Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னிக்க வேண்டுகிறேன்…..

Featured Replies

அன்புள்ள…..

 

உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

 

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

 

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள். 

 

உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.


உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.  நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும்  உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும்,  பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

 

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.


பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

 

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.


படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

 

நாங்கள்தான் – we the people of Indiaதான்.  காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.


படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை  வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

 

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது.  மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண்  பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.


உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

 

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.


நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

 

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.


குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

 

இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….


படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல்  வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

 

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால்  அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ?  வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க,  பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.


மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

 

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.


அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

 

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்.  நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.


அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன்  வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

 

அன்புடன்

ஞாநி

 

சக இந்தியர்கள் சார்பாக.


குமுதம் 26.12.2012

 

http://www.gnani.net/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/

காலத்திற்கேற்ற சிந்தனை.  அறிவியல் வளர்ச்சியால் பத்து வயதிலே காமம் பற்றிய சிந்தனை விதைக்கப்படுகிறது.  ஆனால் முப்பது வயதுகளில் தான் திருமணம் நடக்கிறது. கார்மோன் ஒழுங்காக சுரக்க ஆரம்பித்தால் பதின்ம வயதுகளில்  பாலியல் சிந்தனை வந்தே தீரும். சிந்தனை வந்தவுடனே தணிப்பதற்கான வழிமுறைகளை தேட ஆரம்பித்து விடுவார்கள். இடைப்பட்ட இருபது ஆண்டுகள் பாலியல் பற்றி ஒரு தெளிவான வழிகாட்டுதல் இல்லாமலேயே தேடுதலும், தணித்தலும் நடந்து விடுகிறது.கற்பு பற்றியும் கன்னித் திரை பற்றியும் நாம் கொண்டுள்ள சிந்தனையை மாற்ற வேண்டிய தருணம் இது.

  • தொடங்கியவர்

மன்மோகன் சிங்கும் தொலைக்காட்சியில் தோன்றி ஒருவித மன்னிப்பு கேட்டார்.

 

இப்படி மன்னிக்கவேண்டுவதால்...  மக்களும் மன்னிப்பதுடன் மறந்தும் விடுகிறார்கள்.


அரசியல்வாதிகளும் ஒரு மாற்றத்தையும் செய்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களை வல்லுறவு/பலாத்காரபடுத்துவதில் 4ம் இடத்தில் இருக்கும் இந்தியா எப்படி கடைசி இடத்துக்கு செல்லாம் என சிந்திப்பதை விட்டு அணு வல்லரசு என படம் காட்டுவதை விட்டொளிக்க வேண்டும்.
 
கண்ணகி பிறந்த நாடு என்று பெருமைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.