Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

.

யாழ் எஸ். பாஸ்கர்.

அவுஸ்திரேலியாவில் 12 ஆவது எழுத்தாளர் விழா கடந்த 13.05.2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பேணில். பிறஸ்ரன் நகர மண்டபத்தில், திருவள்ளுவர் அரங்கில், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்படவிருந்த விழா சீரற்ற காலநிலை காரணமாக 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 வரை இடைவேளையின்றித் தொடர்ந்து நடைபெற்றது. இடையே பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டியும், விழா முடிவில் இரவு உணவும் வழங்கப்பட்டன.

ஓவியர் ஞானம், கலைவளன் சிசு நாகேந்திரம், கவிஞர் இளமுருகனார் பாரதி, எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழறிஞர் திருநந்தகுமார் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைக்க, விழா இனிதே ஆரம்பமானது. செல்வி சாகித்தியா வேந்தன், செல்வி அபிதாரினி சந்திரன், செல்வி சமுத்திராசிறி பத்மசிறி, செல்வன் ஆரூரன் மதியழகன் ஆகிய மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினை மிகவும் இனிமையாகப் பாடினார்கள். தாயகத்தில் உயிர் நீத்த மக்களுக்காக ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து செல்வி மோசிகா பிரேமதாச செல்வி சிறிசேகா பிரேமதாச சகோதரிகளின் இசைப்பாடல் இடம்பெற்றது. மீன்பாடும் தேன்நாட்டைப் பற்றிய அவர்களின் பாடல் இன்பத்தேனாகச் செவிகளிலே பாய்ந்தது.

அதனைத் தொடர்ந்து சிறுவர் அரங்கு இடம்பெற்றது. “அனுபவப்பகிர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தச் சிறுவர் அரங்கில் தீர்ப்பாளராக செல்வி காவியா வேந்தனும், தமது அனுபவங்களை எடுத்துரைப்போராக செல்வி நித்தியா பத்மசிறி, செல்வன் துவாரகன் சந்திரன், செல்வி ஆரபி மதியழகன் செல்வன் காவியன் பத்மசிறி, செல்வி மோசிகா பிரேமதாச ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் சிறுவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை மிகவும் தெளிவாக அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துரைத்தபோது உண்மையில் பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள் வெளிப்பட்டன.

சிறுவர் அரங்கினைத் தொடர்ந்து இடம்பெற்ற மாணவர் அரங்கில் சிட்னியில் இருந்து வருகை தந்திருந்தவர்களும், மெல்பேணில் வசிப்பவர்களுமாக பன்னிரண்டு மாணவிகளும், ஒரு மாணவனுமாக மொத்தம் பதின்மூவர் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள். “கற்றதும் பெற்றதும்” என்ற தலைப்பில், பிரபல பேச்சாளர் திருநந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாணவர் அரங்கில், செல்வன் ஜனார்த்தன் குமரகுருபரன், செல்விகள் அக்சயா தவராசா, ஆரதி குமணன், டேனிக்கா இரவீந்திரராஜா, ரிசானி கௌரிதாசன், கடாட்சினி ரவிராஜ், ஆரதிமயூரா ரவிக்குமார், கம்சாயினி தில்லைநாதன், மதுசா ஆனந்தராஜா, கீர்த்தனா ஜெயரூபன், மதுரா சண்முகராஜா, நிவேதா கணேசன், கீர்த்தனா சிவபாதசுப்பிரமணியம் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

இவர்கள் அனைவருமே தமிழ் மொழியில் நல்ல ஆற்றலும், சமதாய நோக்கில் மிகுந்த அறிவுள்ளவர்களுமாக விளங்கினார்கள். அவர்களது தமிழ் உச்சரிப்புத் திறமையும், வெளிப்படுத்தும் விடயங்களில் உள்ள தெளிவும் பார்வையாளர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தின. அவர்கள் எடுத்துக்கூறிய விடயங்கள் ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தன. நாளைய சந்ததிகள் பற்றி நம்பிக்கையூட்டும் விதமாக இந்த மாணவர் அரங்கு விளங்கியது.

மாணவர் அரங்கினை அடுத்து. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி பாடும்மீன் சு.சிறிகந்தராசா அவர்கள் தலைமை உரையாற்றினார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய அவர் சங்கத்தின் செயற்பாடுகளைப் பற்றியும், இன்றைய காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டியதன் அவசியம் பற்றியும் மிகத்தெளிவாக எடுத்துரைத்து, எல்லோரையும் ஒருங்கிணைய அழைப்பு விடுத்தார்.

தலைவர் உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்களுக்கும். மாணவர்களுக்கும் அன்பளிப்பக்களாக நூற்பொதிகள் வழங்கப்பட்டன.

அதனை அடுத்து கவிஞர் ‘கல்லோடைக்கரன்’ தலைமையில் கவியரங்கு இடம்பெற்றது. “புலம்பெயர்ந்ததால் தமிழர்கள் நாம் நிலை உயர்ந்தோமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கவியரங்கிற்கு பிரபல கவிஞர் வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கவிஞர்கள் சௌந்தரி கணேசன், கமலேஸ்வரன், சொல்வேந்தன் நிர்மலன்சிவா, ஆனந்த் பாலசுப்பிரமணியம், வெள்ளையன் தங்கையன், கலாநிதி மணிவண்ணன், கலாநிதி பிரவீணன் மகேந்திரராஜா ஆகியோர் பங்குபற்றினார்கள். கவிஞர்கள் உணர்ச்சிபூர்வமாகத் தமது கருத்துக்களைக் கவிமழையாகப் பொழிந்து அரங்கைச் சிறப்பித்தார்கள்.

அதனை அடுத்து பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் தலைமையில், ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளும் தமிழ் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா?’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு இடம்பெற்றது. ஊடகங்கள், படைப்புக்கள் என இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்தக்கருத்தரங்கில் திருமதி. கோகிலா மகேந்திரன், திரு.கே.எஸ்.சுதாகர், “சின்னமாமி” புகழ் திரு. நித்தி கனகரெத்தினம், திரு. யாழ்.எஸ்.பாஸ்கர், திரு. கல்லோடைக்கரன் மு.சேமகரன், திரு. ஆவூரான் சந்திரன், திரு. த. சசிதரன், திரு. இரத்தினம் கந்தசாமி, திரு. சந்திரசேகரன் ஜெயகுமாரன், திருமதி சாந்தினி புவனேந்திரராசா, திரு. சிறிநந்தகுமார், ஆகியோர் பங்கு பற்றினர்.

தமிழில் சிறுகதை, கவிதை, நாவல், வானொலி, தொலைக்காட்சி, இதழ்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள் என்றிவ்வாறு தனித்தனித் தலைப் புக்களில் ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களைச் சமர்ப்பித்தனர். கருத்தாழம்மிக்க தகவல்களை நிறையவே இந்தக்கருத்தரங்கில் பங்கு பற்றியோர் வழங்கினர். அதேவேளை சிலர் தலைப்புக்களை விட்டு ஏதேதோ விடயங்களை உச்சரித்ததையும், சிலர் தமது தாழ்வு மனப்பான்மையையை மூடிமறைப்பதிலும், தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் கரிசினை காட்டியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. சிலர் தமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் கருத்துக்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வு பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாமல் இரண்டு மடங்கு நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டார்கள். இது பின்னைய நிகழ்ச்சிகளுக்குப் பங்கத்தையும், விழா அமைப்பாளர்களுக்குச் சங்கடத்தையும் ஏற்படுத்தியதை உணரக்கூடியதாகவிருந்தது.

அடுத்ததாக நூல் வெளியீட்டரங்கு இடம்பெற்றது. பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வரங்கில் மூன்று நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டுவைக்கப்பட்டன.

இனவிடுதலைப் போரில் களமாடி வித்தாகிய பெண்போராளிகளின் கவிதைகளின் தொகுப்பான “பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” என்ற நூலை திரு. சண்முகம் சபேசன் வெளியிட்டு வைக்க, நூல் அறிமுகவுரையினைத் திருமதி மதுபாசினி ரகுபதி நிகழ்த்தினார். திரு. செந்தூரன், திரு. மு. நந்தகுமார், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத் தலைவரின் சார்பில் திரு. ச.சபேசன் ஆகியோர் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, ‘ஜீவநதி’ அவுஸ்திரேலிய சிறப்பிதழ் வெளியிட்டுவைக்கப்பட்டது. 12 ஆவது அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “ஜீவநதி” சஞ்சிகை இந்த அவுஸ்திரேலியச் சிறப்பிதழை வெளியிட்டிருந்தது. இதில் அவுஸ்திரேலியாவில் வாழும் பல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பிரபல எழுத்தாளர் லெ.முருகபூபதி இதழினை வெளியிட்டு வைத்தார். திரு. செல்வபாண்டியன் அறிமுக உரையாற்றினார். சட்டத்தரணி செ.ரவீந்திரன், மருத்துவக்கலாநிதி எம்.சிவகடாட்சம் திரு. எஸ்.கொர்னேலியஸ், மரபு ஆசிரியர் திரு. விமல். அரவிந்தன் ஆகியோருக்குச் சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டன.

அடுத்ததாக, ‘வானொலி மாமா’ திரு. நா. மகேசன் அவர்களின் “திருக்குறளில் புதிய தரிசனங்கள் இரண்டு” என்ற நூலை பிரபல எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணி வெளியிட்டு வைக்க, பிரபல நூல் ஆய்வாளர் திரு. க. சிவசம்பு அறிமுகவுரையை நிகழ்த்தினார். கேசி தமிழ் மன்றத் தலைவர் திரு. சிவசுதன், முன்னாள் ஈழத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. மகேந்திரராஜா, மருத்துவக்கலாநிதி தம்பி. பரா ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர் திரு. நா.மகேசன் ஏற்புரையாற்றினார்.

எழுத்தாளர் விழாவின் இறுதி நிகழ்ச்சியான கலையரங்கில் இரண்டு நடனங்களும், ஒரு நாடகமும இடம்பெற்றன. பிரபல நடன ஆசிரியை திருமதி நிருத்தசொரூபி தர்மகுலேந்திரனின் நெறியாள்கையில் “நிருத்தா இந்தியன் நுண்கலைக்கல்லூரி” மாணவிகளான திருமதி சுதர்சனி குகா, செல்வி சுதர்சனா கண்ணன் சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கிய நடன நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக மிகவும் அற்புதமாக இருந்தன.

நடனங்களைத் தொடர்ந்து சிட்னி சோலைக்குயில் அவைக்காற்று கலைக்கழகம் வழங்கிய “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்ற மஹாகவியின் பாநாடகம் இடம் பெற்றது. பிரபல எழுத்தாளர், நாடக கலா வித்தகர் திருமதி கோகிலா மகேந்திரனின் நெறியாள்கையில். பிரவீணன் மகேந்திரராசா, வேலுப்பிள்ளை நாகராசா, நாராயணசர்மா கிரு~;ணா, சிவபாலன் கேசவன் அகியோருடன் திருமதி. கோகிலா மகேந்திரனும் நடித்த இந்த நாடகம் மிகச்சிறப்பாக இருந்தது. பார்வையாளர்களைத் தாயக நினைவுகளில் மூழ்கவைத்தது. நடிகர்கள் எல்லோரும் பாத்திரங்களோடு ஒன்றி மிகவும் அற்புதமாக நடித்தார்கள்.

இந்த விழா நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர்களாக திரு. நவரெத்தினம் அல்லமதேவனும், திருமதி நித்தியதாரிணி ஆனந்தகுமாரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள். அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயலாளர் திருமதி மாலதி முருகபூபதி நன்றியுரை நிகழ்த்தினார்.

இவ்வாறு, சிறுவர் அரங்கு, மாணவர் அரங்கு, கவியரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, நூல்வெளியீட்டரங்கு என வௌவேறு அரங்குகளில் பன்முகப்பட்ட ஆற்றல்களையும், ஆளுமைகளையும் வெளிப்படுத்தும் விதமாக ஏழு மணிநேரம் இடைவிடாது நடைபெற்ற இந்த 12 ஆவது எழுத்தாளர் விழா அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இனம் தொடர்பான செயற்பாடுகளில் அழுத்தமாகப் பதிக்கப்பட்டதொரு மைல்கல் என்றால் அது மிகையில்லை.

http://www.tamilmura...925382235589131

நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.