Everything posted by பிழம்பு
-
தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்
13 Jan, 2026 | 05:43 PM இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் திங்கட்கிழமை (12) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத்தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஜுவனிதா நாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் உலக அயலகத் தமிழர் தினம் 2026 க்கு என்னை அழைத்தமைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழராக கனேடிய மண்ணின் மக்கள் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியையும் பெருமிதமும் அடைகிறேன். தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார்கள். அயலக தேசங்களில் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் மொழியைப் பாதுகாத்தும், வளர்த்தும் வருவதில் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. அதுமாத்திரமன்றி வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் தமிழர்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு முன்னேறி வருகின்றனர். இவ்வாறு பல வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் புலம்பெயர் தேசங்களில் தமிழர் மரபையும், திறனையும், ஆளுமையையும் கட்டிக்காத்து வளர்ந்துவரும் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைந்து நடாத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுக்களைக் கூறிக்கொள்கிறேன். கனடா மற்றும் இந்திய 75 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான தூதரக உறவுகளைப் பேணிவருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் கனடா - இந்தியா உறவு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக மேலும் வலுவடைந்து வருகிறது. இவ்விடயத்தில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பொருளாதார உறவுகளில் தமிழ்நாடும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகமும் முக்கிய பங்களிப்பை வழங்கமுடியும் என நான் நம்புகிறேன். கனடாவில் இலங்கையிலிருந்து குடியேறிய கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களாக இருந்தபோதும் தமிழர்களாக இவர்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுடன் பிரிக்கமுடியாத உறவை மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பகிர்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 கோடி தமிழர்கள் வாழும் நிலையில், கனடா மிகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச்சமூகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கனேடிய தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து உலகத் தமிழ்ச்சமூகத்தின் பண்பாடு, மொழி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதேவேளை இதனூடாக நாம் வாழும் நாடுகளின் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கும் இதன்மூலம் பங்களிப்புச் செய்யமுடியும். அதேபோன்று ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் மிகமுக்கியமானவையாகும். ஈழத்தமிழராக கனேடிய மண்ணுக்குப் புலம்பெயர்ந்து, இன்று கனடாவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள நான், தமிழ்நாடு அரசு ஈழத்தமிழ் அகதிகளுக்குச் செய்த ற்றும் செய்கின்ற சகல உதவிகளுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் தமிழ்நாடு பொருளாதார செயற்பாடுகளில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் வளர்ந்து வருகிறது. அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு எனது பாராட்டை வெளிப்படுத்துகிறேன். அதேவேளை மறுபுறம் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பமுடியும் என்பதுடன் அதனூடாக தமிழ்நாடும் நன்மையடைய முடியும். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கனேடிய தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழ்ச்சமூகங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார். தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல் | Virakesari.lk
-
Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!
இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இளையராஜா படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பெங்களூரு; இசைநிகழ்ச்சி மூலம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய இளையராஜா | Ilaiyaraja Raises Funds for a Charity Foundation Through a Music Concert
-
புதிய கல்வி மறுசீரமைப்பு : போலியான திரிபுப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிப்பெறாது -பிரதமர்
11 Jan, 2026 | 05:27 PM (இராஜதுரை ஹஷான்) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) மாலை நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முறைமை மாற்றத்தை நோக்கிச் செல்வது ஒன்றும் இலகுவானதல்ல, கடும் எதிர்ப்புகள் எழும்.இதுவரை காலமும் இந்த கட்டமைப்பில் சலுகைப் பெற்றவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். பெற்றுக் கொண்ட சலுகை நீங்கும் போது அதனை எதிர்ப்பார்கள். ஒரு நாளில், ஒரு இரவில் கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த முடியாது. இதனால் தான் புதிய கல்வி கொள்கையில் தொழிற்றுறை கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை நாட்டுக்கு அவசியமானது. பிள்ளைகள் மற்றும் கல்வி தொடர்பில் அக்கறை இல்லாதவர்களே புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறார்கள். அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார். புதிய கல்வி மறுசீரமைப்பு : போலியான திரிபுப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிப்பெறாது -பிரதமர் | Virakesari.lk
-
யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்
12 Jan, 2026 | 10:55 AM வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார். அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், சனிக்கிழமை (10) வீட்டினை முற்றுகையிட்டு, வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில் | Virakesari.lk
-
அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் - எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 11:19 AM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என “நாட்டை பாதுகாப்போம்” தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட மனு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அந்த மனுவில், பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்பட உள்ள தன்னிச்சையான கல்வி சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு, அதன் மக்கள் மற்றும் புத்த சாசனம் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமைந்துள்ளது. மக்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறை இல்லாத ஒரு அறியாமை அரசாங்கத்தின் நேரடி விளைவுகள் இறுதியில் தேசத்திற்கும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்புக்களை விளைவிக்கும். கல்வி சீர்திருத்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏனெனில் பௌத்த பிக்குகள், பிற மதங்களின் மதகுருமார்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி நிபுணர்களிடமிருந்து எந்த கருத்துகளும் கோரப்படவில்லை. அதன்படி, இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட செயல்முறை அடிப்படையில் குறைபாடுடையது. எனவே செல்லுபடியாகாது. ஒரு பௌத்த தேரர் என்ற வகையில் வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் எல்லே குணவன்ச தேரர், ஜனாதிபதி திசாநாயக்க, நாட்டையும், அதன் மக்களையும், புத்த சாசனத்தையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் - எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk
-
வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம்
12 Jan, 2026 | 05:58 PM வட மாகாண முதலீட்டு மாநாடு (NIS) 2026 யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாசார மையத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையின் போர் பிந்தைய பொருளாதார மாற்றப் பயணத்தில் இந்த மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வடிவமைப்பாளர்கள், அபிவிருத்தி கூட்டாளிகள் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை ஒன்றிணைத்து, வட மாகாணத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு மூலோபாய திருப்புமுனையாக NIS 2026 அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக வட மாகாணம் பயன்படுத்தப்படாத பெரும் திறன்களைக் கொண்டிருந்தாலும், சிதறிய நிர்வாக அமைப்புகள், முடிவெடுப்பாளர்களை அணுக முடியாத நிலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டு வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையை உறுதியாக மாற்றுவதே NIS 2026இன் நோக்கம். வட மாகாணத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் முதன்முறையாக, முழுமையான முதலீட்டாளர் மையப்படுத்தப்பட்ட மாநாடாக இது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்வத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆர்வத்தை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதற்காகவே இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் ஓர் உயர் தாக்கம் கொண்ட மேடை நிலையான பிராந்திய வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த உண்மையை மையமாகக் கொண்டு NIS 2026 அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மாகாண தலைமைத்துவம், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் நிறுவனத் தரப்பினருடன் ஒரே கூரையின் கீழ் நேரடியாக கலந்துரையாடுவதற்கான அபூர்வ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், தொடக்க நிறுவனங்கள், இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்கள் உள்ளிட்ட தொழில்முனைவோர், உண்மையான முதலீட்டு வாய்ப்புகள், கொள்கை விளக்கங்கள், நிதி வழித்தடங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். அனுமதிகள், கூட்டாண்மைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சியை தீர்மானிக்கும் முடிவெடுப்பாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பலருக்கு இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாடு எதிர்காலத்தை நோக்கி அமைக்கப்பட்ட ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாகும். இது நம்பிக்கையை உருவாக்குகிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் வட மாகாணம் தீவிரமான முதலீடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்ற வலுவான செய்தியை வெளிப்படுத்துகிறது. ஆளுநர் அலுவலகத்தில் ஒரே மைய செயலகம் NIS 2026இன் முக்கியமான பெறுபேறுகளில் ஒன்றாக, முதலீட்டாளர்கள் மற்றும் திட்ட முன்மொழிவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட செயலகம் ஆளுநர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளது. இந்த செயலகம், வட மாகாணத்தில் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே மைய ஒருங்கிணைப்பு நிலையமாக செயல்படும். இந்த முயற்சி முன்னுதாரணமற்றது. முதலீட்டாளர்கள் முதன்முறையாக, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், திட்ட முன்னேற்றங்களை கண்காணிக்கவும், ஒழுங்குமுறை தேவைகளை தெளிவுபடுத்தவும், நிர்வாக தடைகளை தீர்க்கவும் ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பைப் பெறுகின்றனர். மாநாட்டின் இரண்டு நாட்களுடன் இந்த முயற்சி முடிவடையாது. NIS 2026 உருவாக்கும் வேகமும் தாக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்க இந்த செயலகம் ஒரு நிரந்தர பாரம்பரியமாக அமையும். ஒரு நிகழ்வைத் தாண்டிய கட்டமைப்பு மாற்றம் NIS 2026 ஒரு சின்ன நிகழ்வாகவோ அல்லது ஒருமுறை நடைபெறும் விளம்பர முயற்சியாகவோ அல்ல. இது பிராந்திய வளர்ச்சியை அணுகும் முறையில் ஒரு அடிப்படை கட்டமைப்பு மாற்றமாகும். கொள்கை, நிர்வாகம், முதலீடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒரே சூழலில் ஒருங்கிணைப்பதன் மூலம், வட மாகாணத்தை போட்டித்திறன் கொண்ட, நம்பகமான முதலீட்டு இலக்காக உருவாக்குவதற்கான முதல் ஒருங்கிணைந்த முயற்சியாக இந்த மாநாடு அமைகிறது. பங்கேற்கும் அழைப்பு NIS 2026 என்பது யோசனைகள் நிறுவனங்களுடன் சந்திக்கும் இடம். கனவுகள் வாய்ப்புகளுடன் இணையும் தருணம். வட மாகாணத்தின் எதிர்காலம் உறுதியான வடிவம் பெறத் தொடங்கும் மேடை என்றும் கூறப்படுகிறது. வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம் | Virakesari.lk
-
இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு
12 Jan, 2026 | 05:19 PM தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்அவர் மேலும் தெரிவிக்கையில் , அலுமினியம் பாரம் இல்லாததால் இலகுவில் கையாளக்கூடியதாக உள்ளது. உலோகம் என்பதால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலையும் மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் பூசப்படுகிறது. அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகச் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் நாம் உடலின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டிய சமையலையும் அவ்வாறே அவசரகதியில் முடிக்க எண்ணி உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோய்களுக்கும் ஆளாகி வருகிறோம். மண்பாத்திரங்களுக்கு உடனடியாகத் திரும்;புவது கடினமாக இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினையர்களது வாழ்வு மேம்படவும்; உதவும் என்றார். இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு | Virakesari.lk
-
மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ; ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு அவசர அவசரமாக வீதியை செப்பனிடும் அதிகாரிகள்
12 Jan, 2026 | 06:15 PM மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில், அவ்வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) மன்னாருக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியை செப்பனிடும் பணியில் உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக சீரின்றி காணப்பட்டது. எனினும் அவ்வீதியில் முழுமையாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்விடயம் தொடர்பாக அவ்வீதிக்கு பொறுப்பான திணைக்களத்திடம் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மழைக்காலங்களில் அவ்வீதியினூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மன்னார் நகரில் இது முக்கியமான பிரதான வீதியாக உள்ளபோதிலும் அதனை சீரமைக்க யாரும் அக்கறை கொள்ளவில்லை. இந்த நிலையில் மன்னாரில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள காற்றாலை மின் கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நடும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தரவுள்ளார். வீதியை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திணைக்களத்தினர் ஜனாதிபதியின் வருகையின் காரணமாகவே தற்போது அந்த வீதியை செப்பனிடும் பணியை ஆரம்பித்துள்ளமை நோக்கத்தக்க விடயமாகும். மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ; ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு அவசர அவசரமாக வீதியை செப்பனிடும் அதிகாரிகள் | Virakesari.lk
-
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில் மோதி கார் விபத்து ; 4 பேர் பலி 12 Jan, 2026 | 07:17 PM கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பஸ் ஒன்றுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதேவேளை காருக்குள் நெரிபட்ட நிலையில் இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-
இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம்
09 Jan, 2026 | 05:26 PM இலங்கை கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்டர் சிவனேஷ் தலைமையில், நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (09) சமர்ப்பித்தனர். இலங்கையில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின அடையாளங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து, கிறிஸ்தவ சமூகத்தின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு நோக்குகிறோம் என்பதை ஜனாதிபதிக்கு இக்கடிதம் மூலம் விளக்கியுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் இத்தகைய விடயங்களை ஊக்குவிக்கும் அல்லது பரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இது சமூகத்திற்கும், குடும்பக் கட்டமைப்பிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர். விவிலிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் சட்ட ரீதியான காரணிகளின் அடிப்படையில் இவ்வாறான போக்குகள் மனிதர்களுக்கு எவ்விதமான இடையூறுகளை விளைவிக்கும் என்பதை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள், இது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், வரும் நாட்களில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இது குறித்து மேலதிக விளக்கங்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | Virakesari.lk
-
கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது!
09 Jan, 2026 | 05:22 PM (செ.சுபதர்ஷனி) கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், வியாழக்கிழமை (8) இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததன் பின்னர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானி இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தமையை அறிந்துள்ளார். இந்நிலையில் சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்கள் வான்பரப்பில் பறந்ததன் பின்னர் மேற்படி விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. யு.எல் 229 என்ற இந்த விமானம், வியாழக்கிழமை மாலை 6.44 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்தது. விமானம் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் தொகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார். உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட விமானிக்கு, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதற்கமையச் செயற்பட்ட விமானி இரவு 9.05 மணியளவில் விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதன்போது குறித்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றித் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலமாக குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது! | Virakesari.lk
-
குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு
09 Jan, 2026 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் அண்மைகாலமாக பிறப்பு வீதம் குறைவடைந்துள்ள நிலையில், குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்கவிப்புத் தொகையை வழங்குதல் என்ற தலைப்பில் அஜித் பி. பெரேராவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும். இதனால் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு | Virakesari.lk
-
“விஜய்யை எதிர்கொண்டு நிரூபியுங்கள்!” - ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் மோடிக்கு தமிழக காங்கிரஸ் சவால்
சென்னை: “நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு கூற்றை நிரூபியுங்கள்” என பிரதமர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை குறி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்யின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம். பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும், தணிக்கை வாரியத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தவெகவுடன் தமிழக காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் சூழலில், ‘ஜனநாயகன்’ தணிக்கை பிரச்சினையில் தமிழக் காங்கிரஸ் கட்சியினர் விஜய்க்கு அழுத்தமாக குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது. “விஜய்யை எதிர்கொண்டு நிரூபியுங்கள்!” - ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் மோடிக்கு தமிழக காங்கிரஸ் சவால்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா
07 Jan, 2026 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையேல் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில் பேசும் அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தகாத மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார். முறைப்பாட்டை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை கேவலமாக பேசினார். பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார். இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது . இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். தொடர்ந்தும் இவர் தனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூற முடியாது. இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர்.இதனால் அந்தக் குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா | Virakesari.lk
-
கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு துப்புரவு
நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! 08 Jan, 2026 | 03:13 PM நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துப்புரவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன. பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பூசகமான முறையில் இராணுவத்தினருடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் அத்திவாரம் வெட்டியது. அம் முயற்சி பௌத்த சிங்கள பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியென குற்றஞ்சாட்டப்பட்டது. அந்நிலையில், அப்போதும் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஷ் அவற்றை தடுத்திருந்தார். இதனையடுத்து அவர் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு இடையூறு விளைவித்தாகத் குற்றச்சாட்டில் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழக்கினை எதிர்கொண்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ் வழக்குகள் பின்னர் சட்டா அதிபரின் ஆலோசனைக்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்நுழைபவர்களுக்கான கட்டண அறவீடு தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினால் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான காரணங்களினால் சபை பதவியிழந்த பின்பு பிரதேச சபையினால் குறித்த பகுதியில் செயற்பட முடியவில்லை. அதனால் அப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளினாலும் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் காட்டமான கண்டனங்கள் அண்மைய நாட்களாக வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான அ.கமலறேகன், பணியாளர்கள், பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியை நேற்று புதன்கிழமை (7) துப்புரவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சபையின் சொத்தாக உடைவடைந்த நிலையில் உள்ள இருக்கைகள், நுழைவாயில் கதவு போன்றன திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. பெயர்ப் பலகையிடப்பட்டுள்ளதுடன் பொலித்தீன் தடை மற்றும் சுத்தத்தினைப் பேணுவதற்கான விளம்பர பலகைகளும் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ளன. நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! | Virakesari.lk
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
08 Jan, 2026 | 04:58 PM அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது. இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்! | Virakesari.lk
-
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து
08 Jan, 2026 | 04:17 PM இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி இருவரும் சீதையம்மன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில் நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது. இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டீரந்த நிலையில் காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தறை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் ஆகாயப்படை தரப்பினர் வழங்க மறுத்தமை காரணமாக இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது. இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்து ஏ.வி.குருமூர்த்தி இந்த பூஜை வழிபாடுகளில் பங்கு பற்றியதுடன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உட்சவ மூர்த்தி திருவுருவச் சிலையும் மற்றும் இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீரும் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கொழும்பு இந்திய தூதவராலயத்தின் அதிகாரி ஏ.வி.குருமூர்த்தனால் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன். இந்திய இராணுவத்தளபதியின் வருகை காலநிலை காரணமாக சாத்தியப்படாமல் போய்விட்டது.ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தோம். அதேபோன்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் விசேட பேரிடரின் பின்பு இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக இலங்கைக்கு வருகை தந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளை மீள கட்டியெழுப்புவதற்கும் மேலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டமைக்கும் உயிரிழந்தவர்களை கண்டு பிடிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்து செய்த சேவைக்காகவும் யஎங்களுடைய நாட்டின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்களுடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும்.விசேடமாக பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இரயில்வே பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலமாக எங்களுடைய உல்லாச பயணத்துறை வளர்ச்சியடைவதன் மூலமாக எங்களுடைய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பு முடியும் எனவும் குறிப்பிட்டார். ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னத்தை இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்தனர். சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து | Virakesari.lk
-
இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
08 Jan, 2026 | 06:21 PM வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வியாழக்கிழமை (8) மாலை 5.30 மணி எதிர்வுகூறியுள்ளதன்படி, வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு, வடமேற்கு, திசை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது. நகர்வு 1. ஏற்கனவே இருந்தது போன்று இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து பின் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் எதிர்வரும் 10.01.2026 அன்று மாலை மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் பிரவேசித்தல். நகர்வு 2. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கும் அம்பாந்தோட்டைக்கும் இடையில் நிலப்பகுதிக்குள் எதிர்வரும் 09.01.2026 அன்று இரவு அல்லது 10.01.2026 அன்று அதிகாலை பிரவேசித்தல். நகர்வு 1இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் நான் முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 12.01.2026 வரை மிக மிக கனமழையைப் பெறும் (04 நாள் திரட்டிய மழை வீழ்ச்சி 600 மில்லிமீட்டரை விட அதிகம்). நகர்வு 2இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் கனமான (200 மி.மீ. திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும்). ஆனால் கிழக்கு மாகாணம் எதிர்வரும் 13.01.2026 வரை ( 05 நாட்கள்) 350 மி.மீ.இனை விட கூடுதலான திரட்டிய மழைவீழ்ச்சியைப் பெறும். நகர்வு 2இன் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் மத்திய மாகாணம் ஊவா மாகாணம் என்பன 300 மி.மீ. இனை விட கூடுதலாக திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும். ஆனால் நகர்வு 1ஐ விட நகர்வு 2 இலங்கைக்கு குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய சப்ரகமுவா, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மீளவும் பாதிப்பை ஏற்படுத்தும். நகர்வு 2இன் மையப் பகுதியாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அமையும் என்பதனால் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களில் நிலச்சரிவு நிகழவுகளுக்கான அதிகூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், இந்த நிகழ்வின் நகர்வு பற்றிய இறுதி முடிவை நாளை (09.01.2026) காலையே தீர்மானிக்க முடியும். நகர்வு 2 உறுதியானால் மீளவும் மலையகத்தின் பல பகுதிகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும். ஆகவே இது தொடர்பாக மிக மிக முன்னெச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும் என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள் | Virakesari.lk
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பிமல் ரத்நாயக்க. 08 Jan, 2026 | 04:55 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு,பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய முன்னுரிமை வழங்கப்படும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அடுத்த பாராளுமன்ற அமர்வு வார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் இந்த வாரத்தில் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) எதிர்க்கட்சி பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தால் அதனை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டும். இதனாலும் அதேபோன்று நீங்கள் இப்போது நம்பிக்கையில்லா பிரேரரணையொன்றுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி அதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது. இதனால் இந்த நேரத்தில் இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வு நடவடிக்கை தொடர்பான குழுக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமையாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் இந்த கூட்டம் நடத்தப்படும். ஆனால் நான் குறிப்பிட்ட காரணங்களால் இந்த வாரத்தில் குறித்த கூட்டம் நடத்தப்படாது. எவ்வாறாயினும் அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்குத் தயாராவதற்கு உறுப்பினர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில், பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என்றார். கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை செ.ஞானபிரகாஷ் Updated on: 06 Jan 2026, 9:50 am கேரள - கர்நாடக எல்லையை ஒட்டிய மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கிறார் மலாத்தி (பியானா மொமின் ) என்ற மலேசிய பெண். அவரது கணவர் சவுரப் சச்தேவா (குரியச்சன்). மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் ரகம் இவர். ஊருக்குள் அவரை பற்றி பெண்பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் மலாத்திக்கு துணையாக பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனை குரியச்சன் வேலைக்கு வைத்துள்ளார். அந்தக் காட்டுக்கு மோகன் போத்தன் ( வினித்) ஒரு நாயுடன் வருகிறார். மலாத்தியையும், அவரது கணவர் குரியச்சனையும் விசாரித்து விட்டு, கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். வினித் இறக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களும், ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகளுமே ‘எகோ’ (Eko) திரைக்கதை. ஏற்கெனவே பிரபலமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். அவரது திரை எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி இம்முறையும் காட்சியமைப்புகளில் கட்டிபோட்டுள்ளனர். கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றை விற்கும் குரியச்சன், மலேசியாவிலிருந்து மலாத்தியை கேரளத்துக்கு அழைத்து வந்தது எப்படி என்பது வித்தியாசமான ஃப்ளாஷ்பேக். உண்மை ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரின் கோணமும் வெவ்வேறானது. அந்த ஃப்ளாஷ்பேக் குரியச்சன் பார்வையில் ஒரு கருத்தும், குரியச்சன் நண்பர் வினித் விவரிக்கும்போது வேறு மாதிரியாகவும் வெளியாகிறது. ‘ஃபேலிமி’ படத்தில் சாதுவாக தோன்றிய சந்தீப், ‘ஆலப்பூலா ஜிம்கானா’, ‘படக்கலம்’ படங்களுக்கு பிறகு நிறைவான, ஆக்ரோஷமான நடிப்பை இப்படத்திலும் உறுதி செய்கிறார். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவும் இப்படத்தின் அடிப்படை. மனிதர்கள் நாய்களையும், உறவுகளையும் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பதுதான் அடிநாதம். பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்து, அடிமையாக வைத்திருப்பதையும் காட்சியாக விவரிப்பது சிலிர்ப்பு. “நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்” என்பதை சுற்றிதான் வருகிறது க்ளைமாக்ஸ். மனிதன் தன் விருப்பத்துக்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை. உணர்வுபூர்வமாகவும், காட்சி வழியாகவும் பேசும் தவற விடக்கூடாத இந்தத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. https://youtu.be/Bw6H-Ir1YJs?si=R6SNBW022EWYLiAE Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
-
அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர். இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வெனிசுலா ஏதோ வறண்ட, பட்டினிப் பிணி பிடித்த தேசம் கூட அல்ல. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் உள்ளது. ஆனாலும் ஏன் அந்நாட்டு மக்கள் தங்கள் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடினர் என்பது குறித்து அறிய முற்பட்டபோது வெனிசுலா பற்றி பல சுவாரஸ்யத் தகவல்களும், சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவருக்கு முந்தைய அதிபர் ஹியூகோ சாவேஸ் குறித்து பல விஷயங்களும் தெரியவந்தன. சாவேஸ் முதல் மதுரோ வரை... - லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலாவின் வரலாறு கவனிக்கத்தக்கது. வேளாண் பொருளாதாரம் கொண்ட ஒரு தேசம் நகரமயமாகி, வேகமாக வளர்ச்சி கண்ட விதமே அதற்குக் காரணம். 1959-ல் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலா ஒரு ஸ்திரமான அரசைக் கொண்டதாக இருந்தது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல்கள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வெனிசுலா அதன் மூலம் செழிப்படையத் தொடங்கியது. ஆனால் 21-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெனிசுலா வேறொரு அரசியல் பாதையில் செல்லத் தொடங்கியது. அப்போது அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸின் ஆட்சி கவனம் பெறலானது. 1999-ல் வெனிசுலாவின் அதிபரான ஹியூகோ சாவேஸ், ‘பொலிவிரியன் புரட்சி’ ( Bolivirian Revolution) என்ற பெயரில் சோசலிஸக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். நாட்டின் பெயரைக் கூட வெனிசுலா பொலிவிரியன் குடியரசு என்று மாற்றினார். பொலிவர் என்பவர் சாவேஸின் கொள்கை குரு. அவருக்கு மாவோ, ஸ்டாலின், லெனின் மீதும் கூட ஈடுபாடு இருந்தது. சோசலிஸக் கொள்கைகளைப் புகுத்தி வெனிசுலா அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தார். அதுவரை அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கொட்டமடித்த ஆட்சியாளர்களை ஒடுக்குவேன் என்று சூளுரைத்தே ஆட்சிக்கு வந்திருந்ததால், மக்கள் பணிகளில் ஆர்வம் காட்டினார். எண்ணெய் வளம் இருந்தும் ஏன் பொருளாதாரத் தேக்கநிலை என்று சிந்தித்து, கச்சா எண்ணெய் விலையை அதிகரித்தார் சாவேஸ். பெட்ரோலியத்தை நாட்டுடைமையாக்கினார். இயற்கை வளமாக பெட்ரோலியத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் செல்வத்தில் மிதப்பது தடைபட்டது. அவரின் கட்டுப்பாடுகளால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்திருந்தது. சில பெருஞ் செல்வந்தர்களும் எரிசலில் இருந்தனர். சாவேஸுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியது. ஆனாலும் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல், அவர் தொடர்ந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். உள்நாட்டில் மட்டுமல்ல ஐ.நா. அவையிலும் கூட அமெரிக்காவை, அதன் அதிபரை சரமாரியாக சர்வசாதாரணமாக விமர்சித்து கர்ஜித்தார். ஆனாலும் அவருடைய ஆட்சியில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதற்கு அவரது கொள்கைகளே காரணம் என்று பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், 2013-ம் ஆண்டு சாவேஸ் உயிரிழந்தார். அதன்பின்னர் வெனிசுலாவில் ஸ்திரமான ஆட்சி அமையவில்லை. 2018-ம் ஆண்டு நிக்கோலஸ் மதுரோ அதிபரானார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிட விடாமலேயே அவர் அதிபரானார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 2024-ல் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனாலும், மதுரோ அதனை அனுமதிக்கவில்லை. முழு சர்வாதிகாரியாக மாறியிருந்த மதுரோ மீண்டும் அதிபரானார். வெனிசுலாவில் போதைக் கும்பல்கள் ஆதிக்கம் மேலோங்கியது. இப்படி சாவேஸுக்குப் பின்னர் தேர்தலே இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிப்பைத்தான் வெனிசுலாவாசிகள் கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டமும் கேள்விகளும்! - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வாழும் வெனிசுலாவாசிகள் இந்த நகர்வைக் கொண்டாடித் தீர்த்தனர். இதற்காகத் தான் காத்திருந்தோம் என்பதுபோல் அவர்களின் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன. ஆனாலும் சிலர் பயத்தில் நிசப்தத்தை தழுவி நிற்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ என்பதே அவர்களின் அச்சத்துக்கு காரணம் எனலாம். இப்போது வெனிசுலா மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், சந்தேகமும் ஒருபுறம், நிம்மதியும், நம்பிக்கையும் மறுபுறம் என்று நிலவுகிறது. ஸ்பெயினில் களைகட்டிய மதுரோ கைது கொண்டாட்டம் பற்றி வெனிசுலாவிலிருந்து புலம்பெயர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இங்கே நிகழும் கொண்டாட்டங்களைக் காணும்போது எனக்குக் கவலையாக இருக்கின்றது. மதுரோவை சிறைப்பிடிக்கப்பட்டதில் நிம்மதிதான். ஆனால், அடுத்து என்ன நடக்கும். போர் மூண்டால் என்னவாகும்? எனக்கு அங்கே உள்ள எனது குடும்பத்தினரின் பாதுகாப்பே முக்கியம்” என்றார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வெனிசுலாவாசிகள் நடத்திய கொண்டாட்டப் பேரணியில் அமெரிக்கக் கொடிகளுடன் சிலர் இருந்தனர். இன்னும் சிலர் ட்ரம்ப்பை புகழ்ந்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். ஒரு பெண் ட்ரம்ப்பை போலவே வேடமிட்டு வந்திருந்தார். இதையெல்லாம் கவனித்திருந்த அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், “மதுரோ கைது என்பது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், எனது தேசத்தை அமெரிக்கா ‘ஸ்டாக்’ செய்து கொண்டிருக்கிறது என்பது கவலையளிக்கிறது” என்றார். மதுரோ கைதுக்கு கியூபா, கொலம்பியா, மெக்சிகோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லாம் ஏதோ ஒப்புக்கு கருத்து சொல்லிச் சென்றுள்ளன. இதுபோன்ற மென்மையான கண்டிப்புகள் ட்ரம்ப்பை எந்த வகையிலும் அசைத்துப் பார்க்காது. சீனாவும், ரஷ்யாவும் மட்டும்தான் அமெரிக்காவும் தனது கண்டனங்களை சற்று வலுவாகப் பதிவு செய்துள்ளன. இதுபோன்ற வன்மையான கண்டனங்களும்கூட தடித்த தன்மை கொண்டது அமெரிக்காவை ஒன்றும் செய்யாது என்பது உலக வரலாறு அறிந்தது! அன்று ஈராக்கியர்கள் ஏமாந்தது போல... - இப்போது வெனிசுலா மக்களின் கொண்டாட்ட மனநிலையைப் பார்த்து சமூக வலைதளங்களில் சர்வதேச அரசியல் நிபுணர்கள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், “இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வெனிசுலா மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னரும், லிபியர்கள் கடாஃபி வீழ்ச்சிக்குப் பின்னரும் கொண்டிருந்த கொண்டாட்ட மனநிலைய சற்றே திரும்பிப் பாருங்கள். இப்போது அந்த நாடுகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதையும் யோசியுங்கள். அந்த இரண்டு நாடுகளுமே அமெரிக்க கட்டுப்பாட்டில் வெற்று நிலமாக மாறின. விடுவிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதைத்தான் பல நாடுகளில் செய்திருக்கிறது. சர்வாதிகார நாடுகளில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும். ஆனால், அது உள்ளிருந்து எழும் மாற்றமாக இருக்க வேண்டும். படையெடுப்பு அல்லது கூட்டுச் சதியின் விளைவாக ஒரு மாற்றம் நிகழக்கூடாது. அது மக்களுக்கான மாற்றமாக இருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார். “2003-ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தான் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. அதிருப்தி ஈராக்கியர்களும் ‘வெல்கம் யுஎஸ்’ என்று பதாகைகளுடன் வரவேற்றனர். ஆனால் 2011 வரை ஈராக்கில் அமெரிக்கா பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தியது. லட்சக்கணக்கில் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் எந்த அணு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சதாமும் கொல்லப்பட்டார். அன்று கொண்டாடிய ஈராக்கியர்களிடம் இன்று சென்று கேட்டால், அவர்கள் அமெரிக்கா மீது அத்தனை வெறுப்புடன் தாங்கள் பட்ட துன்பங்களை நினைவுகூர்வார்கள். ஈராக்கில் இருந்து அமெரிக்கா சென்ற பின்னர், அது ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் பிடிக்குள் சென்றது. போர் எளிது, போரை முடிப்பதும் கூட எளிது, ஒரு ஆட்சியைக் கவிழ்ப்பதும், ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவதும் கூட எளிது. ஆனால், ஒரு தேசத்துக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கக்கூடிய அரசை உருவாகச் செய்வது கடினம்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த திரைப் பிரபலம் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. கட்டுரை உறுதுணை: தி கான்வர்சேஷன் அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:36 - 0 - 22 எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும்,ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை(6) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச சட்டத்தில் நாடொன்றை அபகரிப்பதற்கும்(Irredentism), பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் (Regime Change) அறவே இடமில்லை லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பல நாடுகள், தங்களது இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில், இராணுவ தாக்குதல்கள் மற்றும் வேறு கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் வெளிப்படையாக மீறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகை ஒழுங்கு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சில தொடர்ச்சியான, இன்னும் தீர்க்கப்படாத சவால்கள் இருந்தபோதிலும் கூட, மொத்தத்தில் இதில் உலகின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டதாகும். ஆனால் இன்று சுயநல புவியியல், அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன. இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும். அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சாகசப்போக்கு, ஆட்சி மாற்றத் திட்டங்கள், அபகரிப்பு ஆசைகள் மற்றும் போர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை மறைத்திருந்த அதன் முகமூடி கிழிந்துவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இப்போது அது வெளிப்படையாகவும் வெட்கமின்றியும் பிற நாடுகளின் வளங்களின் மீது உரிமையையும், ஆதிக்கத்தையும் கோருகிறது. ஆனால் சர்வதேச சட்டத்தின் படி, இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அவை வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாடுகளுக்கே சொந்தமானதாகும். இவ்வாறான முன்னேற்றங்கள், தடையின்றி தொடர அனுமதிக்கப்படுமானால் மனிதகுலம் முழுவதற்கும் இழிவை ஏற்படுத்தும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதற்கான அடிப்படை நோக்கமான மற்றொரு உலகப் போரைத் தவிர்ப்பதைப் பாதிக்கும் வகையில், உலகை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் இந்த மிகக் கொடூரமான செயல்கள் மற்றும் சம்பவங்களை நாம் எந்தவிதமான தயக்கமுமின்றி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழியாக பரஸ்பரம் கலந்து ரையாடலும், ஒத்துழைப்புமே இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் அநீதிகளை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகமானது, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒருதலைப்பட்சத் தூண்டுதல்களை கட்டுப்படுத்துவதற்காக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது Tamilmirror Online || ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
-
செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்
Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 04:53 - 0 - 32 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கித்தாரியான பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்திக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (07) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்
-
யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பல இளைஞர்கள் இணைந்து ஒரு பாரிய படலப் பட்டத்தை (கூட்டுப் பட்டம்) நீண்ட தொடுவைக்கயிறு (வடம்) மூலம் வானில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது வீசிய பலத்த காற்றினால் பட்டத்தின் விசை அதிகரித்து, வடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடுதியாக வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டார். கீழிருந்த ஏனைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு, வடத்தை மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தி அந்த இளைஞரை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். இதேவேளை, கடந்த முறைகளிலும் பட்டத்துடன் பறந்த இளைஞன் பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R Tamilmirror Online || யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்
-
சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்
Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 02:11 - 0 - 78 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால், அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேபால கூறினார். தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று புதிய அரசாங்கம் விசாரித்து வருவதாகவும், விசாரணையை ஓர் ஆழமான விசாரணை என்று விவரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சில விவரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றார். Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்