Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொண்டலாத்திப் பறவைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கொண்டலாத்திப் பறவைகள்[/size]

எஸ்.கிருஷ்ணன்ரஞ்சனா

_hoopoe_.jpg

ஒரு மழைக்கால இரவில்  சரவணன் இறந்து விட்டதாக என் அண்ணன் கூறினார். நானும் என் ஆத்ம நண்பன் சரவணனும் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். அப்போதே கவிதைகள் எழுதுவதில் வல்லவன். புத்தகப் பிரியன். அதே வேகத்தில் செல்வியின் மீது காதல் கொண்டான். அவளும் எங்களோடு ஏழாம் வகுப்பு படித்த சக மாணவி. அவளின் கடைக்கண் பார்வைக்கு அவன் ஏங்க, நண்பனாகிப் போனதால் அவன் காதலுக்கு உதவுவதில் நானும் பல உத்திகளைக் கையாள்வதை எனது தலையாய கடமையாக கொண்டிருந்த தருணங்கள் அது. ஒரு நாள்  நோட்டு பேப்பரைக் கிழித்து கடகடவென்று கவிதை ஒன்றை எழுதினான்.....

கொண்டலாத்திப் பறவை போல 

வளஞ்சி, நெளிஞ்சி ஆடுதடி 

உன் இடுப்பும், என் மனசும்......... என்று

அந்தக் கவிதை வரிகளில் மயங்கிய நான் ஒரு தூதுவனாகிப் போனேன். அந்தப் பேப்பரை அவளிடம் கொண்டு கொடுக்க, ரொம்பவும் யோக்கியமாய் என் தமிழ் ஐயா சுப்பையாவிடம் கொடுத்துவிட, எங்கள் இருவரது பெண்டடையும் நிமிர்த்தி விட்டார். மாலை பள்ளி விட்டவுடன் எங்களை அழைத்து, பிரமாதம்டா வார்த்தைக் ‘கோர்வை’ இந்த வயசிலேயே நல்லா வந்திருக்கு அதை சல்லித்தனமான மேட்டருக்கு பயன்படுத்தாதே....முயற்சி பண்ணு....பெரிய ஆளா வருவே ’ என்று தோளில் தட்டிக் கொடுத்தார். ஆனால் அன்றோடு அவனது கவிதையும், காதலும் ஏனோ அற்றுப் போனது.... ஒரு வாரத்தில் கிணற்றில் குளிக்கச் சென்றவன் நீரில் மூழ்கி இறந்தே போனான்.....இத்தனை வருடங்களானாலும் அவனையும், அவனது கவிதையையும் நான் மறக்கவே இல்லை. கொண்டலாத்திப் பறவையை எப்படி உதாரணப்படுத்தினான் என்பதும் இன்று வரை புரியவில்லை. !

பொதுவாக என் பிரயாணங்களைக் காலை நேரம்தான் வைத்துக் கொள்வேன் அப்போதுதான் பல பழமையான ,வித்தியாசமான கோவில்கள், இயற்கை அழகு ,பறவைகள் என வேடிக்கை பார்த்துச் செல்ல முடியும். சென்ற மே மாதம் எனது சென்னை பயணத்தின்போது மணப்பாறை அருகே அமைந்துள்ள மலைமேல் அகத்தீசுவரர் கோவிலுக்குச் சென்றேன். தன்னந்தனியாக அமையப்பெற்ற பழமையான, சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட கோவில் என்னை மிகவும் கவர்ந்தது. அழகிய சிற்பங்கள், ஏகாந்தமாய் வழிபட ஏற்ற சந்நிதி, ஆள் நடமாட்டமே இல்லாமல் இருப்பதால் இன்னும் புனிதத்துவம் மலினப்படுத்தப்படாமல் உள்ளது. கோவிலின் மதிற் சுவரெங்கும் சிறு துளைகள் , அதில் ஏராளமான கொண்டலாத்திப் பறவைகள்......!

ஐ.நா.வின் பறவைகள் ஆய்வு நிறுவனம், ஆசிய அளவில் இது அழிந்து வரும் பறவையினம் என்ற போதிலும், அப்படியெல்லாம் இல்லை இங்கு ஏராளமாக உள்ளது என்கிறது இந்திய அரசு. பஞ்சாப் தனது மாநிலப்பறவை அந்தஸ்தை இப்பறவைக்குக் தந்து கௌரவித்துள்ளது. மற்ற பறவைகளைப் போல் இதை மிகச் சாதாரணமாக காண முடியாது. மரங்கொத்தி இனத்தை சேர்ந்த இவைகளை கும்பலாக்க கோவிலில் காண நேர்ந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. 

hoopoe.jpg

பறவைகளைப்பற்றிய ஆய்வும் குறிப்பு சேகரித்தலும் சுமேரிய நாகரீக காலத்தில் கி.மு 3500----2400 ல் துவங்கியது என்கிறார் சார்ஜன்ட் ஜோனாதன் டிரஷன் டிரண்ட். இவர் அமெரிக்க ராணுவ வீரர். சதாம் உசேனுக்கு எதிரான அமெரிக்கப் போரில் ஈராக்கிற்கு சென்றவர். போர்க்காலத்திலும் அரேபிய பறவைகளைப்பற்றிய குறிப்புகளை சேகரித்து கட்டுரைகள் எழுதி தன் மனப்பதட்டத்தைக் குறைத்துக் கொண்டதாக்க் கூறுகிறார்.  சதாம் உசேனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்குள்ள ஈச்ச மரங்களும், மற்ற மரங்களும் அழிக்கப்பட்டபோது அங்கிருந்த 40,000க்கும் மேற்பட்ட 42 வகை பறவைகள் இடம் பெயர்ந்தன. தவிர அங்கு பறவைகளை நாட்டு மருத்துவர்கள் எவ்வாறு மருந்து தயாரிக்கப் பயன்படுத்துவர் என்பதையும் சுவைபட விவரிக்கிறார். அங்கு கொண்டலாத்தி பறவைகளைப் பிடித்து அதன் தசை, எலும்புகளிலிருந்து ஆண்மை விருத்தி லேகியம், ஆண் உறுப்பின் நீடித்த விரைப்பு தன்மைக்கு எண்ணெய் போன்றவை தயாரிக்கப்படுவதைத்தான் பார்த்ததாகவும், அதற்காகப் பல பறவைகள் கொல்லப்படுவதாகவும் வருத்தத்தோடு கூறுகிறார். 

கொண்டலாத்திகள் , மண் கொத்திகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவிலானது. இது 25---35 செ.மீ. இறகுகளை விரிக்கும் போது 45---50 செ.மீ. நீளமும் கொண்டது. நன்கு வளர்ச்சியடைந்த பறவையின்  எடை அரைக் கிலோ மட்டுமே.  இவை மிகுந்த கூச்ச சுபாவமும், படபடப்பு தன்மையும் கொண்டவை. கும்பலாக வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழாது. அடர்ந்த மரங்கள் ,குளம், ஓடை அல்லது நீர் வரத்து உள்ள இடங்களையே தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுக்கும். இதன் தலையில் அமையப்பெற்ற அழகிய கொண்டையாலேயே இவற்றுக்கு இப்பெயர் வந்ததோ என் வியக்கும் அளவிலான கொண்டைகள் உண்டு. தன் வலிய வளைந்த அலகுகளைக் கொண்டு மண்ணைப் பிளந்து நண்டு, புழு, பூச்சியினங்களைப் பிடித்து உண்ணும். அப்போது கொத்துவதற்கு ஏதுவாக இக்கொண்டைகள் பயன்படுகின்றன. வயல்வெளிகள், தோட்டங்களில் உள்ள பூச்சிகள், கூட்டுப்புழுக்கள், முட்டைகளை அழித்து விடுவதால் இவை விவசாயிகளின் உற்ற நண்பன் என்று அழைக்கப்படுகிறது.

hoopoe_7.jpg

வண்ணக் கலப்பும், இறகு அமைப்புகளும், பார்ப்பதற்கு ஏதோ ஒரு வெளிநாட்டுப்பறவை போல காட்சியளிக்கும்.  பிற பறவைகளைப் போலவே இதன் காதல் லீலைகள் இருக்கும். காதல் காலங்களில் மட்டுமே ஆண்--பெண் இணைந்திருக்கும். இது தற்காலிக உடன்படிக்கையே. மரப்பொந்து, சுவற்றில் காணப்படும் ஓட்டைகள் அல்லது பிற பறவைகளின் கூடுகளை ஆக்கிரமித்து ,அதில் வெளிர் நீல நிற முட்டைகளை இடும். 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையிலேயே இருக்கும். 18 நாளில் பொரிந்துவிடும்.

குஞ்சுகள் ஒரு மாதத்தில் தாங்களாகவே இரை தேட துவங்கும். அது வரை அவை தாய், தந்தையரின் பராமரிப்பில் இருக்கும். குஞ்சுகள் உள்ள கூடுகள் துர் வாடை கொண்டிருக்கும். பெண் குருவியின் கழுத்தருகே உள்ள ஒரு சுரப்பியிலிருந்து வெளிவரும் திரவமே இந்த அழுகிய அருவருப்பான வாடைக்கு காரணம். இது எதிரிகளிடமிருந்து தன்னையும், குஞ்சுகளையும் காத்துக் கொள்ளும் ஒரு உத்தியே. தவிர துர்நாற்றமடிக்கும் பல பொருட்களையும் கொணர்ந்து கூட்டுக்குள் அடைத்து வைக்கும். இதனால் குஞ்சுகளுக்கோ பறவைகளுக்கோ எந்த வித தொற்று வியாதியும் ஏற்படுவதில்லை. இதையும் மீறி எதிரிகள் நுழைய முற்படும்போது குஞ்சுகளே சுமார் 18 விதமான குரலோசைகளை எழுப்புகின்றன. இவை கேட்பதற்கு நாராசமாகவும், பயமாகவும் இருக்கும். செர்ரி, பிளம்ஸ் போன்ற இனிப்பும் புளிப்பும் பலந்த பழங்களை விரும்பி உண்ணும். ஆணே தலைமை தாங்கும். பெண்ணை அடையும் முயற்சியில் இரு ஆணிற்கிடையே ஏற்படும் தகறாரில் ஏதாவது ஒன்று மடியும். அலகால் ஒன்றையொன்று குத்திக் கொள்வதால் இவ்வாறு நிகழ்கிறது. பெண்கள், பிற குஞ்சுகளைக் கொல்வதும் உண்டு. இதுவே இதன் இனப்பெருக்க குறைவுக்குக் காரணம். மேலும் கூட்டில் சேமித்து வைக்கப்படும் உணவினை எடுப்பதற்கு வரும் இவ்வினத்தின் பிற பறவைகளாலேயே குஞ்சுகளும், தாயும் கொலை செய்யப்படுவதும் உண்டு.

-hoopoe-3.jpg

பல்வேறு குரல் பாவங்களை உருவாக்கும் இவை, எப்படியாயினும் மூன்று முறை என்ற அளவீட்டிலேயே இருக்கும். குரலிசை மாறுபாடு, தான் சந்திக்கும் சூழலின் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். உதாரணமாக, கூட்டில் அடைகாத்துக் கொண்டிருக்கும் பெண்ணைப் பிற ஆண் சந்திக்கும்போது ,பெண் தகரம் தேய்க்கப்படும்போது எழும் ஒலி போல க்ரீச் ...க்ரீச்...க்ரீச் என தனது இறகுகளைப் படபடவென அடித்து ஒலி எழுப்பும். 

தனது உடலை சூரிய ஒளியில் சூடேற்றிக் கொள்ளும் போது முழு இறகுகளையும் விரித்துப் படுத்துக் கிடக்கும். இது பிற பறவைகளுக்கு உதாரணமாக கொக்கு, காக்கை, போன்றவற்ற்றுக்கு விநோதமாக தெரிவதால் அவை, இவற்றின் அருகில் வர அஞ்சுகின்றன. விருட்டென்று அதிக வேகத்துடன் பறக்கும் கொண்டலாத்திகள் பருவ நிலை மாற்றத்தின்போது கண்டம் விட்டு கண்டம் கூட செல்லும் என உறுதியாக்க் கூற முடியாவிட்டாலும் மிக அதிக உயரத்தில் பறக்கும் இயல்பு கொண்டவை என்கிறார் டிரண்ட். அப்போது வல்லூறுகள் போல் இறகுகளை அசைக்காமல் விரித்த வாறே சில நிமிடங்கள் ஓய்வெடுப்பதும் ,பறக்கும் போதே தூங்கிக் கொள்வதும் உண்டு. 

அரிய, அழகிய இப்பறவை பண்டைய எகிப்திய இலக்கியங்களில் ஒரு கதாபாத்திர மாகவே சித்தரிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாடு ,சமீபத்தில் தன் நாட்டின் தேசியப் பறவையாக அங்கீகரித்துக் கௌரவித்துள்ளது. நம் சிற்றிலக்கியத்தில் ஒன்றான குற்றாலக் குறவஞ்சியில் வேட்டைக்காரனான சிங்கனும், சிங்கியும் இப்பறவை  குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இன்னும் பல பண்டைய உலக இலக்கியங்களிலும் இவை வேறு பெயர்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று...?

http://www.uyirmmai....s.aspx?cid=6084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.