்து இருந்து கொண்டு, குயில் போல் தன் அழகிய பிஞ்சு குரலில் 'கூ கூ' என சத்தம் போட்டார். என் இரு கண்ணும் கட்டப்பட்டு இருந்தது, நான் அந்த சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன். இளங்கன்று பயம் அறியாது என்று அன்று சும்மாவா சொன்னார்கள்? பனையுடன் மோதி நெற்றியை உடைத்தது தான் மிச்சம். அது பின் காய்ந்தாலும் அதன் தழும்பு மாறவில்லை. அப்படித்தான் அவளின் நினைவும். இன்னும் மறையவில்லை! நான் இன்னும் ஒன்றையும் உங்களுக்கு சொல்லவேண்டும் , என் நெற்றி வடு அவளை மட்டும் அல்ல, பனையையும் இன்னும் ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரம் தான் அது. பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும், நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது. அது வளைவதை விட, வளையாமல் உடைவதையே விரும்புவது. இன்னல், துன்பம் வரும் போது, யாழ்ப்பான மக்கள், பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து, தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம், துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம் / பண்பை வளர்த்துள்ளார்கள் என்றே எண்ணுகிறேன். அந்த பண்புதான் அவளை, என்னுயிர் தோழியை, என்னுடன் இன்று இணைந்து வாழாமல், தன்னுயிரை தியாகம் செய்ய வைத்துவிட்டது! காலம் போக கோலம் மாறும் என்பார்களே, அப்படித்தான் ஒரு பதினோரு அகவையை அவள் அடைய, மொட்டு மலர்ந்து பூவாகிய கதையாக, அவள் கதை போய்விட்டது. அது வரை என்னுடன் கட்டிப் பிடித்து உருண்டு விளையாடியவள், விலகி விலகி போக தொடங்கிவிட்டாள். வெட்கம் [நாணம்], அது வேறு இப்ப? எங்கிருந்து தான் இவை எல்லாம் வந்ததோ? தொல்காப்பியர், களவியலில், அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள ஒரு கட்டத்தில் "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார். அது தான் அவளின் அந்த மாற்றத்தைப் பார்த்து எனக்கு ஞாபகம் வந்தது. அவளுடன் அதன் பின் கதைப்பதே நின்றுவிட்டது. என்றாலும் பாடசாலைக்கு போகும்பொழுது, வீட்டில் இருந்து பல நூறு யார் சென்றபின்பு, ஒரு வேளை நானும் அவளும் சந்திக்க நேரிட்டால். அவள் கையில் ஏந்தி இருக்கும் புத்தகங்களால் முகத்தை ஓரளவு மறைத்து, அதில் ஒரு நீக்கலுக்கு ஊடாக பார்க்கும் அந்த கயல்விழியும் , கன்னத்தில் குழி விழும் அவளின் மௌன சிரிப்பும் எத்தனையோ கதை இன்றும் கூட சொல்லுகிறது. ஆனால் அவள் இன்று இல்லை! நான் சில ஆண்டுகளின் பின் உயர் வகுப்பில் சித்தியடைந்து, பேராதனை பல்கலைக்கழகத்துக்கு பட்டப் படிப்புக்கு 1987, அக்டோபர் முதல் கிழமை போய்விட்டேன். அவள் அப்பொழுது சாதாரண வகுப்பில் பதினாறு வயது பருவப் பெண்ணாக, இளமை பூத்துக் குலுங்க, மயக்கம் தரும் உடல் அழகுடன் அவள் அன்று இருந்தாள்! அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை! "பக்கத்து வீட்டு பைங்கிளி கோடியில் நிற்குது வெக்கத்தை விட்டு அது ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து எனக்கு துடிப்பை தருகுது ஏக்கத்தை கூட்டி மனதை நொடியில் வாட்டுது" நான் பல்கலைக்கழகம் போறதுக்கு முதல் நாள் அவளை தற்செயலாக, அவளின் வீட்டு கோடியில் கண்டேன். அது தான் நான் அவளை கடைசியாக கண்டதும் கூட. அது ஒரு சனிக்கிழமை, அவள் தன் இளைய சகோதரிகளுடன் பின் வளவில் விளையாடிக்கொண்டு இருந்தாள். பெற்றோர் இருவரும் , அவர்களின் நண்பரின் வீட்டிற்கு போய் இருந்தார்கள், அவர்கள் வர மூன்று நான்கு மணித்தியாலம் ஆகும் என்று அவள் என்னிடம் கூறி, இளைய சகோதரர்களை படிக்க சொல்லி அனுப்பிவிட்டு , தனியாக என்னிடம் ஏறத்தாழ ஐந்து ஆண்டுக்கு பின் முதல் முதல் கொஞ்சம் நெருக்கமாக இருந்து கொண்டு கதைக்க தொடங்கினாள்! யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன.வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்! மாலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்" வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!! அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ - சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! ஆனால் இதை எல்லாம் மிஞ்சியது தான் அவளின் அன்றைய ஊடலும் கூடலும்! "மொட்டு விரிந்து அழகைக் காட்டுது நட்பு உறவு காதலை நாடுது வேட்டை ஆட வண்டு ஏங்குது கட்டி அணைக்க பூவையும் துடிக்குது" நேரம் கடக்க நான் விரைவாக அவளிடம் இருந்து விடைபெற்றேன். அவளின் இரு கண்களும் ஆறு போல் ஓடிக்கொண்டு இருந்தன. என் கைகளை இறுக்க பிடித்த படியே பிரிய மனம் இல்லாமல், தன் முன்னைய வெட்கத்தை மறந்து கட்டி அணைத்துக்கொண்டு நின்றாள். நான் நாளை தூர பயணம். அது தான் அவளின் அந்த ஏக்கம். என்றாலும் பெற்றோர் வரும் நேரம் நெருங்குவதால், கொஞ்சம் தடுமாற்றத்துடனும் இருந்தாள். அவள் என்னை காதலிக்கிறாள் என்பது அவளின் அந்த நெருக்கம், வருடல், கொஞ்சும் செல்ல பேச்சு சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தாலும், அவளின் வாயால் 'ஐ லவ் யு' கேட்கவேண்டும் என்ற ஆசை என்னை கொஞ்சம் உணர்ச்சி படுத்தியது நேரம் மிக நெருங்கியதால், நானும் அவளை இருக்க அணைத்தபடி, 'சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!' என்று அவள் காதில் கூறினேன்! "இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என, யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, தான் செய் குறி நிலை இனிய கூறி, ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி, விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?" அவள் சடுதியாக ஒரு முத்தம் தந்து, தன்னை மறக்க வேண்டாம், 'நீங்க தான் என் அன்பு' என்று கெஞ்சாத குறையாக விடை தந்தாள்! நானும் அவளுக்கு பதில் முத்தம் கொடுத்து, அவசரம் அவசரமாக விலகி போனேன். நான் யாழில் இருந்து பேராதனைக்கு போகும் வழியில் யானைகள் ஆணும் பெண்ணுமாக ஏராளமாகத் திரியும்.வெயில் தாங்க முடியாது நீர் வேட்கை கொண்டு திரியும் பெண் யானையின் தாகம் தீர்க்க வேண்டி, ஆண் யானை மரப் பட்டைகளைப் பிளந்து தன் இணையான பெண் யானைக்கு அன்புடனும் காதலுடனும் ஊட்டி விடும். அதை நான் பார்க்கும் பொழுது தன் நினைவு என்னில் எழும் என்று அவள் எண்ணினாலோ என்னவோ, நான் விலகி போய்க்கொண்டு இருப்பதால், கொஞ்சம் சத்தம் போட்டு, தான் தமிழ் இலக்கியம் பாடம் படிப்பது போல, அவள் குறுந்தொகை பாடல் ஒன்றை பாடியது இன்னும் என் கண் முன் நிற்கிறது, ஆனால் அவள் தான் இல்லை! "நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே." நான் பொறியியல் பீடத்தில் கற்கத் தொடங்கி இன்று -1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் - இரண்டு மூன்று கிழமை தான் ஆகிறது. வழமையாக நடைபெறும் பகிடி வதை [ராகிங்] எல்லாம் ஓய்ந்துவிட்டது. நிம்மதியாக அன்று இரவு ஒரு சில மணித்தியாலம் அன்றைய பாடங்களை திருப்பி ஒருக்கா பார்த்த பின், நான் தங்கி இருந்த ஹில்டா ஒபேயசேகர விடுதியில் [Hilda Obeysekara Hall] சக நண்பர்களுடன் தேநீர் அருந்தி கதைத்துக்கொண்டு, இலங்கை செய்திகளுக்காக காத்திருந்தோம். இந்த கால கட்டத்தில், சமாதானத்தை ஏற்படுத்த வந்த காந்தி தேசத்து அமைதிப்படை, உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்த மக்களின் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளில் தம்மை துரிதப்படுத்திக் கொண்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதனால்த் தான் எமக்கு செய்திகள் அன்று முக்கியமாக இருந்தன. அன்றைய இரவு செய்தி எம்மை அப்படியே கதிகலங்க வைத்துவிட்டது. ஆமாம், இந்திய இராணுவம், மாலை நாலு மணிக்குப்பின் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் புகுந்து நடாத்திய கோரத்தாண்டவங்கள் பற்றியே அந்த செய்திகள் இருந்தன. அன்றைய காலத்தில் கையடக்க தொலைபேசி இலங்கையில் இல்லை. எனவே நேரடியாக நாம் அங்கு பேசி செய்தி அறிவது கஷடம். என்னுயிர் தோழி, செவ்வரத்தையின் முதல் கடிதம் அன்று காலை தான் கிடைத்தது, அவள் பாடசாலைக்கு போகும் பொழுது பெற்றோருக்கு தெரியாமல் எழுதி போட்டு இருந்தாள். அதில் இருந்த ஒரு வரி தான் இப்ப என்னை ஏக்கத்தை கொடுத்து வருத்திக் கொண்டு இருக்கிறது, 'அக்டோபர், 21ம் நாள், புதன் கிழமை, பாடசாலையில் இருந்து அரை நேரத்துடன் வீடு திரும்பி மாலை மூன்று மணி அளவில், தான் அம்மாவை கூடிக்கொண்டு யாழ் வைத்தியசாலை போவதாக குறிப்பிட்டு இருந்த அந்த வரி தான்' அது! அந்த அவசர செய்தியில் தனிப்பட்ட விபரங்கள் தராவிட்டாலும். இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டு பேர் கொல்லப்பட்டார்கள் என்ற அந்தக் கோரப் படுகொலை செய்தி கேட்டதில் இருந்து எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்கும் விடயம் இதுவல்ல, என்றாலும் முழுமையாக அடுத்தடுத்த செய்திகள் மூலம் விபரம் அறிய நாளை வரை பொறுத்து இருக்கத் தான் வேண்டும். அவளுக்கு ஒன்றும் நடக்காது என்று என் மனது என்னை ஆறுதல் படுத்தினாலும் நித்திரை அன்று கொள்ளவே இல்லை! நான் வியாழக்கிழமை வழமை போல பாட வகுப்புகளுக்கு போய்விட்டு, ஆனால் அன்று இரவு, பாடங்கள் ஒன்றையும் திருப்பி பார்க்காமல், எமது விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னாலையே , அடிக்கடி வரும் மேம்படுத்தப் பட்ட செய்திகளை [news update] கேட்டுக்கொண்டு இருந்தேன். இரவு பதினோரு மணிக்கு பிற்பாடு தான் கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வாசிக்கப் பட்டன, அதில் .. அவள் .. பெயர் .. 'செவ்ராத்தை'யும் இருந்தது. என்னுயிர் தோழியின் அந்த முதல் மற்றும் கடைசி அணைப்பு, அந்த முத்தம், அந்த கடிதம் இந்த மூன்றும் தான், அவளின் ஞாபகார்த்தமாக என்னுடன் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது! என் முதல் மகளின் பெயர் கூட 'செவ்வரத்தை' தான்! "அத்தியடி வீதியில் காலைப் பொழுதில் ஓட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன் பிள்ளையார் கோவில் கிணற்றடியில் அமர்ந்து காட்டாத வாழ்வைக் கனவு கண்டேன்!" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது ஹலோ சொல்லி செவ்வரத்தை வந்தது!" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி ஒட்டி உடையில் அழகு காட்டி வட்ட மிட்டு வானத்தில் இருந்து எட்டிப் பார்த்து இன்பம் பொழிந்தது!" "நட்சத்திரம் மின்ன கதிரவன் மறைய ஆலய பக்தர்கள் அரோகரா முழங்க மனைவி வந்து தட்டிக் கேட்க வெட்கம் கொண்டு கனவும் பறந்தது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தளதள ததும்பும் இளமை பருவமே"
"தளதள ததும்பும் இளமை பருவமே" "தளதள ததும்பும் இளமை பருவமே தகதக மின்னும் அழகிய மேனியே நறநறவென பல்லைக் கடித்து நின்று திருதிருவென விழித்து அழைப்பது ஏனோ ?" "சல்சல் என சலங்கை ஒலிக்க சிலுசிலு எனக் காற்று வீச கமகம என முல்லை மணக்க தடதடவென கதவைத் தட்டுவது ஏனோ ?" "திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க திடுதிடு இன அறையில் நுழைந்து தரதர என்று என்னை இழுத்து விக்கிவிக்கி மெதுவாய் அழுதது ஏனோ ?" "தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு துடிதுடிக்கும் இதயத்தை சாந்தப் படுத்தி கிளுகிளுப்பு தந்து மடியில் சாய்வதேனோ ?" "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி சரசரவென்று துள்ளி ஓடுவது ஏனோ ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், யாழ்ப்பாணம்]
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே"
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "மெத்தை மேல் அவள் உறங்க சத்தம் இன்றி முத்தம் இட கொத்து கொத்தாய் மலர் கொடுக்க ஒத்தையடிப் பாதையில் தவம் கிடக்கிறேன்!" "ஒப்பனை செய்து பிரமனும் மயங்க ஒல்லிய இடைக்கு பட்டை சுற்றி ஒற்றைக் கொம்பன் அருள் வேண்டி ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகிறாள்!" "ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கிய என்னை நத்தை வேகத்தில் மெல்ல வந்து சித்தம் கலங்க கண்ஜாடை காட்டி சத்தம் வராமல் முட்டி போகிறாள்!" "ஒத்தையடிப் பாதையில் ஓரமாய் நிற்கையில் ஒளிரும் தளிர்மேனி அருகில் வந்து ஒதுங்கிய என்னை ஆரத் தழுவ ஒன்றாய் இருவரும் மகிழ்ந்து நின்றோம்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 22 சங்க இலக்கியத்தில், வளைந் திருக்கும் வளையலுக்கு அடைமொழியாக வந்த ‘கோல்’ என்ற சொல்லாட்சி, பின் வளைந்து நெளிந்து வட்ட வடிவமாக வரையும் கோலத்திற்கும் ஆகியிருக்கலாம், ஏன் என்றால் பரிபாடல் 11: 99-100 இல் "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே கொற்றவை கோலம் கொண்டு ஒர் பெண்" என்ற ஒரு வரியை காண்கிறோம், இங்கு கோலம் வடிவத்தை குறிக்கிறது. அதே போல அதே பாட்டில் வரி 97, 98 :" குவளைக் குழைக் காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள்" என்று கூறுகையில் அங்கு கோலம் அழகை குறிக்கிறது, ஆகவே அழகும் வடிவமும் கொண்டு செய்ததை கோலம் என்றனர். சிலப்பதிகாரமும் ஆடுமகளுக்கும், மணமகளுக்கும், இசைக் கருவிக்கும் செய்யப் பட்ட ஒப்பனைகளை கோலம் என்கிறது. எனவே ஒரு வகையில் நாம் தரைக்கு செய்யும் ஒப்பனையும் கோலம் ஆகிறது. ஆகவே கோலங்கள் என்பதை ஒரு அற்புதமான வரி வடிவம் என்று கூறலாம். அரிசி மாவு, வண்ணப்பொடிகள், சுண்ணாம்புப் பொடிகள், கொண்டு தரையில் போடப்படுவதையே இங்கு கோலம் குறிக்கிறது. கோலம் போட பெரும்பாலும் அாிசி மாவைத்தான் ஆரம்பத்தில் பயன்படுத்தி உள்ளனா். இதற்கு காரணம் எறும்பு பாேன்ற சிற்றுயிாினங்களுக்கு உணவாக வேண்டும் என்ற உதவும் நல்ல எண்ணம் தான். என்றாலும் பிற்காலத்தில் தான் அது அலங்காரத்திற்காக என்று மாற்றம் கண்டு அரிசிமாவு பயன்பாடு குறைந்து மற்றவைகள் சேர்க்கப் பட்டன. இது கோவிலிலும், வீட்டு வாசலிலும், வீட்டின் உள்ளே வழிபாடு நடத்தும் இடத்தில் சிறிய அளவிலும் போடப்படுகின்றன. இந்த கோலங்களை எம் சான்றோர்கள் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக சொல்லித்தந்தார்கள். தாயிடமிருந்து மகளுக்கும், அவளிடமிருந்து அவளுடைய மகளுக்கும் என்று தலைமுறை தலைமுறையாக இது பயணித்த படி இன்றும் உள்ளது. அப்படிப்பட்ட கோலங்களில் ஏராளமான புதிய புதிய வடிவங்கள் இன்று வந்து சேர்ந்துள்ளன. பலர் வீடுகளில் தினமும் வாசலைப் பெருக்கி, சுத்தம் செய்து, நீரோ, சாணமோ தெளித்து, அதன் மீது அதி காலையில் கோலம் போடுகிறார்கள். சங்க இலக்கியத்தில், கோலம் இடப்பட்ட இடத்தையே 'களம்' என்று கூறப்பட்டு உள்ளதாகவும், வேலனாக உருவகப் படுத்தப்பட்ட முருகப் பூசாரி கோலத்தின் நடுவில் நின்றுதான் ஆடினான் என்றும் நம்பப் படுகிறது. இந்த மரபை 'களமெழுதுதல்' அதாவது தரையில் ஓவியம் வரைதல் என்றும் அழைப்பர். இன்று புதை பொருள் ஆய்வாளர்களால், பண்டைய மனிதன் வாழ்விடங்களில் தோன்றி எடுக்கப்பட்ட கல்வெட்டுகளிலும் முத்திரைகளிலும், கோடுகளும் குறியீடுகளும் இருப்பதை கண்டு பிடித்து உள்ளார்கள். உதாரணமாக, வேடடையாடி உணவு திரட்டும் சமூக நிலையில் இருந்து, நிரந்தரமாக குடியேறி விவசாய சமூக நிலைக்கு மாறும் தருவாயில் தங்கள் உடமையை எண்ண வேண்டிய தேவை உண்டாகி இருக்கும். 9,000 ஆண்டு பழமை வாய்ந்த, கற்கால [neolithic] கீறல் போட்ட அல்லது கோடுகள் போட்ட கணக்கிடும் அடையாள வில்லைகள் [incised "counting tokens"] பல மெசொப்பொத்தேமியாவில் தோண்டி எடுக்கப் பட்டன. இவையே பின்பு வடிவங்கள் பெற்று களி மண்ணில் பதியப்பட்ட சித்திர வெழுத்தாக [ஓவிய எழுத்துக்கள் /உருவ எழுத்துக் கள் /pictographs] கி மு 3200 ஆண்டு அளவில் பரிணமித்தது, பல மாற்றங்கள் அடைந்து இறுதி யில் அவை இன்று உள்ளது போல, ஒலியை பிரதி பலிக்கும் ஒலியெழுத்தாக (alphabetic) மாறின. எனவே கணக்கில் இருந்து தான் 'எழுத்து' முதல் முதல் சுமேரியாவில் பிறந்தன, அதனாலோ என்னவோ "ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி" --- கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணாகவும், எழுத்தாகவும், தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும், .. என்கிறார் திருநாவுக்கரசு நாயனார். எனவே தமிழ் எழுத்தின் வளர்ச்சியிலும் குறியீடுகளின் பங்களிப்பு ஒரு முக்கியமாகும். இது முழு எழுத்து வடிவம் அடையும் முன்பு ஒரு தகவல் தொடர்புச் சாதன மாக மட்டுமே திகழ்ந்து இருக்கும். எனவே இது வீடு, இது இடம் என தகவல்களை குறிப்பதற்கு அன்று ஏதாவது குறிகளை அங்கு இடப்பட்டு இருக்கலாம், அவ்வாறு வரையப்பட்ட குறியீடுகளே நாளடைவில் வரியாகி, வடிவாகி, அழகாகி இன்று கோலமாகி, வீட்டு வாசல்களில் இடம்பெற்று வருகிறது என்று நம்புகிறேன். இந்த கண்ணோட்டத்தில் கோலத்தை ஒரு கோட்டு மொழி என்றும் நாம் கூறலாம். அது மட்டும் அல்ல இது ஒரு மகிழ்வான வரவேற்பு அடையாளமும் ஆகும். சுருக்கமாக, நம் கோலங்கள் தமிழினத்தின் பழமையினைப் பகருகின்றன; பண்பாட்டைச் சொல்லுகின்றன; வளமையைத் தெரிவிக்கின்றன; வருத்தத்தைக் குறிக்கின்றன; வாழ்வியலைக் கூறுகின்றன; விழாக்களை உரைக்கின்றன; மகிழ்ச்சியினைப் பரிமாறுகின்றன; மரணத்தை அறிவிக்கின்றன; உடற்பயிற்சியினை நல்குகின்றன; கோலம் மாவினால் போடப் படுவதால், உயிரினங்களுக்கு கூட உணவளிக்கும் பெருமையையும் சிறப்பையும் கூட கொடுக்கின்றன. அதிகாலை கோலம் போடுவதால், நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப் படுவதுடன், இது நம் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சி யாகவும் உள்ளது. மேலும் கோலம் போடுவதால் நம்மையும் அறியாமல் நல்லதொரு உடற் பயிற்சியை, ஒரு யோகசனத்தை பெறுகிறோம். நாம் குனிந்து, நிமிர்ந்து, வளைவது இடுப்பிற்கும், கால்களை நேராக்குவது, கைகளால் கோலம் போடுவது கை, கால்களுக்கு அசைவுகளையும், கண்களால் கூர்ந்து கவனிப்பதால் கண்களுக்கு ஒரு பயிற்சியையும் இது கொடுக்கிறது. இவைகள் எல்லாவற்றாலும், நம் உடலில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைக்கவும் இது உதவுகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் ,உதாரணமாக, இராஜஸ்தான், வட இந்தியா, வங்காளம், பீகார், மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இதற்கு நெருங்கிய ரங்கோலி எனப்படும் நிறக் கோலம் அல்லது வண்ணக்கோலம் காணப்படுகிறது. இது ரங், ஆவலி என்னும் இரு சமஸ்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது. இங்கே ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருகிறது. எனினும் தமிழ்நாட்டுக் கோலங்களுக்கு நிறமூட்டுவது இல்லை. இவை கோட்டுருக்களாகவே வரையப்பட்டு வருவதுடன் வரைதல் நுட்பங்களிலும் சில வேறுபாடுகள் உண்டு. புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படும் பாரதிதாசன், தனது "குடும்ப விளக்கு" என்ற பாடலில், வீட்டிலுள்ள பெண்களின் தினசரி வழக்கமான காலை பழக்கங்களை ஒவ்வொன்றாக கூறுகிறார், அதில், விடியற் காலத்தில், கதிரவன் தோன்றுவதற்கு முன்னரே, தலைவி எழுந்து, முத்துப் போன்ற முல்லை அரும்பாய் பூக்கும் கொல்லப்புறத்துக்குச் சென்று புது நீரை மொண்டு முகத்தைக் கழுவி, வாயில் இட்ட நீரை முத்தை வீசுவது போல துப்பிவிட்டு, பின்பு கிணற்றில் நீர் இரைத்து தன் கையில் ஏந்தி வந்து வீட்டின் முன் கதவு தாழ் திறந்து வாசலை அடைந்து, தகடு போல பளபளவென்று தன் வாசலைக் கூட்டி, தண்ணீர் தெளித்து, சானம் இட்டு மெருகு தீட்டிக் கழுவி, அரிசிமாவால் அழகான கோலம் போட்டாள். அப்பொழுது தோன்றிய கதிரவன், அவள் செயலைப் பாராட்டும் வகையில், பொன் போன்ற ஒளியைப் பரிசாகக் அவளுக்கு கொடுத்தானாம் என்று "முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும், கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும் சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி, அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப் பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!" என கூறுகிறார். ஆனால் ஒரே ஒரு குறைதான் எப்படி தமிழரின் மூதாதையர் என கருதப்படும் சுமேரியன் கண்டு பிடித்த எழுத்தை “எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்” என்றும் ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே’ என்றும், அதே போல, பொதுவாக, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ, எல்லா பண்டைய சமூகமும், எழுத்து ஆண்டவனால் மனிதனுக்கு கொடுத்த கொடை என்று சில புராணக்கதையும் அதற்கு இணைத்து விட்டனர். அவ்வாறே தற்போது கோலங்கள் குறித்த நம்முடைய பார்வைகளும் மாறத் தொடங்கியுள்ளன. கோலத்தைத் தெய்வத்தோடு சேர்த்துச் சொல்லுகின்ற மரபும் நிலவுகிறது. வீட்டு வாசலில் மகாலட்சுமி உறைவதாகவும; அதற்காகவே கோலமிடுவது போன்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை மாற்றங்கள் காலத்தின் மாற்றங்களே என்று கருத வேண்டியுள்ளது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 23 தொடரும்
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 10 மதுரை ஆதீனத்தின் [ஆதினத்தின்] அதிகாரப் பூர்வமான ஆங்கில கணினி இணையத்தில் [The previous official website of Madurai Aadheenam was taken over by Nithiyananda earlier, so please check: 'Madurai Aadheenam - Nithyananda Truth'], ஆதீனத்திற்கு [ஆதினத்திற்கு] இன்னும் ஒரு முக்கிய கருத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். அது எமக்கு ஒரு வியப்பையே கொடுக்கிறது. மேலும் Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary யில், ஆதீனம் என்பதற்கு: s. [commonly ஆதினம்.] என்றும் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது ஆதீனம் என்பதை ஆதினம் எனவும் பொதுவாக குறிக்கலாம் என பொருள் படுகிறது. இந்த அடிப்படையில் ஆதினம் என்பதை மேலும், ஆதி+இனம் என பிரித்து பார்த்து இந்த கணினி இணையம், நாகரிகம் முதல் முறையாக குடியேறிய இடம் ஆதினம் என்கிறது. அதாவது ஆதினம் என்னும் சொல் பண்டைய சமூகம் அல்லது குடியேற்றத்தை குறிக்கிறது என்கிறது. அது மதுரையில் உள்ளது. ஆகவே அந்த பண்டைய குடியேற்றம் முதல் முறையாக அங்கு நடைபெற்றது என்கிறது. அதாவது மதுரை ஆதினம் ஒரு பண்டைக் காலத்திய புராதன [மூல] நாகரிகம் என்கிறது. ஆகவே மதுரை ஆதினம் ஒரு மறுக்க முடியாத மிக பண்டைய மனித நாகரிகத்தின் குடியேற்றம் என்கிறது. இதன் தோற்றுவாயும் காலமும் பதியப்பட்ட எல்லா சரித்திர காலத்தையும் அதற்கு முந்திய பதியப்படாத காலத்தையும் கடந்தது என்கிறது. அதாவது இதன் சரித்திரம் இரண்டாக உள்ளது. ஒன்று பதியப்பட்ட வரலாறு, இது கிபி 700 அளவில் திருஞானசம்பந்தருடன் தொடங்குகிறது. மற்றது அதற்கு முந்தியது. நாம் முன்பு எடுத்து காட்டியவாறு, சங்க காலப் பாண்டிய அரசின் தலை நகரமாக இருந்த கொற்கையில் இருந்து 15 கி மீட்டார் தூரத்தில் அமைந்த ஆதிச்ச நல்லூரில் மேற் கொண்ட அகழ்வு ஆராச்சியில் குறைந்தது கி மு 2000 ஆண்டுகளில் இருந்து அங்கு ஒரு பண்டைய தமிழர் நாகரிகம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் பாண்டிய என்ற சொல் ஒரு பண்டைய அல்லது பழைய நாட்டை குறிப்பதாக அறிகிறோம். கலித்தொகை என்ற சங்க பாடல் பாண்டிய சேர மன்னர்கள் 10,000 ஆண்டுகள் ஆண்ட குமரி கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பை குறிக்கிறது. அது கடலில் மூழ்க, இன்றைய தமிழகத்தில் முதலில் கொற்கையையும் பின்பு மதுரையையும் தலை நகராக கொண்டு அவர்கள் குறைந்தது கி மு 600ஆண்டுகளில் இருந்து கி பி 1700 ஆண்டு வரை ஆண்டார்கள் என இலக்கிய ஆதாரங்களை முன் வைத்து ஒரு கருத்தும் பொதுவாக உண்டு. அது மட்டும் அல்ல பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் தமிழ் சங்கம் மூன்று கால கட்டத்தில் செழிப்பாக வளர்ந்தது என அறிகிறோம். முதலாவது [தலைச்சங்கம்] பழைய மதுரையிலும் [கடல் கொண்ட தென் மதுரையிலும்] இரண்டாவது [இடைச்சங்கம்] கபாடபுரத்திலும் மூன்றாவது தற்கால மதுரையிலும் இருந்ததாக இலக்கிய குறிப்புகள் உண்டு. ஆனால் மூன்றாவது அல்லது கடைச் சங்கத்திற்கு மட்டுமே வரலாற்று குறிப்புகள் உண்டு. அதாவது, இதில் முதல் இரண்டும் கடலால் மூழ்கடிக்கப்பட்டது என நம்பப்படும் குமரி கண்டத்தில் இருந்ததாக இலக்கிய குறிப்புகள் மட்டுமே உண்டு. மேலும் இன்னும் ஒரு குறிப்பு சிந்து சம வெளி நாகரிகம் அழிவிற்கு உட்பட்ட போது, அங்கு இருந்த தமிழர் / திராவிடர் அதன் பின் அங்கிருந்து புலம் பெயர்ந்து தென் இந்தியா வந்து குடியேறியதாக சொல்கிறது. அதுமட்டும் அல்ல, இன்னும் ஒரு சாரார், சுமேரியாவில் இருந்து சிந்து சமவெளிக்கு இடம் பெயர்ந்த சுமேரிய தமிழரே இவர்கள் என்கிறார்கள். எப்படியாயினும் அவர்கள் அங்கு மதுரையில், ஆதி காலத்திலேயே 3000 / 4000 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறினவர்கள் என்பது மட்டும் உண்மை. மேலும் மகாவம்ச என்ற பாளி மொழி தொடர் கதை கி மு 543 அளவில் இலங்கை தீவின் - வட இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்த - ஆரிய அரசனான விஜயன் தென்மதுரை பாண்டிய மன்னனின் மகளை கல்யாணம் செய்தான் எனவும், அதன் பின் ஒவ்வொரு வருடமும் பாண்டிய மன்னனுக்கு உயர்தரமான பரிசுகள் அனுப்பினான் எனவும் குறிக்கிறது. அது மட்டும் அல்ல, கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான மெகஸ்தெனஸ் (Greek traveler Megasthenes / கிமு 350 - கிமு 290) பாண்டிய பேரரசை குறிப்பிட்டுள்ளார். பண்டைய மதுரை நகரம் எப்படி அன்று செல்வச் செழிப்புடனும் பெருமையுடனும் காணப்பட்டது என்பதை அறிய, புகழ் பாடும் - 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த - சங்க பாடல்கள் சிலவற்றை கீழே பார்ப்போம்: "வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன மாட மதுரையும் தருகுவன்;" [புறநானுறு 32] வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியு முடைய விறலியர்விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான் என்கிறார். "தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான் தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் மண் மாறு கொண்ட மாலை வெண் குடை கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன் தமிழ் நிலை பெற்ற தாங்குஅரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று" [சிறுபாணாற்றுப்படை:62-67] அலை கடலை எல்லையாகக் கொண்ட கொற்கை நகருக்கு அரசனாகிய பாண்டியன், தெற்கிலுள்ள பாண்டிய நாடு முழுமையும் பாதுகாப்பவன். பாண்டியர்கள் மரபில் வந்தவன். பகைவரை வென்று அவர் நாட்டைத் தன தாக்கி முத்து மாலை சூட்டப் பெற்ற வெண் கொற்றக் குடையும், கண்ணுக்கினிய வேப்பம்பூ மாலையும் அணிந்தவன். விரைந்து செல்லும் தேர்ப் படையினை உடையவன். அப்பாண்டிய மன்னனின், தமிழ் மொழி நிலை பெற்ற பெருமையினையும், மகிழ்ச்சியான தெருக்களையும் உடைய மதுரையில் நீ பெறுகின்ற பரிசிலும் குறைவானதாகவே இருக்கும், அதாஅன்று – அது மட்டும் இல்லை என்கிறார். "மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல, கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது." [மதுரைக் காஞ்சி / Mathuraikkanci ] சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றி விடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவது மில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார். நாம் இலங்கையின் பண்டைய பாளி மொழி இதிகாகசமான மகாவம்சமும் மதுரையின் புகழ் பேசுவதை காண்கிறோம். உதாரணமாக, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல்: அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையென கருதப்படும் - ஆனால் சிங்களம் என்ற ஒரு மொழியே உலகில் எங்கும் இல்லாத அந்தக் காலத்தில் - விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்? அது மட்டும் அல்ல விஜயன் அனுப்பிய கடிதம் மற்றும் அவனின் தூதுவர்களுடன் தமிழ் மதுரை அரசன் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருந்தது தமிழருக்கும் இலங்கைக்கும், விஜயனுக்கு முன்பே உள்ள தொடர்பை எடுத்து காட்டுகிறது. "பல பெண்களைத் திரட்டிய பின்னர் .... பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு ஒரு செய்தியும் மதுரை மன்னன் அனுப்பினான்." ஆகவே தமிழ் மதுரை மன்னனுக்கும் விஜயனுக்கு இடையில் மொழி பிரச்சனை இருக்கவில்லை. மற்றது விஜயனும் அவனது எழுநூறு ஆரிய நண்பர்களின் தொகையை விட , இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்ட மதுரை தமிழ் குடிமக்களின் தொகை பல மடங்கு பெரிது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது , விஜயனுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளின் பின், உருவாகிய சிங்கள இனம் இவர்களின் கூட்டில் இருந்து தான் [மற்றும் இலங்கையில் இருந்த நாகர்களும் மற்ற குடிகளும் கலந்து] உண்டாக்கியது என்பதாகும் !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 11 தொடரும்
-
"விடியலைத் தந்த பொங்கல்"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"விடியலைத் தந்த பொங்கல்"
"விடியலைத் தந்த பொங்கல்" கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கலிலும் விடியலைத் தேடுகிறேன். நம்பிக்கையும் முயற்சியும் என்னிடம் நிறைய முன்பு இருந்தது, என்றாலும் நம்பிக்கை இப்ப மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. ஆனால் நான் முயற்சியை, மாற்று வழிகள் தேடுவதை என்றும் நான் கைவிடவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஆண்டாண்டு காலமாக தமிழன் சொல்வதை, அதில் இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, நான் அதை மறக்கவில்லை. இன்று ஜனவரி 14, 2023 சனிக்கிழமை, மூன்றாவது இலங்கை இந்தியா ஒருநாள் சர்வதேச துடுப்படி ஆட்டம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அதில் சலிப்புத்தான் வந்தது, இந்தியா 390 ஓட்டங்கள் எடுத்தவேளை, இலங்கை 75 ஓட்டமே பெறமுடியாமல் திண்டாடிக்கொண்டு இருந்தது. அப்படித்தான் ஒவ்வொரு ஆண்டாக விடியல் [வெற்றி] என்னை விட்டு விலகிக்கொண்டே இருந்தது. கொஞ்சம் வித்தியாசம். நான் திறமையாகத்தான் தொடர்ந்து செயற்படுகிறேன், அதில் எந்த ஐயப்பாடும் இல்லை, ஆனால் முற்றும் நேர்மையாக. அது தான் என்னைத் தடுத்துக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொய்யும் புரட்டும் கலந்து இருந்தால், எப்பவோ எனக்கு விடியல் வந்திருக்கும்! நான், தொடர்மாடி குடியிருப்பில், இரண்டாவது மாடியில் உள்ள என் அறையின் ஜன்னலின் ஊடாக வெளியே எட்டிப் பார்க்கிறேன். தொங்கிய தோள்களுடனும் வாடிய முகங்களுடனும் அசையும் மக்களை காண்கிறேன். அவர்களின் நம்பிக்கை இழப்பையும் பரிதாபகரமான விதியையும் நினைக்கிறன். நான் மட்டும் அல்ல, என்னுடன் ஒரு கூட்டமே விடியலுக்காக அலைவதைக் காண்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடுதல். இதை பார்க்க பார்க்க என் மனதில் வெறுமையும் வெறுப்பும் கூடுவது போல இருந்தது. இந்த பொங்கலில் ஆவது ஒரு விடியல் வருமா என்று என் மனம் தவித்துக்கொண்டு இருந்தது. நான் என் படுக்கை அறையை பார்த்தேன். அது வெறிச்சோடி இருந்தது. நான் கல்யாணம் கட்டி ஒரு ஆண்டுமட்டும் ஒரு பிரச்சனையும் வரவில்லை. மிகச் சீராக மகிழ்வாக அது நகர்ந்தது. அதன் பலன் எமக்கு அழகான மகள் பிறந்தாள். இருவருக்குமே அது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. நாம் வாடகைக்கு இருந்த வீடு ஒரு அறை வீடு. தலை நகரில், வாடகை மிக மிக அதிகம் என்பதால் கல்யாணம் கட்டிய புதிசில் அது போதுமானதாகவும் இருந்தது. ஆனால் மகள் பிறந்தபின், அவளுக்கு என ஒரு தனி அறை தேவைப் பட்டது. அது மட்டும் அல்ல, வருங்காலத்தையும் எண்ணி மூன்று அறை வீடு தேவை என்று மனைவி கேட்கத் தொடங்கினார். உண்மையில் என் படிப்பு மற்றும் வேலை திறமை அடிப்படையில் நோக்கின் எனக்கு எப்பவோ பதவி, சம்பள உயர்வு வந்திருக்கவேண்டும். இப்ப நான் எடுக்கும் சம்பளத்தை விட குறைந்தது மூன்று மடங்காவது இன்று நான் எடுத்திருப்பேன். ஆனால் என் படிப்பு தந்த திமிர், என் உயர் அதிகாரிகளுக்கு சலாம் போட மறுத்துவிட்டது. என் எல்லா உயர் அதிகாரிகளும் என்னை விட படிப்பில் குறைந்தவர்கள், ஆனால் நிறைய சுற்றுமாற்றாக, நேரத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் தகுந்தவாறு அமைச்சருடன் அல்லது அவரின் அதிகாரியுடன் கதைப்பதுடன், அவர்களை திருப்திப்படுத்தக் கூடிய, வேலைக்கு புறம்பான வசதிகளை, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதில் வல்லவர்கள். நான் இவைகளுக்கு எதிர்மாறு மற்றும் நேருக்கு நேராக பிழையான செயல்களை கேட்டும் விடுவேன். என் மனைவி, 'நீங்க வாழத் தெரியாதவர், நீங்கள் நேர்மையாக ஒழுங்காக வேலை செய்யுங்கள், அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களையும் கட்டுப்படுத்துக்கள். அதில் தவறு இல்லை. உங்களுக்கு மேலே உள்ளவர்களைப் பற்றி அதிகமாக கவலைப்படத் தேவையில்லை. அது அமைச்சரின் பொறுப்பு. மற்றது நீங்கள் மதிப்பு கொடுப்பது அவர்களின் பதவிக்கு மட்டுமே, அவர்களின் உண்மையான தகுதி என்ன என்று யோசிக்காதீர்கள் , அப்ப தான் நாம், பிள்ளைகளுக்கும் ஏற்ற, தகுந்த வசதிகளுடன் வாழ முடியும்' இப்படி பலதடவை என்னிடம் கெஞ்சி, பின் வாதாடி, கடைசியாக 'குறைந்தது மூன்று அறை வீடு எடுத்தால் தான் நான் இனி உங்களுடன் இங்கு இருப்பேன்' என்று சொல்லிவிட்டு என் மகளுடன் தன் தாய் வீட்டுக்கு, தன் கிராமத்துக்கு போய்விட்டார். நான் என் நம்பிக்கையை என்றும் இழக்கவில்லை, உண்மை , நேர்மை ஒருநாள் வெல்லும், அவர்களின் பொய் புரட்டுகள் அம்பலத்துக்கு வரும் அல்லது வரவைப்பேன் என்ற துணிவு மட்டும் மாறவில்லை. நாளை, ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும், அமைச்சர் மற்றும் அவரின் அதிகாரிகள் எம் பணிமனைக்கு தைப்பொங்கல் தினத்தை ஒட்டி வருகிறார்கள். ஒக்டோபர் 6, 2022 இல் உலக வங்கியின் அறிக்கையின் படி, மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 9.2 சதவீதமாகவும், 2023ல் மேலும் 4.2 சதவீதமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது. அது தான் எனக்கு இவர்களின் பித்தலாட்டத்தை, ஏமாற்று வேலையை வெளிக்கொணரவும். இம்முறை கட்டாயம் அமைச்சர் அதை ஏற்று விசாரணை நடத்துவார் என்ற துணிவையும் தந்தது. அதன் படி பல அத்தாட்சிகளுடன் நவம்பர் முதலாம் திகதி, என் பிறந்த நாளில், அமைச்சரிடம் ஒரு நீண்ட அறிக்கை சமர்பித்தேன், அது என் உயர் அதிகாரிகளுக்கு தெரியா. அமைச்சர் தை முதலாம் திகதி, புத்தாண்டு வாழ்த்துடன், தான் தைப்பொங்கலுக்கு பணிமனை வருவதாகவும், அதில் தன் முடிவு பகிரங்கமாக அறிவிக்கப் படும் என்றும், தான் தன் தேவையான அனைத்து விசாரணையையும் முடித்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். நான் முன்பும் இரு தடவை அவ்வற்றை சுட்டிக்காட்டினாலும், அந்த கோப்புகள் எல்லாம், தேடுவார் அற்று போனது தான் மிச்சம். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. 'ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்க ஆழமான சீர்திருத்தங்களை இலங்கை விரைவாகக் கடைப்பிடிக்கவேண்டும்' என்ற உலகவங்கியின் கோரிக்கை அரசை கொஞ்சம் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில் 10 லட்சம் பேர் திறனுடன் செயற்படுவதில்லை என, அண்மையில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறியதும் மற்றும் இன்று இலங்கையில் இளைஞர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும் இந்த தைப்பொங்கல் ஒரு விடிவை தரலாம் என்று எனக்கு சொல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தன. இந்த விடயங்கள் குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊபிடம் பிபிசி தமிழ் அண்மையில் [18 செப்டெம்பர் 2022] பேசிய போது "இலங்கையில் பொருத்தமான வேலைக்கு பொருத்தமான நபர்கள் அநேகமாக உள்வாங்கப்படுவதில்லை" என்றும், "அரசியல் நோக்கங்களுக்காகவே அதிகமானவர்ளுக்கு அரச தொழில்கள் வழங்கப்பட்டன" எனவும் குறிப்பிட்டார். அது தான் எம் பணிமனையிலும் பிரச்சனை. அந்த பொருத்தமற்ற உயர் அதிகாரிகளுக்கு, பொருத்தமான, உண்மையாக வேலை செய்பவர்களை கண்டால் உள்ளுக்குள் ஒரு பயம், அதனால்த் தான் அவர்களை மேலே வரவிடாமல் ஏதேதோ காரணங்கள் கூறி தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வால் பிடிப்பவர்கள், கட்டாயம் மேல் பதவிக்கு போவார்கள், ஆனால் நாட்டுக்கு, மக்களுக்கு உண்மையான சேவை அங்கு இருக்காது, அது தான் நான் அதை, அந்த நேர்மையற்ற வழிகளை வெறுக்கிறேன். இதை மனைவி எனோ புரியவில்லை. அவரில் குறையில்லை. பிள்ளைகளில், குடும்பத்தில் உள்ள பாசம் தான்! இன்று தை 15, 2023 ஞாயிற்று கிழமை, தை பொங்கல் நாள், அமைச்சரும் அவரின் அதிகாரிகள் எல்லோரும் எம் பணிமனைக்கு வந்து, கலகலப்பாக பொங்கல் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள், அதன் பின் என்னையும் என் உயர் அதிகாரிகளையும், மூடிய அறையில் சந்திக்க ஏற்பாடும் செய்தார். எனக்கு எந்த பயமும் இல்லை. தேவையான அத்தாட்சிகள் எல்லாம் வரிசை கிரமப்படி ஏற்கனவே சமர்பித்துவிட்டேன். ஆனால் என் உயர் அதிகாரிகள் கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டனர், அது ஒன்றே இம்முறை, இந்த தைப்பொங்கல் விடியலைத் தரும் என்று எனக்கு முன்கூட்டியே சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்ததோ வேறு ஒன்று. நான் திகைத்தே விட்டேன், என்னால் இன்னும் நம்பமுடியவில்லை, ஆமாம், நான் அந்த முழு பணிமனைக்கும் மற்றும் அதன் கிளை நிறுவனங்களுக்கும் தலைமை அதிகாரியாக, ஆறு மடங்கு சம்பளத்தில், உடனடியாக, பாராட்டுடன் நியமிக்கப் பட்டேன். ஆனால் நான் மிகவும் பணிவாக முதலில் என் முன்னைய உயர் அதிகாரிகளிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் கேட்டதுடன், அதன் பின்புதான் அமைச்சரின் ஆசீர்வாதத்தை கேட்டேன். அது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், என் அந்த நடைமுறையை அமைச்சர் மிகவும் போற்றினார். அவர்கள் எல்லோரும் போன கையுடன் நான் என் மனைவிக்கும், மகளுக்கும் தொலைபேசி அழைப்பு எடுத்தேன். என் மனைவி மிக கோபமாக இருந்தார். 'இன்று தமிழர் பொங்கல் விழா, எங்கே போனீர்கள் ?, ஒரு வாழ்த்து மகளுக்கு கூட சொல்லவில்லையே?' கொஞ்சம் கோபமாக கேட்டார். நான் முதல் மகளை கூப்பிடு என்றேன். மனைவி இன்னும் கோபமாக ' இந்தா உன் அப்பா' என்று தொலைபேசியை அவளிடம் தூக்கி எறிவதைக் கண்டேன். நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. எனக்கு என் மனைவியைப் பற்றி நன்றாகத் தெரியும். ' அப்பா, இனி வரும் பொழுது எனக்கு என்ன வாங்கி வருகிறீங்க?', மகள் நான் தை பொங்கல் வாழ்த்து கூறமுன் தானே கதைக்க தொடங்கிவிட்டார். நான் வாழ்த்து கூறிவிட்டு, அம்மாவிடம் கொடு வாழ்த்து கூற என்றேன், ஆனால் மகள் 'சொல்லுங்க அப்பா , முதலில், என்ன வாங்கி வருவீங்க' திருப்பவும் கேட்டார். நான் உடனே 'இனி ஒன்றுமே இல்லை' என்று பொய்க்கி கூறியது தான் தாமதம், மனைவி தொலை பேசியை பறித்து நிறுத்தியே விட்டார். நான் இதை எதிர் பார்க்கவில்லை. ஆகவே வேறுவழி இன்றி, மனைவியின் தங்கைக்கு உடனே எடுத்து, மகள் அல்லது மனைவியிடம் கொடுக்கும் படி கூறினேன். மனைவி வாங்க மறுத்துவிட்டார், மகள் தான் அழுதுகொண்டு எடுத்தார். 'என் செல்லமே, இனி அப்பா வரத் தேவையில்லை, நீ என்னுடனேயே இருந்து படிக்கப் போறாய், அது தான்' என்றேன். சொல்லி முடிக்க முன்பே. மனைவி, மகளிடம் இருந்து தொலைபேசியை பறித்து 'என்ன, என்ன, எப்போ?' அவசரம் அவசரமாக கேட்டார். நான் இன்றில் இருந்து எனக்கு பதவி உயர்வு வந்துள்ளதாகவும், அதனுடன் சேர்ந்து, தனி வீடும் தந்துள்ளார்கள் என்றும் சுருக்கமாக சாதாரணமாக எடுத்து சொன்னேன். மனைவியின், மகளின் மகிழ்ச்சி என்னால் உணரக் கூடியதாக இருந்தது. என் வாழ்வும் மீண்டும் முன்போல் இந்த தைப்பொங்கலில் இருந்து மலரப்போகிறது என்று எண்ணும் பொழுது, 'விடியலைத் தந்த பொங்கல்' ஆக இந்த 2023 , என் வாழ்க்கை வரலாற்றில் அமைய போவது உண்மையே! இன்னும் ஒரு கிழமையில் என் மனைவியும் மகளும் வந்துவிடுவார்கள். என்னதான் வசதி வந்தாலும் நான் கட்டாயம் உண்மை நேர்மையில் இருந்து என்றுமே விலகமாட்டேன். இது சத்தியம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 21 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" பண்டைய தமிழர் நிலம் ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த அந்த திணைகளில் வாழும் மக்களின் உணவு முறை அவர்களின் உழைப்புக்கும் சூழலிற்கும் ஏற்ப இருந்தன என்பதை அறிகிறோம். முல்லை நிலத்து இடையர், பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். ஆட்டுக்கறி, உடும்புக்கறி ஆகியவற்றை சமைத்தும், குச்சியில் கோர்த்து சுட்டும் உண்டனர். விருந்தினர் வந்தால், தினையும் பாலும் சேர்த்து சமைத்த சோறு பரிமாறினர். மற்றும் சோளம்,அவரை, துவரை, தயிர், மோர், நெய் போன்றவற்றையும் உண்டு மகிழ்ந்தனர். மருதத்தில், வாழ்ந்த விவசாயிகள், நெல்லு, கரும்பு, மற்றும் காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். முல்லை மலர் போன்ற முனை முறியா அரிசி சோறு, கோழி பொரியல் ஆகியவற்றை வாழை இலை, ஆம்பல் இலையில் வைத்து உண்டனர். மற்றும் கஞ்சி, தேன், பால், நெய் போன்றவற்றுடன் சேர்த்து பலவகை பதார்த்தங்கள், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், கரும்பு போன்றவற்றையும் உணவிற்கு பாவித்தனர். உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே. ஆகவே, இந்த மருத நிலத்து மக்கள் கட்டிடங்களையும் மாளிகைகளையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள். நெய்தல் நிலம், ஒரு மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை. ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் அவர்களுக்கு உணவாக அங்கு கிடைத்தன. அவற்றைப் பிடித்து வந்து, தேவைக்கு அதிகமானவற்றை, அயல் ஊர்களில் பண்டமாற்று செய்து, அதற்குப் பதிலாக தானியங்களைப் பெற்றார்கள். மேலும் இவர்கள் அகன்ற வாயை உடைய ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி கஞ்சி அல்லது வடிசாறையும் கள்ளையும் குடித்தார்கள். குறிஞ்சி நில குறவர், மலைகளிலும் மலைச் சாரல்களிலும் நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும், தினையையும் அரிசியையும், மற்றும் பழங்கள், காய்கறி பயிர் செய்தார்கள். மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று.பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன. மற்றும் ஆட்டுக்கடா இறைச்சியும் அரிசியில் அல்லது தினை யரிசியிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு வகை கள்ளையும் குடித்தனர். அத்துடன் தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். பாலை நில வேடுவர், சிவப்பு அரிசியும் வேட்டையாடிய விலங்குகளையும் பொதுவாக உண்டனர். இவர்கள் சிலவேளை கடன் வாங்கி "கள்" குடித்தும் உள்ளனர் என்பதை சங்க பாடல் மூலம் அறிகிறோம். சங்க காலத்தில், தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பு மிக்கதாகும். அங்கு பணக்கார மற்றும் ஏழை மக்கள், இருவரும் விருந்தினர்களை புன்முறுவலுடன் உபசரித்தனர். ஆனால் இப்போது அதன் சிறப்பு குறைந்து கொண்டே வருகின்றது. "விருந்தினரைக் கண்டால் அவர்களுக்கு ஒன்றும் அளிக்க முடியாததால் ஒளிந்து கொள்கிறேன். என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது" - என புறநானுறு 266, வரிகள், 11-13, "விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப், பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன், அறிவுகெட நின்ற நல்கூர் மையே." என்று கூறுவதில் இருந்து அதன் சிறப்பை அறிய முடிகிறது. மகிழ்ச்சி நிரம்பிய விழாக்களில், அரசனும் செல்வந்தரும், பொதுமக்களுக்கு பல வகை இனிக்கும் ஆகாரம் வழங்கினர். இப்படி இவர்கள் கொடுத்த உணவு வகைகளைப் பற்றி, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்கள் வர்ணிக்கின்றன. இந்த பாடல்கள், பொது மக்களின் உணவையும் மற்றும் அரண்மனை விழாக்களில், கொண்டாடங்களில், திருமண விழாக்களில் சமைக்கப்பட்ட உணவையும் எடுத்து கூறுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியம், கி மு 700 இல் இருந்து அறியப்பட்டு இருந்தாலும், கி மு 300 - கி பி 300 இடைப்பட்ட ஆண்டிலேயே தமிழரின் உணவு பண்பாடு பற்றி சங்க இலக்கியத்தில் அறியமுடிகிறது. "கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்" [63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் கடை முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக அது எடுத்து கூறுகிறது. மேலும் விளைந்த நெல்லை - மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற்றுண்டியாக பொரி, என நெல்லை தேவைக் கேற்றபடி தயாரிக்கவும் அறிந்து இருந்தது மட்டுமல்ல, இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பமும், நீண்ட வெள்ளை சரங்களை போன்று அவிக்கப் பட்ட இடி அப்பமும் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் கூறப் பட்டுள்ளது. என்றாலும் இன்று அவிப்பது போன்ற நீராவியில் சமைத்த வட்ட வடிவ இடியப்பம் அன்று இருக்கவில்லை. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 22 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 21 "Food Habits of Ancient Sangam Tamils continuing" We know that the ancient Tamil land was divided into five divisions and the diet of the people living in those divisions was according to their labor and environment. The herdsmen of mullai (forest tracks) region raised cows, goats and buffaloes. They ate lamb and iguana cooked and grilled. If a guest came, rice cooked with millet and milk was served. And they enjoyed eating corn, Lablab purpureus [is a species of bean / avarai], The pigeon pea (Cajanus cajan / is a perennial legume / Tuvarai) , curd, buttermilk, ghee etc. In marudham, Farmers cultivated food items such as paddy, sugarcane, and vegetables. They ate end unbroken rice and fried chicken on banana leaves and the water lily [ambal] leaves. And along with porridge, honey, milk, ghee etc., they used to eat various foods like mango, jackfruit, banana, sugarcane etc. History tells us that people in all countries of the world have been civilized on the banks of rivers and lakes. In Tamil Nadu too, the people have been civilized on the banks of rivers and lakes. So the people of this marudham land built buildings, mansions and palaces and lived civilized and well. The Neidhal land is a sandy land, so grains such as paddy and millet are not grown here. So the people of Neythal land went far out into the sea in rafts and boats and caught fish. Fish like sharks, prawns, and shrimps. Whatever extra, they bartered them in the neighboring towns for grain in return. And they drank rice gruel or toddy [Arici kañci, vaṭicāṟaiyum kaḷḷaiyum / Rice porridge or the naturally alcoholic sap of some kinds of palm, used as a beverage in tropical countries] kept in wide-mouthed jars. The Kurinji land cultivator used to plow the land in the hills and slope of hills only with a spade and cultivated crops of paddy [Mountain paddy, wild rice / ஐவன நெல் Aivaṉa nel], millet and rice [Arici], and fruits and vegetables. Mountain honey was found on the rocks at the top of the hill. Sweet potato was grown. Jackfruits were found. And they had mutton and drank toddy, distilled from rice or a type of millet. They also poured honey into bamboo pipes and processed it to make a kind of wine. In Palai land, Veddas usually ate red rice and wild animals meat hunted by them. We learn from the Sangam poems that Veddas sometimes take loans from others and drank toddy. Hospitality was considered virtue and both the rich and the poor delighted in serving their guests, and ate what was left. In Purananuru 266, lines,11-13,The poet requests the king to help him immediately to remove his poverty. He feels his poverty is shameful that made him hide him while the host approaches as: "O Chenni with strong horses! Please grant me rapid relief from this poverty, like you are listening to a request for help in an assembly of noble men. My thoughts are muddied within my body with all the senses, my life is twisted, and I hide myself whenever I see my guests!" On festive occasions the king and the rich held free feasts and several delicacies were offered. The food that the king provided to his court poets, soldiers and subjects is often descried in detail in over 2000 years olds Sangam poems. Several of these poems describe of foods of the common people and feasts that were prepared and served at the palaces, at festivals, and at weddings. Though, the earliest Tamil writings are traced to about 700 BC, but references to edibles and food habits abound in literature between 300 BC and 300 AD. Pattinap - Palai mentions fish being sliced at the port of Pukar in the mouth of the Kaveri, and fishermen partaking of dishes of fried sweet prawns and boiled field tortoise. The staple food of the Tamils then as now seems to have been rice, supplemented with various vegetables and meats. Milk, butter and honey also seem to have been in common use. Many forms of rice were already known, like parched or flattened rice, puffed rice [is made by heating rice in a sand-filled oven], and parboiled rice [is rice that has been partially boiled in the husk]. Rice appam, a pancake soaked in sweetened milk was already well established and Idi-appam, cooked rice in the form of long white strings rather like fine noodles, is also mentioned even at this early date in ancient Sangam poems Perumpanattuppadai, Mathuraikanchi and Silappathikaram. However, Idiyappam, as traditionally known as fresh steam-cooked, a circular pattern fine rice noodles was not existed at that time. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 22 WILL FOLLOW
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 20 6] பிரபலங்களை வழிபடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture] தொடர்கிறது பல நாடுகளில், பிரபலமடைந்தவர்கள் ஒருவர் மேல் ஏற்படுத்தும் ஆட்டிப் படைப்பும் அதனால் ஏற்படும் அந்த ஒருவரின் மனப் போக்கும் மற்றும் பிரபலமடைந்தவர்கள் மேல் வைக்கும் கண் மூடித்தனமான அன்பும் அல்லது மையலும், ஒரு பெரிய சமூக மற்றும் உளவியல் பிரச்சனையாக இன்று குறிப்பாக இளைஞர்களிடம் காணப்படுகிறது. இந்தியாவும் இலங்கையும் கூட இன்று இந்த பிரச்னைக்கு உள்ளாகி இருப்பதுடன், இது பலரின், நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடிய, ஆற்றல் மற்றும் வளங்களை, திசை திருப்பி வீணடிக்கிறது. இந்த பிரபல வழிபாடு, கைக்கிளை போல் ஒரு ஒருதலைப்பட்ச உறவு மட்டுமே, ஆனால், அவர்கள் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான மெச்சுதல் இதை அவர்களுக்கு மறைத்து விடுகிறது. இதை எவ்வளவு நேரத்துடன் அவர்கள் உணர்கிறார்களோ, அது அவர்களின் வருங்காலத்திற்கு நல்லது. ஏன் மக்கள் பிரபலங்களை பாராட்டு கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள், வழிபடுகிறார்கள் அல்லது அவர்கள் மேல் வெறி பிடித்து அலைகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்களின் வெற்றி வாழ்வும் அவர்களின் ஆட்கவர்ச்சியும் அதிகமாக ரசிகர்களிடம் உந்துகிறது எனலாம். தங்களது வாழ்வின் தோல்விகளை, பிரச்சனைகளை மற்றும் ஏக்கங்களை மறக்கவும் மற்றும் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் வெற்றி மற்றும் புகழில் இருந்து ஒரு இன்பத்தை தமக்கு ஈர்க்கவும் இது அவர்களுக்கு உதவுகிறது. பிரபலங்கள் மற்றும் வெற்றிகரமானவர்களில் மேல் ஒரு விருப்பம் அல்லது பாராட்டைக் கொண்டிருப்பது ஒன்றும் புதிதல்ல, இது ஒரு இயற்கையான, சாதாரண மனித நடத்தையே ! என்றாலும், பிரபலங்களுடன் அளவுக்கு அதிகமாக அன்பு கொள்ளுவதும், மன சார்பு [mental dependence] ஒன்றை அவர்கள் மேல் வளர்ப்பதும் ஒரு உளவியல் சிக்கலாகிறது இன்று. நாம் எம்மையும் எமது முயற்சிகளையும் முன்னேற்றி, சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கு அவர்களிடம் இருந்து பாடங்கள் படிக்கலாம். அதைத்தான் எம் முன்னோர்கள் அன்று செய்தனர். ஆனால் இன்று அதற்கு எதிராக அதிகமாக இருக்கிறது. சில மதம் மற்றும் இன குழுக்கள் போல, வெறித்தனமும் [fanaticism] அத்தகைய பிரபலங்கள் வழிபாட்டில் இன்று பரவி இருப்பதை, உதாரணமாக தமிழ் நாட்டிலும் காண்கிறோம். தமிழ் நாட்டில் நடிகர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வது ஒரு சாதாரண நிகழ்வாக இன்று வளர்ந்து விட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து என்ன நல்லவற்றை அவர்கள் பெறுவார்கள் பெறறார்கள் என்பது பெரும்பாலும் ஒரு கேள்விக் குறியாக இருக்கிறது. இப்படித்தான் ஹீரோ வழிபாடுகள் இன்று இருக்கின்றன. ஒரு பிரமுகர் மற்றும் ரசிகர் உறவில் [a celebrity vs. fan relationship], ரசிகர்கள் தான் வழக்கமாக தோல்விகளைப் பெறுகிறார்கள். ஏனென்றால், ரசிகர்கள் ஓர் சில பாடங்களை மட்டுமே அந்த பிரமுகரிடம் இருந்து பெற்றிருந்தாலும், அந்த பிரமுகர் தமது வெற்றியினை பணமாகவும், புகழாகவும் ரசிகர்கள் மூலம் பெறுவதுடன் தமது ரசிகர் தளத்தின் மீது செல்வாக்கும் செலுத்துகின்றனர். எங்கள் நேரத்தையும் வளத்தையும் தனிப்பட்ட பிரபலங்களில் வீணடிக்காமல், எமது வாழ்வில் முக்கியமான நபர்களில் எம் பார்வையை திருப்பி, அவர்களுக்கு அன்பு செலுத்தி, அவர்களை கவனித்து, அவர்களுடனான எமது உறவை பலப் படுத்துவது எவ்வளவோ மேல். எவரும் பூரணமானவர் என்று இல்லை. எம்மிடம் பலமும் உண்டு, தளர்வும் உண்டு. எமது பலவீனத்தை எமது விருப்பமான சிந்தனை மூலமோ அல்லது ஒரு பிரபலமான நபரை போற்றுவது மூலமோ போக்கடிக்க முடியாது. நாம், எம்மை முதலில் அறிய வேண்டும். மற்றவர்களுடைய நற்பண்புகளைக் கண்டு மனம் குழைய வேண்டும். ஆனால் நாம் எம்முடைய தேவையை நிறை வேற்றுதலுடன், எமக்கான சமாதானம் மற்றும் மகிழ்ச்சி தேடலில் ஈடுபடவேண்டும். வாழ்க்கையில் ஒருவருக்கு முக்கியம் தேவையானது பகுத்தறிதல் அல்லது அறிவுக்கூர்மை, அதாவது புத்தி வேண்டும். அது உங்களிடம் இருக்குமாயின் , நீங்கள் கட்டாயம் மிக இலகுவாக ஒரு மாயத்தோற்றத்திற்கு பலியாக மாட்டீர்கள்?? பிரபலங்கள் வழிபாடு, ஒரு மனதை துன்புறுத்தும் - பழக்க அடிமைக் கோளாறு [“an obsessive-addictive disorder] என்று கூறலாம், ஏனென்றால் அங்கு தனிப்பட்ட நபர் அதிக ஈடுபாடும் மற்றும் அக்கறையுடன், தான் போற்றும் பிரபலங்களின் தனிப் பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு விபரத்தையும் காண முயல்கிறார். ஆனால் முக்கியமான பிரச்சனை, இது இன்று மிகவும் ஆபத்தான பாதிப்பை சிறுவர்களிடம் ஏற்படுத்துவது ஆகும். அது மட்டும் அல்ல, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் காட்டும் பிரபலங்களின், பொதுவாக பெண்களின் அழகு எப்படி இருக்க வேண்டும் என்ற, அவர்களின் உருவ சித்தரிப்பு [celebrity image], இளம் பெண்களில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த உடல் வடிவம் உண்மையில் யதார்த்தமல்ல, ஏனென்றால் பெரும்பாலான புகைப்படங்கள் டிஜிட்டலில் திருத்திய அல்லது மாற்றப்பட்ட [digitally edited or altered photograph] படங்கள் [Photoshoped போட்டோஷாப்] அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்ட உடல் அமைப்பாகும். எனவே இப்படி எம் உடலும் மாறவேண்டும் அழகு பொழியவேண்டும் என்ற அவா, நாளடைவில் அப்படி அடைய முடியாமல் அவர்கள் மேல் பெரும்பாலும் மன அழுத்தங்களை [depression] ஏற்படுத்திவிடுகிறது. எனவே நாம் புத்திசாலித்தனமாக இவைகளில் இருந்து விளக்குவதே ஒரு நன்மை பயக்கும் செயலாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 21 தொடரும்
-
"வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!"
"வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!" "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்! இலைமறை காய்போல் அது உங்களை விலையும் பேசும் மோசமும் செய்யுமே!" "மலையாக உடல் அசையா குழந்தைகளே! மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக காலை படிப்பிலும் கவனம் சிதற நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழுடன் ஒரு விளையாட்டு"
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 01 கைத்தொலை பேசி, முகநூல் போன்ற எந்த வசதியும் இல்லாத பண்டைய தமிழ் நகரம் ஒன்றில், ஒரு இளைஞன், தனது காதலை ஒரு இளம் பெண்ணிடம் தனிமையில் சந்தித்து சொல்ல விரும்பினான். அவளோ அவளின் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். தந்தைக்கும் மற்றும் வீதியால் செல்லும் மற்றவர்களுக்கும் தெரியாமல் தனது விருப்பத்தை அவளிடம், அவளின் பின் நடந்து கொண்டே உரையாடலாக கூறினான். அவளும் அதை நன்றாக விளங்கிக்கொண்டு, தானும் தமிழில் சளைத்தவள் இல்லை என்பது போல, விடுகதை யாகவே பதிலைக் கூறினாள். அதை புரிந்துகொண்டு, "நான் எப்போது வரட்டும்? " என்ற அவனின் அடுத்த கேள்விக்கும் அவள் மீண்டும் விடுகதையாகவே தமிழுடன் அழகாக விளையாடினாள். இப்போ அந்த தமிழுடன் ஒரு விளையாட்டை முழுமையாகப் பார்ப்போம். அவன்: "ஒருமரம் ஏறி ஒரு மரம் பூசி ஒரு மரம் பிடித்து ஒரு மரம் வீசிப் போகிறவன் பெண்ணே உன் வீடு எங்கே?" அவள்: "பாலுக்கும் பானைக்கும் நடுவிலே ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே" அவன்: "நான் எப்போது வரட்டும்?" அவள்: "இந்த ராஜா செத்து அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்...." ஒரு மரம் ஏறி - மரத்தாலான பாதுகையில் (செருப்பில்) ஏறி ஒரு மரம் பூசி - சந்தன மரக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் மர சாந்தை / சந்தனத்தை மேலே பூசி ஒரு மரம் பிடித்து - (முதியவராகையால்) மர ஊன்று கோலைப் பிடித்து ஒரு மரம் வீசி - பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து) வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது? என்று அவன் கேட்கிறான். அதை அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள். அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் மரத்தால் செய்த கதவைச் சாத்தும் போது கதவும் மரத்தால் செய்த நிலையும் சேர்ந்து விடும், அந்தச்சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள். எப்படி இருக்கிறது இந்த தமிழின் விளையாட்டு ??
-
"நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு... "
"நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு... " "நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு வாசம்தாரும் மல்லிகையும் வாடிப்போகுது தேசம்சுற்றும் மாமா நெருங்கிநிண்ணு பேசாயோ பாசம்ஒன்றும் உன் இதயத்தில் இல்லையோ மோசம்இல்லா காதலை வீறாப்பின்றி சொல்லாயோ?" 'கஞ்சி குடிக்கையிலே நினைப்பெல்லாம் நீயய்யா கொஞ்சிக் குலாவ மனதெல்லாம் ஏங்குதய்யா வஞ்சகம் வேண்டாம் இறுமாப்பை நிறுத்தய்யா செஞ்சதையும் சென்சிபுட்டு விலகியது ஏனய்யா மஞ்சள் புடவையில் மணிக்கணக்காய் காத்திருக்கேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 21 நமது பண்பாட்டில் எம்முடைய பல பழக்க வழக்கங்களை, மரபுகளை ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் உடல் நலத்தையும் மன நலத்தையும் மேம்படுத்துவதற்காகவே தொடங்கப் பட்டதாகவே இருக்கும். அப்படியான வற்றில் ஒன்றுதான் தோரணம் ஆகும். இதை தமிழர்களின் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பு என்றும் கூறலாம். தமிழருக்கிடையில் தோரணம் கட்டி அலங்காரம் செய்யும் மரபு ஆயிரம் ஆண்டு களுக்கும் மேற்பட்டது. ஆயிரம் யானைகள் சூழ்ந்து வரும் நாராயணனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைந்த குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினதை, தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார் களுள் ஒருவரான ஆண்டாள் கனவில் கண்டாள். "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்" மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்து அலங்கார மாகத் தொங்க விடப்படும் தோரணம் வழமை என்றாலும், அங்கும் நடை பெரும் நிகழ்வை பொறுத்து மங்கள தோரணம், அமங்கள தோரணம் என இரு வகை தோரணங்கள் காணப்படுகின்றன. சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கும், மகிழ்வில் குருவி ஒன்று மேலே பறந்து போவதை இது அடையாளமாக குறிக்கிறது. மேலும் தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என் பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். அதனால் தானோ என்னவோ இங்கும் நான்கு குருவிகளை கொண்டு தோரணம் அமைக்கப் பட்டுள்ளது எனறு நம்புகிறேன். அதே போல, மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டப்படுபவை அமங்களத் தோரணம் எனப்படும். இவை மூன்று குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல் நோக்கியும் இருக்கும். ஒரு தொன்று தொட்டு வந்த பழக்கமாக, நம் வீட்டு சிறப்பு கொண்டாட்ட நாட்களில், வீட்டு வாசல் கால்களில் தோரணமாக மாவிலை மாத்திரம் கட்டுவதும் உண்டு. வீட்டிற்க்குள் அதிகமாக மக்கள் குழுமி இருக்கும் இவ் விசேட நாட்களில், மாவிலை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும் என்பதாலும் நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் என்பதாலும் அப்படி முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. மற்றது இவ்விருமரங்களும் அங்கு பரவலாக காணப்பட்டவையும் ஒரு காரண மாகும். திருத்தொண்டர் புராணத்தில், 12 திருமுறையில் 2969. பாடலில், மகர தோரணங்களும் வளம் மிக்க குலைக் கமுகுகளும் வாழைகளும், ஒப்பில்லாத பல கொடிகளும் மாலைகளும் ஆகிய இவற்றை அழகு பொருந்த வரிசையாய் அமைத்து நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்தச் செய்த அலங்கராங்களினால் குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கியதாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர் என்கிறது. தமிழரின் தோரண அலங்காரத்தின் சிறப்பையும் பெருமையையும் இதில் காண்கிறோம். "மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி நிகரில் பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து நகர நீள்மறுகு யாவையும் நலம்புனை அணியால் புகரில் பொன்னுல கிழிந்ததாம் எனப்பொலி வித்தார்" எல்லா இனமும், தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சில பல விளையாட்டுகளை ஏற்படுத்தி, அதை பாரம் பரியமாக பல நூறு, ஆயிரம் ஆண்டுகளாக விளையாடினார்கள். அன்று வீட்டின் திண்ணையில், தெருக்களில், வளவில், நதியில், மைதானத்தில் நடந்த விளையாட்டுகள் இன்று மாறி வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே, நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனில் [smartphone], கணனியில் - பிளேஸ்டேஷன், வீடியோ விளையாட்டுகள் [playstation, video games] என வந்துவிட்டன. "ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ...... மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா" என்று பாரதியார் அறிவுறுத்தல் இன்று மறைகிறது. உதாரணமாக சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல், கிளையில் பனை நாரில்[கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடுதல் போன்ற பல அன்றைய மகளிரின் பாரம்பரிய விளையாட்டாக இருந்தன என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் மட்டும் இன்று காண்கிறோம். தமிழர்களின் மூதாதையர் என் நம்பப்படும் சிந்து வெளி மக்களும் கி மு 3000 ஆண்டிலேயே ஒரு வித தாய விளையாட்டு விளையாடினர் என்பதை அங்கு கண்டு எடுக்கப் பட்ட மணற் கல்லாலும் மெரு கூட்டாத மண்ணாலும் செய்த தாயக்கட்டைகள் [dice made from cubes of sandstone and terracotta] உறுதிப் படுத்துகின்றன. இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக [later spread westwards to Persia, influencing Persian board games] நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் கூட காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின், ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளையாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால்நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவி யுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் " [“Play not with dice:no,cultivate thy corn-land. Enjoy the gain, and deem that wealth sufficient.There are thy cattle there thy wife, O gambler. So this good Savitar himself hath told me"] என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது. இது தாயம் பொழுது போக்குக்கு அப்பால், சூது விளையாட்டாக ஆண்கள் விளை யாடியதை காட்டுகிறது. தமிழக அகழ்வுகளில் அழகன்குளம், மாங்குடி, பொருந்தல், பேரூர், ஆண்டிப்பட்டி, கொடுமணல் போன்ற பலவற்றில் தந்தத்தினால், எலும்பினால் ஆன மற்றும் சூடு மண் தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. உதாரணமாக புறநானூறு - 52, வரி, 12 - 15, அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில் என "கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப், பலி கண் மாறிய பாழ்படு பொதியில், நரை மூதாளர் நாயிடக் குழிந்த, வல்லின் நல்லகம் நிறையப்" என்று பாடுகிறது. இங்கும் சூது ஆட்டத்தை காண்கிறோம். தற்போது "மியூசிக்கல் சேர்' என சிறுவர், சிறுமிகளால் விளையாடும் விளையாட்டை ஒத்த, "கொல கொலயா முந்திரிக்கா' விளையாட்டு, சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் தட்டாங்கல் அல்லது கழங்கு, நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி அவற்றுள் புளியங்கொட் டைகளை 5, 5 ஆகப் போட்டு விளையாடும் பல்லாங் குழி இப்படி பலவற்றை அன்று பெண்கள் விளையாடினார்கள். உல கெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது. அதே போல கழங்கு, இன்றைய ' five stones ' [or Knucklebones] விளையாட்டிற்கு அடிப்படையும் ஆகும். இதை சொட்டாங்கல் என்றும் கூறுவார்கள். யாழ்ப்பாணத்தில் இதை கொக்கான் என்று அழை ப்பார்கள். சங்க காலத்தில் கூழாங்கற்களை வைத்து ஆடப்பட்ட இந்த விளையாட்டில் இன்று கோலிக்குண்டுகள் பயன்பட்டு வருகின்றன. செல்வந்தர் வீட்டு பெண்கள் தங்களது பகட்டை வெளிப்படுத்த முத்து, வெள்ளி, தங்கம் ஆகியவற்றாலான உருண்டைகளையும் பயன்படுத்தினர். உதாரணமாக புறநானுறு 36, வரி 4 - 5, சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை, “செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர், பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்” என்று பாடுகிறது. அதன் வழி வந்ததே அம்மானை விளையாட்டும் ஆகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவமும் பெற்றது ஆகும். என்றாலும் நாகரீகம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால், இந்த தொன்மை விளை யாட்டுகள், இன்று மறைந்து வருவது எமக்கு வேதனையளிக்கிறது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 22 தொடரும்
-
"எமது பெரிய அண்ணா "டாக்டர் கந்தையா யோகராசா"வின் எண்பத்தி ஏழாவது பிறந்த நாள் நினைவு கூறல் [22/06/2024]"
"எமது பெரிய அண்ணா "டாக்டர் கந்தையா யோகராசா"வின் எண்பத்தி ஏழாவது பிறந்த நாள் நினைவு கூறல் [22/06/2024]" "தீபாவளி தினம் தோறும் புது உடை தந்தாய் தீபமாய் எம் வாழ்விற்கு புத் துயிர் தந்தாய்" "தீதோ நன்றோ எதுவோ புது தெம்பு தந்தாய் தீபாவளி கதை பொய்த்ததோ? புனித மேனி எரிந்ததோ?" "தீபாவளி தினம் தோறும் உன்னை நாம் வணங்கி தீபமாய் உன்னைத் தான் உள்ளத்தில் நாம் ஏற்றுகிறோம்" "தீராத உன் கவலை உள்ளத்தில் எம்மை வாட்டுகையில் தீந்தமிழில் பாட்டு எழுதி உன்னை நாம் அழைக்கிறோம்" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
-
"உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால். இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்??"
"உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால். இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்??" கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்.... அன்பு செய்ய சொல்லியதையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ???? எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்.... மீண்டும் மீண்டும்.... எது வரை....?? மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம். உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???