Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனிதக்கொலைகளின் வரலாறு

Featured Replies

புனிதக்கொலைகளின் வரலாறு என்ற தலைப்பில் இரா.முருகவேள் எழுதிய கட்டுரையை யாழ் கள உறுப்பினர்களுக்காக பகிர்கிறேன் அவரது வலைப்பூ முகவரி (http://naathaarikala.../blog-post.html)

. நரபலிகள்

கேட்டவுடனேயே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தச் சொல் மிகமிகத் தயக்கத்துடனேயே வரலாற்றாசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே பிற்காலச் சோழர் வரலாறும், பாண்டியர் வரலாறும் படிப்பவர்கள் அவற்றில் இருந்து வெள்ளமாகப் புறப்படும் வீரதீர பராக்கிரமங்கள் பற்றிய விவரக் குறிப்புகளில் நரபலிகளும், சதியும், நவகண்டமும் இருக்குமிடமே தெரியாமல் போய் விட்டதைத் தான் காண்பார்கள்.

இந்த வரிசையில் வராத கல்வெட்டறிஞர்களின் றிக்ஷீஷீயீமீவீஷீஸீணீறீவீனீ காரணமாகவே இவ்வளவு கவனத்துடன் மூடி மறைக்கப்பட்ட இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு கவனமாக சமூகம் மூடி மறைத்த கொடூரங்கள் சர்வசாதாரணமாக வீதிக்கு வீதி ஊருக்கு ஊர் நடந்திருப்பதை நடுகற்களும், சதிகற்களும் காட்டுகின்றன.

நரபலி அல்லது மனிதர்களைப் பலிகொடுத்தல் என்பது மூன்றுவிதமாக கூறப்படுகிறது. ஒன்று, நேரடியாக சமூக நன்மைக்காக, தேரோட்டத்திற்கு அல்லது கடவுளின் கோபத்தைத் தணிப்பதற்கு அல்லது புதிய கட்டுமானங்களுக்காக. இரண்டாவது நவகண்டம். வீரர்கள் இதே காரணங்களுக்காகத் தங்களைத் தாங்களே பலியிட்டுக் கொள்வது. தமிழில் தலைப்பலி என்பர். மூன்றாவது சதி. சதி அல்லது உடன்கட்டை ஏறுவதென்பதை நரபலி என்று குறிப்பிடுவது சரியா என்பது குறித்துக் கேள்விகள் எழலாம். ஆனால் அது நரபலி இல்லையென்றால் வேறென்ன? கொலை. ஆனால் எல்லா நரபலிகளும் கொலைகள்தானே. முதலில் நேரடிப் பொருளில் நரபலிகளை எடுத்துக்கொள்ளலாம்.

வாரக்கா நாட்டு எல்லையில் இருக்கும் கரிய காளி அம்மனுக்கு பார்த்தீப வருஷம் வைகாசி மாதம் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடத்த மக்கள் முடிவு செய்தனர். அச்சமயம் பவளத்தாக் கவுண்டன் கனவில் சுவாமி வந்து தேர் ஓட நரபலி வேண்டும் என்று கேட்டது. அதனால் அனைவரும் பறையன் உருமன் வீடு சென்று நரபலி குறித்து கேட்டனர். முன்னதாக இச்செய்தி கேள்விப்பட்ட சின்னான் என்ற பறையன் ஊரை விட்டே ஓடிவிட்டான். எனவே உருமன் தன் மனைவியைப் பலி கொடுக்கச் சம்மதித்தான். அவளும் உருமனை இன்னொரு கல்யாணம் செய்துகொள் என்று கூறி விரதம் இருந்தாள். பின்னர் உருமன் மனைவி பாளையக்காரர் அனைவர் காலிலும் விழுந்து வணங்கித் தாயே என்னைப் பச்சித்துக் கொள் என்று தேரின் முன் விழுந்தாள். இரதம் நொறுநொறுவென்று ஆறு வண்டியும் அவள் கை, கால், சேதம் ஆகாமல் முதுகிலேயே நடந்து நின்றது. பின்னர் அவளை எழுப்பித் தீர்த்தம் தந்து வேண்டிய பொருளும் காணியும் தந்தனர். (ஆவலம்பட்டிச் செப்பேடு, தமிழ்நாட்டுச் செப்பேடுகள். தொகுதி 2, ச.கிருஷ்ணமூர்த்தி)

நயினா மண்ணடியார் என்பவர் சோழநாட்டிற்குக் குற்றத்தூர் மார்க்கமாகச் சென்றார். பாலைவனத்தில் உள்ள படை வெட்டியம்மன் உயிர்ப்பலி கேட்டது. அவர் நரபலிக்காக ஆள் தேடியபோது வடகரைப் பேரூரைச் சேர்ந்த சங்கிடும் பறையரில் அள்ளாளி பறையனும் சின்னான் என்பவனும் நரபலிக்கு ஒரு பறையனைத் தேர்ந்தெடுத்தனர். அவனைப் பலி கொடுத்ததும் கோட்டை கட்டப்பட்டது. நரபலி தர ஆள் அனுப்பிய இரு பறையர்களுக்கும் ஆயிரம் பொன் தந்து மானியம் தொடர்ந்த வழங்குவதாக படை வெட்டியம்மன் பெயரில் சத்தியம் செய்து கொடுத்துள்ளனர்.

ஏரிகள் வெட்டுவதற்கும், கொற்றவைக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் பலி கொடுக்கப்பட்டதாக ஏராளமான உதாரணங்கள் உள்ளன. கொற்றவையின் கோபத்தத் தணிக்க சிறுவர்களைப் பலியிடும் செயல் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் சாவாரக்கல் சிற்பங்கள் என்று தனிப் பெயர் பெறுமளவிற்கு இக்குழந்தைப் பலி வழக்கம் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது.

மேற்சொன்ன நரபலியிடப்பட்டோர் அனைவருக்கும் பொதுவான தன்மைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருமே சமூகத்தில், மேட்டுக்குடியினரின் பேச்சுக்கு மறுபேச்சு சொல்ல வாய்ப்பில்லாதவர்கள். ஒடுக்கப்பட்ட சாதியினர், பெண்கள், குழந்தைகள். மேல் சாதிகளைச் சேர்ந்த பெண்களும்கூட இதற்குத் தப்பவில்லை என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் தேரோட்டத்தை வலங்கை ஆன சேணிய சிம்மப்புலி என்பவன் ஓடாமல் நிறுத்திவிட்டான். இடங்கையானவர்கள் கொச்சி மலையாளம் இடங்கை சிம்ம அனுமனைக் கொண்டு தேரை ஓட்ட முற்பட்டனர். சிம்மப்புலி பூத பிசாசுகளைக் கொண்டு தேரை ஓடவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளான் என் றும் அதற்கு நரபலி தந்தால் தேரைஇழுக்கலாம் என்றும் சிலர் கூறினர். உடனே சிம்ம அனுமன் தன்னுடைய மனைவியை வெட்டி நரபலி தந்து தேரைத் தனது மூக்கினாலேயே இழுத்து நாலுவீதியையும் சுற்றிவந்து நிறுத்தினான். (மேற்சொன்ன நூல்)

எனவே நரபலி கொடுக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதிலிருந்து யாரைக் கொடுக்கவேண்டும் என்பதுவரை அனைத்தையும் ஆதிக்கச் சாதி ஆண்களே தீர்மானித்துள்ளனர். அதிலும்கூட மனிதனைப் பலியிடுவது என்பது தனக்குச் சொந்தமான ஆடு கோழிகளை பலியிடுவதற்கு ஒப்பாகவே சமூகத்தில் கருதப்பட்டு வந்திருப்பதை மேற்சொன்ன உதாரணங்கள் காட்டுகின்றன.

இந்த உதாரணங்களில் காஞ்சிபுரம் ஒன்றைத்தவிர மற்றவை சின்னஞ்சிறிய ஊர்கள். இந்த ஊர்களில் குளம் வெட்டுவதற்கும், தெய்வத்தின் கோபம் தணிப்பதற்கும், தேரோட்டுவதற்கும் தலித்துகளும் பெண்களும் பலிகொடுக்கப்பட்டிருந்தால் நாடு முழுதும் எத்தனையாயிரம் பேர் பலி கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்? தலித்துகளிலும் கூட பெண்களும் குழந்தைகளுமே முதல் பலியாகியுள்ளனர்.

மதுரை நாயக்கர் காலத்தில் ஏராளமான அருந்ததியர்கள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. அதே மதுரை நாயக்க மன்னரான திருமலை நாயக்கர் கள்ளர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க அருந்ததிய தலைவனான மதுரை வீரனைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். பின்பு மதுரைவீரன் அடைந்த கதிக்கும், அந்த காலத்திலிருந்த அருந்ததியர் நிலைக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் முழுமையாக ஆராயப்படாமலேயே உள்ளன.

ஆனால் இந்த பலிகளைப் பற்றிய உணர்வுபூர்வமான பதிவுகள், பரவலாக மக்களால் படிக்கப்படும் இலக்கியங்களில் காணப்படுவதில்லை. அவை கல்வெட்டுகளிலும் நாட்டுப் பாடல்களிலும் செப்பேடுகளிலும் ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. மனைவியையோ குழந்தையையோ பலிகொடுக் கும்படி வற்புறுத்தப்பட்ட பறையனின் உணர்வுகள் எந்த இலக்கியத்திலும் பதிவாகவில்லை. சீக்கிரம் உயிர் போய் விட வேண்டுமென்பதற்காக விரதம் என்ற பெயரில் உடலைப் பலவீனப்படுத்திக் கொண்டு தேர் முன் விழும் பறச்சிக்கும் ஆடு கோழிகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாதவர்கள்தான் இந்தச் செப்பேடுகளை எழுதியவர்கள்.

ஒரேயொரு விதிவிலக்கு பிள்ளைக்கறி சமைத்த சிறு தொண்டர். சிவனடியார் உருவத்தில் வரும் இறைவனுக்காகத் தனது ஒரே மகனை வெட்டி விருந்தாக்குகிறார். வாதாபியைத் தீக்கிரையாக்கிய பரஞ்சோதியான சிறு தொண்டர். பெரியபுராணம் இதை தியாகத்தின் உச்சமாகப் பார்க்கிறது. சிறுதொண்டர் தன் மனைவி உமையாளைப் பலி கொடுத்திருந்தால் அது முக்கிய விஷயமாகியிருக்கப் போவதில்லை. உருமனுக்கே மனைவியை பலி கொடுத்து விட்டு இன்னொரு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கும்போது சிறுதொண்டரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.சோழநாட்டுச் சைவ வேளாளர் மரபில் வந்த அவர் அடிமைகளில் யாரையாவது பலி கொடுத்திருந்தாலும் அது புகழப்பட்டிருக்கப் போவதில்லை.

எனவே மகன், ஆண் பல்லவ மகா சைன்யத்தின் தளபதியின் வாரிசு... திருப்பதி உண்டியலில் சில்லரைக் காசு போடுவதற்கும் வைரமாலை போடுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே. வேட்டுவரான கண்ணப்ப நாயனார் கண்ணைக் கொடுக்கும்போது நாடாளும் சைவ வேளாளர் அதைவிடப் பெரிய தியாகத்தைச் செய்தால் அல்லவா இறைவனுக்கு அருகிலிருக்க முடியும். ஆனால் கண்ணும் மகனும் திரும்பவந்தபிறகு இதைப்பற்றிய விவாதம் எதற்கு?

பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பெரிய புராணத்தில் கூறப்படும் நாயன்மார்கள் எத்தனையோ தியாகங்கள் செய்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தாலும் இறைவனின் தாகத்தைத் தணிக்க அடிமைகளின் குருதியைக் கொடுத்ததாக, நரபலி கொடுத்ததாக ஒரு உதாரணமும் இல்லை. சர்வபரித்தியாகம் செய்வதையும், தீயில் குதிப்பதையும் புனிதப்படுத்தும் பெரியபுராணம் நரபலியைப் பற்றிப் பேசாமல் இருப்பது கவனத்தற்குரியது.

ஏறக்குறைய மக்களைச் சென்றடைந்த எல்லா இலக்கியங்களும் பெருநகரங்களும் அருகிலுள்ள கிராமத்துத் தெருக்களில் சிந்தப்பட்டுள்ள குருதி குறித்து மௌனமே சாதிக்கின்றன. திருப்பாவை, நரபலி என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட கோவில்களும், நடுகற்களும் இந்த சமூகத்தின் கூட்டு உளவியலில் பதிந்துள்ள குற்ற உணர்ச்சியையே காட்டுகின்றது. ஆனால் அது லாரியில் அடிபட்ட நாயைக் காணமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதற்கு மேல் போவதேயில்லை.

சரித்திர நவீனங்கள் என்ற பெயரில் தமிழில் எழுதப்பட்டுள்ள காதல் கதைகள் உண்மையிலேயே கண்ணைப் பொத்திக்கொண்டு எழுதப்பட்டவை போலத்தான் தோன்றுகின்றன. ஏரிகளில் தண்ணீர் எடுக்கவும், கோவில்களுக்கு அருகில் செல்லவும் அனுமதிக்கப்படாத ஒரு சமூகம் அந்த ஏரிகளுக்காகவும், கோவில்களுக்காகவும் பலி கொடுக்கப்படுவது எவ்வளவு பெரிய கொடூரம்? உன் உயிர் உடல் அனைத்துமே என்னுடைய சொத்துதான் என்று பறைசாற்றுவதற்கு மேல் இதில் என்ன இருக்க முடியும்.

ஆனால் இக்கொடுமைக்குப் பலியானவர்கள் முழுக்க முழுக்க தலித்துகளும், பெண்களும், குழந்தைகளும் மட்டுமல்ல மேல்சாதி ஆண்களும் தம்மைப் பலியிட்டுக் கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளன என்ற ஒரு வாதத்தை முன் வைக்கிறது நவகண்டம். தமிழில் தலைப்பலி. தலைவனின் நன்மைக்காக சேவகர்கள் தம்மைப் பலியிட்டுக் கொள்வது, தன் தலையை தானே அரிந்து படைப்பது நவகண்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் மல்லல்காளி கோவிலில் உள்ள நவகண்ட கல்வெட்டு படைத்தலைவன் நோய் நீங்கி நலம் பெற அம்பலக் கூத்தன் என்ற சேவகன் உயிரை ஈந்துள்ளான் என்று கூறுகிறது. இப்படி ஏராளமாக... பெண்களையும், குழந்தைகளையும், தலித்துகளையும் பலவந்தமாகப் பிடித்துவந்து பலியிடுவதற்குப் பதில் இந்த சேவகர்கள் தங்களைத் தங்களே பலியிட்டுக் கொண்டுள்ளார்கள். உண்மையில் நம்பியும், விருப்பத்துடனும் இவை நடந்திருக்கலாம். ஆனால் இந்த நவகண்டங்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. விரமும் விசுவாசமும் வீர சொர்க்கம் அடைவதில்தான் இருக்கிறது என்று கட்டமைக்கப்பட்டு வந்த கருத்துக்களும் படைவீரர்களை தலைவனுக்காக அல்லது சார்ந்திருக்கும் சமூகத்திற்காக எந்த நேரமும் உயிர்விடத் தயாராகி இருக்கும் பலியாடுகளாகவே இருக்க வேண்டுமென்ற சமூகத்தின் எதிர்பார்ப்புமே மனிதர்களை இதற்குப் பக்குவப்படுத்தியிருக்கலாம். இன்றும் தலைவனுக்கு உயிர் ஈயத் தயாராக விருக்கும் தொண்டர்களை நாம் பார்க்கத்தானே செய்கிறோம். ஆனால் இவர்களும் கூட சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தவர்கள்தான்.

இந்தத் தலைப்பலி, நரபலிகள் காலங்காலமாக சமூகத்தில் இருந்து வந்தபோதிலும் அவை நிறுவனமாக்கப்பட்ட மதங்களோடு, வழிபாட்டு முறைகளோடு இணைக்கப்பட்டதும், பரந்த அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டதும், பௌத்த சமண சமயங்களை வீழ்த்தி நிலப்பிரபுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சைவ வைணவ சமயங்கள் எழுச்சிபெற்ற காலத்தில்தான். இந்த காலகட்டத்தில்தான் புதிய நிலங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. சத்திரம் போன்ற இலவச உணவளிக்கும் முறைகளைப் பயன்படுத்தி உபரி உற்பத்தியை முழுமையாக மக்களிடமிருந்து கவர்ந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்கிறார் ஆர். என். நந்தி.

இந்தக் காலத்தில்தான் முழுமுழு கிராமங்களே பார்ப்பனர்களுக்கும், மடங்களுக்கும் மற்ற பெரிய அரசு அதிகாரிகளுக்கும் தானமாக அளிக்கப்பட்டன. முன்பு ஓரளவு சுதந்தி ரமானவர்களாகவிருந்த உழவர்களும் மற்ற சாதியினரும் இந்தப் புதிதாகத் தோன்றிய நிலக்கிழமை வர்க்கத்தின் அடி மைகளாக்கப்பட்டதும் இந்தக் காலத்தில்தான். கொத்தடிமைகள் மற்றும் குத்தகை விவசாயிகளை முழுமையாக அடிமைப்படுத்துவதன் மூலம் உபரி உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்ற கேள்விக்குப் பக்தி இயக்கம் விடையளித்தது. பக்தி இயக்கம் என்பதே முழுமையாகச் சரணடைவது என்பததானே? (சகி, மேக்கிங் ஹிஸ்டரி. பக்.214)

பக்தி இயக்கம் பரப்பிய ஆன்மீகம் விவசாயிகள் கை வினைஞர்கள் மற்றும் சேவகம் புரிந்து வந்த சாதியினரை உழைப்பையும், பொருட்களையும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு இலவசமாகத் தரச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. தங்கள் கொடும்வறுமையில் உழன்றாலும் இறையடியார்களுக்குத் தேவையானதைத் தரவேண்டுமென்பதை விதியாக்கியது பக்தி இயக்கம். இந்தத் தத்துவத்தை விரிவாக்கம் செய்தே மன்னர்களும், நிலக்கிழார்களும் மக்களின் அசைக்கமுடியாத விசுவாசத்தைப் பெற்றனர். தங்கள் உழைப்பையும் உடமைகளையும் மட்டுமல்லாமல் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டுமென்ற மனநிலை விவசாய வர்க்கங்களிலிருந்து வந்த வீரர்களிடையே உருவாக்கப்பட்டது என்கிறார் சகி. (மேக்கிங் ஹிஸ்டரி)

தங்களிடமுள்ள சகலத்தையும், இறைவனுக்கும், அவன் உறையும் கோவில்களுக்கும், அவனோடு தொடர்பு கொண்டுள்ளவர்களான உயர்சாதியினருக்கும் அர்பணிக்கத் தயாராயிருக்க வேண்டுமென்ற இந்த முழுச் சரணாகதித் தத்துவம் ஒடுக்கப்பட்ட மக்களை, முக்கியமாக தீண்டத்தகாத சாதியினரை நிர்பந்தப்படுத்தியது. அதன் உச்சக் கட்டம் தான் இந்த நரபலிகள். தலைப்பலிகள். பொது இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு நரபலிகள் நிறைவேற்றப்படும்போது உயிரே நமக்குச் சொந்தமானது இல்லையென்னும்போது உழைப்பைப் பற்றி யார் கவலைப்படுவது என்ற எண்ணத்தை அவை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவற்களுடையது அனைத்தையும் பறித்துக்கொள்ள மடங்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்கங்கள் இந்த நரபலிகளையும், தலைப்பலிகளையும் திறம்பட பயன்படுத்திக் கொண்டுள்ளன.

பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே பலிகொடுக்கப்பட்டது ஒரு வலிமையான ஆணின் உழைப்பை இழந்துவிடக் கூடாது என்ற நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் கவலையைத்தான் காட்டுகிறது. பலி கொடுக்கப்பட வேண்டிய நபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் ஒடுக்கப்பட்ட சாதியினரிடமே விட்டுவிடுவதன் மூலம் அந்த சாதிக்குள்ளும் ஆணாதிக்கத்தையும் ஒருபிரிவினர் மற்றவர்கள் மீது சுருக்கமாகச் சொன்னால் உழைக்கும் வர்க்கங்களிடையே பிரிவினையை அப்போது ஆண்ட வர்க்கங்கள் விதைத்து வந்துள்ளன.

ஆனால் இதைத்தவிர இன்னொரு வகையான ஆட்களும் இந்தத் தலைப்பலி தந்துள்ளனர். ஏதேனும் குற்றத்திற்காக மரணதண்டனை அளிக்கப்பட்டவனுக்குத் தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட்டுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுமாம்.

அப்படி ஒப்புக்கொள்கிறவனை ஒரு பல்லக்கில் வைத்து வீதிவீதியாகத் தூக்கிச் செல்வார்கள். அவனிடம் 12 கத்திகள் வழங்கப்படும். நகரின் ஒவ்வொரு இடத்திலும் நின்று அவன் அந்தக் கத்திகளை உடலின் ஒவ்வொரு பாகத்திலும் குத்திக் கொள்வான். இறுதியாக மீதியிருக்கும் கத்தியை இதயத்தில் பாய்ச்சிக் கொண்டு உயிர்விடுவான் என்கிறார் மார்க்கோ போலோ. எனவே கொடிய குற்றங்களை செய்த வர்களும் இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம் அவர்களின் ஆத்மா உய்வடைய சமூகம் உதவுகிறதாம்.அவர் கூறியிருக்கும் அடுத்த வரிதான் கொடூரத்தின் உச்சகட்டம்: தண்டனையளிக்கப்பட்டவன் தன்னைப் பலி கொடுத்துக் கொண்டு உயிர்விட்டதும் அவன் மனைவி தீயில் பாய்ந்த உயிர்விடுவாள்.

மரணதண்டனை அளிக்கப்பட்டவனோடு ஒருபாவமும் செய்யாத அவன் மனைவி ஏன் உயிர்விட வேண்டும்? இலக்கியங்கள் புறக்கணிக்கின்றன என்ற குற்றச்சாட்டை சதிக்கு நாம் சொல்லமுடியாது. கற்பு நெருப்பால் ஒளிவீசிக் கொண்டிருக்கும் பெண்டிர் அசல் நெருப்பால் தழுவப்படுவது இந்திய இலக்கியங்களிலும் பலவந்தமாக சிதையில் தள்ளப்பட இருக்கும் அழகிய இளம் விதவைகள் ஆங்கிலேய இளம் தளபதிகளால் காப்பாற்றப்படுவது இந்திய ஆங்கில இலக்கியங்களிலும் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. இந்தியரை காட்டுமிராண்டிகள் என்று சித்தரிக்க வெள்ளையர்க்கு கிடைத்த சரியான ஆயுதம் இந்தச் சதி.

அந்தர் ஜாலி ஜாத்ரா இந்திய திரைப்பட வரலாற்றில் மிக அபூர்வமான அற்புதமான திரைப்படம். இயக்குனர் கௌதம் கோஷ். சாவதற்காக கங்கைக் கரையில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கும் ஒரு தொண்டுக் கிழவன். இந்தப் பிணம் தனியாகப் போகாது என்கிறான் ஜோஸியன். உடனே பதினாறு வயதாகியும் மகளுக்குக் கல்யாணம் செய்ய முடியவில்லையே என்று அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனன் தன் மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்கிறான். நீ சதி மாதா ஆகிவிடுவாய் என்று வேறு அவளுக்கு ஆசை காட்டுகிறான். ஒரு வெட்டியான் மட்டுமே கிழவனோடு சேர்ந்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் நட்பும் அனுதாபமும் கொள்கிறான். அவளை ஓடிவிடும்படி கூறுபவன் அழைத்துச் சென்று ஒரு புதரை விலக்கி அங்கிருக்கும் சில சிற்பங்களைக் காட்டுகிறான். மெல்லிய நீண்ட விரல்களைக் கொண்ட வளைகரங்கள் மட்டுமே உள்ள கற்கள் அங்கே இருக்கின்றன. இவை எல்லாம் சதிமாதாக்களின் நினைவுச்சின்னங்கள்.

இந்த வங்காளிப் படத்தை 15ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சி பின்பு வேறெந்த திரைப் படத்தைப் பார்த்தபோதும் ஏற்படவேயில்லை. ஆனால் அது எங்கோ வங்காளம். எப்போதோ நடந்த கதை என்ற எண்ணம் அதன் தாக்கத்தை இயல்பாகவே மட்டுப்படுத்திவிட்டது. இப்போது ஒரு ஆவணப்படத்திற்காக அலைந்து திரிந்தபோது ஒவ்வொரு 20, 30 கிலோமீட்டருக்கும் ஒரு சதிக்கல்லைப் பார்த்த போது அதே அதிர்ச்சி திரும்பவும்...

ஒவ்வொரு தொல்பொருள் ஆய்வுத்துறை அருங்காட்சியகத்திலும் குவிந்துகிடக்கின்றன இந்த சதிக்கற்கள். புலியைக் குத்திக் கொண்டிருக்கும் வீரனுக்கு அருகில் பெண் உருவம் இருந்தால் அவள் புலியோடு போராடி இறந்தவனோடு தீப்பாய்ந்தவள். இப்படி பெரும்பாலான நடுகற்களில் வீழ்ந்துபட்ட ஆடவனோடு பெண்கள். அதோடு கூட மேற்சொன்னது போன்ற தனியான கைச்சிற்பங்கள்.

ஆண்களுக்கான நடுகற்கள் விஸ்தாரமான அமைப்போடு இருக்கின்றன. இன்றைய நவீன ஓவியர்களையும் விஞ்சக் கூடிய கலைத்திறனோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. முதலில் கல்லின் கீழே புலியோடு போராடும் ஆண். அதற்குமேல் ஒரு ஆண் நான்கு பெண்சிற்பங்கள். அதற்கும் மேலே சிவலிங்கம் அருகே அவன். புலியோடு போராடி மாளும் அவனை தேவதைகள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றனவாம். அங்கே இறைவனோடு மகிழ்ந்திருக்கிறானாம். ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் வெறும் கை மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. உடன்கட்டை ஏறிய பெண்களுக்குத் தீப்பாய்ந்தாள் கோவில் என்ற பெயரில் தமிழகத்தில் கோவில்கள் இருந்தாலும் கூட அவர்கள் புகலின்மை ததும்பும் வெறும் வளை கரங்களாகத்தான் பெரும்பாலும் சிற்பங்களில் காட்சியளிக்கிறார்கள். ஏராளமான பெண்கள் உடன்கட்டை ஏறல் என்ற பெயரில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் அத்தனை பேருக்கும் சிலை வைக்க ஒருவேளை கற்கள் போதாது என்று கருதியிருக்கலாம்.

நார்த்தாமலை அக்கலராஜாவோடு அவனது ஏழு மனைவியரும் உடன்கட்டை ஏறினராம். சீக்கியரிடையே உடன் கட்டை ஏறும் வழக்கம் இல்லாவிட்டாலும் மகாராஜா ரஞ்சித் சிங்கோடு அவரது பத்து மனைவிகளும் உடன் கட்டை ஏறினராம். மதுரை நாயக்கருடன் போரிட்ட தஞ்சை விஜயராகவ நாயக்கர் போரில் தோல்வியடைவது உறுதி என்று கண்டு மனைவியரைப் பகைவர் கையில் சிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதாவது அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர்த்து மேல் உலக வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்தார் (நடுகற்கள், ச.கிருஷ்ணமூர்த்தி. பக்.303)

இப்படி கூட்டங்கூட்டமாகப் பெண்களைத் தீயில் தூக்கிப் போடும் சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்தனி சிற்பம் எப்படி சாத்தியமாகும். விலங்குகளுடனோ, எதிரிகளுடனோ போராடி உயிர்விட்டக் கணவனோடு உடன் கட்டை ஏறிய பெண்கள் கணவனுக்கு எடுக்கப்படும் நடு கல்லில் இடம் பெறுகிறார்கள். ஒருவேளை மனைவியைப் பின்னே விட்டுவிட்டு இறக்கும் பட்சத்தில் அவள் வேறு ஆண்களோடு உறவுகொள்வதையும் குழந்தைகள் பெற்று வாரிசுரிமையையும் குழப்புவதையும் சமூகம் அனுமதிக்காது என்பதைப் பின்வரும் வீரர்களுக்கு உணர்த்த மனைவியின் உருவத்தையும் நடுகல்லில் சேர்ந்திருக்கலாம். ஊருக்குளியியிலோ, கோவில்களுக்கு அருகிலோ சாதாரண குடும்பப்படம் போல் காணப்படும் ஆணையும் பெண்ணையும் கொண்ட சிற்பங்கள் பெரும்பாலும் நடு கல்லாகவும் சதிக்கல்லாகவும் இருக்கலாம்.

நரபலி, தலைப்பலி குறித்து தயங்கித் தயங்கி ஒளிவு மறைவாகப் பேசும் இலக்கியங்கள் உடன்கட்டை விஷயத்தில் அப்பட்டமாக வெளிவருகின்றன. உடன்கட்டை ஏறிய மகளிரை உயர்த்திப் பிடிக்காத இலக்கியங்களே இல்லை எனலாம். எல்லாமே கணவன் இறந்தபிறகு மனைவி வாழ்தல் விரும்பத்தக்கதல்ல என்பதில் தெளிவாக இருக்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் இன்றும்கூட அதைத் திரும்பக் கொண்டுவர தமிழ்சினிமாவும் மற்ற பிற்போக்குவாதிகளும் தயாராக இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. டாஸ்மாக்கிற்குப் போன கணவன் சாக்கிடையில் விழுந்து உயிர்விட்டால் வீட்டில் மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியும் அவனோடு இறக்க வேண்டுமென்றால்...? சுமங்கலியாகப் போய்ச் சேர வேண்டுமென்பது ஒருவேளை இதிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

இவை முடிந்து போனவை, வழக்கொழிந்தவை, இனத்தின் மதிப்பைக் கெடுக்கக்கூடியவை என்று பல்வேறு காரணங்கள் கூறி பேசாமல் புறக்கணிக்கப்படலாம். வரலாறு ஒளி மிகுந்ததாகக் காட்டப்படலாம். ஆனால் அன்றைய காட்டு மிராண்டித்தனமான அடக்குமுறைகளின் மிச்சமீதங்களை இன்னமும் சுமந்து கொண்டிருப்பவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த மாபெரும் கலைச்சின்னங்களுக்குப் பின் உறைந்து கிடக்கும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குருதியை அவர்களின் இன்றைய வாரிசுகள் கண்டு கொள்ள வேண்டும். தலைப்பலி கொடுத்தவர்களில் எல்லாச் சாதியினரும் உண்டு. உடன்கட்டை ஏறிய பெண்கள் எல்லாருமே ஆதிக்கம் செலுத்திய சாதியினர்தான். சமூகத்தின் ஒரு பலவீனமான பிரிவினர் மீது இன்னொரு பிரிவினர் கற்பனைக்கு எட்டக்கூடிய அத்தனை அடக்கு முறைகளையும் பிரயோகிப்பதை அங்கீகரிக்கும் பட்சத்தில் அடக்குமுறையாளரின் சொந்த பந்தங்கள்கூட அதிலிருந்து தப்பமுடியாது என்பதைத்தான் இந்த சதிக்கற்களும் தலைப்பலி நடுகற்களும் காட்டுகின்றன. பழம்பெருமை பேசப்பட வேண்டுமென்றால் இந்தக் கொடூரங்களோடு இணைத்தே அது விவாதிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த சமண சமயங்களை வீழ்த்தி நிலப்பிரபுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சைவ வைணவ சமயங்கள் எழுச்சிபெற்ற காலத்தில்தான்

இப்ப மீண்டும் சைவத்தை வீழ்த்தி பெளத்தம் எழுச்சியுறும் காலமோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.