Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜ்மல் கசாப் தூக்கு : இந்திய அரசின் இன்னொரு சாதனை ! - அ.மார்க்ஸ்

Featured Replies

அஜ்மல் கசாப் தூக்கு : இந்திய அரசின் இன்னொரு சாதனை ! - அ.மார்க்ஸ்

சாதனை ! ஆமாம், அப்படித்தான் இந்திய அரசு பீற்றிக்கொள்கிறது. 2008 நவம்பர் 27 தொடங்கி கடும் பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்த இளம் கைதியை, 110 கோடி இந்திய மக்களுக்கும் தெரியாமல், மூன்று நாட்களுக்கு முன் புனேயிலுள்ள எரவாடா சிறைக்குக் கொண்டுசென்று நேற்று (நவம்பர் 21) காலை ஏழரை மணிக்குத் தூக்கிலிட்டு, மதியத்திற்குள் சிறை வளாகத்திலேயே புதைத்துக் கதை முடித்தது குறித்து இந்திய அரசு அப்படித்தான் பெருமை கொள்கிரது. இந்திய மக்களுக்கு என்ன, மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் கூடத் தெரியாதாம் என்றும் செய்திகள் கசியவிடப் படுகின்றன.

‘ஆபரேஷன் எக்ஸ்’ என இந்த இரகசியத் தூக்கிற்குப் பெயரிட்டு, அதற்கான கோப்புக்கு ‘சி- 7096‘ என்கிற எண்ணிட்டு அதில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே சென்ற 7ம்தேதி கையெழுத்திட்டாராம். உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், அயலுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் என விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கிடையில் மட்டுமே இத் திட்டம் பகிர்ந்துகொள்ளப்பட்டதாம். 2009 முதல் 19 கோடி ரூபாய் செலவில், கசாப் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கொட்டடியைக் காத்துக் கொண்டிருந்த 200 இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினருக்கும் கூடத் தெரியாமல் கசாப்பை அங்கிருந்து எரவாடா சிறைக்கு அகற்றி, நேற்று காரியத்தை முடித்தார்களாம். ‘ஆபரேஷன் ஜெரோனிமா’ என்கிற பெயரில் அமெரிக்க அரசு படு இரகசியமாக ஒசாமா பின் லேடனின் கதையை முடித்து உடலைக் கடலில் எறிந்ததே, அந்த நடவடிக்கைதான் இந்த ‘ஆபரேஷன் எக்ஸின்’ ரோல் மாடலாம்.

இதெல்லாம் அரசு தந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இன்றைய நாளிதழ்கள் எழுதிக் குவித்துள்ளவை. சுமார் 309 பேர்கள் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு இந்தியச் சிறைகளில் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இதில் ராஜிவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் அடக்கம். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மேசையில் சுமார் 22 கருணை மனுக்கள் காத்திருக்கின்றன. இதில் 2001ம் ஆண்டு பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் மனுவும் அடக்கம். இவ்வளவு பேரையும் தாண்டி ஒப்பீட்டளவில் சமீபமாக மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட கசாப்பை அவசர அவசரமாகத் தூக்கிலிட்டுப் பெருமை கொள்கிறது இந்திய அரசு.

நவம்பர் 27, 2007ல் கசாப் கைது செய்யப்பட்டான். என் பிள்ளைகளிலும் இளையவன். எனவே ஒருமையில் விளிக்கிறேன். 2010 மே 6 அன்று விசாரனை நீதிமன்றம் அவனுக்கு மரண தன்டனை விதிக்கிறது. 2011 பிப்ரவரி 21ல் மும்பை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 2012 ஆகஸ்ட் 29ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. சென்ற மாதம் 16ம்தேதி உள்துறை அமைச்சு கசாபின் கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தது. பரிந்துரையை அப்படியே ஏற்ற குடியரசுத் தலைவர் இந்த மாதம் (நவம்பர்) 5ம் நாள் கருணை மனுவை நிராகரித்துக் கையெழுத்திட்டார். அடுத்த இரண்டாம் நாள் மகாராஷ்ட்ர அரசு கசாப்பைச் சாகும்வரை தூக்கிலிடும் ஆணையில் கையெழுத்திட்டது. அடுத்த இரண்டு நாட்களில் தூக்கிலிடப்போகும் செய்தி 17ம் தேதி அன்று கசாபுக்குத் தெரிவிக்கப்பட்டது. 19ம்தேதி படு இரகசியமாக அவன் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டான். 21ல் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அரசு மிகத் துரிதமாகத்தான் வேலை செய்துள்ளது.

இவ்வளவு விரைவாக ஒரு கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்தது இந்திய வரலாற்றிலேயே இது இரண்டவது தடவை என்கிறார்கள். அப்படி என்ன அவசரம் என்கிற கேள்வியை எல்லோரும் எழுப்பிவிட்டனர். பொதுவாக இது போன்றவற்றில் வரிசைப்படி முடிவெடுப்பதுதான் வழக்கம். இது குறித்துக் கேட்டபோது, “அதுதான் வழக்கமென்றாலும் அப்படித்தான் செய்ய வேண்டுமென விதி ஏதுமில்லை” எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் 72 மற்றும் 161வது பிரிவுகள் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் மரண தண்டனைக் கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதேபோல பிற தண்டனைகளையும் அவர்கள் குறைக்கலாம். எனினும் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையிலேய அவர்கள் இதைச் செய்ய இயலும். ஒருவேளை அமைச்சரவை மன்னிப்பு அளிக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தும்கூடக் குடியரசுத் தலைவரின் கருணை மனம் அதை ஏற்கவில்லையாயின், அவர் பரிந்துரையைத் திருப்பி அனுப்பி, அமைச்சரவையை மறுபரிசீலனை செய்யச் சொல்லலாம். மன்னிப்பு அளிக்க்கக் கூடாது எனப மறுபடியும் அமைச்சரவை பரிந்துரைத்தால், ஒன்று அவர் அதை ஏற்கலாம் அல்லது தன் பதவிக்காலம் முடியும் வரை மனுவின்மீது முடிவெடுக்காமலேயே இருந்துவிட்டுப் போகலாம்.

பாராளுமன்ற ஆட்சி முறையில் அமைச்சரவையே கூடுதல் அதிகாரம் உள்ளதாயினும் இவ்வாறு மன்னிப்பு அளிப்பது குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு அதிகாரம். சட்டபூட்வமான அதிகாரம் என்பதைக் காட்டிலும் அது அவர்களுக்கு அளிக்கப்பட்ட அற அடிப்படையிலான அதிகாரம். குடியரசுத் தலைவர் என்பவர் குடிமக்களின் தந்தைக்குச் சமமானவர். அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறிழைக்கும்போது அற அடிப்படையில் அவர் தலையிட வேண்டியவர். அத்தகைய பரந்த விசாலமான மனம் அவருக்குத் தேவை. சுமார் எட்டாண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றக் கிளையை மதுரையில் துவக்கிவைத்த அன்றைய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. நீதிபதிகள் நீதிவழங்கும் மனவிசாலிப்பை என்னேரமும் வளர்த்துத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பொருளில் அவர் பேசியிருப்பார். மன்னிப்பு வழங்கும் ஒரு உன்னதமான இடத்தில் அமர்ந்துள்ள ஒருவர் இத்தகைய எல்லையற்ற கருணை மனம் உடையவராக இருக்க வேண்டும்.

ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன் போன்றோர் இத்தகைய கருனை மனம் கொண்டவராக இருந்துள்ளனர் என இது குறித்து ஆய்வு செய்துள்ளவர்கள் குரிப்பிடுகின்றனர். அமைச்சரவையின் பரிந்துரைகளை மறு பரிசீலனை செய்யுமாறு வற்புறுத்தி அவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா ஆகிய இரு குடியரசுத் தலைவர்கள் மட்டுமே அமைச்சரவைகளின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொண்டனர் எனச் சொல்கிறார்கள். மிக உறுதியான ஒரு காங்கிரஸ்காரரும் நேரு குடும்ப விசுவாசியுமான பிரணாப் முகர்ஜி இப்போது அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அடுத்த நாள் தொடங்க இருந்த பாராளுமன்றத் தொடரில் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர் கொள்ள வேண்டிய சூழல், விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல், பால் தாக்கரேயின் மரணத்தை ஒட்டி இங்கே கிளர்ந்துள்ள வலதுசாரி இந்துத்துவ மனநிலை ஆகிய பின்னணியில் காங்கிரஸ் கட்சி மக்களின் கவனத்தைத் திசை திருப்ப மேற்கொண்ட ஒரு முயற்சிக்கு முகர்ஜி துணைபோயுள்ளார். கருணையுள்ள குடியரசுத் தலைவர் என்பதைக் காட்டிலும் விசுவாசமான காங்கிரஸ்காரர் என்கிற பெயரைத் தக்க வைப்பதற்கே அவர் முன்னுரிமை அளித்துள்ளார்.

இப்படி நான் சொல்லும்போது ஏன் ஒரு பயங்கரவாதிக்குக் கருணை காட்டியிருக்க வேண்டும் என்கிற கேள்வி பல திசைகளிலிருந்தும் வீசப்படுவதை என்னால் உணர முடிகிறது. இந்திய மக்களில் பெரும்பாலானவர்களின் கருத்து அதுதான். ஏ.கே ரகத் துப்பாக்கியைக் கையில் ஏந்தி 156 அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்த பத்துப் பேர்களில் ஒருவனாக எத்தனை முறை அவனை அவர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பார்கள். இத்தகைய பயங்கரவாதிக்கு எப்படி ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் கருணை காட்ட முடியும். நிச்சயமாக கசாப், லக்சர் ஏ தொய்பாவால் பயிற்றுவித்து அனுப்பப்பட்ட ஒரு பயங்கரவாதி என்பதையும். 2008 நவம்பர் 26 அன்று அவர்கள் மேற்கொண்ட பயங்கரவாதச் செயலை ஏற்கவே இயலாது என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது.

ஆனால் இங்கொன்றை மனதில் நிறுத்தவேண்டும். குடியரசுத் தலைவரின் கருணை என்பது கருணை காட்டப்படுபவர் செய்த குற்றத்தின் தன்மை, அளவு, நீதிமன்றம் எந்த அடிப்படையில் அந்தத் தண்டனையை அளித்தது என்பதைப் பொருத்தது அல்ல. கருணை காட்டுவது என்பது முற்றிலும் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, முற்றிலும் இதர மனித நேய அடிப்படைகளில் செய்யப்படுவது. இன்றைய இந்து நாளிதழில் வி.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ள ஒரு தகவலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பரமானந்த சரண் என்பவருக்குத் தன் மனைவியை எரித்துக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது, அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் சரணின் கருணை மனுவை நிராகரித்தார்.

எனினும் சரண் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக அவரது மாமனார் இன்னொரு கருணை மனுவை அனுப்பிவைத்தார். இறந்துபோன தனது மகளுக்கும் சரணுக்கும் பிறந்த ஐந்து வயது மகனின் எதிர்காலத்தை உத்தேசித்து அவருக்குக் கருணை அளிக்கக் கோரியது அம்மனு. இந்த மனுவின் அடிப்படையில் உள் துறை அம்மைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று அவருக்குக் கருணை அளிக்கப்பட்டது (1962).

மனித உரிமை அமைப்புகள் இன்று கசாப் தூகிலிடப்பட்டதைக் கண்டிப்பதும் இந்த நோக்கிலிருந்துதான். கசாப் என்கிற நபரைத் தூக்கிலிட்டதற்காகக் கண்டிக்கவில்லை. மரண தண்டனை யாருக்குமே அளிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அது கசாபுக்கு நிறைவேற்றப்பட்ட விதத்திற்காகவும்தான் நாம் அதைக்கண்டிக்க வேண்டியுள்ளது. மரண தண்டனை கூடாது என்பதற்கு அறம் சார்ந்த காரணம் தவிர நடைமுறை ரீதியாகவும் சில காரணங்களை நாம் சொல்ல இயலும். முதலாவது வழக்கு விசாரணையில் நிகழக்கூடிய தவறின் விளைவாக ஒருவருக்குத் தவறாக மரண தண்டனை வழங்க வாய்ப்புண்டு. எனவே திருப்பிச் சரி செய்ய இயலாத இத்தண்டனையை யாருக்கும் வழங்கக்கூடாது. தற்போது உச்ச நீதிமன்றம் 13 பேர்களுக்குத் தான் வழங்கியுள்ள மரண தண்டனை தவறனது என ஏற்றுக் கொன்டுள்ளது. தவறான சட்ட முன்னுதாரணங்கலைப் பின்பற்றியதன் விளைவு இது எனவும் அது கூறியுள்ளது. முன்னாள் நீதிபதிகள் பதினான்கு பேர் அவர்களுக்குக் கருணை அளிக்கப்பட வேண்டும் எனக் குடியரசுத் தலைவரைக் கேட்டுள்ளனர். ஒரு வேளை அவர்கள் இதற்குள் தூக்கிலிடப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கசாபுக்கு இந்த அடிப்படையில் மன்னிப்பு அளிக்கத் தேவையில்லை என ஒருவர் கருதலாம். தான் லக்சர் அமைப்பால் அனுப்பப்பட்டுப் படுகொலைகளைச் செய்ததை அவனே ஏற்றுக் கொண்டபின் மரண தண்டனை வழங்கலில் என்ன தவறு ஏற்பட இயலும் எனத் தோன்றலாம். ஆனால் சட்ட வல்லுனர்கள் கசாப் விசாரணையில் சில சட்ட ரீதியான தவறுகள் (technical errors) இழைக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளனர் ( V.Venkatesan, ‘Gaps in Kasab’s Case’, Frontline, Nov 3- 16, 2012). அவற்றில் சில:

1. அஜ்மல் கசாப் ‘மைனர்’ ( சிறு வயததினன்) ஆக இருக்க வாய்ப்பு உள்ளதா என அறிய மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் எஸ்.ஜி.அப்பாஸ் காசிமி கேட்டபோது நீதிபதி எம்.எல்.தகலியானி அதற்கு அனுமதி அளிக்கவில்லை. பின்னால் இது பிரச்சினையாகிவிடும் என்பதை உணர்ந்த அரசு வழக்குரைஞரே பின்னால் இப்படி ஒரு சோதனைக்காக மனுச் செய்தபோது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் அவ்வாறு பெறப்பட்ட சோதனை முடிவை வேறொரு நிபுணரிடம் காண்பித்து கருத்துக் கேட்க வேண்டுமென்ற காசிமியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. எக்ஸ் ரே பட அடிப்படையிலான இச்சோதனை முடிவு முற்றிலும் சரியானது எனச் சொல்ல இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. அரசுத் தரப்பு, அதாவது பிராசிகியூஷன் சாட்சிகள் நேராக வராமல், எழுத்து மூலம் சாட்சியம் அளிக்க நீதிபதி தகலியானி அனுமதி வழங்கினார். இதன்மூலம் சாட்சிகளைக் குறுக்கு விசாரனை செய்யும் வாய்ப்பு கசாபின் வழக்குரைஞர் காசிமிக்கு மறுக்கப்பட்டது. 3. கசாபும் மற்ற தீவிரவாதிகளும் வந்த படகு முதலியவற்றை நேரடியாகப் பார்க்க காசிமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 4. இருபதாயிரம் பக்கங்களுள்ள குற்றப்பத்திரிக்கையை வாசிக்க காசிமிக்கு அளிக்கப்பட்ட எட்டு நாள் அவகாசம் போதவில்லை. மேலும் அவகாசமளிக்க அவர் கோரியபோது நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறார் என அவரை நீக்கினார் நீதிபதி. புகழ்பெற்ற வழக்குரைஞர் ஃபாலி. எஸ் நாரிமன் அவ்வாறு வழக்குரைஞரை மாற்ற நீதிபதிக்கு அதிகாரமில்லை என இது குறித்து எழுதியுள்ளார்,

5. உயர்நீதிமன்ற விசாரணையின் போது கசாபுக்காக நியமிக்கப்பட்ட இரு வழக்குரைஞர்களும் பாதுகாப்பைக் காரணமாகச் சொல்லி கசாபைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. கசாபுக்கு இன்னொருமுறை வயதுப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அதேபோல கசாபை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

6. இறுதியாக உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது கசாபிற்காக நியமிக்கப்பட்ட (amicus curiae) புகழ்பெற்ற வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் ஒருமுறைகூட கசாபைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்தபின் கசாபுக்குக் கருணை மனு எழுதிக் கொடுப்பதிலும் அவர் உதவவில்லை, தன் கைப்படக் கசாபால் எழுதப்பட்ட சில வரிகளே அடங்கிய மனுவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தக் குறைபாடுகள் அனைத்தையும் கூட கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்கிற அடிப்படையில் பொருட்படுத்தாது விட்டாலும் மேலும் இரு நடை முறைக் காரணங்கள் கசாப் தூக்கிலிடப் படுவதற்கு எதிரக உள்ளன. அவை:

1.இந்த வழக்கு விசாரணையில் இன்னும் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பாடவில்லை. அவர்கள் பிடிபடும்போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் முக்கிய சாட்சி ஒன்றைக் கசாபைத் தூக்கிலிட்டதன் மூலம் நாம் இழந்துவிட்டோம்.

2. இது போன்ற பயங்கரவாதக் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதே சரியான அச்சுறுத்தலாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதைவிட அபத்தமான கருத்து ஏதும் இருக்க இயலாது. உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் இறங்கும் தற்கொலைப் படையினரை, நீங்கள் பிடிபட்டால் மரண தண்டனை கிடைக்கும் எனச் சொல்வது எப்படி ஒரு அச்சுறுத்தலாக அமையும்? மாறாக தூக்கிலேற்றியதன் மூலம் நாம் இன்று லக்சர் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மத்தியில் கசாபைத் தியாகியாக்கியுள்ளோம். இது, இன்னும் இதுபோன்ற “தியாகிகளை’ உருவாக்குவதிலேயே கொண்டு நிறுத்தும். பாகிஸ்தானின் முக்கிய அரசியல் விமர்சகரும், அதன் இராணுவப் பொருளாதாரம் குறித்த ஒரு சிறந்த நூலை எழுதியுள்ளவருமான ஆயிஷா சிதீகா இந்தக் கருத்தை இன்று உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது (பார்க்க: Turning Memory into Asset, The Hindu, Nov 22, 2012).. லக்சரும் அதன் துணை அமைப்பான ஜமா அத் உல் தாவாவும் கசாபின் சொந்த மாவட்டமான ஒகாராவில் தற்போது மிக வலுவாக உள்ளதையும், கசாபின் நினைவை அவர்கள் தமது இயக்கத்திற்கு ஆள்சேர்க்கவும், பொருள்சேர்க்கவும் பயன்படும் விலை மதிப்பற்ற சொத்தாக மாற்றப் போவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கசாப் தன் கடைசி ஆசை என எதையும் கேட்கவில்லை எனவும், தான் தூக்கிலிடப்படப் போவதைத் தன் தாய்க்குத் தெரிவிக்குமாறு மட்டுமே கேட்டுக்கொண்டதாகவும் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. தூக்குமேடை ஏறுமுன் தன் தாய்க்குச் சேதி தெரிவிக்கப்பட்டதா என மீண்டும் ஒருமுறை கேட்டானாம். மேற்கு பஞ்சாபின் ஒகாரா மாவட்டத்திலுள்ள ஃபரிட்கோட் எனும் ஊரில் மிகவும் ஏழ்மையான ஒரு தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் ஒருவனாகப் பிறந்தவன் அஜ்மல் இமான் கசாப். கொடிது கொடிது இளமையில் வறுமை என்பாரே நம் ஔவை, அத்தகைய இளமை வறுமையால் படிப்பை இழந்தவன். லக்சர் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியாவை நோக்கித் தன், இந்த இறுதிப் பயணத்தை மேற்கொள்ளுமுன் ஒருமுறை தாயிடம் விடை பெறச் சென்றான். அப்போது அவர் “வேண்டாம்” எனத் தடுத்ததாக விசாரணை ஒன்றில் கூறியுள்ளான் கசாப். ஒரு வேளை அந்த நினைவு சாகப்போகும் தருணத்தில் அவனை அலைக்கழித்திருக்கும்போலும். அதனால்தான் அம்மாவுக்குச் சொன்னீர்களா எனத் திரும்பத் திரும்பக் கேட்டிருப்பான் போலும்.

நன்றி: தினக்குரல்

[size=4]

உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், அயலுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் என விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கிடையில் மட்டுமே இத் திட்டம் பகிர்ந்துகொள்ளப்பட்டதாம்.
[/size]

[size=4]வேண்டுமென்றே இராகுல், சோனியா, மன்மோகனின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. காரணம் தேர்தல்? [/size]

[size=4]இந்த ஆக்கத்தை வாசிக்கும்பொழுது இந்திய அரசு எந்த வஞ்சகத்தையும் திட்டமிட்டு செய்யும் என்பது தெளிவாவதுடன் முள்ளிவாய்க்காலில் ஒரு எமது இனப்படுகொலையை கூட இவர்கள் தான் பின் நின்று நாடாத்தினார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. [/size]

[size=5]

அஜ்மல் கசாப் தூக்கு : இந்திய அரசின் இன்னொரு சாதனை ! - அ.மார்க்ஸ்
[/size]

[size=5]இன்னொரு சாதனை[/size]

65312_514310188588583_567927018_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.