Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூனை கண்ணை மூடினால்... - பழ. நெடுமாறன்

Featured Replies

மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடடைந்திருப்பதைப்போல எப்போதும் அடையவில்லை. இந்தியா விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆனபிறகும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை.

வங்கக் கடலில் அமெரிக்க அணுசக்தி கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை நடத்தவிருக்கும் கூட்டுப் பயிற்சி தொடர்பாக தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடலோர மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். அதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரோ அல்லது சென்னையில் உள்ள இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகளோ முதலமைச்சரைச் சந்தித்து இதுகுறித்து விளக்குவதற்கும் இந்திய அரசு தடைவிதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகளிடம் சிறிதளவுகூட கலந்தாலோசனை செய்யாமல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையச் சட்டம், ரயில்வே பாதுகாப்புத் திருத்தச் சட்டம், தேசிய சுகாதார மனித வள ஆணையச் சட்டம் ஆகியவற்றுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். கூட்டாட்சி முறையின் ஆணிவேரையே தாக்கும் சட்டங்களாக இவற்றை வர்ணித்து கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

வங்க தேசத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள டீஸ்டா தண்ணீர்ப் பங்கீட்டு உடன்பாட்டிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசை கொஞ்சமும் கலந்துகொள்ளாமல் இந்திய அரசு செய்துகொண்ட இந்த உடன்பாடு மேற்கு வங்க மக்களை மட்டுமல்ல, வங்கதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள பிற மாநில மக்களையும் பெருமளவுக்குப் பாதிக்கும் என அவர் கண்டித்துள்ளார்.

தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையம் போன்ற மிக முக்கியமான விஷயங்கள் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசனை செய்யாததற்கு குஜராத் முதலமைச்சர் மோடி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதல், காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிகாரில் மத்திய அரசு நிறுவவிருக்கும் பல்கலைக் கழகம் குறித்து மாநில அரசின் ஆலோசனையை மத்திய கல்வியமைச்சர் ஏற்கவில்லை என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கண்டித்துள்ளார். கயை நகரில் மத்திய பல்கலைக் கழகத்தை அமைத்தே தீருவோம் என மத்திய கல்வியமைச்சர் கபில்சிபல் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், ஏற்கெனவே அங்கு மற்றொரு பல்கலைக் கழகம் இருப்பதைச் சுட்டிக்காட்டி மிகவும் பின்தங்கிய பகுதியும், காந்தியடிகள் நடத்திய சம்பரான் போராட்டத்தோடு தொடர்புகொண்ட பகுதியுமான மோதிகரி அருகில் மத்திய பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டுமென மாநில அரசு கூறிய ஆலோசனையை கபில்சிபல் ஏற்க மறுத்துள்ளார். இதன் மூலம் பிகார் மக்களைப் பிளவுபடுத்த அவர் சதிசெய்வதாக முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில அரசுகளை மதிக்காத போக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதன் விளைவாக, காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக உள்ள பல மாநிலக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளிக்க மறுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மத்திய மனிதவளத் துறை வளர்ச்சி அமைச்சகம் கொண்டுவந்துள்ள 14 கல்விச் சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றப்பட முடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கின்றன. அதைப்போல மத்திய உள்துறை கொண்டுவந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட சட்டமுன்வடிவுகள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்லாததால் நிறைவேற்றப்பட முடியாமல் கிடக்கின்றன.

ஏன் இந்த அவல நிலை? இந்தியாவின் அரசியல் நிலைமை அடியோடு மாறியுள்ளதை மத்திய ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க மறுப்பதன் விளைவே இதுவாகும். இன்று பல்வேறு மாநிலங்களிலும் மக்களின் பேராதரவைப் பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அகிலேஷ்யாதவ், பிரகாஷ் சிங் பாதல், உமர் அப்துல்லா போன்றவர்கள் முதலமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர, ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், மராட்டிய மாநிலத்தில் சிவசேனை, அசாம் மாநிலத்தில் அசாம் கணதந்திரபரிஷத் போன்ற மாநிலக் கட்சிகளும் வலிமையுடன் திகழ்கின்றன. இவையும் சில கட்டங்களில் அந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகளாக இருந்தவை என்பதை மறந்துவிட முடியாது.

1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநிலக் கட்சிகளின் உதவியோடுதான் மத்திய அரசை அகில இந்தியக் கட்சிகள் அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியத் தேசியக் காங்கிரஸாக இருந்தாலும் சரி, பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி இனி எந்தக் காலத்திலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. மாநிலக் கட்சிகளின் உதவியோடுதான் மத்திய ஆட்சி அமையும். காங்கிரஸ், பா.ஜ.க. போன்றவை அகில இந்தியக் கட்சிகள் ஆனாலும் அந்தக் கட்சிகளிலும் வலுவான மாநிலத் தலைமையை ஒட்டிதான் அக்கட்சிகளின் செல்வாக்கு அந்தந்த மாநிலங்களில் அமைந்துள்ளது.

சக்திவாய்ந்த மாநிலத் தலைவர்களைப் புறக்கணித்தால் இக்கட்சிகளுக்கு அந்த மாநிலங்களில் பெரும் சரிவு ஏற்படும் என்பதை கடந்த காலத்தில் நாம் பார்த்தோம். இந்த இருகட்சிகளுமே குறிப்பிட்ட சில மாநிலங்களில்தான் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. எல்லா மாநிலங்களிலும் இக்கட்சிகளால் ஒருபோதும் வெற்றிபெறவும் முடியாது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி கற்க வேண்டிய பாடங்களைக் கொஞ்சமும் கற்கவில்லை. 1968-ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இப்போராட்டத்தினால் சட்டம் - ஒழுங்கு கெடவில்லையென கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அறிவித்தார். அதைப்போல மேற்கு வங்காளத்தில் கூட்டணி அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ஜோதிபாசு அதைப்போன்ற நிலைப்பாடு எடுத்தார்.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சவாண் இக்கருத்தை ஏற்காமல் மத்திய அரசு அலுவலகங்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை இம்மாநிலங்களுக்கு அனுப்பினார். அவ்வாறு மத்திய அரசு செய்வதற்கு உரிமை உண்டு எனவும் அதை மாநில அரசுகள் தட்டிக்கேட்க முடியாது என்றும் சவாண் கூறியதை ஒட்டி பெரும் சர்ச்சை மூண்டது.

1969-ஆம் ஆண்டு ஏப்ரலில் மேற்கு வங்காளத்தில் காசிப்பூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் சுட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநில அரசின் ஆதரவுடன் பந்த் நடத்தப்பட்டது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது முழுமையாக மாநில அரசுகளின் பொறுப்பாகும். இதில் மத்திய அரசு தலையிடுவதும் மத்திய போலீஸ் படையை மாநிலங்களுக்கு அனுப்புவதும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மாநிலங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை பாதுகாக்கவே தனது படைகளை அனுப்பியதாக மத்திய அரசு கூறியதை மாநில அரசுகள் ஏற்கவில்லை. அத்தொழிற்சாலைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசைச் சார்ந்ததே என்பதைச் சுட்டிக்காட்டினார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1939-ஆம் ஆண்டில் மன்னரின் போலீஸ் படை என்ற பெயரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. சுதேச சமஸ்தானங்களில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இப்படை பயன்பட்டதே தவிர, பிரிட்டிஷ் இந்திய மாநிலங்களில் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. 1949-ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து இப்படையை நிரந்தரமாக்கிற்று. எந்த மாநிலத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் படையை அனுப்புவதற்கும் நிரந்தரமாக தங்க வைப்பதற்கும் தனக்கு அதிகாரம் உண்டு என மத்திய அரசு கூறியது.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் மாநிலப் போலீஸுக்குத் துணையாகச் செயல்படவேண்டியது மத்திய போலீஸின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அதை மீறி தன்னிச்சையாக செயல்படுவது என்பது மாநிலங்களின் உரிமைகளில் குறுக்கிடுவதாகும். அரசியல் சட்டப்படியும் யதார்த்தப்பூர்வமான உண்மைகளின்படியும் மாநில அரசுகளின் சம்மதமின்றி மத்திய போலீஸ் படை அந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது மிகத் தவறான அணுகுமுறையாகும். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய நிலைமை இல்லை.

1968-ஆம் ஆண்டில் மத்திய போலீஸ் படை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டபோது இரண்டு மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், 2012-ஆம் ஆண்டில் தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மைய சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும்பாலான மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பை அலட்சியம் செய்வது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

இந்தியாவின் அரசியல் சூழ்நிலை அடியோடு மாறியிருக்கிறது. மாநிலக் கட்சிகள் வலிமையாகத் திகழ்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அகில இந்திய கட்சிகள் செல்வாக்கு இழந்துள்ளன. மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் எதிர்காலத்தில் எந்த அகில இந்தியக் கட்சியும் மத்திய ஆட்சியை அமைக்க முடியாது. நிலைமை மாறிக்கொண்டே செல்கிறது. ஒருகட்டத்தில் மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் இணைந்து மத்திய ஆட்சியை அமைக்கும் சூழ்நிலைகூட வரலாம். அதை நோக்கித்தான் நாடு இன்று சென்றுகொண்டிருக்கிறது.

மக்கள் செல்வாக்கும் அறிவாற்றலும் திறமையும் மிக்க தேசியத் தலைமை இன்றில்லை என்ற உண்மையை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இவை நிரம்பப் பெற்றிருந்த நேரு, படேல், இந்திரா காந்தி போன்றவர்கள் இன்றில்லை. அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பதாலேயே அவர்கள் வகித்த அதிகாரங்களையெல்லாம் விட கூடுதலான அதிகாரங்களைத் தாங்களும் வகிக்க முடியும் என எண்ணுவது பேதமையாகும்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் திகழ்ந்த நேருகூட மாநில முதல்வர்களையும், மக்கள் கருத்தையும் மதித்து நடந்தார். முக்கியப் பிரச்னைகளில் அவர்களைக் கலந்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்றே செயல்பட்டார். மொழிவழி மாநிலங்கள் அமைவதை நேரு மிகக்கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், ஆந்திர மாநிலம் வேண்டுமெனக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு செய்த உயிர்த்தியாகமும் ஆந்திர மக்களின் கொந்தளிப்பான போராட்டமும் அவரைச் சிந்திக்க வைத்தன. அவர் ஒரு ஜனநாயகவாதியாகத் திகழ்ந்ததனால் மக்களின் விருப்பத்தை ஏற்று மொழிவழி மாநிலங்கள் அமைக்க முன்வந்தார்.

இந்தியாவை ஐந்து மண்டலங்களாகப் பிரிப்பது என்ற திட்டத்தின் முதல்படியாக தட்சிணப் பிரதேசம் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் காமராஜர், கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா, கேரள முதலமைச்சர் பனம்பள்ளி கோவிந்த மேனன் ஆகியோரை அழைத்துப் பேசியபோது மற்ற இருவரும் ஓரளவு சம்மதம் தெரிவித்தபோதும் தமிழக மக்களும் கட்சிகளும் இத்திட்டத்தை ஏற்கவில்லை என காமராஜர் கூறியதற்கு மதிப்பளித்து அத்திட்டத்தையே கைவிட்டார்.

அவர் காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்வர்களே பதவிகளில் இருந்தார்கள். நேரு பிரதமர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் அவரே தலைவர். ஆனாலும் மாநில முதல்வர்களின் விருப்பத்தை மீறி சர்வாதிகாரியாகச் செயல்பட அவர் ஒருபோதும் முயன்றதில்லை.

பிரதமர் இந்திரா அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்து சர்வாதிகாரியாக மாற முயன்றபோது மக்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் கொதித்தெழுந்து போராடி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தினார்கள். 1977 தேர்தலில் இந்திரா முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார். தனது தவறை உணர்ந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும் செய்தார்.

நேரு போன்ற மக்கள் செல்வாக்குமிக்கத் தலைவரே மாநிலத் தலைமைகளை மதித்து நடந்துகொண்டபோது அதில் அணு அளவுகூட மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் போன்ற பெரும் பதவிகளில் உட்கார்ந்துகொண்டு மேலும் மேலும் தங்கள் கரங்களில் அதிகாரங்களைக் குவித்துக்கொள்ள முற்படுவது சரியா? இருக்கும் அதிகாரங்களையே முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் இவ்வாறு செயல்படுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தைக்கீறி வைகுந்தத்திற்கு வழிகாட்ட முற்பட்டதைப் போலாகும்.

www.Tamilkathir.com

காங்கிரசை முடிச்சுவிடுங்கோப்பா. திலகர்,காந்தி சுதந்திரம் வாங்க அமைத்த இயக்கம். முசோலினி சுதந்திரதை பறிக்க பாவிக்கிறது இப்போ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.