Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

Featured Replies

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.jpg

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.

“கலவரத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்காமல், ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாமல் ஆலையைத் திறக்கப் போவதில்லை. எனக்குப் பணம் முக்கியமில்லை. ஊழியர்களின் பாதுகாப்புதான் முக்கியம்” என்று கூறி கதவடைப்பை அறிவித்திருக்கிறார் மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா. “அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று கவலை தெரிவித்திருக்கின்றன தரகு முதலாளிகளின் சங்கங்கள். 3000 தொழிலாளர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு போட்டு, நூறு பேரைக் கைது செய்து மீதிப் பேரை தேடுவது என்ற பெயரில் சுற்றுவட்டாரம் முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரியானா போலீசு. தொழிலாளர்கள் அனைவரும் தலைமறைவாகியிருக்கின்றனர்.

பேயறைந்து வெளிறிப்போன ஆளும் வர்க்கத்தின் முகத்தைத் தரிசிப்பதற்கான அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மாருதி தொழிலாளர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிவர்க்கம்.

ஜூலை 18 அன்று நடைபெற்ற ஒரு சம்பவம்தான் “திரி” பற்றிக் கொண்டதற்கான காரணம் என்று கூறுகிறார்கள் தொழிலாளர்கள். “ஜியாலால் என்ற தொழிலாளியை மேலாளர் ஒருவன், சாதியைச் சொல்லி திட்டினான். தீண்டாமைக் குற்றத்துக்காக அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மேலாளருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு, தட்டிக் கேட்ட அந்தத் தொழிலாளியை நிர்வாகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. தற்காலிகப் பணிநீக்கத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் எற்கவில்லை. அன்று மாலை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, அடியாட்களைக் கொண்டுவந்து இறக்கி நிர்வாகம்தான் தொழிலாளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கி வைத்தது” என்கிறது மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராம் மெகர் விடுத்துள்ள அறிக்கை.

தற்காலிகப் பணிநீக்கத்தை நிறுத்தி வைப்பதாகப் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், அதன் பின்னரும் ஏன் இப்படி நடந்தது என்பதைத்தான் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் வெகுளித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார், மாருதி நிறுவனத்தின் தலைவர் பார்கவா.

யாரோ ஒரு தொழிலாளியை, எவனோ ஒரு மேலாளர், ஏதோ ஒரு நாள் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியிருந்தால், அதற்காக ஆலை எரிந்திருக்குமா? இல்லை. கொடூரமான பணிநிலைமைகளாலும் அடக்குமுறையாலும் அன்றாடம் கிடிக்கப்பட்ட வெடிமருந்தாகக் காய்ந்திருந்தனர் தொழிலாளர்கள். வெடிப்பதற்கு ஒரு சிறுபொறி மட்டுமே தேவைப்பட்டது. அந்தப் பொறி அரியானா மாநிலத்தின் இழிபுகழ் வாய்ந்த ஆதிக்க சாதிவெறியாக அமைந்ததையும், அதுவே தொழிலாளிகளின் வர்க்கக் கோபத்தைப் பற்றவைத்து வெடிக்கச் செய்திருப்பதையும் நாம் ஒரு கவித்துவ நீதியாகக்தான் கொண்டாட வேண்டும்.

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2.jpg

மா
ருதி சுசுகி நிறுவனம், ஜப்பானிய சுசுகி மோட்டார் கார்ப்பரேசனின் ஒரு கிளை. இந்திய கார் சந்தையில் பாதி மாருதியின் கையில். மாருதி உற்பத்தி செய்கின்ற 14 மாடல்களில், சொகுசு ரகத்தைச் சேர்ந்தவையான சுவிப்ட், டிசையர், ஏ ஸ்டார், செடான் ஆகிய கார்கள் குர்கான் அருகில் உள்ள இந்த மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு 1152 கார்கள். ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சுசுகியின் ஆண்டு விற்பனையில் (201011) மாருதியின் பங்கு 48%.

நாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகள். முதல் ஷிப்ட் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாருதி தொழிலாளி காலை 5 மணிக்கு பேருந்தைப் பிடிக்க வேண்டும். 6.30க்கு ஆலைக்குள் நுழைய வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் அரை நாள் சம்பள வெட்டு. “சம்பளம்தான் இல்லையே” என்று திரும்பிப் போக முடியாது. ஆலைக்குள் நுழைந்துவிட்டால் வேலைக்குப் போய்தான் தீரவேண்டும். சம்பளவெட்டு என்பது தாமதத்துக்கான தண்டனை.

மாருதி சுசுகி காரின் 4 மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும் ஒரு கார் இந்த 180இல் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அதன் ஸ்டியரிங் வலது புறமாஇடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலாடீசலாஎரிவாயுவா, ஏ.சி உள்ளதாஇல்லாததா, 32 வகை இருக்கைகளில் என்ன ரகம், 90 வகை டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள் போன்ற காரின் அங்க அவயங்கள் என்னென்ன வகையைச் சேர்ந்தவை என்ற பட்டியலை நெற்றியில் சுமந்தபடியே அந்த கார் அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும். அதைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பொருத்தமான பாகத்தை தொழிலாளி அந்தக் காரில் பொருத்த வேண்டும். இதற்கு ஒரு தொழிலாளிக்குத் தரப்படும் அவகாசம் 48 நொடிகள்.

ஒரு நொடி தாமதமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி தாமதம் என்று பதிவாகும். அந்த உற்பத்தி இழப்புக்கு ஒவ்வொரு தொழிலாளியும் பொறுப்பேற்க வேண்டும்.

நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதற்றத்தில் வேலை செய்யவேண்டியிருப்பினும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடன் ஐம்புலன்களையும் குவித்து ஒரு தொழிலாளி வேலை செய்யவேண்டும்.

ஒரு தொழிலாளி குனிவதற்கும், நிமிருவதற்கும், திரும்புவதற்கும், ஸ்குரூ டிரைவரை வைத்து திருகுவதற்கும் ஒவ்வொரு மாடல் காருக்கும் தேவைப்படும் நொடிகளை மைக்ரோ செகண்டு துல்லியத்துடன் கணக்கிட்டு, கணித அல்கோரிதம்களின் அடிப்படையில் அசெம்பிளி லைனின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் 100 நொடிகளாக இருந்த இந்த நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டு விட்டது. எனவே உற்பத்தியும் இரு மடங்காகிவிட்டது.

கணினிமயமாக்கப்பட்ட இந்த எந்திர வலைப்பின்னலில், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல தொழிலாளி வெறும் உப உறுப்பு. மனிதன் என்கிற காரணத்தால் அவனுக்கு, உணவுக்கு 30 நிமிட இடைவேளை. கான்டீனுக்கு போக 10 நிமிடம், வர 10 நிமிடம், சாப்பிட 10 நிமிடம். தேநீர் இடைவேளை 7.5 நிமிடம் இருமுறை. கழிவறையில் நின்று சிறுநீர் கழித்தபடியே பிஸ்கெட்டைத் தின்று, தேநீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாகத் திரும்பினாலும் அரைநாள் சம்பள வெட்டு.

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3.jpg

தொழிலாளர்கள் தமது பணி நிலைமைகளை மேம்படுத்துவது பற்றிப் பேசுவதைக்கூட மாருதி சுசுகி நிர்வாகம் அனுமதித்ததில்லை. மாருதி நிறுவனத்தின் கட்டுப்பாடு சுசுகியின் கைக்கு மாறியவுடனே, தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் 1000 பேர் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டனர். மாருதி உத்யோக் காம்கார் யூனியன் என்ற கைக்கூலி சங்கத்தை சுசுகி நிர்வாகம் 2001இல் உருவாக்கியது. 11 ஆண்டுகளாக அந்த சங்கத்தில் தேர்தலே நடந்ததில்லை.

அதிகரித்துக் கொண்டே போகும் அசெம்பிளி லைனின் வேகம், குறைந்த கூலி, ஒப்பந்தக் கூலி முறை ஆகியவற்றைச் சகிக்க முடியாத தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்தை ஒழித்து, சுயேச்சையான தமது சங்கத்தைக் கட்டுவதன் மூலம்தான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் என்று, புதிய சங்கத்துக்கான போராட்டத்தை சென்ற ஆண்டு துவங்கினர்.

உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்த தொழிலாளிகளை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது அரியானா உயர் நீதிமன்றம். உடனே ஆலையின் கதவை இழுத்துப் பூட்டி, தண்ணீர் சப்ளையைத் துண்டித்து, உணவு கொண்டு செல்வதையும் தடுத்தது போலீசு. தொழிலாளர்கள் வெளியே வந்தார்கள். “ஆலைவாசலிலும் உட்காரக் கூடாது” என்றது நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு. 33 நாட்கள் கதவடைப்பு செய்தது நிர்வாகம். புதிய சங்கத்தைப் பதிவு செய்ய விடாமல் இழுத்தடித்தது மாநில அரசு.

புதிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குப் போட்டது நிர்வாகம். 16 இலட்சம் வாங்கிக் கொண்டு ராஜினாமா செய்தால், வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி அவர்களை விலை பேசியது. அவர்கள் சரணடைந்தவுடன், “தலைவர்கள் விலைபோய்விட்டார்கள்” என்ற பிரச்சாரத்தையும் நிர்வாகமே ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டு தொழிலாளிகளின் உறுதியைக் குலைக்க முயன்றது, முடியவில்லை.

பிறகு 103 கூடா நடத்தைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஏற்றுக் கொண்டு நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வேலை என்று அறிவித்தது. 2 மாதங்கள் தொழிலாளிகள் கையொப்பமிட மறுத்துப் போராடினர். “இவ்வாறு கையெழுத்து கேட்பது 1947 தொழில் தகராறு சட்டத்தின்படி முறைகேடானது” என்று மத்திய தொழில்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டார்.

ஆனால், எந்த அமைச்சனையும் சுசுகி நிர்வாகம் சட்டை செய்யவில்லை. “பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் வேலை” என்றது. பக்கத்திலுள்ள தொழிலாளியுடன் வம்பு பேசுவது, பாட்டுப் பாடுவது, சுத்தமாக இல்லாதிருப்பது, நேர்த்தியாக உடையணியாமலிருப்பது, கழிவறையில் கூடுதல் நேரம் செலவிடுவது இவையெல்லாம் பத்திரத்தில் நிர்வாகம் குறிப்பிடும் கூடாநடத்தைகளில் சில. இவற்றுக்காக அபராதம், தற்காலிக பணிநீக்கம் முதல் நிரந்தப் பணிநீக்கம் வரை எதையும் செய்யும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உள்ளது என்று கூறுகிறது இந்தப் பத்திரம். கம்பெனியின் நிலை ஆணையோ, “ஆலை வளாகத்தில் மட்டுமின்றி, ஆலைக்கு வெளியேயும் எந்த நேரத்திலும் தொழிலாளியைச் சோதனை போடுவதற்கு நிர்வாகத்துக்கு உரிமை உண்டு” என்கிறது.

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4.jpg

1947 தொழிற்தகராறு சட்டத்தின்படி இவையெல்லாம் சட்டவிரோதமானவை என்பது மட்டுமல்ல, விதிகள் என்ற பெயரில் கொத்தடிமைத்தனத்தைத்தான் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கிறது மாருதி. மாருதி நிறுவசனத்தின் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர்தான் நிரந்தரத் தொழிலாளி. மூன்றில் இருவர் பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

ஒரு நிரந்தரத் தொழிலாளியின் நிச்சயமான மாத ஊதியம் 8000 ரூபாய். மீதி 8000 ரூபாய் “நிபந்தனைக்குட்பட்ட” மாத ஊதியம். ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இந்த 8000 ரூபாயில் 1500 ரூபாய் வெட்டப்படும் என்பதுதான் நிபந்தனை. 5 நாள் லீவு எடுத்தால் 7500 ரூபாய் காலி. பயிற்சித் தொழிலாளர்கள் என்று 500 பேர் உள்ளனர். இவர்களது மாத ஊதியம் 6500. நிபந்தனைக்குட்பட்ட மாத ஊதியம் 2250. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் வெட்டப்படும் தொகை 800 ரூபாய். அப்பிரன்டீஸ்களின் மாத ஊதியமோ வெறும் 3000 ரூபாய்.

2001-02இல் 900 கோடி ரூபாயாக இருந்த மாருதி சுசுகியின் ஆண்டு வருவாய், 2010-11 இல் 36,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. அவர்களே கணக்கு காட்டியபடி வரி விதிப்புக்குப் பிந்தைய இலாபம் 2200 விழுக்காடு ( 105 கோடி ரூபாயிலிருந்து 2289 கோடி ரூபாயாக) உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகியின் மானேஜிங் டைரக்டர் பெற்ற ஆண்டு ஊதியம் 47.3 இலட்சம் ரூபாய். 2010-11இல் அவரது ஊதியம் 2.45 கோடி ரூபாய். அதாவது 419% உயர்வு.

2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆக மூத்த தொழிலாளிக்கு கிடைத்த மாத ஊதியம் சுமார் 23,000 ரூபாய். இன்று அவரது மாத ஊதியம் 25,000 ரூபாய். 5.5 % ஊதிய உயர்வு. இந்த நான்கு ஆண்டுகளில் அரியானா மாநிலத்தின் அதிகார பூர்வ நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணே 50% உயர்ந்திருக்கிறது. அதாவது, 4 ஆண்டுகளில் தொழிலாளியின் உண்மை ஊதியமும் வாழ்க்கைத் தரமும் பன்மடங்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

“கோன் உயரக் குடி உயரும். முதலாளிகள் உயரக் தொழிலாளிகள் உயர்வார்கள். ஜி.டி.பி. உயர மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்” என்று தலைகீழ் சூத்திரம் கூறி வருகிறார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் அப்போஸ்தலர்கள். பத்தாண்டுகளில் மாருதியின் விற்பனை 40 மடங்கு உயர்ந்திருக்கிறது. இலாபம் 22 மடங்கு உயர்ந்திருக்கிறது. புல்லுக்கு எதுவும் பொசியவில்லை. குடி மென்மேலும் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தொழில்துறை குறித்த ஆண்டு சர்வேயின்படி, 2004-05இல் 85 இலட்சமாக இருந்த வாகன உற்பத்தி (இருசக்கரம் முதல் லாரி வரையிலான அனைத்து வாகனங்களும்) 2011-12இல் 204 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. கார்களின் ஆண்டு உற்பத்தி மட்டும் ஆண்டுக்கு 12 இலட்சத்திலிருந்து 30 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றியமைக்கும் பொருட்டு முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்கி வருகின்றன மத்தியமாநில அரசுகள். (ஆஸ்பெக்ட்ஸ் ஆப் இந்தியாஸ் எகானமி, ஜூன், 2012 )

டெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கான் மானேசர் பவால் பகுதியில்தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 60% நடைபெறுகிறது. அங்கிருக்கும் 10 இலட்சம் தொழிலாளர்களில் 80% பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள் (பிசினெஸ் ஸ்டாண்டர்டு, 6.6.2011 )

மாருதியில் மட்டுமல்ல, எந்த ஆட்டோமொபைல் துறை நாடு முழுவதும் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்களோ, அந்த துறை முழுவதும் ஏறத்தாழ இதுதான் நிலைமை.

மகிந்திரா, நாசிக் (மே 2009), சன்பீம் ஆட்டோ, குர்கான் (மே,2009), போஸ்ச் சேஸிஸ், புனே (ஜுலை,2009), ஹோண்டா மோட்டர் சைக்கிள், மானேசர் (ஆக,2009), ரிக்கோ ஆட்டோ, குர்கான்(ஆக,2009), பிரிகால், கோவை (செப்,2009), வோல்வோ, ஹஸ்கொடே(ஆக,2010), எம்.ஆர்.எப்., சென்னை, (அக்,2010; ஜூன்,2011),
,
,
போஸ்ச், பெங்களூரு(செப், 2011), டன்லப், ஹூக்ளி(அக் 2011), காபாரோ, சிறீபெரும்புதூர்(டிச, 2011), டன்லப், அம்பத்தூர்(பிப் 2012),
இது கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழில் துறையில் தொழிலாளி வர்க்கம் நடத்திவரும் போராட்டங்களின் பட்டியல்.

மானேசர் வன்முறை காரணமாக இந்த “235 ரூபாய் கவர்னர் உத்தியோகம்” இந்தியாவிடமிருந்து கை நழுவிப் போய்விடுமென்றும், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். பத்து ஆண்டுகளில் 900 கோடியிலிருந்து 36,000 கோடியாக வருவாயை உயர்த்திக் கொண்டிருக்கும் சுசுகி நிறுவனம், ஒரேயொரு செருப்படிக்கா ரோசப்பட்டுக் கொண்டு கிளம்பி விடும்? இந்தியாவிலிருந்து பிரிட்டனோ, இராக்கிலிருந்து அமெரிக்காவோ அப்படி ஓடியதாக வரலாறில்லையே!

இருப்பினும் அந்தப் பகுதியில் ஆலைகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு, கிடைத்த காசில் வீடு கட்டி வாடகைக்கு விட்டும், கடை வைத்தும், லாரிவேன் ஓட்டியும் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் முன்னாள் விவசாயிகளை, ரியல் எஸ்டேட் தரகர்கள், லேபர் காண்டிராக்டர்கள் போன்ற ஒட்டுண்ணிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள். வெளியூரிலிருந்து பிழைக்க வந்த தொழிலாளர்கள், அமைதியைக் கெடுப்பதால், உள்ளூர்க்காரர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், செங்கொடிக்காரர்களின் பிரச்சினை இல்லாமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் வெளிநாட்டு சுசுகி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர், உள்ளூர் ஆதிக்கசாதி “கப்” பஞ்சாயத்துகளின் தலைவர்கள்.

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5.jpg

பன்னாட்டு மூலதனத்தைக் காப்பாற்றுவதற்காக சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே மோதலைத் தூண்டிவிடும் சதிகளை மாநில அரசும் போலீசும் ஓட்டுப் பொறுக்கிகளும் இணைந்து அரங்கேற்றுகிறார்கள். எட்டப்பனும் தொண்டமானும் கூடிப்பெற்ற கைக்கூலியான நரேந்திர மோடியோ ஜப்பானுக்கே சென்று சுசுகி கார்ப்பரேசனின் தலைவர் ஒசுமா சுசுகியின் காலை நக்கி, குஜராத்துக்கு அழைக்கிறார்.

துரோகிகளும் அடிமைகளும் வன்முறையின் ஆபத்து குறித்து தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கிறார்கள். அகிம்சை வழியில் நடக்குமாறு அறிவுரை வழங்குகிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன் அகிம்சை வழியில் தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடிய ஹோண்டா தொழிலாளர்களை இரத்தத்தில் குளிப்பாட்டியது அரியானா போலீசு. ஆனால், கொலைமுயற்சி குற்றம் சாட்டப்பட்டு 63 தொழிலாளர்கள் தான் இன்று வரை கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீசுக்காரன் மீதோ, மானேஜர் மீதோ எந்த வழக்கும் இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் இதே குர்கானில் அஜித்சிங் என்ற தொழிலாளியை ஆள் வைத்துக் கொன்ற முதலாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கொலை வழக்கு தூங்குகிறது.

தொழிலாளி வர்க்கத்துக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கும் ஊடகங்கள் எவையும், தொழிலாளர் நல சட்டங்களையும் தொழிற்சங்க உரிமைகளையும் கடுகளவும் மதிக்காத மாருதி உள்ளிட்ட நிறுவனங்களை ஒப்புக்குக் கூட எச்சரிப்பதில்லை. 2008இல் குர்கானில் கிரேசியானோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் எம்.டி. லலித் கிஷோர் சவுத்திரி தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டபோது, அன்றைய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னான்டஸ், “இந்தச் சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு கார்ப்பரேட் உலகம் கொதித்தெழுந்தவுடன், “தான் சொன்னது தவறு” என்று முதலாளிகளிடம் வருத்தம் தெரிவித்தார்.

அது தவறுதான். பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடம் மனிதத்ததன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்பதை நாடு முழுவதும் நாள்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் கொண்ட மிருகமாகவே மாறியிருக்கும் முதலாளி வர்க்கத்தின் முகத்தின் மீது விழுந்திருக்கிறது மாருதி தொழிலாளர்கள் கொடுத்த அடி!

மத்திய அரசு, மாநில அரசு, அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தையும் தனது ஏவலாட்களாக வைத்திருக்கும் திமிரில், தொழிலாளி வர்க்கத்தை புழுவைப் போலக் கருதி நடத்திய மாருதி சுசுகி நிர்வாகம் அவமானத்தில் புழுங்குகிறது. அதன் அதிகாரிகளோ அச்சத்தில் நடுங்குகிறார்கள்.

மருத்துவமனையில் கிடக்கும் ஜப்பானிய அதிகாரிகள், தங்கள் சொந்தக் கம்பெனியின் வளாகத்துக்குள்ளேயே, உயிர் பிழைப்பதற்கு ஓடி ஒளிந்த கதையை, சக பன்னாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறட்டும்!

முதலாளித்துவ நிறுவனங்களில் தொழிலாளிகளை அச்சுறுத்தும் எச்.ஆர். வேட்டை நாய்கள், அவனீஷ் குமார் தேவின் புகைப்படத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து, நாள்தோறும் தம் அச்சத்தைப் புதுப்பித்துக் கொள்ளட்டும்!

எட்டு மணி நேரமோ, பனிரெண்டு மணி நேரமோ தனது ஆற்றலைப் பிழிந்து விற்கும் தொழிலாளி வர்க்கம், ஒரே ஒரு கணம் எதிர்காலம் குறித்த தனது பொருளற்ற அச்சத்தைக் கைவிடுமானால், அந்தக் கணத்தின் ஆற்றல் எப்படி இருக்கும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளட்டும்!

மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!

“பயங்கரவாதம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதனை அன்றுதான் முதன் முறையாக அனுபவித்தோம்” என்று பேட்டியளித்திருக்கிறார்கள், மருத்துவமனையில் கிடக்கும் சில மாருதி அதிகாரிகள். பயங்கரம்தான்! ஒவ்வொரு நாளும் தங்கள் மீது பயங்கரத்தை ஏவும் முதலாளி வர்க்கம் சுவைக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தால் பரிமாறப்பட்ட சிவப்பு பயங்கரம்!

_______________________________________________

- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012

_______________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.