Everything posted by பிழம்பு
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
சென்னை: “எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில் ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்துக்கும் அடிப்படையாக இருக்கும். இங்கே நம்முடைய மொழியை பேசி, நம் வாழ்க்கையை வாழ்ந்து, நம்மால் ஆட்சிக்கு வந்து, நம் மொழியை, வரலாற்றை, இனத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கிவிட்டார்கள். மக்களிடம் உள்ள வறுமையின் காரணமாக ஏற்பட்ட அறியாமை, மறதியை பயன்படுத்தி அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்தக் கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா? நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன். எனவே வெற்றியோ, தோல்வியோ அது அவர்கள் தரும் பரிசு. எங்களைப்போல தனித்து நின்று, தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள்... ஆனால், மாநாட்டுக்கு, கூட்டத்துக்கு சாப்பாடு, சாராயம், காசு கொடுத்துதான் ஆள் சேர்க்கிறார்கள். நாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என எதிரிகள் பயப்படுகிறார்கள். இங்கே இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே. எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில்தான் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி, அதிகாரம் எல்லாம் சிதைந்து அழிந்து போனதற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் இங்கே போட்டியே. இங்கே இந்திய திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேதான் போட்டி. தனித்து நின்று, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சின்னம் பெற்று, எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தி அங்கீகாரம் பெற்ற கட்சி, நாட்டில் எங்களைத் தவிர வேறேதும் உண்டா? வாக்குக்கு காசு கொடுப்போம் என்ற கூட்டத்தை ஆதரிப்பீர்களா அல்லது மக்களுக்கு வாழ்க்கையை கொடுப்போம் என்பவர்களை ஆதரிப்பீர்களா? இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல... அது வீழ்ச்சித் திட்டம். இலவசம் பெறும் ஏழ்மை நிலை இல்லாது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். நல்ல கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கினால் மக்களே தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள். நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு தாய்மை பொருளாதாரத்தை உருவாக்குவோம். சாராயப் பொருளாதாரம் மூலம் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி, கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி. எது வேண்டும் மக்களே? பின்லாந்தை விஞ்சிய கல்வியை தமிழகத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம். இதனை நிச்சயம் சாத்தியப்படுத்திக் காட்டுவேன். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் ஒருபக்கம், நாங்கள் தமிழர்கள் என்பவர்கள் ஒருபக்கம். எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். எங்கள் இனத்தில் எண்ணற்ற பெரியார்கள் உள்ளனர். திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும். சாதி, மதத்தை பார்ப்பவர்கள் ஒருபக்கம் நிற்கட்டும். மனிதமே புனிதம் என்பவர்கள் என்பக்கம் நிற்கட்டும். ஏற்காட்டில் சாலைக்கு தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற தமிழின வள்ளல் பெயரை அழித்து பெரியார் பெயரை வைத்தது ஏன்? தமிழுக்காக, தமிழருக்காக பாடியதால்தான் திராவிடர்கள் பாரதியையும், பாரதிதாசனையும் போற்ற மறுக்கிறார்கள். மக்கள் சரியில்லை என நாம் சொல்லக் கூடாது. சரியில்லை என்பதை சரி செய்ய வேண்டியதே நம் வேலை. பிழை யாருடையதாக இருந்தாலும் நாம் திருத்துபவனாக இருக்க வேண்டும். நாட்டில் எல்லோருக்கும் சமமான தரமான கல்வி, தரமான மருத்துவம். அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களுக்கே அரசு வேலை என சட்டம் போடுவோம். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என சட்டம் போடுவோம். திருப்பரங்குன்றம் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். வாக்குக்காக அந்த பிரச்சினையை மாற்றுகிறார்கள். சாதி, மதம் முக்கியம் என்பார்கள் அவர்கள். நாங்கள் மனிதம் பெரிது என்கிறோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பதாக சொல்கிறார்கள். உடைத்து சூறையாடப்படும் குன்றுகளுக்காக அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” என்று சீமான் பேசினார். “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
-
மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது!
27 Dec, 2025 | 11:48 AM மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் சனிக்கிழமை (28) கரையோதுங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 15 அடி நீளமுடைய இந்த ராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது. மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது! | Virakesari.lk
-
பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்தார் “பெக்கோ சமனின்” மனைவி!
27 Dec, 2025 | 02:12 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்lதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணை மற்றும் 150,000 ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம ஒக்டோபர் 31 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து “பெக்கோ சமனின்” மனைவி நேற்று வெள்ளிக்கிழமை (26) தனது பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்தார் “பெக்கோ சமனின்” மனைவி! | Virakesari.lk
-
நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் - பிரகலாதன் வலியுறுத்து
27 Dec, 2025 | 11:16 AM புதிய நீர் தேக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, வேலணை - மண்கும்பானில் ஏற்கனவே இருக்கின்ற, சீரமைக்கப்படாத குளங்களை சீர் செய்து தீவகத்தின் நன்னீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சுவாமினாதன் பிரகலாதன் வலியுறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை (26) வேலணை சபையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மண்கும்பானில் ஏற்கனவே பிரதேச சபைக்குரிய 5 குளங்கள் இருக்கின்றன. இவற்றில் இரு குளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனையவையும் கடுமையான பாதிப்புக்களுடனேயே இருக்கின்றன. இவற்றை சீரமைத்தால் மண்கும்பானின் மழை காலங்களில் ஏற்படும் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணமுடியும். அதுமட்டுமல்லாது இது விவசாய தேவைகளுக்கும் சாதகமாக அமையும். வேலணைக்கே நன்னீர் கொடுக்கும் நன்நீர் வளம் மிக்க எமது மண்கும்பானில் மழை நீரை அதிகளவில் சேகரித்தால் மேலும் நன்னீர் இருப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். அந்த குளங்களுக்கு நிதியை செலவு செய்வது வீண் விரையமற்ற ஆரோக்கியமான ஒரு விடயம். இதை விடுத்து புதிய இருக்கின்ற நீர் நிலைகளை கைவிட்டு புதியவற்றை உருவாக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரம் சாட்டிப் பகுதியின் பாதுகாப்பு அவசியமானது. அதற்கான முயற்சி எடுக்கப்படுமானால் அதை வரவேற்போம் என்றார். நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் - பிரகலாதன் வலியுறுத்து | Virakesari.lk
-
இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல்
Published By: Vishnu 23 Dec, 2025 | 02:25 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்தேச நாணய நிதியத்தின் 48 மாதகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் 17 ஆவது இறைக்கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக மீளச்செலுத்தப்படவேண்டிய கடன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வொப்பந்தம் இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்குவதற்குத் தவறியிருப்பதுடன் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளியகத் தாக்கங்களால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நலிவடைந்த நிலையில் இலங்கையை நிறுத்தியிருக்கின்றது. அதன்விளைவாக மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கும், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும், காணாமல் போவதற்கும், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த 'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான கரிசனைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடன் பெறுமதியை 17 சதவீதத்தினால் (சமகாலத்தில் உள்ள பெறுமதியில்) குறைப்பதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கினர். அதன்படி மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தை வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வான பெறுமதியாகும். சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்தின்படி, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புக் காணப்படுவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்பின் பின்னர் மீண்டுமொரு கடன்மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றது. 'இன்னும் பல வருடங்களுக்கு கடன் அச்சுறுத்தல் மிக உயர்வான மட்டத்தில் இருக்கும்' என சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றது. அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தற்போது இலங்கை தீவிர பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் நலிவுற்ற தன்மையும், இப்போது பதிவாகியிருக்கும் சேதங்களின் அளவும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தம் போதுமானதன்று என்பதைக் காண்பிக்கின்றன. ஏற்கனவே தளர்வடைந்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக் கட்டமைப்பானது இப்போது வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமான செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முன்னர் எதிர்வுகூறப்பட்ட கடன்மறுசீரமைப்பு அடைவுகள் சரிவடையக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இயற்கை அல்லது பொருளாதாரம் சார்ந்த அழிவுகளுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதுடன், நாட்டின் மீளெழுச்சிக்கு உதவக்கூடிய செயற்திறன்மிக்க கடன் தீர்வொன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. எனவே இலங்கை பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது வெளியக அழுத்தங்களிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குப் போதுமானதன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு பாரிய கடன் சலுகைக்குப் பதிலாக கடன்மீள்செலுத்துகை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கை பொருளாதாரம் மீதான கட்டமைப்பு ரீதியான தாக்கம் மற்றும் மக்கள் மீதான எதிர்கால அனர்த்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் | Virakesari.lk
-
யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை!
Published By: Digital Desk 1 23 Dec, 2025 | 11:32 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளைப் பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது. இந்தத்தடை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்படும் எனவும் பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது. உணவக உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளுக்கு பதிலாக வாழை இலைகள், தாமரை இலைகள், தேக்கு இலைகள் போன்ற இயற்கைப் பொருட்களையும், உணவுப் பொதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அலுமினியத் தகடு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்களையும் பயன்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது, நகராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் வணிக உரிமை பத்திரங்கள் இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை! | Virakesari.lk
-
12 இந்திய மீனவர்கள் கைது
23 Dec, 2025 | 12:50 PM சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர். "தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுடன் தீவில் உள்ள கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்" என தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (22), இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த ஜோதிபாஸுக்குச் சொந்தமானது என்றும், படகு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத நிலையில் டோக்கன் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன. 12 மீனவர்களில் பிரபாத் (28), ஜேம்ஸ் ஹெய்டன் (29), ஆண்டனி (32) என்பவர்கள் அடங்கியுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை தெரிவித்து விடுவிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, மீனவர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்தி அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. 12 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk
-
கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு
23 Dec, 2025 | 03:54 PM முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கூறுகையில், கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகைதந்தனர். அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம் முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள். அந்த வகையில் கொக்கிளாயில் குடியேறி தங்கியுள்ள சிங்களவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானியும் என்னிடம் உள்ளது. இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்தில் வசித்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, எமது தமிழ் மக்களின் பூர்விக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள் குடியேறினர். எமது தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறே பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் உள்ளது. இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன. ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்கமுடியுமா என்பதற்கு உரியவர்கள் பதிலளிக்கவேண்டும். இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன். அத்தோடு புலிபாய்ந்தகல்லில் சுற்றுலாத்தளத்துக்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும் ஆக்கிரமித்து, அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். கடந்த காலத்தில் தமிழர்களின் பூர்விக மணலாற்றுப் பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர். இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச் செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். ஊழலை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசின் ஆட்சியில் ஊழல்கள் இடம்பெறக்கூடாது. கொக்குத்தொடுவாயில் இவ்வாறு எமது தமிழ் மக்களுக்குரிய பூர்வீக காணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிராட்டிகுளம், பண்டாரவன்னி, மன்னாகண்டல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கி, மாற்று வாழ்விடங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு | Virakesari.lk
-
“பாலை மீன்” இறக்குமதிக்கு வரிச்சலுகை – அமைச்சரவை அங்கீகாரம்
23 Dec, 2025 | 04:53 PM ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 23 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் விசேட மீன்வகையான சூரை மீன் (tuna) இனத்திற்குரிய மீன்களைப் பிடிப்பதற்காக பலநாள் கடற்கலன் உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான இரையாக ஊசிக்கணவாய் மற்றும் பாலை மீன், சூடை, பறக்கும் மீன் போன்ற சிறிய மீனினங்களைப் பயன்படுத்தப்படுகின்றனர். மீன் வளங்களை பேண்தகு வகையில் நுகர்கின்ற முறையாக ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் பிடிக்கப்படுகின்ற மீன்கள் உயர்ந்த தரத்துடன் கூடியதாக அமைவதால், அதற்காக சர்வதேச சந்தையில் அதிக விலை உள்ளது. எமது நாட்டில் 2,200 பலநாள் கடற்கலன்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துவதுடன், அதற்காக வருடாந்தம் 8,000 மெற்றிக்தொன் இரை மீன்கள் தேவைப்படுகின்றது. ஆனாலும், குறித்த அளவில் 4,000 மெற்றிக்தொன் மாத்திரமே உள்நாட்டில் விநியோகிக்கக் கூடியாதாகவுள்ளது. அதனால், தனியார் துறையின் ஒத்துழைப்புடன், தொடர்ந்து வரும் காலங்களில் இரைக்காக பாலை மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உள்நாட்டு உற்பத்தி பயன்பாட்டுக்கு வரும் வரைக்கும், பாலை மீன்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதி வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, பாலை மீன்கள் இறக்குமதி செய்வதற்கான புதிய இயைபு முறைக் குறியீட்டை (u;S Code) அறிமுகப்படுத்தி, பதிவு செய்யப்பட்ட மீன்பிடிச் சங்கங்கள் மூலம் தேவையான பாலை மீன்களை இறக்குமதி செய்வதற்கும், தற்போது நடைமுறையிலுள்ள இறக்குமதி வரி முறைமைக்குப் பதிலாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் பாலை மீன்களுக்கு 180/- ரூபா விசேட பண்ட வரியை அறிமுகப்படுத்தி, குறித்த வரியில் 130/- ரூபாவை பாலைமீன்களை இறக்குமதி செய்கின்ற மீன்பிடிச் சங்கங்களுக்கு வரிச்சலுகையாக வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. “பாலை மீன்” இறக்குமதிக்கு வரிச்சலுகை – அமைச்சரவை அங்கீகாரம் | Virakesari.lk
-
இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு Published By: Vishnu 23 Dec, 2025 | 06:53 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கருத்துப் பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக, சூறாவளி தாக்கத்தால் சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா முன்மொழிந்துள்ள மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டுமான உதவித் தொகுப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், பேரிடர் காலங்களில் அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்கான நீண்டகால முயற்சிகளில் இந்தியா வழங்கவுள்ள ஆதரவு குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் தொடர்ச்சியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி சர்வதேச ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு, டித்வா சூறாவளி பின்னணியில் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் அரசியல், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி ஆதரவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு | Virakesari.lk
-
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்
Published By: Vishnu 23 Dec, 2025 | 07:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. “டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது. அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் | Virakesari.lk
-
Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!
ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதான் இதிலும் தொடர்கிறது. ஆனால், இம்முறை பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்குள்ளும் வன்முறை மற்றும் பொறாமை இருக்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. மனிதர்களுக்கும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலான யுத்தத்தில் இம்முறை பண்டோராவின் 'சாம்பல் மக்கள்' எனப்படும் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் இணைந்து கொள்கின்றனர். இவர்களிடமிருந்து பண்டோராவை ஜேக் சல்லி கூட்டம் காப்பாற்றியதா என்பதே ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் கதை. வழக்கம்போலவே இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமும் அதன் தொழில்நுட்பம்தான். முந்தைய பாகங்களில் பச்சை (காடு) மற்றும் நீல (கடல்) நிறங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால் இதில் நெருப்பு மற்றும் சாம்பல் சார்ந்த செந்நிறம் மற்றும் சாம்பல் நிறங்கள் திரையை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலச் செதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. நிச்சயம் இப்படம் விஎஃப்எக்ஸ் துறையில் ஒரு புதிய மைல்கல். நல்ல ஒலி, ஒளி தரம் கொண்ட பெரிய திரையில் 3டியில் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும். தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் பார்க்கும்போது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன. பல காட்சிகள் தேவையே இல்லாமல் இழுக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மிக நீளமாக உள்ளன. கிட்டத்தட்ட முதல் ஒரு மணி நேரத்துக்கு படம் நகரவே இல்லை என்பதுதான் உண்மை. "காட்டைக் காப்பாற்ற வேண்டும், தீயவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்ற அதே ஒற்றை வரிக்கதை தான். குறைந்தபட்சம் திரைக்கதையிலாவது புதிதாக ஏதாவது செய்திருக்கலாம். படத்தின் நீளம் மிகப்பெரிய பலவீனம். மூன்று மணி நேரம், தொய்வான திரைக்கதையால் 30 மணி நேரம் போல தோன்றுகிறது. சரக்கு தீர்ந்து போனதைப் போல காட்சி அமைப்புகளில் எந்தவித புத்திசாலித்தனத்தையும் கேமரூன் இடம்பெறச் செய்யவில்லை. ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி கதாபாத்திரங்களில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதில் ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் மீது காட்டிய அக்கறையை, கேமரூன் கதையின் ஆன்மாவில் காட்டவில்லை. எந்த காட்சியும் மனதைத் தொடும்படி இல்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் ஆக்ஷன் காட்சிகளும் கடும் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை. சைமன் ஃப்ரான்லென் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது. போர்க்களக் காட்சிகளில் இசை வேகம் கூட்டினாலும், முதல் பாகத்தில் மறைந்த ஜேம்ஸ் ஹார்னரின் மனதைத் தொடும் மெல்லிசை இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். 2009-ஆம் ஆண்டு புதுமையான சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘அவதார்’ என்ற அற்புதத்துடன் வந்த ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து இப்படியொரு சலிப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’ என்று ரசிகர்களுக்கு திகட்டாத புதுமைகளை தந்த கேமரூன், ‘அவதார்’ என்ற மாய வளையத்திலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' கண்களுக்குப் பெரும் விருந்து என்பது நிச்சயம். தொழில்நுட்பமும், கிராபிக்ஸ் மாயாஜாலங்களும் மட்டுமே எனக்கு போதும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் ‘ஓரளவு’ கவரும். ஆனால், ஒரு நல்ல கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமே. அழகான ஃப்ரேம்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் என பார்த்து பார்த்து செதுக்கியும் ஒரு உயிரற்ற ஓவியமாக பரிதாபமாக நிற்கிறது இந்த ‘அவதார்:ஃபயர் அண்ட் ஆஷ்’ Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!
-
56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0 - 22 வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Tamilmirror Online || 56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி
-
பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 06:05 - 0 - 24 பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை (19) அன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த இரு இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்படுவதாகவும், ரோட்டில் செல்வோரை கடித்துக் குதறுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
-
கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு
19 Dec, 2025 | 01:04 PM "தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு, சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேவேளை விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சி எதுவும் தலைமை தாங்காது. மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர். அதன்போது, நடத்தப்படும் போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு | Virakesari.lk
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
19 Dec, 2025 | 12:54 PM நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு! | Virakesari.lk
-
கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி!
19 Dec, 2025 | 03:06 PM இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக கனடா அரசாங்கம் 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஹெச்.இ. இசபெல் மார்ட்டின் (HE Isabelle Martin) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அலுவலகத்தில் வைத்து சந்தித்து இந்த நிதியுதவியை கையளித்துள்ளார். இந்த நிதியுதவியில் 1.4 மில்லியன் டொலர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உணவு வசதிகளை வழங்குவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 350,000 டொலர்கள், நிவாரணப் பொருட்கள், அவசரகால தங்குமிடங்கள், நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதற்காக, 'வேர்ல்ட் விஷன் கனடா' (World Vision Canada) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 215,000 டொலர்கள், கனடா செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசரகால பேரிடர் உதவி நிதியத்தின் மூலம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய சுமார் 70,000 டொலர்கள், உள்ளூர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் (Canada Fund for Local Initiatives) ஊடாக அவசரகால நிவாரணங்களை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையையும், மனிதாபிமான உதவிகள் மற்றும் மீள்தன்மை மீதான அர்ப்பணிப்பை இந்த அனர்த்த நிவாரண நிதியுதவி பிரதிபலிக்கிறது. கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி! | Virakesari.lk
-
GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
19 Dec, 2025 | 04:40 PM இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPayஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2025ஆம் ஆண்டில் 2 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது. விரைவாக மாற்றியமைக்கும் திறன், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக GovPay 45 நாட்களில் அதன் வருமானத்தை 1 பில்லியன் ரூபாவில் இருந்து 2 பில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்க முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது. 2025 பெப்ரவரி 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்று வரை 70,178க்கும் மேற்பட்ட GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 221 அரச நிறுவனங்களில் 3,372 அரச சேவைகளுக்கான கட்டண வசதிகள் செயற்படுத்தப்படுகின்றன. இந்த விரைவான வளர்ச்சி, பொதுமக்களும் அரச நிறுவனங்களும் இந்த கட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலோபாய தலைமையின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) LankaPay உடன் இணைந்து செயல்படுத்திய GovPay, இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கிய சேவை வழங்குநராக மாறியுள்ளது. இந்த டிஜிட்டல் தளம் அனைவருக்கும் பொதுவான, திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது. 2025 ஏப்ரல் 10ஆம் திகதி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கான ஒன்லைன் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த கட்டமைப்பின் மூலம் 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக 66 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் முழுவதும் செயல்படுகிறது. இது 2025 டிசம்பர் மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸுடன் இணைந்து LankaPayஇன் ஆதரவுடன், 2026 ஜனவரி மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) இணக்கம் தெரிவித்துள்ளது. GovPay, பிரதேச செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூரட்சி மன்றங்கள் ஊடாக அதன் பிரவேசத்தை விரிவுபடுத்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசாங்க சேவைகளை அணுகுவதை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அணுசக்தி சபை போன்ற நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டில் GovPayக்கு அதிக பங்களிப்பு செய்த நிறுவனங்களில் அடங்குகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் இதற்கு நிலவுகின்ற அதிக வரவேற்பு, இளைய தலைமுறையினர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தையும், இந்த டிஜிட்டல் தளத்தின் வியாபிப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. வழக்கமான அரச சேவைகளுக்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கும் GovPay ஆதரவு அளித்தது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி முதல், இது Rebuilding Sri Lanka அனர்த்த நிவாரண நிதியத்திற்கு டிஜிட்டல் நன்கொடைகளுக்கு வசதிகளை வழங்கியுள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நன்கொடைகள் உட்பட 909 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 14 மில்லியன் ரூபா நிதியை திரட்ட உதயுவியுள்ளது. தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, மேலதிகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கி, மேம்பட்ட வசதிகளுடன் கூடிய www.govpay.lk நவீனமயமாக்கும் பணியில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல் ஆண்டில் 2 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் 45 நாட்களில் 1 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியதன் மூலம், GovPay டிஜிட்டல் தளம், 2030ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை யதார்த்தமாக்குவதற்கான ஒரு தனித்துவமான தொடக்கமாகக் காணலாம். GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் | Virakesari.lk
-
10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
(செ. சுபதர்ஷனி) "இந்தியாவின் 'மான் பார்மசூட்டிகல்' நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்: "பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பாகும். அதற்கமைய, தமது பணியை உரியவாறு நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் மீது சாடுவதை எப்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம். இந்நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் மருந்து மாபியா மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி போன்றன தொடர்பில் கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழும், தற்சமயம் மருந்து கொள்வனவு செயற்பாட்டில் முறைக்கேடாகச் செயற்பட்ட நபர்கள் குறித்த நிறுவனங்களில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 100 மருந்து வகைகள் தரமற்றவையாக உள்ளன. சர்ச்சைக்குரிய ஓண்டன்செட்ரோன் என்னும் ஊசி மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 2 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இம்மருந்து இந்தியாவில் உள்ள மான் பார்மசூட்டிகல் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 90 மருந்து வகைகள் தரமற்றவை எனப் பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளதாக அரச மருத்துவ விநியோகப் பிரிவு கணினி தரவு தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரின் உடலில் செலுத்தப்படும் ஊசி மருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது பாரதூரமான விடயமாகும். இந்த மருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கட்டமைக்கப்பட்டுள்ள பரிசோதனையின் பின்னரே மருந்துகள் நோயாளர்களுக்கு வழங்கப்படும். மேற்படி மருந்து உற்பத்தி செய்யும் மான் பார்மசூட்டிகல் தனியார் நிறுவனத்திடமிருந்து ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்துகள் தரமற்றவை எனப் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஓண்டன்செட்ரோன் மருந்துடன் அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மருந்து தயாரிப்பின் போதே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகத் தரமற்ற மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்கின்றனர். எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர்? குறித்த நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடமை அலட்சியத்தை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிச்செல்ல முயலும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." 10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் | Virakesari.lk
-
அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0 - 60 கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர். இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருநாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
-
நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
18 Dec, 2025 | 02:29 PM கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்ட மாஅதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கோப்புகள் சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்ட மாஅதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Virakesari.lk
-
இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!
18 Dec, 2025 | 02:10 PM இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர். இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது. உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! | Virakesari.lk
-
முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!
18 Dec, 2025 | 02:18 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது. கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகளும் வழங்கப்பட்டன. தென்னியன்குளம் சந்தி முதல் அம்பலப்பெருமாள்குளம் சந்தி வரையிலான பிரதான வீதி முற்றாகச் சிதைவடைந்துள்ளமையை மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதற்குத் தீர்வாக, அவ்வீதியின் ஒரு பகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாகவும், எஞ்சிய பகுதியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிராமத்தினுள் அமைந்துள்ள பாடசாலை வீதி, கோட்டைகட்டியகுளம் பாடசாலைப் பின்வீதி மற்றும் விடத்தை வீதி ஆகியவற்றை உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அமைதிபுரம் முதல் துணுக்காய் பிரதேச செயலகம் வரை ஏழு கிராமங்களை இணைக்கும் அரச பேருந்து சேவைக் கோரிக்கை தொடர்பில், தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பேருந்துச் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார். அம்பலப்பெருமாள்குளம் பகுதியில் சிதைவடைந்து ஆபத்தான நிலையிலுள்ள கலிங்குக்குப் பதிலாக நிரந்தர மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதனைத் தற்காலிகமாகத் திருத்தியமைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். அத்துடன், கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் கலிங்கு நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமையால் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க, வனவளத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, நீர்பாசனத் திணைக்களத்தின் ஊடாகச் சீர்செய்ய மாவட்டச் செயலர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார். அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தொலைதூர மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளமைக்குத் தீர்வாக, முதற்கட்டமாக வாரத்தில் ஒரு நாள் பொதுக்கட்டடம் ஒன்றில் மருத்துவ நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும், இரு கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளூராட்சித் திணைக்களம் அல்லது மாற்று வழிகள் ஊடாக அமைத்துத் தருவதாக ஆளுநர் உறுதியளித்தார். பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளைச் சாதகமாக அணுகுவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அம்பலப்பெருமாள்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் களஞ்சிய அறையுடன் கூடிய மண்டபம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அந்த மைதானத்துக்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் பதிலளித்தார். குடியிருப்புக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “அபிவிருத்திகள் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும்போதே அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே அதிகாரிகளுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். இப்பகுதி இளைஞர்கள் மதுபாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலர், பிரதேச சபை தவிசாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்! | Virakesari.lk
-
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!
18 Dec, 2025 | 05:28 PM பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மக்களின் நலன், மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தி மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது. பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்! | Virakesari.lk
-
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு
நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 18 Dec, 2025 | 04:00 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளர். இது குறித்து தெளிவுபடுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அந்த பாலத்தின் புதிய பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன. எனவே, நாயாறு பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. பொதுமக்கள் நாயாறு பாலத்தை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளால் நாயாறு பாலம் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்பதும் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது | Virakesari.lk