Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி நாட்களும் எனது பயணமும்-கையாலாகாதவர்கள் ஆனோமே என்ற விரக்தி எங்களை பேசாமடந்தைகளாக்கியது

Featured Replies

சாதாரண உடைகளுக்கு மாறிய எங்களை பார்க்க எங்களுக்கே பிடிக்கவில்லை. ஆளையாள் பார்த்து சரி என தலையாட்டிவிட்டு மூழிக்காதுகளோடு புறப்பட்டோம். ‘அக்கா இந்த திறப்பை என்ன செய்ய?’ என்றாள் சந்தியா பதற்றமாக. ஏனெனில் அவளது கையிலிருந்தது அலமாரித்திறப்பு.

பனைமரத்தோடு அண்டி வைக்கப்பட்டிருந்த அந்த அலுமாரிக்குள் கடைசிநாட்களில் போராளிகளாகியவர்களது நகைகள் இருந்தன. ‘இதிலயே போட்டிட்டும் போகலாம். அல்லது நகைகளை எடுத்து எல்லாருக்கும் போட்டுக்கொண்டுபோகவும் குடுக்கலாம்.’ என்றேன். ‘அது சனத்தின்ரது. என்ர கையால எடுத்து ஒருதருக்கும் குடுக்கமாட்டன். அப்பிடி குடுத்தனெண்டால் இவளநாளும் நான் நேர்மையாய் வாழ்ந்ததுக்கும் அர்த்தமில்லாமல் போயிரும்’ என்றாள் சந்தியா.

சரிதான் அதிலொன்றை நான் போட்டுக்கொண்டுபோக உண்மையிலேயே அந்த நகைக்குச் சொந்தக்காரி நின்று அது என்னுடையது என்றால் எனக்கு எப்படியிருக்கும்? கள்ளியைப்போல பார்க்கப்பட மாட்டேனா? யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும். எனக்கும் வேண்டாம் என்றது என் மனம். திறப்பை அந்த காப்பகழிக்குள்ளேயே விட்டெறிந்தாள் சந்தியா.

‘சந்தியா நான் காயப்பட்டால் என்னோட மினக்கெட வேணாம். நான் குப்பி கடிக்கிறன். தப்பித்தவறி மயங்கிட்டன் என்றால் என்னை கடிக்க வையுங்க’ என்று அவளிடம் சொன்னேன். ‘ஓமக்கா. குப்பிய கொண்டுதான் போகனும். ஆமிக்காரர் எங்களை எப்பிடி நடத்துவாங்களோ தெரியாது. சிக்கலெண்டால் உடன கடிப்பம் என்னக்கா.’ என்றாள் சந்தியாவும். ஏனோ கால்கள் அவ்விடத்தைவிட்டு அசைய மறுத்தன.

படையினர் மிகமிக நெருங்கி வருவது புரிந்தது. தறப்பாள் விரிப்புகளோ பனைகளோ இல்லாவிட்டால் நேருக்குநேர் காணக்கூடிய தூரத்தில்தான் நிற்கிறோம். ‘போகலாம் அக்கா. முதல்ல இவடத்த விட்டு மாறுவம்’ என்றபடி சந்தியா தன் பொய்க்காலை ஊன்றி மேலே ஏறினாள். அடுத்த காப்பகழிகள் வெறுமையாய் கிடந்தன. சில காப்பகழிகளில் போராளிப்பெண்கள் நிற்கிறார்கள் என்பது பேச்சொலியில் புரிந்தது. நானும் பதுங்குகுழியைவிட்டு வெளியேறினேன். அவள் முன்னேயும் நான் பின்னேயுமாக நடக்கத்தொடங்கினோம்.

சேறையும் சகதியையும் மனித அரியண்டங்களையும் கடந்து பலநூறு தறப்பாள் விரிப்புகளையும் தாண்டி வீதிக்கு வந்தோம். வட்டுவாகல்வீதி மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது. இலட்சக்கணக்கான எறும்புகளைப்போல ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு நகர்ந்தார்கள். ஆங்காங்கே கிடந்த பிணங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. வெடிகள் அவர்களை விரட்டிக்கொண்டே வந்தன. ஓட்டமும் நடையுமாக முண்டியடிக்கும் சனங்களின் செயலில் பதற்றம் மட்டுமே அப்பட்டமாய் தெரிந்தது.

பின்னுக்கு என்னதான் தெரிகிறது என்று திரும்பிப்பார்த்த என்னால் நம்பவே முடியவில்லை. இதென்னதிது ஆங்கில திரைப்படமா அல்லது கனவா? என்று அருண்டு போகுமளவுக்கு இருந்தது நான் கண்ட காட்சி. ‘சந்தியா பின்னுக்கொருக்கா பாருங்க’ என்றேன் அதிர்ச்சியாய். என்னிலும் பதற்றம் அப்பியது. ஒருவர் கையை ஒருவர் இறுகப்பிடித்துக்கொண்டு நின்று பார்த்தோம். பாரிய புகைமண்டலம் ஆகாயம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

கன்னங்கரேலென்ற புகையின் திரட்சியில் தூசுதும்புகளைப்போல நெருப்புத்துண்டுகளும் பறப்பது தெரிந்தது. உண்மையிலேயே என்னால் நம்பமுடியவில்லை. திரைப்படங்களில்கூட இப்படி பயங்கரமான காட்சியை நான் கண்டதில்லை. புகையாலான அடர்த்தியாக இருந்த அந்த கரியபோர்வை எங்களைநோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. சுருள்சுருளாக கிளம்பியபடி வரும் அந்த புகைமண்டலம் பார்க்க பயங்கரமாய் இருந்தது. தாமதித்தால் அதற்குள் சிக்கி மூச்சுத் திணறித்தான் சாகவேண்டி வரும்.

‘அக்கா என்னக்கா இது! ஏனக்கா இப்பிடி இருக்கு?’ என்ற சந்தியாவின் குரல் நடுங்கியது. அந்த இராட்சத புகைக்கோளத்துக்குள் நின்று ஆயிரக்கணக்கான பேய்கள் எங்களை பிடித்து விழுங்க வருகின்றன என்பதைப்போன்ற அச்சம் கிளம்பியது.

நாலா பக்கமிருந்தும் துப்பாக்கிச் சன்னங்கள் சீறிவந்தன. நாங்கள் முதுகை வளைத்து குனிந்தபடி, விரைந்து நடக்க முயன்றுகொண்டிருந்தோம். சற்று நிதானமில்லாவிட்டாலும் நாயின் பிணத்திலோ ஆளின் பிணத்திலோ தடக்கிவிழ நேரும். வட்டுவாகல் வீதியிலும் வீதியை அண்டியுமே அனைத்து மக்களும் குழுமினார்கள். கடலின் கொந்தளிப்பையொத்த அவர்களின் கண்களில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பேரேக்கம் தெரிந்தது. விரட்டிக்கொண்டே வரும் கரும்புகையின் பயங்கரத்தை அவர்களால் சகிக்கமுடியவில்லை. அச்சமூட்டத்தக்க அந்த குரூர புகைமண்டலம் ஆகாயத்தை மேவிக்கவிழ்ந்து சூரியனை மறைத்துப்போட்டது.

‘அக்கா கெதியா போவம். போங்க போங்க’ என்றபடி எனது பையில் இறுக்கப்பிடித்துக்கொண்ட சந்தியா இப்போது என்பின்னால் இழுபட்டபடி வந்தாள். அவளுடைய வேகத்துக்கு பொய்க்கால் ஒத்துழைக்க மறுத்தது. அதை அடிக்கடி சரிப்படுத்திக்கொண்டே எட்டி நடந்தாள். எங்கேதான் போவது? யாரிடம்தான் விசாரிப்பது? எல்லோருக்கும் அதே கேள்விகள்தான்.

திணறிக்கொண்டிருக்கும் சனங்களை பார்க்க என்னவோபோல் இருந்தது. ஒருவிதமான குற்ற உணர்வு மனசுக்குள் கிடந்து இம்சைப்படுத்தியது. ஓரமாக ஒதுங்கிநின்று அலைமோதும் மக்களை பார்த்துக்கொண்டு நின்றோம். அருகில் காயப்பட்ட போராளிகள் பலர் படுக்கையில் கிடந்தார்கள். யாரோ ஒரு அம்மா அவர்களுக்காக தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தார்.

படுக்கையில் கிடந்த அத்தனைபேரின் கண்களும் ஆற்றப்படும் தேநீரின்மீதே இருந்தன. விடுதலைக்காக என்று இறுதிவரை போராடி தம்முடலின் சக்தியையெல்லாம் இழந்துவிட்டு எலும்பும் தோலுமாகத் தெரிந்த அந்த போராளிகளை பார்க்கப்பார்க்க நெஞ்சம் வெதும்பியது.

‘அக்கா போங்க போங்க. பயப்பிடாமல் போங்க. ஐ.நா.தான் உங்கள பொறுப்பெடுக்கும். யோசிக்க வேணாம்.’ என்றான் அருகில் வந்த ஒரு போராளி. எனினும் விரக்தியும் வேதனையுமான சிரிப்பொன்று அவனது ஒடுங்கிய முகத்தில் விழுந்தது. ‘உண்மையாவா?’ என்றேன். நெருப்புக்குள் நின்ற இத்தனை நாட்களும் அந்த ஐ.நாவைத்தானே எதிர்பார்த்துக்கொண்டு நின்றோம். ‘ம். ஐ.சி.ஆர்.சி வந்து பாதுகாப்பாய் கூட்டிக்கொண்டு போகும். பயப்பிடாம போங்க’ என்றான்.

நம்பிக்கையாக. அவனுடைய வார்த்தைகள் ஆறுதலை ஏற்படுத்தத்தான் செய்தன. அப்படியென்றால் போகலாம்தான் என்றது மனது. ஆனாலும் என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருக்கத்தான் செய்தது. மேலும் சிறிதுதூரத்திற்கு நடந்தோம். வீதியோரமாய் குந்திக்கொண்டிருந்தவர்களில் எனக்குத்தெரிந்த குடும்பமொன்று இருந்தது. அவர்களின் வதனங்களோ ஆகாயத்தைவிட மோசமாக இருண்டுகிடந்தன.

தன் குழந்தைகள் இருவரையும் மடியில் வைத்துக்கொண்டிருந்த தந்தையான போராளியின் கண்களில் வெறுமை மட்டுமே இருந்தது. அவரது கையில் இன்னும் கழற்றப்படாத இயக்கத்தகடு. ‘அண்ணா. தகட்ட கழட்டுங்க’ என்றேன். பட்டென சிவப்பேறிய அவரது கண்களில் நீர்முட்டியது. பற்களை இறுகக்கடித்து தன் உணர்வின் கொதிப்புகளை அவர் அடக்குவது புரிந்தது. அவருடைய மனைவி துயரார்ந்தவளாய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். சோகம் எங்களின் தலைகளை நிலத்தைப்பார்க்க குனியவைத்தது. கையாலாகாதவர்கள் ஆனோமே என்ற விரக்தி எங்களை பேசாமடந்தைகளாக்கியது.

வீதிக்கு முதுகு காட்டியபடி குந்திக்கொண்டிருந்த என்னை பின்புறத்தில் இருந்து யாரோ தோளில் தட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் என் பழைய சிநேகிதி கிருபா. என்னை இழுக்காத குறையாக எழுப்பி தன்னுடன் அழைத்துச்சென்றாள். சந்தியாவும் என்னோடேயேதான் வந்தாள். எங்கள் இருவரையும் தங்களது பதுங்குகுழியருகே இருத்திய கிருபா சுகம் விசாரித்தாள். பெரிய மனுசிமாதிரி எனக்கு அறிவுரை சொன்னாள்.

‘எங்க நிண்டாலும் பங்கர் இல்லாத இடத்தில நிக்கக்கூடாது. அதில மாதிரி வெறும் இடத்தில இருக்கக்கூடாதக்கா. இந்த பங்கருக்கு பக்கத்திலயே இருங்க. சரியா.’ நான் ஆமென்று தலையை ஆட்டிவைத்தேன்.

அவளது உறவினர்கள் மொத்தப்பேரும் இரண்டு காப்பகழிகளில் இருந்தார்கள். அவ்விடத்தில் நின்ற ஒரேயொரு பனைமரத்தோடு தலைவைத்து படுத்திருந்த கிருபாவின் தந்தை நெஞ்சில் வானொலிப்பெட்டியை வைத்து மாறிமாறி செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தார். காப்பகழிக்குள் குந்திக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பதும் தேநீர் தயாரித்து கொடுப்பதும் கிருபாதான். எங்களுக்கும் கூட பால்தேநீர் ஆற்றித்தந்தாள். வயிராற சாப்பிட்டு நாட்கணக்காகி விட்டதுதான். ஆனாலும் வயிற்றில் பசியே இல்லை. அந்தத்தேநீர் அமுதத்தைவிடவும் இனிமையாக இருந்தது. பருகிவிட்டு அவ்விடத்திலேயே அமர்ந்திருந்தோம்.

எதுவுமே பேசாமல் யோசனையோடு இருந்த எங்களுக்கு கிருபாவின் தந்தையாரும் துணைவரும் மாமியாரும் என மாறிமாறி ஆறுதல் வார்த்தைகளை சொன்னார்கள். அவளின் ஒரே மகன், சின்ன மகன்கூட என்னை ஞாபகப்படுத்தி புன்னகைத்தான். எத்தனை அழகாக இருந்த குட்டிப்பையன் அவன். எப்படியோ தெரிந்தான். அவனுடைய கன்னத்தசைகளையே காணவில்லை. அந்தச் சின்னஞ்சிறுவனின் புன்னகையில்கூட துயரம் வழிந்தது. நாங்கள் இருந்த காப்பகழிக்கும் படையினர் நின்ற இடத்திற்கும் குறைந்தது அரை கிலோமீற்றர் தூரந்தன்னும் இருக்கவில்லை. காப்பகழிகளில் இடம்பிடித்துக் கொண்டவர்கள் அடிக்கடி எழுந்து வீதியில் அலைமோதும் சனக்கூட்டம் நகர்கிறதா இல்லையா என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டேதான் இருந்தார்கள்.

எங்களையே உருக்கி வார்த்துவிடக்கூடியதாய் வெக்கை வாட்டியது. அடிக்கடி சீறிப்பாயும் சன்னங்கள் எங்கள் தலைகளை துளைத்துவிடாமல் குனிந்து குனிந்து குந்திக்கொண்டிருந்து நேரத்தை போக்கினோம். மாலைநேரம். மணி நான்கை எட்டியது. சனக்கூட்டம் நகரும் ஆற்றைப்போல விரைந்தது. வீதியோரம் நின்றவர்கள் திடீரென இரைந்தார்கள்.

‘ஆமி. ஆமி வாறான். வாறான்’ என்ற சொற்களில் பதற்றம், பயம், நிம்மதி, கலக்கம், சந்தோசம் என்ற எல்லாமும்தான் தெரிந்தன. என் கண்களில் பச்சை சீருடை தெரிந்ததும் கரம் தன்னிச்சையாய் குப்பியை பற்றியது.

அடுத்த கணம் என்னை யாரோ பிடித்து விழுத்தினார்கள். கிருபா கிறீச்சிட்டாள், ‘அந்த குப்பிய முதல்ல கழட்டுங்க மாமி’ என்று. ‘இஞ்சவிடு பிள்ள. விசர் மாதிரி முடிவெடாத. இனி எதுக்காக நீ சாகணும்? விடு அதை’ என்று அதட்டிக்கொண்டே என் கழுத்திலிருந்து கழற்றிய குப்பியை தானிருந்த காப்பகழிக்குள் புதைத்தார். ‘எழும்பு. சனத்தோட சனமாய் நட’ என்று கைகாட்டி கட்டளையிட்டார் கிருபாவின் மாமி. முட்டிக்கொண்டுவந்த அழுகையை அடக்க முயன்றேன்.

‘யோசிக்காதை. எத்தினபேர் போயினம் பார். எழும்பு எங்களோட வா’ என்று உரிமையாய் சொன்னார் அந்தத் தாயார். நானும் ஒரு நடைப்பிணம்போல நகர்ந்தேன். வீதியில் ஆங்காங்கே சில பிணங்கள் கிடந்தன. அவற்றை விலக்கி சனக்கூட்டம் நகர்ந்தது. இராணுவச் சீருடைகள், சட்டித்தொப்பிகள், நீட்டிய துப்பாக்கிகள் சகிதமாக படையினரை தொகையாகக் கண்டபோது உள்ளம் பதறியது. செய்வதற்கு எதுவுமில்லை. சொல்வதற்கும் ஒன்றுமில்லை.

‘ஏ நங்கி என்னை கல்யாணம் கட்ரது’ என்று முகமாலை சோதனைச் சாவடியில்நின்று சமாதான காலத்தில் கேட்டவனை முறைத்ததைப்போல இனி எந்தப் படையினனையும் முறைக்க முடியாது. அதைவிட அசிங்கமாய் கேட்டாலும்தான் இனிமேல் என்ன சொல்ல முடியும்? இந்தப்பயணம் எந்த நரகத்திற்கு கொண்டுபோய் விடப்போகிறதோ என்று பெருமூச்சு கிளம்பியது. பார்க்கும் இடமெல்லாம் படையினரே நின்றுகொண்டிருந்தார்கள். வந்துகொண்டிருக்கும் சனங்களை படையினர் நெருங்கவில்லை. எனினும் எட்டித் தொடமுடியாத இடைவெளியில் துப்பாக்கியை தயார்நிலையில் பிடித்தபடி சிலைகளைபோல நின்றார்கள்.

மக்கள் நடந்துவந்த சரசரப்பு சத்தத்தைதவிர அங்கொன்றும் இங்கொன்றுமாய் துப்பாக்கிச் சத்தமும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. வந்துகொண்டிருந்த எங்களை வாங்க வாங்க என்று இருகரங்களையும் மேலே தூக்கி ஒரு இரட்சகனைப்போல அழைத்துக்கொண்டிருந்தவனை எனக்கு ஏற்கெனவே தெரியும். தன்னை புலனாய்வுத்துறை என்று சொல்லிக்கொண்டு, ‘சனங்களை பலவந்தப்படுத்துவதைப்பற்றி கவலப்பட ஒண்டுமில்ல. ஆக்கள பிடிச்சு களத்துக்கு தாங்க’ என்று சொல்லி, பரப்புரை பணியில் நின்ற போராளிகளுக்கு வடை வாங்கி கொடுத்தவன்தான் அவன்.

இப்போது பெரிய மீட்பனைப்போல நிற்கிறானே என்று யோசித்தபோதுதான் எல்லாமே புரிந்தது. அவனொரு சிங்களப்படை உளவாளியாக இருக்கக்கூடியவன் என்று. வடைகொடுத்த அன்றே தோழிகளுடன் கதைத்தது சரிதான். சந்தேகப்பட்ட அன்றே அவனை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அன்றைய நாட்களில் விசாரணைப்பகுதி என்று எதுவும் இருக்கவில்லையே.

படையினருக்காக போராளிவேடம் பூண்டு மக்களுக்கெதிரான செயல்களை செய்ய போராளிகளை தூண்டியவன். இப்படி கடைசிநாட்களில் கட்டாய ஆட்சேர்ப்பில்நின்ற பலரை, பச்சைசீருடையுடன் அந்த வீதியில் காணப்போகிறோம் என்பதை அப்போதுகூட நான் எதிர்பார்க்கவில்லை.

- ஆனதி

உறவுகளே இந்த பக்கத்தை உங்கள் நண்பர்கள் உறவுகளிடம் கொண்டு சென்று சேருங்கள் (SHARE ) பகிருங்கள் நண்பர்கள் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள்

பதிந்தவர் ஈழம் தேவதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.