Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலித்தடம் தேடி……..! – மகா. தமிழ்ப் பிரபாகரன் (பயணக்கட்டுரை – பாகம் 01)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

E.pass-02-100x100.jpg

இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்னார். ஆனால், எனக்கு கண்ணில் வெடித்ததுபோல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவுவாங்கிய இடம்!

 

கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன் சந்தியைக் கடக்கையில், மனதில் பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச் செல்வதுதான் முல்லைத்தீவை அடையும் வழி. ‘சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது பேருந்து.

நான் இறங்கிய இடத்தில் ஓர் உணவகம். இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற மிலிட்டரி மிடுக்கு அந்த உணவகத்துக்கு இருந்தது.

 

ஆயுதம் ஏந்தியபடி புலி பதித்த தடத்திலும், ஆக்கிரமிப்பாய் இன்று சிங்கள இராணுவம் குவிந்துள்ள பாதையிலும் கண்ணி வெடிகள் இருக்கின்றன. இனியும் யாருக்காக என்ற வேதனைக் கேள்வியுடன், மரண நெடுஞ்சாலையான ‘ஏ9’ சாலையில் நடக்கிறேன்.

 

கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது. எல்லா வேலைகளையும் சிங்களவர்களுக்கே தரும் இலங்கை அரசாங்கம், உயிருக்கு ஆபத்தான கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் தமிழர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

நொடி கவனம் சிதறினாலும் உயிர் போகும் வேலை. அதைப் படம்பிடித்துக்கொண்டே நகர்ந்தேன். தூரமாய் ஒரு கூடாரம் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தபோது அங்கேயும் இராணுவம்.

 

நான் நின்றுகொண்டு இருந்த இடத்தைப் பார்த்தேன். மணல் நிறைந்த தடம் அது. கண்ணுக்கெட்டும் தூரத்தில் தண்ணீரும் இராணுவத்தின் யுத்த வெற்றிச் சின்னமும் தென்பட்டது.

 

எந்த மக்களையும் பார்க்க முடியவில்லை. நடந்தே தண்ணீரை ஊடறுத்துச் சென்று பாதையை கடக்க முடிவெடுத்து, கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். ஒரு பேருந்து வந்தது. அதில் ஏறினேன்.

 

சில நிமிடங்களில் வந்தது, சிங்களர்களுக்கான வெற்றிச் சின்னம். அப்போது மணி காலை 9.30. இராணுவ டெம்போவில் இருந்த ஆயுதங்கள் இறக்கப்பட்ட நேரத்தில், நான் தனி ஆளாக அந்த இடத்தில் நின்றேன். என் மீது இராணுவப் பார்வைகள்.

 

யார் நீ? என்றது ஒரு குரல்.

 

இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளேன் என்றேன் சாதாரணமாக.

 

போ” என்று கை அசைத்தனர். நான் நுழைவதற்குள் சிங்களச் சுற்றுலாவாசிகள் சுமார் 30 பேர் ஒரு வானில் வந்து இறங்கினர். அவர்களோடு நானும் நுழைந்தேன்.

 

இராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேர் செல்போன் பேசியவாறே எங்களுடன் வந்தனர்.

 

சிங்களவர்களைப் போன்றே, நானும் அந்த வெற்றிச் சின்னத்தைப் படம் எடுத்தேன். இராணுவத்தினர் சிங்களவர்களுக்கு எதையோ சொல்லிக்கொண்டு இருந்தனர்.

அவர்களுக்குச் சிங்களத்தில் சொன்னதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எனக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.

 

சிங்களம் தவிர எதுவும் தெரியாது என்றனர்.

 

சிங்களப் பயணி ஒருவர் என்னிடம், ”இது நம் மண்ணை ஆக்கிரமித்து இருந்த புலித் தீவிரவாதிகளிடம் மீட்ட இடம். இங்கு நம் போர் வீரர்கள் பெரும் தியாகத்தைச் செய்து புலித் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி உள்ளனர்.

 

நமது மண்ணை நாம் மீட்டெடுத்து உள்ளோம். நீங்கள் எல்லாம் தென் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள். இது ஆபத்து நிறைந்த இடம். சாலையை விட்டு உள்பகுதிக்குள் செல்லாதீர்கள். வெடிக்காத குண்டுகள் நிறையப் புதைக்கப்பட்டு உள்ளன” என்று இராணுவ வீரர் சொன்னதாக ஆங்கிலத்தில் சொன்னார்.

 

மனித நாமத்தினால் தேசத்தின் புண்ணியத்துக்குத் தோன்றிய ஆயுதம் தாங்கிய படைத் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையிலும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய இராணுவப் பிரிவுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையால் வடக்கையும் தெற்கையும் இணைத்ததன் நினைவாய் சமாதான நினைவுத் தூபி இங்கு எழுப்பப்பட்டுள்ளது’ என்று பொறிக்கப்பட்டதை என் கண்கள் வாசித்தன.

 

என்னை நெருங்கிய இராணுவத்தினர் மூவர், என்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். நான் சொன்ன அனைத்தையும் குறித்துக்கொண்டனர். ”ஓகே மச்சான்” என்று இரண்டு பேர் விலகிச் செல்ல, ஒருவர் மட்டும் அந்த இடத்திலேயே நின்றார்.

சில நிமிடங்களில் இருவரும் மீண்டும் வந்தனர். ‘வாங்க பேசலாம்’ என்று அழைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விதம் விசாரணையை நோக்கிச் செல்வதை உணர முடிந்தது. நடந்தே என்னை இராணுவச் சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

 

கொஞ்ச நேரம் உட்காருங்கள். எங்கள் ஆமி மேஜர் வருவார்” என்றார்கள்.

நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டேன்.

அவர்தான் உங்களைப் பார்க்க வேண்டுமாம்” – கிண்டலாய் சினந்தனர். அப்போது, என்னைச் சுற்றி இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் இருந்தனர். அடுத்து பொலிஸைச் சேர்ந்த இருவர் வந்து, என்னைப் பற்றிய தரவுகளை எடுத்தனர். காக்கவைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. கழிவறை செல்லும்போதும் என்னைக் காவல் காத்தனர்.

 

இடையில் வந்த ஒருவர், ”முள்ளிவாய்க்கால் போனீங்களா? பிரபாகரன் செத்த இடம் நந்திக் கடல் போய்ப் பார்த்தாச்சா..?’ என்று எதையோ சொல்லிச் சென்றார்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கிளிநொச்சிப் பக்கம் இருந்து, இராணுவ ஜீப் ஒன்று வந்தது. ஐந்து பேரோடு வந்து இறங்கினார் ஓர் அதிகாரி. அவர்களுக்குப் பின்னே மொபட்டில் இருவர் வந்தனர்.

 

விசாரணை தொடங்கியது. முழுக்கவும் ஆங்கிலத்தில் பேசினர்.

எங்கு இருந்து வருகிறீர்கள்… எதற்காக வந்துள்ளீர்கள்?”

 

இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்.”

 

நீங்கள் இலங்கையைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?”

 

என்ன சொல்ல? ” ‘லோன்லி பிளானட்’ இணையதளம் 2013-க்கான சிறந்த 10 சுற்றுலா நாடுகளில் இலங்கையைத் தேர்வுசெய்துள்ளது. அதன் காரணமாகவும் பயணச்செலவு குறைவு என்பதாலுமே இலங்கையைத் தேர்வுசெய்தேன்” என்றேன் மையமாக.

 

என்று வந்தீர்கள்… என்ன பணியில் உள்ளீர்கள்?”

 

நவம்பர் 13 அன்று வந்தேன். ஆய்வுப் பணியில் உள்ளேன்.

 

இங்கே வேறு எங்கு போனீர்கள்?

 

யாழ்ப்பாணத்தில் உள்ள டச் கோட்டை, முருகன் கோயில்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒருவர், ”நைஸ் போன். தாங்க பார்ப்போம்” என்று கிட்டத்தட்ட பறித்துக்கொண்டார்.

 

நீங்கள் எங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளத்தான் இப்படிக் கேட்டோம். ஏன் தனியாக வந்தீர்கள்? என்று மறுபடியும் கேட்டனர்.

 

அதுதான் ஏற்கெனவே சொன்னேனே! என்றேன்.

 

அவர் என்னைவிட்டு விலகி, தன் மேல் அதிகாரிக்கு சிங்களத்தில் என்னைப் பற்றிய விவரங்களைச் சொன்னார். 40 நிமிடங்கள் போனது. அவர்கள் என்னைப் படம் எடுத்துக்கொண்டனர். மொபட்டில் வந்த இருவரும் மறுபடியும் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டனர். என் கடவுச்சீட்டைப் பரிசோதித்தனர். கடவுச்சீட்டில் என் பெயர், தமிழ்ப் பிரபாகரன் என்று இருந்தது.

 

தமிழ்ப் பிரபாகரன் என்று பெயர். அதுவும் தனியாக வந்திருக்கிறாய்?” என்றார்கள்.

என்னைப் பற்றி பேசும்போது ஏன் உங்களுக்குள் சிங்களத்தில் பேசுகிறீர்கள். இருவருக்கும் பொதுவான மொழியில் பேசுங்கள். நான் உங்கள் நாட்டுக்கு வந்த விருந்தாளி. சுற்றுலாவாசியை ஒரு தீவிரவாதிபோல் விசாரிக்கிறீர்கள்.

நான் இந்தக் கேள்வியை வீசிய நேரம், பொலிஸிடம் இராணுவ அதிகாரி கடும் கோபத்துடன் பேசிக்கொண்டு இருந்தார்.

 

அவர் சிங்களத்தில் பொலிஸிடம், எங்களுக்குச் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், யாரையும் கைதுசெய்யலாம். உன்னிடம் அதைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

 

அதாவது என் மீது நடவடிக்கை எடுப்பதில் இராணுவம், பொலிஸ் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதை என்னால் உணர முடிந்தது. இராணுவ அதிகாரி தன் அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது என்னிடம் தங்கள் நிலையைப் பேசிய பொலிஸ்,  உங்கள் பக்கம் தப்பு இல்லை என்றாலும், இராணுவத்தை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள்.

 

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தைப் படம் எடுக்கக் கூடாது. நீங்கள் தனியாக வந்ததைத்தான் இராணுவம் பெரிய பிரச்சினையாகப் பார்க்கிறது. உங்களை இராணுவப் பெரியவர் கைதுசெய்யச் சொல்லி இருக்கிறார். உங்களிடம் ஆங்கிலத்தில் நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் எங்களிடம் சிங்களத்தில் கைது செய்யச் சொல்கிறார் என்றார்.

 

டீ குடிச்சிட்டே கதைப்போம் வாங்க என்றார் இடையில் வந்த சி.ஐ.டி அதிகாரி.  அனுமதிபெற்று நுழைந்த பிறகும் மணிக்கணக்காய் விசாரணை செய்யும் உங்களை எப்படி நம்புவது? என்றேன்.

 

பதில் பேசாமலே அவர்களுக்குள் சிங்களத்தில் பேசினர். யாருக்கோ என்னைப் பற்றிய தகவலைப் பகிர்ந்தனர். இலங்கையில் தங்கியிருக்கும் முகவரியை மீண்டும் வாங்கிக்கொண்டு, போகலாம் என்றார் சி.ஐ.டி. அதிகாரி திடீரென.

எழுந்து நடக்க ஆரம்பித்தேன். என்னை விசாரித்த இராணுவ மேஜர் நான் பேருந்து ஏறும்வரை என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

 

புலிகள் என்றாலும் கேமரா என்றாலும் சிங்கள இராணுவத்துக்கு இன்றும் அவ்வளவு பயம். அந்தப் பயத்தால்தான் தமிழ் நிலம் இன்றும் இராணுவ வசிப்பிடமாக இருக்கிறது.

 

ஐந்து லட்சம் சிங்களவர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம், தனது மொத்தப் பங்கில் 80 சதவிகிதப் படையினரை (நான்கு லட்சம் பேர்) தமிழர் நிலத்தில் புலிகளுக்காகக் காவல் வைத்துள்ளது.

 

அப்படியான சிங்கள இராணுவத்தின் கேமரா பயத்தால்தான், இந்தியக் குடியுரிமைபெற்ற தமிழனாகிய நானும், இலங்கையில் இரண்டு முறை இராணுவ விசாரணைக்காக மூன்று மணி நேரம் வைக்கப்பட்டேன்!

ஆனால், தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரமும் இராணுவ விசாரணையில் இருப்பதைப் போலவே இருக்கிறார்கள்.

 

கொழும்புவில் மிகக் கோரமானது பூசா சிறை முகாம். எந்த விசாரணையும் இல்லாமல் 20 ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டு இருக்கும் இடம். இங்கேதான் என் மகன் இருக்கிறானா என்று எந்தத் தாயும் உறுதி செய்ய முடியாத அளவுக்கு இருட்டான இடம்.

 

இன்னொன்று, இலங்கை இராணுவத்தில் 4-வது மாடி விசாரணை. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரையும் உயிரோடு சிறுகச்சிறுகச் சித்திரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் இடம் அது.

இவை இரண்டும் இன்னும் உலகத்தின் மனச்சாட்சிக்கு முன்னால் வெளிச்சத்துக்கு வராத இடங்கள். உண்மையைச் சொன்னால், ஈழத்தின் மொத்த நிலப்பரப்புமே அப்படித்தான் இருக்கிறது!

 

நாலைந்து தமிழர்கள் சேர்ந்து நிற்க முடியாது. சந்தேகக் கண்கள் உங்களை நோட்டமிட்டபடி நிற்கும். சொந்தங்கள் பக்கத்து ஊரில் இருந்து வந்தால்கூட, பதிவுசெய்த பிறகுதான் நுழைய முடியும்,

 

வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல. வெளிநாட்டில் இருந்து உறவுகளைப் பார்க்க வருபவர்களுக்கு முழுமையான விசாரணை உண்டு.

கிளிநொச்சியில் ஒரு காட்சி… கோயில் திருவிழாவில் பக்திப் பரவசத்துடன் தமிழ் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். சுற்றிலும் பாதுகாப்புக்கு இராணுவமோ, பொலிஸோ போனால் பரவாயில்லை. ஆனால், பக்தர்கள் தலைகளைவிட இராணுவத்தினர் எண்ணிக்கைதான் அதிகம்.

 

தமிழர்கள் சாமியைச் சொல்லித் திரண்டாலும் புலிகளாகவே நினைக்கிறது இராணுவம். சுயமாய் நடமாடவும், சுயமாய் பொருள் தேடவும், சுயமாய்ச் செயல்படவும் அனுமதிக்காத அவசர நிலை இன்னமும் அப்படியே இருக்கிறது.

தமிழர்களைக் கண்களுக்குத் தெரியாத கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, அவன் சுதந்திரமாய் அலைந்த பூமியை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட்டனர்.

 

சிங்களவர் பெருமை பேசும் நினைவகங்கள், இராணுவத்தின் வீரம் சொல்லும் முகாம்கள், புத்தரின் புகழ்பாடும் கோயில்கள், கேளிக்கை விடுதிகள் என ஈழப் பிரதேசம், தமிழ் அடையாளங்களைத் தொலைத்து விட்டது. தமிழர்களைப் போலவே துடைக்கப்பட்டு விட்டது!

 

ஆனையிறவுக்கு முன் ஒரு பகலைக் கொழும்புவில் தொடங்கினேன். எனது பயணமும் அங்கு இருந்துதான் ஆரம்பம் ஆனது!

ஊடறுத்துப் பாயும்……

 

ஜூனியர் விகடன்

 

http://www.sarithamnews.com/?p=1705

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.