Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தக நெடி சூழ் காகிதப் பூக்கள்.

Featured Replies

[size=4]

கலாசாரச்சிதைவு உறுநீர்க் குளத்து அணையிட்ட, சிறுதுளை ஒப்பது! மரபுகளையும், கலை வடிவங்களையும் சிதைத்து விடுவது இனமொன்றின் வேகமான அழிவுக்கு வழிகோலும் என்பதைப் போலவே, கலாசாரச் சிதைவு என்கின்ற எழுத்துக்களுக்குள் பின்னப்பட்டுள்ள அபாயம், அதி பயங்கரமானது. வழக்கமாகவே ஒன்றைப் பத்தாக்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குகின்ற யாழ்ப்பாண இணையத்தளமொன்றின் பக்கம், சொல்கின்ற செய்தி அலற வைக்கின்றது. "பொய்யாகி விடக்கூடாதோ, பெருமாளே!'' என்று நல்லூருறை நல்ல தமிழ் நாதனை நோக்கி அறியாமலே எம் எண்ணச் சுவாலைகளை எழுப்புகின்ற கொடூரம் உரைக்கின்ற சுருக்கம் அது! "அனுராதபுரத்தை அண்மித்த தடுப்பு முகாமொன்றில், இராணுவ உயர் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருத்தியின் கண்ணீர்த் துளிகளின் உப்பு'', கடும் விஷமாய் கொல்கின்றது.

தன்னிரு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதற்காக, இன்றைக்கு தன் வாழ்வை யாழ்ப்பாணம் தீபகற்பத்துக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் பணத்துக்காக உடலை விற்கும் உலகின் ஆதி முதற் தொழிலுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து விட்டதாக, ஒப்புக் கொண்டுள்ள சோகம், எம் பண்பாட்டு முகமூடிகளில் அமிலத்துளிகளாய் தெறித்து விழுந்து கிழிக்கின்றது.

தமிழன் என்றொரு இனத்தின், இருப்பினை எடுப்புடன் இயம்பிய பெருமையைத் தன்னகத்தே என்றென்றைக்கும் இணைத்துச் சுமக்கின்ற ஈழவர்களின், எந்தவொரு வருட அத்தியாயமும், தனித்துவத்தை இழந்துவிடாத பெருமையை இன்றளவு வரைக்கும் கட்டிக்காத்தபடியே வருகின்றது என்பது ஒரு மேலோட்டமான பார்வை.

ஆனால், சமூகக் கிடங்குகளின் பண்பாட்டு இருள் மண்டிக்கிடக்கின்ற இடுக்குகளில், ஈழத் தமிழ் வாழ்வொழுக்கங்களுக்கு பிறழ்வான நடைமுறைகள் வெளித்தெரிந்து விடாத குறைவெண்ணிக் கைகளில் அவ்வப்போது தலைகாட்டியே வந்திருந்தன என்பது, கொஞ்சம் கசக்கின்ற உண்மை. தமிழீழ நீதிமன்றங்கள், காவல்துறை பணிமனைகளில் விசாரிக்கப்பட வேண்டிய அவகாசங்கூட கொடுக்கப்படாமல், "தீர்க்கப்பட்ட' களைகளின் பிடுங்கல்களைக் கண்டும் கேட்ட அனுபவங்கள் அத்துணை சுலபத்தில் மறந்துவிட முடியாதவை.

நினைவேந்தலுக்குரிய வரலாற்றுப் பெருமை செறிந்த கார்த்திகை மாதத்தில், எம்மினக் காவல் தெய்வங்களை கண்களுக்குள் சுடர் வடிவில் தொழுது துதிக்கின்ற நாள்களின் நெருக்கத்தில், எதிரிக்கு நெருக்கமானவர்களால் ஏவிவிடப்படுகின்ற வழக்கமான காகித அம்புகளினுள் ஒன்றாக, மேற்படி பெண் போராளியின் மேல் சுமத்தப்பட்டுள்ள கறை, முறிந்தழிந்து மறைந்துவிட வேண்டுமென்பதே சகல தமிழ் உணர்வுகளினதும் பிரார்த்தனைகளாக இருக்க முடியும்.

சமூகத்தின் அங்கங்களாக மீள இணைக்கப்பட்ட பின்னரும் கூட, குத்தல் பார்வைகளும், கேலிப் பேச்சுக்களும், அநாவசிய சீண்டல்களும், அதிகார ஒடுக்கல்களும், ஆத்திரமூட்டும் கண்காணிப்புக்களும் விடாது துரத்துகின்ற இன்றைய வெற்றுமனுஷிகளின் நேற்றைய அவதாரங்களை ஏன் அவ்வளவு சுலபமாக மறந்து போனோம் நண்பர்களே?

வீட்டில் வளர்கின்ற பெண்களை விட, இறுக்கமான நூற்றுவீத ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்க பாசறைகளில் நாற்றாகி, ஆடை, ஆபரண, அலங்காரம் எனும் பெண்மைக்குரிய புறத்தியல்புகளில் கூட கண்ணியமான மரபுத் தரவேற்றங்களுடனான மாற்றங்களை உள்வாங்கிய செடிகளாகி, வீரங்கலந்த காதல் வயப்பட்டு, வரம்பு முறைகளுக்குட்பட்ட திருமணபந்தத்தினுள் இணைந்த குடும்பத்தருவாகி, அச்சொட்டான "தேசியக் குழந்தைகளை' உற்பவிக்கின்ற புனித இல்லற வேள்வியின் அவிப் பொருள்களாக தன்னுடல், தன்னுழைப்பு, தன்விருப்பு யாவையும் சொரிகின்ற இனங்காக்கும் விருட்சங்களாகி, வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு உபபடிகளிலும் வரையறுக்கப்பட்ட விருப்பு வெறுப்புக்களுடனேயே கடந்து வந்தவர்களின் மீதான இன்றைய எமது சமூகப் பார்வைக்கான "அகண்ட காரணம்' சரியானது தானா? சாணத் தரைகளில் "பின் தூங்கி, முன் எழுகின்ற' சாதாரணவொரு குடும்பத் தலைவி தன்னை சிறந்ததொரு இல்லாளாக கொள்வதற்காக இயற்றுகின்ற கொடும் பாரக் கடமைகளை, சற்றுங்குறைவின்றி இவர்களும் ஆற்றியிருந்தார்கள்.

வெறுமனே தம்முடலின் அரைப் பாகத்தினால் மட்டும் மறுவரைப் பாகம் மாய்ந்துழைத்தது. தீராத தமிழனின் தாயகக் கனவுக்கன்றோ!! உடல், உள ஒழுக்கம் மிகுந்த பண்பாளர்களாக போராளிகளை வளர்த்த பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளினது இன்னொரு முகம். 2009 மே இற்கு பிறகு தானும் மது அருந்துவதையும், புகைபிடிப்பதையும் நிறுத்தி விட்டதோடு, இயக்கத் தம்பிகளையும் நிறுத்தச் சொல்லி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றார் நாம் தமிழர் சீமான்.

"ஓர் இரவு முழுவதும் இருபதுக்கு மேற்பட்ட ஆண் போராளிகளுடன் பாசறை ஒன்றில் தனித்திருந்த போதும், தன்னால் பாதுகாப்பின்மையை சிறிதும் உணர முடிந்திருக்கவில்லை' என்று சொல்லி மெய்சிலிர்த்தவர் பத்திரிகையாளர் அனிதா பிரதாப். பெரும் புரட்சிக்காரன் "சேகுவேரா'வினால் கூட தன்னுடன் இருந்த தோழர்களினது, எதிர்பாலுறவுகள் விடயத்தில் கட்டுப்படுத்தவோ, கடிவாளப்படுத்தவோ முடியாதிருந்த நிலையில், முழுமையான இராணுவ கட்டமைப்புக்களுடன் இயங்கும் தன்மைக்குள் இருந்த போதிலும், "பொடியளையும், பொடிச்சிகளையும்' கவனமாகவே பேணியதில் தலைவனும், தளபதிகளும் பரிபூரண வெற்றியே கண்டிருந்தனர்.

"மனம்' என்பதும் கூட தசைப்பிண்டமே என வாதிடும், "ஓஷோ' போன்ற புறச் சிந்தனையாளர்களின் கூற்றுக்களின் படி, உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் என்று விரிகின்ற மனிதனுக்கான புறத்தேவை களுக்கு எதிர்வரிசையில் பரிணாமம் அடைந்துள்ள விலங்கு என்கின்ற விதிவிலக்குக்குட்பட முடியாமல் மனிதனுடைய அகத் தேவைகளில் முதன்மையானது "பாலினத் தூண்டல்' தான்.

வெகு சிலரினால் ஆக்கத்தின் வழியிலும் மிகப் பல பேரினால் அழிவுத் திசையிலும் தூண்டப்படுகின்ற "பால்கவர்ச்சி'யே மானுட உந்து சக்திகளில் முதன்மையானது என்கின்றனர் உடலியல் ஆராய்ச்சியாளர்கள். நித்தியானந்தா, பிரேமானந்தா "உருந்தூர்ப்பேட்டை' உலகானந்தா போன்ற "கோர்ப்பரேட்' சாமியார்கள் செம "ஸ்கோர்' பண்ண காரணமாயிருந்தது இதுதான் என்பதை உடனே ஊகிக்க முடிந்திருந்தால், நீங்களும் "ஓஷோ'வை நெருங்கி விட்டீர்கள் என்பதாக அர்த்தம்.

சாதாரண தரப் பரீட்சையில் தட்டுத்தடுமாறி உயர்தரத்துக்குள் "தவறி' விழுந்து விட்ட வெகு "அம்மாஞ்சிப் பையன்' ஒருவன், மூன்றாம் வருடத்து முடிவில், மூக்கில் விரல் வைக்கும் படியாக மாவட்ட நிலைக்குள் நிற்க முடியுமாயின், "எல்லாப் புகழும், யாரோவொரு தேவதைக்கே' என்று அவனால் ஒப்புக்கொள்ளவும் முடியுமாயின், இதுவும் சாத்தியமானது. அந்த வகைத் தூண்டலினாலேயே.

மண்டோதரியே வந்து சாட்சி சொன்னாலும் கூட, அரக்கர் குலத்தில் பிறந்தவனாயினும், ஈழவேந்தன் இராவணன் "ஏகபத்தினி விரதன்' என்பதை ஒப்புக் கொள்ள முடியாதளவுக்கு கம்ப இராமாயணத்தின் "கலிகால அடிமைகள்' ஆக்கப்பட்டிருக்கின்ற ஈழத் தமிழ்ச்சாதி எண்ணற்ற மனைவிகளுடன் சுகபோக ஏகத்தில் திளைத்துக்கிடந்த தசரதனின் மகனை, "மனையொடுக்கம் நிரம்பப்பெற்றவன்' என்று அநியாயத்துக்கு நம்பத் தயாராக இருப்பது, தரம் ஒன்று முதல் பல்கலைக்கழகம் வரை "தமிழ்ப்பாடத் திட்டத்தினுள்' அமர காவியமாக, "ஆரியர் காவியத்தை' சேர்த்து வைத்த பின், நீத்தாருக்கே கிடைக்க வேண்டிய விருதுகளில் ஒன்று.

வீர சைவத்தின் சமயசார ஒழுக்கங்கள் பிரமச்சரியத்தினால் கூட இட்டு நிரப்பப்பட முடியாத பற்பல புண்ணிய காரியங்களை தூய இல்லறத்தினால் விளைவிக்க முடியும் எனப் போதிக்கின்றன. ஆனால் சைவத்தையும் உள்ளடக்குகின்ற இந்துத் தத்துவத்தின் இன்னொரு வகுதியான வைணவமும் அதன் சார்புகளும் ஆண்டவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவர்கள் எனும் பெயரில் "தேவதாசிகள்' என்றொரு கண்ணீர்க் கணிகையர் குலத்தை நடைமுறையிலும், நீண்ட பெருமிதத்துடன் (?) காப்பியங்களிலும் எச்சங்களாக விட்டுச் சென்றிருப்பது, நாம் சார்ந்துள்ள மதங்களின் அடிப்படையிலும் கூட மறுதலித்துத் தப்பிவிட முடியாத பெரும் பொறி.

யாதும் அறிந்த பெருமான் ஐயன் திருவள்ளுவன் கூட, தனியதிகாரம் கொடுத்து தட்டிக் கேட்கும் அளவுக்கு பாக்கியராஜின்"முருங்கைக்காய் சமாச்சாரத்தில்' படு அட்டகாசம் விட்டுப் போயிருக்கின்றான் பழந்தமிழன் என்பது கொஞ்சமல்ல, நிறையவே வெட்கக்கேடான விடயம் தானே.

மேலும், தன்னையும் தான் சார்ந்துள்ள சமூகத்தையும் தீவிரமான பௌதிக, கலாசார வழிகளில் களங்கப்படுத்துகின்ற "கூடாவொழுக்கத்தினுள்' ஊறித் திளைக்கின்ற யாவருமே, தம்மிறுதிக்குள் அருணகிரி நாதரைப் போல, அண்ணாமலையார் கோபுரத்திலேறி உயிர்விடத் தீர்மானிக்கின்ற, கவரி மான்கள் இல்லை என்பதும், முள்ளிவாய்க்காலில் பாதி இனமே பறிபோய்த் துடித்த போது வந்துவிடாத தமிழ்க் கடவுள், பகல் கொள்ளை போய்க்கொண்டிருக்கின்ற "ஈழத் தமிழ்ப் பண்பாட்டினை' தடுத்துக் காக்க மட்டும் நேரில் வந்து அடியெடுத்துக் கொடுத்துவிடப் போவதில்லை என்பதும், ஆன்மிக முலாமிடப்பட்டுள்ள அவரவர் பகுத்தறிவின் தெளிவுகள்.

நகரப் பகுதியில் குவியலாக பிடிபட்டவர்கள் விடயத்தில், "வாலை விட்டு தும்பைப் பிடித்துக்' கொண்டு அட்டகாசம் விட்டு, பத்திரிகைச் செய்திகளிலும், பரபரப்பு இணையங்களில், "காணொலி இணைக்கப்பட்டுள்ளது', "படங்கள் இணைக்கப்பட்டுள்ளன', "எக்ஸ்குளூசிவ் றிப்போர்ட்' என்று சூடேற்ற மட்டும் பயன்படுத்திக் கொண்ட பின் வாளாவிருந்தவர்கள் தானே எல்லோரும்.

விருப்பத்தின் பேரிலோ, விருப்பமில்லாத போதிலோ உடலால் இம்சைப்படுத்தப்படுகின்ற சிறுவர்கள் அல்லது சிறுமிகள் சம்பந்தப்பட்டவை, தெளிவான குற்றங்கள் என்று சட்டவரையறைகளை கொண்டுள்ள போதிலும், யாழ்ப்பாண விடுதிகளில் பாடசாலை மாணவிகள் கூட பயன்படுத்தப்பட்டனர் என்ற செய்திகளின் தீவிரத்தன்மை எத்தனை எத்தனை வயதுப் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பள்ளிக்கட்ட வைத்தது?

இன்றைக்கு முச்சக்கரவண்டிச் சாரதிகளாக புது அவதாரம் எடுத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருண்மியப் புரட்சி முடிவுக்குள் தம்மைத் தாமே நெட்டித்தள்ளிக் கொண்டுள்ள பெண்களைக் கண்டு, பெருமிதத்தில் உயர்ந்த தோள்களின் விறைப்பு மாறிட முன்னரே, மறுபக்கமாக பெண்ணினத்தை தீராக்களங்கத்தினுள் தள்ளும் செய்திகள் அணிவகுக்கின்றன.

முள்ளிவாய்க்காலிலிருந்து அள்ளிவரப்பட்ட எம் மக்களை, கால் நடைகளிலும் கேவலமாக நெருக்கி அடைத்து அடிமை வாழ்வின் இழி கொடூரத்தை இயக்கிய அரச அகதி முகாம்களில் கைக் குழந்தைகளின் பசி போக்குவதற்கான "பால்மா'வை பெற்றுக் கொடுத்ததற்கு பிரதியுபகாரமாக அங்கே காவலுக்கு நின்றிருந்த "பிணம் புணரிப் பேய்கள்' ஆயுத முனையில் தமிழ் இளந்தாய்மாரின் கற்பினை சாவுகேட்டன என்கின்ற செய்திகளும், ஆறேழு நாள் பசியில் அழுகின்ற குழந்தையின் துடிப்பும், தம் ஆற்றாமையும் இணைந்த புள்ளியில் "கலாசாரத்தாய்' தன் கண்களை இறுக மூடினாள் ஓரிருவர் நிலைமைகளில் என்கின்ற செவிவழித் தகவல்களும், "விழுப்பம் தராத ஒழுக்கத்தின்' ஒழுகிய, இயலாமையின் மரணவாய் மீட்சியாகவே பார்க்கப்பட்டன.

ஆனால் "காணுமிடமெங்கும் சக்தியடா' என்று பாடிப் பொங்கிய பாரதியின் கண்மணிகளூடாக, "திரும்பிய திசையெங்கும் பெண்மையின் பெருவடிவத்தையும், பொல்லாப் பெரு வலியையும்' போற்றிப் பூசிக்கின்ற தமிழ்க் குலத்துக்கு இன்றைக்கு நேர்ந்துள்ள அவப்பெயர், அறிந்தே எம் மூக்கை அரிந்து கொள்வதற்கு ஒப்பானதில்லையா?

மண்ணுக்கு வந்திட்ட இழுக்கை, தன் கண்ணுக்கே வந்திட்ட அம்பெனக்கருதி, புழுதி பறக்கும் களங்களில் காற்றுக்கு நிகராயும், சேறு வழியும் சகதிகளில் நீருக்கு நிகராயும், மனவலிமையில் ஆகாயம் வரை நிரப்பிய பெருவெளிகளாய் போர்க்கலையில் சேர்ந்தவரைக் கொல்லும் செந்தீயின் மறுபெயராயும், பொறுமையில் பூமிக்கு மாற்றாயும் நின்ற பஞ்சபூதத்துத் தமிழிச்சிகளின் வாழ்வின், ஒரு பகல்பசி போக்கும் அடுப்பின் நெருப்பை ஏற்றுவதற்கு விலையாக, அவள் இரவின் "விளக்கு நெருப்பு' அணைந்தேயாக வேண்டும் என்கின்ற அவ லத்தை முளையிலேயே கிள்ளி எறிய தவறுவோமாயின் வரலாற்றின் வாசல்களில் எமக்கு மன்னிப்புண்டோ?

"உதவிகள் கொண்டு சேர்த்திட முடியாத கண்காணிப்பு வலயம்', "இலகுவில் கூட்டிணைத்து உதவிட முடியாத, அமைப்பு ரீதியான சிக்கல்கள்', "எல்லாவித தொழில் வாய்ப்புக்களையும் பரிசீலிக்க முடியாத மென்மை உடற்பண்புகள்', "தூர தேசங்கள், தூரவிடங்கள் சென்று தங்கிப் பணியாற்ற முடியாத குடும்பப் பொறுப்புக்கள்', "புலம்பெயர் ஈழவர்களிடமிருந்தான உதவிகளை நேரடியாகச் செலுத்துவிக்க இயலாத சந்தேகப் பொறிகள்' என்று நீள்கின்ற தடங்கல்களுக்கு மத்தியில், அதி விரைவுடன் தீர்க்கமான பொறிமுறையொன்றினால் தீர்வு காணப்பட வேண்டிய தேவையாக, யாழ்ப்பாணத்தில் எல்லாத் தொழில் வழங்குநர்களிடமும் இருந்து கையேந்தி நிற்கின்றாள் தமிழ்த் தேசியத் தா´.

தனது முன்மாதிரிப் பிள்ளைகளின் மீளுயிர்ப்புக்கா´? படித்து முடித்த நண்பர்களோ, முடிந்தால் பகிருங்கள் பக்கத்திலுள்ளவர்களுடன், தயவுடன் பரிந்துரை செய்யுங்கள் தங்களால் இயன்றளவு செல்வாக்குடன். வெறும் பத்தாயிரம் மாதாந்திர ஊதியத்துடனான பணியொன்றுக்கான மெத்தத் தகைமையுண்டு யாவர் அவர்களிடமும் "இரங்குகின்ற இதயங்களிலும் மேலானவை, விழிநீர் துடைக்கின்ற விரல்களே' என்கின்ற வாசகத்தை ஆத்மாத்தமாக நம்புகின்ற, நான் நீங்கள் நாங்கள் யாவரும் தோழர்களே!

செந்தூரி[/size]

நன்றி

தமிழ்க் கதிர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.