Everything posted by பிழம்பு
-
இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு Published By: Vishnu 23 Dec, 2025 | 06:53 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கருத்துப் பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக, சூறாவளி தாக்கத்தால் சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா முன்மொழிந்துள்ள மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டுமான உதவித் தொகுப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், பேரிடர் காலங்களில் அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்கான நீண்டகால முயற்சிகளில் இந்தியா வழங்கவுள்ள ஆதரவு குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் தொடர்ச்சியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி சர்வதேச ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு, டித்வா சூறாவளி பின்னணியில் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் அரசியல், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி ஆதரவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு | Virakesari.lk
-
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்
Published By: Vishnu 23 Dec, 2025 | 07:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. “டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது. அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் | Virakesari.lk
-
Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!
ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதான் இதிலும் தொடர்கிறது. ஆனால், இம்முறை பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்குள்ளும் வன்முறை மற்றும் பொறாமை இருக்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. மனிதர்களுக்கும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலான யுத்தத்தில் இம்முறை பண்டோராவின் 'சாம்பல் மக்கள்' எனப்படும் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் இணைந்து கொள்கின்றனர். இவர்களிடமிருந்து பண்டோராவை ஜேக் சல்லி கூட்டம் காப்பாற்றியதா என்பதே ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் கதை. வழக்கம்போலவே இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமும் அதன் தொழில்நுட்பம்தான். முந்தைய பாகங்களில் பச்சை (காடு) மற்றும் நீல (கடல்) நிறங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால் இதில் நெருப்பு மற்றும் சாம்பல் சார்ந்த செந்நிறம் மற்றும் சாம்பல் நிறங்கள் திரையை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலச் செதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. நிச்சயம் இப்படம் விஎஃப்எக்ஸ் துறையில் ஒரு புதிய மைல்கல். நல்ல ஒலி, ஒளி தரம் கொண்ட பெரிய திரையில் 3டியில் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும். தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் பார்க்கும்போது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன. பல காட்சிகள் தேவையே இல்லாமல் இழுக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மிக நீளமாக உள்ளன. கிட்டத்தட்ட முதல் ஒரு மணி நேரத்துக்கு படம் நகரவே இல்லை என்பதுதான் உண்மை. "காட்டைக் காப்பாற்ற வேண்டும், தீயவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்ற அதே ஒற்றை வரிக்கதை தான். குறைந்தபட்சம் திரைக்கதையிலாவது புதிதாக ஏதாவது செய்திருக்கலாம். படத்தின் நீளம் மிகப்பெரிய பலவீனம். மூன்று மணி நேரம், தொய்வான திரைக்கதையால் 30 மணி நேரம் போல தோன்றுகிறது. சரக்கு தீர்ந்து போனதைப் போல காட்சி அமைப்புகளில் எந்தவித புத்திசாலித்தனத்தையும் கேமரூன் இடம்பெறச் செய்யவில்லை. ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி கதாபாத்திரங்களில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதில் ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் மீது காட்டிய அக்கறையை, கேமரூன் கதையின் ஆன்மாவில் காட்டவில்லை. எந்த காட்சியும் மனதைத் தொடும்படி இல்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் ஆக்ஷன் காட்சிகளும் கடும் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை. சைமன் ஃப்ரான்லென் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது. போர்க்களக் காட்சிகளில் இசை வேகம் கூட்டினாலும், முதல் பாகத்தில் மறைந்த ஜேம்ஸ் ஹார்னரின் மனதைத் தொடும் மெல்லிசை இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். 2009-ஆம் ஆண்டு புதுமையான சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘அவதார்’ என்ற அற்புதத்துடன் வந்த ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து இப்படியொரு சலிப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’ என்று ரசிகர்களுக்கு திகட்டாத புதுமைகளை தந்த கேமரூன், ‘அவதார்’ என்ற மாய வளையத்திலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' கண்களுக்குப் பெரும் விருந்து என்பது நிச்சயம். தொழில்நுட்பமும், கிராபிக்ஸ் மாயாஜாலங்களும் மட்டுமே எனக்கு போதும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் ‘ஓரளவு’ கவரும். ஆனால், ஒரு நல்ல கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமே. அழகான ஃப்ரேம்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் என பார்த்து பார்த்து செதுக்கியும் ஒரு உயிரற்ற ஓவியமாக பரிதாபமாக நிற்கிறது இந்த ‘அவதார்:ஃபயர் அண்ட் ஆஷ்’ Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!
-
56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0 - 22 வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Tamilmirror Online || 56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி
-
பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 06:05 - 0 - 24 பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை (19) அன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த இரு இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்படுவதாகவும், ரோட்டில் செல்வோரை கடித்துக் குதறுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
-
கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு
19 Dec, 2025 | 01:04 PM "தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு, சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேவேளை விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சி எதுவும் தலைமை தாங்காது. மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர். அதன்போது, நடத்தப்படும் போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு | Virakesari.lk
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
19 Dec, 2025 | 12:54 PM நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு! | Virakesari.lk
-
கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி!
19 Dec, 2025 | 03:06 PM இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக கனடா அரசாங்கம் 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஹெச்.இ. இசபெல் மார்ட்டின் (HE Isabelle Martin) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அலுவலகத்தில் வைத்து சந்தித்து இந்த நிதியுதவியை கையளித்துள்ளார். இந்த நிதியுதவியில் 1.4 மில்லியன் டொலர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உணவு வசதிகளை வழங்குவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 350,000 டொலர்கள், நிவாரணப் பொருட்கள், அவசரகால தங்குமிடங்கள், நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதற்காக, 'வேர்ல்ட் விஷன் கனடா' (World Vision Canada) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 215,000 டொலர்கள், கனடா செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசரகால பேரிடர் உதவி நிதியத்தின் மூலம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய சுமார் 70,000 டொலர்கள், உள்ளூர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் (Canada Fund for Local Initiatives) ஊடாக அவசரகால நிவாரணங்களை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையையும், மனிதாபிமான உதவிகள் மற்றும் மீள்தன்மை மீதான அர்ப்பணிப்பை இந்த அனர்த்த நிவாரண நிதியுதவி பிரதிபலிக்கிறது. கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி! | Virakesari.lk
-
GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
19 Dec, 2025 | 04:40 PM இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPayஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2025ஆம் ஆண்டில் 2 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது. விரைவாக மாற்றியமைக்கும் திறன், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக GovPay 45 நாட்களில் அதன் வருமானத்தை 1 பில்லியன் ரூபாவில் இருந்து 2 பில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்க முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது. 2025 பெப்ரவரி 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்று வரை 70,178க்கும் மேற்பட்ட GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 221 அரச நிறுவனங்களில் 3,372 அரச சேவைகளுக்கான கட்டண வசதிகள் செயற்படுத்தப்படுகின்றன. இந்த விரைவான வளர்ச்சி, பொதுமக்களும் அரச நிறுவனங்களும் இந்த கட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலோபாய தலைமையின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) LankaPay உடன் இணைந்து செயல்படுத்திய GovPay, இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கிய சேவை வழங்குநராக மாறியுள்ளது. இந்த டிஜிட்டல் தளம் அனைவருக்கும் பொதுவான, திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது. 2025 ஏப்ரல் 10ஆம் திகதி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கான ஒன்லைன் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த கட்டமைப்பின் மூலம் 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக 66 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் முழுவதும் செயல்படுகிறது. இது 2025 டிசம்பர் மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸுடன் இணைந்து LankaPayஇன் ஆதரவுடன், 2026 ஜனவரி மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) இணக்கம் தெரிவித்துள்ளது. GovPay, பிரதேச செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூரட்சி மன்றங்கள் ஊடாக அதன் பிரவேசத்தை விரிவுபடுத்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசாங்க சேவைகளை அணுகுவதை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அணுசக்தி சபை போன்ற நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டில் GovPayக்கு அதிக பங்களிப்பு செய்த நிறுவனங்களில் அடங்குகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் இதற்கு நிலவுகின்ற அதிக வரவேற்பு, இளைய தலைமுறையினர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தையும், இந்த டிஜிட்டல் தளத்தின் வியாபிப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. வழக்கமான அரச சேவைகளுக்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கும் GovPay ஆதரவு அளித்தது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி முதல், இது Rebuilding Sri Lanka அனர்த்த நிவாரண நிதியத்திற்கு டிஜிட்டல் நன்கொடைகளுக்கு வசதிகளை வழங்கியுள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நன்கொடைகள் உட்பட 909 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 14 மில்லியன் ரூபா நிதியை திரட்ட உதயுவியுள்ளது. தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, மேலதிகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கி, மேம்பட்ட வசதிகளுடன் கூடிய www.govpay.lk நவீனமயமாக்கும் பணியில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல் ஆண்டில் 2 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் 45 நாட்களில் 1 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியதன் மூலம், GovPay டிஜிட்டல் தளம், 2030ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை யதார்த்தமாக்குவதற்கான ஒரு தனித்துவமான தொடக்கமாகக் காணலாம். GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் | Virakesari.lk
-
10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
(செ. சுபதர்ஷனி) "இந்தியாவின் 'மான் பார்மசூட்டிகல்' நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்: "பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பாகும். அதற்கமைய, தமது பணியை உரியவாறு நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் மீது சாடுவதை எப்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம். இந்நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் மருந்து மாபியா மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி போன்றன தொடர்பில் கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழும், தற்சமயம் மருந்து கொள்வனவு செயற்பாட்டில் முறைக்கேடாகச் செயற்பட்ட நபர்கள் குறித்த நிறுவனங்களில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 100 மருந்து வகைகள் தரமற்றவையாக உள்ளன. சர்ச்சைக்குரிய ஓண்டன்செட்ரோன் என்னும் ஊசி மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 2 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இம்மருந்து இந்தியாவில் உள்ள மான் பார்மசூட்டிகல் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 90 மருந்து வகைகள் தரமற்றவை எனப் பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளதாக அரச மருத்துவ விநியோகப் பிரிவு கணினி தரவு தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரின் உடலில் செலுத்தப்படும் ஊசி மருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது பாரதூரமான விடயமாகும். இந்த மருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கட்டமைக்கப்பட்டுள்ள பரிசோதனையின் பின்னரே மருந்துகள் நோயாளர்களுக்கு வழங்கப்படும். மேற்படி மருந்து உற்பத்தி செய்யும் மான் பார்மசூட்டிகல் தனியார் நிறுவனத்திடமிருந்து ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்துகள் தரமற்றவை எனப் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஓண்டன்செட்ரோன் மருந்துடன் அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மருந்து தயாரிப்பின் போதே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகத் தரமற்ற மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்கின்றனர். எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர்? குறித்த நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடமை அலட்சியத்தை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிச்செல்ல முயலும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." 10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் | Virakesari.lk
-
அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0 - 60 கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர். இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருநாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
-
நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
18 Dec, 2025 | 02:29 PM கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்ட மாஅதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கோப்புகள் சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்ட மாஅதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Virakesari.lk
-
இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!
18 Dec, 2025 | 02:10 PM இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர். இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது. உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! | Virakesari.lk
-
முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!
18 Dec, 2025 | 02:18 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது. கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகளும் வழங்கப்பட்டன. தென்னியன்குளம் சந்தி முதல் அம்பலப்பெருமாள்குளம் சந்தி வரையிலான பிரதான வீதி முற்றாகச் சிதைவடைந்துள்ளமையை மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதற்குத் தீர்வாக, அவ்வீதியின் ஒரு பகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாகவும், எஞ்சிய பகுதியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிராமத்தினுள் அமைந்துள்ள பாடசாலை வீதி, கோட்டைகட்டியகுளம் பாடசாலைப் பின்வீதி மற்றும் விடத்தை வீதி ஆகியவற்றை உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அமைதிபுரம் முதல் துணுக்காய் பிரதேச செயலகம் வரை ஏழு கிராமங்களை இணைக்கும் அரச பேருந்து சேவைக் கோரிக்கை தொடர்பில், தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பேருந்துச் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார். அம்பலப்பெருமாள்குளம் பகுதியில் சிதைவடைந்து ஆபத்தான நிலையிலுள்ள கலிங்குக்குப் பதிலாக நிரந்தர மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதனைத் தற்காலிகமாகத் திருத்தியமைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். அத்துடன், கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் கலிங்கு நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமையால் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க, வனவளத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, நீர்பாசனத் திணைக்களத்தின் ஊடாகச் சீர்செய்ய மாவட்டச் செயலர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார். அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தொலைதூர மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளமைக்குத் தீர்வாக, முதற்கட்டமாக வாரத்தில் ஒரு நாள் பொதுக்கட்டடம் ஒன்றில் மருத்துவ நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும், இரு கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளூராட்சித் திணைக்களம் அல்லது மாற்று வழிகள் ஊடாக அமைத்துத் தருவதாக ஆளுநர் உறுதியளித்தார். பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளைச் சாதகமாக அணுகுவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அம்பலப்பெருமாள்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் களஞ்சிய அறையுடன் கூடிய மண்டபம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அந்த மைதானத்துக்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் பதிலளித்தார். குடியிருப்புக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “அபிவிருத்திகள் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும்போதே அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே அதிகாரிகளுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். இப்பகுதி இளைஞர்கள் மதுபாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலர், பிரதேச சபை தவிசாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்! | Virakesari.lk
-
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!
18 Dec, 2025 | 05:28 PM பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மக்களின் நலன், மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தி மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது. பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்! | Virakesari.lk
-
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு
நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 18 Dec, 2025 | 04:00 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளர். இது குறித்து தெளிவுபடுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அந்த பாலத்தின் புதிய பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன. எனவே, நாயாறு பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. பொதுமக்கள் நாயாறு பாலத்தை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளால் நாயாறு பாலம் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்பதும் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது | Virakesari.lk
-
யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!
18 Dec, 2025 | 05:44 PM யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லைக் கல் நாட்டுவதாக கூறினர். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியில் நாங்கள் நினைவேந்தல் செய்வது வழமை. அந்த வளாகத்திற்கு உள்ளே சென்று நாங்கள் நினைவேந்தல் செய்ய வேண்டும். ஆகையால் அந்த பகுதியை விட்டு எல்லை இடுமாறு கோரினோம். அதன்படி வாயிலின் சிறிய பகுதியை விட்டுவிட்டு, எல்லைக்கல் நாட்டப்படுகிறது. வாயிலுக்கு கதவு போடுமாறு அவர்கள் கூறினர். இது தொல்பொருள் திணைக்களத்தின் பகுதி, ஆகையால் யாரும் இதனை தடுக்க முடியாது என்று கூறுகின்றனர். யாழ். மாநகர சபை இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம் என்றார். யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்! | Virakesari.lk
-
வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர்
18 Dec, 2025 | 05:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சேதமடைந்த புகையிரத பாதைகள் வெகுவாக புனரமைக்கப்படுகின்றன. 2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும். 2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தித்வா சூறாவளி தாக்கத்தினால் மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள்,புகையிரத வீதிகள், பாலங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி கட்டமைப்பிலான வீதிகள் சேதமடைந்துள்ளன. அண்ணவளாக 1450. 6.4 கிலோமீற்றர் தூர வீதிகள் சேதமடைந்துள்ளன. மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன. மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே நாடு இன்று எதிர்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தியின் போது எதிர்க்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும். சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 69 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூறாவளி தாக்கத்தால் புகையிரத திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. புகையிரத பாதைகள், பாலங்கள், சமிஞ்சை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக புகையிரத பாதையில் புகையிரத வீதியின் இருப்புகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன. புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கு மாத்திரம் 6 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சேதமடைந்த புகையிரத பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் 2026.01.01 ஆம் திகதி முதலும், தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தும் முழுமையாக ஆரம்பிக்கப்படும். மலையகத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு மற்றும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அதனை விடுத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது என்றார். வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர் | Virakesari.lk
-
தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர்
18 Dec, 2025 | 06:55 PM மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் பெய்த அதிக மழை காரணமாக நுவரெலியா பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்தமையே கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாகும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர தெரிவித்தார். நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது உபாலி வணிகசேக்கர இதனை தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் பிரதி நகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உட்பட மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாநகர சபை கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கட்டு வான்கதவுகள் திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியதாக ஒரு சில ஊடகங்களில் நுவரெலியா பொது மக்கள் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதில் எந்தவித உண்மையும் இல்லை. நுவரெலியா நகரம் நீரில் மூழ்வதற்கு முன்பே நுவரெலியா கிரகரி வாவியின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களும் இடைவிடாது பெய்த கன மழையினால் பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகல ஓயா நீரோடையில் நீர் பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது. அத்துடன் நுவரெலியாவில் அதிகரித்த சட்டவிரோத கட்டடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். மேலும், நுவரெலியா நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதி, நுவரெலியா குதிரைப்பந்தய திடல் (ரேஸ்கோஸ்) நுவரெலியா கொல்ப் மைதான லயம், நுவரெலியா யுனிக் கிராமம் உட்பட பல இடங்களில் இயற்கை அனர்த்தத்தால் மழை நீர் நிரம்பியும் மண்சரிவு ஏற்பட்டும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை நுவரெலியா மாநகர சபை முன்னின்று செய்து வருகிறது. மேலும் நுவரெலியா நகரில் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையையும், சுற்றுலாத் துறையையும், பாதிக்கப்பட்ட வர்த்தகத் துறையையும் அபிவிருத்தி செய்து மீண்டும் பழைய நிலைக்கு நுவரெலியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன் நுவரெலியா நகரில் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் மாநகர சபை முதல்வர் மேலும் தெரிவித்தார். தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர் | Virakesari.lk
-
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்
மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு தனிமைப்படுத்தல். Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:40 - 0 - 32 தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 6 ஆம் திகதி காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி 10 நாள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனகொண்டா குட்டி, அடைத்து வைக்கப்பட்டிருந்த சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அலுமாரியில் ஒரு டிராயருக்கு அடியில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். காணாமல் போனதிலிருந்து மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் பகல்நேர தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், அதே நேரத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேர தேடல்கள் தொடங்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். அனகொண்டா குட்டி அதன் அடைப்பில் உள்ள மிகச் சிறிய துளை வழியாக தப்பித்து அலமாரி டிராயருக்குள் மறைந்திருந்ததாக பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர விளக்கினார். குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மலைப்பாம்பு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பொதுவாக வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உணவளிப்பதாகவும், எனவே இளம் அனகொண்டா காணாமல் போன காலத்தில் எந்த உணவுப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அனகொண்டா குட்டி இப்போது கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சமரசேகர மேலும் கூறினார். Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு தனிமைப்படுத்தல்
-
நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை
17 Dec, 2025 | 03:24 PM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார். இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதித்து மட்டு.மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, நீதிபதி தேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு தேரர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை | Virakesari.lk
-
இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
17 Dec, 2025 | 03:13 PM இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகரித்துள்ளது. அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது. ஜெர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக, இலங்கைக்கான ஜேர்மனியின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்! | Virakesari.lk
-
மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு
17 Dec, 2025 | 05:21 PM மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் இன்று புதன்கிழமை (17) அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்றையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சமர்பித்திருந்தனர். இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்டைதீவு புதைகுழி விவகாரம் ; வழக்கு விசாரணை 2026 மார்ச் 31 ஆம் திகதிக்கு | Virakesari.lk
-
அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!
17 Dec, 2025 | 05:08 PM கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை (18) வானிலை முன்னறிவிப்பு குறித்து இன்று புதன்கிழமை (17) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி! | Virakesari.lk
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
Editorial / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 06:00 - 0 - 32 கனகராசா சரவணன் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகனேரியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக ஞாயிற்றுக்கிழமை (14)இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு திங்கட்கிழமை (15) காலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார் இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது சண்டையாக மாறிவிட்டது. இந்நிலையில் பகல் 11.30 மணி அளவில் கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியதுடன் கோடாரியால் மண்டையை பிளந்துள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் இதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்து தான் கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தில் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tamilmirror Online || புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்