Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்து இசை பற்றிய சிறிய தேடல்...

Featured Replies

ஆஸித் தமிழ் - அறிமுக தொகுப்பு!

இந் நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க...

ஆஸித் தமிழ் நிகழ்ச்சியினை கேட்பதற்காய் வானொலியை நேசித்தபடி செவிப் புலனை வானொலியில் இணைத்து செயற் திறனை வருவாயீட்டலில் கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் அன்பு கலந்த வணக்கம்,

நான் தூயவன், தும்பிக்கையான்,

இன்றைய தினம், காற்றலையின் வழியே, உங்கள் காதுகளை வந்தடைந்து கொண்டிருக்கும் முதல் நிகழ்ச்சியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான எண்ணக் கருத்துக்களும் துணையிருந்தால் என்றும் தொடரும் இந் நிகழ்ச்சி!

images.jpg

ஆஸித் தமிழ் ; இது என்ன புது நிகழ்சியாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆம் தாய் நிலத்தை விட்டுப் பறந்து வந்த புலத்து இளைஞனின் உள்ளத்து உணர்வுகளை தாங்கியதாக இந் நிகழ்ச்சி அமையவிருக்கின்றது. கொஞ்சம் வித்தியாசமான வடிவில் கொஞ்சும் தமிழ் கலந்து, ஒரு உரைச் சித்திரமாக, சினிமா விமர்சன மேடையாக, நம்மவர் படைப்புக்களை ஞானி நிலத்தே கொண்டு வரும் தேடல் முயற்சியாக இந் நிகழ்ச்சி அமையும் என்பதில் ஐயமில்லை. இந் நிகழ்ச்சிக்கு உங்களின் ஆக்கங்களையும், எண்ணக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நீங்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம். அனுப்பி வைக்க வேண்டிய முகவரிthooyavan.thumpi@gmail.com.

ITunes, I pod, Ipad, மற்றும் இணையத் தளத்தில் கூகிள் தேடு பொறியில் Aussie Tamil Podcast எனத் தேடுவதனூடாகவும் வாரந் தோறும் இந் நிகழ்ச்சியினை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இலகுவாக ஐ ரியூன்ஸில் இந் நிகழ்ச்சியினை Subscribe செய்வதனூடாக, வாரந் தோறும் தானியங்கி / Automatic முறையில் Update செய்தும் கொள்ளலாம். இணையத்தில் www.aussietamilpodcast.comஎனும் முகவரியூடாகவும் இந் நிகழ்ச்சியினை கேட்டு மகிழலாம். வாருங்கள் இனி நிகழ்ச்சிக்குள் போவோம்!

இந்த வார நிகழ்ச்சியில் நாம் பார்க்கவிருப்பது, ஈழத்து இசை பற்றிய பார்வை.

நீண்ட வழி நடந்து, உலகில் நிமிர்ந்த புராதன கலாச்சாரங்களுள் ஒன்றாக இருக்கும் எம் தமிழர்களின் இசை பற்றி இலகுவில் ஒரு மணி நேர நிகழ்ச்சியினுள் சொல்லி முடிக்க முடியாது. ஆனாலும் ஈழத்து இசை பற்றி சுருக்கமாக, உங்கள் விருப்புக்கேற்றவாறு என்னால் இயன்றவற்றை தொகுத்து ஓர் உரைச் சித்திரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஈழத்து இசை எனும் அடை மொழியினுள் நாட்டார் பாடல்கள்,

பொப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், ஈழப் பாடல்கள் எனச் சிறப்பிக்கப்படும் புரட்சிப் பாடல்கள், திருத்தலங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மீது பாடப்பட்ட ஆன்மிகப் பாசுரங்கள்,

இன்றைய இளம் சந்ததியினரால் முன்னெடுக்கப்படும் Hip pop, Rap இசை வடிவங்கள் வந்து கொள்ளும்.

ஈழத்தில் மீன்பாடும் தேன் நாடாம் மட்டு நகரில் இசையோடு கூடிய இனிமையான நாட்டார் பாடல்கள் வெளிவந்ததாக கூறுவார்கள். இது பற்றி தனியான ஓர் உரையாடலினையே நிகழ்த்தலாம். அவ்வளவிற்கு சந்தச் செறிவும். சங்கீதச் சுரமும் கலந்து சிந்தைக்கு விருந்து கொடுக்கும் வண்ணம் சிறப்பு மிக்க பாடல்கள் அவை.

ஈழத்து மெல்லிசையில் என் சிற்றறிவிற்கு எட்டிய வரை, ஆரம்ப காலப் பாடல்களால எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய காடு தழுவி வரும் கங்கையாளே எங்கும் ஓடி… எனும் பாடலும், உனக்கு தெரியுமா? நான் உன்னை நினைப்பது எனும் பாடலும் விளங்குகின்றது..

இதன் பின்னர் பி.முத்தழகு, கலாவதி, திருமலை பத்மநாதன், ரகுநாதன் போன்றோர் ஈழத்து மெல்லிசையின் இனிமையான அக் காலப் பயணத்திற்கு தூண்டு கோலாக விளங்கினார்கள். இரட்டையர்கள் திருமலைச் சந்திரன், ஆர். முத்துசாமி. ஆகியோருடன் பரா அவர்களும் இணைந்து ஈழத்து மெல்லிசை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார்கள்.

ஈழத்து மெல்லிசையின் தோற்றுவாய் என்பது மலையக நாட்டார் இலக்கியம், மலையக நாட்டார் பாடல்கள் ஊடாக பிறந்து கொள்கின்றது.

முத்துசாமியும், ரொக்சாமியும் வந்தபின்னர் தான் எஸ்.கே பரராஜசிங்கத்தின் ஆர்வம் ஈழத்து மெல்லிசையின் மீது மையல் கொண்டது.

ஈழத்து பொப் இசைக்கு பங்களிப்பு நல்கியது போலவே, ஈழத்து மெல்லிசைக்கு சகோதர மொழிக் கலைஞர்களின் பங்களிப்பு ஆரம்ப காலத்தில் கிடைக்கப்பெற்றது.

இவர்களுடன் ராஜமனோகரி புலேந்திரன், மனோகரி சதாசிவம், நிலாமதி பிச்சையப்பா, சிறீதர் பிச்சையப்பா, வர்ண ராமேஸ்வரன், போன்றோரும் ஈழத்து மெல்லிசைக்கு பங்களிப்பு நல்கியவர்களாக விளங்குகின்றார்கள்.

இனி ஈழத்து பொப்பிசை பற்றிப் பார்ப்போமா?

பொப் எனும் இசை வடிவம் இலங்கையில் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுபிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. இந்த வகையில் இலங்கை 1505ம்ஆண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658ம் ஆண்டு வரைபோர்த்துக்கேயர்களால் ஆளப்பட்டது. அந்தக் காலங்களில் இலங்கையில் வாழ்ந்தஇந்து, பௌத்த சமயங்களைச் சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவமதத்திற்கு மாறவேண்டும் எனப் போர்த்துக்கேயர் ஆணை பிறப்பித்திருந்தனர்.இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள்கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என வற்புறுத்தப்பட்டனர்.

மேற் கூறிய காரணங்களால் இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்தஇடங்களில் தேவாலயங்கள் கட்டியெழுப்பப் பட்டது. அப்போதைய இலங்கைமக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்தபோத்துக்கேயர், தேவ ஆராதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப்இசையினை பயன்படுத்த தொடங்கினர். இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம்நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்திவாரத்தின் சாயலே இன்றும்இலங்கையின் பொப் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திவருகின்றது.அன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சிலதமிழ் பொப் இசைப் பாடல்கள் செவிமடுக்கப்பட்டு வந்துள்ளன. அந்தக்காலங்களில்பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களைபாடிவந்திருந்தனர்.

“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்”

அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்”

என்று ஆரம்பிக்கும் பாடலும்,

அன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பது போன்று அமையும்பாடலான

“என்ன பிடிக்கிறாய் அந்தோனி?

எலி பிடிக்கிறன் சிஞ்சோரே!

பொத்தி பொத்தி பிடி அந்தோனி!!

பூறிக் கொண்டோடுது சிஞ்சோரே”

போன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயேதமிழில் உருவாகிய பிரபலமான பொப்பிசைப் பாடல்கள்.

இவ்வாறான பல பாடல்கள், தமிழர்களின் சோம்பேறிக் குணத்தால் ஆவணப்படுத்தல் ஏதுமின்றி கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன. அதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் (1815 -1948), மேலைத் தேச நாகரிகங்கள்அறிமுகப்படுத்தப் பட்டதும், ஒரு முழுமையான நிர்வாக அமைப்பு முறைவந்ததும், இசை வடிவத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின.ஆங்கிலேயர்களின் பாண்ட், மொங்கட் ட்ரம், டிஸ், ட்டம்பற் ட்ரம்,போன்றவாத்தியங்கள்,இந்த இசையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர்காலத்தில் இலங்கையில் பொப் இசை ஒரு புது வேகத்துடன் அரங்கேறஆரம்பித்தது. குறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்களில் (விசேடநிகழ்வுகள்), விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்றநிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” என்றஆட்டத்தின் போதும் இந்த பொப் இசை மேற்கத்தய இசைக் கருவிகளின்பக்கவாத்தியத்துடன் புது உத்வேகம் பெற்று அரங்கேறத் தொடங்கியது.

அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும், திருமணம் போன்ற வீட்டுவிசேடங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன. இலங்கையில் சுதந்திரத்தின் (1948) பின்னரான காலப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் பல புதியஇசைக் குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள்.இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக் குழுக்களால்இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கியது. இருப்பினும்தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துகாரணத்தால் ஈழத்தில் தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால்1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக் கூடியதாகஇருந்தது.

அதன் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த பல அரசியற் குழப்பங்கள், 1958ம் ஆண்டுகலவரம், ஸ்ரீமா ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் என்பனவற்றால் மேற்படி தமிழ்ப் பொப்இசைக்கும் பஞ்சம் ஏற்படலாகிற்று. 1977 ஆம் அண்டு ஐக்கிய தேசியக் கட்சிஇலங்கையின் ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் திறந்த பொருளாதாரக்கொள்கையினை கொண்டு வந்து;அனைத்தையும் நவநாகரிகப்படுத்தி,மேலைநாட்டு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்து சேர்ந்த போது, தமிழ்பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறு கொண்டெழுந்து என்றும்இல்லாத சிகரத்தை அடைந்தது.

ஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும்.

சுராங்கனி சுராங்கனிஎன்ற ..மனோகரனின் பாடல்,

“கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல்,

“குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போல் பல பாடல்கள்வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்றன. அவை இலங்கையில் மட்டுமன்றிஇலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தைஎற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின. நித்தி கனகரத்தினைத்தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன்; அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன்.வி.முத்தழகு, ஸ்டெனிஸ் சிவாநந்தன், அன்சார், என்.இமானுவேல் போன்றோர்ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வந்து சேர பொப்பிசை வளரத் தொடங்கியது.

பல இசைக் குழுக்களும் காலப் போக்கில் பொப் இசையினுள் தடம் பதிக்க பலபாடல்கள் வெளிவரத் தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அன்றைய காலங்களில் இலங்கையில்பொப்பிசை, நகைச்சுவை, மற்றும் சில கலைகள் இலங்கை மண்ணியற் பண்பு,இலங்கை மொழி வழக்கு, என்பவற்றை மட்டுமன்றி சமுதாயசீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது.இதற்கு "நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே!" என்ற பாடலைஉதாரணமாகச் சொல்லலாம். அந்தக் காலங்களில் இலங்கையில் குறிப்பாகயாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்றபேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர்.குறிப்பாகமாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும்,பல்கலைக் கழகங்களில்இருந்தும் கள்ளுக்கு தவறணைகளுக்கே நேரடியாக போபவர்களாகஇருந்தனர்.இந்த காலங்களிலேயே நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம்போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது.

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலிமூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்தஎம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தமையாகும். பின்னர் இலங்கை பொப் இசைப் பாடல்கள்தென்னிந்திய தமிழ் திரைகளிலும் இடம்பெறலாயிற்று. 1977 அம் அண்டு,

என்ற பாடலைஇளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பொப்இசையை ஒட்டியதாக,http://www.youtube.com/watch?v=igd3BH45x6Y, “உப்புமா கிண்டிவையடி”, பட்டண்ணா சொன்னாரண்ணா, போன்ற பாடல்கள் ஒலிக்கத்தொடங்கின. இன்றும் கூட சுராங்கனி போன்ற பொப் பாடல்கள் மீள் கலவைஇசை வடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை நீங்கள் பார்த்தும், கேட்டுமிருக்க கூடும்.

எனினும், 1983 களின் பின்னதான இலங்கையின் இனப் பிரச்சினைகாரணமாக, கலைஞர்கள். பாடகர்களின் வெளியேற்றம், தென்னிந்தியசினிமா பாடல் மோகம் போன்ற பல காரங்களினால் இன்று இந்த இலங்கைபொப் பாடல்களின் வருகையானது குறைவடைந்து செல்கின்றது. இதற்குஉயிர் கொடுத்து அதை ஒலிபரப்பி தமது பாரம்பரியங்களை பேணிப்பாதுகாத்து அடுத்த தலை முறையிடம் கொண்டு செல்லும் நல்லமுயற்சினைச் செய்ய முடியாதவர்களாக இலங்கையிலுள்ள அரச, தனியார்வானொலிகள் விளங்குகின்றன. எனினும், மேற்படி பொப் இசையில்சிங்களவர்கள் இன்று சிகரத்தை அடைந்துள்ளனர். இலங்கை வானொலி அன்றைய காலத்தில் சந்தன மேடை என்றோர் சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்ச்சியினை நம்மவர் படைப்புக்களுக்காக ஒதுக்கியிருந்தது. ஆனால் இன்றோ தமிழ் ஊடகங்கள் வணிக நோக்கத்தினை அதிகம் எதிர்பார்த்து தமது பணியினைச் செய்யும் காரணத்தினால் தமிழிசை வளர்ச்சிக்கு அதிகளவில் பங்களிப்பு நல்கவில்லை என்றே கூறலாம். சக்தி எப்.எம் மாத்திரம் 2005-2006ம் ஆண்டு காலப் பகுதியில் நம்ம ஹிட்ஸ் என்றோர் நிகழ்ச்சியினை ஒலிபரப்பி வந்ததோடு, உள்ளூர் கலைஞர்களின் பேட்டிகளை ஞாயிறு தோறும் ஒலிபரப்பி, உள்ளூர் கலைஞர்களின் இசை வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கியது. ஆனால் அந்த அரிய முயற்சி சிறிது காலத்திற்கே நிலைத்திருந்தது.

சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களைகொடுத்து அவர்களின் இசையினை ஊக்குவிக்கின்றன.

எது எப்படியோ, இன்று புலத்தில் புலம்பெயர்ந்து வாழும் மேற்படி பொப்பிசைதிலகங்களை தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாவதுதமது இலங்கைத் தமிழர்களின் தனிச் சிறப்பான பொப் இசையினை மீண்டும்துளிர்விக்க முயற்சி எடுக்க வேண்டும்!

நிகழ்ச்சியில் அடுத்து நாம் கேட்கவிருப்பது ஈழப் பாடல்கள் பற்றிய அலசலாகும்.

ஒரு போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருப்பது, பிரச்சாரமாகும். போராட்டத்தின் வெற்றி தோல்விக்கு மனோதத்துவ ரீதியில் மக்களைத் தயார்படுத்துவதும் பிரச்சாரங்களாகும். ஈழப் போராட்டத்தின் முக்கியத்துவத்தினை மக்கள் மத்தியில் உணர்த்த விரும்பிய புலிகள் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தமிழக கலைஞர்களின் உதவியோடு போருக்கு ஆட்சேர்க்கும் நோக்கிலும், போராட்டம் தொடர்பான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கிலும் பாடல்களை ஒலி நாடாக்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். ஈழத்துப் புரட்சிப் பாடல்களின் கவித்துவ வெளிப்பாடு கவிஞர் புதுவை இரத்தினதுரை, உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தனின் பங்களிப்போடு ஆரம்பமாகின்றது. ஆரம்ப காலத்தில் T.M சௌந்தர்ராஜன், வாணிஜெயராம், பி.சுசீலா, மனோ, எம்.எஸ்.ராஜேஸ்வரி, வாணிஜெயராம், மலேசியாவாசுதேவன், ஆகியோரின் பங்களிப்புடன் ஆரம்ப கால ஈழப் பாடல்கள் உருவாக்கம் பெற்றன.

ஈழப் போருக்குரிய ஆதரவு மக்கள் மத்தியில் பரவ, ஈழத்தில் இசைவாணர் கண்ணன், எஸ்,பி. ஈஸ்வரதாசன் ஆகிய இசை ஜாம்பவான்களின் பங்களிப்பு ஈழத்து இசையில் ஓர் இசைப் புரட்சியினை ஏற்படுத்தியது. பங்களிப்போடு எஸ்.ஜி.சாந்தன், போராளி கலைஞன் சிட்டு, ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, குட்டிக் கண்ணன், முதலிய பாடகர்கள் 1990களின் பின்னர் தோற்றம் பெற்று ஒரு தசாப்த காலத்திற்கு ஈழத்து இசையில் தம் திறமையினை வெளிப்படுத்தி வந்தார்கள். பின்னர் இசைப்பிரியன், இசையரசன், வசீகரன் போன்ற போராளிக் கலைஞர்களின் பங்களிப்பானது ஈழத்து இசையில் டிஜிற்றல் தொழில்நுட்ப இசைப் பாய்ச்சலுக்கு வித்திட்டது எனலாம். இசைக் குடும்பத்தின் வழி வந்த போராளி கலைஞன் இசைப்பிரியன் அவர்கள் ஈழத்து இசையில் பல புதிய பரிணாமங்களை, புதிய முறை ஒலிப் பதிவு நுட்பங்களை இசைக் கோர்வைகளை அறிமுகப்படுத்தினார். இக் காலத்தில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், செம்பருத்தி, ஆகியோருடன் பல போராளி கலைஞர்களும் பாடல் உருவாக்கத்திலும், பாடல் இசையமைப்பிற்கும் பங்களிப்பு நல்கினார்கள். சம காலத்தில் கவிஞர் காசி ஆனந்தனனுடன், தேனிசை செல்லப்பாவும் அவர் குடும்பத்தினரும் இணைந்து ஈழப் புரட்சிப் பாடல்களின் வளர்சிக்கு பங்களிப்பு நல்கினார்கள்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன், சித்ரா, கார்த்திகை 27 பாடல் புகழ் ஓ.எஸ்.அருண், நித்தியஸ்ரீ மகாதேவன், திப்பு, சைந்தவி, கார்த்திக், மன்மதராசா புகழ் மாலதி, ரி.எல்.மகாராஜன், கோவை கமலா, கிருஷ்ணராஜ், ஜேசுதாஸ், சிறீராம், ஹரினி, நிவேதா, மகதி, புஷ்பவனம் குப்புசாமி, உன்னி கிருஷ்ணன், உன்னிமேனன், ஆகிய தாய்த் தமிழக கலைஞர்களும், இசையமைப்பாளர் இனியவன், கவிஞர் புலமை பித்தன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் வைரமுத்து போன்ற கவிஞர்களும் ஈழத்து இசைக்கு பங்களிப்பு நல்கினார்கள்.

1990ம் ஆண்டில் மாற்றுக் கருத்தாளர்களின் எண்ணிக்கை பெருக, புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தமக்கென்று தனித்துவமான வானொலிச் சேவையினையும், பாடல்கள் சிலவற்றையும் உருவாக்கினார்கள். அவற்றில் சிலவற்றினை ஆவணப்படுத்திட முடியவில்லை. 1985ம் ஆண்டு குடாநாட்டில் பிரபல்யம் பெற்றிருந்த சேரனின் கவி வரிகளில் உருவான, கண்ணனின் இசையில் அமைந்த மண் சுமந்த மேனியர் எனும் பல்கலைக் கழக மாணவர்களின் நாடகத்தில் இடம் பெற்ற

“அதிகாலையில் யாழ் நகர் மீது பனி படர்கின்றது. பனை மர உயரமும், பண்ணை வெளியும் கண் தொடுமிடமெல்லாம் மறைகின்றது.

தெருநிலமெங்கும் துவக்கொடு வாகனம் திரிகின்றது… எனும் பாடல் பிற்காலத்தில் ஈபிடிபி கட்சியினரின் பிரச்சாரப் பாடலாகவும் பயன்படுத்தப்பட்டது. ஈழத்தின் இளைய தலைமுறைக் கலைஞர்களால் மேற்கத்தைய இசையின் தாக்கத்தின் வெளிப்பாடாக Rap இசை, கானா பாடல்கள் 2000ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இந்த அருமையான முயற்சிக்கு தளகர்த்தர்களாக நவகம்புர கணேஷ், கருப்பையா பிள்ளை பிரபகாரன் முதலியோரும், லைசியம் இசைக் குழுவினரும் துணை நின்றார்கள். பின்னர் டினேஷ் கனகரத்தினம், டிலுக்ஸன் ராஜேந்திரன், கந்தப்பு ஜெயந்தன், பேடி ஜே, ஆகிய கலைஞர்களும் ஈழத்து நவீன இசை வளர்ச்சிக்கு துணை புரிந்தார்கள். சிங்கள கலைஞர்களின் ஊக்கப்படுத்தலுடனும், ஆதரவுடனும் இலங்கையில் சமாதான காலம் எனச் சுட்டப்படும் 2002ம் ஆண்டின் பின்னர் கிருஷான், இன்பாஸ், பாத்யா சந்தோஷ், இராஜ், ரணிந்து ஆகியோரின் தயவில் ஒரு சில தமிழ்ப் பாடல்கள் தலை காட்டின.

இந்த சிறு தொகுப்பிற்குரிய தகவல்களில் சில தவறுகள் இருக்கலாம். தயக்கமின்றி சுட்டிக் காட்டுங்கள். நீங்கள் மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய முகவரி: thooyavan.thumpi@gmail.com

இந் நிகழ்ச்சியினைப் படைப்பதற்கு துணை நின்ற வலைப் பதிவு எழுத்தாளர்கள் திரு.ஜனார்த்தனன் கந்தையா, சிவநேசன் தியாகராஜா, தனிமரம் நேசன் ஆகிய அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்கின்றேன்.

மீண்டும் மற்றுமோர் நிகழ்ச்சியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, இந் நிகழ்ச்சியினை இதுவரை நேரமும் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றுக் கொள்வது,

தோழமையுடன்

தூயவன் தும்பிக்கையான்.

நன்றி, வணக்கம் நேயர்களே! மற்றுமோர் பொழுதில் வானலை வழியே சந்திப்போம்!!

இந் நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க...

http://www.aussietamilpodcast.com/2012/05/blog-post.html

நான் படித்து, கேட்டு ரசித்த விடயத்தை உங்களோடும் பகிர்ந்திருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.