Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையை நீட்டிப்பதாக அறிவிக்கும் பாரதமே….. எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள் தான்!

Featured Replies

உலகின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா நீட்டித்திருப்பது வேண்டுமானால் வழக்கமான நடைமுறையாக இருக்கலாம்.

“அதை ஆதரிக்கும் இயக்கங்களே! தனி நபர்களே! உஷார்” என்று உதார் விடுவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் கண்டும் காணாதவர்களாய், வெளியே ராமதாஸே வந்து பூட்டுப் போடுவதைக்கூட உணராதவர்களாய், டாஸ்மாக் உள்ளே உட்கார்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தோமென்றால், உண்மையிலேயே நாம் யார்? விடுதலைப் புலிகளை ஆதரிப்பது ஏன் – என்பதை பகிரங்கமாக இப்போது சொல்லாமல், வேறெப்போது சொல்லப்போகிறோம் நாம்?

விடுதலைப் புலிகளை இவர்கள் தவறாகச் சித்தரிப்பது ஏன்? அவர்கள் மீதான இவர்களது குற்றச்சாட்டுகளை எதனால் மறுக்கிறோம்? புலிகளின் தமிழீழக் கோரிக்கை எவ்வளவு உன்னதமானது, உண்மையானது…. என்பதையெல்லாம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்குமுன், தடை குறித்த அறிவிப்பிலுள்ள விஷமத்தனமான வார்த்தைகளை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது. வெறும் வார்த்தைகள் தானே என்று, படித்து முடித்ததும் அடுத்த பக்கத்துக்குப் போய்விட முடியவில்லை. அந்த அளவுக்கு நயவஞ்சகமான வார்த்தைகள் அவை.

அரசின் அறிவிப்பை எழுதுகிற இடத்தில் இருப்பவர்கள், விவரம் அறியாதவர்களாக இருக்க முடியுமா? வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தி வெத்துவேட்டுகளைத் தயாரிக்க அவர்கள் என்ன கோபாலபுரத்திலா குடியிருக்கிறார்கள்? தலைநகர் டெல்லியில், சிவகங்கை ‘வெற்றிவீரர்’ ப.சிதம்பரத்துக்குப் பக்கத்திலேயே இருப்பவர்கள் அவர்கள். அறியாமலோ தெரியாமலோ அவர்கள் இதை எழுதியிருக்க முடியுமா? தெரிந்தே தான் இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் எழுதியிருக்கவேண்டும் என்பதால், இதை அலசுவதற்கு முன்னுரிமை தரவேண்டியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய மக்களுக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.. தமிழ்நாட்டிலுள்ள ஆதரவு இயக்கங்கள் மூலம் தங்களுக்கு ஆதரவு திரட்ட புலிகள் முயல்கிறார்கள்… புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இதன் பின்னணியில் உள்ளனர்… என்றெல்லாம் குற்றப்பத்திரிகை வாசிக்கிறது, அந்த அறிவிப்பு. இதெல்லாம் உப்புக்கும் உதவாத மொக்கைவாதம் என்பது அவர்களுக்குத் தெரியும். நமக்கும் அது புரிகிறது.

அந்த அறிவிப்பு எடுத்துவைக்கும் அடுத்த வாதம்தான் ஆபத்தானது. போரில் புலிகள் தோற்றதற்கு, இந்தியத் தலைவர்களும் உயர் அதிகாரிகளும்தான் காரணம் என்று இணையதளங்கள் மூலம் செய்தி பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டுகிறது அரசின் அறிவிப்பு. மிகவும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் சாமர்த்தியமாகக் கோர்க்கப்பட்டுள்ள வாக்கியம் இது. இந்த வரியில் பிற்பாதி மெய். முற்பாதி, பிரச்சினையைத் திசைதிருப்பப் பயன்படுத்தப்படும் வடிகட்டியபொய்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியத் தலைவர்களும் உயர் அதிகாரிகளும்தான் காரணம் – என்பது நாம் ஒவ்வொருவரும் சுமத்தும் வெளிப்படையான குற்றச்சாட்டு. இவர்கள்தான் கருவிகளைக் கொடுத்தார்கள், இவர்கள்தான் பயிற்சி கொடுத்தார்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள் என்கிற வேண்டுகோளைக் காதில் வாங்க மறுத்தார்கள், தமிழ்ச் சொந்தங்களைக் கொன்றுகுவித்த பொன்சேகா தான் உலகின் சிறந்த தளபதி என்று தட்டிக்கொடுத்தார்கள், ராஜபட்சேவை உலகே கண்டித்தபோதும் கட்டிப்பிடித்தார்கள். இதனாலேயே, ஒன்றரை லட்சம் ஈழச் சொந்தங்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதற்கு இந்தத் தலைவர்களும் அதிகாரிகளும் தான் காரணம் என்று திட்டவட்டமாக – தெளிவாகக் குற்றஞ்சாட்டுகிறோம் நாம். விடுதலைப் புலிகளின் தோல்விக்குத் தான் நாங்கள் காரணமாக இருந்தோம், அதற்காகத்தான் நீங்கள் எங்களைக் கண்டிக்கிறீர்கள் – என்று பிளேட்டைத் திருப்பப் பார்க்கிறார்கள் இவர்கள். .

நடந்தது இனப்படுகொலை – என்பதை உலகம் முழுக்க வியாபித்திருக்கிற புலம்பெயர் சொந்தங்கள் அவர்கள் இருக்கிற நாடுகளின் அரசுகளிடம் ஆதாரத்துடன் எடுத்து வைக்கின்றனர். அனைத்து நாடுகளிலும், இலங்கைக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுகின்றனர். அவர்கள் என்ன இந்தியா மீது நடவடிக்கை எடுங்கள் – என்றா போராடுகிறார்கள்? இனப்படுகொலை செய்த இலங்கை மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் போராடுகிறார்கள். உலகெங்கும் வீதிகளில் கொட்டுகிற பனியில் குளிர்க் குல்லாய்களை அணிந்திருக்கும் குழந்தைகளுடன் நின்று நியாயம் கேட்கிறார்கள். அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதுகூட தெரியாத அளவுக்கா இருளில் இருக்கிறது இந்திய உள்துறை? புரியவில்லை.

ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு எங்கள் காந்தி தேசமான இந்தியா காரணமாய் இருந்திருக்கிறதே – என்று இங்கேயிருக்கிற நாம் கோபப்படுகிறோம். தமிழினப் படுகொலையைத் தடுத்துநிறுத்தத் தவறிய தலைவர்களைக் கண்டிக்கிறோம். இந்த உண்மை தெரிந்தும், ஒன்றுமே தெரியாதவர்களைப் போல், புலிகளைத் தோற்கடித்ததற்காகத்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள் – என்று ஆட்சியிலிருப்பவர்கள் போக்குக் காட்டினால், ஒன்றரை லட்சம் உயிர்களை மதிக்காத கிராதகர்களின் பிடியில்தான் இந்தியா இன்னும் இருக்கிறதா. என்கிற வேதனையையும் வெறுப்பையும் தவிர தமிழினத்துக்கு வேறெது மிஞ்சும்? எங்களிடையே இப்படியெல்லாம் விரோதத்தை விதைப்பவர்களால், ஒருமைப்பாட்டை எப்படி அறுவடை செய்ய முடியும்?

இனப்படுகொலை செய்த இலங்கையைக் கண்டித்து ஐ.நா.வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடித்து இலங்கையைக் காப்பாற்றியது எங்கள் இந்திய அரசு. காமன்வெல்த் போட்டிக்கு, சூடு சுரணை வெட்கம் மானம் எதுவுமே இல்லாமல், ராஜபட்சே என்கிற மனித மிருகத்தை அழைத்து கௌரவித்தது இதே இந்திய அரசு. இந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதாக நடித்து, இனப்படுகொலை, போர்க்குற்றம் – என்கிற வார்த்தைகளே அந்தத் தீர்மானத்தில் இல்லாதபடி கூடவே இருந்து குழிபறித்து, உயிர் நண்பன் ராஜபட்சேவை மீண்டும் காப்பாற்றியிருக்கிறது இந்தியா. இதையெல்லாம் பார்த்தபிறகும் உணர்ச்சி வசப்படாதிருக்க, உப்பு போடாமலா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் அத்தனைத் தமிழனும்? ராஜபட்சேவைக் காப்பாற்ற உன்னுடைய வெளியுறவுத் துறை வேலை செய்யும், உள்துறை வேலை செய்யும், பாதுகாப்புத் துறை வேலை செய்யும்… இருக்கிற அத்தனைத் துறையும் வேலை செய்யும்……! ஒன்றரை லட்சம் உயிர்களை… எங்கள் ஒன்றரை லட்சம் சொந்தங்களைக் காப்பாற்றுவதென்றால் மட்டும் உன்னுடைய எல்லாத் துறைகளும் பஞ்சர் ஆகிவிடுமென்றால், என் வணக்கத்துக்குரிய தாயகமே, பாரதமே… எங்களுக்கு நீ யார்?

போர்க்குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்து, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதி – என்றெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் பல ஆகிவிட்டன. அந்தத் தீர்மானம் என்ன, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவிலா நிறைவேற்றப்பட்டது? ஏழு கோடி தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் தீர்மானம், அந்தத் தீர்மானம். ஏழு கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தப் பேரவைக்கென ஒரு இறையாண்மை இருக்கிறதா, இல்லையா? என்ன ஆனது அந்தத் தீர்மானம்? பிரதமர் அலுவலக குப்பைத்தொட்டியில் போடப்பட்டுவிட்டதா? ஆல் இன் ஆல் அழகுராஜா நாராயணசாமியிடம்தான் கேட்கவேண்டும். அந்தத் தீர்மானம் குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்தால், ஏட்டிக்குப் போட்டியாக உள்துறையின் அறிவிப்பைக் குப்பைத்தொட்டியில் போடுவோம் என்று அறிவித்தால், இந்தியாவுக்கு அது பெருமை சேர்ப்பதாகவா இருக்கும்?

இந்திய எல்லையிலிருந்து 26 கிலோமீட்டரில் இருக்கும் பாகிஸ்தான் பகுதியொன்றில் 100 சீக்கியர்கள் கொல்லப்பட்டிருந்தால், இந்தியா கைகட்டி வேடிக்கை பார்த்திருக்குமா? இன்னும் 100 பேர் எங்கேயென்று கண்டறிந்து கொல் – என்று ராடார் கொடுத்திருக்குமா? நூறுபேர் கொலைக்காக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தமல்லவா நடந்திருக்கும். 26 கிலோமீட்டரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மட்டும் இந்தியா வேடிக்கை பார்த்தது, கொலைகாரர்களுக்கு உதவியது, கொலைகாரர்கள் தண்டிக்கப்பட்டு விடாதபடி பார்த்துக்கொள்கிறது என்றால் என்ன அர்த்தம்? இந்தத் தமிழின விரோதத்துக்காகத் தான், ஓன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்ததற்காகத் தான், சுயநல அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் கண்டிக்கிறோம். இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் போல், திசைதிருப்பும் நடவடிக்கையில் மத்திய அரசின் உள்துறை இறங்குவது, தமிழினத்தின் திசையைத் திரும்பிவிட்டுவிடும். உள்நோக்கத்துடன் அறிவிப்புகளை எழுதுபவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைக்கு எப்படிச் சோறூட்டவேண்டும் – என்பதை அறியாத தாய்தான், “பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக் கொடுத்துடுவேன்” என்று மிரட்டுவாள். அப்படித்தான் பூச்சாண்டி காட்டுகிறது, ப.சிதம்பரத்தின் உள்துறை. புலிகளை ஆதரிப்பவர்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்களாம். அதைவிட உன்னிப்பாக இலங்கையை ஆதரிப்பவர்களை நாங்கள் கவனிக்கிறோம் என்பதை இன்னுமா அவர்கள் அறிந்துகொள்ளவில்லை?

மன்மத வேட்டைக்கு கஸ்டமரை ரகசியமாக அழைத்துச்செல்லும் ஏஜெண்டைப் போல், ரகசியமாகத்தான் அழைத்துவருகிறார்கள் இலங்கை விமானப் படை அதிகாரிகளையும், கடற்படை அதிகாரிகளையும். இவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருந்தும், அவர்கள் மீனம்பாக்கத்தில் வந்து இறங்குவதற்குமுன்பே, தாம்பரத்திலும் குன்னூரிலும் கறுப்புக் கொடியோடு காத்துநிற்கிறார்களே எங்கள் தோழர்கள்…. அது எப்படி? நீங்கள் அரசாங்க எடுபிடிகள்…. பிழைப்புக்காகப் பணியில் இருக்கிறீர்கள்! அவர்கள் தங்கள் உறவுகளின் வாழ்க்கைக்காகக் களத்தில் நிற்கிறார்கள் – என்பதைத் தவிர இதற்கு வேறென்ன அர்த்தம்?

உண்மையிலேயே, இது யாருக்கான மிரட்டல் – என்பது, “தமிழ் ஈழம் வேண்டும் என்று இப்போது அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்போவதில்லை” என்று அவசர அவசரமாக ‘டெசோ தலைவர்’ அறிவித்தவுடனேயே அம்பலமாகிவிட்டது. அவர், தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொள்கிற ஓர் அபூர்வப் பிறப்பு. அவர் யார் – என்பதை, இதைவிட அழுத்தந்திருத்தமாக ஜெயலலிதாவாலேயே கூட விவரித்துவிட முடியாது.

பச்சைத் துரோகத்துக்கும் பதவி வேட்கைக்கும் அடையாளமாய் இருக்கிற அவர் – “ஈழம் ஒருகாலத்தில் அமையலாம்…” என்று கூழ் ஊற்றிக் குழி பறிக்கப் பார்க்கிறார். ஒரு காலத்தில் இல்லை.. இவர் காலத்திலேயே ஈழம் அமையும்..! அதை இவர் பார்க்கத்தான் போகிறார். வெறும் நம்பிக்கை இல்லை.. இதுதான் யதார்த்தம். சொந்த மண்ணுக்கு உரிமை கோரியதற்காக, மண்ணின் மைந்தர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொன்று புதைக்கப்பட்டார்களே… அந்த மண் எப்படி அமைதியாக இருக்கும்? வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்… வரும்போது சிங்களவன் கதை முடியும்.. என்கிற கவிதையின் வரிகள்தான் அந்த மண்ணின் எதிர்காலத்தைச் செதுக்கும். ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் உயிர்களைப் பறித்த எவருக்காவது அதற்குள் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களை வென்டிலேட்டரில் வைத்திருந்தாவது, ஈழம் மலர்வதைக் காட்டியாகவேண்டும்.

எங்கள் சொந்தங்கள் கேட்கும் தமிழ் ஈழம் என்பது, தமிழரின் தாயகப் பகுதி. அது, அவர்கள் ஆண்ட மண்… அவர்கள் வாழ்ந்த மண்.. அவர்களது உழைப்பால் செழிப்படைந்த மண்… அவர்களது அறிவால் விழிப்படைந்த மண். தங்கள் தாயகத்தைத்தான் அவர்கள் கேட்கிறார்களே தவிர, கொழும்பையும் கண்டியையுமா கேட்கிறார்கள்! இந்தப் பார்வையோடுதான் இலங்கைப் பிரச்சினையைப் பார்க்கவேண்டுமே தவிர, ராஜீவ் காந்தியின் மர்மப் பார்வையோடு.. இந்தியாவின் கள்ளப்பார்வையோடு பார்க்கக் கூடாது. உண்மையில், தமிழ் ஈழம், ஐ.நா.வின் செயலர் நாயகத்தையே ‘பிம்ப்’ என்று கொழுப்போடு விளிக்கும் கொழும்பின் கொத்தடிமைக் கோட்பாட்டுக்கு எதிரானதே தவிர, சிங்களவர்களின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதல்ல. சிங்களத்தின் இறையாண்மைக்கே எதிராக இல்லாத தமிழ் ஈழம், இந்தியாவின் இறையாண்மைக்கு எப்படி எதிரானதாகும்?

விடுதலைப் புலிகளின் தமிழீழ வரைபடத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்திருப்பீர்களே.. தமிழகத்தின் எந்தப் பகுதியாவது அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறதா? ஒட்டுமொத்த தமிழர்களின் இதயத்திலும் இடம்பெற்றிருக்கிற பிரபாகரன் என்கிற அந்த மாமனிதன், தமிழகத்தின் எந்தப் பகுதியையாவது தனது வரைபடத்தில் சேர்த்திருந்தானா? அவ்வளவு ஏன், இலங்கைக்கு நீங்கள் பிச்சை போட்ட கச்சத்தீவாவது அந்த வரைபடத்தில் இருக்கிறதா? அந்த அளவுக்கு கண்ணியத்துடன், இந்தியா மீதான மரியாதையுடன் நடந்துகொண்டவர்களை அழித்து ஒழிக்கவேண்டும், அதற்கான போரில் ஒன்றரை லட்சம் அப்பாவிகள் செத்தாலும் பரவாயில்லை, அதைக் கண்டும் காணாதவர்களாய்க் கதர்த் துணியால் கண்களைக் கட்டிக்கொள்ள வேண்டும் – என்பதுதான் உங்கள் கொள்கை என்றால், ‘நவீன நயவஞ்சகர்கள்’ என்பதைவிட வேறு எது உங்களுக்குப் பொருத்தமான பெயராக இருக்கமுடியும்?

இங்கிருக்கிற மேதாவிகளுக்கும், இலங்கையின் முகமூடிகளுக்கும், இது நன்றாகத் தெரியும். தெரிந்தும், ராஜபட்சேக்களைக் காப்பாற்றுவதற்காக, “தமிழ் ஈழம் – என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது” என்று ஒப்பாரி வைக்கிறார்கள். கோபல்லபுரத்துக் கோமான்களைவிடக் கொடுமையானவர்கள் இவர்கள். இந்தியாவுக்குத் தாலி கட்டுவது – சந்தடி சாக்கில் சீனாவுக்கு சிக்னல் கொடுப்பது – என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துக்கொண்டிருக்கிறது இலங்கை. அந்த இலங்கையைத் தோளில் தூக்கிச் சுமப்பதற்காக, இந்தியர்களாகவே வாழ்கிற 7 கோடி தமிழர்களின் உணர்வுகளைக் காலில்போட்டு மிதிக்கிறார்கள் என்றால், இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்? இலங்கை தொடர்பான விவகாரங்களை அரசின் சார்பில் கவனிக்கும் அதிகாரிகள் – அரசியல்வாதிகள் எவராயிருந்தாலும், அந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றபிறகு அவர்களது சொத்து மதிப்பு எக்குத்தப்பாக எகிறியிருக்கிறதா என்று முதலில் கணக்கெடுத்துப் பார்க்கவேண்டும். அது, இந்தியாவின் இறையாண்மைக்கும் நல்லது, ஒருமைப்பாட்டுக்கும் நல்லது, பாதுகாப்புக்கும் நல்லது.

சொந்தக் குழந்தையைக் மிதிமிதியென்று மிதிக்கும் நீங்கள், பக்கத்து வீட்டுக் குழந்தையை உச்சிமுகர்ந்து கொஞ்சுகிறீர்கள் என்றால், இரண்டுவகையில் நீங்கள் அயோக்கியர்கள். ஒன்று – சொந்த மனைவியை சந்தேகப்படுகிறீர்கள். இரண்டு – பக்கத்து வீட்டுக்காரன் மனைவியை சந்தோஷப்படுத்தப் பார்க்கிறீர்கள். என்றாவது ஒருநாள் இதற்காக உங்களைக் கட்டி வைத்து மிதிப்பார்கள். அப்போது உங்கள் உடலின் எந்தப் பகுதியில் மிதிப்பார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாவது நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது அவசியம். “தடை இருக்கிறது” என்று பூச்சாண்டி காட்டும் உங்களின் கருவிலேயே பிழை இருக்கிறது.

ஒரு சாதாரண போராளிகள் அமைப்பு ஆறா ரணத்துடன் நம்மை அடித்து மிதித்து விரட்டியிருக்கிறதே… அதற்குப் பாடம் கற்பிக்கவேண்டாமா.. என்கிற இந்தியாவின் மனவக்கிரத்தைத் தவிர, ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நிஜமான காரணம் வேறு எது? “இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்யவேண்டியதுதானே… ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்” என்று தம்பி முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

எங்களது உறவுகளை, ஒன்றரை லட்சம் சொந்தங்களைக் கொன்று குவிக்க கொல்லைப்புறம் வாயிலாக ஆயுதங்களையும் அறிவுரைகளையும் அள்ளிக்கொடுத்த உங்கள் நபும்சக அரசு, தமிழ் ஈழம் – என்கிற கொள்கையே தவறு என்கிறது, அதற்காகவே புலிகள் மீதான தடையை நீட்டிப்பதாக சொல்கிறது. நாங்களோ, தமிழ் ஈழம் – என்கிற கொள்கையில் உறுதியாக இருந்ததற்காகத் தான் பிரபாகரனையும் பிரபாகரனின் தோழர்களையும் நேசித்தோம், நேசிக்கிறோம். அதனால்தான், ‘எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள் தான்’ என்று உரக்கச் சொல்கிறோம். இலங்கை ஒன்றாகத் தான் இருக்கவேண்டும் – என்பது உங்கள் விருப்பமாய் இருக்கலாம். தமிழர் பகுதிகளில் அவசர அவசரமாக எழுப்பப்படும் புத்தவிகார்களைப் பார்த்தால் இலங்கை அப்படி விரும்புவதாகவா தெரிகிறது?

சிங்கள மிருகங்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட எங்களது அன்புச் சகோதரிகளின் வரலாற்றை முழுமையாகச் சொல்ல, பல ஆயிரம் பக்கங்களில் ஒரு புத்தகம் தேவைப்படும். மட்டக்களப்பு அருகே, தன்னுடைய அழகான கிராமத்தில் சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துத் திரிந்த 13 வயதுக் குழந்தை புனிதவதியைக் கூட அந்த மிருகங்கள் விட்டுவைக்காததைத்தான், உச்சிதனை முகர்ந்தால் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருந்தேன். உங்கள் அரசால் ஆதாரப்பூர்வமான அந்த உண்மையை மறுக்கமுடிந்ததா? அந்தப் படத்தைத் தடுக்க முடிந்ததா?

அந்த 13 வயதுக் குழந்தையை ஏழெட்டு பேர் சேர்ந்து…. அவையெல்லாம் வாயால் சாப்பிடுகிற மனித ஜென்மமா… அல்லது வவ்வால் போலவா? என்ன பாடுபட்டிருக்கும் ;அந்தக் குழந்தை… எப்படித் துடித்திருக்கும்! நான் கேட்கிறேன்… மெத்தப் படித்த மேதாவிகளே… அறிவுச் சிகரங்களே… புனிதவதி உங்கள் மகளாக இருந்திருந்தால் இலங்கையின் இறையாண்மை பற்றிப் பேசியிருப்பீர்களா நீங்கள்? சேர்ந்துதான் வாழவேண்டும் – என்கிற வார்த்தைகளை வீசியிருப்பீர்களா? புனிதவதி ஒற்றைக் குழந்தையல்ல… பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளின் அடையாளம். உங்களுக்கு இதயம் இருந்தால், அங்கே எத்தனை எத்தனை புனிதவதிகள் இப்படிச் சீரழிக்கப்பட்டார்கள் என்று விசாரித்துப் பாருங்கள். அதைத் தெரிந்துகொண்டால், ஐ.ஏ.எஸ். மாதிரி உயர்ந்த பதவிகளில் உட்கார்ந்துகொண்டு, அனாமதேய அரசியல்வாதிகளுக்கு அடப்பக்காரர்களாக இருக்க சம்மதிக்க மாட்டீர்கள்.

எந்த மிருகங்களால் சிதைக்கப்பட்டார்களோ, அந்த மிருகங்களின் கண்காணிப்பில்தான் எங்கள் புனிதவதிகள் வாழ்ந்தாகவேண்டும் என்று வரையறை செய்ய நீங்கள் யார்? ஆதர்ஷில் ஆரம்பித்து பிரதீபா பாட்டீலுக்குக் கொடுப்பதாக இருந்த இடம்வரை உங்கள் இஷ்டத்துக்குக் கொட்டாய் போட்டுக்கொள்ளுங்கள், நாங்கள் குறுக்கே நிற்கவில்லை. பக்கத்து நாட்டில் போய் எங்கள் இஷ்டப்படிதான் பட்டா போடுவோம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கொல்லப்பட்ட இனமும், கொலை செய்த இனமும் ஒன்றாகத் தான் வாழவேண்டும் – என்று போதிப்பதன்மூலம் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?

உங்களுக்கும் எங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். எந்த வகையிலும் புலிகளை ஆதரிக்கக்கூடாது – என்று எச்சரிக்கிறீர்கள் நீங்கள். எல்லா வகையிலும் அவர்களை ஆதரிப்போம் – என்று அறிவித்து பெருமிதத்தோடு அவர்கள் பெயரை உச்சரிக்கிறோம் நாங்கள்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது…

என்கிற வள்ளுவம் தெரியுமா உங்களுக்கு. பிரபாகரன் அப்படி இருந்ததால்தான், புலிகளை நாங்கள் ஆதரித்தோம். இப்போதும் அதற்காகத் தான் ஆதரிக்கிறோம்.

நீங்கள் எதற்காக அந்த மாவீரர்களைப் பற்றி அவதூறு பரப்புகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள், மற்றவர்களைப்போல உங்களது கைத்தடிகளாக இருக்க மறுத்தவர்கள். அகிம்சை முகமூடியோடு வந்து தங்களை நசுக்க முயன்ற உங்களை, லா.ச.ரா.வின் படைப்பு ஒன்றில் ஒரு நாயை எதிர்த்து சிலிர்த்து நின்று போராடுமே ஒரு பூனைக்குட்டி, அதைப்போல கிளர்ந்து எழுந்து அடித்தவர்கள். நீ எங்களுக்கு எடுபிடியாய் இருக்க மறுத்தாயே… நீ எங்களைத் திருப்பி அடித்தாயே என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கிறது, அவர்கள் மீது நீங்கள் அவதூறு பரப்ப! எங்கள் இனத்தின் அடையாளமாகவே ஆகிவிட்ட அந்த மாவீரர்கள் மீது நீங்கள் உள்நோக்கத்துடன் தான் குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்று தெரிந்த அன்றிலிருந்துதான், நீங்கள் அம்பலமான அந்தக் கணத்திலிருந்துதான், அவர்களுக்கு ஆதரவாகப் பேசியே ஆகவேண்டும் என்கிற உறுதியான நிலையை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

தமிழ் ஈழம் கேட்டது பிரபாகரன் இல்லை என்பதும், காந்தியத் தலைவரான செல்வா தான் இலங்கையின் இனவெறிக்கு எதிராகத் தமிழ் ஈழத்தை அறிவித்தார் என்பதும், அந்த வரலாறெல்லாம் தெரியாமல் தன்னிச்சையாக தமிழ் மக்கள் மீது தன் விருப்பத்தைத் திணிக்க முயன்றதால்தான் ராஜீவ்காந்தி அனுப்பிய படை ஒரு கூலிப்படை அளவுக்கு அவமானப்பட்டுத் திரும்பிவர நேர்ந்தது என்பதும் இங்கிருக்கிற சுண்டைக்காய் அதிகாரிக்குக்கூடத் தெரியும். நியாயத்துக்கு எதிராக நாம் நிற்கலாமா, ராஜபட்சே என்கிற ஒரு இனப்படுகொலையாளியைக் காப்பாற்ற முயலலாமா – என்று கலகக் குரல் கொடுக்கும் துணிவு ஒரு அதிகாரிக்குக் கூட இல்லை என்பதுதான், நாட்டின் எதிர்காலம் பற்றிய கவலையை அதிகரிக்கிறது.

இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து – என்று முக்கி முனகுகிறீர்களே.. உண்மையிலேயே அப்படியொன்று உங்களுக்கு இருக்கிறதா என்ன! உங்களுடைய இறையாண்மைக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் நுழைந்து சுமார் ஆயிரம் மீனவர்களைச் சுட்டுக்கொன்ற ஒரு அண்டைநாட்டின்மீது உங்கள் சுண்டுவிரலைக் கூட நீட்டமுடியாதென்றால், உங்களது இறையாண்மை எங்கேயிருக்கிறது? சுவிஸ் வங்கி எதிலாவது பதுக்கிவைத்திருக்கிறீர்களா? மூச்சு விடும்போதெல்லாம் இறையாண்மை என்று சொல்ல வெட்கப்பட வேண்டாமா நீங்கள்!

தமிழ் ஈழம் – என்பது எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தில் கலந்திருக்கும் அடிப்படை உரிமை… ஆட்சி உரிமை. தமிழ் ஈழம் கோருவதையோ… அது அமைவதையோ உங்களால் எப்படித் தடுக்க முடியும்? மிக அதிகபட்சமாக, கோபாலபுரத்திலிருந்து கேட்கிற முணுமுணுப்பை உங்களால் தடுக்கமுடியலாம்… டெசோ பேனரைக் கிழிக்க முடியலாம்… வேறெதை உங்களால் கிழிக்கமுடியும்?

தயவுசெய்து, ஊரறிந்த மூன்று உண்மைகளை மறைக்க முயலாதீர்கள். ஒன்று – 26 கிலோமீட்டரில் உங்கள் நண்பன் இலங்கை செய்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பது உலகம் முழுக்க அம்பலமாகிவருகிறது… அதை மூடி மறைக்க முயன்றால் நீங்கள் அம்பலமாகிவிடுவீர்கள். இரண்டு – உலகெங்கும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்கள் உங்களுக்கு எதிராகப் போராடவில்லை… ராஜபட்சேவைக் கூண்டிலேற்றத் தான் போராடுகிறார்கள்… அவர்களைக் கொச்சைப்படுத்த முயல்வதன் மூலம், உங்களையும் சேர்த்துக் கூண்டிலேற்றவேண்டும் என்கிற முழக்கம் உலகெங்கும் ஒலிக்க வழிவகுத்துவிடாதீர்கள். மூன்று – விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி – தமிழ் ஈழத்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றெல்லாம் புருடா விடுவதன் மூலம் சிங்கள மிருகங்களைக் காப்பாற்ற தொடர்ந்து முயல்வதாக இருந்தால், வெளிப்படையாக அதை அறிவித்துவிடுங்கள். உங்களுடனான உறவை ஒட்டுமொத்தமாகத் துண்டிப்பதென்று நாங்களும் முடிவெடுத்து விடுகிறோம். சட்டத்தையும் நியாயத்தையும் வளைப்பதென்று நீங்கள் முடிவெடுக்கலாம்… அந்த இரண்டையும் நிமிர்த்த வேண்டுமென்று நாங்கள் முடிவெடுக்கக் கூடாதா? தடை.. எச்சரிக்கை… என்றெல்லாம் சீன் போடாமல், எது சௌகரியம் என்பதை உடனடியாகத் தீர்மானியுங்கள்.

- புகழேந்தி தங்கராஜ் -

திரைப்பட இயக்குநர்

தமிழக அரசியல் – வாரஇதழில் வெளியான கட்டுரை

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/

good news....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.