Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பௌத்த நாடாக்க அரசு முயற்சி, மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் சுரேஷ் (ஒலி இணைப்பு)

Featured Replies

"அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இலங்கையும் ஒரு சிங்கள பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அதனால்தான் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இடிக்கப்படுகின்றன. இராணுவம் பொலிஸ் துணையுடன் பௌத்த சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் புத்தர்கோயில்கள் நிர்மாணிக்கப்படுகின்றன" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கின்ற போதிலும் அவர்கள் பேச்சுக்களுக்கு வருவதற்கு மறுக்கின்றார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தந்தை செல்வாவின் 35 ஆவது நினைவு தினம் நேற்று சனிக்கிழமையன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றினார். அவரது உரையின் விபரம் வருமாறு:

"தென்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிலிருந்து பிரிந்து சென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் தென்பகுதியின் அரசியல்கட்சிகளாகத் திகழ்ந்தன. அதே போன்று வடக்கு-கிழக்கில் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அன்று தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பலம்பொருந்திய கட்சிகளாக விளங்கின. அன்றைய காலக்கட்டத்தில் அவர்களுடைய போராட்டங்களில் தமிழ் மக்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதை நிலைநாட்டுவதில் தந்தை செல்வாவிற்கும் இலங்கைத் தமழரசுக் கட்சிக்கும் ஒரு தனித்துவம் இருக்கின்றது.

அந்த வகையில்தான் பல இடங்களில் நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம், தந்தை செல்வா என்ன சொன்னாரென்றால் இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு நான் பலமுயற்சிகள் செய்தேன். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துவிட்டன. இலங்கை அரசாங்கம் அது சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தால் என்ன தமிழ் மக்களை இணைத்து ஆள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.

1956 இல் ஒப்பந்தம் செய்தோம் அதனைக் கிழித்தெறிந்தார்கள். 65 இலும் அப்படித்தான் நடந்தது. 72 இல் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தோம் அதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1978 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டுவந்த அரசியல் சாசனத்திலும்கூட தமிழ் மக்களினதும் தமிழ்ப் பிரதிநிதிகளினது கருத்துக் கேட்கப்படவில்லை.

மொத்தத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்வதற்குச் சிங்கள மக்கள் ஒருபொழுதும் வரவில்லை என்பதை தந்தை செல்வா மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.ஆகவே எமக்குரிய ஒரேயொரு மாற்றுவழி இழந்துபோன எமது இறைமையை மீளஸ்தாபிப்பதுதான் என்றும் தந்தை செல்வா அன்று கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்தத் தீரமானத்திற்குப் பின்னர், நடைபெற்ற மிக நீண்ட போராட்டத்தை நீங்கள் நன்கறிவீர்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய ஓராண்டின் பின்னர் அவர் காலமாகிவிட்டார். அந்தத் தீர்மானம் அன்றைய இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டபோது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவர்கள் தமிழ் இளைஞர்கள். போராட்டத்திற்கு முன்பு இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் இருந்தன.

ஆனால் போராட்டம் ஆரம்பமானபோது பல இயக்கங்கள் தோன்றின. 1976, 77, 81 மற்றும் 1983 போன்ற பல்வேறு காலகட்டங்களில் எமது மக்கள் தென்பகுதியிலிருந்து கப்பலில் அடித்து விரட்டப்பட்டார்கள். அவ்வாறு கொழும்பிலிருந்து வந்தவர்கள் அனைவரும் நாங்கள் மீண்டும் கொழும்புக்குச் செல்லமுடியாது என்று தெரிவித்தனர். அவர்கள் உயிருடன் எண்ணெய் ஊற்றிக் கொளுத்தப்பட்டார்கள், அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வீதிகளிலே வாளால் வெட்டினார்கள் இவ்வளவு கொடுமையும் அந்த நாட்களில் நடந்ததை யாரும் மறக்க முடியாது. இவையெல்லாம் இலங்கையில்தான் நடந்தது. இது எமது கடந்தகால வரலாறு;. நாங்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமாக இருந்தால், நாங்கள் தமிழர்களாக இருக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொன்னார்கள்.

தந்தை செல்வா தனது இறுதி நாட்களில் தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஏனெனில் அவரால் முடியவில்லை. முயற்சிகளுக்கு மேல் முயற்சி செய்து பார்த்தார். அறவழிப் போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போன்ற பலவழிகளிலும் முயன்று பார்த்தார் முடியவில்லை. அதனால்தான் இனி தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர்தான் இயக்கங்கள் தோன்றின.

அரசாங்கம் எமது போராட்டங்களை வன்முறைகொண்டு அடக்கியபொழுது, அந்த நேரத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரிகேடியர் விஜயவீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி ஆறுமாதத்தில் பயங்கரவாதத்தை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார். யாழ்ப்பாணத்தின் வீதிகளில் யாரையும் சுட்டு வீழ்த்தலாம் அதற்கு எத்தகைய தண்டனையும் இல்லை யாரும் கேள்வி கேட்க முடியாது. என்னும் அரசியல் சட்டத் திருத்தத்துடன் அந்த பிரிகேடியர் தமது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால் ஆறு மாதம் அல்ல முப்பந்தைந்து வருடம் அந்தப் போராட்டம் நீண்டது. இலட்சக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள். பல இலட்சம் மக்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். பல்லாயிரம்பேர் தற்கொலைப் போராளிகளானார்கள். இவையெல்லாம் நடந்தது. அப்படியான இயக்கத்தில் இருந்த பலபேர் இன்று இந்த நிகழ்வில் இந்த மேடையில் இருக்கின்றார்கள். ரெலோ இருக்கின்றது, புளொட் இருக்கின்றது, ஈ.பி.ஆர்.எல்.எவ் இருக்கின்றது விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற போதிலும் அவர்கள் இருந்த இடங்களில் வசித்துவந்த பலபேர் இருக்கின்றார்கள்.

இவைகள் எல்லாம் தோன்றுவதற்கு யார் காரணம்? இது எப்படித் தோன்றியது? தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தந்தை செல்வாவின் காலத்தில் தீர்க்கப்பட்டிருக்குமாக இருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆனால் சிங்களத் தலைமை இவ்வளவு அழுத்தங்களின் பின்னர் இன்னமும்கூட யோசிக்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்கத் தேவையில்லை அவர்களது பகுதியில் அபிவிருத்தி செய்தால் போதும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அதாவது வீதிகள் போட்டால்போதும், மின்சாரம் வழங்கினால் போதும் இனப்பிரச்சினை தீரந்துவிடும் என்று யோசிக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் மாத்திரமல்ல உங்களுக்குத் தெரியும் நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக தம்புள்ளையில் என்ன நடந்தது? அறுபது வருடம் பழமைமிக்க ஒரு பள்ளி வாசலை அகற்ற வேண்டும் என பௌத்தபிக்குகள் கோரினார்கள். ஒருவாரத்திற்கு முன்பே கூறினார்கள் அது புனிதப் பிரதேசம் அங்கு பள்ளிவாசல் இருக்க முடியாது என்று கூறினார்கள். அப்படிக் கூறியபோதிலும் அரசாங்கம் அதனை நிறுத்துவதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. இராணுவம் பொலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு இராணுவம் பொலிஸ் துணையுடன் பள்ளிவாசல் இடிக்கப்படுகிறது. ஏனெனில் அது பௌத்த தர்மம். புனிதப் பிரதேசத்தில் பள்ளி வாசல் இருக்கக்கூடாது, இந்துக்கோயில் இருக்கக்கூடாது.

ஆனால் வடக்கில் ஏ9 வீதியின் நெடுகிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிழக்கில் அனைத்து இடங்களிலும் இராணுவம் மற்றம் பொலிஸ் துணையுடன் புத்த கோயில்கள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு அரச மரத்தின்கீழும் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இராணுவம் கையில் ஆயுதத்துடன் திரிகின்றது. யாராவது அதற்கு எதிராகப் போராட முற்பட்டால் அடிக்கப்படுவார்கள், நொருக்கப்படுவார்கள் அல்லது சுட்டுத்தள்ளப்படுவார்கள். யார் பயங்கரவாதத்தைத் ஊக்குவிக்கின்றார்கள்? இந்நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டு குலைக்கின்றது? சீரழிக்கின்றது? அரசாங்கம் எத்தகைய சூழ்நிலையை உருவாக்குகின்றது?

யுத்தத்திற்குப் பின்னர் அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்னும் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு பல தீர்மானங்களைக் கொடுத்தது. அவற்றை நடைமுறைப்படுத்தும்படி இன்று உலகநாடுகள் கேட்கின்றன. நீங்கள் நியமித்த குழுவால் முன்னுரைக்கப்பட்ட அந்தத் தீர்மானங்களை நீங்கள் நிறைவேற்றுங்கள் என்று சர்வதேச சமூகம் தெளிவாகக் கூறியிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் என்ன சொல்கிறது? அது செய்ய முடியாது. அப்படியானால் அதற்கு ஏன் குழுவை நியமிக்க வேண்டும்? இரண்டு ஆண்டுகள் அதற்கு ஏன் காசு செலவு செய்ய வேண்டும்? பின்னர் ஏன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று சொல்ல வேண்டும்? யாரை ஏமாற்றுவதற்காக இந்தச் செயற்பாடு?

இந்தியப் பிரதமரிடம் பேசுகின்ற பொழுது பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைக் கொடுத்து இனப்பிரச்சிiயைத் தீர்ப்போம் என்று கூறினார். இங்கு வந்ததன் பின்னர் நான் அவ்வாறு கூறவில்லை என்று சொன்னார்கள். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இங்குவந்திருந்தார். அப்பொழுது அவரிடமும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று ஜனாதிபதி கூறினார். இதனை நான் பத்திரிகைகளுக்குச் சொல்ல முடியுமா என்று கேட்டார். தாராளமாகச் சொல்லுங்கள் என்றார்.

யாழில் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி எங்களுக்கு பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று உறுதியளித்திருக்கிறார் என்று கூறினார். ஆனால் கொழும்பில் ஜனாதிபதி நான் அப்படி எதுவும் கூறவில்லை என்று கூறினார். அண்மையில் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்னிரண்டுபேர் இலங்கை வந்திருந்தனர். அவர்களும் ஜனாதிபதியைச் சந்தித்தனர். அவர்களிடமும் ஜனாதிபதி நான் பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று கூறியிருந்தார்.

அவர்களும் பத்திரிகைகளுக்குக் கூறினார்கள். ஆனால் அவர்கள் கூறியதற்குப் பின்னர் நான் அப்படிக்கூறவில்லை என்று கூறினார். யாரை யார் ஏமாற்றுகிறார்கள்? இந்த ஏமாற்றத்தின் ஊடாக எதை அவர்கள் நிறைவேற்றப்பார்க்கின்றார்கள்? ஏன் அரசாங்கம் இப்படிச் செயற்படுகின்றது?

யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் தயார் என்று மீண்டும் மீண்டும் பல மேடைகளில் தொடர்ந்து கூறிவருகின்றார். அரசாங்கம் ஏன் அதனை ஏற்க மறுக்கின்றது? அரசாங்கம் ஏன் எம்முடன் ஒத்துழைக்க மறுக்கின்றது? அரசாங்கம் ஏன் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மறுக்கின்றது? ஏனெனில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இலங்கையும் ஒரு சிங்கள பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அதனால்தான் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இடிக்கப்படுகின்றன. இராணுவம் பொலிஸ் துணையுடன் பௌத்த சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் புத்தர்கோயில்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

இராணுவத்தை எம்மைச் சுற்றிவைத்துவிட்டு அனைவரையும் விரட்டிவிடலாம் என்றால் நீங்ள் தப்புக்கணக்குப் போடுகிறீர்கள். இந்த சந்ததி அல்லது அடுத்து வருகின்ற சந்ததியினர் இவற்றிற்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். அதற்கு முன்னதாக ஒன்றில் நீங்கள் அனைத்துத் தமிழரையும் கொன்றுதீர்த்துவிட வேண்டும் அல்லது அவர்களுக்கு உரிமைகளை வழங்கிட வேண்டும். இன்றேல் மீண்டும் போராட்டம் வரும். ஒரு மண்புழுகூட அதற்குத் துன்பம் விளைவித்தால் அது எதிர்த்துத் தாக்க முற்படும். தமிழ் மக்கள் இந்நாட்டில் கௌரவமாக வாழ்வதற்கோ அல்லது அவர்களை அரவணைத்துச் செல்வதற்கோ எத்தகைய முயற்சியும் அரசாங்கத்திடம் இன்றைய அரசாங்கத்திடம் இல்லை.

ஆனந்தசங்கரி கூறியதுபோல் திருகோணமலையில் கண்மூடித்தனமாக 200 பேரைக் கைது செய்தால் எஞ்சியவர்கள் என்ன செய்வார்கள்? இளைஞர்கள் யுவதிகள் அனைவரும் ஓடி பதுங்கத்தான் பார்ப்பார்கள். எதுவிதக் காரணமுமின்றி அவர்களைக் கைதுசெய்து என்ன செய்ய முயற்சிக்கின்றீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களைத் தூண்டுகின்றீர்கள். இது ஒரு பாரதூரமான தவறு. இராணுவம் இராணுவ ரீதியில்தான் சிந்திக்கும். அடிக்கலாம், உதைக்கலாம், நொறுக்கலாம் சுட்டுவீழ்த்தலாம் என்றுதான் அது நினைக்கும். ஆனால் அது மிகவும் தவறானது. இராணுவம் அப்படி யோசிக்கலாம். ஆனால் ஜனாதிபதி அப்படி யோசிக்கக்கூடாது. ஜனாதிபதி அப்படி யோசிப்பாரானால் அவர் பாரிய தவறிழைப்பதாகவே பொருள்படும்.

வன்னி மக்கள் பலர் பலமுறை இடம்பெயர்ந்திருக்கிறார்கள். பலர் சொந்தங்களை இழந்திருக்கிறார்கள். ஏராளமானோர் சொத்துக்களை இழந்திருக்கிறார்கள், ஏராளமானோர் கணவனை இழந்திருக்கிறார்கள், மனைவியை இழந்திருக்கிறார்கள், ஏராளமான இளைஞர்களும், யுவதிகளும் சிறார்களும் அனாதரவாக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அவர்களை இந்த இராணுவத்தினர் நிம்மதியாக வாழவிடவேண்டும். ஒரு ஜனநாயக சூழல் வேண்டும். யாரும் தமது கருத்துக்களைப் பயமின்றி வெளிப்படுத்த வேண்டும். யாரும் பயமின்றி எழுத வேண்டும். யாவருக்கும் கூட்டம் போடுவதற்கான உரிமை வேண்டும். அவைகள் இங்கு சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றதா? இல்லை. அதுதான் இன்றைய நிலைமை.

அத்தகைய ஜனநாயக சூழல் இல்லாவிட்டால் அதனை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்படுவார்கள். இங்கு நடப்பவைகளைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதற்கு சர்வதேச சமூகம் ஒன்றும் முட்டாளல்ல. அரசாங்கம் தானாக முன்வந்து பிரச்சினைகளை தீர்க்க முற்படுமாக இருந்தால் இந்தநாடு நன்றாக இருக்கும். அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழலாம். இன்று இருக்கக்கூடிய பொருளாதார நிலையைப் பாருங்கள். அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 133ரூபாய். மாவின் விலை எட்டுரூபா ஐம்பது சதத்தினால் அதிகரித்துள்ளது. இனி பாணின் விலையும் ஐந்து ரூபாய் கூடும்.

இராணுவத்தினர், பொலிசார் உழைக்கின்ற காசும்சரி பொதுமக்கள் உழைக்கும் காசும் சரி அவர்களது செலவுகளை எதிர்நோக்குவதற்குப் போதுமானதல்ல. இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி மக்களை எவ்வளவு மோசமான நிலைக்கு ஆட்சியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர் என்பதைப் பாருங்கள். ஜிம்பாப்வேயில் நான்கு முட்டைகள் வாங்குவதற்கு மூன்று பில்லியன் டொலர் வேண்டும். அந்த அளவிற்கு அந்நாட்டு நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. நாணயத்தாள் அச்சடிப்பதற்குக்கூட அந்நாட்டுப் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை. அந்நாட்டின் ஒருமில்லியன் டொலர் ஒரு அமெரிக்க டொலருக்குத்தான் சமன். அந்த அளவிற்கு அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

நமது நாட்டில் ஏ9 வீதியைப் பாருங்கள் எத்தனை பிரிகேட்களின் தலைமை அலுவலகங்கள். 166ஆவது பிரிகேட் வரவேற்கிறது, 555ஆவது பிரிகேட் வரவேற்கிறது, 5ஆவது டிவிஷன் வரவேற்கின்றது, பதினைந்தாவது கொம்பெனி வரவேற்கின்றது, 35ஆவது றெஜிமெண்ட் வரவேற்கின்றது என்று பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன. இங்கு மக்களை வேறு யாரும் வரவேற்பதில்லை. உள்ளுராட்சி அமைப்புகள் யாரையும் வரவேற்பதில்லை. வரவேற்பதெல்லாம் இராணுவம். இந்த நிலையில் எவ்வாறு தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்ய முடியும்?

ஆகவே எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு தனிமனிதனாலோ, தனி ஒரு கட்சியினாலோ, ஒரு குழுவினாலோ முடியாது. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும். தந்தை செல்வாவின் முப்பத்தைந்தாவது நினைவு தினத்தில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்னும் வைரவரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு நாம் ஒற்றுமையாக ஓரணியில் நிற்போமானால் நாம் மீண்டெழுந்து தலைநிமிர்ந்து வாழமுடியும்.

எமது ஒற்றுமையைக் குலைப்பதற்கு அரசாங்கம் சகல வழிகளையும் கையாளுகின்றது. இராணுவத்தினர் ஒருபுறம், அரசாங்க அமைச்சர்கள் ஒருபுறம் என்று எமது ஒற்றுமையை எவ்வாறாவது குலைத்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அதனை நாம் மாற்ற வேண்டுமானால் நாம் வலுவான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு வலுவான கட்சியாக இருக்க வேண்டும்.

தந்தை செல்வா அவர்கள் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் தமழரசுக்கட்சி என்பனவற்றை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒரு வலுவான கூட்டணியை விட்டுச்சென்றார். அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்துதான் இன்றுகூட எம்மால் பேசமுடிகின்றது. ஒரு வலுவான கட்சி இல்லை என்று சொன்னால் நாங்கள் கூறுகின்ற மக்கள் போராட்டம் எல்லாம் தோல்வியடைந்துவிடும். ஒரு வலுவான அமைப்பினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்கு நிகரான உரிமைகளைப் பெற்று இந்த மண்ணில் சீரோடும் சிறப்போடும் வாழும் நிலையைத் தோற்றுவிக்க முடியும்."

இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றினார்.

ஒலியைக் கேட்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

http://www.youtube.com/watch?v=hTh1w6v_lZk

http://www.pooraayam...9-14-28-36.html

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. இவ்வளவு மக்களும் போரில் இறக்கும் போது.. புலிகள் அழியும் போது மக்களும் அழியத்தான் செய்வார்கள் என்று தத்துவம் பேசி வன்னி மக்களை ஆயிரக்கணக்கில் பலியிட்ட.. சங்கரி கிளிநொச்சியில் மேடை போட அதில் வைத்து இவர் பலியிட்டவன் முன்னிலையிலேயே மக்களுக்கு வேதம் ஓதுவது.. எந்த வகையில் நியாயம்..???????????! :(:rolleyes::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.