Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதுகள், மலிவு விற்பனை!

Featured Replies

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மேற்குறித்த பாடலில் தனது துணையைப் பிரிந்து தேம்பி அழும் தமிழ்ப் பெண்ணின் கண்ணீர் இன்னமும் வற்றிப்போகவில்லை. காலம்தான் உருண்டு கொண்டே செல்கிறது.

 

கண்ணீரும், பிரிவுகளும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ அதே வலியோடு இப்போதும் தொடர்கின்றன. தமிழர் வாழ்வோடு வலிமையும், வலியும் கூடப்பிறந்தவை. அதிலும் போரின் வாழ்வுக்குள் புதையுண்டு போகும்  நேரத்தில் மேலெழும் பிரிவின் வலிக்கு இன்னமும் விழவில்லை முற்றுப்புள்ளி.
 

துணையைப் பிரிந்த வலியின் ஆற்றாமையால் அழுது புரண்டு, அலைந்து திரிதல் என்பது எந்தவித விமோசனங்களுமற்ற சாபமாகிவிட்டது தமிழ்ப் பெண்களுக்கு.

 

சாவித்திரியின் கற்புக்கனல் காலனை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. அவள் தண்ணீர் எடுக்கச் சென்ற சமயத்தில் கைவரிசையைக் காட்டினான் காலன். கவரப்பட்டது சத்தியவானின் உயிர். சாவித்திரி விடவில்லை. யமதர்மனைத் துரத்தினாள். வரங்களை வாங்கினாள்.


இழந்த நாடு, பறிபோன மாமன், மாமியரின் பார்வை என்பவற்றோடு பிள்ளைப் பேறு வரத்தையும் போராடிப் பெற்றாள். புத்திர பாக்கியத்தை தன்னையும் மறந்து வரமளித்த யமன்,  சத்தியவானின் உயிரை விடுவிக்க வேண்டிய நிலை. கற்பு வென்றது. காலன் தோற்றான்.

 

சூரியன் சரிந்து விழத் தொடங்கியிருந்த பொழுது. வாசலில் வந்து நின்றது "ஜீப்'. காக்கி உடைகள் கதவைத் தட்டின. உள்ளிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "எந்தக் குற்றமும் செய்யாத எங்கள் வீட்டுக்கு எதற்காகப் பொலிஸ் வந்திருக்கிறது?' முகங்களில் பெரிதாக எழுந்தது வினாக்குறி.


குடும்பத் தலைவரின் பெயர் கூறி அழைத்தது பொலிஸ். பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சாக நடுக்கத்தோடு வந்த குடும்பத் தலைவர், உறவுகள் கதறக் கதற "ஜீப்'பில் ஏற்றப்பட்டார். "இவரை நாங்கள் விசாரிக்க வேண்டும். மூன்று நாள்களுக்குப் பின்னர் விடுவித்து விடுவோம்.'' என்று சொல்லிச் சென்றன காக்கிகள்.

 

கைதானமைக்கு அத்தாட்சி ஒரு காகிதத் துண்டு மாத்திரமே. கைகளில் காகிதத் துண்டோடு தம் துணைவர்களை மீட்க வவுனியாவுக்கும் கொழும்புக்குமாக இப்போது அலையத் தொடங்கியிருக்கிறார்கள் சாவித்திரிகள்.


இன்னமும் சத்தியவான்களோ அவர்களைக் கவர்ந்த காலனின் தூதர்களோ தென்படவேயில்லை. கைதுக்கு உறுதி செய்த காகிதம் மட்டும் கண்ணீரில் நனைந்து, கரைந்து, உருகி வழிகிறது.

 

உயிர் கவர்ந்து சென்றவனையே பின்தொடர்ந்து போராடி தம் துணையை மீட்டவர்கள் தமிழ்ப் பெண்கள். அவர்களால் கூட கண்முன்னே இழுத்துச் செல்லப்படும் தம் துணைவர்களை மீட்டெடுக்க முடியாதபடி காலம் கைவிலங்கிட்டுள்ளது.


போர் முடிந்த பின்னர் "புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வாருங்கள்." என்று கடைசி நேரத்தில் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. படைக் கட்டுப்பாட்டுக்குள் மந்தைகளைப் போல் நுழைந்தவர்கள் சல்லடையில் அரித்தெடுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டார்கள்.

 

"உண்மையை ஒத்துக்கொண்டால் மன்னிப்புக் கிடைக்கும்" என்ற ஆசை வார்த்தை, போராளிகளை தடுப்புக்குள் தள்ளியது. "நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் தான்" என்பதை ஒப்புக்கொண்டதால் தடுப்பு முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள். தடுப்பில் விசாரணைகள், சித்திரவதைகள் என்ற "புனர்வாழ்வளிப்பு' தங்கு தடையின்றி நடந்தது.


உண்மையை ஒப்புக்கொள்ளப் பயந்து, நலன்புரி நிலையங்களில் இயல்பு வாழ்வுக்குள் ஈடுபட்டவர்களும் காட்டிக்கொடுப்புகளில் மாட்டுப்பட்டனர்.  அவர்களும் தடுப்புக்குள் தள்ளப்பட்டனர். விசாரணைகள் முடிந்தன. அதற்கு மேல் எந்தக் கேள்விகளும் மிச்சமாயிருக்கவில்லை.

 

பதில் சொல்லிச் சொல்லியே தடுப்புவாசிகளின் குரல் காணாமல் போயிருந்தது. இரவல் குரல்களே அவர்களுக்கு பின்னணி கொடுக்க வேண்டியிருந்தது. உயிர்க்கூடு பிழியப்பட்டு, சக்கையான பின்னர் "சமூகத்தோடு' ஒன்றிணைக்கப்பட்டார்கள். இனி அவர்களை எப்படிப் பிழிந்தாலும் இரத்தமோ, வார்த்தைகளோ எதுவும் கிடைக்கப்போவதில்லை.


உள்ளீடுகள் அனைத்தும் அக்கு வேறு ஆணி வேறாக அவதானிக்கப்பட்ட பின் கோதுகளாக  எறியப்பட்டவர்கள், இப்போது மீளவும் கைதாகத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தக் கைதுகளின் காலத்துக்கு பிள்ளையார் சுழி பல்கலைக்கழகத்தில் போடப்பட்டது.

 

மாவீரர் தினத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். கைதானவர்களை விடுவிக்கக் கோரி, ஏனைய பல்கலைக்கழகங்களில் புறக்கணிப்புப் போராட்டங்கள் முளை விட்டிருந்தன.


ஆனால் அந்தக் கைதுக்கு தமிழ்ச் சமூகம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கத் தவறியிருந்தது.

யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தாலும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே.

 

எங்கள் காலுக்குக் கீழே நெருப்பு வரும்வரை நாங்கள் உறங்கிக் கிடப்போம் என்ற தன்னுடைய மரபார்ந்த நடத்தையை தமிழ்ச் சமூகம் கைவிடுவதாக இல்லை. பக்கத்து வீட்டில் நெருப்பெரிந்தால் நமக்கென்ன என்றிருக்கும் குணமே இன்றைக்கும் அலைதலின் மனிதர்களாக எங்களை மாற்றியிருக்கிறது.


பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி எங்கள் நாவினை அசைக்க எல்லோரும் பின்னின்றோம். பல்கலை நிர்வாகம், பொது அமைப்புகள், மக்கள் எல்லோரும் எதுவுமே நடக்காததுபோல் ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்ப்பதோடு, அல்லது அதுபற்றிய செய்திகளைப் படிப்பதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டார்கள்.

 

பல்கலை மாணவர் கைதுக்கு நாங்கள் உரக்கக் குரல் கொடுக்கத் தவறியதை அதிகாரம் மிகச் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கியது. தனது இருப்புக்கு யார், யாரெல்லாம் இடையூறாக இருப்பார்கள் என்று கட்டம் போட்டிருந்ததோ, அவர்களையெல்லாம் இந்தச் சந்தடி சாட்டோடு "தூக்கத்' தொடங்கியுள்ளது.

"விடுதலைப் புலிகளோடு இணைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்கள்" என்ற சந்தேகத்தின்

பேரிலேயே இவர்கள் கவர்ந்து செல்லப்பட்டதாக குறிப்புகள் காற்றில் பறந்து வருகின்றன. அப்படியானால் போர் முடியவில்லையா? புலிகள் மடியவில்லையா? அரசு மூன்று வருடங்களாக முக்கி முக்கி சொன்னதெல்லாம் வெறும் புனைவுகள் தானா?

 

இப்படி நிறைய வினாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக முடிவிலியாகித் தொடர்கின்றன. ஆனால் அவற்றுக்கு விடை தேடுவதைவிட, இமய மலையைத் தோளில் சுமப்பது சுலபமானது.


"கிரிக்கெட் ஸ்கோர்' கேட்பது போல, "இண்டைக்கு எத்தினை பேரைப் பிடிச்சதாம்?" என்று சாதாரணமாகக்

கேட்குமளவுக்கு கைதுகள் மலியத் தொடங்கிவிட்டன. மலிவு விலையில் விற்பனையாகின்றன கைதுகள். ஒவ்வொரு நாளும் காகிதத் துண்டுகளோடு காக்கிகள் வேட்டைக்குக் கிளம்பி விடுகின்றன.

கைவிலங்குகளுக்குப் பற்றாக்குறை ஏற்படுமளவுக்கு கைதுகள் தொடர்கின்றன. ஆனாலும் இப்போதும் நாங்கள் எங்கள் குரல்களை பதுக்கியே வைத்திருக்கிறோம். மீட்பின் புதல்வன் ஜெருசலேமில் பிறப்பெடுத்த நாள் நெருங்குகையில், கைதுகளின் வேகம் அதிகரிக்கிறது.


ஆனால் இங்கு மீட்பர்கள் வருவதற்கான நட்சத்திரங்கள் தோன்றவேயில்லை. தொழுவங்களெல்லாம் கண்ணீரால் சகதியானதுதான் மிச்சம். மந்தைகள் அவற்றின் கூட்டத்திலிருந்து பிரித்து, இழுத்துச் செல்லப்படுகின்றன. ஓலங்கள் எல்லாத் திசைகளிலுமிருந்து எழுகின்றன.

 

"இவங்கள் விட்ட குறை, தொட்ட குறையா ஏதும் செய்ய வெளிக்கிட்டிருப்பாங்கள். அதுதான் அவங்கள் இப்பிடிப் பிடிச்சுக்கொண்டு போறாங்கள்." என்று நமக்குத் தெரிந்த காரணங்களை அடுக்கி வரலாற்றுக் கடமையிலிருந்து தப்பித்து ஒதுங்கிக் கொண்டே வருகிறோம்.


ஆனால் அந்த ஒதுங்குதல் அல்லது குரலைப் பதுக்குதல் கடைசியில் நாங்கள் கைதாகும் போதுதான் எவ்வளவு தவறான விடயமென்பதை காலம் உணர்த்தி, உறைக்க வைக்கும்.

 

"முதலில் அவர்கள் யூதரைத் தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் யூதனில்லை
பின்னொரு பொழுதில்
கம்யூனிஸ்டுக்களைத் தேடி வந்தார்கள்
அப்போதும் நான்  குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் கம்யூனிஸ்டு இல்லை


அவர்கள் தொழிலாளர்களையும் தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் தொழிலாளி இல்லை
கடைசியில்
அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
அப்போது எனக்காகக் குரல் கொடுக்க
எவருமே இருக்கவில்லை."

- மார்ட்டின் நியமொல்லர்

(ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் வதைபட்ட கவிஞர்)



http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5209343011737390

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.