Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழின விடுதலையின் தொடக்கப்புள்ளி என்பதை பறைசாற்றிய நாம் ஓநாய்களை தலைகாட்ட விடலாமா..? ம.செந்தமிழ்.

Featured Replies

தமிழர்களது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிவிட்டதாக எதிரிகள் வெற்றிக் கூச்சலிட்டுநிற்க துரோகிகள் கொக்கரித்து எதிரிகளுடன் கைகோர்த்து ஆட்டம் பாட்டம் போட்டுநிற்க தமிழீழ விடுதலையினை நெஞ்சார நேசித்த தமிழ் உள்ளங்கள் எல்லாம் மூச்சடங்கி நின்ற நாட்கள் நேற்றுப்போல் இருந்தாலும் காலச்சுழற்சியில் கரைந்து போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.

எமது இனத்தின் அழிவுகளும் பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லும்தான் எம்மை வழிநடத்துகின்றன.

“போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு ஏற்ப முள்ளிவாய்கால் பெருந்துயரத்தை எமது மனங்களில் புதைத்து அந்த ரணத்தில் நின்று எமது விடுதலைப் போராட்டம் சர்வதேசியம் தொட்டு நிற்பது எதிரிகளும் வியந்து பார்க்கும் உயர்ந்த நிலையாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆரம்பம் முதல் உறுதியுடன் வழிநடாத்தி வருவது எமது இனத்தின் இழப்புகளும் அழிவுகளும்தான். அந்த வகையில் வரலாற்றுத் துயராக வந்து உலகத் தமிழினத்தை மூச்சடக்கிய முள்ளிவாய்க்கால் பெருந்துயரமும் எம்மை உறக்கம் கலைத்து வேகமாக களமாடத் தூண்டுதலாக இருந்து வருகின்றது.

சுதந்திர தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு தமிழனையும் இயங்க வைத்துக் கொண்டிருப்பது பிரபாகரன் என்ற மந்திரச் சொல் என்றால் தமிழர்களிற்கான நிரந்த தீர்வாக தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற இலட்சிய தாகத்தை உலகத்தமிழர் மனங்களில் விதைத்தது மே-18 பெருந்துயரமாகும்.

எட்டுத் திசைகள் யாவும் எதிரொலித்த எமது உறவுகளின் கதறல்கள்.. கத்தல்கள்.. கூச்சல்கள்.. முக்கல்கள்.. முணகல்கள்.. மரண ஓலங்கள்.. இப்போதும் ஏதோ ஒரு வடிவத்தில் எழுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஒருகணம் மூச்சை அடக்கி நின்று நிதானித்து கேட்க வேண்டிய அவசியமே இல்லாது ஆர்பரிக்கும் கடலலையின் ஓசையினையும் சுழன்றடிக்கும் சூறாவளியின் இரைச்சலையும் காதைப்பிளக்கும் இடியோசையினையும் வல்லரசுகளின் அணுவெடிப்புகளையும் கடந்து எமது உறவுகள் தாயகத்தில் எழுப்பும் அவலக்குரல்கள் தெள்ளத் தெளிவாக கேட்கின்றது.

இந்த வலிசுமந்த ஓசைகளும் பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லும் மாவீரர்களது இலட்சியக் கனவும் புலம்பெயர் தமிழர்களாகிய எம்மை ஒவ்வொரு நொடிப்பொழுதும் விடுதலையின் பாதையில் வழிநடாத்திக் கொண்டுதானிருக்கின்றன.

அதனைத்தான் ஜெனீவா அரங்கத்தில் முழு உலகமும் கண்டு மெய்சிலிர்துப் போய்நிற்கின்றது. இவ்வளவு பேரழிவிற்கு பின்னரும் இவர்கள் தமது இனத்தின் விடுதலைக்காக உயிர்த்தெழுந்து சர்வதேசத்துடன் முட்டி மோதிக் களமாடுவது கண்டு வல்லரசுகளே திகைத்துப் போய் மூக்கின்மேல் விரல்வைத்து பார்க்கின்றன.

சிலுவையில் அறைந்து முள்முடி தரித்து உயிர்வதை செய்து கொல்லப்பட்ட இயேசுபிரானின் உயிர்த்தெழுதலுக்கு ஒப்பான பேரதிசயமாக இன்று தமிழர்களது இராசதந்திரப் போராட்டம் நோக்கப்படுகின்றது. இது ஒன்றும் உசுப்பேற்றுவதற்காக எழுதப்படும் விடையம் இல்லை. இது சத்தியமான உண்மை.

இன்றைய சர்வதேச அரசியல் மாற்றங்களை உற்று நோக்குபவர்களிற்கு இது நன்கு புலப்படும். புலம்பெயர் தமிழர்களது அரசியல் இராசதந்திர போராட்டத்தின் வீச்சு சர்வதேச அரசுகளை தவிர்க்க முடியாமல் களத்தில் இறக்கிவிட்டுள்ளதை அவதானிக்கலாம்.

சுயபலத்தில் சமரசமின்றி செயற்பட்டதனால் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழிக்க முயன்றனர்.

எவ்வித புறச்சக்திகளின் துணையுமின்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சொந்த மக்களது தார்மீக ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து உலக விடுதலைப் போராட்டங்களிற்கு சிகரமாகவும் வல்லாதிக்க சக்திகளிற்கு சிம்மசொப்பனமாகவும் செயற்பட்டு வருகின்றமைதான் முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்ற புறச்சூழலை ஏற்படுத்தியிருந்தது.

அவ்வாறே இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவை முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களத்தின் மூலம் நிகழ்த்தியதோடு மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் இயங்கு சக்தியான பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லை மயக்க நிலைக்கு கொண்டு சென்ற பின்னரும் அதே கட்டுக் கோப்பான களச்செயற்பாடுகள் மூலம் சர்வதேச அரங்கில் சுதந்திர தமிழீழத்தை நோக்கிய பாதையில் போராடும் புலத்து புலிகளது போராட்டமும் பிராந்திய உலக வல்லரசுகளின் உறக்கத்தை கலைத்துள்ளது.

உலகத்தில் மனச்சாட்சி இன்னும் உயிர்புடன் இருக்கும் இடங்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அங்கு எமது மக்களிற்கு சிங்கள இனவெறி அரசால் வரலாற்று வழியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் எடுத்துச் சொல்லி நியாயங் கேட்டு போராடும் எமது உறவுகளின் பயணம் மிகவும் உன்னதமானது. உயர்வானது.

இந்தியா தவிர்க்க இயலாத சூழலில் சிங்களத்தின் பாதுகாப்பு வட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிகின்றது. அண்மையில் இந்தியா சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கிலாரி கிளிங்டன் அவர்களது பயணத்தின் நிறைவில் சிறிலங்கா இனப்பிரச்சினை தொடர்பான விடையங்களில் இனி இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயலாற்றும் எனச் சொல்லியிருப்பது மேற்சொன்ன கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

அமெரிக்காவாக இருக்கலாம் இந்தியாவாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும் சோர்ந்து விழிதிறந்த உறக்க நிலையில் நின்றே தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்தவர்கள். ஆனால் மீண்டும் நாம் இவர்களிடம்தான் நீதி நியாயம் வேண்டி செல்ல வேண்டிய அவசியமும் உள்ளது.

அப்போது தமது பிராந்திய நலன்களிற்கு இசைந்து கொடுக்காத ஒரு வலிமையான விடுதலை இயக்கத்திற்கு முடிவுரை எழுதவேண்டும் அதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற ஒற்றை நிலைப்பாட்டிற்கு பின்னால் நின்று தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று அவற்றிற்காகவே சிங்களத்தின் சட்டையினை பிடித்து கேள்வி கேட்கவும் செய்கின்றனர்.

இதுதான் இன்றைய உலக நிலை. நாம் அதனை பயன்படுத்தி எமக்குள் எத்தனை பிளவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் முன்வைக்கும் கோரிக்கை தமிழர்களது சுதந்திர வாழ்வை மீட்டுத்தாருங்கள் என்பதுதான்.

புலம்பெயர் தமிழர்களின் இராசதந்திர நெருக்கடிகள்தான் அழிவிற்கு துணைநின்றவர்களையும் எமது பக்கம் வரவைத்துள்ளது.

தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் நாம் அதற்கான வரலாற்று சான்றுகளையும் சிங்களத்தின் தொடரும் அத்துமீறல்களையும் சர்வதேச மன்றத்தில் மட்டுமல்லாது உலக மக்களிடமும் நாகரீகமான வழிகளில் எடுத்துச் சொல்லிவருவதால் தமிழர்களது கோரிக்கைகள் அனைத்துத் தரப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையினை நோக்கி நகர்ந்து வருகையில் இந்த கபட வேடதாரிகளது நிலை ஈழத்தமிழர்களை நோக்கியதாக மாறியுள்ளது ஒன்றும் ஆச்சரியமில்லை.

தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டதாகட்டும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மாநில அரசை தமது அதீத பலத்தால் ஆண்டுகொண்டிருந்த அரசுகளை வெறும் தூசாக்கி பறக்கவிட்டதாகட்டும் பிரான்சில் ஏற்பட்ட ஆட்சிமாற்றமாகட்டும் எல்லாமே மக்கள் விரோத ஆட்சிகளாக அமைந்துவிட்டதாக மக்கள் உணரத்தலைப்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளாகும்.

உலக மக்கள் எந்த மொழியினராகவும் இனத்தவராகவும் இருந்தாலும் தமக்கு எதிரான அரசுகளை அனுமதிக்கத் தயாராக இல்லை என்ற மனநிலைக்கு வந்துள்ளார்கள். இந்த புறச்சூழலில் தமிழர்களை இந்த உலகம் எவ்வாறு வஞ்சித்தது என்ற உண்மை நிலைப்பாட்டினை உலக மக்களிற்கு அவர்களது மொழியில் எமது புலம்பெயர் உறவுகள் எடுத்துச்சொல்லி பெரும் மாற்றத்தினை உருவாக்கி வருகின்றார்கள்.

என்றுமில்லாதவாறு புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் அவர்களது எண்ணவிருப்பத்திற்கு செவிசாய்க்கும் வகையில் அரச பிரதிநிகள் செயற்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.. லண்டன் நகர முதல்வர்(மேஜர்) தேர்தலில் போட்டியிட்ட பிரதான இரு வேட்பாளர்களுமே உலகத்தமிழினம் விலிசுமந்த மாதமான மே-18 நினைவு நாளை மையப்படுத்தி வாக்குறுதிகளை வழங்கியிருந்தமை போன்று உலகின் பல பாகங்களிலும் அரசியல் ரீதியாக தமிழர்களது நிலை வலுப்பெற்று வருகின்றது.

உலகம் தழுவியதாக விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்றுள்ள நிலையில் தலைகாட்டும் ஓநாய்கள்.

புலம்பெயரளையோர் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 2008 மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டது போல் புலம்பெயர் தமிழர்கள் குறிப்பாக இளையோரது முயற்சியால் இன்று உலகம் தழுவியதாக தமிழர்களது விடுதலைப் போராட்டம் மாற்றம் பெற்று உச்சம் பெற்று நிற்கின்றது.

இந்தநிலையிலும் நாம் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். சுதந்திர தமிழீழத்தை நோக்கி எமது போராட்டம் பல்வேறு வழிகளில் வலுப்பெற்று வருகையில் சில ஓநாய்கள் தலைகாட்ட முற்பட்டுள்ளன. இதனையும் நாம் எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலமே முறியடித்து வெற்றிகான வேண்டும்.

தமிழீழத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து கருணாநிதி ஒருபக்கம் ஊழையிட்டாலும் அது அவ்வளவாக தமிழின விடுதலைக்கு தீங்கிழைக்கப் போவதில்லை. நிச்சயமாக சுதந்திர தமிழீழ குடியரசு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையில் உலகத்தமிழர்களாகிய நாம் வென்றெடுக்கத்தான் போகின்றோம். அதற்கான சாத்தியங்கள் கருணாநிதியின் கண்களிற்கு தெரிந்ததன் விளைவுதான் இந்த அதிரடி அறிக்கைகளுக்கான அடிப்படையாகும்.

ஆனால் சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்களுடன் அண்மையில் சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய எம்.பி.கள் குழுவினரும் சேர்ந்து முன்னெடுத்து வரும் பிரச்சாரம் உலகத்தமிழர்களால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன் முறியடித்தாக வேண்டியதுமாகும்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ தமிழர்கள் தயார் என்பதை சம்பந்தன் வெளிப்படுத்துவதற்கு கையாளும் முறைகள் அபத்தமானவையாகும். விரும்பியோ விரும்பாமலோ தமிழர் தரப்பில் தாயகத்தில் அரசியல் சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் தமிழர்களது தலைவராக(?)நோக்கப்படுகின்றார்.

சம்பந்தனிற்கு பின்னால் நின்று இயக்கும் இந்தியா ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகான தமிழர்தரப்பு தயார் என்பதனை வெளிப்படுத்த பகீரதப் பிரயத்தனம் செய்துவருகின்றது. அதற்காக அடிப்படையான தமிழீழக் கோரிக்கைக்கு சாவுமணி அடிக்க தலைகீழ் முயற்சி எடுத்துவருகின்றது.

அதன்வெளிப்பாடுதான் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது அறிக்கைகளும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. ரணில் மூலமாக சம்பந்தனது கைகளில் திணிக்கப்பட்டதாக சொல்லும் சிங்கக் கொடியை தூக்கிப்பிடித்த விவகாரத்தில் சம்பந்தனது பதில்கள் அவரது இரண்டும் கெட்டான் நிலையினை புலப்படுத்துகின்றன.

சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய எம்.பி.கள் குழுவினர் செக்கிழுத்த மாட்டை அவிட்டுவிட்ட பின்னரும் அந்த வட்டத்திற்குள்ளாகவே சுற்றிக்கொண்டிருப்பதைப்போல தமிழீழத்தை அங்கிருக்கும் தமிழர்கள் விரும்பவில்லை ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்து வாழவே அவர்கள் விரும்புகின்றார்கள் என்று கதையளந்து கொண்டுள்ளார்கள்.

இவர்களிற்கு தலைமையேற்றுச் சென்ற பாராளுமன்ற எதிர்கட்சி தலைவியான சுசுமா சுவராச் அவர்களும் மதுரையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் இதே கருத்தை தெரிவித்துள்ளார். முற்றிலும் சிங்கள இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அரச உயரதிகாரிகள் புடைசூழ இவர்கள் மக்களை சந்தித்துவிட்டு மக்களும் தலைவர்களும் சொன்னதாக ஒரு கருத்தை சொல்லும் போது அது ஒட்டுமொத்த தமிழர்களது கருத்தாக எவ்வாறு எடுத்துக் கொள்ளமுடியும்.

அச்சுறுத்தலான புறச்சூழலில் மக்களை வாயடைக்கச் செய்துவிட்டு தமக்கு வசதியான பதில்களை எதிர்பார்த்து சில கேள்விகளை கேட்டு தாம் எதிர்பார்த்தவாறே திட்டமிட்ட பதில்களை பெற்று அதனடிப்படையில் காங்கிரசு பெருச்சாலிகளும் சிவப்புத்துண்டு ரங்கராசனும் பா.ஜ.க. சுச்சுமாவும் செய்யும் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. இருந்தாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

நாங்கள் சோறுபோடச் சொல்லி கேட்கவில்லை. வீடுகட்டித்தரச் சொல்லவில்லை. சொந்த நிலத்தில் சொந்த வீட்டில் சொந்த உழைப்பில் நிமிர்ந்து நின்ற எங்களை போர் என்ற அரக்கனை ஏவி நாசப்படுத்திவிட்டு இப்போது பிச்சை போடுகிறீர்களா…? யாருக்கு வேண்டும் உங்கள் பிச்சை..!?

“எங்கள் நாட்டில் உள்ளவர்களைவிட உங்கள் நாட்டில் நிறைய ஏழைகள் உள்ளார்கள் அவர்களிற்கு முதலில் உதவிகளைச் செய்யுங்கள்” என்று தமிழக முதலமைச்சரை நோக்கி சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராசபக்சே சொன்னதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் பெருமளவிலான ஏழைகள் உள்ளார்கள் என்பது உண்மை.

ஏழைகளும் குடிசைகளும் இல்லை என்றால் ராகுல்காந்தி எதைவைத்து அரசியல் செய்வது…? அதைவைத்துதானே இந்திய அரசியலே நடக்கின்றது. குடிசைகளை எரிப்பது பின்னர் நிவாரண உதவிகள் வழங்குவது என்ற போர்வையில் அனுதாபத்தில் அரசியல் விபச்சாரம் செய்வது உங்களிற்கு பழகிப்போனவிடையம். அதனை உங்கள் நாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் மண்ணிற்கு வந்து உதவிசெய்கின்றோம் என்ற போர்வையில் நாட்டாமை செய்ய முயற்சிக்காதீர்கள்.

முன்னால் பிரதமர் இராசீவ்காந்தி படைத் தளபதிகளையும் படைவீரர்களையும் அனுப்பி சாறம்கட்டின பொடியளை அழிச்சுப் போட்டு தமது ஆதிக்க அரசியலை நிலைநாட்ட முற்பட்டு தோல்வியடைந்த கசப்பான அனுபவத்தை ஒருதடவை நினைத்துப் பாருங்கள்.

படை பட்டாளங்களோடு உலகின் நான்காவது பெரும் இராணுவம் என்ற பந்தாவோடும் வந்தே ஒன்றும் கிழிக்க முடியாதவர்கள் இப்ப இன்பச் சுற்றுலா வந்து தமிழர்களின் உயிர் மூச்சோடு கலந்துவிட்ட தமிழீழத்தை பிரிக்க நினைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

தமிழர்களிற்கான நிரந்தர தீர்வாகவும் மருந்தாகவும் சுதந்திர தமிழீழத்தை ஆசீர்வதிக்க வேண்டிய நிலைக்கு உலக நாடுகளை எமது உறுதியான போராட்டத்தின் மூலம் கொண்டுவந்துள்ள தருணத்தில் இந்த ஓநாய்கள் தலைகாட்டுவது ஏற்புடையதல்ல. நாங்கள் எமது விடுதலைக்கான போராட்டத்தில் இன்னும் உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

உலகத் தமிழர்களது குரலாக சர்வதேசம் செனீவாவில் ஓங்கி ஒலித்துள்ள நிலையில் முள்வேலிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழர்களது குரலை துணையாக கொண்டு தமிழர்களது தாகமான தமிழீழத்தை மறுதலிக்க இந்தியளவில் முயற்சிப்பது குட்டையை குழப்பும் வேலையே.

தமிழீழத்திற்கான நுழைவாயிலை தமிழர்கள் அண்மிக்கும் போதெல்லாம் பிராந்திய உலக வல்லரசுகள் தடுத்து வருகின்ற நிலையினை மாற்றுவோம்.

தமிழீழத்திற்கான நுழைவாயிலை தமிழினம் அண்மிக்கும் போதெல்லாம் இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகள் தலையிட்டு தடுத்துநிறுத்துவது வாடிக்கையாகிவிட்டது. உலக போரியல் அறிஞர்கள் தளபதிகள் உத்தரவாதப்படுத்திய 240 ஆண்டுகளிற்கு மேலாக இரும்புக் கோட்டையாக திகழ்ந்த ஆனையிறவு பெரும்தளத்தை தமிழீழத் தேசியத் தலைவரது நெறிப்படுத்தலில் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராச் அண்ணா தலைமையிலான வெறும் 1200 புலிப்படைகள் தூள் தூள் ஆக்கி யாழ்ப்பாணம் எக்கணமும் புலிகள் வசமாகலாம் என்ற நிலையில் இந்தியா தலையிட்டு தமிழீழத்தை தமிழர்களது கையில் இருந்து தட்டிவிட்டது.

யாழ்ப்பாணத்தில் நாற்பதாயிரத்திற்கு அதிகமான சிங்களப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளது முற்றுகைக்குள் சிக்கித்திணறி மரணத்தை எதிர்நோக்கி நின்ற வேளை பிராந்திய வல்லரசு என்ற கோதாவில் தலையிட்டு காரியத்தை கெடுத்திருந்தது. அன்று மாத்திரம் இந்தியா வழமைபோன்று தலையிடாக் கொள்கையுடன் இருந்திருந்தால் சுதந்திர தமிழீழத்தை அமைத்து பத்து ஆண்டுகள் அண்மித்திருக்கும்.

இந்தியாவின் துரோகம் இவ்வாறு இருக்க அமெரிக்கா தனது அமைதி(சதி) முகமான நோர்வே ஊடாக பேச்சுவார்த்தை நாடகத்தை அரங்கேற்றி விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தது. சமாதானத்தை கடைப்பிடித்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.

மாபெரும் இழப்புகளை தொடர்ந்து அர்த்தமற்ற சூழ்நிலையில் சந்தித்து வந்தாலும் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளது கட்டமைப்பு பலமிக்கதாகவே இருந்துவந்தது. இதனை பொறுக்காத பிராந்திய உலக வல்லரசுகள் இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் துணைகொண்டு சிங்களத்திற்கு அதீத பலத்தை உண்டாக்கி முற்றிலுமாக அழிக்க முற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சமரசத்திற்குள்ளாக விடுதலை இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக சிங்களம் என்ன விதிமீறல்களை செய்தாலும் கண்டுகொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உலக நாடுகள் நின்றதன் விளைவுதான் முள்ளிவாய்க்கால் பேரணர்த்தம் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாகும்.

இன்று சாம்பல் மேட்டில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்சு பறவைகளாக உலகத்தமிழர்கள் மீண்டெழுந்து இராசந்திரப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் மீண்டும் இந்தியா தமிழீழக் கோரிக்கையினை மறுதலித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்த வாழ்வு என்ற கோசத்துடன் முக்கை நுழைத்துள்ளது.

நாம் எமது சொந்தப் பலத்தில் தமிழீழத்திற்கான நுழைவாயில்களை அடையும் தருணங்களில் தலையிட்டு தட்டிப்பறித்த சுதந்திர தமிழீழத்தை இம்முறை எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுக்க முடியாது. நாம் எல்லோரும் ஒன்று சோர்ந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அனைத்துத் தரப்பினரும் ஒன்றபட்டு களமாட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இப்போதைய உச்சநிலைக்கு கூட தமிழர்களின் குறிக்கப்பட்டவர்களது முயற்சியே அடிப்படையாக இருக்கின்றது. தற்காலிக தேவைகளிற்காகவும் சுகங்களிற்காகவும் இன்றும் பெரும்பாலான தமிழர்கள் ஒதுங்கியே நிற்கின்றனர். புலத்தில் நடைபெறும் போராட்டங்களில் பங்கெடுக்காது இருக்கும் எமது பெற்றோர்கள் தமது பிள்ளைகளைக்கூட பங்கேற்க அனுமதிப்பதில்லை.

ஏன் என்றால் போராட்டங்களில் தலைகாட்டிவிட்டால் சிறிலங்கா சென்றுவரும் கனவில் மண்விழுந்துவிடும் என பலர் கருதுகின்றமையால்தான். உங்களைப் போல் எல்லோரிற்கும் தாய்மண்ணை பார்க்க வேண்டும் விழுந்து புரளவேண்டும் என்ற பேரவா இருக்கின்றது.

அவை நிரந்தரமாக எமக்கு கிடைக்க வேண்டும் என்றால் சுதந்திர தமிழீழத்தை வென்றெடுத்தாக வேண்டும். மீண்டும் கொலைவெறியன் மகிந்த லண்டன் வரப்போகின்றான். என்ன செய்யப் போகின்றோம். தயக்கமின்றி உங்கள் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு களம்கானுங்கள் உறவுகளே. நாம் எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலம் எமது விடுதலை நோக்கிய பயணத்தில் உறுதியுடன் பயணிப்பதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைகாட்டும் ஓநாய்களை விரட்டியடிக்கவும் தடையாக இருக்கும் எதிரிகளை வேட்டையாடவும் முடியும்.

“ஆறுகளும் மலைகளும் நம்மோடுதான் உள்ளன. இன்னும் பலபத்து ஆண்டுகள் போராட நாம் ஆய்த்தமாவோம்” – வியட்னாம் தேசிய விடுதலை வீரர் கோசிமின்.

வியட்னாம் தேசிய விடுதலை வீரர் கோசிமின் சொன்ன வார்த்தைகள் எமக்கு ஆயிரம் மடங்கு உத்வேகம் தரக்கூடிய உறுதியாக வார்த்தைகள். எமது விடுதலைப் போராட்டத்தை பல்வேறு நெருக்கடியான சோதனையான இக்கட்டான சவாலான தருணங்களில் எல்லாம் விடுதலைப் போராட்டத்தையும் விடுதலை வீரர்களையும் காத்து துணைநின்ற எமது மலைகளும் காடுகளும் ஆறுகளும் குளங்களும் கடற்கரைகளும் இன்னும் எம்முடன்தான் உள்ளன.

அவை நிச்சயமாக இன்றும் எமது விடுதலைப் போராட்டத்தையும் வீரர்களையும் தளபதிகளையும் காத்துநிற்கும். நம்பிக்கையுடன் களமாடுவோம். தமிழினத்தின் நிரந்தர விடுதலையினையினை உறுதியாக்க எப்போது வெளிப்படவேண்டுமோ அப்போது கண்டிப்பாக வெளிப்படுவார்கள். அந்த மர்மம் விலகும் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு மட்டுமே தெரியும். அப்போது திரையும் விலகும். தடையும் உடையும். தமிழர் படை களம்திரும்பும். தமிழீழம் தனியரசாகும். இது சத்தியம்.

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராச் ஆண்ணாவின் நான்காம் ஆண்டு நினைவும்(20-05-2008) உலகத்தமிழினம் வலிசுமந்த மே-18 மூன்றாம் ஆண்டும் நினைவு கூறப்படும் இன்றைய நாட்களில் உலகத்தமிழர்களாகிய நாம் உறுதிஏற்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ்(15-05-2012)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.