Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் எழுச்சியின் வடிவம்’ நூல் தமிழரின் வீர வரலாற்று ஆவணம்

Featured Replies

‘பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா 13.4.2012 அன்று சென்னையில் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்நூலை வெளியிட்டு, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.

வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழினும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோவியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களே,

விழுமிய தலைமை ஏற்று இருக்கின்ற உணர்ச்சிக் கவிஞர் ஆருயிர்ச் சகோதரர் காசி. ஆனந்தன் அவர்களே,

தியாகத் தழும்புகளைப் பெற்ற, பொது உடைமை இயக்கத்தினுடைய புகழ் வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான அன்புமிக்க அண்ணன் நல்லகண்ணு அவர்களே,

படைக்கலங்கள் பயிற்சிக் கூடங்களாகத் தமிழகத்திலே அமையட்டும்; ஒரு காட்டுப் பாதையில் தோட்டம் ஒன்றைத் தேர்ந்து எடுத்து, நாங்கள் அனுப்பி வைக்கின்ற இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று, நாம் நெஞ்சால் நேசித்துப் போற்றுகின்ற பிரபாகரன் அவர்கள், அண்ணன் நெடுமாறன் அவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, அதற்காக அவர் நேரடியாகச் சென்று தேர்ந்து எடுத்த இடங்களுள் ஒன்று, கொளத்தூரை அடுத்த புலியூர்; மற்றொன்று திண்டுக்கல் சிறுமலை. அந்தப் பயிற்சிக் கூடத்தையும் அமைத்துக் கொடுத்து, போர்க்களங்களில் உலவிய தோழர்களோடு களத்துக்கும் சென்று வந்த, இங்கே உரை ஆற்றிய ஆருயிர்ச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்களே,

பேரன்புக்குரிய சகோதரர் மணியரசன் அவர்களே, அன்புமிக்க பரந்தாமன் அவர்களே, தொகுத்துத் தந்த முனைவர் ஜெயராமன் அவர்களே, வரவேற்ற முத்தமிழ் மணி அவர்களே, நூலின் படிகளைப் பெற்றுக்கொண்ட அன்புக்குரிய கணக்காயர் பாலசுப்பிரமணியம் அவர்களே, மதுரா டிராவல்ஸ் பாலன் அவர்களே, சந்திரேசன் அவர்களே, திருச்சி சௌந்தரராசன் அவர்களே, உணர்ச்சி கொந்தளிக்கத் திரண்டு இருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, செய்தியாளர்களே, ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களே, எனது சிரந்தாழ்ந்த வணக்கம்.

வாழ்நாளில் பெறற்கரிய ஒரு பேற்றினை எனக்கு வழங்கிய அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன். அவரது அருமை மகள் பூங்குழலிக்கு, உன் அன்பு மாமா பிரபாகரன் என்று எழுதிய கடிதத்தை, 1207 பக்கங்கள் கொண்ட இந்த நூலிலே காணலாம். நான் திரும்பத்திரும்ப இந்த 1207 பக்கங்களையும் படித்து இருக்கின்றேன். தமிழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெருங்குறையை, இந்த நூல் போக்குகிறது.

மேதினி மெச்ச வாழ்ந்த தமிழர்களின் பழமையான வரலாற்றுக்குச் சரியான ஆவணங்கள் கிடையாது. சங்க இலக்கியங்கள் உண்டு; காவியங்கள் உண்டு; வீரம் மணக்கும் புறப்பொருள் வெண்பா மாலையும், புறநானூறும், பத்துப்பாட்டும் உண்டு. ஆனால், இந்தத் தரணியில் இவர்களுக்கு நிகராகச் சிறந்து எவரும் வாழ்ந்தது இல்லை என்ற பெருமையை நிலை நாட்டத்தக்க விதத்தில், ஆதாரங்களைக் காட்டக்கூடிய வகையில், சரியாக ஆவணப்படுத்தவில்லை தமிழன்.

ஆனால், இனி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் மேற்கோள் காட்டத்தக்கதாக இந்த நூல் தமிழர்களின் ஒரு வீர வரலாற்றுக்கு ஆவணமாகி இருக்கின்றது. (பலத்த கைதட்டல்). நான் பேச எழுந்ததற்கு முன்பு அண்ணன் நெடுமாறன் அவர்கள், நீங்கள் நெடுநேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்; நான் பேச இருப்பதாகக் கருதாதீர்கள்; ஐந்து பத்து மணித்துளிகளுக்குள் நன்றி மட்டும்தான் சொல்லப் போகிறேன் என்றார்.

வாழ்க்கையில் இதைவிடப் பெரிய வாய்ப்பாக நான் வேறெதையும் கருதப் போவது இல்லை. (கைதட்டல்)

இந்த நூலில் பல கேள்விகளுக்கு விடை இருக்கின்றது. நம்முடைய எதிரிகளின் விமர்சனங்களுக்குப் பதில் இருக்கின்றது. பல புதிர்கள் அவிழ்க்கப்பட்டு இருக்கின்றன.

1982 ஆம் ஆண்டு, சென்னை மத்தியச் சிறையில் பிரபாகரனைச் சந்தித்தபோது, இந்த வீர வாலிபன் பேபி சுப்பிரமணியத்தோடு தம் இல்லத்துக்கு வந்தவர்தானே என்று அவர் உணருகிறார். அங்கே தொடங்கி, இந்த நூலில் செய்திகள் வேகமாக வருகின்றன. நானும், இந்த நூலில் என்ன செய்திகள், இந்த நாளில், இந்த அரங்கத்தில் பதிவாக வேண்டுமோ, அவற்றை மட்டும், ஒரு பருந்துப் பார்வையில் சொல்ல விரும்புகிறேன்.

karunanidhi.jpg

ppp.jpg

1983 ஜூலை மாதம் இனக்கலவரம் நடக்கிறது. இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டின் தலைமை அமைச்சர். நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், ஆகஸ்ட் திங்கள் 16 ஆம் நாள், ‘இலங்கைத் தீவில் நடப்பது இனப்படுகொலை’ என்று தம்முடைய கருத்தைப் பதிவு செய்தார். ஆனால், இந்த ஆண்டில் அண்மையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டபோது, அந்தச் சொல், நாடாளுமன்றக் குறிப்பு ஏட்டில் இருந்து அகற்றப்பட்டது.

அடப் பைத்தியக்காரர்களே, 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தி சொன்னாரே, அந்த ஆவணத்தைக் கொளுத்தப் போகின்றீர்களா? (பலத்த கைதட்டல்). தமிழகம் எரிமலையாகக் காட்சி அளித்தது. நேற்று முன்தினம் நில அதிர்வு ஏற்பட்டபோது மக்கள் எப்படிப் பதற்றம் அடைந்தார்களோ அதைப்போல, பூகம்பம் விளைந்தாற்போலத் தமிழர் மனங்கள் நடுங்கின.

அப்போது, நான் இந்த வங்கக் கடல் கடந்து செல்வேன்; இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவோம் என்று அண்ணன் நெடுமாறன் அவர்கள் தமிழர் தியாகப் பயணம் புறப்பட்டு விட்டார். மதுரையில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கிலே மக்கள் திரளுகின்றார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், அன்றைய முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சர்களும் வந்து, ‘பயணத்தை நிறுத்தலாமா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் இசைவு அளிக்கவில்லை.

இராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. அதையும் மீறி ஒரு படகில் ஏறிப் புறப்பட்டபோது, கடலில் கைது செய்யப்பட்டு, கரைக்குக் கொண்டு வரப்பட்டு, விடுவிக்கப்படுகிறார். இது, ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

நவம்பரில் சட்டமன்றம் கூடுகிறது. 15 ஆம் தேதி இந்தப் பிரச்சினை விவாதத்துக்கு வருகிறது. படகுகள் அப்புறப்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு வருகிறது. அப்போது, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பேசுகிறார்: இராமேஸ்வரத்தில் படகுகளை அப்புறப்படுத்தியதாக, இந்த மன்றத்தில் விமர்சனங்களை முன்வைத்தார்கள். நான் கேட்கிறேன்: ஒரு நெடுமாறனை இழந்துவிட்டால், இன்னொரு நெடுமாறனை நாம் பெற முடியுமா? அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அவர் மீது குண்டுகள் பாயுமானால், அதைத் தடுப்பதற்கு அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிகள் இருக்கின்றதா? துணிச்சல் உள்ள மனம் மட்டும்தான் இருக்கிறது.

நான் பிரச்சாரம் செய்ய முடியாது; அவர் பிரச்சாரம் செய்கிறார். அவரை நாம் பாதுகாக்க வேண்டாமா? நான் செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். மக்கள் திரளுகிறார்கள்; ஏடுகளிலே செய்திகள் வருகின்றன என்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பேசினார்.

அந்த நாளிலேயே அண்ணன் நெடுமாறன் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். அதேநாளில், அதே அளவுக்குத் தீவிரம் இல்லாத ஒரு தீர்மானத்தை, அண்ணா தி.மு.க. அரசு கொண்டு வருகிறது. உடனே, அண்ணன் நெடுமாறன் அவர்கள், என்னுடைய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்; உங்கள் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படட்டும் என்கிறார்.

வேண்டாம்; உங்கள் தீர்மானமும் இருக்கட்டும். அதை நீங்கள் திரும்பப் பெற வேண்டாம். அந்தத் தீர்மானத்தின் மீது, நீங்கள் என்ன பேச விரும்புகின்றீர்களோ, அதைப் பேசுங்கள். அதை வாக்குப்பதிவுக்கு விட வேண்டாம். ஆனால், நீங்கள் பேச வேண்டியதைப் பேசுங்கள் என்று தெரிவித்து விட்டு, அரசு கொண்டு வந்த, ஆளுங்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தின்போது முதல் அமைச்சர் பேசும்போது சொல்லுகிறார்; இங்கே நெடுமாறன் அவர்கள் பேசியதுதான், ஐந்தரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வு என்பதை, இந்தச் சட்டமன்றத்திலே பதிவு செய்கிறோம் என்று சொன்னார். (பலத்த கைதட்டல்).

இதற்குப்பிறகு, ஈழத்தில் இருந்து வந்த அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு ஆகிறது. சகோதர யுத்தம் என்ற விமர்சனத்தைச் சில பேர் இப்போது சொல்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து போராட முடியவில்லையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

1985 இல், திம்பு பேச்சுவார்த்தை. 1984 ஆம் ஆண்டு, டெலோ, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப் ஆகிய இயக்கங்கள் சேர்ந்து, ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைத்தார்கள்.

1985 ஆம் ஆண்டு, அந்த அமைப்பில், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளையும், பிரபாகரன் அவர்களையும் இடம் பெறச் செய்தார். திம்பு பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகிச் செல்கிறபோதுதான், இந்திய அரசின் ரா உளவு அமைப்பின் தலைவரான சக்சேனா, நாங்கள் முன்வைப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தார் என்ற செய்தி, இந்த நூலில் வருகிறது.

1985 ஜூலை 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, திம்புவில் முதல்சுற்றுப் பேச்சுவார்த்தை. ஆகஸ்ட்டில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை. ஜெயவர்த்தனாவின் சகோதரர், ஹெக்டர் ஜெயவர்த்தனா, சிறந்த வழக்குரைஞர், இலங்கை அரசின் சார்பில் பங்கு ஏற்கிறார். நான்கு தமிழ் அமைப்புகளின் பிரநிதிகளும் சென்றார்கள்.

அப்போது, இலங்கையில் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்; ஈழம் என்பது தமிழர்களின் பூர்வீகத் தாயகம்; தமிழ் தேசிய இனத்திற்கு எவராலும் பறிக்கப்படாத சுய நிர்ணய உரிமை; அனைத்து மக்களுக்கும் உரிமைகள்: என்ற இந்த நான்கு கோட்பாடுகளை இவர்கள் முன்வைத்தபோது, அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும், இந்த நூலில் அண்ணன் நெடுமாறன் விவரிக்கின்றார்.

1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அதனால், ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தையும், இரங்கல் அஞ்சலி செலுத்தச் சென்ற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியையும், கவிஞர் அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள்.

அதற்குப் பிறகு, ராஜீவ் காந்தி அவர்கள் தலைமை அமைச்சர் ஆனார்கள். பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போது கொடுக்கப்பட்ட நிர்பந்தங்கள், புலிகளிடம் இருந்து தொலைத்தொடர்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்று உள்ளன.

கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாக்க முயற்சிக்கின்றார் ஜெயவர்த்தனா; ஒருபோதும் அதற்கு உடன்பட முடியாது என்பதை எம்.ஜி.ஆரிடம் பிரபாகரன் தெளிவாகச் சொன்னார். இனி ஆயுதப் போர்தான் ஒரே வழி என்று முடிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி, இனி இளைய தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று தந்தை செல்வா அறிவித்ததற்குப்பிறகு, தங்கள் தாயக விடுதலைக்கு இனி ஆயுதப் போராட்டம்தான் வழி என்று அவர்கள் நடத்திக்கொண்டு இருக்கின்ற காலகட்டத்தில், அவர்களுக்குத் தேவைப்பட்ட நிதியை அள்ளித் தந்தார் எம்.ஜி.ஆர் என்கின்ற செய்தியைத் தருகிறார் அண்ணன் நெடுமாறன்.

மதுரையில் தம்முடைய இல்லத்தில் பிரபாகரன் தங்கி இருந்தது, அப்போது மதுரையில் நடைபெற்ற சம்பவங்கள் என அத்தனைச் செய்திகளையும் விவரித்து இருக்கின்றார். அதற்குப்பிறகு அவர் ஈழம் செல்லும்போது, கடலிலே போகும்போதுதான் பிரச்சினைகள் வரக்கூடும்; நான் கரை சேர்ந்து விட்டால் எந்த ஆபத்தும் வராது என்று சொல்லிவிட்டுப் போகிறார். இனி, இந்திய மண்ணுக்கு வருவது இல்லை என்று முடிவு எடுத்துச் செல்லுகிறார்.

மதுரையில், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் டெசோ மாநாடு நடைபெறுகிறது. அக்காலகட்டத்தில் டெலோ இயக்கத்தைச் சார்ந்தவர்களைச் சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான லிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் பல கொடிய சம்பவங்களும் நடைபெற்றன. பிற இயக்கத்தவர்கள் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டபோது, எதிர்ப்புரட்சியாளர்களை, கலகக்காரர்களை அடக்குகின்ற முறையில், உலகில் எல்லாப்புரட்சிகளின்போதும் நடைபெற்றதைப் போன்ற சம்பவங்கள் அங்கே நடைபெற்றன.

அதற்குப்பிறகு, விடுதலைப்புலிகளை ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று, இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் பூரி அங்கே போய்ச் சொல்லி, மேதகு பிரபாகரன் அவர்களை அங்கே இருந்து அழைத்துக்கொண்டு வந்து, தில்லி அசோகா ஓட்டலில், எவரும் சந்திக்க முடியாத வகையில் சிறை வைக்கப்பட்டதைப் போல அடைக்கப்பட்டு இருந்தார். அந்தச் சம்பவங்களை, பாலசிங்கத்தின் வாயிலாகவே இங்கே குறிப்பிடுகிறார்.

இந்த சுங்கானின் புகை அணைவதற்குள்ளாகவே உங்களை ஒழித்துக் கட்டி விடுவோம் என்றார் தீட்சித். இரண்டாயிரம் பொடியன்கள்தானே? அரை மணி நேரத்துக்குள் என் காலடியில் கிடப்பார்கள் என்றார் அன்றைய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி. ஒப்பந்தத்தைத் திணித்தார்கள்.

ஜூலை மாதம் 29 ஆம் தேதி, ராஜீவ் காந்தி கொழும்புக்குச் சென்று, ஜெயவர்த்தனாவோடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டுத் திரும்பியபோது, துப்பாக்கியால் அவர் மீது தாக்கிய ரோஹண விஜயமுனி, அதே நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றான் என்ற செய்தியும், ராஜீவ் காந்தியின் உயிரைக் குடிக்க முயன்றவனுக்கு அந்த நாடு மகுடம் சூட்ட முயன்ற செய்தியும், இந்த நூலில் வெளியிடப்பட்டு இருக்கின்றது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி, சுதுமலையில், பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை நான் நினைவூட்டுகிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை.

சுதுமலையில் பேசுகிறபோது பிரபாகரன் சொன்னார்:

“நமது போராட்டத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது. ஒரு வல்லரசு, நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து, நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லி விட்டார்கள்.

எங்கள் கருத்தைக் கேட்காமல், மக்கள் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கப்பட்டது. அதற்கு எங்கள் எதிர்ப்பை முழுமையாகத் தெரிவித்தோம். இனி, எம் மக்களைக் காப்பாற்றுகின்ற பொறுப்பை, இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்திய அரசை எதிர்த்து ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய வீரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நாங்கள் விரும்பவில்லை. சிங்கள இனவாத பூதம், இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் என்று சுதுமலையில் பிரபாகரன் பேசினார்.

ஜெயவர்த்தனா சொல்லுகிறார்: நான் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்து விட்டேன்; இந்த நாட்டுக்கு உள்ளே இந்திய இராணுவத்தை நுழைய அனுமதித்து விட்டேன் என்று என்னுடைய அமைச்சர்கள் சிலரும், எதிர்க்கட்சிக்காரர்களும் என்னைக் கடுமையாக விமர்சித்தார்கள். இப்பொழுது ஒரு உண்மை புரிந்து விட்டதா? இப்போது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள்; இந்திய இராணுவ வீரர்களும், விடுதலைப் புலிகளும் களத்திலே மோதிக்கொண்டு இருக்கின்றார்கள்; புரிந்ததா சூட்சுமம்? நான் எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்று ஜெயவர்த்தனா கூறியதையும், இங்கே பதிவு செய்கிறார்.

1987 செப்டெம்பர் 15. அன்று இரவில், இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்குக்கு ஒரு தகவல் வருகின்றது. தீட்சித் பேசுகிறார். உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாரா? என்று கேட்கிறார். ஆம்; மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது என்கிறார் ஹர்கிரத் சிங். அவரைச் சுட்டுக் கொன்று விடுங்கள், டில்லியின் உத்தரவு என்றார் தீட்சித்.

அப்படியொரு துரோகத்தை, இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று ஹர்கிரத் சிங் பதில் சொல்லுகிறார்.

அதற்குப்பிறகு, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் உண்ணா நிலை அறப்போர் தொடங்குகிறார். அண்ணன் நெடுமாறன், செப்டெம்பர் 22 ஆம் தேதி இங்கே இருந்து புறப்பட்டு, அங்கே நெடுந்தீவுக்குப் போய்ச் சேருகிறார். பிரபாகரனைச் சந்திக்கிறார்; மறுநாள், திலீபனைப் போய்ப் பார்க்கிறார். அவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கின்றது, மரணத்தின் விளிம்பில் இருக்கின்றார்.

தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பில் உங்களுக்கு என் மரியாதையைத் தெரிவிக்க வந்து இருக்கிறேன், எங்கள் அன்பைச் செலுத்த வந்து இருக்கிறேன் என்கிறார். தலைவரை இறுக்கமாக இருக்கச் செல்லுங்கள். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும்; என்று திலீபனின் உதடுகள் அசைகின்றன. செப்டெம்பர் 26 ஆம் தேதி, திலீபன் மறைந்தார். அந்த உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தை எட்டிப் பார்க்கவில்லை தீட்சித்.

திலீபனின் மரணத்தைத் தடுத்து இருக்க முடியும். ஆனால், துளிநீரும் பருகாமல், கணைக்கால் இரும்பொறை போல் மடிந்தான்; திலீபன் இலட்சியத்துக்காகத் தன்னை அழித்துக் கொண்டான். அக்டோபர் 3 ஆம் தேதி புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 தளபதிகள், சிங்களக் கடற்படையால் கடலில் மடக்கிக் கைது செய்யப்பட்டனர். பலாலி விமானதளத்தில் கொண்டு போய் அவர்களை அடைத்து வைத்தார்கள். இந்திய இராணுவம், கட்டுக்காவல் போட்டது.

பின்னர் டெல்லி உத்தரவின்பேரில், இந்திய இராணுவம் அந்தக் கட்டுக்காவலை விலக்கிக் கொண்டது. இந்திய-இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். இந்திய அரசின் துரோகத்தால், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப்படை தளகர்த்தர்கள், சயனைடு குப்பிகளைக் கடித்து மடிந்தார்கள்.

புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட தளபதிகள் நச்சுக் குப்பிகளைக் கடித்து இறந்து போனார்கள். அதற்குப்பிறகு உயிரோடு பிடித்தாலும் சரி; பிரபாகரன் உயிரை முடித்தாலும் சரி என்று, அதிரடிப் படைகள், கமாண்டோக்கள், இலங்கு வானூர்திகளிலே கொண்டு வந்து இறக்கப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளே, நூற்றுக்கணக்கான கமாண்டோக்களைக் கொண்டு வந்து குவித்தார்கள். அது பிரபாகரனுக்குத் தெரிந்தது. அக்டோபர் 12 ஆம் தேதி. புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து வந்தன; இந்திய கமாண்டோக்கள் ஒருவர் கூட மிஞ்சவில்லை. நிலவின் வெளிச்சத்திலே நெருப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் பிரபாகரன்; சுற்றிலும் தாக்குதல் நடக்கிறது.

தன் தோளில் ஆயுதங்களைத் தாங்கியவாறு, தானே களத்தில் போர் நடத்திய வாறு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டு இருக்கிறார்; களத்தை அவரே இயக்கிக் கொண்டு இருக்கிறார்; இந்தக் காட்சி கண்ணிலேபட்டபோது, என் மனதிலே தோன்றியதெல்லாம், மகாபாரதத்தின் 13 ஆம் போர்ச்சருக்கம்தான் என்றார் காசி ஆனந்தன். பத்ம வியூகத்துக்கு உள்ளே அபிமன்யு நுழைந்தபோது, நாலாபுறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துகொண்டு தாக்குவதைப்போல, அதை எதிர்த்து அபிமன்யு போராடுவதைப்போல, நான் பிரபாகரனைப் பார்த்தேன்.

ஒரேயொரு வித்தியாசம்; அபிமன்யு வியூகத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டு மடிந்தான்; ஆனால், பிரபாகரன் எதிரிகளின் வியூகத்தை உடைத்து வெளியேறினார் (பலத்த கைதட்டல் ஆரவாரம்).

வெறும் வார்த்தைக்காக, பாராட்டுவதற்காக அல்ல. எந்த நாட்டின் உதவியும் இன்றி, அவர்களே ஆயுதங்களை வடித்தார்கள் என்று மணி சொன்னாரே, ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணப் பெயர் உண்டு. பிரபாகரனைச் சந்தித்து விட்டு வாருங்கள் என்று சென்னையில் இருந்து இந்திய உளவுப்பிரிவு அமைப்பினர் ஜானியை அனுப்பி வைத்தனர். வழியில் இந்தியப் படை மறித்தால், நான் இந்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டவன் என்று சொன்னால் போதும் என்று தெரிவித்தார்கள். அதன்படி, அவர் காட்டுக்கு உள்ளே சென்று பிரபாகரனைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, அவருடன் புலிகளும் வந்தார்கள். வழிமறித்தது இந்திய இராணுவம்.

நான்தான் ஜானி; இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட தூதன் என்று சொன்னார். கிட்டுவைப் போல யாழ்ப்பாணத்தின் தளபதியாக இருந்தவர் ஜானி. நெற்றியில் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைத்து, மருத்துவ உலகத்தை வியக்க வைத்தவர்.

அவர், நான்தான் ஜானி என்று சொன்னபோது, உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும், இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டுகள் சல்லடைக் கண்களாக அவரது உடலைத் துளைத்துப் போட்டன. உடன் வந்த புலிகள் சுடப்படவில்லை. அதற்குப்பிறகு, காட்டுச் சுள்ளிகளைப் பொறுக்கி ஜானியின் உடலைச் சுட்டு எரித்துவிட்டுப் போனார்கள்.

அந்த ஜானியின் பெயரில்தான் ஒரு கண்ணி வெடியைத் தயாரிக்கச் சொன்னார் தம்பி. (பலத்த கைதட்டல்). அந்தக் கண்ணி வெடியில் சிக்கிக் கால்களை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்கள் ஏராளம். எறிகுண்டுகள், கணைகளைத் தயாரிக்கச் சொன்னார். அந்தக் காலகட்டத்தில், வெறும் 28 பேர்களோடு காட்டுக்கு உள்ளே சென்றார். அன்பு என்ற ஒரு தம்பி. தமிழ்நாட்டுப் பொறுப்பாளராக சென்னையில் இருந்தவர்.

அவர் சொல்லுவார்: நல்லா வயிறு நெறயச் சாப்பிட்டுச் சண்டை போட்டுச் சாகலாமே? நாம் 28 பேர்கள்தாம் இருக்கின்றோம். நம்மைச் சுற்றி இலட்சம் பேர் வளைத்து நிற்கிறார்கள். தலைவரும் சாப்பிடுவது இல்லை. ஒரு நாளைக்கு உப்பில்லாத ஒரு டம்ளர் கஞ்சிதான். ஆனால், கண்ணி வெடிகளைத் தயாரிப்பதற்கான பொருள்களைத் தலைச்சுமையாகக் கொண்டு வரச் சொல்லுகிறாரே என்று நான் நினைத்தேன். ஆனால், அதற்குப்பிறகுதான், இவன்தான் எங்கள் தலைவன் என்று நாங்கள் உணர்ந்தோம். (கைதட்டல்).

இலட்சத்துக்கும் மேற்பட்ட படைகள் குவிக்கப்பட்டு இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கு எட்டுக் கடிதங்களை எழுதினார் பிரபாகரன். சமாதானத்துக்கான கதவுகளைத் திறக்க மாட்டீர்களா? போரை நிறுத்த மாட்டீர்களா? என்று கேட்டார். ஆனால், அவர்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு, ஆபரேசன் செக்மேட் என்ற தாக்குதலை நடத்தினார்கள். இது ஒரு கட்டம்.

அதன்பிறகு, இந்தியாவில் ஆட்சி மாறுகிறது. வி.பி.சிங் பொறுப்பு ஏற்கிறார். அங்கே பிரேமதாசா, இந்தியப் படைகள் வெளியேறட்டும் என்று குரல் கொடுக்கிறார். ராஜதந்திரத்தில் காய்களை மிகத் திறமையாக நகர்த்துகிறார் பிரபாகரன். சூழ்ச்சி நிறைந்ததுதானே அரசியல்? சுயநலத்துக்காக அல்ல; ஒரு இனத்தைக் காப்பதற்காக, தன்னலத்துக்காக அல்லது யாரோ ஒரு குடும்பம் வாழ்வதற்காக அல்ல; தன் தாயக விடுதலை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, பிரபாகரன் காய்களை நகர்த்தினார்.

இதற்குப் பிறகு, எந்த யாழ் கோட்டை 400 ஆண்டுகளாக டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் அடுத்து வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்திய கோட்டை, அடுத்துச் சிங்களவன் பிடியில் இருந்த அந்த யாழ் கோட்டையை எப்படிக் கைப்பற்றினார்கள்? அண்ணனிடம் கேட்டேன்; எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது; யுத்தகளக் காட்சிகளை நீங்கள் எப்படி எழுதினீர்கள்? என்று.

அதை நிறைய எழுதி விட்டேனோ? என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை; இந்த நூலுக்கு உயிர்நாடியே அதுதானே? இது ஒரு வீர காவியம். இதிகாசம் அல்ல. இந்த வீர காவியத்தை, ஒவ்வொருவரும் எடுத்து எழுதுங்கள். ஹோமர், இலியட் என்ற காவியத்தை இதிகாசமாகத்தான் எழுதி இருக்கிறான். டிராய் யுத்தத்தை. அது ஒரு கிரேக்கப் புராணம்.

அதைப்போலத்தான், இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள், விரும்பி ஏற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இதிகாசங்கள், இராமாயணமாக இருக்கட்டும், மகாபாரதமாக இருக்கட்டும் அங்கே நடந்த யுத்தத்தைக் கம்பன் வருணிப்பதாக இருக்கட்டும், அதைப்போல மகாபாரதத்தில் 18 நாள்கள் நடந்த குருசேத்திரப் போர்க்களத்தை வில்லிபுத்தூரார் அருமையான கவிதைகளாக ஆக்கித் தந்து இருக்கிறார்; இவை எல்லாமே இதிகாசங்கள்தாம்.

ஆனால், உண்மையில் நடைபெற்ற ஒரு போரை வைத்து ஒரு கவிஞன் எழுதுவது என்பது, குலோத்துங்கச் சோழனுடைய படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் ஒரு யுத்தத்தை நடத்தியதைப் பற்றி, கலிங்கத்துப் பரணி என்ற தலைப்பில் ஜெயங்கொண்டார் எழுதினார். அதில்கூட, மெல்லிய காதல் உணர்வுகளைத் தூண்டுகின்ற கடைத்திறப்பு உண்டு; நான் அதற்கு உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆயினும்கூட, யுத்தகளத்திலே தமிழர்கள் சாதித்தார்கள் என்பதற்காக, ஜெயங்கொண்டார் அந்தப் பரணியைப் பாடி இருக்கிறார்.

எழுந்தது சேனை எழலும்

இரிந்தது பாரின் முதுகு

விழுந்தது கானும் மலையும்

வெறுந்தரையான நதிகள்

அதிர்ந்தன நாலு திசைகள்

அடங்கின ஏழு கடல்கள்

பிதிர்ந்தன மூரி மலைகள்

பிறந்தது தூளிப் படலம்

என அதை ஒரு காவியமாக எழுதி இருக்கிறார்.

அண்ணன் நெடுமாறன் அவர்களே, நீங்கள் தீட்டி இருக்கின்ற இந்த நூலின் பல்வேறு அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும், காசி ஆனந்தனைப் போன்றவர்கள், அறிவுமதியைப் போன்றவர்கள், அத்தகைய உணர்ச்சி உள்ள கவிஞர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காவியமாகத் தீட்டட்டும்; இது கற்பனையும் அல்ல, இதிகாசமும் அல்ல, தமிழர்களின் இரத்தத்தால் தீட்டியது. (பலத்த கைதட்டல்). ஆயுதங்களால் தீட்டியது.

அந்த அடிப்படையில்தான், யாழ் கோட்டைப் போரைப் பற்றி நீங்கள் விவரித்து இருக்கின்றீர்கள். நீங்கள் பயிற்சி பெற்று, இராணுவத்தின் ஒரு படைப்பிரிவில் இருந்து போராடியதைப் போல, எப்படி இவ்வளவு நுணுக்கமாகச் செய்திகளை தந்து இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தேன்.

1990 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில், யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் புறப்படுகிறார்கள். இரவிலே போகிறார்கள். எறிகுண்டுகள் போய் விழுகின்றன.

கோட்டைக்கு உள்ளே எண்ணற்ற சிங்கள வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய படை அணிகள், ஆங்காங்கு இருக்கின்றன. அந்தப் படை அணிகளைத் தகர்த்து விடுவது என்று அவர்கள் திட்டமிட்டுக் குண்டுகளை வீசுகிறபொழுது, உள்ளே இருந்து அவர்கள் பதிலுக்குக் குண்டுகளை வீசுகிறார்கள். முற்றுகைக்காகச் செல்லுகிறபொழுது, புல்டோசர்களையும், பெரும் பாரந் தூக்கிகளையும் கொண்டு போய் நிறுத்தி, அதிலே இருந்து தாவி விடலாம் என்று போகிறார்கள்.

முதல் பாரந்தூக்கி ஒரு பெரும் பள்ளத்திலே விழுந்து, செயல் இழந்து போய்விடுகிறது. அதைவிடப் பிரமாண்டமான பாரந்தூக்கி அதை ஒதுக்கி விட்டு முன்னேறுகிறது. ஏற்கனவே பீரங்கிக் குண்டுகள் விழுந்து உருவான ஒரு பெரும் பள்ளத்துக்குள் அந்தப் பாரந்தூக்கியும் விழுந்து விடுகிறது. எனவே, புலிகள் வகுத்த திட்டப்படி, பாரந்தூக்கிகளைக் கோட்டைக்குப் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்த முடியவில்லை.

www.velupillai-prabhakaran.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.