Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் காந்தா எழுதிய *'நினைவுகள் வேகமாக'*

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராளி காந்தா இறுதிச்சமர் முடிவில் தனது பிள்ளைகளோடு இராணுவக்கட்டுப்பாட்டை நோக்கி வந்த நேரம் எறிகணைபட்டு வீரச்சாவடைந்துவிட்டார். கையில் சரிந்த காந்தாவின் உடலை அவரது போராளிக்கணவன் தனது மனைவியின் உடலை நாய்களுக்கு இரையாகாமல் புதைத்துவிட்டு வருவதாக உறவுகளிடம் சொல்லிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் உறவுகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு காந்தாவின் உடலைப்புதைத்துவிட்டுப் போகப்போனவர். இன்றுவரையும் திரும்பி வரவில்லை. காந்தாவின் மகளும் மகனும் ஓர் உறவினால் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். தாயையும் தந்தையையும் இழந்த அந்தப்பிள்ளைகளுக்க எல்லாமுமாக அந்த உறவு அவர்களைத் தனது சொந்தப்பிள்ளைகளுக்கும் மேலாக கவனிக்கிறார். காந்தாவின் மகளோடு கதைக்கிற போது காந்தா வெளிநாட்டில் இருப்பதாக நம்புகிற அவளது குழந்தைக் கனவுகளுக்கு உனது அம்மா விரைவில் வருவாள் என்று ஆறுதலையே சொல்ல முடிகிறது.

காந்தா ஒரு சிறந்த படைப்பாளி. அவளது எழுத்துக்கள் ஏராளம் பத்திரிகைகள் வெளியீடுகள் ஒளிப்பதிவுகள் என வெளியாகியிருக்கின்றன. மகளீர் படையணியின் போர்க்கள ஆவணமான 2ம்லெப்.மாலிதி படையிணியின் வெளியீடாக வெளியாகிய 'வேருமாகி விழுதுமாகி' என்ற பெரிய நூலை ஆக்கிய மலைமகள் , காந்தா , புரட்சிகா ஆகியே தீரமிகு வீராங்கனைகளின் நினைவாக மிஞ்சியிருப்பது அவர்கள் படைத்த படைப்புகளே.

காந்தா எழுதிய ஒரு கதையொன்று உங்களுக்காக :-

[size=2] [/size]

[size=6]*'நினைவுகள் வேகமாக'*[/size]

அந்த வரைபடம் எனது கோல்சருக்குள் மடித்தபடி பலநாளாய் கிடக்குது. எனக்கு அதைப் பார்க்க வேண்டுமெண்டா அதைப் பயன்படுத்திதான் மோட்டார்களுக்கு இலக்கின் வகை சொல்ல வேணுமெண்டோ அவசியம் இல்லை. இப்பதான் நிஸ்மியாக்கா வந்தவா. வன்னியெண்டபடியால இந்த குச்சொழுக்கைகள் அவாவிற்கு வடிவாத் தெரியாது. வரைபடத்தை எடுக்கச் சொல்லி அதில வடிவா விளங்கப்படுத்தச் சொல்லியும் கேட்டவா. எனக்கு பஞ்சியாகத்தான் இருந்தது. அக்கா கேட்டுட்டா எண்டதற்கு காட்டினன்.

வரைபடத்தை பார்க்கேக்க, “இந்த றோட்டிலயே காந்தா உம்மட வீடு” எண்டு அக்கா கேட்டவா. எனக்க ஒரே விசரா இருந்தது. வீடு இதிலதான் எண்டு காட்டினப்போ எனக்கு ஏதோ செய்துச்சுது. ‘சீ... என்ன காலமப்பா’ என்று சினந்தும் கொண்டன்.

இப்பதான் அக்கா கேட்டா “நீ நிக்கிற இடத்தில இருந்து எத்தனை கிலோ மீற்றர் தெரியுமா...?” என்னண்டா. அப்பதான் அந்த நாள் நினைவிற்கு வந்தது. அங்கதான் இருந்தன். ஆனால். எங்கயோ போட்டான். அக்கா என்னட்ட எத்தனை கிலோ மீற்றர் எண்ட பதில் கேட்காமலே போயிற்றா. அந்த இடத்தவிட்டு எப்ப போனா எண்டு எனக்குத் தெரியேல்ல.

யோசிக்கேக்க மகிழ்ச்சியாகவும் இருந்தது – வெறுப்பாயும் இருந்தது. என்ர உடல் சோர்வா, அலுப்பா இருந்தது. ஏனெண்டா நேற்றிரவு நித்திரை இல்லை. அதற்கு முதல்நாளும் இல்லை. முதல் நாள் வேவுக்காரரோட போய் இராணுவத்தின்ர தடம் கிடக்கோ எண்டு பாத்து உறுதிப்படுத்தினனான். அதுதான் இரண்டு நாளா உசார் நிலையில இருந்திட்டம்.

அந்த நிலையில் உசாராய் இருந்த படியாலதான் அவன் அங்கு வெளிக்கிடேக்க கண்டு அடிச்சிட்டம். அவன்ர நகர்வு அந்த இடத்திலேயே தடை செய்யப்பட்டது. எனக்கு ஒரே இராணுவத்தின்ர நினைவுதான். ஏனெண்டா கொஞ்சத் தூரத்தில் எங்கட வீடு அங்கதான். அம்மா,அப்பா,தம்பி உறவுகள் என எல்லோரும் கூடியிருந்தா ஊர். அவைகளுக்கு என்ன நடந்ததோ...சீ... நான் இப்படி நினைக்கக் கூடாது. என்னை நானே திட்டிக்கொண்டேன்.

என்ர பிள்ளையள் பாவங்கள். நேற்று வடிவாச் சண்டை பிடிச்சதுகள். தங்கட தங்கட காப்பு நிலைகளிலே என்ன செய்யுதுகள்? வடிவா அவதானிச்சுதுகளோ என்று பார்ப்பம் எண்டுதான் வெளிக்கிட்டன். நான் துவக்க எடுத்துக்கொண்டு வர தேனரசி வந்தாள். முன்னுக்கு நடந்தாள். அதோட குறிஞ்சியும் பின்னுக்கு துவக்கோட வந்தா. இரண்டு கிலோ மீற்றர் நீளத்துக்கு நடந்து நிலைகளைப் பார்த்தோம்.

அது 55வது காப்பரண். அதில நின்ற பல்லவி, குறிஞ்சிதான் உறவுக்காரி என்று எனக்குத் தெரியாது. பல்லவியின்ர பதுங்குகுழிக்க நிண்டபோது குறிஞ்சிதான் அவளிட்டக் கேட்டாள். “பல்லவி இதில இருந்து எங்கட வீடு 2 கிலோமீற்றர் வருமெல்லா.....” வன்னியில எண்டா இது கூப்பிடு தூரம் என்றாள் பல்லவி. அவையளின்ர உரையாடலைக் கேட்க எனக்கு அவையும் தென்மராட்சி என்பது வடிவா விளங்குது. என்ர வீட்டக் கேட்டு நான் வேதனைபடுமாபபோல அதுகளையும் வேதனைப்படுத்த விருப்பமில்லாமல் இருந்ததுச்சுது.

அந்தக் காப்பரண் விட்டுப் போகேக்க எனக்கு குறிஞ்சி. பல்லவி என அதுகளின்ர நினைவுதான் வந்திச்சுது. அதில இருக்கிற அம்மன் கோயிலுக்கு அதுகள் போயிருக்குங்கள். சீ... இப்ப அது சூனியப்பிரதேசமா பாழ்பட்டுக் கிடக்கும். அந்தப் பளிளியில் படிச்சிருக்குறங்கள். அந்த ரோட்டால அடிக்கடி போய்வந்திருக்குங்கள். அதுகளும் என்னைப்போலத்தான் நினைக்குங்கள். இராணுவத்தை துரத்தினால், வீட்டை.... ஊரை.... பார்க்கலாம் எண்டுதானே சிந்திக்குங்கள். எனக்கு இப்ப நல்லா நித்திரை வருது. படுத்தா படுபயங்கரமா வரும். இப்படித்தானே அதுகளுக்கும் வரும். என்னையறியாமலே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டேன். அப்பதான் அதுகள் கேட்டதுகள் “ என்ன உங்கடபாட்டுக்கு நித்திரை எண்டு சொல்லிக்கொண்டு போறீயள்?”

“ஓண்டுமில்லை” எண்டன். என்ர நினைவெல்லாம் வீட்ட போச்சுது. காப்பரண் எல்லாம் பார்த்திட்டு என்ர நிலையில் வந்திருந்தன. திரும்பவும் “உசாரா இருங்கோ இராணுவம் நகரக்கூடும்” எண்டு செய்தி வந்திச்சுது.

என்ர சிறுசிறு அணப் பொறுப்பாளருக்கெல்லாம் உடனே தகவல்களை அனுப்பினன். திரும்பவும் இனி நித்திரை இல்லை மீளவும் வீட்ட போட்டன். எனக்குப் பகல் கொள்ளுறதெண்டாலே படுபயங்கரமாப் பிடிக்காது. இப்ப அந்தக் காலத்தை நினைக்க ஆசையாய இருந்தது.

காலையில எழும்பி படிச்சாப் பிறகு சாப்பாடு ....பள்ளிக்கூடம் பள்ளியால வந்ததும் சாப்பிடுவன் எனக்கு அம்மா சாப்பிடத் தந்திட்டு தம்பிக்கும் கொடுத்திட்டு போய் படுத்திடுவா. சாப்பி;டடிட்டு போனா விறாந்தையில அப்பா நல்ல நித்திரை அடிப்பார். அம்மா முன்னறைக்க படுத்திருப்பா அவவும் நித்திரையா இருப்பா. தம்பி சாப்பிட்டிட்டு வந்து அப்பாவிற்கு பக்கத்தில் படுத்திருப்பான். அக்காவும், அண்ணையும் கட்டாயம் பகல் நித்திரை கொள்ளுவினம். அவையளைப் பார்க்க எனக்கும் நித்திரை கொள்ளவேணும் போல இருக்கும்.

தலையணையைத் தூக்கிக்கொண்டு எனக்குப் பிடிக்காத பாடப்புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு போய் படிக்கிறதோட படுப்பன். நித்திரை வராது.... பேந்து புரண்டு புரண்டு படுத்துப் பார்ப்பேன்;. அப்பவும் நித்திரை வராது. எழுப்பிப் போய் பின்னறைக்குள்ள புழுக்கொடியல் உரப்பைக்குள்ள இருந்து எடுத்து வருவன். கைநிறைய புழுக்கொடியல் இருக்கும். இப்ப புழுக்கொடியல்; சாப்பிட ஆசையாக இருக்கிறது. இதுக்க இருக்கிற இந்த கொஞ்சத் தூரம் ஆமியைத் தூரத்திட்டா அங்க போய் சாப்பிடலாம். அம்மா கட்டாயம் புழுக்கொடியல் போட்டு வைச்சிருப்பா. புழுக்கொடியல் எடுத்துக்கொண்டு தேங்காயும் எடுத்து உரிச்சு உடைச்சுக்கொண்டு வந்து. பெரிய நாவலுக்குக் கீழ் கட்டின ஊஞ்சலில் ஆடி ஆடி சாப்பிட்டுப் பார்ப்பன். நித்திரை வராது. பகல் நித்திரை சரிவராது. மனம் கேட்காம திரும்பவும் வந்து படுத்துப் பார்ப்பன். நித்திரை வராது. பேந்து முன்வீட்ட போவன். விபுலனை விளையாடக் கூப்பிடுவமெண்டா. அங்க அவன் தாய்க்குப் பக்கத்தில் படுத்து நித்திரை அடிப்பான். முன்வீட்டு அன்ரியின் மனுசன் வெளிநாட்டில. அவா வீட்டையும் திறந்து போட்டிட்டு நல்ல நித்திரை அடிப்பா.

எனக்கு விசாராக்கும். திரும்பி வீட்டை வருவன். மாமரத்தில ஏறி காயாச்சும் சாப்பிட்டுக் கொண்டு மாமரக் கொப்பில் படுத்துப் பார்ப்பன். அதுவும் சரிவரா. தினம் இதுதான் நடக்கும் எல்லோரும் பகலிலே நித்திரை கொள்ள நான் மட்டும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டு அது வெளியே திரிவன். இப்ப நான் அன்றுபோல சின்னவளாகNவு இருந்திருக்கலாம். உசார் நிலையில இருக்கச் சொல்லியெல்லோ தகவல் வந்தது. அந்தக் காலத்தில நித்திரை கொண்டாலும், பகலிலே வரவே வராது. இப்ப எப்பயடா நித்திரை கொள்ளுவன் எண்டிருக்கு.

என்ர பிளாட்டூன். செக்சன் பொறுப்பாளர்கள் எல்லாம் தொடர்பு எடுத்ததுகள். உசாரா தாங்கள் இருப்பதா குறிப்பிட்டுதுகள். பல்லவி தொடர்பெடுக்கேக்க கேட்டாள். “அக்கா அவன் வந்தால் அடிச்சுக் கொண்டு அப்படியே தள்ளிக்கொண்டு போய் துப்பரவாக்கி விடுவம்” என்றாள் அதைத்தான் நானும் நினைச்சு வைச்சிருந்தன. கொஞ்சத்தூரம் அவன் ஓட ஓடக் கலைச்சு வீட்டுக்குக் கிட்ட போய்விடலாம். எல்லோருக்கும் இதைத்தானே சொல்லுறனான். ஊரைப் பிடிப்பம். வீட்டை போவம். அதுமட்டும் எல்லாத் துயரையும் தாங்கிக்கொள்ளுவம் எண்டு.

என்ன விரும்புறன் எண்டு சொன்ன முரளிக்குக்கூட இப்படித்தானே சொன்னான். ஊருக்குப் போகும் மட்டும் சண்டையில சாகாதிருந்தா, அங்க போன பிறகு முரளிய விரும்பிறன் என்று சொன்னான். நாலு வருசமா அவனும் எதுமே என்னட்ட கதைக்காமல் இருக்கிறான். முரளியும் சண்டையில தான் நிப்பான். என்ர ஊரையும் என்னையும் நினைப்பான். எல்லோருக்கும் தங்கட ஊரைப் பார்க்க உறவுகளோட கதைக்கத்தானே ஆசையாக இருக்கும். திரும்பவும் நான் வீட்ட போய் வந்தன். அம்மா,அப்பா,தம்பி, என்ன செய்வீனம்? நடைபேசி கதைக்கத் தொடங்கியதும் முதலில் பல்லவியின்ர தொடர்புதான் கிடைச்சது. அந்தப் பக்கம் அவன் அசைவதாகத் தெரியுதாம். இராணுவம் 24 சூழல் வைத்து அடிக்கும் பீரங்கிக் குண்டுகள் வந்து விழுந்தது. வேற கனக்கச் சூடுகளும் வேகாமா வந்து விழுந்தது. வேற செல்களும் வந்து கொண்டிருந்தது. 55வது நிலைப்பக்கம் திருவிழா தொடங்கிற்று. நான் அவசரமாகவும் வேகமாகவும் பல்லவியின்ர நிலைக்கு போகவேண்டியிருந்தது. ஒடிப்போனன்.

குறிஞ்சியும் தேனரசியும் என்னோட ஓடி வந்திச்சினம். குறிஞ்சிக்குச் சன்னம் பட்டிட்டுது. அதோட தான் வரப்போறதா குறிப்பிட்டாள். அவளப் பேசிப்போட்டன். கவலையா இருந்தது. சண்டையில நேரத்தை வீணடிச்சா எங்களுக்குத்தான் இழப்பு அதிகரிக்கும். வேகமா நாங்கள் போயிற்றம். பல்லவி நல்லா சண்டை பிடிச்சுக்ககொண்டிருந்தாள். வரைபடத்தை பார்த்து செல்விழுந்த கோணம் சொல்ல வேண்டியிருந்தது.

பல்லவி சொன்னாள் “அக்கா அதுக்குள்ள தான் எங்கட வீடு நான் என்னர செக்சனை கொண்டு இறங்கட்டே” தன் கோல்சருக்குள் இருந்த வரைபடத்தை எடுத்து எனக்குக் காட்டினாள். இரண்டு கிலோமீற்றருக்கப்பால் அவளின் வீடு இருப்பதை அந்தக் கணத்திலும் வரைபடத்தில் காட்டினாள் அவள். முன்னோக்கி எதிரி நகர முற்பட்ட பக்கமா நகர முற்பட்டாள். கொஞ்சம் பொறு செல்லால கொடுத்திட்டு இறங்குவம் எண்டால், ஒரு நல்ல சண்டை கிடைச்சா திருப்பி இறங்கி அடிக்க வேணும்.

பல்லவி தான் பாய்ந்து அடிச்சுக்கொண்டு போனாள். கொஞ்சத் தூரத்தில் என்னைக் கூப்பிட்ட சத்தம் கேட்டது. ஓடிப்போனன். பிள்ளைகள் என்னை முந்திக்கொண்டு அவனைச் சுட்டபடி போய்க்கொண்டிருந்ததுகள். பல்லவி என்னட்ட வா எண்டாள். அவளுக்கு வயிற்றில காயம். அக்கா நீங்கள் என்ர அம்மாவையும் போய்ப் பாருங்கோ எண்டவள் உடனே மூச்சுவிட மறந்திட்டாள். அம்மாவைப் போய் பாருங்கோ என்று திரும்பவும் ஒலித்தது. ஆனா, அது என்ர பிரமையா இருக்கவேணும். ஒரு மணித்தியாலயத்தில படுபயங்கரமா சண்டை நடந்திட்டுது செக்சன்,பிளாட்டூன் எல்லாம் நல்லாச் சண்டை பிடிச்சதுகள் பல்லவியின்ர செக்சன் முன்னுக்கு அடிச்சுக்கொண்டு போனதுதான்....பல்லவியும் விழுந்ததோட அடுத்தடுத்த செக்சனுக்கு இழப்பு வரத் தொடங்கிற்று.

பல்லவி அவவொரு திறமையான சிறு அணிப் பொறுப்பாளர். நல்லாச் சண்டை பிடிப்பாள். என்ர கண்ணுக்கு முன்னுக்கு அப்படிச் சொல்லிப்போட்டுப் போயிற்றாள். என்ர சிந்தனை வெகுநேரமாக ஓடிச்சுது. பல்லவியின்ர நினைவு அடிக்கடி வந்து போகுது. நேற்றைய சம்பவங்கள்க் கோத்து மீட்டுக்கொண்டிருந்தபோதுதான் நடைபேசியால் தொடர்பு வந்திச்சு. நிஸ்மியாக்தாதான் தொடர்பு கொண்டிருந்தார்.

நேற்று நடந்த சண்டையில எங்கட நிலைகளில இருந்து பின்னுக்கு காயக்கரார்கள் என்று போனவையின்ர காப்பரண்களை நிறைக்க வேண்டியிருந்தது. அதுக்குத்தான் ஒரு செக்சன் பெடியள் வருகினம் எண்டும் அவதான் நேரயா வாற எண்டும் குறிப்பிட்டா. நேற்று நான் இருந்து நிலையும் இண்டைக்கு என்ர நிலையும் எனக்கே எதையெதையோ எல்லாம் கற்றுத் தந்து.

இதைத்தான் அடிக்கடி நினைச்சன். பல்லவி வீரச்சாவடைஞ்சா அந்தச் சண்டையில, அளின்ர செக்சன் மாதிரி ஒரு செக்சன் எண்டாலும் இருந்தா அந்தச் சூனியப் பிரதேசமான ஒரு கிலோமீற்றரையும் பிடித்து முன்னுக்கு நகர்ந்து எங்கட முன்னனி நிலையை அசை;சிருக்கலலாம். எதிரிக்கும் கொஞ்சம் பயமாகவும் இனி நகர்வெடுக்கத் துணியாமலும் இருந்திருப்பான். இந்த எண்ணந்தான் என்னைப் போட்டுக் குடைஞ்சிது. இன்னும் கொஞ்சப் பேர் இருந்தால் அல்லாட்டி இன்று வந்திருந்தா நிலைமை வேறாக இருந்திருக்கும். எங்களுக்கு வீச்சா சண்டை பிடிக்க ஆக்கள் காணாமல் இருக்கதே. எண்டு நினைக்க கவலையாகவே போட்டுது.

இப்ப நிஸ்மியாக்கா சொன்னபடி ஒரு செக்சன் வருதாம் - தம்பியவையாம். வரட்டும் காயப்பட்டுப் போனவையின்ர இடத்தை நிரப்ப எண்டாலும் வரட்டும். நான் நினைச்சுக்கொண்டிருக்கNவு அந்த செக்சன் வந்து நிண்டது. வந்தவையளுக்கும் வரைபடம் காட்டி போற நிலைகளையும் காட்டி நிலைகளைச் சொல்லி விளங்கப்படுத்த வேணும். அது என்ர முக்கிய கடமையுமாய் இருக்குது. வரைபடத்தை விரிச்சு விளங்கப்படுத்தினன். அந்த செக்சன் பொறுப்பாளர். ஏதுவுமே கதைக்காம. அதில என்ன இதில என்ன என்று கேட்காம இருந்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

தம்பி என்ன ஒண்டும் கேட்காம இருக்கிறியள் எண்டன். அவன் அந்த வரைபடத்தில் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான். அதிலதான் தன்ர வீடு எண்டான். என்ன பெயர் எண்டு கேட்டன். பல்லவன் எண்டான். நினைவுகள் வேகமாக....... நெஞ்சை ஏதோ செய்தது........

முற்றும்

போராளி காந்தா.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]பகிர்வுக்கு மிக்க மிக்க நன்றி [/size]

http://leo-malar.blogspot.no/2012/06/blog-post_26.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.