Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கு

முத்துக்குமார்
 

 

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்ந்தும் இழுபட்டுக் கொண்டே செல்கின்றது. உலகளாவிய வகையில் பல்வேறு தரப்புகள் கண்டனங்களைத் தெரிவித்தபோதும் அரசு அசைவதாகத் தெரியவில்லை. அது புனர்வாழ்வு முடிந்த பின்னரே மாணவர்களை விடுதலை செய்வதாகக் கூறுகின்றது. அதேவேளை விரிவுரைகளை ஆரம்பிக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பீடமாக தனித்தனியாக இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கலைப்பீடம் ஜனவரி 14ம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கலைப்பீட மாணவர்கள் கைது செய்யப்பட்ட சக மாணவர்கள் விடுதலை செய்யப்படும் வரை விரிவுரைகளுக்கு சமூகமளிக்கமாட்டோம் எனக் கூறி வருகின்றனர்.

 

அரசின் நோக்கம் இது விடயத்தில் மிகவும் தெளிவானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் தமிழ்த் தேசியத்திற்கான ஓர் அரசியல் மையமாகத் தொழிற்படுவதைத் தடுத்தல் என்பதே அதுவாகும். பல்கலைக்கழகம் என்பது ஒரு சமூகத்தின் மூளை. அது பல்வேறு வழிகளிலும் சமூகத்தை வழிநடத்துகின்ற முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இது தொடர்பாக நீண்ட வரலாறே இருக்கின்றது. அது தமிழ்த்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை மாத்திரமல்ல, விடுதலை இயக்கங்களின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களையும் நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு சிறந்த புலமைப் பின்புலத்தையும் கொடுத்திருக்கின்றது. அதேவேளை தமிழ் அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை சிறந்த அழுத்தக் குழுவாகவும் தொழிற்பட்டிருக்கின்றது. நெருக்கடி காலங்களிலும் சிறந்த தொண்டர் படையாகவும் செயற்பட்டிருக்கின்றது.

 

இது விடயத்தில் அரசிற்கு இருக்கின்ற அச்சம் தமிழ் அரசியற் கட்சிகளின் தேர்தல் அரசியலுக்கு அப்பால், யாழ் பல்கலைக்கழகம் தமிழ்த்தேசிய அரசியலை நோக்கி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதே! கட்சிகளுக்கு அப்பால் ஒரு தேசிய இயக்கம் உருவாகுவதை அரசு தற்போது அறவே விரும்பவில்லை. ஒரு நேர்மையமான அரசியலை பல்கலைக்கழகம் முன்னெடுக்கக்கூடிய நிலை இருப்பதால் மக்களும் அதனை நோக்கி ஈர்க்கப்படுவது அதிகமாகவுள்ளது.

 

அரசிற்கு இருக்கின்ற இரண்டாவது அச்சம், தனது சிங்கள மயமாக்கல் வேலைத்திட்டங்களுக்கு மாணவர்களின் போராட்டம் தடையாக இருக்கும் என்பதாகும். அரசு தற்போது சிங்கள மயமாக்கல் வேலைத்திட்டங்களை கிழக்கில் மட்டுமல்ல. வடக்கிலும் முடுக்கிவிட்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குதல், சிங்கள வர்த்தக நிறுவனங்களை உருவாக்குதல், பௌத்த விகாரைகளை உருவாக்குதல், உயர்கல்வி நிலையங்களில் சிங்கள மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளல் எனப் பல வழிகளில் இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கில் போராட்டங்கள் எழுச்சி பெறுமாக இருந்தால் இச் செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் அதிகளவில் ஒத்துழைக்கமாட்டார்கள்.

 

குறிப்பாக யாழ் பல்கலைக்கழகம் நீண்டகாலமாக தமிழ் மாணவர்களைக் கொண்டிருந்தது. போருக்குப் பின்னர் பல்வேறு பீடங்களிலும் சிங்கள மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆங்கில மொழிமூல பாடத்துறைகளுக்கே அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தில் போராட்ட சூழல் நிலவுமாக இருந்தால் சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகம் வர அச்சப்படுவார்கள். உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அரசு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு பிரதான காரணம் இதுதான்.

 

அரசினைப் பொறுத்தவரை பல்கலைக்கழகம் அரசியல் மையமாக மாறக்கூடாது. சிங்கள மாணவர்கள் அச்சமில்லாமல் கற்கும் நிலையும் தொடரவேண்டும். இதற்கு ஒரே வழி தமிழ் மாணவர்களை அச்ச நிலையில் வைத்திருப்பதுதான். மாணவ தலைவர்களை மிக நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பதன் மூலம் இந்த நோக்கத்தை அடையலாம் என அரசு நினைக்கின்றது. இந்தத் தடவை விரிவுரையாளர்களும் மாணவர் பக்கம் நின்றதால் அவர்களையும் அச்சமூட்ட முயற்சிக்கின்றது. விரிவுரையாளர் சங்கத் தலைவர் இராசகுமாரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது இந்த அடிப்படையில் தான்.

 

தற்போது எழும் கேள்வி இந்நெருக்கடிக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதே! பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினையை தமிழ்ச்சமூகம் தனது சொந்தப் பிரச்சினையாக நினைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்தப் போக்கில் முன்னேற்றங்களை கண்டு விடமுடியாது. இவ்விவகாரம் தொடர்பாக தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது போதுமானதல்ல. முக்கியமாக தொடர்ச்சியான செயற்பாடு என்பது இது விடயத்தில் இல்லாமல் இருக்கின்றது. குறிப்பாக தாயகத்தில் இது மிகவும் மந்தமாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கற்ற தேர்தல் அரசியல் செயற்பாடுகள்தான் இதற்கு பிரதான காரணம். ஒன்றுபட்ட முன்னெடுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற தமிழரசுக் கட்சி குழப்பியிருக்கின்றது.

 

மாணவர்கள் மாவீரர் தினத்திற்கு தாங்களாகவே விளக்கேற்றியிருந்தனர். இதற்கு எந்தவித தூண்டல்களும் இருக்கவில்லை. உண்மையில் இந்த விளக்கேற்றும் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே மேற்கொண்டிருக்க வேண்டும். நவம்பர் 26ம் திகதி விடுதலைக்காக போராடி மரணமுற்ற அனைத்துப் போராளிகளுக்காகவும், மே 19ம் திகதியை போரில் மரணமுற்ற மக்களுக்காகவும் நினைவுகூரவேண்டிய தேவை உள்ளது. இந்த நினைவு கூரலை தமிழ் அரசியல் சக்திகள் முன்னெடுத்திருந்தால் மாணவர்கள் நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் எந்தவித அக்கறையினையும் காட்டவில்லை.

 

மாணவர்கள் படையினரால் தாக்கப்பட்டபோது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நேரடியாகச் சென்று படையினருடன் வாக்குவாதப்பட்டார். இந்த முன்னெடுப்பு கூட சரவணபவனின் தனிப்பட்ட நடவடிக்கையாக இருந்ததேயொழிய கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ நடவடிக்கையாக இருக்கவில்லை. இத்தனைக்கும் மாணவ தலைவர் தர்சானந் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவராகவும் இருக்கின்றார்.
 
மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உடனடியாக கண்டன அறிக்கையை வெளியிட்டதோடு டிசம்பர் 4ம் திகதி யாழ்நகரில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தது. முதலில் 3ம் திகதியே ஆர்ப்பாட்டம் நடாத்த அவர்கள் முடிவு செய்திருந்தனர். எனினும் பின்னர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளின் பேரிலேயே 4ம் திகதிக்கு அதனை மாற்றியிருந்தனர். இதற்காக முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட அடுத்தநாள், இதற்குப் போட்டியாக 3ம் திகதி போராட்டம் நடாத்தப் போவதாக சரவணபவன் அறிவித்தல் கொடுத்தார். இந்த அறிவித்தலுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் குறிப்பாக ஊடகங்களிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டபடியால் மாவை தலையிட்டு அனைவரும் இணைந்து 4ம் திகதி போராட்டம் நடாத்துவோம் என அறிவித்தார்.
 
திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் திகதி யாழ்நகரில் போராட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக்கட்சி, செந்திவேல் தலைமையிலான மாக்சீச லெனினிஸக் கட்சி என்பன இதில் கலந்து கொண்டன. இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் அதிகமக்கள் கலந்துகொண்ட போராட்டமாக இது அமைந்தது.
 
அன்றைய தினம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் சந்திப்பொன்று ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடாத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட சகல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். கூட்டமைப்பு சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, சிறீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். எனினும் இடைநடுவில் கூட்டமைப்புச் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொள்ளுவார் அவருடன் கலந்துரையாடி நீங்கள் முடிவெடுங்கள் எனக் கூறிவிட்டு மாவையும், சிறீதரனும் கூட்டத்தினைவிட்டு வெளியேறினர்.
 
இச்சந்திப்பில் ஹர்த்தால் ஒன்றை நடாத்துவது தொடர்பாக யாழ்ப்பாண வணிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை எடுக்கும்போது மாவையும் உடனிருந்தார். வணிகர் சங்கத்தினை சந்திக்கத் தானும் வருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் வணிகர் சங்கத்தைச் சந்திக்கச் சென்றபோது மாவை வரவில்லை. கூட்டமைப்பு சார்பில் சுரேஷ் மட்டும் வந்தார். வணிகர் சங்கத்தினர் தற்போதைய சூழ்நிலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்க அச்சம் தெரிவித்தனர். படையினர் கடைகளை எரியூட்ட முயற்சிக்கலாம் எனத் தெரிவித்தனர். ஜனநாயக சூழல் சற்றுக் கனிந்து வருகின்றபோது தாமும் பங்குபற்றுகின்றோம் எனக் கூறினர். இதனால் ஹர்த்தால் முயற்சி கைவிடப்பட்டது.
 
பகல் சந்திப்பின்போது 10ம் திகதி மனித உரிமைகள் தினத்தில் கிளிநொச்சியில் ஓர் ஆர்ப்பாட்டம் நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. நவசமாஜக்கட்சியினர் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சியை மையப்படுத்தி செயற்படுவதால் உடனடியாகவே தொலைபேசி மூலம் அவரிடம் ஒத்துழைப்புக் கேட்கப்பட்டது. நவசமசமாஜக் கட்சி உறுப்பினர் இத்தொலைபேசித் தொடர்பாடலை மேற்கொண்டார். இதற்கு சிறீதரன் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்ததோடு, மனித உரிமையை விவகாரத்துடன் தொடர்புடைய இருவரின் தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்திருந்தார். அவர்கள் 500 பேருடன் தாங்கள் கலந்து கொள்வதாகக் கூறினர்.
 
அடுத்தநாள் ஹர்த்தால் முயற்சி வெற்றியடையாததினால் தொடர்செயற்பாடுகளை ஆராய்வதற்காக மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளும் கூட்டத்திற்கு வந்தன. கூட்டமைப்பு சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டும் கலந்து கொண்டார். மாவை கலந்து கொள்வதாக கூறியிருந்தும் கலந்துகொள்ளவில்லை. அன்றைய தினம் வட்டுக்கோட்டையில் ஒரு மண்டபத் திறப்புவிழாவிற்கு சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் அது முடிந்தவுடன் கூட்டத்திற்கு வந்தபோதும் மாவை வருவதுபற்றி அக்கறைப்படவில்லை. இத்தனைக்கும் கொழும்பு செல்ல இருந்த மனோ கணேசனின் கட்சியைச் சேர்ந்த பாஸ்கராவும், நவசமாஜக்கட்சியை சேர்ந்த ஜனகன், மகேந்திரன் என்போரும் தமது பயணத்தை ஒரு நாள் ஒத்திவைத்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
இக் கூட்டத்தில் 10ம் திகதி கிளிநொச்சியில் போராட்டம் நடாத்துவதை மீண்டும் உறுதி செய்ததோடு 7ம் திகதி கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்துவது என்றும் 14ம் திகதி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வவுனியா ஆர்ப்பாட்ட ஒழுங்கை சுரேஷ் பிரேமச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இத்தீர்மானங்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் மூலம் சுமந்திரன் உட்பட கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கும் அமைப்பு என்ற பெயரில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
 
7ம் திகதி கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு திட்டமிட்டபடி நடைபெற்றது. யாழ் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் பங்குபற்றின. கூட்டமைப்பு சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டும் கலந்து கொண்டார். மாவையோ, சுமந்திரனோ, சிறீதரனோ கலந்துகொள்ளவில்லை. மாவையுடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் தொலைபேசி இயங்கவில்லை. சிறீதரனுக்கு கஜேந்திரன் மூலம் நேரடியாக அறிவித்தபோதும் அவரும் வரவில்லை.
 
10ம் திகதி திட்டமிட்டபடி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரச தரப்பினர் எதிர் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் இவர்கள் நடாத்திய இடத்திற்கு எதிர்ப்பக்கத்தில் நடாத்தினர். இதற்காக நிவாரணம் தருவதாக பொய் கூறி மக்களை அழைத்து வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறீதரன் வரவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டும் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டதிற்கென வந்த காணாமல் போனோரின் உறவினர்களையும் சிறீதரன் மனித உரிமைகள் கூட்டமொன்றிற்கு அழைத்துச் சென்றிருந்தார். மிகச் சொற்ப ஆட்களுடன் மட்டும் கூட்டம் நடைபெற்றது.
 
14ம் திகதி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதற்கான ஒழுங்குகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிறப்பாகச் செய்திருந்தார். எதிர்பார்ததைவிட மக்கள் தொகையும் அதிகமாக இருந்தது. மாவை, சிறீதரன் என்போரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க்கட்சிகளைத் தவிர ஏனைய தமிழ்க்கட்சிகள் அனைத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டன. ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் என்போரும் கலந்து கொண்டனர்.
 
சில தினங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பத்திரிகையாளர் மாநாட்டினைக் கூட்டி, டிசம்பர் 21ம் திகதி தமிழரசுக் கட்சி சார்பில் தந்தை செல்வா சதுக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தபோவதாக அறிவித்தார். பல்வேறு விமர்சனங்கள் வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடாத்தப்படுவதாக பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. இப்போராட்டம் பற்றி ஏனைய கட்சிகளுடன் எந்தக் கலந்தாலோசனையையும் சிறீதரன் நடாத்தவில்லை. கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுடனும் கூட நடாத்தவில்லை. இத்தனைக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்திலேயே நின்றிருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தார். இது விடயத்தில் கூட்டமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கும் அமைப்பையும் கணக்கெடுக்கவில்லை.
 
சிறீதரனின் தன்னிச்சையான செயற்பாட்டினால் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரத்தில் கலந்து கொள்ளவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் நின்றபோதும் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு எதுவும் அறிவிக்கப்படாததினால் அதில் கலந்து கொள்வது அவருக்கு ஒரு சுயமரியாதைப் பிரச்சினையாக இருந்தது. உண்ணாவிரதத்தில் வெறுமனே 36 பேர் மட்டும் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களைவிட புலனாய்வுப் பிரிவினர் அதிகமாக நின்றனர். கூட்டமைப்பின் உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தாலே 500 பேர் தேறியிருக்கும். சிறீதரன் எல்லாவற்றையும் குழப்பியடித்தார். இதற்குப் பின்னர் போராட்டச் செயற்பாடுகள் அனைத்துமே மந்த நிலைக்கு சென்றன.
 
தமிழரசுக் கட்சியின் இந்தச் தன்னிச்சையான செயற்பாடு தமிழ்நாட்டில் கருணாநிதியின் செயற்பாட்டை ஒத்தது. அங்கு போராட்டங்கள் வலுவடையும்போது கருணாநிதி தான் போராட்டத்தை நடாத்தப்போவதாக அதனைக் கையிலெடுத்து பின்னர் போராட்டத்தையே முழுமையாக நசுக்கிவிடுவார். இதேபோலத்தான் யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடும் இருந்தது. இதனால் தமிழ்ச் சமூகத்தின் விவகாரமாக முன்னெடுக்கப்படவேண்டிய மாணவர் விவகாரம் பல்கலைக்கழக சமூகத்தின் பிரச்சினையாக மட்டுமே தற்போது சுருங்கிவிட்டது.
 
இந்தப் போக்கினை மாற்றாமல் எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் முன்னேற முடியாது. தமிழ் சிவில் சமூகம் இதில் அதிக அக்கறையெடுத்து சிவில் சமூகம், அரசியற் கட்சிகள் உள்ளடங்கலாக ஒரு பொது வேலைத்திட்டத்தினை உருவாக்கி முன்னேற முயற்சிப்பது பற்றி யோசிப்பது நல்லது.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7c9fc8c9-cd14-41a6-a114-2d9f66981489

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுமையற்றதும் ஒற்றுமை இல்லாததுமான தமிழ் அரசியல் கட்சிகளினது செயற்பாடுகள் பல்கலைக் கழக மாணவர்களின் விடுதலைக்கு உதவாமல் இருக்கின்றது. அத்தோடு தனது சிங்களமயமாக்கல் திட்டத்தை செயற்படுத்த இலங்கை அரசு வடக்கு-கிழக்கில் அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்த அனுமதிக்காது என்பதும் தெளிவாக இருக்கின்றது.

 

இந்நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் குறைந்தளவு மக்கள் பங்குகொள்ளும் அடையாளப் போராட்டங்களும், மகஜர்களும் பெரிதாக எந்த அழுத்தத்தையும் இலங்கையரசுமேல் கொண்டு வரப்போவதில்லை. மக்களைத் திரட்டி வலுவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை விடுத்து குழிபறிப்புக்களிலும், குத்துவெட்டுக்களிலும் புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபடுவதை எப்போதுதான் நிறுத்தப் போகின்றார்களோ அப்போதுதான் அரசியலில் அடுத்த நிலைக்கு போகலாம்.

பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கு

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7c9fc8c9-cd14-41a6-a114-2d9f66981489

 

 

இந்தக் கட்டுரையில் பாதிக்கு மேல் பொய் தான்!

 

சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு தமிழனை அழிக்க  உதவும் ஆலோசனைகளும் பல உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தக் கட்டுரையில் பாதிக்கு மேல் பொய் தான்!

 

சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு தமிழனை அழிக்க  உதவும் ஆலோசனைகளும் பல உள்ளன.

 

கட்டுரையில் பல சம்பவங்கள் தேதி வாரியாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை எழுந்தமானத்தில் பொய் என்று சொல்லுவதைவிட உண்மையில் என்ன நடந்தது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொங்கு தமிழுக்கு அனுப்பலாமே! அதில் விளக்கம் வந்தால் நாமும் வாசித்தறியலாம்.

 

பல்கலைக் கழக மாணவர் விவகாரம் உரிய அரசியல் முக்கியத்துவத்தைப் பெறாமல் போராட்டங்கள் பிசுபிசுத்து போய்விட்டன என்பதை மறுக்கமுடியாது அல்லவா!

தாயகம் சம்பந்தப்படும் போது போராட்டம் என்பது அவசரமான சொல். இதை வைத்து யாழ் பல்கலை கழகத்தில் புலம் பெயர் மக்களால் தூண்டப்பட்டு புலிகள் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டத்தால் அரசு தனது நடவடிக்கைகளை எடுத்ததாகத்தான் பலர் இங்கே விளங்க வைக்க முயன்றார்கள். நடந்தது மாணவர் செய்த அஞ்சலி. அன்று சமைய தினம்; விளக்கீடும்.

 

அஞ்சலி செலுத்திய மாணவருக்கு நடந்ததை கூட்டமைப்பால் எதுவும் செய்ய முடிவில்லை என்பது இரகசியம் அல்ல. பல்கலைகழக அமைப்புக்கள் தோற்று செல்லும் எதிர்ப்பை தொடந்தும் காட்டிப்பார்க்கின்றன. வெளியே வரும் மாணவர்கள் KP, கணகரத்தினத்தைவிட மோசமாக நடந்துகொளாவ்ர்கள் என்பதும், அது, இந்த எழுத்தாளர்களுகு மெல்லக் கிடைக்கும் புதிய அவலாக இருக்கப்போகிறதென்பதும் மறுக்க முடியாத உண்மை. ஏற்கனவே பங்குபற்றிய மாணவன், தமிழரசுக்கு கட்சியின் அங்ககத்தினன் எனபது, இவர் பூர்வீகமாக துரோகி என்றதை விளம்பரம் செய்ய போதுமான தரவு. இதில் புலத்தில் இருந்து தூண்டுவோர் கூட்டமைப்பு, மாணவருடன்  மற்றயவர்களையும் உள்ளே போட்டத்தால் ஆச்சு என்றால், இப்போழுது உள்ளே போபவர்களை காசுகொடுத்து தன்னும் வெளியே கொண்டுவர குத்திக்கு கூட இயலாத நிலை . 

 

 4 திந்தி கூட்டத்தின் பின்னர் சுமந்திரன் தெளிவாக கூறியிருந்தவர், சிலரின் வேகத்தில் போராட்டம் நடத்துவது அரசுக்கு ஆதரவாக முடியும் என்றுதான். அவர்கள் இலங்கை அரசுடன நடத்தும் பேச்சு வார்த்தைக்கு இன்னமும் சர்வதேச ஆதரவு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் போராட்டம் என்ன சாதிக்கும் என்றதை சொல்ல வராமல் தாயத்தில் போராட்டம் போதுமாக இருந்திருக்கவில்லை என்று எழுதுவது பொருள் இல்லாதது. சுதந்திரமான புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமையாக நடத்த கிடைக்காத மாவிரர் தினத்தை ஒற்றுமையை தாயகத்தில் ந்டத்தியிருக்கவில்லை என்றும் அங்கு மாவீரர் தினமும் அடுத்து வந்த போராட்டமும் போதுமானதாக இருக்கவில்லை என்றும் எழுத முடியாது.

 

கொடுக்கப்பட்டிருக்கும் திகதிகள், கூட்டமைப்பை உடைக்க, ஒரு பக்கமாக பிரிவினையை துண்ட , தொகுத்து எழுதபட்டிருக்கிறது.  திகதி வாரி நிகழ்சிகளில், பிரதானமாக, சுரேஸ்பிரமச்சந்திரனின் விபரம் வெளிவிடப்பட்டிருக்கிறது. இதில் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்  என்பதை பற்றி எழுத இல்லைஇவற்றில் ஒன்றிலும், செல்வம் அடைக்கலநாதனினதோ அல்லது சிவாஜிலிங்கத்தினதோ பெயர் வரவே இல்லை. கட்டுரையின் தனி போக்கு, சுரேஸ் பிரேமசந்திரன் இலகுவில் உடைத்து வெளியே எடுத்துவிடக்கூடியவர் என்ற அனுமானத்தில் எழுதப்பட்டிருப்பதுதான்.. யாரும் சிறீதரன் உயிராபத்தை எதிர்பார்த்துகொண்டு ஜெனிவா வந்த போது சுரேஸ் பிரேமசந்திரன் என்ன செய்தார் எனக் கேடவில்லை. மேலும் ஏன் சுரேஸ் பிரேமசந்திரன் கூட்டமைப்புடன் கனடா போய் கூட்டங்களில் பங்கு பற்றவில்லை என்றும் கேட்கவில்லை.  இந்த கேள்விகளுக்கு வரும் பதில்கள் கூட்டமைப்பை உடக்க உதவாது;எதிர்வளத்தில் தான் செயல்படும் என்பதே இவர்கள் அவற்றை கேட்க மறுப்பது.   

 

கட்டடுரை ஆசியர் தான், சுரேஸ்பிரமன்ந்திரனுக்கு ஆதரவாக எழுத்தும் போது அவர் தனிபட்ட ஒருவரின் எழுத்துக்குப் பதிலளித்து, தனக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இருக்கும் உறவு நன்றாகத்தான் இருக்கிறது என்று கட்டுரையில் இருப்பவற்றை மறுக்க போவதில்லை என்ற எதிர்பார்ப்புடன் எழுதப்பட்டது. அதிகார பூர்வமில்லாத நிகழ்நிரல் ஒன்றை தான் தாயாரித்து கட்டுரை ஆசிரியர் எழுத்தும் போது தமிழரசுக்கட்சி அதற்கு பதில் அளிக்க போவதில்லை எனபதும் ஆசிரியரின் அனுமானம். மேலும் அப்படி பதில் அளிக்க முன் வந்து, சுரேஸ் கூறாத குறைக்கு சிறீதரன் தானாக பதில் அளித்து, சுரேசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளிவிட்டு உள் போட்டியை சிறீதரனே ஆரம்பித்து வைக்கமாட்டரா என்பது ஆசிரியரின் இன்னொரு கபட நப்பாசை.

 

கூட்டமைப்பை பொறுத்தளவில், அரசாங்கத்திடமும் பிடி எதுவும் இல்லை. சர்வதேசத்திடமும் பிடி எதுவும் இல்லை. கூட்டமைப்பு ஈழவேந்தனின் உதாரணத்தை மறக்க அவசரப்பட மாட்டாது. ஈழவேந்தனால் இனி உள்ளேச் என்று அரசியல் நடவடிக்கைகளை எடுக்க முடியாது. இதைதான் சுமந்திரன் தனது பேச்சில்  போராட்டம் திட்டமிட்டுத்தான் நடத்தப்படவேண்டும் என்பதில் கூறியிருந்தார். 

 

கூட்டமைப்பு இலங்கையில் வெளிநாடுகளின் ஆதாரவை கட்டி எழுப்பாமல் எதுவும் செய்ய முடியாது. வெளிநாடுகளின் ஆதரவை கட்டி எழுப்புவதில், இயக்கங்களில் இருந்து அரசியலுக்கு சென்றோரின் பாகம் சர்வதேச நாடுகளால் மட்டுப்படுத்தப்படுகிறது. வீரவன்சாவை சிராணியை விசாரிக்க நியமிக்கும் மகிந்தா இயக்கங்களின் அரசியல் தலைவர்களை போராட்டங்களை குழப்பும் பலிக்கட்டாவுகள் ஆக்க கண்காணிக்கிறார் என்பதும் இரகசியமில்லை.

 

இந்த நிலமை சுரேஸ்பிரேமசந்திரன் போறோர்மீது கடுமையான சோதனையை சுமத்துகிறது. அவர்கள் போராட முழு மனத்துடன் வந்த பின்னரும், கைகெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல உணருகிறார்கள். இதில் அரச ஆதரவாக பல கோணங்களில் எழுதும் புலம் பெயர் பண்டிதர்கள், புலம் பெயர்மக்கள் தூண்டுவிட்டு மாணவர்கள் கூத்தாடினார்கள் என்றும், அதன் பின்னர், மாண்வர்களை காக்க புலம் பெய்யர் மக்கள் போராடினார்கள், தாயக மக்கள் போராடவில்லை என்றும் எழுதுதி சுரேஸ் போன்றோர்களை கஸ்ட்டத்தில் தள்ளி பிரித்து வைக்கிறார்கள். 

 

கூட்டமைப்பு செய்ய ஒன்று இருக்கிறது. வரவிருக்கும் மார்ச் பிரேரணையில் உலக நாடுகளின் பிரதிநிகளுக்கு இலங்கை நடத்தும் பிரசாரங்களுக்கு தாங்கள் வந்து பதில் அளிப்பதுதான். மற்றய போராட்டங்கள் வெற்றியின் பக்கம் தான் போகும் என்று சிலர் நடிப்பது உண்மை அல்ல. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.