Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவி பிடித்த காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருவி பிடித்த காலம்

ப.கோலப்பன்

இந்த முறை ஊருக்குச் சென்றபோது பெருமாள் கோவிலின் சிறிய தேருக்கு அருகில் உள்ள கோவில் கிணற்றைப் பார்க்கப் போனேன். கருங்கல் மதில்களின் கற்களை இலாவகமாக உருவி, கோவிலுக்கு உள்ளே பாதியும் வெளியே பாதியுமாய் இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். கோவில் திருவிழா என்பதால், தேரை மறைப்பதற்காகப் பயன்படும் நாகத்தகடுகளை இறக்கி கிணற்றின் வெளிப்பக்கம் உள்ள மதிலின் மேல் வரிசையாக அடுக்கி முற்றிலுமாக மூடி வைத்திருந்தார்கள். உள்பகுதிக்கு மேல் ஏற்கெனவே கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கவலையெல்லாம் இந்த கிணற்றுக்குள்ளே உள்ள பொந்துகளில் வழக்கமாகக் கூடு கட்டும் குருவி உள்ளே எப்படி போகும் என்பதுதான். என்னுள் எழுந்த கவலை எனக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாற்பது வயதில் கடவுள் பக்தி ஏற்படுவதுபோலத்தான் குருவிகள் மீதான இந்த அக்கறை என்று தோன்றியது. சிறு பிராயத்தில் நானும் என் நண்பர்களும் இக்கிணற்றில் இறங்கி, குருவிக்குஞ்சுகளைப் பிடிப்போம். இக்கிணற்றில் கூடு கட்டிய குருவிகள் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க நாங்கள் அனுமதித்ததே இல்லை. இன்று குருவிகளின் காதலனாக நான் மாறி விட்டேன்.

எங்கள் ஊரில் இவற்றை அடைக்கலம் குருவி என்பார்கள். ஓடு வேயப்பட்ட வீட்டுக்கூரைகளின் மூலையிலும், வீட்டுப் புறவாசலில் இருக்கும் கிணறுகளில் உள்ள பொந்துகளிலும் இவை கூடு கட்டும். அடைக்கலமாக வந்த இக்குருவிகளை, சிறுவர்களாகிய நாங்கள் தொந்தரவு செய்வதை பல வீட்டுப் பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குருவி கூடு கட்டினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம். எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில ஊர்களில் குருவிகள் கூடு கட்டுவதற்காக டப்பாக்களையும் மண் சட்டிகளையும் சுவர்களில் பொருத்தியிருப்பார்கள். உறவினர் வீடுகளுக்குப் போகும்போது அந்த டப்பாக்களிலும் மண் சட்டிகளிலும் கூடு கட்டியிருக்கும் குருவிகளைப் பார்க்கும் போது எனக்கு இருப்புக் கொள்ளாது. ஆனால் நம்ம வீடு அல்லவே. வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பேன்.

எங்கள் ஊர் பறக்கையில் பெரும்பாலும் கிணறுகளில் கூடு கட்டும் குருவிகள்தான் எங்கள் இலக்கு. இரண்டு கால்களையும் விரித்து கிணற்றின் விட்டத்தை இலாவகமாகப் பிடித்துக் கொண்டு சர்ரென உள்ளே இறங்கி விடுவோம். கிணறுகளில் வாளி விழுந்து விட்டால் பல முறை நானே இறங்கி தண்ணீரில் மூழ்கி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இப்போது கிணற்றை உற்றுப் பார்த்தாலே தலை சுற்றுகிறது.

ஊரைச் சுற்றி குளங்களும், வயல்களும் தென்னந்தோப்புகளும் உண்டு. இதனால் குருவிகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. தன்னுடைய சிறிய அலகால் நெல்லை உடைத்து அரிசியை மட்டும் குருவி சாப்பிடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும். வாய் நிறைய வெட்டுக்கிளிகளையும் தும்பிகளையும் பிடித்துக் கொண்டு குஞ்சுகளுக்கு ஊட்டுவதற்காக தாயும் தந்தையும் கிணற்றுக்குள் இராக்கெட்டுகள் போல் விரைவதை கண்டு களித்திருக்கிறேன். ஆனால் அதே தாயும் தந்தையும் கதறுவதைப் பொருட்படுத்தாமல் கூட்டில் இருந்து குஞ்சுகளைத் தூக்கியும் வந்திருக்கிறேன்.

அடைக்கலம் குருவிகளில் ஆணும் பெண்ணும் புணர்வதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். அவை வேகமாகப் புணரும். பலமுறை தொடர்ந்து புணரும். இதனால்தான் சிட்டுக்குருவியைப் பிடித்து வந்து லேகியம் செய்து, அதேபோல் தானும் புணர்வதற்கு மனிதன் ஆசைப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் வாரப்பத்திரிகைகளில் சிட்டுக்குருவி இலேகியம், தங்க பஸ்பம் விளம்பரங்கள் தவறாமல் இடம்பெறும். இப்போது அந்த விளம்பரங்களைப் பெரும்பாலும் பார்க்க முடியவில்லை. வயாகரா வந்து விட்ட பிறகு சிட்டுக் குருவி இலேகியம் தேவையற்றுப் போய் விட்டதோ என்னவோ?

குருவி முட்டை இரண்டாவது வாரத்தில்தான் பொரிக்கும். முட்டை இடப்பட்ட நாட்களில் இருந்தே தொடர்ந்து கூடுகளைக் கண்காணித்து வருவோம். பொரித்த குஞ்சுகள் முடி முளைக்காமல் இறைச்சித் துண்டுகள் போல் கண் விழிக்காமல், தலையைத் தூக்குவதற்கு கூட திறனற்றுக் கிடக்கும். நாங்கள் பொந்துக்குள் கையை நுழைத்தால் தாயோ தந்தையோ வந்திருக்கிறார்கள் என்று வாயைத் திறந்து இரை கேட்கும். இந்தப் பருவத்தில் குஞ்சுகளை நாங்கள் பிடிப்பதில்லை. இறகுகள் முற்றிலுமாக முளைத்து, பெருத்துக் காணப்படும் வயிறு ஒடுங்கி, அடிவயிற்றிலும் முடி முளைத்த பிறகுதான் குஞ்சுகளைத் தூக்கி வருவோம்.

இந்தக் குஞ்சுகள் எவையுமே ஒரு வாரத்துக்கு மேல் பிழைத்திருக்கவில்லை. நாங்கள் சரியாக உணவு கொடுத்தாலும், பெற்றோரின் அரவணைப்பும் இதமான சூடும்தான் அவற்றை வாழ வைக்கும் என்பதை சிறுவர்களான நாங்கள் அறிந்திருக்கவில்லை. எங்களுடைய நோக்கமெல்லாம் செல்லப்பிராணிகளாக எதையாவது வளர்க்க வேண்டும் என்பதுதான். இந்த ஆர்வத்தில் குருவிகளுக்குச் செய்யும் அநியாயம், எங்களுடைய சின்னப் புத்திக்கு ஒரு போதும் உரைத்ததில்லை. நாங்கள் சாப்பிடுவதையெல்லாம் குருவிக்குஞ்சுகளுக்கும், மைனாக்குஞ்சுகளுக்கும், கிளிக்குஞ்சுகளுக்கும் ஊட்டினோம். மைனாவுக்கும் கிளிக்கும் பால் தவறாமல் ஊட்டப்படும். வசம்பை அரைத்து நாக்கில் தடவினால் கிளியும் மைனாவும் நன்றாகப் பேசும் என்பார்கள். சிறிய வயதில் சரியாகப் பேசாத குழந்தைகளுக்கு வசம்பை அரைத்து நாக்கில் தேய்க்கும் பழக்கம் உண்டு. ஒரு நாளைக்கு பத்து முறையாவது வசம்பை அரைத்து மைனா குஞ்சின் வாயிலும் கிளிக்குஞ்சின் வாயிலும் தடவுவோம். மனிதர்களின் வாயில் தடவினாலே எரியும் வசம்பு, இந்தப் பறவைக்குஞ்சுகளை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் சிறுவர்களின் மனம் பெரியவர்களின் மனங்களை விட பெரும் கொடூரமானது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு இந்த அனுபவங்கள் பயன்பட்டன. பெரியவர்களுக்காவது புரிந்து கொள்ளும் சக்தி உண்டு. சிறுவர்களுக்கு யார் புரிய வைப்பது?. தும்பியையும் பட்டாம்பூச்சியையும் பிய்த்து எறிந்து உற்சாகம் காணும் சிறுவர் பலருண்டு. குருவிக் குஞ்சுகள் இறந்து போனதும் மறுபடியும் வேட்டை ஆரம்பமாகும்.

குருவிகளைப் போல் எங்களுடைய வேட்டைக்கு ஆளான இன்னொரு பறவை கொக்கு. புளிய மரத்திலும் வாகையிலும், தென்னையிலும் கொக்கு கூடு கட்டும். மரத்தில் ஏறி முட்டைகளை எடுத்து வறுத்து தின்பது, வளர்ந்து பறக்கத் தயாராக இருக்கும் குஞ்சுகளைப் பிடித்து வந்து பொரித்துத் தின்பது என நாங்கள் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா. படுக்கையில் கிடந்து, சிவலோகப் பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் தாத்தாவுக்கு பொறித்த கொக்கு இறைச்சியை ஒருமுறை ஊட்டினேன். இளங்குஞ்சின் இறைச்சி, அவர் வாயில் வெண்ணெய்போல் கரைந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் பெரும் குடிகாரராக இருந்த அவர், கள்ளுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அருமையான இருக்கும் என்றார்.

ஒருபக்கம் செல்லப்பிராணிகளை வளர்த்த நாங்கள், மற்றொரு புறம் அவற்றை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததன் காரணம் என்ன என்பது இன்றுவரை விளங்கவில்லை. சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் மனிதப் புத்தியின் ஒரு வெளி்ப்பாடன்றி வேறென்ன இருக்க முடியும்?

கொக்குப் பிடிப்பதில் என் தம்பி என்னை மிஞ்சி விட்டிருந்தான். மீன்களைப் பிடித்து அவற்றின் மேல் துருசு என்று அழைக்கப்படும் மயில்துத்தத்தைத் தடவி, கொக்குகள் வழக்கமாக இரைதேடி வரும் இடத்தில் பரப்பி வைப்பான். மீனை விழுங்கிய கொக்குகள் சற்று நேரத்தில் தள்ளாடித் தள்ளாடி கீழே விழும். ஓடிச் சென்று அவற்றைப் பிடித்து, வயிற்றைக் கீறி, மீனை எடுத்துத் தூர ஏறிவான். நேரம் கடந்து விட்டால், துத்தநாக விஷம் கொக்கின் உடலில் ஏறி விடும். எங்களின் கொடுஞ்செயலைப் பார்த்து அம்மா பதறுவாள்.

“அப்படி செய்யாதீங்கோ மக்கா. அதுகோ பிள்ளைகளுக்கு மீன் பிடிக்கல்லா குளத்துக்கு வந்திருக்கு. அம்மாவும் அப்பாவும் இரை கொண்டு வருவாணு குஞ்சுகோ காத்திருக்கும். நீங்கோ தள்ளையைக் கொண்ணுபோட்டா, இரை இல்லாம குஞ்சுகோ செத்துப் போகும். பாவமில்லா,” என்று புலம்புவாள்.

என் அப்பாவுக்கு வேறு விதமான கவலை. நான் பொந்துக்குள் கையை விட்டு குருவிகளையும் மற்றப் பறவைகளையும் பிடிப்பது அவருக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியது. தினமும் காலையில் அலுவலகம் செல்லும் முன் அவர் இரண்டு அறிவுரைகள் சொல்வார். மரப் பொந்திலோ, கிணற்று பொந்திலோ கையை விட்டு குருவி பிடிக்காதே. ஓடையில் இறங்கி மீன் பிடிக்காதே. அவருடைய பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவருடைய தாய் மாமனின் மகன் எங்களைப் போல் குருவிப் பைத்தியம் பிடித்து அலைந்தவன். ஒரு நாள் பொந்தில் இருந்து குருவி சத்தம் கேட்டதும் கையை உள்ளே விட்டிருக்கிறான். பொந்துக்குள் இருந்த பாம்பு அவனைக் கொத்தி, ஆள் போய் சேர்ந்து விட்டான்.

“அத்தான் அத்தான் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான். வம்பா செத்துப் போனான். நீங்களும் பொந்துல கை விடாதீங்கல” என்று அவர் சொல்லாத நாளில்லை.

எதையாவது வளரத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் அலைந்த எங்களுக்கு பாம்பு எந்த பயத்தையும் ஏற்படுத்தவில்லை. குருவி கிடைக்கவில்லையென்றால் மைனா அல்லது கிளி பிடிப்போம். கிளி பெரும்பாலும் பிழைத்து விடும். மைனாக் குஞ்சைப் பிழைக்க வைப்பது கடினமாகத்தான் இருந்தது.

“மைனாவுக்கு பத்து தத்து (கண்டம்) கழியணும். அது கழிஞ்சாதான் பொழைக்கும்” என்று சில அனுபவசாலிகள் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரேயொரு கொக்குக் குஞ்சு மட்டும் ஒரு வருடம் தாக்குப் பிடித்து பிழைத்தது. அப்போதெல்லாம் ஊரில் நான்கு இரத வீதிகளிலும் உள்ள ஓடைகளில் தெள்ளிய நீர் ஒடிக் கொண்டிருக்கும். அதில் கெண்டைகளும், தவளைகளும், விலாங்குக் குஞ்சுகளும் நீந்தும். குளித்து விட்டு தலையைத் துவட்டுவதற்காக எடுத்துச் செல்லும் டவலில் மீன் பிடித்து கொக்குக்கு ஊட்டினேன். டவலில் எழும் மீனின் உலும்பல் வாடைக்காக அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டி வரும். இப்போது அந்த ஓடைகள் சாக்கடைகளாக மாறி, மலமும் மூத்திரமுமாய் நுரைத்து நிற்கின்றன.

ஒரு கட்டத்தில் இவற்றையெல்லாம் விட்டு விட்டு லவ்பேர்ட்ஸ் வளர்க்க முடிவு செய்தோம். திருவிழா செலவுக்கு கிடைத்த காசுகளை நண்பர்கள் எல்லோரும் சேர்த்து வைத்தோம். மொத்தம் ஏழு ரூபாய் சேர்ந்திருந்தது. நாகர்கோவிலுக்குப் போய் லவ் பேர்ட்ஸ் விற்கும் கடையில் போய் விலை கேட்டோம். ஜோடி இருபது ரூபாய்க்குக் குறையாது என்று கடைக்காரன் சொல்லி விட்டான்.

“ஒரு குஞ்சாவது தாண்ணேன்” என்று கெஞ்சினோம்.

“குஞ்சும் இல்லை, கொட்டையும் இல்லை. போங்கல” என்று துரத்தி அனுப்பினான். சோகத்துடன் வீட்டுக்குத் திரும்பினோம். அப்போது குருவி பிடிக்கும் ஆசை மீண்டும் பீரிட்டு எழந்தது.

நண்பர்களில் ஒருவன் கொடுத்த ஐடியா நன்றாக வேலை செய்தது. வீட்டில் இருந்த பெரிய போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு கிணற்றாங்கரைக்கு சென்றோம். குருவிகள் குஞ்சுகளுக்கு இரை கொடுக்க உள்ளே போனதும் ஒடிப் போய் கிணற்றை போர்வையால் மூடினோம். குருவிகள் உள்ள மாட்டிக் கொண்டன. உள்ளே இறங்கி பிடித்தோம். அன்று மட்டும் சுமார் பத்து பதினைந்து பெரிய குருவிகளையும் அவற்றின் குஞ்சுகளையும் பிடித்து வந்தது நன்றாக நினைவிருக்கிறது.

ஏற்கெனவே செய்து வைத்திருந்த கூட்டில் எல்லா குருவிகளையும் குஞ்சுகளையும் போட்டு அடைத்தோம். குஞ்சுகளை வாழ வைப்பதற்காகவாவது பெற்றோர் குருவிகள் உயிருடன் இருக்கும் என்று நம்பினோம். சில நேரங்களில் நாங்கள் கொடுத்த நெல்லை பெரிய குருவிகள் சாப்பிட்டன. ஆனால் குஞ்சுகளுக்கு ஊட்டவே இல்லை. குடும்பம் குடும்பமாக குருவிகள் செத்து விழுந்ததன. ஒருமுறை ஒரு குருவியின் காலை கயிற்றால் கட்டி வைத்திருந்தேன். இலேசாக அழுத்தம் கொடுத்ததில் கால் முறிந்து அது நொண்டிக் கொண்டே கத்திக் கொண்டிருந்தது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் எனது மனக்கண்ணில் தோன்றி கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு வயதுக்குப் பிறகு குருவி பிடிக்கும் பழக்கம் நின்று விட்டது. சொல்லப் போனால் நாங்கள் எல்லோருமே குருவிகளின் பாதுகாவலனாக மாறத் தொடங்கினோம். அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குருவி பிடிக்க முனைந்த போது, பறவையிலாளர் சலீம் அலி ரேஞ்சுக்கு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். சிறுவயதில் சலீம் அலியும் குருவிகளைப் பிடித்து வறுத்துத் தின்றதாக தன்னுடைய சுயசரிதையில் (The fall of a Sparrow) எழுதியிருக்கிறார். தற்போது அந்த அறிவுரைக்குத் தேவையில்லாத சூழல் உருவாகி விட்டது. ஒட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாறி விட்டதால் குருவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டன. பஞ்சாயத்துக் குடிநீர் இணைப்புகள் தண்ணீரை வீட்டுக்குள் கொண்டு வந்ததும், கிணற்று நீருக்கு அவசியம் இல்லாமல் போனது. வாளியை வைத்து மாங்கு மாங்கு என்று யார் இறைத்துக் கொண்டிருப்பார்கள்? சில வீடுகளில் இக்கிணறுகள் கக்கூஸ் கிணறுகளாக உருமாற்றம் பெற்றன. எங்கள் ஊர் திருவாவடுதுறை மடத்துக்கு எதிரே இருந்த நந்தவனத்தில் உள்ள கிணற்றில் எண்ணற்றக் குருவிகள் கூடு கட்டியிருந்தன. இப்போது அந்த நந்தவனம் அழிந்து போய் அதில் மூன்று வீடுகள் நிற்கின்றன.

சென்னைக்கு பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக வந்த காலத்தில் இருந்தே ஒரே வீட்டில்தான் தங்கி வருகிறேன். அந்த வீடு மெட்ராஸ் ரூபிங் முறையில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் அந்த வீட்டில் ஏராளமான குருவிகள் கூடு கட்டியிருந்தன. வீட்டுக்குள்ளேயே குருவிகள் தாராளமாகப் புழங்கின. சின்னஞ்சிறிய இப்பறவை கரப்பான் பூச்சியை கபளீகரம் செய்வதைப் பார்த்தால் இதற்குள் இத்தனை இராட்சத குணம் ஒளிந்திருக்கிறதா என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதை விட மிகக்குரூரமாக இந்தக் குருவிகளை நான் துன்புறுத்தியிருக்கிறேன் என்று எண்ணுகையில் மன உளைச்சல் ஏற்படும். சில நேரங்களில் இக்குருவிகள் மின் விசிறியில் அடிபட்டு வதைத்துக் கொண்டிருப்பதைக் காண்கையில் கண்கள் குளமாகும். திடீரென இப்பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களால் இப்பறவைகள் பாதிப்படைந்துள்ளன என்று தெரிந்து கொண்டேன். குருவிகளைக் காக்க வேண்டும் என்று சில அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தங்கள் வீடுகளில் குருவிகள் கூடு கட்டியிருந்தால் அதைப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

எங்கள் வீட்டில் ஒரு டப்பாவை சுவரில் மாட்டி வைத்தேன். அதை ஒரு ஜோடி ஏற்றுக் கொண்டு கூடு கட்டியது. திணை, கேழ்வரகு, சாமை, அரிசி என்று மொட்டை மாடியில் கொட்டி வைத்தேன். பையப் பைய அவற்றின் எண்ணிக்கை அதிகமானது. வேறு எங்கிருந்தோ கூட குருவிகள் இரை தேடி எங்கள் வீட்டு மாடிக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. போன மாதம் பார்க்கும்போது அவற்றின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருந்தது. ஒரு குஞ்சு இப்போதுதான் கூட்டை விட்டு வெளியேறி பெற்றோருடன் உலகம் சுற்றப் புறப்பட்டிருக்கிறது. வாயைப் பிளந்து கொண்டே பெற்றோர் பின்னால் அலைகிறது. பெற்றோரும் தொடர்ந்து அதற்கு ஊட்டிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் எண்ணிய போது, 12 குருவிகள் காணப்பட்டன. மாலையில் தண்ணீர் தொட்டி நிரம்பி வழியும்போது குருவிக்கூட்டம் குற்றால அருவியில் குளிப்பது போல் போல் உற்சாகமாக நீராடியது. காணக் கண்கொள்ளாக் காட்சி. மனம் இளகி இலேசாகியது போல் இருந்தது. மொட்டை மாடி முழுவதும் புறாக்களும் குருவிகளும் தானியங்களைக் கொத்தித் தின்பதைத் தினமும் பார்க்கிறேன். அவற்றோடு சில அணில்களும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் நான் செய்த கொடுமைக்கு ஓரளவுக்குப் பிராயச் சித்தம் செய்து விட்டேன் என்றே தோன்றுகிறது. எனக்கு எதிரான கணக்குகளை சித்திரகுப்தன் குறைத்து எழுதி, நரகத்துக்கு செல்வதில் இருந்து விதிவிலக்கு அளிக்கலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

http://solvanam.com/?p=20120

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.