Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உன்னதமான மனிதன் பாரஸ்ட் கம்ப்- (Don't miss)

Featured Replies

பதின்ம வயதுக்குப் பிறகு நிறைய படங்கள் பார்த்தாயிற்று. நிறைய என்றால் நிறைய…. அதில் பல படங்களைப் பார்த்ததும் இதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். நான் அனுபவித்ததை அப்படியே யாரிடமாவது சொல்லிவிட மாட்டோமாவென, இங்கே பதிவுகளில் கொட்டியிருக்கிறேன். முடிந்தவரை எனக்கு புரிந்த விஷயத்தை, என் அனுபவங்களை கூடுமானவரை எழுத்தில் கடத்தியுமிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

சில படங்கள் பசுமையாய் நினைவில் நின்றுகொண்டிருக்கும் (Children of Heaven மாதிரி), சில படங்கள் பெரிய அதிர்ச்சியை மனதில் விதைத்திருக்கும், அந்த அதிர்வுகள் குறைய பல வருடங்கள் பிடிக்கும் (Life is Beautiful மாதிரி), சில படங்கள் நெகிழ்ந்து அழ வைத்து தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன ( Pursuit of Happyness, Cast Away மாதிரி) சில படங்கள் கவிதை எழுதத் தூண்டியிருக்கும் ( Notebook, Last Song மாதிரி), ஆனால் சில படங்கள் இருக்கின்றன. எதோவொன்று படத்தோடு நம்மை வசியப்படுத்தி வைத்திருக்கும்.

Forrest_Gump-Caratula.jpg

"Life's a box of chocolates, Forrest. You never know what you're gonna get"

சில சமயம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொல்லுவேன் “இந்தப்படத்தைப் பார்க்காம செத்துடாதே” என்று. அவ்வளவு அருமையான படமா? அப்படியென்ன ஸ்பெசல்? என்றெல்லாம் நிறைய கேள்விகள் வரும். எதற்கும் என்னிடம் பதில் இருந்ததில்லை, “நீ பாரு அப்புறம் வேணும்னா பேசலாம்” என்று சொல்வேன். அப்புறம் நாங்க பேசிகிட்டதேயில்லை. அப்படி பேசவோ, எழுதவோ ஏதுமின்றி சில படங்கள் ஒரு மெளன நிலைக்கு கொண்டு சென்றுவிடும். ரசிப்பின் உச்சம் என்று நான் அதை நினைப்பதுண்டு.மிகவும் பிரயத்தனப்பட்டு அதை எழுதவோ, பேசவோ நினைக்கிற பொழுதுகளில் உணர்ச்சிவசப்படுவது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதே மனநிலையில் மீண்டும் ஒருமுறை அந்தப்படத்தைப் பார்த்துக்கொள்வேன். அப்படி அடிக்கடி எங்காவது யாராவது சொல்ல நினைவில் வரும்பொழுதெல்லாம் எழுதனும்ன்னு நினைக்கிற சில படங்கள் இருக்கின்றது. அதில் ஒன்று Shawshank Redemption இன்னொன்று Forest Gump. இந்தப் படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி, திருத்தி, பின் ஏதோ ஒன்றை எழுத மறந்துவிட்டேன் என்று மீண்டும் அதை ட்ராஃப்டாகவே பதிவு செய்து வைத்துவிடுவேன்.

Forest Gump. சமீபத்தில் நண்பர் ரவி, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ”ஏன் என்னிடம் இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை, எப்படி இவ்வளவு நாள் இந்தப் படத்தை தவறவிட்டேன். லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் படத்திற்கு பிறகு ஒரு படம் பார்த்து நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டது கிடையாது என்று அவர் சொல்லும் பொழுதே அவர் குரல் கம்மியிருந்தது. வாங்க ரவி நேரில் பேசலாம் என்று சொல்லியிருந்தேன், நேரில் சந்திக்கும் பொழுதும்கூட உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார், இப்படி ஒரு மனுஷன் இருக்க முடியுமா சார்? இப்படி ஒரு மனுஷன் இருக்க முடியுமா சார்? என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். எனக்கு படத்தைப் பற்றி பேசுவதைவிட ரவியைப் பார்த்துக்கொண்டிருக்கவும், கேட்டுக்கொண்டிருக்கவும் பிடித்திருந்தது.

இந்த இரு படங்களை எழுதுவதில் எனக்கு இரண்டு பிரச்சனை. எனக்கு ஏற்பட்ட அனுபவம், எல்லோருக்குமே கிடைக்குமா? என்பது. ( அதுகூட பிரச்சனையில்லை, இந்தப் படங்கள் பிடிக்கவில்லை என்றால் அது புரிதலில் உள்ள குறைபாடுகளின் காரணமாகவேயிருக்கக்கூடும்) இன்னொன்று, எங்கே நான் மொன்னையாக எழுதி படத்தில் மீது ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி விடுவேனோ? என்பதும்தான். ஆனாலும் ரவியுடன் பேசியதிலிருந்து இந்தப் படத்தை எப்படியாவது எழுதிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

நல்லவனா இரு போதும் உன்னை நல்லவனாக நிருபிக்க முயலாதே! என்று ஒரு தத்துவம் உண்டு. அதுதான் இந்தப் படம். எதன்மீதும் புகாரற்ற ஒரு மனிதனை சந்தித்திருக்கிறீர்களா? நான் சந்தித்திருக்கிறேன். அவன் பெயர் பாரஸ்ட் கம்ப். ஆம், ஃபாரஸ்ட் கம்ப்பை நான் என்றைக்குமே ஒரு திரைக்கதாப்பாத்திரமாக உணர்ந்ததேயில்லை. அவனிடம் கதைகேட்ட ஒரு வழிப்போக்கனாகவே என்னையும், என் வாழ்வில் நான் சந்தித்த அற்புத மனிதர்களில் ஒருவனாகவே இவனையும் உணர்கிறேன்.

இந்தப்படத்திற்கு முன் டாம் ஹேங்க்ஸ் நடித்து நான் பார்த்த ஒரே படம் BIG (தமிழில் நியூ என்ற பெயரில் எஸ்.ஜே.சூர்யாவால் காப்பியடிக்கப்பட்ட படம்). ஆனால் பாரஸ்ட் கம்ப் பார்த்த பின் நான் பார்க்காத டாம் ஹேங்க்ஸின் படங்கள் ஒன்றிரண்டுதான் இருக்கும். அவ்வளவு இயல்பாக கல்லூரி மாணவனாய், ராணுவ வீரனாய், ஒரு கம்பெனி முதலாளியாய் இந்தப்பாத்திரங்களோடு ஒன்றியிருப்பார்.(இதைப்படிக்கும்பொழுது வாரணமாயிரம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல). உடல் மெலிந்து கதாப்பாத்திரத்திற்கு தேவையான உடல் மொழியையும் கொண்டு வந்திருப்பார். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் படத்தின் முதல் பத்து, கடைசி பத்து நிமிடம் தவிர மீதம் இரண்டு மணிநேரமும் பிளாஷ்பேக்தான், அதுவும் நேரேஷன் வகையான ( வா.ஆயிரத்தில் சூர்யா பேசிகிட்டே இருப்பாரே, அப்படி) ப்ளாஷ்பேக். ஆக அந்தந்த வயதிற்கான குரலும், மொழி ஆளுமையுமாய் கலக்கியெடுத்திருப்பார் டாம் ஹேங்க்ஸ். இவரது குரலும் உச்சரிப்பும் மிகவும் பிரசித்தி. The Terminal பார்த்தவங்களுக்கு தெரிந்திருக்கும். டாவின்சி கோட் படத்தை புரிவதற்காக தமிழிலும், ஹேங்க்ஸின் குரலுக்காக ஆங்கிலத்திலும் பார்த்தவன், நான். (ஆனால் தமிழ்லில் கூட ஒரு அற்புதமான குரலைத்தான் அவருக்கு கொடுத்திருந்தார்கள், அவரை யாருக்கும் தெரியுமா?)

காற்றில் அசைந்து வரும் ஒரு பறவையின் இறகோடு தொடங்கி, முடியும் இந்தத் திரைப்படம். இலக்கற்ற இலகுவாக பறக்கிற இறகினைப் போன்ற ஃபாரஸ்ட் கம்பின் கதை இது என்பதை குறியீடாக உணர்த்தும் கவிதை அது. ஒரு பேருந்திற்காகக் காத்திருக்கும் கம்ப், தனது பெஞ்சில் உடன் அமரும் ஒரு பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் கதையை சொல்கிறான். இது ஒருவரிடம் சொல்லும் கதையல்ல, ஒவ்வொருவராக தனக்கான பேருந்து வந்ததும் விடைபெறுகின்றனர். ஆனாலும் கதை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சிலர் அவன் கதைவிடுகிறான் என்கின்றனர், சிலர் அவனைப் பைத்தியம் என்கின்றனர், சிலர் அவனுக்காக அழுகின்றனர். கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கிறவன் இல்லை கம்ப், ஒரு நதியைப்போல தன்னால் சொல்ல முடிந்ததை சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.

நிச்சயம் நான் அந்தக் கதையை சொல்லப்போவதில்லை, ஏனெனில் கம்ப் அளவிற்கு அதை சுவாரஸ்யமாய் சொல்ல என்னால் முடியாது. ஒரு கட்டத்தில், தன்னிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்ணின் கேள்விக்கு “தான் இங்கே தனது காதலியைத் தேடி வந்திருப்பதாகவும், அவளுடைய முகவரியை அடைய பேருந்திற்காகக் காத்திருப்பதாவும்” சொல்கிறான். அந்த முகவரியை கவனிக்கும் பெண், இதற்காகவா இவ்வளவு நேரம் காத்திருந்தாய், இந்த இடம் நடந்தே அடைந்துவிடக்கூடிய தொலைவில்தான் இருக்கிறது, என்கிறாள். வீணாக இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டோமே என்கிற எந்த பதபதைப்பும் இல்லாமல், நிதானமாக ஆனால் மகிழ்ச்சியோடு காதலியை சந்திக்கக் கிளம்புகிறான்.

பாரஸ்ட் கம்ப், ஒரு சுயமாக சிந்திக்கத் தெரியாத ஒருவன். யார் என்ன சொன்னாலும் அதைச் செய்வான். ஆனால் கர்ம சிரத்தையோடும், மிகுந்த தன்னம்பிக்கையோடும். ஆபத்து வந்தால் திரும்பி நின்று எதிர்கொள்ளாதே, ஓடு, ஓடிக்கொண்டேயிரு என்று சொல்லும் தன் பால்ய கால தோழி ஜென்னியினுடைய வாக்கையும், “அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் அதிசயங்களை யாராலும் அறிய இயலாது, வாழ்க்கை அவ்வளவு அழகானது” என்று சொல்லும் தன் அம்மாவின் வார்த்தையையும் கடைசி நொடி வரை மனதில் இருத்தி அதன்படியே இருக்கிறான். எனக்கு எதையும் புரிந்து கொள்கிற மாதிரி சொல்ல அம்மாவால் மட்டுமே முடியும் என்று உறுதியாக நம்புகிறான்.

தன் ராணுவ நண்பன் புப்பாவின் ஆசை, இறால் பிடி படகு ஒன்றை சொந்தமாக வாங்கி, மீன்பிடித்து தொழில் நடத்தவேண்டும் என்பது, அவன் கம்பிடம் நாம் இருவரும் ராணுவத்திலிருந்து விடுப்பு கிடைத்ததும் கூட்டாக இதைச் செய்யலாம் என்கிறான். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் கம்ப்பின் கண்முன்னேயே இறந்தும் போகிறான். ஆனால் அவன் ஆசையை, அவனுக்கு செய்த சத்தியத்திற்காக, தானே ஒரு மீன்பிடி படகை வாங்கி தன்னோடு ராணுவத்தில் பணியாற்றிய இரண்டு கால்களையும் இழந்த அதிகாரியையும் துணைக்கு வைத்துக்கொண்டு இறால் பிடித்து வியாபரம் செய்கிறான். அதற்கு புப்பா-கம்ப் என்று பெயரும் இடுகிறான். மேலும் அதில் கிடைக்கிற லாபத்தில் பாதியை புப்பாவின் வீட்டில் கொடுக்கிறான். இது அவனது பணம் மீதான எதிர்பார்ப்பின்மையும், செய்த சத்தியத்தை காப்பாற்றவும் எடுக்கிற முயற்சியை காண்பிக்கிறது.

அவன், யார் மீதும், எதன் மீதும் புகார்களற்ற ஒரு மனிதனாக இருக்கிறான். யாரையும் அவன் எதிரியாக பார்க்கவில்லை, எதன் பொருட்டும் யார் மீதும் கோபமற்றவனாக இருக்கிறான், குறிப்பாக தான் சந்திக்கும் ஓவ்வொரு மனிதரும் தன்னை முட்டாள் என்று சொல்லும் பொழுதும் அவர்கள் மீது கோபமற்றே இருக்கிறான். எதைச் செய்யும்பொழுதும் அதில் மன நிறைவோடும், முழு ஈடுபாட்டோடும் செய்கிறான். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டேயிருக்கிறான். ஈடுபாடும், விடாமுயற்சியும் இருந்தால், சுயமாக சிந்திக்க திராணியற்ற ஒரு மனிதனாலேயே இவ்வளவையும் சாதிக்க முடிகிற இந்த உலகத்தில், கணினி முன் அமர்ந்தோ, செய்தித்தாளை வாதித்தபடியோ உலகை குறை சொல்லிக்கொண்டு காலம் தள்ளிக்கொண்டிருக்கும், எவருக்கும் இந்தப்படம் ஒரு மருந்து. ஆனால் மருந்து வாசமே அடிக்காத ஒரு மருந்து.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனாக வெகுளியான பாரஸ்ட் கம்ப், இருக்கிறான். வெறும் எளிமையான குணமே அவனை அங்கேயிருந்து அழகு பார்க்கிறது. இது வெறும் படமாக உங்களால் பார்க்கப்பட்டால், தவறு உங்களிடமே இருக்கிறது.

இந்தக்கதை இதே பெயரில் நாவலாக வந்து பரவலாக கவனம் கொள்ளப்பட்டது. நியூயார்க் டைம்ஸில் பெஸ்ட் செல்லர் வரிசையில் விற்பனையான நாவல் இது. வியட்நாம் போரில் பங்கேற்ற ஒரு அதிகாரியான விஸ்டன் க்ரூம் அவர்கள் எழுதிய நாவல்.. இப்படி ஒரு கதையை ஒரு இயக்குனர் யோசித்து எடுத்திருக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது, ஏனெனில் இப்படியா வித்தியாசமான அனுபவம் ஒருவனுக்கே வாய்க்க் வாய்ப்பேயில்லை. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை தொடர்ந்து வாசித்து, அதை திரைக்கதை என்ற தனி இலாகாவிற்கு அனுப்பி, அதை நேர்த்தியாக்கி திரைப்படமாக இயக்கும் பணியை ஏற்றுக்கொள்வதால் மட்டுமே, இப்படியான அழகான திரைப்படங்கள் கிடைக்ககூடும்.

forrest-gump.jpg

கதையின் சுருக்கம் :

சுயமாக சிந்திக்கும் திறமையற்ற, சரியாக நடக்க இயலாத சிறுவன், பாரஸ்ட் கம்ப். தன் தாயின்மீது அளவில்லாத பாசத்தோடு இருக்கிறான். வெகுளியாக இருக்கும் அவனைப் பள்ளியில் சேர்க்க தன் உடலைக் கொடுக்கிறாள், அவன் அம்மா. பள்ளிப்பருவத்திலிருந்து தனது தோழியாய் இருக்கும் ஜென்னியை மனதாரக் காதலிக்கிறான், பாரஸ்ட் கம்ப். தன் அன்னைக்குப் பிறகு அவளது வார்த்தைகளையே அவன் அதிகம் நம்புகிறான். ஆனால் அவளது வளர்ப்பு தந்தையே அவளை தன் காம இச்சைக்கு பயன்படுத்துகிறான். இதில் திசை மாறும் ஜென்னி ஒரு கால் கேர்ளாக, போதைக்கு அடிமையானவளாக மாறுகிறள். ஆனாலும் அவளையே விரும்புகிறான், கம்ப்.

மறுபுறம் கம்ப்போ, கல்லூரி கால்பந்து அணி, ராணுவம், அமெரிக்க டேபிள் டென்னிஸ் அணி, இறால் வியாபாரம் இப்படி எதில் கால்வைத்தாலும் தனது தொடர் முயற்சியாலும், ஈடுபாட்டாலும் வெற்றியை பெற்றுக்கொண்டேயிருக்கிறான். கூடவே நல்ல மனிதர்களின் நட்பையும். ஆனால் எங்கிருந்தாலும் தன் தாயின் நினைவாகவும், ஜென்னியின் நினைவாகவுமே இருக்கிறான்.

வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் ஜென்னியை சந்தித்துக்கொண்டேயிருக்கிறான். அவளை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாவும் சொல்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஜென்னி அவனை மறுக்கிறாள். அழுக்கான தன் வாழ்வை, கறைகளற்ற கம்போடு இணைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. அவன் விருப்பப்படி ஒருநாள் அவனோடு தங்குகிறாள், பின் அவனிடம் சொல்லாமல் வெளியேறவும் செய்கிறாள்.

ஒருநாள், தனது முகவரியை கொடுத்து தன்னை சந்திக்க சொல்லி ஜென்னியிடமிருந்து கடிதம் வருகிறது. அந்த முகவரியைச் சென்றடையும் வழியில் உள்ள பேருந்து நிறுத்ததில் சந்திக்கும் சக பயணிகளிடம் கதையாக சொல்லிக்கொண்டிருக்கிறான். ஜென்னியை அங்கே சந்திக்கிறான், ஒரு ஐந்து வயது சிறுவனோடு, அவன் பெயர் பாரஸ்ட் கம்ப். இவன் உன் மகன் தான் என்கிறாள், ஜென்னி. குற்ற உணர்வில் அழுகிறான் கம்ப், பின் இவன் என்னைப் போல முட்டாளா? என்கிறான். (டாம்ஹேங்க்ஸின் நடிப்பிற்கு இந்த ஒரு காட்சி போதும்). ஜென்னியை திருமணம் செய்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் நோயின் முற்றலில் ஜென்னி இறந்து போகிறாள். அவளது கல்லறை முன், நம் மகன் என்னைப்போல இல்லை, அவன் மிகவும் அறிவாளியாக இருக்கிறான். என்று சொல்கிறான்.

இது ஜென்னியின் கல்லறையில் கம்ப் பேசும் வசனம் அப்படியே கொடுத்திருக்கிறேன்.

“Jenny! You died on a Saturday morning. And I had you placed here under our tree. And I had that house of your father's bulldozed to the ground. Momma always said “dyin' was a part of life”, I sure wish it wasn't. Little Forrest, he's doing just fine. About to start school again soon. I make his breakfast, lunch, and dinner every day. I make sure he combs his hair and brushes his teeth every day. Teaching him how to play ping-pong. He's really good. We fish a lot. And every night, we read a book. He's so smart, Jenny. You'd be so proud of him. I miss you, Jenny. If there's anything you need, I won't be far away”

மறுநாள், தனது மகனை பள்ளிக்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு அங்கேயிருக்கும் பெஞ்சில் அமர்கிறான். அவன் காலடியிலிருந்து கிளம்பும் ஒரு பறவையின் இறகு மெல்ல பறக்கிறது, இலக்கற்று, இலகுவாய். பெருகும் இசையோடு நிறைவடைகிறது படம். ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த மனிதனை நேரில் சந்தித்த திருப்தி மனதிற்கு எழுகிறது. காரணமேயில்லாமல் கண்கள் குளமாகிறது. சத்தியமாக அது சந்தோஷத்தாலும் அல்ல, துக்கத்தாலும் அல்ல….. இது வேறு, உணரவேண்டுமென்றால், அவசியம் அழுது பாருங்கள்.

http://eniyoruvithiseivom.blogspot.com/2012/02/blog-post_10.html

Tom Hanks & Philadelphia

நடிப்புலகில் நான் பார்த்து வியக்கும் ஒரு மனிதர் டாம் ஹேங்ஸ், இன்று இவர் அமேரிக்காவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர், இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் சேர்த்து ஐந்து முறை விருதுக்கு பரிசீளிக்கப்பட்டவர். ஐந்து முறை கோல்டன் குலோப் விருதுகள், சிறந்த தயாரிப்பாளருக்கான எம்மி விருதுகள் பெற்றவர். நடிப்புத்திறமையைப் போலவே இவருடைய கதையெழுதும் மற்றும் இயக்கும் திறனும் சிறப்பானதே.

தன் திரைத்துறை வாழ்க்கையை 1978ல் தொடங்கியவர், இன்று வரை வெற்றியுடன் தொடர்ந்து வருகிறார். ஆனால் அனைத்து நடிகர்களையும் போலவே இவருடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை அத்துனை சுலபமாக அமைந்துவிடவில்லை. ஆரம்பகாலத்தில் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவர். கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையை வெளிக்காட்டி ஹாலிவுட் திரைப்படங்களில் கொஞ்சம் டம்மியான ரோல்களில் நடிக்கத்தொடங்கினார்

இப்படியாக சின்னச்சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த 1988ல் டாமிற்கு கிடைத்தது, பஞ்ச்லைன்(Punch Line) என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இது இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று கூட கூறலாம். தன்னுடைய அபாரமான நடிப்புத்திறமையால், நகைச்சுவை உணர்வால், இந்தப்படத்தில் டாம்மின் நடிப்பு பாராட்டைப்பெற்றது. அதே வருடத்தில் வெளியான பிக்(Big), தன்னுடைய இளவயதில் 35 வயதுடைய ஒருவராக நடித்தது டாமின் வாழ்க்கையில் மேலும் ஒரு புதிய அத்யாயத்தை தொடங்கிவைத்தது. அந்தப்படத்திற்காக டாம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லையென்றாலும் பலராலும் டாமின் நடிப்பு பாராட்டப்பட்டது.

அதற்கு பிறகு சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும், டாமின் நடிப்பு தொடர்ச்சியாக பாராட்டும்படியே இருந்துவந்தது, 1993ல் வெளிவந்த ஸ்லீப்பிங் இன் சியாட்டிள்(Sleeping in Seattle) படத்திலும் டாமின் மெலிதான நகைச்சுவை கலந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், 1993ல் வெளிவந்த பிலடெல்பியா படத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வக்கீலாக ஹோமோசெக்ஸவலாக நடித்த டாமிற்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் கிடைத்தது. அதேப்போல் டாமின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது, அறிவுத்திறன் குறைந்த(Low IQ) ஒருவனின் அதிர்ஷ்டத்தைப்பற்றி எடுக்கப்பட்ட பாரஸ்ட் கம்ப்(Forrest Gump) படம் அமேரிக்க வரலாற்றின் முப்பது ஆண்டுகளை சுருக்கமாக சொல்வது அதில் பாரஸ்ட் கம்ப் ஆக நடித்த டாமிற்கு(1994) அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கிடைத்தது. அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஆஸ்கர் விருதுகளை வாங்கி சாதனை படைத்த டாமின் வெற்றி இன்று வரை அப்படியே தொடர்கிறது.

இதன் பிறகு ஒரு படத்தை டாம் தயாரித்து இயக்கினார் அது That Thing You Do. இது பெரிய அளவில் வெற்றிபெறவில்லையென்றாலும் அவரின் நடிப்பில் பல உச்சங்களைக் காட்டிய ஒன்று. இதைப்போலவே அப்பல்லோ 13(Apollo 13), சேவிங்க பிரைவேட் ரைன், யூ ஹேவ் காட் மெய்ல், காஸ்ட் அவே, ரோட் டு ப்ரடிக்ஷன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார் டாம் ஹேங்ஸ். தற்பொழுது கூட டான் புரௌன் எழுதிய த டாவின்ஸி கோட்(The Da vinci Code) படத்தில் நடித்துவருகிறார். அவருடைய நடிப்புத்திறன் பிரமாண்டமானது.

இத்தனையிலும் அவருடைய குடும்பவாழ்க்கையை அவர் சினிமா வாழ்க்கையில் கலக்கவில்லை. கொஞ்சம் மூடியான மனிதர் என்றும் பெயர்வாங்கியிருந்தார் டாம். ரீட்டா வில்ஸன்(Reeta Wilson) என்னும் நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார்(முதல் திருமணத்தில் ஸமந்தா லீவிஸ்(Samantha Lewis) உடன் இரண்டு குழந்தைகள்).

rita_wilson116.jpg

Awards win by Tom Hanks

Academy

1994 Best Actor Forrest Gump (1994) Win

1993 Best Actor Philadelphia (1993) Win

Berlin International Film Festival

1994 Silver Bear for Best Actor Philadelphia (1993) Win

Chicago Film Critics Association

2000 Best Actor Cast Away (2000) Win

Golden Globe

2000 Best Actor – Drama Cast Away (2000) Win

1994 Best Actor (Drama) Forrest Gump (1994) Win

1993 Best Actor Forrest Gump (1994) Win

1993 Best Actor (Drama) Philadelphia (1993) Win

1988 Best Actor (Musical or Comedy) Big (1988) Win

அவரின் ஆஸ்கார் விருதுவாங்கிய பிலடெல்பியா(Philadelphia) படத்தைப்பற்றி

எனக்கு இது போன்ற ஒரு சினிமா தமிழில் வராதா என்று ஏங்க வைத்தபடங்களில் ஒன்று பிலடெல்பியா(Philadelphia), 100% ரியலாக இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு 80% உண்மையான ஒரு கோர்ட் சீன் கொண்ட திரைப்படத்தை நான் தமிழில் வெகுநாளாக எதிர்பார்த்துவருகிறேன். என்னைக்கவர்ந்த ஆங்கில கோர்ட் சார்ந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆண்ட்ரு பெக்கெட்(Andrew Beckett) என்ற ஹோமோசெக்சுவல் வக்கீலான டாம் ஹேங்சை வேலைக்கு எடுத்திருக்கும் அவருடைய நிறுவனம் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை அறிந்து, அவரை வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் டாமிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்ற காரணத்தைச் சொல்லாமல் அவருடைய வேலைசெய்யும் ஆற்றலை குறைசொல்லி நிறுத்திவிடுவார்கள்.

இதனால் கோபமடைந்த ஆண்ட்ரு(Tom Hanks), தன் நிறுவனத்தின் மீது மான நஷ்டவழக்கு தொடுப்பார். அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காததால் பிரபலமான மற்றொரு வக்கீலின் துணையை நாடுவார் ஜோ மில்லர்(டென்ஸல் வாஷிங்டன்). முதலில் எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய ஜோவின் மனதை மாற்றி பின்னர் அவர் எப்படி அந்த நிறுவனம் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்துதான் வேலையை விட்டு நீக்கியது என்பதை நிரூபிக்கிறார் என்பது தான் கதை.

கொஞ்சம் தவறானாலும் அசிங்கமாகப் போய்விடக்கூடிய கதைதான் இது. ஆனாலும் இதில் துளிக்கூட ஆபாசத்தை பார்க்கமுடியாது. படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் டாமிற்கும் முடிவில் எய்ட்ஸின் பாதிப்பில் இருக்கும் டாமிற்கும் இடைப்பட்ட காலத்தில் படத்தின் மேக்கப்மேனின் திறமை தனியாக வெளிப்படுமென்றாலும், மேக்கப் மட்டுமில்லாமல் அந்த வித்தியாசத்தை டாம் வெளிப்படுத்தும் அழகே தனிதான். அவருக்கும் அவருடைய கே நண்பர் ஆண்டனியோ பண்டாரஸ்(இந்தப் படத்தில் மிக அழகாக இருப்பார்) இடையே இருக்கும் அந்த நட்பையும் அத்தனை அந்தரங்கமாக காட்டியிருக்க மாட்டார்களென்றாலும் சில அற்புதமான காட்சியமைப்பில் விவரம் தெரியும்.

தன் நிலைமையில் வாதாட நிச்சயமாக முடியாது என்ற காரணத்தால், ஜோ மில்லரை சந்தித்து தனக்காக வாதாடுமாறு டாம் கேட்பதிலிருந்து படமும் வேகமெடுக்கும். அவருக்கு இருக்கும் ஹோமோசெக்ஸ்வல்களைப் பற்றிய அபிப்ராயம், எய்ட்ஸ் நோயாளிகளை தொடலாமா கூடாதா, அவர்கள் உபயோகித்த விஷயங்களை தொடலாமா என்பதிலிருந்து டாமைப்பார்த்தாலே அருவருப்பாக உணரும் அவருடைய நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார் டென்ஸல் வாஷிங்டன்.

டாம் ஹேங்ஸ் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரமாதமாக நடித்திருப்பார், அவர் சிறிது சிறிதாக எய்ட்ஸால் இறந்துகொண்டிருக்கும் நிலைகளை படத்தின் இயக்குநர் அழகான காட்சியமைப்பால் காட்டியிருப்பார். குறிப்பாக கோர்ட் காட்சிகளில் டாம் கஷ்டப்படுவதையும் பின்னர் சூழ்நிலையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுவதிலும் மிக அற்புதமாக நடித்திருப்பார். அதேப்போல் டாம் டென்ஸலின் குடும்பத்துடன் பழகும் பொழுது இருக்கும் சூழ்நிலையை இயக்குநரும் டாமும் மிக நேர்த்தியாக உருவாக்கி செய்திருப்பார்கள்.

படத்தின் இயக்குநர் ஜோநாத்தன் டெம்மி, கதை ரோன் நிஸ்வாநிர்.

Awards & Nominations for Philadelphia

Academy – 1993

Best Actor Tom Hanks Win

Best Makeup Alan D’Angerio, Carl Fullerton Nominated

Best Original Screenplay Ron Nyswaner Nominated

Best Song Bruce Springsteen, Neil Young Nominated

Berlin International Film Festival – 1994

Silver Bear for Best Actor Tom Hanks Win

Golden Globe – 1993

Best Actor (Drama) Tom Hanks Win

Best Original Song Bruce Springsteen வின்

http://kundavai.wordpress.com/2005/11/21/tom-hanks-philadelphia/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.