Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது?

Featured Replies

சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது?

ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில்தான் இது அணுகப்படுகிறது. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியனை ரீமிக்ஸ் செய்வதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது.

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-1.jpg

சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சுருதி, 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து, பின் சக்கரம் தலையில் ஏறி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப் பள்ளிப் பேருந்துக்கு ஜூலை 9ஆம் தேதியன்றுதான் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எஃப்.சி. வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நாளேடுகளில் வெளியாகவே, இப்பிரச்சினையைத் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பேருந்தின் ஓட்டுநர், கிளீனர் சிறுவன், ஒப்பந்தக்காரர் யோகேசுவரன், பள்ளித் தாளாளர் விஜயன், பேருந்துக்கு சான்றிதழ் தந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஆகியோர் கைது செய்து சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடின்றி வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தைச் சரியாகப் பராமரிக்காதது, பராமரிப்பற்ற வாகனத்தைப் பயன்படுத்துவது, கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை இழைத்தது ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

“கைது மட்டும் போதாது; இதை ஏன் கொலை வழக்காக மாற்றக்கூடாது” என்று விசாரணையின் போது நீதிபதிகள் ஆவேசமுற்றதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்க புதிய சட்ட வரைவை உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதாகவும் தினமலர் செய்தி கூறுகிறது.

குடந்தை தீ விபத்துக்குப் பின் எல்லாப் பள்ளிகளுக்கும் தீப்பிடிக்காத கூரைகள் வந்தது போல , இதற்கும் ஒரு தீர்வு வேண்டும் என்று கூறியிருக்கிறது தினமணி. அதென்ன தீர்வு, ஓட்டை விழ முடியாத பேருந்துகளா?

மொத்தப் பிரச்சினையையும் பேருந்தின் ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில், தம் கண்களுக்கு பட்டியைக் கட்டிக் கொண்டுதான் ஊடகங்கள், நீதிமன்றம் ஆகிய அனைத்துமே இப்பிரச்சினையை அணுகுகின்றன. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியன் சினிமாவை ரீமிக்ஸ் செய்து சிந்திப்பதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது.

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2.jpg

இது வெறும் பேருந்து விபத்து அல்ல. மெட்ரிக் பள்ளிக்குப் பிள்ளைகளை அள்ளிப்போகும் வாகனத்தில் ஏற்பட்டுள்ள விபத்து. டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி போன்ற அதிஉயர் தரம் வாய்ந்த பள்ளிகள் இயக்கும் வாகனங்களில் இத்தகைய ஓட்டைகள் விழுவதில்லை. ஆம்னி பேருந்துக்கும் லோக்கல் பேருந்துக்கும் இடையிலான வேறுபாடு போலத்தான். “பேருந்தில் ஓட்டை விழுந்திருக்கிறது” என்று பெற்றோர் யாராவது தாளாளர் விஜயனிடம் போன வாரம் புகார் செய்திருப்பார்களேயானால், “நீ கொடுக்கிற காசுக்கு ஏ.சி. வண்டியா அனுப்ப முடியும்?” என்று கேட்டிருப்பார்.

சொந்தமாகப் பேருந்து வைத்திருந்த சென்னையின் சுயநிதிக் கல்லூரிகள், அந்தப் பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் கட்டிய ஒரே காரணத்துக்காக, அவை அனைத்தையும் காண்டிராக்ட் முறைக்கு மாற்றிவிட்டனர். சீயோன் பள்ளி தனது சொந்தப் பேருந்தை காண்டிராக்டுக்கு விட்டிருப்பதற்கான காரணமும் அதுதான்.

இப்போதைக்குச் சூழ்நிலை சரியில்லை என்பதால், சீயோன் பள்ளித் தாளாளரால் இப்படிப் பேச இயலாது என்றாலும், இதுதான் உண்மை. மெட்ரிக் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து கோவிந்தராசன் கமிட்டி அறிக்கை வெளியிட்டபோது, அதைப் பின்பற்ற முடியாதென்று வழக்கு தொடுத்த 6400 மெட்ரிக் பள்ளிகளில் சீயோன் பள்ளி முக்கியமானது.

இந்த விபத்தும் முதன்முதலாக நடப்பது அல்ல. செப். 2010 இல் போச்சம்பள்ளியில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியின் பேருந்து, அந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது அந்தப் பள்ளி வாயிலிலேயே ஏறி இறங்கியது. அந்தப் பள்ளியின் அடாவடித்தனத்தால் ஆத்திரம் கொண்டிருந்த ஊர் மக்கள், அந்தப் பள்ளியை அடித்து நொறுக்கி தீ வைத்தது மட்டுமின்றி, தாளாளரின் காருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். உடனே தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒரு நாள் பள்ளிகளை இழுத்து மூடி பெற்றோர்களை மிரட்டினார்கள்.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் எனப்படுபவர்கள் யார்?

இவர்கள் கல்வி மாஃபியாக்கள் எந்த அரசாங்கம் வந்தாலும், அதிகாரிகள் வந்தாலும் அவர்களை அரவணைத்து விலைக்கு வாங்கிக் கொள்கிற மணல் மாஃபியா, சுரங்க மாஃபியா போன்றவர்கள்.

இவர்கள் வியாபாரிகள் மட்டுமல்ல; வழிப்பறிக் கொள்ளையர்கள். குழந்தைகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு பெற்றோரிடம் பணம் பறிக்கும் கயவர்கள். பெற்றோரிடம் பணம் பறிப்பதற்கான புதிய முறைகளைப் பற்றி இடையறாமல் சிந்தித்துப் புதிய புதிய வழிமுறைகளை டிசைன் டிசைனாகக் கண்டு பிடிப்பவர்கள்.

“பணம் இல்லாதவனுக்குக் கல்வி தேவையில்லை. தாய்மொழிக் கல்வி இழிவானது. ஆங்கில வழிக் கல்வியே உயர்வானது. தனியார்மயமே சிறந்த கொள்கை. பணம் பண்ணுவதே வாழ்க்கை இலட்சியம்.பெற்றோர்களால் ஒப்படைக்கப்படும் உருப்படாத பிள்ளைகளை, நூற்றுக்கு நூறு வாங்கும் கறிக்கோழிகளாக உயர்த்தும் உன்னதப் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதால், இதற்கு நிர்ணயிக்கும் விலையை, எதை அடகு வைத்தேனும் கொடுப்பது பெற்றோரின் கடப்பாடு.” இவை இவர்களது கொள்கைகளில் சில. அனைத்தையும் விரித்துச் சொல்லத் தேவையில்லை.

கோவிந்தராசன் கமிட்டி, ரவிராசபாண்டியன் கமிட்டி என்று எந்த கமிட்டி போட்டு கட்டணத்தை வரன்முறைப்படுத்தினாலும், அதை மதிக்க முடியாது என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்பவர்கள்; எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்கள்.

இவர்கள் சமச்சீர் கல்வியை எதிர்த்தவர்கள். காசு கொடுப்பவனுக்கும் ஓசியில் படிப்பவனுக்கும் ஒரே பாடத்திட்டமா என்பதுதான் இவர்களது குமுறல். சமச்சீர் பாடத்திட்டம்தான் வரப்போகிறது என்று தெரிந்த பின்னரும், தாங்கள் வாங்கி வைத்திருந்த பாடப்புத்தகங்களை மாணவர்கள் தலையில் கட்டிக் காசு பார்த்தவர்கள்.

மெட்ரிக் பாடத்திட்டம் என்றொரு பாடத்திட்டமே தற்பொழுது தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற போதும், பெற்றோர்களிடமிருந்து காசு பறிக்கும் தீய நோக்கத்திற்காகவே, இன்னும் தங்கள் பள்ளிகளை மெட்ரிக் பள்ளிகள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டவிரோதச் செயலை ஜெயா அரசும் தெரிந்தே அனுமதித்து வருகிறது.

இவர்கள் கிரிமினல்கள், கருப்புப் பணப் பேர்வழிகள் வாங்குகிற காசுக்கு ரசீது கொடுக்காமல், பிளாக் டிக்கெட் விற்பவனை விடவும், ஆர்.டி.ஓ. ஆபீசு புரோக்கரை விடவும் கேவலமான முறைகளில் பணம் வசூலிப்பவர்கள்.

இவர்கள் ரவுடிகள்; பெற்றோர்கள் சட்டமோ நியாயமோ பேசினால் பிள்ளைகளுக்கு டி.சி. கொடுத்து விடுவோம் என்று பெற்றோர்களை மிரட்டும் தாதாக்கள். விபச்சார விடுதித் தலைவிகள், திருநங்கைகளை அடியாட்களாகப் பயன்படுத்துவது போல, தங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களை அடியாட்களாகப் பயன்படுத்துபவர்கள்.

இப்படிப்பட்ட கிரிமினல்களில் ஒருவர்தான் சீயோன் பள்ளிகள் குழுமத்தின் தாளாளர் விஜயன்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்தக் கிரிமினல்களெல்லாம் ஒன்று சேர்ந்து, அம்மையாரைத் தரிசித்து காணிக்கை செலுத்தியதன் விளைவாகத்தான் பொதுப் பாடத்திட்டம் நிறுத்தப்பட்டது. பத்மா சேஷாத்திரி உள்ளிட்ட மெட்ரிக் பள்ளி தாளாளர்களைக் கமிட்டியாகப் போட்டு, பொதுப் பாடத்திட்டம் சரியில்ல என்று அறிக்கை வாங்கப்பட்டது. மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடை விவகாரத்தில் அரசு தலையிடமுடியாது என்றும், அது பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான பிரச்சினை என்றும் ஜெ அரசு அறிவித்தது.

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3.jpg

இப்போது “பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது” என்று கேட்டு, சீயோன் பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசன் தாக்கீது அனுப்பியிருப்பதாக நாளேடுகளில் செய்தி வந்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசன் என்பவர் மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி. அவருக்கு அந்த மாவட்டத்தில் எத்தனை தனியார் பள்ளிகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டால், அவர் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது.

நன்கொடைக் கொள்ளை தொடர்பாகவோ அல்லது தனியார் பள்ளியின் வேறு எந்தப் பிரச்சினை தொடர்பாகவோ இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசனிடம் புகார் கொடுக்கப் போவதாகப் பள்ளித் தாளாளர்களைப் பயமுறுத்திப் பாருங்கள். அந்த அதிகாரியை ஒரு பிச்சைக்காரனுக்குச் சமமாகக்கூட அவர்கள் மதிப்பதில்லை என்பது அப்போதுதான் உங்களுக்கு தெரியவரும்.

மற்ற அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து பிரித்து மெட்ரிக் பள்ளிகளுக்காகத் தனியொரு இயக்ககம் அமைத்திருப்பதன் நோக்கமே, இவர்களுடைய சுதந்திரமான கொள்ளையை ஊக்குவிப்பதுதான். மெட்ரிக் பள்ளிகளின் அட்டூழியம் என்பது தனியொரு பிரச்சினை அல்ல. இது, கல்வி தனியார்மயத்துடன் நேரடியாகத் தொடர்புள்ளது.

“கல்வி ஒரு வணிகப் பொருள்தான், அதை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முடியாது” என்பதே மத்தியமாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் கொள்கை. அதனால்தான் “ஏழைகளுக்கு 25% இடம் ஒதுக்குங்கள், அதற்கு நியாயமான ஒரு தொகையை நாங்கள் கொடுத்து விடுகிறோம்” என்று கல்வி வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கல்வி அடிப்படை உரிமை இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் இந்த சட்டத்திற்கு ‘கல்வி உரிமைச் சட்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறது.

ஒரு சரக்கை என்ன விலைக்கு விற்கலாம் என்பதை முதல் போட்டு தொழில் நடத்தும் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தங்களுடைய வியாபார உரிமையில் அரசு தலையிடக் கூடாது என்பதும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் வாதம். அதை மீறி 25% என்பதை தங்கள் மீது திணித்தாலோ, கோவிந்தராசன் கமிட்டி, ரவிராசபாண்டியன் கமிட்டி என்று கமிட்டி போட்டு கட்டண நிர்ணயம் செய்தாலோ, அப்படி உள்ளே நுழையும் மாணவர்களை அவர்களுக்குத் தகுதியான வகுப்பறைகளில்தான் அமரவைக்க முடியும் என்றும், காசுக்கு ஏற்ற தோசையாகத்தான் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வியும் இருக்கும் என்றும் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார்கள்.

இதை ஏன் கொலை வழக்காக மாற்றக்கூடாது என்று நீதிபதிகள் உணர்ச்சி வசப்பட்டு பேசியிருப்பதாகத் தெரிகிறது. உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பார்த்தால், கொலைகொள்ளை உள்ளிட்ட பல குற்றப் பிரிவுகளில் மெட்ரிக் பள்ளி முதலாளிகளைத் தண்டிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குச் சட்டத்தில் இடமில்லையே!

சுருதியைக் காவு கொண்ட ஓட்டை பேருந்தில்தான் இருக்கிறது என்று பலரும் எண்ணலாம். ஆனால், கல்வி தனியார்மயத்தைப் பாதுகாக்கும் விதத்தில் இருக்கிறது சட்டம். அது சட்டத்தில் இருக்கும் ஓட்டை அல்ல; சட்டமே ஓட்டை. அது பிரேக் இன்ஸ்பெக்டரால் அடைக்க முடியாத ஓட்டை. விஜயன் முதல் ஜேப்பியார் வரையிலான எல்லா கிரிமினல்களும் சுலபமாகத் தப்பித்துக் கொள்ள முடிகின்ற ஓட்டை!

__________________________________________________

- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012

__________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

Tags: கட்டணக் கொள்ளை, கல்வி மாஃபியாக்கள், கல்விக் கொள்ளை, கோவிந்தராசன் கமிட்டி, சமச்சீர் கல்வி, சீயோன் பள்ளி, சீயோன் விஜயன், சேலையூர், சேலையூர் சீயோன் பள்ளி, ஜெயலலிதா, ஜெயா அரசு, தனியார் கல்வி, நண்கொடைக் கொள்ளை, பொதுப் பாடத்திட்டம், ரவிராசபாண்டியன் கமிட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.