Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோயில் காக்காத மனிதர்களை காக்க யாரும் வாருங்கள்...

Featured Replies

புண்ணியம் சேர்ப்பதற்காக பணத்தை சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். சேர்த்த பணத்தை வைத்து புண்ணியம் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். பணத்தை சேர்ப்பதாலேயே பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். புண்ணியம் சேர்ப்பதாக நினைத்து பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். பணம் சேர்ப்பதே புண்ணியத்துக்காக என்பது தேவையில்லை தான், ஆனால் புண்ணியத்துக்காக என்று செலவழிக்கும் பணத்தையாவது புண்ணியத்துக்காக செலவழிக்கலாமே?

222222.JPG

பணத்தை சேர்க்கும் தொழிலே புண்ணியமும் சேர்ப்பதாக அமைந்துவிடுகிறது சிலருக்கு. பாவம் சேர்க்கும் தொழிலையே பணம் சேர்க்கும் தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். பாவம் மூலமாகவோ, புண்ணியம் மூலமாகவோ எப்படி சேர்த்த பணத்திலும் நமது சந்தோஷத்துக்காக செலவழித்தது போக, புண்ணியம் சேர்க்க செலவழிக்க நாம் ஆசைப்பட்டால் அதை செய்வதற்கு அருமையான ஒரு முறை இருக்கிறது.

இயலாதவர்களுக்கு, உழைத்து உண்ண, வாழ முடியாதவர்களுக்கு உதவுவது. எவரையும் எரிச்சல் படுத்தாது, எவரையும் காயப்படுத்தாது, எவரது அவமரியாதையையும் சம்பாதிக்காது நாம் புண்ணியம் சேர்க்கும் எளிய வழிமுறை. வாருங்களேன், அதை செய்வோம்?

ஏழைகளுக்கு உதவுவது என்பது சம்பந்தமாக பல தவறான அபிப்பிராயங்கள் நம்மிடை இருக்கின்றன. புண்ணியம், தர்மம் என்பதே ஒரு வியாபாரமாக ஆகிப்போனது இதனால்தான்.

முதலாவது, ஏழைகளுக்கு உதவுவது. ஏழைகள் எல்லோருக்கும் உதவுவது என்பது தேவையற்றது. அவர்கள் ஏழையாக பிறந்துவிட்டார்கள் என்கிற ஒரு காரணம் அவர்களுக்கு உதவுவதற்கு போதாது. உழைக்கும் தகைமை கிடைக்கப்பெற்ற அனைவருமே அவர்கள் ஏழையோ, பணக்காரரோ உதவி தேவையற்றவர்கள்தான். ஏழைகளுக்கு உதவுவது புண்ணியம் என்கிற ஒரு தவறான அபிப்பிராயத்தை அண்மைக்கால ஊடகங்கள் ஏற்படுத்தி விட்டன. முக்கியமாக எம் ஜி ஆர் ரஜினி படங்கள். எப்படி பணக்காரர்களிலே நல்லவர்களும் கெட்டவர்களும் நடுநிலையானவர்களும் கலந்து உள்ளார்களோ, ஏழைகளிலும் அப்படித்தான் .ஆகவே ஒருவர் ஏழை என்பது அவருக்கு உதவுவதற்கான தகுதி அல்ல.

அவரது பிழைப்புக்கு அவராலோ, அவர் சார்ந்து உள்ளோராலோ பங்களிக்க முடியாது போகுமளவுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பலவீனமான மனிதர்கள் மட்டுமே உதவி பெறத் தகுதி உடையவர்கள். அதுவே உண்மையான தர்மம். ஒருவனுக்கு பணத்தை கொடுத்து உழைப்பு சம்பந்தமான என்னத்தை அவனுக்கு ஏற்படுத்தாது தடுப்பது தர்மம் அல்ல, பாவம்.

பிச்சை போடுவது புண்ணியம் என்று பொத்தாம் பொதுவாக எண்ணிக்கொள்ளாதீர்கள். பிச்சை போடுவதன் மூலம் ஒருவனை பிச்சைக்காரன் என்கிற கேவல நிலைக்கு தள்ளும் பாவத்தைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். அதேவேளை உங்களை தர்மவானாக்கும் புண்ணியம் அந்தப் பிச்சைக்காரனுக்கு போகிறது. யாருக்கு நன்மை? இதைத்தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்கிறார்கள் முன்னோர்கள். அள்ளிக் கொடுப்பதல்ல புண்ணியம், அறிந்து கொடுப்பது.

உண்மையாக இன்றைக்கு உதவி தேவைப்படுபவர்களில் முக்கியமானவர்கள் யார்? கடைசி யுத்தம் என்று சொல்லப்படுகிற யுத்தத்திலே பாதிக்கபட்டவர்கள் இல்லையா? தர்மம், புண்ணியம் என்பதைத் தாண்டி அது நமது கடமை இல்லையா? பணத்தால் அல்லாவிடினும், மனத்தாலாவது அவர்களுக்கு உதவுவது நமது தார்மீகப் பொறுப்பு இல்லையா? நீ ஒரு புண்ணியத்தை செய்ய நினைக்கும்போது அது ஒரு புண்ணியக் கணக்காக வரவிடப்படுகிறது, அதை நீ செய்துவிட்டலோ, அது இரண்டாவது முறையாக கணக்கிடப்படுகிறது என்று குரான் கூறவில்லையா? நாம் உதவுவதாக நினைத்தாலே போதாதா? அந்த மக்களுக்கு, யுத்தத்திலே கையையும் காலையும் கண்களையும் உயிர்களையும் இழந்தவர்களுக்கு, குண்டு மழைகளுக்கு நடுவே ஓடி வரும்போது ஒரு குண்டு விழுந்து தந்தை குற்றுயிராய்க் கிடக்க, அந்தத் தந்தையின் கதறலை காதிலும் மனத்திலும் வாங்காது தன உயிரை காக்க தப்பி ஓடவேண்டிய மிக அவலமான நிலைமைகளை கடந்து வந்த மகன்களுக்கு, தனது கண்முன்னே, தனது சகோதரிகள், காதலிகள் கற்பழிக்கப்படுவதை கண்டவர்களுக்கு, தடியால் கண்ணிலே அடி வாங்கி கண் தெறித்துப் போனவர்களுக்கு, வயிற்றிலே மிதிவாங்கி செத்துப்போன நிறைமாத கர்ப்பிணிகளின் கணவர்களுக்கு, பெரிய கிடங்கு ஒன்றை வெட்டி, அதிலே ஊரின் மொத்த மனிதர்களில் செத்த மனிதர்களின் அங்கங்களை பொறுக்கி எடுத்துப் புதைத்துவிட்டு வந்தவர்களுக்கு, யாழ்ப்பாணத்திலே, வெளிநாடுகளிலே நமது சொந்தக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள், அவர்கள் நம்மைப் பார்த்துக் கொள்வார்கள், எங்களது ஒவ்வொரு துளி இரத்தத்துக்கும் ஒவ்வொரு துளி கண்ணீர் விடுவார்கள் என நம்பி வந்தவர்களுக்கு நாம் என்னை செய்யப் போகிறோம்?

பணக்காரர்கள் அனைவரும் உதவவேண்டியது அவர்களது கடமை, உண்பது நாழி அரிசிதான், உடுப்பது இரண்டு துண்டுதான், அனைத்தும் ஒன்றுதான், சொத்து சேர்க்காதே, பிஸ்ஸா சாப்பிடாதே, ஏழைகளுக்கு, யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு என்று கட்டளை போட வரவில்லை நான். ஒருவரது சொத்து என்பது அவரது தேட்டம் அல்லது முதுசம், அல்லது சீதனம். அவருக்கே முழு உரிமையும் உள்ளது. அதை தானம் பண்ணுவதோ, செலவழிப்பதோ, வெட்டிப் புதைப்பதோ அவரது விருப்பம். ஆனால் புண்ணியம் சேர்ப்பதற்காக என்று சொல்லி செலவழிக்க அவர் முடிவு செய்தால், அவர் என்னை முடிவு எடுக்கிறார் என்பதுதான் எனது பிரச்சனை.

மதங்களை பின்பற்றுங்கள், கடவுள்களை வணங்குங்கள், வேண்டாம் என்று இல்லை. ஆனால் கடவுளுக்காக செலவழிக்கும் பணத்தின் ஒரு பங்கையாவது அந்த ஆதரவற்றோருக்கும் கொடுங்களேன்? நீங்கள் வணங்கும் இறைவனும் அதைத்தானே விரும்புவார்?

33333.JPG

நாங்கள் ஒரு செயற்றிட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தின் ஏறத்தாழ நூற்றைம்பது ஆலயங்களைப் பற்றி நயினாதீவு தொடக்கம் பருத்தித்துறை வரை – மரத்தடி விநாயகர் தொடக்கம் நல்லூர் கந்தசாமி கோயில் வரை – ஆராய்ந்தோம். ஏறத்தாழ 80% ஆலயங்களில் நாங்கள் போன காலத்திலேயே புனருத்தாரண வேலைகள் நடந்துகொண்டிருந்தன. மிகையில்லை, எல்லாமே தேவையில்லாத வேலைப்பாடுகள். மாபிள் பதிப்பது, அலங்கார விளக்குகள் தொங்கவிடுவது, நன்றாக உள்ளதை இடித்துக் கட்டுவது என்று. அத்தனை ஆலயங்களிலும் குறிப்பிடக்கூடியளவு சமூகத்துக்கு உதவும் வேலைகளுக்கு செலவு செய்வது இரண்டே இரண்டு ஆலயங்கள்தான். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், வியாவில் ஐயனார் ஆலயம். யாழ்ப்பாணத்து ஆலயங்களிலே ஒரு வருடத்துக்கு மொத்தமாக செலவாகும் தொகை எவ்வளவு இருக்கும், அதிலே தேவையில்லாத செலவு எவ்வளவு இருக்கும் என்பதை ஒருமுறை கணக்கிட்டுப் பாருங்கள். ஊர்காவற்றுறையிலே ஒரு சராசரி அளவான சிவன் கோயிலுக்கு மாதத்துக்கு செலவாகும் தொகை தொண்ணூறு ஆயிரம் – இது சாதாரண நாட்களில். ஒட்டுமொத்தமாக கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள், அது இது என்று யாழ்ப்பாண ஆலயங்களுக்கு ஒரு வருடச் செலவு எங்களது கணக்குப்படி எவ்வளவு தெரியுமா?

எண்பத்திரண்டு கோடி இலங்கை ரூபாய். அதுவும் எல்லாமே குறைந்த அளவுக்கு இழுத்துப் பிடித்ததில். அதிலே ஏறத்தாழ அரைவாசி வெளிநாட்டிலிருந்தும், அரைவாசி உள்நாட்டிலிருந்தும் வருகிறது என்று எடுத்துக் கொண்டாலும், தலா நாற்பத்தொரு கோடி. இரு சாராரும் பத்து வீதத்துக்கும் குறைவான தொகையை ஒதுக்கினால்கூட எட்டு கோடி ரூபாய் பணத்தை வேறு ஏதாவது மனிதர்களுக்கு பயன்படும் காரியங்களுக்கு பயன்படுத்தலாமே?

எங்களது வெங்காயம் வலைதளத்தை வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள்தான் பார்ப்பது அதிகம். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஒரு முழுமையான இந்து என்று காட்டுவதற்காக உங்களது உழைப்பிலே கொஞ்சப் பணத்தை ஆலயங்களுக்கு அனுப்புவதுபோலவே, நீங்கள் ஒரு முழுமையான மனிதர் என்பதை காட்டுவதற்காக போரினால் பாதிக்கப்பட்டு இங்கே அநாதரவாக இருக்கும் மக்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு அனுப்பலாமே? உங்களது பெயரைச் சொல்லி ஒரு குழந்தை படிக்குமே, அல்லது சாப்பிடுமே? அல்லது ஒரு இடதுகை இழந்த பதினைந்து வயது சிறுவன் பழைய இரும்பு விற்பானே? ஆலயங்களுக்கு உதவினால் தெய்வங்கள் உங்களுக்கு புண்ணியத்தை தரும், ஆனால் இவற்றுக்கு உதவினால் நீங்கள் தெய்வமாகவே ஆவீர்கள் என்பது நீங்கள் அறியாததா?

யுத்தத்திலே நானும், நீங்களும் பகிர்ந்து வாங்கி இருக்கவேண்டிய காயங்களைத்தனே அவர்கள் வாங்கினார்கள்? நாங்கள் யுத்தம் நடக்காத இடங்களிலும், நீங்கள் யுத்தம் பாதிக்காத இடங்களிலும் தப்பியிருந்தபோது அவர்கள் வாங்கிய குண்டுகளில் பாதி நமது பெயர்கள் எழுதப்பட்டவை அல்லவா? அந்த அடிப்படையிலே நமக்கு தார்மீக கடமை இருக்கிறதல்லவா?

யாழ்ப்பாணத்துக்கு, உங்கள் உறவுகளுக்கு, ஆலயங்களுக்கு நீங்கள் அனுப்பும் அளவுக்கதிகமான பணம் என்னென்ன வடிவத்திலேல்லாம் இங்கே பாவங்களால மாற்றப்படுகின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் தூக்கம் துறந்து அனுப்பிய பணம் இங்கே பலரது தூக்கம் கெடுக்கிறது. கோயில்களிலே களியாட்டங்களாக, இளைஞர்களின் கூத்தாட்டங்களாக, இன்னும் எவ்வளவோ கேவலமான வழிகளிலே நீங்கள் உதிரம் குறைத்து அனுப்பிய பணம் வீணாவதிலும், எனக்காகவும், உங்களுக்காகவும் சேர்த்து உதிரம் துறந்தவர்களது நன்மைக்கு அது பயன்படக் கூடாதா?

இந்தப் பதிவை நான் எழுத உடனடிக் காரணம் கிளிநொச்சி மகாதேவா ஆசிரமத்திலே உடனடியாக எழுந்துள்ள நிதிப் பிரச்சனைதான். அதுபற்றி முழுமையாக அறிய இந்தத் தளத்துக்குசெல்லுங்கள். உங்களால் உதவ முடியாவிட்டாலும், இந்தப் பதிவையோ, அல்லது அந்தத் தளத்தையோ மற்றவர்களுடன் பகிர்வதன் மூலமாவது இந்தப் பிரச்னைக்கு எங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்யலாமே. ஒருவராவது உதவ முன்வருவார்தானே... அந்த ஒருவரைத் தேடுவோம், வாருங்கள்.

111.JPG

அந்த இல்லம்தான் என்று இல்லை, கருணைப்பாலம், நவீல்ட் மாற்றுத் திறனாளிகளுக்கான பாடசாலை என்று ஆயிரம் உதவிதேடும் இதயங்கள் ஒவ்வொரு நிறுவனங்களிலும் காத்திருக்கின்றன. உதவும் இதயங்களின் எண்ணிக்கைதான் போதாது.

அடுத்தமுறை உங்களது ஊரிலுள்ள கோயிலுக்கு காசு ஒதுக்கும் பொது அதன் நூற்றிலொரு பங்கையாவது மனிதர்களுக்காக சேமித்து வையுங்கள். வருடத்தின் முடிவிலே நீங்கள் புண்ணியம் சேர்ப்பதற்குரிய காசு உங்களிடம் சேர்ந்திருக்கும்.

44444.JPG

அந்தக் காசை ஏதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்துங்கள். வேண்டுமானால் அதற்கான பெயரையும் பிரபலப்படுத்துங்கள். தவறில்லை. கேட்டது செய்துவிட்டு பெருமையாக சொல்லுவோர் வாழும் உலகத்திலே நல்லது செய்துவிட்டு அதை விளம்பரப்படுத்துவது தவறில்லை. ஆலயத்தின் மின்விளக்கிலே உபயம் என்று உங்கள் பெயர் இருப்பது பெருமையா, அல்லது ஒரு புத்துயிர்த்தெழுந்த மனிதனின் இதயத்திலா?

(நீதுஜன் பாலா)

http://venkayamvalai...log-post_7.html

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.